வேதியியல் வரலாற்றில் இன்றியமையாத ஒரு முக்கியக் கண்டுபிடிப்பு

4

 

தேமொழி

இதுவரை உலகில் 120  தனிமங்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஆனால், இத்தனிமங்கள் அனைத்தையும் தனித்தனியாக அவற்றின் பண்புகளை அறிந்து நினைவில் கொள்வது கடினம்.

இதற்கு உதவுவது தனிம வரிசை அட்டவணை. தனிம வரிசை அட்டவணையில்,  தனிமங்களை  அதன் பண்புகளின் அடிப்படையில் தொகுதிகளாகப் பிரித்து அட்டவணையாக வரிசைப்படுத்திய விதம் தனிமத்தின் வேதியியல் பண்புகளை நினைவில் நிறுத்திக் கொள்ள உதவுகிறது. தனிம வரிசை அட்டவணையானது மனிதகுலம் உருவாக்கிய, மனித குலத்தின் அறிவாற்றலைக் காட்டும் ஒரு ஈடு இணையற்ற படைப்பாகும்.

 

 

டோபரின்னர், ஜான் நியூலேண்ட், லோதர் மேயர் போன்ற அறிவியியல் அறிஞர்கள் தனிமங்களின் பண்புகளை அடிப்படையாகக்கொண்டு அவற்றை வரிசைப்படுத்த முயன்றுள்ளனர்.  ஆனால், ரஷ்ய வேதியியல் அறிஞர் ‘டிமிட்ரீ மெண்டலீயா’ (Dmitri Mendeleev) என்பவர் 1871ஆம் ஆண்டில் உருவாக்கிய தனிம வரிசை அட்டவணை அனைத்தையும் விட மிகச் சிறப்பானது.

மெண்டலீயா தனிமங்களை அவைகளின் அணுநிறைகளின் அடிப்படையில், குறைந்த அணுநிறையிலிருந்து அதிக அணுநிறை உள்ள தனிமங்களை இடமிருந்து வலமாக (நாம் எழுதுவதுபோல) அட்டவணைப்படுதினார். அவர் அவ்வாறு வரிசைப்படுத்தி ஆராய்ந்த பொழுது, வரிசையில் ஒத்த தன்மை இல்லாத தனிமங்களுக்கு இடையில் வெற்றிடம் விட்டு  அங்கு  இடம்பெற வேண்டிய பண்புகளையுடைய  தனிமங்கள் இனிமேல்தான் கண்டறியப்பட வேண்டும் என நிர்ணயித்தார். இதுதான் மிகவும் ஆச்சரியகரமான அறிவியியல் கண்டுபிடிப்பு. 

 

Mendelejevs_periodiska_system_1871

 

இவ்வாறு வெற்றிடங்களில் இடம் பெற வேண்டிய தனிமங்கள் என அவர் குறிப்பிட்டவை  அவர் அட்டவணையைத்  தயாரித்த காலத்தில் கண்டறியப் பட்டிருக்கவில்லை. எனினும்,  இன்னமும் கண்டறியப்படாத அந்த தனிமங்களின் பண்புகளை அட்டவணையில் அவை இடம் பெற்ற இடத்தினையும், அருகே சூழ்ந்திருக்கும் மற்ற தனிமங்களின் பண்புகளையும் அடிப்படையாகக் கொண்டு யூகிக்க முடியும்.  இதுவே இவரது தனிம அட்டவணையின் சிறப்பிற்குக்  காரணம்.

அவ்வாறு தனிம அட்டவணையில் இடம் பெற வேண்டிய தனிமங்களின்  இடத்தினை  கருத்தில் கொண்டு, அவற்றின் பண்புகளை யூகித்து  சில தனிமங்களை  ‘எகா  அலுமினியம்’ (அலுமினியத்தின் பண்பினை ஒத்தது), ‘எகா சிலிக்கான்’ (சிலிக்கானின் பண்பினை ஒத்தது)  என்று குறிப்பிட்டார்.  ஆனால் அது போன்ற பண்புகளைக் கொண்ட தனிமங்கள் அப்பொழுது கண்டறியப் பட்டிருக்காவிட்டாலும், பிற்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பொழுது மெண்டலீயா யூகித்தது போன்றே அவற்றின் பண்புகளும் இருந்தன.

மெண்டலீயா 1871 ஆம் ஆண்டு எகா  அலுமினியத்தின் பண்புகளைக் குறிப்பிட்டார். அதன் பிறகு 1875 ஆம் ஆண்டு ஃபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ‘பால் எமிலி லெகாக் டி பாய்ஸ்பவுட்ரன்’ (Paul Emile Lecoq de Boisbaudran) ‘காலியம்’ (gallium) என்ற தனிமத்தைக் கண்டுபிடித்தார். ஃபிரான்ஸ் நாட்டினைக் குறிக்கும் ‘கால்’ (Gaul) என்ற சொல் இந்தப் பெயரினையிட அடிப்படைக் காரணமானது. இந்த தனிமத்தின் பண்புகள் அலுமினியத்தைப் போன்றே இருக்கிறது.  காலியத்தைத் தவிர ஸ்கேண்டியம், ஜெர்மானியம், ரேனியம் ஆகிய தனிமங்களின் பண்புகளையும் அவைகளைக் கண்டுபிடிக்கப்படும் முன்பே மெண்டலீயா குறிப்பிட்டு விட்டார். 

மெண்டலீயா ‘எகா மாங்கனீஸ்’ எனக் குறிப்பிட தனிமம் பிறகு கண்டுபிடிக்கப்பட்டு அதற்கு ‘டெக்னீடியம்’ என்று பெயரிடப்பட்டது. டெக்னீடியம் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு 1937, அதாவது மெண்டலீயா அத்தனிமத்தின்  பண்புகளை குறிப்பிட்ட பின்பு ஏறத்தாழ 70 ஆண்டுகளுக்குப் பிறகே, அவர் இறந்து 30 ஆண்டுகளுக்குப் பிறகே கண்டு பிடிக்கப்பட்டது.

நோபெல் பரிசுகள் கொடுக்க ஆரம்பித்த ஆரம்ப ஆண்டுகளில், 1907 ஆம் ஆண்டு மெண்டலீயா இறந்துவிட்டதால் அவரது கண்டுபிடிப்புக்கு நோபெல் பரிசு கிடைக்காமல் போனது. ஆனால், 1955 ஆம் ஆண்டு கலிஃபோர்னியா பெர்க்லி பல்கலைக்கழகம் (University of California, Berkeley) உருவாக்கிய, அணுஎண்  101 ஐக் கொண்ட தனிமத்திற்கு மெண்டலீயாவினைப் போற்றும் விதமாக மெண்டலீயம் (mendelevium) எனப் பெயரிடப்பட்டது. இந்த கெளரவம் நோபெல் பரிசை விட உயர்ந்தது. இதுவரை நோபெல் பரிசை 800 க்கும் அதிகமானவர் பெற்றிருக்கிறார்கள். ஆனால், தனிம வரிசை அட்டவணையில் இடம் பிடித்த அறிவியியல் அறிஞர்கள் 15  பேர்கள் மட்டுமே, அவர்களில் மெண்டலீயாவும்  ஒருவர்.

 

Periodic_table

 

mendaleviyam

 

இவர் பிறந்த ரஷ்யாவில் இவரைப் போற்றும் வண்ணம் பல பல்கலைக் கழகங்களின்  ஆராய்ச்சிக் கூடங்களுக்கு மெண்டலீயாவின் பெயர் சூட்டப் பட்டுள்ளது.  ‘மெண்டலீயா தங்கப் பதக்கம்’ என்ற பரிசும் 1962 ஆம் முதல் சிறந்த அறிவியியல் அறிஞர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

___________________________________________________

ஆதாரம்: TED Ed – The genius of Mendeleev’s periodic table

படம் உதவி:
http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/c8/DIMendeleevCab.jpg/427px-DIMendeleevCab.jpg
http://upload.wikimedia.org/wikipedia/commons/5/55/Mendelejevs_periodiska_system_1871.png
http://upload.wikimedia.org/wikipedia/commons/8/84/Periodic_table.svg

 

 

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “வேதியியல் வரலாற்றில் இன்றியமையாத ஒரு முக்கியக் கண்டுபிடிப்பு

 1. அன்புமிக்க தேமொழி

  சிறந்த தமிழ் நடையில் உயர்ந்த ஓர் அறிவியல் கட்டுரை.  பாராட்டுகள்.

  சி. ஜெயபாரதன்

 2. உங்கள் கருத்துரைக்கு நன்றி ஐயா.
  அறிவியல் கட்டுரைகள் பல எழுதும் உங்களிடம் இருந்து பாராட்டு கிடைத்தது பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது.
  மீண்டும் வணக்கத்துடன் என் நன்றியையைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
  அன்புடன்
  தேமொழி

 3. நல்வரவு. நல்லதொரு விஞ்ஞான தமிழ். மெண்டெலெவ் அவர்களை சிறப்பிக்க கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு ஆயிற்று. அன்னை க்யூரி அம்மையார் தன் தாய்நாட்டை சிறப்பிக்கும் வகையில் ‘பொலோனியம்’ என்று தான் கண்டுபிடித்த தனிமத்துக்கு பெயர் வைத்தார். நேரம் கிடைத்த போது லீனியஸ் பட்டியலை பற்றி எழுதுங்கள். பட்டியல் அமைப்பதில்  (டேபுலேஷன்) பல நுணுக்கங்கள் உளன. நான் டால்டன் டேபிள் காலத்தவன்.
  தேமொழிக்கு என் வாழ்த்துக்கள். 
  ஆசிரிய பெருமகள் பவளசங்கரியே. இதையெல்லாம் இளைய சமுதாயம், மாணவ சமுதாயம் அறிய வகை செய்யவும். நான் தொலைபேசியில் சொன்னமாதிரி ஒரு புல்லட்டன் போர்டு போதும். இது உயர் பதவி ஏற்ற காளை ராஜனுக்கும் என் வேண்டுகோள். அவருக்கு இதை அனுப்பவும், ஆசிரியரே.
  இன்னம்பூரான்

 4. பெருமதிப்பிற்குரிய இன்னம்பூரான் ஐயாவிற்கு,
  உங்கள் வரவேற்பிற்கும், பாராட்டுரைக்கும் என் பணிவான நன்றிகள், லீனியஸ் பட்டியலை எழுத வேண்டும் என்பதையும் குறிப்பில் கொள்கிறேன்.

  அன்புடன்
  தேமொழி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *