முனைவர் இரா.வெங்கடேசன்

உதவிப் பேராசிரியர்

இந்திய மொழிகள் மற்றும்

ஒப்பிலக்கிய பள்ளி

தமிழ்ப் பல்கலைக்கழகம்

தஞ்சாவூர் – 10

 

 

            சீனநாட்டை நெப்போலியன் உறங்கும் யானை என்றான் இது உண்மையே. மங்கோலிய இனத்தைச் சேர்ந்த சீனர்களின் உயர்வுக்குக் காரணமாக இருப்பவை உழைப்பு, இலக்கியம், மதநம்பிக்கை என்று சொன்னால் அது மிகையாகாது என்று எண்ணுகின்றேன். உலகில் தொன்மையான நாகரிகத்தைக் கொண்ட சீனா தொன்மையான இலக்கிய வளத்தை தன்னகத்தே கொண்டதாகும். சீனச் சமுதாயம் தொடக்க காலத்தில் அறிஞர்கள், உழவர்கள், கைத்தொழில் செய்வோர், வணிகர் என்ற படிநிலையில் அமைந்திருந்தது. சீன ஞானி கன்பூசியசின் சிந்தனைப் பள்ளியைச் சேர்ந்த மென்சிபசு சீனச் சமுதாயத்தை கற்றோர், கல்லாதவர் என இரண்டாகப் பாகுபடுத்தினார். இப்பிரிவு இன்றைய காலகட்டத்திலும் தொடர்கிறது. சீனத்தில் சீனம், மங்கோலியம், திபெத்தியம், கொரியம், தாய், உயிகுர், ஆங்கிலம் போன்ற மொழிகள் வழங்கப்பட்டாலும் சீனமொழி முதன்மை மொழியாக உள்ளது. சீனர்கள் கட்டுக்கோப்பாக வாழ்வதற்கு அடைப்படியாக இலக்கியங்களைக் கொண்டனர். சீன எழுத்து கி.மு.1250-1046 என்ற காலப் பகுதிக்குரிய எலும்பில் பொறிக்கப்பட்ட தேவ வாக்குகளிலும் வெண்கலப் பொறிப்புகளிலும் காணப்படுகின்றன. சீன எழுத்துக்களின் தரப்படுத்துதல் குவின் அரச மரபின் காலகட்டத்தில் நிகழ்ந்தது. சீனர்களைப் பண்படுத்தியது சீன இலக்கியங்களே. அப்படியான இலக்கியங்களில் முக்கியமானது சீனவேதம் அல்லது சகத்தின் சூட்சுமம் என்ற நூல் ஆகும். கன்பூசியஸ் முதலானோர் தம் காலத்தில் சொன்ன கருத்துக்களைத் திரட்டிய நூலாக இந்நூல் விளங்குகிறது. 1928 ஆம் ஆண்டு எம்.ஆர், ஜம்புநாதன் இந்நூலை தமிழில் மொழிபெயர்த்துள்ளார். சீனர்களின் ஒழுக்கம், கல்வி, பண்பாடு, உடை, இசை, மதம் போன்றவைகளை இந்நூல் ஒழுங்குபடுத்துகிறது.

            இன்றைக்கு சீனர்கள் பண்பாடு, கல்வி, தொழில்நுட்பம், அரசியல், அறநிலை, அறிவுநிலை, சட்டம், இலக்கியம் போன்றவற்றில் உயர்ந்து நிற்பதற்குக் காரணம் அந்நாட்டில் வாழ்ந்த அறிஞர்களின் சிந்தனைகள் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. சீன நாகரிகம், பண்பாடு ஆகியவற்றின் மைய உறுப்பாகக் கன்பூசியம் [Confucianism] விளங்கி வந்துள்ளது. இந்நெறி சீனஞானி கன்பூசியசினாலும் அவருக்குப்பின் தோன்றிய மென்சியசு (mencius) உள்ளிட்ட சான்றோர்களாலும் வளர்க்கப்பெற்றது. பின் வந்து சங்கு (sung) மிங்கு (ming) அரச மரபின் ஆட்சிக் காலங்களில் புதுக்கன்பூசியம் (Neo-confucianism) வளர்ச்சிபெற்றது. இந்த நெறியாளர்கள் தாவு மார்க்கம் மற்றும் பௌத்தம் ஆகிய இருபெரும் நெறிகளினின்றும் தேர்ந்தெடுத்த சிந்தனைகளைப் புதுக்கன்பூசியசியத்தில் புகுத்தி விட்டனர். (சோ.ந.கந்தசாமி, 2013:41)

            சீனர்கள் தாவோ மார்க்கம், மோசியநெறி, இயற்கையியம், வினைமுறைக்கடைப்பியம், அல்லது சட்டவியம், பொதுவுடைமைவாதம், கன்பூசியிசம், பௌத்த மார்க்கம் போன்றவைகள் காணப்பட்டாலும் சைனர்களின் சிந்தனைகளில், இலக்கியங்களில் மேலோங்கி கன்பூசியிசம்2 நிற்கிறது. கன்பூசியசின் போதனைகள்யாவும் முற்ற முடிந்த அறிவுரை என்று மக்கள் ஒப்புதல் அளித்தனர். அளித்தபின் சீனப் பள்ளிகளில் எல்லாம் கன்பூசியசின் போதனைகள் பயிற்றுவிக்கப்பட்டன. கன்பூசியசு ஒரு சாமானிய மனிதர் என்ற மட்டில் சீனர்கள் கருதவில்லை. அவரை ஒரு பூரண மனிதர் என்று அவரை மதிப்பிட்டனர் (சோ.ந.கந்தசாமி, 2013:57) எனவேதான் சீனர்கள் கன்பூசியத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டு இலக்கியங்கள் வழியாக அதனை மக்களுக்கு கடத்தினர். இந்த சிந்தனாமுறையென்பது சமூக விழிப்புடையதாக இருப்பதற்கானது. கன்பூசியசின் சிந்தனைகள் எப்பொழுதும் மக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கின்றது.

II

            வடக்குச் சீனாவின் சேபூ என்ற இடத்தில் கி.மு.551-ஆம் ஆண்டு கன்பூஷியஸ் பிறந்தான். 3 வயதில் தந்தையை இழக்கிறான். தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் கொண்ட கன்பூஷியஸ் சிறிய பள்ளிக்கூடம் தொடங்கிப் பின்னாளில் ராஜ்யத்தின் பிரதம மந்திரியாக உயர்ந்தான். பிரதம மந்திரி கன்பூஷியஸின் நிருவாகத்தின்கீழ் லூராஜ்யம் மற்ற ராஜ்யங்களுக்கு ஒரு முன்மாதிரியாயிருந்தது. விலைவாசி, முதலாளி-தொழிலாளி உயர்வு தாழ்வு, அறிவுக்கும் திறமைக்கும் தகுந்தாற்போல் வேலை போன்ற பல சீர்திருத்தங்களைச் செய்தான். சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்ட கன்பூஷியஸ் தன் சீடர்களுடன் நாடு முழுக்கப் பயணப்பட்டு மக்களைச் சந்தித்து நற்போதனைகள் செய்தார்.

“கன்பூஷியஸ் ஒரு சிந்தனையாளன், உபதேசிகன், தீர்க்கதரிசியல்ல காணாத கடவுளைப் பற்றி அவன் ஒன்றுஞ் சொல்லவில்லை. கண்முன்னே நடமாடும் மனிதர்களுக்கு தொண்டு செய்யாமல் காணாத பொருளுக்கு எப்படித் தொண்டு செய்ய முடியும் என்பது அவன் கேள்வி. உலகத்திலே பிறந்துவிட்டு உலக விவகாரங்களிலே ஈடுபடாமல் உலகத்தைவிட்டு ஓடிவிடுவதில் அர்த்தமென்ன இருக்கிறது என்று அவன் கேட்டான். இப்படி அவன் உலக ரீதியாக உபதேசிக்க வேண்டியது அந்தக் காலத்தில் அவசியமாய் இருந்தது. ஏனென்றால் அவனுடைய காலத்தில் தேச முழுமையிலும் அரசனுக்கும் குடிகளுக்குமுள்ள சம்பந்தம், உற்றார் உறவினர்களுக்குள்ள சம்பந்தம் முதலியவையெல்லாம் வரன் முறையின்றி ஒரே குழப்பமாய் இருந்தன. இதனாலேயே கன்பூஷியஸ் மனித வாழ்க்கைக்குத் தேவையான பல அமிசங்களைப் பற்றியும் கூறினான். கல்வி முறை, அரசியல் முறை, சடங்குகளைச் செய்யும் முறை, கலைகளை வளர்க்கும் முறை முதலிய பலவற்றைப் பற்றியும் அவன் திட்டங்கள் வகுத்திருக்கிறான்.” (வெ.சாமிசாதசர்மா, 2001: 50-51)

            கன்பூஷியஸ் புதிய மதமொன்றையும் உருவாக்கவில்லை. புதிய தத்துவங்களையும் உற்பத்தி செய்யவில்லை. ஆனால் மனித மனங்களை நன்றாக அறிந்தவன். மனித வாழ்க்கை பண்படுவதற்கு சில வழிமுறைகளைச் சொன்னான். இவை அனுபவத்திற்கு ஏற்றதாக இருந்தது. மக்கள் ஏற்றுக்கொண்டனர். லாவோத்ஸே உலகத்தைத் துறந்து வாழச் சொன்னான். கன்பூஷியஸ் உலகத்திலிருந்து வாழச் சொன்னான். கன்பூஷியஸின் காலத்திற்குப் பின்னால் வந்த மோத்ஸேயின் உபதேசங்கள் மக்களுக்கு உபயோகமாயிருந்தன. இதன் பின்னால் வந்த மென்ஷியஸ் என்ற மற்றொரு ஞானி மக்களுக்கு நன்மைகளைப் போதித்தான். இந்த சிந்தனையாளர்கள் சீனாவை சீன மக்களை வேறு ஒரு தளத்திற்குக் கொண்டு சென்றனர். இவர்கள் சொன்னவைகள் தொகுக்கப்பட்டன. இந்த நூல்கள் இன்றைய காலகட்டத்திலும் பயனுள்ளதாக உள்ளது சீனர்களுக்கு மட்டுமல்ல உலக மக்கள் அனைவருக்குமே.

III

            சீனமக்களின் அறிவுச் செழுமை, ஒழுக்கம் என்பன நீதிபோதனைகளால் கட்டமைக்கப்பட்டது. எந்தவொரு சீன இலக்கியத்திலும் நீதிபோதனை எப்பொழுதும் இடம்பெற்றுள்ளது. இலக்கியம் மக்களுக்காக என்ற கோட்பாட்டினைச் சீன இலக்கியத்தில் காண்கிறோம். அழகியல் கூறுகளுக்கு இரண்டாம் நிலை இடம்தான் தரப்பட்டுள்ளது. பல நூற்றாண்டுகளாக அற இலக்கியங்களும் (Moral Treatises) செவியறிவுரைகளும் (Exhortations) கடிந்துரைகளும் (Admonitions) மிகப் பலவாகத் தோன்றின. நவீனத் திறனாய்வாளர்கள் அவற்றைக் குறைத்து மதிப்பிட்டபொழுதும்கூட சீனரின் மனத்திலும் ஒழுக்க நெறியதும் அவற்றின் ஆதிக்கம் மிகுதியானது மட்டுமன்றி தொடர்ச்சியுமுடையது.3 எனவே சீன இலக்கியங்கள் பெரும்பகுதி நீதிபோதனைகளை வெளிப்படுத்தி நிற்பவைகள். இந்த நீதிபோதனைகள்தான் சீனர்களை உலகில் தலைசிறந்தவர்களாக காட்டி நிற்கிறது.

            கன்ஃபூசியஸ் மற்றும் அவரது சீடர்கள், சீனச் சமுதாயத்திற்கு வழிகாட்டும் கருத்துகளைக் கொண்டவையாக ஐந்து நூல்களை அடையாளம் காட்டினார்கள். இந்த ஐந்து நூல்களையுமே கன்ஃபூஷியஸ்தான் கொடுத்தார் என்றும் பலர் சொல்வார்கள். ஹான் வம்சத்தில் வந்த வு (Wu) பேரரசரின் காலத்தில் (கி.மு.141-கி.மு.87) கன்ஃபூஷியஸ் சொன்ன தத்துவங்களுக்கு அதிமுக்கியத்துவம் ஏற்பட்டது. கி.மு.136இல் கன்ஃபூஷியஸ்-இன் கருத்துகள் சீனாவின் தேசியக் கருத்துவாதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. அன்று முதல் 20 ஆம் நூற்றாண்டு வரையில் இந்த ஐந்து நூல்களின் கருத்துக்கள் ஏதாவது ஒருவகையில் சீனாவின் அதிகாரபூர்வமான தேசியக் கருத்துகளாக இருந்து வந்தன. அந்த ஐந்து நூல்கள் எவை?

 1. மாற்றுத் தொகை (யீ சிங். Yi sing, Classic of Changes)
 2. வரலாற்றுத் தொகை (ஷு சிங், Shu sing, classic of History)
 3. கவித்தொகை (ஷிழ் சிங், Shi sing, classic of Songs)
 4. சடங்குத் தொகை (லீ சீ, Li ji, Collection of Rituals)
 5. வசந்தகால இலையுதிர் காலக் குறிப்புகள், (ச்சுன் ட்ச்சியு, Chun Qiu, Spring and Autumn Annals)”4

கன்பூசியஸ் சொன்ன தத்துவங்கள், நீதிபோதனைகள், உலகியல் நீதிகளைப் போதிப்பதற்கு இந்த நூல்கள் உதவியிருக்கலாம். எப்படியாயினும் கன்பூசியசின் சிந்தனைகள் மக்களுக்கு நற்போதனைகளைக் கூறுவதாக உள்ளன.

            கன்பூசியஸ் முதலான சிந்தனையாளர்களின் தத்துவக் கருத்துக்கள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்ட சீனவேதம் அல்லது சகத்தின் சூட்சுமம் என்ற இந்நூல் 1928 ஆம் ஆண்டு நீடன் கோ பதிப்பகத்தின் வழியாக எம்.ஆர்.ஜம்புநாதன் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இந்நூலைத் தமிழில் மொழிபெயர்க்கவேண்டிய தேவை குறித்து எம்.ஆர்.ஜம்புநாதன் இதுவே அறநூலும் ராஜதந்திர சாஸ்திரமும் இன்பநூலுமாகும். கம்பூஷன் மகானின் மொழிகளோடு பல மெய்ப்புருடர்களின் மொழிகளும் கலந்துள. சீன பாஷையிலிருந்து பல பாஷைகளில் அவை பல தடவை மொழிபெயர்த்திருந்த போதிலும் இதுவரை தமிழில் தோன்றவில்லை. இது முக்கியமாய் பல ஆங்கில நூல்களைத் தழுவியே எழுதப்பட்டுள. மூல நூலில் சம்பாஷணை மூலமாயும் இன்றும் பல உதாரணங்களுடன் சொல்லியுள்ளவைகளைச் சுருங்கச் சொல்லி விளக்கமாய் எழுதியுள்ளோம். (எம்.ஆர்.ஜம்புனாதன் 1928:34-35) என்று குறிப்பிட்டுள்ளார்.

            இந்த நூலில் 25 தலைப்புகள், 21 அத்தியாயங்கள் இடம்பெற்றுள்ளன. 21 அத்தியாயங்களில் 499 சூட்சமங்கள் பேசப்பட்டுள்ளன. இந்நூலில் இடம்பெற்றுள்ள முன்னுரைகள் பல அரிய தகவல்களைக் கொண்டுள்ளன. இந்நூலாசிரியர் மூவரை மட்டுமே மகான்6 என்று ஏற்றுக்கொள்கிறார். இம்முன்னுரையில் மூன்று விசயங்களை மையப்படுத்தி விவாதிக்கின்றார். 1.புத்தமத மேன்மை, 2.இசை, 3.மொழி. இசையும் வசீகரமான மொழியும் தேவையில்லை என்கிறார். இந்துமதம், கிறித்தவமதம், இசுலாம் மதங்கள் பின்பற்றக்கூடிய போலியான நம்பிக்கைகளையும் இம்மதங்களைப் பின்பற்றியவர்களால் உண்டான அழிவுகளையும்7 பட்டியலிடுகின்றார். புத்தர், அசோகரின் பெருமைகளைக் கொண்டாடுகின்றார். பிற மதத்தினரைப் பேசும்பொழுது நாத்திகத்தை உயர்த்திப் பிடிப்பதாகத் தோன்றுகிறது. கடவுள் நாமத்தை உச்சரிப்பது, பாவமன்னிப்பு, தோத்திரங்கள் பாடுவது, அற்புத லீலைகள் புரிவது, இசை போன்றவையெல்லாம் அபத்தமானவைகள் என்று பதிவிடுகின்றார். இந்தப் பார்வை புத்தமத பார்வையை அடிப்படையாகக் கொண்டது.

            இந்நூலில் சொல்லப்படும் சூட்சமங்களை கன்பூசியஸ் லீ முதலிய அறிஞர்கள் உரைத்ததாகக் குறிப்பிடுகிறார். தமிழில் இருக்கும் அறநூல்கள் மக்களுக்கு அறக்கருத்துக்களை எவ்வாறு போதித்தனவோ அவ்வகையிலே இந்நூல் கருத்துக்களும் மக்களுக்குத் தேவையான அறத்தை வலியுறுத்துகிறது. நடுநிலைமை, அறம், மொழி, ஒழுக்கம், மனம், இறைவன், மகன் கடமை, சான்றோர், குரு, கல்வி, அறிவு, உலகநீதி, சங்கீதம், நடனம், இசை, மொழி, மாணவர் அறம், ஆசான் அறம், வரி, அரசாங்க அறம், உலக இரகசியம் என்று பல பொருண்மைகளை உள்ளடக்கிய கருத்துக்களை வெளிப்படுத்துவனவாக அமைந்துள்ளது.

            இந்த நூல் கூறுகின்ற அறக்கருத்துக்கள் அனைத்தும் சீன மக்களுக்கானது என்றாலும் உலகில் உள்ள அனைத்து மக்களும் பின்பற்றக்கூடிய பொதுமைகளைப் பெற்றுள்ளன. உலக மக்களுக்கானது எனும்பொழுது அறம் தலைதூக்கி நிற்பதையும் தனிமனித ஒழுக்கம் வலியுறுத்தப்படுவதையும் காணமுடிகிறது.

நல்லாரை நயந்து பொல்லாரைப் புறக்கணித்தால் நாட்டிலுள்ளோருக்குச் சந்தோஷம்; பொல்லாரைப் புகழ்ந்து, நல்லாரை இழந்தால், மாந்தர்களின் மனமிளைக்கும் (ப.42)

தரணியைத் தூய்மையாக்க, அன்பும், அமைதியும் தேவை. அகிலமெல்லாம் நிலவச் செய்யவும் (ப.42)

நன்மையைக் கண்டு, அதை நாடாமலிருப்பது பேடித்தனமாகும் (ப.43)

கைக்கூலியளித்து, கற்றோர்களை கைவசம் செய்ய இயலாது (ப.44)

காலையில் சத்தியத்தைச் செவியுற்றவன், மாலையில் மகிழ்வுடன் மரிக்கலாம் (ப.48)

பேராசையைப் பற்றுபவனுக்குப் பகைஞர்கள் பாரிலுண்டு (ப.48)

அறிஞனைக் கண்டால் அவனை அடைய விரும்பவும், அறிவிலியை அணுகினால் தன்னகத்தை ஆராயவும் (ப.49)

அரசர்களிடம் அதிகப்பழக்கம் அவமானத்தை விளைவிக்கும்; சிநேகிதர்களிடம் சகசமானது வெறுப்பில் முடியும் (ப.49)

மாந்தர்கள் தம்தம் நிலைக்கேற்றவாறு மாறுதலை அடைகிறார்கள். (ப.57)

அமைதி, அடக்கம், அரும்பணியோடமைந்த அச்சமற்றவனை அடைவது ஆனந்தம் (ப.74)

அறத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது மாணவர்களின் அறம், ஆசான் அறம், அரசாங்க அறம் உரைக்கிறது இந்நூல்.

ஒரு மாணவனுக்கு மேன்மையான மதிப்பு அளிக்கப்பட்ட பொழுது நான் இதற்கருகனல்லன் எனச் சொல்லியதைச் செவியுற்று, சிறந்தவர் சந்தோஷமானார்” (ப.51)

பாரிலுள்ள பெரியாரைப் பணிவதுபோல் பலரோடும் பாங்குடன் பழக வேண்டும். தரணியின் திருத்தொண்டே திருப்பணியெனத் தெளியவும். அயலான் ஆத்திரத்தினின்று நீங்க, நீ, வெறுப்பதை அவர்களுக்கு விரும்பாதே (ப.77)

கசடறக் கற்றோன் கபடமற்றவனாகும் (ப.85)

என்று மாணவர்களுக்கான அறம் போதிக்கப்படுகிறது. அரசாங்க அறம் பற்றிக் குறிப்பிடும்போது,

பஞ்சகாலத்தில் அரசனுக்குப் பத்திலொன்று அளிப்பதே அரிது. தரணி தவிக்குங்கால், அரசன் ஆநந்தத்தில் அமிழ்வது அநீதியாகும். மாநிலத்தாரின் செல்வமே மன்னரின் சிறப்பாகும் (5.77)

பயிற்சியற்ற பிரஜைகளைப் போருக்கனுப்புவது படுகொலையாகும் (ப.83)

பக்தி நெறியையும் பலவந்தமாய் பாரில் வற்புறுத்தாதே (ப.85)

அரச ஊழியத்தைவிட தேசத் தொண்டே திருப்பணியாகும் (ப.85)

என்று பல இடங்களில் அரச அறம் பேசப்படுகிறது. இதைப் போல் நடுநிலை, ஒழுக்கம், மனம், இறைவன் என்று பல்வேறு விடயங்களை மையப்படுத்தி அறமாக விளக்கிக் கூறியிருப்பது முக்கியமானதாகும்.

            இகலோக இரகசியம் என்று சொல்லப்படும் அனைத்தும் உலக இரகசியமாக உள்ளன. இவற்றைப் பின்பற்றினால் உலகைப் புரிந்துகொள்ளமுடியும். அதாவது உலகத்தின் சூட்சமமாக இக்கருத்துக்களே இருக்கின்றன.

இராஜ தந்திரத்தைவிட இராஜ நிர்வாகமே இணையற்ற செல்வமாகும். பெரியார், பேராபத்திலும் பொறுமையுடனுமுளார்கள். சிறியோர் செல்வச் சீலத்தைச் சிதைக்கின்றார்கள் (ப.89)

பாரிலுள்ள எல்லாப் பணிகளும் நீதிநிலைகளையே நாடியுள (ப.89)

சீலம் சிரத்தையுடன் சொல்லி; மனம், மெய்யோடு மொழிந்து; நலம், நட்பு காட்டி; உணர்வு உயிரோடு செய்தால்; நாடும் காடும் நம்மை நாடும் இல்லையேல் காடும் நம்மை யழிக்கும். இவையே வாழ்க்கையின் ஜோதியாகும் (ப.89)

முன் நினைவுற்றவன் துரிதமாய்த் துன்பத்தை அடைவான் (ப.90)

அழகில் ஆசையாவதுபோல் அறத்தில் அன்புடனாவது அரிது (ப.90)

அகத்திலே அதிகம் பெற்று, புறத்திலே குறைவாய் பற்றுபவன், பகைமையுனின்று பிரிகின்றான் (ப.90)

தீரர்கள் தன்னகத்திலிருந்தே துலங்குவார்கள்; தாழ்ந்தோர் அயலார் புகழ விரும்புவார்கள் (ப.90)

அயலார் எனச் செய்ய நீ விருப்பாயோ அதை அவர்களுக்குச் செய்யாமலிருத்தலே வாழ்க்கைத் துணையாகும் (ப.91)

கல்வியைக் கற்பதே சித்த சுத்தி நெறியாகும். உணவு உபவாசத்தாலில்லை (ப.91)

கற்றோரே குறுக்கு நின்றாலும் கல்வியைக் கற்கவும் (ப.91)

மொழியில் தெளிவே யாவுமாகும் (ப.92)

இயற்கையின் இரகசியமறியாதவன் அறிஞனாகான். நன்மையான நடத்தையற்றவன், அறமணுகான் (ப.102)

என்று இந்த உலகில் வெற்றிபெற்று வாழ்வதற்கான உலக இரகசியங்களை நுட்பமாகப் பதிவுசெய்துள்ளது இந்நூல்.

            எந்தவொரு நாட்டில் பன்மைத் தன்மைகள் இருக்கின்றனவோ அங்கிருந்துதான் தலைசிறந்த அறநூல்கள் தோன்றும். நீதிபோதனை என்பதும் தவிர்க்முடியாது. சீன இலக்கியம் அதற்கு விதிவிலக்கானது அல்ல. எனவே சீன இலக்கியங்களில் பெரும்பாலானவை நீதியைப் போதிப்பதாக அமைந்துள்ளது. சீனவேதம் அல்லது சகத்தின் சூட்சமம் நூலும் நீதியைப் போதிப்பதாக உள்ளது. அரசன், உழவர், மாணவர், ஆசிரியர், நடனம், இசை, மொழி, கல்வி, இறைவன் போன்றவற்றிற்கான அறத்தை வலியுறுத்தி நிற்கும் இந்நூல் தரும் சூட்சமங்களைப் பின்பற்றினால் உலகை வென்று, நல்ல மனிதராக வாழலாம். சீன மண்ணின், சீன மக்களின், சீனமொழியின் ரகசியம் என்பது இந்நூல் தரும் சூட்சமங்கள்தான் இந்தச் சூட்சமங்களே சீனாவை உலகில் தனித்தனியாகக் காட்டுகிறது. இந்நூல் தமிழ் அறநூல்களோடு ஒப்பிடத்தக்கது. இந்நூலை மறுபதிப்பு செல்வதால் தமிழுலகம் பயன்பெறும்.

 

 

குறிப்புகள்

 1. வெ.சாமிநாதசர்மா, 2001, சீனாவின் வரலாறு, விடியல் பதிப்பகம், கோவை
 2. சோ.ந.கந்தசாமி, 2013, சீன இலக்கியம், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
 3. தன்னைப் பண்படுத்திக் கொள்ளுதல் (Personal cultivation) மனித உறவுகளின் வழியாக உண்டாகும் சிறப்பும் பண்பொழுக்கமும் அகியவற்றைக் கற்பிக்கும் நடைமுறைக்கு ஒத்த நீதித்தத்துவமாக விளங்கிய கன்பூசியம் சீனத்தின் தேசியப் பண்பினை வடிவமைத்ததுடன் சீனச் சமூகம், குடும்பம், இலக்கியம், கலைகள் ஆகியவற்றின் ஒவ்வொரு கூறிலும் ஊடுருவியுள்ளது. விரிவான பொருளில் கூறுவதெனில் சீன இலக்கியங்களில் பெரும்பகுதி கன்பூசிய இலக்கியமே [In a broad sense, much by Chinese literature is confucious] Liu-Wu-Chi, An Introduction to Chinese Literature, Bloomington Indiana, p.3
 4. Ibid, pp.4-5
 5. பயணி, 2012, (இ.ப.), வாரிச் சூடினும் பார்ப்பவரில்லை, காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ், நாகர்கோயில், பக்.138-139
 6. எம்.ஆர்.ஜம்புநாதன், 1928, சீனவேதம் அல்லது சகத்தின் சூட்சமம், சூடன்கோ, மதராஸ் 1928
 7. மனிதகோடி முமுழுவதையும் அன்புடன் எண்ணி பிரபஞ்சத்திலுள்ள ஒவ்வொருவரும் உன்னதநிலையை அடையலாமென உரைத்த பெரியோர்கள் சிலரேயாவர். அவர்களுள் தலைசிறந்து விளங்குகிறவர்கள் புத்தபகவானும் கன்பூசியஸ் மகானுமேயாவார்கள். பிறகு நவீனமாய்த் தோன்றிய தயானந்தராகும் (மேலது., ப.3)
 8. ஹிந்து சமயத்தில் அபிமானங்கொண்ட தன் தம்பியினால் தன்னுடைய சமயத்திற்கே தீங்கு வருமென எண்ணியே ஔரங்கசீப் அவனைக் கொன்றார். முகம்மதிய மதத்தின் பெயரால் கணக்கற்ற ஹிந்துக்கள் மாய்ந்தனர் (மேலது., ப.11)

1 thought on “சீனவேதம் அல்லது சகத்தின் சூட்சமம்

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க