கல்வியை நவிலும் அறவிலக்கியங்கள்
-முனைவர் இரா. இராமகுமார்
அறிமுகம்
“ மாற்றம் பெறச்செய்யும் விடையாய்
ஏமாற்றம் இல்லாத கொடையாய்
காலமறிந்து பயிர்செய்யின் உயிராய்
காலனையும் உய்த்து உணர்வாய்
கண்ணிமைக்குள் கல்வி காதலியானால்
காதலிப்பதும் முப்பொழுதும் சுகமே
காலமெல்லாம் எப்பொழுதுமில்லை சோகமே……..! ”
மனிதன் வாழ்க்கை முழுவதும்கற்றல் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றது. படிப்புக் கல்வி முதல் பட்டறிவுக் கல்வி வரை மானுட குலத்தின் சமூகக் கற்றல் தொடர்கின்றது. பிறப்பு முதல் இறப்பு வரை இடைவிடாது கற்றாலும் ஒருவனால் கல்வியில் முழுமையினை அடைய முடியாது. எனவேதான் ‘கற்றது கைம்மண் அளவு; கல்லாதது உலகளவு’ என்னும் தொடர் மக்களிடையே நிலவுகிறது. நம்மிடம் இருக்கும் அறியாமையைப் போக்கி அறிவை விரிவாக்குவதில் கல்விக்குத் தனிப்பங்குண்டு. நம்மிடம் இருந்த அறியாமை விலகி அறிவு விரிவாகும் போது கல்வியில் இன்பம் தோன்றுகிறது. இன்றைய உலகில் கல்வி இன்றியமையாத ஒன்றாகத் திகழ்கிறது என்பதினை மறுப்பாரிலர். எந்தவொரு சமூகத்தினரும் கல்வியைக் கற்பதிலிருந்து விலகிச் செல்வது இன்றைய நவீன உலகில் மிகவும் அரிதாக காணப்படுகிறது. ஏனெனில் கல்வியின் சிறப்பை அனைத்துச் சமூகங்களும் புரிந்துள்ளன. கல்வி கற்றவன் எந்த இடத்திற்குச் சென்றாலும் அவன் பிற சமூகத்தால் மதிக்கப்படுகின்றான். இதற்குக் காரணம் அவன் கற்ற கல்வியே ஆகும். கல்வி கற்றவன் ஒருவன் தான் மரணிக்கும் வரை கல்வி கற்காமல் இருந்து தனது காலத்தை கழிப்பது என்பது மிகவும் சிரமமானதாகும். பண்டைய அறவிலக்கியங்கள் கல்வியின் மேன்மையினைச் சிறப்பாக எடுத்தியம்பியுள்ளன.
அறவிலக்கியங்கள்
சங்க காலத்திற்குப் பின்னர் சங்கம் மருவிய காலம் சமணசமயச் செல்வாக்கு மிக்கிருந்த காலமாக இருந்துள்ளது. பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் இந்தக் காலப் பகுதியில் பாடப்பட்டுள்ளன. தொல்காப்பியர் இவ்வகை அறநூல்களை எண்வகை வனப்புகளில் ஒன்றான அம்மை என்பதாக வரையறை செய்துள்ளார்.
“சின்மென் மொழியால் தாய பனுவலோடு
அம்மை தானே அடிநிமிர்பின்றே” ( தொல்.செய்யுளியல். 235)
தொல்காப்பியம் மற்றும் உரையாசிரியர்களின் விளக்கங்களினை முதன்மையாக வைத்துப் பிற்கால இலக்கண நூலார்,
“அடிநிமிர் பில்லாச் செய்யுட் தொகுதி
அறம் பொருள் இன்பம் அடுக்கி யவ்வகைத்
திறம்பட வுரைப்பது கீழ்க்கணக் காகும் (பன்னிரு பாட்டியல் 542)
என்று இலக்கணம் வகுத்தனர். சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை இவைகளைப் பதினெண் மேல்கணக்கு என்றும், பின்னர்த் தோன்றிய பதினெட்டு நூல்களையும் பதினெண் கீழ்க்கணக்கு என்றும் குறிப்பிடும் மரபு இலக்கிய வரலாற்றில் உண்டு. சங்க காலத்திற்குப் பிறகு கி.பி.மூன்றாம் நூற்றாண்டு முதல் ஆறாம் நூற்றாண்டு வரை அறத்தினை வலியுறுத்தும் வகையில் நீதி நூல்கள் பல்கிப் பெருகின. தமிழ் இலக்கிய வரலாற்றில் களப்பிரர் காலம் இருண்ட காலம் என்று கருதப்படுகிறது. இக்காலத்தில் சங்க காலத்தில் போற்றப்பட்டக் காதலும் வீரமும் பின் தள்ளப்பட்டு அறமும், நீதியும் பெரிதும் போற்றப்பட்டன.
” நாலடி நான்மணி நானாற்பது ஐந்திணை முப்
பால் கடுகம் கோவை பழமொழி மா மூலம்
இன்னிலைய காஞ்சியுடன் ஏலாதி என்பவே
கைந்நிலையும் ஆம்கீழ்க் கணக்கு.”
பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் பதினெட்டில் நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னாநாற்பது, இனியவை நாற்பது, திருக்குறள் , திரிகடுகம், ஆசாரக்கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், முதுமொழிக் காஞ்சி, ஏலாதி, ஆகிய பதினொரு அற நூல்களிலும் கல்வியின் சிறப்புத் தன்மைகள் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.
நாலடியார்
உள்ளத்தால் நல்லவர்களால் வாழும் வாழ்க்கை வழி நெறி தவறாத வழிச் செலுத்தும் கல்வியே ஒருவருக்குச் சிறந்த அழகு சேர்க்கும் அணிகலனாகும். உடல், கூந்தல், ஆடை, ஒப்பனை, அணிகலன் போன்றவை ஒருவருக்கு உண்மையில் அழகு தருவன ஆகாது. கல்வியே அழகு தரும் என்பதனை நாலடியார் நவின்றுள்ளது.
“ குஞ்சி அழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
மஞ்சள் அழகும் அழகல்ல – நெஞ்சத்து
நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்
கல்வி அழகே அழகு” (நாலடி – 131)
நான்மணிக் கடிகை
ஒருவன் கற்க வேண்டிய நூல்களைக் கசடறக் கற்றால் அவன் அறியாமையானது குறையும், அறியாமை குறைந்தால் புல்லறிவு நீங்கி இவ்வுலக இயற்கையை அறிவான். இவ்வாறு அறிந்தால் மெய்ந்நெறியாகிய ஞானநெறியில் செல்வதற்குரிய நிலைபெறுவான். அவ்வாறு செல்லின் இவ்வுலகில் பெற வேண்டிய புகழை நிலைநிறுத்தி மறுமையில் வீட்டுலகம் புகுவான் என்று நான்மணிக் கடிகை விளம்பியுள்ளது.
“கற்பக் கழிமடம் அஃகும் மடம் அஃகப்
புற்கந்தீர்ந்து இவ்வுலகின் கோளுணரும்
கோளுணர்ந்தால்
தத்துவ மான நெறிபடரும் அந்நெறி
இப்பால் உலகின் இசைநிறீஇ – உப்பால்
உயர்ந்த உலகம் புகும்.” (கடிகை. 30 )
இன்னா நாற்பது
1.கற்றவர் சொல்லுக்கும் செயலுக்கும் தனி மதிப்பு உண்டு. கல்லாதவர் எத்துணைப் பெரிய செல்வராயிருந்தாலும் அவர்கள் கூறும் செயல்கள் நன்மை தராது. 2.நற்குடியிற் பிறந்தவன் கல்லாமல் இருப்பது துன்பம் தரும். 3.கல்வியால் நிறைந்து அடங்கிய பெரியோர் நடுவே அறிவில்லாதவன் துன்பம் படுவான். 4.அடக்கம் கல்வியுடையோரிடம் இருக்க வேண்டும் என்றும் அப்படி இல்லையென்றால் அவர்கள் துன்பம் அடைவார்கள் என்பதினை இன்னா நாற்பது எடுத்துரைத்துள்ளன.
“கல்லார் உரைக்கும் கருமப்பொருள் இன்னா” (இன். நாற். – 15)
“குலத்துப் பிறந்தவன் கல்லாமை யின்னா” (இன்.நா.20:1)
”ஆன்றவிந்த சான்றோட் பேதை புகலின்னா” (இன்.நா.18:1)
“ஆங்கின்னா அடக்க அடக்காதார் சொல்(இன்.நா.41)
இன்னியவை நாற்பது
1.பிச்சையெடுத்தாவது கற்பது இனிது. 2.குற்றங்களில் ஈடுபடாமல் கற்றல் மிக இனிதாகும். 3.சான்றோர்கள் சபையில் அஞ்சாதவனுடைய கல்வி இனிது. 4.கற்றவர்களின் முன் தான் பெற்ற கல்வியை உணர்த்துதல் இனிது. 5.அறிவுடையாருடைய வாய்மொழிச் சொற்களைப் போற்றுதல் இனியது. 6. பல நாட்களுக்கு நன்மையைச் சொல்லும் நூல்களைக் கற்பதைப்போல இனிதான செயல் வேறு ஒன்று இல்லை என்று கல்வியின் மேன்மையினை இன்னியவை நாற்பது புலப்படுத்தியுள்ளன.
“பிச்சை புக்குஆயினும் கற்றல் மிக இனிதே” (இனி. நா. 1)
“நாளும் நவை போகான் கற்றல் மிக இனிதே“ (இனி. நா.3)
“கழறும் அவை அஞ்சான் கல்வி இனிதே; “(இனி. நா.12)
“கற்றார் முன் கல்வி உரைத்தல் மிக இனிதே“( இனி. நா.16)
“புலவர்தம் வாய்மொழி போற்றல் இனிதே“( இனி. நா. 20)
“கற்றலின் காழ் இனியது இல்“( இனி. நா.40)
திருக்குறள்
குறள் நவிலும் கல்வி அதிகாரத்தில் ஒருவருக்குத் தம் வாழ் நாளில் கல்வியானது எவ்வகையினில் எல்லாம் பெருமையினைத் தரும் என்பதினை வள்ளுவர் பத்துக் குறட்பாக்களில் நயம்படத் தெரிவித்துள்ளார். பிழை இல்லாதவற்றைத் தனது குறைகள் நீங்குமளவுக்குக் கற்றுக்கொள்ள வேண்டும். கற்ற பிறகு அதன்படி நடக்கவேண்டும்.எனவே எண்ணும் எழுத்தும் எனப்படும் அறிவுக் கண்களைப் பெற்றவர்களே, உயிர் வாழ்வோர் எனக் கருதப்படுவார்கள்.
“கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக” (குறள் 391)
“எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு” (குறள் 392)
என்கிறார். கண்ணில்லாவிடினும் அவர் கற்றவராக இருப்பின் கண்ணுடையவராகவே கருதப்படுவார். கல்லாதவருக்குக் கண் இருப்பினும் அது புண் என்றே கருதப்படும். ஆகவேகல்வி கற்றவரே உயர்ந்தவர்; கல்லாதவர் இழிந்தவர்.
“கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்“(குறள் 393)
“உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர்“(குறள் 395)
மகிழ்ச்சி பொங்கிடச் சேர்ந்து பழகுவதும், பிரிந்திட நேரும் போது மனங்கலங்குவதும் அறிவினில் சிறந்தோர் செயலாகும். தமக்கு இன்பம் தருகின்ற கல்வியறிவு உலகத்தாருக்கும் இன்பம் தருவதைக் கண்டு, அறிஞர்கள் மேலும் மேலும் பலவற்றைக் கற்றிடவே விரும்புவார்கள். கற்றவனுக்கு எல்லா நாடும் சொந்த நாடாகும்; எல்லா ஊரும் சொந்த ஊராகும். இதனைத் தெரிந்தும் ஒருவன் இறக்கும் வரை கூடப் படிக்காமல் இருப்பது ஏன் என்னும் வினா சமுதாயத்தில் புரையோடி கிடந்த அறியாமை கருத்தில் கொண்டு தொடுக்கப்பட்டதாக உள்ளது.
“உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்.(குறள் 394)
“தாமின் புறுவது உலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்“(குறள் 399)
“யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு“(குறள் 397)
கல்வி ஒன்றே அழிவற்ற செல்வமாகும். அதற்கொப்பான சிறந்த செல்வம் வேறு எதுவும் இல்லை என்பதால் ,மணலில் தோண்டிய அளவு சிறு குளத்தில் நீர் ஊறும்; மக்கள் கற்ற அளவே அறிவும் வளரும் என்பதோடு,ஒரு தலைமுறையில் பெறும் கல்வி அறிவானது, ஏழேழு தலைமுறைக்கும் பாதுகாப்பாக அமையப் பெற்றுவிடும்; இது தெய்வப்புலவரின் தெய்வீக வாக்காக உள்ளது.
”கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை“(குறள் 400)
“தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு“(குறள் 396)
“ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து” (குறள் 398)
திரிகடுகம்
விளக்கில் எரியும் திரி எப்படி வெளிச்சத்தைத் தருகிறதோ அதேபோல் மனித வாழ்க்கைக்குக் கல்வி வெளிச்சம் தரும். கல்விக் கற்பிக்கும் ஆசிரியர் இல்லாத ஊரில் வாழ்தல் கூடாது என்பதினையும்,
“கணக்காயர் இல்லாத ஊரும் பிணக்கறுக்கும்“( திரி.10)
நூல்களை ஆராய்ந்து நுட்பமான பொருள்களைக் கொள்ளுதலும், நூல்களுக்கு ஒவ்வாத சொற்களை பலர் விரும்பினாலும் சொல்லாதிருத்தலும், நல்ல சொற்களைக் கீழ்க்குலம் ஆகாதவரிடத்துச் சொல்லுதலும் ஆகிய இம்மூன்றும் கற்றறிந்தார் மேற்கொள்ள வேண்டிய செயல்களாகும் என்பதினை,
“நுண்மொழி நோக்கிப் பொருள் கொளலும், நூற்கு ஏலா
வெண் மொழி வேண்டினும் சொல்லாமை, நல்
மொழியைச்
சிற்றினம் அல்லார்கண் சொல்லலும் – இம்
மூன்றும்
கற்றறிந்தார் பூண்ட கடன். ” ( திரி.32)
என்னும் பாடல் விளக்கியுள்ளது.
ஆசாரக்கோவை
ஆசிரியர்க்குக் காணிக்கையைத் தருதல், யாகம் செய்தல், தவம் இயற்றல், கல்வி கற்றல் என்ற நான்கினையும் மனம், மொழி, மெய் என்ற மூன்றும் மாறுபடாது விளங்குமாறு பாதுகாத்துச் செய்தல் வெண்டும். இல்லாவிடில் மாறுபட்டு விளங்கின எக்காலத்திலும் எவ்வுலகத்திலும் இவை தனக்குப் பயன்படாமல் போகும் என்கிறது ஆசாரக்கோவை.
“ தக்கிணை வேள்வி தவம்கல்வி இந்நான்கும்
முப்பால் ஒழுக்கினால் காத்துய்க்க
உய்யாக்கால்
எப்பாலும் ஆகா கெடும். ”( ஆசா. 3 )
பழமொழி
கற்றவர்க்குச் சென்றவிடமெல்லாம் சிறப்பு உண்டு. அறிவுடையவரின் புகழ் நான்கு திசைகளிலும் சென்று பரவும். எனவே அறிவுடையவர்க்கு எந்த நாடும் அயல்நாடாகாது. அவர் சொந்த நாடேயாகும். தன் சொந்த ஊரில் இருப்பது போல இருக்க முடியும். ஆதலால் வழியில் உண்பதற்கு உணவு கொண்டு செல்ல வேண்டியதில்லை.
“ஆற்றுணா வேண்டுவது இல்“( பழ. 4)
பல நூல்களைக் கற்றுணர்ந்தவர்கள் அடக்கம் உடையவராய் இருப்பர். தம்மைப் புகழ்ந்து பேசமாட்டார்கள்.
“நிறைகுடம் நீர்தளும்பல் இல் “(பழ.9)
அறிவாகிய பெருமை ஒருவனுக்கு ஆடை போன்றது. அறிவாகிய பெருமை இல்லாதவன் செல்வத்தைப் பெற்றதனால் பெருமை அடையமாட்டான்.
“அணியெல்லாம் ஆடையின் பின் “(பழ. 26)
என்பன கல்வியைச் சிறப்பிக்க வந்த பழமொழிகளாகும்.
சிறுபஞ்சமூலம்
அறிவுடைய நூல்களைக் கற்றவர்கள் தேவர்களுக்கு ஒப்பாவர்கள் அத்தகைய நூல்களைக் கற்காதவர்கள் பூத பிசாசுகளுக்கு ஒப்பாவர்.
“தேவரே கற்றவர் கல்லாதார் தேருங்கால்(சிறு.மூ. 20)
எல்லாவற்றையும் அறிந்தவனும் யாதொன்றும் அழியாதவனும் நற்குணமே இல்லாதவனும், குற்றமே இல்லாதவனும், எல்லா நூல் தொகுதிகளையும் முழுமையாகக் கற்றவர் இவ்வுலகில் இல்லை என்கிறது சிறுபஞ்சமூலம்
“ சத்தமெய்ஞ் ஞானம் தருக்கம் சமயமே” (சிறு.மூ. 86 )
இலக்கண நூல், அறிவுநூல், அளவை நூல், சமய நூல், அறிவின் மிக்கோர் இயற்றிய வீடுபேறு பற்றிய நூல் என்ற இவ்வைந்தையும் அறிபவன் மக்களுன் மேலானவனாவான்.
“குணனடங்கக் குற்றமில் லானாம் ஒருவன்” (சிறு.மூ. 31 )
முதுமொழிக்காஞ்சி
“கற்றலின் கற்றாரை வழிபடுதல் சிறந்தன்று” – சிறந்த பத்து
“கற்றது உடைமை காட்சியின் அறிய” – அறிவுப் பத்து
”நேராமல் கற்றது கல்வி யன்று” – அல்ல பத்து
அரிய உண்மைகளைக் கற்றலை விடக் கற்றறிந்த பெரியோரைப் போற்றியொழுதுதல் மேலானது. கற்ற கல்வியுடைமையை அறிவினால் அளந்தறிவர். கற்பிக்கும் ஆசிரியனுக்கு ஒன்றையும் கொடாமல் கற்பது கல்வியாகாது. ஆகலின் ஆசிரியனுக்கு உற்றுழி உதவவேண்டும் என்பதுமுதுமொழிக்காஞ்சி எடுத்துரைக்கும் அறக் கல்வியாக உள்ளது .
ஏலாதி
எண்ணும் எழுத்துமாகிய நூல்களை மாண்போடு கேட்டு எழுதி, படித்து, வாழ்வாருக்கு உணவு ,உடை,எழுத்தாணி, புத்தகம், புத்தகம் வைக்கும் பெட்டி ஆகியவற்றை இப்பிறவியில் கொடுத்து நூல்களை எழுதவைத்து வாழ்வாங்கு வாழும் சான்றோர் விரிந்த புகழினைப் பெறுவர்.
“ஊணொடு கூறை யெழுத்தாணி புத்தகம்
பேணொடு மெண்ணு மெழுத்திவை – மாணொடு
கேட்டெழுதி யோதிவாழ் வார்க்கீய்ந்தா ரிம்மையான்
வேட்டெழுத வாழ்வார் விரிந்து.”( ஏலா. 63 )
நிறைவுரை
“முயற்சி செய்து பார்
பயிற்சி பெற முயல்க
தளர்ச்சியை நீக்கிப் பார்
தாழ்வுமனப்பான்மையை ஒதுக்குக
உன்னால் விடியல் மலரும்
கல்வியால் மட்டுமே முடியும்……”
கல்விக் கற்றவர்கள், தாம் கற்றவற்றை வாழ்வில் பயன்படுத்த வேண்டும். கல்வியின் வாயிலாகத் தாம் கற்ற அறநெறிகளை வாழ்க்கையில் பின்பற்ற வேண்டும். பின்பற்றினால் மட்டுமே கற்ற கல்வியால் பயன் உண்டு. கற்றதன்படி அறநெறிகளைப் பின்பற்றி வாழாதவர் பிறருக்கு அறநெறிகளை எடுத்துக் கூறும் தகுதியினை இழந்து விடுவர். ஆக்கல் மிகுந்த கல்வியில் அழிக்க முயல்வது அறிவியல் கண்டுபிடிப்புகள் அழிவினை நோக்கிச் செல்வதற்கு ஒப்பானதாகும். மறம் செல்வாக்குடன் திகழ்ந்த காலத்தில் அறம் உரைக்க வேண்டிய தேவை எழுந்ததன் விளைவு பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அற நூல்கள் மிகுதியாகத் தோற்றம் பெற்றுள்ளன. அக்காலம் முதல் இன்று வரை கல்வியின் மேன்மைத்தன்மைகளை எடுத்துரைக்கவும், வலியுறுத்தவும் அற நூல்கள் துணைபுரிந்துள்ளன. காகிதமாய்க் கல்வி கானகம் செல்லாமல் காவியமாய் கல்வி எந்நாளும் நல்லறமாகிடுதல் வேண்டும்.
துணைநின்ற நூல்கள்
- அறவாணன், க.ப; (2008), ” அற இலக்கியக் களஞ்சியம் ” , தமிழ்க்கோட்டம், சென்னை- 29.
- சுப்பிரமணியன், ச.வே; (2008), தமிழ்ச் செவ்வியல் நூல்கள் மூலம் முழுவதும்” மணிவாசகர் பதிப்பகம், சென்னை- 108.
- சிற்பி பால சுப்பிரமணியம், நீலபத்மநாபன்;( 2013), சாகித்திய அகாதெமி, புது தில்லி – 1
*****
கட்டுரையாளர் – உதவிப் பேராசிரியர் & நெறியாளர்,
தமிழ் உயராய்வு மையம், விவேகானந்தா கல்லூரி, அகஸ்தீஸ்வரம், கன்னியாகுமரி மாவட்டம் – 629 701