குறளின் கதிர்களாய்…(234)
செண்பக ஜெகதீசன்
பொள்ளென வாங்கே புறம்வேரார் காலம்பார்த்
துள்வேர்ப்ப ரொள்ளி யவர்.
-திருக்குறள் -487(காலமறிதல்)
புதுக் கவிதையில்…
பகைவர்
தமக்குக் கேடு செய்தாலும்,
அறிவுடையோர்
அவரறியச் சினம் கொள்ளார்..
அவரை வெல்லும்
காலம் பார்த்து
அப்போதுதான் சினம் கொள்வர்…!
குறும்பாவில்…
பகைவரின் தவறுகண்டு கோபம்கொள்ளாமல்,
அவரை வெல்லும் காலம்பார்த்துக்
கோபத்தைக் காட்டுவர் அறிவுடையோர்…!
மரபுக் கவிதையில்…
எதிரி செய்யும் கேடுகண்டே
எடுத்த வுடனே அவரறிய
எதிர்த்தே சினமதைக் காட்டாரே
ஏற்றம் மிக்க அறிவுடையோர்,
பதிலா யவரும் சினம்கொள்வார்
பகைவரை வெல்லும் காலமதை
மதியா லறிந்தே யவர்பகையை
முடிக்கச் செல்லும் போதினிலே…!
லிமரைக்கூ…
பகைவரறியக் காட்டாத சினத்தை,
அறிவுடையோர் காட்டுவர் தெரிந்தபின்
பகைவரைவெல்ல ஏற்ற தினத்தை…!
கிராமிய பாணியில்…
செய்யணும் செய்யணும்
காலம்பாத்துக் காரியம்செய்யணும்,
சரியான
காலம்பாத்துக் காரியம்செய்யணும்..
எதிரி செய்யிற
எடஞ்சலப்பாத்து அவரறிய
அறிவுள்ளவன் ஒடனே
கோவத்தக் காட்டமாட்டான்..
எதிரிய அழிக்க
சரியான நேரம்பாத்து
அப்பதான் காட்டுவான்
அவனோட கோவத்த..
அதுனால
செய்யணும் செய்யணும்
காலம்பாத்துக் காரியம்செய்யணும்,
சரியான
காலம்பாத்துக் காரியம்செய்யணும்…!
செண்பக ஜெகதீசன்…