வாழ்ந்து பார்க்கலாமே 44
க. பாலசுப்பிரமணியன்
தோல்விகள் தொடர்கதையானால் ..
“சிலர் சிரிப்பார், சிலர் அழுவார்; நான் சிரித்துக்கொண்டே அழுகின்றேன்” – தொலைக்காட்சியில் இந்தப்பாடல் ஒலித்துக்கொண்டிருக்கின்றது. கவியரசு கண்ணதாசனின் இந்தப்பாடலின் ஆழமான கருத்து மனோதத்துவ அடிப்படையில் அலசிப்பார்க்கும் பொழுது ஒரு மனதின் பல பரிமாணங்களையும் உணர்வுகளையும் மகிழ்ச்சியையும் துயரங்களையும் வெளிச்சம் போட்டுக்காட்டுகின்றது. வெற்றி – தோல்வி, மகிழ்ச்சி – துயரம், உயர்வு -தாழ்வு, வளமை -வறுமை ஆகிய அனைத்தும் பிணைந்ததுதான் வாழ்க்கை என்பதை எல்லோரும் அறிகின்றோம். ஆனாலும் தோல்விகளையும் துயரங்களையும் தாங்குகின்ற பக்குவம் நமது மனதிற்கு ஏற்படுவதில்லை.
“நீங்கள் சொல்வது சரிதான் அய்யா. தோல்விகளைத் தாங்குகின்ற பக்குவத்தை அடைய முயற்சிக்கின்றேன். ஆனால் துயரங்களும் தோல்விகளும் திரும்பத்திரும்ப வரும்பொழுது எப்படி சம்மாளிப்பது?. தோல்விகளின் தொடர்ச்சியில் மனம் துவண்டு விடுகின்றதே – என்ற கூற்று காதில் விழத்தான் செய்கின்றது. “பட்ட காலிலே படும்; கெட்ட குடியே கெடும் “என்ற பழமொழி நினைவுக்கு வருகின்றதே !
ஆங்கிலத்தின் மிகப்பெரிய கவிஞர் செகப்பிரியர் (Shakespeare) ஓர் நாடகத்தில் கூறுகின்றார் : “துயரங்கள் வரும்பொழுது தனித்து வருவதில்லை. அணி அணியாக வருகின்றன” (When Sorrows come, they come not in a single spies, but in battalions) பலரும் அனுபவிக்கும் உண்மை இது! இதற்கு வழி என்ன? மன உறுதிதான் !
அமெரிக்காவின் மிகச் சிறந்த தலைவராக விளங்கிய ஆப்ரகாம் லிங்கன் ஒரு சாதாரண தொழிலாளியின் குடும்பத்தில் பிறந்து எத்தனையெத்தனை சோதனைகளைச் சந்தித்தார். எத்தனை தோல்விகள் அவரைப் பின்தொடர்ந்தன ! தளர்ந்தாரா அவர்? ஒவ்வொரு தோல்வியையும் ஒரு பாடமாக ஏற்றுக்கொண்டு அவற்றை தன் முன்னேற்றத்திற்கான அடிக்கல்லாக மாற்றிக்கொண்டாரே! மற்றவர்களைக் கவரும் வசீகரமும் உடல்வாகும் இல்லாதவராக இருந்தாலும் தன் திறன்களால், தன் தொண்டால், தன் முயற்சிகளால் எல்லோரையும் ஈர்க்கும் காந்த சக்தி படைத்த மனிதராக மாறினாரே ! தோல்விகள் அனைவருக்கும் வரும். ஆனால் தொடர்ந்த தோல்விகள் அனைவருக்கும் வருவதில்லை. அப்படி வரும்பொழுது துவண்டுவிடாமல் எழுந்து ஒரு சிங்கத்தைப் போல சீறு நடை போடுகின்ற தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் வளர்த்துக்கொள்ளலாமே!
ஜார்ஜ் பெர்னார்ட் ஷாவின் கதைகள் அவருடைய ஆரம்பக்காலத்தில் எத்தனை முறை திருப்பியனுப்பப்பட்டது. அவர் முயற்சியைக் கைவிடவில்லையே ! உலகம் தன்னை ஒரு மிகச் சிறந்த எழுத்தாளராகப் போற்றும் வரையில் அவர் தளரவில்லை! உலகின் பல முன்னோடிகள் பெர்னார்ட் ஷாவோடு பேசவும் கருத்து பரிமாறவும் துடித்தார்களே!
சர் ஐசாக் நியூட்டன் என்ன சொன்னார் “ஆயிரமாவது தடவை நான் ஒரு பல்பை கண்டுபிடித்த போது எவ்வாறு அதை 999 வழிகளில் செய்யக்கூடாது எனக் கற்றுக்கொண்டேன்”
சரித்திரம் என்ன சொல்கின்றது? – கீழே விழுந்தவர்கள் எழுந்து நின்றார்கள்; தடுக்கி விழுந்தவர்கள்- மீண்டும் எழுந்து நடக்க முயன்றார்கள்; தோல்வி அடைந்தவர்கள் – மீண்டும் மீண்டும் முயற்சி செய்து வெற்றி அடைந்தார்கள். சாதனை படைத்தார்கள் ! இப்படி சரித்திரம் படைத்தவர்கள் ஒன்றல்ல-இரண்டல்ல-ஆயிரமாயிரம்பேர்கள் ! இவர்கள் வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டாமா?
பல நேரங்களில் நமது தவறான முடிவுகளால் நாம் தோல்வியைச் சந்திக்கிறோம். அந்த நேரங்களில் நமது முடிவுகள் தவறு எனது தெரிந்துவிட்டால் அதை ஏற்று மாற்றிக்கொள்ள துணியவேண்டும். தொடர்ந்து நமது தவறான முடிவுகளோட வாழ நினைத்தாலோ அல்லது நம்முடைய அகந்தை ,தற்பெருமை காரணமாகவோ நமது முடிவுகளைத் தொடர்ந்து போற்றிவந்தாலோ எப்படி வெற்றிப்படிகள் மீது ஏற முடியும்?
அறிவியல் ஆராய்ச்சிகளில் “பிழை பகுப்பாய்வு” (Error Analysis) என்ற ஒரு முறை பல இடங்களில் நடத்தப்படுகின்றது. அதன் பொருள் என்ன? நமது கண்டுபிடிப்புக்கள் ஆராய்ச்சிகள் ஆகியவற்றில் பிழைகள் ஏற்படுவதும், பிழைகள் கண்டுபிடிக்கப்படுவதும் ஒரு சாதாரண நடப்பு. ஆனால் அந்தப் பிழைகள் ஏன் ஏற்பட்டன? அதற்கான மூல காரணங்கள் என்ன? அந்தப் பிழைகளை எப்படி சரி செய்யலாம்? என்ற ஆய்வு நடத்தப்படுகின்றது. இது தவறுகளை மறுமுறை வராமல் இருப்பதற்கான கற்றலையும் திறன்களையும் நமக்கு அளிக்கும். இந்தப் பழக்கத்தை நாம் வாழ்க்கையில் நடைமுறைப்படுத்திக் கொள்ளவேண்டும். தோல்விகளை அலசி ஆராய்ந்து தவறுகளை ஏற்று அதற்கான மாற்று வழிகளை கண்டுபிடித்து மாற்றத்தைக் கொணருதல் வெற்றிக்கான அறிகுறிகளை நமக்கு காட்டும்.
மூளை-நரம்பியல் வல்லுநர்கள் தவறுகள் ஏற்படுவதற்கான காரணங்களிப் பற்றி செய்த ஆராய்ச்சியில் கவனக்குறைவுகளைத் தவிர மூளையில் ஒரு முறை ஏற்பட்ட கற்றலின் தாக்கங்கள் தொடர்வதாகவும் அவைகளுக்கான நியூரான்களின் வலைப்பின்னல்கள் வலுப்பட்டதால் மாற்றங்களை ஏற்றுக்கொள்ள தாமதிப்பதாகவும் அதனால் தொடர் தவறுகள் ஏற்படுவதாகவும் கூறுகின்றனர். இந்த நிலையை மாற்றுவதற்கான சூழ்நிலைகளை புதிய கற்றல்களே உருவாக்கும். எனவே, தவறைத் தவறு என்று அறிந்து கொள்ளாத வரையில் தொடர் தவறுகள் ஏற்பட்டுக்கொண்டிருக்க வாய்ப்புக்கள் உண்டு.
இந்த மாதிரியான தொடர் தவறுகளால் ஏற்பட்ட தோல்விகளால் மூடப்பட்ட நிறுவனங்களும் உண்டு. பல்லாண்டு காலங்கள் மிகச் சிறந்ததாக இருந்த நிறுவனங்கள் தங்களுடைய மூளைகளைச் சலவை செய்து புதிய கற்றலுக்கான சூழ்நிலைகளை ஏற்படுத்த வில்லை ஒரு தனி மனிதனுக்கோ அல்லது ஒரு நிறுவனத்துக்கோ பல காலங்கள் சிறப்பான உயர்நிலை சமூக அந்தஸ்து கிடைத்ததாலும் எவ்வளவு நாட்கள் அவை தொடரும் என்பதற்கான எந்த உத்திரவாதமும் இல்லை. ஒரு காலத்தில் மிகச் சிறப்பான காமெராக்களை கண்டுபிடித்த கோலோச்சிய கோடக் என்னும் நிறுவனம் வருகின்ற மாற்றங்களைக் கண்டுபிடித்து அதற்கான தயாரிப்புகளில் ஈடுபடாததால் மூட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.
இந்த நிலைக்கு வந்த பல நிறுவனங்களின் வழக்கு ஆய்வுகள் ஒன்றை மட்டும் தெளிவாகத் தெரியப்படுத்துகின்றன. தோல்விகள் பெரும்பாலும் ஒரு கணத்தில் வருவதில்லை. அவை வருவதற்கான பல அறிகுறிகள் நமக்கு முன்னமே கிடைத்து விடுகின்றன. நாம் விழிப்புடன் இருத்தல் மிக்க அவசியம்.
நண்பர்களே ! தோல்வியையும் தொடர் தோல்விகளையும் கண்டு அஞ்சவேண்டியதில்லை… அவைகள் நமக்கு பின்னால் வரும் வெற்றிக்கு நிச்சயமான வழிக்காட்டல்களைக் கொடுக்கும்.
துணிந்து முயற்சிக்கலாமே!!.. இன்றைய தோல்விகளை நாளைய வெற்றிகளாக மாற்றலாமே!!
(தொடரும்)