Category: சிறுகதைகள்

கதைகள்

  •   சௌதாமினி …………

    க. பாலசுப்பிரமணியன்

    அவள் ஒரு காவியமா?  குறுநாவலா?  சிறுகதையா? … யாருக்குத் தெரியும் ?

    காலையிலே கதிரவனின் முதல் கதிர் வெளிவரும் போது மலர்களுக்கு ஏற்படும் மகிழ்ச்சிபோல அவள் வார்டுக்குள் “குட் மார்னிங் ” என்று சொல்லிக்கொண்டு வரும்பொழுது அந்த வார்டு பூத்து மலரும்..

    “;ஹாய்… சௌ…” காயத்ரி அவளுக்கு பதில் சொல்லி இருவரும் தங்கள் வலது கைகளால் ஒருவரை ஒருவர் தட்டிக்கொள்ள… படுக்கையில் இருந்துகொண்டும் பாதி எழுந்துகொண்டும் இருக்கின்ற நோயாளிகள் முகத்தில் ஒரு சிறிய புன்னகை…

    ” என்ன பாட்டி… நல்லா தூங்கினீங்களா ? ராத்திரி தூங்கறத்துக்கு மாத்திரை தந்தாங்களா? இப்போ வலி எப்படி இருக்கு?” சௌதாமினியின் கேள்விக்கணைகளை வழக்கம்போல் எதிர்பார்த்த பாட்டி “பரவாயில்லை கண்ணா. உன்னை பார்த்ததுமே பாதி வலி போயிடுத்து… ” என்று சொல்ல அவள் முகத்தில் ஒரு சிரிப்புக் கீறல் ..

    சௌதாமினி ஒரு செவிலி.. அந்த ஆஸ்பத்திரியில் ஐந்து ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறாள். அவளுக்கு சொந்த ஊர் திருச்சூர் அருகில் உள்ள ஒரு கிராமம்.

    குரலில் பணிவு.. முகத்தில் அமைதி.. பழகுவதில் கனிவு…ஒரு சகோதரியாக.. ஒரு தாயாக.. ஒரு தோழியாக.. ஒரு தேர்ந்த செவிலியாக… மற்றவர்கள் மனநிலை அறிந்து பழகும் பெண்…

    “என்ன  சார் காலையிலே உடம்பெல்லாம் துடைத்து விட்டார்களா? தூக்க கலக்கமெல்லாம் போயிடுத்தா?  சங்கரைக் கூப்பிடவா? கொஞ்சம் நடக்கிறீங்களா?”  பாஸ்கரனுக்கு ஒரு புதிய சக்தி வந்தது போன்ற உணர்வு.. “தாங்க்ஸ்,  சிஸ்டர். எல்லாம் கரெக்ட்டா நடக்குது…”

    சித்ரா பௌர்ணமியன்று கள்ளழகர் ஒவ்வொரு மண்டபமாக அமர்ந்து மரியாதைப்பெற்று வருவதுபோல், இவளும் ஒவ்வொரு படுக்கை அருகிலும் சென்று இனித்துப் பேசி அவர்களின் மனத்திற்கு மருந்து கொடுத்து வருவது ஒரு கண்கொள்ளாக் காட்சி…

    ” என்ன .சார்.. கொஞ்ச நேரத்திலே டிஃபின் வந்துடும். ரெடியாயிட்டீங்களா?” என அந்த முதியவரிடம் கேட்க, அவர் முகம் சுளிப்பதுகண்டு “என்ன,,, இன்னிக்கும் அதே இட்லியான்னு கேட்கறீங்களா?” என்று அவர் பாவனையின் உள்ளர்த்தத்தை புரிந்துகொண்டு கேட்க, அவர் தலை அசைக்கிறார்…

    “கொஞ்சம் இருங்க.. கேன்டீன்ல சொல்லி மீன்குழம்பும் சிக்கன் பிரியாணியும் கொண்டு வர சொல்றேன்.. அப்போதான் இங்கேயே இன்னொரு வாரம் தங்கலாம்..” என கிண்டலடிக்க அந்த வார்டே சிரிக்கின்றது..

    “இந்தாங்க உங்க மாத்திரை..” என்று காலை தலையணை மேலே வைத்துப் படுத்திருக்கும் அந்த இளைஞரிடம் கொடுக்க..”நாலுதான் சார்…காலையிலே நாலுதான்… மீதி பதினாறு பின்னாலே தொடரும்…” மலையாள உச்சரிப்பில் அவள் பேசும் தமிழும் கேட்பதற்கு இனியதாகவே இருக்கும்.

    “பாட்டி.. என்ன சாப்பிடலை.. எல்லாம் அப்படியே இருக்கு ..””வேண்டாம்மா .. பிடிக்கலை..”

    “இல்லை. சாப்பிடணும்.. கொஞ்சம் எனக்காக…” கையில் உணவை எடுத்து ஊட்டுகின்றாள். “வேண்டாம்மா..”

    “ஒருவாய்.. உங்க பெண்ணுக்காக..”

    சிரித்துக்கொண்டே அந்தக் கிழவி.. “உன்னை மாதிரி ஒரு பொண்ணு வீட்டில இருந்தால் போதும்  நாட்டில முதியோர் இல்லமே இருக்காது. ” சௌதாமினி சிரித்துக் கொண்டே “பாட்டி.. நல்லா பேசறீங்க..” என்று பதிலளிக்கிறாள்.

    அந்த அறையின் நடுவில் போடப்பட்ட மேசைமீது நோயாளிகள் சம்பந்தப்பட்ட உள்ளீட்டுக்களை பதிவு செய்துகொண்டிருந்த சௌதாமினி திடீரென்று திரும்பி “டேய், லூசு..” என்று சற்று தூரத்தில் நின்றுகொண்டிருந்த இளைஞனைப் பார்த்து அழைக்க நான் சற்று வியந்தேன்..

    இது என்ன விளையாட்டா? நட்பின் பரிமாணமா? அந்த இளைஞன் இவளை பார்த்து தன் ஆள்காட்டிவிரலால் ஜாடை காட்டி “கொன்னுடுவேன்” என்று சிரித்துக்கொண்டு  செல்கிறான்.

    சிறிதுநேரம் கழித்து என்னை நோக்கி வந்த சௌதாமினியிடம் ” அவர் யார்” எனக்கேட்டேன். ” டாக்டர் சார்.”

    “அவரைப் போய் லூசுன்னு சொல்றீங்க..”

    “பிரண்ட் சார்.  எங்க ஊர் பையன். “

    “இருந்தாலும் எல்லார் முன்னாலேயும் அவரைப் போய் லூசுன்னு சொன்னா, அவங்க என்ன நினைப்பாங்க .”

    சௌதாமினியின் தலையும் கண்களும் கீழே விழுந்தன.. ” சாரி சார் ..அவர் தப்பா நினைக்க மாட்டார்..”

    “இல்லேம்மா.. அவர் தப்பா நினைக்கவிட்டாலும் மற்றவர்கள் அவரை மதிப்பார்களா?”

    அவள் பதில் சொல்லவில்லை. ஆனால் தான் தவறை உணர்ந்து விட்டாள் எனப் புரிந்தது.

    “என்னம்மா.. நர்சிங் படிச்சிருக்கய்யா “

    “ஆமாம் சார். M  Sc நர்சிங்.. “

    “எப்படிம்மா எல்லாரோடையும் இவ்வளவு அன்பா நட்போட இருக்க முடியறது?” அவள் பதில் சொல்லவில்லை..

    “திருமணம் ஆயிடுத்தா?”

    சிரித்துக்கொண்டே  “இரண்டு  பெண்கள்.. முதல் பெண் ஐந்தாம் வகுப்பு ரெண்டாவது பெண் மூன்றாம் வகுப்பு…”

    ” உங்கள் கணவர்…?”

    தான் விழிகளை சற்றே மேல்தூக்கி இதெல்லாம் உங்களுக்குத் தேவையா என்று கேட்பதுபோல் வைத்துக்கொண்டு..

    “நீங்க எங்க அப்பா மாதிரி. அதனாலே சொல்றேன்… நான் சிங்கிள் .. நான் ஷிப்ட்ல வேலைக்கு வந்ததாலே என் கணவரும் ஷிப்ட்ல குடும்பம் வைத்துக்கொண்டார்.  அதனாலே பிரிந்து விட்டோம். மூன்று வருஷம் ஆச்சு.”

    என் கண்களின் ஓரத்தில் கசிந்த நீரை அவள் பார்க்கத் தவறவில்லை.

    “ரொம்ப உணர்ச்சி வசப்படாதீங்க சார். இதெல்லாம் வாழ்க்கையிலே யதார்த்தம். ஒரு பெரியவர் சொல்லிருக்கார்.. Life is a  Challenge – Meet it ; Life is a game – play it “..

    ஏதோ அழைப்பு வர அவள் அந்த இடத்திலிருந்து சென்று விட்டாள் .

    சில மணி நேரம் கழித்து தூங்கி கொண்டிருந்த என்னை எழுப்பி “சார்.. டூட்டி நேரம் முடிந்து போச்சு. நான் கிளம்பறேன்.. நாளைக்கு நான் வரும்போது நீங்கள் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு போயிருப்பீங்க.. நான் சொன்னதை மறந்துடாதீங்க…”

    அவள் முகத்தைப் பார்த்தேன். “அதான் சார்.. Life is a  Challenge – Meet it ; Life is a game – play it “..

    “வீட்டில எல்லாரையும் கேட்டதாக சொல்லுங்க.. கொஞ்சம் சிரித்துக்கொண்டே இருங்க.. இப்படி உம்முன்னு இருக்காதீங்க…”

    அவள் அந்த வார்டை விட்டு கிளம்ப எல்லாருடைய கண்களும் அவள் சென்ற பாதையை பார்த்துக்கொண்டிருந்தது.

    வீட்டுக்கு வந்ததும் வரவேற்பு அறையில் இருந்த கீதோபதேசம் படத்தைப் பார்த்தேன்… “கண்ணன் முகத்தைப் பார்த்தால் சௌதாமினி முகம் மாதிரியே இருக்கில்ல?” என் மனம் எழுப்பிய கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை.

    Share
  • தாந்தித்தாத்தாவும்…

    நிர்மலா ராகவன்

    தாந்தித்தாத்தாவும், பொன்னுசாமி கங்காணியும்

    தந்தையின் பக்கத்தில் அமர்ந்து, கடந்த முக்கால் மணி நேரமாகப் பஸ்ஸில் பிரயாணம் செய்துகொண்டிருந்த புலியம்மாவின் உள்ளத்தில் ஒரே சமயத்தில் பயமும், குதூகலமும் நிரம்பி இருந்தன.

    ஆறு வருடங்களாகத் தமிழில் பயின்றுவிட்டு, இப்போது மலாய்ப் பள்ளியில் — முற்றிலும் புதியதொரு சூழ்நிலையில் — படிக்கவேண்டுமென்ற பயம். தங்கள் தோட்டப்புறத்திலேயே முதன்முறையாக இவ்வளவு சிறப்பான தேர்ச்சி பெற்று, உயர்கல்வி கற்க ஆயத்தமென, இந்தப் பள்ளியில் சேரப் போகும் களிப்பு.

    ‘கேவலம், பெண்ணாய்ப் பிறந்தவளுக்கு இவ்வளவு செலவழிச்சாவது படிப்பு அவசியந்தானா! ஆனாலும் ஒங்க மகளுக்கு ரொம்பத்தான் இடங்கொடுத்து வளக்கறீங்க!’ பொறாமை மேலிட, அண்டை அயலார் அவநம்பிக்கை ஊட்டிப்பார்த்தபோது, பொன்னுசாமி கங்காணி அயரவில்லை.

    ‘பெண்களை மதிக்கறவன்தான் தெய்வம் ஆகிறான்,’ என்று நிதானமாக மகாத்மா காந்தியின் போதனையை எடுத்துக்கூறினார்.

    காந்தி மகான்தான் அவருடைய தெய்வம். அவர்கள் வீட்டில் மூஞ்சூறுமேல் அமர்ந்த பிள்ளையார், யானைகளுடன் கஜலட்சுமி ஆகிய கடவுள் படங்களுடன், வேட்டி மட்டும் அணிந்து, தரையில் காலை மடக்கி, சர்க்காவில் நூல் நூற்கும் காந்தியின் படமும் மாட்டி இருந்தார்.

    அதைப்பற்றிக் கேலியாக விசாரிப்பவர்களிடம், ‘சாமி கண்ணுக்குத் தெரியுமான்னு நாத்திகம் பேசறாதாலதான் இன்னிக்கு இளவட்டங்க தறிகெட்டுப்போறாங்க. ஒத்தையாளா வெள்ளைக்காரனைத் துரத்தி அடிச்சிருக்காரே, நம்ப காந்தி! இது சாமான்யமான மனுசன் செய்யற வேலையா? எவன் ஒருத்தன் சுயநலமில்லாம இருக்கானோ, அவன்தான் சாமி!” என்று, அன்பே சிவம் கமலஹாசன் பாணியில் பேசி, அவர்கள் வாயை அடைத்துவிடுவார்.

    பிறரது கேலிக்கெல்லாம் மசியாது, தனது கொள்கைகளில் பிடிவாதமாக, உண்மையே பேசி, வெற்றியும் பெற்றிருக்கிறாரே அம்மகான்! அப்பாவுக்குப் பிடித்த காந்திபோலத் தானும் நடக்கவேண்டும் என்று புலியம்மா உறுதி செய்துகொண்டாள்.

    ஆனால், அப்பா செய்தது எல்லாமே அவளுக்குப் பிடிக்கும் என்பதில்லை. முக்கியமாக, அவளுடைய பெயர்.

    “ஏம்பா எனக்கு இந்தப் பேரு வெச்சீங்க? எல்லாரும் கேலி செய்யறாங்க!” பத்து வயதாயிருக்கும்போது தந்தையிடம் செல்லமாகச் சிணுங்கினாள்.

    மகள் தன்னைத் தட்டிக்கேட்பதாவது என்று அவர் ஆத்திரப்படவில்லை. அவர்தான் அகிம்சாவாதி ஆயிற்றே!

    “எல்லாம் காரணமாத்தான். தனக்கு எல்லாம் தெரியும்னு அலட்டிக்கிற மனுசன் புலியைப் பாத்துப் பயப்படறான், ஓடி ஒளிஞ்சுக்கறான்!” அந்த நினைவிலேயே அவர் சிரித்தார்.

    அவளுக்கு அந்த விளக்கம் பிடிபடவில்லை. “எங்கிட்ட ஏம்பா மத்தவங்க பயப்படணும்?”
    “அப்படி இல்ல. நீ எதுக்கும் பயப்படக்கூடாது, கண்ணு. இது ஆம்பளைங்க ஒலகம்! பொண்ணுங்கன்னா மட்டம். அதான் அன்னாடம் பாக்கறியே! நம்ப லயத்திலேயே, கண்ணுமண்ணு தெரியாம தண்ணி போட்டுட்டு, அவனவன் பெண்டாட்டியை மாட்டை அடிக்கறமாதிரி அடிக்கிறான். ம்! இவனெல்லாம் ஆம்பளை!” என்று எள்ளியவர், “அந்த மகானைப் பாரு! துப்பாக்கியும், பீரங்கியுமா வெச்சு வெள்ளைக்காரனை விரட்டினாரு? அகிம்சாவாதத்திலேயே தாய்தாட்டுக்குச் சுதந்திரம் வாங்கிக்குடுத்தாரு!” என்ன பேச ஆரம்பித்தாலும், அதைக் காந்தியில்தான் கொண்டு முடிப்பார் பொன்னுசாமி கங்காணி.

    அவருடைய மனைவி பதைத்துப்போய் உள்ளேயிருந்து வருவாள். “யாருகிட்ட எதைச் சொல்றதுன்னு கிடையாது? அது சின்னப்பிள்ளை!” என்று மகளுக்குப் பரிவாள்.

    அவளிடம் நேராகப் பதிலளிக்காது, புலியம்மாவிடம் கூறுவார் அவர்: “நான் எதுக்குச் சொல்றேன், நீ என்னைமாதிரி தற்குறியா நின்னுடப்படாது. பெரிய படிப்புப் படிச்சு, நல்லா வரணும். நடுவிலே யாராவது வயத்தெரிச்சல்பட்டு ஒன்னை வெரட்டினா, நீ பயந்து ஒதுங்கலாமா? புலிமாதிரி எதிர்த்துச் சண்டை போடணும், என்ன?”

    புலியம்மாவுக்கு அவருடைய அடிப்படைக் கொள்கையிலேயே சந்தேகம் பிறந்தது. “ஏம்பா? சண்டை போட்டா, அது அகிம்சையா?”

    “சண்டைன்னா, வெட்டறதும், குத்தறதும் மட்டுமில்ல. கொள்கைக்காக போராடறதும்மா. துப்பாக்கியா பிடிச்சிருந்தாரு காந்தி?”

    இவ்வளவு தெரிந்துவைத்திருந்த அப்பாவுக்கு ஏன் தன்னை முதலிலேயே ஒரு மலாய்ப் பள்ளிக்கு அனுப்பவேண்டும் என்று தோன்றாமல் போயிற்று? பயத்தால் உறைந்திருந்த அந்த வேளையில் புலியம்மாவுக்கு இந்தச் சந்தேகம் உதித்தது.

    அவள் எந்தக் கேள்வி கேட்டாலும், அப்பா நிதானமாகப் பதில் சொல்வார். எங்கேயோ இருந்திருக்கவேண்டியவர், பாவம்! அதிகக் கல்வி இல்லாததால், வாழ்க்கையில் முன்னேற முடியவில்லையாம். தானே அடிக்கடி அவளிடம் சொல்லி இருக்கிறார். அதனால்தான் மகளாவது உயரவேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார்.

    “அப்பா!” புலியம்மா தயங்கினாள்.

    “என்னம்மா? எதுவானாலும் கேளு. ஒனக்கில்லாததா!”

    “எனக்கு ஒண்ணும் வேணாம்பா. என்னை… ஏம்பா தமிழ் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பினீங்க?” எப்படியோ துணிச்சலை வரவழைத்துக்கொண்டு கேட்டுவிட்டாள்.
    கங்காணியின் முகம் வாடிப்போயிற்று. “என்னம்மா இப்படிக் கேட்டுட்டே?” என்றார் ஆழ்ந்த வருத்தத்துடன். “தாய்மொழிங்கறது பெத்த தாய்மாதிரி. கருவிலேயே நம்பளோட மூளையில பதிஞ்சது. வயத்துப்பிழைப்புக்காக நம்ப கலாசாரத்தைத் தலைமுழுகிட முடியுமா? சாப்பிட்டோம், தூங்கினோம்னு இருந்தா, அப்புறம் நமக்கும், மிருகங்களுக்கும் என்ன வித்தியாசம்? நம்பளையே நாம்ப மதிக்கவேணாம்?”
    தான் தமிழச்சி என்ற பெருமை புலியம்மாவுக்குப் பிறந்தது அப்போதுதான். புதுப்பள்ளியிலோ, நூற்றுக்கு ஒருவர்கூட தமிழர் கிடையாதாம். மூன்று மாடிகளைக்கொண்ட பெரிய பெரிய கட்டிடங்கள் அமைந்த விசாலமான வளாகத்துக்குள் நுழைந்தபோது கால்கள் பின்னுக்கு இழுத்தன.

    அப்பாவுக்குப் புரிந்திருக்கவேண்டும். அவளைப் பார்த்து மென்மையாகச் சிரித்தார். ‘நீ எதுக்கும் பயப்படக் கூடாதுன்னுதானே ஒன் பேரிலேயே வீரத்தை வெச்சிருக்கேன்?’ என்று சொல்வதுபோலிருந்தது. அச்சிரிப்பில் எல்லாம் மறந்து போயிற்று அவளுக்கு.

    “அதோ பாருங்கப்பா. தமிழ் டீச்சர்!” என்று உற்சாகமாகக் கையை நீட்டிக் காட்டினாள்.
    புடவையும், பொட்டுமாக இருந்த அந்த “தமிழ் டீச்சர்” தன் வகுப்புக்கு வரமாட்டாள் என்று அதன்பின் அறிந்ததில் ஒரு சிறிய ஏமாற்றம் எழுந்தது. அதனால் என்ன? தானே போய் அறிமுகம் செய்துகொள்ள வழியா இல்லை என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக்கொண்டாள் புலியம்மா.

    “ஒங்க பையைத் தூக்கிட்டு வரட்டுமா, டீச்சர்?”

    அந்தத் தமிழ்க் குரல் வித்தியாசமாகக் கேட்டிருக்க வேண்டும். டீச்சர் சட்டெனத் திரும்பினாள். எதுவும் பேசாது, தன் கையிலிருந்த பிரம்புப் பையை எதிரில் அகன்ற விழிகளுடன் தன்னையே பார்த்துக்கொண்டிருந்த பெண்ணிடம் கொடுத்தாள்.

    பை சற்றுக் கனம்தான். ஆனால், சிவபெருமானிடமிருந்து மாங்கனியைப் பெற்றுக்கொண்ட பிள்ளையார்மாதிரி அச்சிறுமிக்குப் பூரிப்பு ஏற்பட்டது. அதனை அடக்க வழி தெரியாது, பல் தெரிய புன்னகைத்தபடி, டீச்சரின் சிவப்புப் புடவையையும், அதற்குப் பொருத்தமாக, கவனத்துடன் தேர்ந்தெடுத்திருந்த சிவப்புக் காலணிகளையும் பார்த்தபடி, ராமனைப் பின்தொடர்ந்த சீதையாக நடந்தாள்.

    மறுநாள் காலை, இருள் பிரியுமுன்னரே பஸ் பிடித்து, டீச்சரின் வருகைக்காகக் காத்திருந்தாள் புலியம்மா. கும்பல், கும்பலாக நின்றுகொண்டு, உரக்கப்பேசி, அதிர்வேட்டுச் சிரிப்புச் சிரித்துக் கொண்டிருந்தவர்களுடன் சேர விரும்பாது, ஒரு போகன்வில்லா புதர் அருகே தனித்து நின்றாள்.

    டிச்சருடைய சிறிய, வெள்ளைக்கார் கேட்டுக்குள் நுழைந்தது. காதல் வசப்பட்டவருடையதைப்போல புலியம்மாவின் இருதயம் துடித்தது. ஓடாத குறையாகக் காரை நெருங்கினாள்.

    “வணக்கம் டீச்சர்!”

    டீச்சர் அவளுடைய முகமன் காதில் விழாதவளாக நடந்தாள்.

    இன்னும் உரக்கச் சொன்னாள்: “வணக்கம் டீச்சர்!”

    டீச்சர் நின்றாள். தலையை வெட்டினாற்போல் அவள்பக்கம் திரும்பி, “மெதுவாப் பேசு!” என்று அதட்டினாள். குரல் கட்டையாக இருந்தது. “இப்படிக் கத்தினா, நாலுபேர் பாத்துச் சிரிப்பாங்க!” பழக்க தோஷத்தால், அவள் குரலில் கடினமும், அதிகாரமும் கலந்திருந்தன.

    ஒரேயடியாக மிரண்டுபோன புலியம்மாவால், கையாலாகாத்தனத்துடன் தலையை அசைக்கத்தான் முடிந்தது.

    பல வினாடிகள் கழித்துத்தான் அவளுக்கு சுயநினைவு வந்தது. தன்மீது எவ்வளவு அக்கறை இருந்தால், இப்படித் தனிப்பட்ட முறையில் கண்டிப்பார்கள் என்ற நெகிழ்வு ஏற்பட்டது. தன்னைப்போலத்தானே டீச்சரும்! ஒரே இனம், ஒரே மொழி என்ற பற்றுதல் அவர்களுக்குமட்டும் இருக்காதா, என்ன!

    இப்போதெல்லாம் தானே வலியப்போய் முணுமுணுப்பாக வணக்கம் தெரிவித்துவிட்டு, உரிமையுடன் டீச்சரின் கையிலிருந்து பிரம்புப் பையைப் பிடுங்காத குறையாக வாங்கிக்கொள்ளும் அளவுக்குத் துணிச்சல் ஏற்பட்டிருந்தது புலியம்மாவுக்கு.

    “ஒன் பேரு என்ன?” அறிந்துகொள்ளும் ஆர்வமில்லை அந்தக் கட்டைக் குரலில். ஒப்புக்குக் கேட்பதுபோலிருந்தது.

    ஆனால், அதையெல்லாம் கவனிக்கத் தோன்றவில்லை மாணவிக்கு. என்னதான் சகமாணவிகளுடன் பழகினாலும், ஆசிரியை தன்னை மதித்துப் பேசுவதுபோல் ஆகுமா?

    வெண்மையான பற்கள் கறுத்த முகத்தின் பின்னணியில் மேலும் ஒளிவிட, “என் பெயர் புலியம்மா!” என்று ஒப்பிப்பதுபோல் தெரிவித்தாள். கைகள் தாமாகக் கட்டிக்கொண்டன.

    அவள் தோழிகள் ‘காக்கா’ என்று கேலியுடன் அவளைக் குறிப்பிட்டதை லட்சியம் செய்யவில்லை புலியம்மா. அவர்களுக்கு என்ன தெரியும் சேவை செய்வதன் மகத்துவம்? காந்தி சொன்னபடி..! அவள் தானே சிரித்துக்கொண்டாள். தானும் அப்பாமாதிரியே ஆகிவருகிறோமே!

    அன்றும் ஒரு கட்டு நோட்டுப் புத்தகங்களை எடுத்துக்கொண்டு, கடவுளுக்குக் காணிக்கை செலுத்துவதுபோல பயபக்தியுடன் டீச்சரின் மேசைமேல் வைத்தாள் புலியம்மா. வழக்கம்போலவே, ஒரு நன்றிகூட எதிர்பார்க்காது, ஆசிரியர்களின் பொது அறையைவிட்டு வெளியே வந்தாள்.

    ஜன்னல்வழியே உள்ளே நடந்த உரையாடல் கேட்டது. “அந்தப் பொண்ணு என்ன, உனக்கு வாலா? கிட்ட வந்தாலே ஏதோ எண்ணை நாத்தம்!”

    யாரோ சிரித்தார்கள்.

    தன்னைப்பற்றித்தான் பேசுகிறார்கள்! புலியம்மாவின் கால்கள் மேலே நகர மறுத்தன.
    “சரியான கழுத்தறுப்பு. ஒரு நாளைக்கு நாலு தடவை அங்க, இங்க பாத்து, ‘குட் மார்னிங்’ சொல்லியாகணும் அதுக்கு. அன்னிக்கு என் கையைப் பிடிச்சுக்கிட்டு, ‘எங்க கிளாசுக்கு வாங்க டீச்சர்’னு முரட்டுப் பிடிவாதம் வேற!’

    ‘தமிழ் டீச்சரா’ இப்படிப் பேசுகிறார்கள்? யாரோ மென்னியைப் பிடித்து அமுக்குவதுபோல் இருந்தது புலியம்மாவுக்கு. இரு கைகளாலும் நீலநிறக் குட்டைப் பாவாடையைக் கசக்கிப் பிடித்துக்கொண்டாள்.

    கட்டைக்குரல் தன்பாட்டில் பேசிக்கொண்டிருந்தது: “அந்தப் பொண்ணு பேரு புலியம்மா. வேடிக்கையா இல்ல? காட்டில இருக்கவேண்டியதை எல்லாம் இந்தமாதிரி நல்ல பள்ளிக்கூடத்திலே விட்டா இப்படித்தான்!”

    யார்யார்மீதோ மோதிக்கொண்டு, மன்னிப்பு கேட்கும் உணர்வுகூட அற்றவளாய், வகுப்பை அடைந்தாள் அவள். ஏமாற்றத்திலும், அவமானத்திலும் கண்ணீர் பெருக்கெடுத்தது.

    ‘அழக்கூடாது. நீ புலிமாதிரி இல்லியா!’ அப்பா மானசீகமாகப் பக்கபலம் அளித்தார். ‘காந்திகூடத்தான் சிறுமைப்பட்டிருக்கிறார். அதனால் அவர் தளர்ந்துபோனாரா, என்ன!’ என்று அவர் கூறுவதுபோலிருந்தது.

    அப்பாவுடன் டவுனுக்குப் போய், ‘காந்தி’ ஆங்கிலப்படம் பார்த்திருந்தாள். அதிகம் புரியாவிட்டாலும், ஒரு காட்சி மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டிருந்தது.

    காந்தி ஆப்பிரிக்காவில் இருந்தபோது, தாங்கள் நடக்கும் தெருவில் கறுப்பரான அவர் நடக்கக்கூடாது என்று அவர் எதிரில் வந்த இரு வெள்ளையர்கள் தகறாறு பண்ணுகிறார்கள். அவரோ, அஞ்சாமல் அவர்களைக் கடக்கிறார். பின்பு, தன் நண்பரிடம் கூறுகிறார், “சகமனிதனை அவமானப்படுத்துவதால் ஒருவனுக்கு என்ன ஆனந்தம் என்று எனக்குப் புரியத்தான் இல்லை,” என்று.

    அன்றுபூராவும் நினைத்து நினைத்து அழுகை வந்தது. அப்பாவையும், காந்தியையும் நினைத்துக்கொண்டாள். அம்மாவிடம் சொல்லவேண்டும், ‘இனிமே கடுகெண்ணை வைத்துத் தலைபின்னாதீங்கம்மா’ என்று.

    இப்போதெல்லாம் டீச்சர் புடவை அணிந்து வருவதே அபூர்வமாக இருந்தது. டீச்சருடைய காரைக் கண்டும் காணாததுபோல் நின்றாள் புலியம்மா.

    “ஏ பையா! இந்த நோட்டை எல்லாம் எடுத்திட்டு என்கூட வா!” அந்த அதிகாரக்குரல் என்னவோ பலத்துத்தான் இருந்தது. ஆனால் அது காதில் விழாததுபோல் தன்பாட்டில் நடந்துபோனான் அவள் அழைத்த மாணவன்.

    “பெரிய அதிகாரம்! சம்பளம் வாங்கலே? இந்த நோட்டுங்களைத் தூக்கிட்டு நடக்க என்ன கேடு?” அவன் தன் நண்பர்களிடம் உரக்கக் கூறியது புலியம்மாவின் காதிலும் விழாமல் போகவில்லை.

    ‘பாவம் டீச்சர்!’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டாள். தானும் ஒரு தமிழ்ப்பெண் என்பதில் டீச்சருக்குப் பெருமிதம் இருந்திருந்தால், இப்படி ஒரு அவமதிப்பு உண்டாகி இருக்குமா?

    (1996-ல், மலேசியாவில் பாரதிதாசன் இயக்கத்தின் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றது)

    Share
  • மண்ணில் நல்லவண்ணம் வாழலாம்

    கே.எஸ்.சுதாகர்

    எதிரே இருப்பது இன்னதுதான் என்று தெரியாதளவிற்கு மூடுபனி. தென்னிந்திய சிற்ப – ஓவிய – கலை வேலைப்பாடுகளுடன் அந்தக் கோவில் கட்டும்பணி நடந்து கொண்டிருந்தது. முருகன் கோவில். அமைதியான கிராமம். பாரிய கருங்கற்களைக் பொழிந்து, சிற்பிகள் சிலை வடித்துக் கொண்டிருந்தார்கள் . உழியின் ஒலிச்சத்தம் எங்கும் கேட்டபடி இருந்தது.

    பொன்னுக்கிழவர் பொல்லை ஊன்றிக்கொண்டு ஊசலாடியபடியே போய்க் கொண்டிருக்கிறார். மூன்றுகாலப் பூசைகளில் ஏதாவது ஒன்றையாவது தவறவிடமாட்டார். பூசை முடித்து வீடு திரும்புகையில்தான் அவர், அந்தப் பெண்ணைக் கண்டுகொண்டார். யாரிடமும் எதுவும் பேசாமல் தனிமையில் இருந்த அவளின் கண்கள் இமை மூடி இருந்தன. மனதை ஒருமுகப்படுத்தி தியானத்தில் இருந்தாள் அந்தப் பெண்.

    வயது இருபதுக்கு மேல் இருக்கலாம் என மதிப்பீடு செய்து கொண்டார். அம்மன் கோவில் விக்கிரகம் மாதிரி அழகாக இருந்தாள். கிழவர் அந்தப் பெண்ணை, தனது பேரனுக்குப்  பொருத்தம் பார்த்துக் கொண்டார்.

    – எப்ப திருமணப் பேச்சு எடுத்தாலுமே தட்டிக் கழிக்கின்றானே!

    ஒருவேளை மனதில் யாரையாவது விரும்பி வைத்திருக்கின்றானோ?

    கிழவரின் மகள், பேரனுக்கு திருமணம் பேசி, போராடி இழைத்து விட்டாள். அவன் திருமணமே வேண்டாம் என்கின்றான்.

    தீர்த்தக்  கிணறுவரை  சென்ற  கிழவர், இன்னுமொரு  முறை   நின்று, திரும்பி   நிதானமாக  அந்தப் பெண்ணைப் பார்த்தார். கிழவர் முடிவு செய்து கொண்டார். பக்தி சிரத்தையுடைய பெண் வீட்டிற்கு வந்தால் வீடும் மங்களகரமாக இருக்கும்.

    காலம் கனிந்தது. கிழவர் ஒருநாள் அந்தப் பெண்ணிடம் மெதுவாக பேச்சைத் தொடக்கினார்.

    – பிள்ளை என்ன செய்கின்றீர்?

    – தாத்தா…! நான் யூனிவர்சிட்டி சோதினை எடுத்திட்டு இருக்கிறன்… இனி மறுமொழி வரும்வரையும் லீவு.

    கணீரென்ற அவளின் குரலில் மெய் மறந்தார் கிழவர்.

    – பிள்ளை… என்று இழுத்தார் கிழவர். அவர் ஏதோ கேட்க நினைக்கின்றார் என்பதை உணர்ந்த அவள்

    – என்னுடைய பெயர் ஸ்ரீநிதி .  அப்பா  ஸ்கூல் பிரின்சிபலா வேலை பார்க்கிறார் என்றாள்.

    – ஆகா நல்ல இடம். நல்ல இடம் என்று புளகாங்கிதம் அடைந்தார் கிழவர்.

    ஐயர் மணியைக் கிலுக்கி மந்திரங்கள் சொன்னார். ஸ்ரீநிதி கண்களைத் திறந்து தரிசனம் பெற்றுக் கொண்டாள். மனதிற்குள் ஏதோ வேண்டிக் கொண்டாள். வரிசையில் நின்று திருநீறு, பிரசாதம் பெற்றுக் கொண்டாள்.

    ஒருநாள் கிழவர் மயக்கத்தில் கோவில் வாசலில் விழுந்து விட்டார். அருகில் இருந்தவர்கள் அவரைத் தூக்கி கோவிலுக்குள் கிடத்தினார்கள். மயக்கம் தீரும் வரைக்கும் பனை ஓலை விசிறியால் காற்று வீசினாள் ஸ்ரீநிதி.

    – தாத்தா வெறுங்காலோடை நடக்காதீங்கோ…!   கல்லு முள்ளு எல்லாம் குத்திப்போடும்.

    – தாத்தா காலிற்கு செருப்பு போடுங்களேன்! என்று ஒரு சோடி செருப்பு வாங்கிக் கொடுத்தாள் ஸ்ரீநிதி.

    ஒரே சந்தோஸத்தில் போய் சாய்வணைக் கதிரையில் பொன்னுக் கிழவர் சரிந்தார். சரிந்தவர் சரிந்தவர்தான்.

    அப்புறம் எழும்பி நடக்க முடியாமல் முடங்கிப் போய்விட்டார். பாரிசவாதம் என்றார்கள் வைத்தியர்கள். கதைப்பதற்குக் கூட கஷ்டப்பட்டார். அதன்பின் கோவிலுக்குப் போகும் பாக்கியம் அவருக்குக் கிட்டவில்லை. உள்ளத்தை கோவிலாக்கி மனவெளியில் பூஜை செய்தார்.

    காலம் கடந்தது.

    ஒருநாள் இரவு தகப்பனிற்கும் மகனிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. கிழவர் ஒருகரையில் இருந்து எல்லாவற்றையும் அவதானித்துக் கொண்டிருந்தார்.

    – நீ திருமணம் செய்யாவிட்டால், உன் தங்கைகளை யோசித்துப் பார்..?

    – நீ யாரையோ விரும்பியிருக்கிறாய்… அதுதான்…  உள்ளுக்கொண்டு வைச்சுக்கொண்டு வெளியிலை ஒண்டு கதைக்கிறாய்! அப்பா கத்தினார்.

    கடைசியில் மகன் திருமணம் செய்ய ஒத்துக் கொண்டான். கிழவர் விடிந்தபின் தன் எண்ணத்தைச் சொல்ல எண்ணியிருந்தார். ஸ்ரீநிதி மாத்திரம் இந்த வீட்டிற்கு வந்துவிட்டால் குடும்பத்தைக் கோவிலாக்கி விடுவாள்.

    காலையில் பேரன் அன்றைய தினசரியை கிழவருக்குப் பக்கத்தில் வைத்துவிட்டுப் போனான்.

    – தம்பி ஒரு கதை… இல்லை இல்லை… நான் அம்மாவிடமே கதைக்கிறேனே! கிழவர் சொல்லி விட்டு நாளேட்டைப் புரட்டினார்.

    -கந்தசுவாமி கோவிலுக்கு அனுபவம் மிக்க ஒரு சிற்பி உடனடியாகத் தேவைப்படுகின்றார். சம்பளம் நேரில் பேசி தீர்மானிக்கப்படும்.

    திடீரென அந்த விளம்பரம் கிழவரின் கண்ணில் பட்டது. அது பூதாகாரமாகி எழுந்து கிழவரை விழுங்குவது போல் இருந்தது.

    – கோவிலில் இருந்த சிற்பிக்கு என்ன நடந்தது? அருமையான மனிதர்! ஏதாகிலும் சுகமில்லாமல் இருக்கலாம்.

    கிழவரின் மனம் அதை அறியும் ஆவலில் உந்தியது.

    – பிள்ளை மலர்… பத்திரிகை பார்த்தியா? கோயிலுக்கு சிற்பி தேவையாம் எண்டு போட்டிருக்கினம். என்னண்டு விளங்கேல்லை. நானும் கனநாளா கோயிலுக்குப் போகேல்லை. ஒருக்கால் தம்பி சைக்கிளிலை வருவனெண்டால் போயிட்டு வரலாம்.

    எல்லாவற்றையும் விட, பேரனுடன் சைக்கிளில் போகும்போது  மனதில் உள்ளதை வெளிப்படுத்தி விடலாம் என்பது அவர் எண்ணம். பத்து மணியளவில் போனால் பேரனுக்கு ஸ்ரீநிதியையும் காட்டி விடலாம்.

    கோவிலில் பூஜை நடைபெற்றுக் கொண்டிருந்தது. கோவில் வாசலில் பொன்னுக்கிழவரை சைக்கிளிலிருந்தும் இறக்கி விட்டான் பேரன். சங்கு, மணி ஒலிகள் முழங்க பூஜை நடைபெற்றுக் கொண்டிருந்தது. மந்திர உச்சாடனங்கள், தேவார பாராயணங்கள் அந்த ஒலிகளுடன் கலக்கின்றன. கிழவரின் மனம் அமைதியடையாமல் இருந்தது.

    அருகே இருந்த ஒருவரிடம் மெதுவாகப் பேச்சுக் கொடுத்தார்.

    -நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கலாமா?

    அவர் கிழவரை நிமிர்ந்து பார்த்துவிட்டு தன் வேலையைத் தொடரலானார். பின்னாலே திரும்பிப் பார்க்கின்றார். ஸ்ரீநிதி வந்திருந்தால் அவளிடமாவது கேட்டுப் பார்க்கலாம். கிழவரின் கண்கள் அகல விரிந்தன. அங்கே அந்தப்பெண்ணைக் காணக் கிடைக்கவில்லை.

    பரீட்சை முடிவுகள் வந்து, பல்கலைக்கழகம் தொடங்கியிருக்கலாம் என கிழவர் முடிவு செய்தார்.

    பூஜை முடிந்து விட்டது. இன்னும் கொஞ்ச நேரத்தில் பாராயணம் தொடங்கி விடும். பொல்லை ஊன்றிக் கொண்டு சிற்ப வேலை செய்து கொண்டிருந்த வயது முதிர்ந்த சிற்பி ஒருவரிடம் சென்றார் கிழவர்.

    – வணக்கம். முன்பு இங்கே சிலை வடித்துக் கொண்டிருந்த சிற்பிக்கு என்ன நடந்தது? சிற்பி தேவை எண்டு பேப்பரிலை விளம்பரம் வந்திருந்தது!

    புதியவர் இருக்கையை விட்டு எழுந்து, வாயிற்குள் குதப்பிக் கொண்டிருந்த பாக்குச்சீவலை வேலிக்கரையோரமாகச் சென்று துப்பி விட்டு வந்தார்.

    -ஐயா பெரியவரே! மூன்று வாரங்களுக்கு முன்னர் பலமான புயல்காற்று வீசியது உங்களுக்கு நினைவிருக்கின்றதா?

    -ஆம்… தெரியும் என்றார் கதை கேட்கும் ஆவலில் கிழவர்.

    -அந்தப் புயல் காற்றில் செதுக்கி வைத்திருந்த சிற்பங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விழுந்து உடைந்துவிட்டன. அதைக் காப்பாற்றுவதற்காகக் போன சிற்பி, சிற்பங்களுக்கிடையே விழுந்து சிக்குப்பட்டுப் போனார். அவரின் கூக்குரல் கேட்டு, அவரைக் காப்பாற்றுவதற்காகப் போன ஸ்ரீநிதி என்ற பிள்ளைக்கும் காயங்கள். இரண்டு பேரும் வைத்தியசாலையில் இருந்தார்கள். நல்ல வேளை ஆபத்து ஒன்றும் இல்லை

    சொல்லிக் கொண்டே போனார் அவர். தலைமேல் கையை வைத்த பொன்னுக்கிழவர் பொல்லு இடறுப்பட கற்குவியல்கள் மீது சரிந்தார்.

    கிழவரைத் தூக்கி கோவில் விறாந்தயில் கிடத்தினார்கள். கிழவரின் நினைவு மெல்லத் திரும்புகின்றது. பேரனது மடிமீது தலையிருக்க, பேரனுக்குப் பக்கத்தில் ஒரு பெண் காற்று வீசிக் கொண்டிருக்கின்றாள். அவளின் முகத்தை ஏறிட்டுப் பார்த்த கிழவர், ஸ்ரீநிதி என்று முனகிக்கொண்டார்.

     

    Share
  • எறும்பின் சாபம்

                  க.பிரகாஷ், எம்.ஏ, எம்.பிஃல்,

                         தமிழ்த்துறை

                         தொழில் நுட்ப்பக் கள ஆய்வுப் பணியாளர்

                         பாரதியார் பல்கலைக்கழகம்

                         கோயம்புத்தூர் – 46

    ஆசிரியர் :     எறும்பும், ஈயும் நெறுங்கிய சினேகிதர். அது  கிராமத்தில் விவசாயத் தொழில் செய்து வந்தது. ஈ வீட்டுவேலையும், எறும்பு விவசாயத்தையும் பார்த்து வந்ததுர்.

    ஆசிரியர் :    எறும்பு ஏறு ஓட்டுவதற்காக சென்றுவிட்டது.  ஈ வீட்டில் சமையல் வேலை முடித்துவிட்டு, சுவையாக எதையாவது சமைப்போம் என்று பாயாசத்தை செய்து கொண்டு இருந்தது.

    ஈ :            என்னடா! ஏறு ஓட்டபோனவ இன்னும் காணம். சரி! வரட்டும். பாயாசத்தை அடுப்புல வெச்சேன் என்னாச்சினு தெரியல பாப்போம். வெந்து இருக்கமா?

    ஆசிரியர் :    ஏறு ஓட்டிவிட்டு வீட்டிற்கு வந்தது எறும்பு.

    எறும்பு :      எங்கடா அவன காணம், எங்க போயிருப்பான், வீட்டுக்குப் பின்னாடியும் இல்ல, அடுப்புல வேற என்னமோ வச்சிட்டு போயிருக்கான், எங்க போனாலும் சொல்லாம போகமாட்டானே. சரி! வரட்டும் உக்காரலாம்.

    ஆசிரியர் :    அந்த வழியில் வந்த கொசு

    கொசு :       எறும்பண்ணா அடுப்புல எதோ தீயுர வாசன அடிக்குதுப் பாருங்க.

    ஆசிரியர் :    எறும்பு அடுப்பைப் பார்க்க செல்கிறது.

    எறும்பு :       மாப்பிள என்ன விட்டுட்டு போயிட்டயேடா எனக்கு வேற யாருடா இருக்காங்க உன்னவிட்டா,

    ஆசிரியர் :    சினேகிதன், இறந்தது நினைத்து அழுது கொண்டு இருக்கிறது. அந்த வழியாக வந்த காகம் எறும்பை பார்த்து பேசுகிறது.

    காகம் :       எறும்பண்ணா, எறும்பண்ணா, இவ்வளவு நாளா நல்லா தானே இருந்த இன்னிக்கு என்னாச்சி, அழுதுட்டு இருக்க.

    எறும்பு :      என் சினேகிதன் இறந்து நான் அழுக, காக்கா உன் ஒரு கண்ணு குருடாக.

    ஆசிரியர் :    காக்கா கண்ணு குருடாகிவிட்டது. எப்பையும் போல அது வசிக்கும்  பெரிய ஆலமரத்துல போய் உட்காந்துரிச்சி.

    ஆலமரம் :    காக்கா அண்ணா, காக்கா அண்ணா, இவ்வளவு நாளா நல்லா தானே இருந்த இன்னிக்க என்னாச்சி, ஒரு கண்ணு குருடாயி வந்துருக்க.

    காகம் :       ஈ செத்து எறும்பழ, என் கண்ணு குருடாக, உன் மரம் அடியோட சாய.

    ஆசிரியர் :    ஆலமரமும் சாய்ந்து விட்டது. அங்கு வசிக்கும் யானை இரவு எல்லாம் சுற்றி திரிந்து விட்டு ஓய்வுக்காக இந்த மரத்தடியில் தூங்குவது உண்டு. யானை ஆலமரத்தைப் பார்த்துப் பேசுகிறது.

    யானை :      ஆலமரமண்ணா, ஆலமரமண்ணா, இவ்வளவு நாளா நல்லா தானே இருந்த இன்னிக்க என்னாச்சி, உனக்கு இப்படி அடியோட சாஞ்சிகிடக்குற.

    ஆலமரம் :    ஈ செத்து எறும்பழ, காக்கா கண்ணு குருடாக, நான்  அடியோட சாய, உன் தந்தம் உடைய.

    ஆசிரியர் :    யானையுடைய தந்தமும் உடைந்துவிட்டது. தினமும் தண்ணீர் குடிப்பதற்காக ஆற்றுக்கு போகும் அந்த யானையைப் பார்த்துப் பேசியது ஆறு.

    ஆறு :         ஆனையண்ணா, ஆனையண்ணா, இவ்வளவு நாளா நல்லா தானே இருந்த இன்னிக்கு என்னாச்சி, யாருகூட சண்ட போட்ட தந்த உடஞ்சி வந்துருக்க.

    யானை :      ஈ செத்து எறும்பழ, காக்கா கண்ணு குருடாக, ஆலமரம் அடியோட சாய, என் தந்தம் உடைய, உன் ஆற்று நீர் எல்லாம் வற்றிபோக.

    ஆசிரியர் :    ஆற்று நீர் எல்லாம் வற்றி போய்விட்டது.  எப்போதும் இங்க தண்ணீரை எடுப்பதற்காக பொண்னி வருவாள். அவள் ஆறைப் பார்த்து பேசுகிறாள்.

    பொன்னி :    ஆறண்ணா, ஆறண்ணா, இவ்வளவு நாளா நல்லா தானே இருந்த இன்னிக்கு என்னாச்சி, எல்லாம் தண்ணீயும் நீயே குடிச்சுட்ட. அடி பாவி.

    ஆறு :          ஈ செத்து எறும்பழ, காக்கா கண்ணு குருடாக, ஆலமரம்  அடியோட சாய, யானை தந்தம் உடைய என் ஆற்று நீர் வற்றி போக உன் இடை மணையாக.

    ஆசிரியர் :    பொன்னியின் இடை மணையாகிவிட்டது. பொன்னியைப் பார்த்து ராணி பேசுகிறாள். அடி என்னாடி பொன்னி, இவ்வளவு நாளா நல்லாதானே இருந்த இன்னக்கி ஏன் இப்படி உட்கார்ந்துகிட்ட இருக்க. பொன்னியை பார்த்து பேசுகிறாள் ராணி.

    பொன்னி :    ஈ செத்து எறும்பழ, காக்கா கண்ணு குருடாக, ஆலமரம்  அடியோட சாய, யானை தந்தம் உடைய, ஆற்று நீர் வற்றி போக என் இடை மணையாக, உன் வாய் ஊமையாக.

    ஆசிரியர் :    ராணி ஊமையாகிவிட்டாள்.

    இப்படி அக்காலக்கட்டத்டதில் இருந்து இன்று வரையிலும் ஓரறிவு உயிரில் இருந்து ஐந்தறிவு உயிர் வரைக்கும்மே சாபமிட்டால் பழிக்கும் என்பதே ஐதீகம். இனி வரும் காலங்களில் கணினி உலகமாக மாறினாலும், இக்கணினியை பயன்படுத்தும் போது தேவையில்லாத ஒன்றை பயன்படுத்தினால் வைரஸ் என்ற ஒன்று சாபமிட்டு அச்செயலை இழக்கச்செய்கிறது.

    இப்படிக்கு சாபம்

     

    Share
  • கண்ணாடிமுன்

    நிர்மலா ராகவன்

    `மொதல்ல ஒங்களைக் கண்ணாடியில பாத்துக்கோங்க!’

    குரலில் சற்றும் கோபமில்லாமல்தான் மனைவி அந்த வார்த்தைகளைச் சொல்லியிருந்தாள். ஆனால் அதில் பொதிந்து கிடந்த ஏளனம்!

    வேண்டும். நன்றாக வேண்டும். சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தமாதிரி, ஏற்கெனவே குண்டாக இருந்த மனைவியிடம் அவளுடைய உடலைப்பற்றிக் கிண்டல் செய்வானேன், இப்படி வாங்கிக் கட்டிக்கொள்வானேன்!

    அவருக்கு எல்லார்மேலேயும் கோபம் வந்தது.

    `பிறந்த நாள்’ என்று அவரைத் தூக்கிப்போகாத குறையாக வெளியே அழைத்துப்போன அந்த ஐந்து நண்பர்கள்மேல், அவர்களுடன் பார்த்த படத்தின் கதாநாயகிமேல். இன்னும்.., தன்மேலேயே.

    இந்த சிம்ரன் ஒருத்தி! எதற்காக உடலை இவ்வளவு கச்சிதமாக வைத்திருக்க வேண்டும்? அட, அழகான, ஒல்லியான உடல் இருந்தால் இருந்துவிட்டுப் போகட்டுமே! அதை இப்படியா வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டும், இடுப்பு, தொப்புள் என்று அணு அணுவாக!

    இவரைப்போன்ற இளிச்சவாயர்கள், `ஆகா! இன்னும்கூட நமக்கு இளமையின் உத்வேகம் இருக்கிறதே!’ என்ற பூரிப்புடன் மீண்டும் மீண்டும் அந்தப் படத்தைப் பார்க்க வேண்டும் என்று தயாரிப்பாளரும், இயக்குனரும் சேர்ந்து செய்த சதி! இல்லாவிட்டால், முக்காலே முவ்வீசம் கிழவனாகிவிட்ட தனக்கு அந்த இளம்பெண்ணைப் பார்த்து எதற்காக இத்தனை கிறக்கம் ஏற்பட வேண்டும்?

    பார்த்ததுதான் பார்த்தோமே, அப்போது உண்டான மயக்கத்தை மனசுக்குள்ளேயே வைத்துக் கொண்டிருக்கலாம் இல்லையா?

    படத்தின் பாதிப்பு குறையாமலேயே வீட்டுக்கு வந்தவருக்கு, காலைப் பரத்திக்கொண்டு, குறட்டை விட்டபடி தூங்கிக்கொண்டிருந்த மனைவியைப் பார்த்ததும் எரிச்சல் பொங்கியதில் என்ன ஆச்சரியம்?

    `சனியன்! எனக்குப்போய் இப்படி ஒண்ணு வாய்ச்சிருக்கே!’ என்று அவளை மனசுக்குள்ளேயே திட்டி, தன்மேல் பரிதாபப்பட்டுக்கொண்டார்.

    அப்போது கண்விழித்தவள், “வந்துட்டீங்களா?” என்று தூக்கக் கலக்கத்தில் கட்டைக்குரலில்கேட்டது அவரது ஆத்திரத்தை அதிகப்படுத்தியது.

    “வராம? தியேட்டரிலேயே படுத்துடுவாங்களா? இல்ல, இது ஒன் புருஷனோட ஆவின்னு நினைச்சுக்கிட்டியா?” என்று எரிந்து விழுந்தார்.

    அவள் எழுந்து உட்கார்ந்துகொண்டாள். “ரொம்பப் போட்டுட்டீங்களா? பேசாம படுங்க!” என்றாள், மனைவிகளுக்கே உரிய விவேகத்துடன்.

    “யாரு, யாரைடீ போட்டாங்க? புருஷனை மயக்கறமாதிரி ஒடம்பை வெச்சுக்கத் தெரியல, பெரிசா பேச வந்துட்டா!” என்று பொரிந்தவர், “சே! ஏண்டா வீட்டுக்கு வர்றோம்னு இருக்கு. வந்தா, பூரியாட்டம் ஒப்பிப்போன ஒன் மூஞ்சியைப் பாத்துத் தொலைக்க வேண்டியிருக்கு. ஹூம்! சிம்ரனைக் கட்டிக்கப்போறவன் குடுத்து வெச்சவன்!” என்று ஏகமாக உளறினார்.

    அவளுக்கு ஏதோ புரிந்தாற்போலிருந்தது. முகத்தில் மெல்லிய புன்னகை.

    அப்போதுதான் சொன்னாள், “மொதல்ல ஒங்களைக் கண்ணாடியில பாத்துக்கோங்க!”
    அசரீரிபோல், வேளைகெட்ட வேளையில் அவள் குரல் கேட்டவண்ணம் இருந்தது.

    காலையில் பல் துலக்கிய கையோடு பாத்ரூமில் சவரம் செய்துகொள்ளும்போது, குளித்துவிட்டுத் தலை வாரிக்கொள்ளும்போது, ஏன், காரை ஓட்டிப்போகும் வழியில் ஏதாவதொரு சிவப்பு விளக்கில் நிற்கும்போது முகத்திற்குமேல் இருந்த கண்ணாடியைத் திருப்பி … இப்படி பல கோணங்களிலும் கண்ணாடியில் தெரிந்த தன் முகத்தைப் பார்த்துக் கொண்டவருக்கு ஒன்று புரிந்தது.

    மனைவி சிம்ரன்மாதிரி இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால், தானும் சினிமா கதாநாயகன்போல் இருக்கவேண்டாமோ?

    `ரஜினி எவ்வளவு இளமையா இருக்காரு, பாருங்க! அவருக்கும் ஒங்க வயசுதானாம்!’ அண்மையில், `சந்திரமுகி’ பார்த்துக்கொண்டிருந்தபோது மனைவி காதருகே குனிந்து முணுமுணுத்தது நினைவில் எழுந்தது.

    அவருக்குப் படத்தின் ஆரம்பத்திலேயே சுவாரசியம் போய்விட்டது. `இதையெல்லாம் ஒரு படம்னு பாக்கறாங்களே, அறிவு கெட்டவங்க!’ என்று தமிழ்ப்பட ரசிகர்களை ஒட்டுமொத்தமாக வைதார்.

    மனைவியை மயக்கிய அந்தக் கதாநாயகனை பொறாமையுடன் வெறித்தார்.ஒரு படத்துக்கு ஐம்பது கோடிக்குமேல் சம்பளம் வாங்குபவருக்கு ஆயிரக்கணக்கில் செலவழித்து, வழுக்கைத்தலையை மறைக்க கரிய நிறத்தில் `விக்’ வாங்க முடியும்தான். இத்தாலி நாட்டுக்குப் போய், முகத்திலும், உடம்பிலும் தொங்கும் வேண்டாத சதையை எல்லாம் அறுவைச் சிகிச்சையால் அகற்றிக்கொள்ளவும் முடியும்.

    தனக்கு அதெல்லாம் முடியுமா? கேவலம், மாதச் சம்பளக்காரன்! இந்த லட்சணத்தில், வெளிநாட்டில் படிக்கும் மகனுக்கு வேறு அவ்வப்போது தண்டம் அழ வேண்டியிருக்கிறது.

    இதெல்லாம் நண்பர்களுக்குத் தெரிகிறதா?

    “ஒனக்கென்னப்பா! ஒரே மகன்! மகா புத்திசாலி! நீங்க புருஷன், பெண்டாட்டி ரெண்டே பேர் வீட்டிலே! எப்பவும் ஹனிமூன்தான்!” என்று விகாரமாகக் கண்ணைச் சிமிட்டி வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொள்வார்கள்.

    ஹனிமூனாவது!

    அந்த வார்த்தை காதில் விழுந்தாலே, அவருக்குத் தன் கல்யாணம்தான் நினைவுக்கு வந்து பயமுறுத்தும்.

    குப்பன்.
    அதுதான் அவருடைய பெயர்.

    அவரைக் கேட்காமல், அவருக்குப் பிடிக்காத பெயராக வைத்துவிட்டார்கள். ஷ், ஹ் போன்ற வடமொழி எழுத்துக்கள் ஒன்றிரண்டு கலந்து நாகரிகமாக இல்லை தன் பெயர் என்ற பெரிய குறை அவருக்கு.

    போதாத குறைக்கு, பள்ளியில் ஷாம் என்ற மாணவன் `ஷாம்பு’ ஆக, சம்சூரி என்ற மலாய் மாணவன் `சம்சு’வாக (மட்ட ரக கள்ளைக் குறிக்கும் வார்த்தை), இவரைக் `குப்ப’ என்று அழைத்தார்கள் சகமாணவர்கள்.

    வாத்தியார்களுக்கும் புனைப்பெயர் வைத்துச் சிரித்த காலம் அது. ஆனால், தன் பெயரைச் சுருக்கி அழைத்து, பிறர் சிரிக்கும்போது, அதை அவ்வளவு எளிதாக எடுத்துக்கொண்டு சிரிக்க முடியவில்லை அவரால். அழுகைதான் வந்தது.

    வயதாக ஆக, தனக்கு வரும் மனைவிக்காவது பெயர் மிக அழகாக இருக்கவேண்டும் என்ற தீர்மானம் அவருக்குள் எழுந்தது.

    அதனால்தானே, “பொண்ணு பேரு ஜலஜாவாம்,” என்றபடி, மேலே ஏதோ சொல்லவந்த அம்மாவை இடைமறித்து, “இதையே முடிச்சுடுங்க!” என்றார் அவசரமாக?

    “நீ பாக்க வேணாம்?” என்று அம்மா அதிசயப்பட்டுக் கேட்டபோது, “பரவாயில்லே,” என்று மட்டும்தான் அவரால் சொல்ல முடிந்தது.

    ஜலஜா!
    ஆகா! எவ்வளவு அழகான பெயர்! பெயரே இவ்வளவு அழகாக இருந்தால், உருவம் எப்படி இருக்கும்! அடுத்த சில மாதங்கள் இனிமையான கற்பனையில் கழிந்தன.

    மனைவியின் பெயரிலிருந்த அழகிற்கும், உருவத்திற்கும் கிஞ்சித்தும் சம்பந்தம் இல்லை என்று உணர்ந்து அவர் அதிர்ந்தபோது, அவள் கழுத்தில் தாலி ஏறியிருந்தது.

    “இவ இவ்வளவு குண்டுன்னு ஏம்மா மொதல்லேயே சொல்லலே?” அம்மாவைத் தனியாகப் பார்த்தபோது அழமாட்டாக்குறையாகக் கேட்டார்.

    “நீ எங்கே சொல்லவிட்டே?” என்று பழியை அவன்மேலேயே திருப்பினாள் தாய். “இப்ப அதனால என்ன மோசம்? நளபாகமா சமைக்கிறா. நீயும் குண்டாயிட்டாப் போவுது!” என்று சமாதானப்படுத்தினாள்.

    அப்படியும் அவர் முகம் வாடியிருந்ததைப் பொறுக்காது, “எல்லாப் பொண்ணுங்களும் ஒரு பிள்ளை பெத்ததுக்கு அப்புறம் குண்டாத்தானே போயிடுவாங்க! நான் எப்படி இருந்தேன், தெரியுமா?” என்று ஆரம்பித்தாள்.

    நல்லவேளை, மனைவியின் பிரசவம் கடினமாக இருந்தது. சற்றே இளைத்தாள்.

    இருந்தாலும், ஏமாந்துவிட்ட உணர்ச்சி அவரை அலைக்கழைத்துக்கொண்டே இருந்தது. எதற்காகவாவது அவளை விரட்டுவார். அவரது போக்கால் பாதிக்கப்படாது, எருமை மாட்டின்மேல் பெய்த மழைபோல் அவள் சும்மா இருந்தது அவரை மேலும் ஆத்திரப்படுத்தியது.

    இன்றோ, பயம் சுத்தமாக விட்டுப்போய், அவரையே பழிக்கிறாள்!

    எதையோ இழந்துவிட்டது போலிருந்தது. யாருடனும் பேசப் பிடிக்காமல், பத்திரிகைகளில் வரும் தத்துவ போதனைகளைப் படிக்க ஆரம்பித்தார். அப்படியாவது நிம்மதி கிடைக்காது?

    காவி கட்டிய ஒருவர் இந்த அரிய யோசனையை அளித்திருந்தார்: மனம் உற்சாகமாக இருந்தால், உடலில் இளமை துள்ளி விளையாடும்.

    சிறிது தயக்கத்திற்குப்பின், ஹைபர் மார்க்கெட்டுக்குப் போய், மருக்கொழுந்து வாசனை அடித்த செண்ட் ஒரு குப்பி வாங்கிக்கொண்டார். கல்யாணமான புதிதில் உபயோகித்தது. அதற்குப் பிறகுதான் உல்லாசமே போய்விட்டதே!

    கணவர் அடிக்கடி கண்ணாடியில் அழகு பார்த்துக்கொள்வதையும், இப்போது செண்ட் உபயோகிப்பதையும் கண்டும் காணாததுபோல் இருந்த ஜலஜா குழம்பினாள். `நாற்பது வயதில் நாய்க்குணம்’ என்பார்களே!

    அவர் எதிர்பார்த்த அளவுக்கு அந்த செண்ட் வாசனை புத்துணர்ச்சி அளிக்கவில்லை.
    அடுத்த முறை கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்துக்கொண்டபோது, உப்பும் மிளகும் கலந்தது போன்றிருந்த தலைமயிர் அவர் கண்ணை உறுத்தியது.

    `என் முடி ரஜினியுடையதைவிட எவ்வளவு அடர்த்தி!’ என்ற பெருமையும் எழாமலில்லை.

    தனக்கு எதற்கு `விக்’கும், மண்ணாங்கட்டியும்! முடி மட்டும் கொஞ்சம் கறுப்பாக இருந்ததால், இன்னும் பத்து வயது குறைவாகக் காட்டுமே!

    குளிக்கப்போனவர் ஒரு மணி நேரத்துக்குமேல் ஆகியும் வெளியே வரவில்லையே என்று பயந்த மனைவி தன் பலத்தையெல்லாம் பயன்படுத்தி கதவை உடைக்காத குறையாகத் தட்ட, அசட்டுச் சிரிப்புடன் வெளிப்பட்டார்.

    “இதென்னங்க கண்ராவி!” சிரிப்பை அடக்க முயற்சித்து, தோற்றவளாகக் கேட்டாள்.

    “அமில மழையிலே நனைச்சுட்டேன்!” என்று — வெகுவாகக் கறுத்த — தன் முடிக்கு ஒரு காரணத்தைக் கற்பித்தார்.

    தான் எதிர்பார்த்தபடி, மனைவி தன் புதிய முக அழகில் அப்படி ஒன்றும் மயங்கவில்லையே என்ற வருத்தம் அவருக்குள் எழுந்தது.

    வேறு எங்காவது கோளாறோ?

    உடல் பூராவையும் பார்த்துக்கொள்ள முழுநீளக் கண்ணாடி ஒன்றை வாங்கி மாட்டினார். அப்போதுதான் புரிந்தது மனைவியின் எகத்தாளம்.

    நம் வயிறு எப்போது, எப்படி, இப்படி — எட்டு மாதக் கர்ப்பிணிபோல் — பருத்தது?

    முடிச்சாயம் வாங்கிய அதே கடைக்குப் போய் சில மணி நேரங்களைச் செலவிட்டார். வெளியே வரும்போது அவர் கையில் இருந்த பொட்டலத்தில் ஒரு வித இடுப்புப்பட்டி இருந்தது. ஏதோ மருந்து சேர்க்கப்பட்டதாம். வயிற்றைச் சுற்றிச் சுற்றிக் கட்ட வேண்டும். எந்நேரமும் அணிய வேண்டும். சில வாரங்களுக்குள்ளேயே வித்தியாசம் புலப்படும் என்று அங்கிருந்த சீன மாது அடித்துச்சொல்ல, `இந்தப் பானை வயிற்றைக் குறைக்க நூற்றுப் பத்து ரிங்கிட் செலவழிப்பதில் தப்பொன்றும் இல்லை! என்று துணிந்து வாங்கிவிட்டார்.

    இப்போது நிமிர்ந்துதான் உட்காரவோ, நடக்கவோ முடிந்தது. நாற்காலியில் அமர்ந்து சாப்பிட்டாலும், எந்நேரமும் வயிறு வெடிப்பதுபோல் இருந்ததால் சாப்பிடும் அளவு கணிசமா்கக் குறைந்து போயிற்று.

    `வயிறு சரியா இல்லியா?’ `சாப்பாடு நல்ல இல்லே?’ என்றெல்லாம் மனைவி ஆதுரத்துடன் கேட்டபோது, மனதுக்குள் கொக்கரித்துக்கொண்டார்: `என்னை மட்டம் தட்டினியே! இன்னும் கொஞ்ச நாளிலே பாரு!’

    கொஞ்ச நாளில் தலைசுற்றல்தான் வந்தது.

    பொறுக்க முடியாது போக, மருத்துவரிடம் போனார்.”எடையை ஒரேயடியாக் குறைக்க ஏதோ செய்யறீங்களா? அதான் ரத்த அழுத்தம் குறைஞ்சுபோய், தலை சுத்துது. சாதாரணமா, லேடீஸ்தான் இப்படிச் செய்வாங்க!” என்று அந்த மனிதர் பிட்டுப் பிட்டு வைத்து, ஒரு மாதிரியாகப் பார்க்க, மானம் போயிற்று குப்பனுக்கு.

    வீடு திரும்பியதும் முதல் வேலையாக, பெல்டைச் சுற்றி, பழைய துணிகளுக்கடியில் ஒளித்து வைத்தார். அவ்வளவு விலை கொடுத்து வாங்கியதை தூர எறியவும் மனம் இடம் கொடுக்கவில்லை.

    அன்று அவர் வேலை முடிந்து வந்தபோது, வழக்கத்துக்கு விரோதமாக மனைவி யாரிடமோ பேசிசுக்கொண்டிருந்தது கேட்க, மறைந்திருந்து கேட்டார்.

    “அவர் முந்திமாதிரி என்னைச் சீண்டறது கிடையாது. எப்பவும் ஏக்கமா, எதையோ நினைச்சுக்கிட்டு, சரியா சாப்பிடறதில்ல. வீடெல்லாம் கண்ணாடி வாங்கி மாட்டி அழகு பாத்துக்கிடறது இருக்கே! விடலைப் பசங்க தோத்தானுங்க, போ! ஏதானும் சின்ன வீடு சமாசாரமோன்னு மனசு கிடந்து அடிச்சுக்குது. இவரைவிட்டா, இத்தனை வயசுக்குமேல நான் என்னடி பண்ணுவேன்!”

    மெய்சிலிர்க்க, வந்த வழியே மீண்டும் நடந்தார் குப்பன். மனைவிக்குத் தன்மேல் அன்பு இல்லாமல் இல்லை!

    ஆணழகராக இருக்கும் ஒருவரைத் திரையில் பார்த்து ரசிக்கலாம். ஆனால், எல்லாரும் வாழ்க்கைத்துணையாக முடியுமா?

    ஏதோ உறைத்தது.

    சிம்ரனோடு மனைவியைத் தான் ஒப்பிட்டுப் பேசியது மட்டும் என்ன நியாயம்?
    அந்த பஞ்சாபி நடிகையால் அப்பள வற்றல் குழம்பும், கத்தரிக்காய் பொரியலும் ஜலஜாவின் கைமணத்தோடு ஆக்கிப்போட முடியுமா?

    வீட்டுக்குத் திரும்பியவர் கையில் பழைய தினசரியில் சுற்றப்பட்ட மல்லிகைப்பூ. ஒரு பிளாஸ்டிக் பை பிதுங்க ரசமலாய், சூர்யகலா, பால்கோவா, பாதம் ஹல்வா என்று வித விதமான இனிப்பு வகைகள்.

    “இவ்வளவு இனிப்பு சாப்பிட்டா, நான் இன்னும் குண்டாயிடுவேன்!” என்று செல்லமாய் சிணுங்கிய மனைவியை ஆசையுடன் பார்த்தார்.

    “நீ இப்படி இருந்தாத்தான் நல்லா இருக்கு. இறுகக் கட்டிக்கிட்டா, எங்கே எலும்பு நொறுங்கிடுமோன்னு பயப்பட வேண்டாம், பாரு!” என்றபடி அவளை நெருங்கினார்.

    Share
  • தாய்மை

    கீர்த்தனா

    ”டேய், மகேஸ்!… எழுந்திருடா…… மணி 7 ஆச்சு….இன்னும் தூங்கிட்டு இருந்தா காலேஜ் பஸ் போயிடும்…..”

    “என்ன சீதா இப்படி பண்ணிட்டிங்க….இப்பதான் ஒரு நல்ல கனவு வந்தது…. சரி விடுங்க…அதை அப்படியே காலேஜ் போய் கண்டினியூ பண்ணிக்கிறேன்….” என்றான் மகேஸ்.

    “அதெல்லாம் அப்பறம் பண்ணிக்கலாம்….போய் முதல்ல பல் விலக்கிட்டு, உள்ளே சுடுதண்ணி வச்சிருக்கேன் குளிச்சிட்டு வா…”

    அவனை அனுப்பி விட்டு சமையல் வேலையை ஆரம்பித்தார், சீதா.

    குளித்து விட்டு வந்தவன், சமையலறைக்குள் புகுந்தான்…..

    ”இன்னைக்கு என்ன சமையல்……. வாசம் சுண்டி இழுக்குது…”

    ”என் தங்கத்துக்கு பிடிச்ச முருங்கைக்காய் சாம்பார், வெண்டைக்காய் பொரியல்-தான் செஞ்சிருக்கேன்….”

    “இதுதான் என்னோட சீதா-ங்கறது….. ஆனா இன்னும் கொஞ்ச நாள் கஸ்டப்படுங்க….. அதுக்கப்பறம்….”

    “அதுக்கப்பறம்…. நீ சமைக்க போறேனு சொல்லிடாதப்பா…..  நான் பாவம்ல”

    “ச்ச….ச்ச….. நான் அந்த மாதிரி கெட்ட பையன் இல்ல…… நான் என்ன சொல்ல வந்தேன் தெரியுமா….. ஒரு நல்ல மருமகளா கூட்டிட்டு வந்துடுவேன்… அவ உங்களை நல்லா கவனிச்சுப்பா….. நீங்க ஜாலியா இருக்கலாம்……. அவ்வளவுதான்..”

    “ஆசைப்படுடா…… அதுக்காக பேராசைப்படறியே!   வர்ற மருமக என்னை கவனிக்கலைனாலும் பராவாயில்லை….உன்னை எப்பவும் ஒரு தாய் மாதிரி பார்த்துக்கிட்டா, அதுவே எனக்கு போதும்….”

    “ அதெல்லாம் பார்த்துக்கலாம்… உங்களுக்கு ஆபிஸ்க்கு லேட்டாகிடுச்சு….இந்தாங்க உங்க லஞ்ச் பாக்ஸ்…….. நீங்க கிளம்புங்க”

    “உன்கிட்ட பேசிகிட்டே மணிய பார்க்காம இருக்கேன்… சரி.. நான் புறப்படுறேன்…. ரூம்ல உன் டிரஸ் அயர்ன் பண்ணி வச்சிருக்கேன்… உன்னோட பொருள் எதையும் தேட வேண்டியதில்லை…. எல்லாம் ஹால்ல இருக்கு…. அப்பறம் உன் ஹூவையும் பாலிஸ் போட்டுடேன்….

     சீக்கிரம் புறப்பட்டு போ தம்பி…. காலேஜ் பஸ்ஸ விட்டுட்டு, வெளி பஸ்ல போய், கூட்டத்துல மாட்டிகிட்டு சிரமப்படாத…”

    “சரி.. சரி.. நான் பார்த்து போய்க்கிறேன்….”

    அவர் கிளம்பி போனதும், அவனுடைய வேலைகளை முடித்துக் கொண்டு பஸ் ஸ்டாப்பிற்கு சென்றான்.

    அங்கு அவன் நண்பன் யாதவ் அவனுக்காக காத்துக் கொண்டிருந்தான்.

    “டேய், என்னடா! இன்னைக்கும் லேட் பண்ணிட்ட…….. பஸ் போயி 10 நிமிஸம் ஆகுது… சரி வா ஏதாவது டவுன் பஸ் வந்தா போகலாம்..”

    “சாரிடா….. லேட்டாயிடுச்சு..” என்றவனின் நினைவில் சீதா வந்தார்…… அவர் முன்பே அவனை எச்சரித்திருந்தார் அல்லவா!!!!

    ’இன்னைக்கு காலேஜ் பஸ்ஸ விட்டுட்டோம்னு சீதாவுக்கு தெரிஞ்சுது…… கண்டிப்பா என்மேல கோவிச்சுப்பாங்க…’

    அடுத்ததாக வந்த பஸ்ஸில் ஏறினார்கள். கூட்டம் நிரம்பி வழிந்தது…..

    யாதவ், “சரிடா.. இன்னைக்கு புட்போர்டு-தான் போலருக்கு” என்றான்.

    மகேஸ், “அதெல்லாம் முடியாது! எங்க வீட்டுல வெளி பஸ்ல போகவே வேண்டாம்னு சொல்வாங்க……. நீ என்ன புட்போர்டு அடிக்க கூப்பிடற……. வந்து மேலே ஏறுடா…..”

    உள்ளே போனதும்தான் தெரிந்தது….அந்த பஸ்ஸில்தான் சீதாவும் இருந்தார். அவனை பார்த்து விட்டார். ஆனால் எதுவும் பேசவில்லை. அவருடைய ஸ்டாப்பிங் வந்ததும் இறங்கி சென்று விட்டார்.

    காலேஜ் போன பின்னும் இதே நினைவுதான்….. அவரின் அமைதி அவனை அலைக்கழித்தது.  ’நல்லா கோவிச்சுகிட்டாங்கன்னு நினைக்கிறேன்….’

    அங்கு சீதாவும் நிம்மதியாக இல்லை. ‘இன்னும் விளையாட்டுப் பையனா இருக்கானே…… இப்படி கூட்டத்துல ரொம்ப நேரம் நின்னுட்டு போனா, அவன் அதுலயே டயர்டு ஆகிடுவான். நான் சொன்னதை புரிஞ்சிக்கவே இல்லையே……

    இதுக்காகதான்  நான் அவனை காலேஜ் பஸ்ல போக சொல்றேன்…… பேசாம, ஒரு பைக் வாங்கி குடுத்துடலாமா?……. அவன் விருப்பப்படற நேரத்துக்கு புறப்பட்டுக் கொள்ளலாம்……

    ஆனா, பைக்லையும் பார்த்து கவனமாக போகனும்…… இப்ப எல்லாம்  டிராபிக்கும் அதிகம்…… அவன் வயசு பசங்க எல்லாரும் வச்சிருக்காங்க…. அவனுக்கும் ஆசை இருக்கும்……. இதுவரைக்கும் பைக் வாங்கி குடுங்கன்னு அவனா கேட்டதில்லை…..’

    மாலை 6 மணி…

    பல எண்ணங்களோடு ஆபிஸிலிருந்து கிளம்பினார்.

    வீட்டில் ஏற்கனவே மகேஸ் வந்திருந்தான்…..

    அவர் உள்ளே வந்ததை கவனித்தவன்…. அவர் அருகில் சென்று அமர்ந்து கொண்டான்.

    “ தயவுசெய்து, என்னை கோவிச்சுக்காதிங்க….. ப்ளீஸ்..நான் இனிமே லேட்டாக போக மாட்டேன்…”

    ”டேய், உன்மேல எப்பவும் எனக்கு கோபம் வராது…. ஏன்னா, நீ என்னோட செல்ல பையன்…. அதனாலதான் உன்னோட எல்லா வேலையிலும் குறுக்க வரேன்னு நினைக்கிறேன்….”

    ”எனக்கு தெரியும் அப்பா!! நீங்க இத்தனை நாளா என்மேல காட்டுன அன்பு, பாசம் எல்லாமே அம்மா உயிரோட இருந்தாக்கூட காட்டிருக்க முடியுமான்னு தெரியல… என்னோட 10 வயசுல அம்மா இறந்தப்ப இருந்து இந்த நிமிஸம் வரைக்கும் அம்மா இல்லாத குறையே தெரியாம வளர்ந்து இருக்கேன்….. அது உங்களால தான் அப்பா!!! “

    தன் மகனை சமாதனப்படுத்தினார், சீதா என்கிற சீதாராமன்.

    அவனை வீட்டிற்கு வெளியே அழைத்துச் சென்றார்…… அங்கு புது பைக் அவனுடைய பிறந்தநாள் பரிசாக நின்று கொண்டிருந்தது….. நாளைக்கு அவனது பிறந்தநாள்…..

    அந்த பைக் இரு அன்பு நெஞ்சங்களை சுமந்து கொண்டு ஊர்வலம் சென்று கொண்டிருந்தது!!!!!!!

    Share
  • குடும்பம்

    பிரகாஷ்

        காடூர் என்ற கிராமத்தில் ஏழை எளிய மக்கள் வாழ்ந்து வந்தனர். இக்கிராமத்தில் படிப்பறிவு இல்லாதவர்கள் அதிகமாக இருந்தனர். அதிலும் கடினமாக உழைத்து படிக்கவைக்கும் போது நடந்த சம்பவங்களை இக்கதையில் சுட்டுகிறேன்.

    கலைச்செல்வி பள்ளிக்கு சேர்ந்த முதல் நாளே நண்பர்கள் துணைக்கு இல்லை என்று  வருத்தப்பட்டாள். அடுத்தநாள் பள்ளிக்குச் செல்லும்போது  தேவி, அபி, என்ற இரண்டு நண்பர்கள் கிடைத்ததும் மகிழ்ச்சியடைந்தாள். கலைச்செல்வி பள்ளிக்குச் செல்லும்போது ஆற்றை கடந்து செல்லவேண்டும். ஆற்றை கடந்து செல்வதற்கு தொங்குபாலம் ஒன்று அமைத்திருக்கின்றனர். ஒரு நாள் மழை வந்ததும் ஆற்றில் நீரின் அளவு அதிகமாக வந்ததால் ஆற்றை கடந்து செல்லமுடியாமல் அவள் தவித்தாள்.

    எப்படி செல்வது என்று நின்று யோசித்தாள் கலைச்செல்வி

        எதிர்புரத்தில்  யாரோ வராங்க அவரிடம் உதவி கேட்போம். யாரோ? கேட்போம்.

        என்னங்க என்ன அந்தப்பக்கத்தில கூடிட்டு போயி விடுவீங்களா – சரிங்க

    ரொம்ப நன்றிங்க.

    உங்க பேர் என்னங்க? ஆனந்தன் என் பேர் கலைச்செல்வி சரிங்க – மீன்டும் சந்திப்போம் – வரங்க, வாங்க

    அடுத்தநாள் இருவரும் சந்தித்துப் பேசிக்கொண்டனர்.

    இப்படி தினமும் சந்தித்து வந்தார்கள்.

    இருவரும் சேர்ந்து ஒருநாள் ஊருக்குள் சென்ற போது அவர்கள் மீது மக்கள் பார்வையில் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கப்பட்டது.

    ஊரு மக்கள் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கப்பட்டதால் நாம் இனி பிரிந்து வாழ வேண்டாம் என்ற கலைச்செல்வி ஆனந்தனிடம் சொன்னாள்.

    சரி எனக்குள்ள இதுவரைக்கும் உன்மேல எந்த ஆசையுமே இல்ல, உன்னோட விருப்பம் டா.

    பிறகு ஆனந்தன் கலைச்செல்வியை தனது காட்டிற்குள் தனிமையில் சந்திக்க விரும்பினான்  கலைச்செல்வியும் சந்தித்தாள். அவர்களை அறியாமலே தவறு நடந்து விடுகின்றது. அத்தவறை கலைச்செல்வியின் தாய் மாமன் பார்த்துவிடுகிறான்.

    இதை எப்படியாவது ஊருக்குள்ள சொல்லியே ஆகனும்.

    கட்டபஞ்சாயித்துக்கு ஏற்பாடு செய்து பஞ்சாயத்தில் நிக்க வைத்து இருவரையும் கேள்விகள் எழுப்பினார்கள்.

    நீங்க ரெண்டு பேரும் காட்ல என்ன பன்ணீங்க? பேசிட்டுதான் இருந்த – என்னடா அவ ஒன்னும் பன்னலன சொல்ரா, என்ன ஆதாரம் இருக்க தப்ப பன்னத்துக்க ஒன்னு இல்லங்க ஐயா.

    ஏமா பேசரத்துக்கு எடமா இல்ல போமா வேரவேளை இருந்தா பாருங்க.

    அப்பா – ஊருக்குள்ள பஞ்சாயத்து வெச்சி என் பேர கெடுத்துடயேடி உன்ன எவன்டி கட்டிக்கப்போரான்  எங்கயாவது போய் செத்து தொலஞ்சிடு என் கண்ணுக்கு முன்னாடி இருக்காத.

    கலைச்செல்வி  ஊரவிட்டு போயிட்டா

    உறவினர்கள் – ஏன்டா நல்லா இருந்தவள இப்படி பன்னிடயடா போயி தேடுங்கடா எங்க இருக்கானு

    அத்தை – வெள்ளையம்மாள் கலைச்செல்வியை சந்தித்ததும் மகிழ்ச்சியடைந்து எங்கயாவது ஒடிபோயி பொளச்சிக்கோமா.

    இந்த என்னால முடிஞ்சது 100/- ரூபாயும், 1 பவுன் நகை ஜாகரிதியாக போயிட்டுவா – சரி அத்த

    தாய் மாமன் – எங்க மாமா அவள வெளிய அனுப்பு. இல்லடா – இப்ப அனுப்ப போரிங்களா இல்லையா, எங்கிட்ட வம்பு பன்றதுக்கே குடிச்சிட்டு வந்து இருக்கியாடா.

    சரி சரி கோச்சிக்காதிங்க கோவத்தில பேசிட்ட மாமா.

    ஆனந்தன்

        “என் இதயத்தில் தீ மட்டும் எரித்து

        உடலில் உயிர் மட்டும் வாழ்ந்து இருக்கு

        கலைச்செல்வி நீ எங்க இருக்க”

    கலைசெல்வி வெளியுர் சென்றபின் ஒரு பஞ்சு கம்பெனியில்   வேளை செய்து இருந்தாள். தங்குவதற்கு ஒரு அறையும் 5000/- சம்பளமும் கொடுத்தனர்.

    ஆனந்தன் கலைச்செல்வியை தேடி அலைந்து கிடைக்காமல் அவர் அப்பாவை சந்தித்து பேசினான்.

    ஏன்டா உன்னையே நம்பி இருந்த எம் பொண்ண ஏமாத்திடயடா

    அவள் அத்தையை சந்தித்தான் – உனக்கு என்ன அந்த பொண்ணு உன்னையே நினச்சிகிட்டுயிருக்கு, பாவம் உண்காரியத்தை முடிச்சிட்டு  கைவிட்டுட்ட

    ஆனந்தன் – “பாவம் செய்த எனக்கு பரிகாரமே இல்லையா”

    தாய் மாமனை சந்தித்தான். அவன் அவங்க மாமாவை பார்த்து பேசினான்.

    டே மாப்பிள ஆசைய காட்டி மோசம் பன்னிட்டாங்கடா தெருவில விடவேண்டியவன நடு வீட்டுல வெச்சா இப்படிதான்டா.

    ஆனந்தன் – மாமா நான் உங்க பொண்ண கட்டிக்கிறன்.

    தாய் மாமன் – மாமா உங்க பொண்ண அவனே கட்டிகிரனு சொல்லிட்டா இல்ல கட்டிகுடுத்துருங்க.

    போடா பரதேசி இப்படிதான்டா அன்னைக்கும் சொன்னிங்க

    சரி, சரி அவன நாளைக்கு 7 மணிக்கு ஐயனார் கோயிலுக்கு வர சொல்லுடா சரி மாமா.

    தண்னி அடிப்பான கேளுடா இல்ல மாமா.

    நான் போயிட்டு வரன்.

    எங்கடா போன பொண்ணு வீட்டுக்கு.

    ஆனந்தனின் அப்பா நெல் குடோனில் இருந்த பூச்சி மருந்தை குடித்துவிடுகிறார்.

    அப்பாவை மருத்துவ மனையில் சேர்த்து விட்டு ஆனந்தன் அங்கே இருந்தான்.

    ஆனந்தன் கலைச்செல்வியை பார்க்க முடியாமல் போய்விடுகிறான்.

    தாய்மாமனே திருமணம் செய்து கொள்கிறான்.

    ஆனந்தன் –  கலைச்செல்வியின் தாய் மாமனை சந்திக்க வந்ததும் இருவரையும் பார்த்து அதிர்ச்சி அடைந்துவிடுகிறான்.

    திரும்பி வீட்டுக்குச் சென்றுவிடுவான். ஆனந்தனின் அண்ணன் சிங்காரம் – சட்டையில் கைவைச்சி எங்கடா போன,  எங்கையோ போரன்டா எல்லா உன்னாலதான்டா கோவத்தில் ஆனந்தன் – அண்ணனை அடித்துவிடுகிறான். அண்ணி (வள்ளி) இதா என் புருசமேல கைவச்ச நல்லா இருக்கமாட்ட.

    ஆனந்தன் – எல்லோரும் சேர்ந்து என் வாழ்க்கையே பாழாக்கிடிங்களேடா. என்று சொல்விட்டு அவருடைய கரும்புத் தோட்டத்தில் குடித்துவிட்டு படுத்து இருந்தான்.

    அவன் அண்ணி “வள்ளி” வேறு ஒருவருடன் தொடா்புடையதை பார்த்துவிடுகிறான். வள்ளியும் ஆனந்தனை பார்த்துவிடுகிறாள்.

    ஆனந்தன் வீட்டிற்குச் செல்வதற்குள்ளே அவள் சென்று விடுகிறாள். சென்றதும் அழுது கொண்டு இருப்பாள் மாமன் ஏன்டி அளுகிற ஏங்க உங்க தம்பி என்ன கைய புடிச்சி இழுத்துடான்.

    ஆனந்தனின் அப்பா அவனிடம் எதுவும் கேட்காமலே அடித்து வீட்டைவிட்டு வெளியே போடா நாய.

    இன்னும் எத்தனபேரு வீட்டுல கைவைக்கப்போரானோ.

    மீன்டும் ஆனந்தன் இரவு வீட்டுக்கு வந்து கதவை தட்டினான் அப்பா திறந்து விடுவார், அம்மா பசிக்குதம்மா அம்மா, அவன்தான் கேக்குரான் இல்ல சாப்பாடு போடு சாப்பிட்டும். சாப்பிட்ட பின் அழுதுகொண்டே அம்மாவை பார்க்கிரான். அவன் பார்க்கிர பார்வையே வேறமாதிரி இருக்கு போட வெளியே என்று திட்டிவிடுகிறாள் தாயும்.

         “என்ன பத்துமாசம் சுமந்து பெத்தவளே

             இப்படி நினைத்துவிட்டாள் என்று”

    மருந்து குடித்துவிட்டு இறந்து விடுகிறான். அவனுடைய நண்பன், அப்பா, அம்மா, உறவினர்கள் ஆகியோர் அழுது கொண்டு இருந்தார்கள்.

    பெத்த மகன சொல்லி வழத்தாம விட்டுட்டு அழுது என்னப் பன்றது,

    ஊா் மக்கள் இன்னும் என்ன ஆக வேண்டிய காரியங்களை பாருங்க.

    நண்பன், டே போங்கடா எனக்குத் தெரியும் என்ன பன்னனும் என்று ஆனந்தனை எரித்துவிட்டு வீடு திரும்பும்போது அம்மாவை பார்த்து அவன் சொன்னான். மீண்டும் மரறுஜென்மத்துல எனக்க மகனா பிறந்து வருவான்.

    Share
  • குட்டக் குட்டக் குனியும்போது

    நிர்மலா ராகவன்

    பத்திரிகையில் பெயர் வந்துவிட்டால், புகழ் வருகிறதோ இல்லையோ, எல்லாருக்கும் பொறாமை வருகிறது. என்னமோ பத்திரிகைக்காரர்கள் கொட்டிக் கொடுத்து, அந்த சன்மானத்தில் நாலு பங்களா வாங்கிப் போட்டுவிட்ட மாதிரிதான்! இந்த மனிதர்களை எண்ணி அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை இந்திராவுக்கு.

    இருபத்தைந்து ஆண்டுகளாக புனைப்பெயரிலேயே எழுதி தன்னை மறைத்துக் கொண்டவளின் போதாத காலம் ஏதோ போட்டியில் பரிசு கிடைத்து, புகைப்படம் மூலம் அவள் முகமும், அத்துடன் சொந்தப்பெயரும் எல்லாருக்கும் அறிமுகமாகிவிட்டது.

    பரிசு வாங்கியதில் தன்னம்பிக்கை துளிர்த்தது. துணிந்து, சமூகத்தின் குறைகளைச் சுட்டிக்காட்ட ஆரம்பித்தபோதுதான் பிடித்தது சனி.

    இவள் பெண்களுக்குச் சமத்துவம் கேட்கப்போய், எல்லாப் பெண்களும் விழித்துக்கொண்டு, அப்புறம் நம்மையே குப்புற வீழ்த்தி விடுவார்களோ என்று பயந்தார்கள் ஆண் வாசகர்கள்.

    பயம் இருப்பவன்தான் பயங்கரமானவனாக ஆகிறான் என்று எங்கோ படித்தது இந்திராவுக்கு நினைவு வந்தது.

    அடங்கிக் கிடப்பதுதான் பெண்ணாகப் பிறந்ததன் பயன் என்றெண்ணிய பெண்களோ, `இவள் என்ன நம்மை மட்டம் தட்டுவது!’ என்று ஆத்திரம் அடைந்தார்கள்.

    யாராவது மிகுந்த பலம் அடைவதற்குள் எப்படியாவது வீழ்த்திவிட வேண்டும் என்று எல்லாருமே கங்கணம் கட்டிக்கொள்கிறார்கள். சிலர், வெளிப்படையாக எதுவும் செய்யத் துணிவின்றி, புகழ்வதுபோல, தந்திரமாகக் குழிபறிக்கிறார்கள்.

    எவனுக்கோ இவள் தலையெடுத்தது பிடிக்கவில்லை. இல்லாவிட்டால், நாற்பது வயதான, ஒரு பெண்ணுக்கும் தாயான இவள் பெயருக்குமுன்  `மிஸ்` போட்டு கடிதம் எழுதியிருப்பானா?

    `அது எப்படி கண்ட தடியனெல்லாம் என் பெண்டாட்டிக்கு கடுதாசி எழுதப்போச்சு!’ என்ற கோபத்தைவிட, எழுதின முட்டாள் `மிஸ். இந்திரா’ என்று விலாசத்தில் எழுதியிருந்ததுதான் கதிரேசனது ஆத்திரத்தைக் கிளப்பிவிட்டது.

    “உன்னையெல்லாம் காலை ஒடைச்சு, வீட்டிலேயே  வைக்கணும். பெரிய மனசு பண்ணி, வேலைக்குப் போக விட்டிருக்கேன்ல? சம்பாதிக்கிற திமிரு! அதான் கொழுத்துப் போச்சு!” என்று ஆரம்பித்தவன், என்னமோ இவள் தானாகப்போய் எவனுடனோ கள்ள உறவு வைத்துக்கொண்டதுபோல பேயாட்டம் ஆடினான்.

    அடுத்து என்ன நடக்கும் என்று புரிந்து போயிருந்தாலும், கணவனுக்கு எதிர்பேச்சு பேசாது, அடங்கிப்போவதுதான் ஒரு நல்ல மனைவியின் தர்மம் என்று வளர்க்கப்பட்டு இருந்ததால், பலியாடுபோல் எதற்கும் தயாராக நின்றாள்.

    தாயின் வீங்கிய முகத்திலும் உடலிலும் ஒத்தடம் கொடுத்தபடி வசந்தா பேசினாள்: “இன்னும் எத்தனை நாளைக்கும்மா இப்படி அடிபட்டு சாகப்போறீங்க? நீங்கதான் சுயமா சம்பாதிக்கிறீங்களே! எங்கேயாவது தனியா போயிடறது!”

    உலகம் புரியாத மகளைக் கனிவுடன் பார்த்தாள் இந்திரா. கல்யாணத்திற்கு நிற்பவள்!

    ஒரு பெண் கணவனிடம் படும் அவதியைப் பற்றி யாருக்கு என்ன  அக்கறை! `பொண்ணுக்கு அம்மா சரியில்லையாமே!’ என்றுதான் மற்ற எல்லாப் பெண்களும் வம்பு பேசுவார்கள்.

    பிறர் கிடக்கட்டும், தனக்கேகூட பயமாகத்தான் இருக்கிறது. ஒரு பெண் இந்த உலகத்தில் தனியாக இருக்க முடியுமோ? `ஆண் என்னும் கொழுகொம்பில் படருபவள்தான் பெண் என்னும் மெல்லியலாள்’ என்று சினிமா, கதைப்புத்தகங்கள் மூலம் நம்ப வைத்து விட்டார்களே!

    சரி, கொடுமைக்காரரான இவரை விட்டுவிட்டு, வேறு ஓர் ஆணைத் தேடிக்கொள்ளலாம்தான். அவன் மட்டும் நல்லவனாக இருப்பான் என்பது என்ன நிச்சயம்?

    தீர்மானிக்க முடியாததோர் எதிர்காலத்தைவிட கசப்பான நிகழ்காலத்தையே பொறுத்துப் போகலாம் என்றுதான் விரக்தியுடன் எவ்வளவோ இம்சையைத் தாங்கி வந்திருக்கிறாள். எல்லாம் இந்தப் பெண்ணுக்காகத்தானே! அது புரிகிறதா இவளுக்கு!

    “அப்பா முந்தியெல்லாம் இப்படியா இருந்தாரு! நம்ம போதாத காலம், குடிச்சுட்டு காடியை எவன்மேலேயோ ஏத்தி, லைசன்சு போயிடுச்சு. என்னடா, தனக்கு வேலை போயிடுச்சே, பொண்டாட்டி சம்பாதிச்சுக் கொண்டு வர்ற காசில சோறு திங்க வேண்டியிருக்கேன்னு அவமானம், பாவம்! அவரோட கோபத்தையும், வருத்தத்தையும் வேற யார்மேல காட்ட முடியும், வசந்தா?”

    ஆனால், தன் சமாதானத்தை மகளால் ஏற்க முடியவில்லை என்பது புரிந்தது. மகள் தந்தையைத் தவிர்ப்பதையும்,`நான் கல்யாணமே செய்துக்கப் போறதில்லே! அதான் ஃபேக்டரி வேலைக்குப் போறேனே!’ என்று திமிராகப் பேசுவதையும் பார்த்து இந்திராவுக்குப் பயம் வந்தது.

    `இந்த காலத்துப் பெண்கள் நம்மைப்போல கையாலாகாத அசடுகள் இல்லை!’ நினைக்கும்போதே பெருமிதம் ஏற்பட்டது.

    `பெண்கள் சுதந்திரமாக வாழ வேண்டும்,’ என்று அடிக்கடி எழுதிய தன்னுடைய தைரியம் எல்லாம் எழுத்தோடு சரி.`கணவன் செய்யும் எல்லா கொடுமையையும் பொறுத்துப் போகிறவள்தான் நல்ல பெண்!’ என்பதுபோல் அல்லவா நடந்துகொள்கிறோம்!

    இனியாவது ஊருக்கு உபதேசம் செய்து கொள்வதோடு நிற்காமல், தான் சொல்லி வருவதைத் தானே கடைப்பிடிக்க வேண்டும். இப்படித் தீர்மானம் செய்து கொண்டாலும், சிறிது பயமும் எழுந்தது இந்திராவுக்குள்.

    அன்று சம்பள நாள்.

    மனைவிக்காக வீட்டு வாசலிலேயே காத்திருந்தான் கதிரேசன்.

    “கொண்டா!” அவனது நீட்டிய கையை லட்சியம் செய்யாது, உள்ளே நடந்தாள் இந்திரா.

    நாராசமாகக் கத்தியபடி அவன் அவளைப் பின்தொடர்ந்தபோது, சமையலறையிலிருந்து எட்டிப் பார்த்தாள் வசந்தா. அவள் கண்கள் பயத்தில் விரிந்தன.

    அவ்வளவுதான். இந்திராவுக்கு எங்கிருந்தோ ஆவேசம் வந்தது. கைப்பையை இறுக அணைத்துக் கொண்டாள். “நான் ராப்பகலா வேலை பாக்கிறதில கிடைக்கற காசு இது! ஒங்களுக்கு எதுக்குக் குடுக்கிறது!”

    வழக்கத்துக்கு விரோதமான அந்த எதிர்ப்பில் கதிரேசன் சற்றே அயர்ந்து போனான். பிறகு, வெறியுடன் அவள்மேல் பாய, அதை எதிர்பார்த்தவளாக, சட்டென விலகினாள். தாவிய வேகத்தில் சுவற்றில் தலை மோதி, கீழே விழுந்தான்.

    சமாளித்தபடி எழுந்திருக்கப்போனவனை இந்திராவின் குரல் தாக்கியது. “சும்மா அப்படியே ஒக்காருங்க. நீங்க பாட்டில எல்லா காசையும் தண்ணியில விட்டுட்டா, வசந்தாவுக்கு ஒரு கல்யாணம், காட்சின்னு எப்படி செய்யறது?”

    “என்னமோ, வசந்தா வசந்தாங்கறியே! நானில்லாட்டி ஒம்பொண்ணு எப்படி வந்திருக்கும்!”

    இந்திராவின் உதடுகள் அலட்சியத்தில் விரிந்தன. `பிள்ளை பெத்துக்க எந்த ஆம்பளையா இருந்தா என்ன! கற்பழிப்புகூடத்தான் கருவில வந்து முடியுது!’ என்று அவள் நினைப்பு ஓடியது. வெளியில் சொல்வது அசிங்கம் என்று அடக்கிக்கொண்டாள்.

    “இதோ பாருங்க! வேலைவெட்டி எதுவும் இல்லாத ஒங்களை வெச்சு சோறு போடறேன் — நீங்க தாலி கட்டின தோஷத்துக்கு. அதுக்கு மீறி, என்மேல ஒங்க கை பட்டுச்சோ, போலீசுக்குப் போயிடுவேன். பொண்டாட்டியை அடிக்கிறது `குடும்ப விவகாரம்’ னு இப்ப யாரும் ஒதுங்கிப் போறதில்ல. நம்ப மலேசிய நாட்டில இது சட்ட விரோதம். தெரியுமில்ல?”

    வசந்தாவின் முகத்தில் ஓர் ஆச்சரியக் குறி. கண்ணில் மின்னல் கீற்று தோன்றி மறைந்தது நன்றாகவே புலப்பட்டது. தனக்குக்கூட தைரியம் வந்துவிட்ட பெருமையில், தலை நிமிர்ந்து உள்ளே நடந்தாள் இந்திரா.

    கதிரேசன் நிலைகுத்திப்போய் உட்கார்ந்திருந்தான்.

    `என்ன பொண்ணு நீ! புருஷனுக்கு மரியாதை குடுத்து நடக்கத் தெரியாது?’ ஏதோ தலைமுறையைச் சேர்ந்த எவளோ கூறியது அசரீரியாகக் கேட்டது.

    இந்திரா உதட்டைச் சுழித்தாள். “மரியாதை எல்லாம் குடுத்து வாங்கற சமாசாரம்!” உரக்கவே சொன்னாள்.

    Share
  • வேடனும் ஒரு குயிலும்

    க.பிரகாஷ்

                ஓர் அடர்ந்த காடு, அக்காட்டினுள் ஒரு பெரிய வீடு, அவ்வீட்டினுள் ஒரு வேடன். அவ்வேடனுக்கு மக்களோடு சேர்ந்து வாழ விருப்பம் இல்லாமல் காட்டிற்குள் வாழ வந்துவிட்டான். அப்படி வந்த அவனுக்கு அக்காட்டில் வேட்டையாட ரொம்ப நாளா ஆசை.

    என்ன ?

    தனியாக இருக்க வேண்டும்.

    ஏன்?

    காட்டில் இருக்கும் விலங்குகளைக் கண்டு ரசிக்கவேண்டும், அதனோடு, பேச வேண்டும் அதனை வேட்டையாடவேண்டும்.

     சரி!

    இருந்தாலும் அவனுக்கு கொஞ்சம் பயம், அதனால் அவன் வீட்டைச் சுற்றி வேலியமைச்சு. விலங்குகள் இடம் இருந்து பாதுகாப்பாக இருந்தான்.

    முதல் நாள் – வேட்டையாடுவதற்காக காட்டிற்குள் சென்றான் அன்று முழுவதும் சுற்றி திரிந்து எந்த விலங்குகளையும் பார்க்காமல் ஏமாந்தான் வேடன்.

    இரண்டாவது நாள் – ஆயூதங்களை எல்லாம் எடுத்துக்கொண்டு காட்டிற்குள் புகுந்தான். புகுந்தவுடனே அவன் கண்ணுக்கு பாம்பு தென்பட்டது. பாம்பைப் பார்த்து வேடன் கூறினான் போகும் போது முதலில் உன்ன தான் பாக்கணுமா, டே முட்டாள் என்ன பாக்குரது இருக்கட்டும், இப்படி ஒவ்வொரு நாள் காட்டுக்குப் போராயே யார பாக்க, தெரியலையே, முதல்ல அத முடிவு செய்யடா,

    மூன்றாவது நாள் – தன்னிடம் இருந்த ஆயூதங்களை குறைத்து விட்டு மீண்டும் காட்டிற்குச் சென்றான்.  வெகு தூரம் நடந்து விட்டான், எதையும் பார்க்க முடியலயே என்று வருத்தம் ஒருபக்கம், தண்ணீர் தவிப்பு ஒருபக்கம் என்ன பன்றதுன தெரியாமல் ஒரு மரத்தடியில் உட்கார்ந்துவிட்டான். உட்கார்ந்த கொஞ்ச நேரத்தில மயங்கிவிட்டான். அந்த மரத்தில் இருந்து ஒரு குரங்கு கிழே இரங்கி அவனை எழுப்பிப் பார்த்தது எந்திரிக்கவேயில்ல, பாவம் என்ன பண்ரதுனே தெரியல, அவன் அருகில் ஒரு காகிதப் பை  இருந்தது, அதை எடுத்து அருகாமையில் ஒரு ஆறு ஓடி கொண்டு இருக்கின்றது. அந்த ஆற்று தண்ணீரை காகித பையில் எடுத்துக் கொண்டு வந்து அவன் மேல் தெளித்தது. அவன் மெல்ல மயக்கம் தெளிந்த பிறகு அந்த தண்ணீரைக் குடித்தான். வேடனைக் கண்டு குரங்கு கூறியது, ஏன் இவ்வளவு கஷ்டப்படுற.

    நான்காவது நாள் – ஆயூதங்களே இல்லாமல் தண்ணீர் குடவையுடன் மீண்டும் காட்டிற்குச் சென்றான். இன்றாவது வேறு திசை மாறி போவும் என்று நினைத்து திசை தெரியாமல் ஓர் இடத்தில் உட்கார்ந்து விட்டான். இனி என்னால் நடக்க முடியாது கால் வலி அதிகமாயிடுச்சி, பசியொருப்பக்கம் என்ன செய்வது என்று தெரியல பொழுதாயிட்டே இருக்கு, சரி! நடப்போம், கொஞ்ச தூரம் நடந்தவுடன் ஆற்றை பார்த்துவிடுவான். பசியை போக்குவதற்க்கு மீன் பிடித்து சுட்டு சாப்பிட்டு பசியை போக்கினான். பொழுதாயிடுச்சி, மழ வேர வரமாதிரி இருக்கு சரி! போவோம் மழ வந்தா பாக்கலாம், இரவுமாகிவிட்டது. ஒரு பாரை குகையைக் கண்டதும் அங்கே ஒதுங்கிடுவான். மழைவந்ததும் அந்த இடத்தில் வாழும் நரி ஒன்று வந்ததது. வேடனை கண்டதும் பரிதாபப்பட்டது. சரி! இருக்கட்டும் விடு என்று நினைத்துவிட்டு வேடனை பாதுகாக்க வெளியே காத்து கொண்டு இருந்தது. வேடன் ஆச்சரியப்பட்டான். நரி கூறியது திசை தெரியாமல் வந்தால் திசை தெரியாமல் போயிடுவ மகனே!

    ஐந்தாவது நாள் – நடு காட்டில் இருந்து மீண்டும் அவனது வேட்டையை தொடர்கிறான். அதிசயமாக ஒரு மானைப்  பார்த்தான், அம்மானை எப்படியாவது கொன்று விடவேண்டும் என்று துடித்தான். பின்னாடி ஒரு மான் இருப்பதைப் பார்த்துவிட்டு அம்மான் மீது வைத்த குறியை தப்பிவிடுகிறான். டே வேடா! அது இரண்டும் உறவாடுகிறது அதைப் போய் கொல்ல நினைக்கிறயேடா.

    சரி! சரி!

    ஆறாவது நாள் – அக்காட்டில் இருந்து வேறு காட்டிற்குச் சென்று விட்டான். அக்காட்டில் வழி தெரியாமல் முள் புதரில் மாட்டிக் கொண்டான். அவன் சத்தமிட்டதைக் கண்டு யானை ஓடி வந்தது, பரிதாபத்துடன் வேடனுக்கு யானை உதவியாக இருந்தது. வழி சேர்த்த யானைக் கூறியது முடியாத வேலைய ஏன்டா முயற்சிக்கிற.

    ஏழாவது நாள் – வேடன் அவன் வீட்டை நோக்கி பயணம் செய்தான். இந்த ஆறு நாட்கள் விலங்குகளை வேட்டையாடி நான் ஏமாந்து விட்டேன். இன்று ஒருநாளாவது பறவைகளை வேட்டையாடுவோம். என்று மனதில் நினைத்துவிட்டு வேட்டையைத் தொடர்கிறான்.

    ஓர் உயர்ந்த தென்னை மரத்தைக் கண்டு கிளிகள் ஓடியது, அவனும் ஓடினான் கிளிகள் அம்மரத்தின் பொந்தில் நுழைந்தது சிறிது நேரம் கழித்து சத்தமிட்டது. வேடன் மரத்தின் அடியில் உட்கார்ந்து விட்டு வேடிக்கைப் பார்த்து கொண்டு இருந்தான்.

    கிளி வேடனைப் பார்த்துக் கூறியது, டே முட்டாள் நீ ஓடி வந்து பிடிப்பதற்கு உன்னை போல் நான் வேடன் அல்ல. வேடிக்கையாளர் டா என்ன வேடிக்கை மட்டும் தான் பார்க்க முடியும் என்று.

    மீண்டும் வேடன் ஏமாந்தான். தொடர்ந்து வழியில் கூட்டம் கூட்டமாக புறாக்களைக் கண்டு மகிழ்ச்சியடைந்தான். இன்று தான் நான் நினைத்த அளவிற்கு வேட்டையாடப்போகிறேன் என்று மகிழ்ச்சியாக புறாக்கள் உட்கார்ந்த இடத்தில் ஒரு வலையை வீசிவிட்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருந்தான். ரொம்ப நேரமா ஒரு புறாவ கூட காணம், பொழுதுவேற ஆயிடுச்சு என்ன பன்னரது தெரியல, இதுங்கெல்லாம் எங்கடா போயிருக்கும், சரி! சரி! வருட்டும் இன்னும் கொஞ்ச நேரம் இருப்போம். பொழுதுவேற சாஞ்சிறுச்சி ஒரு புறா மட்டும் வருது, அந்த புறாவை பாத்துட்டு எங்க போவுது, அதைப் பாக்கலாம். அந்தப் புறா போயும் ரொம்ப நேரமாச்சி கூடுல அடங்கியிருக்குமா என்று நினைத்து விட்டு சென்று அந்த இடத்தைப் பார்க்கிறான். பெரிய கிணறா இருக்கு எல்லா புறாவும் இங்கதா அடங்கியிருக்கா சரி! சரி! பொழுது சாஞ்சிடுச்சி இங்கே இருக்கலாம். காலையில எழுந்து எல்லா புறாவையும் பிடிச்சிட்டு போயிடலாம்.

    காலையில எழுந்து பார்த்தான் ஒரு புறாகூட இல்ல. வேடனைப் பார்த்து ஒரு புறாக் கூறியது டே!  ஒரு விலங்கவே உன்னால பிடிக்கமுடியல எங்கள எப்படி பிடிக்கமுடியும் உன்னால,

    எட்டாவது நாள் – ஒரு வாரம் சுற்றி திரிந்து எதுவும் பிடிக்கவில்லை இன்று எதையாவது பிடிச்சிட்டு போலாம். தொடர்கிறான், மீண்டும் அந்தப் பாம்பைச் சந்திக்கின்றான். அதை பார்த்து மறுபடியும் உன்னையே பார்குரன், இன்னைக்கு பொழப்பு அவ்வளவுதான்.

    சரி! சரி! நீ எங்க போரனு பாக்குரன்.

    பெரிய மரத்தில் குயில் கூவுது, காகம் கரைந்து கொண்டு இருந்தது. வேடன் பார்கிறான் குயிலும் கூவுகிறது, காகமும் கரைகிறது என்னவா இருக்கும் சரி இருக்கட்டும். இந்தப் பாம்பைப் பார்ப்போம், அட அதுக்குள்ள எங்கடா போச்சி, மீண்டும் காகமும், குயிலும் சத்தமிட்டது. அம்மரத்தை மீண்டும் பார்க்கிறான். பார்த்ததும் ஆச்சிரியப்படுகின்றான். இரண்டுக்கும் இடையில் இருக்கின்றாயே யாருக்கு இறையாகப்போரயோ ?

    வேடன் குயிலைப் பார்க்கின்றான், குயிலும் வேடனைப் பார்க்கின்றது. காகம் குயிலை பார்க்க, குயில் பாம்பைப் பார்க்கின்றது , குயில் காகத்தை பார்க்க, காகம் வேடனைப் பார்க்கின்றது. இப்படி பார்க்க எல்லோருக்கும் டாட்டா காட்டிவிட்டது பாம்பு.

    வேடனைப் பார்த்து குயில் கூறியது. நீ கெட்டு என்ன பார்க்க, நான் கெட்டு காகத்தைப் பார்க்க, அதுவும் கெட்டு உன்ன பார்க்க – இப்படி எல்லாத்தையும் கெடுத்து நீயும் கெட்டு போரயே! இது உனக்கே ஞாயமா?

    பாம்பு  – வேடனைப் பார்த்து சொன்னது. முதலில் நீ நினைத்து வந்த காரியம்  உறுதியாக இருக்கவேண்டும். உன் மீது நம்பிக்கை வை அப்பதான் வாழ்க்கையில உருப்படியாவருவ. என்ன நம்பிக்கை – ம் – இதுவே தெரியல நீ எல்லாம் எங்க உறுப்பட போர “தன்னம்பிக்கை”

    Share
  • இன்றைய குடிமகன்

      கிருத்திகா கீர்த்தனா

    ‘காலேஜ் விட்டதும் முதலில் யாழினியைப் பார்க்க வேண்டும்’ மனதுக்குள் எண்ணியவனாக அரைகுரையாக பாடத்தைக் கவனித்துக்கொண்டிருந்தான். கல்லூரி முடிந்ததும் யாழினியே கௌதமை பார்க்க வந்துவிட்டாள்.

    மாலை வெயிலின் தாக்கம் இல்லாமல் குளிர்காற்றை வாரி வழங்கி கொண்டிருந்தது, வேப்பமரம். அதன் கீழ் அமர்ந்து இருவரும் மாற்றி மாற்றி யோசித்து கொண்டிருந்தனர்.

    “கௌதம், நாம கண்டிப்பா வீட்டை விட்டுப் போகனும….? இன்னொரு முறை யோசிச்சுப் பாரேன்”

    “இல்லை, யாழினி. நான் பலதடவை யோசிச்சுப் பார்த்துட்டேன்…… இதைத் தவிர வேற வழி இல்ல……”

    “இருந்தாலும்… அப்பாகிட்ட நாம பேசி புரிய வைக்க முடியாதா?.. நாம போனபிறகு அவர் இதே மாதிரி மனசை மாத்திக்காமல் இருந்தா என்ன செய்றது…… அம்மாவுக்கும் இதனால பிரச்சனை வரலாம்….”

    “நீ இனிமே இதப் பத்தி பேசாத….. நான் முடிவு பண்ணிட்டேன்….நாளைக்கு நாம கிளம்பறோம்….உனக்கு தேவையானதெல்லாம் எடுத்திட்டு தயாரா இரு…….”

    “ம்ம்ம்……….. நீயும் அப்பாவப்போலவே பிடிவாதமா இருக்க….. நாளைக்கு சாயந்திரம்   5 மணி ட்ரெய்னுக்கு கிளம்பிடலாம்….”

    ”இதுதான் சரி…..இப்ப வா வீட்டுக்குப் போகலாம்…”

     மறுநாள்…  யாழினி வீட்டில்…..

    யாழினியின் அப்பா, முருகானந்தம் கண்களில் வருத்தம் நிரம்ப எதையோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். அம்மா, சிவகாமி செய்வதறியாமல் நின்று கொண்டிருந்தாள். எதிர்பாராதவிதமாக யாழினியின் அறையில் ஏதோ எடுக்கச் சென்றவரின் கைகளில் அந்தக் கடிதம் கிடைத்தது.

    “அப்பா, நான் உங்களை ஏமாற்றிவிட்டுச் செல்வதாக நினைக்க வேண்டாம். உங்களின் பிடிவாதத்தை மாற்ற நான் எடுத்துக் கொண்ட சிறிய முயற்சியே இது.. கௌதமும், நானும் உங்களின் முடிவுக்காக காத்திருக்கிறோம். உங்களிடம் இருந்து நல்ல முடிவு வரும் வரை காத்திருப்போம். ஆனால் உங்கள் முடிவை மாற்றிக்கொள்ளவில்லை என்றால் நாங்கள் திரும்பி வர மாட்டோம்…. இது உறுதி. எங்களைத் தேட வேண்டாம். உங்கள் முடிவே, எங்களை உங்களிடம் கொண்டு வந்து சேர்க்கும்”

                                                          இப்படிக்கு,

    உங்கள் பாசத்திற்குரிய மகள்

             யாழினி….

             கடிதத்தைப் பார்த்ததில் இருந்து,  “இனியும் உங்களை புரிஞ்சிக்கலைனா, நான் ஒரு நல்ல அப்பாவா இருக்க முடியாது. இனி எந்தக்காலத்திலும் குடிக்க மாட்டேன்… இது சத்தியம்.. நீயும், கௌதமும் திரும்பி வந்துடுங்கம்மா….குடிப்பழக்கத்தால என் குடும்பம் சீரழியறத நான் இனி அனுமதிக்க மாட்டேன்”, எனக் கதறிக் கொண்டிருந்தார்.

    சிவகாமியும் கண்களில் நீர் அரும்பியவளாக, “நீங்கள் எடுத்த முடிவு அவங்களை நம்மகிட்ட கொண்டு வந்து சேர்க்கும்….. நீங்க மனசை தளர விடாதிங்க…..அவங்க நிச்சயம் வந்துடுவாங்க…..” என ஆறுதல் கூறினாள்.

    அவர் உண்மையாகவே திருந்திவிட்டார் எனப் புரிந்து கொண்டாள். அவருக்கு தெரியாமல் ரூமுக்குள் சென்று கதவைத் தாளிட்டாள். கௌதமுக்கு போன் செய்தாள்.

    “ஹலோ…… கௌதம் நான் அம்மா பேசறேன்…….நீயும் உன் அக்கா யாழினியும் உங்க பெரியப்பா வீட்லருந்து கிளம்பி காலைல வந்துடுங்க……..உங்கப்பா உண்மையிலே மனசு மாறிட்டார்…..’இனி நான் குடிக்கவே மாட்டேன்’னு சத்தியம் பண்ணுனார்……நீ போட்ட ப்ளான் நல்லா வேலை செய்யுது…..”

    ”அம்மா… என்ன சொல்றீங்க….. நீங்க சொல்றது உண்மையா….. இதுக்காகத்தான நானும் அக்காவும் இவ்வளவு சிரமப்பட்டோம்.. நாளைக்கு காலைல வீட்டுக்கு வந்துடுவோம். இங்க பெரியப்பாகிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டோம்…

    அப்பாவை குடியை நிறுத்தச் சொல்லி எத்தனையோ தடவை கேட்டுப் பார்த்தாச்சு…. கேட்கவே இல்லை. அவர் எங்க பேச்சைக் கேட்கலைனாலும் எங்க மேல அவருக்கு பிரியம் ஜாஸ்தி…. அதனாலதான் நாங்க இந்த மாதிரி ப்ளான் பண்ணுனோம்… அதாவது அவரை விட்டுட்டு போயிடுவோம்னு ஒரு பயத்தை ஏற்படுத்துனோம். இப்ப அதனாலதான் அவர் மனசு மாறியிருக்கார்…

    இத விட சந்தோசம் நமக்கு வேற என்ன வேணும்….

    இருந்தாலும்… நாங்க ஏதாவது தப்பு பண்ணியிருந்தா மன்னிச்சிடுங்க அம்மா……”

    “அதெல்லாம் ஒண்ணும் இல்ல…. என் பிள்ளைங்க எப்பவும் தப்பு பண்ண மாட்டாங்கனு தெரியும்…. ஆனா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி போன் பண்ணி இது உங்க ப்ளான்னு என்கிட்ட சொல்லாம இருந்திருந்தா…. நான் என்ன ஆகிருப்பேன்னு எனக்குத் தெரியல….”

    “உங்களுக்கு ஒன்னும் ஆகாதும்மா…… அப்புறம் இந்த ப்ளானப் பத்தி அப்பாவுக்குத் தெரிய வேண்டாம்…..”

    “நான் எதுவும் சொல்லல…..நீங்க சீக்கிரம் வந்துடுங்க….”

    “சரிமா…. நான் போனை வைக்கிறேன்…”

    இன்றைய குடிமகன்களை திருத்த இன்றைய குடிமகனின் திட்டம்…!!!!!!!!

    Share
  • கூறாமல் சன்யாசம் கொள்

    தமிழ்த்தேனீ

    வரவர யாருமே என்னை மதிக்கறதில்லே. எனக்கு ஒண்ணுன்னா துடிச்சுப் போற இதயங்கள் இப்பல்லாம் எனக்கு என்ன ஆனாலும் கவலைப்படாமே பாத்து நடக்கணும் மெதுவா போகணும் கவனமா இருக்கணும் இப்பிடியெல்லாம் வார்த்தையாலே கொல்றாங்களே!

    எங்க அடிபட்டுதுன்னு ஆதரவாக் கேக்க ஆளில்லே. மனுஷனுக்கு மதிப்பில்லாம போனா அதுக்கப்புறம் உயிர் வாழறது எதுக்கு எல்லாமே வீண்.

    எப்பவுமே எனக்குத் தெரிந்தவற்றில் கூட வீட்டிலுள்ளோரை மதித்துக் கருத்துக் கேட்டு அவர்கள் சொல்வது நியாயமாக இருந்தால் ஏற்றுக் கொண்டு செயல்படும் என் குணத்தையும் மதிக்காமல் நான் எது செய்தாலும் அதிலே தலையிட்டு அபத்தமாக ஒரு யோசனையைச் சொல்லி அதை நான் ஏற்காவிட்டால் என்னைக் கோவப்படுத்தி கத்தவைத்து என்னை உணர்ச்சி வசப்படச் செய்து கத்தவைத்துவிட்டு எதுக்கெடுத்தாலும் கத்தறான் என்று என்னை ஏசுவதே இவர்கள் பிழைப்பாகிவிட்டது
    மத்தவங்களை விட்டுத் தள்ளுங்ககொண்ட இவ்வளவு வருஷம் பழகியும் பொண்டாட்டியும் என்னைப் புரிந்து கொள்ளாத துரதிருஷ்டசாலி நான் அவளுக்கு புரியவைப்பதற்குள் என் ஆவி கொஞ்சம் கொஞ்சமாக குறைவது எனக்குத் தெள்ளத் தெளிவாக புரிகிறது. அதை வெளிப்படையாக எடுத்துச் சொல்லியும் மீண்டும் மீண்டும் என்னைச் சீண்டி வம்புக்கிழுப்பதைக் குறைத்துக் கொள்ளவே இல்லை அவள்இப்படி இருக்கும் நிலையில் என்ன செய்வது.எப்பேர்ப்பட்ட ஞானிகளெல்லாம் சொல்லி இருக்காங்க கூறாமல் சன்யாசம் கொள்ளுன்னு. முடிவாகத் தீர்மானித்தார் சபேசன். சரி எங்காவது போய்விடலாம் எனும் முடிவு எடுத்த பின் மனம் அமைதியாய் ஆயிற்றுஎங்கே போவது என்று எண்ணிப் பார்த்தால் அது ஒரு பெரிய சவாலாக தோன்றிற்று. எங்கே போவது எப்படிப்பட்ட விடையில்லாத கேள்வி உறவுக்காரங்க கிட்ட போக முடியாது நாலு நாளைக்கு மரியாதையா நடத்துவாங்க அப்புறம் என்ன ஆகும்னு அவருக்குத் தெரியாதா சரி நண்பர்கள் வீட்டுக்கு போயிடலாம்னு பாத்தா யாரு நம்மோட நலன் விரும்பியா உண்மையான நண்பனா இருக்கான். அப்பிடியே இருந்தாலும் நண்பனோட மனைவி பிள்ளைகள் நம்மை எப்படி ஏற்பார்கள் அதுவும் சரிப்படாது.

    அப்போ எங்கேதான் போறது அட எங்கேயும் போக முடியாது நமக்கென்று யாருமில்லை என்னும் உண்மை நெஞ்சில் கசந்து வழிந்தது

    அட என்னடா உலகம் இது இவ்வளவு பெரிய உலகத்திலே நமக்கு போக்கிடமே இல்லையே. என்னாத்தை பொறந்து வளந்து படிச்சு வேலைக்குப் போயி சொத்து சேர்த்து கல்யாணம் செஞ்சிகிட்டு புள்ளை குட்டிகளைப் பெத்து எதுவுமே ப்ரயோசனம் இல்லே. இப்போ என்னதான் செய்யறது

    கோடிக்கணக்கான மக்கள் இருந்தாலும் அவர்கள் நடுவே தனியாய் இருக்க முடியவேண்டும் தனியாய் இருந்தாலும் கோடிக்கணக்கான மக்கள் இடையே இருப்பதைப் போல வாழத் தெரியவேண்டும் என்று தோன்றியது

    அது சரி மனசிலே தோண்றதெல்லாம் செயல்பாட்டில் எவ்வளவு கடினம் எப்படிச் செயல் படுத்துவது யோசிக்க யோசிக்க மண்டை காய்ந்தது. என்னதான் தீர்வு

    அட கூறாமல் சன்யாசம் கொள் அப்பிடீங்கற கருத்துக்கு வேற பொருள் இருக்குமோ ஆமாம் இப்படி யோசிக்கலாமே கூறாமல் யாரிடமும் நான் சன்யாசியாக ஆகப் போகிறேன் என்று அறிவிக்காமல் சன்யாசம் கொள்ளலாம்

    சன்யாசம் கொள்வது என்றால் என்ன?எல்லாவற்றையும் துறத்தல் என்று பொருள் வருகிறது. எல்லாவற்றையும் துறக்கலாம் ஆனால் இந்த மனதை எங்கே தொலைப்பது அதுதானே இவ்வளவு பாடு படுத்துகிறது

    மனதைத் துறக்க என்ன செய்வது முதலில் ஒன்றைத் துறக்க அதைப் புரிந்துகொள்ள வேண்டுமே எப்படி மனதைப் புரிந்து கொள்வது நம்முடைய மனதை நாமே புரிந்து கொள்ள இயலாத நிலையில் அடுத்தவர் மனதை எப்படிப் புரிந்துகொள்ள முடியும். இதற்கு தீர்வே இல்லையா

    சரி புரிந்துகொண்டுதான் துறக்க வேண்டுமா புரிந்தாலும் புரியாவிட்டாலும் துறக்கலாமே என்றது மனது. அட இப்போதும் இந்த மனது விழித்துக் கொண்டே இருக்கிறது யோசனை வேறு சொல்கிறது

    எப்போதுமே தளராமல் யோசனை சொல்லிக் கொண்டே இருக்கும் இந்த மனதைத் துறப்பது அவ்வளவு எளிதல்ல என்பது புரிந்தது.

    சரி துறக்க வேண்டாம் இந்த மனதில் ஆழ்ந்துவிட்டால் அட இது நல்ல யோசனையாகத் தெரிகிறதே. சரி வெளி உலகத்தை மறந்து இந்த மனதில் ஆழ்ந்துவிடுவோம். அதுதான் சரியான வழி என்று உணர்ந்து உள்ளே பார்க்கத் தொடங்கினார் அவர்.

    கண் விழித்துப் பார்த்த பொழுது அவரைச் சுற்றி ஏராளமான மக்கள் அவருக்கு தங்க சிம்மாசனம் தலையிலே கிரீடம். அவர் வாய் திறக்க மாட்டாரா என்று ஏங்கும் மக்கள் கையைத் தூக்கி ஆசீர்வதிக்க மாட்டாரா என்று ஏங்கும் மக்கள் அவர் கண்ண்ணால் ஒரு முறை பார்க்க மாட்டாரா என்னும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் மக்கள் அவர் பாதத்தை தலைமேல் வைத்து வழிபடும் பக்த கோடிகள்.

    எங்கும் பளபளப்பான தரை விரிப்புகள். மலர் தூவிய பட்டுக் கம்பளங்கள் அவர் தரிசனம் காணக் வாயிலிலே காத்திருக்கும் முக்கியமான மனிதர்கள் முதல் பாமர்கள் வரை எல்லோருடைய அணிவகுப்பு!

    என்ன ஆயிற்று எப்படி நடந்தது இதெல்லாம் மீண்டும் மனதுக்குள்ளே ஆழ்ந்து உற்றுக் கவனித்தார்.

    அவருடைய உள் மன ஆசைகளே இவையெல்லாம் வெறும் கற்பனையே மாயையான தோற்றங்களே என்று உணர்ந்த கணத்தில் மீண்டும் விரக்தியும் சோர்வும் வந்தது.தலை சுற்றியது. கண் இருட்டிக் கொண்டு வந்தது. அதற்கு நடுவே ஏதோ ஒரு உணர்வால் திடுக்கிட்டு மலங்க மலங்க விழித்தார். யாரோ கத்தறாங்க

    கை வேலையா இருக்கேன் கொழந்தையைப் பாதுக்கங்கன்னு படிச்சுப் படிச்சு சொல்லிட்டுப் போனேன் எங்கேயோ பராக்கு பார்த்துகொண்டே தலையை ஆட்டினீங்களே இப்போ பாருங்க குழந்தை கட்டில்லேருந்து கீழே விழுந்துட்டான்

    எதுக்கும் துப்பில்லாத ஒரு ஆளைக் கல்யாணம் செஞ்சிகிட்டு நான் படற அவதி இருக்கே சொல்லவும் முடியலே சொல்லாம இருக்கவும் முடியலே சொல்லாம கொள்ளாம எங்கேயாவது போயி சன்யாசினியாயிடலாம்ன்னு அவ்ளோ ஆத்திரம் வருது என்று கத்திவிட்டு ஓய்ந்து உட்கார்ந்தாள் அவர் மனைவி. அவர் காதிலே யாரோ ஈயத்தைக் காய்ச்சி ஊற்றினார்கள்

    Share
  • மனிதாபிமானம்

    -க. பிரகாஷ் 

    ஓர் ஊரில் நான்கு நண்பர்கள். ராமு, சோமு, பாலா, சுப்ரமணி ஆகியோர்.  இவர்கள் ஒரே பள்ளியில் பயின்று வந்தனா். பள்ளிக்குச் செல்லும்போது ஒரே நேரத்தில் செல்வதும் வகுப்பறையில் நான்கு பேரும் ஒரே பலகையில் அமா்வதும் பழக்கமாக இருந்தது. எல்லாப் பாடவேளையிலும் ஒவ்வொரு பாட ஆசிரியர் வகுப்பு எடுப்பது உண்டு. அன்று ஒருநாள் கணிதப் பாடவேளையில் ஆசிரியரைப் பார்த்து பாலா ஒரு வினாவை எழுப்பினான்.

    ”சார் நீங்கள் நடத்துவது எனக்கா? இல்ல எல்லாருக்குமா?”

    ஆசிரியா்: ”ஏன்டா!?”

    ”இல்ல…நீங்க என்னை மட்டும் பார்த்து வகுப்பு எடுக்குறீங்க!”

    ஆசிரியா்: ”நீ ரொம்ப அழகா இருக்க! அதனாலதான் உன்னையே பாத்தன்டா!”

    ”சரி…சரி…ஏதோ நீங்களாவது நான் அழகா இருக்கனு சொன்னீங்களே!  நன்றி சார்.”

    இவ்வாறெல்லாம் பாடவேளையில் சிறுசிறு குறும்பு செய்து படித்துப் பருவத்தேர்வுகளை முடித்துவிட்டு அரையாண்டுத் தேர்வு எழுதினார்கள். இவர்களுடைய தேர்வு எண்ணும் ஒன்றுக்குப்பின் ஒன்றாகவே அமைந்திருந்தது.

    தேர்வறையில் ஆசிரியர் ராமுவை பார்த்து –

    ”தமிழ் முதல்தாள் எப்படி இருந்தது?” என்றார்.

    ”அது எளிமையாக இருந்தது சார்!”

    ”ஆனா, இரண்டாவது தாளில் ஒரு சந்தேகம்…”

    ”என்னடா சந்தேகம்?”

    ”5-வது கேள்விக்குப் பதில் தெரியவில்லை சார்!
    7-வது பதிலுக்கான கேள்வியே இல்லை சார்!”

    ”தேடிப்பாருடா இருக்கும்.”

    தேர்வு  முடிந்ததும் கணிதப் பாடவேளையில் தேர்வுத்தாள்கள் திருத்தி மாணவா்களுக்குக் கொடுக்கப்பட்டது. பாலாவிற்கு மட்டும் கொடுக்கப்படவில்லை.

    ”சார் என்னோட பேப்பர் மட்டும் வரவில்லை!”

    ”எல்லோரும் நன்றாகத் தேர்வை எழுதியுள்ளார்கள். ஏன்டா நீ மட்டும் நல்லா எழுதல?”

    ”சார் அந்த கொஸ்டீன் பேப்பரை படிங்க, dy/dx+y*x = ? என்பதனைத் தீா்க்க!”

    ”உங்க பிரச்சனையே தீா்க்க முடியவில்லை சார், பின்னே! எப்படி கணக்க தீா்க்க முடியும்?”

    ஆசிரியா் கோபத்தால் திட்டிவிட்டார். பாலா இரண்டு நாட்களாகவே பள்ளிக்கு வரவில்லை. அவனது நண்பர்கள் மூவரும் சென்று ஆறுதல் சொன்னார்கள்.

    ”ஒரு மகிழ்ச்சியான செய்தியும் கூட, பாலா!”

    ”என்னடா?”

    ”பள்ளியில் இருந்து சுற்றுலா ஏற்படுத்தியிருக்காங்கடா… என்ன போலாமாடா?”

    ”போகலாம்!” என்றான் பாலா.

    பள்ளி மாணவர்கள் எல்லோரும் சேர்ந்து பேருந்து வசதியை ஏற்படுத்திச் சுற்றுலாவுக்குச் சென்றார்கள். சென்ற இடத்தில் விபத்து ஏற்பட்டதைக் கண்டனர். அந்த விபத்தைப் பார்த்தவுடன் இறங்கிச் சென்ற நண்பா்கள் நால்வரும் அடிபட்டவா்களைத் தாங்கள் வந்த பேருந்திலேயே  ஏற்றி மருத்துவமனையில்  சேர்த்தனா்.

    ”பாலா… ஒன்றும் பயமில்லை!” என்று மருத்துவா் சொன்னார்.

    மகிழ்ச்சியடைந்த நான்கு பேரும்  சுற்றுலாவிற்குப் பயணம்செய்துவிட்டு மகிழ்ச்சியாக வீடு திரும்பினார்கள்.

    ***

    க.பிரகாஷ் எம்.ஏ, எம்.பிஃல்,
    தமிழ்த்துறை
    தொழில்நுட்பக் கள ஆய்வுப் பணியாளர்
    பாரதியார் பல்கலைக்கழகம்
    கோயம்புத்தூர் – 46

     

     

    Share
  • பழசு

    -தமிழ்த்தேனீ

    தயங்கித் தயங்கித் தொலைபேசியில் மகன் சரவணனிடம் கேட்டார் சபேசன். ”ஏம்பா உனக்கு நம்ப வீட்டோட போட்டோ எல்லாம் அனுப்பிச்சேனே  பாத்தியா?”

    ”எல்லாம் பாத்தேம்பா  ரொம்ப மோசமா இருக்கே…?  நானே அதைப்பத்தி உங்க கிட்ட பேசணும்னு இருந்தேன்  நிறைய வேலை.”

    ”சரிப்பா நான் நாளைக்கே ஐந்து லட்‌சத்தை உங்க பேருலே அனுப்பறேன்; வீட்டை உடனடியாச் சரிப்படுத்திடுங்க” என்றான் சரவணன்.

    மூன்று மாதங்களாக  ஏற்கெனவே சொருகு ஓடு போடாத மேல் தளத்தில் மழை பெய்ததால்  ஏற்பட்ட  நீர்க் கசிவை சரிசெய்ய  வேறு வழியில்லாமல்  தளத்தில் இருந்த சிமென்ட் ஜல்லி கலந்துபோட்ட கலவையெல்லாம் உடைத்து எடுத்து   ஒரு இடம் விடாமல் லீக் ப்ரூப் எண்ணெயைப்  பூசிவிட்டு  வேறு சிமென்ட் ஜல்லி மணல்கலந்து போட்டு,  விழும் தண்ணீர் ஒரு இடத்தில் குவிந்து குழாய் வழியாகத் தோட்டத்துக்குப் போகுமாறு சாய்வு கொடுத்து,  அதைச் சரிசெய்துவிட்டு, அதன்மேல் மீண்டும் லீக் ப்ரூப் எண்ணெயை அடித்து அதன்மேல் சிமென்ட் போட்டு, அதுக்கும் மேலே வெள்ளை டைல்ஸ் போட்டு, வெப்பம் தாக்காமலும், நீர் உள்ளே இறங்காமலும்  மற்ற இடங்களில் அதனால் ஏற்பட்ட பள்ளங்கள், வர்ணம்போன இடங்கள்  எல்லாவற்றையும் சரிசெய்து,  ஒழுங்காக வேலைக்கு வராத,  வந்தாலும் ஒழுங்காக வேலை செய்யாத ஆட்களை வைத்துக்கொண்டு வெய்யிலில் அவர்களின் கூடவேநின்று  வேலை வாங்கி, வலிக்கும் முதுகில்  அவ்வப்போது வலிநிவாரணிப் பசை தேய்த்துக்கொண்டு மூன்று மாதத்துக்குப் பின் இப்போதுதான்  வேலை முடிந்திருக்கிறது.

    வீட்டின் ஒவ்வொரு பகுதியையும் புகைப்படம் எடுத்து மகனுக்கு  இணையத்தின் வழியாக அனுப்பினார்.

    மகனிடமிருந்து தொலைபேசி அழைப்பு!

    ”சொல்லுப்பா போட்டோ எல்லாம் பாத்தியா?”  என்றார் உற்சாகக் குரலில்.

    ”பாத்தேம்பா!  இந்த வயசிலே எதுக்கு இவ்ளோ உழைக்கிறீங்க?  அது சரி இவளோ உழைச்சு  இன்னும் அசிங்கமா ஆக்கிவெச்சிருக்கீங்க வீட்டை” என்றான் மகன்.

    ”என்னப்பா சொல்றே?” என்றார் அவர்.

    பின்ன என்னப்பா? நீங்க அமெரிக்காவுக்கு வந்தப்போ அங்கே இருக்கிற வீட்டையெல்லாம் பாத்தீங்களே அதெல்லாம் எவ்ளோ  நல்லா  நாகரிகமா வசதியா  இருக்கு.  இப்பிடி  ஒவ்வொரு அறைக்கு ஒவ்வொரு வர்ணம்  முன்னாலே  தாழ்வாரத்துக்கு அடுத்து  முத்தம், அது போதாக்குறைக்கு  அதிலே  ரெட் ஆக்சைடு அடிச்சு,  ஏதோ காவி கலர்லே தரை. என்னப்பா இதெல்லாம்?  வீட்டை அசிங்கப்படுத்தி வெச்சிருக்கீங்க!  அஞ்சு லட்‌சம் அனுப்பினேன்;  அஞ்சு லட்‌சம் செலவழிச்சு நீங்களும் உழைச்சு,  வீட்டைக் கெடுத்து வெச்சிருக்கீங்களே?   இன்டெர்னெட்லே  பாருங்கப்பா!  எவ்ளோ டிசைன் வந்திருக்கு.  அதைப் பாத்தாவது  லேட்டஸ்டா,  மாடர்னா,  கட்டக் கூடாதா?   சரி… என்னமோ செய்ங்க!”  என்று தொலைபேசியை வைத்தான்  மகன்.

    ஆறு மாதங்கள் அவருடன் சரியாகப் பேசவில்லை.  அவரும் சரி எதையுமே கண்டு கொள்ளாமல் அமைதியாக இருந்தார். சற்றே கோபம் தணிந்தது போலும்!
    ஒருநாள் தொலைபேசியில், ”அப்பா! நான் உங்களுக்கும் அம்மாவுக்கும்  விசா போடறேன் அமெரிக்கா வறீங்களா?  உங்க பேரன் உங்களோட இருக்கணுமாம்! இப்போ அவனுக்கு லீவு விட்டுட்டாங்க.  வறீங்களா?  என்றான்.

    ”சரிப்பா…வரோம்!” என்று அமெரிக்கா போய் இறங்கினார்கள் இவரும் இவர் மனைவியும்.

    பேரன் ஓடிவந்து,  ”தாத்தா, பாட்டி  வெல்கம்! வெல்கம்!” என்று கட்டிக் கொண்டான்.  மருமகள், “வாங்க வாங்க  ப்ரயாணமெல்லாம் சௌகரியமா இருந்துதா?”  உக்காருங்க  முதல்லே  காப்பி குடிங்க! என்று காப்பியைக் குடுத்துவிட்டு சாப்பாடு ரெடியா இருக்கு குளிச்சிட்டு வந்தீங்கன்னா சாப்படலாம் என்றாள்.

    ஆயிற்று உணவு முடிந்ததும் தூக்கம் கண்களைச் சுழற்றிக் கொண்டு வந்தது.

    ரெண்டு பேரும் இப்போ  சமாளிச்சிக்கோங்க;  ராத்திரி  தூங்கலாம்   அப்போதான்  ஜெட்லாக் போகும் என்றாள் மருமகள். சரி என்று இவர்களின் வருகைக்காகவே ஏற்பாடு செய்து வைத்திருந்த தமிழ்ச் சேனல்களைப்  பார்க்க ஆரம்பித்தார்கள்.

    தொலைக்காட்சித் தொடர் பார்த்துக் கொண்டிருந்தபோது  அதிலே ஒரு வீட்டைக் காட்டினார்கள்.  அப்பா இந்த  வீடு இருக்கே  நிறைய தொலைக் காட்சித் தொடர்லேயும்  சினிமாவிலேயும்  நிறைய வருதுப்பா. ஒரு நாளைக்கு  இருவதாயிரம் வாடகையாம்.  இருந்த இடத்திலேருந்தே சம்பாதிச்சுக் கொடுக்குது  என்றாள்  மருமகள்.

    ”இப்படி மூன்று மாதங்கள் கழிந்ததும் சரிப்பா.. நாங்க இந்தியா கிளம்பறோம்” என்றார்.

    ”ஏம்பா இன்னும் மூணு மாசம் இருக்கலாமே?” என்ற மகனிடம் அமெரிக்காவிலே  பார்க்கவேண்டிய இடங்களெல்லாம் பாத்தாச்சு. அங்கே இந்தியாவிலே கொஞ்சம் வேலையிருக்கு  அதுனாலே கிளம்பறோம்” என்றார்.

    மறுநாள் மீண்டும் இந்தியா கிளம்பவேண்டும்.

    ”ஏம்பா…எனக்கு ஒரு பத்து லட்‌சம்  அனுப்பி வைக்கிறியா?” என்றார்  அப்பா.

    ”என்னப்பா விளையாடறீங்களா? உங்களையும் அம்மாவையும் இங்கே கூட்டிகிட்டு வந்து இது வரைக்கும்  10 லட்‌சம் செலவழிச்சிருக்கேன். காசு சும்மா வரலப்பா…உழைச்சாதான் வரும். பணத்தோட  அருமையே தெரியாம பேசறீங்களே?” என்றான் மகன்.

    மறுநாள்  ஏர்போட்டுக்கு வந்து சேர்ந்தாயிற்று. ”எல்லாம் எடுத்து வெச்சிகிட்டீங்களாப்பா?  பத்திரமா போயிட்டுவாங்க  ரெண்டு பேரும். உடம்பைப் பாத்துக்கோங்க.  நான் நேத்து கடுமையாப் பேசினேன்… அதையெல்லாம் மனசிலே வெச்சிக்காதீங்க!”  என்றார் மகன்.

    ”சரிப்பா…இமிக்ரேஷனுக்கு நேரமாச்சு!  நாங்க கிளம்பறோம்.  எங்க பேரனைப் பத்திரமா பாத்துக்கங்க.  நீங்க  ரெண்டுபேரும்கூட  நேரத்துக்குச் சாப்டுட்டு நேரத்துக்குத் தூங்கி ஆரோக்கியத்தைப் பாத்துக்கோங்க.  பணம்மட்டும்  முக்கியமில்லேப்பா;  ஆரோக்கியம் முக்கியம்” என்றபடி பேரனைத் தூக்கி ஒரு முத்தம் கொடுத்துவிட்டு,  ”உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்! தொலைக்காட்சித் தொடர்லேயும், சினிமாவிலேயும் அடிக்கடி வருதே அந்த வீடுதாம்ப்பா நம்ம கிராமத்து வீடு. நாங்க  ஒரு அறையிலே இருந்துண்டு வாடகைக்கு விடறோம் படப்பிடிப்புக்கு. இது வரைக்கும் அந்தவீடு இருவத்தி அஞ்சு லட்சம் சம்பாறிச்சுக் குடுத்திருக்கு.

    அந்த இருபத்தி அஞ்சு லட்‌சத்தை வெச்சு  அதே கிராமத்திலே  இன்னொரு வீடு வாங்கினேன்.  அந்த வீட்டை நீ  ஏற்கெனவே சொன்னா மாதிரி  மாடர்னா  மாத்தலாம்னுதான்  பத்து லட்‌சம் கேட்டேன்”  என்றார் அப்பா.

    சற்றுநேரம் புயலடித்து ஓய்ந்தாற்போல் ஒரு மௌனம்.

    மகன் சொன்னான்…”அப்பா நான் பத்து லட்சம் அனுப்பறேன்…ஆனா மாடர்னா கட்டாதீங்க!  நம்ம கிராமத்து வீடு மாதிரியே கட்டுங்க!” என்றான் கையைப் பிடித்துக் கொண்டு.

     

     

     

    Share
  • அரிதாரம்

     விஜய் விக்கி

    தீபாராதனை முடிந்து, அர்ச்சகர் கொடுத்த திருநீறை மடித்துவைக்க காகிதத்தைத் தேடிய அமுதாவிற்கு, கசங்கிய, அழுக்கான, தண்ணீரில் ஊறிய காகிதங்கள் மட்டும்தான் கண்களுக்கு அகப்பட்டது… வேறு வழியின்றி, சேலையின் முந்தானையில் கொட்டி முடிச்சுப்போட்ட பிறகுதான்தான் மனம் சற்று நிதானமானது… வழக்கம்போலவே அர்ச்சனையில் உடைத்த தேங்காய்முடிக்குள் அதனை கொட்டியிருக்கலாம்தான்… ஆனால், கடந்தமுறை அப்படி செய்திருந்த தேங்காயில் சட்னி செய்தபோது, “ஏன் சட்னி ஒரு மாதிரி ஸ்மெல்லா இருக்கு!”ன்னு மூன்று இட்லிகளோடு சிற்றுண்டியை முடித்துக்கொண்ட கணவனின் முகம் மனதிற்குள் வந்துபோனதால்தான் இன்றைக்கு காகிதத்தைத் தேடவேண்டிய கட்டாயம் இவளுக்கு…

    மாலையின் வெளிச்சம் மெள்ள மங்கிக்கொண்டிருந்தது.. பிரகாரத்தின் இடதுபுறம் ஒரு தூணில் சாய்ந்தபடி அமர்ந்துகொண்டாள் அமுதா.. பைக்குள்லிருந்து ‘க்ர்ர்ர்… க்ர்ர்ர்..’ அலைபேசி வைப்ரேட்டியது.. ‘அரவிந்த்’ என திரை பளிச்சிட, ஸ்வைப் செய்து காதில் வைத்தவாறு “கோவில்ல இருக்கேங்க.. கொஞ்சநேரம் இருந்துட்டு வரேனே!” பணிவாகப் பேசினாள்..

    “ஹ்ம்ம் சரி… கிளம்புறப்போ கால் பண்ணு, கார் வரச்சொல்றேன்.. இருட்டிடும்ல” கணவனின் அக்கறையான பதில்.. சிவப்பு பொத்தானை அழுத்தி, மொபைலை கைப்பைக்குள் திணித்துக்கொண்டாள்.. ஒரு மணி நேரத்திற்கொருமுறை, எவ்வளவு பணிச்சுமையில் சிக்கித் தவித்தாலும் அரவிந்திடமிருந்து ஒரு அழைப்பு வந்துவிடுவதுண்டு..

    “எங்க இருக்க?… சாப்டியா?.. இவ்ளோ நேரம் ஏன் சாப்டாம இருக்க?” நலன்சார்ந்த கேள்விகள்தான் அதில் பிரதானம்.. நடந்துசென்றால்கூட நெற்றி வியர்க்காத தூரத்திலிருக்கும் கோவிலுக்கு கார் அனுப்பும் இதுபோன்ற வினோத அக்கறைகளை அரவிந்திடம் மட்டும்தான் காணமுடியும்!

    இப்போ வீட்டிற்கு சென்றாலும் ஒன்றும் செய்துவிடப்போவதில்லை.. சட்னியும் கூட செய்து வைத்தாகிவிட்டது, தோசை வார்த்துக்கொடுக்க ஐந்து நிமிடங்கள் போதும்.. அதுவரை என்ன செய்வது?.. படித்த புத்தகம் எதையாவது எடுத்து புரட்டிக்கொண்டு வேண்டுமானால் இருக்கலாம்.. அப்படி பலமுறை புரட்டிய காகிதங்களே கிழியும் தருவாயில் தொக்கித்தான் நிற்கின்றன.. இப்போதும்கூட கிரிக்கெட்டில் ‘லொட்டு’ லொட்டு’ன்னு தட்டிக்கொண்டிருப்பதை வைத்த கண் விலகாமல் பார்த்துக்கொண்டிருப்பார் அரவிந்த்.. அப்பப்போ, ‘செம்ம ஷாட்!… ஐயோ அவுட் ஆகிட்டான்!’ன்னு தனியே புலம்பிக்கொண்டிருக்கும் அவரைத்தாண்டி, சுவற்றை மட்டும்தான் வெறித்துக் கொண்டிருக்கவேண்டும்… அதற்கு பதிலாக இந்த கோவிலில் வேடிக்கை பார்க்கத்தான் எவ்வளவோ விஷயங்கள் கொட்டிக்கிடக்கிறதே!…

    வலதுபுறத்தில், படிகளின் ஓரத்தில் அமர்ந்து கிசுகிசுத்துக்கொண்டிருக்கும் அந்த புதுமண ஜோடியை கண்களால் கணித்துக்கொண்டிருக்கிறாள் அமுதா.. திருமணம் முடிந்து அதிகபட்சம் பத்து நாட்கள்தான் ஆகியிருக்கணும்!.. தாலியின் மஞ்சள் கூட இன்னும் மங்கவில்லை, நெற்றியின் வகிட்டுக் குங்குமம் அந்த அனுபவமின்மையை பிரதிபலித்தது… அந்த புதுப்பெண்ணின் கைகளில் வைத்திருந்த மருதாணி வாசனையை அவள் கணவன் நுகரத்துடிக்கிறான்… அவளோ, அக்கம் பக்கத்தில் ஆட்கள் இருப்பதாய் மறுக்கிறாள்… அவன் ஏதோ காதுகளுக்குள் கிசுகிசுக்க, அவள் வெட்கப்பட்டுச் சிரித்தவாறே பதில் சொல்கிறாள்.. மேற்கொண்டு அவற்றை பார்க்க விரும்பாதவளாக வேறுபக்கம் பார்வையை படரவிட்டாள் அமுதா..

    திருமணமான புதிதில் இவளுக்கும் அப்படியோர் அனுபவம் வாய்த்தது… ஏதோ பரிகார நிவர்த்திக்காக புதுமணதம்பதியை மட்டும் கோவிலுக்கு அனுப்பிவிட்டு, ‘சின்னஞ்சிறுசுகள் தனியா போயிட்டு வரட்டும்!’ என ஒதுங்கிக்கொண்டார்கள் பெரியவர்கள்… வழிபாடு முடிந்து இப்படியோர் பிரகாரத்தில் அமர்ந்திருந்தபோது, அமுதாவிற்கும் அரவிந்திடம் கேட்க ஆயிரம் கேள்விகள் வரிசைகட்டிக் காத்திருந்தன… மொபைலில் சென்செக்ஸ் புள்ளிகளை கணித்துக்கொண்டிருந்த கணவனிடம், எப்படி கேள்வியை தொடங்குவது? என்றுதான் புரியவில்லை…

    “நீங்க படமெல்லாம் பார்ப்பிங்களா?” அப்பாவியாக பேச்சைத் தொடங்கினாள்..
    “ஹ்ம்ம்…”
    “எந்த ஹீரோ பிடிக்கும்?”
    “லியோனார்டோ டி காப்ரியோ”

    இந்த பதிலின் அர்த்தம் அவளுக்கு புரியவில்லை… ஆனால், மேற்கொண்டு கேள்விகளை தவிர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் சொல்லப்பட்ட பதிலென்பது மட்டும் புரிந்தது.. மீதமிருந்த தொல்லாயிரத்து தொன்னூற்றெட்டு கேள்விகளும் தொண்டைக்குள் விழுங்கிய எச்சிலோடு கரைந்துபோனது..

    திருமணமாகி கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு மேல் ஆகிறது… என்றாலும், இன்னும் முழுமையாய் புரிந்துகொள்ள முடியாத சூட்சமமாய்தான் இருக்கிறான் அரவிந்த்… சற்று ஏழ்மையான குடும்பத்தின் மூத்த மகளுக்கு, கனிம வளத்துறையில் உயரிய பொறுப்பு வகிக்கும் வசதியான வரன் அமைந்ததை எண்ணி இன்னும் சிலாகித்துக்கொண்டிருக்கிறார் அமுதாவின் அப்பா… “நம்ம அமுதாவ அவங்களுக்கு ரொம்பப் பிடிச்சிருக்காம்.. ஜாதகமும் நல்லா பொருந்திருக்கு, யோசிக்காம முடிச்சிடுங்க!” தூரத்து உறவினர் வழியே வந்த வாய்ப்பை இவளின் அதிர்ஷ்டமாகத்தான் பார்த்தார்கள் வீட்டார்… “நம்ம அமுதா யோகத்துக்கு அவ ராணி மாதிரி இருப்பான்னு சொன்னேனா இல்லையா?” அப்பா பெருமை பீற்றிக்கொண்டார்… மாமானாரைக்கூட ‘அப்பா’ என உரிமையோடு விளிக்கும் மாப்பிள்ளை எத்தனைபேருக்கு வாய்த்திருக்கமுடியும்?… வாய்வார்த்தைக்கு மட்டுமல்லாது, மகனாகவே பலமுறை குடும்பத்து பிரச்சினைகளின்போது முன்னின்ற அரவிந்த்துக்கு இவள் அப்பா ரசிகர் மன்றம் தொடங்கினால்கூட அதிசயமில்லை..

    அவர்கள் கணிப்பும், யோசனையும் பொய்யாகவில்லை… வசதியான வாழ்க்கை.. முழுமையான சுதந்திரம், ராணி போலத்தான் வாழ்கிறாள்.. ஆனால்….

    பின்னாலிருந்து ஒரு கை அவள் தோளின் மீது படர, திடுக்கிட்டுத் திரும்பினாள் அமுதா.. வாய் முழுக்க புன்னகையோடு நின்றுகொண்டிருக்கும் அந்த பெண்ணை சட்டென அடையாளம் காணமுடியவில்லை.. ஒருவழியாய் நிழல் உலகத்திலிருந்து தன்னை மீட்டுக்கொண்டு, எதிரே நிற்பவளை அடையாளம் காண்பதில் மனம் முனைப்பானது…

    “அமுதா மிஸ் தான நீங்க?” அமுதா மிஸ்’ஸா?.. ஏதோ ஒருகாலத்தில் பணிபுரிந்தது.. இவளுக்கே மறந்துபோயிருந்த இறந்தகாலமாயிற்றே, அந்த தனியார் பள்ளியின் ஆசிரியை பணி!… அதை நினைவுகூர்ந்து இன்றைக்கு அழைக்கும் இந்தப்பெண் யார்?.. அட ஆமா!.. அந்த தெத்துப்பல், புருவத்தின் மேலிருக்கும் மரு… ஒருவழியாய் ஊகித்துவிட்டவளாக, “பானு மிஸ்தான நீங்க?”

    ஆச்சர்யம் பொங்க வினவினாள்… கடந்த ஆறு மாதங்களாக தடயமே இல்லாது தனது வாழ்க்கைப் புத்தகத்தில் மறைந்துபோன மனிதர்களுள் ஒருத்திதான் பானுவும்…

    பானு, கலகலப்பாக பேசுபவள்.. மனதிற்குள் தோன்றியதை பட்டென போட்டு உடைத்துவிடும் கண்ணாடி மனசுக்காரி.. உணவு இடைவேளையில் அவள் திறக்கப்போகும் டிபன் பாக்ஸ்க்காக காத்திருந்த ஏழெட்டு சக ஆசிரியைகளுள் அமுதாவும் ஒருத்தி..’ ஒவ்வொன்றாய் நினைவுகள் வரிசைக்கட்டி மடையை திறந்து கொண்டு மனதிற்குள் கொட்டத்தொடங்கின…

    “பரவால்லையே… ஞாபகம் வச்சிருக்கிங்க!”

    “எப்டி மறக்கமுடியும்?… அந்த கத்தரிக்காய் தொக்கு இப்பவும் கண்ணு முன்னால வந்துபோகுது!” சிரித்துக்கொண்டாள் அமுதா..

    “கத்தரிக்காய்லாம் ஞாபகம் இருக்கு, என்னைய கல்யாணத்துக்கு இன்வைட் பண்ணனும்னு மட்டும் மறந்தாச்சுல்ல?”

    “ஐயோ சாரி பானு… அவசரமா ஏற்பாடு பண்ணிட்டாங்க… அவரு ஜாதகத்துல ரெண்டு மாசத்துக்குள்ள கல்யாணம் பண்ணனும்னு சொல்லிட்டாங்களாம்… அதான், நெருங்கிய சொந்தக்காரங்களுக்கு மட்டும் சொல்லி கோவில்லையே சிம்பிளா நடந்துமுடிஞ்சிடுச்சு… ப்ரெண்ட்ஸ், கூட வேலை பாக்குறவங்கன்னு யாரையும் இன்வைட் பண்ணமுடியலன்னு ரொம்ப கஷ்டமா போச்சுப்பா…” பானுவின் கையைப்பிடித்து அழுத்தியபோது அவள் முகத்தில் ஏமாற்றம் தெரிந்தது…

    “சரி விடுங்க… பொம்பளைங்க நாம நெனச்சா எல்லாம் நடக்குது?… உங்க ஹஸ்பன்ட் எப்டி இருக்காரு?… கவர்மென்ட் ஜாப்னு சொன்னாங்க, வசதியான குடும்பமாமே.. சொத்துபத்துன்னு பாரம்பரியமான குடும்பம்னுலாம் சொன்னாங்களே!.” எல்லாவற்றையும் விசாரித்து வைத்திருக்கிறாள் போலும்..

    “ஆமா… மினரல்ஸ் டிப்பார்ட்மெண்ட்ல வர்க் பண்றார், பெரிய குடும்பம்தான்.. இங்க திருச்சிலதான்… ஆமா, நீங்க எப்போ தஞ்சாவூர்லேந்து இங்க வந்திங்க?”

    “மூணு மாசமாச்சு… திருச்சிதான் எனக்கும் புகுந்தவீடு”

    பானுவின் கழுத்தை கவனித்தாள் அமுதா… அட ஆமா, தாலி இருக்கிறது.. அவளிடம் கோபித்துக் கொள்வதில் அர்த்தமில்லை.. அவளுக்குமான பதிலாகத்தான் முன்னமே, ‘பொம்பளைங்க நாம நெனச்சா எல்லாம் நடக்குது?’ன்னு சொல்லிவிட்டாள்…

    “கங்க்ராட்ஸ்பா…” வாழ்த்துகளைத் தாண்டி, கடந்த கால நினைவுகளை அசை போட்டுக் கொண்டிருந்தபோதுதான் பானுவின் கழுத்தினை எதேச்சையாக கவனித்து,

    “அதென்ன உங்க கழுத்தில சிவந்து போயிருக்கு?.. காயம் போல இருக்கே..”
    அக்கறையாய் வினவினாள் அமுதா…

    பானுவிடம் பதில் வார்த்தைகளாக வரவில்லை, அசட்டுச் சிரிப்பு மட்டும்தான் வெளிவந்தது… எதற்காக வெட்கப்படுகிறாள்? அமுதா புரியாமல் ஏறிட்டுப் பார்த்தாள்… சற்று கூர்ந்து அந்த காயத்தை கவனித்தபோதுதான், பற்களின் தடம் அவள் கண்களுக்கு புலப்பட்டது… அமுதாவிற்கு சுருக்கென்றது…

    கேட்டிருக்கக்கூடாத கேள்வியோ?.. என்ன நடந்திருக்கிறது? என்பது எளிதாக அனுமானிக்க முடிந்த விஷயம்தான்… அதனை இவ்வளவு துழாவியிருக்க வேண்டாம்!..

    “ஐயோ நீங்க சொன்னதும்தான் ஞாபகம் வருது.. அவரு அர்ச்சனை சீட்டு வாங்குறதுக்குப் போனார், உங்கள பார்த்ததும் அவரை மறந்துட்டேன் பாருங்க…

    போய் சாமி கும்பிட்டுட்டு வரேன், இங்கயே இருங்க.. நிறைய பேசுவோம்!”

    துள்ளிக்குதித்து கணவனை நோக்கி ஓடினாள் பானு…

    ஆனால் அமுதாவிற்கு அவளுடன் பேச்சைத் தொடர விருப்பமில்லை… மனதினுள் ஏதோ ஒரு இன்ஸ்டன்ட் கவலை சூழ்ந்துகொண்டது.. சட்டென பேட்டரியின் சார்ஜ் இழந்த மொபைல் போல முகத்தின் பிரகாசம் மங்கிப்போனது.. பானு தன் பார்வையைவிட்டு மறைந்த மறுகணம், சட்டென எழுந்து வீட்டை நோக்கி நடக்கத்தொடங்கினாள்..

    இப்போதெல்லாம் யாரோ கணவன், அவன் மனைவியிடம் காதலோடு பேசுவதை பார்த்தாலே அவள் மனதிற்குள் அனிச்சையாய் அமிலம் சுரக்கிறது… கோபம் சுளீரிடுகிறது..

    இப்போதுகூட பானுவின் கணவன் மீது, “கோவிலுக்கு போற பொண்ணுகிட்ட இப்டியா நடந்துக்கர்றது?.. பொண்டாட்டியாவே இருந்தாலும் இதல்லாம் அசிங்கமா இல்ல?”ன்னு கோபம் வருகிறது… இவள் வேகமாய் கிளம்பவும் அந்த கோபம்தான் காரணம், கொஞ்சம் கூடுதல் நேரம் பானுவிடம் பேசியிருந்தால் அநேகமாய் அந்த மனக்குமுறல் வார்த்தைகளாக வெளிவந்திருக்கும்.. இப்போது மட்டுமல்ல.. பார்க்கில் காதலன் மடியில் சாய்ந்திருக்கும் காதலியை பார்த்தபோதும், திரையரங்கில் கார்னர் சீட் தேடிப்போகும் தம்பதிகளை பார்க்கும்போதும், திரைப்படங்களில் அன்யோன்யமாக நடிக்கும் நடிகர்களைப் பார்த்தால்கூட இப்படிப்பட்ட கோபங்கள் அனிச்சையாகவே உண்டாகிறது.. ‘இதல்லாம் சமூக சீர்கேடு!.. அன்யோன்யம்னா வீட்டுக்குள்ள இருக்கணும், இப்டி பப்ளிக்ல அசிங்கமா… ச்ச ச்ச… மனுஷனுக்கும் நாய்க்கும் வித்யாசம் இல்லையா?’ன்னு அவ்வப்போது பொங்கித்தீர்ப்பதும் உண்டு… ஆனால், இந்த கோபங்கள் சமூக அக்கறையைத் தாண்டிய, அது ஒருவித மனவிரக்தியின் வெளிப்பாடு என்பது அவள் மனதிற்கு மட்டுமே தெரிந்த உண்மை… ஆனால், அந்த உண்மையை அமுதாவின் ஈகோ என்றைக்குமே ஏற்றதில்லை என்பது வேறு விஷயம்!..

    இருட்டிப்போயிருந்தது.. சாலையின் இருட்டு பயமில்லை, நாய் குரைப்பதில் கவனம் இல்லை, மதுவின் நெடி வீசும் யாரோ சில சிகரெட்’வாலாக்கள் தன்னைக் கடந்துசென்றபோதும் எவ்வித சலனமும் இல்லை… இவள் கவனம் முழுக்க மனதின் வலிகளைப்பற்றியே சிந்தித்துக்கொண்டிருக்கிறது.. எதற்கு இப்படியொரு கோபம், கவலை அவளுக்குள்?.. வசதியான வாழ்க்கை, அக்கறையான கணவன், முழுமையான சுதந்திரம்.. தன்னை மட்டுமல்லாது, தனது குடும்பத்தினையும் மிகுந்த பாசத்துடன் அணுகும் மணவாளன்… தன் தகுதியை மீறிக் கிடைத்த வாழ்க்கையென எத்தனையோ முறை எண்ணியிருக்கிறாள்… ஆனால், எல்லாமும் இருந்து ஏதுமற்றதாய் ஒரு வெறுமை எப்போதுமே அமுதாவை ஆட்கொண்டிருப்பதுதான் சிக்கலே.. உப்பில்லாத உணவு பண்டங்களை போல, உணர்ச்சிகளற்ற வாழ்க்கை அது…

    திருமணமான புதிதில் அரவிந்த் உடல் சார்ந்த இன்பங்களில் அதிகம் நாட்டமில்லாமல் இருப்பதை கவனித்தபோது, ‘சரி பழக்கமில்லாத பொண்ணுங்கிறதால தயங்குறார் போல!’ என அதனைப் பெரிதாய் பொருட்படுத்தவில்லை.. ஆனால், நாட்கள் செல்ல அந்த இடைவெளி இன்னும் அதிகரித்துக்கொண்டே செல்லும்போதுதான் அவளுக்குள் ஒருவித பயம் உதித்தது.. ‘ஒருவேளை என்னைய பிடிக்கலையோ?’

    இப்படித்தான் தாழ்வுமனப்பான்மை மொட்டாய் அரும்பியது… அமுதாவை பொறுத்தவரை பேரழகி இல்லை என்றாலும், களையான முகத்தவள்… செயற்கை ஒப்பனைகள் இல்லாமலேயே, முகப்பொலிவு மங்காதவள்… கல்லூரி காலம் முதல், பணிபுரியும் நாட்கள் வரையென இவளை மனைவியாக்கிக்கொள்ள எத்தனித்த ஆண்களின் எண்ணிக்கை மட்டும் டசன் கணக்கைத் தாண்டும்… அப்படியிருக்க அரவிந்துக்கு மட்டும் ஏன் பிடிக்கவில்லை?.. யாரோ ஒரு தோழி மூலம், அழகு நிலையம் கூட சென்று பார்த்துவிட்டாள்… புருவத்தைச் செப்பனிட முடிந்தது,

    கரும்புள்ளிகளை காணாமல் போக செய்திட முடிந்தது… பேஷியல், பவுண்டேஷன் க்ரீம், மஸ்காரா என செயற்கை ஒப்பனைகளால் அலங்கரித்தபோதிலும், அரவிந்தின் பார்வை மட்டும் இன்னும் இவள் பக்கம் திரும்பியபாடில்லை…

    “பொண்ணுங்க மல்லிப்பூ வச்சிருந்தாதான் தனி அழகே!” என்றைக்கோ ஒருமுறை நண்பரிடம் அரவிந்த் சம்பாஷித்த பேச்சினை கவனித்த அமுதாவிற்கு அன்றுமுதல் மல்லிகைப்பூவும் உடலின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது.. மல்லிகை மணம் ஏற்படுத்திய ஒவ்வாமை தலைவலியை தாங்கிக்கொண்டு, மலர் சூடிய மங்கையாய் அரவிந்தின் எதிரில் நிற்பாள்..

    இன்னும் வேறென்னவெல்லாம் குறை கண்டிருக்கிறார் என்னிடம்?… எவ்வளவோ இயல்பை மீறிய மாற்றங்களை உள்வாங்கி வெளிப்படுத்தியபோதும், அதனை பொருட்டாகவே கண்டுகொள்ளாத கணவனின் பார்வை என்றைக்குத்தான் இவள் பக்கம் ஏறிடுமோ தெரியவில்லை!..

    ‘ஒருவேளை இவருக்கு திருமணத்திற்கு முன்பே வேறு பெண்ணுடன் காதல் இருந்திருக்குமோ?’ ஆறு மாதங்களாய் அதற்கான தடயங்களை தேடியும், அப்படி ஒரு சான்றும் சிக்கவில்லை.. திருமணத்திற்கு பின்னும் கூட எத்தனையோ பெண்கள், இவள் அறிந்தே அரவிந்திற்கு தூண்டில் போட்டனர்… “தூண்டில் முள்ளில் சிக்கிட அரவிந்த் ஒன்றும் கெண்டை மீன் இல்லை, திமிங்கலம்” பலமுறை கணவனை
    நினைத்து இப்படி சிலாகித்ததுண்டு.. கடைக்கண் பார்வை பட்டால் கவிழ்ந்துவிட பெண்கள் என்னவோ தயாராகத்தான் இருந்தார்கள், இவன் நிமிர்ந்து பார்த்தால்தானே அதெல்லாம் நடக்கப்போகிறது!.. ராமன்தான்… ஆனால், சீதையைக்கூட தொட மறுக்கும் ராமன்… அணிலாய் நினைத்து தொட்டால்கூட, மூன்று கோடுகளுக்காவது கொடுப்பினை இருந்திருக்கும்.. அதற்கும் வழியில்லாத அசோகவனத்து சீதை இவள்..

    அதற்காக உடலுறவில் ஈடுபடவில்லை என்றெல்லாம் நினைத்திட வேண்டாம்… அத்திபூத்தார் போல அவ்வப்போது, ஒரு உடலியல் நிகழ்வாக மட்டும் அது நடப்பதுண்டு… முத்தம் கூட இல்லாமல், கருவை உருவாக்குவதில் மட்டுமே முனைப்பாகிய முற்றிலும் எந்திரத்தனமான நிகழ்வு அது.. ஆனால், அமுதாவின் ஏக்கம் வேறு மாதிரியானது… அது செக்ஸ் சார்ந்தது இல்லை..

    கதைகளில் படித்த காதல், திரைப்படங்களில் காட்சிப்படுத்தப்பட்ட அன்யோன்யம், அக்கம்பக்கத்தில் பார்த்தறிந்த நெருக்கம்… ஒருவேளை தான் வாழ்வதுதான் உண்மை, மற்றவை எல்லாம் கற்பனையா? என்கிற யோசனை கூட அடிக்கடி வருவதுண்டு… நிஜத்தில் தன்னை சமாதானப்படுத்திக்கொள்ள அவளாகவே ஏற்படுத்திக்கொள்ளும் காம்ப்ரமைஸ் கற்பனைகள் அவை… இப்போது பார்த்த பானுவின் கழுத்து காயத்தடம் போன்ற நிகழ்வுகள், அந்த கற்பனை பிம்பத்தினை அவ்வப்போது சிதறிப்போகச் செய்துவிடுகின்றன… மீண்டும் பழையபடி ஒருவித காம்ப்ளக்ஸ் அவளைத் தொற்றிக்கொள்கிறது…

    இப்படி அன்யோன்யம் இல்லாது போவதால், அக்கறையில்லாத கணவனாகவும் அரவிந்த்தை பார்த்திட முடியாது.. கனிவான கவனிப்பில் சராசரி கணவன்மார்களைவிட சற்று கூடுதல் மதிப்பெண்களே கொடுக்கும் அளவிற்கு பொறுப்பானவன்…

    இதோ அமுதா இப்போது கடந்துசெல்லும் பாரதி ஹாஸ்பிட்டலே அதற்கொரு சாட்சிதான்…. இரண்டு மாதங்களுக்கு முன்பு டெங்கு காய்ச்சலால் கிட்டத்தட்ட ஒருவாரம் இங்குதான் அனுமதிக்கப்பட்டிருந்தாள் அமுதா..

    நிமிர்ந்து அமர்ந்திடக்கூட உடலில் வலு இல்லாமல் சுரத்தே இன்றி படுக்கையில் கிடத்தப்பட்டிருந்த அந்த நாட்களில் அரவிந்த்’தான் அவ்வளவு அக்கறையாக கவனித்துக்கொண்டான்.. பழச்சாறு பிழிந்து கொடுப்பது, கைத்தாங்கலாக நிமிர்த்தி அமரச்செய்தது, வேளாவேளைக்கு மாத்திரைகள் கொடுத்தது… “நீங்க ஏன் லீவ் போடுறீங்க?.. அம்மாவை வரச்சொல்றேன், நீங்க ஆபிஸ் போங்க!” அமுதாவும் சொல்லிப்பார்த்தாள்… அவன் மனம்தான் அதற்கு ஒப்பவில்லை.. “பரவால்ல… எனக்கொரு கஷ்டமும் இல்ல!” என்றான் பதிலுக்கு…

    “என் மனைவியை நான்தானே பார்த்துக்கணும்!” என்கிற தொனியிலான பதிலது.. இவ்வளவு அக்கறையாக இருப்பவர் ஏன் அன்யோன்யத்தை விரும்பவில்லை?.. பாசம் இல்லாமல் அக்கறை உருவாகிட வாய்ப்பில்லை.. பாசம் இருக்கும் பட்சத்தில் அது காதலாய் ஏன் கனியவில்லை?…

    ‘ஒருவேளை எனக்கு பிடிக்காதுன்னு நினைச்சு அதல்லாம் அவர் செய்றதில்லையோ?’ என்ற சந்தேகம்கூட ஒருமுறை எழுந்தது… சரி, அதையும்தான் வெட்கத்தைவிட்டு சோதித்து பார்க்கலாமே!.. தானாக அரவிந்திடம் அன்யோன்யமாக இருக்க முற்பட்டு கட்டி அணைத்தாள்… அந்த பிடியிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்ட அரவிந்த், அவளை வித்தியாசமாக ஏறிட்டு வெறித்துப்பார்த்தான்… அந்த பார்வையில், அமுதாவின் சப்த நாடிகளும் ஒடுங்கிப்போனது..

    அநேகமாய் இவள் நடத்தையில் கூட அவனுக்கு சந்தேகம் ஏற்பட்டிருக்கலாம்… இந்த பாழாய்ப்போன உலகம் எல்லாவற்றுக்கும் ஒரு முட்டாள்த்தனமான வரையறை வகுத்துள்ளதே… காதலை சொல்வதோ, காமத்தில் திழைப்பதோ அவை பெண்கள் முன்னெடுக்கும்போது இயல்பாகவே அந்த வரையறையை மீறியதாகப் பார்க்கிறார்கள்.. ஆசையாய் கணவனைத் தொடும்போது, எதிர்கொள்ள வேண்டிய
    பார்வையா அது?… ஐயோ, பழுக்க காய்ச்சிய கம்பியை தலையில் தேய்த்ததுபோலஉயிரைப் பிளந்திடும் பார்வை.. அதற்குமேல் சோதித்து பார்க்கவெல்லாம் மனதில் திடமில்லை.. ஆசைகளை ஆழமாய் மனதிற்குள் புதைத்து வாழத்தொடங்கினாள்..

    யோசித்தபடியே வீட்டை நெருங்கிவிட்டாள்… தெருவின் முனையில் சாலையோர பள்ளத்தில் தேங்கிக்கிடந்த சேற்றுநீரில் கால் வைத்துவிட்டாள்..

    செருப்பெல்லாம் சகதி… இவள் குழம்பிய மனதோடு நடந்துவந்ததில், ஆற்று நீரை கடந்திருந்தால் கூட ஆச்சர்யமில்லை… “இந்த கார்ப்பரேஷன்காரங்க என்னதான் வேலை பார்க்குறாங்க” கணவன் மீதிருந்த கவலை, சில வினாடிகள் கார்ப்பரேஷன் மீதான கோபமாய் மாறியிருந்தது..

    ஐயோ புது செருப்பெல்லாம் சகதியாப் போச்சே!.. பேசாம போன் பண்ணி கார் வரச்சொல்லிருக்கலாம், வாளுபோய் கத்தி வந்தது போல இதை எங்கே கழுவுறது?…

    சேலையை தூக்கிப்பிடித்தபடி ஒருவழியாய் வீட்டின் கேட் அருகே வந்துவிட்டாள்.. இப்படியே அழைப்புமணியை அடித்தால், அனாவசிய சலசலப்புக்கு வழிவகுத்துவிடுவதாய் ஆகிவிடும்.. “ஏன் நடந்து வந்த?, எவ்ளோ சொன்னாலும் புரியாதா உனக்கு?.. போன வாரம் ஒரு பொண்ணு செய்னை அறுத்துட்டுப் போனானுகளே, மறந்துட்டியா?” இப்படி அரவிந்தின் ஆயிரம் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும்.. சத்தமில்லாமல் சேற்றை கழுவிக்கொண்டு, உள்ளே போகலாம்… ஆட்டோவில் வந்ததாய் சொல்லி சமாளித்துக்கொள்ளலாம்..

    சத்தமில்லாமல் கேட்டைத் திறந்து, அப்படியே கொல்லைப்புறத்தில் இருக்கும் பைப்பை நோக்கி நடந்தாள்.. தண்ணீரை மெள்ள திறந்துவிட்டு, செருப்பைக் கழுவினாள்… சேலையின் கீழ்ப்புறத்திலும் சேற்றின் திட்டுக்கள்…

    அதனையும் தண்ணீர் தொட்டு துடைத்துவிட்டு நிமிர்ந்தாள் அமுதா.. படுக்கையறையின் ஜன்னலின் மீது பார்வை படர்ந்தது.. ஜன்னல் கதவு ஒருக்களித்து சாத்தப்பட்டிருக்கிறது… ஏசியின் காற்று அதனூடே கசிந்து வீணாவதாய் எத்தனையோ முறை மனம் பதைத்தபோதிலும், அரவிந்திற்கு எப்போதும் அது ஒரு பொருட்டாகவே தெரிந்ததில்லை..

    அருகிலிருந்த திட்டின் மீது ஏறி நின்று, அதனை அழுத்தி சாத்த முற்பட்டபோதுதான் ஒருவித வித்யாசமான சத்தம் உள்ளிருந்து காற்றினூடே காதுகளை அடைந்தது.. என்ன சத்தம் இது?.. ஏதோ முனகல் சத்தம் போலல்லவா கேட்கிறது.. அழுத்தி சாத்திட எத்தனித்த கைகள், அனிச்சையாகவே ஜன்னல் கதவினை மெள்ள திறந்தது.. உள்ளே என்ன நடக்கிறது?… அடக்கடவுளே!… ஒருசில வினாடிகள் தலை சுற்றிதடுமாறி நின்றது..

    அரவிந்துடன் வேறொரு நபர் நிர்வாண கோலத்தில் கட்டிப்பிடித்தபடி படுக்கையில்… ஐயோ.. அதுவும் யாரோ ஒரு ஆணுடன்… கடவுளே!… அரவிந்தாக அது இருக்கக்கூடாது என மனம் பதறியது… உற்று கவனித்தபோது, உறுதியாக அவனேதான்…

    கால்கள் செயலிழந்ததைப் போல தடுமாறின.. நிற்க வலுவின்றி சுவற்றோடு சாய்ந்து கீழே அமர்ந்தாள்.. மனம் நிதானிக்க மறுத்தது.. உடல் முழுக்க ஊசியால் குத்தும் உணர்வு, வியர்வை சுரப்பிகள் வெடித்து உமிழ்ந்ததில் வியர்வை அரும்பி வழிகிறது… வகிட்டுக்குங்குமம் வியர்வையோடு கரைந்து, மூக்கிற்கு நேராக சிவப்புக்கோடு வரைந்தது.. எச்சில் தொண்டையை தாண்டி உள்ளே செல்ல மறுத்தது.. ஓவென அழவேண்டும் போல தோன்றினாலும், அதற்கான திராணி அற்று பிண்டம் போல அமர்ந்திருந்தாள்.. கண்களின் ஓரத்தில் கண்ணீர் ஊற்றுநீராய் பொங்கி வழிந்துகொண்டிருக்கிறது…

    சீதையை தொடமறுத்த இவள் ஏகபத்தினி விரதன், கட்டிலில் யாரோ ஆடவனுடன்!.. இவ்வளவு காலமும் என் மீது தவறென நினைத்து, இத்தனை வேடங்கள் தரித்தபோதும் ஏமாளியாய் நிற்பதென்னவோ நான்தான்.. முகத்தின் செயற்கை பூச்சுகள் கம்பளிப்பூச்சியின் வருடலைப்போல அரிக்கத்தொடங்கியது.. மல்லிகையின் மணம் நெடியேற்றும் துர்நாற்றமாய் உருமாறியது…

    வேகமாய் எழுந்து, சூடியிருந்த பூவை பிய்த்து வீசியெறிந்தாள்… தண்ணீர் குழாயைத் திறந்து, கொட்டிய நீரை முகத்தின்மீது ஓங்கி இறைத்தாள்.. கண்ணின் கருப்பு மையும், முகத்தின் வண்ண பூச்சுகளும் நீரோடு கலந்து சாயமாய் தரையில் பாய்ந்தது.. வேஷம் கலைந்தது!..

    (முற்றும்)

    Share
  • நாற்று

    — நிர்மலா ராகவன்.

    நான்கு குறைப் பிரசவங்கள். பின்னர், சோதனைக்குழாய்வழி வயிற்றில் வளர்ந்த கருவும் மூன்றே மாதங்களில் வெளிப்பட்டு விட்டது. `தத்து எடுக்கலாம்,’ என்று அவர் சொன்னதற்கும் அவள் செவி சாய்க்கவில்லை. குழந்தை அவள் உதிரத்தில்தான் உதிக்க வேண்டுமாம். ஒருவரையும் ஏறிட்டுப் பார்க்க விரும்பாது, சுவற்றுப்புறம் திரும்பி விசும்பிக் கொண்டிருந்த ஆசைமனைவியின் முகத்தில் சிரிப்பைக் காண வேண்டுமென்றால், தமிழ்நாட்டுக்கென்ன, உலகின் எந்தக் கோடிக்கானாலும் அழைத்துப் போகலாமே என்ற யோசனை வந்தது அந்தச் செல்வந்தருக்கு.

    `மனசைத் தளர விடாதேம்மா. இன்னும் ஒரு வழி இருக்கு. இதைப் படிச்சுப் பாரு!’ என்று ஒரு பத்திரிகையில் வந்திருந்த கட்டுரையைக் குறிப்பிட்டுக் காட்டிவிட்டு அப்பால் சென்றார்.
    பல பெண்களின் பேட்டியுடன் வந்திருந்ததை ஒரு கதையாக நினைத்துப் படித்தாள்.

    “தே! நீ என்னா சொல்றே? இப்ப தலையைத் தலையை ஆட்டிட்டு, யார் பிள்ளையோ என் வயத்திலே வளர்றதைப் பாக்கிறப்போ, ஒன்னால அதை ஏத்துக்க முடியுமா?”

    ஆட்டோ ஓட்டிப் போனபோது ஏற்பட்ட விபத்தில் இடுப்புக்குக்கீழ் சுவாதீனம் அற்றுப்போய், காலமெல்லாம் மனைவியின் கையை எதிர்பார்க்க வேண்டும் என்ற நிலை வந்தபோதுகூட ராசப்பா அவ்வளவு குழம்பவில்லை. எதுவும் சொல்லத் தெரியாது, அவளையே பார்த்தான். அவனைக் கணவனாக வரித்த கொடுமை, இப்போது குடும்ப பாரத்தைச் சுமக்க வேண்டிய நிர்ப்பந்தம் அவளுக்கு. எந்த இளம்பெண் எப்போது நிர்க்கதியாக நிற்பாள் என்று காத்திருந்தவர்போல, அவர்கள் வாழ்க்கையில் நுழைந்திருக்கிறாரே இந்த மனிதர்! இப்படியெல்லாம்கூடவா பணம் சம்பாதிப்பார்கள்!

    “ஒங்களுக்கென்ன! ஒங்க பேரைச் சொல்ல லட்டுமாதிரி பிள்ளை இருக்கு. எத்தனை பேருக்குக்கி டைக்கும் இந்தப்பாக்கியம்!” என்று நைச்சியமாக ஆரம்பித்த தரகர் பூபதி, “சில பேருக்கு, கல்யாணமாகி பத்து, பதினஞ்சு வருஷமானாலும் பிள்ளை பாக்கியமே இல்லை, பாவம்!” என்று பொய்யாகப் பரிதாபப்பட்டார். பின், அவர்களை ஒரு பார்வை பார்த்துவிட்டு, “எல்லாத்துக்கும் கொடுப்பினை வேணுமில்ல!” என்று கொக்கி போட்டார். அவர் மேலும் சொன்னதைக் கேட்டு, நாகம்மாதான் வெகுவாக அதிர்ந்து போனாள்.

    யாருடைய கர்ப்பப்பையிலோ வளரவேண்டிய கருவை அவளுடைய வயிற்றில் விதைப்பார்களாம். அதை முழுமையாக வளரவிட்டு, பெற்றெடுத்து, அதற்கு உயிர் கொடுத்தவர்களிடமே கொடுத்துவிட வேண்டுமாம்!

    “சும்மா இல்ல. மாசாமாசம் ஆயிரம் ரூபாய் குடுப்பாங்க. பிள்ளை பிறந்ததும், சுளையா இன்னொரு அம்பதாயிரம்!” நைச்சியமாகச் சொன்னார் பூபதி. பணத்தாசைக்கு மசியாதவர் யார் என்று எண்ணித்தான் அவர் அந்த இடத்துக்கு வந்திருந்தார்.

    ஆனால் நாகம்மா வேறு ஒன்றை யோசித்தாள்: `என் வயத்தை வாடகைக்குக் கேக்கறாங்க!’ உடலை விற்றுப் பிழைப்பதுபோல் ஆகிவிடாது?

    இவளை அதிகம் யோசிக்கவிட்டால் ஆபத்து என்று பூபதி மேலும் தூபம் போட்டார். “இதெல்லாம் முப்பது, நாப்பது வருஷமா அமெரிக்காவில இருக்கிற நடைமுறைதான். இல்லாதவங்களுக்கு இருக்கிறவங்க குடுக்கிற தானம்! அதோட.., நீங்க ஒண்ணும் சும்மா குடுக்கப்போறதில்ல!”

    தன்னை எதற்குக் குறிவைத்தார் இந்த மனிதர்? வெளிப்படையாகவே கேட்டாள் நாகம்மா.

    “அது வந்தும்மா..,” சற்று யோசனையில் ஆழ்ந்தார். “பிறக்கப்போற குழந்தைக்கு நீங்க அம்மா இல்லியா? கண்ட கழிசடை எல்லாம் அம்மா ஆகிட முடியுமா? அதான், ஒங்களைமாதிரி.. நல்ல விதமா குடும்பம் நடத்தி, ஒரு பிள்ளையாவது பெத்துக்கிட்டவங்களாப் பாக்கறோம். வயசு.. ஒரு இருபத்தஞ்சிலேருந்து முப்பதுக்குள்ளே இருந்தா, பிரசவத்திலும் குளறுபடி இருக்காது”.

    இன்னொரு உயிரா! வீட்டிலிருக்கிற மூன்று பேருக்கே அவள் கூலிவேலை செய்து கொண்டு வருகிற சொற்ப வருவாயில் அரை வயிறுகூட நிரம்புவதில்லை.

    அவளது மன ஒட்டத்தைப் புரிந்துகொண்டவராக, “பேசினதைத் தவிர, ஒங்களுக்கு ஆகிற சாப்பாட்டுச் செலவு, பால், பழம், உடை எல்லாத்துக்கும் தனியா குடுப்பாங்க. நீங்க வேலைக்குப் போக வேணாம்,” என்று மேலும் ஆசை காட்டினார்.

    நாகம்மாவுக்கு ஒரு முடிவுக்கும் வரமுடியவில்லை. அழுகைதான் வந்தது. அதைப் பார்க்கப் பொறாதவனாய், முதன்முறையாக ராசப்பா பேசினான்: “யோசிச்சுச் சொல்றோங்க ஐயா!”

    “ஒங்க இஷ்டம்!” என்றபடி எழுந்தார் பூபதி. வாசலுக்கு வந்தவர், தன்னையும் அறியாது மூக்கைப் பிடித்துக்கொண்டார். ஆறெனப் பெருகி ஓடும் சாக்கடை. அதையே நீச்சல் குளமாகப் பாவித்து, மனமகிழ்ந்து, எம்பி எம்பிக் குதித்துக்கொண்டிருந்த பன்றிகள்.

    `எப்படித்தான் இந்த நாத்தத்திலே சாப்பிட்டு, தூங்கி, குடும்பம் நடத்தறாங்களோ!’ அருவருப்புடன் உதட்டைச் சுழித்துக்கொண்டார். `இந்த லட்சணத்தில, சுலபமா சம்பாதிக்க வழி காட்டினா, அதுக்கு ஆயிரம் யோசனை!’ இயலாமையில் ஆத்திரம் பிறந்தது அவருக்கு.

    மீண்டும் ஏதோ நினைத்துக்கொண்டவராய், குடிசையினுள் நுழைந்து, சாணி போட்டு மெழுகியிருந்த தரையில் அமர்ந்தார். “முக்கியமான ஒண்ணைச் சொல்ல மறந்துட்டேனே! இதில தில்லுமுல்லு ஏதுமில்ல. ரெண்டு தரப்புக்கும் வக்கீல் வெச்சு ஒப்பந்தம் எழுதுவாங்க டாக்டரம்மா. ஒங்களுக்கும், பிள்ளையை வாங்கப்போறவங்களுக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. இருக்கக்கூடாது!” என்று அழுத்திச் சொன்னார். இந்த ஏற்பாட்டால் தனது பொருளாதாரம் கணிசமாக உயரப்போவதை கற்பனை செய்து மகிழ்ந்தார்.

    ராசப்பாவுக்கும் ஆசை பிறந்தது. கைநிறையப் பணம் கிடைத்தால், தான் இப்படி படுக்கையே கதி என்று இருக்க வேண்டாம். ஒன்றுக்குப் போக, குளிக்க என்று எந்த ஒன்றுக்கும் பிறர் கையை எதிர்பார்க்க வேண்டாம். எத்தனை நாட்கள்தான் முகம் சுளிக்காமல் செய்வாள் நாகம்மா!

    “இன்னும் என்ன யோசனை, நாகு! ஐயா சொல்றதுபோல, இது ஒரு வியாபாரம்னு நெனச்சுக்கயேன்,” என்றான்.

    அடைத்த குரலில் நாகம்மா பூபதியைக் கேட்டாள்: “அந்தப் பிள்ளை எப்படி..?”

    அவர் நெற்றியில் அடித்துக்கொண்டார். “முக்கியமானதைச் சொல்லாம விட்டுட்டேன், பாருங்க! என்று பெரிதும் நொந்துகொண்டவராக, “இது மத்த பிள்ளைங்களைப்போல இல்ல. அம்மா ஒடம்புக்கு வெளியே உருவாகுது. அப்பாவோட உயிரணு, அம்மாகிட்டேயிருந்து சினைமுட்டை ரெண்டையும் டாக்டரே ஒண்ணா சேர்த்து..,” என்று உற்சாகமாக ஆரம்பித்தவர், இந்தப் பாமரர்களுக்கு விஞ்ஞான ரீதியில் விளக்கம் எதற்கு என்று நிச்சயித்தவராக, “மண்ணிலே விதை போட்டா, செடி முளைக்கிற மாதிரிதான்னு வெச்சுக்குங்களேன். கரு உருவாகிடுச்சுன்னு உறுதி ஆனப்புறம், ஒங்க வயத்தில அதை விதைச்சுடுவாங்க. ஏன்னா, அந்த அம்மா வயத்தில கரு தங்கறதில்லே!”

    “நாத்து நடறமாதிரி!” என்றாள் நாகம்மா. அவளுடைய முகத்தில் தெளிவு. தான் அறியாத அந்தப் பணக்காரப் பெண்மணியின்மேல் இரக்கம் சுரந்தது. தான் அவளைவிட ஒரு விதத்தில் மேலானவள்!
    அச்சமயம் பார்த்து, சிறுவன் வேலு தூக்கத்திலிருந்து எழுந்தான். நேராக நடந்து வந்து, தாயின் மடியில் அமர்ந்துகொண்டு, “பசிக்குதும்மா,” என்று முனகினான். இன்னும் கொஞ்ச காலத்துக்காகவாவது அவள் குடும்பத்தினர் வயிறாரச் சாப்பிடுவது அவள் கையில்தான் இருக்கிறது. அதைப்போய் தடுப்பானேன்!

    பெருமூச்சுடன் அவனை அணைத்து, “ஒனக்குத் தம்பிப்பாப்பா பொறக்கப்போறாண்டா!” என்றாள்.

    மாதங்கள் உருண்டன.

    தாயின் பருத்திருந்த வயிற்றைத் தொட்டுப்பார்த்தான் வேலு. கரு உருண்டு, இன்னொரு கோடிக்குச் சென்றது. நாகம்மா கனிவுடன் வயிற்றைத் தடவினாள். சுகமான சுமை. யாருடைய உயிராக இருந்தால் என்ன! இப்போதெல்லாம் இந்தப் பிள்ளைக்காகவே அவள் சாப்பிடுகிறாள், தூங்குகிறாள்! இந்தக் குழந்தைக்கு செடிகளைப் பிடிக்கும், இசையில் ஆர்வம் என்று தன் மனதில் எழும் நெகிழ்ச்சியால் புரிந்து போகிறது அவளுக்கு. வீட்டின் பின்புறமுள்ள தோட்டத்திலேயே நாளின் பெரும்பகுதியைச் செலவழிக்கிறாள். குழந்தை அதிர்ந்துவிடப்போகிறதே என்ற கரிசனத்துடன், சினிமாப் பாடல்களைத் தவிர்க்கிறாள். மலேசிய வானொலியில் கேட்டிருந்த பழம்பாடல்களையும், பக்திப் பாடல்களையும் வாய் ஓயாது முணுமுணுக்கிறது. ஸ்ருதி, ஸ்வரம் போன்ற வார்த்தைகள் அவளது அகராதியில் கிடையாது. ஏதோ, தனக்குத் தெரிந்தவரை கள்ளக்குரலில் கீச்சுமூச்சென்று பாடுகிறாள். அவள் வயிற்றுக் கருவும் அதில் திளைத்து ஆனந்தப்படுவதாகத்தான் தோன்றுகிறது அவளுக்கு.

    வேலுவை உண்டாகி இருந்தபோது இப்படி ஆழ்ந்து யோசித்ததாக நினைவில்லை. எதுவுமே கைநழுவிப் போய்விடும் என்ற நிலை வரும்போதுதான் அதன் மீதுள்ள ஆசை அதிகரிக்குமோ என்று யோசிக்க, கலக்கம் பெருகியது. தன்னுடலின் ஒரு பாகமாக பத்து மாதங்கள் இருக்கப்போகும் பிள்ளை. அது ஆணா, பெண்ணா, கறுப்பா, சிவப்பா, தலைமயிர் சுருட்டையா, அடர்த்தியா என்றெல்லாம்கூட அவள் பார்க்கக்கூடாதாம் நாகம்மாவுக்கு அழுகை வந்தது. “அம்மா!” என்று விம்மினாள்.

    “அம்மான்னு இப்போ கத்தக்கூடாது. அப்புறம், குழந்தை ஒன்னை விட்டுவர மனசில்லாம தவிக்கும்!” பிரசவ வலி எடுத்திருந்தவளைத் தாதி மிரட்டுகிறாள்.

    “குழந்தைக்கும் தன்னை விட்டுத் தனியாகப் பிரிய மனம் வராதா?’ லேசான திருப்தி நாகம்மாவுக்குள். உடனே, தன் மனம் போன போக்கிற்காகத் தன்மேலேயே கோபம் எழுகிறது. `இது என்கூட இருக்கப்போவது இன்னும் சில நாட்களே!’ என்று தான் உருகியதோடு போகட்டும். அருமையாக வளர்த்த இக்கருவும் துயரப்பட வேண்டாம். வலி தாளாது, கண்களை இறுக மூடி, வாயை மட்டும் கோணுகிறாள்.
    திடீரென ஒரு நிம்மதி, உடல் லேசாகியதுபோல். தொடர்ந்து, பூனைக்குட்டி கத்துவதுபோல ஓர் ஒலி!

    குழந்தை பிறந்துவிட்டது என்று உணர்ந்தபோதே அச்சமும் அலைக்கழைத்தது. அவசரமாகக் கண்ணைத் திறந்தாள். சமநிலைக்கு வந்திருந்த வயிற்றைத் தன்னிச்சையாகத் தடவினாள். பக்கவாட்டில் கண் போயிற்று. வெறுமை — அவள் வயிற்றிலும், பக்கத்திலும். நாகம்மா விம்ம ஆரம்பித்தாள்.

    “இப்போ எதுக்கு அழுவறே? மொதல்லேயே எல்லாம் கேட்டுட்டுத்தானே ஒத்துக்கிட்டே? பேசாம தூங்குவியா!” பச்சைப்பிள்ளைக்காரி கண்கலங்கி, அவள் உடம்பு கெட்டுவைத்தால், தனக்கு வேலை அதிகமாகுமே என்ற எரிச்சல் தாதிக்கு. கண்ணை மூடிக்கொண்டாள் நாகம்மா. குழந்தையின் ஈனஸ்வரமான அழுகைக் குரல் இன்னிசையாக அவள் காதில் ஒலித்துக்கொண்டே இருக்க, அப்படியே உறக்கத்தில் ஆழ்ந்தாள்.

    “என்ன ராசப்பா? சக்கர நாற்காலி வாங்கிட்டாப்பல இருக்கு! சாப்பாட்டுக் கடை வெச்சிருக்கியா? நடக்கட்டும், நடக்கட்டும்,” ஆரவாரமாகப் பேசியபடி வந்தார் தரகர் பூபதி. “ஒன் பெண்டாட்டி எங்கே? கூப்பிடு!”

    வெந்த இட்லிகளைத் தட்டில் கொட்டிக்கொண்டிருந்த நாகம்மா அவர் குரலைக் கேட்டதும் பாய்ந்து வெளியே வந்தாள். “பிள்ளை எப்படிங்க ஐயா இருக்கு?”

    “அதுக்கென்ன! பெரிய இடத்துப் பிள்ளை! அதைப் பெத்தவங்க ஒங்களை தெய்வமாத்தான் நினைச்சுக்கிட்டு இருக்காங்க,” என்று அளந்தார். குரலைக் கனைத்துக்கொண்டு, “அதே மாதிரி இன்னொரு கேசில்ல! இதை நீங்க ஒத்துக்கிட்டா, பெரிய ஹோட்டலே வெச்சுடலாம்,” என்று ஆரம்பித்தார்.

    ராசப்பாவின் முகத்தில் லேசான ஆசை படர்ந்தது. விளங்காத பயலென்று தன்னை இப்போது பழிப்பவர்கள் தான் ஹோட்டல் முதலாளியானால் எப்படி மரியாதை செய்வார்கள் என்று கற்பனை பாய, உடல் நிமிர்ந்தது. சற்றே கெஞ்சலான பார்வையை மனைவியின்மேல் ஓடவிட்டான்.

    யாரும் சற்றும் எதிர்பாராவண்ணம், நாகம்மா தரகர்மேல் பாய்ந்தாள். “ஒங்களுக்கு ஒரு பெரிய கும்பிடு, சாமி. இந்த எடத்தைவிட்டுப் போயிடுங்க. என்னோட வயத்திலே சுமந்து, சுமந்து யாருக்கோ தூக்கிக் குடுக்க என்னால முடியாது. `தம்பிப் பாப்பா எங்கம்மா?’ன்னு எம்பிள்ளை கேக்கறப்போ எல்லாம் நான் துடிக்கிற துடிப்பு ஒங்களைமாதிரி ஆம்பளைங்களுக்கு எங்க புரியப்போகுது!” என்று நேரிடைத் தாக்குதலில் இறங்கினாள்.

    “நாகு!” தங்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியவரிடம் மரியாதைக் குறைவாகப் பேசுகிறாளே என்ற பதைப்புடன் அவளை அடக்க முயன்ற கணவனின் குரல் அவள் காதில் விழவில்லை. தன்பாட்டில் பேசிக்கொண்டே போனாள்.

    “அன்னிக்கு நாத்துன்னு சொன்னேன். ஆனா, நான் மண்ணில்லே. அது இப்பதான் புரியுது!” என்று விம்மியவள், “ஒரு செடியைப் பிடுங்கி நடறப்போகூட வேரோடக் கொஞ்சம் தாய்மண்ணையும் சேர்த்துத்தான் எடுப்போம். எனக்கு அந்த கொடுப்பினைகூட இல்லாம போச்சே! பிள்ளை முகத்தைக்கூட பாக்க முடியாத பாவி ஆயிட்டேனே!” என்று பெரிதாக அழ ஆரம்பித்தாள்.

    அவளுடைய ஆத்மாவின் ஓலத்தைப் புரிந்துகொள்ள முடியாது, “ஏதோ குழப்பத்திலே இருக்கீங்கபோல! நான் போயிட்டு, அப்புறமா வரேன்,” என்று எழுந்தார் தரகர்.

    “வராதீங்க. போங்க! பிள்ளை பெத்ததும், மாரிலே பால் கட்டிக்கிட்டு நான் துடிச்ச துடிப்பு ஒங்களுக்குப் புரியுமா?” வெறிபிடித்தவளாகக் கத்தினாள் நாகம்மா. “எங்களுக்கு இனிமே சோத்துக்குப் பஞ்சம் இல்லாம இருக்கலாம். ஆனா, நான் சாகிறவரைக்கும், `என் வயத்திலே சுமந்து பெத்த பிள்ளை எங்கே இருக்கோ, எப்படி இருக்கோ! அதைப் பாக்கக்கூட முடியலியே!’ன்னு என்னோட அடிமனசு குமுறிக்கிட்டே இருக்குமே! ஒங்க பணத்தால அதைச் சமாதானப்படுத்த முடியுமா? ஏன்யா? ஏழைங்கன்னா, பணந்தான் கிடையாது. உணர்ச்சிங்ககூட இருக்காதா?” வார்த்தை குழற முடித்துவிட்டுக் கதறினாள்.

    `படிச்சுட்டியா? சென்னைக்குப் போக ரெண்டு டிக்கெட் புக் பண்ணடடுமா, டியர்?’ மனைவியின் முகம் தெளிந்திருக்கிறதே என்ற உவகையுடன் கேட்டார் செல்வந்தர்.

    ‘நாடு விட்டு நாடு போய், வாடகைத் தாயெல்லாம் வேணாங்க. நம்ப மகிழ்ச்சிக்காக இன்னொரு பொண்ணை அழவிடறது நியாயமில்லே. இங்கேயே ஒரு குழந்தையை தத்து எடுக்கலாம்!’

    (மலேசிய சுதந்திர தின சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றது, 2005)

    Share