விசாலம்

‘அம்மா  அம்மா  இத பாரு என் பிரண்டு ஜோதி    நியூயார்க்  டைம்ஸ்ல  கவர் பேஜ்ல வந்திருக்கா ..எவ்வளவு  அடக்கமாக நிக்கிறா பாரேன்” என்றபடி  அனு  தன் அம்மா  ஜானகியிடம் புத்தகத்தைக்கொடுத்தாள். அதை வாங்கியபடியே  ஜானகி “இவள் போட்டோ இங்க ஏன் வந்திருக்கு “?  என்று கேட்க

“அதுவா  அவள் கேலக்ஸியில்  எதோ பல புது கண்டுப்பிடிப்பு  செய்து  ஸீனியர் ஸைன்டிஸ்ட் ஆகி புகழ் உச்சிக்குப்போயிட்டா . கூடிய சீக்கிரம்  நோபல் பிரைஸுக்கும் அவள் பெயரைத் தேர்ந்த்டுக்கலாம் அம்மா,”

“அப்படியா  ….ரொம்ப  சந்தோஷமா இருக்கே  தில்லியிலேயே அவ  காலேஜ்ல அவதான் முதல் இடம்ன்னு நீ சொல்லியிருக்கே “

“ஆமாம்மா  இங்க அமெரிக்காவிலே  எல்லா மேகசின்னிலும்   டிவியிலும்  இவள பத்தி   வந்துடுத்து .ஒரே புகழாரம் தான்  ஒரு தமிழ்நாட்டுப்பெண் இந்தியாவுக்கு   அதுவும் தமிழ் நாட்டுக்கு  எத்தனைப்பெருமை வாங்கித்தந்திருக்கா  பார்த்தயா ?”

“ஆமாம் அனு  ..ஆனா நான்  இங்க  வந்து ஒரு மாசம் தானே ஆச்சு .இதுக்கு முன்னாடி சென்னைல ஒரு பத்திரிக்கைலேயும் நான் இவள  பத்தி படிக்கவே  இல்லையே .நான் எல்லா முக்கிய பத்திரிக்கையும் வாங்கறேனே “

ஆமா     நீயே ஒரு எழுத்தாளர். ஏம்மா நீ இவள  பத்தி எழுதேம்மா..தமிழ் நாட்டுக்கு பெருமை தானே “

“நான் நினைச்சேன்   நீ சொல்லிட்ட  ..இன்னும் இரண்டு மாசம் கழிச்சு சென்னைப்போய்  நான் செய்யற  முதல் வேலை இதான்  “

அனு தன் அம்மாவின் முதுகை செல்லமாகத்தட்டிவிட்டு  மொபைலை காதில் வைத்தபடி தன் அறை   சென்றாள்.

ஜானகி நியூஜெர்ஸிக்கு வந்து ஒரு மாதம்  தான் ஆகிறது ஆனாலும் சென்னையில் மனம் ஈடுபட்டதுப்போல் இங்கு என்னவோ
ஈடபடவில்லை  .எல்லா இந்தியப்பொருளும் இங்கு கிடைக்கிறது  வசதியான வாழ்க்கை  ஒரு பிரச்சனையும் வந்ததில்லை . பெண்ணும் மாப்பிள்ளையும் அன்பைப்பொழிகிறார்கள்  ஆனாலும் எதோ ஒரு வெறுமை .அது என்னவென்று சொல்லமுடியவில்லை . இந்திய கலாச்சாரத்திற்கு ஒவ்வாத சூழ்நிலையா ? ஊஹூம்   இருக்கமுடியாது ஏனென்றால் தற்போது சென்னை   அமெரிக்காவையும்
தூக்கிச்சாப்பிட்டு விடுவது போல் ஒரு மாற்றம் .அப்படி ஒரு ஜெனரேஷன் கேப் {gap} …பின் என்ன!  ஹோம் ஈஸ் ஹோம்  எ ஸ்வீட்
ஹோம்  இல்லையா ? ஆறுமாதம் இருக்க வந்தவள் இரண்டு மாதத்திற்குள்ளேயே  சென்னைக்கு
மூட்டைக்கட்டிவிட்டாள்

சென்னை வந்ததும் முதல் வேலையாக  வெளிநாட்டில் கொடிக்கட்டிப்பறக்கும் ஜோதியைப்பற்றி எழுதியாகிவிட்டது . இதை தகுந்த பத்திரிக்கைக்கு அனுப்ப வேண்டும்  ,முதலில் அவள் கண்முன்னால் வந்தது  “ஆனந்த மஞ்சரி ” உடனே

டெலிபோன் முன்   அமர்ந்தாள் ஜானகி

“ஹலோ ஹலோ     வணக்கம் ஆனந்த மஞ்சரி  ஆசிரியர்  இருக்காறா?”

“கொஞ்சம் லைன்ல் இருங்கம்மா  .”என்ற குரல் கேட்டு காதில் ரிசீவரைப்பிடித்தபடி இருக்க  “குறையொன்றுமில்லை மறைமூர்த்திக்கண்ணா” என்ற பாடல் ஓடிக்கொண்டேஇருந்தது,  ஒருவரும் வரவில்லை  .சிறிது நேரம் காத்திருந்து பின் சலிப்புத்தட்டி ரிசீவரை  டங்கென்று கீழே வைத்தாள். இன்னிக்கு அஷ்டமியோ அதான் இப்படி என்றபடி மனம் சமாதானமடைந்தது .
 ,,

இருநாள் கழித்து  இதே பல்லவி   …. “ஹலோ ஹலோ  வணக்கம்  யார் பேசறீங்க “

”   வணக்கம் ஆனந்த மஞ்சரி ஆபீஸ் “

” சார்  எனக்கு ஆசிரியருடன் பேசவேண்டும்”

” லைன்ல இருங்கம்மா   ”   உடனே அதே பாடல் அதே குரல்      .குறையொன்றுமில்லை ……..

“அப்பா வெங்கடேசா  … இதாம்ப்பா எனக்கு குறை  ..போன்ல இப்படி பாட்டப்போட்டுட்டு  எங்கேப்பா எல்லாரும் போய்டறா…….

என்று எண்ணிய எனக்கு வெங்கடேசன் அருள் புரிந்தான்.

”  வணக்கம்  நான் ஆசிரியர்  சோமு பேசறேன்   என்னம்மா  வேணும் ?”

“சார்  நான் ஒரு விக்ஞானியைப்பற்றி   எழுதியிருக்கேன்  யூ எஸ் ஏ ல அவளுக்கு ரொம்ப  பேரு  ……அத உங்க பத்திரிக்கைக்கு
அனுப்பட்டுமா ? ஈமெயில் ல அனுப்பறேன்  “

“சரிம்மா  அனுப்பி வையுங்கோ .படிச்சுப்பாத்து பிரசுரிக்கிறோம் ‘

” ரொம்ப நன்றி  சார் ”     அவள் சார் என்று முடிப்பதற்குள்  மறுபக்கம் துண்டிக்கப்பட்டது …அத்தனை பிசி போல  ………

ஒரு வாரம் சென்றது  .அங்கிருந்து பதில் மடல் ஒன்றும் வரவில்லை  .போடவும் மாட்டார்கள் .நாம் தான் பின்னால் அலையணும் .

திரும்பவும்  ஜானகி  ஆனந்த மஞ்சரி ஆபீஸுடன்  தொடர்ப்பு கொண்டாள் ” ஹலோ  நான்  ஜானகி பேசறேன்  வணக்கம்    நான் அனுப்பிச்ச”  பெண்விக்ஞானி ” வந்து சேர்ந்ததா? ஆசிரியர் பார்த்தாரா ?

“மேடம்   கொஞ்சம் ஹோல்ட் பண்ணுங்க   அவர் ஸீட்ல வந்துட்டாரான்னு பாத்து சொல்றேன் ”

ஐந்து நிமிடம் கழிந்தது  ,,பின் அதேகுரல் வந்தது     ” மேடம்   அவர் இன்னும் வரலை   . எப்ப வருவார்ன்னு தெரிலை  நாளைக்கு

இந்த நேரத்தில போன் பண்னி கேட்டுங்க  ”       டக்    ……..பேச்சு துண்டிக்கப்பட்டது

ஐயோ இது என்ன ?அனுப்பறதே இத்தனை சிரமமான காரியமாயிருக்கே  எதாவது சிவாரிசு பிடிக்கணுமோ ! என்று   மனம்  குழம்பிப்போனது

இதேபோல் அனுபவம்   ஒன்றல்ல இரண்டல்ல…..மல்லிகைச்செண்டு  .மஞ்சள்குங்குமம்   .குமுதமலர்   என்ற பல  புகழ்ப்பெற்ற பத்திரிக்கை
ஆசிரியர்களிடம் பேசி  அவர்களும் அனுப்பச்சொல்லி அது அப்படியே விழலுகிறைத்த் நீர் போல் வீணானது  .எல்லோருக்கும் வாய்ப்பு வர வரத்தானே  ஒரு சுஜாதா அல்லது சிவசங்கரி யாக ஆகமுடியும்   இது ஏன் இவர்களுக்குப்புரியவில்லை

ஒரு வாரம் சென்றது   ” ஆனந்த மஞ்சரி  வேண்டாம் ராசியில்லை .  ” மங்கை உலகம் ”     பத்திரிக்கையில் நிச்சியம் எடுப்பார்கள்

அங்கு போடுகிறேன் ” என்று தனக்குத்தானே பேசியபடியே ஜானகி அந்தப்பத்திரிக்கை ஆசிரியரை  அழைத்தாள்.

இங்கு ரிங்க் டோனில் கோவிந்தா வரவில்லை  ஆனால்  கந்தசஷ்டிக்கவசமாக முருகன் வந்தான் .

“ஹல்லோ   மங்கை உலகம்  ஆசிரியர்   ஹேமா   ….. வணக்கம்

“வணக்கம்   “என்றபடி எல்லா இராமயணமும்  சொன்னாள் ஜானகி

“”ரொம்ப மகிழ்ச்சி  அவசியம் அனுப்புங்கள் போடுகிறோம்   அப்படியே அவளது படமும் அனுப்புங்கள் .மகளிர்தினம் அன்று அட்டையில் அவள் புகைப்படத்தைப்போட்டு  ஜமாய்த்துவிடலாம்  ‘

“அப்பாடி இன்றுதான்  என் டென்சன் நீங்கியது மிக்க நன்றி  :”

அடுத்த போன்  அனுவுக்கு …………..

“டிரிங்க டிரிங்க      ,,,ஹலோ அனுவா      ,,,,,,எப்படி   இருக்கே    நான் எதுக்கு இந்த நேரத்ல போன் செஞ்சேன் தெரிமா  ?  எனக்கு உடனே

ஜோதியோட போட்டோ ஒண்ணு  ஈமெயில்ல அனுப்பு   “மங்கை உலகத்ல   “அவளப்பத்தி நான் எழுதியதை பிரசுரிக்கறேன்னு சொல்லியிருக்கா  .  அப்பாடி நான் எழுதி ஆறுமாசம் ஆயிடுத்து …..’

“சரிம்மா  உடனே அனுப்பறேன்  பெஸ்ட் ஆப் லக்  நாளைக்கு ஸ்கைப்ல  வரேன்  “

“சரி உடம்ப பாத்துக்கோ  பாத்து டிரைவ் பண்ணு  ஒகே  பை பை ‘

“அப்பா எல்லாம்  ஒருவிதமாய்  முடிந்தது  இந்த மாதம்   ஜோதி அட்டையில் மின்னுவாள்  .தமிழ்நாட்டுப்பெண்ணின் புகழ் எல்லா இடத்திலும்  பரவும் .அப்போ பாயசம் வைச்சுக்கொண்டாடுவேன் ” என்று யோசித்தபடி  ஜானகி படுக்கச்சென்றாள்.

ஒவ்வொரு நாளாய் எண்ணி    ..கடைசியில் அந்த ஒன்றாம் தேதியும் வந்தது போஸ்டில் தனக்கு இலவச காப்பி ஒன்று கிடைக்குமே
என்று போஸ்டை எதிர்ப்பார்க்க  ஒன்றும் வரவில்லை  அனுப்ப விட்டுப்போச்சோ என்ற நினைவில் கடையில் மங்கை உலகம்   வாங்கப்போனாள் . புத்தகம் இப்போது அவள் கையில்  …அட்டையில்  அங்கு ஜோதி இல்லை  ஒரு வளரும் சினி  நடிகை
மாடல் கவர்ச்சி ஆடையுடன் போஸ் கொடுத்தாள் ..

ஜானகிக்கு ஒரே ஷாக் ..கோபம் வர  அழுகையும் வர   நேரே வீடு வந்தாள் நேரே டெலிபோனை எடுத்தாள்,

‘ஹலோ  “

“ஹலோ   மங்கை உலகம்   நான் மீனா  பேசுகிறேன் “

” எங்கே உங்க ஆசியரைக்கூப்பிடுங்க “

” சாரி மேடம்    நீங்க தானே ஜானகி மேடம்  ஆசிரியர்  ..உங்களுக்கு ஒரு மெசேஜ்  கொடுக்கச்சொன்னா  ‘ எதோ மேலிடுத்து பிரஷராம்
அதனாலே  ……..”

“அதனாலே…..சரி பிரஷர்  யார் கொடுத்தா ?எனக்குத்தான் இப்ப  பிளட் பிரஷர் வந்துடுத்து “

“இல்ல மேடம்   வந்து  . இந்த வளரும் மாடலைப்பேட்டி எடுத்து போட்டோவும் போடச்சொல்லி  ஒரு பெரிய பிரமுகர்  பெரிய தொகையை கொடுத்துட்டார்  அதனாலே எங்க மேடத்துக்குத் தட்டமுடிலை  சாரி மேடம் :

டக்கென்று   டெலிபோன் துண்டிக்கப்பட்டது .

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “போதுமடா சாமி

  1. பணம் என்றால் பினமும் வாய் திறக்கும், இந்த ஆசிரியர் எம் மூலைக்கு. நல்ல கதை.

  2. அடடா! திருமதி.விசாலத்துக்கும் எனக்கும் ஒரே அனுபவம். படிக்கு படி இப்படி முட்டி தட்டினாங்க. ஒரு பிரபல இதழின் ஆசிரியக்குழுவின் ஜூனியர் ஒருவர் என் எழுத்தில் மோகம் கொண்டு என்ன என்னவோ செய்து பார்த்தார் பாவம். ஆசிரியரின் பிரிதிநிதி என்னை பேட்டி வேறு கண்டு, சொன்னார், ‘உங்கள் தமிழார்வத்தை மெச்சி, அகில இந்திய அளவில் உயர் பதவி வகித்த ஒருவரின் பெருமை’ என்று ஒரு பேட்டி போடுகிறோம். உங்கள் ஃபோட்டோ ப்ளீஸ் என்றார். நான் கொடுக்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *