மணி ராமலிங்கம்

அப்துல் கசாப் இப்படி கொல்லப்பட்டிருக்க கூடாது.

மீடியாக்கள் மறுபடி பிளிர ஆரம்பித்தன. செய்திகள், விமர்சனங்கள், விவாதங்கள், மக்கள் கணிப்புகள். ட்விட்டர்கள், முகநூல் கருத்துரைகள் என எங்கும் அல்லோகலம்.

விசாரிப்புக்கோ, அல்லது வேறு எதற்கோ ஆர்தர் ரோடு ஜெயிலிருந்து கொண்டு சொல்லும் போது கல்லெறிந்து கொல்லப்பட்டான் கசாப்.

இத்தனை செக்யூரிட்டிகளுக்கு  இடையே தூக்கு தண்டனையோ ஏற்போ, நிராகரிப்போ வராத நிலையில் ஆர்தர் ரோட்டிலிருந்து எதற்காக அவன் வெளியே எடுத்துச் செல்லப்பட வேண்டும் ?

நேரம், இடம், பொருள் தெரிந்து யாரோ ஏவிய கல் ஒன்று நகர்ந்து கொண்டிருந்த கசாப்பின் மீது பட்டு, அவன் தடுக்கி விழுந்தானாம். அவன் தடுக்கி விழுந்த நேரத்திலும் சரமாரியாக கற்கள் உடலின் முக்கியமான உயிர் ஸ்தானங்களில் பட்டு, அந்த அதிர்ச்சியில் உயிர் பிரிந்திருக்கலாம் என்றன செய்திகள்.

எல்லோர் முன்னாடியும் மைக் நீட்டியது மீடியா.

 “ எல்லோரையும் அவன் இப்படித்தானே கொன்னான்.. அவனுக்கு மட்டுமென்ன ராஜா சாவு “

“ தூக்கு தண்டனை அறிவிக்கும்  வரைக்கும் காத்திருந்திருக்க  வேண்டும். இது சரியான செயல் அன்று. அண்டை நாடுகளுடன் அமைதியை நிலைநாட்ட விரும்பும் இந்தியாவிற்கு நல்லதன்று “

“ இது இந்தியாவில்  எழுந்து வரும் ஜனநாயகத்திற்கு எதிராக மறைமுக வேலை செய்யும் மதவாத சக்திகளின் கைவேலை தான் “

“ இவ்வளவு நாள், நம்மை கொன்று, நம் காசில் உடம்பை வளர்த்த அவனை பகிங்கரமாய்  தூக்கு போட்டிருக்க வேண்டும்.. பரவாயில்லை.. மன்னித்து பக்கத்து நாட்டிடம் ஒப்படைக்காமல், பயந்து போய் பின்லேடனை போல கடலடியில் கரைக்காமல், இந்தியன் ஓருவனாலே கொல்லப்பட்டான் என்ப்து மகிழ்ச்சி தான்.. “

“ இது உலக அரங்கில் நமது பாதுகாப்பின் நற்பெயருக்கு ஒரு கரும்புள்ளி. நம் நாட்டில் என்றைக்குத்தான் விரைவாய் நீதி கிடைத்திருக்கிறது. நீதி கிடைக்க கொஞ்ச நாள் ஆனால் தான் என்ன தப்பு. அதற்குள் எதற்கு கொல்ல வேண்டும் ? “

 “ கசாப்பின் மரணத்திற்கு பழிக்கு பழி வாங்குவோம் “ தாலிபான்கள்.

“ அவன் இறந்தான் என்பது ஒரு ஜோடிப்பு “ –

“ தூக்கு தண்டனை என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்வதேயில்லை.. அது யாராகயிருந்தாலும் சரி.. விசாரணை முடிந்து தீர்ப்பு வருமுன்னரே இப்படி நடந்திருக்கிற செயல்கள் மிகப் பெரிய சந்தேகத்தை கிளப்புகின்றன.. நாம் கற்காலத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோமா ? “

“ அவனின் இறப்பு, கலவரத்தின் போதைய உயிர்களை திருப்பி தராவிட்டாலும், ஒரளவு ஆறுதலையாவது தரும்.. “

“ நாடாளுமன்றத்தை தாக்கியவர்களையும் இப்படி ஏதாவது கல்போட்டு எறிந்தால் இனிமேல் இந்தியாவினுள் ஊடுருவும் தீவிரவாதிகளுக்கு பயம் வரும்.. “

’போலிஸே உள்ளே விசம் வைத்து கொன்றுவிட்டு இப்படி கதை கட்டியிருப்பார்கள். அவனை கொல்லாவிட்டால் நமது அரசியல் தலைவர்களின் பல உட்கதைகள் வெளியே வந்துவிடும் ‘ ஒரு மாநில அரசியல் கட்சியின் வியாஞ்ஞானம்.

” இது போல நூதனமான முறையில் பல உலகத்தலைவர்கள், பிரமுகர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். [நூதன முறைகளை, தலைவர்களை ஒரு தாளில் எழுதி கொண்டு வந்து வாசித்து காட்டினார் ] உடல், மன இயக்கம் அறிந்து எந்த கருவி கொண்டும் உடலின் சில பகுதிகளை ஒரே நேரத்தில் தாக்குவதன் மூலம் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி இதயத்தை நிறுத்தலாம். இந்த முறை பயிற்சிகள் இஸ்ரேல், ஜெர்மனி, ஆப்பரிக்கா மற்றும் ஐரோப்பாவின் ஒரு சில பகுதிகளில் மட்டும் இரண்டாம் உலகப் போரின் போது பிரசித்தியாய் இருந்தது ”  ஒய்வுப் பெற்ற க்ரைம் ப்ராஞ்ச் அதிகாரி.

”மக்களுக்குத்தான் பாதுகாப்பில்லை, மக்களை சராமாரியாக சுட்டுக்கொன்ற ஒருத்தனை கூடவா நீதிவிசாரணை முடியும் வரை அல்லது தூக்குத் தண்டனை முடியும் வரை காக்க முடியவில்லை “ ஒரு எதிர்கட்சி தாளித்தது.

மீடியாவில் மறுபடி மக்கள் கோப்ப்பட்டார்கள், தலைவர்கள் துக்கப்பட்டார்கள்.

*

அசுரத் தீனி மீடியாவிற்கு எப்போதும் அவசரம். இந்த நான்கு வருடங்களில் கசாப்பை பற்றித் தான் எத்தனை செய்திகள்.

அவனுக்கு ஜெயிலில் கிடைக்கும் பிரியாணி பற்றியும், வசதிகள் பற்றியும் அவனால் இந்திய அரசாங்கத்திற்கு செலவாகிற சில ஆயிரம் கோடிகள் பற்றியும் எத்தனையோ கதைகள்.

வழக்கம் போல நம் அரசியல் கட்சிகளுக்கு அவன் ஒரு வரப்பிரசாதமானான். அகிம்சை பஜனையும், அவனை கொன்றால் தான் இந்தியாவின் ஆத்மாவே சாந்தியாகும் என்று இரு நிலைகள். இரு பிரிவினரும் இரத்தம் கொதிக்க வைக்கும் உரையாற்றினர்.

பேச்சுகள். பேச்சுகள். ஓயாத பேச்சுகள். பெரிய ஊழல், கிரிக்கெட் மேட்சு, தேர்தல் எதுவும் இல்லாத போது கசாப்பே மீடியாக்கள், ரயில், பஸ், அலுவலகம் முழுக்க பேச்சாகயிருந்தான்.

கசாப் மீடியாவின் டிஆர்பி அட்சய பாத்திரமானான். மீடியாக்கள் யாகத்தில் நெய் வார்த்துக்கொண்டிருந்தன.

திடீரென்று ஒரு  விமானம் கட்த்தப்பட்டு  கசாப்பை விட்டால்தான் பயணிகள்  விடுவிக்கப் படுவர் என்று  சொல்லப்பட்ட்தாக விசயம் கசிந்த்து. அரசாங்கம் மெளனித்தது.

ஒரு முறை கசாப்பின்  பிறந்த நாளை பெரும்பாலான  ரயில் பெட்டிகளில் கொண்டாடினோம். அந்த நக்கலான ஜனநாயக எதிர்ப்பை மறுபடியும் மீடியா பேசியது.

பக்கத்து நாட்டு அதிபர் வந்த போதும், ஐநாவில்  வெளியுறவு அமைச்சர்கள்  கை குலுக்கியபோதும் விசயம் மறுபடி மேலெழுந்து, மறந்து போனது.

ஒரு மும்பை செய்திப்பத்திரிக்கை பொய்த் துப்பாக்கிகளோடு ரயில் பெட்டிக்குள் போய் சின்ன நாடகம் நடத்தி அதையும்  ‘போலி பாதுகாப்பு’ என்று பிரசங்கப்படுத்தியது. இன்னொரு கசாப் வந்தாலும் இதே கதை தான் மறு ஓளிபரப்பாகும் என்று மீடியாக்கள் இரைந்தன.

தேசயானையின் செவியில் எறும்புகள் அசைவுகளுக்கு இடமிருக்குமா என்ன ?

ஆனாலும் மீடியாக்கள்  விடுவதேயில்லை. ஏதாவது ஒரு மீடியா, கசாப்பை உயிர்ப்பித்துக்கொண்டிதானிருந்தன. கசாப் மீடியாவில் வாழ்ந்து கொண்டிருந்தான்.

இப்போது மறுபடியும் கசாப். இன்னும் கொஞ்சம்  நாட்களுக்கு அவனின் இறப்பு, யாரோ, எங்கிருந்தோ, எப்படியோ நூதனமாய் கல்லால் எறிந்து கொலை செய்யப்பட்டது மீடியாக்களுக்கு முழுச் சாப்பாடு.

*

உங்களோடு டிவி பார்த்து கொண்டிருக்கும் நான் ஒரு மும்பைவாலா.

மும்பை தாக்குதலின்  துர்கணங்களின் போது மெழுகுவர்த்தி  ஏற்ற போகவில்லையென்றாலும், நாள் முழுக்க உட்கார்ந்து  டீவி பார்த்திருக்கிறேன். பயந்து போய் நான் தினமும்  போகின்ற இடமானதால், உணர்ச்சி பொங்க பக்கத்து நாட்டை திட்டியிருக்கிறேன். ஒரு நாளைக்கு சராசரியாய் நாலு மணி நேரம் பயணம். மின்சார ரயில் பெட்டி ஸ்நேகிதர்களோடு இதை விவாதித்திருக்கிறேன்.

ஒரு அவசர மும்பைவாலா அதற்கு மேல் என்னதான் செய்ய  முடியும்.

கசாப்பின் தண்டனைக்கு முன்னான இந்த செய்தியையும் வீட்டிக்குள் உட்கார்ந்து பார்த்துக் கொண்டே ரொம்பவே கோப்ப்பட்டேன்.

” திஸ் இஸ் பிளடி நாட் குட்..  வாட் த ஹெல் ஹெப்பனிங் இன் திஸ் கண்ட்ரி [ This is bloody not good. What is happening in these country ? ]“

கசாப் போட்ட ஜனாதிபதி கருணை மனு கிட்டதட்ட நிராகரிக்கப்பட்டு அமுக்கமாய் அவன் பின்லேடன் போல தண்டிக்கப் படுவான் என்று எல்லோரும் நினைத்து கொண்டிருந்த வேளையில் எதற்காகவோ வெளியே எடுத்து செல்லப்படும் வேளையில் தொடர் கல்லெறிதல் ( Continuous stoning ) மூலம் கசாப் கொல்லப்பட்டிருப்பது மகா ஆச்சரியம்தான்.

இன்னும் நிறைய  நாள் இது பேசப்படும்.  இதை  வைத்து நானும் நாளை மின்சார  ரயிலில் நிறைய பேச வேண்டும். இப்படி பேசுவதற்கும் நான் மீடியாக்களிலிருந்துதான் கருத்துக்களை சாப்பிட வேண்டியிருக்கிறது. அவைகளை சாப்பிட்டு, போகும் ரயில் நேரத்தில் வாந்தியிட்டு, ஏப்பமிட்டு.

இரண்டு மணி  நேரத்தில் பல கருத்துக்களையும் என் கருத்தாகவே பேசிவிட  என்னால் முடியும். மீடியாக்கள் இல்லாவிட்டால் கருத்தென்பதே இல்லாமலிருக்குமோ ?

அவன் இறந்தது  சரியா, தவறா, உண்மையா, இல்லையா, – ஆம், இல்லை, சரி,தவறு, என்கிற விவாதங்கள், நூற்றூக் கணக்கான  அநுமானக் கதைகள், ஊகங்கள் இவற்றை நீங்களும் மீடியாவில் படித்திருக்கலாம். பார்த்திருக்கலாம். அவை உங்களுக்கு பிடித்திருக்கலாம். புளித்திருக்கலாம்.

ஓகே, அதுவல்ல நம் கதை.

*

அவன் பெயர் எங்களுக்குத் தெரியாது. அவனை ‘ஏ..அம்பர்நாத்வாலா..’ என்று அழைப்பதே வழக்கம். லவண்டி அம்பர்நாத் வாலா, சாலா அம்பர்நாத் வாலா, சூ.. யா அம்பர்நாத்வாலா, பே.. யா அம்பர்நாத்வாலா என்று பல பெயர்களோடு அந்த கம்பார்ட்மெண்டே அழைக்கும். மரியாதையாய் நாம் அம்பர்நாத்வாலா என்றே அழைக்கலாம்.

ஒரு நாள் ஏதோச்சையாய்  அந்த கம்பர்மெண்டில் நுழைய  அவனின் வசீகரம் என்னை ஈர்த்தது. கொஞ்சங்கூட முதல் வகுப்பிற்கு பொருந்தாத ஆடையலங்காரம். போஜ்புரி படகதாநாயகன் போல கலர் சட்டைகள். எப்போதும் தப்பாத மெல்லிய அழுக்கு பார்டர். உள்ளே துருத்திவிடப்பட்ட கைக்குட்டையாலான காலர். தெரியவேண்டுமென முனைப்போடு அணியப்பட்ட டாலர், அழுக்கேறிய பேரஸ்லேட், கொஞ்சம் சிவப்பு, நிறைய சிவப்பு என வலக்கை மணிக்கட்டில் கட்டப்பட்ட தாயத்துகள். சட்டைக்கு தவறியும் பொருந்தாத பேண்ட். ஒரு கை மடித்து, இன்னொரு பக்கம் முழுக்க போட்ட பித்தானோட சட்டை.

எப்போதும் வழிக்கப்படாத முகம். குறைந்த தாடி, மிதமான தாடி, காடு போல தாடி என சீரற்ற முகம். கறைகளின் நடுவே அங்காங்கே பற்கள். எதையாவது மென்று கொண்டிருக்கும், சலிக்காமல் காறித்துப்பும் வாய். சிரித்தால் குழி விழும் கன்னம், தாடிதாண்டி தெரியும். அழுக்காயிருந்தாலும் அவனிடமிருந்து எந்த துர்வாடையும் வந்ததுமில்லை.

முகம் நிறைய பெரிய  குங்குமப்பொட்டு, சாக்ஸ் போடாத சூ. முதல் வகுப்பிற்கு பொருத்தமில்லாத பாவங்கள். அலங்காரங்கள். அவன் அலுவலகம் அவனுக்கு பாஸ் வழங்கியிருக்கிறதாம்.

இத்தனை அவலட்சணம் தாண்டியும் அவன் வசீகரம் அந்த பெட்டியில் பிரசித்தம்.

அவனுக்கான ரசிகர்கள்  எப்போதும் உண்டு. அந்த பெட்டியில் நான் தானே(thane) ஸ்டேசனிலிருந்து மட்டுமே ஏறுவதால் அவனின் ரயிலில் ஆற்றும் லீலைகள் பற்றிய முன் புராணம் அறியும் வாய்ப்பும், அதை உங்களிடம் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பும் எனக்கில்லை.

ரசிகர்களில் கூட  அவனோடு முற்றிலும் இயைந்த, கொஞ்சம் இயைந்த மற்றும்  தள்ளியிருந்து ரசிக்கும் கூட்டம் என பிரிவினர் உண்டு. நான் கடைசி ரகம்.

ஏதோ அலுவலகத்தில் – சாய் கொடுத்து, பேங்கில் செக் போட்டு, வாடிக்கையாளரிடமிருந்து செக் வசூலித்து, மதிய வேளைகளில் மிட் டேவில் பொம்பளை படம் பார்த்து, உள்ளூர் அரசியல் பேசி, ‘போலியே சாப்.. ‘ என சலாம் அடித்து, பொய்ப் பணிவு காட்டி  – அவன் ஆபிஸ் பாயாக, மேனாக இருக்கலாம். வேறெதாவாகவும் இருக்கலாம்.

ஆனால் இந்த ரயில் பெட்டியில் அவன் அறிவிக்கப்படாத கதாநாயகன். உற்சாக ஊற்று. அவனின் ரிப்ளெக்சனும், சார்ப்னசும் அவனோடு ஓட்டிப் பிறந்த கவச குண்டலங்கள்.

இத்தகைய பேர்வழிகளோடு எனது அநுபவம் அவ்வளவு நல்லதாக அமையாதலால், நான் தள்ளியிருந்து ரசிக்கும் ரசிகானகவே இருக்க ஆசைப்பட்டேன். எனது ஹிந்தியும், மராத்தியும் சொல்லாமலே என்னை சால மதராசியாகவோ, வோ அண்ணா.. என்றோ காட்டிக் கொடுத்துவிடும்.

எந்த மண்ணிலும் அந்நியப்படுவது போல அசெளகரியமான விசயம் எதுவுமில்லை.

*

கம்பியை பிடித்து வெளியே தொங்கிக்கொண்டே வருவான். எலெக்ட்ரிக்  கம்பிகள் நெருங்குவதை பார்த்து, நான் முதல் முறை பயங்கொண்டேன். “ ஹாய்.. கேட்.. இன் “ பதட்டினேன்.

அவன் கண்டு கொள்ளவேயில்லை. அது நெருங்க நெருங்க  என்னில் பயம் அதிகரித்து அவனை பிடித்து இழுக்க முயற்சித்தேன். அவன் ஏதோ மலிவான பாலிவுட் பாட்டை சீழ்ட்டியடித்துக் கொண்டே வந்தான்.

எனது சர்வநாடியும் ஒடுங்கி  பயந்து போன கடைசி, கடைசி  தருணத்தில் சடக்கென உடல் லேசாய் இழுத்துக்கொண்டான். கொஞ்சமான, ரொம்பவே கொஞ்சமான இடைவெளியில் அவன் தப்பினான். ஒரிரூ விநாடிகள் தாமதித்திருந்தாலும் அவன் தலையும், உடலும் பிரிந்திருக்கும்.

எனது பயம் தெளிந்து பார்க்க, அந்த டப்பா முழுக்க என்னைப் பார்த்து சிரித்தது. அவனோ “ ஹாய்.. கேட்.. இன்.. ஹாய். கேட்.. இன் “ என்று மராட்டி வாடையடிக்க என்னைப் பார்த்து சிரித்துக்கொண்டிருந்தான். கோபமும், ஆச்சரியமும் என்னை மெளனமாக்கின.

’சீப். தேர்ட் ரேட்டட் சாப்’  – மனதில் திட்டல். இன்றைக்கு நான் பக்ரா (பலி ஆடு).

இவ்வாறான நிறைய சாகச லீலைகள்  அவன் செய்வது வழக்கம் என்றும்  ஓவ்வொரு நாளும் ஓவ்வொரு  பக்கராக்கள் என்றும் தெரிந்து கொண்டேன்.

கொஞ்ச நாளில், என்னை அறியாமலே அவனது சாகச லீலைகளை மீது ஒரு கவனிப்பு வந்ததும் உண்மை தான்.

*

எதிர் ட்ராக்கில் நிற்கும் வண்டிகளில் சில நொடிகள்  தாவிப் போய் ஏறிவிட்டு, மறுபடியும் அவனது வண்டிக்குள் புகுந்து விடுதல். இது ஒரு சில  கணங்களுக்குள் நடந்துவிட  வேண்டும். அந்த ஒரு சில  கணங்களுக்குள் எதிர் ட்ராக் வண்டியில் பயணம் செய்யும் நபர்களுக்கு கிசுகிசு மூட்டவோ, காதில் கெட்ட வார்த்தை சொல்லிவிட்டோ, வெறுமனே கத்திவிட்டோ வந்துவிட் வேண்டும்.

பெரும்பாலும் சிக்னல்களுக்காக  நிற்கும் வண்டிகளில் அவனது  சாகசங்கள் பெரும் சிரிப்பை வரவழைப்பதாயிருக்கும்.

ராக்கித் தினத்திற்கு முந்திய நாள். எதிர் நின்ற பெண்கள் டப்பாவில் குதித்தான். அங்கிருந்த பெண்களும் கச்சு மூச்சென்று கத்த, ‘க்யா பேன்.. க்யா பேன். “ என்று பேசிப் பேசியே மன்னிப்பு கேட்டபடியே பத்திருபது ராக்கி கட்டி, இருநூறு சம்பாதித்து விட்டான். எங்கள் சகபயணி தேஸ்பாண்டேவோடு போட்ட பந்தயம் என்று பின்பு தெரிந்தது. அழுது கொண்டே தேஸ்பாண்டே முன்னூறு ரூபாய் கொடுத்தார்.

“ ஏ.. சாலா.. குச்சுபி கரேகாரே.. “ [ இவன் என்ன வேணா செய்வான்யா. ]

விக்ரோலியில் இரவு ஸிப்டை முடித்துவிட்டு களைத்த முகத்தோடு திரும்பும் பெண்களை கண்டால் அவனுக்கு மிகுந்த குஸியாகிவிடும்.

“ வேய்கா.. வெல்கம்  மேடம்.. கேன் ஐ ஹால்ப் யூ சார்.. ஐ ஆம்.. மேரினா க்யூர்.. “

மூன்றாவது ப்ளார்பாரத்தில்  வேகமாய் போகும் ரயிலிலிருந்து  அவன் கொடுக்கும் கத்தல்கள் மொத்த ரயில்நிலையத்தையே லேசாய் அசைக்கும்.

“ ஓ. மேடம்.. வாட் கேன் ஐ டூ பார் .. யூ “ என்று  ரயிலிருந்து தொங்கிக்கொண்டு அவர்களைப் போலவே மிமிக் செய்யும் அவனை அவர்களில்  சிலருக்கு பிடிக்கலாம். சிலர் வெறுக்கலாம். ஆயினும்  அவன் இருத்தல் அந்த ஸ்டேசனில்  பதிவு செய்யப்படும்.

 

விக்ரோலி தாண்டி வருகிற நீளமான கோத்ரோஜின் பகுதிகளை அவன் கல்லெறிந்து  கடப்பான். அவன் கல்லெறிதல் போல இதுவரை நான் எங்கும்  பார்த்த்தில்லை. அவனுக்காக  டப்பாவில் அவனது ரசிகப் பெருமக்கள் சின்ன சின்னதான கற்களை அம்பார்நாத்திலிருந்து பொறுக்கி, தோள்பையில் போட்டு கொண்டுவந்திருப்பார்கள்.

ஏதோ சாப்பாட்டுக்கூடை போல தொங்கும் அந்த கல் பேக் அவனை நோக்கி பிராயணப்படும். ஓற்றைக் கையால் கற்களை எடுத்தல், மறுகையால் அதை தூக்கி எறிதல். தொடர்ந்து செய்தல்.

அது காண கண்கொள்ள நிகழ்வு. எடுத்தது கண்டிலன். எறிந்தது பார்த்திலன். அவ்வளவு வேகம். துல்லியம்.

ஒரு சில நாள்களில்  தவளையை குத்தும். மலம் தின்று கொண்டிருந்த காக்கையை விரட்டும். சில நாட்களில் ஓரமாயிருந்த நாயின் பின்பகுதியை கிழிக்கும். இல்லை முன்னேயிருந்த ரயில் கம்பத்தில் பட்டு லேடீஸ் டப்பா மீது பட்டு அங்கிருந்து அய்யோ குய்யோவென சத்தம் வரவைக்கும்.

தவளைக்கு கண், காக்கைக்கு வயிறு, பன்றிக்கு குதம், பல்லிக்கு  கழுத்து – எங்கு கல் பட்டால் விமோசனம் எளிதாகவும், எந்த சத்தமின்றியும் உறுதிப்படும் என்று அவனுக்கு பழக்கத்தினால் தெரிந்திருந்தது.

ஒரு சில விலங்குகளுக்கு ஒரு கல் போதாது. தொடர்ந்து நாலைந்து எறிய வேண்டும். எறியும் அவனும், ஓடும் அவைகளும் நகர்ந்து கொண்டேயிருக்கும் போதும், குறிப்பிட்ட விசையோடு எறிதல் முக்கியம்.

கேரம் போர்டின் காய் போல ஒரு முனைப்பட்டு  மறுமுனையில் ஸ்பின் பெளலிங்  போல திரும்பி அடிக்கும்  என்று வேறு யாராவது சொல்லியிருந்தால் நானும் நம்பியிருக்க மாட்டேன் தான். ஆனால் அவனுக்கோ அத்தகைய அர்ஜீனன் குறி.

சில சமயம் எறிந்த கல் ஏழு பெட்டிகளை தாண்டி ரயில் முன்னாடி விழுந்திருக்கிறது. ஓவ்வொரு நாளும் சில கற்களாவது  எறிந்து விடவேண்டும். ஹோலியின் போது மற்ற சிறப்பு தினங்களிலும் கற்களோடு மற்ற சில சிறப்பு பொருட்களும் சேர்ந்து எறியப்படலாம்.

விக்ரோலி தாண்டி வருகிற வித்யவிகாரில் கல்லூரி  கூட்டம். பெரிய பூவில் மொய்க்கிற  ஈக்கள் போல ஜீனியர், சீனியர்  மற்றும் மேனெஜ்மெண்ட் கல்லூரிகளின் ஆண், பெண் மாணவ, மாணவிகளின் கூட்டம்.

அவனின் பிளிறல்  ஆரம்பமாகும். ஆள் பார்த்து கமெண்டோடு பிளிறுவான்.

“ ஏய்.. தம்பி.. கவனமாயிருப்பா.. இந்த சிவப்பு சுடிதார். போன  வாரம்.. இன்னொத்துனுக்கு  முக்குல முத்தம் கொடுத்திட்டிருந்தா.. “

“ என்னம்மா.. நீலக்கலர்  சன்னியா சோலி.. (*) .. ரொம்ப  டல்லாயிருக்க.. அதுவா.. [ மூன்று விரல்களை காட்டுவான்] “

ரயிலின் சக பயணிகள்  சில நேரம் அவனிடம் சவால்  விடுவதுண்டு. எல்லா சவாலுக்கும் ஏதாவது ஒரு பெட்டிங் இருந்தது.

“ ஏய்.. சாலா.. காட்கோபர்  ஸ்டேசனுக்கு முன்னாடி.. அந்த ப்ராத்தல் வீடு வர்றதுல்ல.. அதுல யாருக்கும் அடிபடாமா.. சன்னல் வழியா.. இதை தூக்கி போட முடியுமா.. “

சின்ன கல்லோடு, ஆணுறைத்தாளும்  தரப்பட்டது. நூல், சின்ன கல், அதை சுற்றி தர்மாக்ஸ் பொட்டலம், அதன் மேல் ஆணுறை எல்லாம்  சுற்றப்பட்டு, குறிபார்த்து அடிக்க மிகச் சரியா அது  சன்னலில் அடித்து, அங்கே  சுற்றிக்கொண்டு சத்தம் எழுப்பியது. சத்தம் கேட்டு ஒரு மத்திய வயது பெண்மணி சன்னல் வழியே பார்க்க, ரயில் டப்பாவே ஹோவென கத்திற்று.

“ யே. லவுண்டி.. நேத்திக்கு நான் யூஸ் பண்ணின பாக்கெட், மறந்துட்டு வந்துட்டேன்.. “ என்று எறியச் சொன்னவன் கத்த, அவள் புடவை தூக்கி கெட்ட வார்த்தை பொழிந்தாள். இடுப்பு முன்னும், பின்னும் ப்யங்கரமாய் ஆட்டியபடியே அவளின் வசவுக்கு எறியச் சொன்னவன் எதிர்ப்பாட்டு பாடினான்.  தன் குறி தப்பாததில் அம்பார்நாத்வாலவுக்கு ரொம்பவே குஸியாகிவிட்டது.

எறியச் சொன்னவன், அந்த வெள்ளிக்கிழமை செளபாட்டி  ஹோட்டலில் தண்ணி வாங்கிகொடுத்து, கிரிஸ்டல் ஹோட்டலில் ராஜ்மா சாப்பாடு தரவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

பெட்டிங்  இல்லாமல் அவன் சந்தித்த சவாலும்  ஒன்று உண்டு. அது அவனுள் ஏற்படுத்திய அகமாற்றம்  அளவிடமுடியாது.

*

ஓருநாள், மஜீத்  ஸ்டேசனுக்கும் விடி ஸ்டேசனுக்கும்  நடுவே இரயில் மெல்ல போய்க்கொண்டிருந்த  போது, ஒரு மத்திய வயது சிறுவன் தனது ட்ரவுசரை அவுத்து, பெண் பெட்டியின் முன்னால் தனது மேல் தோல் சீவப்பட்ட குறியை முன்னும், பின்னும் இழுத்து காட்டினான்.

எப்போதாவது  இது போல் நடக்கும் செய்கைகள்  பயணிகளுக்கு அதிர்ச்சி  கொடுப்பதில்லை. மூக்கை பொத்திக்கொண்டோ, முகத்தை திருப்பிக்கொண்டோ, மனதை மூடிக்கொண்டோ நடக்க மாநகர ரயில் எல்லோரையும் பழக்கப்படுத்தியிருக்கிறது.

ஆனாலும் அந்த சிறுவன் அதை தினமும்  செய்தான். தொடர்ந்து செய்தான். ஓவ்வொரு நாளும் கூடும் அடர்த்தியான  வன்மத்தோடு செய்தான். நிறைய பேரின் அதிர்ச்சி, ஆவல், கவனம் அவனுக்கு உற்சாகத்தை கொடுத்ததோ என்னவோ..

பெண்கள் பெட்டி வரும்போது சிறுவன் கெட்ட வார்த்தைகளை பாலிவுட்டின் கிங்கான்கள் பேசுவது போலான மிமிக் குரலில் பேசிக் காட்டினான்.

ஒரிரூ நாள் சிரித்தும், பின் சகித்தும் கொண்டிருந்த  கூட்டம் மெல்ல மெல்ல சகிப்புத்தன்மை இழந்தது. இந்த மலிவான செய்கை, பெண்களுக்கு மிகப்பெரிய மன உளச்சலை, வெறுப்பை, கசப்பை ஏற்படுத்தியிருக்கும்.

மாநகர ரயில்  எப்போதும் வெறும் இரும்பல்ல. அதற்கு மற்றவர்களின் மனச் சங்கடத்தை ஓரளவு கடத்தும் மென் கடத்தியும் கூட. எங்கள் பெட்டிக்கு பக்கத்திலிருந்த  பெண்களின் சங்கடம், மன அவஸ்தை எங்களுக்கு புரிந்தது. சில  பெண்களில் கண் பயம் கூட எனக்குத் தெரிந்தது.

பாசை கொச்சை, மற்றும் படிப்பின் காரணமாய் எதுவும் பேசமால் இருக்கும்  நான் அன்று, அதுவரைக்கும் இல்லாத வகையில் தன்னிலை இழந்து அவனை நோக்கி, ரயில் சத்தம் நோக்கி கெட்ட வார்த்தையால் திட்டினேன்.

~ ஹோய்.. கெட்  இன்.. சாந்தியார். [ அமைதி.. அமைதி..] ~ என்று அம்பர்நாத்வாலா என் தோள் தட்டிச் சொன்னது ஆறுதலாய் இருந்தது.  

அடுத்த சில நாட்கள் அம்பர்நாத்வாலா அவனை திட்டிப்பார்த்தான். பின்பு கொஞ்சம் கடினமாய திட்டிப் பார்த்தான். சில நாட்களுக்கு மிரட்டிப் பார்த்தான்.

ஓன்றும் பலனளிக்காது  போகவே, அவனுக்காக சிறப்பான சின்ன கல்லும், அதன் நுனியில் முட்கள் நிறைந்த செடியும் சுற்றப்பட்டு தயாரானது. ஒரு வெள்ளிக்கிழமை சுபதினம் சுருக்கென்று எறியப்பட்ட கல்லின் சத்தம் வீடி வரை கேட்டுக் கொண்டேயிருந்தது. ஒரு அடிப்பட்ட சொறிநாயின் பிளறல் போல இருந்த்து.

அடுத்த நாட்களில், பெண்கள் டப்பாவிலிருந்து  ஓரிரு மத்திம வயது பெண்கள்  அம்பர்நாத் வாலாவுக்கு நன்றி  சொன்னார்கள்.

மறுநாள் அவனது ரயில் பயணத்தின் நாமாவளி எந்த குந்தகமும் இல்லாமல் தொடர்ந்தது.

விக்ரோலியில் கால் செண்டர் கேலி, கல்லெறிந்து  பழகுதல், காட்கோபரில் குஜராத்திகள் பற்றி கேலி, வித்யாவிகாரில் கல்லூரி பெண்களிடம் கேலி, சயானில் ட்ராக்கில் செம்போடு முகம் மூடி உட்கார்ந்திருப்பவர்களை அண்ணா.. என்று அழைத்து கேலி, பின்பு தாதரிலிருந்து மஜ்ஜீத் வரை உள்ளே உட்கார்ந்திருப்பவர்களை, அன்றைய செய்திகள் வைத்து கேலி,  வீடி ஸ்டேசனில் தலைவாரிக்கொண்டு பொட்டு வைத்து பயபக்தியாய் வேகமாய் அலுவலகம் ஏவுதல் –  என்று அவன் வழக்கம் தொடர்ந்தது.

அவன் எந்த பெட்டிங்கும் இல்லாமல் செய்த  காரியம். மற்றவருக்காக நல்லது செய்கிற காரியத்தினால்  உள்ளத்தில் உடையும் தேன் கூட்டின் சுவையை அவன் உணர்ந்திருக்கலாம். அது எந்த பெட்டிங்கின் மலிவான விலையை விட எவ்வளவு உயர்ந்தது என்று அநுபவித்திருக்கலாம்.

ஆக, மற்றவர் வந்து சொன்ன அந்த நன்றி – அவனுக்குள்ளே நிறைய மாறுதல்களை விதைத்தது என்றுதான் சொல்ல தோன்றுகிறது.

*

இன்னொரு நாள், என்னைப் போலவே, ஒரு புதிய ஆள் ஏறினார். வயது நாற்பத்தைந்து – ஐம்பதிருக்கலாம்.

வயதை குறைக்கும் இளமையான மெலிந்த கட்டு  உடல். பின்பக்கம் வெட்டிய  முடி, சின்னதாய் ட்ரீம் செய்யப்பட்ட  மீசை. நுனி முறுகியிருந்த்து. சப்பாரி மாதிரியான உடை. விரைப்பாய் ஊன்றி நின்ற  கால். பாலீஸ் செய்யப்பட்ட  ஷூ. வாசலில் நின்றபடியே பயணம் செய்தார்.

அம்பர்நாத்வாலாவின்  லீலைகள் அவருக்கு பதற்றம்  கொடுத்தன. அவரும் என்னைப் போலவே பதற்றப்பட்டது எனக்கு வேடிக்கை பொருளாயிருந்தது.

“ உள்ள வாங்க தம்பி  “ என்று அவர் சொல்ல, ஆகா இன்னொரு குருவி சிக்கிருச்சு.. என்று எங்கள் டப்பாவில் சந்தோசம்.

புதுப் பதற்றங்களை பார்த்து, அம்பர்நாத் வாலாவுக்கு அதிக குஸீயாகும். அதிக குஸீ, அதீத குரங்குச் சேட்டைகள். வித்தைகள். அன்று அதிக பேச்சு, அதிக வித்தைகள். முலூண்டிலிருந்தே அவனது நிகழ்ச்சி ஆரம்பமாயிற்று. பேச்சும்.

“ லைப்ல பயம் கூடாது சார்.. பம்பேயில.. இருந்துட்டு  பயம்னா.. எத்தனை கிலோ.. “

“ எல்லோரும் சாகத்தான போறோம்.. என்ன பயம் வேண்டியிருக்கு.. “

“ சார் நான் வந்தா.. வண்டிக்கே உயிரு சார்.. “ [அமிதாப்பச்சன் குரலில்]

பேச்சு. சீண்டல்  பேச்சு.. அவரும் ஏதோ சொல்லிக்கொண்டே வந்தார்.

“ஏன்பா.. இந்த குரங்குத்தனம்.. “ அந்தப் புது ஆள் கேட்டார்.. ஓவ்வொரு முறையும் அவரின் பயமும், குரலில் எதிர்ப்பும் கூடிக்கொண்டே வந்த்து. சில நேரம் கழித்து, எக்கேடு கெட்டு ஓழி என்று மெளனமாய் இருந்தார். அப்போதும் அம்பர்நாத்வாலேவே ஏதாவது பேசி அவரை இழுப்பான்.

இந்த விளையாட்டு எனக்கு பரிச்சியமானது. என் மீது விளையாடப்பட்டது. அது இன்னொருத்தரின் மீதும் விளையாடப்படும் போது அதன் ஓவ்வொரு அசைவையும் ரசிக்க முடிந்தது.

“ இது என்ன சார்.. இப்ப பாருங்க.. அங்க என்ன வருது.. “

எதிர்முனையிலிருந்து இன்னொரு வேக ரயில் வந்து கொண்டிருந்த்து.

“ ஏ.. ட்ராயின்ரா.. பாஸ்ட் ட்ராயின்ரா.. “ அந்த ஆள் வேக வேகமாய் படபடத்தார்.

“ அதுனால.. என்ன .. “  சொல்லிக்கொண்டே தொங்கினான். ரொம்பவே தொங்கினான். எங்களை அறியாமல் நாங்கள் எல்லோரும் வாசலிருந்து இன்னும் எங்களை உள்ளே அழுத்திக்கொண்டோம்.

இன்று அவன் விளையாடுவது நிலையாக நிற்கும் போஸ்ட் கம்பம் இல்லை. இரண்டுமே வேகமாய் நகரும் ஜந்துக்கள். அவன் சமாளித்து விடுவான் என்றாலும், மெலிதான பயத்தோடும், ஆர்வத்தோடும் அந்த கடைசி விநாடிக்காக எதிர்பார்த்துக்கொண்டிருந்தோம்.

நாங்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம் என்பதை அறிந்து அவனின் முகம் அஸ்ட கோணாலாக்கி எங்களை மேலும் குஸிப்படுத்திக்கொண்டிருந்தான்.

எதிர்வண்டி பக்கத்தில் வர, வர, புது ஆளின் பயம் உச்சத்தை தொட்டது. அவரின் முகம் எனது பழைய முகத்தை எனக்கு ஞாபகப்படுத்தியது.

பதிவுபோல சடக்கென்று கடைசி விநாடியில் உள்ளே  உடம்பை இழுத்தான். ரொம்ப கீழிறிந்து எழும்பி வந்ததால், உள்ளே வந்துவிட்டாலும் நடுவில் நின்றிருந்த, பிடித்திருந்த கம்பியில் தலை மோதிக்கொள்ள வேண்டியிருந்தது. அந்த அதிர்ச்சியில் அவன் இலேசாய் ஆட, சுற்றியிருந்தவர்கள் பிடித்துக்கொண்டார்கள்.

சுற்றியிருந்தவர்களுக்குத்தான் அது அதிர்ச்சி.. அவன் ரொம்ப  அமைதியாகத்தானிருந்தான். அதே கேலிகள், அதே வார்த்தைகள்.. நாங்கள் சகஜ நிலைமைக்கு திரும்ப, புது ஆள் பேய் அறைந்தது போலாகிவிட்டார்.

“ உசுருன்னா, உனக்கு மசுராடா.. “ ரொம்ப நேரம் கழித்து அமைதியாய் கேட்டார்.

“ யே. பெரிசு.. என்ன பயந்துட்டியா.. இதெல்லாம்  பெரிசேயில்லைப்பா.. “ என்று  மராத்தியில் அவரை ஏளனமாய் பேச ஆரம்பித்தான்.

அவர் அமைதியானார். வீடி ஸ்டேசன் வரைக்கும்  எதுவும் பேசவில்லை. கொஞ்சம்  கூட்டம் குறைந்து நாங்கள்  எல்லோரும் வீடியில் இறங்கும்போது, அம்பர்நாத்வாலைவை பிடித்து தனது ஸீவை கழட்டி பளீரென்று  அடித்தார்.

“ உன் உசுரு முக்கியமில்லைன்னா, சூ.. யா, கசாப்பை கொண்ணுட்டு சாகேன்டா.. “ கத்தினார்.

நாங்கள் விலக்கிவிட்டி, அவரை திட்டி, இவனை சமாதானம் செய்து அனுப்பி வைத்தோம்.

*

வெளியூர் பயணம், மாற்றம்  அது, இதுவென சுழன்று, திரும்ப  இப்போதுதான் வரமுடிந்தது. அதே வண்டி. அதே பெட்டி, அதே விவாதம் – ரொம்ப நாள் கழித்து பழைய நண்பர்களை பார்த்து, நிறைய விசயங்களை சுடச்சுட விவாதிக்க, வாழ்க்கை திரும்பிற்று.

விக்ரோலி வந்த பிறகுதான்  தெரிந்தது, அம்பர்நாத் வாலா ரொம்ப நாளாக அங்கு வரவில்லையென்று.

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.