எறும்பின் சாபம்
க.பிரகாஷ், எம்.ஏ, எம்.பிஃல்,
தமிழ்த்துறை
தொழில் நுட்ப்பக் கள ஆய்வுப் பணியாளர்
பாரதியார் பல்கலைக்கழகம்
கோயம்புத்தூர் – 46
ஆசிரியர் : எறும்பும், ஈயும் நெறுங்கிய சினேகிதர். அது கிராமத்தில் விவசாயத் தொழில் செய்து வந்தது. ஈ வீட்டுவேலையும், எறும்பு விவசாயத்தையும் பார்த்து வந்ததுர்.
ஆசிரியர் : எறும்பு ஏறு ஓட்டுவதற்காக சென்றுவிட்டது. ஈ வீட்டில் சமையல் வேலை முடித்துவிட்டு, சுவையாக எதையாவது சமைப்போம் என்று பாயாசத்தை செய்து கொண்டு இருந்தது.
ஈ : என்னடா! ஏறு ஓட்டபோனவ இன்னும் காணம். சரி! வரட்டும். பாயாசத்தை அடுப்புல வெச்சேன் என்னாச்சினு தெரியல பாப்போம். வெந்து இருக்கமா?
ஆசிரியர் : ஏறு ஓட்டிவிட்டு வீட்டிற்கு வந்தது எறும்பு.
எறும்பு : எங்கடா அவன காணம், எங்க போயிருப்பான், வீட்டுக்குப் பின்னாடியும் இல்ல, அடுப்புல வேற என்னமோ வச்சிட்டு போயிருக்கான், எங்க போனாலும் சொல்லாம போகமாட்டானே. சரி! வரட்டும் உக்காரலாம்.
ஆசிரியர் : அந்த வழியில் வந்த கொசு
கொசு : எறும்பண்ணா அடுப்புல எதோ தீயுர வாசன அடிக்குதுப் பாருங்க.
ஆசிரியர் : எறும்பு அடுப்பைப் பார்க்க செல்கிறது.
எறும்பு : மாப்பிள என்ன விட்டுட்டு போயிட்டயேடா எனக்கு வேற யாருடா இருக்காங்க உன்னவிட்டா,
ஆசிரியர் : சினேகிதன், இறந்தது நினைத்து அழுது கொண்டு இருக்கிறது. அந்த வழியாக வந்த காகம் எறும்பை பார்த்து பேசுகிறது.
காகம் : எறும்பண்ணா, எறும்பண்ணா, இவ்வளவு நாளா நல்லா தானே இருந்த இன்னிக்கு என்னாச்சி, அழுதுட்டு இருக்க.
எறும்பு : என் சினேகிதன் இறந்து நான் அழுக, காக்கா உன் ஒரு கண்ணு குருடாக.
ஆசிரியர் : காக்கா கண்ணு குருடாகிவிட்டது. எப்பையும் போல அது வசிக்கும் பெரிய ஆலமரத்துல போய் உட்காந்துரிச்சி.
ஆலமரம் : காக்கா அண்ணா, காக்கா அண்ணா, இவ்வளவு நாளா நல்லா தானே இருந்த இன்னிக்க என்னாச்சி, ஒரு கண்ணு குருடாயி வந்துருக்க.
காகம் : ஈ செத்து எறும்பழ, என் கண்ணு குருடாக, உன் மரம் அடியோட சாய.
ஆசிரியர் : ஆலமரமும் சாய்ந்து விட்டது. அங்கு வசிக்கும் யானை இரவு எல்லாம் சுற்றி திரிந்து விட்டு ஓய்வுக்காக இந்த மரத்தடியில் தூங்குவது உண்டு. யானை ஆலமரத்தைப் பார்த்துப் பேசுகிறது.
யானை : ஆலமரமண்ணா, ஆலமரமண்ணா, இவ்வளவு நாளா நல்லா தானே இருந்த இன்னிக்க என்னாச்சி, உனக்கு இப்படி அடியோட சாஞ்சிகிடக்குற.
ஆலமரம் : ஈ செத்து எறும்பழ, காக்கா கண்ணு குருடாக, நான் அடியோட சாய, உன் தந்தம் உடைய.
ஆசிரியர் : யானையுடைய தந்தமும் உடைந்துவிட்டது. தினமும் தண்ணீர் குடிப்பதற்காக ஆற்றுக்கு போகும் அந்த யானையைப் பார்த்துப் பேசியது ஆறு.
ஆறு : ஆனையண்ணா, ஆனையண்ணா, இவ்வளவு நாளா நல்லா தானே இருந்த இன்னிக்கு என்னாச்சி, யாருகூட சண்ட போட்ட தந்த உடஞ்சி வந்துருக்க.
யானை : ஈ செத்து எறும்பழ, காக்கா கண்ணு குருடாக, ஆலமரம் அடியோட சாய, என் தந்தம் உடைய, உன் ஆற்று நீர் எல்லாம் வற்றிபோக.
ஆசிரியர் : ஆற்று நீர் எல்லாம் வற்றி போய்விட்டது. எப்போதும் இங்க தண்ணீரை எடுப்பதற்காக பொண்னி வருவாள். அவள் ஆறைப் பார்த்து பேசுகிறாள்.
பொன்னி : ஆறண்ணா, ஆறண்ணா, இவ்வளவு நாளா நல்லா தானே இருந்த இன்னிக்கு என்னாச்சி, எல்லாம் தண்ணீயும் நீயே குடிச்சுட்ட. அடி பாவி.
ஆறு : ஈ செத்து எறும்பழ, காக்கா கண்ணு குருடாக, ஆலமரம் அடியோட சாய, யானை தந்தம் உடைய என் ஆற்று நீர் வற்றி போக உன் இடை மணையாக.
ஆசிரியர் : பொன்னியின் இடை மணையாகிவிட்டது. பொன்னியைப் பார்த்து ராணி பேசுகிறாள். அடி என்னாடி பொன்னி, இவ்வளவு நாளா நல்லாதானே இருந்த இன்னக்கி ஏன் இப்படி உட்கார்ந்துகிட்ட இருக்க. பொன்னியை பார்த்து பேசுகிறாள் ராணி.
பொன்னி : ஈ செத்து எறும்பழ, காக்கா கண்ணு குருடாக, ஆலமரம் அடியோட சாய, யானை தந்தம் உடைய, ஆற்று நீர் வற்றி போக என் இடை மணையாக, உன் வாய் ஊமையாக.
ஆசிரியர் : ராணி ஊமையாகிவிட்டாள்.
இப்படி அக்காலக்கட்டத்டதில் இருந்து இன்று வரையிலும் ஓரறிவு உயிரில் இருந்து ஐந்தறிவு உயிர் வரைக்கும்மே சாபமிட்டால் பழிக்கும் என்பதே ஐதீகம். இனி வரும் காலங்களில் கணினி உலகமாக மாறினாலும், இக்கணினியை பயன்படுத்தும் போது தேவையில்லாத ஒன்றை பயன்படுத்தினால் வைரஸ் என்ற ஒன்று சாபமிட்டு அச்செயலை இழக்கச்செய்கிறது.
இப்படிக்கு சாபம்