படக்கவிதைப் போட்டி – 188
பவள சங்கரி
அன்பிற்கினிய நண்பர்களே!
வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?
முரளிநாதன் வித்யாதரன் எடுத்த இந்தப் படத்தை திருமதி சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து போட்டிக்காகத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (24.11.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.
ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.
போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்
கரையோரப் பறவைகள்
கங்குலிலே களத்துமேட்டில்
காகங்களின் வரவுக்காகக் காத்திருந்த
கஞ்சமற்ற நெஞ்சம் கொண்ட நம்
கசடற்ற களநாயகன் தாம்
கண்ணுக்கெட்டிய தூரம்வரை
கட்டாந்தரை ஆனபோதும்
கந்தலான ஆடையுடன்
கதியாக வருவார்க்காய் காத்திருக்க
கம்பெனிக்காரனாகக் கடுமையுடன்
கப்பம் கட்ட கட்டாயப்படுத்தி – தன்
கரிய கரம் கொண்ட
கயவனைப் போல் வந்த காலனாக
கவலைகொண்ட முகத்தையும் கண்ணோக்காது
கல்வியறிவற்ற மாக்களை ஒப்பவே
களர்நிலமாக்கிக் களவாடிச் சென்றதால்
கழனியெல்லாமழிந்த கோலம் கண்டு
கன்னத்தில் கரைபுரண்ட கண்ணீரைக்
கரையேற்ற வாராரோ என
கஜாவால் களையிழந்த களம்கண்டு
காளையர்கள் காத்திருக்க – இங்கு
கன்னியும் காளையும் கடற்கரை மணலிலே
களவுகொண்டுள்ள காட்சி கண்டு
கலங்கிடும் உள்ளமுடன் கவலையோடு நோக்கிடும்
கனத்த நெஞ்சம் கொண்ட இக் காகங்கள்,,,
முனைவர் மு.புஷ்பரெஜினா
அமர்ந்திருக்கும் அண்ணனுக்கும்
அக்காளுக்கும் தெரியாமல்
முதுகுக்குப் பின்னே
முத்தான எம் காக்கைக் குடும்பம்
அவர்களின் பேச்சைக் கேட்டு
அம்மாவுடனான அப்பாவின் உரையாடல்
கல்லூரி மாணவர்களிவர்கள்
கடற்கரையச் சுத்தம் செய்து
நெகிழிக் குப்பைகளை அகற்ற
நேரத்துடன் வந்தார்கள்
நாளை அவர்களின் பணி
நடைபாதை வியாபாரிகளோடு
விதிகளைப் பின்பற்றாது
விற்பவர்களுக்கு இனிமேல்
கடுமையான தண்டனை
கட்டாயம் வேண்டும்
உருளை வருவலை
உண்ணட்டும் நம் மகன் பின்
திருந்தாத மாந்தரெவெரோ
திரும்பவும் வீசியெறிந்த
நெகிழிக்குப்பை காண
நெஞ்சம் பதைப்பதால்
அலகால் கொத்திச் சென்று
அகற்றுவோம் இங்கிருந்து
நானிலம் நலம் பெற நாம்
நால்வரும் துணை நிற்போம்..
வேதனை…
கால நேரம் பார்க்காமல்
கடற்கரை அமர்ந்தே கதைபேச
வாலை வயதுக் காதலர்கள்
வந்து போவார் எந்நாளும்,
சோலை விட்டு வந்திவர்கள்
சிந்தும் தீனி இரைபொறுக்க
வேலை யின்றி வரும்காக்கை
வேதனை யிவர்தான் அறிவாரோ…!
செண்பக ஜெகதீசன்…