முடுகா மொழியின் பெயர்ச் சொற்களில் பழந்தமிழ் வழக்காறுகள்

0

-முனைவர். த. கவிதா

உலக நாகரிகங்களுள் பழைமை மிக்க நாகரிகமாக விளங்குவது  திராவிட நாகரிகம். அந்நாகரிகத்திற்குரிய  மக்கட் தொகுதியினர்  ஒரு காலத்தில் பாரதம் முழுக்கப் பரந்து வாழ்ந்திருந்தனர்  என்பது அறிஞர்களின் கணிப்பு. உலக மொழிக்குடும்பங்களில் ஒன்றாக விளங்கும் திராவிடமொழிக் குடும்பத்தில் தலைமை சான்ற மொழியாகத் திகழ்வது தமிழ் மொழியே. அத்தமிழ் மொழியிலிருந்து பல கிளை மொழிகளும் தனிமொழிகளும் உருவாகியிருக்கின்றன. தமிழின் கிளை மொழிகளில் பல பழங்குடியினரின் மொழிகளும் அடக்கம். சில பழங்குடியினரின் மொழிகள் தனித்தகுதி பெறும் அளவுக்கு மாறியிருக்கின்றன. எனினும் அவற்றில் பழந்தமிழ்ச் சொற்கள் சில அவ்வாறே வழங்கப் படல் உண்டு. பல சொற்களோ சிற்சில நிலைகளில் மருவி வழங்கும் சூழலில் வழக்கிலுள்ளன. இத்தகு நிலையில் கேரள மாநிலத்தின்  பாலக்காடு மாவட்டத்திலுள்ள  அட்டப்பாடி மலைப் பகுதிகளில்  வாழ்ந்து கொண்டிருக்கும் முடுகர் இன மக்களின்  பேச்சு மொழியிலும் பல பழந்தமிழ்வழக்காறுகள் இன்றும் நிலவி வருவதைப் பார்க்கின்றோம்.

பழந்தமிழகத்தின் ஒரு பகுதியாக விளங்கிய கேரளத்தில் உள்ள மலைப்பகுதிகளில்  முடுகர் இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.  பிற மொழிக் கலப்பிற்கும் பிற நாகரிகக் கலப்பிற்கும் அதிகமாக இடம் தராமல்  அவர்கள்  வாழ்ந்து கொண்டிருப்பது சிறப்பு. எனவே  தங்களுக்கான தனித்துவத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கும் இனமாக அவர்களை அடையாளம் காண முடிகின்றது. அம்மக்கள் பேசும் மொழியானது பழந்தமிழோடு மிக நெருங்கிய தொடர்புள்ள மொழியாக விளங்குவதை அறிய முடிகின்றது.  சான்றுக்குச் சில பெயர்ச் சொற்கள் மட்டும்  கீழே தரப்படுகின்றன.

தமிழ் மொழி
முடுகா மொழி

உயர்திணைப் பெயர்கள்

தாய்                                                                      அவ்வ, அவ்வெ, அப்ப(abba)

தந்தை                                                                   அம்ம, அம்மெ

என்தந்தை                                                               தந்தெ

குழந்தை                                                                   பிள்ளெ

கணவன்                                                                   ஆளெ(ன்)

மனைவி                                                                    பெண்டு

ஆண்குழந்தைகள்                                               ஆம்பிள மக்கா

பெண்குழந்தைகள்                                               பொம்பிள மக்கா

அஃறிணைப் பெயர்கள்

மான்                                                                             மா

அணில்                                                                       அணாலு

மலையணில்                                                           பெளிலு (beLilu)

கறையான்                                                                 சிதாலு

முயல்                                                                             முசாலு

காற்று                                                                            காத்து, காலு

மேகம்                                                                            மஞ்சு

வீடு                                                                                 கூரெ

ஊர்                                                                                 ஊரு

மலை                                                                              மலெ, வரெ

குகை                                                                               அளெ

கீரை                                                                               அடா

நகம்                                                                                ஒயிறு, நகா

உரல்                                                                                உராலு

உலக்கை                                                                      உலாக்கெ

சோறு                                                                             சோறு, அன்னம்

தேன்                                                                               தேனு

மலைத்தேன்                                                              பெருந்தேன்

வானம்                                                                           வானு

உனக்கு                                                                           நினக்கு

கிழங்கு                                                                          கிகாங்கு

முதலான சில முடுகா மொழிப் பெயர்ச்சொற்களை நாம் கண்ணுறும்போது  அவை பழந்தமிழின்  பல சொற்களையும் சில வடிவ மாற்றத்தோடு வழங்கி வருவனவாகக் காணப்படுகின்றன. அதனால் பழந்தமிழின் ஒரு வட்டார வழக்கு மொழியாக இம்மொழியினை இனங்காண வழியுண்டு.

முடுகா மொழியில் “தாய்” என்ற உறவு முறைச் சொல் “அவ்வ”  அல்லது “ அப்ப” (abba)  என்று இடம் பெறுகின்றது. இச்சொல் செவ்விலக்கியங்களில் ஒன்றாகிய மணிமேகலையில் பதிவாகியுள்ளது.

அவ்வையர் ஆயினீர்: நும்அடி தொழுதேன். (மணி–பாத்திரம் பெற்ற காதை – 137)

என்று மணிமேகலை கூறுகின்ற கூற்றில் ”தாய்” என்னும் பொருளமைந்த “அவ்வை” என்ற சொல் இடம் பெறுவதைப் பார்க்கின்றோம்.  இச்சொல் முடுகர் நாவில் ஒலிக்கப்படும்  பொழுது  சிற்சில சமயங்களில் “அப்ப” (abba) என்றும் மாறுகின்றது. இங்கு வகரம் ஒலிப்பு ஒலியாகிய பகரமாக (ba) மாறியொலிக்கின்றது. உச்சரிப்பு எளிமை கருதி இத்தகைய மாற்றத்தினைப் பெறுகின்றது. கீழிதழையும் மேற்பல்லையும் பொருத்தி உச்சரிப்பதைவிட இரு இதழ்களையும்  பொருத்தி உச்சரிக்கும் செயல்  எளிமையாக அமைந்து விடுகின்றது. எனவே பல வகரச் சொற்களும் இம்மொழியில் இத்தகைய மாற்றத்தினை அடைவது இயல்பாகி விடுகின்றது.

 முடுகர் இன மக்கள் தந்தையை விளிக்கும் போது ”அம்ம” என்கின்றனர். ஆனால் பிறரிடம் தந்தையைப் பற்றிப் பேசும் போது “என்னு தந்தெ” என்று கூறுவதுண்டு. இச்சொல் வழக்காறும்  சங்ககாலத்திற்குரியதே.

குறுக வாரல் தந்தை” (அகநா – 195) என்ற அகநானூற்று  அடியினில்  அச்சொல் இடம்பெறுவதுண்டு.

பறவைகளின்  குஞ்சுகளை தொல்காப்பியம்  “பிள்ளை” என்று குறிப்பதுண்டு.

“அவற்றுள் பார்ப்பும் பிள்ளையும்  பறப்பவற் றிளமை”(தொல் 1503)

என்பது நூற்பா. ஆனால் முடுகர் மொழியில் அச்சொல் உயர்திணையில் குழந்தையினைச் சுட்ட வரும்  சொல்லாக அமைகின்றது. குழந்தையை அம்மக்கள் “பிள்ளெ” என்பார்கள். மட்டுமின்றி பன்மை நிலையில் குழந்தைகளைப் பற்றிப் பேசும்போது “மக்கள்”, “மக்களு”  என்ற சொல் முடுகரிடையே புழக்கத்திலுள்ளது.

   ”…………..வடமொழிப் பெயர் பெற்ற
    முகத்தவன் மக்களுள்  முதியவன் புணர்ப்பினால்” (கலித் – 25 – 2)

என்னும் கலித்தொடரில்  பன்மையில் குழந்தைகளைச் சுட்டுவதற்கு  ”மக்கள்” என்ற சொல் இடம்பெறுவதைப் பார்க்கின்றோம்.

முடுகர்கள் கணவனை “ஆளெ(ன்) என்றும் மனைவியை “பெண்டு” என்றும் கூறுவர். இச்சொற்கள்  சங்க இலக்கியங்களில்  காணப்படுவது கண்கூடு. திருமுருகாற்றுப் படையில்  முருகனைச் சிறப்பித்துப் பேசும் நக்கீரர்  “இசைபேர் ஆள”(திருமுரு – 270) என்று விளிப்பதுண்டு. இங்கு ”உரியவன்”, ”ஆள்பவன் ” என்ற பொருள்களில்  “ஆளன்” என்ற சொல் இடம்பெறுகின்றது. ஆகவே ‘இல்லத்தை ஆள்பவன்’, ’மனைவிக்கு உரியவன்’ என்ற பொருள்களில் முடுகர்கள் கணவனை  ‘ஆளெ(ன்)’ என்ற சொல்லால் புலப்படுத்துகின்றார்கள் என்று  கருதலாம்.  சங்கத் தமிழர் அரசனின் மனைவியைக் குறிப்பதற்கு “பெருங்கோப்பெண்டு” என்று மொழிந்திருக்கின்றார்கள் என்பதை நாம் அறிவோம். எனவே முடுகர்களும் மனைவியை ”பெண்டு”  என்ற சொல்லால்  வழங்குவது கவனிக்கத்தக்கது. .

மான் என்னும் உயிரினம் சங்ககாலத்தில்  “மா” என்றழைக்கப் பட்டதுண்டு. முடுகர்கள்  இன்றளவும்  மானைச் சுட்டுவதற்கு “மா” என்பதனையே  வழக்கத்தில் வைத்திருக்கின்றார்கள். “மாப்பிணை” (புறநா – 2) என்றவாறு அமையும் புறநானூற்றுச் சொல் மான்பிணையைச் சுட்டுவதற்கு வந்ததாக அமைகின்றது. ”அணில்” என்னும் சிறுபிராணி முடுகர்களால் “அணாலு” என்று கூறப்படுகின்றது. மலையணிலைக் குறிக்கும்போது “பெளிலு” (beLilu) என்பர்.

அணிலாடு முன்றில்” (குறுந் – 41)

கிளி விளி பயிற்றும் வெளில் ஆடு பெருஞ் சினை” (அகநா – 12)

என்ற  பழந்தமிழிலக்கியத்  தொடர்களில்  அணில், வெளில் என்ற சொற்கள் இடம்பெறுவதைப் பார்க்கின்றோம். இச்சொற்கள்

அணில் – அணிலு – அணலு –  அணாலு என்றும்

வெளில் – வெளிலு – பெளிலு (beLilu) என்றும் மருவி முடுகர்களால் வழங்கப்படுகின்றன. இங்கு  முயற்சி எளிமை கருதி பல்லிதழ் ஒலியாகிய வகரத்தை ஒலிப்பில் ஒலியாகிய பகரமாக(ba)  மாற்றிவிடுகின்றார்கள். இத்தகு நிலையினை மன்னான், இரவாளர், இருளர் போன்ற இதர பழங்குடியினரின்  மொழிகளிலும் காணலாம்.

“கறையான்” எனும் சிறு உயிரினத்தை முடுகர் இன மக்கள் “சிதாலு” என்பர். இச்சொல் வழக்காற்றினை  “முது  சுவர்க் கணச்சிதல் அரித்த” (சிறுபாண் – 133) என்றவாறு சிறுபாணாற்றுப் படையில் காண்கின்றோம். இங்கு  சிதல் – சிதலு – சிதாலு என்று முயற்சி எளிமையின் பொருட்டு மொழியிடை அகரம் ஆகாரமாக நீண்டொலிக்கின்றது. ”முயல்” என்ற பெயர்ச் சொல்லும் இத்தகு மாற்றத்திற்கு உள்ளாவது உண்டு.    “முயல் சுட்ட வாயினும் தருகுவோம்” (புறநா – 319) என்னும் தொடரில் இடம்பெறும் ”முயல்”  என்ற சொல் முடுகா மொழியில் “முசாலு” என்று மாற்றமடைகின்றது. தமிழைப் பொறுத்த வரையில் பேச்சு வழக்கில் மொழியிடை யகரம் சகரமாக மாற்றம் பெறுதலுண்டு. பங்கயம் – பங்கசம் என்று ஒலிக்கப் பெறுதலைக் காணலாம். அவ்வாறே இங்கு   முயல் – முசல் – முசால் – முசாலு என்று மாற்றமடைவதைப் பார்க்கின்றோம். முடுகர்கள் வீட்டினை “கூரெ” என்று சுட்டுவர். இச்சொல் பழந்தமிழிலக்கியங்களில் இடம் பெறுவதுண்டு. ”குறுங் கூரைக் குடிநாப்பண்” (பட்டினப் – 81)  என்பார் கடியலூர் உருத்திரங்கண்ணனார்.  மலையினை சங்ககால மக்கள் “வரை” என்றும் வழங்குவர்.  “பனிபடு நெடு வரை” (புறநா – 6) என்னும் தொடரே அதற்குச் சான்று. அச்சொல்லினை முடுகர் இன மக்கள் “வரெ” என்று கூறுவர்.

காற்றினைக் “காத்து”, “காலு” என்ற இருநிலைகளில் கூறுவது முடுகர் இன மக்களின் வழக்கமாகும். அவ்வாறெ “மேகம்” என்பதனை “மஞ்சு” என்ற  சொல்லால் அம்மக்கள் கூறியமைவதுண்டு. “குகை” என்பதோ “அளெ” என்ற சொல்லால்  குறிக்கப்படும்.

        “காற்று என்னக் கடிது” (மதுரைக் 52)

கால் உணவாக” (புறநா – 43)

அகல் இரு வானம் அம் மஞ்சு ஈன” (அகநா – 71)

அளைச் செறி உழுவை” (புறநா – 78)

போன்ற சங்கத் தொடர்களில் காற்று, கால், மஞ்சு, அளை முதலான சொற்கள் இடம் பெறுகின்றன. அச்சொற்களே சிறு அளவிலான மாற்றங்களுடன் முடுகா மொழியில்  வழங்கப்படுகின்றன. அங்ஙனமே

          “உரற்கால் யானை” (குறுந் – 232)

பாசவல் இடித்த கருங்காழ் உலக்கை” (குறுந் – 238)

என்ற சங்கத் தொடர்களில் காணலாகும்  “உரல்”, ”உலக்கை”  என்பன முறையே “உராலு”, ”உலாக்கெ” என்ற நிலையில் முடுகர் மொழியில்  சற்று நீண்டு ஒலிக்கப் படும் சொற்களாக மாற்றமடைகின்றன.

குறுந்தொகைத் தலைவி மலைத் தேனைப் பற்றிக் கூறும்போது “பெருந்தேன்” என்று சிறப்பித்துக் கூறுவாள்.  “பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே” (குறுந் – 3) என்பது  குறுந்தொகைத் தலைவியின் கூற்று. முடுகர் மொழியிலும் மலைத்தேனைக் குறிப்பதற்கு ”பெருந்தேனு” என்ற சொல்லே  பயன்பாட்டில் உள்ளது.

“நகம்” என்னும் சொல் முடுகர் மொழியில் “ஒயிரு” , நகா” என்ற சொற்களால் வழங்கப்படுகின்றது.  ”உகிர்” என்ற சங்ககாலச்சொல் உகிர் – ஒகிர் – ஒகிரு – ஒயிரு என்று முடுகர் மொழியில் மருவியிருக்க வேண்டும். ”வள் உகிர்க் குறைத்த” (சிறுபாண் – 136) என்ற பத்துப்பாட்டுத் தொடரில்  ”உகிர்”  என்ற சொல்  நகத்தைக்  குறிப்பதாக  அமைகின்றது. அவ்வாறே “கீரை”  என்ற சொல்லின் வேறு வடிவமான “அடகு” என்னும் சங்கச் சொல் முடுகர் மொழியில் “அடா”  என்ற நிலையில் காணப்படுகின்றது.  இங்கு ஈறு மறைந்து  ஈற்றயல்  நீண்டு அமைந்த சொல்லாக மாறி விடுவதை உணரலாம். ”படப்பை கொய்த அடகு” (புறநா – 140)  என்று புறநானூற்றில்  அச்சொல் இடம்பெறுவதுண்டு.

”சோறு” என்ற சொல் சங்க காலத்தில் உணவைக் குறித்த சொல்லாக  வழங்கப்பட்டது. முடுகர்களும்  உணவினைக் குறிப்பதற்கு  “சோறு” என்ற வழக்காற்றினையே பயன்படுத்துகின்றனர். ”சோறு வாக்கிய கொழுங்கஞ்சி” (பட்டினப் – 44) என்பது பட்டினப்பாலைத் தொடராகும்.

”வானம்” என்பது சங்ககாலத்தில்  “வான்” என்றும் குறிக்கப்பட்டது.  “வான் கடற் பரப்பில் தூவற்கு எதிரிய” (அகநா – 10) என்னும் அகநானூற்றுத் தொடரில் அச்சொல் இடம்பெறுதல் உண்டு. அச்சொல் முடுகர்களால் “வானு” என்றவாறு  ஈற்று மெய்யின் மீது உகரம் ஏறிய நிலையில்  வழங்கப்படுகின்றது.  “உனக்கு” என்னும் தற்காலத் தமிழ் வடிவம் முடுகர் மொழியில் “நினக்கு” என்று சுட்டப்படுகின்றது. இச்சொல் வழக்காறு சங்ககாலத்திற்குரியதாகும்.

நினக்கே அன்றுஅஃது  எமக்குமார் இனிதே” (ஐங்குறு – 46)

என்னும் சங்க இலக்கியத் தொடரில்  அச்சொல் இடம்பெறுவதைக் காணலாம். ”கிழங்கு” என்னும் தமிழ்ச்சொல் முடுகா மொழியில் “கிகாங்கு” என்று சற்று மருவிய நிலையில் காணப்படுகின்றது.  உச்சரிப்பு எளிமை காரணமாக ழகரத்தைத் தவிர்க்கும் பொருட்டு இவ்வாறு மருவியிருக்கின்றது என்பது புலனாகின்றது. இம்மொழியில்  ழகர ஒலி வழக்கிலில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கொழுங் கிழங்கு மிளிரக் கிண்டி” (புறநா – 168) என்னும் தொடரில் ”கிழங்கு” என்னும் சொல் இடம்பெறுவதைக் காணலாம்.

மேற்கண்ட சான்றுகளால் முடுகாமொழியின் பெயர்ச்சொற்கள் பழந்தமிழின் பெயர்ச் சொற்களோடு நெருங்கிய உறவு கொண்ட சொற்களாக உள்ளன  என்று உறுதியாக மொழியலாம்.  முடுகா மொழியின் வினைச்சொற்களும் இத்தகைய நிலையினவே என்பது இதனால் பெறப்படும். அதனால் பழந்தமிழின் வட்டார வழக்கு  மொழிகள்  இன்னும் மறைந்து விடவில்லை என்பது தெளிவாகின்றது. எனவே இத்தகு பழங்குடியினர் மொழிகளை ஆய்ந்துணர்ந்து பழந்தமிழின் இயல்பினை உணர்ந்தறிவது மொழியறிஞர்களின் கடமையாகின்றது.

*****

துணை நின்ற நூல்கள்:

  1. அகத்தியலிங்கம். ச , திராவிட மொழிகள் , மணிவாசகர் பதிப்பகம், பாரிமுனை, சென்னை -08.
  2. கருணாகரன். கி , சமுதாய மொழியியல், மெய்யப்பன் பதிப்பகம், புதுத்தெரு, சிதம்பரம் – 1.
  3. சண்முகம் பிள்ளை.மு. (ப. ஆ), தொல்காப்பியம் –பொருள்- இளம்பூரணம், முல்லை நிலையம், மண்ணடி, சென்னை – 1.

4..தண்டபாணி. துரை (உ.ஆ).  2010. மணிமேகலை  உமா பதிப்பகம்                                                                            மண்ணடி, சென்னை-1.

  1. பாலசுப்பிரமணியன்.கு(த.ப.ஆ), எட்டுத்தொகை& பத்துப்பாட்டு நூல்கள் நியு செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, 2004.

*****

கட்டுரையாளர் பணியாற்றுவது –  தமிழ்த்துறை மற்றும் ஆய்வு மையம்,
அரசுக்கல்லூரி சித்தூர், பாலக்காடு, 678104.                                         அலைபேசி: 9846741558

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *