Category: சிறுகதைகள்

கதைகள்

  • அன்னையர் தினம்

    கலையரசி

    “அம்மா! நாந்தாம்மா கெளரி பேசறேன்.”

    “என்னம்மா? காலங் கார்த்தால போன்?  மாப்பிள்ளை, குழந்தை எல்லாரும் செளக்கியம் தானே?

    ”எல்லாரும் நல்லாத்தான் இருக்காங்க.  ஒங்கக் குரல் ஏன் ஒரு மாதிரியா இருக்கு?  உடம்பு, கிடம்பு சரியில்லையா?  இரத்த அழுத்தம் நார்மலாத் தானே இருக்கு?

    ”அதெல்லாம் ஒன்னுமில்லை.  மணி எட்டாவுது.  இப்பத்தான் படுக்கையிலேர்ந்து எழுந்திருச்சேன்.  அதான் குரல் கம்மியிருக்குது.  விடிகாலையில எழுந்திருச்சி நான் யாருக்குச் சாப்பாடு கட்டப் போறேன்?  நீங்கல்லாம் போன பிறகு எனக்குச் சமைக்கப் புடிக்கலே.  சாப்பிடப் புடிக்கலே.  வர வர வாழ்க்கையே ரொம்ப வெறுமையா இருக்கு கெளரி!”

    ”ஏம்மா சலிச்சிருக்கிறீங்க?  இவ்ளோ நாள் ஓடியாடி வேலை செஞ்ச வரைக்கும் போதும். இனிமே நீங்க ஓய்வெடுக்கிற வயசு.  நல்லாத் தூங்கிச் சாப்பிட்டுட்டு சந்தோஷமா இருங்க. சொல்ல வந்த விஷயத்தை விட்டுட்டு என்னென்னவோ சொல்லிக்கிட்டுருக்கேன்.   இன்னிக்கு அன்னையர் தினம்! ஒங்களுக்கு வாழ்த்துச் சொல்லத் தான் கூப்பிட்டேன்.”

    ”அப்பிடியா? வர வர நாள், கெழமை எதுவுமே ஞாபகத்துல இருக்க மாட்டேங்குது.  வாழ்த்துக்கு ரொம்ப நன்றிம்மா”.

    ”சரிம்மா.  அவசரமா ஆபீசுக்குக் கிளம்பிக்கிட்டுருக்கேன். அப்பாவைக் கேட்டதாச் சொல்லுங்க.  அப்புறமா போன் பண்றேன்.”

    ”சரிம்மா.”

    ”யாரு போன்ல?”என்று கேட்ட கணவர் மணியிடம்

    ”நம்ம கெளரி தான்.  இன்னிக்கு அம்மா தினமாம். வாழ்த்துச் சொல்லக் கூப்பிட்டா,” என்றாள் காவேரி.

    ”அது சரி.  வெள்ளைக்காரனுங்க தான் ஒவ்வொன்னுக்கும் ஒரு நாளை ஒதுக்கி வைச்சிக் கொண்டாடுறாங்கன்னா

    நம்ம புள்ளைகளும் அதை அப்படியே காப்பியடிக்க ஆரம்பிச்சுட்டுதுங்களே.  இந்த மாதிரி பெத்த அம்மாவுக்கு வருஷத்துக்கு ஒரு நாள், போனாப் போவுதுன்னு அப்பாவுக்கும் ஒரு நாள்னு ஒதுக்கி, அன்னிக்கு அவசர அவசரமா ஒரு போன் பண்ணி வாழ்த்து சொல்றதோட தங்களோட கடமை முடிஞ்சிடுதுன்னு நினைக்குதுங்க. இந்த அவசர உலகத்துல பாசம், நேசம் எல்லாமே வெறும் சம்பிரதாயமா மாறிட்டு வருது காவேரி!

    ”சரி வுடுங்க.  அதுங்களுக்கும் ஆயிரத்தெட்டு வேலை.  இந்த மாதிரி ஒரு நாளை ஒதுக்கி வைச்சிருக்கிறதினாலேயாவது பசங்களுக்கு நம்ம ஞாபகம் வருதே, அதை நினைச்சி சந்தோஷப்பட்டுக்க வேண்டியது தான்.”

    ”அதுவும் சரிதான். அவ்ளோ வேலையிலேயும் எம் பொண்ணு எவ்வளவு ஞாபகமா போன் பண்ணுது பாரு? ஒம் பையனும்

    இருக்கானே! இதெல்லாம் அவனுக்கெங்கே ஞாபகம் இருக்கப் போவுது?

    ”சும்மா இருக்கிற என்னைத் தூண்டிவிட்டு என் வாயைப் புடுங்கிறதுல, அப்பிடி என்ன சந்தோஷம் ஒங்களுக்கு?    அவனுக்கு என்ன வேலையோ?   இந்த மாதிரி சம்பிரதாயமா வாழ்த்து சொல்றதெல்லாம், அறவே அவனுக்குப் புடிக்காது.”

    ”என்னமோ போ. பையனை விட்டுக் கொடுக்காம பேசக் கத்துக்கிட்டே.  மூணு வருஷத்துக்கு முன்னாடி வந்துட்டுப் போனவன் தான்.  குழந்தையும் பொறந்து ரெண்டு வயசு முடிஞ்சிட்டுது.  பேரக்குழந்தையை இன்னும் நாம கண்ணாலேயே பார்க்கல.  போட்டோவிலேயும் கம்ப்யூட்டரிலேயும் பார்த்துத் திருப்திப்பட்டுக்கிறதோட சரி.  ஒரு தடவை வந்து காட்டிட்டுப் போடான்னு சொன்னா, விமான டிக்கெட்டுக்குக்  கணக்குப் பார்த்துட்டுப் பயணத்தை ஒத்திப் போட்டுக்கிட்டே போறான். எப்பத்தான் வரான்னு பார்ப்போம்.”

    “சரி சரி..  போயி  வேலையைப் பாருங்க. அவனை ஏதாச்சும் குத்தம் சொல்லலேன்னா, உங்களுக்குப் பொழுது போகாது.”

    கணவரிடம் மகனுக்காகப்  பரிந்து பேசினாலும், பையன் இப்போது மிகவும் மாறிப் போய்விட்டான் என்ற உறுத்தல், அவள் உள்மனதிலும் இல்லாமலில்லை.  வெளி நாடு போன புதிதில்,  இரண்டு நாட்களுக்கொரு முறை போன் பண்ணி அம்மாவிடம் பேசவில்லையாயின், அவன் தலை வெடித்துவிடும்.

    சாப்பாட்டுக்குக் கஷ்டப்படுகிறான், எல்லாரையும் பிரிந்து தனிமையில் வாடுகிறான் என்று காவேரி தான்

    அவனை வற்புறுத்தி  26 வயதாகும் போதே, பெண் பார்த்துத் திருமணம் செய்து வைத்தாள்.  திருமணத்திற்குப்

    பிறகு இரண்டு நாட்களுக்கொரு  முறை இருந்த தொலைபேசி அழைப்பு, வாரத்திற்கொரு முறை என்றாகி இப்போதோ மாதத்துக்கொரு முறை என்றாகிவிட்டது.

    வேலை, குடும்பம், குழந்தைகள் என்றான பிறகு, அம்மாவுக்குப் போன் செய்ய அவனுக்கு நேரமின்றிப் போனது.

    “நான் பேசணும்னு நெனைக்கிறப்ப, உங்களுக்குப் பாதி ராத்திரி ஆயிடுது. சரி காலையில பண்ணிக்கலாம்னு நெனைப்பேன்.  வேலைப் பளுவில மறந்துடுதும்மா” என்பான் சமயத்தில்.

    மதியச் சாப்பாடு முடிந்து படுத்திருந்த போது, அழைப்பு மணி ஒலித்தது.  எழுந்து சென்று கதவைத் திறந்தவளுக்கு ஆச்சரியத்தில் தலைகால் புரியவில்லை.  ஆம்.  அவளது அன்பு மகன், தன் மகளுடன் வாசலில் நின்றிருந்தான்.

    ”என்னப்பா திடுதிப்பென்று சொல்லாமல் கொள்ளாமல்?”

    “அன்னையர் தினத்திற்கு உங்களுக்கு நேரிலேயே வாழ்த்துச் சொல்லணும்னு வந்தேன்மா”

    அப்பாவின் கால்களைக் கட்டிக்  கொண்டு, எட்டிப்பார்த்த குழந்தையைக் கண்டவள், “இது தான் நம்ம வீட்டுக் குட்டி தேவதையா? வாடாச் செல்லம்” என்று ஓடிப் போய் குழந்தையை வாரியெடுத்து உச்சி முகர்ந்து கன்னத்தில் முத்தம் பதித்தாள்.

    ’இப்போதாவது வந்து அம்மாவைப் பார்க்கணும்னு தோணிச்சே” என்று செல்லமாகப் பையனைக் கடிந்து கொண்டாள்.

    இரண்டாவது முறை மணி அடித்து விழிப்பு வந்த போதுதான், தான் கண்டது கனவென்று உணர்ந்தாள் காவேரி.

    கண நேரம் மகிழ்ச்சியில் திளைத்த மனதில், மறுபடியும் வெறுமை வந்து குடி கொண்டது.  ஒரு வேளை கனவில் கண்டது போலவே, மகன் உண்மையாகவே வந்து நின்றிருந்தால்?  அவசர அவசரமாக எழுந்து சென்று கதவைத் திறந்தாள்.

    வாசலில் பால்காரன் நின்றிருந்தான்.

    ”என்ன வேணும்? பாக்கெட்டைப் போட்டுட்டு போக வேண்டியது தானே? எதுக்கு மணி அடிச்சே?”‘

    ”எக்ஸ்டிரா பாக்கெட் வேணுமான்னு கேட்கத்தான்,”.

    ”ஒன்னும் வாணாம் போ”

    ”சும்மா போனா, ’எப்பவும் மணியடிச்சி கேட்டுட்டுப்

    போன்னு சொல்றீங்க? கேட்டாக் கோவிச்சிருக்கிறீங்க.

    இன்னிக்கு என்ன வந்துச்சி ஒங்களுக்கு?,”  முணுமுணுத்துக் கொண்டே சென்றான் பால்காரன்.

    திரும்பி வந்து படுத்த போது, தூக்கம் முற்றிலுமாக விடைபெற்றுப் போயிருந்தது.

    ”இந்தக் குழந்தைகள் வளராமல் தன்னுடனே இருந்திருக்கக் கூடாதா?” என்ற எண்ணம் தோன்றி மறைந்தது. மகனை உடனே நேரில் பார்க்க வேண்டும் போலிருந்தது.  என்ன தான் கணிணி காமிராவில் பார்த்தாலும், நேரில் பார்த்து ஆசையாய்த் தொட்டு அரவணைக்கும் ஆனந்தம் வருமா?

    மகனுக்குத் தன் மேலுள்ள  பாசத்தைக் கிண்டல் செய்யும் கணவரின் வாயை அடைப்பதற்காகவாவது, அவனிடமிருந்து  இன்று போன் வர வேண்டும் என அவள் மனம் ஏங்கியது.  எனவே மற்ற நாட்களில் போன் வரும் சமயங்களில் “முட்டி வலிக்குது, நீஙக் போய் எடுங்க,”. என்று அலுத்துக் கொள்பவள், அன்றுமுழுக்க ஒவ்வொரு முறை மணியடிக்கும் போதும் ஓடி ஓடிப் போய் எடுத்து ஏமாந்தாள்.

    வேகமாக ஊன்றி ஊன்றி  நடந்ததினால், முழங்கால் வீங்கிக் கொண்டு வலிக்கத் துவ்ங்கியது. மணி இரவு எட்டரைக்கு மேலாகி விட்டது.  சாதாரணமாக பையனிடமிருந்து எட்டு மணிக்குள் போன் வந்து விடும்.  நேரமாக ஆக, இனி போன் வராது என்ற எண்ணத்தில் மனம் சோர்ந்தது.

    ”ஏங்க!  மணி ஒம்பது ஆகப் போவுது.  தோசை ஊத்தி வைச்சிட்டேன்.  சீக்கிரம் சாப்பிட வாங்க.  ரொம்ப அசதியாயிருக்கு. படுத்தாப் போதும்னு இருக்கு உடம்பு”

    ”ஏன் கல்லை இறக்கிட்டே? ஒனக்குத் தோசை ஊத்திக்கலையா?”

    ”எனக்கு வேணாம்.  பசியில்லை”

    ”இராப்பட்டினி கூடாது. அதுவுமில்லாம வெறும் வயித்துல மாத்திரை போடக் கூடாது.  ஒரு தோசையாவது சாப்பிடு காவேரி,”

    ”ஒன்னும் வேணாம். நீங்க கம்முனு சாப்பிட்டுட்டுப் போயி படுங்க.  இது வல்லமையான கட்டை. ஒரு நாளைக்கு மாத்திரை போடலேன்னா, உசிரு போயிடாது.”

    மணி பதினொன்றிருக்கும்.

    ”ஏங்க ஏங்க.  போன் அடிக்குது.  கொஞ்சம் ஏந்திரிச்சி போயி யாருன்னு பாருங்க.”

    கணவரைத் தொட்டு எழுப்பினாள்  காவேரி.  ஆனால் அவரிடம்  எந்த அசைவையும் காணோம்.

    ”அதுக்குள்ளே தூங்கிட்டீங்களா?  படுக்கறதுக்குள்ளே எப்படித்தான் ஒங்களுக்குக் குறட்டை வருதோ?”

    சலித்துக் கொண்டே எழுந்து  சென்று ரிசீவரை எடுத்தவளின்  முகம்  மலர்ந்தது.

    ”எப்படிப்பா இருக்கே?  உமா எப்படியிருக்கா?  கொழந்தை நல்லாயிருக்காளா?  ரொம்ப சந்தோசம்பா. காலையில கெளரி கூட போன் பண்ணி வாழ்த்து சொன்னா. இன்னிக்குக் கண்டிப்பா நீ போன் பண்ணுவேன்னு ஒங்கப்பாக்கிட்ட சொல்லிக்கிட்டிருந்தேன்.

    எப்பப் பார்த்தாலும் வேலை வேலைன்னு சரியாச் சாப்பிடாம உடம்பைக் கெடுத்துக்காதே.  ஒரு தரம் கொழந்தையை அழைச்சிட்டு வந்து கண்ணுல காட்டிட்டுப் போ.  வாரத்துக்கு ஒருவாட்டியாவது மறக்காம போன் பண்ணு.  சரிப்பா. வைச்சுடு.  எல்லாரையும் கேட்டதாச் சொல்லு.”

    ”ஏங்க ஒங்களைத்தானே.  லண்டன்லேர்ந்து தம்பி போன் பண்ணி ரொம்ப…….. நேரம் பேசிக்கிட்டிருந்தான்.

    காலையிலேர்ந்து கடுமையான வேலையாம். நேரமே இல்லியாம்.  இன்னிக்கு எப்பிடியாவது எனக்கு வாழ்த்து சொல்லணுங் கிறதுக்காகவே ஞாபகம் வைச்சிருந்து இராத்திரி ஆனாலும் பரவாயில்லன்னு போன் பண்ணினானாம். பாவங்க எம்புள்ளை.  இப்பவாச்சும் ஒத்துக்கிறீங்களா, அவனுக்கு என்மேல பாசம் ஜாஸ்தின்னு”

    ”சரி. சரி.  ஒத்துக்கறேன். மனுஷனை நிம்மதியாத் தூங்க விடு.  நீயும் நிம்மதியாப் படுத்துத் தூங்கு.  எங்க எழுந்திருச்சிப் போறே?”

    ”சாப்பிடப் போறேன்.”

    ”பசியே இல்லேன்னு சொன்னே?”

    ”அப்ப இல்லை. இப்ப ரொம்பப் பசிக்குது.”

    மனைவியின் உற்சாகத்தைப் பார்த்துச் சிரிப்பு வந்தது மணிக்கு.

    காலையிலிருந்து மனைவி  தவித்த தவிப்பைக் கண்டு  வேதனைப்பட்டவர், ’அம்மாவுக்குப் போன் பண்ணி அன்னையர் தின வாழ்த்தைச் சொல்,’ என்று பையனுடைய அலைபேசிக்குக் குறுஞ்செய்தி அனுப்பியது தாம் தான், என்று கடைசி வரை  அவளிடம் சொல்லவேயில்லை.

    Share
  • பூக்களில் பேதமென்ன?

    அனாமிகா

    அகமதாபாத் மார்க்கெட்; காய்கறி வாங்கிக் கொண்டிருந்த சுமித்ராவின் தோளில் சிநேகமாய் ஓர் கை விழுந்ததும், திரும்பிப் பார்த்தாள்.

    “சுமித்ரா! என்னைத் தெரியலை?! நான் தான் ப்ரியா!! சென்னைல பார்த்திருக்கோமே” என சிரிக்க, சுமித்ராவுக்கு நினைவு வந்தது. கூடவே அந்த நினைவுகள்; அக்கினியாய் எப்போதும் அவள் மனதை வாட்டும் நினைவுகள் தலை தூக்க, கஷ்டப்பட்டு அடக்கி புன்னகை செய்து கேட்டாள்:

    “எப்பவோ பார்த்தது இல்லையா? அதான் சட்டுனு  ஞாபகம் வரலை; எப்படி இருக்கீங்க? எங்க இந்தப் பக்கம்?”

    “வெகேஷனுக்கு நார்த் இண்டியா டூர் வந்தோம்; இங்க என் மச்சினர் வீடு இருக்கு. அப்படியே இங்க வந்திருக்கோம். வண்டியில அவரும், பொண்ணும் வெயிட் பண்றாங்க.”

    ஃபார்மாலிட்டிக்கு தன்  வீட்டு முகவரியைக் கொடுத்து, கண்டிப்பாக வரும்படி அழைத்து விடை பெற்றாள் சுமித்ரா.
    **********************************

    அன்றிரவு. சுமித்ராவுக்கு உறக்கம் வரவில்லை. அவர் கண்டுபிடித்து விட்டார்.

    “என்ன சுமி? என்னாச்சு? ஏன் இப்படி டல்லா இருக்கே?”

    கணவர் கேட்டு முடிக்குமுன்பே சுமிக்கு கண்களில் நீர் கோத்து விட்டது.

    “இன்னிக்கு மார்க்கெட்-ல தெரிஞ்சவங்களைப் பார்த்தேன்; அவங்க வி.எஸ். ஸகூல்ல ….பழக்கமானவங்க….”

    திணறியபடி அழுது கொண்டே சொன்னாள்; அவருடைய பார்வை சுவரில் மாட்டியிருந்த புகைப்படம் மீது பதிந்தது.

    எத்தனையோ ஆயிரம் முறைகள் எண்ணிப் பார்த்தும் ஆறாத அந்த அக்கினி நினைவுகளில் மீண்டும் சுமியின் மனம் மூழ்கியது.

    இதே போன்ற ஒரு இரவு நேரத்தில் தான் அந்த ஃபோன் வந்தது; வி.எஸ் ஸ்கூல்-ல் படித்துக் கொண்டிருந்த சுமியின் மழலைச் செல்வங்கள் சத்யாவும், ரமேஷும் எக்ஸ்கர்ஷன் போன பஸ்  விபத்துக்கு உள்ளானதாக் வந்த ஃபோன்! அவர்கள் வாழ்க்கையே ஒரு கேள்விக் குறியானது!

    என்ன செய்து என்ன?  பெற்ற இரு பிள்ளைகளையும் விதியின் கொடுமைக்கு பலி கொடுத்த ஒரு தாயின் துயரமும், வருத்தமும் ஈடு செய்ய முடியாதது!!!

    அந்த ஒரு மாதம் சுமித்ரா பைத்தியமாகவே இருந்தாள்; வீடு முழுக்க இறைந்து கிடக்கும் பிள்ளைகளின் உடைகள், சாக்ஸ், புத்தகங்கள், விளையாட்டு பொம்மைகள்; துக்கம் கேட்டு வரும் உறவினர், நண்பர்கள்: வீட்டின் ஒவ்வொரு இன்ச்சிலும் அவர்கள் இழப்பு அவளை நெருப்பாய் சுட்டது. அவள் நிலையறிந்து அடுத்த மாதமே மாற்றல் வாங்கிக் கொண்டு இங்கே அகமதாபாத் அழைத்து வந்து விட்டார் அவள் கணவர்; இடத்தை விட்டு வர முடிவது போல, நினைவுகளையும் விட்டு விட்டு வர இந்த மனதால் முடியுமானால் எவ்வுளவு நன்றாக இருந்திருக்கும்?

    ஆயிற்று; நான்கு வருடங்கள் ஓடி விட்டன; அதன் பின் சென்னை பக்கம் திரும்பவே இல்லை. விதியின் மேல் கொண்ட கோபத்தை சுமித்ரா சமூகத்திடம் காட்டினாள். யாரிடமும் பழகுவதில்லை; அவளே விதித்துக் கொண்ட தனிமைச் சிறை!!

    அழுகையின் ஊடே எப்போது தூங்கினாள் என்று தெரியாமலே தூங்கி விட்டாள்.                                                          ****************************

    நாலைந்து நாட்கள் ஆயின. “இனிமேல் ப்ரியா வர மாட்டாள்” என்று ஒருவாறு சுமித்ரா மனம் தெளிந்து விட்டிருந்தாள்.

    சமையல் முடிந்து ஓய்வாக சுமித்ரா அமர்ந்திருந்தாள். அழைப்பு மணி அடித்தது.

    வாசலில் ப்ரியா, அவள் கணவர் மற்றும் குழந்தை!

    வலுக்கட்டாயமாக வரவழைத்த புன்னகையோடு வரவேற்று சுமித்ரா உள்ளே அழைத்துச் சென்றாள். குழந்தைக்கு நாலு வயசிருக்கும்.

    “வீணா, ஆண்ட்டிக்கு வணக்கம் சொல்லு” என்றதும் அழகாக கைகுவித்து வணக்கம் சொல்லியது; அதன் பின் ஒரு இடத்தில் உட்காராமல் வீடு முழுக்க நடந்து, வீணா கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டாள். ப்ரியாவின் கணவரும் உடன் சென்றார்.

    சுமித்ராவும் ப்ரியாவும் மட்டும் அமர்ந்திருந்தார்கள்; எதைப் பற்றி பேச வேண்டாம் என நினைத்து சுமித்ரா தவிர்த்தாளோ, சில நிமிஷங்களில் ப்ரியா அதைப் பற்றியே பேச ஆரம்பித்தாள்.

    “வி.எஸ். ஸ்கூல் ஆக்ஸிடெண்ட்டுக்கு அப்புறம் இங்க வந்துட்டீங்க இல்லியா?”

    சுமித்ரா எட்டிப் பார்த்த கண்ணீரை மறைத்து தலையாட்டினாள்.

    “உங்க பையன் நிகிலை கூட்டிட்டு வரலியா?”

    பேச்சை மாற்ற எண்ணி சுமித்ரா கேட்டதும், ப்ரியாவின் முகத்தில் சோகத்தின் நிழல்; கம்மலான குரலில், “அந்த ஆக்ஸிடெண்ட்டிலே நிகிலும் போய்ட்டான்”

    என்று சொல்ல, சுமித்ரா ஒரு நொடி அதிர்ந்து தான் போனாள்!!

    தன் பிள்ளைகளின் இழப்பு தெரிந்ததும் பிறகு எதையுமே சுமித்ரா தெரிந்து கொள்ளவில்லை; இப்போது தன் வேதனையையும், துக்கத்தையும் ப்ரியாவும் அனுபவித்திருக்கிறாள் என் தெரிந்ததும், அவளிடம் ஒரு பரிவு ஏற்பட்டது; கூடவே இப்போது தான் வீணா இருக்கிறாளே என்றும் தோன்றியது.

    “அப்புறமா தான் வீணா பிறந்தாளா?”

    “இல்லை” என ப்ரியா தலையாட்டினாள். சுமித்ராவுக்கு ஒன்றும் புரியவில்லை; ப்ரியாவே தொடர்ந்தாள்:

    “என்னைப் போல் நீங்களும் பாதிக்கப்பட்டவங்க; அதனால உங்க கிட்ட சொல்றேன். இல்லாட்டி நான் இதெல்லாம் யார் கிட்டவுமே சொல்றது இல்லை” என்ற ஒரு முன்னுரையோடு தொடர்ந்தாள்:

    “நிகில் போனப்புறம் எங்க வாழ்க்கையே இருட்டாயிடுச்சு; எனக்கு அதுக்கப்புறம் மறுபடி குழந்தை பிறக்க முடியாதுன்னு சூழ்நிலை. அப்ப திக்கு திசை தெரியாம முழிச்சிட்டிருந்தோம். ஒரு நாள் ‘பொம்முகுட்டி அம்மாவுக்கு’ ப்டம் பார்த்தப்போ, ஒரு யோசனை வந்தது; எனக்கும் அவருக்கும் இஷ்டம் இருந்ததாலே வீணாவை ஒரு அனாதை விடுதிலேர்ந்து முறையா தத்து எடுத்துக்கிட்டோம்; அப்ப அவளுக்கு ஒரு வயசிருக்கும்; வீணா வந்தப்புறம் மறுபடி எங்க வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் வந்திருக்கு. ஒரு குழந்தையோட சிரிப்புக்கு மட்டும் தான் எந்த துக்கத்தையும் மறைய வைக்குற சக்தி இருக்கு.”

    “ஆனா…ப்ரியா….யாரோ பெத்துப் போட்ட குழந்தையை வளர்த்தா, நம்ம கடைசி காலத்துல…” சுமித்ரா முடிக்கு முன்பே, ப்ரியா குறுக்கிட்டாள்.

    “கடைசி காலத்துல அப்பா, அம்மாவைக் காப்பாத்தாத பிள்ளைங்க அவங்களுக்கு பிறந்தவங்க இல்லையா? நம்ம சொந்தப் பிள்ளைங்க நம்மைக் காப்பாத்தலேன்னா, நாம அவங்க மேல வைச்ச பாசம் பொய்யாயிடுமா என்ன? அதே மாதிரி நினைச்சுக்க வேண்டியது தான். வீணா நாங்க தத்தெடுத்த குழந்தைன்னு தெரியக் கூடாதுன்னு நாங்களும் பெங்களூர் வந்து செட்டில் ஆயிட்டோம். ரொம்ப நெருங்கினவங்களைத் தவிர மற்ற

    எல்லாரும் வீணாவை எங்க குழந்தையா தான் நினைக்கிறாங்க. அது தான் எங்களுக்கும் சந்தோஷமா இருக்கு.”

    ஆவேசமாய் பேசியதில் மூச்சு வாங்க, ஒரு நிமிடம் நிறுத்தியவள்,

    “சுமித்ரா! நாம ஆசையா வளர்த்த செடி பட்டுப் போயிடுச்சு; ஆனா எத்தனையோ செடிங்க கவனிப்பார் இல்லாம கருகி கிடக்குது. அதுல ஒரு செடிய நாம வளர்த்தா என்ன? யோசிச்சுப் பாரு.

    நாமே விதை போட்டு வளர்த்தாலும், நர்ஸரிலேர்ந்து வாங்கிட்டு வந்து தோட்டத்துலே வச்சாலும் எல்லா செடிகளோட மலர்களும் மணம் பரப்ப தானே செய்யுது!”

    சுமித்ராவின் மனதில் புதிய தீர்மானம்!! அந்த மகிழ்ச்சியில் ஆமோதித்து புன்னகை செய்தாள்!!

    ஆம், பூக்களில் பேதமென்ன?
    *******************************

    Share
  • கைப்பாவை

    வெள்ளிக்கிழமை என்றாலே குதூகலம்தான்.  எப்படியும் காலை நேரம் முழுக்க அடுத்த வாரத்திற்கான முன்னேற்பாட்டுக் கலந்துரையாடல் கூட்டங்கள் இருக்கும். அவை நடந்து முடிந்து தத்தம் இருக்கைகளுக்குச் செல்லும் போது நண்பகல் உணவு வேளை வந்து விடும். வார ஈறில் நீ என்ன செய்யப் போகிறாய் எனக் கேட்பதும், நான் என்ன செய்யப் போகிறேன் எனச் சொல்வதிலுமாக ஓரிரு மணி நேரங்கள் கழியும். பிறகென்ன? வார ஈறும், அதையொட்டிய  விடுமுறை நாட்களும்தான். மகிழ்ச்சி!

    அந்நினைப்பினால் மேலிட்ட மனத் துள்ளாட்டத்தினூடாக வந்து கொண்டிருந்த என்னை, அலேக்காகத் தூக்கியது கமகம வாசனை. தகவல் தொழில்நுட்பப் பொறியாளராக நான் வேலை பார்க்கும் நிறுவனத்திலிருந்துதான் கமழ்ந்தடிக்கிறது அந்த நறுமணம்.

    நான் குடியிருக்கும் மிச்சிகன் மாகாணத்தில் இருக்கும் மார்ஷல் எனும் சிற்றூரிலிருந்து பதினேழாவது மைல் தொலைவில், டெட்ராய்ட் நகரிலிருந்து சிகாகோ செல்லும் விரைவுச்சாலையில் அமைந்திருக்கிறது கெலாக்( Kellogg Cereal Company )  தானியத்திண்டித் தொழிற்சாலை. இத்தொழிற்சாலை அமைந்திருக்கும் சிறுநகரான பேட்டில்கிரீக் நகர், சீரியல் சிட்டி என்றும் அழைக்கப்படுகிறது. எங்கள் நிறுவனத்தின் போட்டி நிறுவனமாகிய போஸ்ட் சீரியலும் இதே ஊரில்தான் அமைந்திருக்கிறது.

    கெலாக்  நிறுவனத்தை, வில் கீத் கெலாக் என்பவர் 1906ஆம் ஆண்டு நிறுவினார். அவரது தம்பியாகிய ஜான் ஹார்வே கெலாக் என்பவரே தானியத்திண்டி( cereal )யைக் கண்டு பிடித்தவர் என்று சொல்லிக் கொள்வதில் எங்களுக்கும் பெருமை. ஆங்கிலத்தில் சீரியல் எனப்படுகிற தானியத்திண்டி இல்லாத வீடு அமெரிக்காவில் கிடையாது. காலையிலேயே சமைக்கப்பட்ட உணவும் இறைச்சியும் உண்டு கொண்டிருந்த மேலைநாட்டைத் திருப்பிப் போட்டது தானியத்திண்டி எனச் சொல்லலாம். அதிலும் கெலாக் தானியத்திண்டிக்கென்றே ஒரு தனியிடம் சந்தையில் எப்போதும் உண்டு.

    வாகனத் தரிப்பிடத்தில் வாகனத்தை நிறுத்தி விட்டு நேராக என் அறைக்குச் சென்ற நான், மின்னஞ்சல்களைப் பார்த்து மறுமொழி கூற வேண்டியவற்றுக்கெல்லாம் பதில் மடல் அனுப்பினேன். அதன் பிறகு, அடுத்தடுத்து நடந்த கூட்டங்களில் முனைப்புடன் பங்கேற்றுக் கொண்டிருந்தேன். பொதுவாக கூட்ட அறைக்குள் என் அலைபேசியை எப்போதும் எடுத்துச் செல்வதில்லை. எப்படியாகிலும் அது என் கவனத்தைச் சிதற வைப்பதோடு மற்றவரது கவனிப்புக்கும் ஊறு விளைவிக்கும் என்பதாலேயே.

    தானியத்திண்டிக்கான சில்லறை வணிகத்தை இணையத்தினூடாக மேம்படுத்துவது எப்படி என்பதைப் பற்றி காரசாரமான விவாதம் நடந்து கொண்டிருந்தது. இடையிடையே அதற்கான மென்பொருள் கட்டமைப்பு குறித்த வினாக்களை நான் விடுத்துக் கொண்டிருந்தேன். அதே நேரத்தில் எங்கள் துறையின் நேர்முக உதவியாளர் மேரி அறைக்கு வெளியே நின்றபடி என்னைப் பார்த்துச் சைகை செய்து கொண்டிருந்தாள். இவள் எதற்கு என்னை அழைக்கிறாள் எனக் கோபமாகவும் இருந்தது; காரணத்தை அறியும் பொருட்டு ஆவலும் மேலிட்டது எனக்கு. அமைதியாக கூட்ட அறையினின்று வெளியேறினேன்.

    “என்ன மேரி? நான் முக்கியமான ஒரு கூட்டத்தில இருக்கேன். கொஞ்சம் பொறுத்திருக்கக் கூடாதா?”

    “மன்னிக்கணும் மணி. உன்னோட மனைவி சுமதி அழைப்புக்கு மேல அழைப்பு விடுத்து, உடனே உன்கிட்ட பேசியே ஆகணும்னு சொல்றாங்க!!”

    ஒரே குழப்பமாக இருந்தது. பக்கத்து ஊரான ஆல்பியனில் இருக்கும் மருத்துவமனையில் உடலியக்க மருத்துவராக வேலை பார்க்கும் என் மனைவி இந்நேரம் வேலைக்குப் போயிருப்பாள். மகள் அமிழ்தா குழந்தைகள் காப்பகத்தில் இருப்பாள். ஒரு வேளை ஊரிலிருக்கும் அம்மா, அப்பாவுக்கு உடல்நலக் குறைவு ஏதாவதா? எப்போதும் இல்லாதபடிக்கு என்னை எதற்கு இவள் அழைக்க வேண்டும்??

    அலைபேசி அறையில் இருக்கிறது. கையில் கடிகாரம் கட்டும் பழக்கமும் கிடையாது. மேரியிடமே நேரம் என்னவெனக் கேட்டுத் தெரிந்து கொண்டேன். காலை மணி பதினொன்று ஆகிறது. ஆக, இந்தியாவில் இரவு ஒன்பதரை மணி. சரி, முதலில் அம்மாவையே அழைத்துப் பேசி விடுவோமென நினைத்து நேராக எனதறைக்குச் சென்றேன். அலைபேசியினூடாக ஊரிலிருக்கும் எங்கள் வீட்டுக்கு அழைக்க, தொடர்பில் வந்த அப்பாதான் பேசினார்.

    “அப்பா, நான் மணி பேசுறேன். எதும் பிரச்சினையா?”

    “ஏம்ப்பா? நானும் அம்மாவும் இப்பதான் படுக்கலாம்னு விளக்கை அணைச்சோம். என்ன இந்த நேரத்துல?”

    “ஒன்னும் இல்லப்பா. எனக்கு எதோ போன் வந்திச்சின்னு இங்க சொன்னாங்க. சரி, அம்மாகிட்ட குடுங்க!”

    அம்மாவிடம் சுருக்கமாகப் பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்து விட்டேன். இனி சுமதியை அழைக்க வேண்டும். மருத்துவமனையில் அலைபேசிகளுக்கு செயலிழப்புச் செய்து விடுவார்கள். எனவே சுமதியின் அலைபேசிக்கு நேரிடையாக அழைப்பு விடுத்துப் பயனில்லை. சுமதியின் அலுவலக உதவியாளரை அழைத்து, சுமதியை என் அலைபேசிக்கு அழைப்பு விடுக்கச் சொன்னேன். ஓரிரு மணித்துளிகளில் மருத்துவ மனையிலிருந்து அழைப்பு வருவதைக் காட்டிக் கொடுத்தது அலைபேசியின் எண் காட்டி.

    “அலோ!”

    “சார், சுமதி இஸ் நாட் இன் டுடே!!”

    அதிர்ச்சியாக இருந்தது. சுமதி, வேலைக்குப் போகலையா? ஏன்?? போகும் வழியில் எதுவும் விபத்து நேர்ந்திருக்குமோ? இவளுக்கு மட்டுந்தான் பிரச்சினையா? குழந்தை அமிழ்தா??  ஒரு மாதிரி நெஞ்சு படபடத்தது. இது போன்ற நேரத்தில் நெஞ்சுத் துடிப்பு அதிகரிப்பது இயல்புதானே? சுமதியின் அலைபேசி எண்ணுக்கே அழைப்பு விடுத்தேன்.

    ”அலோ!”

    “ஏங்க, எத்தினிவாட்டி கூப்பிடுறது? போனை எடுக்க மாட்டீங்களா??”

    “சொல்றா! சாரி, நான் மீட்டிங்ல இருந்தேன்.  எதும் பிரச்சினையா? என்ன ஆச்சி??”

    “ஒன்னும் இல்ல. கொஞ்சம் எனக்கு ஒடம்புக்கு செரியில்ல. ஆஃப் எடுத்திட்டேன்!”

    “ஆமா!  நீ டுயூட்டில இருப்பன்ட்டு அங்க கூப்ட்டிருந்தேன்; சொன்னாங்க!”

    “ஆமா, நீங்க அங்க கூப்பிட்டிருப்பீங்கல்ல? நான் வீட்டிலதான இருக்கன்னு நினைச்சி, அமிழ்தாவை லஞ்ச்சுக்கு நான் பிக் அப் செய்யறேன்னு சொல்லிட்டு வந்தங்க. இப்ப எனக்கு ரொம்பவும் முடியலை. நீங்க போக முடியுமா?”

    “இவ்வளவுதானா? நான் ரொம்ப டென்சன் ஆயிட்டேன். ஆனா, அமிழ்தாவுக்கு கார் சீட்டு??”

    “அதான் கழட்டிப் போட்ட இன்ஃபேன்ட் சீட்டை, உங்க கார்ல பின்னாடி வெச்சிருக்கீங்கல்ல?”

    “கரெக்ட்! அப்ப,  நூன் டைம், பனிரெண்டுக்கு போயி அழைச்சிட்டு நேரா வீட்டுக்கு வந்துடுறேன்!”

    “வேண்டாம். வெளியிலயே சாப்பிட்டுட்டு, விட்டு கூப்பிட்டுட்டு வந்திடுங்க.  வெள்ளிக் கிழமைங்றதால, சாயுங்காலம் அஞ்சு மணிக்கு முன்னமே பிக் அப் செய்திடணுங்க!”

    மகள் அமிழ்தாவுடன் வீட்டிற்குச் சென்று சுமதியுடன் இருந்து விட்டு வரலாம் என நினைத்தேன். அது நடக்கவில்லை எனும் ஏமாற்றத்துடன் கேட்டேன், “ஏன்டா, உனக்கு ஒடம்புக்கு என்ன பிரச்சினை?”

    “ஏங்க, இதென்ன கேள்வி? கல்யாணம் ஆயி ஆறு வருசம் ஆச்சி. இன்னுமா? வீட்டுக்கு தூரம், ரொம்பப் படுத்துது; அதான்! அவ வீட்டுக்கு வந்தா, என்ன மம்மி, ஏது மம்மீன்னு கேட்டுக் கொடைஞ்செடுப்பா!! வெளியில எதனாவது வாங்கிக் குடுத்து சமாளிங்க!!”

    “சாரிடா; நாம் பாத்துக்குறேன்!”

    மகள் அமிழ்தாவுக்கு மூன்று வயதுக்கும் மேலாகிறது. மிகவும் சுட்டி. எதையும் முழுமையாகத் தெரிந்து கொள்ளுமட்டும் கேள்விக் கணைகளால் துளைத்தெடுப்பாள். நண்பகற் பொழுது அவளுடன் கழியப் போவதை எண்ணி மகிழ்ச்சியெனக்கு. ஆனால் என்னை எதிர்பார்த்திருக்க மாட்டாள். அவள் என்னைக் கண்டு இன்ப அதிர்ச்சி கொள்ளப் போவது உறுதி. நாளைக்கு அருகில் இருக்கும் காலாமசு ஆற்றில் படகு சவாரிக்கு அழைத்துப் போகிறேன் எனச் சொல்லி இருக்கிறேன். அதை நினைத்தாலே எனக்கும் குதூகலம் பிறக்கிறது. அழைத்துப் போக வேண்டும். ஆற்றங்கரைப் பூங்காவில் படங்கள் நிறைய எடுத்து, அம்மா அப்பாவுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.  இந்த மாதத்தில் செய்தால்தான் உண்டு. அடுத்த மாதமான ஆகஸ்டில் இருந்து மிச்சிகன் மாகாணத்தில் குளிரோ குளிர்தான்.

    பதினொன்றரை மணிக்கெல்லாம்  அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு, மார்ஷல் குழந்தைகள் காப்பகத்துக்கு  சென்று சேர்ந்துவிட்டேன். கண்ணாடித் தடுப்புச் சுவரில் பார்க்கிறேன். இடது கையில் கைப்பாவையான க்யூட்டெடியுடன் இருக்கையில் அமர்ந்திருந்தவள் என்னைப் பார்த்து விட்டாள். இன்னும் பத்து மணித்துளிகள் இருக்கிறது உணவு இடை வேளைக்கு.  என்னைக் கண்டதில் அவளால் அங்கு இருக்க முடியவில்லை என்பது நன்றாகத் தெரிகிறது.

    அவள் வருவதற்கு முன்பாக அவளது கைப்பாவையான ’க்யூட்டெடி’யைப் பற்றிச் சொல்லியாக வேண்டும். நாங்கள் சார்லட் பெருநகரத்தில் குடியிருந்த போது அவளது முதல் பிறந்த நாளைக் கொண்டாடினோம். அப்போது ஆந்திர நண்பர் வெங்கட்டா பரிசாகக் கொடுத்த துணியாலான சிறு கரடி பொம்மைதான் அது.  அமிழ்தாவின் கைக்கு அடக்கமாக மூன்று இஞ்ச் உயரத்தில் இருக்கும். குளிக்கும் போது தவிர, எப்போதும் அதைத் தனது இடது கையில் கவ்விப் பிடித்தபடி இருப்பாள்.

    இந்த இரண்டரை ஆண்டுகளாக அமிழ்தாவிடம் சிக்குண்ட அந்தப் பொம்மை, படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறது. அழுக்குப் படிந்து, கிழிந்து, நைந்து, சிதையும் தருவாயில் இருக்கிறது க்யூட்டெடி. உறக்கத்தில் கூட கை நழுவிவிடக் கூடாது; அவ்வளவுதான், அழுது ஆர்ப்பாட்டம் செய்து விடுவாள். அந்த அளவுக்கு க்யூட்டெடியோடு அமிழ்தா ஒருமித்துப் போயிருக்கிறாள்.

    இதோ நண்பகல் மணி பனிரெண்டு ஆகிவிட்டது. எழுச்சியோடு ஓடி வந்து கொண்டிருக்கிறாள் என் செல்லம் அமிழ்தா.

    “அப்பா, அப்பா, அம்மா எங்கப்பா?”

    “அம்மா, டூட்டிக்குப் போயிட்டாங்கப்பா!”,  வேறு வழியில்லை; பொய் சொல்லித்தான் ஆக வேண்டும். அல்லாவிடில் வீட்டுக்குப் போக வெண்டுமென அடம் பிடிப்பாள்.

    “இம்… இம்…  என்னை வந்து பிக் பண்ணுறேன்னு சொன்னாங்க?”, மழழையோடு குழைந்தாள்.

    “இல்ல தங்கம்; எதோ அசஸ்மெண்ட் இருக்குன்னு வரச் சொல்லிட்டாங்களாம். அதான் அப்பா வந்திருக்கன்ல?”, ஒரு பொய் பல பொய்களைப் பெற்றெடுக்கும் என்பது இதுதான் போலிருக்கு.

    ஒரு மணி நேரம் கரைந்ததே தெரியவில்லை. அருகிலிருந்த ஜேசன் டெலி உணவகத்தில் இருவருமாக உண்டு மகிழ்ந்தோம். அவளுக்கு உருளைக்கிழங்கு நொறுக்கு என்றால் மிகவும் விருப்பம். அவள் விருப்பமே எனது விருப்பமும். நன்றாக அடித்து நொறுக்கினோம். போதாக்குறைக்கு அவளது அம்மாவும் அருகில் இல்லை. அல்லாவிடில், கொலஸ்டிரால், அது இது என்று படுத்துவாள்.

    ”அப்பா, வீட்டுக்கு போலாம்ப்பா!”, சொல்லி வாயைக் கூட மூடவில்லை. வெடுக்கென தனது இடது கையை இழுத்து, அக்கையிலிருக்கும் க்யூட்டெடிக்கு அரும்பிஞ்சு இதழ்களால் முத்தம் கொடுத்தாள்.

    “இல்லடா கண்ணு. அப்பாவுக்கு இன்னும் ரெண்டு மீட்டிங் இருக்கு; ஆபிசுக்குப் போகணும். ஃபோர் தெர்ட்டி, நான் வந்திடுவேன், சரியா? ”

    “போங்கப்பா!”, சலித்துக் கொண்டாள்.

    “நாளைக்குதான் நாம காலாமசு(Kalamazoo) போறம்ல? போட் ரைடு, பிஷ்ஷிங் எல்லாம் இருக்கல்ல??”

    அவ்வளவுதான், கதிரவன் கண்ட மலர் போல முகம் மலர்ந்தது. அதே மலர்ச்சியுடன் காப்பகத்தில் விட்டுவிட்டு வந்து அலுவலகத்தை அடைந்ததும், சுமதிக்கு அழைத்து விபரத்தை தெரியப்படுத்தி ஆயிற்று.  அதன் பிறகு அலுவலக நண்பர்களிடம் வார ஈறுக் களிப்புகள் குறித்தான பேச்சு நீடித்தது. பேச்சின் போது காலாமசு ஆற்றைப் பற்றியும் தகவல்கள் பரிமாறப்பட்டது.

    காலாமசு ஆறு மற்றும் ஆற்றுப்படுகையானது கிட்டத்தட்ட 11000 ஆண்டுகளாக மனிதர்களால் பல்வேறு பணிகளுக்குப் பாவிக்கப்பட்டு வருகிறதாம். அதிலிருந்தே தெரிகிறது இதுவொரு செவ்விந்தியர்களின் களம் என்பது. மிச்சிகன் ஏரியில் கலக்கும் இந்த ஆறானது மிகச்சிறிய ஆறாக இருந்தாலும், அப்பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரமாக, ஜீவநாடியாக இன்றும் விளங்குகிறது.

    மாலை நான்கரை மணிக்கெல்லாம் மார்ஷல் காப்பகத்திற்குப் போய்ச் சேர்ந்து விட்டேன். நல்ல உறக்கத்தில் ஆழ்ந்திருந்தாள் அமிழ்தா. என்னைக் கண்டதும், வகுப்பு ஓம்புநரான ஜில் கோஃபர் புன்னகைத்தாள். எழுப்பி விடட்டுமா என சமிக்கையிலேயே வினவ, நானும் சரியெனும் பாங்கில் தலையசைத்தேன்.

    வாரக் கடைசி நாளான வெள்ளிக்கிழமை தோறும், குழந்தைகள் படுத்துறங்கும் படுக்கை விரிப்பு, மாற்று உடுப்பு உள்ளிட்ட குழந்தைகளின் உடைமைகளைப் பையில் போட்டுக் கொடுத்தனுப்பி விடுவார்கள். அவற்றைச் சலவை செய்து மீண்டும் திங்கட்கிழமை கொடுத்தனுப்ப வேண்டும். அமிழ்தாவை எழுப்பி,  அவர்களே அவளது உடைமைகளை எல்லாம் பையில் போட்டுக் கொடுத்தபடியால் நான் எதையும் கவனித்திருக்கவில்லை. அப்பாவைக் கண்ட குதூகலத்தில் அமிழ்தாவும் எழுந்து துள்ளலாய் ஓடி வந்து என்னுடன் சேர்ந்து கொண்டாள்.

    காப்பகத்திற்கும் எங்கள் வீட்டிற்கும் ஆறு மைல் தூரம்.  வீட்டிற்குச் செல்லும் வழியில், காலாமசு ஆறு, அதன் படகுத்துறை, மீன்பிடித்துறை, நாளை யாரெல்லாம் அங்கு வருவார்கள் முதலானவற்றைப் பற்றி நாங்கள் இருவரும் பேசிக் கொண்டே சென்றோம். அமிழ்தாவுக்கு மிக்க மகிழ்ச்சி. எனது அலுவலக நண்பர் ஸ்டீவ் என்பாரின் மகள் ஜேனட்டும் வருவாள் எனச் சொன்னதில் அவளுக்குக் கூடுதல் மகிழ்ச்சி.

    வீட்டிற்குள் நுழைந்து, இருக்கையில் அமர்ந்த நான் எனது கவ்வுகழலிகளைக் கழற்ற எத்தனிக்கிறேன். ‘ஓ’வென்று பெரும் ஓலம். பேரொலி கேட்டெழுந்த அவளது அம்மா சுமதியும்  என்னவென்று கேட்டுக் கொண்டே முன்னறைக்கு வந்தாள். சற்று நேரத்திற்கு அமிழ்தா என்ன சொல்கிறாளென்றே  எனக்குப் புரியவில்லை.

    “மம்மீ… ஐ வான்ட் இட்!  ஐ வான்ட் மை க்யூட்டி, ஐ வான்ட் மை க்யூட்டி!!”

    புரிந்து விட்டது. சத்தியமாக நான் இப்போதுதான் கவனிக்கிறேன். அவளது கையில் எப்போதுமிருக்கும் அவளது அருமைப் பாவையான க்யூட்டெடி இருக்கவில்லை. என் சொகுசுந்து வாகனத்துக்கு நாலுகால்ப் பாய்ச்சலில் உடனே விரைந்தேன். அரக்கப்பரக்கத் துழாவுகிறேன். பின்னிருக்கையில் இருக்கும் குழந்தைகளுக்கான சிற்றிருக்கையைக் கழற்றுகிறேன். கார் முழுவதையும் பார்க்கிறேன். பார்த்த இடங்களை மீண்டும் பார்க்கிறேன். எனக்கு அது அகப்படவே இல்லை.

    “அம்மாக்காரியும்  சேர்ந்து என்னை வறுத்தெடுப்பாளே? கடவுளே, நான் இனி என்ன செய்வேன்??”, நினைத்துக் கொண்டே மீண்டும் வீட்டுக்குள் ஓடினேன். அவர்கள் கொடுத்தனுப்பிய பையினைக் கமுத்தித் தேடிக் கொண்டிருந்தாள் சுமதி. அவளுக்குப் பக்கத்தில் பெருங்குரலெடுத்து அழுதபடியே அமிழ்தா.

    ”ஏங்க, குழந்தையப் பார்த்துக் கூட்டிட்டு வர முடியாதா? இதுல இல்ல. சரி நடங்க, கார்லதான் இருக்கும். நான் பார்க்குறேன்!”, சினம் தலைக்கேறிய சுமதி, அழுது கொண்டே அமிழ்தா, கடுப்புடன் நான் என எல்லாருமாகப் போனோம் வாகனத் தரிப்பிடத்திற்கு. எல்லாவற்றையும் பிரித்துப் போட்டுத் தேடினாள் சுமதி.

    “என்னங்க, இங்கயும் காணோம்?”

    “சென்ட்டர்லயே எடுக்காம வந்துட்டம் போலிருக்கு?”

    “ஏங்க, வெள்ளிக்கிழமை நாளுங்க இது? எல்லாம் போயிருப்பாங்க?”

    அவ்வளவுதான். சங்குசங்கென்று குதிக்க ஆரம்பித்தாள் அமிழ்தா. ஒரு கட்டத்தில், டமால் எனத் தரையில் விழுந்து படுத்துக் கொண்டாள்.

    “புதுசு வேணா வாங்கித்….”, நான் முடிக்கவே இல்லை.  இருவரும் ஒருசேர அவரவர்பாட்டுக்கு இரைந்தார்கள்.

    “இல்ல, அது வேலைக்காவாது. ஏற்கனவே நாம அது ட்ரை பண்ணுனதுதானே? மண்டே வரைக்கெல்லாம் வெயிட் பண்ணினா அவ்ளோதான். கொழந்தை அழுது அழுது காய்ச்சலாகி ஃபிட்ஸ் வந்தாலும் வந்திடும்! போயிப் பார்க்கலாம் வாங்க!!”

    வீடு திறந்தது திறந்தபடி இருந்தது; வீட்டினுள் கிடந்தது கிடந்தபடி இருந்தது. எப்படிக் காரை எடுத்தேன்; எப்படிப் போய்ச் சேர்ந்தேன் என்றே எனக்குத் தெரியாது. கேவிக் கேவி அழுது கொண்டிருந்த அமிழ்தா விசும்பலுக்கு மாறியிருந்தாள். அவ்வப்போது மூச்சிரைப்பு வந்து போனது. பார்க்கப் பரிதாபமாய் இருந்தது. காலையில் சுமதியிடமிருந்து அழைப்பு வந்த போதே எனக்கு மனதில் சஞ்சலம். யாரையோ இழந்து பிரிந்த மனத்துயரம் மேலிட்டது. அப்படி ஏதும் நிகழவில்லை என்ற ஆறுதல் வெகுநேரம் நீடித்திருக்கவில்லை.

    முன்பொருநாள் வீட்டிலிருக்கும் சோபாவுக்குள் அகப்பட்டுக் கொண்ட க்யூட்டெடியைக் கண்டு பிடித்தெடுப்பதற்கு ஓரிரு மணி நேரம் ஆகிவிட்டிருந்தது. அதற்குள் அழுது ஆர்ப்பாட்டம் செய்ததில் காய்ச்சல் கண்டு படுத்துவிட்டாள் அமிழ்தா. அந்த நினைவெல்லாம் வந்து ஆட்டுவிக்கிறது இப்போது. அரும்பாவை க்யூட்டெடியை விட்டுவிட்டு எப்படி இருக்கப் போகிறாள்? மனம் முழுதும் கப்பிய சோகம் நிரம்பிப் பொங்கி இப்போது என் முகத்தில் படர்ந்து கொண்டிருந்தது.

    அமிழ்தாவைப் பார்க்கவே எனக்கு தயக்கமாய் இருக்கிறது.  சுமதி, அங்கிருந்த பாதுகாப்புப் பணியாளரிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தாள். நான் காருக்கே திரும்பி வந்து தேடத் துவங்கினேன். இது சும்மா ஒரு போங்காட்டம். அவர்களுக்கு அருகில் இருக்கக் குற்ற உணர்வும் அச்சமும் என்பதுதான் உண்மை.

    பாதுகாப்புப் பணியாள் உட்பட அவர்கள் மூவரும் என்னருகே வந்து கொண்டிருக்கிறார்கள். அமிழ்தா இன்னும் விசும்பிக் கொண்டுதானிருக்கிறாள்.

    “டேனியல்கிட்டப் பேசினேன். அவர் இன்னும் அரை மணி நேரத்துல வர்றாராம். நீங்க லன்ச்சு முடிச்சிட்டு ட்ராப் பண்ணும் போது கையில வெச்சிருந்தாளா?”

    “ஆமா. இருந்திச்சி.  ரூமுக்குள்ள போயி உட்கார்ந்தப்புறங்கூட முத்தங் குடுத்திட்டு இருந்ததை நான் பார்த்தேன்!”

    “ம்”, அவளுக்கு இன்னமும் என் மேல் கோபம் என்பதை அந்த ஒற்றை எழுத்து பதிலே காட்டிக் கொடுத்தது.

    பாவம் அமிழ்தா, அது குழந்தை. முதல் பிறந்த நாளுக்குப் பின்னர் இந்த இரண்டரை ஆண்டுகளுக்கும் சற்றுக் கூடுதலாய், 365 கூட்டல் 365, எழுநூற்று முப்பது, இதிலொரு 75 நாட்கள்,  ஆகமொத்தம் எண்ணூற்று ஐந்து நாட்கள் க்யூட்டெடியோடு பின்னிப் பிணைந்தபடி இருந்தவள் எப்படித்தான் தாங்குவாளோ இப்பிரிவை? பிஞ்சு மனம் நொந்து கொண்டிருப்பதைப் பார்க்கச் சகிக்கவில்லை எனக்கு.

    டேனியல் வந்து சேர்ந்து விட்டான்.  அவனிடம் சிரமத்திற்கு வருத்தம் தெரிவித்தாள் சுமதி.  குழந்தையின் மனநலமும், மகிழ்ச்சியுமே எங்களுக்கு முக்கியம் எனப் பரிவாய்ச் சொல்லிக் கொண்டே எங்கள் எல்லாரையும் உள்ளே அழைத்துச் செல்கிறான். உள்ளே கும்மிருட்டாக இருக்கிறது. ஒவ்வொரு இடத்திலும் ஆள் நடமாட்டம் கண்ட விளக்குகள் தன்னிச்சையாய் ஒளிரத் துவங்குகிறது. அமெரிக்காவில் எல்லாமே தானியக்கம்தான்.

    என்னையறியாமல் ஆனைமலை மாசாணியம்மனை நினைத்து வேண்டிக் கொண்டிருக்கிறேன். “ஆத்தா, உன்னை விட்டா எனக்கு யார் இருக்கா? எப்படியாவது அதை இங்க இருக்கப் பண்ணு!”, திரும்பத் திரும்ப மனம் இதையே சொல்லிக் கொண்டிருக்கிறது.

    அமிழ்தாவின் வகுப்பறைக்கு முன்னால் வந்தாயிற்று. இனி அறைக்கதவைத் திறக்க வேண்டும். நடைபாதையில் இருக்கும் மின்விளக்கின் வெளிச்சம் கண்ணாடிச் சுவரையும் ஊடுருவி உள்ளே பாயத்தான் செய்கிறது. எனினும் அந்த பாவையது கண்களுக்கு அகப்படவில்லை. டேனியலைப் பார்க்கிறேன். அவன் கையிலிருக்கும் சாவிக் கொத்தில் ஒரு பத்துப் பதினைந்து சாவிகள் இருக்கும் போலிருக்கிறது. ஒவ்வொன்றாய்ப் போட்டுத் திறக்க முயற்சிக்கிறான்.  நேரம் கூடக் கூட மனத்தின் பாரமும் வலியும் கூடிக் கொண்டே போகிறது. எனக்கே இப்படியென்றால் அந்த பச்சைமண்ணுக்கு? ”மாசாணியாத்தா, அது கிடைக்கலைன்னா நீ ஒரு பொய்! வேசக்காரி!!”, என் வலியெல்லாம் சினமாகி ஆனைமலை ஆத்தாளின் மேல் பாயத் துவங்கியது.

    அப்பாட, ஒருவழியாய் டேனியல் அறைக்கதவை திறந்து விட்டான். அமிழ்தா துள்ளிக் குதித்து உள்ளே ஓடினாள். அதற்குள் டேனியல் மின்விளக்குக்கான சொடுக்கியைத் தட்டினான். ஒளி ஒளிரவும், அமிழ்தா குதித்தெழவும் சரியாய் இருந்தது. பிற்பகலில் அவள் உறங்கிக் கொண்டிருந்த இடத்திற்கருகே, சுவரோரத்தில் கிடந்தது க்யூட்டெடி.  முத்த மழையில் நனைந்து பரவசமாகிக் கொண்டிருந்தது க்யூட்டெடி.   காலையில் எழும் போது கண்ட என் மனைவியின் கண்களை, அதற்குப் பிறகு இப்போதுதான்  முதன்முதலாய்  எதிர்கொள்கின்றன செம்மாந்து ஒளிரும் என் கண்கள்.

    “சாரி மாமாய்!”, என்னைப் பார்த்துக் கனிவாய்ச் சொன்ன சுமதியின் கண்கள் சோர்வாயும் களைப்பாயும் இருந்தன. நான் டேனியல் கைகளைப் பற்றி எதோ சொல்லிக் கொண்டிருக்கிறேன் மகிழ்ச்சி பொங்க. வாசலுக்கு வந்ததும், டேனியலுக்கு ஹக் தர வேண்டுமென அமிழ்தா சொன்னாள்.

    அவர்களிடம் விடை பெற்ற பின்னர், வீட்டிற்கு வரும் போது இரவு ஏழு மணி ஆகிவிட்டிருந்தது.

    அடுக்களைக்குச் சென்று சூடாய்க் காப்பி போட்டு இரண்டு கோப்பைகளில் எடுத்துக் கொண்டு போகிறேன்.  இடது கையானது அவளது அன்புப்பாவை க்யூட்டெடியை இறுகப் பற்றிக் கொண்டிருக்க,  வலதுகைக் கட்டை விரல் சூப்பிய நிலையிலிருந்து விட்டுச் சற்று விலகியிருக்கிறது. தன் ஒரு காலைத் தன் தாயின் மேல் அவள் போட்டிருக்க, தாயின் ஒரு கை தன் மகளை வாஞ்சையாய்ப் பிடித்தபடி தூங்குகிறார்கள் இருவரும்.

    இன்னும் அங்கு விடிந்திருக்காது. அதனாலென்ன? அழைத்துப் பேச வேண்டியதுதான். ஆமாம், எனக்கு என் அம்மா வேண்டும் போல இருக்கிறது.

    Share
  • பலா மரங்கள்

       தமிழ்த்தேனீ                

     

    இந்த ஜென்மத்திலே நான் அவளைத் திரும்பிக் கூட பாக்கமாட்டேன். எவ்ளோ திமிர் இருந்தா இப்பிடி ஒரு காரியத்தை செய்வா அவ ?     என் தங்கை கல்யாணியும்  அவ புருஷன் ரமேஷும் என்னா குறை வெச்சாங்க இந்தப் பொண்ணு ரேணுகாவுக்கு . பாத்துப் பாத்து வளத்தாங்க, கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்தாங்க, ஒரே  பொண்ணு ஒரே பொண்ணுன்னு தலைமேலே வெச்சுக் கூத்தாடினாங்க, செல்லமோ செல்லம் அப்பிடி ஒரு செல்லம்.

    இந்தப் பொண்ணு ரேணுகா மேலே எவ்ளோ பாசம் வெச்சிருந்தாங்க ரெண்டு பேரும், நான் அப்பவே சொன்னேன்  அளவுக்கு மீறி செல்லம் குடுக்காதீங்க அப்புறம் மதிக்கமாட்டான்னு ,கேட்டாங்களா. இப்போ அவதிப்படறாங்க.  இந்தப் பொண்ணு ரேணுகா இப்பிடிச் செஞ்சிடிச்சே.

    எவ்ளோ தைரியம் இருந்தா  நான் அவனைத்தான்  கட்டிக்குவேன் , நீங்க  சம்மதிக்கலேன்னாக்   கல்யாணமே செஞ்சிக்க மாட்டேன் அப்பிடீன்னு சொல்லுவா . ஆனாலும் இந்தக் காலத்துப் பசங்களுக்கு ரொம்பத் திமிருங்க  , நம்மை யாரு என்னா செய்ய முடியும் நாமதான் சம்பாதிக்கிறோமே அப்பிடீங்கற திமிரு . இந்தத் திமிரும் ,தைரியமும் எங்கேருந்து வருதுன்னே தெரியலை.

    உங்களுக்குத் தெரியுமா  கல்யாண ஏற்பாடெல்லாம் செஞ்சு வெச்சிட்டு அப்பா அம்மாகிட்டே சொல்றாளாம் நாளன்னிக்கு கல்யாணம் நீங்க ரெண்டு பேரும்  வந்து நடத்தி வையுங்க. எனக்கு வேற வழி தெரியலேன்னு .

    அக்கா நான் என்னா செய்யறதுன்னே தெரியலே. நாளைக்கே எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சுன்னா எனக்கு மானமே போயிடும். பொண்ணை சரியா வளக்கலேன்னு  என்னைத்தான் குதறி எடுப்பாங்க உறவுக்காரங்க அத்தனை பேரும். அப்பிடீன்னு அழறா கல்யாணி.

    இனிமே அந்தப் பொண்ணு ரேணுகா இந்த வீட்டு வாசப்படியை மிதிக்கக் கூடாது.  என்று கத்திக் கொண்டே இருந்தாள் ருக்மணி.

    ஆனது ஆயிப் போச்சு . இந்தக் காலத்துப் பசங்க சொன்னா கேக்குமா, அதுவும் வேலைக்கு போற பொண்ணு. நாலு பேருகிட்ட  பழகணும் . அப்போ இப்பிடி ஏதாச்சும்  ஆகும் , என்னா செய்யறது. என்றார் சொக்கலிங்கம்.

    நீங்க சும்மா இருங்க ! வேலைக்கு போனா என்னா நாலு பேருகிட்ட பழகினா என்னா? நம்ம குடும்ப பாரம்பரியம் இன்னா, தகுதி என்னான்னு தெரியாம எது வேணா செய்யலாமா? எனக்கு வர ஆத்திரத்துக்கு  அப்பிடியே போயி கன்னத்திலே ரெண்டு அறைவிட்டாத்தான் மனசு அடங்கும் போல இருக்குது.

    .என்னாலே ஜீரணிக்கவே முடியலைங்க. நீங்க எப்பிடித்தான் எல்லாத்தையும் கேட்டுட்டு இப்பவும் நிதானமா இருக்கீங்களோ எனக்கு புரியவே இல்லே என்றாள் ருக்மணி.

    இதோ பாரு நாம கத்தி ,பதறி என்னா ஆகப் போகுது . எல்லாம் அது இஷ்டத்துக்கு நடக்குதுங்க. சரி நாம கல்யாணத்துக்கு போக வேணாம், நீ கத்தி உடம்பைக் கெடுத்துக்காதே. என்றார் சொக்கலிங்கம்.

    நான் எப்பிடிங்க போவேன் கல்யாணத்துக்கு . போகமாட்டேன், நீங்களும் போகக் கூட்து சொல்லிபுட்டேன் . வரவர இந்தக் காலத்துப் பசங்களுக்கு  எல்லாமே அவசரம். எதிலேயும் நிதானமில்லே. கண்டதே காட்சி கொண்டதே கோலம்னு அலையுதுங்க.

    மூணு மாசமா நானும் பாத்துகிட்டுதான் இருக்கேன்  . உன் தங்கை கல்யாணி போன் செஞ்சு பேசும்போது  என்ன விஷயம்னு நான் கேட்டா ஒண்ணுமில்லேங்க ,இதெல்லா பொம்பளைங்க சமாச்சாரம் அப்பிடீன்னு மழுப்புவே.  அப்புறம் மறைவாப் போயி நின்னுகிட்டு கண்ணைத் துடைச்சிக்குவே . கவனிச்சிகிட்டுத்தான் இருக்கேன். சரி நமக்கெதுக்கு வம்புன்னு நானும்  தள்ளிப் போயிடுவேன். 

    ஆனாலும் என் மனசுக்குள்ளே இது ஏதோ விவகாரம்னு ஒரு பக்ஷி சொல்லிகிட்டே இருந்துது.   கல்யாணிகிட்டே நீ பேசும்போதெல்லாம்  உன்னையறியாமே நீ கவலைப்படறது எனக்கு புரிஞ்சுது. என்னதான் நீ சிரிப்பா முகத்தை வெச்சிகிட்டாலும் நான் உன்னோட பெட்டர் ஹாஃப் தானே எனக்குத் தெரியாதா. இருந்தாலும் நீயே சமாளிச்சு சரி செஞ்சிடுவேன்னு நம்பி இருந்தேன்.

    சரி விடு  நாம என்னதான் செஞ்சாலும் ஒவ்வொரு விஷயத்துக்கும் அதுக்குன்னு ஒரு தலையெழுத்து இருக்கு. மாத்த முடியாது.  சரி இதெல்லாம் மனசிலேருந்து தூக்கிப் போட்டுட்டு போயி கொஞ்ச நேரம் தூங்கி ரெஸ்ட் எடு. காலையிலேருந்து வேலை செஞ்சு களைச்சுப் போயிருக்கே என்றார் சொக்கலிங்கம்.

    முடியலைங்க நிம்மதியா தூங்க முடியலே  இந்தப் பொண்ணு செஞ்ச காரியம் என்னையும் கல்யாணியையும்  தூங்க விடாம செஞ்சிருச்சு என்று பேசிக்கொண்டே இருந்தவள்  அயற்சியில் அப்படியே உறங்கிப் போனாள் ருக்மணி. அவளுக்கு போர்த்திவிட்டுவிட்டு வந்து  கூடத்தில் உட்கார்ந்தார்  சொக்கலிங்கம்.

    தொலைக் காட்சியில் சிறப்புச் செய்திகள் பார்த்துக் கொண்டிருந்த  சொக்கலிங்கம். எழுந்து சமையலறைக்குப் போய்  சுடச்சுட காப்பி போட்டு எடுத்துக் கொன்டு வந்து ருக்மணி  எழுந்திரு இந்தக் காப்பியைக் குடி என்று அவளிடம் காப்பிக் கோப்பையை நீட்டினார்.

    தொலைபேசி அழைத்தது  கல்யாணிதான் பேசுவான்னு நெனைக்கிறேன் என்றபடி  ரிசீவரை எடுத்து சொல்லு கல்யாணி என்றாள்  ருக்மணி.   தொலைபேசியில் பேசிவிட்டு சொக்கலிங்கம் அருகே வந்து உட்கார்ந்து  யாரு பேசினா தெரியுமா ! என்றாள் ருக்மணி. 

    அதெல்லாம் இருக்கட்டும் முதல்லே காப்பியைக் குடி ஆறியே போச்சு.நான் வேணா போயி சுடவெச்சிக் கொண்டுவரட்டுமா என்றார். வேணாங்க இப்பிடியே குடிக்கறேன் என்றபடி கடகடவென்று காப்பியைக் குடித்தாள் ருக்மணி

    இதைக் கேளுங்க ரேணுகாவே  பேசிச்சு !  அவ எல்லா விஷயத்தையும் சொன்னா. கேக்கக் கேக்க  அவ சொல்றதிலேயும் நியாயம் இருக்குறா மாதிரிதான் தெரியுது. தப்போ தவறோ ஏதோ தெரியாத்தனமா காதலிச்சிட்டோம். கல்யாணம்தானே செஞ்சிக்கப் போறோம் . இல்லேன்னா என் வாழ்க்கையே கெட்டுப் போகாதா? அப்பிடீங்கறா.

    அவ என்ன செய்வா சின்னப் பொண்ணு பாவம். பெரிய மனுஷி மாதிரி பேசறாங்க. பெரியம்மா நீங்களும் பெரியப்பாவும்தான்  பெரியவங்களா இருந்து கல்யாணத்தை நடத்தி வைக்கணும் அப்பிடீங்கறா..  நாம வளத்த குழந்தையா இப்பிடி இவ்ளோ விவரமா பேசுதுன்னு ஆச்சரியமா இருக்கு என்றாள் ருக்மணி. 

    நீ என்ன சொல்றே  என்றார்  சொக்கலிங்கம்.

    இதெல்லாம் பொம்பளைங்க சமாசாரம் , சொன்னாலும் உங்களுக்குப் புரியாது,  நீங்க உடனே கிளம்புங்க நாம நல்லி சில்க் கடைக்குப் போயிட்டுஅப்பிடியே ஜீஆர் டீ தங்க மாளிகை கடைக்கும் போகணும். எல்லாத்தையும் நானும் நீங்களும்தான் செய்யணும்னு ரேணுகா  சொல்றா.  பாவங்க அந்தப் பொண்ணு ,

    ஆனது ஆய்ப்போச்சு இப்போ விட்டுக் கொடுத்துட்டோம்னா அந்தப் பொண்ணு போயி வாழப் போற இடத்திலே மரியாதை இருக்காது. அதுனாலே  கல்யாணிகிட்டேயும் அவ புருஷன் ரமேஷ் கிட்டேயும் பேசி ஒப்புக்க  வெச்சு உறவுக்காரங்க எல்லாரையும் அழைச்சு நல்லபடியாக் கல்யாணத்தை நடத்தி வைக்கணும் சீக்கிரம் கிளம்புங்க நிறைய வேலை இருக்கு  என்றாள் ருக்மணி.

    சரிம்மா இதோ கிளம்பறேன் என்றார் சொக்கலிங்கம் புன்சிரிப்புடன். 

                                                                                             சுபம்

    Share
  • ரத்தப் பிச்சை

     

    முகில் தினகரன்

    அந்த ஆஸ்பத்திரி வராண்டாவில் திரும்பிய திசையெல்லாம் கரை வேட்டி மனிதர்கள் குவிந்திருந்தனர். கல்லூரியில் படிக்கும் தொகுதி எம்.எல்.ஏ.வின் மகன் பைக் விபத்தில் ஏகமாய் அடிபட்டு எமர்ஜென்ஸியில் உயிருக்குப் போராடியபடி கிடக்க அவனது அரிய வகை ரத்தம் தேடி கட்சித் தொண்டர்கள் நாலாத்திசையிலும் அலையோ அலையென்று அலைந்து கொண்டிருந்தார்.

    ‘த பாருங்கப்பா…எம்.எல்.ஏ.வர்றதுக்கு எப்படியும் மதியம் ஆய்டும்…அதுக்குள்ளார எப்படியாவது ரத்தம் ஏற்பாடு பண்ணியாகணும்!” சற்று சீனியரான ஒரு கறை வேட்டி சொல்ல

    ‘ப்ச்…பசங்க காத்தால இருந்தே அதுக்காகத்தான் அலைஞ்சிட்டிருக்காங்க…கெடைக்கவே மாட்டேங்குது!”

    திடீரென்று கூட்டத்தில் சலசலப்பு.

    ‘என்னடாது…தலைவர் இப்பவே வந்துட்டாரா?” கேட்டபடி சீனியர் கரை வேட்டி திரும்ப

    எங்கிருந்தோ ஓடி வந்த ஒருவன் ‘அண்ணே….அதே குரூப் ரத்தத்தோட ஒரு ஆள் வந்திருக்கான்..தம்பிக்கு ரத்தம் தரச் சம்மதம்னு சொல்லுறான்!…ஆனா….”

    ‘என்னடா ஆனா?…பணம் கிணம் நெறைய எதிர் பார்க்கறானா?”

    ‘அதில்லைண்ணே….அவனைப் பார்த்தா ஆள் பரதேசி மாதிரி இருக்கான்…அவன் போய் நம்ம தலைவர் பையனுக்கு…..ஜீரணிக்க முடியலைண்ணே!”

    அப்போது அங்கு வந்த மூத்த டாக்டர் ‘இங்க பாருங்கப்பா…வீ ஆர் டாக்டர்ஸ்…எங்களுக்கு உயிரைக் காப்பாத்தணும்கற கடமையிருக்கு….அதனால…நீங்க ‘யெஸ்…ஆர்  நோ” சொல்லுற வரைக்கெல்லாம் நாங்க காத்திட்டிருக்க வேண்டிய அவசியமில்லை…பேஷண்ட் கன்டிஷன் ரொம்ப சீரியஸாகிட்டிருக்கு!…ஸோ…நாங்க வந்திருக்கற அந்த நபரைச் செக் பண்ணப் போறோம்….ரத்தம் ஓ.கே.ன்னா…இம்மீடியட்டா ஆபரேஷனை ஸ்டார்ட் பண்ணப் போறோம்!”

     

    கண்டிப்புடன் சொல்லி விட்டு நகர்ந்தார் டாக்டர்.  கரை வேட்டிகள் குழப்பத்தில் செய்வதறியாது நின்றன.

     

    ‘ரத்தம் பொருந்திடுச்சாம்….ஆபரேஷன் ஆரம்பிச்சிட்டாங்க!”

     

    ஒரு மணி நேரத்திற்குப் பிறகு ‘ஆபரேஷன் சக்ஸஸ்…பையன் பொழைச்சிட்டான்” என்கிற தகவல் அங்கிருந்தோரையெல்லாம் மகிழ்ச்சி வௌ;ளத்தில் ஆழ்த்திய போது எம்.எல்.ஏ.வந்து சேர்ந்தார்.

    வந்தவுடன் பிரத்யேக அனுமதி பெற்று தான் மட்டும் சென்று மகனைப் பார்த்து விட்டுத் திரும்பினார்.  நடந்தவற்றை டாக்டர் வாயிலாகவும் கட்சித் தொண்டர்கள் மூலமாகவும் தெரிந்து கொண்ட எம்.எல்.ஏ. ‘எங்கே அந்த மனிதர்?…நான் அவரை உடனே பார்க்க வேண்டும்!…என் மகனின் உயிரைக் காப்பாற்றிய அந்த மாமனிதரைப் பார்த்து ஏதாவது செய்யணும்!…என் குலக் கொழுந்தைக் காலனிடமிருந்து மீட்ட அந்தக் கோமகனுக்கு கோவில் கட்டா விட்டாலும்…கோமேதகத்தைக் கொட்டிக் கொடுக்கா விட்டாலும் குன்றி மணியளவு நன்றி காட்ட ஏதாவது செய்தாகணும்!” அரசியல்வாதி என்பதைத் தன் பேச்சில் அவர் நிரூபித்தார்.

    ‘அய்யா…அதோ அந்த மரத்தடி பெஞ்சில் உட்கார்ந்திட்டிருக்கார் பாருங்க?…அவர்தான்!’ சீனியர் கரை வேட்டி தன் சின்ஸியாரிட்டியைக் காட்டியது.

    ‘அடப்பாவிகளா…உதிரம் தந்து உதவிய உத்தமரை உதாசீனப்படுத்தி உச்சி வெயிலில் உட்கார வைத்து விட்டீர்களே இது நியாயமா?” கேட்டபடியே அந்த மரத்தடிக்கு விரைந்து அந்த மனிதரை நெருங்கி அவர் முகத்தைப் பார்த்த எம்.எல்.ஏ.வின் முகம் சட்டென்று மாறியது.

     

    ‘நீ…நீ…உன்னைய இதுக்கு முன்னாடி எங்கியோ பார்த்திருக்கேனே!”

     

    ‘என்ன எம்.எல்.ஏ.அதுக்குள்ளார மறந்திட்டியா?…சாலையோரமா நடந்து பள்ளிக்கூடம் போய்க்கிட்டிருந்த என் பத்து வயது மகனை வேகமா பைக்குல வந்து உன் மகன் இடிச்சுக் கொன்னப்ப….என்கிட்ட ‘கேசெல்லாம் வேண்டாம்…ஆயிரம் தர்றேன்…லட்சம் தர்றேன்”னு பேரம் பேசினியே?…மறந்திட்டியா?”

     

    தன் கட்சித் தொண்டர்கள் மற்றும் அங்கு கூடியிருந்த பொது மக்கள் எதிரில் அந்த மனிதர் அப்படிப் பேசியதில் கோபமுற்ற எம்.எல்.ஏ. ‘என்னப்பா வம்பு பண்ணணும்னு வந்திருக்கியா?”

     

    ‘ம்ஹூம்….பிச்சை போட வந்தேன்…போட்டுட்டேன்…கௌம்பறேன்”

     

    அவன் பேச்சு புரியாத எம்.எல்.ஏ. அவனை ஊடுருவிப் பார;க்க,

     

    ‘என் மகனைக் கொன்ன பயலுக்கு ரத்தப் பிச்சை போட வந்தேன்…போட்டுட்டேன்”

     

    கரை வேட்டிகள் கோரஸாய் ‘டா….ய்!” எனக் கத்த

    ‘ச்சூ….கத்தாதீங்கய்யா….இனிமே உங்க தலைவரு பையன் வாழுற வாழ்க்கையே நான் போட்ட பிச்சைதான்…இது போதும்…காலம் பூராவும் உங்க எம்.எல்.ஏ. நொந்து சாக…”

    சொல்லிவிட்டு நகர்ந்தவனை அவமானமாய்ப் பார்த்தார் எம்.எல்.ஏ.

    (முற்றும்)

    Share
  • ரிஷி கர்பம்

    தமிழ்த்தேனீ-

     

    அமெரிக்காவின் நியூயார்க் நகரின் சரவணபவன் ஹோட்டலில் எதிர் மேஜையில் உட்கார்ந்து   மற்றவர்களைப் பற்றிக் கவலைப்படாமல்   எதிரொலி கேட்கும் அளவுக்கு உரக்க சிரித்து மகிழ்ந்து கொண்டிருந்தனர் அந்த நான்கு பெண்மணிகளும். அவர்கள் உட்கார்ந்திருந்த மேஜையில்  பலவிதமான அறுசுவை உணவுகள் பரப்பி வைக்கப் பட்டிருந்தன. 

    ஹோட்டல் பணியாளர் பவ்வியமாய் குனிந்து அவர்களுக்கு வேறெதுவும் வேணுமா என்று கேட்டுவிட்டு நகர்ந்தார். அது எப்பிடி இவங்க மட்டும் மட்டும் எந்த நாட்டிலே சாப்பிட்டாலும் ஒரே விதமான தரமான சுவையான உணவு வகைகளை கொடுக்கிறாங்க  என்று பேசிக்கொண்டே  அனுபவித்து சாப்பிட்டுக்கொண்டே ஆரவாரமாய்  நகைச்சுவையாகப் பேசி சிரித்துக் கொண்டிருந்தனர் அந்த நால்வரும். திடீர் திடீரென்று சுழன்று அடிக்கும் கடற்காற்றைப் போல அவ்வப்போது  அவர்களின் சிரிப்பொலி அந்த இடத்தையே மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திக் கொண்டிருந்தது. 

    அவர்கள் பின்னால்  அமைதியாய் உட்கார்ந்திருந்த  ஒரு அமெரிக்கக் குடும்பம் இவர்கள் பேசுவது புரியாவிட்டாலும் இவர்களின் ஆரவாரமான கலகலப்பான சிரிப்பால் கவரப்பட்டு  அவர்களும் இவர்களை ரசித்து  மென்மையாக புனிசிரிப்புடன் இவர்களையே பார்த்துக்கொண்டிருந்தனர். 

    பக்கத்து மேஜையில் இருந்து சாரதா வெகுநேரமாக இவர்களையே பார்த்துக் கொண்டிருந்துவிட்டு ஒரு நிமிஷம் இருங்க இதோ வரேன் ,  அவங்ககிட்ட     கேட்டுட்டு வரேன் என்று கணவர் சதாசிவத்திடம் சொல்லிவிட்டுக் கிளம்பினாள். 

    சதாசிவம்  வேணாம்மா  நமக்கெதுக்கு,  அவங்க ஏதோ ஜாலியா இருக்காங்க. அதிலே தலையிட நாம யாரு , வேணாம் போகாதே என்று  சொல்லிக் கொண்டே இருந்தார் . சாரதா அதையெல்லாம் காதிலேயே போட்டுக்கொள்ளாமல் அந்த மேஜையின் முன் போய் நின்றாள். 

    சதாசிவம்  பயந்த பார்வையுடன் பதைபதைப்புடன் உட்கார்ந்திருந்தார்.  யாரா இருந்தாலும் அதைப் பத்திக் கவலைப்படாமல்  மனசிலே என்ன கேக்கணும்னு  தோணுதோ அதைக் கேட்டுவிடும் குணம் அவளுக்கு.  அதைப் பற்றி சதாசிவத்துக்குத் தெரியும் , சொன்னாலும்  கேட்க மாட்டாள். என்ன நடக்கப் போகிறதோ என்று பயந்துபோய் அவர்களையே பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார்  அவர். 

    வெளிநாட்டுக்கு வந்திருக்கோம் ,இங்க வந்தும் இதெல்லாம் தேவையா என்று அவருக்கு கோவமாய் வந்தாலும் , ஓரளவுக்கு மேல் அடக்கினால் உணர்ச்சி வசப்பட்டு நீங்க  சும்மா இருங்க  என்று ஒரு சொல்லில் அடக்கிவிடுவாள். இங்கே எல்லார் முன்னிலையிலும் மானம் போகும். அதற்கு பயந்து  வெற்றுப் பார்வையுடன் உட்கார்ந்திருந்தார் அவர். 

    சாரதா அவர்கள் மேஜையின் முன்னால் சென்று அவர்களையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். சிரித்துக் கொண்டே இருந்தவர்கள் சாரதாவின் அருகாமையை உணர்ந்து அவளை ஏறிட்டனர். 

    சாரதா ஏதோ கேட்பதும் அவர்கள் அதற்கு பதில் சொல்வதும் சுற்றி இருந்தவர்கள் பேசும் சத்தத்தில் சதாசிவத்துக்கு காதில் விழவில்லை. 

    திடீரென்று அந்த நான்கு பெண்மணிகளில் ஒருவர் இவரை நோக்கி ஒரு நிமிடம் இங்கே வர முடியுமா என்று அழைப்பது தெரிந்தது.  சரி நாம் எதிர் பார்த்தது நடந்து போச்சு என்று உணர்ந்து பலி ஆடு போல் அவர்கள் மேஜையை நோக்கி நகர்ந்து அவர்கள் அருகே சென்றார் , இங்க உக்காருங்க  என்று  பக்கத்தில் காலியாய் இருந்த நாற்காலியை காட்டி அவரையும் உட்காரச் சொன்னாள் சாரதா. அவள். உட்கார்ந்தார் சதாசிவம். 

    அந்த நான்கு பெண்மணிகளில் மூத்தவளாகத் தெரிந்த பெண்மணி நீங்க இந்தியாவிலேருந்து வந்திருக்கீங்களா நெனைச்சோம்  இவங்க இங்கே வந்து எங்களைக் கேக்கும் போதே நெனைச்சோம் என்றாள். அந்தக் குரலில் இருப்பது இளக்காரமா,ஏளனமா இல்லை கோபமா என்று புரியாமல் மன்னிக்கணும் நான் அப்பவே சொன்னேன், இதெல்லாம் கேக்காதே அதெல்லாம் அவங்க தனி விஷயம்னு இவ கேக்கலை என்றார் பரிதாபமாய். 

    அது எப்பிடி முடியும், நம்ம கண்ணுலே படும்போது கேட்டுத்தானே ஆகணும் இதிலென்ன தப்பு ஒருத்தருக்கு  ஒருத்தர் கேட்டுக்கறதுதானே , நாமெல்லாம் ஒரே நாடு.  என்ன இருந்தாலும்  வெளிநாட்டுலே இருக்கும்போது நம்ம நாட்டு மக்களைப் பார்த்தா  ஒரு சந்தோஷம் என்றாள்  சாரதா . 

    ஆமாம் நாங்களும்  இந்தியாவிலேருந்துதான் வந்திருக்கோம்,  சென்னையிலே எங்க வீடு என்று பதில் கூறினாலும் மனதுக்குள் போச்சு எல்லாம் போச்சு நம்ப நட்டோட மானத்தையே வாங்கிட்டா இவ என்னும் எரிச்சல் மனதுக்குள் மண்டினாலும் வெளியே அதைக் காண்பித்துக் கொள்ளாமல் லேசான புன்னகையுடன் ,  நீங்க இதெல்லாம் ஒண்ணும் பெரிசா எடுத்துக்காதீங்க இவ என்னோட வொய்ஃப். மனசிலே எதையும் வெச்சிக்க மாட்டா என்றார்  சாரதாவை விட்டுக்கொடுக்காத பாணியில். 

    சார் நாங்க நாங்களும்  இந்தியாவிலேருந்துதான் வந்திருக்கோம், நம்ம கல்ச்சர் இருக்கே அதை யாராலேயும்  மாத்த முடியாது. எந்த நாட்டுக்கு போனாலும் நாம மட்டும் நம்ம பழக்க வழக்கத்தை மாத்திக்காம அப்பிடியே இருப்போம். 

    சதாசிவம் ஒரு அசட்டுப் புன்னகையுடன்  ஆமா  என்றார் பலகீனமான குரலில்.   உங்க வொய்ஃப் என்ன கேட்டாங்க தெரியுமோ என்று கேட்டுவிட்டு நிறுத்தினாள் அந்தப் பெண்மணி ,  சதாசிவம் இல்லே அங்கே தூரத்தில  இருந்தேனா காதுலே விழலே என்றார் பரிதாபமாய். 

    கடல் கடந்து இவ்ளோ தூரம் வந்தும் உங்க வொய்ஃப் அப்பிடியே இருக்காங்க, ஒரு வகையிலே பாத்தா அது நல்லதுதான்னு தோணறது என்றாள்.   

    இந்தப் பட்டுப் புடவை இந்த நாட்டிலே கிடைக்கறதான்னு கேக்கறாங்க.? 

    இல்லே இந்தியாவிலே சென்னையிலே  நல்லி சில்க்கிலே எடுத்தேன்னு சொன்னேன், அதிலே ஒரு விஷயம் ரொம்ப முக்கியம். நல்லி சில்க்லே இந்த டிசைன் புடவையை எடுக்கும் போதே அந்தக் கடைக்காரர் சொன்னார் ,இந்தப் புடவையைக் கட்டுங்க பாக்கறவங்க எல்லாரும் எங்கே எடுத்தீங்கன்னு கேப்பாங்க, அப்பிடிக் கேக்கலேன்னா அவர் பேரையே மாத்தி வெச்சிக்கறேன்னு சொன்னார். நல்ல வேளை அவர் பேரை மாத்தி வெச்சிக்க அவசியமில்லாம செஞ்சிட்டாங்க உங்க வொய்ஃப் சாரதா . 

    நல்ல ரசனையான  பார்வைங்க உங்க வொய்ஃபுக்கு !அதெப்பிடிங்க  இவங்க இதைக் கவனிச்சிட்டு அதே மாதிரி வந்து கேக்கறாங்க. எனக்கு பெருமையா இருக்கு என்றாள் அந்தப் பெண்மணி. என்ன இருந்தாலும் நாம உடுத்தற ஆடையை ,அல்லது நகையைப் பாத்துட்டு அடுத்தவங்க வந்து பாராட்டினாத்தானே நாம் இவ்ளோ வெலை குடுத்து வாங்கினதுக்கு பலன் கிடைக்கும். உங்க வொய்ஃபுக்கு  தேங்க்ஸ் சொல்லணும் என்றாள் அந்தப் பெண்மணி. 

    சதாசிவத்துக்கு ஒரு நொடியில் உலகமே தலைகீழாய் மாறியது போன்ற ஒரு திகைப்பு. ஆமாம் ஆமாம் எங்கிட்டே சொல்லிகிட்டே இருந்தா, உங்க புடவையைக் காட்டி எவ்லோ நல்லா இருக்கு பாருங்க ன்னு. 

    அப்போ இந்தப் புடவை நல்லா இருக்குன்னு சொல்லுங்க என்றாள் அந்தப் பெண்மணி பெருமையுடன். சதாசிவம் ரொம்ப நல்லா இருக்கு அதுவும் உங்களுக்கு பொருத்தமாய் இருக்கு என்றார். சாரதா கண்களாலேயே  போதும் அசடு வழியாதீங்க  என்று உணர்த்தினாள். 

    அதுக்குதான் உங்களைக் கூப்பிட்டோம், முதல்லே இந்தியா போனவுடனே உங்க வொய்ஃபுக்கு இந்தப் புடவையை வாங்கிக் குடுங்க. அவங்களுக்கு  ரொம்ப பிடிக்கும்  இந்தப் புடவை, புடவை மட்டுமில்லேங்க உங்களையும்தான்  என்று கூறிவிட்டு அந்தப் பெண்மணியுடன் வந்திருந்த மற்ற பெண்களைப் பார்த்து கண்சிமிட்டிவிட்டு உரக்க சிரித்தனர் மீண்டும் சரவணபவனே அதிர்ந்தது. சதாசிவமும் உரக்கச் சிரித்தார். 

    அந்த அமெரிக்கக் குடும்பம் ஹாய் ,ஹலோ  வீ  எஞ்சாய்ட் யுவர் ஹாப்பினஸ், .ஆல்தி பெஸ்ட் பை  என்று கூறிவிட்டு புன்சிரிப்புடன் இவர்களைக் கடந்து வெளியே சென்றனர். 

    சதாசிவமும் ஹாய் ஹலோ,  யெஸ் அஃப்கோர்ஸ்  ஐ யேம் ஆல்ஸோ எஞ்சாயிங்   பை பை  என்றார் நிம்மதியுடன். 

                                                                                                 சுபம்

    Share
  • விதி செய்வோம்

     

    முகில் தினகரன்

    ‘அய்யோ…என்னால முடியலையே…ப்ளீஸ்….என்னை வெளிய விடுங்க…நான் எங்காவது போயிடறேன்….இப்படி என்னைய அடைச்சு வெச்சுக் கொல்லறீங்களே…என்னால முடியலை…என்னால முடியலை…அய்யோ!” விஸ்வத்தின் ஆக்ரோஷமான அடித் தொண்டை அலறலில் அறைக்கு வெளியே ஷோபாவில் அமர்ந்திருந்த கீர்த்தனா நடுநடுங்கிப் போனாள்.

    திடீரென்று விஸ்வம் அறைக்கதவை உடைத்து விடுவதைப் போல் பிசாசுத்தனமாய்த் தட்ட

    ‘கடவுளே…நான் என்ன பண்ணுவேன்?…இந்த நேரம் பார்த்து அம்மாவும் அப்பாவும் வெளிய போயிட்டாங்களே!…இவனோட ஆவேசத்தைப் பார்த்தா கதவையே உடைத்தெடுத்து விடுவான் போலல்லவா இருக்கு!”

    போதைப் பழக்கத்திற்கு அடிமையாகிப் போன தங்கள் மகன் விஸ்வத்தை டாக்டரின் அறிவுரைப்படி சிகிச்சைக்காக அறைக்குள் அடைத்து வைத்து விட்டு அதற்குக் காவலாய் தங்கள் மகள் கீர்த்தனாவை அமர வைத்து விட்டு டாக்டரைச் சந்தித்து வரச் சென்றிருந்தனர் அவனது பெற்றோர்.

    ‘ஏய்…கீர்த்தனா!…ப்ளீஸ்…கதவைத் திறந்து விடுடி…ப்ளீஸ்….ப்ளீஸ்…!” தங்கையிடம் ஒரு பிச்சைக்காரனைப் போல் கெஞ்சினான்.

    சில நிமிடங்களிலேயே அந்தக் கெஞ்சல் அழுகையாக மாறியது.

    மெல்ல எழுந்து வந்து அவன் இருந்த அறையின் ஜன்னல் வழியே உள்ளே பார்த்தாள் கீர;த்தனா. தரையில் அமர்ந்து சிறு குழந்தையைப் போல் கையைக் காலை உதறிக் கொண்டு அண்ணன் அழுவதைப் பார்த்து பரிதாபப் பட்டது அந்தத் தங்கையின் மனசு.  ‘கடவுளே…நீதான் இவனைக் காப்பாத்தனும்….அந்தப் பாழும் போதைப் பழக்கத்திலிருந்து நீதான் இவனை மீட்டுத் தரணும்!”

    ஜன்னலில் தெரிந்த தங்கையின் முகத்தைப் பார்த்ததும் அவன் அதிகமாய் அழ கீர்த்தனாவிற்கும் அழுகை தானாகவே வந்தது.  தனக்காக அவள் கண்ணீர் சிந்துவதைக் கண்ட விஸ்வம் மெல்ல தன் கோரிக்கையை நாசூக்காக வைத்தான்.

    ‘கீர்த்தனா…ப்ளீஸ்….எனக்கொரு ஹெல்ப் பண்ணுவியா?” அவன் அழுதவாறே கேட்க

    ‘ம்…சொல்லுண்ணா”

    ‘அம்பது ரூபா எடுத்துக்கோ…நேரா பஸ் ஸ்டாப்புக்கு பக்கத்துல இருக்கற பெட்டிக்கடைக்குப் போ….அங்க…கடைல இஸ்மாயில்னு ஒருத்தன் இருப்பான்…அவன்கிட்ட என் பேரைச் சொல்லி அம்பது ரூபாயைக் கொடு….அவன் ஒரு பொட்டலம் தருவான் …அதை வாங்கிட்டு வந்து என் கிட்டக் குடு…சரியா?”

    அவள் யோசனையாய்ப் பார்க்க சட்டென்று அவள் கைகளைப் பிடித்து கெஞ்சலானான் அவன்.

    அவனது அந்தச் செயலில் மனமுருகிப் போன கீர்த்தனா உடனே புறப்பட்டாள்.

    தங்கை வருவாள்…தனக்குப் பொட்டலம் தருவாள்….என்கிற எதிர்பார்;ப்புடன் ஜன்னலையே பார்;த்தபடி அறைக்குள் அமர்;ந்திருந்த விஸ்வம் தலைவிரி கோலமாய் கத்தியபடி ஓடி வந்த தங்கையைப் பார்த்து அதிர்ச்சியானான்.

    ‘அய்யோ….அண்ணா….அண்ணா…” கத்தியவாறே ஷோபாவில் குப்புற விழுந்து குலுங்கியவளை ஏதும் புரியாமல் பார்த்தபடி நின்றான் விஸ்வம்.

          அப்போது அவசர அவசரமாய் வீட்டிற்குள் நுழைந்த அவனது தாய் நேரே அந்த ஜன்னலுக்கு வந்து ‘அடப்பாவி…நீயெல்லாம் ஒரு மனுசனா?….நீ கெட்டுத் தொலைஞ்சது போதாதுன்னு கூடப் பொறந்தவளையும் கெட்டுப் போக வெச்சிட்டியேடா”

    பின்னாடியே வந்த அவனது தந்தை ‘ஏண்டா அறிவு கெட்டவனே….அந்த மாதிரி எடத்துக்கெல்லாம் வயசுப் பொண்ணை யாராச்சும் அனுப்புவாங்களாடா?…நீ என்னோட போதைக்காக உன் தங்கச்சிய அனுப்பினே…அவன் தன்னோட போதைக்காக அவளையே எடுத்துக்கிட்டான்!…அய்யோ…ஆண்டவா…இந்தக் கர்மத்தையெல்லாம் பார்க்கவா என்னை இன்னும் உசுரோட வெச்சிருக்கே?” மேலே பார்த்துக் கூவினார்.

    அப்போதுதான் தன் தவறு விஸ்வத்திற்கு உறைத்தது. ‘அடப்பாவமே…இஸ்மாயிலும்…அவனோட ஆட்களும் ரொம்ப ரொம்ப மோசமானவங்களாச்சே….அவங்க கைல என் தங்கைய நானே வாரிக் குடுத்துட்டேனே…!  ச்சை…என்னோட இந்தப் பழக்கத்தினால குடும்பத்துல மத்தவங்களுக்கு எத்தனை பிரச்சினை…எத்தனை வேதனை…எத்தனை கவலை!  இப்படியொரு பேரிழப்பு ஏற்பட்ட பிறகும் எனக்கு அந்தப் பழக்கம் தேவைதானா?”

    மூலையில் அமர்;ந்து தீர;க்கமாய் யோசித்தவன் திடீரென்னு ஞானோதயம் ஏற்பட்டது போல் ‘விருட்‘டென எழுந்து ஜன்னலுக்கு வந்து ‘அம்மா….கதவைத் திறங்க” என்றான்.

    சற்று வித்தியாசமாக ஒலித்த அந்தக் குரலிலிருந்த கம்பீரமும் பொறுப்புணர்வும் அவன் தாயின் மனதில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்த அவள் கணவனைப் பார்த்தாள்.

    அவர் ‘சரி‘யெனத் தலையாட்ட கதவைத் திறந்து விட்டாள்.

    வெளியே வந்த விஸ்வம் நேரே தங்கையிடம் சென்று அவள் தோளைத் தொட்டு ‘என்னை மன்னிச்சுடு கீர்த்தனா…என்னாலதான்…என்னோட போதைப் பழக்கத்தினாலதான் உனக்கு இப்படியொரு களங்கம் ஏற்பட்டிடுச்சு…இப்பவே போய் அவனுகளை…..” பற்களை ‘நற…நற‘வென்றுகடித்தபடி வேகமாய் எழுந்தவனை அடக்கினாள் அவனுடைய தாய்.

    ‘டேய்…டேய்…கொஞ்சம் பொறுமையாய் இருடா…நீ மறுபடியும் அங்க போய்…அவனுகளோட சண்டை போட்டு இந்த விஷயத்தைப் பெரிசாக்கினா…பாதிப்பு அவனுகளுக்கில்லை…நம்ம பொண்ணுக்குத்தான்..!…வேண்டாம்…இதை இத்தோட விட்டுடு…!…அவ விதிப்படி ஆகிறது ஆகட்டும்!…” சொல்லியவாறே கீh;த்தனாவின் கையிலிருந்த பொட்டலத்தை வாங்கி விஸ்வத்திடம் நீட்டி ‘இந்தா உன் தேவை இதுதானே?..வாங்கிக்கோ…நீயாவது சந்தோஷமா…உன்னிஷ்டப்படி இரு” என்றாள்.

    அந்தப் பொட்டலத்தை ‘வெடுக்‘கென்று வாங்கிய விஸ்வம் ஏதோ தொடக் கூடாத ஒரு பொருளைத் தொட்டு விட்டது போல துhர எறிந்து விட்டு ‘இல்லைம்மா…இனிமே இந்தச் சனியனைத் தொடவே மாட்டேன்மா!…என் தங்கையோட வாழ்க்கையே சீரழியக் காரணமாயிருந்த இந்தப் பழக்கத்தை நான் இன்னையோட விட்டுட்டேன்மா…” ஆணித்தரமாய்ச் சொன்னான்.

    அவன் கண்களில் அவன் உறுதியின் தீவிரம் நிமிர்ந்து நின்றது.

    தாங்கள் நடத்திய நாடகத்தின் முடிவு ”சுபம்” என்றானதில் உள்ளுர மகிழ்ந்தன மூன்று உள்ளங்கள்.

     

    (முற்றும்)

     

    Share
  • வைரக்கீரிடம்

     

    திவாகர்

    இளவரசி எழிலினியின் கனவு நினைவாக நிறைவேறும் காலம் கனிந்து வருவதைக் கண்ணாரக் கண்டாள்.

    ஆகா.. மகாராஜா கூடிய விரைவில் மண்டையைப் போட்டுவிடுவாரென்று முதன் முதலாக அவள் நெஞ்சிலே தோன்றியது… இது நடக்காது என்றல்லவா இத்தனை நாள் நினைத்திருந்தோம்.. இது கனவாக இருக்கப் போகிறதா என்று எத்தனையோ முறை குழப்பத்தில் கிடந்தோமே.. இப்போதைக்கு இந்த மகாராணி என்கிற பட்டம் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் அவள் இழந்துகொண்டே இருந்தது கூட வாஸ்தவம்தான். ஆனால் அவள் நம்பிக்கை வீண் போகவில்லை என்றுதான் அவள் உள்மனது சொல்லியது. நன்றாக இளமை உற்சாகத்துடன் ஓடிக் கொண்டிருந்த மகாராஜா தன் கடை மூச்சு எப்போது விடலாம் என்றுதான் கடந்த இரண்டு நாட்களாக படுத்துக் கிடந்ததாக அவள் மனதுக்குப் பட்டது. முதல்நாளே மருத்துவர்கள் நம்பிக்கையில்லாமல் முகத்தை மிகக் கோரமாக காண்பித்துக் கொண்டிருந்தது எழிலினியை மேலும் மகிழ்ச்சியில் மூழ்கடித்தது.  எப்போது அந்தத் தருணமோ.

    எத்தனை அழகான நாடு, மரகதமலைத் தேசம் என்றாலே எத்தனையோ நாடுகள் நினைத்த மாத்திரத்தில் பொறாமை படுமே.. எத்தனை செல்வ வளம், ஆனாலும் எல்லோரும் தோழர்களே என்பதால் இந்த நாடு நடுநிலையாக இருப்பதை அந்த எல்லோருமே விரும்புகிறார்களே, இப்படிப்பட்ட நாட்டுக்கு இன்னமும் பட்டத்து இளவரசியாகத்தான் தான் இருப்பதா.. நினைக்க நினைக்க எழிலினியின் மனம் வெதும்பியது.

    மகாராணியின் கிரீடத்து  வைர ஜொலிப்பு ஒன்றே போதுமே.. பளீரென ஒளி பட்டு பார்ப்பவரையெல்லாம் பரவசமாக்கி, ஆஹா.. எத்தனை அழகானது.. உலகத்திலேயே உயர்ந்த வகை வைரக் கற்களால் பதிக்கப்பட்ட கிரீடத்தின் மேல் பகுதியில் நீலமும், கீழ்பகுதியில் பச்சை மரகதமும் பதித்து நடுவில் மாணிக்கக் கல்லும் சேரும்போது அதன் ஒளி வீச்சு எல்லோரையும் கொள்ளை கொள்ளுமே.. ஆஹா.. ஒருநாள்..ஒருநாளாவது.. அதை அணிந்துகொள்ளும் வாய்ப்பு இதுவரை கிடைக்கவில்லையே.. நான் ஆசைப்பட்டது எனக்கு வேண்டாதது இல்லையே.. எனக்குச் சொந்தமானதுதானே.. நியாய தர்மங்கள் படித்த அறிஞர்கள் சொன்னதுதானே.. ஒருநாள் இல்லையென்றால் ஒருநாள் நான் அணிந்துகொண்டே தீரவேண்டியதுதானே.. அந்த நாள் எப்போது வரும்.. அல்லது வரவே வராதா.. இந்தக் கிழவி போட்டுக்கொண்டு வந்தாலே இத்தனை களை தருகிறதே.. தான் அணிந்து வரும்போது ஆகாயத் தேவதை வருவது போல தோற்றம் தராதா என்ன?

    அதைத் தான் தரிக்கும்  வாய்ப்பு இதுவரை நழுவிக்கொண்டே  போய்கொண்டிருக்கிறது.. இந்தக் கிரீடத்தைத்  தன் தலையில் பார்க்கும்போதெல்லாம் இந்த மருமகளுக்குதான் எத்தனை பொறாமை என்று இந்த மகாராணி கேவலமாக தனியே அந்தக் கிழத்தோழிகளிடம் சொல்லிக் கொள்வதும் அவளுக்கு நன்றாகவே தெரியும். ஆனாலும் இதற்கெல்லாம் ஒரு வரம்பு வேண்டாமா.. ஆசைப்படுவது யார், தன் சொந்த மருமகள்தானே.. அடுத்த பட்டத்துக்கு உரியவள்தானே.. இவளுக்கு உரிமை இல்லையா என்ன.. கடவுளே.. இதையெல்லாம் இவர்களுக்கு எப்படி எடுத்துச் சொல்வது.. ’நீ இதுவரை அனுபவித்தது போதும்…. இனிமேலும் அனுபவிக்க ஆசைப்படுவதும் பாவம்’ என்று எப்படி புரியவைப்பது..

    சென்றமுறை கூட தனிமையில்  இருக்கும்போது தன் கணவனான பட்டத்து இளவரசரிடம் கண்டிப்பாகச் சொல்லி இருந்தாள். ’உங்கள் தந்தையிடம் நீங்களே சொல்லும் விதத்தில் எடுத்துச் சொல்லுங்கள். உங்களுக்கும் வயது ஏறிக்கொண்டே இருக்கிறது. அதனால் கிழம் ஓய்வு எடுத்துக்கொள்ளட்டும்.. போதும் அவர் இதுவரை ஆண்டது..’.

    இப்படிச் சொன்னவுடன் கணவன் கிண்டலாகச் சிரித்துக் கொண்டே சொன்னது இன்னமும் நினைவில் இருந்தது.. ”நேற்றுதான் இதை என் தம்பிகளிடமே கேட்டேன். இன்னும் எத்தனை நாள்தான் அப்பா இப்படியே இருப்பார்? மகாராசாவின் சிம்மாசனத்தில் அமர எப்போதுதான் எனக்கு சந்தர்ப்பம் கிடைக்குமோ என்றேன்.. அதற்கு என் பெரிய தம்பி என்ன பதில் சொன்னான் தெரியுமா?”

    எழிலினிக்கு தன் மைத்துனர்களைப் பற்றி நன்றாகவே தெரியும்.. எல்லோருமே சுயநலக்காரர்கள்தான்.. இருந்தாலும் கணவனைக் கேட்டு வைத்தாள். “என்ன சொன்னான்?”

    ‘அண்ணா! கனவு காண்பதை முதலில் விட்டுவிடு.. அப்பா சிம்மாசனத்தை விட்டுக் கொடுப்பாரா?.. அவருக்கு ஆயுசு மகா கெட்டி.. பூரண ஆயுசு ’வேத நூல் பிராயம் நூறு.. மனுசர்தாம் புகுவார் எனினும்’ என்று ஒரு ஆழ்வார் பாடியிருக்கிறார். அதனால் சொல்கிறேன்.. அப்பாவாவது மேலே போவதாவது.. ஹூம்..’

    நடந்ததை வெறுப்போடு சொன்ன தன் கணவனை வருத்தமாகத்தான் பார்த்தாள் எழிலினி. அவனைச் சொல்லிக் குற்றமில்லை. தனக்கு வாரிசு உருவாக வாய்ப்பில்லை என்று மருத்துவர்களிடம் அறிந்ததிலிருந்து கொஞ்சம் வாழ்க்கையை வெறுத்து விட்டானென்று அவளுக்குத் தெரியாதா என்ன.. இந்தத் தம்பிகளும் இந்த விஷயம் தெரிந்து அண்ணனுக்குப் பிறகு எப்போதாவது தனக்கும் ஆட்சி கிடைக்கும் என்ற பேராசையோடு இருப்பதும், அதற்கு ஆலாய்ப் பறப்பதும் தெரியும்.. இது எந்த நாட்டிலும் சகஜமாக இருப்பது.. அதனாலென்ன.. மூத்த இளவரசன் அப்பா இருக்கையிலே ஆட்சிப் பொறுப்பேற்பதில் ஒரு தவறும் இல்லையே.. எத்தனை நாள் இப்படியே தனக்கு வாரிசு வராதே என்ற கவலையில் மூழ்கி, மற்றவர்களையும் வெறுப்பேற்றுவது.. இளவரசனுக்கு வேண்டுமானால் ஆட்சிப் பொறுப்பேற்க மனம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவன் மனைவியான தனக்கு அந்தப் பொறுப்பேற்று மகாராணி என்கிற பட்டத்துக்கு ஆளாக பரிபூரண உரிமை உண்டே.. வைரக் கிரீடத்தின் ஒளிபாய்ச்ச மாபெரும் சபை நடுவே தான் நடந்து செல்வது எப்போது.. தன் கணவருக்காவது தன் மனைவியை வைரக்கிரீடம் அணிவித்துப் பார்க்க ஆசை எழ வேண்டாமா? இளவரசனுக்கு தன் மனைவியின் ஆசையை நிறைவேற்றும் பொறுப்பு வேண்டாமா.. வாரிசு தனக்கு இல்லை என்பதில் அவளுக்கும் ஏகப்பட்ட வருத்தம் இருந்தாலும், தனக்கே உரிமையான கிரீடத்தின் மகிமையை அனுபவிக்காமல் தடுக்கும் உரிமை தன் கணவனுக்குக் கூட இல்லை..

    அப்போதுதான் அந்த செவிக்கினிய  செய்தி வந்தது. மகாராஜா தன்னை ஒருமுறை மிக அவசரமாக பார்க்க விரும்புவதாக தாதிப்பெண் சொல்லியதும் விஷயம் தெளிந்து தலைப்பால் வாயைப் பொத்திக் கொண்டுதான் எழிலினி கிளம்பினாள். கடைசியாக ஒருமுறை பார்க்க விரும்புகிறார்.. பார்க்கட்டும் பார்க்கட்டும், எத்தனைதான் உள்ளுக்குள் ஆசை இருந்தாலும் அதை வெளியே காட்டிக் கொள்ள முடியுமா.. கூடாதுதான்.. சோகத்தைத் தன் முகத்தில் வேண்டுமென்றே ஏராளமாகத் தேக்கி வைத்துக் கொண்டே அந்த அறைக்குள் நுழைந்தாள்.

    மகாராஜாவின் நிலைமைதான் சரியில்லையே.. ஆனால் இந்த மகாராணி, சந்தர்ப்பம் தெரிந்து செயல்படவேண்டாமோ.. கணவன் சாகக்கிடக்கும்போதும் அங்கே தன் தலையில் வைரக்கிரீடம் ஒளிபாய்ச்ச வேண்டுமென்றே அதை தன் நெற்றியில் இன்னமும் சற்று தூக்கி வைத்தாற்போல தன் கையால் சரி செய்து கொண்டு, யார் எக்கேடு கெட்டால் எனக்கென்ன என்ற வகையில் இருக்கிறாளே.. ஆனால் முகத்தை மட்டும் உம்’மென்று வைத்துக் கொண்டு நடிக்க மட்டும் நன்றாகவேத் தெரியும்..

    எழிலினிக்கு எரிச்சல்தான் வந்தது. ’இப்போது, அதுவும் இந்த சோகமான வேளையில் இது தேவைதானா.. சமயசந்தர்ப்பம் என்பது கிடையவே கிடையாதா.. இங்கு என்ன சபையா நடக்கிறது.. நாட்டியம், நாடகக் காட்சிகள், புலவர் மேடை என சந்தோஷக் களையிலா நாம் இருக்கிறோம்.. மகாராஜா பாவம்.. அவர் கடைசிக் காலத்தில் எல்லோரையும் பார்க்க நினைக்கிறாரே என்ற ஒரு இங்கித ஞானம் வேண்டாமோ.. இவளெல்லாம் மகாராணியாம்.. ஆனால் இவளைப் போல நாம் நம்மைக் காட்டிக் கொள்ளக் கூடாது..

    நினைத்த மாத்திரத்தில் தனக்கு வந்த கண்ணீரை முகத்தில் தேக்க வைத்துக் கொண்டே மகாராஜாவின் அருகில் நின்றாள் எழிலினி. தன்னைப் பார்த்ததும் மகாராஜாவின் முகத்தில் கருணை பொங்கி வழியத் துவங்கியதையும் கண்டாள். அது அவர் குரலிலும் தெரிந்தது. மகாராணியிடம் பேசுவது போலப் பேசினாலும் பார்வை தன் மீதே இருந்ததும் புரிந்ததால் சோகத்தை இன்னமும் ஏராளமாகக் காண்பித்தாள். தேவைப்பட்ட நேரத்தில் ஊற்றெடுப்பது போல கண்ணீர் கொஞ்சம் பெருகி அது கீழேயும் சிந்தியது. மன்னர் உருகித்தான் போய்விட்டார்.

    “பார்த்தாயா மகாராணி உன் மருமகளை.. இவளுக்குக் கூட என் மீது எவ்வளவு பாசம்.. இந்தச் சின்னப் பெண்ணின் மனநிலை கூட உனக்குப் புரியவில்லையே..”

    தலைகுனிந்து நின்ற மருமகளை மகாராஜா இன்னமும் அருகே வரச்சொன்னார். “இளவரசி, உன்னிடம் மறைப்பதற்கு என்ன இருக்கிறது.. மருத்துவர் இப்போதுதான் சொல்லிவிட்டுப் போனார்..”

    புரிந்துவிட்டது அவளுக்கு. முகத்தில் இன்னமும் சோகம் கூட்டினாள். அதனால் கண்ணீரும் கூடியது. ஆனால் எதுவும் பேசவில்லை. ஆனால் அடுத்துப் பேசிய மகாராஜாவின் பேச்சு  அவள் தலையில் இடியாக இறங்கியது.

    “அழாதே மகளே! காலையில் வைத்தியர் நன்றாகப் பரீட்சித்து விட்டாரம்மா.. நீ எந்தவித கவலையும் படவேண்டாம். என் உயிருக்கு எந்தவித ஆபத்தும் இல்லையாம். இன்னும் ஒரு மாத காலத்தில் பழையபடி உற்சாகத்தோடு என்னால் நடமாடமுடியுமாம்.. என் இதயம் எதையும் தாங்கும் மிகப் பலமான இதயமாம்”

    இப்போது எழிலினி முகத்தில்  உண்மையான சோகம் படரத் துவங்கியது. அதைக் கவனியாமல் அரசர் பேசினார்.

    “ஆனால் பார் மகளே.. எனக்கு இனியும் ஆட்சி செய்வதில்  அர்த்தமில்லை என்பதாகத்தான்  படுகிறது.. இந்த மகாராணியிடம் அப்படிச் சொன்னதும் அவளுக்குக் கோபம் வருகிறது. நீயாவது  நல்ல முறையில் எடுத்துச்  சொல்லி என் தலையின் பாரத்தை  இறக்கி வை மகளே!”

    இளவரசியின் உள் உணர்ச்சிகள் சட்டென மாறின. அந்த ஆனந்த உணர்ச்சியால் முகம் முழுவதும் மலரத் துடித்தாலும் தன்னை அடக்கிக் கொண்டாள். மகாராஜாவின் பாரம் இறக்கிவைப்பதை விட, மகாராணியின் தலைக்கனம் குறைய அருமையான வாய்ப்பு. மேலாகக் கவலையுடன் அவரைப் பார்த்துச் சொன்னாள். “மகாராஜா, நல்ல செய்திதானே.. உங்களை மறுபடி பழைய நிலையில் பார்ப்பதே எங்களுக்கு விருப்பம். மகாராணியார் சொன்னதிலும் எந்தத் தவறும் இல்லை..”

    மன்னர் முகத்தில் கோபம்  வெளிப்படையாக வந்தது.. மகாராணியைப்  பார்த்து அந்தக் கோபத்தைக்  காண்பித்தார்.

    “கேட்டாயா ராணி!.. உன்னை விட  உன் மருமகள் எவ்வளவோ மேல்.. உனக்கு அந்த வைரக் கிரீடப் பைத்தியம் இன்னமும் விடவில்லை. மகாராணி என்ற கர்வம் உனக்கு அதிகம்.. ஒன்றை ஞாபகத்தில் வைத்துக் கொள்.. நான் மகாராஜாவாக இருப்பதால்தான் நீ மகாராணியாக உரிமை பெறுகின்றாய்.. நான் அந்தப் பதவியில் போடும் கடைசி ஆணை இதுதான்.. முதலில் அந்தக் கிரீடத்தைக் கழட்டித் தூரப் போடு, அல்லது இன்றிரவே உன் மருமகளிடம் கொடுத்து விடு.. நான் தீர்மானித்து விட்டேன்.. நாளையே சபையில் இளவரசருக்கு முடிசூடப்படும். இவள்தான் அடுத்த மகாராணி!..

    கோபமாக வந்தாலும் தீர்மானமாக வந்த மன்னரின் பதில் எழிலினிக்கு மிக மிகப் பிடித்திருந்தது.. மகாராஜா சற்று ஆவேசமாகப் பேசி ஆணையிட்டதால் களைத்துப் போய் சற்றே கண்ணை மூடிப் படுத்தார். ஆனாலும் மன்னரின் இந்த முடிவுதான் மகாராணியின் கோப முகத்துக்குக் காரணம் என்பதும் தெரிந்தாலும் சோகத்தை முகத்தில் வைத்துக் கொண்டே வெளியேறினாள். அப்படி வெளியேறும்போது வேண்டுமென்றே ஒரு குறும்புப்பார்வையால் மகாராணியையும் அவள் வைரக்கீரீடத்தையும் ஒரு பார்வை பார்த்து விட்டு மன்னர் பார்க்காத வகையில் ஒரு புன்னகையும் வீசி விட்டுதான் சென்றாள். தன் பார்வையும் மகிழ்ச்சியும், மன்னரின் கடைசி ஆணையும் மகாராணியை மேலும் வெறுப்பேற்றும் என்றாலும் அவள் மனம் குதூகலத்தில் ஆழ்ந்து போய் விட்டது.

    அந்த மகிழ்ச்சிக் கொஞ்சமும்  குறையாமல் இளவரசனை ஓடிப்போய் இறுகக் கட்டிக் கொண்டாள். ’கேட்டீர்களா இளவரசே.. இல்லையில்லை, என் இனிய மகராசா.. ஆமாம்.. இனி நீங்கள்தான் மகாராஜா, மரகதமலை மகாராஜா, நான் மகாராணி! ஆகா.. உங்கள் தந்தை பிழைத்தாலும் உங்களைத்தான் நாளைக்கு மகாராஜாவாக ஆக்க முடிவு செய்துவிட்டார்.. எத்தனை நாள் கனவு.. இன்று நிறைவேறிவிட்டது.. இன்றிரவே என் கைக்கு வந்துவிடும்.. அந்த வைரக் கிரீடம் இனி என் தலையில்தான்…” என்று இறுகக் கட்டிக் கொண்டே அவனை விடுவித்தபோதுதான் கவனித்தாள். இளவரசன் தலை தொங்கி அவள் தோளிலேயே விழுந்தது.

    உடனடியாக தருவிக்கப்பட்ட மருத்துவர்  அவனைப் படுக்க வைத்துச் சோதித்தார். “இளவரசருக்கு ஏற்கனவே இதயம் பலவீனமம்மா.. எதையாவது அதிர்ச்சி தரும் செய்தியைச் சொன்னீர்களோ.. இப்படி ஆகிவிட்டதே.. இனி பிழைக்க வைக்க முடியாதம்மா.. என்ன ஒரு சோகம்.. தந்தைக்கு !”

    செய்தி கேட்டதும் அனைவரும் இளவரசனைப் பார்க்க விரைந்தனர். மகாராணியும் தன் வைரக்கிரீடம் எங்கும் ஒளி பாய்ச்ச கண்ணீருடன் ஓடோடி வந்தாள்..

     

    Share
  • இருவேறு பார்வைகள்

     

    – கே.எஸ்.சுதாகர்

     

    இன்று காலை 11 மணிக்கு எனக்கொரு ஹொஸ்பிட்டல் அப்பொயின்மன்ற் இருந்தது. தேநீர் குடித்துவிட்டு அவசர அவசரமாகப் புறப்படுகின்றேன். இந்தத்தடவை இதற்கொரு முற்றுப்புள்ளி வைக்காமல் ஹொஸ்பிட்டலைவிட்டு நான் திரும்பப் போவதில்லை.

    மூன்றாவது தடவை ஒப்பரேஷன்.

    முதன்முதலில் இந்த வைத்தியசாலைக்கு வந்தபோது, ‘Fistula’ என்று அந்த இளம் டாக்டர் சொன்னதும் நான் சிரித்துவிட்டேன். பென்குவின் போன்ற உதடுகளைக் கொண்ட அந்த பிலிப்பீன்ஸ் நாட்டுப்பெண், ஏதோ தனது பாஷையில் சொல்கின்றாளாக்கும் என நினைத்துக் கொண்டேன். ஆனால் சிரிப்பதற்கு இதில் எதுவும் இல்லை என்று பின்னர் புரியலாயிற்று. பயந்து விடாதீர்கள். ‘பிஸ்ரியூலா’ என்பது ஒரு வருத்தத்தின் பெயர். இந்தமாதிரி ஒரு வருத்தம் எமது நாடுகளில் வந்திருந்தால், அதைக் குணப்படுத்த எடுக்கும் செலவை ஈடு செய்ய வாழ்நாள் முழுக்க உழைக்க வேண்டியிருந்திருக்கும். இங்கு அவுஸ்திரேலியாவில் எல்லாமே இலவசம். வருத்தங்களும் இலவசம். அது எனக்கு எப்படி வந்தது என்பதை உங்களுக்கு நான் சொல்லியாக வேண்டும். அது ஒரு சிறு சரித்திரம்.

    ஒருமுறை எனது ஆசனவாயிலுக்கு அண்மையாக ஒரு கட்டி வந்தது. சாதாரணமாகத் தோன்றி மறையும் கட்டி போலத்தான் ஆரம்பத்தில் அது இருந்தது. நாளடைவில் அது பெருத்து ஒரு குண்டுமணி போலாகிவிடது. நாட்டுமருந்தான ‘கறுப்புக்கழியை’த் தேடி கடை கடையாக அலைந்தேன். வெள்ளைக்காரன்ரை கடையிலை அது கிடைக்காது என அறிந்ததும், வியட்நாம் ‘சைனீஸ்’ கடைகளை நோக்கி நடையைத் திருப்பினேன். தென்படும் குட்டிப்போத்தல்கள் ரின்களை ஆராய்ச்சி செய்து மருந்து ஒன்றைப் பெற்றுக் கொண்டேன். பூசி சிலநாட்களில் கட்டி உடைந்தது. மாறி வருவது போன்று மாயை காட்டி, பின்னர் மீண்டும் உருக் கொண்டது. நாளாக அது ‘நாட்பட்ட புண்’ என்று பெயர் எடுத்துகொண்டது. வெட்கத்தில் டாக்டருக்குக் காட்டாமல் இருந்தது பெரியதொரு சங்கடத்தை உருவாக்கிவிட்டது. இப்போது திறந்தே கிடக்கும் புத்தகம் போலாகிவிட்டேன்.

    புலம்பெயர்ந்து வந்த காலம். அப்பொழுதெல்லாம் வேலைக்கு மனுப் போட்டால் நேர்முகப் பரீட்சைக்குக் கூப்பிடுவதில்லை. அதற்கான பதிலும் கிடைப்பதில்லை. ரெலிபோன் செய்து விசாரித்த போது சில விஷயங்கள் புரிந்தன.

    “நீங்கள் அவுஸ்திரேலியாவிற்கு வந்து சிறிது காலம் வேலை செய்திருக்கவேண்டும். உங்களுக்கு அவுஸ்திரேலியாவில் வேலை செய்த முன் அனுபவம் இருக்க வேண்டும்”

    “முன் அனுபவம் என்பது ஏதாவது ஒரு வேலை சம்பந்தமானது. அது சுப்பர்மார்க்கெட்டாகவோ அல்லது ஏதாவதொரு தொழிற்சாலையாகவோ இருக்கலாம். நீங்கள் உங்களது சொந்தநாட்டில் செய்த வேலையாகத்தான் இருக்க வேண்டுமென்பதில்லை. அதன் பிறகுதான் உங்களை நேர்முகத் தேர்வுக்குக் கூப்பிடுவோம்” என்று விளக்கம் தந்தார்கள்

    முதலில் ஒரு சுப்பர்மார்க்கெட் சென்று விசாரித்துப் பார்த்தேன். அவர்கள் சொன்ன பதில் எனக்கு மேலும் வியப்பைத் தந்தது.

    “உங்களுக்கு அவுஸ்திரேலியாவில் ஏதாவது வேலை செய்த முன் அனுபவம் உண்டா? சுப்பர்மார்க்கெட் என்று இல்லை. ஏதாவது … யோசித்துப் பாருங்கள்” அதே உரையாடலைத் திருப்பிப் போட்டார்கள். அவர்கள் உரையாடுவதில் கில்லாடிகள். சொன்னதையே நோகாமல் திருப்பிச் சொல்லும் கிளிப்பிள்ளைகள். எங்கு சென்றாலும், “அவுஸ்திரேலியாவில் …” என்று ஆரம்பித்து விடுவார்கள்.

    யார் அந்த அனுபவத்தை எனக்குத் தந்து என்னை அசர வைக்கப் போகின்றார்கள்?

    ஒரு வேலையைப் பெற்றுக் கொள்வதற்கான வழிமுறைகள் அத்தனையையும் செயற்படுத்தினேன். விடாமுயற்சி. தன்னம்பிக்கை. தீவிர தேடுதல். Yellow Pagesஐப் பார்த்து எண்ணற்ற இடங்களுக்கு Resumeயுடன் Covering letterஐயும் இணைத்து அனுப்பினேன். கடித உறையின் மூலையில் சந்தணம் குங்குமமும் பூசத் தவறவில்லை.

    கை மேல் பலன் கிட்டியது. சண்சைன் என்ற இடத்திலிருந்த ‘டயமண்ட் பிறஸ்’ என்னை வரவேற்றது. பாருங்கள் பெயர்களை – சண்சைன்(Sunshine), டயமண்ட் பிறஸ்(Diamond Press). ஆரம்பமே அசத்தலாக இருந்தது. வேலை! – free wayஇல் வாகனங்கள் விரைந்து செல்லும் வேகம். ‘அந்த’ வேகத்தில் சீனத்துப்பெண்கள், வியட்நாமியப்பெண்கள் எல்லாம் என்னமாய் வேலை செய்கின்றார்கள்! ஒருவேளை அவர்கள் தாய்நாட்டில் இருந்த போது இதைவிட இன்னமும் கடினமாக உழைத்திருப்பார்களோ?

    அங்குதான் எனக்கு இந்த வியாதி ஆரம்பமாகியிருக்க வேண்டும். எந்தவொரு சரீரத் தொழில்களும் செய்து பழக்கப்படாத எனக்கு தொடர்ச்சியாக உடம்பை வருத்தியதில் உருவாகியிருக்கலாம். ஆபரேஷன் செய்யப் போனபோது பெரியதொரு விளக்கம் காத்திருந்தது. Anal Glands எனப்படும் சுரப்பிகள் அடைபடும்போது, அதிலிருந்து வெளிப்படும் வழவழப்பான நீர் வெளிப்படாமல் கிருமிகள் பாதிப்பதால் இந்த சீழ்க்கட்டிகள் ஏற்படுகின்றன. அந்தக் கட்டிகள் வெடித்த உடனே பெளத்திரமாக (Fistula) மாறிவிடும். அந்த வெடிப்பு உட்புறமாக வெடித்தால் complicated Fistula என்றும் வெளிப்புறமாக வெடித்தால் Low Fistula என்றும் சொன்னார்கள். நல்லவேளை எனக்கு வெளிப்புறமாக வெடிப்பு நிகழ்ந்திருந்தது. சத்திரசிகிச்சை மிகவும் எளிமையானது என்று வெளிநோயாளர் பிரிவு டாக்டர் சொல்லியிருந்தார். வெளிநோயாளர் பிரிவில் இருக்கும் டாக்டர்கள் சர்ஜரி (surgery) செய்வதில்லை. அவர்கள் consultation செய்யும் டாக்டர்கள். வெளிநோயாளர் பிரிவில் இருந்த டாக்டரை இரண்டு தடவைகள் சந்தித்து ஆலோசனைகள் பெற்றிருந்தேன். இருந்தும் எனக்கு ஆபரேஷன் செய்யவிருக்கும் டாக்டரைச் சந்திக்க முடியவில்லை. அவர் ஹொஸ்பிற்றலில் மிகவும் பிரபலம் ஆனவர். ஓய்வின்றி வேலை செய்பவர். 65 வயதைத் தாண்டிய அனுபவசாலி. அவர் செய்த ஆபரேஷன்களில் தொண்ணூறு வீதத்திற்கும் மேல் சக்ஸஸ் என்றார்கள்.

    எனக்கு ஒரு புதன்கிழமை சத்திரசிகிச்சை. ஏழு மணிக்கு வைத்தியசாலையில் நிற்க வேண்டும். அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்து விட்டோம். உச்சக்கட்ட குளிர்காலம். தெருக்கள் எல்லாம் பனிப்புகாரில் மூழ்கியிருந்தன.

    படிவங்களைப் பூர்த்தி செய்தோம். ‘இரவு 12 மணிக்குப் பிறகு எதுவுமே சாப்பிடவோ குடிக்கவோ இல்லை’ என்பதை உறுதி செய்து கொண்டார்கள். என்னதான் ஏழுமணிக்கு வரச் சொன்னாலும் எல்லாமே ஒன்பது மணிக்குப் பிறகுதான் ஆரம்பமாகியது. என்னைப்போல சிலர் முன்பே வந்திருந்தாலும், பலர் அனுபவப்பட்டவர்களாகவே இருந்தார்கள். மனைவி கவுண்டரில் இருந்த பெண்ணிடம் டாக்டரின் திறமை பற்றி மீண்டும் விசாரித்தாள். அவள் தன் பெருவிரலை உயர்த்திக் காட்டி ‘சுப்பர்’ என்றாள். பின்னர் நானும் மனைவியும் கதிரைகளில் அமர்ந்து ரெலிவிஷன் பார்க்கத் தொடங்கினோம். ரெலிவிஷனில் குழந்தைகளின் கார்ட்டூன் போய்க்கொண்டிருந்தது

    தீய சக்திகள் எம்மை நெருங்காமல் இருக்க, மந்திரம் ஓதி நூல் கட்டுவது போல – என் பெயர், பிறந்த திகதி, பதிவு எண் எல்லாம் கொண்ட ஒரு பட்டி என் மணிக்கட்டில் கட்டப்பட்டது. காதிற்குள் வெப்பமானி புகுந்து உடலின் உஷ்ணத்தைக் காட்டியது. எடை பார்த்து, எனிமா தந்தார்கள். ஆடை களைந்து அவர்கள் தந்த வெள்ளை ஆடைக்குள் புகுந்து கொண்டேன். நான் பயந்தது எல்லாம் அனித்தீசியாவுக்குத்தான். அனித்தீசியாவிற்குப் பிறகு எனக்கு இந்த வெள்ளை ஆடைக்கும் பயம்.

    “மனைவிக்கு கை காட்டிவிட்டு, யம் பண்ணி பெட்டில் ஏறிக் கொள்ளுங்கள்” என்றார் ஸ்ரெச்சரை உருட்டி வந்தவர்.

    அனித்தீசியா தரும் மனிதரின் முகம் எந்த நேரமும் சிரித்தபடி இருந்தது. அவர் என்னைப் பார்த்துச் சிரித்தார். அவர் தனது பெயரை வாயிற்குள் முணுமுணுத்தபோது ‘சித்ர புத்ர’ என்று எனக்குக் கேட்டது. சேர்ஜரி டாக்டர் யமனாக இருக்கும்பட்சத்தில் அவர் சொல்வது சரியாகத்தான் இருக்கும். Dr. Death (Jayant Patel) என்றொருவர் குவீன்ஸ்லண்டைக் கலக்கிவிட்டுப் போன பின்னர், எந்த சேர்ஜரி டாக்டரைப் பார்த்தாலும் ஒரு பயம் வரத்தான் செய்கிறது. Dr. Death ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் ஏராளமான நோயாளிகளை வெட்டிக்கொத்தி மேலுலகம் அனுப்பியவர். குவீனஸ் புத்தகத்தில் அவர் பெயர் வந்ததா என்று தெரியவில்லை. சித்ரபுத்ர, எனது பூர்வீகம் இன்ன பிற அவுஸ்திரேலிய நடப்புக்களை விசாரித்தவாறே தனது காரியத்தைத் தொடங்கினார். அவருடன் கதைத்துக் கொண்டிருக்கும் போது நேரம் பத்துமணியைத் தாண்டியிருந்தது. மீண்டும் விழித்துக் கொண்டபோது மணி பிற்பகல் ஒன்றரை. “Can you hear me? Can you hear me? What is your name?” என்று ஒருவர் என்னைத் தட்டி சளைக்காமல் கேட்டபடி இருந்தார். அனித்தீசியா மயக்கத்தை அவர் சோதிக்கின்றார். சோதனைக்கு ஒரு அளவு வேண்டாம்…! என்னுடைய பெயர் தெரியாமலா இவ்வளவு நேரமும் எனக்கு ஒப்பரேஷன் செய்தார்கள்?

    வைத்தியசாலையில் இருந்த நாள் முழுவதும் அங்கிருந்த அழகிய •பிஷியோதிரபிஸ்ட் பெண்கள் அனைவரும் முரட்டுப்பெண்கள் போல நடந்து கொண்டார்கள்.

    வீட்டிற்கு வந்த இரண்டாவது நாள், பார்பரா கிறகாம் (Barbara Graham) என்ற டிஸ்றிக் நேர்ஸ் (district nurse) ஒரு தூக்குப்பெட்டியுடன் வீட்டிற்கு வந்தார். அவரைப்பற்றி ஒரு ‘வைர’ வரியில் சொல்வதென்றால், ‘அவர் ஒரு புளோரிங் நைட்டிங்கேல்.’ தன்னுடைய பரம்பரை மருத்துவத்துறைக்கு அர்ப்பணிக்கப்பட்டது என்று பெருமையாகச் சொல்லுவார். மிகவும் அழகானவர். அவளின் மூக்கு சற்றுத் தூக்கலாக இருக்கும். நோயாளிகளைக் கண்ட மாத்திரத்தில் அவரின் மேலுதடு தானாக எழுந்து மூக்கின் துவாரங்களை மூடிக்கொள்ளும். ஆதியில் ஒட்டகச்சிவிங்கிகளுக்கு கழுத்து நீண்டதற்கு கூர்ப்புதான் காரணம் என்றால், பார்பராவின் மூக்கு மேல் நோக்கிச் சரிந்து கொண்டு செல்வதற்கும் கூர்ப்புதான் காரணம் என்பேன்.

    பார்பராவிற்கு ஈடாக என் மனைவியையும் குறைத்து மதிப்பிடுவதற்கில்லை. தினமும் அவர் வருவதற்கு முன்னர் salt bath எடுக்க வேண்டும். இருந்தும் இருவரது பணிவிடைகளும் பலன் தரவில்லை. மூன்றாவது வாரம் அடைகாத்திருக்கும் முட்டை ஓட்டை, முட்டி மோதும் குஞ்சு போல வெளித் தள்ளியது பெளத்திரம்.

    முதாவது ஒப்பரேஷன் முடிந்து, லீவில் மூன்று வாரங்கள் வெற்றிகரமாக நின்றுவிட்டு மீண்டும் வேலைக்குப் போனேன். மேலுக்கு வரும்படி மனேஜர் சைகை செய்தார். அவரது அறை இரண்டாவது மாடியின் தொங்கலில் இருந்தது. நடப்பதற்குக் கஸ்டப்பட்டு மேலேறுவதைக் கண்ட டேவிட் “நில்லும்… நில்லும்” என்று  சத்தமிட்டபடி கீழிறங்கி வந்தார். வந்தவர் என்னுடைய வருத்தத்தைப் பற்றிக் கேட்கவில்லை; சுகத்தை விசாரிக்கவில்லை.

    “நீர் இலங்கையில் இருந்த போது என்ன வேலை செய்தீர்?” என்றார். மூன்றுவாரங்களாக அவர் இந்தக் கேள்வியை மனதில் தேக்கி வைத்திருக்க வேண்டும். கேள்வியின் தொனி அப்படியிருந்தது.

    “ஆர்கிடெக்ட் (Architect) ஆக இருந்தேன்” என்றேன் நான்.

    “அப்ப இங்கு என்ன செய்கின்றீர்?”

    “அவுஸ்திரேலியா அனுபவம் தேடுகின்றேன்.”

    “நான் உமக்கு reference letter தருகின்றேன். பொருத்தமான வேலைக்கு அப்ளை பண்ணும்.”

    அடுத்தநாள் வேலைக்குப் போன எனக்கு அதிசயம். Reference letter உடன் வேலையிலும் சிறு மாற்றம் காத்திருந்தது. கணக்கியல் பிரிவில் ஒரு புது வேலை

    இரண்டுமாத காலங்களின் பின்பு மீண்டும் வைத்தியசாலை. மீண்டும் வெள்ளை ஆடை. அதே டாக்டர்கள், நேர்ஸ்மார். இப்பொழுதெல்லாம் இரத்தம் குத்தி எடுக்கும்போது பயம் வருவதில்லை. இறைக்கின்ற கிணறுதானே ஊறும். என்னதான் மனதளவில் தைரியம் இருந்தாலும் உடல் வலுவிழந்துவிட்டது. காலை பத்து மணிக்கு ‘ஜம்’ பண்ணி ஸ்ரெச்சரில் ஏறிய நான் கண் விழிக்கும் போது மாலை ஐந்து மணியாகி விட்டது.

     

    மறுபடியும் பார்பரா வரத் தொடங்கினார். இந்தப்புனிதமான தொழிலுக்கு முகம் சுழிக்காத புன்னகை கொண்ட பார்பரா மிகவும் பொருத்தமானவர். வந்த முதல்நாள் றெஸ்ஸிங் செய்யும் போது கெக்கட்டம் விட்டுச் சிரித்தார். “இதென்ன இது? ஒரு வால் ஒன்று நீண்டு கொண்டு நிற்கின்றது? இத்தனைகால சர்வீசில் இப்படி ஒரு வால் முளைத்து நான் பார்த்ததில்லை” என்றார் பார்பரா. அன்று முழுவதும் அவர் சிரிப்பு அடங்கவில்லை. தடவிப் பார்த்ததில் பிளாஸ்ரிக் போன்றதொரு நாடா உடம்பிற்குள்ளிருந்து வெளியே நீட்டிக் கொண்டிருந்தது தெரிய வந்தது. “மறந்து போய் விட்டு விட்டார்களோ?” என்ற மனைவியின் கேள்விக்கு, “எனக்கும் தெரியவில்லை!” என்று சொல்லிக் கொண்டே வைத்தியசாலைக்கு ரெலிபோன் செய்தார் பார்பரா.

    “அது Penrose drain tube. அதை நாங்கள்தான் வைத்தோம். காயமுள்ள இடத்திலுள்ள தேவையற்ற நீரை அகற்றுவதற்கும், அதன் தடத்தின் வழியே சென்று சரியான இடத்தைக் கண்டு பிடித்து ஒப்பரேஷன் செய்வதற்குமாக அதை வைத்திருக்கின்றோம்” என்று வைத்தியசாலையிலிருந்து பதில் தந்தார்கள். இங்கே கேட்டதற்கு மாத்திரம்தான் பதில் சொல்வார்கள். தேவையில்லாமல் ஒரு அங்குலம்தன்னும் கூட்டிச் சொல்லமாட்டார்கள்.

    “இன்னுமொரு ஒப்பரேஷனா?” அதிர்ந்துவிட்டேன்.

    “அந்த வாலை வைப்பதற்காகவா ஆறுமணி நேரம் ஒப்பரேஷன் செய்தார்கள்” மனைவி வியந்தாள். அந்த வாலின் நீளம் கூடியும் இடம் மாறியும் இருந்திருந்தால் பரிணாமத்தின் உச்சத்தைத் தொட்டிருப்பேன்.

    ஒவ்வொருதடவை ஒப்பரேஷன் செய்த போதும் மூன்று கிழமைகள்தான் வேலையிலிருந்து விடுப்புத் தந்திருந்தார்கள். இந்தத் தொழிலும், தொழில் சாராததுமான ஆறுமாத அவுஸ்திரேலிய அனுபவத்தோடு, வேலைகளுக்கு மனுப் போடத் தொடங்கினேன்.

    இப்பொழுதெல்லாம் இல்லாத பொல்லாததெல்லாம் எழுதி, ஒரு புளுகுமூட்டையை வேலைக்கு மனுப்போடும்போது அனுப்பி வைப்பேன். அந்தக் கவரிங் லெட்டர் என்னைக் ‘கவர்’ பண்ணக்கூடியமாதிரி இருக்கும். ஆர்கிடெக்ட் தொடர்பான நேர்முகப் பரீட்சை வந்தது. கதவைத் திறந்து நீங்களாகவே உள்ளே செல்லுங்கள் என்றார்கள். அதில் ஏதோ சூட்சுமம் இருந்திருக்க வேண்டும். கதவைத் திறக்க முடியாமல் இருந்தது. அத்தகைய கனம் கொண்ட கதவை திறந்து இழுக்க, விட்ட இடத்திலிருந்து என்னையும் இழுத்துக் கொண்டு சென்றது கதவு. கதவுடன் தொங்கியபடியே சென்றேன். பலசாலியாகவே உள்ளே சென்ற நான் மிகவும் நன்றாக இன்ரர்வியூ அற்றெண்ட் பண்ணியிருந்தேன். வெளியே வரும்போது மேலும் இருவர் கதவை இழுக்கக் காத்திருந்தார்கள். அவர்களில் ஒருவர் 5 வருடங்களும் மற்றவர் 12 வருடங்களும் அவுஸ்திரேலியாவில் ஆர்கிடெக்ட்டாக வேலை செய்திருந்தார்கள். என்ன எக்ஸ்பீரியன்ஸ்? அவுஸ்திரேலியாவில் வேலை எடுப்பதற்கு ‘வாய்ச்சொல்’ ஒன்றே மூலதனம் என்பார்கள்.

    மூன்றாவது தடவையாக ஒப்பரேஷனிற்கு நாள் குறித்துவிட்டார்கள். அதற்கு முன்னோடியாக வெளிநோயாளர் பிரிவிற்கு வந்து சந்திக்கும்படி கடிதம் போட்டிருந்தார்கள். அதற்காகத்தான் இப்பொழுது வந்து கொண்டிருக்கின்றேன்

    காலை 11 மணியிலிருந்து காத்திருக்கின்றேன். இந்தத்தடவை எனக்கு சத்திரசிகிச்சை செய்த வைத்தியரைச் சந்திக்காமல் போவதில்லை என்று முடிவெடுத்திருந்தேன். எனக்கு ஒப்பரேஷன் செய்தவரை சந்திப்பது மிகவும் கடினம் என்றார்கள். ஒவ்வொரு வார்ட்டிற்கும் அவர் சென்றுவர பிற்பகல் 3 மணியாகும் என்று சொன்னார்கள். பரவாயில்லை, காத்திருக்கின்றேன் என்று தீர்க்கமாகச் சொல்லிவிட்டேன். காத்திருப்பு வீண் போகவில்லை. 4 மணியளவில் டாக்டர் வந்தார். மிகவும் குண்டாகவும் வாட்ட சாட்டமாகவும் 40- 45 வயதிற்குள் மதிக்கக்கூடியவராகவும் இருந்தார்.

    “என்னுடைய டாக்டர் வயது முதிர்ந்தவர். நான் அவரைத்தான் சந்திக்க வேண்டும். அவர் மிஸ்டர் பரகர்” என்றேன். வந்தவர் என்னைப்பார்த்து ஆச்சரியப்பட்டார்.

    “இல்லை… இல்லை. நான் தான் உமக்கு ஒப்பரேஷன் செய்தேன். என்னுடைய பெயர் சாகிடி. நீங்கள் குறிப்பிடும் டாக்டர் என்னுடைய பொஸ்.”

    “ஐயா… டாக்டர் ஐயா… இந்தமுறை எனக்கு மூன்றாவது தடவை ஒப்பரேஷன். தொடர்ந்தும் இப்படி இருந்தால் பவுல் கான்சர் (Bowel Cancer) வரும் என்று சொல்கின்றார்கள்” பயந்தபடியே நான் சொல்ல, டாக்டர் சாகிடி அங்குமிங்கும் பார்த்தார். பின்னர் எழுந்து நின்று தனது கதிரையை எனக்கு அண்மையாக நகர்த்திவிட்டு அதில் அமர்ந்தார்.

    “இந்த ஒப்பரேஷனை மிகவும் அவதானமாகச் செய்ய வேண்டும். ஏதாவது சிறுபிழை நேர்ந்தால்கூட தொடர்ச்சியாக மலம் சலம் கழிக்க நேரிடலாம். நீங்கள் பிறைவேற் ஹெல்த் இன்சூரன்ஸ் (Private Heath Insurance) வைத்திருக்கின்றீர்களா? அப்படியாயின், நீங்கள் டாக்டர் பரகருக்கு வெளியே சனல் பண்ணிக் காட்டிவிட்டு, இங்கேயே ஹொஸ்பிட்டலில் தங்கி நின்று சர்ஜரி செய்து கொள்ளலாம். அப்படித்தான் வசதி படைத்தவர்கள் எல்லாரும் செய்கின்றார்கள்” காதிற்குள் கிசுகிசுத்தார்

    “நான் அவுஸ்திரேலியா வந்து ஆறுமாதங்கள்தான் ஆகின்றது. என்னிடம் லைவ் இன்சூரன்ஸ்கூட இல்லையே!” என்றேன் ஏக்கத்துடன்.

    என்னைப் பொறுமையாக இருக்குப்படி சொல்லிவிட்டு உள்ளே சென்றார். சற்று நேரத்தில் ஒரு வயது முதிர்ந்த டாக்டருடன் வந்தார்.

    “I am Faragher” என்றபடியே அந்த ஒடிசலான எனது டாக்டர் வந்தார். என்னைக் கதிரையில் அமரும்படி சொன்னார். மூச்சை இழுத்து விட்டார். “நடந்தவற்றைக் கூறுகின்றேன்” என்றார். அவர் குரல் இனிமையான சங்கீதம் போல இருந்தது

    “உங்களுக்கு இரண்டு தடவைகளும் இவர்தான் ஒப்பரேஷன் செய்தார். இவர் மிஸ்டர் சாகிடி (Zahedi). எனது அஷிஸ்டென்ற்” பரகர் என்னுடன் உரையாடிக் கொண்டிருக்கும் போதே சாகிடி எங்களிடமிருந்து விடைபெற்றுக் கொண்டார்

    “தயவுசெய்து இந்தத்தடவை நீங்கள்தான் எனக்கு ஒப்பரேஷன் செய்ய வேண்டும்! நீங்கள் அனுபவம் மிகுந்தவர்!!”

    “முதன்முறையாக அந்த ஒப்பரேஷனை சாகிடி சுயமாகச் செய்தார். இரண்டாவது தடவை என்னுடைய மேற்பார்வையின் கீழ் செய்தார். பாருங்கள் எனக்கு இப்போது 65 வயதாகின்றது. நாளைக்கு எனக்கு ஏதாவது ஒன்று நடந்துவிட்டால் இந்த ஒப்பரேஷனைச் செய்வதற்கு இந்த ஹொஸ்பிட்டலில் யார் இருக்கின்றார்கள்? எல்லாருக்கும் அனுபவம் வாய்ந்த டாக்டர்தான் ஒப்பரேஷன் செய்ய வேண்டுமென்றால், இவர்களைப் போன்ற டாக்டர்மார் எப்போது ஒப்பரேஷன் செய்து பழகுவது? ஒரு டாக்டர் படித்து முடித்து வர குறைந்தது பத்து வருடங்கள் ஆகின்றது. டாக்டர் சாகிடிக்கு 45 வயதாகின்றது. அவரைப் போல இன்னும் இரண்டு டாக்டர்கள் என்னுடன் வேலை செய்கின்றார்கள்” அவர் சொல்வதை நான் உற்றுக் கேட்டுக் கொண்டிருந்தேன்.

    “சற்று நேரம் அமர்ந்து கொள்ளுங்கள். சீக்கிரம் வந்துவிடுவேன்” சொல்லிவிட்டு உள்ளே சென்றார் டாக்டர் பரகர்.

    “உவன் சாகிடி என்னை சாகடிச்சுப்போட்டான். என்ரை உடம்பைக்கீறி விளையாடி இருக்கிறான்.”

    சக டாக்டர்களுடன் உரையாடிவிட்டு சிரித்த முகத்துடன் திரும்பினார் டாக்டர் பரகர்.

    “உங்களுக்கு ஒரு குட் நியூஸ். இந்தத்தடவை உங்களுக்கு நான்தான் ஒப்பரேஷன் செய்யப் போகின்றேன். திருப்திதானே!” என் கையை இறுகப்பற்றிக் குலுக்கினார். அவரது அனுபவம் எனக்கு நம்பிக்கையைத் தந்தது. நம்பிக்கைதானே வாழ்க்கை!

    இரண்டொரு இளம் டாகடர்களுக்கு, என்னுடைய உடலை அனுபவமாக கற்றுக்கொள்வதற்குக் கொடுத்திருக்கின்றேன் என்ற மகிழ்ச்சியில் அங்கிருந்து வெளியேறுகின்றேன். அப்படியே என்னுடைய தொழில் சார்ந்த அனுபவத்தைப் பயிற்சி செய்ய எனக்கும் யாராவது வேலை தரக்கூடும்.

    ஹொஸ்பிட்டலைவிட்டு வெளியேறும்போது என் கைத்தொலைபேசி கிணுகிணுத்தது. கடைசியாகப் போயிருந்த நேர்முகப்பரீட்சை சம்பந்தமான தொலைபேசி அழைப்பு அது.

    “நீங்கள் இந்தத்தடவை நேர்முகப்பரீட்சையில் வெற்றி பெறவில்லை. நீங்களும் நன்றாகச் செய்துள்ளீர்கள். ஆனால் உங்களைவிட அனுபவம் வாய்ந்த ஒருவரைத் தெரிவுசெய்துள்ளோம். தொடர்ந்தும் முயற்சி செய்யுங்கள். வாழ்த்துக்கள்.”

     

    Share
  • குப்பை

     

    தமிழ்முகில்

     

                                         அதிகாலையில் எழுந்து, கடிகாரத்தைப் பார்த்துவிட்டு, அவசர அவசரமாய் குளித்து விட்டு வந்த ராமாயி, அடுப்பு மேட்டில் இருந்த முந்தின நாள் சாதத்தில், சிறிது மோர் கலந்து அவசர அவசரமாய் குடித்து விட்டு, ஒரு  கலயத்தில், தன் மகனுக்கும் எடுத்து வைத்தாள். சுவற்றோரமாய், குளிருக்கு இதமாய், போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டு சுருண்டு படுத்திருந்தான், அவளது பத்து வயது மகன், மணிமாறன். அவனிடம்,                   “ அப்பா, மணிமாறா, நான் வேலைக்கு கிளம்பறேன். உனக்கு கலையத்துல பழையது எடுத்து வெச்சிருக்கேன், சாப்டுட்டு, பள்ளிக்கோடத்துக்கு கிளம்பு.” என்றாள். அவள் குரலைக் கேட்டதும், கண் திறந்து பார்த்த மணிமாறன், “அம்மா, எனக்கு புது நோட்டும், பென்சிலும் வேணும்மா. நான் பேப்பர்ல எழுதி, நோட்ல ஒட்டி வெச்சிருந்தத டீச்சர் பாத்துட்டாங்க, திங்கட்கிழமை வரும் போது, புது நோட்டோட வரணும், இல்லைன்னா கிளாஸ்க்குள்ள விடமாட்டேன்னு சொல்லிட்டாங்கம்மா” என்றான். “சரிப்பா, வாங்கித் தர்ரேன்.” என்று சொல்லிவிட்டு கிளம்பினாள். இன்று முதலாளி அம்மாவிடம், சிறிது பணம் கேட்டு வாங்க வேண்டும் என்றெண்ணியவாறு வேகமாக நடந்தாள்.  

                         அந்த பங்களாவின் கேட்டினைத் திறந்து கொண்டு, வீட்டின் பின்கட்டு வழியாக சமையற்கட்டினை அடைந்தவளை, கோபத்துடன் எதிர்கொண்டாள் எஜமானி அம்மாள் சுகன்யா. “ வங்கம்மா, வாங்க. இப்பத்தான் வர்றீங்களா? காபி குடிங்க” என்று நக்கலாய், அவள் வேலைக்குத் தாமதமாய் வந்ததை இடித்துரைத்தாள். “இல்லீங்கம்மா……..” என்று ஆரம்பித்த ராமாயியை,              “ வேலைக்கு   வர்ற நேரத்தைப் பாரு. ஆறு மணிக்கு வரணும்னு சொல்லி இருக்கேண்ல, இப்ப மணி ஆறரை ஆகப் போகுது. இனிமேல் வேலையை ஆரம்பிச்சு, எப்ப முடிக்கறது??? சீக்கிரம் ஆரம்பி “ என்று சிடுசிடுத்து விட்டுச் சென்றாள்.

                                                 பரபரவென்று அங்கு குவிந்திருந்த வேலைகள் அனைத்தையும் ஒவ்வொன்றாய் செய்ய ஆரம்பித்தாள் ராமாயி. பாத்திரங்கள் துலக்கி, வீடு முழுவதும் பெருக்கி துடைத்து விட்டு, கொல்லைப் புறத்தில் மலையென குவித்து வைக்கப் பட்டிருந்த துணிகளை எல்லாம் துவைத்து காயப் போட்டுவிட்டு நிமிர்ந்தாள். நான்கு மணிநேர ஓய்வில்லா வேலைகட்குப் பின், அப்பாடா என்று அயர்ந்து ஓரமாய் அமர்ந்தவளை, சுகன்யாவின் அதட்டும் குரல் விரட்டியது. ”வேலை எல்லாம் முடிஞ்சதா?? மாடியில சின்னையா ரூம் ரொம்ப தூசியா இருக்கு, அதைப் பார்த்து பெருக்கி சுத்தம் பண்ணி வை. வேண்டாதது எல்லாம் ரூம் வாசல் கிட்ட இருக்கற ஷெல்ஃப்ல இருக்கு. ரூமை கூட்டி பெருக்கி சுத்தம் பண்ணிட்டு, தேவை இல்லாததுன்னு ஷெல்ஃப்ல இருக்கறதெல்லாம் கொண்டு போய் தெருவோர குப்பைத் தொட்டில போட்டுடு” என்று கட்டளையிட்டாள்.

                                    எஜமானி அம்மாள் ஏவலிட்ட பணிகளை செய்ய எத்தனித்தாள். அவளால் செய்ய இயலவில்லை. ஓய்வின்றி வேலை செய்தவளுக்கு, பசி வயிற்றைக் கிள்ளியது. ”அம்மா, பசியாயிருக்குங்க. பழையது இருந்தா சாப்டுட்டு செய்யட்டுங்களா ??” என்றாள் ராமாயி. “சரி…சரி.. அந்த அடுப்பு மேடைக்கு கீழ இருக்கற பழைய சாதத்த சாப்டுட்டு வேலைய பாரு” என்று கூறி விட்டுச் சென்றாள். சாதத்தினை எடுத்து வந்து, ஓர் ஓரமாய் அமர்ந்து உண்டு விட்டு, பாத்திரங்களை துலக்கி வைத்துவிட்டு, அடுத்த வேலையை பார்க்கக் கிளம்பினாள்.

                                  மாடிப்படி ஏறி, அந்த அறையைத் திறந்தவளுக்கு மலைப்பாக இருந்தது. ஆம்….. அறை முழுவதும், புத்தகங்களும், பேப்பரும், பேனாக்களுமாய் இறைந்து கிடந்தன. சாப்பிட்ட தட்டுகளும்,காபி தம்ளர்களும் டேபிளின் மீது அப்படியே கிடந்தன. ஒவ்வொன்றாக எடுத்து சீர்படுத்திவிட்டு, அறையினை சுத்தம் செய்தாள். பின், இறுதியாக, எஜமானி அம்மாள் சொன்ன வேண்டாதவற்றை எடுத்துப் பார்த்தாள். அது முழுவதும், சில பக்கங்களே எழுதிய நோட்டுக்களும், எழுதாத முழு நீள தாட்களும், பேனாக்களும், பென்சில்களுமாய் நிறைந்திருந்தது. “ இவ்வளவு இருக்கு. இது எல்லாமே  வேண்டாததா என்ன?“ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவள், அவற்றை எடுத்து, குப்பைக் கூடையில்  போட எத்தனித்தாள். அப்போது தான் அவள் அதை கவனித்தாள், அதில் நிறைய நோட்டுகள் சில பக்கங்கள் மட்டுமே பயன் படுத்தப்பட்டு இருந்தன. மற்ற பக்கங்கள் எல்லாம் ஏதும் எழுதா வெள்ளைத் தாட்களாகவே இருந்தன. “ இவ்வளவு பக்கங்கள் இருக்கே, இதைப் போயி குப்பைல போடச் சொல்றாங்களே. நம்ம பிள்ளைக்கு வேணும்னா கேட்டு எடுத்துட்டு போகலாமா “ என்றெண்ணியவள், அவற்றை அள்ளிக் கொண்டு கீழே வந்தாள்.

                                “அம்மா, இதிலே எழுதாத நோட்டுகள், கொஞ்ச பக்கம் மட்டும் எழுதுன நோட்டுகள் எல்லாம் நிறைய இருக்கும்மா” என்றவளை ஓர் அலட்சியப் பார்வை பார்த்தாள் சுகன்யா. “ அதான், எல்லாம் வேண்டாம்னு தான எடுத்து வெச்சிருக்கு. குப்பைல எடுத்து போட வேண்டியது தானே, அதை விட்டுட்டு என்ன பேசிட்டு இருக்க?? ” என்றதட்டினாள் சுகன்யா. “சரிங்கம்மா” என்று கூறிவிட்டு, ஏதோ கேட்க எத்தனித்தவள், ஏதாவது கேட்டால், மீண்டும் திட்ட ஆரம்பித்து விடுவாளோ என்றெண்ணி மவுனம் ஆனாள்.

                                       குப்பைகள் என்று அவர்கள் ஒதுக்கியவற்றை எடுத்துக் கொண்டு வந்தவள், “ அவங்க தான் வேண்டாம்னு சொல்லிட்டாங்கள்ல, நாம இதுல இருக்கற நல்ல நோட்டுப் புத்தகங்கள நம்ம பிள்ளைக்கு எடுத்துகிட்டா என்ன….இவங்களும் நான் நோட்டு வாங்க பணம் கேட்டா, இன்னைக்கு குடுக்கப் போறதில்ல” என்றெண்ணியவள் கேட்டின் அருகில் அமர்ந்து, தன் மகனுக்கு பயன்படும் என்று தோணிய நோட்டுகளை எடுத்துக் கொண்டிருந்தாள். இதனை தற்செயலாக கவனித்துவிட்ட சுகன்யா, விறுவிறுவென்று ராமாயியிடம் வந்தாள். “என்ன பண்ற இங்க?” என்று கேட்டுவிட்டு, ராமாயியின் பதிலுக்குக்கூட காத்திராமல்,                          “ வீட்டிலிருந்து  என்ன திருடிட்டு போகப் பாக்கற? ” என்று காரசாரமாய் கத்தத் துவங்கி விட்டாள். அவ்வளவு நேரம் அவளிட்ட ஏவல்கட்கும், அதட்டல்கள் எதற்கும் பேசாது, வேலைகளை கவனித்து வந்த ராமாயி, “அம்மா, கொஞ்சம் பொறுமையா பேசுங்க. நீங்க சுத்தப் படுத்த சொன்னீங்க, நான் செஞ்சேன். அங்க, உபயோகமான பொருட்கள் நிறைய குப்பைல கிடந்தது. உங்க கிட்ட சொன்னதுக்கு, அதெல்லாம் குப்பைல போடச் சொல்லீட்டிங்க. நான், அதில என் பிள்ளைக்கு பயன்படலாமேனு தோணுன பொருட்கள குப்பைல இருந்து எடுத்தேன். எதையும் சந்தேகத்தோடயும், அதிகாரச் செருக்கோடயும் பாக்கற நீங்க, முதல்ல உங்க மனச சுத்தப் படுத்திக்கோங்க. உங்க கிட்ட இனி நான் வேலை பாக்கறதா இல்ல. நான் வரேன்” என்று கூறி விடுவிடுவென்று வெளியேறினாள் ராமாயி.

     

    Share
  • போதுமடா சாமி

     

    விசாலம்

    ‘அம்மா  அம்மா  இத பாரு என் பிரண்டு ஜோதி    நியூயார்க்  டைம்ஸ்ல  கவர் பேஜ்ல வந்திருக்கா ..எவ்வளவு  அடக்கமாக நிக்கிறா பாரேன்” என்றபடி  அனு  தன் அம்மா  ஜானகியிடம் புத்தகத்தைக்கொடுத்தாள். அதை வாங்கியபடியே  ஜானகி “இவள் போட்டோ இங்க ஏன் வந்திருக்கு “?  என்று கேட்க

    “அதுவா  அவள் கேலக்ஸியில்  எதோ பல புது கண்டுப்பிடிப்பு  செய்து  ஸீனியர் ஸைன்டிஸ்ட் ஆகி புகழ் உச்சிக்குப்போயிட்டா . கூடிய சீக்கிரம்  நோபல் பிரைஸுக்கும் அவள் பெயரைத் தேர்ந்த்டுக்கலாம் அம்மா,”

    “அப்படியா  ….ரொம்ப  சந்தோஷமா இருக்கே  தில்லியிலேயே அவ  காலேஜ்ல அவதான் முதல் இடம்ன்னு நீ சொல்லியிருக்கே “

    “ஆமாம்மா  இங்க அமெரிக்காவிலே  எல்லா மேகசின்னிலும்   டிவியிலும்  இவள பத்தி   வந்துடுத்து .ஒரே புகழாரம் தான்  ஒரு தமிழ்நாட்டுப்பெண் இந்தியாவுக்கு   அதுவும் தமிழ் நாட்டுக்கு  எத்தனைப்பெருமை வாங்கித்தந்திருக்கா  பார்த்தயா ?”

    “ஆமாம் அனு  ..ஆனா நான்  இங்க  வந்து ஒரு மாசம் தானே ஆச்சு .இதுக்கு முன்னாடி சென்னைல ஒரு பத்திரிக்கைலேயும் நான் இவள  பத்தி படிக்கவே  இல்லையே .நான் எல்லா முக்கிய பத்திரிக்கையும் வாங்கறேனே “

    ஆமா     நீயே ஒரு எழுத்தாளர். ஏம்மா நீ இவள  பத்தி எழுதேம்மா..தமிழ் நாட்டுக்கு பெருமை தானே “

    “நான் நினைச்சேன்   நீ சொல்லிட்ட  ..இன்னும் இரண்டு மாசம் கழிச்சு சென்னைப்போய்  நான் செய்யற  முதல் வேலை இதான்  “

    அனு தன் அம்மாவின் முதுகை செல்லமாகத்தட்டிவிட்டு  மொபைலை காதில் வைத்தபடி தன் அறை   சென்றாள்.

    ஜானகி நியூஜெர்ஸிக்கு வந்து ஒரு மாதம்  தான் ஆகிறது ஆனாலும் சென்னையில் மனம் ஈடுபட்டதுப்போல் இங்கு என்னவோ
    ஈடபடவில்லை  .எல்லா இந்தியப்பொருளும் இங்கு கிடைக்கிறது  வசதியான வாழ்க்கை  ஒரு பிரச்சனையும் வந்ததில்லை . பெண்ணும் மாப்பிள்ளையும் அன்பைப்பொழிகிறார்கள்  ஆனாலும் எதோ ஒரு வெறுமை .அது என்னவென்று சொல்லமுடியவில்லை . இந்திய கலாச்சாரத்திற்கு ஒவ்வாத சூழ்நிலையா ? ஊஹூம்   இருக்கமுடியாது ஏனென்றால் தற்போது சென்னை   அமெரிக்காவையும்
    தூக்கிச்சாப்பிட்டு விடுவது போல் ஒரு மாற்றம் .அப்படி ஒரு ஜெனரேஷன் கேப் {gap} …பின் என்ன!  ஹோம் ஈஸ் ஹோம்  எ ஸ்வீட்
    ஹோம்  இல்லையா ? ஆறுமாதம் இருக்க வந்தவள் இரண்டு மாதத்திற்குள்ளேயே  சென்னைக்கு
    மூட்டைக்கட்டிவிட்டாள்

    சென்னை வந்ததும் முதல் வேலையாக  வெளிநாட்டில் கொடிக்கட்டிப்பறக்கும் ஜோதியைப்பற்றி எழுதியாகிவிட்டது . இதை தகுந்த பத்திரிக்கைக்கு அனுப்ப வேண்டும்  ,முதலில் அவள் கண்முன்னால் வந்தது  “ஆனந்த மஞ்சரி ” உடனே

    டெலிபோன் முன்   அமர்ந்தாள் ஜானகி

    “ஹலோ ஹலோ     வணக்கம் ஆனந்த மஞ்சரி  ஆசிரியர்  இருக்காறா?”

    “கொஞ்சம் லைன்ல் இருங்கம்மா  .”என்ற குரல் கேட்டு காதில் ரிசீவரைப்பிடித்தபடி இருக்க  “குறையொன்றுமில்லை மறைமூர்த்திக்கண்ணா” என்ற பாடல் ஓடிக்கொண்டேஇருந்தது,  ஒருவரும் வரவில்லை  .சிறிது நேரம் காத்திருந்து பின் சலிப்புத்தட்டி ரிசீவரை  டங்கென்று கீழே வைத்தாள். இன்னிக்கு அஷ்டமியோ அதான் இப்படி என்றபடி மனம் சமாதானமடைந்தது .
     ,,

    இருநாள் கழித்து  இதே பல்லவி   …. “ஹலோ ஹலோ  வணக்கம்  யார் பேசறீங்க “

    ”   வணக்கம் ஆனந்த மஞ்சரி ஆபீஸ் “

    ” சார்  எனக்கு ஆசிரியருடன் பேசவேண்டும்”

    ” லைன்ல இருங்கம்மா   ”   உடனே அதே பாடல் அதே குரல்      .குறையொன்றுமில்லை ……..

    “அப்பா வெங்கடேசா  … இதாம்ப்பா எனக்கு குறை  ..போன்ல இப்படி பாட்டப்போட்டுட்டு  எங்கேப்பா எல்லாரும் போய்டறா…….

    என்று எண்ணிய எனக்கு வெங்கடேசன் அருள் புரிந்தான்.

    ”  வணக்கம்  நான் ஆசிரியர்  சோமு பேசறேன்   என்னம்மா  வேணும் ?”

    “சார்  நான் ஒரு விக்ஞானியைப்பற்றி   எழுதியிருக்கேன்  யூ எஸ் ஏ ல அவளுக்கு ரொம்ப  பேரு  ……அத உங்க பத்திரிக்கைக்கு
    அனுப்பட்டுமா ? ஈமெயில் ல அனுப்பறேன்  “

    “சரிம்மா  அனுப்பி வையுங்கோ .படிச்சுப்பாத்து பிரசுரிக்கிறோம் ‘

    ” ரொம்ப நன்றி  சார் ”     அவள் சார் என்று முடிப்பதற்குள்  மறுபக்கம் துண்டிக்கப்பட்டது …அத்தனை பிசி போல  ………

    ஒரு வாரம் சென்றது  .அங்கிருந்து பதில் மடல் ஒன்றும் வரவில்லை  .போடவும் மாட்டார்கள் .நாம் தான் பின்னால் அலையணும் .

    திரும்பவும்  ஜானகி  ஆனந்த மஞ்சரி ஆபீஸுடன்  தொடர்ப்பு கொண்டாள் ” ஹலோ  நான்  ஜானகி பேசறேன்  வணக்கம்    நான் அனுப்பிச்ச”  பெண்விக்ஞானி ” வந்து சேர்ந்ததா? ஆசிரியர் பார்த்தாரா ?

    “மேடம்   கொஞ்சம் ஹோல்ட் பண்ணுங்க   அவர் ஸீட்ல வந்துட்டாரான்னு பாத்து சொல்றேன் ”

    ஐந்து நிமிடம் கழிந்தது  ,,பின் அதேகுரல் வந்தது     ” மேடம்   அவர் இன்னும் வரலை   . எப்ப வருவார்ன்னு தெரிலை  நாளைக்கு

    இந்த நேரத்தில போன் பண்னி கேட்டுங்க  ”       டக்    ……..பேச்சு துண்டிக்கப்பட்டது

    ஐயோ இது என்ன ?அனுப்பறதே இத்தனை சிரமமான காரியமாயிருக்கே  எதாவது சிவாரிசு பிடிக்கணுமோ ! என்று   மனம்  குழம்பிப்போனது

    இதேபோல் அனுபவம்   ஒன்றல்ல இரண்டல்ல…..மல்லிகைச்செண்டு  .மஞ்சள்குங்குமம்   .குமுதமலர்   என்ற பல  புகழ்ப்பெற்ற பத்திரிக்கை
    ஆசிரியர்களிடம் பேசி  அவர்களும் அனுப்பச்சொல்லி அது அப்படியே விழலுகிறைத்த் நீர் போல் வீணானது  .எல்லோருக்கும் வாய்ப்பு வர வரத்தானே  ஒரு சுஜாதா அல்லது சிவசங்கரி யாக ஆகமுடியும்   இது ஏன் இவர்களுக்குப்புரியவில்லை

    ஒரு வாரம் சென்றது   ” ஆனந்த மஞ்சரி  வேண்டாம் ராசியில்லை .  ” மங்கை உலகம் ”     பத்திரிக்கையில் நிச்சியம் எடுப்பார்கள்

    அங்கு போடுகிறேன் ” என்று தனக்குத்தானே பேசியபடியே ஜானகி அந்தப்பத்திரிக்கை ஆசிரியரை  அழைத்தாள்.

    இங்கு ரிங்க் டோனில் கோவிந்தா வரவில்லை  ஆனால்  கந்தசஷ்டிக்கவசமாக முருகன் வந்தான் .

    “ஹல்லோ   மங்கை உலகம்  ஆசிரியர்   ஹேமா   ….. வணக்கம்

    “வணக்கம்   “என்றபடி எல்லா இராமயணமும்  சொன்னாள் ஜானகி

    “”ரொம்ப மகிழ்ச்சி  அவசியம் அனுப்புங்கள் போடுகிறோம்   அப்படியே அவளது படமும் அனுப்புங்கள் .மகளிர்தினம் அன்று அட்டையில் அவள் புகைப்படத்தைப்போட்டு  ஜமாய்த்துவிடலாம்  ‘

    “அப்பாடி இன்றுதான்  என் டென்சன் நீங்கியது மிக்க நன்றி  :”

    அடுத்த போன்  அனுவுக்கு …………..

    “டிரிங்க டிரிங்க      ,,,ஹலோ அனுவா      ,,,,,,எப்படி   இருக்கே    நான் எதுக்கு இந்த நேரத்ல போன் செஞ்சேன் தெரிமா  ?  எனக்கு உடனே

    ஜோதியோட போட்டோ ஒண்ணு  ஈமெயில்ல அனுப்பு   “மங்கை உலகத்ல   “அவளப்பத்தி நான் எழுதியதை பிரசுரிக்கறேன்னு சொல்லியிருக்கா  .  அப்பாடி நான் எழுதி ஆறுமாசம் ஆயிடுத்து …..’

    “சரிம்மா  உடனே அனுப்பறேன்  பெஸ்ட் ஆப் லக்  நாளைக்கு ஸ்கைப்ல  வரேன்  “

    “சரி உடம்ப பாத்துக்கோ  பாத்து டிரைவ் பண்ணு  ஒகே  பை பை ‘

    “அப்பா எல்லாம்  ஒருவிதமாய்  முடிந்தது  இந்த மாதம்   ஜோதி அட்டையில் மின்னுவாள்  .தமிழ்நாட்டுப்பெண்ணின் புகழ் எல்லா இடத்திலும்  பரவும் .அப்போ பாயசம் வைச்சுக்கொண்டாடுவேன் ” என்று யோசித்தபடி  ஜானகி படுக்கச்சென்றாள்.

    ஒவ்வொரு நாளாய் எண்ணி    ..கடைசியில் அந்த ஒன்றாம் தேதியும் வந்தது போஸ்டில் தனக்கு இலவச காப்பி ஒன்று கிடைக்குமே
    என்று போஸ்டை எதிர்ப்பார்க்க  ஒன்றும் வரவில்லை  அனுப்ப விட்டுப்போச்சோ என்ற நினைவில் கடையில் மங்கை உலகம்   வாங்கப்போனாள் . புத்தகம் இப்போது அவள் கையில்  …அட்டையில்  அங்கு ஜோதி இல்லை  ஒரு வளரும் சினி  நடிகை
    மாடல் கவர்ச்சி ஆடையுடன் போஸ் கொடுத்தாள் ..

    ஜானகிக்கு ஒரே ஷாக் ..கோபம் வர  அழுகையும் வர   நேரே வீடு வந்தாள் நேரே டெலிபோனை எடுத்தாள்,

    ‘ஹலோ  “

    “ஹலோ   மங்கை உலகம்   நான் மீனா  பேசுகிறேன் “

    ” எங்கே உங்க ஆசியரைக்கூப்பிடுங்க “

    ” சாரி மேடம்    நீங்க தானே ஜானகி மேடம்  ஆசிரியர்  ..உங்களுக்கு ஒரு மெசேஜ்  கொடுக்கச்சொன்னா  ‘ எதோ மேலிடுத்து பிரஷராம்
    அதனாலே  ……..”

    “அதனாலே…..சரி பிரஷர்  யார் கொடுத்தா ?எனக்குத்தான் இப்ப  பிளட் பிரஷர் வந்துடுத்து “

    “இல்ல மேடம்   வந்து  . இந்த வளரும் மாடலைப்பேட்டி எடுத்து போட்டோவும் போடச்சொல்லி  ஒரு பெரிய பிரமுகர்  பெரிய தொகையை கொடுத்துட்டார்  அதனாலே எங்க மேடத்துக்குத் தட்டமுடிலை  சாரி மேடம் :

    டக்கென்று   டெலிபோன் துண்டிக்கப்பட்டது .

    Share
  • கல்

     

    மணி ராமலிங்கம்

    அப்துல் கசாப் இப்படி கொல்லப்பட்டிருக்க கூடாது.

    மீடியாக்கள் மறுபடி பிளிர ஆரம்பித்தன. செய்திகள், விமர்சனங்கள், விவாதங்கள், மக்கள் கணிப்புகள். ட்விட்டர்கள், முகநூல் கருத்துரைகள் என எங்கும் அல்லோகலம்.

    விசாரிப்புக்கோ, அல்லது வேறு எதற்கோ ஆர்தர் ரோடு ஜெயிலிருந்து கொண்டு சொல்லும் போது கல்லெறிந்து கொல்லப்பட்டான் கசாப்.

    இத்தனை செக்யூரிட்டிகளுக்கு  இடையே தூக்கு தண்டனையோ ஏற்போ, நிராகரிப்போ வராத நிலையில் ஆர்தர் ரோட்டிலிருந்து எதற்காக அவன் வெளியே எடுத்துச் செல்லப்பட வேண்டும் ?

    நேரம், இடம், பொருள் தெரிந்து யாரோ ஏவிய கல் ஒன்று நகர்ந்து கொண்டிருந்த கசாப்பின் மீது பட்டு, அவன் தடுக்கி விழுந்தானாம். அவன் தடுக்கி விழுந்த நேரத்திலும் சரமாரியாக கற்கள் உடலின் முக்கியமான உயிர் ஸ்தானங்களில் பட்டு, அந்த அதிர்ச்சியில் உயிர் பிரிந்திருக்கலாம் என்றன செய்திகள்.

    எல்லோர் முன்னாடியும் மைக் நீட்டியது மீடியா.

     “ எல்லோரையும் அவன் இப்படித்தானே கொன்னான்.. அவனுக்கு மட்டுமென்ன ராஜா சாவு “

    “ தூக்கு தண்டனை அறிவிக்கும்  வரைக்கும் காத்திருந்திருக்க  வேண்டும். இது சரியான செயல் அன்று. அண்டை நாடுகளுடன் அமைதியை நிலைநாட்ட விரும்பும் இந்தியாவிற்கு நல்லதன்று “

    “ இது இந்தியாவில்  எழுந்து வரும் ஜனநாயகத்திற்கு எதிராக மறைமுக வேலை செய்யும் மதவாத சக்திகளின் கைவேலை தான் “

    “ இவ்வளவு நாள், நம்மை கொன்று, நம் காசில் உடம்பை வளர்த்த அவனை பகிங்கரமாய்  தூக்கு போட்டிருக்க வேண்டும்.. பரவாயில்லை.. மன்னித்து பக்கத்து நாட்டிடம் ஒப்படைக்காமல், பயந்து போய் பின்லேடனை போல கடலடியில் கரைக்காமல், இந்தியன் ஓருவனாலே கொல்லப்பட்டான் என்ப்து மகிழ்ச்சி தான்.. “

    “ இது உலக அரங்கில் நமது பாதுகாப்பின் நற்பெயருக்கு ஒரு கரும்புள்ளி. நம் நாட்டில் என்றைக்குத்தான் விரைவாய் நீதி கிடைத்திருக்கிறது. நீதி கிடைக்க கொஞ்ச நாள் ஆனால் தான் என்ன தப்பு. அதற்குள் எதற்கு கொல்ல வேண்டும் ? “

     “ கசாப்பின் மரணத்திற்கு பழிக்கு பழி வாங்குவோம் “ தாலிபான்கள்.

    “ அவன் இறந்தான் என்பது ஒரு ஜோடிப்பு “ –

    “ தூக்கு தண்டனை என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்வதேயில்லை.. அது யாராகயிருந்தாலும் சரி.. விசாரணை முடிந்து தீர்ப்பு வருமுன்னரே இப்படி நடந்திருக்கிற செயல்கள் மிகப் பெரிய சந்தேகத்தை கிளப்புகின்றன.. நாம் கற்காலத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோமா ? “

    “ அவனின் இறப்பு, கலவரத்தின் போதைய உயிர்களை திருப்பி தராவிட்டாலும், ஒரளவு ஆறுதலையாவது தரும்.. “

    “ நாடாளுமன்றத்தை தாக்கியவர்களையும் இப்படி ஏதாவது கல்போட்டு எறிந்தால் இனிமேல் இந்தியாவினுள் ஊடுருவும் தீவிரவாதிகளுக்கு பயம் வரும்.. “

    ’போலிஸே உள்ளே விசம் வைத்து கொன்றுவிட்டு இப்படி கதை கட்டியிருப்பார்கள். அவனை கொல்லாவிட்டால் நமது அரசியல் தலைவர்களின் பல உட்கதைகள் வெளியே வந்துவிடும் ‘ ஒரு மாநில அரசியல் கட்சியின் வியாஞ்ஞானம்.

    ” இது போல நூதனமான முறையில் பல உலகத்தலைவர்கள், பிரமுகர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். [நூதன முறைகளை, தலைவர்களை ஒரு தாளில் எழுதி கொண்டு வந்து வாசித்து காட்டினார் ] உடல், மன இயக்கம் அறிந்து எந்த கருவி கொண்டும் உடலின் சில பகுதிகளை ஒரே நேரத்தில் தாக்குவதன் மூலம் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி இதயத்தை நிறுத்தலாம். இந்த முறை பயிற்சிகள் இஸ்ரேல், ஜெர்மனி, ஆப்பரிக்கா மற்றும் ஐரோப்பாவின் ஒரு சில பகுதிகளில் மட்டும் இரண்டாம் உலகப் போரின் போது பிரசித்தியாய் இருந்தது ”  ஒய்வுப் பெற்ற க்ரைம் ப்ராஞ்ச் அதிகாரி.

    ”மக்களுக்குத்தான் பாதுகாப்பில்லை, மக்களை சராமாரியாக சுட்டுக்கொன்ற ஒருத்தனை கூடவா நீதிவிசாரணை முடியும் வரை அல்லது தூக்குத் தண்டனை முடியும் வரை காக்க முடியவில்லை “ ஒரு எதிர்கட்சி தாளித்தது.

    மீடியாவில் மறுபடி மக்கள் கோப்ப்பட்டார்கள், தலைவர்கள் துக்கப்பட்டார்கள்.

    *

    அசுரத் தீனி மீடியாவிற்கு எப்போதும் அவசரம். இந்த நான்கு வருடங்களில் கசாப்பை பற்றித் தான் எத்தனை செய்திகள்.

    அவனுக்கு ஜெயிலில் கிடைக்கும் பிரியாணி பற்றியும், வசதிகள் பற்றியும் அவனால் இந்திய அரசாங்கத்திற்கு செலவாகிற சில ஆயிரம் கோடிகள் பற்றியும் எத்தனையோ கதைகள்.

    வழக்கம் போல நம் அரசியல் கட்சிகளுக்கு அவன் ஒரு வரப்பிரசாதமானான். அகிம்சை பஜனையும், அவனை கொன்றால் தான் இந்தியாவின் ஆத்மாவே சாந்தியாகும் என்று இரு நிலைகள். இரு பிரிவினரும் இரத்தம் கொதிக்க வைக்கும் உரையாற்றினர்.

    பேச்சுகள். பேச்சுகள். ஓயாத பேச்சுகள். பெரிய ஊழல், கிரிக்கெட் மேட்சு, தேர்தல் எதுவும் இல்லாத போது கசாப்பே மீடியாக்கள், ரயில், பஸ், அலுவலகம் முழுக்க பேச்சாகயிருந்தான்.

    கசாப் மீடியாவின் டிஆர்பி அட்சய பாத்திரமானான். மீடியாக்கள் யாகத்தில் நெய் வார்த்துக்கொண்டிருந்தன.

    திடீரென்று ஒரு  விமானம் கட்த்தப்பட்டு  கசாப்பை விட்டால்தான் பயணிகள்  விடுவிக்கப் படுவர் என்று  சொல்லப்பட்ட்தாக விசயம் கசிந்த்து. அரசாங்கம் மெளனித்தது.

    ஒரு முறை கசாப்பின்  பிறந்த நாளை பெரும்பாலான  ரயில் பெட்டிகளில் கொண்டாடினோம். அந்த நக்கலான ஜனநாயக எதிர்ப்பை மறுபடியும் மீடியா பேசியது.

    பக்கத்து நாட்டு அதிபர் வந்த போதும், ஐநாவில்  வெளியுறவு அமைச்சர்கள்  கை குலுக்கியபோதும் விசயம் மறுபடி மேலெழுந்து, மறந்து போனது.

    ஒரு மும்பை செய்திப்பத்திரிக்கை பொய்த் துப்பாக்கிகளோடு ரயில் பெட்டிக்குள் போய் சின்ன நாடகம் நடத்தி அதையும்  ‘போலி பாதுகாப்பு’ என்று பிரசங்கப்படுத்தியது. இன்னொரு கசாப் வந்தாலும் இதே கதை தான் மறு ஓளிபரப்பாகும் என்று மீடியாக்கள் இரைந்தன.

    தேசயானையின் செவியில் எறும்புகள் அசைவுகளுக்கு இடமிருக்குமா என்ன ?

    ஆனாலும் மீடியாக்கள்  விடுவதேயில்லை. ஏதாவது ஒரு மீடியா, கசாப்பை உயிர்ப்பித்துக்கொண்டிதானிருந்தன. கசாப் மீடியாவில் வாழ்ந்து கொண்டிருந்தான்.

    இப்போது மறுபடியும் கசாப். இன்னும் கொஞ்சம்  நாட்களுக்கு அவனின் இறப்பு, யாரோ, எங்கிருந்தோ, எப்படியோ நூதனமாய் கல்லால் எறிந்து கொலை செய்யப்பட்டது மீடியாக்களுக்கு முழுச் சாப்பாடு.

    *

    உங்களோடு டிவி பார்த்து கொண்டிருக்கும் நான் ஒரு மும்பைவாலா.

    மும்பை தாக்குதலின்  துர்கணங்களின் போது மெழுகுவர்த்தி  ஏற்ற போகவில்லையென்றாலும், நாள் முழுக்க உட்கார்ந்து  டீவி பார்த்திருக்கிறேன். பயந்து போய் நான் தினமும்  போகின்ற இடமானதால், உணர்ச்சி பொங்க பக்கத்து நாட்டை திட்டியிருக்கிறேன். ஒரு நாளைக்கு சராசரியாய் நாலு மணி நேரம் பயணம். மின்சார ரயில் பெட்டி ஸ்நேகிதர்களோடு இதை விவாதித்திருக்கிறேன்.

    ஒரு அவசர மும்பைவாலா அதற்கு மேல் என்னதான் செய்ய  முடியும்.

    கசாப்பின் தண்டனைக்கு முன்னான இந்த செய்தியையும் வீட்டிக்குள் உட்கார்ந்து பார்த்துக் கொண்டே ரொம்பவே கோப்ப்பட்டேன்.

    ” திஸ் இஸ் பிளடி நாட் குட்..  வாட் த ஹெல் ஹெப்பனிங் இன் திஸ் கண்ட்ரி [ This is bloody not good. What is happening in these country ? ]“

    கசாப் போட்ட ஜனாதிபதி கருணை மனு கிட்டதட்ட நிராகரிக்கப்பட்டு அமுக்கமாய் அவன் பின்லேடன் போல தண்டிக்கப் படுவான் என்று எல்லோரும் நினைத்து கொண்டிருந்த வேளையில் எதற்காகவோ வெளியே எடுத்து செல்லப்படும் வேளையில் தொடர் கல்லெறிதல் ( Continuous stoning ) மூலம் கசாப் கொல்லப்பட்டிருப்பது மகா ஆச்சரியம்தான்.

    இன்னும் நிறைய  நாள் இது பேசப்படும்.  இதை  வைத்து நானும் நாளை மின்சார  ரயிலில் நிறைய பேச வேண்டும். இப்படி பேசுவதற்கும் நான் மீடியாக்களிலிருந்துதான் கருத்துக்களை சாப்பிட வேண்டியிருக்கிறது. அவைகளை சாப்பிட்டு, போகும் ரயில் நேரத்தில் வாந்தியிட்டு, ஏப்பமிட்டு.

    இரண்டு மணி  நேரத்தில் பல கருத்துக்களையும் என் கருத்தாகவே பேசிவிட  என்னால் முடியும். மீடியாக்கள் இல்லாவிட்டால் கருத்தென்பதே இல்லாமலிருக்குமோ ?

    அவன் இறந்தது  சரியா, தவறா, உண்மையா, இல்லையா, – ஆம், இல்லை, சரி,தவறு, என்கிற விவாதங்கள், நூற்றூக் கணக்கான  அநுமானக் கதைகள், ஊகங்கள் இவற்றை நீங்களும் மீடியாவில் படித்திருக்கலாம். பார்த்திருக்கலாம். அவை உங்களுக்கு பிடித்திருக்கலாம். புளித்திருக்கலாம்.

    ஓகே, அதுவல்ல நம் கதை.

    *

    அவன் பெயர் எங்களுக்குத் தெரியாது. அவனை ‘ஏ..அம்பர்நாத்வாலா..’ என்று அழைப்பதே வழக்கம். லவண்டி அம்பர்நாத் வாலா, சாலா அம்பர்நாத் வாலா, சூ.. யா அம்பர்நாத்வாலா, பே.. யா அம்பர்நாத்வாலா என்று பல பெயர்களோடு அந்த கம்பார்ட்மெண்டே அழைக்கும். மரியாதையாய் நாம் அம்பர்நாத்வாலா என்றே அழைக்கலாம்.

    ஒரு நாள் ஏதோச்சையாய்  அந்த கம்பர்மெண்டில் நுழைய  அவனின் வசீகரம் என்னை ஈர்த்தது. கொஞ்சங்கூட முதல் வகுப்பிற்கு பொருந்தாத ஆடையலங்காரம். போஜ்புரி படகதாநாயகன் போல கலர் சட்டைகள். எப்போதும் தப்பாத மெல்லிய அழுக்கு பார்டர். உள்ளே துருத்திவிடப்பட்ட கைக்குட்டையாலான காலர். தெரியவேண்டுமென முனைப்போடு அணியப்பட்ட டாலர், அழுக்கேறிய பேரஸ்லேட், கொஞ்சம் சிவப்பு, நிறைய சிவப்பு என வலக்கை மணிக்கட்டில் கட்டப்பட்ட தாயத்துகள். சட்டைக்கு தவறியும் பொருந்தாத பேண்ட். ஒரு கை மடித்து, இன்னொரு பக்கம் முழுக்க போட்ட பித்தானோட சட்டை.

    எப்போதும் வழிக்கப்படாத முகம். குறைந்த தாடி, மிதமான தாடி, காடு போல தாடி என சீரற்ற முகம். கறைகளின் நடுவே அங்காங்கே பற்கள். எதையாவது மென்று கொண்டிருக்கும், சலிக்காமல் காறித்துப்பும் வாய். சிரித்தால் குழி விழும் கன்னம், தாடிதாண்டி தெரியும். அழுக்காயிருந்தாலும் அவனிடமிருந்து எந்த துர்வாடையும் வந்ததுமில்லை.

    முகம் நிறைய பெரிய  குங்குமப்பொட்டு, சாக்ஸ் போடாத சூ. முதல் வகுப்பிற்கு பொருத்தமில்லாத பாவங்கள். அலங்காரங்கள். அவன் அலுவலகம் அவனுக்கு பாஸ் வழங்கியிருக்கிறதாம்.

    இத்தனை அவலட்சணம் தாண்டியும் அவன் வசீகரம் அந்த பெட்டியில் பிரசித்தம்.

    அவனுக்கான ரசிகர்கள்  எப்போதும் உண்டு. அந்த பெட்டியில் நான் தானே(thane) ஸ்டேசனிலிருந்து மட்டுமே ஏறுவதால் அவனின் ரயிலில் ஆற்றும் லீலைகள் பற்றிய முன் புராணம் அறியும் வாய்ப்பும், அதை உங்களிடம் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பும் எனக்கில்லை.

    ரசிகர்களில் கூட  அவனோடு முற்றிலும் இயைந்த, கொஞ்சம் இயைந்த மற்றும்  தள்ளியிருந்து ரசிக்கும் கூட்டம் என பிரிவினர் உண்டு. நான் கடைசி ரகம்.

    ஏதோ அலுவலகத்தில் – சாய் கொடுத்து, பேங்கில் செக் போட்டு, வாடிக்கையாளரிடமிருந்து செக் வசூலித்து, மதிய வேளைகளில் மிட் டேவில் பொம்பளை படம் பார்த்து, உள்ளூர் அரசியல் பேசி, ‘போலியே சாப்.. ‘ என சலாம் அடித்து, பொய்ப் பணிவு காட்டி  – அவன் ஆபிஸ் பாயாக, மேனாக இருக்கலாம். வேறெதாவாகவும் இருக்கலாம்.

    ஆனால் இந்த ரயில் பெட்டியில் அவன் அறிவிக்கப்படாத கதாநாயகன். உற்சாக ஊற்று. அவனின் ரிப்ளெக்சனும், சார்ப்னசும் அவனோடு ஓட்டிப் பிறந்த கவச குண்டலங்கள்.

    இத்தகைய பேர்வழிகளோடு எனது அநுபவம் அவ்வளவு நல்லதாக அமையாதலால், நான் தள்ளியிருந்து ரசிக்கும் ரசிகானகவே இருக்க ஆசைப்பட்டேன். எனது ஹிந்தியும், மராத்தியும் சொல்லாமலே என்னை சால மதராசியாகவோ, வோ அண்ணா.. என்றோ காட்டிக் கொடுத்துவிடும்.

    எந்த மண்ணிலும் அந்நியப்படுவது போல அசெளகரியமான விசயம் எதுவுமில்லை.

    *

    கம்பியை பிடித்து வெளியே தொங்கிக்கொண்டே வருவான். எலெக்ட்ரிக்  கம்பிகள் நெருங்குவதை பார்த்து, நான் முதல் முறை பயங்கொண்டேன். “ ஹாய்.. கேட்.. இன் “ பதட்டினேன்.

    அவன் கண்டு கொள்ளவேயில்லை. அது நெருங்க நெருங்க  என்னில் பயம் அதிகரித்து அவனை பிடித்து இழுக்க முயற்சித்தேன். அவன் ஏதோ மலிவான பாலிவுட் பாட்டை சீழ்ட்டியடித்துக் கொண்டே வந்தான்.

    எனது சர்வநாடியும் ஒடுங்கி  பயந்து போன கடைசி, கடைசி  தருணத்தில் சடக்கென உடல் லேசாய் இழுத்துக்கொண்டான். கொஞ்சமான, ரொம்பவே கொஞ்சமான இடைவெளியில் அவன் தப்பினான். ஒரிரூ விநாடிகள் தாமதித்திருந்தாலும் அவன் தலையும், உடலும் பிரிந்திருக்கும்.

    எனது பயம் தெளிந்து பார்க்க, அந்த டப்பா முழுக்க என்னைப் பார்த்து சிரித்தது. அவனோ “ ஹாய்.. கேட்.. இன்.. ஹாய். கேட்.. இன் “ என்று மராட்டி வாடையடிக்க என்னைப் பார்த்து சிரித்துக்கொண்டிருந்தான். கோபமும், ஆச்சரியமும் என்னை மெளனமாக்கின.

    ’சீப். தேர்ட் ரேட்டட் சாப்’  – மனதில் திட்டல். இன்றைக்கு நான் பக்ரா (பலி ஆடு).

    இவ்வாறான நிறைய சாகச லீலைகள்  அவன் செய்வது வழக்கம் என்றும்  ஓவ்வொரு நாளும் ஓவ்வொரு  பக்கராக்கள் என்றும் தெரிந்து கொண்டேன்.

    கொஞ்ச நாளில், என்னை அறியாமலே அவனது சாகச லீலைகளை மீது ஒரு கவனிப்பு வந்ததும் உண்மை தான்.

    *

    எதிர் ட்ராக்கில் நிற்கும் வண்டிகளில் சில நொடிகள்  தாவிப் போய் ஏறிவிட்டு, மறுபடியும் அவனது வண்டிக்குள் புகுந்து விடுதல். இது ஒரு சில  கணங்களுக்குள் நடந்துவிட  வேண்டும். அந்த ஒரு சில  கணங்களுக்குள் எதிர் ட்ராக் வண்டியில் பயணம் செய்யும் நபர்களுக்கு கிசுகிசு மூட்டவோ, காதில் கெட்ட வார்த்தை சொல்லிவிட்டோ, வெறுமனே கத்திவிட்டோ வந்துவிட் வேண்டும்.

    பெரும்பாலும் சிக்னல்களுக்காக  நிற்கும் வண்டிகளில் அவனது  சாகசங்கள் பெரும் சிரிப்பை வரவழைப்பதாயிருக்கும்.

    ராக்கித் தினத்திற்கு முந்திய நாள். எதிர் நின்ற பெண்கள் டப்பாவில் குதித்தான். அங்கிருந்த பெண்களும் கச்சு மூச்சென்று கத்த, ‘க்யா பேன்.. க்யா பேன். “ என்று பேசிப் பேசியே மன்னிப்பு கேட்டபடியே பத்திருபது ராக்கி கட்டி, இருநூறு சம்பாதித்து விட்டான். எங்கள் சகபயணி தேஸ்பாண்டேவோடு போட்ட பந்தயம் என்று பின்பு தெரிந்தது. அழுது கொண்டே தேஸ்பாண்டே முன்னூறு ரூபாய் கொடுத்தார்.

    “ ஏ.. சாலா.. குச்சுபி கரேகாரே.. “ [ இவன் என்ன வேணா செய்வான்யா. ]

    விக்ரோலியில் இரவு ஸிப்டை முடித்துவிட்டு களைத்த முகத்தோடு திரும்பும் பெண்களை கண்டால் அவனுக்கு மிகுந்த குஸியாகிவிடும்.

    “ வேய்கா.. வெல்கம்  மேடம்.. கேன் ஐ ஹால்ப் யூ சார்.. ஐ ஆம்.. மேரினா க்யூர்.. “

    மூன்றாவது ப்ளார்பாரத்தில்  வேகமாய் போகும் ரயிலிலிருந்து  அவன் கொடுக்கும் கத்தல்கள் மொத்த ரயில்நிலையத்தையே லேசாய் அசைக்கும்.

    “ ஓ. மேடம்.. வாட் கேன் ஐ டூ பார் .. யூ “ என்று  ரயிலிருந்து தொங்கிக்கொண்டு அவர்களைப் போலவே மிமிக் செய்யும் அவனை அவர்களில்  சிலருக்கு பிடிக்கலாம். சிலர் வெறுக்கலாம். ஆயினும்  அவன் இருத்தல் அந்த ஸ்டேசனில்  பதிவு செய்யப்படும்.

     

    விக்ரோலி தாண்டி வருகிற நீளமான கோத்ரோஜின் பகுதிகளை அவன் கல்லெறிந்து  கடப்பான். அவன் கல்லெறிதல் போல இதுவரை நான் எங்கும்  பார்த்த்தில்லை. அவனுக்காக  டப்பாவில் அவனது ரசிகப் பெருமக்கள் சின்ன சின்னதான கற்களை அம்பார்நாத்திலிருந்து பொறுக்கி, தோள்பையில் போட்டு கொண்டுவந்திருப்பார்கள்.

    ஏதோ சாப்பாட்டுக்கூடை போல தொங்கும் அந்த கல் பேக் அவனை நோக்கி பிராயணப்படும். ஓற்றைக் கையால் கற்களை எடுத்தல், மறுகையால் அதை தூக்கி எறிதல். தொடர்ந்து செய்தல்.

    அது காண கண்கொள்ள நிகழ்வு. எடுத்தது கண்டிலன். எறிந்தது பார்த்திலன். அவ்வளவு வேகம். துல்லியம்.

    ஒரு சில நாள்களில்  தவளையை குத்தும். மலம் தின்று கொண்டிருந்த காக்கையை விரட்டும். சில நாட்களில் ஓரமாயிருந்த நாயின் பின்பகுதியை கிழிக்கும். இல்லை முன்னேயிருந்த ரயில் கம்பத்தில் பட்டு லேடீஸ் டப்பா மீது பட்டு அங்கிருந்து அய்யோ குய்யோவென சத்தம் வரவைக்கும்.

    தவளைக்கு கண், காக்கைக்கு வயிறு, பன்றிக்கு குதம், பல்லிக்கு  கழுத்து – எங்கு கல் பட்டால் விமோசனம் எளிதாகவும், எந்த சத்தமின்றியும் உறுதிப்படும் என்று அவனுக்கு பழக்கத்தினால் தெரிந்திருந்தது.

    ஒரு சில விலங்குகளுக்கு ஒரு கல் போதாது. தொடர்ந்து நாலைந்து எறிய வேண்டும். எறியும் அவனும், ஓடும் அவைகளும் நகர்ந்து கொண்டேயிருக்கும் போதும், குறிப்பிட்ட விசையோடு எறிதல் முக்கியம்.

    கேரம் போர்டின் காய் போல ஒரு முனைப்பட்டு  மறுமுனையில் ஸ்பின் பெளலிங்  போல திரும்பி அடிக்கும்  என்று வேறு யாராவது சொல்லியிருந்தால் நானும் நம்பியிருக்க மாட்டேன் தான். ஆனால் அவனுக்கோ அத்தகைய அர்ஜீனன் குறி.

    சில சமயம் எறிந்த கல் ஏழு பெட்டிகளை தாண்டி ரயில் முன்னாடி விழுந்திருக்கிறது. ஓவ்வொரு நாளும் சில கற்களாவது  எறிந்து விடவேண்டும். ஹோலியின் போது மற்ற சிறப்பு தினங்களிலும் கற்களோடு மற்ற சில சிறப்பு பொருட்களும் சேர்ந்து எறியப்படலாம்.

    விக்ரோலி தாண்டி வருகிற வித்யவிகாரில் கல்லூரி  கூட்டம். பெரிய பூவில் மொய்க்கிற  ஈக்கள் போல ஜீனியர், சீனியர்  மற்றும் மேனெஜ்மெண்ட் கல்லூரிகளின் ஆண், பெண் மாணவ, மாணவிகளின் கூட்டம்.

    அவனின் பிளிறல்  ஆரம்பமாகும். ஆள் பார்த்து கமெண்டோடு பிளிறுவான்.

    “ ஏய்.. தம்பி.. கவனமாயிருப்பா.. இந்த சிவப்பு சுடிதார். போன  வாரம்.. இன்னொத்துனுக்கு  முக்குல முத்தம் கொடுத்திட்டிருந்தா.. “

    “ என்னம்மா.. நீலக்கலர்  சன்னியா சோலி.. (*) .. ரொம்ப  டல்லாயிருக்க.. அதுவா.. [ மூன்று விரல்களை காட்டுவான்] “

    ரயிலின் சக பயணிகள்  சில நேரம் அவனிடம் சவால்  விடுவதுண்டு. எல்லா சவாலுக்கும் ஏதாவது ஒரு பெட்டிங் இருந்தது.

    “ ஏய்.. சாலா.. காட்கோபர்  ஸ்டேசனுக்கு முன்னாடி.. அந்த ப்ராத்தல் வீடு வர்றதுல்ல.. அதுல யாருக்கும் அடிபடாமா.. சன்னல் வழியா.. இதை தூக்கி போட முடியுமா.. “

    சின்ன கல்லோடு, ஆணுறைத்தாளும்  தரப்பட்டது. நூல், சின்ன கல், அதை சுற்றி தர்மாக்ஸ் பொட்டலம், அதன் மேல் ஆணுறை எல்லாம்  சுற்றப்பட்டு, குறிபார்த்து அடிக்க மிகச் சரியா அது  சன்னலில் அடித்து, அங்கே  சுற்றிக்கொண்டு சத்தம் எழுப்பியது. சத்தம் கேட்டு ஒரு மத்திய வயது பெண்மணி சன்னல் வழியே பார்க்க, ரயில் டப்பாவே ஹோவென கத்திற்று.

    “ யே. லவுண்டி.. நேத்திக்கு நான் யூஸ் பண்ணின பாக்கெட், மறந்துட்டு வந்துட்டேன்.. “ என்று எறியச் சொன்னவன் கத்த, அவள் புடவை தூக்கி கெட்ட வார்த்தை பொழிந்தாள். இடுப்பு முன்னும், பின்னும் ப்யங்கரமாய் ஆட்டியபடியே அவளின் வசவுக்கு எறியச் சொன்னவன் எதிர்ப்பாட்டு பாடினான்.  தன் குறி தப்பாததில் அம்பார்நாத்வாலவுக்கு ரொம்பவே குஸியாகிவிட்டது.

    எறியச் சொன்னவன், அந்த வெள்ளிக்கிழமை செளபாட்டி  ஹோட்டலில் தண்ணி வாங்கிகொடுத்து, கிரிஸ்டல் ஹோட்டலில் ராஜ்மா சாப்பாடு தரவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

    பெட்டிங்  இல்லாமல் அவன் சந்தித்த சவாலும்  ஒன்று உண்டு. அது அவனுள் ஏற்படுத்திய அகமாற்றம்  அளவிடமுடியாது.

    *

    ஓருநாள், மஜீத்  ஸ்டேசனுக்கும் விடி ஸ்டேசனுக்கும்  நடுவே இரயில் மெல்ல போய்க்கொண்டிருந்த  போது, ஒரு மத்திய வயது சிறுவன் தனது ட்ரவுசரை அவுத்து, பெண் பெட்டியின் முன்னால் தனது மேல் தோல் சீவப்பட்ட குறியை முன்னும், பின்னும் இழுத்து காட்டினான்.

    எப்போதாவது  இது போல் நடக்கும் செய்கைகள்  பயணிகளுக்கு அதிர்ச்சி  கொடுப்பதில்லை. மூக்கை பொத்திக்கொண்டோ, முகத்தை திருப்பிக்கொண்டோ, மனதை மூடிக்கொண்டோ நடக்க மாநகர ரயில் எல்லோரையும் பழக்கப்படுத்தியிருக்கிறது.

    ஆனாலும் அந்த சிறுவன் அதை தினமும்  செய்தான். தொடர்ந்து செய்தான். ஓவ்வொரு நாளும் கூடும் அடர்த்தியான  வன்மத்தோடு செய்தான். நிறைய பேரின் அதிர்ச்சி, ஆவல், கவனம் அவனுக்கு உற்சாகத்தை கொடுத்ததோ என்னவோ..

    பெண்கள் பெட்டி வரும்போது சிறுவன் கெட்ட வார்த்தைகளை பாலிவுட்டின் கிங்கான்கள் பேசுவது போலான மிமிக் குரலில் பேசிக் காட்டினான்.

    ஒரிரூ நாள் சிரித்தும், பின் சகித்தும் கொண்டிருந்த  கூட்டம் மெல்ல மெல்ல சகிப்புத்தன்மை இழந்தது. இந்த மலிவான செய்கை, பெண்களுக்கு மிகப்பெரிய மன உளச்சலை, வெறுப்பை, கசப்பை ஏற்படுத்தியிருக்கும்.

    மாநகர ரயில்  எப்போதும் வெறும் இரும்பல்ல. அதற்கு மற்றவர்களின் மனச் சங்கடத்தை ஓரளவு கடத்தும் மென் கடத்தியும் கூட. எங்கள் பெட்டிக்கு பக்கத்திலிருந்த  பெண்களின் சங்கடம், மன அவஸ்தை எங்களுக்கு புரிந்தது. சில  பெண்களில் கண் பயம் கூட எனக்குத் தெரிந்தது.

    பாசை கொச்சை, மற்றும் படிப்பின் காரணமாய் எதுவும் பேசமால் இருக்கும்  நான் அன்று, அதுவரைக்கும் இல்லாத வகையில் தன்னிலை இழந்து அவனை நோக்கி, ரயில் சத்தம் நோக்கி கெட்ட வார்த்தையால் திட்டினேன்.

    ~ ஹோய்.. கெட்  இன்.. சாந்தியார். [ அமைதி.. அமைதி..] ~ என்று அம்பர்நாத்வாலா என் தோள் தட்டிச் சொன்னது ஆறுதலாய் இருந்தது.  

    அடுத்த சில நாட்கள் அம்பர்நாத்வாலா அவனை திட்டிப்பார்த்தான். பின்பு கொஞ்சம் கடினமாய திட்டிப் பார்த்தான். சில நாட்களுக்கு மிரட்டிப் பார்த்தான்.

    ஓன்றும் பலனளிக்காது  போகவே, அவனுக்காக சிறப்பான சின்ன கல்லும், அதன் நுனியில் முட்கள் நிறைந்த செடியும் சுற்றப்பட்டு தயாரானது. ஒரு வெள்ளிக்கிழமை சுபதினம் சுருக்கென்று எறியப்பட்ட கல்லின் சத்தம் வீடி வரை கேட்டுக் கொண்டேயிருந்தது. ஒரு அடிப்பட்ட சொறிநாயின் பிளறல் போல இருந்த்து.

    அடுத்த நாட்களில், பெண்கள் டப்பாவிலிருந்து  ஓரிரு மத்திம வயது பெண்கள்  அம்பர்நாத் வாலாவுக்கு நன்றி  சொன்னார்கள்.

    மறுநாள் அவனது ரயில் பயணத்தின் நாமாவளி எந்த குந்தகமும் இல்லாமல் தொடர்ந்தது.

    விக்ரோலியில் கால் செண்டர் கேலி, கல்லெறிந்து  பழகுதல், காட்கோபரில் குஜராத்திகள் பற்றி கேலி, வித்யாவிகாரில் கல்லூரி பெண்களிடம் கேலி, சயானில் ட்ராக்கில் செம்போடு முகம் மூடி உட்கார்ந்திருப்பவர்களை அண்ணா.. என்று அழைத்து கேலி, பின்பு தாதரிலிருந்து மஜ்ஜீத் வரை உள்ளே உட்கார்ந்திருப்பவர்களை, அன்றைய செய்திகள் வைத்து கேலி,  வீடி ஸ்டேசனில் தலைவாரிக்கொண்டு பொட்டு வைத்து பயபக்தியாய் வேகமாய் அலுவலகம் ஏவுதல் –  என்று அவன் வழக்கம் தொடர்ந்தது.

    அவன் எந்த பெட்டிங்கும் இல்லாமல் செய்த  காரியம். மற்றவருக்காக நல்லது செய்கிற காரியத்தினால்  உள்ளத்தில் உடையும் தேன் கூட்டின் சுவையை அவன் உணர்ந்திருக்கலாம். அது எந்த பெட்டிங்கின் மலிவான விலையை விட எவ்வளவு உயர்ந்தது என்று அநுபவித்திருக்கலாம்.

    ஆக, மற்றவர் வந்து சொன்ன அந்த நன்றி – அவனுக்குள்ளே நிறைய மாறுதல்களை விதைத்தது என்றுதான் சொல்ல தோன்றுகிறது.

    *

    இன்னொரு நாள், என்னைப் போலவே, ஒரு புதிய ஆள் ஏறினார். வயது நாற்பத்தைந்து – ஐம்பதிருக்கலாம்.

    வயதை குறைக்கும் இளமையான மெலிந்த கட்டு  உடல். பின்பக்கம் வெட்டிய  முடி, சின்னதாய் ட்ரீம் செய்யப்பட்ட  மீசை. நுனி முறுகியிருந்த்து. சப்பாரி மாதிரியான உடை. விரைப்பாய் ஊன்றி நின்ற  கால். பாலீஸ் செய்யப்பட்ட  ஷூ. வாசலில் நின்றபடியே பயணம் செய்தார்.

    அம்பர்நாத்வாலாவின்  லீலைகள் அவருக்கு பதற்றம்  கொடுத்தன. அவரும் என்னைப் போலவே பதற்றப்பட்டது எனக்கு வேடிக்கை பொருளாயிருந்தது.

    “ உள்ள வாங்க தம்பி  “ என்று அவர் சொல்ல, ஆகா இன்னொரு குருவி சிக்கிருச்சு.. என்று எங்கள் டப்பாவில் சந்தோசம்.

    புதுப் பதற்றங்களை பார்த்து, அம்பர்நாத் வாலாவுக்கு அதிக குஸீயாகும். அதிக குஸீ, அதீத குரங்குச் சேட்டைகள். வித்தைகள். அன்று அதிக பேச்சு, அதிக வித்தைகள். முலூண்டிலிருந்தே அவனது நிகழ்ச்சி ஆரம்பமாயிற்று. பேச்சும்.

    “ லைப்ல பயம் கூடாது சார்.. பம்பேயில.. இருந்துட்டு  பயம்னா.. எத்தனை கிலோ.. “

    “ எல்லோரும் சாகத்தான போறோம்.. என்ன பயம் வேண்டியிருக்கு.. “

    “ சார் நான் வந்தா.. வண்டிக்கே உயிரு சார்.. “ [அமிதாப்பச்சன் குரலில்]

    பேச்சு. சீண்டல்  பேச்சு.. அவரும் ஏதோ சொல்லிக்கொண்டே வந்தார்.

    “ஏன்பா.. இந்த குரங்குத்தனம்.. “ அந்தப் புது ஆள் கேட்டார்.. ஓவ்வொரு முறையும் அவரின் பயமும், குரலில் எதிர்ப்பும் கூடிக்கொண்டே வந்த்து. சில நேரம் கழித்து, எக்கேடு கெட்டு ஓழி என்று மெளனமாய் இருந்தார். அப்போதும் அம்பர்நாத்வாலேவே ஏதாவது பேசி அவரை இழுப்பான்.

    இந்த விளையாட்டு எனக்கு பரிச்சியமானது. என் மீது விளையாடப்பட்டது. அது இன்னொருத்தரின் மீதும் விளையாடப்படும் போது அதன் ஓவ்வொரு அசைவையும் ரசிக்க முடிந்தது.

    “ இது என்ன சார்.. இப்ப பாருங்க.. அங்க என்ன வருது.. “

    எதிர்முனையிலிருந்து இன்னொரு வேக ரயில் வந்து கொண்டிருந்த்து.

    “ ஏ.. ட்ராயின்ரா.. பாஸ்ட் ட்ராயின்ரா.. “ அந்த ஆள் வேக வேகமாய் படபடத்தார்.

    “ அதுனால.. என்ன .. “  சொல்லிக்கொண்டே தொங்கினான். ரொம்பவே தொங்கினான். எங்களை அறியாமல் நாங்கள் எல்லோரும் வாசலிருந்து இன்னும் எங்களை உள்ளே அழுத்திக்கொண்டோம்.

    இன்று அவன் விளையாடுவது நிலையாக நிற்கும் போஸ்ட் கம்பம் இல்லை. இரண்டுமே வேகமாய் நகரும் ஜந்துக்கள். அவன் சமாளித்து விடுவான் என்றாலும், மெலிதான பயத்தோடும், ஆர்வத்தோடும் அந்த கடைசி விநாடிக்காக எதிர்பார்த்துக்கொண்டிருந்தோம்.

    நாங்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம் என்பதை அறிந்து அவனின் முகம் அஸ்ட கோணாலாக்கி எங்களை மேலும் குஸிப்படுத்திக்கொண்டிருந்தான்.

    எதிர்வண்டி பக்கத்தில் வர, வர, புது ஆளின் பயம் உச்சத்தை தொட்டது. அவரின் முகம் எனது பழைய முகத்தை எனக்கு ஞாபகப்படுத்தியது.

    பதிவுபோல சடக்கென்று கடைசி விநாடியில் உள்ளே  உடம்பை இழுத்தான். ரொம்ப கீழிறிந்து எழும்பி வந்ததால், உள்ளே வந்துவிட்டாலும் நடுவில் நின்றிருந்த, பிடித்திருந்த கம்பியில் தலை மோதிக்கொள்ள வேண்டியிருந்தது. அந்த அதிர்ச்சியில் அவன் இலேசாய் ஆட, சுற்றியிருந்தவர்கள் பிடித்துக்கொண்டார்கள்.

    சுற்றியிருந்தவர்களுக்குத்தான் அது அதிர்ச்சி.. அவன் ரொம்ப  அமைதியாகத்தானிருந்தான். அதே கேலிகள், அதே வார்த்தைகள்.. நாங்கள் சகஜ நிலைமைக்கு திரும்ப, புது ஆள் பேய் அறைந்தது போலாகிவிட்டார்.

    “ உசுருன்னா, உனக்கு மசுராடா.. “ ரொம்ப நேரம் கழித்து அமைதியாய் கேட்டார்.

    “ யே. பெரிசு.. என்ன பயந்துட்டியா.. இதெல்லாம்  பெரிசேயில்லைப்பா.. “ என்று  மராத்தியில் அவரை ஏளனமாய் பேச ஆரம்பித்தான்.

    அவர் அமைதியானார். வீடி ஸ்டேசன் வரைக்கும்  எதுவும் பேசவில்லை. கொஞ்சம்  கூட்டம் குறைந்து நாங்கள்  எல்லோரும் வீடியில் இறங்கும்போது, அம்பர்நாத்வாலைவை பிடித்து தனது ஸீவை கழட்டி பளீரென்று  அடித்தார்.

    “ உன் உசுரு முக்கியமில்லைன்னா, சூ.. யா, கசாப்பை கொண்ணுட்டு சாகேன்டா.. “ கத்தினார்.

    நாங்கள் விலக்கிவிட்டி, அவரை திட்டி, இவனை சமாதானம் செய்து அனுப்பி வைத்தோம்.

    *

    வெளியூர் பயணம், மாற்றம்  அது, இதுவென சுழன்று, திரும்ப  இப்போதுதான் வரமுடிந்தது. அதே வண்டி. அதே பெட்டி, அதே விவாதம் – ரொம்ப நாள் கழித்து பழைய நண்பர்களை பார்த்து, நிறைய விசயங்களை சுடச்சுட விவாதிக்க, வாழ்க்கை திரும்பிற்று.

    விக்ரோலி வந்த பிறகுதான்  தெரிந்தது, அம்பர்நாத் வாலா ரொம்ப நாளாக அங்கு வரவில்லையென்று.

     

    Share
  • ஒரு புறம் வேடன்…மறு புறம் நாகம்!

     

    முகில் தினகரன்

    அந்த பங்களா வீட்டின் முன் வெள்ளிங்கிரி வாத்தியார்; வந்து நின்ற போது அதிகாலை ஐந்து மணி.  பக்கத்துத் தெரு கோவிலிலிருந்து சுப்ரபாதம் காற்றில் மிதந்து வந்து கொண்டிருந்தது.  இருட்டு விலகாத அந்தத் தெரு வெறுமையாயிருந்தது.  அவ்வப்போது ஒன்றிரண்டு பால்காரர்கள் மட்டும் சைக்கிள் மணியை ஒலித்தபடி கடந்து சென்றனர்.

    “கவுன்சிலரய்யா எந்திரிச்சுட்டாரா?” கேட்டிலிருந்த வாட்ச்மேனிடம் சன்னமான குரலில் கேட்டார் வெள்ளிங்கிரி வாத்தியார்.

    “ம்…ம்…எந்திரிச்சுட்டார்…ஆனா…ஏழு மணிக்கு மேலதான் ஜனங்களைப் பார்ப்பாரு…அப்படிப் போய் ஓரமா நில்லுங்க…அவரு ஆபீஸ் ரூமுக்கு வந்ததும் நானே கூப்புடறேன்!” அந்த நேரத்தில் கூட அவன் வாயில் பீடி.

    “ஹூம்…கவுன்சிலர் வீட்டு வாட்ச்மேனுக்குக் கூட மனசுல கலெக்டர்ன்னு நெனப்பு!” தனக்குள் சொல்லிக் கொண்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்து காம்பெளண்ட் சுவரோரம் ஒண்டி நின்று கொண்டார்.

    பொழுது ‘பல…பல”வென விடிந்து தெருவில் ஜன நடமாட்டம் ஆரம்பித்ததும் மறுபடியும் வாட்ச்மேனிடம் வந்தார் வாத்தியார் “அய்யா…ஆபீஸ் ரூமுக்கு வந்துட்டாரா?”

    “யோவ் பெருசு!…அதான் சொன்னேனில்ல?..ஏழு மணிக்கு மேலதான்னு…சும்மா வந்து எதுக்கு தொண தொணக்கறே?” எரிந்து விழுந்தான் வாட்ச்மேன்.

    “அப்படியா சார்?…கொஞ்சம் கையைத் தூக்கி மணியைப் பாருங்க சார்!” வாத்தியார் கிண்டலாய்ச் சொல்ல

    வாட்ச்மேன் சட்டென்று மணியைப் பார்த்தான்.  7.20.

    “அது வந்து…இப்ப வந்துடுவார்…நீங்க இப்படியே நேராப் போயி…அதோ அந்த  போர்ட்டிகோவுக்கு இடது பக்கம் ஒரு ரூம் தெரியுது பாருங்க?…அங்க வெய்ட் பண்ணுங்க!”

    மெலிதாய்ச் சிரித்தபடி அங்கிருந்து நகர்ந்த வாத்தியார் அவன் காட்டிய அறையைத் தொட்டு அதன் வாசலில் கிடந்த நாற்காலியில் அமர்ந்தார்.

    உள்ளே கவுன்சிலர் யாருடனோ பேசிக் கொண்டிருந்தது இங்கே கேட்டது.

    தன்னைப் பார்த்தும் பார்க்காதது போல் நடந்து சென்ற வேலைக்காரனை வலிய அழைத்துச் சிரித்தார் வௌளிங்கிரி வாத்தியார்  அவனும் வேண்டா வெறுப்பாய் ஒரு சிரிப்பை எறிந்து விட்டுச் சென்றான்.

    அறைக்குள் சென்ற அந்த வேலைக்காரன் “அய்யா…அந்த வாத்தியார் வந்திருக்காரு?” என்றான் கவுன்சிலரிடம்.

    “யாரு?…அந்த ஸ்ட்ரீட் லைட் சிகாமணியா?” கேட்டு விட்டு வாய் விட்டுச் சிரித்தார் கவுன்சிலர்.

    தான் குடியிருக்கும் தெருவுக்கு தெரு விளக்கு கோரி தினமும் நடையாய் நடப்பதால் அவருக்கு அந்தப் பெயரை வைத்திருந்தார் கவுன்சிலர்

    “ஆமாங்கய்யா…அதே வாத்தியார்தான்!” சொன்ன வேலைக்காரன் முகத்திலும் ஒரு இளக்காரப் புன்னகை.

    “நான் இல்லேன்னு சொல்லிடுப்பா!”

    “அப்படிச் சொல்ல முடியாதுங்கய்யா…ஏன்னா உங்க பேச்சுக்குரல் அதுவரைக்கு நல்லாவே கேட்குதுங்கய்யா!”

    “ப்ச்…அட என்னய்யா?…”சலித்துக் கொண்டவர் “சரி…வரச் சொல்லு!” என்றார்.

    “வணக்கம்” தன் கணீர் குரலில் சொல்லியபடியே உள்ளே வந்த வௌளிங்கிரியை அமரச் சொன்னார் கவுன்சிலர்.

    அமர்ந்தவர் “தெரு விளக்கு கேட்டு மனு கொடுத்திருந்தேன்…கிட்டத்தட்ட மூணு மாசமாச்சு…ஒரு பதிலும் இல்லை..கெணத்துல போட்ட கல்லாட்டமிருக்கு!”

    “பெரியவரே…நீங்க இன்னும் உங்க காலத்துலேயே இருக்கீங்க!…உங்களுக்குப் பிறகு மனு குடுத்தவங்கெல்லாம் தெரு விளக்கு வாங்கிட்டாங்க தெரியுமா?”

    ‘தெரியும்….அது தெரிஞ்சுதான் கேக்கறேன்”

    “இங்க பாருங்க பெரியவரே!….நானே கவுன்சிலர்ன்னுதான் பேரு!…எனக்கு எந்தப் பவருமே கெடையாது!…நீங்க குடுக்கற மனுவை உங்க சார்புல கொண்டு போய் கார்ப்பரேஷன்ல கொடுக்கறேன்!…அவங்க சாங்ஷன் பண்ணிக் குடுத்தா வாங்கிட்டு வந்து தர்றேன்!…அவ்வளவுதான்!”

    “அப்ப மத்தவங்களுக்கு சாங்ஷன் பண்ணின கார்ப்பரேஷன் எங்களுக்கு ஏன் பண்ண மாட்டேங்குது?”

    “நீங்க செய்ய வேண்டிய ஃபார்மாலிட்டீஸ் செய்யலை…அதான்!”

    “அதென்ன ஃபார்மாலிட்டீஸ்?” அப்பாவியாய்க் கேட்டார் வௌளிங்கிரி வாத்தியார்.

    “என்ன பெரியவரே….தெரியாத மாதிரி கேக்கறீங்க?….சம்திங்  வெட்டணும் தலைவா!.அப்பத்தான் காரியம் ஆவும்!…ஈஸ்வரன் கோயில் வீதிக்காரங்க வீட்டுக்கு அம்பது…நூறுன்னு வசூல் பண்ணி என் கிட்டக் குடுத்தாங்க!…அதைக் கொண்டுதான் நான் அவங்களுக்கு சாங்ஷன் வாங்கினேன்!”

    “அப்ப லஞ்சம் குடுத்தாத்தான்..காரியமாகும்!…அப்படித்தானே?” வெள்ளிங்கிரி வாத்தியார் முகத்தில் எரிமலை உக்கிரம்.

    “அதுல துளிக்கூட சந்தேகமில்லை!”

    “தேவைதான்…உனக்கு ஓட்டுப் போட்டு உன்னைய கவுன்சிலராக்கினோம் பாரு!…எங்களுக்கு இதுவும் தேவைதான்…இன்னமும் தேவைதான்!”

    “ஹலோ…நல்லாப் புரிஞ்சுக்கங்க…நீங்க எத்தனை மாசம் நடையா நடந்தாலும்..காசு குடுக்காம அங்க காரியம் நடக்காது…வீணா எதுக்கு நேரத்தையும் எனர்ஜியையும் வேஸ்ட் பண்ணறீங்க!”

    “பாக்கறீங்களா…அஞ்சு பைசா கூடக் குடுக்காம தெரு விளக்கு போட்டுக் காட்டறேன் பாக்கறீங்களா?” சொல்லி விட்டு வேகமாய் எழுந்தார் வௌளிங்கிரி வாத்தியார்.

    “அடடே…சவாலா?” கவுன்சிலர் முகத்தில் சிரிப்பு.

    “அப்படியே வெச்சுக்கங்க!” விருட்டென வெளியேறினார்.

    ****

    அடுத்த வாரத்தில் ஒரு நாள்

    விஸ்கியின் உபயத்தால் அரை மயக்கத்திலிருந்த கவுன்சிலரை போன் தொந்தரவு செய்தது. “ச்சை!” சலித்துக் கொண்டே எழுந்து “ஹ…ல்…லோ…வ்!” என்றார் குழறலாய்.

    மறுமுனையில் மேயர்.

    “சார்…வணக்கம் சார்!…சொல்லுங்க சார்!”

    “என்ன ரகுபதி…உங்க வார்டுல என்ன பிரச்சினை?”

    “பிரச்சினையா?…ஒண்ணுமில்லையே!”

     
    “என்னய்யா…ஒண்ணுமில்லைன்னு வெகு சாவகாசமாச் சொல்லுறே…அங்க ஒரு பெருசு….நாலஞ்சு நாளா உண்ணாவிரதமிருந்து இப்பவோ…அப்பவோன்னு கெடக்குதாம்”

    “அது…வந்து சார்…நான் அஞ்சாறு நாளா ஊர்ல இல்லை…இன்னிக்கு காலைலதான் வந்தேன்…அதான் விபரம் தெரியலை…விசாரிக்கறேன் சார்!”

    “நீயொண்ணும் விசாரிக்க வேண்டாம்…நானே விசாரிச்சிட்டேன்…யாரோ ஒரு வாத்தியாராம்…தெரு விளக்கு கேட்டு மனு கொடுத்தாராம்… இழுத்தடிச்சிருக்கீங்களாம்…ஏன்?”

    “ஆமாம் சார்…வர வேண்டியதெல்லாம் வரலை…அதான்…

    “வேண்டாம்யா…விஷயம் பெரிசாயிருச்சு…பிரஸ்காரங்களும்…லோக்கல் டி.வி.க்காரங்களும்…. அந்தாளைப் பத்தி செய்தி போட்டு அவனை ஹீரோவாக்கிட்டாங்க!…. ஜனங்களும் ஓரளவுக்கு விஷயம் புரிஞ்சுக்கிட்டாங்க…இனி பைசாவை எதிர்பார்த்தா விஷயம் கோட்;டை வரை கூடப் போய்டும்..அதனால விட்டுடு!…”

    “சார்…கார்ப்பரேஷன்ல…கமிஷனர்கிட்ட….”

    “அவங்ககிட்டயெல்லாம்…நான் சொல்லிக்கறேன்…நீ உடனே புறப்பட்டு வா!…நாம ரெண்டு பேருமே போயி அந்தப் பெரிசைப் பார்த்துப் பேசி…உண்ணாவிரதத்தை முடிக்கச் சொல்லிடலாம்!”

    “சரி சார்!..நான் இப்ப வந்துடறேன் சார்!”

    மேயரும் கவுன்சிலரும் நேரில் வந்து ஒரே வாரத்தில் தெருக்கு விளக்குப் போட்டுக் கொடுப்பதாக உறுதியளித்த பின்னரே தன் உண்ணாவிரதத்தைக் கை விட்டார் வௌளிங்கிரி வாத்தியார்.
     
    இது நம்ம நாடுதானா?” என்று எல்லோருமே வியக்கும் வண்ணம் மறுநாளே தெருவிளக்குப் போடும் பணி ஆரம்பமாக வௌளிங்கிரி வாத்தியாரின் புகழ் நாலாப்புறமும் பரவியது.  மீடியாக்கள் அவரை எவரெஸ்டில் கொண்டு போய் அமர்த்தி வைத்தன.

    ****

    வெயிலுக்கு குடை பிடித்தபடி நின்று மேற் பார்வை பார்த்துக் கொண்டிருந்த கார்ப்பரேஷன் அதிகாரியை கண் ஜாடை காட்டி அழைத்தான் தியாகு. வெள்ளிங்கிரி வாத்தியாரின் ஒரே மகன்.

    தயங்கியபடியே வந்த அந்த நபர் “என்ன சார்?..என்ன விஷயம்?”

    “அது…வந்து…உங்ககிட்ட கொஞ்சம் தனியாப் பேசணும்!”

    “பரவாயில்லை இங்கியே சொல்லுங்க!”

    “வந்து…நம்ப வீட்டு வாசலை ஒட்டி ஒரு தெரு விளக்கு போடணும்….நீங்க மனசு வெச்சா முடியும்!…ஹி…ஹி..” அசிங்கமாய்ச் சிரித்த அவனை அருவருப்பாய்ப் பார்த்த அந்த அதிகாரி.

    “எது…உங்க வீடு?” கேட்டார்.

    “அதோ…அதுதான்!”

    தியாகு காட்டிய வீட்டைத் திரும்பிப் பார்த்த அதிகாரி கண்களால் அளந்து விட்டு உதட்டைப் பிதுக்கினார். “ம்ஹூம்….அந்த இடத்துல வராது!….கொஞ்சம் தள்ளித்தான் வரும்!…” என்றார்.

    “தெரியும் சார்…அது தெரிஞ்சுதான் உங்ககிட்ட வந்திருக்கேன்!…ஹி…ஹி”

    “சரி..இப்ப நான் என்ன பண்ணனும்கறே?”

    “கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணனும்”

    “புரியலை”

    “நீங்க எதையும் கண்டுக்காம…நம்ம வீட்டு வாசல்ல ஒரு விளக்குக் கம்பத்தைப் போடுங்க!…நான் வேணா உங்களைத் தனியா கவனிக்கறேன்….ஹி…ஹி”

    அதுவரையில் உறுதியாயிருந்த அந்த அதிகாரி மெல்ல மெல்ல நிறம் மாறத் துவங்கினார்.

    “அது…வந்து எனக்கு மேலதிகாரி ஒருத்தர் இருக்கார்…அவரு இன்ஸ்பெக்ஷன் ரிப்போர்ட்டுல “ஓ.கே!”ன்னு கையெழுத்துப் போடணும்…அதுக்கு அவரையும் சரிக் கட்டணும்!”

    “அதென்ன…பண்ணிட்டாப் போச்சு!” வௌ;ளிங்கிரி வாத்தியார் மகன் அசிங்கமாய்ச் சிரித்தபடி சொன்னான்

    “சரி..சரி..ஆளுங்க பார்க்கறாங்க…நாம பேசிட்டு நிக்கறதைப் பார்த்தா சந்தேகப்படுவாங்க…நீங்க நகருங்க…நான் பார;த்துக்கறேன்!” அந்த அதிகாரி பணத்தாசை வசமாகிச் சொல்ல

    நகர்ந்தான் வௌளிங்கிரி வாத்தியார் மகன் தியாகு.

    ****

    சோடியம் வேப்பர் ஒளியில் அந்தத் தெரு கெஜ்ஜோதியாகக் காட்சியளித்தது.

    லேசான மழைத் தூறலும் இதமான குளிர் காற்றும் அந்த அழகுக்கு இனிமை சேர்த்துக் கொண்டிருக்க,

    நடந்து கொண்டிருந்த வௌளிங்கிரி ஆசிரியரின் நெஞ்சம் நிறைந்திருந்தது. “ஆஹா….எத்தனை வருஷக் கனவு…இன்னிக்கு நிறைவேறியிருக்கு….. ஹூம்…இதை நிறைவேத்தறதுக்குள்ளாரதான் எத்தனை தடைகள்…எத்தனை தடங்கல்கள!”

    தன் வீட்டு வாசலை அடைந்தவர் அங்கு நின்று கொண்டிருந்த மகனிடம் “பாத்தியாடா…நம்ம தெருவை?…”

    “ம்..ம்..பார்த்தேன்..பார்த்தேன்…”

    “இந்தத் தெருவுக்கு தெரு விளக்கு கெடைச்சதுகூட எனக்கு பெரிய சந்தோஷமில்லை….ஒரு பைசா கூட லஞ்சம் குடுக்காம இதை வாங்கினேன் பாரு அதுதாண்டா பெரிய சந்தோஷமாயிருக்கு!….….அதாவது…மக்கள் நெனச்சா…மக்கள் மனசு வெச்சு உறுதியா எதிர்த்து நின்னா இந்த நாட்டுல எல்லா இடத்திலுமே புரையோடிக் கெடக்கற லஞ்சம்ங்கற புற்று நோயை கண்டிப்பா அழிச்சிடலாம்னு தெரியுது…என்ன நான் சொல்றது…?” அப்பாவியாய்க் கேட்டார் வௌ;ளிங்கிரி வாத்தியார்.

    தர்ம சங்கடமாய் விழித்த அவர் மகன் தியாகு “அது…வந்து…ஆமாம்…ஆமாம்ப்பா!” என்றான் திக்கித் திணறி.  அப்போது அவன் பார்;வை அவனையுமறியாமல் தன் வீட்டு வாசலில் ஒளி வீசிக் கொண்டிருந்த அந்த சோடியம் வேப்பா; மின் விளக்கு அண்ணாந்து பார்த்தது.

    (முற்றும்)

     

    Share
  • நந்தியாவட்டை

    பர்வதம் பாட்டியின் தொணதொணப்பு நின்றபாடில்லை. நேற்று காலையில் இருந்து துவங்கிய இந்தத் தொணதொணப்பு நிற்காது போலிருக்கிறது.  வயதான காலத்தில் பாட்டிக்கென்று என்ன இருந்து விடப் போகிறது? உடல் நலம் பேணுவதில் ஏதாவது உதவி கேட்பாளாயிருக்கும்.

    “என்ன பாட்டி? இப்படித் தொந்தரவு குடுக்குற ஆளாயிருந்தா, நீ அத்தையோட வீட்லயே இருந்துக்க. இங்க வராத. இப்ப என்ன வேணும் உனக்கு?”

    “தங்கம், டேய்… இராசா, உங்க தாத்தன் நெனப்பைக் கூட்டியாறப் பொறந்த ஆளுடா நீ. பாட்டிக்குக் கண்ணு ரெண்டும் எதோ மசமசன்னு இருக்குடா.  விஜயம்மா வீட்டுக்குப் போயி நாஞ்சொன்னேன்னு சொல்லு, நந்தியாவட்டைப் பூ பறிக்க விடுவாங்க. கொஞ்சம் நிறையவே பறிச்சுட்டு வாடா!”

    பாட்டிக்காகப் பூப்பறிக்க விஜயம்மா வீட்டுக்குப் போனான். கம்பிகளாலான வாயிற்கதவு உள்பக்கமாகத் தாளிடப்பட்டு இருந்தது. திரும்பிப் போகலாமா, அல்லது உள்பக்கமாகக் கைவிட்டுத் திறந்து கொண்டு உள்ளே போகலாமா என யோசிக்க முற்பட்ட கணத்தில்தான் கவனித்தான். கைக்குழந்தையை இடுப்பில் வைத்தபடி நின்றிருந்தாள் அக்கா. கன்னத்தில் குழி விழச் சிரித்தது இடுப்பில் இருந்த அவளது குழந்தை.

    “நான்… வந்து… இரங்காச்சாரி கடைக்குப் பக்கத்துல இருக்குற சீதாராமய்யர் பையன் வசந்த்!”

    “தம்பி, உள்ள வாப்பா. உன்னை நல்லாத் தெரியும். உள்ள வாப்பா. உங்க அக்கா சந்திரா நல்லா இருக்காளா? பர்வதம் பாட்டி எப்படி இருக்காங்க? இப்பவெல்லாம் இராமர் கோயிலுக்கு வர்றதே இல்லை போல!”

    “பாட்டி, கொஞ்சநாள் சுசீலா அத்தை வீட்டுக்கு கும்பகோணம் போயிருந்தாங்க அக்கா!”

    “உட்காரு. வர்றேன்!”, முன்னறையில் இருந்த பிரம்பு இருக்கையைக் காட்டிச் சென்றிருந்தாள் அவள். இறக்கிவிடப்பட்ட குழந்தை அங்கிருந்த பந்தினை எடுத்து அவனை நோக்கி எறிந்தது. பதிலுக்கு அவனும் குழந்தையை நோக்கி உருட்டி விட்டான்.  சற்று நேரத்தில் விஜயம்மா பாட்டி வந்தாள், “வாப்பா! சங்கரூ…”

    “பாட்டி, நான் வசந்த். எங்கண்ணன் பேர்தான் சங்கர். அவன் சிந்தாமணியில அக்கவுண்டன்ட் வேலை பாக்குறான் பாட்டி!

    ”அட, சீதாராமனோட ரெண்டாவது பையனா நீயி? ஆளுகெல்லாம் ஒசரத்துக்கு வந்துட்டீங்கப்பா. ஆமா, சொர்க்க வாசல் திறப்புக்கு வந்ததுதான். அப்புறம் மேலு பர்வதத்தைப் பாக்கவே முடியலையே? உடம்புக்கு சொகமில்லையா கண்ணூ?”

    “சுசீலா அத்தையப் பார்க்கப் போயிருந்தாங்க பாட்டி!”

    “ஓ, அதான பார்த்தேன்!”, பாட்டி சொல்லி முடிக்கவும் தண்ணீர்க் குவளையுடன் நின்றிருந்தாள் அக்கா. “லோக்க போய்யி, பின்னாண்டிகி காப்பி ஏசி எத்திகினி ஒச்சேனு சுதா! மாட்டாடிகினு உண்டு நுவ்வு”, விறுக்கென எழுந்து சென்றாள் பாட்டி. பாட்டியின் மாட்லாடுதலில் இருந்து தெரிகிறது  அந்த அக்காவின் பெயர் சுதா என்று.

    “தம்பி, நீ எந்தப் பள்ளிக்கூடத்துல படிக்கிற? மணீஸ் ஸ்கூலா?”

    “சபர்பன்தானுங்க அக்கா. ப்ளஸ் ஒன்!”

    “அட, ஒட்டுமொத்த இராம்நகரே சபர்பன்தான் போலிருக்கு! உங்க அக்காவும் நானும் பத்து வருசம் ஒரே வகுப்புதாம்ப்பா. சரியான லொல்லு பிடிச்சவ அவ!”, சொல்லிச் சிரித்தாள் சுதா. என்னவென்று புரியாமலே அருகிலிருந்த குழந்தையும் வாய் விட்டுச் சிரித்தது. நடந்து கொண்டிருந்த அளவளாவலில் தன்னையும் இணைத்துக் கொண்டாள் புரூக்பாண்ட் காப்பியுடன் திரும்பி வந்த விஜயம்மா பாட்டி.

    சற்று நேரம் வீட்டு முன்னறையில் பேசிக் கொண்டிருந்த அவர்கள், வீட்டின் முன்புறமிருந்த பூக்காட்டில் இருக்கும் நந்தியாவட்டைப் பூக்களைப் பறித்துக் கொண்டிருந்தார்கள்.  சுதா, உள்ளே சென்று பொரி வாங்கி வந்த மழைக்காகிதப் பையில் பூக்களை இட்டு நிரப்பிக் கொடுத்தாள்.

    “வசந்த், எனக்கும் ஒரு உதவி வேணும். கல்கியில ஜெயலலிதா எழுதின உறவின் கைதிகள் தொடர்கதையச் சேகரம் செஞ்சி பைண்ட் போட்டு வெச்சிருக்கிறதா மங்களாதேவி சொன்னா. உங்க பக்கத்து வீடுதானே? நாளைக்கு இந்தப் பக்கம் நீ வந்தியானா, அதை வாங்கிட்டு வந்து தர முடியுமா வசந்த்?”

    ”சரிங்க அக்கா, கண்டிப்பா வங்கிட்டு வர்றேன்!”, அன்று துவங்கியது சுதா அக்காவுக்கும் அவனக்குமான பிணைப்பு.

    அக்காவுக்கு ஒரே மகள் சுமதி. சுமதிக்கு அப்பா இல்லை என்பதைவிட, அக்காவுக்குக் கணவன் இல்லை என்பதுதான் ஊராருக்கு முதன்மை.  சுதா அக்காவைப் பற்றி சுதா அக்காவிடமே கேட்டுத் தெர்ந்து கொள்ள மனம் வரவில்லை வசந்த்துக்கு. மயிலாடு துறையிலிருந்து அவ்வப்போது வரும் சந்திராக்கா சொல்லித்தான் தெரிந்து கொண்டான் நிறைய. விஜயம்மா பாட்டி, சுதா அக்கா,  சிறுமி சுமதி என அவர்கள் குடும்பத்தைப் பார்ப்பவர் எவர்க்கும் கனிவு பிறக்கும்.

    பின்னாளில் வசந்த்துடன் படிக்கும் காட்டூர் சேகரும் அவனுடன் சேர்ந்து கொண்டான். வசந்த்தும் சேகரும் அவ்வப்போது சுதா அக்காவைப் பார்க்கப் போவார்கள். குறிப்பாக, நூலகத்தில் இருந்து நாவல்கள் பலவற்றை எடுத்து வரச்சொல்வாள் அக்கா.  எடுத்துத்தருவதும், பிறகு கொண்டு போய் நூலகத்தில் சேர்ப்பதுமாகத் தொடர்ந்தது அவர்களது நட்பு. வசந்த் சி.ஐ.டியில் மெக்கானிக்கல் படிக்கப் போனான். சேகர், பி.எஸ்.ஜியில் டெக்ஸ்டைல்ஸ் படித்தான். தன் கணவன் விட்டுச் சென்ற மாவு அரைக்கும் இயந்திரங்களுக்கான உதிரிபாகங்களை வாங்கி விற்கும் தொழிலைப் புதுப்பித்திருந்தாள் சுதா அக்கா. இதன் நீட்சியாக, அவர்கள் மூவருக்குமிடையில் உண்டான போக்குவரத்தும் படிப்படியாக அருகிப் போனது.

    ஒருநாள் வசந்த், சேகர் இருவரையும் சாப்பிட அழைத்திருந்தார்கள் விஜயம்மா பாட்டியும் சுதா அக்காவும். இருவருமாகச் சேர்ந்து விருந்து பரிமாறி அசத்தினார்கள். விஜயம்மா பாட்டிதான் எதெதோ சொல்லிச் சிரிக்க வைத்துக் கொண்டே இருந்தாள். விடை பெறும் தருவாயில், சேகருக்கும் வசந்த்துக்கும் தனித்தனியாகப் பரிசொன்றைக் கொடுத்தாள் சுதா அக்கா.  சிவசங்கரி எழுதிய “அவன்” எனும் நாவல்தான் அது.  அவர்களிருவரும் அதைப் படித்தார்களா எனக் கண்டறிவதற்காய்,  பின்னாளில் வாய்வழித் தேர்வெல்லாம் நடத்தி அவர்களைச் சோதித்துப் பார்த்தாள் சுதா அக்கா. கல்லூரி மாணவர்கள் என்றாலே நடத்தை தவறக் கூடியவர்களெனும் மனோபாவம் வெகுவாகப் பரவியிருந்த காலகட்டமது.

    காலவெள்ளத்தில் ஆளுக்கொரு திசையாக அடித்துச் செல்லப்படுவார்கள் என்பதற்கு அவர்களும் விதிவிலக்காய் இருந்திருக்கவில்லை.  சுதா அக்கா இன்னும் அதே வீட்டில்தான் வசித்து வருகிறாள். சேகர், பட்டப்படிப்பை முடித்திருக்கவில்லை. அவ்வப்போது செய்யும் வேலைகளை மாற்றிக் கொண்டு வந்தவன், தற்போது நூற்பாலைகளுக்கான உதிரிபாகங்களை உற்பத்தி செய்து உள்ளூர்ச் சந்தையில் வணிகம் செய்கிறான்.  வசந்த் எனும் நாமகரணம் கொண்டவனாகிய அவனோ, சில பல நாடுகளைச் சுற்றி வந்து தற்போது அமெரிக்காவில் இருக்கிறான்.

    ”ஏங்க, தீவாளியன்னைக்கு என்ன தொணதொணன்னு போன்ல ஒரே பேச்சு? வந்து கொழந்தைகளைக் கவனிங்க!”, எப்போதும் போல அரற்றி மிரட்டினாள் அவனுடைய ஆத்துக்காரி.

    “இரு இன்னும் ஒன்னே ஒன்னு.  காட்டூர் தடியனுக்கு மட்டும் தீவாளி வாழ்த்து சொல்லிட்டு வந்திடுறேன் கண்ணம்மா!”

    பலமுறை அழைத்தும் சேகர் தொடர்புக்கு வருகிறான் இல்லை. அவனுடைய மனைவியின் அலைபேசி எண்ணைத் துழாவி எடுத்து அழைத்தான். “செல்வி, நமஸ்காரம்! தீவாளி எல்லாம் வந்துடுத்தா? சேகர் ஏன் போனை எடுக்க மாட்டேங்குறான்?”

    “அண்ணா, ஹேப்பி தீவாளி! அவர் மாடியில் இருக்கார். இருங்கோ குடுக்கறேன்!”

    “டே… ஹேப்பி தீவாளிடா! நல்லா இருக்கியா?”

    “இருக்கன்டா.  கொஞ்சம் மூடு அவுட், அதான்!”

    “ஏண்டா, சொல்லு, என்ன விசயம்?”

    “நம்ம விஜயாப் பாட்டி சுதா அக்கா இல்ல? அவங்க நேத்து இராத்திரி சூசைடு அட்டெம்ப்ட்டாம்டா! சபர்பன் ஸ்கூல் வட்டாரம் பூரா இதாம்பேச்சு”

    “என்னடா சொல்லுற? அவங்க மகள் எல்லாம் கல்யாண வயசுல இருப்பாங்களேடா இப்ப?”

    “ஆமாம். அவங்க சொந்தக்காரங்க தொல்லை இன்னும் தீர்ந்தபாடில்லை போலிருக்கு. என்ன செய்யுறதுன்னே தெரியலை. நான் அவங்க வீட்டுக்குப் போயி நாலஞ்சி வருசம் ஆச்சி. போனா, என்னையும் சேர்த்துக் கதை கட்டி வுட்றுவாங்கன்னு போறது இல்லை! ப்ச்!!”

    “சேகர் நாயே, நாம ஏதாவது செய்யணும்டா. சந்திராக்கா தீவாளிக்கு வந்திருக்காங்க. நான் கூப்பிட்டுச் சொல்லுறேன். நீ இப்ப காட்டூர்லதான இருக்க? போடா, சந்திராக்காவைக் கூட்டிட்டுப் போயி சுதாக்காவைப் பாருடா, ப்ளீஸ்!”

    ”பார்த்து என்னடா செய்ய முடியும்? ஆறுதல் சொல்லலாம். தீவாளி முடிஞ்சதும் எல்லாரும் கலைஞ்சி ஆளுக்கொரு திசையில ஓடப் போறோம்??”

    “இல்ல. நீ மொதல்ல என்ன காரண காரியம்னு தெரிஞ்சி வை. அக்காவோட ஒப்புதலின் பேரில், தற்கொலை முயற்சிக்குக் காரணமானவங்களை சட்டத்தின் முன்னாடி நிறுத்துறோம்! ’விடோ லேடீஸ்’னா இளப்பமா? உனக்கும் மகளுக இருக்காங்க. எனக்கும் இருக்காங்க. இதே நிலைமை நாளைக்கு நம்ம குழந்தைகளுக்கும் வரலாமில்லையா?”

    “இப்பத்தான்டா எனக்கு மனசு கொஞ்சம் நல்லா இருக்கு. இதா, இப்பவே போறன்!”

    சந்திரா அக்கா,  தேசிய வங்கி ஒன்றில் மேலாளர். வசந்த்தின் சுக துக்கங்கங்கள் அனைத்தையும் புரிந்து கொள்ளக்கூடிய ஒரு சிலருள் இவளுக்கும் தனியிடமுண்டு. எல்லாமும் சந்திராக்கா, சேகர் வழியாகவே நடந்தேறியது.

    சுதா அக்கா, மிகப் பெரிய வெற்றியை அடைந்திருக்கிறாள். கணவன் விட்டுச் சென்ற கடையை மீட்டுத் தானே நடத்தி வருகிறாள். ஆனாலும் ஊராருக்கு அவளொரு விதவை! யாரோடு வேண்டுமானாலும் இணைத்துப் பேசலாம்.  அக்கா, தங்கை எனும் உறவின் பேரில் எப்போது வேண்டுமானாலும் காசு, பணம் கேட்டு உருட்டி மிரட்டலாம். தன் வீட்டு வேலைகளுக்கு அவளையும் அவளது மகளையும் வந்திருந்து வேலை செய்யச் சொல்லலாம். தங்களுக்குச் சுமையாக இருக்கும் பெரியவர்களை அவளது வீட்டில் கொண்டு போய்த் தள்ளி விட்டு வரலாம்.  ஏனென்றால் அவளொரு விதவை.

    ”அக்கா, நான் அமெரிக்காவுல இருந்து சபர்பன் சந்திரகலாவோட தம்பி வசந்த் பேசுறன்க்கா!”

    “டேய், இன்னும் என்னை ஞாவகம் வெச்சிருக்கியாடா? சந்திரா, சேகர் எல்லாரும் இந்த ஒருவாரமா எங்கூடத்தான். இனிமே எனக்கு சாவே கிடையாதுடா.  எனக்கெதோ ஒரு புதுப்பிறவி எடுத்திருக்குறா மாதிரித்தான்டா இருக்கு. எப்படா வசந்த் ஊருக்கு வருவ? உன்னைப் பார்க்கணும் போல இருக்குடா. விஜயம்மா இருக்குற வரைக்கும் உன்னையும் உங்கண்ணன் சங்கரையும் அடிக்கடி நினைச்சுக்கும் தெரியுமா? கோவிச்சக்காதடா வசந்த்!  நீ…  ஒரு…, ஒரு மணி நேரங்கழிச்சுக் கூப்பிடுறியா? யாருன்னு தெரியலை, நந்தியாவட்டைப் பூ வேணுமின்னு கேட்டு அந்தப் பையன் வந்திருக்கான்னு நினைக்கிறேன். மறுபடியுந் தவறாமக் கூப்புடு, செரியா?!”

    “நந்தியா வட்டைப் பூக்கள் என்றென்றும் அக்காவைப் பார்த்துக் கொள்ளும்!”, தனக்குத் தானே பேசிக் கொண்டவன் சுற்றிலும் முற்றிலும் பார்த்தான்.  உவப்புக் கொண்டவனுக்கு உடனே தன் மகள்களையும் மனைவியையும் பார்க்க வேண்டும் போல இருந்தது. மிசிசிப்பி ஆற்றங்கரைக் காற்று அவன் முகத்தில் பட்டுத் தெறிப்பதை அனுபவித்தபடி, தன் குழந்தைகளை வாரிக் கொஞ்சியணைத்து முத்தமிடும் நோக்கில் மாடியிலிருந்து கீழே இறங்கிக் கொண்டிருந்தான் வசந்த்.

    அங்கே மற்றுமொரு நட்புக் கேடயமொன்று உருபெற்றுக் கொண்டிருந்தது; நந்தியாவட்டை மலர்கள் பூத்திருக்கும் விஜயம்மா வீட்டுப் பூக்காட்டில்!!

    Share
  • நன்மையே தீமையாய்!

     

    முகில் தினகரன்

    நான் ஆசை ஆசையாய் வாங்கி வந்து நீட்டிய அந்த புடவைப் பார்சலை முகம் மலர வாங்கி, விழிகளில் ஆவலைத் தேக்கி, இதழ்களில் புன்முறுவலைக் காட்டி, விரல்களில் பரபரப்பைக் கொட்டி, வேக வேகமாய்ப் பிரித்த அமுதா அப்புடவையை வெளியே எடுத்து பிரித்துப் பார்த்ததும் முகம் மாறினாள்.

    “அடப்பாவமே!…பிடிக்கலை போலிருக்கே!

    ம்…ம்…ம்…எப்படி?….இவளுக்குப் பிடித்த ஸ்கை ப்ளு கலர்ல்தானே எடுத்திருக்கேன்…அப்புறம் ஏன்…?”

    சுவாரசியமேயில்லாமல் அதை மடித்து மீண்டும் அதே அட்டைப் பெட்டிக்குள் திணித்தவாறே கேட்டாள். “என்ன விலை?”

    “ம்ம்ம்….ஆயிரத்தி இருநூறு!” அதிகமென்று திட்டுவாளோ… இல்லை…குறைவு என்று பாராட்டுவாளோ…என்பது புரியாமல் திக்கித் திணறி சொன்னேன்.

    “ப்ச்….வேஸ்ட்” என்றாள் ஒற்றை வார்த்தையில்.

    “ஏன் அமுதா…ஏன் அப்படிச் சொல்லுறே?…நான் ஆசைப்பட்டு…நானே செலக்ட் பண்ணிட்டு வந்ததை இப்படி “பொசுக்”ன்னு ‘வேஸ்ட்’ன்னுட்டியே…” பரிதாபமாய்க் கேட்டேன்.

    “ஸாரிங்க….நான் அப்படிச் சொன்னதுக்கான காரணத்தை நானா சொல்லுறதை விட நீங்களே உணருவீங்க!…எப்ப?…நாளைக்கு நான் இதைக் கட்டிட்டு ஆபீஸூக்குக் கிளம்பும் போது!”

    நான் குழப்பமாய்ப் பார்த்தேன்.

    என் மன ஓட்டத்தைப் புரிந்து கொண்டவள், “கோவிச்சுக்காதீங்க டியர்!” எனக் கொஞ்சலாய் என் கன்னத்தைச் செல்லத் தட்டு தட்டி விட்டுச் சென்றாள்.

    மறுநாள் காலை.

    நானும் அமுதாவும் ஆளுக்கொரு பக்கம் பரபரப்பாய் ஆபீஸூக்குக் கிளம்பிக் கொண்டிருந்தோம்.

    “ஏங்க…டைனிங் டேபிள்ல டிபனெல்லாம் எடுத்து வெச்சிட்டேன்…நீங்களே எடுத்து சாப்பிட்டுக்கங்க!” என்று சொல்லி விட்டு குளியலறைக்குள் புகுந்தாள் அவள்.

    அவசர அவசரமாய் டிபனை அள்ளி விழுங்கி விட்டு, வாசலருகே இருந்த ஸ்டூலில் அமர்ந்து ஷூ அணிந்து கொண்டே, உள் அறையை நோக்கிக் கத்தினேன். “அமுதா…ஆச்சா?…லேட்டாகுதும்மா!”

    “இதோ வந்திட்டேன்!” என்றபடி வந்து நின்றவளைப் பார்த்து முகம் சுளித்தேன்.

    “இதென்னடி புடவை?…..சருகாட்டம் இவ்வளவு லேசாயிருக்கு!…இடுப்புப் பகுதியில் உள் பாவாடை சுருக்கங்கள் எல்லாம் அப்படியே வெளிய தெரியுது!”

    “ம்…இதுதான் நீங்க நேத்திக்கு எடுத்திட்டு வந்த சேலையோட லட்சணம்!”

      என் தப்பும், நேத்திக்கு அமுதாவின் முகம் மாறியதற்கான காரணமும் எனக்கு இப்போதுதான் புரிந்தது.

    “ச்சே!…இதுக்குத்தான் இந்த மாதிரி வேலைகளிலெல்லாம் ஆம்பளைங்க மூக்கை நுழைக்கக் கூடாதுங்கறது!…இதுவே…நீயாயிருந்தா வாங்கும் போதே இதைக் கவனிச்சிருப்பே இல்ல?…ஹூம்…நான் கலரையும்…வெலையையும் மட்டும்தான் கவனிச்சேன்…இந்த மாதிரியெல்லாம் பார்க்கணும்னு தோணக் கூட இல்லை!…” நான் மிகவும் வருத்தப்பட்டுச் சொன்னேன்.

    “அதனாலென்ன பரவாயில்லை விடுங்க…நீங்க ஆசையா எனக்கு எடுத்திட்டு வந்து குடுத்தீங்க பாரு?…அதுவே சந்தோஷம் எனக்கு!…அதைக் கட்டித்தான் சந்தோஷப்படணுமா என்ன?”

    சொல்லியவாறே மீண்டும் உள்ளறைக்குச் சென்று, வேறு புடவையை மாற்றிக் கொண்டு வந்தவளை என் பைக்கில் ஏற்றிச் சென்று, அவள் அலுவலகத்தில் இறக்கி விட்டு விட்டு என் அலுவலகம் நோக்கிப் பறந்தேன்.

    அன்று முழுவதும் என் மனம் மிகவும் சங்கடத்தில் உழன்றது.  “ச்சே!…பாவம் அவளை அநியாயத்திற்கு ஏமாத்திட்டேன்!… ஆனாலும் அந்த ஏமாற்றத்தை வெளிக் காட்டிக் கொள்ளாமல் என்கிட்ட வெகு சகஜமாப் பேசினாளே…ரியலி கிரேட்!”

    அடுத்த மாதத்தில் ஒரு நாள்

    சோப்புத் தூள் விற்க வந்திருந்த ஒரு இளம் பெண்ணுடன் அமுதா பேசிக் கொண்டிருந்தது உள் அறையில் புத்தகம் படித்துக் கொண்டிருந்த என் காதுகளில் விழுந்தது.

    “அடப்பாவமே!…காலையிலிருந்து சாயங்காலம் வரை விற்றாலும் ஒரு நாளைக்குக் கமிஷன் நூறு ரூபாய்தானா?” அமுதா அங்கலாய்க்க,

    “ப்;ச்…என்ன மேடம் பண்றது?…கூலி வேலைக்குப் போனாக்கூட இதை விட அதிகம் கிடைக்கும் …ஆனா…போக முடியாதபடி குடும்ப கௌரவம் இடிக்குதே!”

    “அது செரி…கமிஷன் இல்லாம வேற ஏதாவது அலவன்ஸ் மாதிரி குடுக்கறாங்களா?”

    “ம்ஹூம்…நாலு தெரு போறதினால நல்லபடியா உடை உடுத்த வேண்டியிருக்கு!…தெனமும் ஒரு புடவை கட்டக்கூட வக்கில்லாம ஒண்ணு ரெண்டு புடவை மட்டுமே வெச்சுக்கிட்டு….அதையே துவைச்சுத் துவைச்சுக் கட்ட வேண்டியிருக்கு!” தன் நிலையை பரிதாபமாகச் சொன்னாள் அந்த இளம்பெண்.

    “ம்ம்ம்…ஏம்மா…நான் ஒண்ணு கேட்டா…சங்கடப்பட மாட்டியே?” அமுதா கேட்டாள்.

    “என்ன மேடம் சொல்லுங்க!”

    “என்கிட்ட ஒரு புதுப்புடவை இருக்கு…ஒரு தடவை கூடக் கட்டலை!….அப்படியே வாங்கிட்டு வந்த அட்டைப் பெட்டியிலேயே இருக்கு…நீ சங்கடப்படலைன்னா….அதை உனக்குத் தறேன்…பணமெல்லாம் எதுவும் வேண்டாம்…சும்மாவே வெச்சுக்க!”

    “இதுல சங்கடப்படறதுக்கு என்ன மேடம் இருக்கு?…புதுசுங்கறீங்க…ஒரு தடவை கூடக் கட்டலைங்கறீங்க…அப்புறமென்ன?… என் அக்காகிட்ட வாங்கற மாதிரி நெனச்சு வாங்கிக்கறேன்!”

    அப்பெண் சம்மதம் சொன்னதும், அமுதா எழுந்து உள்ளறைக்குள் வந்தாள்.

    “என்ன அமுதா அந்தப் புடவையை அந்தப் பெண்ணுக்குத் தரப் போறியா?” கேட்டேன்.

    “ஆமாம்…அது வேஸ்ட்டாத்தானே கிடக்கு!”

    “சும்மா கிடந்தாலும் பரவாயில்லை… அதைத் தர வேண்டாம்!” கண்டிப்பாகச் சொன்னேன்.

    “என்னங்க…நான் தறதாச் சொல்லிட்டேனே!”

    “ம்…என் வீட்டுக்காரர் தர வேண்டாம்னு சொல்லிட்டார்ன்னு என் மேல பழிய போட்டுடு”

    “ப்ச்…என்னங்க நீங்க…!” அவள் கையைப் பிசைந்து கொண்டு நிற்க, நான் நெருப்பாய் முறைத்தேன்.

    என் முறைப்பின் சூடு தாளாமல் உடனே வெளியேறி, எதையெதையோ சொல்லிச் சமாளித்து அப்பெண்ணை அனுப்பியே விட்டாள்.
     
    இரவு.

    மறுபக்கம் திரும்பிப் படுத்திருந்தவளின் முதுகைத் தொட்டுத் திருப்பினேன்.

    திரும்பியவள் முகத்தில் தார் சாலை இறுக்கம்.

    “அமுதா…நீ ஏன் கோபமா இருக்கேன்னு எனக்குத் தெரியும்!…நான் காரணமில்லாமல் அப்படிச் சொல்லலை… காரணத்தோடதான் சொன்னேன்!”

    அவள் குழப்பமாய் என்னைப் பார்க்க,

    “அந்தப் பொண்ணு சின்ன வயசுப் பொண்ணு!…பார்க்க “தள…தள”ன்னு நல்லா வாளிப்பா வேற இருக்கா!…அப்படியிருக்கற பொண்ணுக்கு உள்ளே இருக்கறதெல்லாம் தெளிவா வெளிய தெரியற மாதிரியான ஒரு சேலையைக் கொடுத்து அவ வாழ்க்கை கெட்டுப் போக நாம காரணமாகலாமா?”

    “என்ன சொல்றீங்க?…அதெப்படி அவ வாழ்க்கைய நாம கெடுக்குற மாதிரி ஆகும்?”

    “பின்னே?…அவ வேலையே தெருத் தெருவா…வீடு வீடாப் போயி சோப்புத் தூள் விக்கறது!…அப்படிப் போகிற சமயத்துல அவ எத்தனையோ விதமான ஆம்பளைங்களைச் சந்திக்க வேண்டி வரும்!…அவ சந்திக்கற எல்லா ஆம்பளைங்களுமே நல்லவங்களா இருப்பாங்கன்னு சொல்ல முடியாது!…இப்ப இந்தச் சருகுச் சேலையக் கட்டிட்டு கவர்ச்சியாப் போனா…அந்த மோசமான ஆளுங்களை இவளே தூண்டி விடற மாதிரியும்…அழைப்பு விடற மாதிரியும் இருக்கும்!…”

    “அட…ஆமாங்க!”

    “அவ்வளவு ஏன்?…நல்ல ஆம்பளைங்களைக் கூட புத்தி தடுமாற வெச்சிடும் அந்தச் சேலையோட லட்சணம்!…கடைசில அது ஏதாவதொரு விபரீதத்துலதான் போய் முடியும்!….தேவையா?…நீயொரு நன்மை செய்யப் போக அதுவே அவளுக்கொரு தீமையா ஆகணுமா?…சொல்லு அமுதா!”

    நான் சொல்லச் சொல்ல என்னை….என் எண்ணத்தை முழுவதுமாய்ப் புரிந்து கொண்ட அமுதா “விருட்”டென்று என் முகத்தை தன் நெஞ்சில் பொதித்துக் கொண்டாள்.

    (முற்றும்)

     

    Share