குறளின் கதிர்களாய்…(233)
செண்பக ஜெகதீசன்
கொலைமேற்கொண் டாரிற் கொடிதே யலைமேற்கொண்
டல்லவை செய்தொழுகும் வேந்து.
-திருக்குறள் -551(கொடுங்கோன்மை)
புதுக் கவிதையில்…
நாட்டு மக்களுக்கு
நல்லது செய்யாமல்
அல்லவை செய்து
அவர்களை
அல்லற்படுத்தும் அரசன்,
கொலைத்தொழில் செய்வோரைவிடக்
கொடியவன் ஆவான்…!
குறும்பாவில்…
குடிமக்களை வருத்தி அல்லலுறுத்தும்
கொடுங்கோல் வேந்தன், கொடியவனாகிறான்
கொலைத்தொழில் செய்வோரைவிடக் கூடுதலாய்…!
மரபுக் கவிதையில்…
நல்லது ஏதும் செய்யாதே
நாட்டு மக்களைத் துன்புறுத்தும்
பொல்லா மாந்தர் அரசாண்டால்
பெயரில் தானவர் மன்னனாவார்,
கொல்லும் செயலை மேற்கொண்டே
கொலையே தொழிலாய்க் கொண்டுள்ள
எல்லாக் கொடியோர் தமைவிடவும்
இவரே மிகவும் பெருங்கொடியரே…!
லிமரைக்கூ..
மக்களிடம் கருணையென்பதே இல்லாதவன்,
கொடுங்கோல் ஆட்சிசெய்யும் மன்னனவன்,
கொலைத்தொழில் கொடியரைவிடப் பொல்லாதவன்…!
கிராமிய பாணியில்…
மன்னனில்ல மன்னனில்ல
கொடுங்கோலாட்சி செய்யிறவன்
மன்னனில்ல மன்னனேயில்ல..
நாட்டு மக்களுக்கு
நல்லதே செய்யாம
கொடுமப்படுத்துறவன் மன்னனில்ல..
அவன்
கொலசெய்யிறதயே தொழிலாக்கொண்ட
கொகாரனவிட ரெம்பப் பெரிய
கொடியவனே..
அதால
மன்னனில்ல மன்னனில்ல
கொடுங்கோலாட்சி செய்யிறவன்
மன்னனில்ல மன்னனேயில்ல…!
செண்பக ஜெகதீசன்…