திவாகர்

இளவரசி எழிலினியின் கனவு நினைவாக நிறைவேறும் காலம் கனிந்து வருவதைக் கண்ணாரக் கண்டாள்.

ஆகா.. மகாராஜா கூடிய விரைவில் மண்டையைப் போட்டுவிடுவாரென்று முதன் முதலாக அவள் நெஞ்சிலே தோன்றியது… இது நடக்காது என்றல்லவா இத்தனை நாள் நினைத்திருந்தோம்.. இது கனவாக இருக்கப் போகிறதா என்று எத்தனையோ முறை குழப்பத்தில் கிடந்தோமே.. இப்போதைக்கு இந்த மகாராணி என்கிற பட்டம் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் அவள் இழந்துகொண்டே இருந்தது கூட வாஸ்தவம்தான். ஆனால் அவள் நம்பிக்கை வீண் போகவில்லை என்றுதான் அவள் உள்மனது சொல்லியது. நன்றாக இளமை உற்சாகத்துடன் ஓடிக் கொண்டிருந்த மகாராஜா தன் கடை மூச்சு எப்போது விடலாம் என்றுதான் கடந்த இரண்டு நாட்களாக படுத்துக் கிடந்ததாக அவள் மனதுக்குப் பட்டது. முதல்நாளே மருத்துவர்கள் நம்பிக்கையில்லாமல் முகத்தை மிகக் கோரமாக காண்பித்துக் கொண்டிருந்தது எழிலினியை மேலும் மகிழ்ச்சியில் மூழ்கடித்தது.  எப்போது அந்தத் தருணமோ.

எத்தனை அழகான நாடு, மரகதமலைத் தேசம் என்றாலே எத்தனையோ நாடுகள் நினைத்த மாத்திரத்தில் பொறாமை படுமே.. எத்தனை செல்வ வளம், ஆனாலும் எல்லோரும் தோழர்களே என்பதால் இந்த நாடு நடுநிலையாக இருப்பதை அந்த எல்லோருமே விரும்புகிறார்களே, இப்படிப்பட்ட நாட்டுக்கு இன்னமும் பட்டத்து இளவரசியாகத்தான் தான் இருப்பதா.. நினைக்க நினைக்க எழிலினியின் மனம் வெதும்பியது.

மகாராணியின் கிரீடத்து  வைர ஜொலிப்பு ஒன்றே போதுமே.. பளீரென ஒளி பட்டு பார்ப்பவரையெல்லாம் பரவசமாக்கி, ஆஹா.. எத்தனை அழகானது.. உலகத்திலேயே உயர்ந்த வகை வைரக் கற்களால் பதிக்கப்பட்ட கிரீடத்தின் மேல் பகுதியில் நீலமும், கீழ்பகுதியில் பச்சை மரகதமும் பதித்து நடுவில் மாணிக்கக் கல்லும் சேரும்போது அதன் ஒளி வீச்சு எல்லோரையும் கொள்ளை கொள்ளுமே.. ஆஹா.. ஒருநாள்..ஒருநாளாவது.. அதை அணிந்துகொள்ளும் வாய்ப்பு இதுவரை கிடைக்கவில்லையே.. நான் ஆசைப்பட்டது எனக்கு வேண்டாதது இல்லையே.. எனக்குச் சொந்தமானதுதானே.. நியாய தர்மங்கள் படித்த அறிஞர்கள் சொன்னதுதானே.. ஒருநாள் இல்லையென்றால் ஒருநாள் நான் அணிந்துகொண்டே தீரவேண்டியதுதானே.. அந்த நாள் எப்போது வரும்.. அல்லது வரவே வராதா.. இந்தக் கிழவி போட்டுக்கொண்டு வந்தாலே இத்தனை களை தருகிறதே.. தான் அணிந்து வரும்போது ஆகாயத் தேவதை வருவது போல தோற்றம் தராதா என்ன?

அதைத் தான் தரிக்கும்  வாய்ப்பு இதுவரை நழுவிக்கொண்டே  போய்கொண்டிருக்கிறது.. இந்தக் கிரீடத்தைத்  தன் தலையில் பார்க்கும்போதெல்லாம் இந்த மருமகளுக்குதான் எத்தனை பொறாமை என்று இந்த மகாராணி கேவலமாக தனியே அந்தக் கிழத்தோழிகளிடம் சொல்லிக் கொள்வதும் அவளுக்கு நன்றாகவே தெரியும். ஆனாலும் இதற்கெல்லாம் ஒரு வரம்பு வேண்டாமா.. ஆசைப்படுவது யார், தன் சொந்த மருமகள்தானே.. அடுத்த பட்டத்துக்கு உரியவள்தானே.. இவளுக்கு உரிமை இல்லையா என்ன.. கடவுளே.. இதையெல்லாம் இவர்களுக்கு எப்படி எடுத்துச் சொல்வது.. ’நீ இதுவரை அனுபவித்தது போதும்…. இனிமேலும் அனுபவிக்க ஆசைப்படுவதும் பாவம்’ என்று எப்படி புரியவைப்பது..

சென்றமுறை கூட தனிமையில்  இருக்கும்போது தன் கணவனான பட்டத்து இளவரசரிடம் கண்டிப்பாகச் சொல்லி இருந்தாள். ’உங்கள் தந்தையிடம் நீங்களே சொல்லும் விதத்தில் எடுத்துச் சொல்லுங்கள். உங்களுக்கும் வயது ஏறிக்கொண்டே இருக்கிறது. அதனால் கிழம் ஓய்வு எடுத்துக்கொள்ளட்டும்.. போதும் அவர் இதுவரை ஆண்டது..’.

இப்படிச் சொன்னவுடன் கணவன் கிண்டலாகச் சிரித்துக் கொண்டே சொன்னது இன்னமும் நினைவில் இருந்தது.. ”நேற்றுதான் இதை என் தம்பிகளிடமே கேட்டேன். இன்னும் எத்தனை நாள்தான் அப்பா இப்படியே இருப்பார்? மகாராசாவின் சிம்மாசனத்தில் அமர எப்போதுதான் எனக்கு சந்தர்ப்பம் கிடைக்குமோ என்றேன்.. அதற்கு என் பெரிய தம்பி என்ன பதில் சொன்னான் தெரியுமா?”

எழிலினிக்கு தன் மைத்துனர்களைப் பற்றி நன்றாகவே தெரியும்.. எல்லோருமே சுயநலக்காரர்கள்தான்.. இருந்தாலும் கணவனைக் கேட்டு வைத்தாள். “என்ன சொன்னான்?”

‘அண்ணா! கனவு காண்பதை முதலில் விட்டுவிடு.. அப்பா சிம்மாசனத்தை விட்டுக் கொடுப்பாரா?.. அவருக்கு ஆயுசு மகா கெட்டி.. பூரண ஆயுசு ’வேத நூல் பிராயம் நூறு.. மனுசர்தாம் புகுவார் எனினும்’ என்று ஒரு ஆழ்வார் பாடியிருக்கிறார். அதனால் சொல்கிறேன்.. அப்பாவாவது மேலே போவதாவது.. ஹூம்..’

நடந்ததை வெறுப்போடு சொன்ன தன் கணவனை வருத்தமாகத்தான் பார்த்தாள் எழிலினி. அவனைச் சொல்லிக் குற்றமில்லை. தனக்கு வாரிசு உருவாக வாய்ப்பில்லை என்று மருத்துவர்களிடம் அறிந்ததிலிருந்து கொஞ்சம் வாழ்க்கையை வெறுத்து விட்டானென்று அவளுக்குத் தெரியாதா என்ன.. இந்தத் தம்பிகளும் இந்த விஷயம் தெரிந்து அண்ணனுக்குப் பிறகு எப்போதாவது தனக்கும் ஆட்சி கிடைக்கும் என்ற பேராசையோடு இருப்பதும், அதற்கு ஆலாய்ப் பறப்பதும் தெரியும்.. இது எந்த நாட்டிலும் சகஜமாக இருப்பது.. அதனாலென்ன.. மூத்த இளவரசன் அப்பா இருக்கையிலே ஆட்சிப் பொறுப்பேற்பதில் ஒரு தவறும் இல்லையே.. எத்தனை நாள் இப்படியே தனக்கு வாரிசு வராதே என்ற கவலையில் மூழ்கி, மற்றவர்களையும் வெறுப்பேற்றுவது.. இளவரசனுக்கு வேண்டுமானால் ஆட்சிப் பொறுப்பேற்க மனம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவன் மனைவியான தனக்கு அந்தப் பொறுப்பேற்று மகாராணி என்கிற பட்டத்துக்கு ஆளாக பரிபூரண உரிமை உண்டே.. வைரக் கிரீடத்தின் ஒளிபாய்ச்ச மாபெரும் சபை நடுவே தான் நடந்து செல்வது எப்போது.. தன் கணவருக்காவது தன் மனைவியை வைரக்கிரீடம் அணிவித்துப் பார்க்க ஆசை எழ வேண்டாமா? இளவரசனுக்கு தன் மனைவியின் ஆசையை நிறைவேற்றும் பொறுப்பு வேண்டாமா.. வாரிசு தனக்கு இல்லை என்பதில் அவளுக்கும் ஏகப்பட்ட வருத்தம் இருந்தாலும், தனக்கே உரிமையான கிரீடத்தின் மகிமையை அனுபவிக்காமல் தடுக்கும் உரிமை தன் கணவனுக்குக் கூட இல்லை..

அப்போதுதான் அந்த செவிக்கினிய  செய்தி வந்தது. மகாராஜா தன்னை ஒருமுறை மிக அவசரமாக பார்க்க விரும்புவதாக தாதிப்பெண் சொல்லியதும் விஷயம் தெளிந்து தலைப்பால் வாயைப் பொத்திக் கொண்டுதான் எழிலினி கிளம்பினாள். கடைசியாக ஒருமுறை பார்க்க விரும்புகிறார்.. பார்க்கட்டும் பார்க்கட்டும், எத்தனைதான் உள்ளுக்குள் ஆசை இருந்தாலும் அதை வெளியே காட்டிக் கொள்ள முடியுமா.. கூடாதுதான்.. சோகத்தைத் தன் முகத்தில் வேண்டுமென்றே ஏராளமாகத் தேக்கி வைத்துக் கொண்டே அந்த அறைக்குள் நுழைந்தாள்.

மகாராஜாவின் நிலைமைதான் சரியில்லையே.. ஆனால் இந்த மகாராணி, சந்தர்ப்பம் தெரிந்து செயல்படவேண்டாமோ.. கணவன் சாகக்கிடக்கும்போதும் அங்கே தன் தலையில் வைரக்கிரீடம் ஒளிபாய்ச்ச வேண்டுமென்றே அதை தன் நெற்றியில் இன்னமும் சற்று தூக்கி வைத்தாற்போல தன் கையால் சரி செய்து கொண்டு, யார் எக்கேடு கெட்டால் எனக்கென்ன என்ற வகையில் இருக்கிறாளே.. ஆனால் முகத்தை மட்டும் உம்’மென்று வைத்துக் கொண்டு நடிக்க மட்டும் நன்றாகவேத் தெரியும்..

எழிலினிக்கு எரிச்சல்தான் வந்தது. ’இப்போது, அதுவும் இந்த சோகமான வேளையில் இது தேவைதானா.. சமயசந்தர்ப்பம் என்பது கிடையவே கிடையாதா.. இங்கு என்ன சபையா நடக்கிறது.. நாட்டியம், நாடகக் காட்சிகள், புலவர் மேடை என சந்தோஷக் களையிலா நாம் இருக்கிறோம்.. மகாராஜா பாவம்.. அவர் கடைசிக் காலத்தில் எல்லோரையும் பார்க்க நினைக்கிறாரே என்ற ஒரு இங்கித ஞானம் வேண்டாமோ.. இவளெல்லாம் மகாராணியாம்.. ஆனால் இவளைப் போல நாம் நம்மைக் காட்டிக் கொள்ளக் கூடாது..

நினைத்த மாத்திரத்தில் தனக்கு வந்த கண்ணீரை முகத்தில் தேக்க வைத்துக் கொண்டே மகாராஜாவின் அருகில் நின்றாள் எழிலினி. தன்னைப் பார்த்ததும் மகாராஜாவின் முகத்தில் கருணை பொங்கி வழியத் துவங்கியதையும் கண்டாள். அது அவர் குரலிலும் தெரிந்தது. மகாராணியிடம் பேசுவது போலப் பேசினாலும் பார்வை தன் மீதே இருந்ததும் புரிந்ததால் சோகத்தை இன்னமும் ஏராளமாகக் காண்பித்தாள். தேவைப்பட்ட நேரத்தில் ஊற்றெடுப்பது போல கண்ணீர் கொஞ்சம் பெருகி அது கீழேயும் சிந்தியது. மன்னர் உருகித்தான் போய்விட்டார்.

“பார்த்தாயா மகாராணி உன் மருமகளை.. இவளுக்குக் கூட என் மீது எவ்வளவு பாசம்.. இந்தச் சின்னப் பெண்ணின் மனநிலை கூட உனக்குப் புரியவில்லையே..”

தலைகுனிந்து நின்ற மருமகளை மகாராஜா இன்னமும் அருகே வரச்சொன்னார். “இளவரசி, உன்னிடம் மறைப்பதற்கு என்ன இருக்கிறது.. மருத்துவர் இப்போதுதான் சொல்லிவிட்டுப் போனார்..”

புரிந்துவிட்டது அவளுக்கு. முகத்தில் இன்னமும் சோகம் கூட்டினாள். அதனால் கண்ணீரும் கூடியது. ஆனால் எதுவும் பேசவில்லை. ஆனால் அடுத்துப் பேசிய மகாராஜாவின் பேச்சு  அவள் தலையில் இடியாக இறங்கியது.

“அழாதே மகளே! காலையில் வைத்தியர் நன்றாகப் பரீட்சித்து விட்டாரம்மா.. நீ எந்தவித கவலையும் படவேண்டாம். என் உயிருக்கு எந்தவித ஆபத்தும் இல்லையாம். இன்னும் ஒரு மாத காலத்தில் பழையபடி உற்சாகத்தோடு என்னால் நடமாடமுடியுமாம்.. என் இதயம் எதையும் தாங்கும் மிகப் பலமான இதயமாம்”

இப்போது எழிலினி முகத்தில்  உண்மையான சோகம் படரத் துவங்கியது. அதைக் கவனியாமல் அரசர் பேசினார்.

“ஆனால் பார் மகளே.. எனக்கு இனியும் ஆட்சி செய்வதில்  அர்த்தமில்லை என்பதாகத்தான்  படுகிறது.. இந்த மகாராணியிடம் அப்படிச் சொன்னதும் அவளுக்குக் கோபம் வருகிறது. நீயாவது  நல்ல முறையில் எடுத்துச்  சொல்லி என் தலையின் பாரத்தை  இறக்கி வை மகளே!”

இளவரசியின் உள் உணர்ச்சிகள் சட்டென மாறின. அந்த ஆனந்த உணர்ச்சியால் முகம் முழுவதும் மலரத் துடித்தாலும் தன்னை அடக்கிக் கொண்டாள். மகாராஜாவின் பாரம் இறக்கிவைப்பதை விட, மகாராணியின் தலைக்கனம் குறைய அருமையான வாய்ப்பு. மேலாகக் கவலையுடன் அவரைப் பார்த்துச் சொன்னாள். “மகாராஜா, நல்ல செய்திதானே.. உங்களை மறுபடி பழைய நிலையில் பார்ப்பதே எங்களுக்கு விருப்பம். மகாராணியார் சொன்னதிலும் எந்தத் தவறும் இல்லை..”

மன்னர் முகத்தில் கோபம்  வெளிப்படையாக வந்தது.. மகாராணியைப்  பார்த்து அந்தக் கோபத்தைக்  காண்பித்தார்.

“கேட்டாயா ராணி!.. உன்னை விட  உன் மருமகள் எவ்வளவோ மேல்.. உனக்கு அந்த வைரக் கிரீடப் பைத்தியம் இன்னமும் விடவில்லை. மகாராணி என்ற கர்வம் உனக்கு அதிகம்.. ஒன்றை ஞாபகத்தில் வைத்துக் கொள்.. நான் மகாராஜாவாக இருப்பதால்தான் நீ மகாராணியாக உரிமை பெறுகின்றாய்.. நான் அந்தப் பதவியில் போடும் கடைசி ஆணை இதுதான்.. முதலில் அந்தக் கிரீடத்தைக் கழட்டித் தூரப் போடு, அல்லது இன்றிரவே உன் மருமகளிடம் கொடுத்து விடு.. நான் தீர்மானித்து விட்டேன்.. நாளையே சபையில் இளவரசருக்கு முடிசூடப்படும். இவள்தான் அடுத்த மகாராணி!..

கோபமாக வந்தாலும் தீர்மானமாக வந்த மன்னரின் பதில் எழிலினிக்கு மிக மிகப் பிடித்திருந்தது.. மகாராஜா சற்று ஆவேசமாகப் பேசி ஆணையிட்டதால் களைத்துப் போய் சற்றே கண்ணை மூடிப் படுத்தார். ஆனாலும் மன்னரின் இந்த முடிவுதான் மகாராணியின் கோப முகத்துக்குக் காரணம் என்பதும் தெரிந்தாலும் சோகத்தை முகத்தில் வைத்துக் கொண்டே வெளியேறினாள். அப்படி வெளியேறும்போது வேண்டுமென்றே ஒரு குறும்புப்பார்வையால் மகாராணியையும் அவள் வைரக்கீரீடத்தையும் ஒரு பார்வை பார்த்து விட்டு மன்னர் பார்க்காத வகையில் ஒரு புன்னகையும் வீசி விட்டுதான் சென்றாள். தன் பார்வையும் மகிழ்ச்சியும், மன்னரின் கடைசி ஆணையும் மகாராணியை மேலும் வெறுப்பேற்றும் என்றாலும் அவள் மனம் குதூகலத்தில் ஆழ்ந்து போய் விட்டது.

அந்த மகிழ்ச்சிக் கொஞ்சமும்  குறையாமல் இளவரசனை ஓடிப்போய் இறுகக் கட்டிக் கொண்டாள். ’கேட்டீர்களா இளவரசே.. இல்லையில்லை, என் இனிய மகராசா.. ஆமாம்.. இனி நீங்கள்தான் மகாராஜா, மரகதமலை மகாராஜா, நான் மகாராணி! ஆகா.. உங்கள் தந்தை பிழைத்தாலும் உங்களைத்தான் நாளைக்கு மகாராஜாவாக ஆக்க முடிவு செய்துவிட்டார்.. எத்தனை நாள் கனவு.. இன்று நிறைவேறிவிட்டது.. இன்றிரவே என் கைக்கு வந்துவிடும்.. அந்த வைரக் கிரீடம் இனி என் தலையில்தான்…” என்று இறுகக் கட்டிக் கொண்டே அவனை விடுவித்தபோதுதான் கவனித்தாள். இளவரசன் தலை தொங்கி அவள் தோளிலேயே விழுந்தது.

உடனடியாக தருவிக்கப்பட்ட மருத்துவர்  அவனைப் படுக்க வைத்துச் சோதித்தார். “இளவரசருக்கு ஏற்கனவே இதயம் பலவீனமம்மா.. எதையாவது அதிர்ச்சி தரும் செய்தியைச் சொன்னீர்களோ.. இப்படி ஆகிவிட்டதே.. இனி பிழைக்க வைக்க முடியாதம்மா.. என்ன ஒரு சோகம்.. தந்தைக்கு !”

செய்தி கேட்டதும் அனைவரும் இளவரசனைப் பார்க்க விரைந்தனர். மகாராணியும் தன் வைரக்கிரீடம் எங்கும் ஒளி பாய்ச்ச கண்ணீருடன் ஓடோடி வந்தாள்..

 

பதிவாசிரியரைப் பற்றி

6 thoughts on “வைரக்கீரிடம்

  1. நல்ல கதை. அது பண்டை காலமாக இருந்தாலும் சரி, கலிகாலமாக இருந்தாலும் சரி, ஆசை, பொறாமை இவை தான் அழிவிற்கு காரணமாயிருந்திருக்கின்றன. அதை சரியாக் சொல்லியிருக்கிறாய்.
    ஆசையே அலைபோலே நாமில்லாம் அதன் மேலே…

  2.  //வைரக் கற்களால் பதிக்கப்பட்ட கிரீடத்தின் மேல் பகுதியில் நீலமும், கீழ்பகுதியில் பச்சை மரகதமும் பதித்து நடுவில் மாணிக்கக் கல்லும் சேரும்போது //

    தட்டான் கிரீடம் செய்கையில் கற்களை மாற்றிவிட்டாரோ? :)))) கதையின் நீதி நன்றாக இருந்தாலும் திவாகர் எழுதினதா என்ற ஆச்சரியமும் வருகிறது. ஆரம்பக் கால எழுத்தாளராக இருந்தப்போ எழுதினதுனும் புரிகிறது. :)))) கடைசியில் கிரீடம் பளபளக்க ராணி ஓடிவருவது  கொஞ்சம் சிரிப்பாய் வந்தது.  ஏன்னு தெரியலை.

    இப்போதைய  உலக (?) இந்திய (?)அரசியல் நிலையைச் சொல்லும் கதைனும் சொல்லலாம். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.