Category: மறு பகிர்வு

மறு பகிர்வு

  • இப்படியும் சில மனிதர்கள்! – 5

    தஞ்​சை ​வெ. ​கோபாலன்

    சாமிநாதன் மகள் திருமணம் முடிந்து ஓரிரு மாதங்கள் ஆகியிருக்கும். சென்னை அண்ணா சாலையிலிருந்த எனது அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். காலை மணி 11 இருக்கும். அப்போது எனக்கு ஒரு டெலிபோன் கால் வந்தது. எடுத்துப் பேசினேன். யாரோ ஒரு பெரியவர் தன்னை மாம்பலத்தில் ‘தில்’ வீட்டுக்கு அருகில் வசிப்பவர் என்றும், இங்கு வந்து தில்லும் திவானாவும் மருமகளை, அதாவது சாமிநாதனின் மகளைப் படுத்தும் பாட்டை வந்து பார்த்துவிட்டுப் போகும்படியும் சொன்னார். சார், நீங்க சாமிநாதனையே வரச் சொல்லியிருக்கலாமே என்றேன். அவர் சொன்னார், இதையெல்லாம் பார்த்தா அவர் தாங்க மாட்டார். மூன்றாவது மனிதர்களாகிய நாங்களே மனம் நொந்து உங்களுக்குப் போன் செய்கிறோம் என்றால், மகளைப் பெற்றவர் மனம் என்ன பாடுபடும் என்றார். ஆம், அதுவும் உண்மைதான் என்று எண்ணிக்கொண்டு, என் மேலதிகாரியிடம் போய் ஒரு அவசர காரியமாக வெளியில் போக வேண்டியிருக்கிறது இன்று நான் லீவ் எழுதிக் கொடுத்துவிடுகிறேன் என்று சொல்லிவிட்டுக் கிளம்பினேன். அங்கு நான் மட்டும் போவது நல்லதா என்ற எண்ணம் ஏற்பட்டது. உடனே என் நண்பன் ராஜாவின் நினைவு வந்தது. அவன் என்னைவிட தடாலடியாக நடந்து கொள்வான், பயம் என்பதே தெரியாதவன், அவனைக் கூப்பிட்டுக் கொண்டு உடனே மாம்பலம் விரைந்தோம்.

    அங்கு தில் வீட்டு வாசலில் ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு நாங்கள் இருவரும் உள்ளே நுழைந்தோம். திவானாதான் எதிர் கொண்டு வந்தாள். வழக்கம் போல சாய்ந்து சாய்ந்து தேர் அசைவதைப் போல வந்து நின்றுகொண்டு, வாங்கோ, சம்பந்தி மாமாவோட ஃபிரண்டா, என்ன சங்கதி? என்றாள். ஒண்ணுமில்லை சாமிநாதன் பெண்ணைப் பார்த்துட்டுப் போக வந்தோம், அவ எங்கே என்றேன்.

    “அவ பைஷ்டை, தூரமணாள் உள்ள இருக்கா, அவளைப் பார்க்க முடியாதே” என்றாள் திவானா.

    “ஏன்? நாங்க எட்ட இருந்தபடியே பார்த்துப் பேசிட்டுப் போயிடறோம். இது என் ஃபிரண்ட் ராஜா. இவன் தங்கைக்கு சீமந்தம். அவ உங்க மாட்டுப்பெண்ணுக்கு நெருங்கின தோழி. அவ நேரிலே போய் அழைச்சுட்டு வரச் சொல்லியிருக்கா, அதனால அவகிட்டே பேசிட்டுப் போயிடறோம். கூப்பிடுங்கோ” என்றேன்.

    “அதான் சொன்னேனே. அவ கொல்லைல இருக்கா, அவளை இன்னும் ரெண்டு நாளைக்குப் பார்க்க முடியாது” என்றாள்.

    “சரி, மாமா எங்கே” என்றேன்.

    “அவர் கே.கே.நகர் வரையில் போயிருக்கார், எப்போ வருவார்னு தெரியாது” என்றாள்.

    சரி, மயிலே மயிலே என்றால் இறகு போடாது என்று கோபத்தோடு நான் வேகமாகக் கொல்லைப் புறம் போகத் தொடங்கினேன். திவானா குறுக்கே வந்து கையை நீட்டிக் கொண்டு நின்றாள். “நான் போகக்கூடாதுன்னு சொல்றேன், நீங்க பாட்டுக்குப் போறேளே, மாமாவும் ஆத்திலே இல்லை, நீங்க போயிட்டு அப்புறமா வாங்கோ, இப்போ நீங்க அவளைப் பார்க்க முடியாது” என்றாள்.

    நான் வரும் வேகத்தைப் பார்த்துவிட்டு அந்த அம்மாள் கையை விலக்கிக் கொண்டாள். இல்லாவிட்டால் என் கை அவள் மீது பட்டு அவள் மடி கெட்டுவிடும் என்ற பயம் அவளுக்கு. நான் கொல்லைப் புறம் போனேன், கொல்லை வாயில்படி தாண்டினவுடன் ஐந்துக்கு நான்கு ஒரு குளியல் அறை, அதையடுத்து ஐந்துக்கு மூன்றில் கழிவறை இருந்தது. குளியல் அறைக் கதவு ஒருக்களித்து சாத்தப்பட்டிருந்தது. நான் வந்த காலடி ஓசை கேட்டு சாமிநாதனின் பெண் கதவைத் திறந்து என்னைப் பார்த்தாள். அவள் முகம் வெளிறி இருந்தது. மாமா! என்றாள் என்னைப் பார்த்ததும் தீனமான குரலில். எனக்கு நெஞ்சை அடைத்தது, கண்கள் கண்ணீரால் நிரம்பி பார்வை மங்கியது.

    “என்னடா கண்ணு, ஏன் இங்கே வந்து உட்கார்ந்திருக்கே, வீட்டுக்குள் உனக்கு இடம் கிடையாதா?” என்றேன்.

    அதற்குள் திவானா அங்கு வந்து சேர்ந்தாள். இது என்ன அக்கிரமமா இருக்கு. நீங்கபாட்டுக்குச் சொல்லச் சொல்ல கேட்காம இங்கே வந்து அவகிட்டே பேசிண்டு நிக்கறேள். நான் மாமாவுக்குப் போன் போட்டு வரச்சொல்றேன். இதை சும்மா விடமாட்டேன் என்று மிரட்டினாள்.

    சரி மாமி, அவரையும் கூப்பிடுங்கோ. நானும் போலீசைக் கூப்பிடறேன். மருமகளை இப்படிக் கொடுமை செஞ்சா மூணு வருஷம் உள்ளே போகணும், தெரியுமா உங்களுக்கு என்றேன். திவானாவின் சுரத்து குறைந்தது. அதுக்கு இல்லை, தூரமணா இருக்கற இடத்துல வந்து ஆம்பிளைங்க பேசறது கூடாது. சாஸ்திரம் சம்பிரதாயம்னு ஒண்ணு இருக்கோன்னோ என்றாள் பணிவாக.

    ஒரு சாஸ்திரத்தையும் நான் மீறல்ல. ஒழுங்கா முறையா எங்க குழந்தையை சுகம் விசாரிச்சுட்டுப் போகத்தான் போறோம். என்று சொல்லிக்கொண்டே, நீ வெளியே வாம்மா நான் இருக்கேன் என்றேன்.

    சாயம் போன ஒரு பழம் புடவை, தலை விரிந்த கோலம், பாழ் நெற்றி இந்த தோற்றத்தில் அவள் வெளியே வந்தாள். சின்னஞ்சிறு குழந்தையாக இருந்தபோது அவளை தூக்கிக் கொண்டு கடைத்தெரு, கோயில் என்றெல்லாம் சுற்றியிருக்கிறேன். எப்போதும் சிரிப்பும், கலகலப்புமாக இருக்கும் அந்தக் குழந்தையா இது? இன்று பழைய பஞ்சாங்கத்திடம் மாட்டிக்கொண்டு திண்டாடுகிறதே என்ற நினைவு என் வயிற்றைப் பிசைந்தது.

    “என்னடா, சாப்பிட்டியா, ஏன் இப்படி ஒரேயடியா கண் குழிவிழுந்து கிடக்கறே?” என்றேன். திவானா உள்ளே போய்விட்டாள். இந்தப் பெண்ணைப் பார்த்தால் தீட்டாம்.

    பொங்கி வந்த அழுகையை அடக்கிக் கொள்ள முயன்றும் அவளால் முடியவில்லை. ஓவென்று கதறி அழுதாள். முன்பின் பழக்கமில்லாத முறையில் இவளை ஒரு கொல்லைப்புற குளியலறையில் அடைத்து வைத்திருப்பதை மூன்றாம் மனிதனான என்னாலேயே தாங்கிக் கொள்ள முடியாதபோது அந்தக் குழந்தை என்ன செய்யும். அங்கு தான் படும் பாட்டையெல்லாம் தைரியமாக என்னிடம் சொன்னாள்.

    காலையில் ஒரு டம்ளர் காப்பியை வெளியில் வைத்து எடுத்துக் கொள் என்று சொல்லிவிட்டு திவானா உள்ளே போய் கதவை தாளிட்டுவிடுவாளாம். பகல் 12 மணிக்கு ஒரு தட்டில் சோறும் அதில் மோர் ஊற்றி வெளியில் வைத்துவிட்டு, திவானா உள்ளே போய் கதவை அடைத்துக் கொண்ட பிறகு இவள் வெளியே வந்து தட்டை எடுத்துக் கொண்டு போய் சாப்பிட வேண்டுமாம். யார் கண்ணிலும் படும்படி வெளியே வரக்கூடாதாம். யாரிடமும் பேசக்கூடாதாம். இப்படி நடப்பது யாருக்கும் தெரியக்கூடாதாம்.

    குளியல் அறைக்கு வெளியே வந்தால் அடுத்த கட்டடத்திலுள்ள ஒரு ஃபிளாட்டின் வராந்தா பகுதி. அங்கு இருக்கும் ஒரு பெரியவர் திவானா வீட்டில் இல்லாத சமயம், என்ன இப்படியெல்லாம் நடக்கிறதே, நீ உன் அப்பாவுக்குச் சொல்லி அனுப்பக்கூடாதா, இல்லையென்றால் அவர் டெலிபோன் நம்பரைக் கொடு நான் போன் செய்து சொல்கிறேன் என்றாராம். வேண்டாம் அப்பா தாங்கமாட்டார் என்று என் நம்பரைக் கொடுத்தாளாம்.

    எனக்கு கோபம் தலைக்கேறியிருந்தது. ராஜாவைப் பார்த்தேன். அவன் கோபத்தில் ஆடிப்போயிருந்தான். இந்த திவானா பேயை இப்போதே அடித்துப் போட்டுவிடலாமா என்றான். வேண்டாம் பொறு என்றேன். பெண்ணை நீ வாயில்புறம் வா என்றேன், அவள் வேண்டாம் மாமியார் திட்டுவாள் என்று பயந்தாள். நீ வா, நான் இருக்கிறேன் என்று அவளை வீட்டையொட்டி இருக்கும் பாதை வழியாக வாயிற்புறம் வரச்சொன்னேன். வாசல் வராந்தாவில் அவளை உட்காரச் சொன்னேன். பயந்துகொண்டே அவள் வந்து உட்கார்ந்தாள். திவானா டெலிபோனில் யாரோடோ பேசினாள். பிறகு கோபத்தில் உள்ளே கூண்டுப்புலி போல சுற்றிச்சுற்றி வந்தாள்.

    திவானாவை மாமி இங்கே வாங்கோ என்று அழைத்தேன். வேண்டா வெறுப்பாக வந்து என்ன என்றாள். குழந்தையை நான் சாமிநாதன் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போகிறேன். அவள் குளித்த பிறகு இரண்டு நாட்கள் கழித்துக் கொண்டு விடச் சொல்லுகிறேன். இதுபோல சாக்கடை வாயிலில் பழைய சோறு சாப்பிட்டு, கொசுக்கடியில் அவதிப்பட அவளுக்குப் பழக்கமில்லை என்றேன்.

    ஏன் நாங்கள் அப்படித்தான் இருந்தோம். என் மாமியார் அந்த மூணு நாளும் அவா கண்ணுல படாம பாத் ரூமிலதான் இருக்கச் சொல்லுவா, நாங்கல்லாம் இருக்கலியா, இவ மட்டும் என்ன ஒசத்தி என்றாள்.

    உங்க காலம் வேற. நீங்க படிக்கல, பள்ளிக்கூடம்கூட போகல. இவ அப்படியா? இவ ஒரு போஸ்ட் கிராஜுவேட். உங்களுக்கு சமையல் சாப்பாடு இதைத்தவிர ஒண்ணும் தெரியாது. குழந்தை வீணை வாசிப்பா, வாய்ப்பாட்டு கச்சேரி செய்யற அளவுக்கு திறமை இருக்கு, கம்ப்யூட்டர் திறமை இருக்கு, காலேஜில இவ வாங்கியிருக்கிற பரிசையெல்லாம் இங்கே கொண்டு வந்தா உங்க வீட்டிலே இடமே இருக்காது, அவ்வளவு இருக்கு. அவளைப் போயி, வீணையைக் கொண்டு போய் குப்பையிலே எறியறமாதிரி செஞ்சிருக்கேளே, இது அநியாயமா படல. உங்க பெண்ணுன்னா இப்படிப் பண்ணுவேளா என்றேன்.

    என் பெண்ணையும் மூணு நாள் ஒதுங்கிதான் இருக்கச் சொல்லுவோம் என்றாள்.

    எங்கே பாத் ரூமிலேயா? என்றேன். திவானா பதில் சொல்லவில்லை. அப்போது அடுத்த வீட்டு ஃபிளாட்டில் இருக்கும் பெரியவர் அங்கு வந்தார். சார், இவா குடும்பப்பிரச்சினையிலே நான் தலையிடறதுக்கு மன்னிச்சுடுங்கோ. இங்க நடக்கறத நான் மாடியில இருக்கற என் வீட்டிலிருந்து பார்த்துக்கொண்டுதான் இருக்கேன். இதுபோல அக்கிரமம் எங்கேயும் நடக்காது சார். குழந்தை சாப்பிட்டு ரெண்டு நாள் ஆறது. அது வாயைத் திறந்து ஒரு வார்த்தை சொல்லல. எனக்குச் சாப்பிட உட்கார்ந்த நெஞ்சைப் பிழியறது. இப்படி ஒரு குழந்தை இங்கே பட்டினி போட்டுட்டு, நாம் சாப்பிடறதான்னு என் நெஞ்சுல தண்ணிகூட இறங்கல. இப்பவே இவளை அழைச்சுண்டு போயிடுங்கோ, இல்லைன்னா நானே போலீசுக்குத் தகவல் கொடுப்பேன். இவா பொண்ணை வாசல் ரூமில் சாதாரணமா இருக்கச் சொல்லுவா. இதைப் போல பாத் ரூமிலே இல்லை என்றார். அவர் துணிச்சல் எனக்கு பிடித்திருந்தது.

    திவானா ஒண்ணும் சொல்ல முடியாமல் விழித்தாள். நான் திடமாகச் சொன்னேன். மாமி, இனி ஒரு நிமிஷம்கூட இவளை இங்கே விட்டு வைக்க மாட்டேன். இப்பவே சாமிநாதனை இங்கே வரவழைத்து, அவன் பெண்ணை அவன் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போகச் சொல்றேன். உங்க பிள்ளைக்கு ஒரு விஷயமும் நீங்க சொல்றதில்ல. அவரும் நீங்க நாட்டுப்பெண்ணை நன்னா நடத்தறதா நினைச்சுண்டு வேலைக்குப் போறார். உண்மை ஒரு நாள் வெளிவந்தே தீரும். இன்னமும் பத்தாம் பசலித்தனமா பெண்களைக் கொடுமைப் படுத்தறதை நிறுத்தலைன்னா நீங்க ரொம்ப கஷ்டப்பட வேண்டியிருக்கும். இவ வீட்டுக்குப் போயிட்டுத் திரும்ப வந்ததும், இவகிட்டே வம்பு செஞ்சீங்கன்னு தெரிஞ்சா பிரச்சினை போலீஸ் ஸ்டேஷன்லதான் தீர்வுக்கு வரும். உங்க புருஷன் வந்தா சொல்லிடுங்க.

    சாமிநாதனுக்கு போன் செய்தேன். அவன் அவசரமாக பதறிக்கொண்டு ஓடிவந்தான். விஷயத்தை சாங்கோபாங்கமாகச் சொல்லி புரியவைத்து அவனுடன் அவன் பெண்ணை அனுப்பி வைத்தேன். நானும் ராஜாவும் எங்கள் ஸ்கூட்டரை எடுக்கப் போனபோது, அவர்கள் வீட்டு வாயிற்கதவு சாத்தி மூடப்பட்டிருந்தது. திவானாவின் முகம் மட்டும் ஒரு ஜன்னலுக்குப் பின்புறமாக நிழலாடியது.

    (​தொடரும்)

    Share
  • இப்படியும் சில மனிதர்கள்! – 4

    தஞ்​சை ​வெ. ​கோபாலன்

    ரெட்டை மண்டை ‘பீஷ்மாச்சாரியார்’   கல்யாணம் முடிந்து மறுநாள் அதாவது செவ்வாய்க்கிழமை கட்டுச்சாத கூடை வைத்து ஊருக்குப் புறப்படும் வரை அதிலிருந்து எழுந்திருக்கவேயில்லை. தானே ஒரு ஆட்டோ கொண்டு வரச் செய்து அதில் ஏறிக்கொண்டு ரயில் நிலையம் போய்விட்டார். அவரைப் பற்றி பிறகு சொல்கிறேன். இப்போது திருமண நாளன்று நடந்தவற்றைப் பார்ப்போம்.

    மாப்பிள்ளை அழைப்புக்கு எல்லாம் தயாராக இருந்தது. மகாமகக் குளத்துக்கு மிக அருகில் இருந்த ஒரு விநாயகர் ஆலயத்திலிருந்து மாப்பிள்ளை அழைப்பு. மிக அழகான மாப்பிள்ளை அழைப்புக் கார் ஒன்றுக்கு சாமிநாதன் ஏற்பாடு செய்திருந்தான். அந்தக் காரில் ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் கொடுத்து மின் பல்புகளாலும், மலர்ச்சரங்களாலும் அழகாக அலங்கரிக்கப்பட்ட ஆசனத்தில் மாப்பிள்ளையை ஊர்வலமாக அழைத்துக் கொண்டு வர ஏற்பாடாகி யிருந்தது. கடைசி நேரத்தில் மாப்பிள்ளை இதெல்லாம் அனாவசியம். நான் ஊர்வலம் எல்லாம் உட்கார்ந்து வரமாட்டேன். பிள்ளையார் கோயிலுக்குப் போய் புத்தாடை அணிந்து கொண்டு, அங்கு ஓர் அர்ச்சனை செய்துவிட்டு நடந்தே மண்டபத்துக்கு வந்து விடுகிறேன். இதெல்லாம் எதற்கு வீணான ஆடம்பரச் செலவு. இதையெல்லாம் நீங்கள் குறைத்திருக்கலாமல்லவா என்று பெருந்தன்மையாகக் கூறிவிட்டார். நாங்கள் இதைச் சற்றும் எதிர் பார்க்கவில்லை.

    எல்லோரும் விநாயகர் கோயிலுக்குக் கிளம்பினார்கள். பித்தளைத் தட்டுகளில் பழங்கள், மலர், புத்தாடைகள், மாலை வகையறாக்களை எடுத்துக் கொண்டு பெண்கள் கோயிலை நோக்கிப் போனார்கள். இரண்டு பக்கத்து உறவினர்களும் அவரவர்களுக்கு நெருக்கமானவர்களோடு பேசிக்கொண்டும் சிரித்துக் கொண்டும் கோயிலுக்குப் போனார்கள். சாமிநாதனின் இளைய மகன் ஓடிவந்து அப்பாவிடம், அப்பா மாப்பிள்ளைக்கு சூட் கோட் கொடுக்கும்போது ஷூஸ் கொடுக்க வேண்டுமே, ஷூ பெட்டியைக் கொண்டு வரட்டுமா என்றான். அப்போது அருகிலிருந்த மாப்பிள்ளை அதெல்லாம் வேண்டாம், இதோ இருக்கற கோயிலுக்கு ஷூ போட வேண்டாம். அப்படியே உள்ளே இருக்கட்டும் என்றார், பையனும் போய்விட்டான்.

    விநாயகர் கோயிலில் அர்ச்சனை நடந்தது. மாப்பிள்ளையை உட்கார வைத்து புது சூட் கொடுத்தார்கள். அவரும் கோயிலின் பின்புறம் போய் உடைகளை மாற்றிக்கொண்டு மாப்பிள்ளை உடையில் வந்தார். அப்போது அவசர அவசரமாக ‘திவானா’ சாமிநாதனிடம் ஓடிவந்து, ஷூ எங்கே, சூட் போட்டுண்டு மாப்பிள்ளை ரெடியாயிட்டார். ஷூவைக் கொண்டு வந்து தர வேண்டாமா. இதையெல்லாம் கவனமாகச் செய்ய மாட்டீங்களா என்று பதறிக்கொண்டு பேசினாள். அருகிலிருந்த யாரோ சாமிநாதனின் மகனைப் பார்த்து, போப்பா, ஓடிப்போய் ஷூவைக் கொண்டு வந்து கொடு என்றார். அவனும் சரியென்று மண்டபத்துக்கு ஓடினான்.

    சாமிநாதன் என்னைப் பார்த்தான். நான் சொன்னேன் என்னப்பா இது. ஆளாளுக்கு ஒரு உத்தரவு போடறாங்க என்று சொல்லிவிட்டு அந்த அம்மாளிடம், அம்மா உங்க பிள்ளைதான் ஷூ வேண்டாம் என்று சொன்னார். நீங்கள் வந்து இப்போ பதறறீங்க. நாங்க யார் பேச்சை எடுத்துக்கறதுன்னு மட்டும் சொல்லுங்க. அப்பத்தான் இனி நடக்க வேண்டிய காரியங்களையும் யாரையாவது ஒருத்தரைக் கேட்டுச் செய்ய முடியும் என்றேன்.

    அதற்கு அந்த அம்மாள், அவன் அப்படியெல்லாம் சொல்லலை. டிரஸ் கொடுத்தா கூடவே ஷூவையும் கொடுக்கணுமா இல்லையா, அதை விட்டுட்டு ஏதேதோ பேசிண்டு நிக்கறேளே. போங்கோ, போயி ஷூவைக் கொண்டு வாங்கோ என்றாள். அதற்குள் சாமிநாதனின் மகன் ஷூவைக் கொண்டு வந்து அந்த அம்மாளிடம் கொடுத்தான். அதை அந்த அம்மாள் தன் பிள்ளையிடம் கொண்டு போய் கொடுத்துப் போட்டுக்கோ என்றாள். அதற்கு மாப்பிள்ளை நான் தான் ஷூ வேண்டாம்னு சொன்னேனே, கோயில்லே யாராவது ஷூவைப் போட்டுப்பாங்களா, இதோ இருக்கற மண்டபத்துக்கு ஷூவைப் போட்டுண்டா நடக்கணும், நான் சப்பல் போட்டுண்டே வரேன், போங்க, என்றார். அம்மாள் முகத்தில் ஏதோ வழிந்தது.

    மாப்பிள்ளை மண்டபத்துக்கு நடந்தே ஊர்வலமாக வந்தார். கார் உபயோகிக்கப்படவில்லை. அதற்கு எத்தனை ஆயிரமோ செலவு! போகட்டும். சாப்பாட்டுக்கு இன்னும் நேரம் இருந்தது. அந்த நேரம் எல்லோரும் மண்டபத்தில் மேடை மீது உட்கார்ந்து கொண்டார்கள். ‘தில்’ மற்றும் அவரது பல உறவினர்கள் உட்கார்ந்து கொண்டு சீர் சாமான்களையெல்லாம் கொண்டு வாங்கோ, எல்லோரும் பார்க்கட்டும் என்றனர். பீஷ்மர் மட்டும் படுத்த படுக்கையாக இருந்ததால், எல்லோரும் அங்கேயே போய்விடலாம் வாருங்கள் என்று எழுந்து பீஷ்மர் படுத்திருந்த பெஞ்சுக்கு அருகில் அமர்ந்து கொண்டார்கள்.

    சாமிநாதனும் அவன் மனைவியும் சீர் சாமான்கள், நகை முதலானவற்றைக் கொண்டு வந்து வைத்தார்கள். நகைகளை மிக கவனமாக ‘தில்’ பார்த்துவிட்டு அண்ணாவிடம் கொடுக்க, அவரும் அதனை கையில் தூக்கிப் போட்டு உத்தேசமாக எடை போட்டார். வெள்ளித்தட்டை எடுத்து உள்ளங்கையில் வைத்துத் தூக்கிப் போட்டு எடை பார்த்தார். இதனைக் கவனித்துக் கொண்டிருந்த எனக்கு ரத்தம் தலைக்கேறிவிட்டது. கடையில் எடை பார்ப்பது போல சீர் கொடுத்த சாமானை இவர் எடை போட்டது அவமானப்படுத்துவது போல என்று நான் நினைத்தேன். சபையில் அத்தனை பேர் இருக்கிறார்கள், அவர்களில் அனேகர் சம்பந்தி வீட்டார் என்பதெல்லாம் எனக்கு மறந்து போய்விட்டது.

    “ஓய்! என்னய்யா எடை போட்டுப் பார்க்கிறீர், தராசு கொண்டு வந்து தரச்சொல்லட்டுமா? அந்த தட்டு எடை 900 கிராம். அதான் அப்போதே சொன்னேனே. சரியா இருக்கா இல்லையான்னு டெஸ்ட் பண்றீரா?” என்றேன்.

    அந்தக் கூட்டத்திலிருந்த ஒரு நல்லவர், அடடா, அப்படியெல்லாம் இல்லை. சும்மா அவர் தட்டைத் தூக்கிப் பார்த்தார். எடையெல்லாம் போடலை. நீங்க கோபப்படாதீங்கோ என்றார். அப்போதும் எனக்குக் கோபம் அடங்கவில்லை. சரி எக்கேடு கெட்டுத் தொலைக்கட்டும் என்று நான் அவ்விடம் விட்டு அகன்றேன்.

    அப்போது ஃபுட் கார்ப்பொரேஷன் மணி வந்து, என்ன சார், நீங்க பாட்டுக்கு சண்டைக்குப் போயிட்டேளே, சம்பந்திக்காரா கோபிச்சுண்டா என்ன செய்யறது அப்படியென்றார்.

    என்ன சார்  இது, நாகரீகமில்லாம இப்படியெல்லாம் நடந்துண்டா, தூக்கிப்போட்டு மிதிக்கணும்னு ஆத்திரம் வருது. எப்படி பொறுத்துக்கச் சொல்றீங்க என்றேன்.

    சரி சரி தாலி கட்டற வரைக்கும் உங்க கோபத்தை அடக்கிக்குங்க என்று அவர் சொல்ல, கூட இருந்த மற்றவர்களும் அதனை ஆமோதித்தனர். எனக்கு இனி அங்கு இருந்தால் ஒவ்வொரு காரியத்திலும் கோபப்படத் தோன்றும் என்று தோன்றியதால், தாலி கட்டிய மறு கணம் வெளியேறி, கும்பேஸ்வரன் கோயிலுக்குச் சென்று பிரகாரத்தில் உட்கார்ந்து விட்டேன். மண்டபத்தில் சாப்பாட்டுக் கடையெல்லாம் முடிந்த பின் போகலாம் என்று அங்கிருந்த மண்டபமொன்றில் தலைக்குக் கையை வைத்துக் கொண்டு படுத்துவிட்டேன். அப்போது கோயிலுக்கு வந்த கல்யாண பார்ட்டி ஒருவர் என்ன சார் இங்க வந்து படுத்துட்டீங்க, அங்க உங்களைக் காணும்னு சாமிநாதன் தேடிண்டு இருக்கார். வாங்கோ சாப்பிடப் போகலாம் என்று என்னையும் அழைத்துக் கொண்டு வந்தார். அதன் பின் சாவி கொடுக்கப்பட்ட பொம்மை போல இருந்துவிட்டேன்.

    மறுநாள் கட்டுச்சாதக் கூடை கட்டிவைத்து சம்பந்திமார்களையெல்லாம் காரிலும், வேனிலும் ஏற்றி ஸ்டேஷனுக்கு அனுப்பினோம். பீஷ்மர் மட்டும் தானே ஒரு ஆட்டோவை அழைத்து அதில் ஏறிக்கொண்டு எங்கள் யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் போய்விட்டார். அவர்களை ரயிலில் ஏற்றி அனுப்பிவிட்டு அப்பாடா என்று வந்து படுத்ததுதான் தெரியும், தூங்கிவிட்டோம்.

    மறுநாள் காலை பத்து மணி இருக்கும் சென்னையிலிருந்து ஒரு போன் கால். சம்பந்தி ‘தில்’தான் பேசினார். அங்கே சாமிநாதன் இருக்காரா என்றார். சாமிநாதன் வெளியே போயிருக்கிறார், நான் அவர் நண்பன், என்ன வேண்டும் சொல்லுங்கள் என்றேன். அவர் சொன்னார், நீங்கள் கட்டிக்கொடுத்த சாமானில் கல்யாணப் பாய், கைத்தடி எல்லாம் இருக்கு ஆனால் காசியாத்திரை குடை மட்டும் காணும். அது அங்கேயே இருக்கு போல இருக்கு. அதனால நீங்க வேற ஒரு குடை வாங்கி இங்க ஆத்துல வந்து கொடுத்துடுங்கோ என்றார்.

    இங்கு எங்கு தேடியும் குடை கிடைக்கவில்லை. அப்போது சாமிநாதனின் பிள்ளை வந்து சொன்னான். பாய்க்குள் குடையையும் வைத்துத்தான் சுருட்டிக் கட்டிக் கொடுத்தேன். பாயைப் பிரித்துப் பார்க்கச் சொல்லுங்க. அதுக்குள்ள குடை இருக்கும் என்றான். நானும் போன் செய்து ‘தில்’லிடம் விஷயத்தைச் சொன்னேன். அவர் பாயைப் பிரித்துப் பார்த்துவிட்டு, அடடே, ஆமாம் குடை இங்கே பாய்க்குள்ளதான் இருக்கு என்று ஒன்றுமே நடக்காதது போல பேச்சை முடித்துக் கொண்டார். நான் தலையில் அடித்துக் கொண்டேன்.

    (​தொடரும்)

    Share
  • இப்படியும் சில மனிதர்கள்! – 3

    தஞ்​சை ​வெ.​கோபாலன்

    நான் முன்பே சொல்லியிருந்தபடி என் நண்பன் சாமிநாதனின் மகள் திருமணம் கும்பகோணம் மகாமகக் குளக்கைரையில் அமைந்துள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது. சாமிநாதன் குடும்பத்தோடு நானும் என் குடும்பத்தாரும் ஒரு வாரம் முந்தியே கும்பகோணம் வந்து விட்டோம். அங்கு சாமிநாதனின் அப்பாவுக்கு ரெட்டி ராயர் குளம் வீதியில் ஒரு வீடு இருந்தது. அது பெரிய வீடு. எங்கள் குடும்பத்தாரும் அவர்களோடு தங்கிக் கொண்டு கல்யாண ஏற்பாடுகளைச் செய்து வந்தோம்.

    திருமணத்துக்கு இரண்டு  நாள் முந்தைய  நாள்தான் மண்டபத்தை எங்களுக்குக் கொடுத்தார்கள். அங்கு போய் மண்டபத்தைச் சுத்தம் செய்து, சாமான்களைக் கொண்டு போய் அங்கு இறக்கிவிட்டு, சமையல்காரர்களுக்குத் தேவையானவற்றை எடுத்துக் கொடுத்துவிட்டு அங்கேயே இரவு தங்கி விட்டோம். திங்கட்கிழமை முகூர்த்தம். நாங்கள் வெள்ளிக்கிழமை மாலை அங்கு போய்விட்டோம். அன்று இரவே சாட்டை வெங்கட்டராமன் குழுவினர் சமையலுக்கு வந்து சேர்ந்து விட்டார்கள். அவர்கள் வந்ததுதான் தெரியும், மளமள வென்று அவர்கள் வேலையைத் தொடங்கிய வேகத்தை அதிசயமாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். இந்தப் பக்கத்தில் மிகவும் பிரபலமானவர் சாட்டை வெங்கட்டராமன். உட்கார்ந்த இடத்தில் இன்ன சமையலுக்கு இத்தனை பேருக்கு இவ்வளவு சாமான் என்று அவர் இட்ட உத்தரவை ஏற்று பணியாளர்கள் வேலை செய்தார்கள். கல்யாண இனிப்பு, பருப்புத் தேங்காய் ஆகியவற்றுக்கான ஏற்பாடுகளை அவர் செய்து கொண்டிருந்தார்.

    அன்று இரவு நானும் சாமிநாதனும் மறுநாள் காலையில் ரயிலில் வந்து சேரும் சம்பந்திகளை எப்படி வரவேற்பது, தங்கவைப்பது, அவர்கள் செளகரியங்களை யார் யார் கவனித்துக் கொள்வது என்பதையெல்லாம் பேசி முடிவு செய்தோம். சாமிநாதனின் மைத்துனர்கள் இரண்டு பேர் முதல் நாளே மாயூரம் சென்று அங்கு மயூரா லாட்ஜ் சேகரைப் பார்த்து சனிக்கிழமை காலை சென்னையிலிருந்து வரும் ரயிலில் வரும் நபர்களுக்கு இட்லி, பொங்கல், வடை, காபி சப்ளை செய்ய ஏற்பாடு செய்தோம். சேகர் மிகவும் உத்சாகமான பேர்வழி. ஊம், ஜமாய்த்துடுவோம், கவலையை விடுங்க என்று சொல்லி அதே போல சிறப்பாக ஏற்பாடு செய்து விட்டார். எங்களிடம் அறுபது எழுபது பேர் வருவோம் என்று சொல்லியிருந்த சம்பந்தி வீட்டார் நாங்கள் ரயில் செலவை ஏற்றுக் கொள்கிறோம் என்றதும், ஆன மட்டும் அந்த அறுபது எழுபது பேரை அழைத்து வர முயன்றார்கள். ஆனால் அது அவர்களால் முடியவில்லை. முடிவில் இருபத்தி எட்டு பேர்தான் தேறினார்களாம். அவர்களுக்கு சென்னையிலிருந்து கும்பகோணத்துக்கும், திரும்ப திருமணத்துக்கு மறுநாள் இரவு ரயிலிலும் டிக்கெட் பதிவு செய்து அனுப்பினோம். அதன் பிறகு பல முறை டெலிபோன் செய்து அவர்கள் பயணத்தில் சிலருக்குப் பதில் வேறு நபர்களையும், திரும்ப வருவதற்கு இருவருக்கு சென்னைக்குப் பதிலாக பெங்களூருக்கும் டிக்கெட் வாங்கச் சொன்னார்கள். நாங்களும் சிரமத்தைப் பார்க்காமல் அவர்கள் முகம் கோணாமல் எல்லாவற்றையும் செய்து முடித்தோம்.

    மறுநாள் காலை ஐந்து மணிக்கு சென்னை ரயில் வருகிறது. மாயூரத்திலிருந்து சாமிநாதன் மைத்துனன் பேசினான். அவர்களுக்கு மாயூரம் ரயில் நிலையத்தில் டிபன் காப்பி கொடுத்தாயிற்று. சிலர் பல் தேய்க்க வேண்டுமென்று தாமதப்படுத்தியதால், இரண்டு பையன்கள் டிபன் வகையறாவுடன் ரயிலில் கும்பகோணம் வந்து கொண்டிருக்கிறார்கள். மீதமுள்ளவர்களுக்கும் அவர்கள் டிபன் பரிமாறிவிட்டு கும்பகோணத்திலிருந்து கிளம்பும் பாசஞ்சர் வண்டியில் மாயூரம் திரும்பி விடுவார்கள் என்றும் சொன்னான். மயூரா லாட்ஜுக்கு எவ்வளவு பில் என்று கேட்டேன். அவன் சொன்னான், சேகர் கோபப்படுகிறார். உங்களுக்கு பணத்துக்காகவா இதைச் செய்தேன், சாமிநாதன் பல வருஷப் பழக்கம் அதனால் செய்தேன். போய் பணத்தை அவனிடமே கொடுத்து விடு என்று சொல்லிவிட்டார். அவரும் இன்றே கல்யாணத்துக்கு வந்து சேர்வதாகச் சொன்னார் என்றான். இப்படியும் மனிதர்களா என்று ஆச்சரியத்தில் மூழ்கிப் போனேன். சென்னையில் இப்படி யாராவது சொல்வார்களா? இது மாயவரம், இந்த மண்ணின் பாரம்பரிய விருந்தோம்பல் இன்னும் மறைந்துவிடவில்லை. வாழ்க சேகர் என்று வாழ்த்தினேன்.

    நாங்கள் ஐந்து மணிக்கு வரும் ரயிலுக்காக நான்கு மணிக்கே ஸ்டேஷனுக்கு வந்து உட்கார்ந்திருந்தோம். அங்குள்ள ஐ.ஆர்.ஆர்.இல் நல்ல காப்பி கிடைக்கும். கும்பகோணம் காப்பி என்பது இதுதானோ? நல்ல மணமுள்ள காப்பி, நாங்கள் சாப்பிட்டோம். ரயில் வருவதற்கான பரபரப்பு ஏற்பட்டது. நாங்கள் எழுந்து கொண்டோம். அவர்கள் எந்த பெட்டியில் வருகிறார்கள் என்றேன். எஸ் 2 என்றான் சாமிநாதன். அந்த வண்டி நிற்குமிடம் பார்த்துப் போய் நின்று கொண்டோம். வண்டி வந்து நின்றது. பிளாட்பாரம் அல்லோலப் பட்டது. எஸ் 2 விலிருந்து கூட்டம் இறங்கியது. ஆண், பெண் குழந்தைகள் என்று இருபத்தெட்டு பேர். அவர்கள் ஒவ்வொருவரும் இரண்டு மூன்று லக்கேஜ் எடுத்துக் கொண்டு இறங்கினர். கடைசியாக ரெட்டை மண்டை இறங்கினார். அவரை இரண்டு பேர் கைத்தாங்கலாக இறக்கி விட்டனர். அவர்கள் அவருடைய மகன்களாம். பிற்பாடு அறிமுகம் ஆனது. எல்லோரையும் மகிழ்ச்சியோடு வாங்கோ, வாங்கோ என்று அழைத்தோம். அப்படி யாரையாவது அழைக்க விட்டுவிட்டால் அதுவே பிறகு பெரிய குற்றமாக ஆகிவிடும். சம்பந்தி வீட்டாரை வாங்கோன்னு கூப்பிட வேண்டாமோ, வந்து கொடிமரம் மாதிரி நின்னா போதுமா என்பார்கள். நாங்களும் நாணல் புல் போல வளைந்து குனிந்து வணங்கி வரவேற்றோம். சம்பந்தி விரோதம் கூடாதல்லவா?

    இவர்களையெல்லாம் மண்டபத்துக்கு அழைத்துச் செல்ல ஒரு வேன், ஒரு அம்பாசிடர் கார் ஏற்பாடு செய்திருந்தோம். இரண்டு முறை வேன் ஆட்களை ஏற்றிக் கொண்டு மண்டபத்தில் விட்டுவிட்டு வந்தது. காரில் மாப்பிள்ளை பையன், அவன் அப்பா, அம்மா, ரெட்டை மண்டை இவர்கள் உட்கார்ந்தார்கள். எல்லோரும் போன பிறகு சாமிநாதனும் நானும் நாங்கள் வந்திருந்த ஆட்டோவில் பின்னாலேயே பயணித்து மண்டபத்தை அடைந்தோம்.

    அங்கு சம்பந்திகள் அவர்களுக்கு ஒதுக்கியிருந்த அறைகளில் கொண்டு போய் சாமான்களை வைத்துவிட்டு மைய ஹாலுக்கு வந்தனர். சம்பந்தி ‘தில்’ சொன்னார், இடம் போறாது. சாமான்கள் வைக்கவே இடமில்லை. இதுல எப்படி படுத்துக்கறது. இங்கே பக்கத்தில ஏதாவது நல்ல லாட்ஜ் இருந்தா நாலைந்து ரூம் போட்டுடுங்க. எங்க ஆபீசிலிருந்து பெரிய ஆபீசர்கள் எல்லாம் நாளைக்குக் காலைல வரா, அவாளுக்கு இங்கே தங்க முடியாது என்றார். சாமிநாதன் முழித்தான். நான் ஓடிப்போய் ஏ.ஆர்.ஆர். லாட்ஜில் நான்கு ஏ.சி. ரூம் புக் பண்ணிவிட்டு வந்தேன். இன்னிக்கு வேண்டுமானால் உங்களில் சிலர் அங்கு போய் தங்கிக் கொள்ளுங்கள். இரண்டு நாட்களுக்கு புக் பண்ணியிருக்கேன் என்றேன். சம்பந்தி ‘தில்’ சரி பார்க்கிறேன், நாலு ரூம்தானா, ஊம் பார்ப்போம், எங்களுக்குன்னு ஒரு காரை ஏற்பாடு செஞ்சுடுங்கோ, நாங்க போக வர தேவைப்படும் என்றவாறு உட்கார்ந்தார்.

    அப்போது ரெட்டை மண்டை அங்கு வந்தார். சாமிநாதன் சார்! இதோ பாருங்கோ எனக்கு டயபடீஸ், காப்பில சக்கரை கூடாது என்றார். அதுக்கென்ன சமையல்காரர் கிட்டே சொல்லிடறேன். உங்க காப்பில சர்க்கரை வேண்டாம்னு என்றான் சாமிநாதன். ஊகூம். இங்க வந்திருக்கிற நாலைந்து பேருக்கும் டயபடீஸ், அதனால கேட்டுக் கொடுங்கோ என்றார். ஆகா, அப்படியே ஆகட்டும் என்று சமாளித்தோம்.

    ஊம் இன்னொரு விஷயம். எனக்கு காலம்பற ஒம்பது மணிக்குச் சாப்பிடணும். இல்லைன்னா பி.பி. ஏறிடும். அதனால நீங்க பாட்டுக்கு பத்து மணிவரை டிபன் போடறேன்னுட்டு இட்லி போட்டுண்டிருந்தா எனக்குச் சரிவராது. எனக்கு மட்டுமாவது கொஞ்சம் சாதம், மிளகு ஜீரகம் தட்டிப் போட்டு கொஞ்சம் ரசம், மனத்தக்காளி வத்தல் குழம்பு இதைத் தயார் செஞ்சுடச் சொல்லுங்கோ. நான் போய் ஸ்நானம் பண்ணிட்டு வரேன். சரி! இங்கேருந்து காவேரி எத்தனை தூரம் என்றார்.

    எனக்குக் கடுப்பு வந்தது. இதோ ஐந்து தப்படி வைத்தா காவேரிதான் சொல்லத் துடித்தேன். ஆனால் பாவம்! சாமிநாதன், அவனால் சொல்ல முடியுமா? ரெண்டு கிலோ மீட்டர் இருக்கும், மடத்துத் தெரு வழியா போனா, காவேரி பழைய பாலத்துக்கிட்டே படித்துறை இல்லைன்னா மேலக்காவேரிக்குப் போகணும் அப்படி என்றான். சரி சரி அது எனக்குச் சரிப்பட்டு வராது நான் இங்கேயே பாத் ரூமிலே ஸ்நானம் பண்றேன் என்று சொல்லிவிட்டு போய்விட்டார். இவ்வளவையும் பார்த்து புன்னைகை மன்னனாக நின்று கொண்டிருந்த ‘தில்’ எதுவும் பேசவில்லை. அவருடைய செளகரியங்களை ‘திவானா’ கச்சிதமாகக் கவனித்துக் கொண்டாள். ஒரு டம்ளரில் காப்பி கொண்டு வந்து டபராவில் ஆற்றி ஆற்றி தில்லிடம் கொடுத்தாள். மாத்திரைகளைக் கொண்டு வந்து கொடுத்து, சாப்பிடுங்கோ, மறந்து போயிட்டா அப்புறம் கஷ்டப்படறது யாரு என்று ஆதங்கப்பட்டாள். நல்ல பதி, நல்ல பத்தினி என்று நினைத்துக் கொண்டேன்.

    ரெட்டை மண்டை ஸ்நானம் முடித்து வந்தார். நெற்றியில் சுண்ணாம்பு அடிப்பது போல பட்டையாக விபூதி. சாப்பாட்டுப் பகுதியில் பலர் அப்போதுதான் டிபன் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். ரெட்டை மண்டை ஓர் ஓரத்தில் போய் உட்கார்ந்து கொண்டார். சர்வர் ஒருவன் ஒரு வாழை ஏட்டைக் கொண்டு வந்து அவர் முன் வைத்தான். அவருக்கு வந்ததே கோபம். என்னடா மரியாதை இது. சம்பந்தின்னா ஒரு நுனி வாழை இலை கிடையாதா, இப்படித்தான் மரியாதை செய்யறதா என்று கத்தினார்.

    சாமிநாதன் அலறி அடித்துக் கொண்டு ஓடிப்போய் அவருக்கு ஒரு நுனிவாழை இலையைக் கொண்டு வந்து போட்டான். சாட்டையிடம் போய் சுவாமி, இவருக்கு ஆனவரை சாதம் ரசம் போட்டு எழுப்பிவிடுங்கள், இல்லைன்னா நம்மை உண்டு இல்லை என்று ஆக்கிவிடுவார் என்று கெஞ்சினான். அதற்கு சாட்டை வெங்கட்டராமன், நீ போ சாமிநாதா நான் பார்த்துக்கறேன். என் சர்வீசிலே இவரைப் போல ஆயிரம் பேரைப் பார்த்துட்டேன் என்றார் குறும்புச் சிரிப்போடு. எனக்கு என்னவோ பயமாக இருந்தது. சாட்டை ஏதாவது குறும்பு பண்ணி ரெட்டை மண்டையை ஒரு வழி பண்ணிடுவார்னு எனக்குத் தோன்றியது.

    நீ வா சாமிநாதா, நாம போய் வந்திருப்பவங்களை கவனிக்கலாம் என்று அழைத்துக் கொண்டு போனேன். அங்கு ஏ.சி.டி.ஓ. கிருஷ்ணன், ஐ.ஓ.பி. மணி, எஃப்.சி.ஐ. மணி இவர்களெல்லாம் வந்திருந்தனர். அவர்களை நாங்கள் குசலம் விசாரித்துக் கொண்டிருந்தோம். சிறிது நேரத்தில் டைனிங் ஹால் பக்கத்திலிருந்து ஒரு புயல் உருவாகி அது மேலும் வலுப்பெற்று முன் மண்டபம் வரை வந்து சேர்ந்தது. என்னப்பா அங்கே ஒரு புயல் என்றேன் நான். சாமிநாதன் ஆடிப்போய்விட்டான். அந்த ரெட்டை மண்டைதாம்பா இப்போ என்ன ஆச்சோ தெரியலையே என்று அங்கு ஓடினான். நான் போகவில்லை. அங்கேயே உட்கார்ந்து விட்டேன்.

    சிறிது நேரத்தில் முகமெல்லாம் வியர்வையோடு சாமிநாதன் வந்தான். என்ன நடந்தது என்றேன். ரெட்டை மண்டைக்கு மோர் போடும்போது மோர் பாத்திரத்தில் சர்க்கரை இருந்ததாம். மோர் சாதம் இனிக்கிறதாம். தனக்கு டயபடீஸ்ன்னு சொல்லியும் மோர்ல சர்க்கரை போட்டு கொடுத்துவிட்டான். எனக்கு மட்டும் கொடுத்து விட்டால் பரவாயில்லை. அதோ, அவாளும் டயபடீஸ். இப்படிப் பண்றதுதான் மரியாதையா. யோவ், சாமிநாத ஐயர் இங்கே வாரும், என்னய்யா இது, இப்படித்தான் நடந்துக்கறதா என்று கத்தினாராம்.

    பயந்துகொண்டு ஓடிவந்து விட்டான் சாமிநாதன். நீ அங்கே போகாதே. அவரே இங்கு வரட்டும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்றேன். அவன் பயந்தது போலவே மோர் சாதத்தைச் சாப்பிடாமல் கை கழுவிக்கொண்டு ரெட்டை மண்டை அங்கு வந்து சேர்ந்தார். எங்களையெல்லாம் பார்த்ததும் அவருக்கு ரத்த அழுத்தம் அதிகமாகிவிட்டது போல இருக்கிறது. ஆஹா ஓஹோ என்று முழக்கமிட்டார். நான் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டே, சாமிநாதனை அங்கிருந்து போய்விடும்படி ஜாடை காட்டினேன். அவனும் புரிந்து கொண்டு நகர்ந்து விட்டான்.

    “என்ன சுவாமி! எல்லாம் நல்லபடியாத்தனே நடந்துண்டுருக்கு. எதுக்கு இப்போ இப்படிக் கூச்சல்” என்றேன்.

    “என்னய்யா நீ பிரண்டு. மோர்ல சர்க்கரையைப் போட்டு பரிமாறறான்” என்றார்.

    “என்ன சுவாமி அதிசயமாயிருக்கு, உப்புதானே போடுவா, அதுதான் உமக்கு ஒத்துக்காதே, ரத்த அழுத்தம் இருக்கறதால, பின்னே எப்படி சர்க்கரை போடுவா” என்றேன்.

    “என்னய்யா விளையாடுறீரா? நான் போட்டான்னு சொல்றேன், நீர் என்னவோ எகத்தாளமா பேசறீரே!” என்றார்.

    ஒரு சினிமாவில் ரஜனி காந்திடம் குள்ள மனிதன் ஒருவர் வந்து, நான் இப்போ நெனச்சாலும் கல்யாணத்தை நிறுத்திடுவேன் என்று அலம்பல் பண்ண, ரஜினி தன் சட்டைக்குள் கைவிட்டு பாம்பையும், பேண்ட் பாக்கெட்டிலிருந்து தேளையும் எடுத்து அவர் முன் போட்டு, முளைச்சு இன்னும் மூணு இலை விடலை, நீ என்னை பயமுறுத்திறியா, ஏதாவது பேசினா இதையெல்லாம் எடுத்து உன் வேஷ்டிக்குள் விட்டுடுவேன்” என்பார். எனக்கு அந்தக் காட்சி நினைவுக்கு வந்தது. ஆகா, அதுதான் சரியான வழி என்று ஒரு முடிவுக்கு வந்தேன்.

    “ஓய் ஸ்வாமி! இதுவரை நான் சாமிநாதனுக்காக பொறுத்துண்டிருந்தேன். வந்ததும் வராததுமா நீர் இப்படி கலாட்டா செஞ்சா நாங்க சும்மா பார்த்துண்டிருக்க மாட்டோம். இது சென்னை இல்லை. இது கும்பகோணம். இது எங்க இடம். நீர் முன்னே பின்னே கல்யாணம் செஞ்சு பார்த்திருந்தா இப்படி ஒண்ணுமில்லாததுக்கெல்லாம் கூத்தடிக்க மாட்டீர். என்னய்யா குடிமுழுகிப் போச்சு இப்போ. சர்க்கரை போட்டிருந்தா சாதத்தை ஒதுக்கிட்டு, புதுசா போடச்சொல்லி, சர்க்கரை இல்லாத மோரைப் போட்டுச் சாப்பிட வேண்டியதுதானே. சம்பந்தி பந்தா பண்ணி கலாட்டா பண்ணலாம்னு நினைச்சீரா, இங்கு கொத்தோடு அறுத்துடுவாங்க, இவங்கல்லாம் இந்த ஊர்க்காரங்கதான். அதனால இடம் பொருள் ஏவல் பார்த்து நடந்துக்கும், அதுதான் உமக்கு நல்லது” என்று கடுமையாக அவரை எச்சரித்தேன். நண்பர்கள் அனைவரும் அதை ஆமோதித்தது போல தலையை ஆட்டினார்கள். இரட்டை மண்டைக்கு இப்போதுதான் உரைத்திருக்கும் போலிருக்கிறது. எழுந்து போய்விட்டது. அதன் பிறகு குரலைக் காணோம்.

    சுமார் பதினோரு மணியிருக்கும். என்னப்பா சாமிநாதா ரெட்டை மண்டை சங்காத்தியத்தையே காணுமே எங்கே? என்றேன். இங்கே வா என்று என்னை அழைத்துக் கொண்டு போய் காட்டினான். மண்டபத்தின் ஒரு ஓரத்தில் ஒரு கட்டிலைப் போட்டுக் கொண்டு தலையணை வைத்து அருகில் ஒரு மாமி விசிறி கொண்டு விசிற அனந்த சயனம் செய்து கொண்டிருந்தார் ரெட்டை மண்டை. சுற்றிலும் நாலைந்து பேர் அவர் உடம்புக்கு என்ன என்று குசலம் விசாரித்துக் கொண்டிருந்தனர். கிடக்கட்டும் விடு, தொல்லை விட்டது என்று சாமிநாதனை அழைத்துக் கொண்டு வந்து சேர்ந்தேன்.

    சிறிது நேரம் கழித்து ரெட்டை மண்டையின் புதல்வன் ஒருவர் என்னிடம் வந்தார். எங்க அப்பா கல்யாணத்துக்கு வந்திருக்கார் தெரியுமோல்யோ? என்றார். ஆமாம், நான் தானே ரயிலடியிலிருந்து அழைச்சிண்டு வந்தேன். அதற்கு என்ன இப்போ என்றேன்.

    இப்போ அவருக்கு உடம்பு சரியில்லை. எங்கே இருக்கார்னாவது ஒங்களுக்குத் தெரியுமா? என்றார்.

    ஓ தெரியுமே! அதோ, கட்டிலில் அம்புப்படுக்கையில் படுத்திருக்கும் பீஷ்மாச்சாரியார் போல படுத்திருக்கிறாரே, அவர்தானே, தெரியும் தெரியும், அவர் உடம்புக்கு ஒண்ணும் இல்லை, மோர்ல சர்க்கரைப் போட்டுச் சாப்பிட்டுடார், அவருக்கு டயபடீஸ் இல்லையா, அதனால உடம்பு சரியில்லாம போயிருக்கும், சரியா போயிடும், கவலைப் படாதேயுங்கோ, என்றேன்.

    அவர் என்னை ஒரு முறை முறைத்துவிட்டுப் போய்விட்டார்.

    (​தொடரும்)

    Share
  • இப்படியும் சில மனிதர்கள்! – 2

    தஞ்​சை ​வெ.கோபாலன்

    என்னுடைய நெருங்கிய நண்பன் சாமிநாதனுடைய மகளுக்குத் திருமண நிச்சயதார்த்தம். ஞாயிற்றுக் கிழமை பகல் 3 மணிக்கு நாமெல்லாம் மாப்பிள்ளை வீட்டுக்குப் போகிறோம்; அங்கே நிச்சயதார்த்தம் நடக்கிறது, நீயும் எங்களோடு வந்துவிடு என்றான் சாமிநாதன். என்னால் தட்டமுடியவில்லை. எனக்குப் பல வழிகளிலும் உதவிகள் செய்திருக்கிறான். அவன் மகள் கல்யாணத்தை நான் முனைந்து செய்ய வேண்டாமா? சரியென்று ஒப்புக் கொண்டேன். ஞாயிறு பகல் உணவுக்கே அவன் வீட்டுக்குப் போய்விட்டேன். உணவுக்குப் பிறகு சிறிது ஓய்வு எடுத்துக் கொண்டபின் எல்லோரும் நிச்சயதார்த்தத்துக்கு மாப்பிள்ளை வீட்டுக்குப் புறப்பட்டோம். உறவினர்கள் எல்லோரும் ஒரு வேனிலும், நாங்கள் சிலபேர் சாமிநாதன், அவன் மனைவி ஆகியோர் ஒரு காரிலும் புறப்பட்டு நிச்சயதார்த்தம் நடக்கும் வீட்டுக்குச் சென்றோம்.

    அந்த வீடு மாம்பலத்தில் ஒரு குறுகிய தெருவில் இருந்தது. காரிலிருந்து இறங்கி உள்ளே சென்றோம். வாயிற்படியில் மாப்பிள்ளை வீட்டார் நின்றிருந்தனர். அவர்களில் பையனின் அம்மா யார் என்று கேட்டேன். அதோ கருப்பா தலையை ஆட்டி ஆட்டிப் பேசிக்கொண்டிருக்காளே ஒரு மாமி அவள்தான் அம்மா. பக்கத்தில் இருக்காரே அவர்தான் அப்பா என்றாள். பார்த்தால், அட! இவர்கள் நம்ம தில் திவானா ஆயிற்றே என்று எனக்கு ஆச்சரியம்.

    என்னை அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார் சாமிநாதன். மாமி வழக்கப்படி தலையை ஆட்டி ஆட்டி ‘வாங்கோ, வாங்கோ’ என்றாள். அனைவரும் உள்ளே போய் விரித்திருந்த ஜமக்காளத்தில் உட்கார்ந்தோம். நடுவில் தட்டுக்கள் நிறைய பழங்கள், சர்க்கரை, கல்கண்டு, ஒரு தாம்பாளத்தில் பருப்புத்தேங்காய், மற்றொன்றில், புதிய ஜரிகை வேட்டி, காஞ்சிபுரம் பட்டுப்புடவை, ஒரு கண்டு மல்லிகைப் பூ இவையெல்லாம் வைக்கப்பட்டிருந்தன. அருகில் சந்தனப் பேலா, குங்குமச் சிமிழ் இவைகளும் இருந்தன.

    எல்லோரும் வந்து அமர்ந்தாகிவிட்டது. சாமிநாதனே பேச்சை ஆரம்பித்தார். தனது வருங்கால சம்பந்தியைக் காண்பித்து “இவர் ஆர்.அண்டு எஸ். கம்பெனியில் மேனேஜிங் டைரக்டர் கிட்டே பி.ஏ.வா இருக்கார். இவர் பையனும் அங்கே அக்கவுண்ட்ஸ் ஆபீசர். பி.காம், சி.ஏ. படிச்சிருக்கார். ரொம்ப நல்ல பையன். யார் கிட்டேயும் அதிர்ந்துகூட பேச மாட்டார். மாமா ரொம்ப பிரபலம். இவாத்துல ஒரு விசேஷம்னா இவா சொந்தக்காரா அத்தனை பேரும் வந்து சேர்ந்துடுவா” என்று சொல்லிக்கொண்டே போனார்.

    சம்பந்தி உடனே குறுக்கிட்டு, அருகில் இருந்த இரட்டை மண்டை கிழவனார் ஒருவரைக் காட்டி, இவர் என்னோட அண்ணா. இவர்தான் எங்க குடும்பத்துக்கு எல்லாம். இவர் என்ன சொல்றாறோ அதுக்கு எங்ககிட்டே மறுபேச்சே கிடையாது என்றார்.

    அந்த இரட்டை மண்டையும் தலையை இருமுறை ஆட்டிவிட்டு நின்றது. எனக்கு விசித்திரமாக இருந்தது; அவரது தலை. அவர் கொஞ்சம் மிதப்பாக, கர்வத்தோடு இருப்பதாகத் தெரிந்தது.

    ‘எங்க அண்ணா இருக்காரே, அவருக்கு மூணு பிள்ளைகள், ஒரு பொண்ணு. பொண்ணும் மாப்பிள்ளையும் ஆத்தோடதான் இருக்கா. புள்ளைகள் ஆளுக்கு ஒரு இடம். பெரியவன் சுந்தரம் பெரிய கண்ட்ராக்டர். அடையாறிலே பெரிய பங்களா, அவன் பிள்ளை அமெரிக்காவுல இருக்கான். நல்ல சம்பளம். ரெண்டாவது புள்ளை ஆவடிலே பீரங்கியெல்லாம் பண்றாளே அதுல ஆபீசரா இருக்கான். அவனுக்கு ஒரு பெண். அவ கல்யாணம் ஆயி பம்பாயிலே இருக்கா. இவர் அக்கா ஒருத்தி, டெல்லில இருக்கா. அத்திம்பேர் பெரிய ஆபீசர்”,இ ப்படி அவர்கள் பெருமையை அவர் பறை சாற்றிக் கொண்டிருந்தார்.

    “சரி நம்ம விஷயத்துக்கு வருவோம்” என்றார் ரெட்டை மண்டை. சாமிநாதன் என்னைப் பேசுமாறு கண்ஜாடை காண்பித்தான்.

    ” மாமா! உங்க சம்பந்தம் கிடைச்சது எங்களுக்கெல்லாம் ரொம்ப சந்தோஷம். நான் சாமினாதனோட நெருங்கிய சிநேகிதன். அவாத்துல எந்த விசேஷமும் என் பங்கு இல்லாம நடக்காது. பாருங்கோ! இந்த நிச்சயதார்த்தத்துக்கும் என்னை வந்து நடத்தும்படி கேட்டுண்டான். இவனும் சரி, இவாத்துல எல்லாரும் ரொம்ப நல்லவா சாது. பொண்ணைப் பத்திதான் உங்ககிட்டே எல்லாம் சொல்லியிருப்பா. தங்கமான பொண்ணு. அடக்கம், புத்திசாலி, நல்ல அழகு, குடும்பத்தை நன்னா அரவணைச்சுக் கொண்டு போவா” என்றேன்.

    உடனே ரெட்டை மண்டை என்னைப் பார்த்து “அதெல்லாம் சரிதான் சுவாமி, பெண்ணுக்கு என்ன போடப்போறேள், எவ்வளவு நகை, என்னென்ன சாமான்கள் வாங்கித்தரப் போறேள், அதைச் சொல்லுங்கோ” என்றார்.

    “அதெல்லாம் சாமிநாதன் உங்ககிட்டே பேசியிருப்பாரே” என்றேன்.

    “அவர் பேசினார் சரிதான், சபையிலே நாலு பேர் முன்னாடி இன்ன இன்ன செய்யப்போறோம், கல்யாணம் இப்படியிப்படி செய்யப் போறோம்னு தெரிவிக்க வேண்டாமா. வெத்திலை பாக்கு மாத்திக்கறத்துக்கு முன்னாடி, இதையெல்லாம் நன்னா தெளிவா பேசிட வேண்டாமா? நீங்களே சொல்லுங்கோ. அவா செளகரியம் எப்படின்னு” என்றார்.

    சாமிநாதன் என்னை சமிக்ஞை மூலம் சொல்லச் சொன்னதும் நான் சொன்னேன். “மாமா கேட்டபடிக்கு முப்பது பவுன் நகை போடறோம். ஐம்பதாயிரம் ரொக்கம், வெள்ளி, பித்தளை பாத்திரங்கள் முன்னாலயே ஒரு லிஸ்ட் கொடுத்தபடி செஞ்சுடறோம்” என நான் தொடங்கியவுடனே, ரெட்டை மண்டை மறுபடி குறுக்கிட்டு, “பொத்தாம் பொதுவா வெள்ளிப் பாத்திரம்னு சொன்னா எப்பிடி, தட்டு என்ன எடை, சொம்பு, கிண்ணம், பஞ்சபாத்திரம், பன்னீர் சொம்பு, சந்தனப் பேலா, இதெல்லாம் என்ன எடை அப்படின்னு சொல்ல வேண்டாமா? அதோட வரலக்ஷ்மி நோம்புக்கு சொம்பு, அம்பாள் முகம், வெள்ளில மாவிலை தேங்கா இதெல்லாம் பண்ணிடணும்னு சொன்னேனே, அவர் சொல்லலியா?” என்றார்.

    “ஊம் ஊம், சொன்னார் சொன்னார். வரேன். ஒண்ணொண்ணாதானே சொல்லணும், மாமா ரொம்ப அவசரப்படறேளே” என்றேன்.

    உடனே சம்பந்தித் தாத்தா குறுக்கிட்டு, “அண்ணாவைப் பாத்து அப்படியெல்லாம் பேசக்கூடாது. எங்காத்துல அவர் சொல்றதுதான் ஃபைனல். அவர் கேட்கற விவரங்களை இப்பவே டிஸ்கஸ் பண்ணிடறதுதான் நல்லது. சொல்லுங்கோ” என்றார்.

    நான் சொன்னேன், “சார்! வெள்ளி தட்டு மட்டும் 900 கிராம் வாங்கிட்டோம். சொம்பும் 600 கிராம். மொத்தமா எல்லாம் அஞ்சு கிலோ. நகை முப்பது பவுனுக்கு என்னென்னன்னு லிஸ்ட் போட்டுத் தந்துடறோம். பித்தளைப் பாத்திரம், நம்ம சம்பிரதாயப்படி என்னென்ன வேணுமோ அதெல்லாம் வாங்கித்தந்துடறோம். பின்னால வரலக்ஷ்மி விரதம், பொங்கல், ஆடின்னு எல்லா சீரும் சரியா வந்துடும் சரியா?” என்றேன்.

    உடனே ரெட்டை மண்டை, “வாட்டர் பியூரிவையர் ஒண்ணு வாங்கிடணும், இவாத்துல வெந்நீருக்கு கெய்ஸர் இல்லை. அது ஒண்ணு வேணும். மொதல்லேயே பேசினபடி ஹீரோ ஹோண்டா பைக் ஒண்ணு கல்யாணத்துக்கு முன்னாலயே வாங்கித் தந்துடணும்” என்றார்.

    சாமிநாதன் ‘சரி சரி அதுதான் வாங்கிடறேன்னு முன்னமேயே சொல்லிட்டேனே” என்றான்.

    ‘உங்க பொண்ணு வேலைக்குப் போறதுல எங்களுக்கு ஒண்ணும் தடையில்லை. ஆனா குடும்பத்து வேலைகளை அனுசரிச்சு நடந்துக்கணும். , காலைல ஸ்நானம் பண்ணி, சந்தி, ஜபம் எல்லாம் முடிச்சு சாப்பிட வரத்துக்கு பத்து மணியாயிடும். நேவேத்தியம் ஆனபிறகுதான் யாரும் சாப்பிடமுடியும். அவளுக்கு வேலைக்குப் போறதுன்னா ஆத்துல சாப்பிட்டுட்டு போக முடியாது. வெளிலதான் சாப்பிட்டுக்கணும். நாங்கள்ளாம் ஓட்டல்ல சாப்பிடற வழக்கம் கிடையாது. அதனால சவுகரியம் எப்படின்னு பாத்துக்குங்கோங்கோ” என்றார் ரெட்டை மண்டை.

    “சரி வேண்டாம்னா, அவ வேலைக்குப் போக வேணாம். அதெல்லாம் அவ அட்ஜஸ்ட் பண்ணிக்குவா. எங்க குடும்பம் பெரிசு. எல்லாரும் ஒருத்தொருக் கொருத்தர் விட்டுக்கொடுத்துப் போயிடுவா. அதிலேயும் எங்க பொண்ணு ரொம்ப அட்ஜஸ்டபிள். பார்த்துக்கலாம்” என்றார் சாமிநாதன்.

    “கல்யாணத்தை இங்கேயே வச்சுக்கப் ​போறேளா, உங்க ஊர் கும்பகோணத்துலயா?” என்றார் ரெட்டை மண்டை.

    “கும்பகோணம்தான் எங்களுக்குச் சவுகரியம். அங்கே எங்க மனுஷா எல்லாம் நிறைய இருக்கா. காய் கறி, இலை, வாழைப் பழம், தேங்காய் எல்லாம் எங்க நிலத்திலேயே விளையறது. இங்கே கோயம்பேட்டிலே வாங்கி கட்டுப்படியாகுமா?” என்றான் சாமிநாதன்.

    “அப்படின்னா, ஒண்ணு செய்யுங்கோ. நாங்க ஒரு அறுபது, எழுபது பேர் வருவோம். எல்லாருக்கும் ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ்ல டிக்கட் புக் பண்ணிடுங்கோ, டூ அண்டு ஃப்ரோ” என்றது ரெட்டை மண்டை.

    “அறுபது எழுபதா?” என்று சற்று யோசித்துவிட்டு சாமிநாதன், தயக்கத்தோடு “சரி, செஞ்சுடலாம்” என்றான்.

    “அதுல பாருங்கோ, எங்களுக்கெல்லாம், காலைல கண் முழித்தா உடனே காப்பி குடிச்சாகணும். காப்பி ஆனவுடனே பசிக்கும். இட்லி பூரி சாப்பிடணும், அதனாலே, சிதம்பரம் இல்லைன்னா மாயவரம் ஸ்டேஷன்ல எங்களுக்கு டிபன் காப்பி சப்ளை பண்ண ஏற்பாடு பண்ணிடுங்கோ” என்றார் ரெட்டை மண்டை.

    இது என்னடா இது, புது அதிர்வேட்டு. மாயவரத்துல டிபன் காபி அறுபது எழுபது பேருக்கு எப்பிடிக் கொடுக்கிறது. நான் ஜாடை காட்டி சாமிநாதனை வெளியில் அழைத்தேன். அவனும் வந்தான். “என்னடா இது, இவங்க போற போக்குல, ரயிலிலேயே கல்யாணத்தையும் முடிச்சுடும்மாங்க போல இருக்கே, விட்டா இவா ஊரையே தானமா கொடும்பா போல இருக்கே, நீயும் அவர் கேட்கறத்துக்கெல்லாம் தலையை ஆட்டிண்டு  இருக்கே பிரம்மா மாடு போல. கொஞ்சம் கடிஞ்சு பேசுடா” என்றேன்.

    சாமிநாதனுக்கு கண்களில் நீர் துளிர்த்தது. “என்னடா செய்யச் சொல்றே. பையன் தங்கமான பையன். ஒரு குறை சொல்ல முடியாது. இந்த ரெட்டை மண்டை உள்ளே புகுந்து ரொம்ப விளையாடறது. வா,  சமாளிக்கலாம்” என்றான்.

    மறுபடி உள்ளே போய் அவரது டிமாண்ட் எல்லாவற்றுக்கும் தலையை ஆட்டிவிட்டு தட்டை மாற்றிக்கொண்டு நிச்சயதார்த்தம் செய்து கொண்டோம். முகூர்த்தம் கும்பகோணத்தில் ஆவணி மாதத்தில் வைத்துக் கொள்வதாக ஏற்பாடு. அப்போது காவிரியில் தண்ணீரும் இருக்கும். மகாமகக் குளக் கரையில் மண்டபம். அங்கும் குளிக்கலாம். இதையெல்லாம் உத்தேசித்து திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

    (​தொடரும்)

    Share
  • குகப்பிரியானந்தா – சித்த வித்தியானந்தா..

    பவள சங்கரி

    DSC09812-167x300ஆண்டு, அனுபவித்து ஓய்ந்து போனவர்கள் சந்நியாசம் வாங்கிக்கொண்டு அமைதியாக ஹரே, ராமா, சிவ… சிவா.. என்று உட்கார்ந்தால் நிம்மதி தேடி ஆண்டவனின் பாதத்தில் சரணடைந்திருக்கிறார்கள் என்று ஏற்றுக்கொள்ளலாம்.  விவேகானந்தரின் குருவான, 19ம் நூற்றாண்டில் வாழ்ந்த இராமகிருஷ்ணபரமஹம்சர்  சிறு வயதிலேயே ஆன்மீக விசயங்களில் ஆழ்ந்த ஞானம் உடையவராயிருந்தவர் மற்றும் பல அற்புத சக்திகளைக் கொண்டவர். அனைத்து மதங்களும் ஒரே இறைவனை அடையும் வெவ்வேறு வழிகளே என்பதை தன் அனுபவங்கள் மூலம் உணர்ந்ததோடு  அதனை  வலியுறுத்தியவர். குருவை மிஞ்சிய சீடனாக விவேகானந்தரும் இளமை முதலே காசியில் இருக்கும் கைலாயநாதரின் தவக்கோலத்தை சிலையுருவில் விரும்பி வழிபட்டதால் தானும் துறவியாக வேண்டும் என்பதில் நாட்டம் அதிகமானது. தியானத்தில் அதிக ஈடுபாடு கொண்டு தன் ஆன்ம சக்தியையும் பெருக்கிக் கொண்டிருக்கிறார். பாம்பு ஊர்வது கூட அறியாமல் ஆழ்ந்த தியானத்தில் மூழ்கி முத்தெடுத்தவர். இந்த ஆத்ம ஞானம் பலருக்கும் வழிகாட்டியாக, ஆசைக் கடலில் அகப்பட்டு அல்லற்பட இருந்தோரை  மீட்டு இறைவழியில் செலுத்தி நித்திய இன்பம் காணச்செய்தது.

    இதெல்லாம் இருக்க, இன்றும் இளம் வயதிலேயே துறவறம் வாங்குவதென்பது,, குடும்பத்தையும், உலகியல் இன்பங்களையும் விட்டு ஒரு குறுகிய எல்லைக்குள் தங்கள் வாழ்க்கையை முடக்கிப்போடுவதாக தோற்றம் ஏற்படுத்துகிறது. வெகு சமீபத்தில் அப்படி ஒருவரைச் சந்தித்தபோது என்னுள் எழுந்த பல கேள்விக்கணைகளுக்கு  பொறுமையாக அவர் பதில் சொன்னவிதம் ஏதோ இருப்பதை உணர்த்தத்தான் செய்தது. மீனாட்சி இன்று குகப்பிரியானந்தாவாகி, விரைவிலேயே , இன்னும் ஓராண்டுகால படிப்பு முடிந்தவுடன்,  பிரம்மச்சரிய விரதத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டதன் அச்சாரமாக  சித்த வித்தியானந்தா  என்ற பட்டத்தையும் வெல்லப்போகும் இவருக்கு இந்த எண்ணம் தோன்றியது தன் 13 வயதில் என்கிறார். சுவாமி தயானந்த சரசுவதி அவர்களின் ஆசிரமத்தில் அதற்கான பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் இவரைச் சந்தித்தபோது, வணங்கி ஒதுங்கி நிற்க வேண்டியவர் என்பதில்லாமல், ஒரு தோழமை உணர்வே ஏற்பட்டது. ஒரு சிறு வியாபாரியின் மகளாக, வேலூரில் பிறந்து வளர்ந்த இவருக்கு, துறவறம் என்பது என்ன என்று தெரிந்துகொள்ளும் தேடல் ஆரம்பித்திருக்கிறது. வேலூரில் அடிக்கடி வாரியார் சுவாமிகளின் சமயச் சொற்பொழிவு நடைபெறும் காலம் அது. மாலை நேரங்களில் இது போன்று எங்கு சமய சொற்பொழிவுகள் நடந்தாலும் தவறாது கலந்து கொள்வது வழக்கமாகியிருக்கிறது. பள்ளியிறுதி வகுப்பு முடித்தவுடன் இராமகிருஷ்ண மடத்தில் சேர்ந்து துறவறத்தில் ஈடுபடும் எண்ணம் தோன்றியிருக்கிறது. துறவறத்திற்கான மிகவும் இள வயது என்பதால் ஒரு வருடம் குழந்தைகள் பள்ளியில் சேவை செய்துகொண்டு பயிற்சி எடுத்தபின்பு மடத்தில் சேரலாம் என்றிருக்கிறார்கள். ஒரு வருடம் குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுத்துக்கொண்டு சில அடிப்படைப் பயிற்சிகளை எடுத்துக்கொண்டிருக்கிறார். அதற்கு மேலும் பொறுக்க முடியாமல் சேலம் சாரதா கல்லூரி மடத்தில் சென்று தன்னை இணைத்துக்கொண்டு பி.ஏ. வகுப்பில் சேர்ந்து மூன்று ஆண்டுகள் முடிப்பதற்குள் பிரம்மச்சரியத்திற்கான அடிப்படை பயிற்சிகள் அனைத்தும் முடித்து, பகவத்கீதை, வேதாந்தம் என ஓரளவிற்கு தேர்ச்சியும் பெற்றிருக்கிறார். சேர்ந்த புதிதில் ஒரே வண்ண மஞ்சள் நிற சேலை மட்டுமே உடுத்த வேண்டும். அதன் பிறகு 10 ஆண்டுகள்  சைதன்யா என்கிற வெள்ளை சேலையில் சிகப்பு கரை  வைத்த  சேலை உடுத்த வேண்டியிருந்தது.  பின் 2000ம் ஆண்டில்  தன்னுடைய 35 வது வயதில் பிரம்மச்சரிய தீட்சை எடுத்த பின்பு காவி உடை வழங்கப்பெற்றிருக்கிறார். புருச சுத்தம் நாராயண சுத்தம், பிரம்ம சுத்தம்,  தேவாரம் திருவாசகம், இராமலிங்க அடிகளார், இராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர் போன்ற அனைத்திலும் தேர்ந்த ஞானம் கொண்டிருக்கிறார் அம்மையார்.

    அன்றாடம், விடியற்காலை 4. 30 மணி முதல்  5.30 வரை பிரார்த்தனை செய்து, 5.30 முதல் 6.30 வரை பூ பறித்தல், பின் 7.30 மணி வரை உடற்பயிற்சி யோகா என அனைத்தும் முடித்து, 7.30 மணி முதல் 8 மணி வரை  சுவாமி சித்பவானந்தா அவர்களின் விளக்க உரைகளுடன் மந்திர உச்சாடணைகளை  முடித்து காலை 8 மணிக்கு காலை உணவு, அதன் பின் 9 மணிக்குள் அவரவர் பணியிடங்களுக்குச் செல்ல வேண்டும். 12.30 முதல் 2 வரை ஓய்வு பிறகு மீண்டும் மதியப் பணிக்குத் திரும்ப வேண்டும். மாலை 5 முதல் 6.30 வரை பிரார்த்தனை 7 மணி முதல் 7.30 வரை  மடத்திற்குள் இருக்கும் பணிகள்,. 8 மணி  வரை தியானம். அதற்குப் பிறகு இரவு உணவு, பின் ராமகிருஷ்ணர் உபதேசம், ஏனைய மகான்கள் வாழ்க்கை முறைமைகள் பற்றிய உபதேசம். 9.30 வரை நடக்கும் . பிறகு 10 மணிக்கு உறக்கம். அடுத்த நாள் இதே வழமையாக நின்று, நிதானிக்க, யோசிக்க நேரமில்லாத இடைவிடாத இறைப்பணி.  கைக்குத்தல் அரிசி, மசலா பொருட்கள் தவிர்த்த கட்டுப்பாடான உணவு. குறிப்பிட்ட காலங்களுக்கொரு முறை   பணியிடம் மாற்றம்.  இதுவரை 11 பணியிடங்கள் மாறியிருக்கிறார்.

    தற்போது ஆணைக்கட்டியில் உள்ள தயானந்த சரசுவதி ஆசிரமத்தில்  இருக்கிறார்.  இங்கு முழுவதும் தத்துவார்த்த வகுப்புகளுக்குத்தான் முதலிடம் என்கிறார்.  தன்னுடைய மதம் சார்ந்த கொள்கையை அறிந்து கொள்ள வேண்டியே ஒருவர்  வேதம் படிக்க வேண்டியது  அவசியமாகிறது.  சங்கர பாஷ்யம் என்ற மூல நூலிலிருந்து கீதை விரிவுரைகள், பதவுரைகள்  தயானந்த சுவாமிஜி பாரம்பரியத்தோட சொல்லிக்கொடுப்பதற்கு. ஈடு இணை இல்லை என்கிறார். வெளிநாட்டவர் 50 க்கும் மேற்பட்டவர் வந்து நமது வேதமும், கலாச்சாரமும் கற்று கொள்கின்றனர் என்பவர், மலேசியா, ஜப்பான் போன்ற நாடுகளிலிருந்து இங்கு வந்து வேதம், சமஸ்கிருதம் மற்றும் நம் கலாச்சாரம்  பற்றி படிக்க வருபவர்களுக்குத் தேவையான உதவியை அவர்களுடைய அரசாங்கம் வழங்குகிறதாம். ஆனால் நம் நாட்டில் அது போன்ற உதவியோ, அல்லது கிருத்துவ மதம் மற்றும் இசுலாமிய மதத்தில் புனித யாத்திரை செல்வதற்கு உதவுவது போல நம் இந்து மதத்தில் புனித யாத்திரை செல்வதற்கு எந்த உதவியும் கிடைப்பதில்லை என்ற வருத்தமும் இருக்கிறது. இந்திய பொருளாதாரமே அதற்கு எந்த விதத்திலும் சாதகமாக  இல்லை என்கிறார். கணவன் மனைவி இருவரும் சேர்ந்து வந்தும்  சந்நியாசம் வாங்குகிறார்களாம். அதற்கு அவர்கள்   முதலில் சட்டப்படி விவாகரத்து வாங்கினால்தான் செல்லுபடியாகும் என்ற ஆச்சரியமான தகவலும் கொடுக்கிறார். புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இருவரும் விவாகரத்து பெற்ற பின்பே சந்நியாசம் பெறுவதற்கு அவர்கள் தகுதியுடையவர்கள் ஆகிறார்கள்.

    இத்துனை சிரமப்பட்டு பெறும் சந்நியாசத்தினால் மக்களுக்கு என்ன பயன் என்பதே நமது சந்தேகம். இதை அவரிடமே நான் கேட்டபோது, அவருடைய தெளிவான பதில், “வேதாந்தம் என்பது  அடுத்தவருக்கு சொல்லித்தருவதற்காக  படிப்பது அல்ல. பணிந்தும் கேட்டும் பணிவிடை செய்தும் வந்து கேட்போருக்குச் சொல்லிக் கொடுத்தால் போதும்.. உன்னதமான  வேத பாடத்தை அப்படி எளிதாகப் பெற  முடியாது. அதற்கான தகுதியுடையவர்கள் மட்டுமே அதனை உணர்ந்து கற்க முடியும் ” என்பதே எங்கள் குருவின் வாக்கு என்கிறார்.

    ‘மக்கள் சேவையே மகேசன் சேவை’ என்றால் இப்படி இத்துனை வேதப்பாடம் அனைத்தும் கற்பதோடு நின்று அதனால் மக்களுக்கு எந்த பயனும் இல்லாமல் போகிறதே, என்று கேட்டபோது,

    பிரேமானந்தா,  நித்தியானந்தா, சங்கர் பாபா, கல்கி போன்ற விஷப்பூடுகளின் வளர்ச்சி உண்மையில் நல்லனவற்றை பகுத்தாய்ந்தறியும்  சக்தியை பாழாக்குகிறது. அதனால் மக்களிடையே நம்பிக்கை குறைந்து வருவதால் எங்களாலும் எளிதாகச் சென்று மக்களுக்கு தொண்டாற்ற முடியாமல் போகிறது. குறிப்பாக வட நாடு மற்றும் ஆந்திரா போன்ற இடங்களில் இருப்பதைக்காட்டிலும், தமிழ்நாட்டில் அதன் பாதிப்பு அதிகமாகவே இருக்கிறது, என்கிறார். தங்கள் குருவின் வாக்குப்படி,  ‘காடு முழுவதும் முட்கள் நிறைந்திருக்கும் போது அதனைச்  சுத்தம் செய்ய ஒருவருக்கு ஒரு பிறவி போதாது. அதனால் செருப்பு போட்டுக்கொண்டு கடந்து செல்வதே புத்திசாலித்தனம். அறியாமை மட்டுமே இன்றைய  இத்தகைய நிலைக்கு பெரும் காரணமாக இருக்கிறது.  அந்த அறியாமை முதலில் விலக வேண்டும். அதற்கு தெளிவான சிந்தனை வேண்டும். நம்மைச் சுற்றி தெய்வீக அலை பரவ வேண்டும். சந்நியாசிகளைச் சுற்றி இருக்கும் அந்த தெய்வீக அலை பல மாற்றங்களை ஏற்படுத்தவல்லது என்று இவர் சொல்வதை முழுமையாக ஏற்க மனம் ஆதாரத்தைத் தேடுகிறது! கர்ம யோகமோ, பக்தி யோகமோ அல்லது ஞான மார்க்கமோ, எதுவாயினும் அவரவர் தர்மப்படி வாழ  வேண்டும் என்பதே கீதை. காட்டும் பாதை. எடுத்துக்கொண்ட வாழ்க்கையை  முறைப்படி வாழ வேண்டும்.

    இறுதியாக  சித்து வேலை என்று அம்மையார் வர்ணித்த விசயங்கள் பற்றி மீண்டும் கேட்டபோது, லிங்கம், திருநீறு போன்றவைகள் வரவழைக்கும் வித்தகம்  பார்ப்பதற்கு ஆச்சரியம் அளிப்பதாகவும், நம்பிக்கைக்கு உரியதாகவும் தென்படலாம்.  ஆனால் அது தெய்வ சக்தியின் உச்ச நிலையை அடைவதற்கு பெருந்தடையாக இருக்கக்கூடியது. அதாவது, முள்ளுச் செடியைச் சாப்பிடும் ஓட்டகம்  தன் இரத்தத்தின் சுவைதான் அது என்ற உணர்வே இல்லாமல் அதை இரசித்து  ருசித்து, மேலும், மேலும் உண்ணுகிறது. அது போலத்தான் இந்த சித்து விளையாட்டும், தன் சக்தியை தானே சுவைத்து மேற்கொண்டு உன்னத நிலைக்குச் செல்வதற்கு தடையேற்பட தானே காரணமாகிவிடுகிறார்கள். ஆனால் பொது நலம் கருதி, தன் சுயநலம் தவிர்த்து, சித்து மூலம் மானுட சேவையில் சிறந்து விளங்குவதும் ஒரு வகையில் பாராட்டுக்குரியதோ என்று கேட்டபொழுது, இப்படி எண்ணுவது முழுமையான அறியாமை என்கிறார். இந்த அறியாமை இருளைத்தான் போக்க வேண்டும் என்று நாங்கள் எண்ணுகிறோம் என்கிறார். சந்நியாசம் பெறுபவர்கள் இந்த ஆன்ம பலத்தைத்தான் முதலில் பெற வேண்டியுள்ளது. மக்கள் எங்களை ஏற்கும் பக்குவம் வரும்போது நாங்களும் வெளியில் வந்து சேவை செய்யக் காத்திருக்கிறோம். ஆனால் அதற்கான சூழல் தற்போது இல்லை. போலிகள் ஏற்படுத்துகிற தீய அலைகளின் தாக்கம் முற்றிலும் மறைய வேண்டும் என்கிறார்.

    “நம் இந்திய நாட்டின் முதுகெலும்பாக இருப்பது  ஆன்மீகம் . இதனாலேயே  தான் நம் இந்தியா சீரும், சிறப்புமாக வாழுகிறது. அந்த சக்தி என்றென்றும் நம் நாட்டை வாழவைக்கும் என்பதில் ஐயமில்லை. எவரும் வந்து வாழ வைக்க வேண்டிய நிலையில் நம் இந்தியாவும், நம்முடைய இந்து மதமும் இல்லை. இதனை வெளிநாட்டவர் புரிந்து கொண்டுள்ள அளவிற்கு நம் நாட்டவர் உணரவில்லை என்பதுதான் வேதனை. அவர்கள் நம் நாட்டிற்கு வந்து, மூன்று மாதங்களுக்கு மேல் வாழத் தகுதியில்லாவிட்டாலும், திரும்பத் திரும்ப சிரமப்பட்டு விசாவை புதுப்பித்துக்கொண்டு, தங்கியிருந்து நம் வேதங்களையும், கலாச்சாரங்களையும், பாரம்பரியங்களையும், பணிவுடன் கற்றுக் கொள்வதோடு தங்கள் நாட்டிலும் சென்று நம் கலாச்சாரத்தின் பெருமையை பரவச் செய்கிறார்கள் என்பதே நாங்கள் காணும் உண்மை நிலை. ஆனால், 5000 – 10,000 ஆண்டுகள் பழமையான  நம் பாரம்பரியத் தத்துவங்களை முழுமையாகப் படித்துணர்ந்து, அதனை ஆத்மார்த்தமாக, தவறின்றி  சொல்ல சரியான ஆளில்லை என்பதுதான் இன்றைய நிலை. அதுதான் அறியாமை எனும் கழிவுகள் நிறைந்த பாத்திரமாக மாறி இருக்கிறது. தப்பைச் சொல்லி புரிஞ்சிக்கிட்டிருக்காங்க.. காலிப் பாத்திரமாக இருக்கும்போது நல்லவைகளை நிரப்ப எளிதாக இருக்கும். ஆனால் இன்று அல்லவைகளை வெளியேற்றவே பல காலம் வேண்டும் போல் உள்ளது. பகவானின் அருளால் அது நடக்கும் வரை காத்திருக்க வேண்டும்” என்கிறார்.

    ஆரம்பத்தில் தோழமை உணர்வு மட்டுமே உந்தித்தள்ள அதன் போக்கிலேயே அமைந்த காரசாரமான விவாதங்கள், இறுதியில் பல மாற்றங்கள் ஏற்படுத்தியது. ஒரு வேளை இதைத்தான் தெய்வீக அலை என்கிறாரோ என்று எண்ணத்தோன்றியது. நல்ல சுத்தமான எண்ணங்கள்தானே தெய்வீக அலை என்பது? என் பாத்திரத்தை காலியாக்கிக்கொண்டு, காலில் விழுந்து ஆசி பெற்று திரும்பினேன்.

    —————-

    நன்றி : திண்ணை

    Share
  • இப்படியும் சில மனிதர்கள்! – 1

    தஞ்சை வெ.கோபாலன்

    நான் ஒரு கல்யாணத்துக்குப் போயிருந்தேன். அங்கே உட்கார்ந்திருந்த போது ஒரு ஜோடி மண்டபத்துக்குள் வந்து கொண்டிருந்தார்கள். வந்தவரில் ஆணுக்கு வயது எழுபது இருக்கலாம், பக்கத்தில் அவரது மனைவி அறுபது வயதைத் தாண்டியவர். கன்னங்கரேலென்ற நிறம். தேர் அசைவது போல ஒவ்வொரு அடியெடுத்து வைக்கும்போதும் பக்கவாட்டில் சாய்ந்து சாய்ந்து நடை. பெரியவருக்கு வயதானதாலோ அல்லது காலில் ஏதாவது ரிப்பேரோ தெரியவில்லை ஒரு கைத்தடியை ஊன்றிக் கொண்டு வந்தார். அவரை கைப்பிடியாகப் பிடித்துக் கொண்டு அந்த அம்மையார் குழந்தையை நடத்தி வருவது போல மெல்ல அழைத்து வந்து கொண்டிருந்தார்.

    ‘மெதுவா வாங்கோ. பார்த்து காலடியை எடுத்து வையுங்கோ. கீழேயெல்லாம் டைல்ஸ், வழவழன்னு இருக்கு. வழுக்கிவிட்டுடப் போறது. இதுல தண்ணியை ஊத்தி வைச்சாக்கூட கண்ணுக்குத் தெரியாது. வழுக்கிவிட்டுட்டா என்ன பண்றது. பாருங்கோ, அங்கே குழந்தைங்க ஓடிப்பிடிச்சு விளையாடறதை. ஓடிவந்து ஒங்க மேல விழுந்துட்டா என்ன பண்றது. மெதுவா, என்னைப் பிடிச்சுண்டு வாங்கோ’ என்று ராஜோபசாரம் செய்தபடி அந்தப் பெண்மணி உள்ளே நுழைந்தாள்.

    ‘வரேன், வரேன், நன்னா கையைப் பிடிச்சுக்கோ! நான் தான் சொன்னேனே, இந்த மாதிரி கல்யாண மண்டபத்துக்கெல்லாம் போறது அவ்வளவு பாதுகாப்பு இல்லைன்னு, நீ கேட்டியா, ஒன்னோடு அத்தங்கா பொண்ணு கல்யாணம்னு என்னையும் இழுத்துண்டு வந்து நிக்கறே’ என்றார்.

    ‘வரலைன்னா, அவா ​கோவிச்சுக்குவா, நாம வந்து பெரியவாளா லட்சணமா கல்யாணத்தைப் பண்ணி வச்சாதான் அவாளுக்குத் திருப்தி. வேற யாரு இருக்கா, பெரியவாளா அவாளுக்கு இதைச்செய் அதைச்செய்னு சொல்றதுக்கு. பேசாம வாங்கோ, வந்து ஒரு இடத்துலே ஒக்காந்துக்கோங்கோ’ என்று அவரைப் பிடித்துக் கொண்டு போய் அங்கிருந்த ஒரு நாற்காலியில் உட்கார வைத்தாள் அந்தப் பெண்மணி.

    எனக்கும் பொழுது போகவேண்டாமா? இந்த முதிய காதல் ஜோடியின் ராசக்கிரீடையைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தேன்.

    கல்யாண வீட்டுக்காரர்கள் இந்த ஜோடியைப் பார்த்துவிட்டுப் பரவசமாய் ஓடிவந்து, ‘வாங்கோ, வாங்கோ, என்னடாது, இதுவரை மாமா மாமியைக் காணலியேன்னு கவலையா பேசிண்டு இருந்தோம். நீங்க வந்துட்டேள். நீங்கதான் எங்களுக்கு நல்லது கெட்டது எல்லாம் சொல்லித் தரணும். எங்காத்துல இதுதான் மொத கல்யாணம் இல்லியா, எதையும் தவற விடாம நன்னா நடத்தணும். உள்ளே வாங்கோ, டேய்! அங்க யாரப்பா, அந்த பரிசாரகர்கிட்டே சொல்லி ரெண்டு டம்ளர் காப்பி கொண்டு வரச் சொல்லு” என்றார் அதில் ஒருவர்.

    ‘அதெல்லாம் வேண்டாம். அவருக்கு ஷுகர், காப்பியெல்லாம் சாப்பிட மாட்டார், மாத்திரை சாப்பிடணும் கொஞ்சம் வெந்நீர் இருந்தா போட்டுக் கொண்டு வரச் சொல்லுங்கோ, நான் வந்து டிபன் சாப்பிட்டுக்கறேன்’ என்றாள் அந்த அம்மாள்.

    ‘பரவாயில்லே, எனக்கும் ஒரு காப்பி கொண்டு வரச்சொல்லுங்கோ, ஆனா, அதுல சக்கரை போட வேணாம்’ என்றார் அந்தப் பெரியவர்.

    ‘பாத்தேளா! இப்படித்தான் வாயைக் கட்டாம எதையாவது சாப்பிட்டுடறது, பின்னாலே மயக்கம் வரது, தலையைச் சுத்தறது அப்படிம்பேள், சொன்னா கேக்கவா போறேள்’ என்று சொல்லிவிட்டு அந்த கல்யாண வீட்டு அம்மாளிடம், ‘சரி மாமி, அவருக்கும் சக்கரை இல்லாம ஒரு காப்பி கொடுத்துடச் சொல்லுங்கோ’ என்றாள்.

    ‘எங்கே ஒங்க புள்ளை மாட்டுப்பெண் எல்லாம் வரலியா?’ என்றாள் கல்யாண வீட்டு அம்மாள்.

    ‘அவனுக்கு எங்கே ஒழியறது, ஆபீஸ் ஆபீஸ்னு ஆபீசை கட்டிண்டு அழறான். காலைல போனா ராத்திரி பத்தோ பதினொண்ணோ எப்போ வரானோ அப்போதான். மாட்டுப்பெண்ணுக்கு இதுக்கெல்லாம் எங்கே நேரம் இருக்கு. அவளும் வேலைக்கு போறாளா, வந்து டயர்டா இருக்குன்னு படுத்துண்டுடறா, கல்யாணம் கார்த்தின்னு நாலு இடத்துக்குப் போனாதானே, நம்மாத்துக்கும் மத்தவா வருவான்னு அவாளுக்குப் புரியல. அது கெடக்கு விடுங்கோ, நானும் மாமாவும்தான் வந்துட்டோமே’ என்றாள் மாமி.

    ‘சரி உட்காருங்கோ, காப்பி கொண்டு வரச்சொல்றேன்’ என்று சொல்லிவிட்டு கல்யாண வீட்டு அம்மாள் உள்ளே சென்றாள். உடனே ஜோடிப் பெண்மணி கணவரிடம் “வந்த இடத்திலே ஏன் மானத்தை வாங்கறேள். அவா காபி வேணுமா, டிபன் சாப்பிடறேளான்னு கேட்கத்தான் கேட்பா. வேண்டாம்னு சொல்லிட்டு அப்புறமா சாப்பிட்டாதான் கவுரமா இருக்கும். அல்பம் மாதிரி சரி சரி கொண்டாங்கோம்பாளா, உங்களோட எனக்கு மானம் போறது’ என்றாள்.

    அப்போது கல்யாணப் பெண்ணைக் கூப்பிட்டுக்கொண்டு கல்யாண வீட்டு அம்மாள் வந்து பெண்ணை அந்த வயதான தம்பதியருக்கு நமஸ்காரம் செய்யச் சொன்னாள். அந்தப் பெண்ணும் மிக நளினமாகத் தன் பட்டுப்புடவை கலையாமல் குனிந்து மண்டியிட்டு நமஸ்காரம் செய்து எழுந்தாள்.

    உடனே பெரியவர் கையைத் தூக்கி ‘மகாராஜியா நன்னா இரும்மா’ என்று சொல்லிவிட்டு தன் மனைவியை நோக்கி ‘ஊம், நீயும் குழந்தையை ஆசீர்வாதம் பண்ணு’ என்றார். அந்த அம்மாளும் அந்த மணப்பெண்ணை ஆசீர்வாதம் செய்த பின் அந்தப் பெண்ணும், அவள் அம்மாவும் உள்ளே சென்று விட்டனர். இந்த தம்பதியர் மட்டும் தனித்து விடப்பட்டனர்.

    அப்போது கல்யாண வீட்டுக்காரர் ஒருவர் அந்தப் பக்கம் வந்தார். அவரை இந்தத் தம்பதியருக்குத் தெரியாது என்றாலும் அந்த அம்மாள் அவரை அழைத்தாள். அவரும் ‘என்ன மாமி, என்ன வேணும்’ என்று அருகில் வந்தார்.

    அந்த அம்மா சொன்னாள், ‘மாமாவுக்கு ஒடம்பு சரியில்லே. கொஞ்சம் ஓரமா ரெண்டு பெஞ்சை புடிச்சுப் போட்டுட்டேள்னா, படுத்துப்பார்’ என்றாள்.

    அவரும் அதுக்கென்ன போட்டுடறேன் என்று சொல்லிவிட்டு இரண்டு பெஞ்சுகளைக் கொண்டு வந்து போட்டு அதில் ஜமக்காளம் விரித்து தலையணை வைத்துக் கொடுத்தார். மாமி மறுபடி அவரைக் கூப்பிட்டு, ‘ஒரு பெடஸ்டல் ஃபேன் இருந்தா கொண்டு வந்து வச்சுடுங்கோ, மாமாக்கு காத்து வேணும்’ என்றாள். அதையும் அவர் செய்து கொடுத்தார். இப்போது பெரியவர் மிகவும் செளக்கியமாக பெஞ்சில் படுத்துக் கொண்டு ஓய்வு எடுத்தார். மாமி மெல்ல உள்ளே சென்றாள்.

    மணமகள் வீட்டார் இருக்கும் பகுதிக்குச் செல்லாமல் அந்த அம்மாள் சமையலறை நோக்கிச் சென்றாள். அங்கு சமையலுக்காக ஊழியர்கள் காய் நறுக்கிக் கொண்டும், மாவு அரைத்துக் கொண்டும் தேங்காய் துறுவிக்கொண்டும் இருந்தார்கள். அந்த அம்மாள் அங்கிருந்த ஒருவரை அழைத்து ‘யார் சமையல்?’ என்றாள்.

    அங்கிருந்த ஒருவர், ‘கிடாரங்கொண்டான் கிச்சாதான் சமையல், அதோ சாம்பார் அண்டாண்டே நிக்கறார் பாருங்கோ’ என்றான்.

    மாமி உடனே அவரிடம் சென்றாள். அவரும் இவரை வரவேற்று, ‘என்ன மாமி, என்ன வேணும், ஏதாவது சாப்பிடறேளா?’ என்றார், இந்த அம்மாளை யாரென்று தெரியாவிட்டாலும், மரியாதைக்காக அவர் அப்படிக் கேட்டார். இந்த அம்மாள் வந்த சந்தர்ப்பத்தை விடுவாளா?

    ‘நாங்க வெங்காயம் சேத்துக்க மாட்டோம். நானும் மாமாவும் காசிக்குப் போயிட்டு வந்துட்டோமா, அங்க பொடலங்கா சாப்பிடறதை விட்டுட்டோம், அதனால நீங்க சமையல்ல வெங்காயம் சேக்காதீங்கோ, பொடலங்காயை எதுலேயும் போட்டுடாதீங்கோ’ என்றாள்.

    நளபாகம் கிடாரங்கொண்டான் கிச்சா திகைத்துப் போனார்.

    ‘ஏம்மா! வெங்காயம், புடலங்கா சேக்காம பின்ன நாங்க எதைத்தான் வச்சு சமைக்கறது. கல்யாண வீட்டுல ஆயிரக்கணக்குல சாப்பிடுவா. அவா ஒவ்வொருத்தரும் எனக்கு இது பிடிக்காது, நான் இதை காசில விட்டுட்டேன்னு சொல்லிண்டிருந்தா, எதைச் சமைக்கறதுன்னு கொஞ்சம் கல்யாண வீட்டுக்காராகிட்டே கேட்டுச் சொல்லிடுங்கோ. இன்னொண்ணு மாமி, வீட்டுக்காரா என்ன சொல்றாளோ அதைத்தான் நாங்க செய்யணும், நீங்க அவாளுக்கு என்ன உறவோ தெரியாது. எதுன்னாலும் அவா கிட்டே சொல்லி எங்ககிட்டே இதெல்லாம் பண்ணலாம், இதெல்லாம் பண்ணக் கூடாதுன்னு சொல்லச் சொல்லிடுங்கோ, அதுபடி செஞ்சுடறோம்’ என்றார் கிச்சா.

    ‘அப்போ நாங்க சாப்பிட வேணாமா, என்ன இப்படி பேசறேள். காசில பொடலங்கா விட்டுட்டோம்னு சொல்றேன், அதைத்தான் பண்ணுவேன்றேளே’ என்றாள் மாமி உரத்த குரலில்.

    அப்போது அங்கே வந்த கல்யாண வீட்டுக்காரர் இவர்கள் பேசுவதைக் கவனித்து விட்டுச் சொன்னார், ‘மாமி, நீங்கா காசில பொடலங்காயைத்தான் விட்டேளோ, வாழைக்காயைத்தான் விட்டேளோ தெரியாது. பொது இடத்துல ஆயிரக்கணக்கான பேருக்குச் சமையல் செய்யற இடத்துல வந்து, எனக்கு அது பிடிக்காது, அதை விட்டுட்டேன் இதை விட்டுட்டேன் அப்பிடின்னெல்லாம் சொல்லக்கூடாது. உங்களுக்குப் பிடிக்கலையா, பேசாம அதை ஒதுக்கிட்டுப் பிடிச்சதை சாப்பிட்டுட்டு போகணும். நீங்க சமையல்காரங்க கிட்டே தனியா உத்தரவு போடறதெல்லாம் நன்னா இல்லை’ என்றார்.

    அந்த மாமிக்கு கோபம், விறுவிறுவென்று ஹாலுக்கு வந்தாள். அனந்த சயனத்திலிருந்த தன் கணவர் பெருமானை எழுப்பினார். ‘வாங்கோன்னா, நாம ஆத்துக்குப் போகலாம். சாப்பாட்டுல வெங்காயம் புடலங்கா சேக்காதீங்கோன்னு சமையல்காரர் கிட்டே சொல்றேன். ஒருத்தர் வந்து உங்களுக்கு வேணும்னா சாப்பிட வேண்டாம். மத்தவாளுக்குப் போடப்படாதுன்னு சொல்றதுக்கு நீங்க யாருங்கறார். வாங்கோ, நாம ஆத்துக்குப் போகலாம்’ என்றாள்.

    அவர் சாவகாசமாக எழுந்து உட்கார்ந்து கொண்டு ‘என்னடீ இப்படிச் சொன்னா ராத்திரி சாப்பாட்டுக்கு என்னடீ பண்றது. அங்கே ஆத்துல உன் அருமை மாட்டுப் பொண்ணு புருஷனைக் கூட்டிண்டு ஓட்டலுக்கு போயிடுவா, நாம போய் என்னத்தைச் சாப்பிடறது. ராத்திரிக்குத்தான் நாம கல்யாணத்துல சாப்பிடப்போறோம், இது மிச்சம் வைக்க வேணாம்னு காலைல பண்ணின வத்தக் குழம்பையும்தான் நீ மத்தியானமே சாப்பிட்டுட்டியே’ என்றார்.

    ‘சரி சரி, நீங்க பேசாம படுத்துக்கோங்க, பந்தி பரிமாறினவுடனே பார்த்துண்டு வந்து உங்களை அழைச்சுண்டு போறேன். முதல்ல சாப்பிட்டுட்டு நாம ஆத்துக்குப் போயிடலாம், என்ன?’ என்று கேட்டுவிட்டு சமையல் கட்டுக்குள் மறுபடியும் நுழைந்து விட்டாள்.

    அவள் அந்த இடத்தை விட்டு அகன்றதும், கல்யாண வீட்டுக்காரர் ஒருவரை அழைத்து அந்த தம்பதி யார் என்று கேட்டேன். அவர் சொன்னார்: ‘அவங்க ஏதோ தூரத்துச் சொந்தம். தெரிஞ்சவங்க வீட்டுக் கல்யாணம்னா தவறாம ஆஜராயிடுவாங்க. இப்படித்தான் அங்கே போயி இவங்க இஷ்டத்துக்கு உத்தரவு போடுவாங்க. சில இடங்கள்ளே செல்லுபடியாகும், சிலபேர் துரத்திவிட்டுடுவாங்க. இவங்க அதுக்கெல்லாம் மான அவமானம் பாக்க மாட்டாங்க” என்றார்.

    அது சரி அவங்க பேர் என்ன? என்று கேட்டேன்.

    அதற்கு அவர் “அவங்களோட உண்மையான பேர் என்னன்னு தெரியலை. ஆனால் எல்லோரும் அவரை ‘தில்’ அப்படின்னும், அந்த அம்மாவை ‘திவானா’ ன்னும் கூப்பிடுவாங்க.

    ‘தில், திவானா’ நல்லா இருக்கே பெயர் என்று சிரித்துக் கொண்டேன்.

    (​தொடரும்)

    Share
  • சுவாமி விவேகானந்தரின் பார்வையில் வேதாந்தம்

    கோ.ஆலாசியம்

    vivek1

    சுவாமி விவேகானந்தர்  –  எனக்கு மானசீக குருவாக இருந்து வேதாந்தத்தை விளக்கிய ஞானச்சுடர்! இந்த உலகின் உய்விற்கு வித்திட வந்துதித்த பேரொளி சுவாமி விவேகானந்தர்! அந்த மகானின் வேதாந்த விளக்கத்தைப் படித்து எனது சிற்றறிவில் பூத்த சிறு பூக்களின் மணத்தை இங்கே பரப்பிட விழைகிறேன்.

    பொதுவாக அந்த ஞானியைப் பற்றிய பல, அறிய,  அறியப்பட வேண்டிய செய்திகளை நாம் அனைவரும் வாழ்வில் பலமுறை படித்து பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். அது வரவேற்கத் தகுந்தது. இருந்தும், சுவாமிஜி அவர்கள் கூறிய ஆன்ம லட்சியத்தைப் பற்றிய அறிவும், ஆய்வும், நம்மை வழிநடத்த அந்த ஞானி நமக்கெல்லாம் சொல்லிய உயரிய லட்சியமான பேரொளியில் கலக்க அயராது முயன்று அதனை அடைவதே! சுவாமிஜி நமக்கு போதித்ததும் அவரின் தீர்க்கமான விருப்பமும் அதுவே ஆகும்.

    அவ்வகையிலே சிந்தித்து அவரின் தெய்வீகமான உரையில் உறைந்து  கிடக்கும் உண்மையின் சாரத்தை நாமும் உணர்ந்து தெளிவோமாக.

    சுவாமிஜி அவர்கள் கூறியக் கருத்துக்களின் சாரத்தைக் கூறுகையிலே, சுவாமிஜியின் ஆசியுடன், எனது புரிதலையும் அங்கே சில உதாரணங்களுடன் கூற முயன்றிருக்கிறேன். சுவாமி விவேகானந்தரைப் பற்றி அறிய விரும்பித் தேடியபோது இந்த அமுதம் கிடைத்தது.

    இவற்றை பள்ளிப் பாடத்தில் இவ்வளவு காலம் வைத்து கற்றுத் தந்திருந்தால், எத்தனையோ மெய்ஞானிகள் அல்ல, நல்ல மனிதர்களையாவது நாடு பெற்றிருக்கும் என்பது எனது ஆதங்கம்.

    ***

    உலக மதங்களுக்கெல்லாம் கருவும்,  கருவறையும் நமது வேதங்கள் என்றால் அது மிகையாகாது. மேலைநாடுகளையும் அம்மக்களையும் இறைவன் விஞ்ஞானத்திற்கான கூரோடு படைத்திருக்கிறான் என்றால், கீழைநாடுகளையும் அம்மக்களையும் குறிப்பாக இந்தியாவையும் இந்தியர்களையும் மெஞ்ஞானத்திற்காகப் படைத்திருக்கிறான் என்று கூறலாம்.

    .

    வேதாந்தத் தத்துவம்:

    (ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில், 25 மார்ச் 1896 -ல் சுவாமி விவேகானந்தர்  ஆற்றிய உரையின் சுருக்கம்)

    vivek2வேதாந்தத் தத்துவம் என்று இன்று பொதுவாகக் கூறப்படுவது, உண்மையில், தற்போது இந்தியாவிலுள்ள எல்லாப் பிரிவுகளையும் (மதங்களையும்) தன்னுள் அடக்கியதாகும். (ஏன்? உலக மதங்களும் இதில் அடக்கம் என்று பிற்பகுதியில் சுவாமிஜியே குறிப்பிடுகிறார்).

    எனவே அதற்குப் பல்வேறு விளக்கங்கள் இருந்திருக்கின்றன. இவை துவைதத்தில் துவங்கி, அத்வைதம் வரைப் படிப்படியாக முன்னேறி இருக்கவேண்டும் என்று நான் நினைக்கின்றேன். துவைதிகள் புராணங்களைப் பெரிதாகப் போற்றுகின்றனர், அத்வைதிகள் வேதாந்த நெறிகளையே முதன்மையாகக் கொள்கின்றனர்.

    வேதம்- அதற்கு எழுதப்பட்ட உரை வேதாந்தம். வேதாந்தம் என்ற சொல்லின் பொருள் வேதங்களின் முடிவு என்பதாகும். வேதங்கள் இந்துக்களின் சாஸ்திரங்கள். வேதங்கள் என்பவை துதிப் பாடல்களும், சடங்குகளும் மட்டுமே என்று பலராலும் சில வேளைகளில் கொள்ளப்படுகிறது. ஆனால் இந்தப் பகுதிகள் தற்போது ஏறக்குறைய  உபயோகத்தில் இல்லை.

    பொதுவாக வேதம் என்றால் வேதாந்தம் என்று தான் தற்போது இந்தியாவில் பொருள் கொள்ளப்படுகிறது. ‘வேதாந்தம்’ என்பது ‘சுருதி’ என்றத் தனிப் பெயராலும் அழைக்கப் படுகிறது.

    நடைமுறையில் இந்துக்களின் சாஸ்திரங்களாக இருப்பது வேதாந்தமே. வைதீகத் தத்துவங்கள் எல்லாம் வேதாந்தத்தையே அடிப்படையாகக் கொள்ள வேண்டும். தங்களுக்கு ஒத்துவருகிற வேதாந்தக் கொள்கைகளை மேற்கோளாகக் காட்ட, பெளத்தர்களும் சமணர்களும் கூடத் தயங்குவதில்லை.

    இந்தியத் தத்துவப் பிரிவுகள் எல்லாம், வேதங்களே தங்களுக்கு அடிப்படை உரிமை என்றுக் கொண்டாடினாலும், அவை தங்களின் நெறிகளுக்கு வெவ்வேறு பெயர்கள் வைத்துக் கொண்டன. இந்த நெறிகளுள் கடைசியானது வியாசருடையது. வியாசருக்கு முந்தியவை சில இருந்தும்; வியாசரின் நெறி தான் சிறப்பாக வேதாந்தத் தத்துவம் என்று அழைக்கப்படுகிறது.

    பொதுவாக இந்தியாவில் மூன்று விளக்க உரைகள்; அதன் பொருட்டு மூன்று தத்துவப் பிரிவுகளும், அதனால் மூன்று நெறிகளும் தோன்றி இருக்கின்றன.

    (வேதங்களின் விளக்க உரைகள் பாஷ்யம், டீகா, டிப்பணி, சூர்ணி என்று பலவகை. இதில் பாஷ்யமே மூலப்பாடத்தை ஆதாரமாகக் கொண்டு ஒரு கோட்பாட்டு முறையை  நிலைநாட்ட முயற்சித்தது).

    மூன்று நெறிகள்:

    vivek3முதலில் துவைதம்:  இரண்டு என்பது அதன் பொருள். அதாவது பரமாத்மா, ஜீவாத்மா என இரண்டு ஆத்மாக்கள் இருப்பதை நிலைநிறுத்தும் தத்துவம்,

    இரண்டாவது விசிஷ்டாத்வைதம்.

    மூன்றாவது அத்வைதம்: அத்வைதம் என்றால் இரண்டல்ல ஒன்றே; அதாவது பரமாத்மாவும், ஜீவாத்மாவும் ஒன்றே; எல்லா ஜீவன்களிலும் பரமாத்மாவே  இருக்கிறதாக கொள்வது ஆகும். இதில் இந்தியாவில் அத்வைதிகள் குறைவு.

    எல்லா வேதாந்திகளும் / வேதாந்த நெறிகள் பொதுவாக சில கருத்துக்களில் மட்டும் வேறுபடுகின்றன. ஆனால் மூன்று விஷயங்களில் ஒத்துப்  போகின்றன.

    அவை: 1.  கடவுள்,  2.  வேதங்கள், 3.    மூன்றாவதாக படைப்புச் சுழற்சி

    வேதங்கள் என்பது வேதாந்திகள் மூலம் அந்தப் பரம்பொருளிடம் இருந்து வெளிப்பட்ட அருள் வெளிப்பாடு, அதாவது ஞானிகள் மெஞ்ஞானத்தினால் உணர்ந்தவை. நமக்குப்  புரியும்படி  கூறினால்,  அது ஒரு திரைப்படமாக அவர்களுக்கு தெரிந்தது எனக் கொள்வோம். அப்படியானால், அவை எத்தனை நாட்கள் நிற்காமல் ஓடி இருக்க வேண்டும் எனத் தோன்றலாம்.

    இதை விளக்க யோகி ஓசோ அற்புதமான விளக்கத்தைக் கூறுவார். பகவத் கீதையில் போர்க்களத்திலே அவ்வளவு பேர் கூடிய அந்த வேளையிலே எப்படி பரமாத்மாவும், அர்ஜுனனும் அவ்வளவு  பேசிக்கொண்டார்கள். அது நம்பும்படியான கால அவகாசம் இல்லையே என்பதற்கு அருமையான விளக்கம்: அது நாம் பிறந்து வளர்ந்து, கல்யாணம் முடித்து என்று தொடரும் வாழ்க்கையை எப்படி அரைமணிக் கனவில் கண்டு விடுவோமோ அதைப் போன்ற ஒரு நிலையில் நடந்த விவாதம் எனக் கொள்ள வேண்டும் என்பார்.

    எவ்வளவு அற்புதமான விளக்கம்!

    இந்த மூன்றையும் அவர்கள் நம்புகிறார்கள்.

    படைப்புச் சுழற்சி பற்றிய நம்பிக்கை பின்வருமாறு:

    ஆகாசம் என்ற மூல ஜடப்பொருள் (உயிரற்ற பொருள்) ஒன்றிலிருந்து தோன்றியது தான் பிரபஞ்சம் முழுவதும்  காணப்படும் ஜடப்பொருள்கள் அனைத்தும். புவியீர்ப்பு சக்தி, இணைக்கும் சக்தி, விளக்கும் சக்தி போன்ற எல்லா சக்திகளும், உயிர் சக்தியும் பிராணன் என்ற ஓர் ஆதி சக்தியிலிருந்து தோன்றியவை.

    vivek4பிராணன் ஆகாசத்தின் மீது செயல்படுவதால் பிரபஞ்சம் படைக்கப்படுகிறது;  அல்லது வெளிப்படுகிறது. படைப்பின் தொடக்கத்தில் ஆகாசம் அசைவின்றி,  மாறுதல் இன்றி இருந்தது. அதன்மீது பிராணன் அதிக அளவில் செயல்பட்டு,  அதிலிருந்து செடிகள், பிராணிகள்,  மனிதர்கள்,  விண்மீன்கள், போன்ற தூலப் பொருட்களைப் படைத்தது.

    அடுத்தது பிரபஞ்ச மறைவு பற்றியதையும் இங்கேயே அவர் கூறியதை நினைவு கூர்வோம்.

    கணக்கிட முடியாத காலத்திற்குப் பின்னர் இந்த விரிவு அல்லது தோற்றம் ஒடுங்கத் தொடங்குகிறது. ஒவ்வொன்றும் தூல நிலையில் இருந்து படிப்படியாக சூட்சும நிலைக்கு மாறி, கடைசியில் முதற்பொருளான ஆகாசமும் பிராணனுமாக மாறி ஒடுங்கிவிடுகிறது.

    பிறகு,  மீண்டும் ஒரு புது சுழற்சி தொடங்குகிறது. இந்த ஆகாசத்திற்கும் பிராணனுக்கும் அப்பால் ஏதோ ஒன்று இருக்கிறது. இந்த இரண்டையும் மூன்றாவது பொருளாகிய ‘மகத்’ என்பதற்குள் சுருக்கலாம். இந்த மகத் என்பது தான் பிரபஞ்ச மனம் (Cosmic mind). இந்த பிரபஞ்ச மனம், ஆகாசத்தையும்,  பிராணனையும் படைப்பதில்லை: தானே அவையாக மாறுகிறது.

    (தயவு செய்து மெதுவாக கூர்ந்து இடைவெளி விட்டுப்  படிக்கவும்.  புரியாதது போல இருந்தாலும் மேலும் படிக்கவும் கொஞ்ச  நேரம் விட்டுப் படிக்கவும்.

    புரிந்தவற்றை  மட்டும் ஞாபகத்தில் கொண்டு, மேலும் படித்துக் கொண்டே போகவும்).

    வேத விளக்கங்களை நாம் அறியப் பெறுவது என்பது நமக்கு கிடைத்த வாய்ப்பு. அதை கொஞ்சம் சிரமப் பட்டாவது தெரிந்து கொண்டால் இன்னும் சிறப்பு. மற்ற மதத்தார் பெரும்பாலும் அவரவர் மதம் கூறும் நெறிகளை வெளிப்படையாகப் பேசுகிறார்கள்.

    ஆனால் உலகில் உள்ள அனைத்து மதங்களின் மூலமும் நம்முடைய வேதங்களில் இருந்து தான் பிறந்து இருக்கின்றன என்பதை நாம் எப்படி மற்றவர்களுக்கு சொல்வது? அல்லது மற்றவர்களுக்காக இல்லை என்றாலும், நம்முடைய மன திருப்திக்காகவேனும் தெரிந்து  கொள்ளலாம் அல்லவா?

    எல்லாவற்றிற்கும் ஒரு நேரம் வர வேண்டும் என்பார்கள். ஏன் அப்படிக் கூறுகிறேன் என்று நினைக்கலாம். இந்த விஷயங்கள் அடங்கிய விவேகானந்தரின் ‘ஞான தீபம் – சுடர் 4′ ஐ வாங்கி சுமார் பத்து வருடம் கழித்துத்  தான் நான் படிக்கிறேன் என்பதால்.

    சாங்கிய  மனஇயலின்படி, ஒரு பொருளை அறிவது என்பதை எடுத்துக் கொள்வோம்.

    உதாரணமாக, பார்ப்பது- இதில் முதலில் பார்க்கும் கருவிகளாக  கண்கள்  உள்ளன. இந்தப் பொறிகளுக்குப் பின்னால் பார்வைப் புலன்கள் (பார்வை நரம்புகளும், மையமும்)  இருக்கின்றன. இவை புறக்கருவிகள் அல்ல, இருந்தும் இவை இல்லாமல் நாம் பொருள்களைக்  காண இயலாது.

    இந்தப் பொறியும் புலனும் போதாது.   இதற்கு மேலாக இந்த உணர்ச்சி (பார்வை), மனத்தின் நிர்ணயிக்கும் பகுதியான புத்திக்குப் போக வேண்டும்.  மனத்தின் தீர்மானிக்கின்ற நிலையே, எதிர்ச்செயல் (எதிராக அல்ல! ஆனால், புத்திகெட்டால்  எதிராக செயல் புரியும்) புரிகின்ற நிலையே புத்தி.

    புத்தியில் எதிர்ச்செயல் நிகழ்ந்தவுடன் பிரபஞ்சமும், அகங்காரமும் வெளிப்படுகின்றன, அதன்பிறகு சங்கல்பம்.

    (பிரபஞ்சமும், அகங்காரமும் என்பதை பொருளின் வடிவமும் அதனால் நம் மனதில் ஏற்படும் உணர்வும் என்று நான் கொள்கிறேன் / அதாவது ஒரு பொருளை நாம் கண்ணால் பார்க்கும் போது நமக்கு ஏற்படும் உணர்வு. ஆயினும் பார்க்கும் செயல் முற்றுப்  பெறவில்லை.

    ஒரு பொருளின் பிம்பம் என்பது ஒளியின் படிப்படியான இயக்கத்தால் உருவாவது.  இந்த இயங்கும் பிம்பம், இயங்காத ஒரு பொருளின் மீது வைக்கும் போது தான் அப்பொருளைக் காண முடிகிறது. அதைப் போலவே, மனத்தில் ஏற்படும் கருத்துக்களும் தொகுக்கப்பட்டு, நிலையான ஒன்றின் மீது வைக்கப்படும் போது

    புறப்பொருளில் வைத்து அதன் உண்மையைக் காண்பவன் விஞ்ஞானி. அகப் பொருளில் வைத்து உண்மையை உணர்பவன் மெஞ்ஞானி என நான் புரிந்து கொள்கிறேன்.  ஆக விஞ்ஞானி காண்கிறான், நமக்கும் காட்டுகிறான். மெஞ்ஞானி உணர்கிறான், ஆக நாமும் உணரத் தான் முடியும். ஒப்பிட அதைப் போல வேறு ஒன்று இந்தப் பிரபஞ்சத்தில் இல்லை. அப்படி முயன்றால், அது பிறவிக் குருடனுக்கு, வெள்ளை நிறத்தை புரிய வைக்க முயல்வது போல் என நான் உணர்கிறேன்).

    ஆக, இயங்கும் உடம்பையும், மனத்தையும் நிலையாக இருக்கும் ஒன்றின் மீது குவிக்க வேண்டும்.

    நிலையாக இருக்கும் அந்த ஒன்று தான் புருஷன் அல்லது ஆன்மா.

    (இங்கே சாங்கியர்களுக்கும், துவைதிகளிக்கும், அத்வைதிகளுக்கும் உள்ள சிறு வேறு கருத்தை சுவாமியின் வழி நின்று சுருங்க கூறுகிறேன்)

    .

    சாங்கியர்கள்:

    பிரபஞ்ச மனத்திற்கு (‘மகத்’ / Cosmic Mind ) அப்பால்,  அவ்யக்த  நிலையில் / தோன்றாநிலை ஒன்று இருப்பதாகவும், அங்கே மனம்  கூடத்தோன்றா நிலையிலேயே இருப்பதாகவும்,  ஆனால்  தோன்றுவதற்கான   காரணங்கள் இருப்பதாக சாங்கியத் தத்துவம்  கூறுகிறது.  அதாவது இந்த நிலையை ‘பிரகிருதி’ என்கிறது.

    அதற்கும் அப்பால், மேல் கூறியதுடன் எந்த தொடர்பும் இல்லாமல், குணமற்றதான, எங்கும் நிறைந்த  புருஷன் / சாங்கியர்கள் கூறுகின்ற ஆன்மா இருக்கிறது. புருஷன் எதையும் செய்பவன் அல்ல. சாட்சி மட்டுமே.

    அது  அதன் முன்பு வைக்கும் பொருளின் நிறத்தை பிரதிபலிக்கும்  படிகம் போல என்கிறார்கள்.

    .

    துவைதிகள்:

    ஆன்மா அல்லது இறைவன். இந்தப் பிரபஞ்சத்திற்கு நிமித்தக் காரனும், அவனே உபாதானக் காரனாகவும் இருக்கிறான் என்பர்.

    (அதாவது பானை செய்யும் குயவன், மண்பாண்டங்கள் செய்வதற்கு நிமித்தக்காரன். மண்ணும், சக்கரமும் உபாதானக் காரணம் என்பதாகும். ஆக, பானையும் அதைச்செய்ய பயன்படும் கருவிகளும் இவனில் இருந்து வேறு என்பதாகும். அதாவது எளிதாகப் புரிந்து கொள்ளும் படி சொன்னால். பானை செய்யும் குயவன் வேறு. பானை வேறு, பானை செய்யப் பயன்படும் கருவிகள் வேறு என்பதாம்).

    ஆக, இவர்கள் (துவைதிகள்)  கூறுவது, இயற்கையும் (திடப்பொருள்), ஆன்மாவும், இறைவனின் உடல் போன்றது என்கிறார்கள். இந்தக் கூற்றுப் படி இறைவனும், பிரபஞ்சமும் ஒன்று எனக் கூறலாம்.

    ஆக இந்த இயற்கையும், அதில் பல்வேறு ஆன்மாக்களும், என்றும்  ஒன்றுக்கொன்று வேறுபட்டன. ஒரு படைப்பின் (கல்பத்தில்) ஆரம்பத்தில் வெளிப்பட்டு, பிறகு படைப்பின் முடிவில் (பிரபஞ்சம்  அழியும்  நிலையில்)  நுட்பமாகி, நுட்ப நிலையிலே இருந்து விடுகின்றன என்கிறார்கள்.

    அத்வைதம்:

    vivek5அத்வைதம், இந்தக் கருத்துகளில் இன்னும் சற்று உள்நோக்கிச் சென்று  மாறுபட்டு (இல்லை மேம்பட்டு என்று நான் கருதுகிறேன்) கூறுகின்றது.

    ஏறக்குறைய எல்லா உபநிடதங்களும் இவர்களுக்கு  (அத்வைதிகளுக்கு)   சாதகமாக இருப்பதாலும், அவற்றையே  தங்களின் தத்துவத்திற்கு முற்றிலும் அடிப்படையாகக் கொள்கிறார்கள்.

    அதாவது பிரபஞ்சம் முழுவதும் ஒன்றே, ஒரே பரம்பொருள் தான்  இப்படிப் பல உருவங்களாக  வெளிப்படுகிறார் என்பது அவர்களின்  கருத்து.

    ‘ஸத்’என்ற இந்தப் பரம்பொருள் தான் எல்லாமாக, பிரபஞ்சம், மனிதன், ஆன்மா, பிற பொருள்கள்  அனைத்துமாக  மாறுகிறார்.

    மனம், மகத் (காஸ்மிக் மைன்ட் / தியானத்தில் அடையும் அறிவுநிலை)

    இரண்டுமே அந்த ‘ஸத்’ என்ற ஒன்றின் வெளிப்பாடு.  ஆக இந்த பிரபஞ்சம் இறைவனின் பரிணாமம்,   என்றும் மாறாத அந்தப் பொருள், மாறுவதாக நமக்குத் தெரிவதெல்லாம்,  தேசம், காலம், நிமித்தம் இன்னும் சொல்லப் போனால் நாமரூபங்களே.

     (பெயரும், உருவமும் தான் வேறு வேறு. இதில் மனிதனின் நாடு, நிறம், மொழி, இன்னும் பல பிரிவுகள், மனித நாகரிகத்தின் வளர்ச்சியில் அங்கமாகி,   அவையே  கயமையின் பிடியில் பங்கமாகி,  கடைசியில் துயரத்தில் சங்கமமாகி விட்டது. கடைசியில் தங்கம், தகரமாகி விட்டது. இவை அனைத்து உயிர்களுக்கும் எனலாம். பிறப்பில் உயர்வு தாழ்வு இல்லை. குதிரை என்பதால் கர்வமோ, கழுதை என்பதால் தாழ்வோ கொள்ள வேண்டாம்.

     பெரிய ஓங்கி உயர்ந்த மரத்தைப் படைத்தவன் சிறிய காயை அதிலே  காய்க்க வைத்தான். நிற்க முடியாதக் கொடிகளில் அவ்வளவு  பெரிய பரங்கிப்  பழத்தை வைத்தான். இறைவா! இவ்வளவு பெரிய மரத்தை படைத்து அதிலே இவ்வளவு சிறியக் காயைப் வைத்தாய் என்றால்.

     இறைவனோ, ‘மகனே நீயோ, மரத்தையும், அதன் காயின் அளவையும் பார்க்கிறாய். நானோ, வெயிலின் கொடுமையில் சற்று இளைப்பாற அம் மரத்தின் அடியில் வந்து அமரும் மற்ற ஜீவன்களைப் பார்க்கிறேன்’ என்கிறார்.

    பெரிய மரத்தில் பூசணி போன்றக் காய் காய்த்தால், அதன் அடியில் ஓய்வெடுக்கும் உயிர்களின் நிலை என்ன? சிந்திக்கத் தான் வேண்டும்.  ஒவ்வொன்றுக்கும் தனிச்  சிறப்பு, காரணம், அவசியம் உண்டு. அது அனைத்திலும் தெய்வீகம் இயங்குகிறது என்றும் கூறுவேன்).

    பரம்பொருள், உண்மைத்  தோற்றம் என்ற இரண்டல்ல, ஒன்றே. அது மாறாதது என்பதே வேதாந்திகள் கூறுவதும் ஆகும். மாறும் தோற்றம் என்பது மாயை.

    அறியாமையில் இருக்கும் போது,  (இங்கு அறியாமை என்பது, நமது சாதாரண புத்தியாகிய மனமும் அல்ல அல்லது அதனுக்கு உதவும் இந்த உடலும் அல்ல) பிரபஞ்சத் தோற்றத்தை மட்டுமே ஒருவன் காண்கிறான்;  இறைவனைக் காண்பதில்லை.

    இறைவனைக் காணும் (உணரும்) அந்தக் கணமே அவனைப் பொருத்த வரையில் பிரபஞ்சம் மறைந்து விடுகிறது.   மாயை என்று சொல்லப்படும்  அறியாமையே இத் தோற்றங்களுக்கெல்லாம் காரணம்.

    பரம்பொருள், ஒன்றானது மாறாதது. அப்படிப்பட்ட ஒரேத் தன்மையாக உள்ள ஒன்றை, பிரபஞ்சமாகத் தோன்றச் செய்வது இந்த மாயை மட்டுமே.

    மாயை என்பது சுத்த சூன்யமோ, அல்லது இல்லாத ஒன்றோ அல்ல.  சரி பிறகு,  இருப்பது என்றோ அல்லது இல்லாதது என்றோ கூறமுடியாது.

    இவ்வகையில் இருப்பது அல்ல; ஏனெனில், பூரணமான, மாறுதலில்லாத  இறைவனைப் பற்றி மட்டுமே இப்படிச் சொல்ல முடியும் இருப்பதாக.

    சரி, இல்லாதது என்றால்? இல்லாத ஒன்றால் எப்படி தோற்றத்தை உண்டுபண்ண முடியும்?  ஆக மாயை என்பது, இருப்பதுவும், இல்லாததுமான, இந்த இரண்டும் அல்லாத ஒன்று.

    அதை வேதாந்தத் தத்துவத்தில் ‘அநீர்வசனியம்’ அல்லது விளக்கமுடியாது (உணர வேண்டியதை இப்படிக் கூறலாம்) என்கிறார்கள்.  இந்த மாயையே பிரபஞ்சத்திற்கு உண்மையானக் காரணம்.

    இறைவன் பிரபஞ்சத்திற்கு அடிப்படைப் பொருளைத் தருகிறார், மாயை அதற்கு நாம ரூபங்களைத் தருகிறது.

    அத்வைத வேதாந்தத்தில் தனி ஆன்மாவுக்கு இடமில்லை.   தனி ஆன்மாவைப் படைத்தது (இருப்பதாக உண்டாக்கியது) இந்த மாயை என்பது அவர்களின் வாதம்.

    உண்மையில் தனி ஆன்மாவெல்லாம் இருக்கமுடியாது, இருப்பது உண்மையில் ஒன்றே என்றால், நான் வேறு, நீங்கள் வேறு என்றெல்லாம் எப்படி இருக்கமுடியும்? நாம் அனைவரும் ஒன்றே.

    பன்மையைக் காண்பது தான் தீமைக்கானக் காரணம்.

     (இந்த இடத்தில் இன்னொரு விஷயத்தையும் கூற முனைகிறேன், ஆதி சங்கரருக்கு, ஈசனே ஒரு புலையனாக வடிவம்  கொண்டு  வந்து,   அவர் எழுதிய வேத விளக்கத்திற்கு ‘எதையோ தின்று  வளர்ந்த  இந்த உடலைக் கண்டு பேதம் காணாதே. அனைவருள்ளும் நானே  இருக்கிறேன்’  என்று நர்மதை  நதிக்கரையில் பாடம் புகுத்தி விட்டுச்  சென்றார் என்ற வரலாற்றை ஞாபகத்தில் கொள்வோம்)

     நான் வேறு, பிரபஞ்சம் வேறு என்று உணர ஆரம்பித்த உடனேயே முதலில் பயம் தோன்றுகிறது. அதைத் தொடர்ந்து துன்பம் உண்டாகிறது.

    எங்கே தன்னை அல்லாமல் மற்றவனைப் பார்கிறானோ (வேறுபடுத்தி), அவன் வார்த்தையே அது என்றும் வேறுபடுத்திக் கேட்கிறானோ, அது சிறியது.  எங்கே பிறரைக் காண்பதில்லையோ, கேட்பதில்லையோ. அது பெரியது.

    அங்கே பேரானந்தம் இருக்கிறது. சிறியதில் இந்த இன்பம் இல்லை.  அத்வைத தத்துவத்தின் படி, பிரபஞ்சத்தில் காணும் இந்த வேறுபாடு, இந்தத் தோற்றம் சில காலம் மனிதனின் உண்மை இயல்பை மறைத்து  நிற்கிறது.  ஆனால், இந்த இயல்பு என்னவோ மாறுவதே இல்லை.

    மிகத்  தாழ்ந்த புழுவிலும், மிக உயர்ந்த மனிதனிலும் ஒரே தெய்வீக இயல்பு இருக்கிறது.

    இந்த தெய்வீக இயல்பு மனிதனைவிட புழுவிடம் (விலங்குகளிடம்) அதிகம் இருக்கிறது.

    (இந்த இடத்தில் நான் கூற விரும்புவது சுனாமியில்; மனித அறிவுக்கு எட்டும் முன். இவன் தான் கண்ணால் காண்பதை மட்டுமே நம்புகிறவனாயிற்றே! தனது அற்புத சக்தியால் விலங்குகள் அதை (சுனாமி என்னும் பேராபத்தை) அறிந்து அந்த பேராபத்தில் தங்களைக் காப்பாத்திக் கொண்டதை நாம் அனைவரும் அறிவோம்.

     உதாரணமாக, தாய்லாந்தின் கடற்கரையில் கட்டிவைத்திருந்த குதிரை ஒன்று திடீர் என்று கனைப்பதையும், விசும்புவதையும், சிறிது நேரத்தில் சுனாமி என்னும் ஆழிப் பேரலை வந்ததையும் எதேச்சையாகப் பதிவு செய்யப்பட்ட காமிராவில் பதிவானக் காட்சியை பிறகு காண நேரிட்டது என்பதை நினைவு கூறுகிறேன்).

     இப்படி வொவ்வொன்றுக்கும் பின்னணியாக அந்த தெய்வம் அல்ல (தெய்வம் என்றால் அது நமக்குள் இல்லாத மூன்றாவதான ஒன்றைக் கூறுவதாகிவிடும்) தெய்வீக இயல்பு இருக்கிறது.

    எனவே நன்னெறி அடிப்படையில், ‘ ஒருவருக்கும் தீங்கு செய்யாதே!  அது உனக்கு நீயே செய்வதாகும். பிறரை  நேசிக்கும் போது நம்மையே நாமும் நேசிப்பதாகும்’.

     (இதை நமது வேதம் சொன்னது என்றால், இதைக் கூறாத வேறு மதம் இந்த உலகில் உண்டா? அப்படி கூறும் அத்தனை மதங்களும் இந்த வேதத்திற்குள் அடக்கம் அல்ல. அவற்றுக்கெல்லாம், இதுவே சாரம் என்றும் சொல்ல துணியலாம். இடம், காலம், சூழல்  ஆகியவற்றின்  நிலைக்கு ஏற்ப  பரம்பொருளால் உண்டாக்கப் பட்டதே  உலகில்  உண்டான  அத்தனை, தத்துவங்களும். அதனைத் தழுவும் மதங்களும். இதில் உயர்வு தாழ்வு ஏது? என்பதே எனது பார்வை )

     இதிலிருந்து அத்வைதநெறியே உண்டாகிறது.  இதை தன்னல மறுப்பு எனச் சொல்லலாம்.

    இந்தச் சிறிய ‘நான்’ என்பதே நமது எல்லாத் துன்பங்களுக்கும் காரணம் என்று அத்வைதி சொல்கிறான்.

    இந்த ‘நான்’ என்பதன் காரணமாகத் தான் வெறுப்பும், பொறாமையும்,   துன்பமும், போராட்டமும்,  பிற தீமைகளும் தோன்றுகின்றன.

    இந்த ‘நான்’ எப்போது ஒழிகிறதோ அப்போது துன்பமும் நம்மை விட்டு  ஒழியும்.

    (இங்​கே சமூக பார்​வை​ வேண்டாம். நம்​மைப் பற்றி மட்டும் ​​யோசிப்​போம். ஒவ்​வொருவரும் மாறினால் சமூகம் மாறும். உட​னே அவன், இவன், அரசாங்கம் என்று ​யோசித்து பா​தை மாற ​வேண்டாம். நாம் எதற்கெடுத்தாலும் பிற​ரை காண்பித்து நம்​மை ம​றைத்து வாழ்ந்து பழகுகி​றோம்)

    நான் எப்போது அழிந்தது?

    எப்போது ஒரு சிறு பிராணிக்காகக் கூட தன் உயிரையே எவனொருவன்  தரத் துணிகிறானோ,  அப்போது அந்தக் கணமே அவன் அத்வைதிகளின் லட்சியமான பூரண நிலையை அடைகிறான்.

    அறியாமைத் திரை விலகுகிறது. அவனும் பிரபஞ்சமும் ஒன்றே என்ற நிலை வந்துவிடுவதொடு, அந்தத் தோற்றம் மறைந்து விடுகிறது. தான் யார் என்ற உண்மையை அறிந்த பின்!

     (எனக்குத் தோன்றிய வரை, ‘தான்’, தான் அந்தப் பரம்பொருள் என்பது தானே அந்த உண்மையாக இருக்க முடியும்?)

    பிறகு என்ன? அழைப்பு வரும் வரை இந்த உடலிலேயே இருக்க வேண்டியது தான்.

    இது தான் ஜீவன் முக்தி என்பதாகும். இப்படி ஜீவன் முக்தி அடைந்தவர் முன்பு, மீண்டும் இந்த மாயைத் தோன்றினால்  அவர்கள் அதில் மயங்க மாட்டார்கள்.

    (படம் பார்ப்பவனுக்கு மாத்திரமே இந்த நுனி இருக்கை  அமர்வெல்லாம். மாறாக, படத்தை இயக்கும்  இயக்குனருக்கும், அந்தப் படத்தை முன்பே பார்த்துவிட்டு இது தான் முடிவு என்று தெரிந்தவர்களுக்கும்,  ஏது இந்த நுனி இருக்கை அமர்வு. கண்ணீரும் கவலையும் என்று கூட எளிமையாக நான் கூறுவேன்).

    அவர்கள் அது கானல் நீரென்பதை அறிந்தவர்கள், கண்களும், புலன்களும் வேலை செய்யும் வரை, அவன் அந்த கானல் நீரைப் பார்ப்பான். பிரபஞ்சம் மறைந்து விட்ட நிலையில் அவனை, இந்த மாயையான துன்பம் ஒன்றும் செய்யாது.

    என்றும் அவன் ‘சத் – சித்- ஆனந்தமாக, தனியிருப்பாக, தனியறிவாக,  தனி ஆனந்தமாக மாறிவிட்டான்.   இந்த நிலையை அடைவது தான்  அத்வைத வேதாந்தத்தின் லட்சியம் என்கிறார் சுவாமிஜி.

    .

    சுவாமிஜியின் லட்சியம்:

    vivek6சுவாமியின் கண்டங்கள் கடந்த  பயணம், இந்து மதத்தையும், இந்தியாவையும், இந்தியனையும் இந்த உலகிற்கு பறை சாற்ற மட்டுமாக அமைந்தது இல்லை. அப்படி நாம் அதைப் பார்த்துப் பெருமைப் பட்டுக் கொண்டாலும் அது மாத்திரம் அல்ல!

    அவரின் பயணம், இந்த புவியையும், புவியில் வாழும் மனிதர்கள் யாவரையும் புனிதர்களாக்க, பேரொளியில் மூழ்கித் திளைக்க செய்யவே! அது தான் ஒவ்வொரு உயிரின் லட்சியமும் கூட, அதனை மனிதனாகப் பிறந்த நம்மால் தான் செய்ய முடியும்.

    அந்தப் பிறவிப் பயனை அடைய யாவரும் முயலுங்கள், அதை உத்வேகமாக, உண்மையாக மாற்றம் கொள்ளாத மனத்தோடு இப்போதே செய்ய ஆரம்பியுங்கள். அது நிச்சயம் கைகூடும்.

    அப்படி கைகூடியதால் இந்திய மண்ணிலே எத்தனைப் பெரிய ஞானிகள் பிறந்து, இன்றைய அறிவியல் வெளிக்கொணரும் இந்த பிரபஞ்ச கூறுகள் யாவற்றையும் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கீழ்த்திசையிலே இருந்த அவர்கள் தனது பெரும் ஞானத்தால் முன் மொழிந்து சென்று இருக்கிறார்கள்; அதை நீங்கள் யாவரும் அறிந்து கொள்ளுங்கள்.

    அப்படியானால் அவர்கள் கூறிய வழியிலே யாவரும் பயணித்தால், யாவருக்குமந்த ஞானம், பேரறிவு, பேரானந்தம் கிட்டும், இதை உறுதியாக நம்புங்கள். உறங்கியது போதும் ‘விழித்தெழுங்கள்’ என்று அரை கூவல் விடவே அங்கு சென்றார் என்பது இன்னும் ஆழச் சிந்தித்தால் அனைவருக்கும் தெளிவாகப் புரியும்.

    அவரின் அவதார நோக்கமே, அனைவருக்கும், இன்னும் சொன்னால் உலகில் உள்ள யாவருக்கும், இன்னும் துல்லியமாகச் சொன்னால் உலகில் இருக்கும் ஒவ்வொரு பாமரனுக்கும் இந்தச் செய்தியைக் கொண்டு செல்லவே. அப்படியே செய்தார்.

    வாழ்க மானுட லட்சியம்!

    வளர்ந்து எங்கும் பரவட்டும் வேதாந்த தத்துவம்!!

    உலகமே பேரொளியில் திளைத்து பேரானந்தம் அடையட்டும்!
    .

    படங்களுக்கு நன்றி.

    http://www.narendramodi.in

    http://artistmaruthi.blogspot.sg

    www.google.com.sg

    Share
  • வம்சம்

    தேமொழி

    அரசி ஆன் என்ற பெயரில் ஐரோப்பிய வரலாற்றில் பல அரசிகள் இருந்தனர்.  ஆனால் இங்கிலாந்தின் பேரரசி ஆன் என்பவர்தான் பொதுவாக பலருக்கும் நினைவிற்கு வருபவர்.  அதிலும் இங்கிலாந்தின் பேரரசி ஆன் (Anne, The Queen of Great Britain – 6 February 1665 – 1 August 1714) அம்மையாரின் பெயர் சொன்னால் பெரும்பாலானோருக்கு அவரைப் பற்றிய பலப் பலவிதமான செய்திகள் நினைவுக்கு வரும்.

    – இங்கிலாந்தும் ஸ்காட்லாந்தும் இணைந்து முதன் முதலாக உருவாகிய கிரேட் பிரிட்டனின் முதல் பேரரசி

    – இங்கிலாந்தில் இரு கட்சிகள் நடத்தும் அரசியலுக்கு வழி வகுத்தவர்

    – இங்கிலாந்து பாராளுமன்றத்தின் சட்டத்தை தடை செய்த கடைசி அரசி.  இவருக்கு பிறகு அரச குடும்பத்தினர் பாராளுமன்றத்தின் முடிவை எதிர்க்கும் அதிகாரம் இழந்துவிட்டனர்

    – இவர் காலத்தில்தான் லண்டனின் செயின்ட் பால் தேவாலயம் (St Paul’s Cathedral, London) கட்டி முடிக்கப் பட்டது

    – அரசி இங்கிலாந்தின் வரலாற்றில் முக்கியமான காலகட்டத்தில் ஆட்சி செய்தார்; உள்நாட்டு அரசியலில் முகியத்துவம் வாய்ந்தது: இங்கிலாந்தும் ஸ்காட்லாந்தும் ஒரே பாராளுமன்றமாக இணைந்து இயங்க ஆரம்பித்தது; உலக வரலாற்றில்: ஸ்பெயினின் வாரிசுரிமைப் போரில் ஈடுபட்டு ஃப்ரான்ஸை வீழ்த்தி ஸ்பெயின் நாட்டின் வாரிசுரிமைப் போரை ( War of the Spanish Succession) முடிவுக்கு கொண்டு வந்ததன் மூலம் உலக அளவில் இங்கிலாந்தை ஒரு வல்லரசாக உருவகப் படுத்திக் காண்பித்தார், இவர் காலத்தில் திறமை வாய்ந்த தளபதியின் கீழ் பல போர்களில் இங்கிலாந்து தொடர்ந்து வெற்றி பெற்றது

    – கட்டிடக் கலையில், கட்டிடத்தின் மேல் முகப்பில் முக்கோண முகப்பும், சுவர்களில் தொடர்ந்து வரிசையான ஜன்னல்களும் உள்ள கட்டிடங்களினால் “குயீன் ஆன் ஸ்டைல் ஆர்கிடெக்ட்சர் ” (Queen Anne style architecture) என்று அவர் கால கட்டிடக்கலை பெயர் பெற்றது

    – வளைந்த கால்களையுடைய, மென்மையான திண்டுகள் வைத்து தைத்த, வசதியான, எடை குறைந்த, மெல்லிய, கலை அழகுள்ள வேலைப்பாடுகள் நிறைந்த இருக்கைகளும், படுக்கைகளும், பஞ்சனைகளும், ஆசனங்களும்  “குயீன் ஆன் ஸ்டைல் ஃபர்னிசச்சர் ” (Queen Anne style furniture) என்று பெயர் பெற்றன

    – ஸ்பெயினின் வாரிசுரிமைப்போர் அமரிக்காவிலும் நடந்தது.  அங்கிருந்த இங்கிலாந்து வீரர்கள், செவ்விந்தியர்கள் உதவியுடன் அமெரிக்க மண்ணில் இருந்த ஃப்ரான்ஸ் படையுடன் போரிட்டு வெற்றி பெற்றனர்.  அப்போரை அமெரிக்க வரலாறு “குயீன் ஆன்னின் போர்” என்றுதான் குறிப்பிடுகிறது.  அரசியின் நினைவாக “மேரிலாண்ட்” மாநிலத்தில் “குயீன் ஆன் கவுண்டி” (Queen Anne County) என்ற ஒரு மாவட்டமும், மற்றும் அந்நாட்டில் ஆங்காங்கே அவர் பெயரில் சில ஊர்களும் வீதிகளும் கட்டிடங்களும் உள்ளன

    – இவர் நட்பின் கதையும் மிகவும் பிரபலமானது.  சிறு வயது முதல் “ஸாரா”  என்னும் பெண் இவரது உற்ற தோழியாய் விளங்கினார்.  அரச பரம்பரையில் பிறக்காத தோழியின் குலப் பின்னணியை அவர் ஒரு பொருட்டாக ஒருநாளும் கருதியதேயில்லை.  அந்தத் தோழியிடம் கலந்தாலோசிக்காமல் எதையும் செய்ய மாட்டார் என்ற நிலையில் இருந்தார்.  அரசியான பின் தன் தோழியின் கணவரை ராணுவத் தளபதியாக்கினார்.  தளபதியும் மிகத் திறமையானவர். பலபோர்களில் வெற்றி பெற்று அரசியின் அரசாட்சியை உறுதியாக்கி அரசிக்குப் பெருமை பல சேர்த்தார்.  அரசியும் மனமகிழ்ந்து தோழிக்கும் அவர் கணவருக்கும் பரிசுகளாகக் குவித்தார்.  பட்டங்களாக அள்ளி வழங்கினார்.  தோழி ஸாராவின் உறவினர்களும் நண்பர்களும் கூட இந்த நட்பினால் பயனடைந்தார்கள்.  பல நல்ல பதவிகளைப் பெற்றுக் கொண்டார்கள்.  ஆனால் தோழி ஸாராவிற்கு வாய்த்துடுக்கு கொஞ்சம் அதிகம்.  அரசிக்கு கிடைத்த மற்றொரு தோழியிடம் அரசி அன்பு காட்டுவதினால் பொறாமை கொண்டார்.  பொது இடத்தில் அரசி என்றும் பாராமல் வாயாடினார்.  அரசியை அவமதித்துப் பேசினார்.  அரசிக்கு வந்தது கோபம்.  ஒரே நாளில் ஸாராவின் உறவினர்களையும் நண்பர்களையும் உதறித் தள்ளினார்.  சாராவின் கணவர் நாட்டிற்காகவும் தனக்காகவும் செய்த சேவைகள் அனைத்தையும் மதிக்காமல் அவரது பதவியைப் பறித்து அவரையும் வெளியேற்றினார்.  அதன் பிறகு கடைசிவரை தன் தோழியைப் பார்க்க மறுத்துவிட்டார் (இது எங்கேயோ படித்த மிகப் பரிச்சயமான கதை போல் தோன்றுகிறது)

    – Cricket is not illegal, for it is a manly game – என்ற பொன்மொழியை உதிர்த்தவர்

    – பிற்காலத்தில் கடல் கொள்ளைக்காரனாக மாறிய அரசியின் கடற்படை மாலுமி கருந்தாடி (Blackbeard) அரசியின் மீது கொண்ட அபிமானத்தினால் தன் கப்பலுக்கு “குயீன் ஆன்னின் சபதம்”  (Queen Anne’s Revenge) என்று பெயர் சூட்டினான்.

    – ஏன் ஒரு பூவிற்கு (Queen Anne’s lace) கூட அரசியின் பெயர் உண்டு

    எது எப்படியானாலும் எல்லாவற்றிக்கும் மேலாக அரசி ஆன் என்றால் அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது இவர் ஸ்டூவர்ட்” வம்சத்தின் கடைசி அரச வாரிசு என்பதே.  14 ஆம் நூற்றாண்டு முதல் ஸ்காட்லாண்ட் மற்றும் இங்கிலாந்து நாடுகளை ஆண்ட ஸ்டூவர்ட் வம்சத்தின் அரசாட்சி இவருடன் முடிந்தது என்பது தவிர்க்க முடியாமல் நினைவிற்கு வரும் அளவிற்கு முக்கியத்துவம் கொண்டது.

    அரசி ஆன் தனது 37 ஆவது வயதில் (1702) இங்கிலாந்தின் அரசியானார், இவர் தன் 49 வயதில் நோயுற்று இறக்கும் வரை 12 ஆண்டுகள் அரசாட்சி செய்தார். ஆனால் இவருக்கு அரசபரம்பரை வாரிசுரிமைப்படி அரசியாகும் வாய்ப்பு இருந்ததோ மிக மிக சொற்பம்.  ஆனாலும் இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, அயர்லாந்து ஆகிய மூன்று நாடுகளையும் ஆளும் அரசியாகும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

    அரசி ஆன், ஸ்டூவர்ட் “Stuarts” of England and “Stewarts” of Scotland பரம்பரையில் பிறந்த இளவரசர் ஜேம்ஸ்க்கும், அவர் மனைவி ஆன் ஹைடுக்கும் பிறந்தார்.  பிறந்தது முதலே கண்களில் நீர் தொடர்ந்து வழியும் ஒரு கண் நோயில் ஆரம்பித்து, அம்மை, கீல்வாதம், வாழ்நாள் முழுவதும் இரத்த சம்பந்தப் பட்ட நோய் (porphyria)  என தொடர்ந்து நோயினால் பாதிக்கப் பட்டவண்ணமே இருந்தார்.  பிறந்தவுடன் கண் நோயைக் குணப்படுத்த ஃப்ரான்ஸ்ஸில் உள்ள பாட்டி வீட்டிற்கு அனுப்பி வைக்கப் பட்டார்.  ஆனால் பாட்டி இறந்தவுடன் 6 வயதில் நாடு திரும்புவதற்குள் தாயும் இறந்து விட்டிருந்தார்.  இவர் பெற்றோர்களுக்குப் பிறந்த எட்டு குழந்தைகளில் ஆறு குழந்தைகள் ஆறு வயது தாண்டுவதற்குள் இறந்துவிட மிஞ்சியது ஆனும் அவர் தமக்கை மேரி மட்டுமே.

    அரசுரிமை ஏற்கப் போகும் இளவரசர்களுக்கு வழங்கப்படும் படை, போர் பயிற்சி, சட்டக் கல்வி போன்ற கல்விகள் கற்று கொடுக்கப் படாமல் மற்ற பிரபுக்களின் பிள்ளைகள் போல் இசை, இலக்கியம், மதம் போன்ற கல்வி கற்று வளர்ந்தார்.  இவர் வளர்ந்த காலத்தில் இவர் பெரியப்பா இரண்டாம் சார்லஸ் அரசாட்சி செய்து கொண்டிருந்தார்.  நாடும் அரச குடும்பமும் புராட்டஸ்ட்டண்ட் கிறிஸ்துவ மதப் பிரிவை தீவிரமாக தழுவி வந்தனர். அத்துடன் கத்தோலிக்க கிறிஸ்துவப் பிரிவினரை வெறுத்து எதிர்த்து வந்தனர்.

    அரச குல வழக்கப்படி நாட்டின் அரசியல், அயல் நாட்டின் நட்பு போன்ற காரணங்களை கருத்தில் கொண்டு இவர் அக்கா மேரி நெதர்லாண்ட் இளவரசர் வில்லியமிற்கும், இளவரசி ஆன் டென்மார்க் இளவரசர் ஜார்ஜிற்கும் திருமணம் செய்து கொடுக்கப் பட்டனர்.  ஜார்ஜும் ஆனும் இறுதிவரை மிக அன்புடன் குடும்பம் நடத்தினர்.  ஜார்ஜ் அறிவும் திறமையும் குறைந்தவர், பெரிய குடிகாரர் எனப் பெயர் வாங்கினாலும் அன்பான, அழகான, மனைவிக்கு துரோகம் நினைக்காத நம்பிக்கைக்குரிய கணவர் எனப் போற்றப் பட்டார்.   பிற்காலத்தில் கணவர் மறைந்தவுடன் ஆன் மிக மனமுடைந்து போனார்.

    இதற்கிடையில் நாட்டிலும் பல மாறுதல்கள் நிகழ்ந்தன. அரசராக இருந்த ஆனின் பெரியப்பா இரண்டாம் சார்லஸ் இறந்தார்.  அவரது பட்டதரசிக்கு குழந்தையில்லை.  ஆனால் ஒரு குத்துமதிப்பாக அரசருக்கு இருந்த 14 ஆசை நாயகிகளும் (வரலாற்று அறிஞர்களின் கணக்குப்படி) அவர்கள் மூலம் முறைதவறிய வழியில் பிறந்த (illegitimate) 14 பிள்ளைகளும் அரசாளும் தகுதி இல்லாததால் ஆட்சியுரிமையை இழந்தார்கள். இதனால் ஆனின் அப்பா ஜேம்ஸ் அரசரானார்.  இவர் கத்தோலிக்க கிறிஸ்துவ மதத்திற்கு மாறியதுடன் நில்லாமல் கத்தோலிக்க கிறிஸ்துவ பெண்ணையும் மறுமணம் செய்திருந்தார்.

    புதிதாக பதவியற்ற அரசருக்கு ஒரு மகனும் பிறந்தான்.  இங்கிலாந்து மக்களும், பாராளுமன்றமும் ஒரு கத்தோலிக்க அரச குடும்பத்திற்கு அரசுரிமை போனதை விரும்பவில்லை.

    நெதர்லாண்ட் இளவரசர் வில்லியமை மணந்து சென்றுவிட்ட ஆனின் அக்கா மேரியை படையெடுத்து வரும்படி அழைத்தனர். பெரியமகளும் மருமகனும் படையுடன் வந்து இங்கிலாந்து மன்னரை நாட்டிலிருந்து துரத்தினர் (Glorious Revolution of 1688).  அரசி ஆன் தன் அக்காவிற்கு துணை போனதுடன் நிராதரவான தந்தைக்கும் உதவவில்லை.  மீண்டும் நாட்டில் புராட்டஸ்ட்டண்ட் மன்னராட்சியாக வில்லியமும் மேரியும் இணைந்து அரசாண்டனர்.  மேரிக்கு மூன்று கருச் சிதைவிற்குபின் குழந்தையே பிறக்காமல் போனது.  வாரிசற்ற அக்காவிற்குப் பிறகு தனக்கும் தன் சந்ததியினருக்கும் அரசுரிமை கிடைக்கக் கூடும் என்ற திட்டத்தினாலும் ஆன் தன் தந்தைக்கு உதவாமல் இருதிருக்கக் கூடும்.  எப்படியோ மகள்களின் துரோகத்தினால் அப்பா ஜேமேஸ் அதிர்ச்சியடைந்து மனமுடைந்து போனார்.   அம்மை நோய் தாக்கி தன் 32 ஆவது வயதில் அக்கா மேரி இறந்தார்.  அவர் கணவர் அரசர் வில்லியமிற்கு மறுமணத்தில் ஆர்வம் இல்லை.  எட்டு ஆண்டுகளுக்குப் பின் தன் மனைவியைத் தொடர்ந்து அவரும் மறைந்தார்.  அவருக்குப் பின் ஆன் இங்கிலாந்தின் அரசியானார்.

    220px-Queen_Anne_and_William,_Duke_of_Gloucester_by_studio_of_Sir_Godfrey_Knellerஅரசி ஆன் ஒரு முறை இருமுறையல்ல பலமுறை கர்ப்பமுற்றார்.  சரியாகச் சொல்லவேண்டுமென்றால் 17 முறை கருத்தரித்தார். இவற்றில் 6 குழந்தைகள் இறந்தே பிறந்தன. அரசிக்கு 6 முறை கருச்சிதைவும் ஏற்பட்டது, அவற்றில் இரண்டு கருச்சிதைவுகள் இரட்டையர்களாகப் பிறக்க வேண்டிய கர்ப்பம். எனவே 8 குழந்தைகள் இவ்வாறு கருச்சிதைவு மூலம் உலகைப் பார்க்காமலே போய் சேர்ந்தனர். அரசியின் பிரசவங்களிலும் சில குறைப் பிரசவங்களாகப் போயின. அதனால் உயிருடன் உலகிற்கு வந்த குழந்தைகளில் 2 குழந்தைகள் பிறந்த இரண்டுமணி நேரத்திற்குள் இறந்து போயினர். மற்றும் 2 சிறுமிகள் அரசியின் கணவருக்கு அம்மை நோய் வந்தபொழுது, அந்நோய் அவர்களுக்கும் தொற்றி தங்களது இரண்டாவது பிறந்தநாளைப் பார்க்கமலே இறந்தனர்.

    மிஞ்சிய ஒரே ஒரு மகன் வில்லியமும் நாளொரு மேனியும் பொழுதொரு நோயுமாக, நோஞ்சானாக தீவிர மருத்துவ கவனிப்பில் வளர்ந்து வந்தான். அவனுக்கு உடல் நலக்குறைவுள்ள தோற்றமும் இருந்தது.  1700 ஆம் ஆண்டு தனது பதினொன்றாம் வயது பிறந்தநாளை கோலாகலமாய் ஆடிப் பாடி கொண்டாடினான்.  உடனே நோய்ப்படுக்கையில் விழுந்த இளவரசன் சிலநாட்களில் உயிரை விட்டான்.  சவப்பரிசோதனையில் அவன் மூளையில் நீர்கோர்த்திருந்தது (hydrocephalus)  தெரிய வந்தது.

    தன் 18 வயதில் திருமணம் செய்து கொண்ட அரசி ஆன் தன் 35 ஆவது வயதில் தனது வாரிசாக வந்திருக்க வேண்டிய 19 மக்கட் செல்வங்களையும் இழந்தார்.  முயற்சி திருவினையாக்கும் என்பது அரசியைப் பொறுத்தவரை குழந்தை பெறுவதில் பொய்த்துப் போனது.

    ஆனால் வில்லியமும் அரசி ஆனும், பாராளுமன்றத்தின் உதவியுடன் புராட்டஸ்ட்டண்ட் குல மன்னராட்சி மட்டுமே இங்கிலாந்தில் தொடரும்படி சட்டம் (Act of Settlement 1701) இயற்றினார்கள்.  இதனால் வாரிசற்ற அரசி ஆனுக்குப்பின் அவரது மாற்றாந்தாயின் மகன், கத்தோலிக்க கிறிஸ்துவரான அவரது சகோதரனுக்கு ஆட்சியுரிமை கிடைக்கவில்லை.  அரசாட்சியை மீட்க அந்த சகோதரன் எடுத்த முயற்சிகள் எதுவும் பலனளிக்காமல் போனது.   அவர்களின் தந்தை வழிப் பாட்டியின் வழிவந்த மற்றுமொரு ஒன்றுவிட்ட “ஹேநோவர்”  வம்ச (Hanover) புராட்டஸ்ட்டண்ட் சகோதரன் ஜார்ஜிற்கு அரசாட்சி கிடைத்தது.  அத்துடன் ஸ்டூவர்ட் வம்ச ஆட்சியும் இங்கிலாந்தில் முடிந்தது.

    முப்பத்துஏழாவது வயதில் பதவிக்கு வந்த பொழுதே அரசி ஆன் தன் குழந்தைகள் அனைவரையம் இழந்திருந்தார்.  பிறகு அடுத்த சில ஆண்டுகளில் கணவரும் நோயுற்று மறைந்தார்.  பன்னிரண்டு ஆண்டுகள் அரசாட்சி செய்தாலும் அரசி ஆன் பதவியேற்ற அன்றே சீரழிந்த உடல் நலத்தினால் நடக்க முடியாமல் பல்லகில் தூக்கி வரப் பட்டார்.  இறப்பதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன் நாளுக்கு நாள் அவர் உடல் நலம் மேலும் கெட்டு “கவுட்” (gout) நோய் முற்றி, அதனால் உடல் மிகவும் பெருத்துப் போய் நடக்கவே இயலாமல் போனார்.  சூடான இரும்பினால் சுடப்படுவது, உடலை ரத்தம் சிந்த செய்வது போன்ற சில குரூர மருத்துவத்திற்கும் ஆளானார்.  அவர் இறந்த பொழுது ஊதிப்போன உடலை அடக்கம் செய்ய சதுர வடிவ சவப்பெட்டி தேவைப் பட்டது.

    இங்கிலாந்து அரசிகளான விக்டோரியா, மேரி, எலிசபெத் போன்றோர் போற்றப் படுவது போல ஏனோ இவரது அரசாட்சிக்காகப் இவர் போற்றப் படவில்லை என்று கருதுபவர் உண்டு.  ஆனால் இவர் உடல் நலக்குறை வினால் அமைச்சர்களின் தாக்கம் ஆட்சியில் அதிகம் இருந்ததும் பாராட்டு கிடைக்காமல் போனதற்கு  ஒரு காரணம்.  அனைவரையும் இழந்தபின், உடல் உபாதையில் வருந்திய அரசி ஆன் கடைசிக் காலத்தில் தீவிர ஆன்மீகவாதியாக மாறி கடவுளிடம் கவனத்தை மிகவும் திருப்பினார்.  தனது சந்ததிகள் அனைவரும் தனக்கு முன்னமே அழிந்து போனதற்கு காரணம் தான் தன் தந்தைக்கு செய்த துரோகமும், அதனால் தந்தை தனக்கிட்ட சாபத்தின் விளைவு என்றும் எண்ணினார்.

    அறிவியலும் மருத்துவமும் சொல்லும் காரணங்கள்; அரசி ஆனின் ரத்தம் Rh நெகடிவ் (Rhesus factor negative) வகை, அவரது கணவருக்கு Rh பாசிடிவ் வகை (Rhesus factor positive) என இருந்திருக்கக் கூடும்.   இதனால் நோயினை எதிர்ப்பது போல் அரசியின் உடலின் எதிர்ப்பு சக்தி Rh positive கொண்ட கருக்களை அழித்துவிட்டது.  இதே காரணம் இவர் அக்காவின் கருச் சிதைவுகளுக்கும் காரணமாக இருந்திருக்க வாய்ப்புள்ளது.

    ஆனால் இந்தக் காரணம் சரியல்ல என்பவரும் உண்டு.  இந்த எதிர்ப்பு சக்தி ஒவ்வொரு பிரசவத்திற்கு பிறகும் மோசமாகவே வாய்ப்புள்ளது.  ஆனால் அரசிக்கு ஏழாவதாக பிறந்த மகன் உயிருடன் இருத்திருக்கிறான்.  அதனால் இது சரியான காரணமாக இருக்கமுடியாது என்பது மறுப்பவர்களின் வாதம். மற்றொரு காரணமாகக் கூறப்படுவது, அரசிக்கு இருந்த தோலை சீரழிக்கும் “லூப்பஸ்” என்னும் தோல் சம்பந்தப் பட்ட நோயும் ( lupus erythematosus) அதன் விளைவாக தவறாக செயல் பட ஆரம்பித்த உடலின் நோய் எதிர்ப்பு சக்தியும் (auto-immune disease).  இதன் விளைவாக அரசியின் கருக்கள் உடலுக்கு அன்னியம்மாக, சம்பந்தமில்லாதவைகளாகக் கருதப்பட்டுத் தாக்கி அழிக்கப் பட்டிருக்கக் கூடும் என்றும் “பிரிட்டிஷ் மெடிக்கல் ஜெர்னல்” (British Medical Journal) ஆராய்சிக் கட்டுரை ஒன்று கருதுகிறது.

    அரச குலத்திற்கு கிடைக்காத மருத்துவ வசதியா?  இருந்தும் எதுவும் அரசிக்கும் அவர் குழந்தைகளுக்கும் பயன் படவில்லை.  தான் தந்தைக்கு இழைத்த பாவத்திற்கு கடவுள் கொடுத்த தண்டனை என நம்பிய அரசியின் ஆன்மீக விளக்கமோ, அறிவியலின் ஆராய்ச்சி விளக்கமோ விதம் விதமாக பல காரணங்களைக் காட்டக் கூடும், ஆனால் வாரிசு இன்றி அவர் அல்லலுட்று மனம்  நொந்து உயிர் விட்டது மட்டும் உண்மை.

     

    வேண்டும் என்று கேட்பவருக்கு இல்லை இல்லை என்பான்
    வெறுப்பவர்க்கும் மறுப்பவர்க்கும் அள்ளி அள்ளி தருவான்
    ஆண்டவனார் திருஉள்ளதை யார் அறிந்தார் கண்ணே
    யார் வயிற்றில் யார் பிறப்பார் யார் அறிவார் கண்ணே
    யார் அறிவார் கண்ணே …….
    — கண்ணதாசன்

     

     

    படம் உதவி:  விக்கிபீடியா

    நன்றி: வகுப்பறை

    Share
  • மாலைகொடு வீரைய்யா!

    –  தனுசு

    வண்டி ஒட்டும் வீரைய்யா!
    சண்டிதனம் ஏனைய்யா?
    ஒண்டிக்கட்டை நானையா -என்னை
    கட்டிக் கொண்டு போய்யா!

    முருக்கு மீசை மாமனே!
    திறுக்கை மீன் நானாவேன்
    திருக்கிக் கொண்டு போவானேன்?
    செருக்கு வேண்டாம் கோமானே.

    எட்டு பத்து சிங்கக்குட்டி
    பெத்துத்தாறேன் புள்ளக்குட்டி -இந்த
    வெல்லக்கட்டி சொல்லுறதைக் கேளைய்யா-என்
    மயிலக்காளை பொன்னையா! .

    விடலைக்கோழி விரட்ட
    வேட்டைக்காரன் ஓடாதே!
    வெட்கப்பட்டு தப்பாதே
    வச்சக்குறி மீளாதே!

    கடைசி மாமன் பெண்குட்டி
    என்னைவிட சிறுகுட்டி-அவள்
    மூனுமாசம் முன்னாடி
    முடிஞ்சிதய்யா வளைகாப்பு!

    ஓலமிதை கேட்பாய்யா-மனக்
    கோலம் கான வருவாய்யா -எங்கள்
    வாத்தியார் பெயர் சுப்பையா
    அவரிடம் சொல்வேன் உஷாரைய்யா!

    தப்புத்தாளம் இல்லையா!-இது
    தப்புத்தாண்டா இல்லையா!
    ஊரைக்கூட்டி சொல்லையா!
    ஊமத்துரை பேசய்யா!

    நான் பூத்திருக்கும் ரோஜாப்பூ தோட்டம்-நல்ல
    கனியிருக்கும் மாம்பழதோப்பு!-இங்கு
    காவக்காரன் இல்லாட்டி -நரி
    ஊளையிடும் வாலாட்டி.

    காடுகரை காக்கும் வேலய்யா!
    அக்கா பொண்ணு முகம் பாரைய்யா!-அதில்
    ஏக்கம் ஒரு நூறைய்யா-நல்ல
    சாங்கி செய்தி சீக்கிரம் சொல்லைய்யா!

     

    -தனுசு

     

     

    நன்றி: வகுப்பறை

    Share
  • தணிக்கை என்றொரு முட்டுக்கட்டை – 31

    இன்னம்பூரான்

    சில நிமிடங்களுக்கு முன் இந்திய நாளிதழ்களில் தணிக்கைத்துறையின் தலைவராக (ஸீ.ஏ.ஜி.) திரு. சஷிகாந்த் சர்மா ஐ.ஏ.எஸ் நியமிக்கப்படப்போவதாக ஹேஷ்யம் வலுத்து வருகிறது. உலக குடியரசுகளில், குறிப்பாக, இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், கனடா போன்ற நாடுகளில், இந்தப் பொறுப்பேற்க தகுதி பெற்ற நபரை தேர்வு செய்ய ஜனநாயக மரபுகள் உண்டு. இந்தியா மட்டும் விதி விலக்கு. பிரதமர் செய்யும் தேர்வு மட்டும் செல்லும். கிட்டத்தட்ட 40 வருடங்களாக, இந்திய தணிக்கைத்துறையை புறக்கணித்துத்தான், இந்த தேர்வு நடைபெறுகிறது. 150 வருடங்களாக கட்டுக்கோப்புடன் காக்கப்படும் அந்த துறையின் உத்யோகஸ்தர்களின் சுதந்திர/நடுநிலை/அச்சமும் சிபாரிசும் விலக்கிய அணுகுமுறை தான் அதற்குக் காரணம். ஓணான் தான் வேலியை தாங்கும் என்ற மனப்பான்மை மற்றொரு காரணம்.

    எனினும், சில நிமிடங்கள் முன்னால் டைம்ஸ் ஆஃப் இந்தியா கூறியது போல, இது வரை வெளி இடங்களிலிருந்து உள்புகுந்தத் தலைமையை தணிக்கைத்துறை வசீகரித்து விட்டது, தன் வசம் இழுத்துக்கொண்டது என்பதும் வரலாறு மறக்காத உண்மை. அந்த இதழ் கூறுவதை, அதன் வாசகத்திலேயே, இங்கே:

    ‘…But, given the kind of fierce independence that CAG and his officers from the Indian Audit and Accounts Service have enjoyed all these years, it is tough to see the organisation meekly becoming a silent bystander to government’s misdeeds. In fact, it wouldn’t be surprising if Sharma hogs the limelight as the face of an aggressive and fiercely independent CAG…’

    அதாவது, வரப்போகும் தலைமையும் அவ்வாறு ஆகர்ஷிக்கப்பட்டு, இன்றைய தலைவர் திரு.வினோத் ராய் போல, கடைசியாக தணிக்கைத்துறையிலிருந்து வந்த திரு. அர்தேந்து பக் க்ஷி மாதிரி சுதந்திரமாகத் தொண்டு செய்தால், அது வியப்பைத் தராது.

    ததாஸ்து என்று சொல்லி, நாம் திரு.வினோத் ராய் அவர்களை வாழ்த்தி விடை கொடுப்போம். டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் ஆரூடம் பலிக்கட்டும், ஹேஷ்யம் பலித்து விட்டால்.

    இன்னம்பூரான்

    Hindu Update: One hour ago: (8.46 P.M. I.S.D)

    ‘…Defence Secretary Shashi Kant Sharma was on Tuesday named as the new Comptroller and Auditor General of India (CAG). The 1976 Bihar cadre officer will succeed Vinod Rai, who superannuates on Wednesday after five and a half years of eventful tenure as the head of the Constitutional financial watchdog.
    “The President of India has appointed Shashi Kant Sharma, IAS, as the Comptroller and Auditor General of India, in terms of Article 148 (1) of the Constitution of India,” the Finance Ministry said in a statement.
    Mr. Sharma, who holds a masters degree in political science from the University of York, will be taking over charge of the CAG from May 23, 2013, it said. He will be administered the oath of office by President Pranab Mukherjee on Thursday. Like Mr. Rai, Mr. Sharma too has served as Secretary in the Department of Financial Services. The CAG is appointed for a term of six years or till the incumbent attains the age of 65 years, whichever is earlier. CAG audit reports on 2G spectrum and coal block allocations during Rai’s tenure triggered a number of controversies and raised the hackles of the government, besides bringing in the concept of presumptive loss in audit.
    *
    The last sentence is not factually correct. This announcement was unduly delayed, if a robust practice of yesteryears is considered.
    Innamburan
    21 05 13

    Share
  • அமெரிக்க அனுபவங்கள் – ஒரு சமூகவியல் பார்வை – புத்தக மதிப்புரை

    பவள சங்கரி

    ஆசிரியர் – நாகேஸ்வரி அண்ணாமலை
    முதல் பதிப்பு – 2012
    மொத்த பக்கங்கள் – 210
    விலை – 165

    பொதுவாக ஒரு சிறு பிரயாணம், அது வியாபார நிமித்தமாகவோ அல்லது சுற்றுலா மற்றும் வேறு ஏதாவது காரணங்களுக்காகவோ செல்வதென்றாலே பல முன்னேற்பாடுகள் அவசியமாகிறது. அதுவும் எங்கு பார்த்தாலும் தீவிரவாதமும், கொள்ளையும், பாலியல் வன்கொடுமைக்ளும் மலிந்து கிடக்கின்ற இந்த காலகட்டத்தில் நாடு விட்டு நாடு பயணம் செய்யும் போது, குறிப்பிட்ட அந்த நாட்டைப்பற்றிய அனைத்து தகவல்களும் அறிந்து கொண்டு பயணம் செய்யும்போது ஒரு தற்காப்பு உணர்வை அது கொடுக்கும்  பயண ஏற்பாடுகளைச் செய்வதற்கு முன்பு அந்த நாட்டைப் பற்றிய பொருளாதாரம், வரலாற்று செய்திகள், பருவ நிலைகள், பார்க்க வேண்டிய இடங்கள் என அனைத்துத் தகவல்களையும் சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். அந்த வகையில் அனைத்துத் தகவல்களும் ஓர் இடத்தில் கிடைப்பது என்றால் அது பயணத்தை மிக சுவாரசியமாக மாற்றிவிடக்கூடுமல்லவா?

    “அமெரிக்காவைப் பற்றி வரும் கட்டுரைகளையும், துணுக்குகளையும் படித்திருக்கிறேன். பெரும்பாலான துணுக்குகள் அவை எழுதப்பட்ட, சொல்லப்பட்ட சூழ்நிலையைப் பற்றிக் கூறாததால் படிப்பவர்களுக்கு வேறு விதமான அர்த்தத்தைக் கொடுத்திருக்கக் கூடும்; அவை சில சமய்ம் உண்மையை திரித்துக் கூறுவது போலவும் இருக்கும்” ஆசிரியர், நாகேஸ்வரி அண்ணாமலை ஆரம்பத்திலேயே தம் முன்னுரையிலேயே, இப்படி நூலின் கருத்து பற்றிய பெரும் எதிர்பார்ப்பை விதைத்து விடுகிறார். வெளிநாடுகளில் முதல் அடி எடுத்து வைக்கும் எவருக்கும் தோன்றும் சுத்தம் பற்றிய அந்த திகைப்பு பல்லாண்டுகளாக அமெரிக்காவில் வாழும் இவருக்கும் ஏற்பட்டிருப்பதில் ஆச்சரியமில்லை.

    அமெரிக்கப் பொருளாதாரத்தைப் பற்றி குறிப்பிடும்போது, “ஜனாதிபதி ரீகன் காலத்திலிருந்து, அமெரிக்க முதலாளித்துவப் பொருளாதாரம் வேறு பாதையில் போய்க்கொண்டிருக்கிறது. இதற்கு முன்புவரை மனிதனை மனிதன் கபளீகரம் செய்யும் பொருளாதாரமாக முதலாளித்துவம் இருக்கவில்லை. இந்த முப்பது ஆண்டுகளில்தான் ஏழை, பணக்காரர்களுக்கிடையே இடைவெளி அதிகமாகி இருக்கிறது. அமெரிக்கா போகும் திசையைத் திருப்ப ஜனாதிபதி ஒபாமா எவ்வளவோ முயன்று கொண்டிருக்கிறார். எதிர்க்கட்சியான குடியரசுக்கட்சி இதை ஒபாமாவின் சோஷலிசம் என்கிறது. சோஷலிசம், கம்யூனிசம் போன்றவை அமெரிக்காவிற்கு அலர்ஜியைக் கொடுப்பவை. ….. அமெரிக்காவில் இப்போது எங்கே கம்யூனிஸ்ட் கட்சி இருக்கிறது? இரண்டாவது உலகப் போருக்குப் முன்னால் சிறிய அளவில் முளைவிட்டுக் கொண்டிருந்த கம்யூனிஸ்ட் கட்சியைத்தான் கிள்ளியெறிந்து விட்டார்களே! …. உலக நாடுகளிடையே மிகவும் தாழ்ந்து போயிருக்கும் அமெரிக்காவின் படிமத்தை மேம்படுத்துவது பற்றி ஒபாமா பேசினால் அமெரிக்காவின் தனித்தன்மையை குறைத்து மதிப்பிடுகிறார் என்று அவர்மீது குற்றம் சாட்டுகிறார்கள். அமெரிக்கா செய்த தவறுக்கு அமெரிக்கா மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றால் ஒபாமா அமெரிக்கரே இல்லை என்கிறார்கள்” என்று தன்னுடைய ஆதங்கத்தை மிகத்தெளிவாகப் பதிவிட்டிருக்கிறார் ஆசிரியர்.

    இன்றைய அமெரிக்கப் பொருளாதாரம் கார்ப்பரேட்டுகளின் கைகளில் சிக்கி தவித்துக் கொண்டிருப்பதுதானே நிசம். இவர்களுக்குப் பொருளாதாரத்தில் மந்த நிலை ஏற்பட்டால் அது மொத்த அமெரிக்காவையே பாதிக்கக்கூடிய சூழ்நிலையில்தானே இருக்கிறது. ஆனால் நம் இந்தியப் பொருளாதாரத்தை எடுத்துக் கொண்டால் ஒருநாளும் அது கார்ப்பரேட்டுகளின் கைகளில் சிக்கும் வாய்ப்பு இல்லை. ஆகவே எந்த சூழ்நிலையிலும் இந்தியப் பொருளாதாரம் நலிவடையும் வாய்ப்புகள் மிகக்குறைவு. எந்த நிலையிலும் நம் இந்தியப் பொருளாதாரம் முட்டி மோதி மீண்டும் துளிர்விட்டு தளைப்பதற்கும் இதுவேதான் காரணம். திரு ராஜீவ் காந்தி பிரதமராகவும், திரு மன்மோகன்சிங் அவர்கள் நிதியமைச்சராகவும் இருந்த காலகட்டத்தில் பெரும் பொருளாதார சீர்திருத்தம் ஏற்பட்டிருந்ததை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். இந்த வகையில் ஆசிரியரின் கருத்து ஏற்புடையதாக்வே உள்ளது.

    ”அமெரிக்க ஜனநாயக நாகரீகம் பற்றிப் பெருமையாகப் பேசப்பட்டாலும் அமெரிக்காவை இப்போது ஆள்வது பணம் படைத்த அமெரிக்கக் கார்ப்பரேட்டுகள்தான் , அமெரிக்காவின் உண்மை நிலையை ஓரளவிற்குப் படம்பிடித்துக் காட்ட வேண்டும் என்ற என் ஆசையின் விளைவே இந்தப் புத்தகம்” என்ற வரிகள் நம்மை மேலும் ஆழ்ந்து வாசிக்கத் தூண்டுகிறது.

    அமெரிக்க நகரங்களுள் மக்கள் தொகையில் மூன்றாவது இடத்தில் இருக்கும், உலகப்புகழ் பெற்ற ,ஓவியர் பிக்காசோவின் ஐம்பதடி உயர இரும்புச் சிற்பம் அலங்கரித்துக் கொண்டிருக்கிற மற்றும் வரலாற்று சிறப்புமிக்க சிகாகோ நகரம் பற்றி பல மாறுபட்ட கருத்துக்களை முன்வைக்கிறார் ஆசிரியர். ஊழல் அரசியல் மலிந்து கிடப்பதோடு, பனிப்புயல் போன்ற இயற்கை சீற்றமும் அதிகமாக உள்ள சிகாகோ மாநிலத்தின் அழகான மற்றொரு பகுதியை படம்பிடித்துக் காட்டியிருக்கிறார்.

    தன் கணவருடன் தான் அங்கு தங்கியிருந்த காலங்களில் நடத்தப்பட்ட விண்வெளி ஆராய்ச்சிகள் முதல் நியூயார்க் நகர வணிக மையத்தின் சின்னமாக விளங்கிய இரட்டைக் கோபுரங்கள் விமானம் மூலம் தாக்கி அழிக்கப்பட்ட சம்பவம், கறுப்பர் இனத்தின் தலைவர்கள் பற்றிய குறிப்பு, நகரத்தின் வளர்ச்சி, அதன் அமைப்பு, கறுப்பர் வாழும் பகுதி பற்றிய ஆதங்கம், நகரின் முக்கியத்துவம் என அனைத்தையும், மிகத்தெளிவாக படங்களுடன் பதிவிட்டிருப்பது பாராட்டிற்குரியது.

    ’மாறும் பருவநிலைகள்’ என்ற தலைப்பில் ஆசிரியர் மிக விளக்கமாக அளித்திருக்கும் தகவல்கள் பயணம் செய்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளவை. நான்கு பருவங்கள், மாறும் காலம், கோடைச் செயல்கள், புயல், வானிலை என அனைத்துத் தகவல்களும் நல்ல இரசனையுடன் அழகு நடையில் எழுதியிருப்பதும் வரவேற்கத்தக்கது. முதல் முறையாக பனிக்காலத்தில் குறிப்பிட்ட சில பகுதிகளில் சென்று மாட்டிக்கொண்டால் அதிலிருந்து மீண்டு வருவது ஒரு பெரிய சாதனைதான் என்று அனுபவத்தில் உணர்ந்ததால் இவருடைய விளக்கங்களின் வலிமையை உணர முடிகிறது. பனியை அகற்றுவதற்கும், தோட்டங்கள் பராமரிப்பு  என பெரும்பாலான வேலைகளுக்கு மெக்சிகோவிலிருந்து வரும் குடியேறிகள் பன்னிரண்டு மில்லியன் பேர்கள் என்ற தகவலும், இவர்கள்  சரியான விசா இல்லாமல் இருக்கும் குடியேறிகள் என்றாலும், இவர்கள் இல்லாமல் முதுகை ஒடியச் செய்யும் வேலைகளை அமெரிக்கர்கள் செய்யமாட்டார்கள் என்பதால் இரு அரசியல் கட்சிகளும் மிகுந்த கருத்து வேறுபாட்டுடன்  குழப்பத்தில் இருப்பது போன்ற தகவல்களும் அளிக்கிறார்.

    ‘உணவுகள் பலவிதம்’ என்ற தலைப்பில் அமெரிக்காவில் கிடைக்கக்கூடிய பல நாட்டு உணவு வகைகள், உணவு உற்பத்தி முறைகள், அதிக அள்வில் வீணாக்கப்படும் உணவுகள், சமைக்கும் முறைகள் மற்றும் அதன் மாற்றங்கள், சமைக்கும் வகைகள், விதம் விதமான ச்மையல் சாதனங்கள் நண்பர்களோடு உணவருந்தும் பழக்கம், தயார் நிலை உணவு, நலம் கெடுக்கும் உணவு, இயற்கை உணவு போன்ற பல சுவாரசியமான தகவல்களை வழங்கியுள்ளது சிறப்பு. வீணாக்குவதில் அவர்களின் வல்லமை குறித்து மிக விளக்கமாகவே கூறியிருக்கிறார்.

    ”பருவ வயது வந்தவுடன் ஆண்களுக்கும், பெண்களுக்கும் பாலுணர்வு தோன்றுவது இயற்கை. அதற்கு வடிகால் அமைத்து அவற்றை ஒழுங்குபடுத்துவதற்கு ஒவ்வொரு சமூகமும் சில விதிகளை வகுத்திருக்கிறது. அமெரிக்கச் சமூகம் என்ன செய்திருக்கிறது என்று பார்ப்போம்”  என்று ’திருமணத்தின் புதிய அர்த்தங்கள’ என்ற பகுதியில் கலாச்சார ஒப்பீடுகள் மிகச் சுவையாக அமைந்திருக்கிறது. திருமணம் செய்யாமலே பிள்ளை பெற்றுக்கொள்ளும் தற்போதைய நிலையையும், லிங்கன் (1809 – 1865) திருமணம் குறித்த சுவையானதொரு சம்பவமும் கொண்டு பலவிதமான மாறுபட்ட கலாச்சாரங்களை தெளிவாகவே விளக்கியுள்ளார். பெற்றோர்களின் விவாகரத்தினால் அல்லலுறும் குழந்தைகளின் நிலை, ஓரினச் சேர்க்கை, ஓரினத் திருமணம் கருப்பு – வெள்ளைத் திருமணம் என அங்கு நடக்கும் அனைத்து வகைகளையும் தகுந்த ஆதாரங்களுடன் விளக்கியிருப்பதும் சிறப்பு.

    ’இந்தியர்களின் இக்கட்டு நிலை’ என்ற தலைப்பில் அமெரிக்காவில் குடியேறிய இந்தியர்களின் நிலை குறித்த தம் கருத்தையும் பகிர்ந்துள்ளார். 1950ம் ஆண்டு முதல் இன்றைய நிலைவரை தெள்ளத் தெளிவாக, நிதர்சனத்தை சொல்லியிருக்கிறார் என்பது அன்றாடம் நம் செவிவழி மற்றும் செய்தித் தாள்களில் காணும் செய்தியாக இருப்பது மூலம் ஒப்புக்கொள்ள முடிகிறது. இவர் விளக்கியுள்ள பல சம்பவங்கள் வேதனை அளிக்கக் கூடியதாகவே உள்ளது. அமெரிக்காவில் குடியேறியுள்ள பிள்ளைகளின் பெற்றோரின் நிலை குறித்து மிகச் சிறப்பாக புரிந்துணர்ந்து சொல்லியிருக்கிறார். தம் இறுதிக் காலங்களை பிள்ளைகளுடன் கழிக்க விரும்பி அமெரிக்காவில் சென்று தங்கும் முதியவர்களுக்கு ஏற்படும் மிக முக்கியமான மருத்துவக் காப்பீட்டுப் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை இவர் அலசியுள்ள விதம், அங்கு சென்று தங்க விரும்பும் ஏனையோருக்கும் ஒரு படிப்பினையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. குடியேறிய நாட்டின் கலாச்சாரத்திற்கு ஏற்ப தங்கள் வாழ்க்கை முறைகளை மாற்றிக் கொள்வதின் சிரமங்கள் போன்ற அனைத்தையும் நன்றாகவே விளக்கியுள்ளார். ஆன்மீக நாட்டம் உள்ளவர்களின் பழக்க வழக்கங்களையும், அதற்கான ஏற்பாடுகள் தொழில்நுட்பங்களின் உதவியுடன் நடத்தப்படுவதையும்கூட அழகாகவே சொல்கிறார். குடியேறியவர்களின் திருமணப் பிரச்சனை, கல்விப் பிரச்சனை பெற்றோர் பிரச்சனை கறுப்பர்களை மதியாமை, இவை அனைத்திற்கும் மேலாக பெயர்ப் பிரச்சனை என அனைத்தையும் மிகச் சுவையாகவே அலசி ஆராய்ந்திருக்கிறார்.

    பொதுவாகவே நீண்ட ஆயுள் கொண்டவர்களாக இருக்கும் அமெரிக்கர்கள் முதுமையில் படும்பாட்டையும், ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் அதற்காகக் கண்டறியப்பட்ட தீர்வுகள் என அனைத்தும் படித்து அறிய வேண்டிய தகவல்கள். மருத்துவச் செலவு என்பது அங்கு எத்துனை பெரிய தலைவேதனை என்பதை அறியும் போது அந்த வேதனை நம்மையும் தொற்றிக் கொள்வதும் உண்மை.

    கார் கலாச்சாரம் பற்றி பல தகவல்களும், தொழில்நுட்ப வளர்ச்சிகள் குறித்தும், மிகப்பெருமையாக அவர் குறிப்பிட்டாலும், Keyless entry போன்ற தொழில் நுட்பங்கள் நம் நாட்டிலும் பல ஆண்டுகள் முன்பே வந்துவிட்டதும் உண்மை என்பதை பதிவிடவில்லை… ஆனாலும் கடன் பெறுவது முதல் வரி வட்டி கட்டுவதுவரை மிகத் தெளிவாகச் சொல்லியிருப்பது பாராட்டிற்குரியது.

    நம் இந்தியத் திருநாட்டில் லஞ்சம் மற்றும் அரசியல் வியாதிகளால் கொள்ளை போகும் சொத்துக்களுடன், நம் நிம்மதியும் போவது குறித்த கவலை மிக அதிகமாகிறது இவருடைய நூலின் சில பகுதிகளை வாசிக்கும்போது! இந்த லஞ்ச இலாவண்யமும், அரசாங்கம் மற்றும் மக்கள் சொத்தை கொள்ளையடிக்காத நேர்மையான அரசியல்வாதிகளும் இருந்திருந்தால் நம் நாடும் என்றோ வல்லரசாகியிருக்குமோ என்ற் ஏக்கமும் வராமல் இல்லை.

    ‘வரிவிதிப்பு முறையும் சமூக அமைப்பும்’ என்ற தலைப்பில் அ முதல் ஃ வரையிலான அனைத்துத் தகவல்களையும் வழங்கியுள்ளதும் சிறப்பு. அதே போல நீதியின் இரு பக்கங்கள் குறித்த கட்டுரையில் பல சம்பவங்களுடன் விளக்கியுள்ள பாங்கும் இனிமை. கடன் அட்டைகளின் பிடியில் சிக்கித் திணறும் அமெரிக்கர்களை விடுவிக்கப் போவது யார் என்ற இவருடைய கவலையும் நியாயமானதாகவே உள்ளது. கடன் அட்டைக்கான தவணைகளை சரியான நேரத்தில் கட்டத் தவறினால் வட்டி கூடிப்போய் எத்துனை சிரமப்பட வேண்டியிருக்கும் என்பதைக்கூட தன்னுடைய கவனக் குறைவினால் ஏற்பட்ட சம்பவத்தின் ஒப்பீடு மூலம் அழகாக விளக்கியுள்ளார்.

    ‘இதம் தரும் சேவை, பணம் பண்ணும் ஆசை’ என்ற தலைப்பில் இந்தியாவின், இரயில் நிலையம், அஞ்சல் நிலையம், மருத்துவமனை, அரசுத்துறை அலுவலகம் போன்ற  பொதுப்பணித் துறைகளில் பணிபுரிபவர்கள் சேவை மனப்பான்மை என்பதே துளியும் இல்லாமல் இருப்பதையும், கிம்பளம் எதிர்பார்த்திருப்பதையும் நொந்துபோய் சாடியுள்ளார். அமெரிக்காவில் அதற்கு நேர்மாறாக, தேவை அறிந்து சேவை செய்பவர்கள் மற்றும் அன்பான மருத்துவ சேவை செய்பவர்கள் பற்றியும், தனக்கு ஏற்பட்ட இதமான அனுபவங்கள் கொண்டே விளக்கியிருக்கிறார் ஆசிரியர். அதேபோல் இந்தியாவில் தனக்கு ஏற்பட்ட மிக மோசமான மருத்துவமனை அனுபவத்தையும் பகிர்ந்திருக்கிறார் மிக வேதனையுடன். அன்றாடம் இந்தப் பிரச்சனைகளுடனேயே உழன்று உறவாடி வாழும் நம்க்குத்தான் இது பெரிதாகப்படவில்லை போலும்!  கருத்துக் கணிப்பிற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம்கூட ஆச்சரியம் அளிக்கிறது நமக்கு.

    பின்னுரையில் ஆரம்பத்தில் அமெரிக்காவின் வளமான வாழ்க்கையில் நிறைவு கண்ட தான் சில ஆண்டுகளில் குறைகளைக் கவனிக்கத் தொடங்கியதையும், 1929ல் பொருளாதார வீழ்ச்சியின் பிறகு ப்ராங்க்ளின் ரூஸ்வெல்ட் காலத்தில் ஏற்பட்ட சீர்திருத்தம் முதல் இன்றைய அரசியல் நிலை வரை மிகத் தெளிவாக விளக்கியுள்ளார். பெண்ணியம் முதலில் அமெரிக்காவில் தோன்றியதற்கான காரணம் அவர்களின் பொருளாதார சுதந்திரம் என்றாலும், குடும்பம் என்ற சமூக நிறுவனம் குலையத் தொடங்கியதும் அதனால்தான் என்கிறார். உண்ணும் உணவு முறையிலிருந்து, திருமண பந்தம் என்ற கட்டமைப்பு வரை தவறான கலாச்சாரங்களினால், பாதிக்கப்படும் குழந்தைகளின் நிலை குறித்தும் வெளிப்படையாகக் கூறுகிறார்.

    ஒபாமா ஒருவேளை பதவியிலிருந்து இறங்க நேர்ந்தால் குடியரசுக் கட்சிகள் நாட்டை அவர்கள் பாதையில் கொண்டு செல்லக்கூடிய நிலை உருவானால், அமெரிக்காவில் ஏழை, பணக்காரர்களுக்கிடையே உள்ள இடைவெளி கூடுவதோடு, உலக அரங்கிலும் அமெரிக்கா பெரிய அபாயங்களை விளைவிக்கும். அந்த வகையில் 2012 தேர்தல் எல்லோருக்கும் ஒரு முக்கியமான தேர்தல் என்று சொல்லி நம்மையும் பெரிதும் சிந்திக்க வைக்கிறார்.

    Share
  • பிரபஞ்சப் பிறப்பை விளக்கிய விஞ்ஞானி ஜார்ஜ் காமாவ்

    (George Gamow)

    1904-1968

    சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா

    புனித வேத நூல்களில் நாம் காணும் மேன்மையான நியதிகளை நிலைநாட்டி மெய்ப்பிக்கவே, மனித முயற்சிகள் விஞ்ஞானத்தில் மேற்கொள்ளப் பட்டன என்று எனக்குத் தோன்றுகிறது.

    விஞ்ஞான மேதை ஜான் ஹெர்ச்செல் [1792-1871]

    விரியும் பிரபஞ்சத்தைப் பற்றி அறிய ஒரு பிறவிக் காலம் முழுதும் அர்ப்பணித்தாலும் போதாது! மறைந்து கிடக்கும் அகிலத்தின் மர்மங்கள் சிறிது சிறிதாகவே மலர்கின்றன! அநேக புதிய புதிர்களை வரப் போகும் எதிர்கால யுகங்களுக்காக, இயற்கை தனியாக வைத்துள்ளது! எல்லா மர்மங்களையும் ஒரே காலத்தில் விடுவிக்க, இயற்கை ஒருபோதும் நம்மை விடுவதில்லை!

    ஸெனேகா (முதல் நூற்றாண்டு ஞானி)

    “நமது பிரபஞ்சம் பெரும் பாய்ச்சலில் (Big Bounce) உதித்ததே தவிரப் பெரு வெடிப்பில் (Big Bang) தோன்ற வில்லை ! அதாவது முதலில் குவாண்டம் ஈர்ப்பாற்றல் நிகழ்த்திய விந்தை விளைவுகளால் உள்வெடிப்பு தூண்டிப் புற வெடிப்பில் (An Implosion Triggering an Explosion) உண்டானது.”

    மார்டின் போஜோவால்டு, (Martin Bojowald, Asst Professor of Physics, Penn. State, USA) (Authour of Big Bounce Theory) (July 2007)

    அணுவியல், அகிலவியல், உயிரியல் பெளதிக விஞ்ஞானி

    விண்வெளியை வில்லாய் வளைக்க முடியுமா ? பிரபஞ்சத்தின் முடிவுக்கும் ஒழுங்கீனக்  கோட்பாடு எனப்படும் ‘என்ட்ராப்பி நியதிக்கும்’ [Theory of Entropy] என்ன தொடர்பு ? அண்ட வெளியில் ஊடுருவிச் செல்லும் ராக்கெட் ஏன் சுருங்குகிறது ? விண்மீன்கள் வெடிப்பதற்கு ஆதி அடிப்படையும், அவற்றுக்குக் காரணமும் யாவை என்று நாம் அறிந்து கொண்டவை என்ன ? சந்ததியின் மூலவிகள் [Genes] புரியும் விந்தைப் புதிர்களைப் பற்றி நவீன  விஞ்ஞானம் கண்டு பிடித்தவை என்ன ? உலகத்தைப் பற்றி நாம் அறிந்ததை, ‘இலக்கங்களின் விதிப் பிரச்சனைகள்’ [Problems in Laws of Numbers] எவ்விதத்தில் பாதிக்கின்றன ? இத்தனை வினாக்களையும் தான் எழுதிய ‘ஒன்று, இரண்டு, மூன்று…முடிவின்மை’ [One, Two, Three…Infinity] என்னும் நூலில் எழுப்பியவர், ரஷ்ய அமெரிக்க விஞ்ஞானி ஜார்ஜ் காமாவ் [George Gamow]! ரஷ்யாவிலே பிறந்து அமெரிக்கக் குடியினராகிய ஜார்ஜ் காமாவ் அணுக்கரு பெளதிகம் [Nuclear Physics], பிரபஞ்சவியல் [Cosmology] பெளதிகம், மூலக்கூறு உயிரியல் ரசாயனம் [Molecular Biochemistry] ஆகிய முப்பெரும் விஞ்ஞானத் துறைகளில் மேன்மை மிக்க மேதை!

    பிரபஞ்சத்தின் முழுத் தோற்றத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் அதன் மூலமான நுண்ணிய பரமாணுக்களையும் [Microscopic], விரிந்து குமிழிபோல் உப்பும் அதன் பிரமாண்ட வடிவத்தையும் பற்றிய [Macroscopic] எல்லாக் கருத்துக்களைத் தனித்தனியாக அறிய வேண்டும்! பிரபஞ்சத்தின் முதல் தோற்றம் ஒரு மாபெரும் வெடிப்பில் [Big Bang Theory] உண்டானது என்பதற்கு முதன் முதல் நிரூபணத்தைக் காட்டியவர் ஜார்க் காமாவ்!  அதாவது பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பேரளவு வெடிப்பு நிகழ்ச்சியில் [Colossal Explosion] பிரபஞ்சம் தோன்றி விரிவடைந்து வந்துள்ளது என்ற ஒரு கருத்தை ஆதரித்து, அதற்கு விளக்கம் அளித்து மெய்ப்பித்தவர்களில் முதல்வர், ஜார்ஜ் காமாவ்!  பெரு வெடிப்புக்குப் பின்பு பிரபஞ்சம், பின்புல நுண்ணலைக் கதிர்வீச்சை [Background  Microwave Radiation] உண்டாக்கி யிருக்க வேண்டும் என்று உறுதியாகக் கூறி, அதையும் நிரூபித்தும் காட்டினார்! அடுத்து அணுக்கருப் பெளதிகத்தின் [Nuclear Physics] ஆரம்ப கால  அடிப்படை வளர்ச்சியில், காமாவ் மிகவும் ஈடுபட்டவர். அவற்றிலிருந்து முற்றிலும்  வேறுபட்ட உயிரியல் விஞ்ஞானத்தில் [Biology] ஆர்வம் கொண்டு, இனவிருத்தியில் டிஎன்ஏ [DNA] பற்றி ஆராய்ந்து, நவீன மூலவி நியதியில் [Modern Genetic Theory] ஓர் அடிப்படைத்  தத்துவத்தை ஜார்ஜ் காமாவ் இயற்றி யுள்ளார். மேலும் புரோடான் சேர்க்கை [Protein  Synthesis] விளக்கத்தில் ஒரு முக்கியமான பகுதியை ஆக்கியுள்ளார் காமாவ்.

    ஜார்ஜ் காமாவ் புரிந்த அரும்பெரும் விஞ்ஞானச் சாதனைகள்

    1936 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஜார்ஜ் காமாவின் மிக்க விஞ்ஞானச் சாதனைகள்  பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றியும், விண்மீன்களின் பிறப்பு, வளர்ச்சியைப் பற்றியும்  சார்ந்திருந்தன. 1938 இல் ஹெர்ட்ஸ்பிரங்-ரஸ்ஸல் [Hertzsprung-Russel (H-R Diagram)]  வரைபடத்துக்கு ஒரு சிறந்த விளக்கத்தைக் கொடுத்தார். H-R வரைபடத்தில்  விண்மீன்களின் ஒளித்திறம் [Brightness] நேரச்சிலும், அவற்றின் உஷ்ணம் மட்ட அச்சிலும் குறிக்கப் பட்டுப் பல விண்மீன்களின் நிலைப்பாடு காட்டப் பட்டுள்ளது. 1939 இல் விரியும் பிரபஞ்சத்தின் மாதிரிக் [Model of the Expanding Universe] கோட்பாட்டை ஆதரித்து அதை அபிவிருத்தி செய்தார். அத்துடன் நிபுளாக்களின் பிறப்பு [Origin of Nebulae], பூதச் செம்மீன்கள் [Red Giant Stars] சக்தியை உற்பத்தி செய்யும் முறைகள் ஆகியவற்றை ஆராய்ந்தார். விண்மீன்கள் வெடிக்கும் போது, அவற்றிலிருந்து நியூட்ரினோ துகள்கள் [Neutrino Particles] வெளியேறுவதை 1940 இல் ஆய்வு செய்து, தான் ஆக்கிய பூத நோவாவின் நியூட்ரினோ நியதியை [Neutrino Theory of Supernova] வெளியீடு செய்தார்.

    1948 இல் விஞ்ஞானி ரால்ஃப் ஆல்ஃபருடன் [Ralph Alpher] காமாவும் சேர்ந்து, யூகிப்பட்ட  பெரு வெடிப்புக்கு [Postulated Big Bang] நிகழ்ச்சிக்கு முன்பு, பிரபஞ்சத்தின் நிலைமை என்ன என்று ஆராய்ந்ததில் எஞ்சிய நுண்ணலைக் கதிர்வீச்சு [Residual Microwave Radiation]  இருப்பதைக் கண்டார்கள்! அவர்களது அவ்வரிய கண்டுபிடிப்பு மெய்யானது என்று 1965 இல் பிரின்ஸ்டன் பல்கலைக் கழக விஞ்ஞானிகள், தாமும் கண்டு உறுதிப் படுத்தினர்!

    பிரபஞ்சத்தின் பிறப்புக் கோட்பாடுகளில் ஒன்றான ‘பெரு வெடிப்பு நியதியை’ [Big Bang  Theory] உறுதியாக நம்பி அதை விருத்தி செய்த முன்னோடிகளான, ரஷ்ய விஞ்ஞானி  அலெக்ஸாண்டர் பிரைடுமான் [Alexander Friedmann], அமெரிக்க விஞ்ஞானி எட்வின் ஹப்பிள் [Edwin Hubble], பிரிட்டிஷ் விஞ்ஞானி பிரெட் ஹாயில் [Fred Hoyle] ஆகியோருள்  முக்கியமானவர் ரஷ்ய விஞ்ஞானி, ஜார்ஜ் காமாவ்.

    ரஷ்ய மேதை ஜார்ஜ் காமாவின் வாழ்க்கை வரலாறு

    ரஷ்யாவில் ஜார்ஜ் காமாவ் ஒடிஸ்ஸா என்னும் நகரில் [Odessa now in Ukraine] 1904 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 4 ஆம் தேதி பிறந்தார். ஒடிஸ்ஸாப் பள்ளியில் படிக்கும் போது, 13 ஆம் வயதுப் பிறந்த நாள் பரிசாக அவரது தந்தையார் தந்த ஒரு தொலை நோக்கி, காமாவ் வானியல் விஞ்ஞானத்தில் ஈடுபட ஆர்வத்தை தூண்டியது! 1922 இல் லெனின்கிரார்டு பல்கலைக் கழகத்தில் [Now St. Petersburg] சேர்ந்து, புகழ் பெற்ற பேராசிரியர் அலெக்ஸாண்டர்  பிரைடுமான் [Alexander Friedmann] அவரிடம் ஒளியியல் [Optics], பிரபஞ்சவியல் விஞ்ஞானம் [Cosmology] இரண்டையும் முதலில் பயின்றார். பேராசிரியர் பிரைடுமான், ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் படைத்த ஒப்பியல் நியதிச் [Theory of Relativity] சமன்பாடுகளின் பிரச்சனைகளைத் தவிர்க்க ஒரு தொகுப்புத் தீர்வு முறைகளை [A Set of Solutions] ஆக்கியவர்!  அகிலவெளி விரிந்து கொண்டுதான் போகிறது என்ற கருத்தைக் காமாவுக்கு முதலில் ஊட்டியவர், பிரைடுமான்! ஆனால் அப்போது காமாவ் பிரைடுமான் கூறிய அகிலவெளித் தத்துவத்தைத் தொடராது, கதிர்த்துகள் நியதி [Quantum Theory] மீது வேட்கை மிகுந்து தன் திறமையை விருத்தி செய்ய முயன்றார். 1928 இல் Ph.D. பட்டம் பெற்றபின், ஜெர்மனிக்குச் சென்று காட்டிங்கன் பல்கலைக் கழகத்தில் [University of Gottingen] சேர்ந்து, பேராசிரியர் வெர்னர் ஹைஸன்பர்க் [Werner Heisenberg (1901-1976)] விஞ்ஞான மேதையிடம் ஆராய்ச்சி  செய்தார். அதே சமயத்தில் அங்கு பயில வந்த ஹங்கேரியின் விஞ்ஞானி எட்வெர்டு  டெல்லருன் [Edward Teller] பழகி இருவரும் கூட்டாக அணுக்கரு பெளதிகத்தில் [Nuclear  Physics] பல விஞ்ஞான ஆராய்ச்சிகள் செய்தனர்.

    காமாவின் அரிய திறமையை வியந்து, அணுவியல் துறை மேதை நீல்ஸ் போஹ்ர் [Neils Bohr (1871-1962)] அவரைக் கோபன்ஹேகன் கோட்பாடு பெளதிக ஆய்வுக்கூடத்தில்  [Copenhegan, Institute of Theoretical Physics] ஆராய்ச்சி செய்ய டென்மார்க் வரும்படி அழைத்தார்.  அப்போதுதான் ஜார்ஜ் காமாவ் முதன் முதல் அணுக்கரு அமைப்பைத் ‘திரவச் சொட்டு மாதிரி’ [Liquid Drop Model] போன்றது என்று எடுத்துக் காட்டினார்! அம்முறையே பின்னால் அணுப்பிளவு [Nuclear Fission], அணுப்பிணைவு [Nuclear Fusion] இயக்க நியதிகளுக்கு அடிப்படையாக அமைந்தது! அடுத்து ஹெளடர்மன்ஸ் [F. Houtermans], அட்கின்ஸன் [R. Atkinson] ஆகியோருடன் கூட்டுழைத்து,  விண்மீன்களின் உள்ளே நிகழும் அணுக்கரு இயக்கங்கள் பற்றி ஆய்வுகள் செய்தார். அதன்பின் 1929 இல் இங்கிலாந்து சென்று, கேம்பிரிட்ஜ் காவென்டிஷ் ஆய்வுக் கூடத்தில் அணுவியல் மேதை ஏர்னஸ்ட்  ரூதர்ஃபோர்டுடன் [Ernest Rutherford (1871-1937)] ஆராய்ச்சிகள் செய்தார். அப்பணியில்  விரைவாக்கிய புரோட்டான் கணைகளைப் [Accelerated Protons] பயன்படுத்தி அணுவைப் பிளக்க எவ்வளவு சக்தி தேவைப்படும் என்று கணித்தார். அப்போதுதான் முதன் முதலாக காமாவ் மூலகங்களின் செயற்கை ரசவாத முறைகளுக்கு [Artificial Transmutation of Elements] அடிப்படைக் கோட்பாடுகளை அமைத்தார். 1932 இல் அவற்றைப் பின்னால் ஜான் காக்கிராஃப்ட் [John Cockcroft (1897-1967)] தனது நேர்போக்கு விரைவாக்கியில் [Linear Accelerator], போரான், லிதியம் [Boron & Lithium] ஆகிய இரண்டையும் புரோட்டான் கணைகளால் தாக்கி  ஹீலியத்தை வெற்றிகரமாய் உண்டாக்கினார்! அதுவே முதன் முதல் செய்யப் பட்ட மூலக  மாற்றம் அல்லது ரசவாதம் [Artificial Transmutation].

    அமெரிக்கா நோக்கி ஜார்ஜ் காமாவ் புறப்பாடு

    1931 இல் சோவியத் யூனியன் ரோமில் நடந்த அணுக்கரு பெளதிகக் கூட்டரங்குக்குச்  [Nuclear Physics Conference] செல்ல அனுமதி தராமல், ஜார்ஜ் காமாவைத் தடை செய்து  அவரை அடைத்துப் போட்டது!  மறுபடியும் 1933 இல் பிரஸ்ஸல்ஸ் [Brussels] பெல்ஜியத்தில் நடந்த கூட்டரங்குக்கு அனுமதி கிடைக்கவே, அதைப் பயன்படுத்தி ஜார்ஜ் காமாவ்  விடுதலைப் பறவையாய், அமெரிக்காவுக்குப் புலம்பெயர்ந்து 1940 இல் அமெரிக்கக் குடியினரானார்!

    அமெரிக்காவில் ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக் கழகத்தில் [Washington D.C.] காமாவ்  ஆசிரியராகப் பணி ஏற்றார். அங்கே ஆசிரியராக இருந்த விஞ்ஞான மேதை எட்வெர்டு  டெல்லரை மறுபடியும் சந்தித்தார்!  அவருடன் கூட்டாளியாகச் சேர்ந்து, காமாவ் அணுக்கரு பெளதிகத்தில் தொடர்ந்து ஆய்வுகள் செய்தார்! 1936 இல் கன உலோகங்கள் கதிரியக்கத்  தேய்வின் போது [Radiactive Decay of Heavier Elements] பீட்டா பரமாணுக்கள் [Beta Particles] வெளியேறும் முறைகளைச் சீராக வகுத்து இருவரும் புதியக் கோட்பாடுகளை எழுதினார்கள். அவற்றில் ஒன்றான காமா-டெல்லர் பீட்டா தேய்வு நியதி [Gamow -Teller Theory of Beta Decay] கதிரியக்க விளைவின் போது, எலக்டிரான் எழுச்சியைப் பற்றிக் கூறுகிறது.  அடுத்து விண்மீன்களின் தோற்ற ஆரம்பத்தில் எழும் வெப்ப அணுக்கரு இயக்கங்களைப்  [Thermo Nuclear Reactions] பற்றி இருவரும் ஆராய்ச்சிகள் செய்தனர்.

    1942 இல் அந்த ஆய்வுகளைப் பயன்படுத்திப், பிரபஞ்சவியல் நிகழ்ச்சிகளுக்கும், அணுக்கரு இயக்கங்களுக்கும் இடையே உள்ள தொடர்புகளை ஆராய்ந்தார். அதே ஆண்டில் காமாவ் டெல்லருடன் கூட்டுழைத்து ‘பூதச் செம்மீன்களின்’ [Red Giant Stars] உள்ளமைப்பை  விளக்கி ஒரு புதிய கோட்பாடை இயற்றினார். விண்மீன்களின் மூலப் பிறப்பைப் [Stellar  Evolution] பற்றி டெல்லர் எழுதிய கருத்துக்களைப் பயன்படுத்தி, ஜார்ஜ் காமாவ் பரிதியின் பிரமாண்டமான சக்தி [Sun ‘s Energy] வெப்ப அணுக்கரு இயக்கங்களினால் [Thermo Nuclear  Processes] வெளியாகிறது என்று உறுதியாகக் கூறினார்!

    இரண்டாம் உலகப் போர் முடிந்த பிறகு, 1948 இல் அமெரிக்க அணுசக்திப் பேரவை [Atomic Energy Commission] ரஷ்ய அமெரிக்க விஞ்ஞானி ஜார்ஜ் காமாவுக்கு உச்சப் பாதுகாப்பு நம்பிக்கை உறுதி [Top Security Clearance] அளித்து, நியூ மெக்ஸிகோ லாஸ் அலமாஸ்  மறைமுகத் தளத்தில் முதல் ஹைடிரஜன் குண்டு தயாரிக்க நியமனம் செய்யப் பட்டார்!  1949 ஆகஸ்டில் சோவியத் ரஷ்யா தனது முதல் புளுடோனிய அணுகுண்டை வெடித்ததும்,  எட்வெர்டு டெல்லர் அந்த நிகழ்ச்சியைப் பயன்படுத்தி அவரது ஒரே குறி ஆயுதமான  வெப்ப அணுக்கருக் குண்டை அதி விரைவில் தயாரித்து, அமெரிக்காவைப் பாதுகாக்க  வேண்டு மென்று வாதித்தார்!

    ஊமைப் போர் ஊழலில் [Cold War Politics], ரஷ்யா  அமெரிக்காவுக்கு முன்பே ராட்சத குண்டை ஆக்கி விட்டால், அமெரிக்காவின் கதி என்ன ஆவது என்று டெல்லர் கவலை அடைந்தார்! அவரது எச்சரிக்கைக்கு அடி பணிந்து,  அமெரிக்க ஜனாதிபதி ட்ரூமன் 1950 ஜனவரி இறுதியில் ஹைடிரஜன் குண்டு திட்டத்திற்கு  ஒப்புதல் தந்து அங்கீகார மளித்தார்! லாஸ் அலமாஸ் மறைமுகத் தளத்திற்கு மாற்றாக, புதிய லாரென்ஸ் லிவர்மோர் ஆய்வுக் கூடம் [Lawrence Livermore Laboratory]  கலிஃபோர் னியாவில் அமைக்கப் பட்டது. அதற்கு எட்வெர்டு டெல்லர் அதிபதியாக ஆக்கப்  பட்டார்! டெல்லருக்கு வெப்ப அணுக்கரு ஆயுதப் பணியில் உதவியவர் முக்கியமாக  இருவர்: விஞ்ஞான மேதைகள், டாக்டர் ரிச்சர்டு கர்வின் [Richard Garwin], டாக்டர் ஸ்டனிசியா உலாம் [Stanisiaw Ulam].

    காமாவ் வாஷிங்டன் பல்கலைக் கழகத்தில் 1934 முதல் 1956 வரை பெளதிகப்  பேராசிரியராகவும், அதன் பின் கொலராடோ பல்கலைக் கழகத்தில் 1956 முதல் அவரது  மரணம் வரை [1968] பெளதிகப் பேராசிரியராகவும் பணி யாற்றினார்.

    பிரபஞ்சப் பிறப்பைக் கூறும் பெரு வெடிப்பு நியதி

    பிரபஞ்சத்தின் பிறப்பைப் பற்றி யூகிக்கும் பல கோட்பாடுகளில் ஒன்றான, ‘பெரு வெடிப்பு  நியதியைத்’ தற்போது பெரும்பான்மையான விஞ்ஞானிகள் ஒப்புக் கொண்டுள்ளனர்.  அக்கருத்துப்படி ஆதியில் பிரபஞ்சம் பேரளவுத் திணிவுள்ள, மிகத் திட்பமான, வெட்பக்  கட்டியாக [Extremely Dense, Compact & Hot] இருந்தது! 10-20 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, ஏதோ ஓர் அகிலப் பெரு வெடிப்பு நிகழ்ந்து [Cosmic Explosion], அதன்பின் பிரபஞ்சம் பெருகி, விரிந்து, குளிர்ந்து போய் வருகிறது!

    பெரு வெடிப்புக் கோட்பாடு 1917 இல் ஐன்ஸ்டைன் பொது ஒப்பியல் நியதி விளைவித்த  ஒரு கருத்து! அதை விருத்தி செய்தவர், பெல்ஜிய விஞ்ஞானி ஜார்ஜ் லெமைட்டர் [George  Lemaitre], ஹாலந்து விஞ்ஞானி வில்லம் சித்தர் [Willem de Sitter], ரஷ்ய விஞ்ஞானி  அலெக்ஸாண்டர் பிரைடுமான் [Alexander Friedmann]. அம்மூவரது கருத்துக்களும் பிரபஞ்சம்  தோற்றத்திற்குப் பின்பு, எவ்வாறு ஒழுங்கானது என்றுதான் கூறினவே தவிர, அகிலத்தின்  ஆதித் துவக்கத்தைப் பற்றி எதுவும் ஆராயவில்லை! 1940 இல் ஜார்ஜ காமாவ்  அப்பணியைச் செய்ய தனது மாணவர் ரால்ஃப் ஆல்ஃபர் [Ralph Alpher], ராபர்ட் ஹெர்மன் [Robert Herman] இருவருடன் கூட்டுழைத்து, ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் பொது ஒப்பியல் நியதிக்காக எழுதிய பிரைடுமான் தீர்வுகளை எடுத்துக் கொண்டு, அவற்றைப் பின்னும் அபிவிருத்தி  செய்தார்.

    அடுத்து ஆல்ஃபர், ஹெர்மன் இருவரும் தனியாகக் காமாவின் கருத்துகளை விரிவு  செய்தனர். அதன்படி கதிர்வீச்சுக் கடலில் [Sea of Radiation] கொந்தளிக்கும் புரோட்டான்,  நியூட்ரான், எலக்ட்ரான் [Proton, Neutron, Electron] ஆகிய பரமாணுக்களைக் [Subatomic Particles] கொண்ட இலெம் [Ylem] என்னும் ஆதி அண்ட நிலையிலிருந்து [Primordial State of Matter] பிரபஞ்சம் விரிந்தது! பிரபஞ்சம் பெரு வெடிப்பின் போது மிக மிகச் சூடான நிலையில் இருந்து, பரமாணுக்கள் இணைந்து ஹைடிரஜன் மூலகத்தை விட கனமான மூலகங்கள் [Heavier Elements] முதலில் உண்டாயின! காமாவ், ஆல்ஃபர், ஹெர்மன் குழுவினர் பெரு  வெடிப்பில் விளைந்த வெப்பவீச்சுக் கடல் [Sea of Radiation] இன்னும் அகிலத்தில் தங்கி  இருக்க வேண்டும் என்று முன்னறி வித்தார்கள்! அவர்கள் கணக்கிட்ட அகிலப் பின்புலக்  கதிர்வீச்சுக்கு [Cosmic Background Radiation] இணையான உஷ்ணம் [3 டிகிரி K (கெல்வின்)], 1960 இல் பின்வந்த விஞ்ஞானிகளால் மெய்ப்பிக்கப் பட்டு, பிரபஞ்சத்தின் பெரு வெடிப்பு நியதி மேலும் உறுதியாக்கப் பட்டுள்ளது!

    பெரு வெடிப்பு நியதியின்படி, பிரபஞ்சம் முதற்சில இம்மி வினாடிகளில் [microseconds] அதி விரைவாக விரிந்து விட்டது! ஒரே ஓர் உச்சவிசை [Force] மட்டும் முதலில் இருந்து, பிரபஞ்சம் விரிந்து போய்க் குளிர்ந்ததும் அந்த ஒற்றை விசையே, பின்னால் நாமறிந்த ஈர்ப்பியல் விசை [Gravitational Fprce], மின்காந்த விசை [Electromagnetic Force], அணுக்கரு வலுத்த விசை [Strong Nuclear Force], அணுக்கரு நலிந்த விசை [Weak Nuclear Force] ஆகிய நான்கு பிரிவுகளாய் மாறியது! விஞ்ஞானிகள் ஒளித்துகள் யந்திர வியலையும் [Quantum  Mechanics], ஈர்ப்பியலையும் ஒருங்கே பிணைக்கும் ஒரு நியதியைத் தேடி வருகிறார்கள்! இதுவரை யாரும் அதைக் கண்டுபிடிக்க முடிய வில்லை! புதிதான ‘இழை நியதி’ [String Theory] அவ்விரண்டையும் பிணைக்கும் என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். ஈர்ப்பியல் விசையை மற்ற மூன்று வித விசைகளுடன் பிணைத்துக் கொள்ளத் ‘இழை நியதி’ முயல்கிறது! ஆனால் பெளதிக விஞ்ஞானிகள் இப்போது இந்த நான்கு வித விசைகளையும் ஒருங்கே பிணைத்து விளக்கும் ‘மகா ஐக்கிய நியதி’ [Grand Unified Theory, GUT] ஒன்றைத் துருவிக் கண்டு பிடிக்க முற்பட்டு வருகிறார்கள்!

    சோப்புக் குமிழிபோல் உப்பிடும் [Inflationary Model] பிரபஞ்சம், அந்நிலை முடிந்ததும்  மெதுவாகவே விரிகிறது! கோளமாய் விரியும் பிரபஞ்சத்தின் விளிம்பு திறந்த வெளிக்கும், மூடிய வெளிக்கும் இடையே அமைகிறது! பிரபஞ்சம் திறந்த வெளியாக இருந்தால், எப்போதும் அது விரிந்து, விரிந்து, விரிந்து போய்க் கொண்டே யிருக்கும்! மூடிய விளிம்பாகப் பிரபஞ்சம் இருந்தால், அதன் விரிவு நிலை ஒரு காலத்தில் நின்று விடும்!  பிறகு அது சுருங்க ஆரம்பித்து, திணிவு அடர்த்தி மிகுந்து, இறுதியில் வெடித்துச் சிதறிவிடும்! பிரபஞ்சம் மூடிய கோளமா அல்லது திறந்த வெளியா என்பது அதன் திணிவு [Density], அன்றிப் பளு அடர்த்தியைச் [Concentration of Mass] சார்ந்தது! பிரபஞ்சம் அடர்த்தி  மிகுந்த பளுவைக் கொண்டிருந்தால், அதனை மூடிய கோளம் என்று கூறலாம்!

    பிரபஞ்சத்தின் பெரு வெடிப்பு நிகழ்ச்சிக்கு முன்பு எந்த நிலை இருந்தது என்று, ஸ்டிஃபன் ஹாக்கிங் [Stephen Hawking] போன்ற விஞ்ஞான மேதைகள் கேள்வி எழுப்பி யிருக்கிறார்கள்!  பெரு வெடிப்பு நியதியில் பிரபஞ்சத்தின் முற்கால நிலை பற்றி எந்த விளக்கமும்  இல்லை! காலக் கடிகாரமே பெரு வெடிப்பிற்கு பின்பு ஓட ஆரம்பித் திருக்கலாம்! ஆகவே  பெரு வெடிப்புக்கு முன்பு என்ன இருந்திருக்கும் என்று மூளையைக் குழப்புவதில் அர்த்த மில்லை!

    பெரு வெடிப்பு நியதியை மெய்ப்படுத்தும் நிகழ்ச்சிகள்

    பிரபஞ்சம் பெரு வெடிப்பிற்குப் பிறகு விரிந்து கொண்டே குளிர்ந்து போகிறது. பெரு  வெடிப்பிற்கு ஓரு வினாடி கழித்துப் புரோட்டான்கள் உண்டாயின. முதல் மூன்று  நிமிடங்களில் புரோட்டான், நியூட்ரான்களும் பிணைந்து, ஹைடிரஜனுடைய ஏகமூலமான [Isotope] டியூடிரியம் [Deuterium], அடுத்து எளிய மூலகங்களான ஹீலியம், லிதியம், பெரிலியம், போரான் [Helium, Lithium, Beryllium, Boron] ஆகியவை உண்டாயின!

    விண்வெளியில் மித மிஞ்சிய அளவு ஹீலியம் இருப்பது, பெரு வெடிப்பு நியதியை  மெய்ப்படுத்தி உறுதிப் படுத்துகிறது. டியூடிரியம் பிரபஞ்சத்தில் பேரளவில் பரவி யிருப்பது, அகிலத்தின் அண்டத் திணிவைக் [Density of Matter] கணிக்க அனுகூலமாய் இருக்கிறது!

    பெரு வெடிப்பு ஏற்பட்டு ஒரு மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு, பிரபஞ்சத்தின் உஷ்ணம் 3000 டிகிரி C அளவுக்குக் குறைந்தது! அப்போது புரோட்டான்களும் எலக்டிரான்களும்  சேர்ந்து ஹைடிரஜன் அணுக்கள் உண்டாயின. ஹைடிரஜன் அணுக்கள் ஒளியின் குறிப்பிட்ட சில அலை நீளங்கள், நிறங்கள் ஆகியவற்றை எழுப்பவோ அன்றி விழுங்கவோ  செய்யும்! அவ்வாறு உண்டான அணுக்கள், தனித்த எலக்டிரான்களுக்கு இடையூறு செய்யும், ஒளியின் மற்ற அலை நீளங்களை வெகு தூரத்திற்கு அப்பால் தள்ளி விடுகின்றன.

    இந்த  மாறுதல் கதிர்வீச்சை விடுவித்து இன்று நாம் காணும்படிச் செய்கிறது! பல பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு குளிர்ந்த அந்த ‘அகிலவியல் பின்புல கதிர்வீச்சு’ [Cosmic Background Radiation] சுமார் 3 டிகிரி Kelvin [3 K (-273 C/-454 F)]. 1964 இல் முதன் முதல்  அகிலவியல் பின்புல கதிர்வீச்சைத் தேடிக் கண்டு பிடித்த அமெரிக்க வானியல் மேதைகள் இருவர்: ஆர்னோ பென்ஸையாஸ், ராபர்ட் வில்ஸன் [Arno Penzias & Robert Wilson].

    1989-1993 ஆண்டுகளில் தேசிய வானியல் விண்வெளி ஆணையகம், நாசா [NASA, National Aeronautics & Space Administration] ‘அகிலப் பின்புல உளவி ‘ [Cosmic Background Explorer, COBE] என்னும் விண்வெளிச் சிமிழை [Spacecraft] ஏவி, அண்ட வெளியில் அகிலப் பின்புல கதிர்வீச்சைத் தளப்பதிவு [Mapping] செய்தது. அந்த தளப்பதிவு ‘பெரு வெடிப்பு நியதி’ முன்னறிவித்தபடி மிகத் துள்ளியமாக பின்புல கதிர்வீச்சு அடர்த்தியை [Intensity of the  Background Radiation] உறுதிப் படுத்தியது! அத்துடன் அகிலவியல் பின்புல கதிர்வீச்சு சீராக நிலவாது [Not Uniform], சிறிது மாறுபட்டுக் காணப் பட்டது! அந்த மாறுதல்கள் பிரபஞ்சத்தில் காலக்ஸிகள் [Galaxies], மற்ற அமைப்பாடுகளின் வளர்ச்சிக்கு அடிப்படையாய்க் கருதப்  படுகின்றன!

    பின்புலக் கதிர்வீச்சு பிரபஞ்சப் பெரு வெடிப்பிற்குப் பிறகு எஞ்சிய நீண்ட கால விளைவு!  ஜெர்மன் விஞ்ஞானி மாக்ஸ் பிளான்க் [Max Planck (1858-1947)] கருங்கோளக் கதிர்வீச்சை [Black Body Radiation] ஆராய்ந்து எழுதிய, ‘பிளான்க் கதிர்வீச்சுக் கணிப்பாடு [Planck ‘s Radiation  Formula] மூலம் உட்சிவப்பு, நுண்ணலை, வானலை [Infrared, Microwave, Radio Waves] ஆகியவற்றின் அலை நீளங்களைத் தனியே கணக்கிட்டு விடலாம்! அவற்றின் கூட்டமைப்பே பின்புலக் கதிர்வீச்சுகளின் அடர்த்தியாகக் [Intensity of Background Radiation] காணப் படுகிறது. ‘ஓர் குறித்த உஷ்ண நிலையில் கதிர்வீச்சு அடர்த்திக்கும், அதன் அலை நீளத்திற்கும் உள்ள ஓர் ஒப்பான உறவை ‘மாக்ஸ் பிளான்க் வளைகோடு’ முன்னறிவிக்கிறது. பெரு வெடிப்பின் பின் தங்கிய பின்புலக் கதிர்வீச்சு 3 டிகிரி K [-270 C/- 450 F] உஷ்ண நிலையில், மாக்ஸ் பிளான்க் முன்னறிவித்த வளைகோட்டை வியக்கத்  தக்கவாறு ஒத்துள்ளது! ஏறக்குறைய பின்புலக் கதிர்வீச்சு பிரபஞ்சத்தில் எத்திசையிலும்  ‘சம வெப்பநிலை’ [Isotropic State] கொண்டுள்ளதாக அறியப் படுகிறது.

    ஜார்ஜ் காமாவ் எழுதிய நூல்கள், பெற்ற மதிப்புகள்

    கடினமான ஐன்ஸ்டைனின் ஒப்பியல் நியதி [Relativity Theory], சிக்கலான அகிலவியல்  கோட்பாடு [Cosmology] ஆகியவற்றை எளிய முறையில் பொது நபர்கள் புரிந்து சுவைக்கும்  வண்ணம் காமாவ் எழுதிய விஞ்ஞான நூல்கள்: விந்தைபுரியில் திரு. டாம்கின்ஸ் [Mr. Tomkins in Worderland (1936)], பிறகு பல்லடுக்குப் பதிவுகளில் திரு. டாம்கின்ஸ் [Multi Volumes  Mr. Tomkins (1939-1967)], பரிதியின் பிறப்பும், இறப்பும் [The Birth & Death of the Sun (1940)], ஒன்று, இரண்டு, மூன்று…முடிவின்மை [One, Two, Three …Infinity (1947)], பிரபஞ்சத்தின் படைப்பு [The Creation of the Universe (1952,1961)], பூமி என்னும் ஓர் அண்டம் [A Planet Called  Earth (1963)], பரிதி என்னும் ஓர் விண்மீன் [A Star Called the Sun (1964)].

    1950 இல் காமாவ் டென்மார்க் ராஜிய விஞ்ஞானக் கழகம் [Royal Danish Academy of Siences  (1950)], அடுத்து அமெரிக்க தேசீய விஞ்ஞானக் கழகம் [U.S. National Academy of Sciences (1953)] ஆகியவற்றின் உறுப்பினர் ஆனார். விஞ்ஞான அறிவை எளிய முறையில் பரப்பி ஒப்பிலாப் பெயர் பெற்ற ஜார்ஜ் காமாவுக்கு, 1956 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் கல்வி, விஞ்ஞானக், கலாச்சாரப் பேரவை [UNESCO, United Nations Educational, Scientific & Cultural  Organization] காலிங்கப் பரிசை [Kalinga Prize] அளித்துக் கெளரவித்தது. 1965 இல் காமாவ்  பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் சர்ச்சில் கல்லூரியின் சிறப்புநர் [Fellow Churchil College, Cambridge] மதிப்பைப் பெற்றார்!

    பிரபஞ்ச விஞ்ஞானத்திலும், அணுக்கரு பெளதிகத்திலும் திறமை பெற்ற ரஷ்ய அமெரிக்க விஞ்ஞானி ஜார்ஜ் காமாவ் 1968 ஆகஸ்டு 20 ஆம் தேதி போல்டர் கொலராடோவில் தனது  64 ஆவது வயதில் காலமானார்.

    ++++++++++++++

    Images : NASA, Wikipedia

    Information :

    1.  Physicists  – The Biographical Dictionary of Scientists  Edited By :  David Abbott, Ph.D.   (1984)

    2.  Wikipedia –  George Gamow  (February 13, 2011)

    3.  George Gamow – Answers.com

    ++++++++++

    S. Jayabarathan (jayabarat@tnt21.com) February 19, 2011

    www.jayabarathan.wordpress.com/

    Share
  • காதல் நாற்பது – எலிஸபெத் பிரௌனிங் – தமிழாக்கம் : சி. ஜெயபாரதன்

    எலிஸபெத் பிரௌனிங் (1806-1861)

    தமிழாக்கம் :   சி. ஜெயபாரதன், கனடா

    நானொரு கறுப்பி ! குள்ள மாது !
    சாஃப்போ கவிஞனைப் போல,
    சாகாவரம் வாங்கியவள் நான் !
    ஐந்தடி ஓரங்குலம் உயரம் !
    பரிதியொளி பளிங்கு பட்டையில்
    பிரிவதுபோல்
    வண்ணங்கள் உடையவை என்
    கண்களின் நிறங்கள் !
    கண்ணாடி முன்னின்று நோக்கினால்
    என் தோற்றம்
    அழுத்தப் பச்சைப் பழுப்பு !
    பச்சை வேலியில் மறையும் பச்சை !
    நாசி ஒன்றும் பிரமாத மில்லை,
    அது ஒருவித மாதிரி !
    அதை ஈடுசெய்ய அகண்ட வாய் !
    அந்தோ ! மிக மிகச்
    சின்னக் குரல் எனக்கு !

    +++++++++++++++

    கவிதை மேதை எலிஸபெத் பிரௌனிங்.

    இரவீந்திரநாத் தாகூரின் கீதாஞ்சலிப் பாக்களைத் தமிழாக்கம் செய்த பிறகு, புதிதாக “காதல் நாற்பது” என்னும் தலைப்பில் பிரிட்டிஷ் கவிதை மேதை எலிஸபெத் பிரௌனிங்கின் கவிதை மலர்களைத் தமிழ்கூறும் நல்லுலகுக்கு அளிக்க விழைகிறேன்.

    எலிஸபெத் பிரௌனிங் பிரிட்டிஷ் மகாராணி விக்டோரியா காலத்தில் (1819-1901) வெற்றிகரமாக வாழ்ந்து பெரும்புகழ் பெற்ற கவிதை மாது. ஆங்கிலக் கவிஞர் ராபர்ட் பிரௌனிங்கின் காதல் மனைவி. டென்னிஸன் நினைவுப் பரிசைப் பெற்ற எலிஸபெத் எழுதிய உன்னதக் காவியப் படைப்பு, 1850 இல் வெளியான “போர்ச்சுகீஸின் பதினான்கு வரிக் கவிதைகள்” (Sonnets from the Portuguese). ராபர்ட் “போர்ச்சுகீஸ்” என்ற செல்லப் பெயரால் தன் காதலி எலிஸபெத்தை அழைத்தார். நாற்பத்து நான்கு எண்ணிக்கையுள்ள அந்த கவிதைகள் யாவும் ராபர்ட்டைக் காதலித்த போது எலிஸபெத் தொடராக எழுதியவை. எலிஸபெத்தின் கூரிய ஞானமும், நளினக் கவி நடையும், முகக் கவர்ச்சியும் கார்லைல், ரஸ்கின், தாக்கரே, ரொஸ்ஸெட்டி, ஹாதொரோன் போன்ற கவிதா மேதைகளை ஈர்ந்தன.

    எலிஸபெத் 1806 இல் இங்கிலாந்தில் டுரம் நகர்க் கருகில் கோக்ஸொ ஹால் (Coxhoe Hall near Durham) என்னும் ஓர் இடத்தில் ஒரு செல்வத் தம்பதிகளுக்குப் பிறந்தார். சிறு வயதில் எலிஸபெத் தனிப் பயிற்சியாளர் மூலமாகக் கல்வி பயின்றுத் திறமையோடு ஆங்கிலம், ·பிரெஞ், லத்தீன், கிரீக் ஆகிய அன்னிய மொழிகளிலும் பாண்டித்தியம் பெற்றார். பதினாங்கு வயதிலேயே எலிஸபெத் “மராத்தன் போர்” (The Battle of Marathon) என்னும் தன் முதல் கவிதைத் தொகுப்பைப் படைத்து வெளியிட்டார். அடுத்து வெளியான நூல்கள்: An Essay of mind (1826), Prometheus Bound (1833). The Serapim & Other Poems (1838), Sonnets of the Portuguese (1850). Last Poems (1862) எலிஸபெத் 1835 இல் லண்டனுக்கு வந்து தங்கிய போது பல வெளியீடுகளில் கவிதைகளை எழுதிப் பேரும், புகழும் பெற்றார். 1844 இல் அவரது கவிதைகள் வெளியாகிப் பலரது மனதைக் கவர்ந்து அமெரிக்கக் கவிஞர் எட்கர் அல்லன் போவின் பாராட்டைப் பெற்றார். எல்லா வற்றிலும் உயர்ந்த படைப்பாக எடை போடப்படுவது : போர்ச்சுகீஸின் பதினான்கு வரிக் கவிதைகள் (Sonnets from the Portuguese). போர்ச்சுகீஸ் என்பது ராபர்ட் எலிஸபெத்துக்கு வைத்த செல்லப் பெயர்.

    1820 இல் எலிஸபெத் ஓர் மர்ம நோயில் விழுந்து வயிற்று வலியில் மிகவும் வேதனைப் பட்டார். வலியைத் தாங்கிக் கொள்ள அந்தக் காலத்தில் அவருக்கு மருத்துவர் பயங்கர மார்·பின் மந்த மருந்தைக் கொடுத்து வந்தார்கள். மறுபடியும் 1838 இல் எலிஸபெத் இரத்தக் குழாய் ஒன்று அற்றுப் போய் கடும் நோயில் துன்பப்பட்டு மெலிந்து போனார். அதே சமயத்தில் அவரது சகோதரர் ஒருவர் நீரில் முழ்கி, அவருக்கு ஆறாத துயரை உண்டாக்கியது, அதற்குப் பிறகு எலிஸபெத் யாரையும் கண்டு கொள்ள விருப்பற்றுத் தனிமையில் கிடந்தார். அப்போது முழு நேரத்தையும் அவர் தன் அரியக் காவியப் படைப்புகளுக்கே அர்ப்பணித்தார்.

    தனது 39 ஆம் வயதில் (1845), தன்னை விட ஆறு வயது இளமையான கவிதா மேதை ராபர்ட் பிரௌனிங்குடன் கடிதத் தொடர்பு கொண்டு, ஆழ்ந்த காதல் வயப்பட்டார். அவர்களது அந்தரங்க ஆத்ம நட்பு பெற்றோருக்குத் தெரியாமல் மர்மமாகவே தொடர்ந்தது. காரணம் அவரது தந்தையார் தனது புதல்வர், புதல்வியர் திருமணமாவதைத் தடுத்துக் கொண்டு வந்தார். அடுத்த ஆண்டு எலிஸபெத் வீட்டை விட்டே வெளியே ஓடிவிட்டார். 1846 இல் ஒரு தேவாலயத்தில் பெற்றோர்க்குத் தெரியாமல் எலிஸபெத் ராபர்ட்டை மணந்து, ரோமுக்குச் சென்று, அங்கே ·பிளாரென்ஸில் குடியேறினார்கள். அவர்களுக்கு 1849 இல் ஓர் ஆண்மகவு பிறந்தது.

    இறுதிக் காலத்தில் திடீரென எலிஸபெத்துக்கு ஆன்மீகத்தில் ஆர்வம் பெருகிற்று. வட அமெரிக்காவில் கறுப்பு ஏழைகளைப் பிடித்து அடிமைகளாய் வணிகம் புரிந்து வருவதைக் கண்டித்தார். அக்கருத்தை மையமாக வைத்தொரு நூலும் எழுதினார். நோய் முற்றி ·பிளாரென்ஸில் 1861 ஆம் ஆண்டு கனிவுக் கணவரின் கையணைப்புக் கனலில், காதல் ராணி களிப்புடனே விண்ணுலகம் ஏகினாள். அவளது மரணத்துக்குப் பிறகு எழுத்தாள மேதை எட்வெர்டு பிட்ஸ்ஜெரால்டு துயரைக் காட்டாது தன் உன்னத இரங்கல் உரையில் கேலியாகக் குறிப்பிட்டார்: “மிஸிஸ் பிரௌனிங் மரணம் அடைந்ததில் எனக்கொரு பெரிய விடுவிப்பு ! “அரோரா லைஸ்” [Aurora Leigh: Collection of Poems by Elizabeth Browning] போன்ற மாபெரும் கவிதைத் தொகுப்புகள் இனிமேல் வெளிவாரா ! கடவுளுக்கு நன்றி ! அவள் ஓர் உயர்ந்த மேதை ! எனக்குத் தெரியும் அது. எல்லாவற்றுக்கும் முடிவாக நான் என்ன சொல்வது ? அவளும் அவளது பெண்பாலும் அடுப்பறையில் கிடந்து, குழந்தைப் பராமரிப்பைக் கவனித்திருக்க வேண்டும் ! ஏழையர் மீது வேண்டுமானால் இரக்கம் கொள்ளட்டடும் ! இப்படிக் குறுநாவல் எழுதுவது போன்ற பணிகளைச் சிறப்பாகப் படைக்கும் ஆடவர் கைவசம் விட்டு விட்டுத் தான் தலையிடுவதைத் தவிர்த்திருக்க வேண்டும் !”

    *******
    காதல் நாற்பது  (1)
    உன்னை நேசிப்பது எவ்விதம் ?

    எலிஸபெத் பிரௌனிங்

    (1806-1861)

    தமிழாக்கம் :   சி. ஜெயபாரதன், கனடா

    1.   Free Verse

    எவ்விதம் நேசிப்பது உன்னை ?
    எண்ண வேண்டும் நான்
    எத்தனை வழிகள் உள்ளன வென்று !
    ஆழமான காதல் உன்மீது !
    அகண்டது ! நீண்டது  !
    உணர்ச்சி மறைந்துள்ள போது,
    உயிரின முடிவாய்,
    ஒப்பிலா நளினத்தில்
    உன்னை எட்டித் தொடும் என் ஆத்மா.
    பரிதிப் பகல், மெழுகுவர்த்தி
    வெளிச்சத்தில்
    அவசியம் நேசிப்பேன் உன்னை
    அனுதின முடிவு வரை  !
    மனத் தடங்க லின்றி
    காதலிக்கிறேன்,
    மானிட உரிமைத் தேடலாய் !
    தூய மனதுடன் நேசிக்கிறேன்,
    என் புகழின் திருப்பமாய் !
    முந்தைத் துக்கங்க ளோடு
    குழந்தையின்
    பிடிவாத நம்பிக்கை யோடு
    பித்தானேன் உன் மீது !
    இழந்த புனிதரிடம்
    நழுவிய முந்தைக் காதல்
    நாடுகிறது உன்னை !
    பெருமூச்சு காட்டுகிறது
    என் காதலை !
    முறுவல் காட்டி விடும்
    என் காதலை !
    கண்ணீரும் காட்டி விடும்
    என் காதலை !
    வாழ்வு பூராவும் நேசிப்பேன்.
    முடிவிலே
    கடவுளின் விதி அதுவாயின்,
    அழுத்தமாய் இருக்கும்
    காதல் மட்டும்,
    உன்மேல்
    சாதலுக்குப் பிறகும் !

    +++++++

    2.    Sonnet Style

    எப்படி நேசிப்ப துன்னை ? எண்ண வேண்டும் வழிகளை
    என் காதல் ஆழ்ந்தது, அகண்டது, உயர்ந்தது, உன்மேல்
    எட்டித் தொடும் என் ஆத்மா பிரிவை உணரும் போது
    உயிரின வாழ்வின் முடிவாய், உன்னத நளின மதில்
    அனுதினம் இயலும் வரை நானுனை நேசிப்பேன்
    பரிதி வெளிச்சம், இரவு விளக்கில் அமைதிக் கவசியம்
    தடையிலா நேசம் மனித உரிமை முயற்சி போல்
    தூய தென் நேசம் பிறரது புகழின் திருப்பமாய்
    நேயம் உணர்ச்சி வசப்படும், பயன் படுத்தப் படும்
    பழைய துயரொடு, என் குழந்தை நினைப்பொடு
    இழந்த காதலை மீட்டு நேசிப்பேன் பாசமுடன்
    நழுவிய புனிதருடன் நேசிப்ப துன்னை, மூச்சுடன்
    கண்ணீர் முறுவல் ஆயுள் வரை கடவுள் விதியெனின்
    உனை மட்டும் நேசிப்பேன் மேலாய் சாதலுக்குப் பிறகும்.

    ++++++++++++

    ++++++++++++

    தகவல் :

    1. Sonnets from the Portuguese By: Elizabeth Barrett Browning (1967)

    2. The Selected Poetry of Browning (1966)

    3. The Works of Robert Browning By: The Wordsworth Lobrary (1994)

    4. Robert Browning Selected Works By: Johanna Brownell (2002)

    5. Elizabeth Barrett Browning’s Biography

    6.  http://en.wikipedia.org/wiki/Elizabeth_Barrett_Browning

    **************

    jayabarat@tnt21.com [S. Jayabarathan]   [May 30, 2012] R-2

    Share
  • எமனுடன் சண்டையிட்ட பால்காரி … !

    எமனுடன் சண்டையிட்ட பால்காரி … !


    சி. ஜெயபாரதன், கனடா



    பால்காரி பொன்னம்மா சோர்ந்து போய் கூரையைப் பார்த்துக் கொண்டிருந்தாள். மத்தியானம் சாப்பிடுவதைக் கூட மறந்து மரணப் படுக்கையில் கிடந்த புருசன் அருகே தலையில் கைவைத்த வண்ணம் பேயடித்தவள் போல தூணில் சாய்ந்திருந்தாள். பத்து நிமிஷத்துக்கு முன்புதான் புருசனின் மூச்சு நின்று போனது. இப்போது என்ன செய்வ தென்று தெரியாமல் தடுமாறினாள். நீண்ட பெரு மூச்சை விட்டு பொன்னம்மா எழுந்தாள்! அவள் கண்களிலிருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் கூட விழவில்லை. புருசன் முகத்தைப் பார்க்காமல் சுவறில் தொங்கிய ஒரு குழந்தையின் படத்தைப் பார்த்தாள். புன்முறுவல் பூத்த அந்தப் பாசமலர் அவள் நெஞ்சில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது! மெதுவாக ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தாள். உடனே திடுக்கிட்டு பரபரப்புடன் கதவைத் திறந்து கொண்டு வீதிக்கு ஓடினாள்.

    “போகாதீங்க, நில்லுங்க! நில்லுங்க!” என்று கூச்சலிட்டாள், பொன்னம்மா. எருமை மாட்டின் மீது ஏறிச் சவாரி செய்யப் போன எமதர்மன், உட்கார்ந்து கொண்டே பின்னால் திரும்பினான்.

    “சரித்திரம் மீள்கிறதா ? பின்னாலே வராதே பெண்ணே! உன் புருசன் உயிரைக் கொண்டு போறதுக்கு நான் மிகவும் வருந்துறேன்.”

    “நானே வருந்த வில்லை! நீங்க ஏன் வருத்தப் படணும் ? உங்க வேலைய நீங்க செய்றீங்க. என்னை பெண்ணேன்னு சொல்லாம, பொன்னம்மான்னு கூப்பிடுங்க!”

    “பொன்னம்மா, பேசாமல் போயிடு! என் பின்னாலே வராதே சாவித்திரி மாதிரி! நான் முதல் தரம்தான் ஏமாந்தேன். இரண்டாம் தடவை தப்பு பண்ணப் போறதில்லே! உன் புருஷன் உயிரை மட்டும் கேட்காதே.”

    “என் புருசன் உயிரைக் கேட்க நான் வர வில்ல. அது போறதுதான் நல்லது! எமராசா, நான் ஒன்னும் சாவித்திரி இல்லே ! சாதாரண மனுசிதான்.”

    “அட ஆச்சரிய மாயிருக்கே! ஏம்மா! நீ கண்ணகி பிறந்த நாட்டுக்காரி! கல்லானானும் கணவன், புல்லானாலும் புருசன் என்று கும்பிட குலமாச்சே! காலம் மாறிப் போச்சு! நீ பெண்ணல்ல என்னு சொன்னது இப்போதான் ஞாபகம் வருது!”

    “கண்ணகி எங்க குல தெய்வம் மாதிரி! ஆனா என் புருசன் குலத் துரோகி! நான் வாழ்றதிலே புண்ணிய மில்ல, எம ராசா!”

    “பொன்னம்மா! என்ன கவலை உனக்கு ? பால் வியாபாரத்திலே உனக்கு பண நொடிப்பா ?”

    “எம ராசா! கையெடுத்துக் கும்பிடறேன். ஒரேதா என் உயிரையும் கொண்டு போயிருங்கோ!”

    “நீ செத்துப் போக இன்னும் நாற்பது வருச மிருக்கே, நான் எப்படி உன் உயிரைக் கொண்டு போறது ? அது பெரிய தப்பாச்சே.”

    “தனியா எப்படி நாப்பது வருசம் வாழ்றது, எம ராசா! புருசன் இல்லாம, பிள்ளை, குட்டி இல்லாம ?”

    “இந்தா வந்துட்டயே! இது பழைய சாவித்திரி உத்தி! முதல்லே பிள்ளை வேணும் என்பே! பிள்ளைக் கொடுத்தா, எப்படிப் பிள்ளை பிறக்கும், புருசன் இல்லாம என்னு, புருசன் உயிரையும் வாங்கத் தந்திரம் பண்ணுவே!”

    “இத்தன நாளாய் என் புருசன்தான் என் உயிரை வாங்கிக் கிட்டிருந்தான்! எமலோகம் போற என் புருசன் உயிரை நீங்க தந்தாலும், நான் திரும்ப அங்கே அனுப்பிடுவேன்! அவனும் வேணாம்! அவன் கொடுக்கிற பிள்ளையும் வேணாம்!”

    “கதை வேற மாதிரிலே போவுது! புரியலையே பொன்னம்மா! குழப்புறயே!”

    “எம ராசா! பெண்ணுக்கு உத்தம புருசன் ஒருத்தன்தான் வேணும்! ஆனா ஆம்பிளைக்கு அப்படி யில்லே. சில ஆம்பிளைக்கு மூனு பொம்பளை வேணு மின்னு ஆசை யிருக்கு! கண்ணைக் கவரும் ஆடகியோ, காதில் இனிக்கும் பாடகியோ ஒருத்தி! கட்டில்லே ராத்திரி பக்கத்திலே படுக்க செதுக்கின சிலை போல இன்னொருத்தி! அப்புறம் கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருசன்னு, வீட்டுலே காத்து கிடக்க மூனாவது ஒருத்தி!”

    “பொன்னம்மா நீ என்ன சொல்றே ? புதிர் போடாமல் புரியும் படி பேசு.”

    “என் புருசன் ஊர்க் காளை மாடு மாதிரி! நாலாவது வீட்டு ரங்கம்மாவுக்கு ஒரு பிள்ளையை கொடுத்து, அது கழுதையாய் மண்ணுலே புரளுது! அவன் பிறந்த ஊர்லே குப்பம்மாவுக்கு இன்னோர் பிள்ளை கொடுத்து, அது கொண்டி மாடாய் ஊரைச் சுத்துது! இந்தா பாருங்கோ, என் புருசன் படுக்கிற கட்டிலிலே, நான் படுக்கிறதே இல்ல. அந்தப் பிள்ளைகளுக்கே அவன் அப்பனாக தொலையட்டும். என் பிள்ளைக்கு அவன் அப்பனா இருக்க வேணாம். அடுத்துப் பிறக்கிறது பன்றியாத்தான் இருக்கும்!”

    “அப்ப பிள்ளை வரத்தை எப்படிக் கொடுக்கிறது, சொல்லு ? ‘

    “. . . .மூனாவது குடிசையிலே வாழ்ற . . .  கார் டிரைவர் கந்தசாமி மேலே. எனக்கு ஒரு கண்ணு. கந்தசாமிக்கு என் மேலே. இரண்டு கண்ணு.”

    “இது தப்புத் தாளமாச்சே! புருசன் இருக்கும் போது அடுத்தவனை பார்க்கிறது அதர்ம மாச்சே!”

    “ஆமா! பொன்னம்மா வீட்டிலே இருக்கும் போது, என் புருசன் ரங்கம்மா கட்டில்லே ஒருநாளும், குப்பம்மா பாயிலே அடுத்த நாளும் படுக்கிறது என்னவாம் ?”

    “அதுவும் அதர்மம்தான்.”

    ‘அதைப் பெண்டாட்டி துரோகம் என்னு முதல்லே சொல்ல, ஆம்பிளை உங்க வாயிலே வரலையே!”

    “இரண்டும் தவறுதான். சரி நீயே போய் கந்தசாமியை கட்டிக்க வேண்டியதுதானே. நான் என்ன செய்யணும் ? ‘

    “எம ராசா! நான் கேட்க வந்தது, கந்தசாமிக்கு எப்படி ஆயிசு ? நீண்ட ஆயிசு தானே ?”

    “என் கிட்டே கந்தசாமியின் ஜாதகம் இல்லே. ஆயுள் கையேடும் இல்லே. எப்படி ஆயிசுக் கணக்கிடறது ?”

    “ஏதோ காலன், தூதன், சித்திர குப்தன் என்னு சொல்றாங்க, எங்கே போயிட்டாங்க அவுங்க ?”

    “இரு காலனைக் கேட்கிறேன். அவன் கிட்ட போர்டபிள் கம்பியூட்டர் ஒன்னு இருக்கு. சீக்கிரம் பார்த்துச் சொல்லிருவான்.”

    “சீக்கிரம் சொல்லுங்க எம ராசா! என் நெஞ்சி பக்பக்கென்னு அடிக்குது.”

    எமதர்மன் பெரு மூச்சு விட்டு ஆயுளைச் சொல்லத் தடுமாறினார். இரு கைகளையும் பிசைந்து கொண்டு மேலே நோக்கினார்.

    “என்னங்க எம ராசா, ஏன் வானத்தைப் பார்க்கிறீங்க ? ஆயுசு எப்படின்னு சொல்லுங்க ?  என் கண்ணைப் பார்த்துப் பேசுங்க.”

    “பொன்னம்மா! பார்த்ததுதான் பார்த்தையே, நீண்ட ஆயுசு ஆளாப் பார்த்துப் பிடிச்சிருக்கலாமே.”

    “என்ன சொல்றீங்க எம ராசா ? கந்தசாமி அற்ப ஆயுசா ?”

    “கண் கலங்காதே, பொன்னம்மா! கந்தசாமி வீட்டுக்கு . . .. நான் சீக்கிரம் . . . வருகிறதா யிருக்கு.”

    “அட கடவுளே! . இன்னும் எத்தனை வருசம் அவரு . .  ?”

    “கந்தனுக்கு அற்ப ஆயசுன்னு . . . காலன்கூடக் கண் கலங்குறான்.”

    “காலன் சரியாப் பார்த்துதான் சொன்னானா ? சில கம்பியூட்டர் சரியா வேலை செய்யாதாமே ? என் பிள்ளை கொஞ்ச நாள்தான் தகப்பனை பார்க்குமா ? எமதர்ம ராஜா, இது ஞாய மில்லே! அவருக்காவது நீண்ட ஆயுசைக் கொடு! உன் காலிலே விழுந்து கும்பிடுறேன்!”

    “என் காலிலே விழறேன்னு, எருமைக் காலைப் போய் கும்பிடறே! . . . அற்ப ஆயிசு கந்தசாமியை விட்டு, வேற ஆளைப் பாரு, பொன்னம்மா! அது தான் புத்திசாலிப் பெண் செய்யுற காரியம்.”

    “உத்தம ஆம்பளை கந்தசாமி போல எத்தனை பேர் இருக்கான் ? ஒழுக்கம் கெட்ட பயல்கள் தான் எங்க ஊரில அதிகம். ஆமா கந்தசாமிக்கு . .  எப்போ . .  ஆயுசு . . . முடியுது ? அதைச் சொல்லுங்க முதல்லே.”

    “அடேடே கந்தசாமிக்கு தம்பி இருக்கானாமே ! அவனுக்கு ஆயசு பலமா இருக்காம் ! 80 வயசு வரை தெரியுதாம். காதிலே காலன் ஏதோ முணுமுணுக்கிறான்.”

    “அந்த ஒட்டடைக் குச்சி பொன்னுலிங்கம் ஒரு குடிகாரப் பயல்! அவனை வச்சி துடைக்க என் வீட்லே ஒட்டடை கூட இல்லே! ராத்திரி ராத்திரி குடிச்சிபிட்டு வந்து பெண்டாட்டியை போட்டு அடிப்பான். காலையிலே நடு வீதியிலே தூங்கிக் கொண்டு கிடப்பான்! குடிக்கப் பண மில்லேனா என் மாட்டைக் கொண்டு போய்ச் சந்தையிலே வித்துட்டு, சாராயக் கடைக்கும் சர்க்காருக்கும் சம்பாரிச்சு கொடுப்பான்! எம ராசா! அயோக்கியப் பயலுக்கு அதிக வயசையும், உத்தம ஆம்பளைக்கு அற்ப ஆயுசையும் தலையிலே எழுதி வைக்கறீங்களே, இது என்ன ஞாயம் ? சொல்லுங்கோ அவருக்கு . . ஆயசு எதுவரை ?”

    “பொன்னம்மா! அற்ப ஆயுசு ஆளுங்க பூமியிலே இல்லாம போனால், எங்கள் ராஜியத்திலே பலருக்கு வேலை யில்லாம போயிரும் ! அப்புறம் என் பட்டாளங்கள் கறுப்புக் கொடியைத் தூக்கிட்டு அரண்மனைக்கு முன்னாலே ஆர்ப்பாட்டம் செய்து பட்டினி கிடப்பாங்க ! வேலை யில்லாத் திண்டாட்டம் எங்க துறையிலே மட்டும் வரக்கூடாது அம்மா !  வந்தால் என் உயிரை வாங்க வந்திடுவாங்க !”

    “அம்மான்னு சும்மா சொல்லாதீங்க !  நான் இன்னும் அம்மாவாகலே ! . . . சொல்லுங்க கந்தசாமிக்கு ஆயுசை ! என் மனசு துடிக்குது! சொல்லுங்க எம ராசா!”

    “உன்னைப் படைச்ச கடவுளே அதை மறைச்சு வச்சிருக்கான். அதை முன்னாலே நான் சொன்னா நீ மயக்கம் போட்டு விழுந்திடுவே. இல்லே திடீரென்னு உன் நெஞ்சு நின்னுட்டா, பிறகு என் மேலே புகார் வந்திடும். உன் உயிரை நான் எடுத்து போகவும் முடியாது.  இங்கே விட்டுட்டு போகவும் முடியாது. அது அப்புறம் அந்தரத்திலே பேயாய் அலையும்! உயிரை திருப்பி உடம்புல ஒட்ட வைக்கிற உத்தியும் எனக்கு தெரியாது! அது என் வேலை இல்லே. பிரம்மா படைப்பு வாரியத்தைச் சேர்ந்தது.”

    “சும்மா சொல்லுங்க எமராசா! நான் ஒன்னும் வெண்ணை யில்ல, உருகிப் போக. என் மனம் தேக்கு மரம் போல. . . என்ன கந்தசாமி இன்னும் அஞ்சி வருசம் இருப்பாரா ?”

    ‘உம் . . . அத்தன நீண்ட ஆயுள் இல்ல . . . அற்ப ஆய்சுக் கந்தனுக்கு.”

    “சரி அஞ்சில்லே. மூனு வருசமாவது அவர் . . . உயிரோட இருப்பாரா ?”

    “அதுவும் . . . இல்லே! . . . பொன்னம்மா! . . ஏன் கண்ணிலே கண்ணீர் குபுகுபுன்னு பொங்குது ?”

    “அப்படீங்களா ? . . பொன்னம்மா கண்களைத் துடைத்துக் கொள்கிறாள். சரி ஒரு வருடமாவது மனுசன் . . . உயிரோ டிருப்பாரா ?”

    “அதை நான் சொல்ல முடியாது, பொன்னம்மா! உனக்குப் பிள்ளை பிறந்து, கந்தன் கொஞ்ச காலம் இருப்பான்.”

    “எனக்குப் பிள்ளை பிறந்து, கந்தசாமி ஒரு வருசமாவது உயிரோடு இருக்கணும். அதுக்கு வரம் தருவீங்களா, எம ராசா ? உங்களைக் கெஞ்சி கேக்கிறேன்.”

    ‘அந்த வரத்தை நான் தர முடியும், பொன்னம்மா!”

    “நிச்சயமா சொல்றீங்களா எம ராசா ?”

    “ஆமாம்! உனக்கு பிள்ளை பிறந்து, கந்தன் ஒரு வருசம் உயிர் வாழறது உறுதி. அதுக்கு வரம் தருவதிலே எனக்கு எந்த ஆட்சேபணையு மில்லே! . . ஏன் பொன்னம்மா! . . நயாகரா மாதிரி கொட்டின கண்ணீ ரெல்லாம் . .  சினிமா ரீல் திருப்பி ஏறுற மாதிரி உன் கண்ணு மேலே ஏறுதே.”

    “என் வயிற்றுலே பசும் பாலை வார்த்திட்டாங்க எம ராசா! அந்த உத்தரவாதம் போதும் எனக்கு!”

    ஆனந்த கண்ணீர் இப்போது வடிய, பொன்னம்மா துள்ளிக் கொண்டு வீட்டை நோக்கி ஓடினாள்.

    “என்ன சொல்றே பொன்னம்மா ?  நான் பசும்பாலை உன் வயிற்றில் வார்த்தேனா ?”

    “இப்போ எனக்கு பிள்ளை வேணாம் எம ராசா ! . . நான் அதைத் தள்ளிப் போடறேன்.  நீங்க நீண்ட நாள் வாழணும்.” என்று சிரித்துக் கொண்டு கதவை மூடினாள், பொன்னம்மா.

    எமனுக்கு மண்டையில் ஏறிப் புரிபட சிறிது நேரம் பிடித்தது.

    “அடி பாதகி ! ஏமாற்றி விட்டாயே ! இரண்டாம் தடவையும் நான் ஏமாந்துட்டேன்.  சாவித்திரியை விட பால்காரி பலே கைக்காரி !”  கோபத்தில் கீரிடத்தைத் தூக்கி விட்டெறிந்து தலையில் நாலடி அடித்துக் கொண்டான்.

    எருமை வாகனத்தை வேகமாய் முடுக்கினான், எம ராஜன்.  திடீரென்று பின்னால் மறுபடியும் குரல் எழுந்தது.

    “போகாதீங்க! நில்லுங்க! நில்லுங்க!” என்று அலறிக் கொண்டு மறுபடியும் பொன்னம்மா ஓடி வந்தாள். பின்னால் திரும்பிய எமனுக்குக் கண்கள் இரண்டும் சிவந்து கோபக் கனல் பறந்தது.  பற்களை நறநற வென்று கடித்தான். கைகளைத் தூக்கி ஆங்காரத்துடன் திரும்பினான்.

    “இன்னும் ஏன் பின்னாலே வர்றே ! போதும் உன் உபத்திரம் ! போ! போ! போ! ஒழிஞ்சு போ.  எதுவும் உனக்கினித் தர மாட்டேன் !”

    “என் வயிற்றிலே மண்ணைப் போட்டு போறீங்களே, எம ராசா! நான் முக்கியமானதை விட்டிட்டேனே !”

    “புரியும்படி சொல்லித் தொலை!”

    “எம ராசா ! இது அநியாயம் ! திருடுன்னு எங்க ஊரிலே சொல்லுவாங்க ! நீங்க ஏறிப் போறது, என் எருமை மாடு ! தினம் எனக்குப் பால் கறக்கிற எருமை ! பால் எருமைக்கும் எருமைக் கடாவுக்கும் வித்தியாசம் தெரியாம, என் மாட்டை பத்திட்டு போறது சரியா ? மாட்டைப் பிடிக்க வந்தவ, புருசன் கிடைச்ச சந்தோசத்திலே அதை மறந்துட்டேன் !  புருசனைக் கொடுத்ததுக்கு எருமை வெகுமதியா ?”

    எம ராஜனின் சினம் பட்டெனத் தணிந்தது !  எருமையை விட்டுக் கீழ் இறங்கிப் பார்த்தான் !  எருமை மாடு எமனைப் பார்த்து முறைத்தது !

    “அட ஆமா, பால் எருமைதான் இது ! முதல்லே அதைச் சொல்லி யிருக்கலாமே ! . .  அதானே பார்த்தேன் ! தெற்கு நோக்கிப் போறதுக்கு பதிலா வடக்கிலே போவுதே, ஏன் என்று எனக்கு தெரிய வில்ல ! . . எங்கே என் மாட்டைக் காணோமே ?”

    “புல்லுத் தின்ன போயிருக்கும், எம ராசா! . . காலையிலே அது வயித்துக்கு ஏதாவது போட்டீங்களா ? . . எருமை மாட்டிலே வித்தியாசம் கண்டு பிடிக்க முடியலையே, நீங்க எடுத்துட்டுப் போற உயிர்கள் எல்லாம் சரியானதா ? . .  அட ஆண்டவா ! . .  எம ராசனுக்கும் வயசாகுதில்லே ! கண்ணு மிரளுது ! . . எம ராசா! மாடு தேடிறதுக்கு முந்தி முதல்லே ஒரு கண்ணாடி வாங்கி மாட்டிக்கங்க ! எருமை மாறாட்டம் மாதிரி, ஆள் மாறாட்டம் ஆனா என்ன ஆகுறது ?”

    பொன்னம்மா மாட்டை தட்டிக் கொண்டு கொட்டத்துக்குள் நுழைந்தாள்.  உதட்டைக் கடித்துக் கொண்டு திருதிரு வென்று விழித்த எமன், கீழே கிடந்த கிரீடத்தை தலையில் வைத்துக் கொண்டு, வேகமாக வாகனத்தை தேடி நடந்தான்.

    ++++++++++++++

    S. Jayabarathan [jayabarat@tnt21.com (January 19, 2008)] (Revised R-1)

    Share
  • முக்கோணக் கிளிகள்

    சி. ஜெயபாரதன், கனடா

    [முக்கோணத்தில் ஒன்றுதான் நேர்கோணமாக இருக்க முடியும் என்று சிவாவின் கணக்காசிரியர் பத்தாம் வகுப்பிலே நிரூபித்துக் காட்டினார்! அந்த மெய்யுரை அவனுக்குப் பச்சை மரத்தில் அடித்த ஆணிபோல் இன்னும் நினைவில் இருக்கிறது. எதிர்பாராது அந்த வீட்டில் சந்திக்க நேரிடும் மூவர் தமது புதிய உறவைத் தம்தம் கோணங்களில் திருப்பப் பார்க்கிறார்கள். பிற கோணங்களைப் புறக்கணித்து நேர் கோணப் பாதையில் மலை ஏறும் போது, முள்ளும் கல்லும் குத்தும்! எதிர்த்துப் பனிப்புயல் அடிக்கும்! முடிவில் சிகரத்தை எட்டிப் பிடிக்கும் போது தாக்கும் இமாலயத் தடைகளைத் தாங்க முடியுமா? ஒரு சிக்கல் அவிழ்ந்தால் அதன் வயிற்றிலிருந்து இன்னொரு சிக்கல் பிறக்கிறது!]

    காயிலே இனிப்ப தென்ன! கனியானால் புளிப்ப தென்ன!

    தட்டிய கதவைத் திறந்த புனிதா அதிர்ச்சி அடைந்து கண்ணிமை கொட்டாமல் சிலையாய் நின்றாள். வாசற் படியில் மகள் சித்ராவுடன் இணையாக நின்ற கவர்ச்சியான வாலிபனைக் கண்டதும், அவள் நெஞ்சில் குப்பென ஓர் ஊற்று பொங்கி எழுந்தது! அவன் கண்ணொளி பட்டதும் வெற்றிடமாய் சப்பிக் கிடந்த அவள் இதயம் உப்பி விரிந்தது!

    “அம்மா இவர்தான் மிஸ்டர் குருநாதன்! புதிதாகக் கல்லூரியில் சேர்ந்துள்ள எங்க மாத்ஸ் லெக்சரர். நமது மாடி வீட்டுக் காலி அறையில் தங்க விரும்புகிறார். முழுப் பெயர் சிவ குருநாதன், எங்க குரு!” உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாமல் சமாளித்துக் கொண்டு பேசினாள் புனிதா, “நான் கொடுத்த விளம்பரத்தில் கல்லூரிப் பெண்களுக்கு மட்டுமே வாடகைக்கு விடப்படும் என்று அழுத்தமாகச் சொல்லி யிருக்கேனே”.

    “நான்தான் அவரை அழைத்து வந்தேன், அம்மா. விளம்பரத்தைப் படித்த பிறகு அவருக்கும் இஷ்ட மில்லைதான்”

    “மாடி அறையில் ஆடவர் குடி வருவதை நான் விரும்பவில்லை. சித்ரா! உள்ளே வா! சொல்றேன்” சித்ரா உள்ளே சென்றதும் கதவை மூடிப் புனிதா ஏதோ மராட்டிய மொழியில் அவளுடன் பேசுவது சிவாவின் காதில் மெதுவாக விழுந்தது. பதினைந்து நிமிடங்கள் கழித்து, கதவு திறந்தது. சித்ரா மட்டும் தொங்கிய முகத்துடன் வெளியே வந்தாள்.

    “வெரி ஸாரி ஸார்! எங்கம்மாவுக்கு விருப்பம் இல்லை. நான் எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன்”

    “நான் மராட்டிக்காரன் இல்லை என்பது காரணமாக இருக்கலாம்”

    “அப்படி ஒன்றும் இல்லை”

    “ஒரு வருடம் தராவிட்டாலும், ஆறு மாதமாவது தங்கலாமா”

    “அம்மா ஆறு மாதத்துக்கு அவர் தங்கட்டுமே” என்று தாயிடம் கனிந்து கேட்டாள் சித்ரா.

    “ஒரு வருடத்துக்கு குறைஞ்சி வாடகைக்கு விடுவதாய் இல்லை. அதுவும் ஆண்களுக்கு கொடுப்பதாய் இல்லை” என்று உள்ளே இருந்து புனிதாவின் குரல் வந்தது.

    “மூன்று மாதங்களுக்குத் தங்க விடுங்கள். அதற்குள் வேறு இடம் பார்த்துக் கொள்கிறேன்”

    “இது பெண்களுக்குத் தரப்படும் ரூம்! ஆண்களை வைப்பதாக இல்லை” என்று அழுத்தமாகப் பேசினாள், புனிதா.

    “ஒரு மாதமாவது கொடுங்களேன். அதற்குள் வேறு ஒரு இடத்தைப் பார்த்துக் கொள்கிறேன். வேண்டுமானால் உங்களுக்கு ஓய்வு நேரத்தில் என்னால் முடிந்த வேலையைச் செய்து கொடுக்கிறேன்” என்று சிவா அவர்களைப் பரிதாபமாக நோக்கினான். புனிதாவிடமிருந்து உடனே பதில் வராமல் சற்று அமைதி நிலவியது.

    “எங்களுக்கு ஆடவர் உதவி எதுவும் தேவையில்லை!”

    “அம்மா நான் டியூஷனுக்கு வெளியே போக வேண்டியதில்லை, ஸார் எனக்கு கணக்கு, பிசிக்ஸ் சொல்லிக் கொடுத்தால்”

    “நான் பணம் வாங்காமலே சித்ராவுக்குச் சொல்லிக் கொடுக்கிறேன்”

    “அம்மா நமக்கு டியூஷன் பணம் மிச்சம், குரு நம்ம மாடியிலே வாடகைக்கு வந்தால்”

    “சித்ரா! உனக்கு யாரும் இலவசமா சொல்லித் தர வேண்டாம்” … போட்டாள் ஒரு போடு, புனிதா.

    “அப்போ சரி! குருவுக்கு டியூஷன் பணத்தைக் கொடுத்திடலாம். ஆனால் ஒரு மாதத்திலே நான் என்ன கணக்கைக் கற்றுக் கொள்வது? அல்ஜீப்ராவுக்கே மூணு மாசம் ஆகும்! அப்புறம் ஜியாமெட்ரி இருக்கு. அனலிடிகல் ஜியாமெட்ரி இருக்கு. அப்புறம் பிசிக்ஸ் படிக்க வேணும்! ஒரு வருசத்துக்கும் குறைஞ்சா அரை குறையாகத்தான் என் டியூஷன் முடியும்”

    “நான் அதுக்கு இப்போ பதில் தர முடியாது. கல்லூரி மீட்டிங் போக நேரமாச்சு! யோசித்து இரண்டு நாளிலே சொல்றேன்” என்று கூறி புனிதா உள்ளே போய் விட்டாள்.

    சித்ரா சிவாவைக் கண்டு புன்னகை புரிந்தாள். அழகிய அவளது மீன் விழிகள் இன்னும் விரிந்தன.

    கதவுக்குப் பின்னால் மறைந்த புனிதாவின் பேச்சில் காரம் இருந்தாலும், அவளது குரல் இனிமை சிவாவைப் பாகாய் உருக்கியது.

    “சித்ரா! நீ சாமர்த்தியக்காரி. உன் அம்மாவை மடக்கிப் போட்டு விட்டாயே. நன்றி சித்ரா நன்றி! நான் வருகிறேன் என்று நடக்க ஆரம்பித்தான்.

    “குருவே! ஹோட்டல் அறையில் தூங்கி விழாமல், சற்று தியானம் செய்யுங்க, மாடி அறை கிடைக்க வேணும் என்று. அம்மா மனதை மாத்துவது மிகக் கஷ்டம். இன்னும் நாற்பத்தி எட்டு மணி நேரம்! எண்ணிக் கொண்டே இருங்க” என்று சிரித்துக் கொண்டு கதவைச் சாத்தினாள், சித்ரா.

    ஞான ஒளி வீசுதடி, மோன விழிச் சுடர்முகத்தில்!

    கோயமுத்தூர் எஞ்சனியரிங் கல்லூரியில் இடம் கிடைத்து முதலாண்டு சேர்ந்த சித்ரா, மாத்ஸ் லெக்சரர் சிவநாதனை வகுப்பில் அன்று காலையில்தான் சந்தித்தாள். அப்போது சிவாவுக்கு தங்க அறை இல்லாதது, தன் வீட்டு மாடி காலியாக இருப்பது இரண்டையும் ஒன்றாய் இணைக்க ஒரு கணிதச் சமன்பாடு போட்டுப் பார்த்தாள். அன்று கணக்கு வகுப்பைத் தொடங்கிய சிவநாதன் பள்ளியில் போதித்த பழைய ஜியாமெட்ரியில் முக்கோணத்தின் பண்புகளை மாணவருக்கு நினைவூட்டினான். பித்த கோரஸ் தேற்றத்தை விளக்க வரும் போது அவன் கூறியதை சித்ரா மனதில் அசை போட்டுக் கொண்டிருந்தாள். முக்கோணத்தில் ஒரு கோணம்தான் நேர்கோணமாக இருக்க முடியும்! கணக்கில் அவள் ஒன்றும் பலவீனமானவள் அல்ல! கடைசி நேரத்தில் எப்படியாவது உருட்டிப் புரட்டி அறுபது மார்க்கு வாங்கி விடுவாள்! எப்படியோ படித்து, எப்படியோ தேர்ச்சி பெற்று, எப்படியோ இடம் வாங்கி, அவள் இப்போது எஞ்சனியரிங் கல்லூரி முதலாண்டு மாணவி என்ற பெருமிதத்தில் இருந்தாள்!

    பதினெட்டு வயது பொங்கித் ததும்பும் சித்ரா ஊர்வசியா அல்லது மேனகாவா? இரண்டில் ஒருத்தி. முதல் நாளே சிவநாதனின் நடை, உடை, பாவனை அனைத்தும் சித்ராவை மயக்கி விட்டன! சித்ராவுக்குப் பேசும் விழிகள்! அவள் தாய் புனிதாவுக்குப் பேசா விழிகள்! பேசும் விழிகளை விடப் பேசாத விழிகளே சிவாவுக்குக் காவியங்களைக் கூறின! புனிதாவையும், சித்ராவையும் அருகே நிற்க வைத்துப் பார்த்தால் தாய், மகள் மாதிரி தெரியாது. இருவரையும் அக்காள், தங்கை என்றுதான் சொல்ல வேண்டும்!

    சித்ராவின் தாய் புனிதவதி நாற்பது வயதைத் தாண்டி விட்டவள்! இருபது வயது வனிதா மணிபோல் புனிதா இருந்தாள்! சித்ராவை விட எடுப்பாகவும், உடல் கட்டு குலையாமல் செதுக்கி வைத்த சிலை போல இருந்தாள். அவளது கணவர் காப்டன் ஆனந்த் குல்கர்னி இறந்து பத்தாண்டுகள் ஓடி விட்டன! ராணுவ அதிகாரியாக ஜம்மு காஷ்மீரில் சில வருடங்கள் பணி புரிந்தவர். கடைசியில் காஷ்மீர் மூர்க்கர்களின் தாக்குதலில் உயிரைப் பலி கொடுத்தவர். கோயமுத்தூர் ராணுப் பயிற்சி முகாமில் மூன்று வருடங்கள் ஆனந்த் குல்கர்னி அதிபதியாக இருந்தவர். கணவனை இழந்த புனிதா இப்போது தனிமையில் மகளுடன் வாழும் தனிமரம்!

    பூனேயில் மராட்டியக் குடும்பத்தில் பிறந்த அவர்கள் கோவையில் இருபது ஆண்டுகளாக இருந்ததால் மூவருக்கும் நன்றாகத் தமிழ் பேசவும், எழுதவும் தெரியும். அதிலும் சித்ரா கோவையிலே பிறந்தவள். வீட்டில் மராட்டிய மொழி பேசினாலும் அவளுக்குத் தமிழ்தான் நன்கு எழுதப் பேசத் தெரியும். புனிதா எம்.ஏ. பட்டதாரி. நாகரீக மராட்டியக் குடும்பத்திலே பிறந்த புனிதா, கணவனை இழந்த பின்னும் நெற்றியில் பொட்டு வைத்துக் கொண்டாள்! கூந்தலில் பூ வைத்துக் கொண்டாள்! வண்ணச் சேலைகளைக் கட்டிக் கெண்டாள்! கணவனை இழந்தவள் என்று புனிதா வெளியில் விளம்பரம் செய்து கொள்வதில்லை! கோவை நிர்மலா பெண்டிர் கல்லூரியில் ஆங்கிலம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியையாக புனிதா வேலை பார்த்து வந்தாள். கல்லூரியில் பாதிப்பகல் கழிந்து விடுவதால், அவளைத் தனிமை கொடுமைப் படுத்துவது மீதிப் பாதி இரவு நேரம்தான்!

    சிவநாதன் நாற்பது வயதை எட்டியவன்! தங்கையின் திருமணம் தள்ளிக் கொண்டே போனதால், தனிமையில் அவன் வயதும் ஏறிக் கொண்டே போனது! தன் வயது ஏறுவதைப் பற்றி அவன் கவலைப் படவில்லை! ஆனால் மணமாகாமல் தங்கையின் வயது ஏறுவதை அவனால் தாங்க முடிய வில்லை! மதுரைக் கல்லூரியில் பற்றாத குறைந்த சம்பளத்தில் பத்தாண்டுகள் கணக்குச் சொல்லிக் கொடுத்தான். அந்த வருடம்தான் கணக்கு லெக்சரர் வேலை கிடைத்து, கூடிய சம்பளத்தில் கோவை எஞ்சினியரிங் கல்லூரியில் சேர்ந்திருக்கிறான். அவனும் தங்கையும் இரண்டே நபர்கள். தகப்பனார் காந்தியின் விடுதலைப் போராட்டத்தில் கலந்து இரண்டு வருடம் பெல்லாரி சிறையில் கிடந்தவர். இப்போது தியாகிகள் பென்ஷசன் பெற்று ஓய்வில் இருக்கிறார்! தாய் இருக்கிறாள். சிவாதான் குடும்ப கோபுரத்தைத் தாங்கும் தூண்! பணம் சேர்த்து தங்கையின் கல்யாணத்தை முடித்து வைக்க வேண்டியது அவன் கடமை! ஹோட்டல் அறையில் தங்கி தினமும் அவனது சேமிப்புப் பணம் கரைந்து போவதை எண்ணி சிவநாதன் கவலை அடைந்தான்! குறைந்த வாடகையில் அறை எடுத்து எப்போது ஹோட்டலை விட்டு ஓடுவது என்று சிவா அலை மோதிக் கொண்டிருந்தான். வசதியாக சித்ரா, அவனை அன்று மாலை தன் அம்மாவிடம் இழுத்துச் சென்றாள்.

    இனம் தெரியவில்லை எவனோ என் அகம் தொட்டு விட்டான்!

    அன்று காலை முதல் பீரியட் கணக்கு வகுப்பில் ஏகப்பட்ட கலவரம். அப்போது தென்னக மாநிலங்கள் தனியாகப் பிரியாத காலம் அது! நூறு பேர் கொண்ட முதல் வகுப்பில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு மொழி மாணவர்களும் கலந்திருந்தனர். அவர்களில் பெண்கள் மட்டும் பத்துப் பேர். முதல் வகுப்பு மலையாள மாணவர்களுக்கு சிவநாதனை ஏனோ பிடிக்கவில்லை! பின் பெஞ்சிகளில் அமர்ந்த மலையாளிகள் பலர் கணக்குப் பாடத்தில் கவனம் செலுத்தாமல் வேண்டு மென்றே கலாட்டா செய்தனர். பொறுமையையிழந்த சிவா, கணக்குப் போதிப்பதை நிறுத்தி, இராமாயணத்தைப் பற்றி ஆங்கிலத்திலே உரையாட ஆரம்பித்தார்.

    “கவியோகி வால்மீகி தான் எழுதிய இராம காவியத்தில் தென் கோடியில் வாழ்பவரை வானரங்களாய் காட்டியிருக்கிறார்! நான் அதை நம்புவதில்லை! வடக்கே அயோத்தியா புரியில் நாகரீக மனிதர் வாழும் சமயத்தில், தெற்கே மட்டும் எப்படி வானரங்கள் வாழ்ந்தன? வால்மீகி சொல்லியிருப்பது டார்வின் நியதிக்கு முரணாக இருக்கிறது! இதுவரை நம்பாத நான் வால்மீகி சொல்லி யிருப்பது உண்மை என இப்போது நம்புகிறேன்” என்று சிவா சொல்லி முடித்த போது, வகுப்பில் சிரிப்பு வெடிகள் வெடித்தன! மலையாள மாணவர்களுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது! சிவா மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆனால் ஒன்றும் நடக்க வில்லை! உடனே அனைவரும் வகுப்பறையை விட்டு வெளியேறினர்! பிறகு வகுப்பில் கணக்குப் பாடம் ஒழுங்காக நடந்து முடிந்தது.

    சிவா வெளியே வந்ததும் காத்துக் கொண்டிருந்த சித்ரா புன்னகை மலர, “கணக்கு வகுப்பில் அனுமார் கதையைச் சொல்லி எல்லாரையும் வயிறு வலிக்கச் சிரிக்க வைத்து விட்டீர்களே! ஸார் உங்களுக்காக மாடி அறைக் காத்துக் கொண்டிருக்கு! இன்று மாலை வரலாம். சிவப்புக் கம்பளம் விரிக்கவா? அல்லது பச்சைக் கம்பளம் விரிக்கவா? அறையில் ஏர் கன்டிஷன் இல்லை. வேண்டுமானால் மாட்டித் தருகிறோம். ஆனால் வீட்டு டியூஷனில் ராமர் கதா காலட்சேபத்தை ஆரம்பித்து விடாதீர்கள்” என்று நக்கல் புரிந்தாள்.

    “உங்க அம்மா ஒரு மாதத்துக்குச் சம்மதம் தெரிவித்தார்களா?”

    “ஒரு மாதமா? இல்லை. ஆறு மாதங்கள் வாங்கி விட்டேன், அம்மாவிடம் சண்டை போட்டு! எனக்கு மட்டும் நன்றி சொல்லுங்கள், முதலில்” என்றாள்.

    “உனக்கு நூறு நன்றி! உன் அம்மாவுக்குக் கோடி நன்றி”

    “எனக்கு ஒரு நன்றி போதும்! அம்மாவின் நன்றியை என்வழியாக அனுப்பாமல், நேராகச் சொல்லிக் கொள்ளுங்க” என்று கூறி விட்டு அடுத்து கெமிஸ்டிரி கூடத்துக்குள் நுழைந்தாள். சிவா அடுத்த கணக்கு வகுப்புக்கு நேரமாகவே சென்றான்.

    பொங்கிவரும் பெருநிலவு போன்ற ஒளி முகத்தாள்!

    அன்று மாலை சிவா, சித்ரா வீட்டு முன் அறையில் வந்து அமர்ந்தான். சுவரில் ஜனாதிபதி பதக்கத்தை அளிக்கும் ஒரு பெரிய படம் தொங்கியது! கம்பீரமான தோற்றமுடன் இராணுவ உடையில் நின்றார், ஆனந்த் குல்கர்னி. சித்ரா சிவாவுக்கு மாடி அறைகளைக் காட்டி விட்டு, அம்மாவிடம் கீழே அழைத்து வந்தாள். புனிதா சிறிது கடுமையான முகத்துடன் சிவாவை வரவேற்றாள். காபி கொண்டு வந்த சித்ராவுக்கு சிவா நன்றி சொன்னதும், வாடகையைப் பற்றி புனிதா பேச ஆரம்பித்தாள். அறைக்கு மாத வாடகை 400 ரூபாய். இரண்டு மாதங்களுக்கு முன்பணம் தர வேண்டும். ஆக முதலில் 1200 ரூபாய் வேண்டும். ஆறு மாதத்திற்குள் அவன் வேறோரு இடம் பார்த்து அறையைக் காலி செய்ய வேண்டும்.

    கல்லூரி நாட்களில் மாலை ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் சித்ராவுக்கு டியூஷன் சொல்லிக் கொடுத்தால் மாதம் 100 ரூபாய் தருவதாகச் சொன்னாள். சிவா உடனே ஒப்புக் கொண்டான். ஆனால் முன்பணமும், முதல் மாத வாடகையும் தற்போது தன்னால் தர இயலா தென்றும், முதல் மாதச் சம்பளம் கையில் கிடைத்ததும், சேர்த்துத் தருவதாக சிவா சற்று பரிதாபமாகக் கூறினான். அதற்குப் புனிதா ஆட்சேபம் தெரிவிக்கவில்லை. அவனது நிலை புனிதாவுக்குப் புரிந்தது. ஹோட்டல்காரன் பணமில்லாத சிவாவை ஒருநாள் கூடத் தங்க விடமாட்டான்! கனிவாக சிவாவைப் பார்த்தாள், புனிதா. அவளது பாசமலர்க் கண்களில் சிவாவின் இதயம் சிக்கிக் கொண்டது. சிவா புறப்பட எழுந்தான்.

    “சில நிபந்தனைகள், மிஸ்டர் சிவா! மாடி அறையில் எந்தக் கேளிக்கைப் பார்டிக்கும் அனுமதியில்லை! குடிச்சுக் கூத்தடிக்க அனுமதியில்லை! புகை பிடிக்க அனுமதி இல்லை! உங்க பெற்றோர், உறவினர் வரலாம். குடிப் பழக்கம் இருக்கும் நண்பர்களை இங்கு அழைத்து வர வேண்டாம்! இரவில் பின் வழியாக மாடியில் ஏறிச் செல்லும் போதும், இறங்கும் போதும் சத்தமோ சந்தடியோ உண்டாக்கி வீட்டில் தூங்குபவரை எழுப்பி விடக் கூடாது”

    “நான் குடிப்பதில்லை” என்றான் சிவா. நிபந்தனைகளுக்கு உடன்படாக சிவா தலையை ஆட்டினான். பிறகு தன் பெட்டி, படுகையைக் கொண்டு வர ஆட்டோ ரிக் ஷாவைத் தேடிச் சென்றான். போகும் போது புனிதாவின் மிடுக்கான கண்களும், எடுப்பான தோற்றமும் சிவாவின் நெஞ்சையே வட்டமிட்டுக் கொண்டிருந்தன!

    கண்ணில் தெரியுதொரு தோற்றம், அதை
    வண்ணப் படமெடுக்கும் நெஞ்சம்!

    அன்று தீபாவளி. கல்லூரியில் கிடைத்த ஒரு நாள் விடுமுறையில் மதுரைக்குச் சென்று வர சிவா விரும்பவில்லை. காலையில் புத்தாடை கட்டி இனிப்புப் பலகாரம் தின்ன அமரும் போது, மாடியில் நடமாடும் காலடிச் சத்தம் கேட்கவே, சிவாவை அழைத்து வரும்படி புனிதா சித்ராவை அனுப்பினாள். கீழே வந்த சிவா புத்தாடை புனைந்து, பூவும் பொட்டும் இட்டுப் புது மணப்பெண் போல் காட்சி அளித்த புனிதாவைக் கண்டதும் அவளது அழகில் மயங்கினான். அவன் நெஞ்சில் கனல் பற்றி இதயத் துடிப்பு அதிகமானது! இளமை பொங்கும் சித்ராவும் அழகாய் அணிந்து அன்று பூத்த மலர் போல் தோன்றினாள். அவளது வாலைமீன் கண்கள் சிவாவைக் கவர வலை விரித்தன! அவள் தன் அழகிய சிரிப்பிலே அவனை மயக்கினாள். சிவாவின் கண்கள் சித்ராவின் சிலந்தி வலையிலிருந்து தப்பி, புனிதா விரிக்காத வலையில் சிக்கிக் கொண்டன!

    புனிதா புன்னகை மலர சிவாவை நாற்காலியில் அமரச் சொன்னாள். கைப் பொன் வளையல்கள் ஆட தாமரை அரும்புகள் போன்ற பளிங்கு விரல்கள் பலகாரங்களைப் பரிமாறும் அழகைச் சிவா ரசித்தான்! தின்னும் பலகாரங்களின் சுவையை ரசிக்காது சித்ராவின் கண்ணிமைகள் சிவாவின் முகத்தைப் பார்த்தும், பார்க்காமலும் விட்டு விட்டுப் படமெடுத்துக் கொண்டிருந்தன! புனிதா தயாரித்த தீபாவளிப் பலகாரங்கள் எல்லாம் சுவையாய் இருந்தன. அதைவிடப் புனிதாவின் குரல் சிவாவின் காதில் தேனாய் இனித்தது! வருடத்தில் தீபாவளி இப்படி ஒரு தடவைதான் வர வேண்டுமா என்று சிவாவின் மனம் கேட்டது! தேவலோக ரம்பை போன்ற புனிதா அன்று அன்புடன் தீபாவளித் தின்பண்டங்களைப் பரிமாற அவன் கொடுத்து வைத்தவன்! பல முறைத் தடுமாறி நன்றி சொல்லி சிவா இதயத்தை அவர்களிடம் விட்டு விட்டு மாடிக்குச் சென்றான். சித்ரா, புனிதா இருவரும் அவர்களது இதயத்தை அவன் பறித்துச் செல்ல சிலையாய் நின்றனர்!

    தோயும் மது நீ எனக்கு! தும்பியடி நான் உனக்கு!

    நாட்கள் சென்றன! டியூஷன் பாடங்கள் தினமும் நடந்தன! சித்ரா தினமும் டியூஷனில் கற்றுக் கொள்வது குறைவு! தனக்கு நன்றாகத் தெரிந்த விபரங்களையும் தனக்குத் தெரியாதது போல் திருப்பித் திருப்பி கேள்வி கேட்டு சித்ரா காலத்தைக் கடத்தினாள்! அவன் கவனத்தை கவர்ந்தாள்! தினமும் தரிசனம் தந்து சிவா தன்னையே நினைக்கும்படி செய்ய பல உபாயங்களைக் கையாண்டாள். நெருங்கி ஒட்டிக் கொள்ளத் துடிக்கும் சித்ராவை வெட்டி விட முடியாமல் தன்னைக் கட்டுப்படுத்த சிவா மிகவும் சிரமப் பட்டான்! காந்தக் கனல் வீசும் அவளது வாலிப மேனியைப் பற்றிக் கொள்ள எழும் இச்சையைக் கட்டுப் படுத்த சிவாவின் மனம் படாத பாடு பட்டது! என்னதான் கற்றாலும், எதற்குத்தான் கட்டுப் பட்டாலும் ஐம்புலன்கள் ஆட்சி செய்யும் தோல் போர்த்திய உடம்பு வேறு! அகத்தே உறங்கிக் கிடக்கும் உள்ளம் வேறுதான்! உடற்பசி வேறு! உள்ளப்பசி வேறு! உடல் வேண்டுவதை உள்ளம் தடுக்கும்! உள்ளம் வேண்டியதை உடல் தடுக்கும்! உடலும், உள்ளமும் ஒன்றுக்கொன்று பகையாளி! கண்ணிருந்தும் உடல் குருடானது! கண்ணில்லா உள்ளம் ஒளி கொண்டது! சித்ராவை அணைத்துக் கொள்ள உடல் விரைந்தது! ஆனால் சிவாவுக்கு உள்ளம் தடை உத்தரவு போட்டது!

    அன்று சித்ராவுக்குப் புரியாத பிஸிக்ஸ் கணக்குளைச் சொல்லிக் கொடுக்க தியரியை விளக்கப் போய் இரவு பத்து மணி ஆகிவிட்டது! சாப்பிடும் ஹோட்டலில் இரவு ஒன்பது மணிக்கு மேல் உணவு கிடைக்காது! சித்ரா மட்டும் சாப்பிட உட்கார்ந்தவள், அம்மாவைக் கெஞ்சினாள்! “அம்மா! என்னால் இன்றைக்கு அவரது இரவுச் சாப்பாடு போச்சு! நம் வீட்டில் சாப்பிட அழைக்கலாமா” என்று கேட்டாள் சித்ரா. தாயும் சம்மதம் தரவே, சித்ரா ஓடிப் போய் சிவாவை அழைத்து வந்தாள். நாற்காலியில் அமரச் சொல்லி அவனைச் சிரித்த முகத்துடன் வரவேற்றாள், புனிதா. மேஜை மேல் பாதிப் பக்கங்கள் திறந்தபடிக் கிடந்த வி.ஸ. காண்டேகரின் நாவல் “கிரௌஞ்ச வதம்” அவன் கவனத்தைக் கவர்ந்தது. தள்ளி உட்கார்ந்த சிவாவை, அம்மா பரிமாற வசதியாக இருக்கும் என்று பக்கத்தில் அமரச் சொன்னாள் சித்ரா. அவன் கேளாமல் போகவே சித்ரா போய் அவன் அருகில் உட்கார்ந்தாள். இடது புறத்தில் சித்ரா! வலது புறத்தில் நின்று, தட்டில் பரிமாறியவள் புனிதா! இரண்டு அணங்குகளின் கவர்ச்சியான மேனியில் எழுந்த காந்த மண்டலத்தில் அகப்பட்டுக் கொண்டு இருபுறமும் சிவா ஈர்க்கப் பட்டுத் திண்டாடினான்!

    “காண்டேகரின் கிரௌஞ்ச வதம் நாவலை நான் படித்திருக்கிறேன். உணர்ச்சி பொங்கும் உயர்ந்த நாவல்! அவர் உன்னதக் காவியப் படைப்பாளர்” என்று மௌனத்தைக் கலைத்தான் சிவா.

    “ஏற்கனவே “கிரௌஞ்ச வதம்” நாவலை நான் மராட்டியில் படித்ததுதான்! இப்போது அந்த நாவலைத் தமிழில் சுவைக்கிறேன். அழகிய தமிழ் நடையில் கா.ஸ்ரீ.ஸ்ரீ காண்டேகரின் மனத்தை அப்படியே எடுத்துக் காட்டியிருக்கிறார்” என்று தனது தமிழ்ப் பற்றைக் காட்டினாள் புனிதா.

    “பாவம்! கடைசிக் காலத்தில் மராட்டியக் காவிய மேதை காண்டேகரின் கண்கள் ஒளியிழந்து குருடாகிப் போயின”

    “ஆங்கிலக் கவி மேதை ஜான் மில்டன் போல” என்றாள் புனிதா.
    “உயர்ந்த மேதைகளுக்கு ஒன்று ஆயுள் குறுகிப் போவுது! அல்லது கண்கள் குருடாகிப் போவுது!”
    அப்போது புனிதாவின் எழிற் கண்கள் வீசிய ஒளிவீச்சு சிவாவின் நெஞ்சில் மின்னலைப் பாய்ச்சின! அந்த மின் அதிர்ச்சியிலிருந்து மீண்டு அவன் விழிப்படைய சில கணங்கள் எடுத்தன!

    சப்பாத்தி, குருமா, பருப்புக் குழம்பு, அப்பளத்துடன் மராட்டிய முறையில் தயாரித்த உணவு சிவாவுக்கு அமுதமாய் இருந்தது! அதை விட அவளது கனிவுக்குரல் இனித்தது! இனிதாக அவள் பேசுவதைத் திரும்பத் திரும்ப கேட்க வேணும் போல அவனுக்கு ஆசை எழுந்தது. அத்தனை அன்புடன் அவனை யாரும் இதுவரை உபசரித்ததில்லை.

    அன்றைய தினத்தில் நடந்த சிவாவின் முதல் விருந்து புது விதமான உணர்ச்சிகளை மூவரிடமும் எழுப்பியது! சிவாவை வீட்டுக்கு வந்த மருமகனாக எண்ணிச் சித்ரா கற்பனைக் கனவில் மிதந்தாள்! பத்தாண்டுகளுக்கு முன்பு அதே இடத்தில் புருசனுக்கு உணவு பரிமாறிய நினைவு புனிதாவுக்கு வந்தது! கண்ணான கணவனுக்குத் தனது கையால் உணவு பரிமாறுவது போல் எண்ணிப் புனிதா மனதில் இன்புற்றாள்! சிவாவுக்கு வயிறு மட்டும் நிறைந்தது. ஆனால் இதயம் காலியாகிப் பசி உண்டானது! அவனது உள்ளம் புனிதா ஒருத்தியை மையமாக வைத்து அவளையே சுற்றிச் சுற்றி வந்தது!

    சாப்பிட்டதும் நன்றி கூற வந்த சிவா, தான் இரண்டு மாத வாடகை தர முடியாமல் போனதற்குப் புனிதாவிடம் வருத்தம் தெரிவித்தான். அவன் கையில் பணம் சேர்ந்தாலும், சேர்ந்த பணத்தை விட செலவுப் பணம் அதிகமானது! தகப்பனாரின் கடிதம் இரண்டு வாரத்துக்கு ஒரு முறை வந்துவிடும். மாதம் ஒரு முறை மொத்தமாக அனுப்பினாலும், அவருக்குத் தொகை பற்றவில்லை. தங்கை திருமணச் சீட்டுக்குச் செலுத்தும் பணம்! மின்சார வாரியத்துக்குப் பணம்! அரிசி, பருப்பு காய்கறிகளுக்குப் பணம்! பால் வாங்க தனியாகப் பணம்! சிவா கல்லூரிக்குக் கடன் வாங்கிப் படித்ததுக்கு மாதா மாதம் பணம் அடைப்பு! அதனால் பெரிய பணமுடை உண்டாகிக் கடைசி இரண்டு மாத வாடகை புனிதாவுக்குத் தர முடியாமல் போனது!

    தங்கையின் திருமணத்துக்குச் சீட்டுப் பணம் செலுத்துவது, தன் படிப்புக் கடனை அடைப்பது, நோய்வாய்ப் பட்ட தந்தையின் மருந்துக்குத் தருவது, அத்துடன் வீட்டுச் செலவுக்கு அனுப்புவது இவைகளுக்கே தன் வருவாய் பற்றாமல் போவதைப் புனிதாவிடம் இப்போது சொல்லி விடுவதுதான் நல்லது என்று நினைத்து தனது பண முடையை விபரமாகக் கூறினான். கண்ணிமைகள் கொட்டாது கூர்ந்து கேட்ட புனிதாவுக்கு என்ன சொல்வ தென்றே தெரியாமல் பரிதாபமாக அவனைப் பார்த்தாள்.

    தன்னால் வாடகை தர முடியாமல் போவதால், ஆறு மாதத் தவணைக்கும் முன்பாகவே தான் அறையைக் காலி செய்வதாய் வருத்தமுடன் கூறினான் சிவா!

    “என் டியூஷன் என்ன ஆவது? பாதியிலே விட்டு விட்டுப் போவது சரியா” என்று அலறினாள் சித்ரா. புனிதா பெருந்தன்மையுடன் பேசினாள்.

    “மிஸ்டர் சிவா! திடீரென்று எங்கும் போக வேண்டாம்! பணம் மிஞ்சும் போது கொடுக்கலாம். போய் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். கல்லூரியிலிருந்து வந்ததும் மாலையில் பேசிக் கொள்ளலாம்” என்று கனிவாகப் பேசி சிவாவை அனுப்பி வைத்தாள். சித்ராவின் முகத்தில் முழு நிலவு தென்பட்டது. புனிதாவுக்கு நன்றி கூறி அவள் முகத்தை நெஞ்சில் படமெடுத்துக் கொண்டு, பெரு மூச்சுடன் மாடிக்குச் சென்றான், சிவா.

    தூண்டிற் புழுவினைப் போல், எரியும் சுடர் விளக்கினைப் போல்
    நீண்ட பொழுதாக எந்தன் நெஞ்சம் துடித்தடி!

    அன்று மூன்று பேருக்கும் தூக்கம் இல்லை! ஒவ்வொருவருக்கும் ஒருவித ஏக்கம்! சிவாவுக்கு வாடகைப் பணம் தர முடியவில்லையே என்னும் குற்றமுள்ள நெஞ்சு! புனிதாவின் அன்ன மிட்ட கைகள், புன்னகை தழுவிய முகம், கனிவு பொங்கும் இனிய குரல் அனைத்தும் கனவாகப் போகுமா என்ற பயம்! படுக்கையில் புரண்டு புரண்டு படுத்தான்! இதயத்தைக் கவர்ந்த ஒருத்தியை விட்டு விட்டு அவனால் போக முடியுமா? வாடகை தர முடியாத சிவாவை இன்னும் மாடி அறையில் தங்க அனுமதித்த, புனிதாவுக்கு சிவா என்ன கைம்மாறு செய்யப் போகிறான்?

    புனிதாவுக்கும் அன்று உறக்கம் வரவில்லை. பத்தாண்டுகளாக கணவன் காஷ்மீரில் மரணமடைந்த பின் ஆடவர் வாடையே இல்லாமல் தனியாகக் காலம் கழித்தவள் புனிதா. இப்போது பாலை வனத்தில் கண்ட பசுஞ் சோலையாக சிவா அவளது தலை வாசலில் கால் வைத்தான். தங்கையின் திருமணத்துக்கு அவன் பணம் சேர்ப்பதும், குடும்பமே கண்ணாக அவன் உழைப்பதும் புனிதாவுக்கு அவன் மேல் பற்றையும், கவர்ச்சியையும் உண்டாக்கியது. அவன் வாடகை தராமல் பணம் தாமதமாகி விட்டாலும் பரவாயில்லை. அறையை விட்டு அவன் போய் விட்டால், அவளது நெஞ்சில் ஒரு பெரும் குழி உண்டாகி விடும் என்று அஞ்சினாள். கல்லூரியிலிருந்து மாலையில் சிவா வீடு திரும்பி மாடியில் நடக்கும் ஓசையைக் கேட்கும் போதெல்லாம் அவளது இதயத்தில் ஏதோ ஒரு துடிப்பும், அதைத் தொடர்ந்து ஒரு கனலும் எழுந்தது. கல்லூரியில் அவள் பீ.ஏ. வகுப்பில் ஷேக்ஸ்பியரின் நாடகம் “அண்டணி & கியோபாட்ரா” நடத்தும் போது, சிவா அண்டணியாகவும் தான் கிளியோபாத்ராவாகவும் எண்ணிக் கற்பனை செய்து கொள்வாள்! அவனையே இராப்பகலாக நினைக்கும் அவள் மனம் அவன் போய் விட்டால் என்ன பாடு படும்?

    சித்ராவும் தூங்க வில்லை! முந்திய நாள் அவனுக்குத் தெரியாமல் அறையில் எடுத்த அவன் படத்தை பார்த்துப் படுக்கையில் ரசித்துக் கொண்டிருந்தாள். கல்லூரி வகுப்பில் சந்தித்த முதல் நாளே, சித்ரா மயங்கி, தன் இதயத்தை சிவாவிடம் பறி கொடுத்தாள்! அப்புறம் சாமர்த்தியமாகத் தன் வீட்டு மாடி அறையில் அவனை அடைத்து விட ஒரு வாய்ப்புக் கிடைத்தது! கணிதப் பாடத்தைச் சொல்லிக் கொடுக்க வைத்துத் தினமும் அவனைத் தரிசிக்க, சித்ரா வழி வகுத்து அதிலும் அவளுக்குப் பூரண வெற்றி!

    அன்று சனிக்கிழமை! முகத்தைக் கழுவி விட்டுத் துண்டில் மூடித் துடைத்து கொண்டு கண்ணாடி முன் நின்ற சிவா தன் தோள் மீது மெத்தென்ற ஒரு கரம் பட்டதும் திடுக்கிட்டான்! கவர்ச்சி பொங்க சிரித்துக் கொண்டு பின்னால் நின்றவள் சித்ரா! சிவாவின் இதயம் ஆடியது! மெதுவாக அவளது கைகளை விலக்கினான்! சித்ரா மறுபடியும் அவனது தோளில் கையை வைத்தாள்! சிவநாதனுக்குப் கோபம் வந்தது!

    “சித்ரா! இது தப்பு! நீ என்னைத் தொடுவது தகாத செயல்” என்று அலறினான்.

    “நீங்க என்ன கீழ் ஜாதியா? இதிலே என்ன தப்பு இருக்கு?”

    “நீ வயசுப் பெண். என்னை நீ தொடக் கூடாது! நான் எந்த ஜாதியா இருந்தா என்ன? உங்க அம்மாவுக்குத் தெரிந்தால் என்ன ஆகும்? என்னை வெளியே துரத்திடுவாங்க”

    “துரத்த மாட்டாங்க! என்ன ஆகும் தெரியுமா? எனக்கும் உங்களுக்கும் கல்யாணம் ஆகும்! எங்க அம்மாவுக்கு அவ்வளவு பயமா?”

    “இப்போ உன்னைக் கண்டால்தான் எனக்குப் பயமாயிருக்கு! பிளீஸ் கையை எடு”

    “நான் உங்களைத் தொடுவது தப்புன்னு என் கையை உதறித் தள்ளினால் என் கையைப் பிடிச்சு இழுத்தீங்க நான் அம்மாவிடம் புகார் செய்வேன்! அப்போ என்ன செய்வீங்க?” என்று அவனை மடக்கினாள். சிவாவுக்குத் தர்ம சங்கடமாய்ப் போனது!

    “அப்படி உன் அம்மாவிடம் நீ பொய் சொல்வாயா? எதற்காக இங்கு வந்தாய்? இன்று டியூஷன் கூட இல்லை”

    “சினிமாவுக்குக் கிளம்பினேன். உங்களுடன் போகலாம் என்று அழைக்கத்தான் வந்தேன்”.

    “நான் சினிமாவுக்குப் போவதில்லை. அப்படிப் போனாலும், உன்னுடன் போவதாக இல்லை”

    “இப்போ நான் தீண்டத் தகாதவளாக ஆயிவிட்டேனா? நான் பணம் தருகிறேன், சினிமாவுக்கு”

    “சித்ரா, உன் பணத்தில் நான் சினிமா பார்க்க விரும்பவில்லை”

    “நீங்க இந்தப் பணத்தை எனக்குத் திரும்பித் தர வேண்டாம்”

    “நான் உன்னுடைய கிளாஸ் லெக்சரர். வாலிபப் பெண் உன்னுடன் நான் படம் பார்க்கப் போவதை யாராவது பார்த்தால் என்ன நினைப்பார்கள்?”

    “பாய் பிரண்டு என்னு நினைப்பாங்க! வீட்டிலே நீங்க லெக்சரர் இல்லே! அந்தப் பட்டமெல்லாம் கல்லூரியிலே!”

    “நான் உனது பாய் பிரண்டு இல்லே! சினிமா தியேட்டரில் நம்ம கல்லூரிப் பசங்கள் வருவாங்க”

    “நம்ம இரண்டு பேரையும் ஒன்னாக் காட்டுறதுக்குத்தானே படத்துக்குப் போலாம் என்கிறேன்”

    “அந்தக் காட்சியைக் காண எனக்கே பிடிக்கலே”

    “வரப் போறீங்களா? இல்லையா? எங்க வீட்டு விருந்தாளி நீங்க! தெருவிலே போற அன்னியன் இல்லே!” சித்ராவின் குரலில் அதிகாரம் தொனித்தது.

    “உன்னோடு சினிமாவுக்கு அவர் வர மாட்டார்! நீ மட்டும் போ!” என்ற குரல் கேட்டு சிவா நடுங்கினான்.

    கண்களில் கனல் பறக்க மாடிக்கு வந்த புனிதாவைக் கண்டு சிவாவுக்குத் தலை சுற்றியது. சித்ரா ஒன்றும் பேசாமல் தடதட வெனப் படியில் இறங்கி ஓடினாள். சிவாவின் கண்கள் தரையை நோக்கப் பேசினான்.

    “மன்னிக்க வேணும் மேடம். உங்களிடம் என்ன சொல்றதின்னு எனக்குத் தெரியலே!”

    “எல்லா வாதங்களையும் நான் கேட்டுக் கொண்டுதான் இருந்தேன். நான் தோட்டத்தில் இருந்தது சித்ராவுக்குத் தெரியாது. நீங்க வருத்தப் பட இதிலே ஒண்ணும் இல்லே!” புனிதா நாற்காலியில் பெரு மூச்சுடன் அமர்ந்தாள்.

    “நான்தான் சித்ராவுக்காக வருத்தப் படுறேன். என் கணவர் காஷ்மீர் கலவரத்தில் இறந்த போது, சித்ராவுக்கு வயது ஆறு! போன அப்பா திரும்பாமல் போகவே அவள் மனதில் எழுந்த துடிப்பு இன்னும் இருக்கு! தந்தையை இழந்து போனதால் அவளுக்கு ஆடவர் மீது வாஞ்சை அதிகம்”

    “நான்தான் என்ன செய்வது என்று தெரியாமல் திக்கு முக்காடினேன்!” என்றான் சிவா.

    நீயே எனக்கு என்றும் நிகரானவள்!

    சித்ரா தனியாகச் சினிமாவுக்குப் போய் விட்டாள். சிறிது நேரம் மௌனமாய் இருந்து, புனிதா சிவாவை சாப்பிடக் கீழே அழைத்துச் சென்றாள். சாப்பிட்டுக் கொண்டே புனிதா பேசினாள்.

    “உங்களைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்க. எங்கே பிறந்தது, எங்கே படித்தது, பெற்றோர்கள் என்ன செய்கிறாங்க இதெல்லாம் தெரிஞ்சு கொள்ள விருப்பம்”

    “பிறந்தது மதுரையில். எம்.எஸ்சி. சயன்ஸ் பட்டம் பெற்றது, மதுரைக் கல்லூரியில். பெற்றோர்கள் இருவரும் அங்குதான் சொந்த வீட்டில் இருக்காங்க. காந்தியைப் பின்பற்றி அப்பா 1942 இல் சிறை சென்று, இப்போ தியாகிகள் பென்ஷன் பெற்று ஓய்வில் இருக்கார். அப்பாவுக்கு எழுபது வயது. அம்மாவுக்கு அறுபத்தி ஐந்தைத் தாண்டி விட்டது. நானும் தங்கையும் இரண்டே பேர்கள்தான்”

    “உங்க அப்பா சுதந்திரக்குப் போராடிய ஒரு தியாகின்னு பெருமைப் படுறேன். நீங்க ஏன் எஞ்சினியரிங் கல்லூரிக்குப் போகலே?”

    “அப்பாவாலே சப்போர்ட் பண்ண முடிய வில்லை. எனக்கும் ஆசைதான். என்ன செய்வது? எம்.எஸ்சி. முடிச்சு வேலைக்குப் போய் சம்பாதிக்கும்படி அப்பாவின் உத்தரவு”

    “உங்களுக்குக் கணிதத்திலே எப்படி ஆர்வம் அதிகமாச்சு?”

    “மதுரைக் கல்லூரி பிராமணர் நடத்தும் கல்லூரி. மாத்ஸ் பரீட்சையில் நூற்றுக்கு நூறு வாங்கிய சில மாணவரில் பிராமணர் அல்லாதவன் நான் ஒருவன் மட்டுமே. வைஸ் பிரின்சிபால் சுப்ரமணிய ஐயர் தனியாக என்னை அவரது ஆபீஸ¤க்கு அழைத்துச் சென்று முதுகில் தட்டிக் கொடுத்து, கணக்கில் நூற்றுக்கு நூறு நான் வாங்கியதற்குத் தன் மகிழ்ச்சியைத் தெரிவிப்பார்”

    “கணித மேதை ராமானுஜனுக்கு அடுத்த படியா?”

    “ராமானுஜன் தெய்வ அருள் பெற்ற ஞானச் சிறுவன்! நான் அவரது கால் தூசிக்குச் சமம்! ஏழு வயதிலேயே அவரது கணித ஞானம் பளிச்சென வெளிப்பட்டது! பன்னிரெண்டு வயதில் கடினமான லோனியின் டிரிகினாமெற்றியைக் கரைத்துக் குடித்தார். பாவம் அந்த கணிதச் சுடர் முப்பத்தி ரெண்டு வயசிலே காச நோயில் அணைந்து போனது! ….. உங்களைப் பற்றி எனக்குச் சொல்லுங்க” என்றான் சிவா.

    “பூனேயில்தான் பிறந்தது, வளர்ந்தது, படித்தது, விவாகம் புரிந்து கொண்டது எல்லாம். எம்.ஏ. லிட்ரேச்சர் பட்டம் வாங்கியது பூனே யுனிவர்ஸிட்டியில். என் பெற்றோரும், கல்யாணமான தங்கையும் அங்கே இருக்கிறார்கள். ஆனந்த், என் கணவர் மிலிடரி கல்லூரியில் படித்து எஞ்சினியரானவர். திருமணம் ஆனதுமே, ஆனந்துக்கு முதல் பணி கோவை ராணுவ பயிற்சி முகாமில் கிடைத்தது. சித்ரா பிறந்தது, இந்தக் கோயமுத்தூரில்தான். காஷ்மீருக்கு மூணு மாசம், ஆறு மாத விஷேச டியூட்டி அடிக்கடி ஆனந்துக்கு வரும். அதில் ஒரு முறைப் பங்கு கொள்ளப் போனவர் திரும்பி ….வரவில்லை” புனிதாவின் தொண்டை சட்டென அடைத்துக் கொண்டது. கண்கள் இரண்டும் மூடின. கண்ணீர் மடை திறந்தது.

    சற்று அங்கு மௌனம் நிலவியது. கண்களைச் சேலையில் துடைத்துக் கொண்டாள், புனிதா.

    “தமிழில் எப்படி அழகாக உங்களால் பேச முடிகிறது?” என்று கேட்டான் சிவா.

    “நானும் ஆனந்தும் மாலை வேளைகளில் தனியாகத் தமிழ் கற்றோம். கோவை ராணுவப் பயிற்சி முகாமல் இருப்பவர் அநேகர் தமிழ்ப் படையாட்கள். தமிழ் தெரியாமல் அவர்களுக்கு எப்படி பயிற்சி அளிப்பது? கணவர் தமிழ் படிக்கும் போது, நானும் சேர்ந்து கொண்டேன். சித்ரா படித்தே தமிழ்ப் பள்ளியில்தான். உங்களுக்கு யார் எழுதிய புத்தகங்கள் பிடிக்கும்?” என்று கேட்டாள் புனிதா

    “தமிழில் பாரதியாரின் பாக்கள், டாக்டர் மு.வரதராசனார், அகிலன், பார்த்தசாரதி, காண்டேகர் நாவல்கள் என்னைக் கவர்ந்தவை. ஆங்கிலத்தில் ஷேக்ஸ்பியர், பெர்னாட்ஸாவின் நாடகங்கள், ஸோமர்செட் மாகம், பேர்ல் எஸ் பெக், டால்ஸ்டாய் நாவல்கள், எமிலி டிக்கின்ஸன் கவிதைகள் எனக்குப் பிடிக்கும். உங்களுக்கு யாரெல்லாம் பிடிக்கும்?”

    “எனக்கும் உங்களைப் போல் பேர்ல் எஸ். பெக், டெயிலர் கால்டுவெல் மற்றும் பெர்னாட்ஸா, ஷேக்ஸ்பியர் நாடகங்கள் பிடிக்கும். எங்க நிர்மாலா கல்லூரியில் ஒவ்வோர் ஆண்டு விழாவிலும் நான் டைரக் செய்யும் நாடகங்கள் அவை. தமிழ் எளிய மொழி! இனிய மொழி! ஒற்றை வரி ஒளவையாரைப் போல, இரட்டை வரி திருக்குறளைப் போல, நால்வரி நாலடியாரைப் போல ஒழுக்க நெறிகள் மராட்டியில் இல்லை! தெள்ளு தமிழில் இனிமையாக ஆண்டாள் எழுதிய திருப்பாவை போல மராட்டியில் எவரும் எழுதவில்லை!”

    சற்று மௌனம் நிலவியது. சிவா எதிர்பார்க்காத போது புனிதா சட்டென ஒரு கேள்வியை வீசி, அவனைத் திடுக்கிடச் செய்து, அவனது கண்களை நோக்கினாள்.

    வெண்ணிலவு நீ எனக்கு! வீசும் ஒளி நான் உனக்கு!

    “ஒரு மராட்டியப் பெண்ணை விவாகம் செய்து கொள்ள .. உங்க அம்மா, அப்பா ஒப்புக் கொள்வார்களா?” … சிவா பதில் கூற முடியாது நெஞ்சடைத்துக் குரல் விக்கிக் கொண்டது.

    “என் அப்பாவும், அம்மாவும் சம்மதம் தர மாட்டார்கள். சுற்றத்தாரின் அவதூறான பேச்சுக்கு அவர்கள் அஞ்சுவார்கள். இந்த விவாகத்துக்கு ஒப்புக் கொள்ள மாட்டார்கள்!” என்று சிவா சொல்லியதும் புனிதாவின் நெற்றியில் சுருக்கங்கள் விழுந்தன.

    “ஆனால் நான் முழு மனதாய் மணம் செய்து கொள்வேன்” என்று சிவா தொடர்ந்ததும் புனிதாவின் முகத்தில் ஒளி பெருகியது.

    “உங்க பெற்றோர் ஒத்துக் கொள்வார்களா?” என்று கேட்டான் சிவா.

    “மனப்பூர்வமாய் ஆசீர்வதிப்பாங்க. இதற்கு முன்பு இப்படி நான் இருமுறை முயன்று திருமணம் நின்று போயிருக்கு” புனிதாவின் கண்களில் ஈரத் துளிகள் மிதந்தன.

    “அந்தத் தோல்வி உங்களை வருத்துது! ஆனால் எனக்கு எல்லையில்லா ஆனந்தம் அளிக்குது! புனிதாவின் கைகளை நான் பற்றிக் கொள்ள வேணுமென விதி எழுதி யிருந்தால், யார் அதை மாற்ற முடியும்?” என்று சிவா சொல்லியதும் புனிதா மனம் விட்டுச் சிரித்தாள். அப்போது ஆனந்தக் கண்ணீர் துளிர்த்தன!

    “நான் கணவனை இழந்தவள் என்று என்மேல் வெறுப்பு இல்லையா?”

    “இல்லை. நீங்க மறுமணம் புரிய விரும்புவது, எனக்கு ஊக்கம் அளிக்குது! முதல் நாள் பார்த்த போதே, என் மனம் உங்களை நாடியது. அப்போது நீங்க யார் என்றோ, உங்க தனியான வாழ்க்கை பற்றியோ எதுவும் எனக்குத் தெரியாது. ஆனால் ரூம் ஆண்களுக்கில்லை என்று என்னை விரட்டிய அன்றைய தினமே, என் நெஞ்சில் உங்கள் உருவம் பதிந்து விட்டது. என்னை நீங்க விரட்ட விரட்ட, ஏனோ என் மனம் உங்களைத்தான் விரும்பியது! அன்று திரும்பிப் போகவே மனமில்லை, எனக்கு! போகப் போக என் இதயம் உங்க வசப்பட்டு உறுதியாகி, எப்படி இதைக் கேட்பது என்று தெரியாமல் அலை மோதினேன்”.

    அப்போது புனிதாவின் கண்களில் நீரருவி பொங்கியது.

    “எனக்குப் பதினெட்டு வயது வயசுக் குமரிப் பெண்ணிருப்பது உங்களுக்கு கஷ்டமாக இல்லையா?”

    “மனக் கஷ்டம் இருக்கு. ஆனால் சித்ரா, உங்க அருமை மகள்! இன்னும் சில வருசங்களில் அவள் கல்யாணமாகிப் போய் விடுவாள். சித்ரா நம் இல்வாழ்வுக்கு இடராகத் தோணவில்லை! அந்த மனத்தாங்கலை நான் தாங்கிக் கொள்ள முடியும்”.

    “சித்ரா இப்போ என்னுடன் இந்த வீட்டில் இருப்பது உங்களுக்கு எப்படி தோணுது?”

    “அவளுக்கு என்மேல் விரும்பம் இருக்கு. நம்ம விவாகத்தால் சிக்கல் ஏற்படலாம்! முதலில் நம் விவாகத்துக்கு சித்ரா ஒப்புக் கொள்வாளா?”

    “அவள் ஒப்புக் கொள்ள மாட்டாள்! அது போகட்டும், சித்ராவை நீங்க விரும்புகிறீர்களா?”

    “சித்ரா மீது எனக்கு விருப்பம் இல்லை! எந்த விதத்திலும் அவள் எனக்குப் பொருத்தம் இல்லை”

    “சித்ரா நமது விவாகத்தை ஒருபோதும் ஒப்புக் கொள்ள மாட்டாள். ஆனால் அவள் மராட்டிய வாலிபன் ஒருவனை மணம் புரிய வேண்டுமென நினைக்கிறேன். அவள் மனதில் எந்த நிழல் ஆடுகிறதோ?”

    “எனக்கு இந்த விவாகத்தில் முழு விருப்பம். கொஞ்சம் அவகாசம் கொடுங்க. தங்கையின் திருமணம் முடிஞ்சதும் என் பெற்றோரிடம் இதைப் பற்றி நான் பேச வேண்டும்”

    “உங்கள் தங்கையை பற்றிச் சில விபரம் அறிந்து கொள்ள ஆவல். என்ன படித்திருக்கிறாள்?”

    “ஹைஸ்கூல் முடித்து விட்டு, மதுரைத் தபால் ஆபீஸில் சாதாரண வேலை செய்து வருகிறாள். வயது முப்பதைக் கடந்து விட்டது. உணவைக் கட்டுப் படுத்தி உடல் பெருக்காமல் பார்த்துக் கொள்கிறாள். கடந்த பத்து வருசங்களாக தங்கை கல்யாணத்தை முடிக்க முடியாது, இன்னும் தள்ளிக் கொண்டே போவுது.

    பானமடி நீ எனக்கு! பாண்டமடி நான் உனக்கு!

    புனிதாவின் சிந்தனையில் சற்று ஆழ்ந்தாள்.

    “உங்களுக்கு கொஞ்சப் பண உதவி செய்யலாம் என நினைக்கிறேன், நீங்க ஏத்துக் கொண்டால்”

    “வாடகை தர முடியாத நான் எப்படி உங்களிடம் இன்னும் கடன் வாங்குவது?

    “என் கணவர் இறந்த பிறகு, ஆயுள் இன்சூரன்ஸ் தொகை பெரு மளவில் கிடைத்தது. பூனேயில் இருந்த அவருடைய பூர்வீக வீட்டை விற்று இன்னும் சேமிப்பு உயர்ந்தது. கல்லூரிச் சம்பளப் பணமே மாதா மாதம் எனக்கு மிஞ்சுகிறது. சித்ராவின் திருமணத்துக்கு வேண்டிய பொன்னும் பொருளும் நிறைவாகவே இருக்கிறது”

    “பேர் மட்டும் தெரிந்த என்னை நம்பி பெரிய தொகையைத் தர எப்படி முடிவு செய்தீங்க? எதற்காக உதவி செய்றீங்க?” புனிதா பதில் சொல்ல முடியாமல் சற்று திண்டாடினாள். சொல்ல நினைத்தது மனதுக் குள்ளே சிக்கிக் கொண்டது. புனிதாவின் கண்கள் சிவநாதனின் கண்களை நோக்கின! சிவநாதனின் கண்கள் புனிதாவின் இதயத்தை ஊடுறுவின.

    “என்னிடம் சும்மா இருக்கும் பணம் உங்கள் தங்கைக்கு வாழ்வளிக்க உதவட்டும் என்று நினைத்தேன்”

    “நான் எப்படி இந்தக் கடனை அடைப்பது? எப்படி வட்டி கொடுப்பது?”

    “இந்தப் பணத்துக்கு நான் வட்டி வாங்கவும் விரும்ப வில்லை. முதல் வாங்கவும் விரும்பவில்லை” சிவநாதன் திடுக்கிட்டு அதிர்ச்சி அடைந்தான்.

    “நீங்க என்ன சொல்றீங்க?” என்று தழுதழுத்த குரலில் கேட்டான்.

    “தயவு செய்து நான் தரும் பணத்தை வரதட்சணையாய் எண்ண வேண்டாம். நம் விவாகம் நடக்காமல் போனாலும், உங்க தங்கையின் திருமணத்துக்குத் தருகிறேன்” அதிர்ச்சி அடைந்த சிவாவின் கண்களில் கண்ணீர்த் துளிகள் அரும்பின.

    “இந்த உதவியை நான் மறக்க முடியாது, மிஸ் புனிதா?” எழுந்து போகக் கிளம்பினான் சிவா.
    புனிதா முகமலர, “இனிமேல் நீங்க மாடி அறைக்கு வாடகை தர வேண்டாம்! வெளியே ஹோட்டலுக்குப் போக வேண்டாம். எங்க வீட்டிலே தினம் சாப்பிடலாம். சொல்ல மறந்து விட்டேன் சிவா. என்னை மேடம் என்றோ, மிஸ். புனிதா வென்றோ அழைக்க வேண்டாம்” என்று அழுத்திச் சொன்னாள்.

    வண்ண மயில் நீ எனக்கு! வானமழை நான் உனக்கு!

    சிவநாதனின் தங்கை திருமணம் சிறப்பாக, சிக்கனமாக மதுரையில் நடந்தேறியது. புனிதா குல்கர்னியும், சித்ராவும் திருமண விழாவுக்கு வந்தது சிவாவுக்கு மன மகிழ்ச்சியையும், திருப்தியையும் தந்தது. கல்யாணக் கூட்டத்தில், பால் போன்ற மராட்டிய பளிங்குச் சிலைகள் இரண்டு அத்தனை பேர் கண்களையும் கவனத்தையும் கவர்ந்தன! சித்ராவையும், புனிதாவையும் சிவா தனது தாய், தந்தையார் மற்றும் திருமணத் தம்பதிகள் இருவருக்கும் அறிமுகம் செய்து வைத்தான். குறிப்பாகப் பெற்றோர், தங்கைக்கு மட்டும் அவர்கள் யாரென்று விளக்கமாகக் கூறினான். பெருந்தன்மையாக புனிதா கல்யாணத்துக்குப் பண உதவி செய்ததை அவர்களது காதில் மெல்லக் கூறினான். மூவரும் அன்பு மிகுந்து புனிதாவுக்கு நன்றி கூறினார்கள்.

    சித்ரா வான மேகங்களில் மிதந்தாள். சிவாவின் தங்கையோடு மிகவும் ஒட்டிப் பழகினாள். அவளது கல்யாணத்துக்கு ஒரு தடை நீங்கி வழி திறந்ததாக ஆனந்த வெள்ளத்தில் அடித்துச் செல்லப் பட்டாள். சித்ராவை விட பெரு மகிழ்ச்சியில் இருந்தவள் புனிதா. திருமணம் ஆன பிறகும் அவள் தனிமையில் வாடிய நாட்களே அதிகம். கணவனுடன் அவள் ஆனந்தமாய்க் களித்த நாட்கள் மிகக் கொஞ்சம். இருபத்தியோர் வயதிலே கல்யாணமாகி கணவருடன் ஒன்பது வருசங்கள் வாழ்ந்தாலும் பாதிக் காலம் பாதுகாப்பு ராணுவ அதிகாரியாய்க் காஷ்மீருக்கு பயணம் போய்விடுவார். அவள் சிவாவோடு எதிர்காலத்தில் வாழப் போவதாய்க் காணும் காட்சி மெய்யாக நிகழுமா அல்லது கனவாய்ப் பழங் கதையாய்ப் போகுமா என்பது இன்னும் நிச்சயமில்லை!

    நினைப்ப தெல்லாம் நடப்பதில்லை! நடப்பதெல்லாம் நினைப்பதில்லை!

    அன்று மாலை நிர்மலாக் கல்லூரில் வருடாந்திர விழாவில் பங்கு கொள்ள புனிதா சென்று விட்டாள். ஆங்கில நாடகம் ஒன்றை இயக்கி அரங்கேற்ற வேண்டிய பொறுப்பு அவள் மீது விழுந்தது. சித்ராவும், சிவாவும் நாடகத்தைக் காண 9 மணிக்கு வருவதாய்ப் புனிதாவிடம் சொல்லியிருந்தார்கள். அவளது நாடகமே கடைசி நிகழ்ச்சியாக இருந்தது. சித்ரா மாடிக்குச் சென்று சிவாவைப் பார்க்கச் சென்றாள். சோபாவில் அமர்ந்த சிவாவிடம் அவள் ஒட்டி அமர்ந்து அவனது தலை மயிரைக் கோதி விட்டாள். சற்று தள்ளி அமர்ந்த சிவாவை மறுபடியும் நெருங்கி உட்கார்ந்தாள். சோபாவின் முனைக்குப் போகவே சிவா எழுந்து நின்றான்! உடனே சித்ரா அவன் கையைப் பற்றி இழுத்து சோபாவில் உட்கார வைத்து உரசிக் கொண்டு அமர்ந்தாள். அவன் முகத்தை அவளது மலர்க் கரங்களால் தடவினாள்!

    “இந்த முகத்தை இப்படித் தடவ வேண்டுமென, நான் எத்தனை நாள் காத்திருக்கேன்” சித்ராவின் மொட்டு விழிகள் சிவாவின் மூடும் விழிகளை விழுங்கிவிட விரிந்து மலர்ந்தன! சிவாவுக்கு தர்ம சங்கடமானது.

    “நாம் உன் அம்மாவின் நாடகத்தைப் பார்க்க நிர்மலாக் கல்லூரிக்குப் போகணும்”

    “நம்ம நிஜ நாடகம் இங்கு நடக்கும் போது, அம்மாவின் நாடகத்தை அங்கு போய்ப் பார்க்கணுமா? இப்படி நமக்கு ஒரு வாய்ப்புக் கிடைக்குமா? ஏன் பயந்து நடுங்குறீங்க? உங்க தங்கையின் கல்யாணம் முடிஞ்சி நமக்குக் காலம் வந்தாச்சி. கதவும் திறந்தாச்சி! இனிமேல் நம்ம கல்யாணத்தைப் பத்தி நாம் பேச வேண்டும்! நானே அம்மாவிடம் சொல்றதா இருக்கேன். எங்க அம்மாவிடம் என்னைக் கேட்க உங்களுக்கு தைரியம் உண்டா?”

    “சித்ரா! உனக்கும் எனக்கும் கல்யாணம் என்று கனவு காணாதே! அது நடக்காத கல்யாணம். குமரிப் பெண் நீ. பாதி ஆயுளைக் கடந்தவன் நான். உன்னை விட இரு மடங்கு வயது எனக்கு”.

    “போதும் உபதேசம். ஒருவரை நேசித்து அவரையே மணக்க நான் விரும்புறேன். எனக்கு உங்க வயதைப் பற்றிக் கவலை இல்லை”

    “மோகம் உன் கண்களைக் குருடாக்குது! என் வயதைப் பற்றி இப்போது நீ கவலைப்பட மாட்டாய். எண்பது வயதுக் கிழவனாய்க் கூன் விழுந்து குருடனாய் நான் நொண்டும் போது, நீ நாற்பது வயது வாலிப மங்கையாய் உறவை நாடுவாய்! அப்போ என் எலும்பு கூட்டைப் பார்த்து வேதனைப் படுவாய். வீட்டில் கிடைக்காத இன்பத்தைத் தேடி நீ…. வெளியே கூடப் போவாய்”

    “சீ என்ன ஆபாசப் பேச்சு இது? நம்மிருவருக்கும் ஜோடிப் பொருத்தம் இருக்கு”.

    “ஆனால் நமக்கு இனப் பொருத்தம் இல்லை! மனப் பொருத்தம் இல்லை!”

    “பூனேயில் பிறந்தாலும் தமிழ் நாட்டிலே பதினைந்து வருசமா இருக்கோம். எனக்கு மராட்டியன், தமிழன் என்றெல்லாம் இன வேறுபாடு கிடையாது. மராட்டியன் தமிழனை விட உயர்ந்தவனும் இல்லே! தமிழன் மராட்டியனை விட எந்த விதத்தில் தாழ்ந்தவனும் இல்லே! இரண்டு பேரும் ஒரு தாய் ஒரு தந்தைக்குப் பிறந்தவரே”.

    “உன்னை எனக்குப் பிடிக்கவில்லை!” என்றான், சிவா.

    “பொய் சொல்றீங்க! எனக்கு என்ன குறைச்சல்? அழகில்லையா? அறிவில்லையா? அந்தஸ்தில்லையா?”

    “நீ அழகிதான்! அறிவாளிதான்! நல்ல குடும்பத்தில் பிறந்தவள்தான்! ஆனால் இதயத்தில் கள்ளும், முள்ளும் உள்ளன! நெஞ்சி இருக்கு! ஆனால் உள்ளம் இல்லை! மூளை இருக்கு! ஆனால் முதிர்ச்சியில்லை! மணக்கப் போகும் பெண்ணை, நான் ஏற்கனவே முடிவு செய்துவிட்டேன்”

    “யார் அந்த அதிர்ஷ்டக்காரி? அன்று கல்லூரியில் சிரித்துச் சிரித்துப் பேசினாளே, அந்த பைனல் இயர் பியூட்டி மஞ்சுளாவா?”

    “இல்லை. உனக்குத் தெரிந்த ஒரு மாது”

    “யார் அந்த மாது? என் கிளாஸ்மேட் மேனகாவா?”

    “உன் அம்மா என்று சொன்னால் உனக்கு மயக்கம் வருமா?”

    “சீ என் அம்மாவா? அம்மாவையா விவாகம் செய்யப் போறீங்க? ஏற்கனவே திருமணமாகிய ஒருத்தியா உங்க மணப்பெண்? பதினெட்டு வயசுக் குமரிப் பெண்ணை மகளாகக் கொண்ட ஒரு தாயா உங்க மணப்பெண்? கணவனை இழந்த ஓர் அபாக்கியவதியா உங்க வருங்கால மனைவி?”
    “ஆம் அந்தப் புனிதவதிதான் என் வருங்கால மனைவி”

    “என் தந்தையின் இடத்தை நீங்க நிரப்ப முடியாது. கணவனாய்க் கருதிய ஒருவரை என் உள்ளம் ஒருபோதும் தந்தையாக ஏற்றுக் கொள்ளாது. தெரியுமா! ஏற்கனவே இது போல் அம்மா முயன்று, இரண்டு தரம் நிச்சயமாகிக் கடைசியில் திருமணம் நின்று போயிருக்கு”

    “எனக்கும்தான் நிச்சயமாகி கல்யாணம் நின்னு போயிருக்கு”

    “நான் இந்த கல்யாணத்தை நடக்க விட மாட்டேன். வாலிபக் குமரி நான் காத்திருக்கும் போது, வயதான விதவையை நீங்க நாடுவது முட்டாள்தனம்”

    “பெற்ற தாயை விதவை என்று கேலி செய்கிறாயே”

    “பெற்ற தாயானாலும் விதவை, விதவைதான்! அப்பா இறந்து போனதை எப்படி மறைக்க முடியும்? நான் விதவை என்று சொல்லா விட்டாலும், உங்க அப்பா சொல்வார்! உங்க அம்மா சொல்வாள்! உங்க தங்கை சொல்வாள்! உங்க ஊரார், உற்றார் எல்லாரும் சொல்வார்! அப்படிப் பழிப்பதை உங்களால் தாங்கிக் கொள்ள முடியுமா?”

    “தாங்கிக் கொள்ள முடியும். நான் உன் தாயை மணக்க வாக்குக் கொடுத்து விட்டேன்”

    “தாயை மணந்து, மகளைப் பிரிக்க முடிவு செய்து விட்டீங்க! உண்ட வீட்டுக்கு இரண்டகமா?”

    “நான் அப்படி வஞ்சகம் செய்ய நினைக்கவில்லை!”

    “தம்பதிகளாய் என் தாயும், என்னைக் கவர்ந்தவனும் அடுத்த அறையில் ஒன்றாய் இருப்பதை எப்படி என்னால் தாங்கிக் கொள்ள முடியும்?”

    “தாங்கிக் கொள்ள முடியாதுதான். தனியாக இருக்கும் உன் தாய் மறுபடியும் குடும்ப மாதாய் வாழப் போவதில் உனக்கு அக்கறை இல்லையா?”

    “அக்கறை இருக்கு. ஆனால் நீங்க அம்மாவுக்குச் சொந்தம் இல்லே! எனக்குத்தான் சொந்தம்! முதலில் உங்களைக் கண்டு பிடித்தவளே நான்தான்! என் தாய் உங்களைக் களவாடி விட்டாள்!”

    “இல்லை! பார்த்த முதல் நாளே நான்தான் புனிதாவை நாடியவன்! போகப் போக புனிதாவுக்கும் என்னைப் பிடித்து விட்டது!”

    “ஒரு பெரிய கைம்மாறை எதிர்பார்த்துத்தான், உங்க தங்கை திருமணத்துக்கு அம்மா பண முடிப்பைக் கொடுத்தது கூட உங்களுக்குத் தெரியவில்லையா?”

    “பண முடிப்பைத் தருவதற்கு முன்பே, எனக்கு புனிதா மேல் விருப்பம் இருந்தது. பண முடிப்பைத் தராமல் போயிருந்தாலும், புனிதாவை மணக்கத் தயாராக இருந்தேன்”

    அப்போது கதவு திறக்கும் சத்தம் கேட்டு, சித்ரா வாயடங்கிப் போனாள். புனிதா விரைவாக மாடிக்கு ஏறி வந்தாள்.

    “நீங்க இரண்டு பேரும் போடுற சத்தம் வீதியிலே கேட்குது. என்ன ஆச்சு? ஏன் சண்டை போடுறீங்க?”

    “அம்மா! இவர் இந்த வீட்டுலே இனிமேல் இருந்தால் நான் கண்ணியமா வாழ முடியாது. வாடகை ஒப்பந்தத்தை முறிச்சி, இவரை வெளியே அனுப்புங்க. உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யும் வஞ்சக மனிதர் இவர். இவர் இன்னும் இங்கே இருந்தா, நான் நிம்மதியா வாழ முடியாது”

    “சித்ரா! ஏன் அப்படிச் சொல்றே? என்னாச்சு?”

    “அம்மா! இவர் ஒழுக்கம் கெட்ட மனிதர். இவரை நம்ம வீட்டறையில் வச்சதே தப்பு. முன்பே எனக்கு இவரைப் பத்தி தெரியாம போச்சு!”.

    “என்ன நடந்ததென்னு சொல்லு, சித்ரா” புனிதாவின் உடம்பு நடுங்கியது!

    “என்னைத் தொடக்கூடாத இடத்தில் தொட்டு வசப்படுத்த வந்தார்.” சிவாவின் நெஞ்சில் சம்மட்டி அடி விழுந்தது!

    புனிதா பேரதிர்ச்சி அடைந்தாள்! சிவாவின் தலை சுற்றியது! புனிதா தடதட வென்று படிகளில் இறங்கிக் கீழே தன் அறைக்கு ஓடினாள். படுக்கைக் கீழே ஓடிக் கொண்டிருந்த டேப் ரெக்காடரை நிறுத்தி, ரிவைண்டு செய்து, மாடியில் நடந்த உரையாடல்களை எல்லாம் துடிப்போடு கேட்டாள். அவளுக்கு உண்மை தெரிந்தது.

    தாயும் மகளும் மராட்டிய மொழியில் நள்ளிரவு வரைச் சண்டை போட்ட சத்தம் மட்டும் சிவாவுக்குக் கேட்டது. பிறகு சட்டென எல்லாம் அடங்கி விட்டது. அன்று இரவு மூவரும் தூங்கவே இல்லை.

    காயிலே புளிப்ப தென்ன! கனியானால் இனிப்ப தென்ன!

    மறுநாள் காலையில் சாப்பிட வந்த சிவா புனிதாவை அடுப்பறையில் சந்தித்தான். அவன் புனிதாவின் கண்களை நேராகக் காண முடியவில்லை.

    “மிஸ் புனிதா! நான் இனியும் இந்த வீட்டு மாடியில் குடியிருப்பது எனக்கு சரியாகத் தோன்றவில்லை. என்னால் உங்கள் இருவருக்கும் பகைமை உண்டாகி விட்டது! இந்த வீட்டில் எப்போது என்ன நடக்கும் என்பதை என்னால் ஊகிக்க முடியவில்லை. தாயும் மகளும் சண்டையிடுவதை என்னால் தாங்க முடியாது! வேறொரு இடத்துக்கு போவதாக முடிவு செய்து விட்டேன்”

    “நீங்க எதற்காக வேறிடம் பார்க்கணும்? எங்கும் போக வேண்டாம். நேற்று மாடியில் என்ன பேச்சுக்கள் நடந்தன என்பதெல்லாம் எனக்குத் தெரியும். உங்களை இழந்து என்னால் இனி வாழ முடியாது. மன்னிக்க வேணும் என்னை. உங்களுக்கும் சித்ராவுக்கும் தெரியாமல், மாடி உரையாடல்களை எல்லாம், கீழே என் அறைப் டேப் ரெக்காடரில் பதிவு செய்து வந்தேன். நான் அப்படிச் செய்தது தப்புதான். முன்னும் பின்னும் தெரியாத ஆண் லெக்சரரை சித்ரா வாடகை அறைக்கு அழைத்து வந்தது, முதல் காரணம். மாடி அறையில் ஒரு வாலிபர் வசிக்க, வயசுப் பெண் வீட்டில் வாழ்ந்து கொண்டு வருவது அடுத்த காரணம். கல்லூரியில் சித்ராவுக்கு லெக்சரராக இருந்து, வீட்டில் அவளுக்கு டியூஷன் சொல்லிக் கொடுத்தது மூன்றாவது காரணம். பஞ்சையும், நெருப்பையும் எப்படி நாள் முழுவதும் கண்காணித்து வருவது? நாம் மூவரும் கல்லூரிக்குத் தினம் போய் வந்தாலும், மூவரும் வீடு திரும்பும் நேரம் வேறாவது அடுத்த காரணம். முற்றிலும் அன்னியன் நீங்கள்! சித்ரா பருவ மொட்டு விடும் புதிய பறவை!”

    “மிஸ் புனிதா! தாயான நீங்க டேப் ரெக்காடரில் பதிவு செய்ததைத் தப்பென்று நான் சொல்ல மாட்டேன்”

    “போன ஒரு சமயம் நடந்த சினிமா சண்டையில் உங்க உத்தம குணத்தைக் கண்டேன். நேற்றைய உரையாடல்களைக் கேட்ட பின்பு, பெண்களிடம் ஒழுக்கமுள்ள இப்படிப்பட்ட ஓர் ஆடவனைக் கணவனாக ஏற்கப் போகிறோம் எனப் பேரானந்தம் அடைந்தேன். நான் பண்ணியது சரியோ, தப்போ உண்மையில் இந்த டேப் ரெக்காடர்தான் ஓர் உத்தமனைக் கண்டு பிடித்துத் தந்தது. இல்லா விட்டால் சித்ரா குற்றச் சாட்டை நம்பி, ஒரு அப்பாவி மனிதனை வீட்டை விட்டுத் துரத்தி இருப்பேன்!”

    “மிஸ் புனிதா, உங்களுக்கு நான் எப்படி நன்றி சொல்வது?”

    “மாடியில் நீங்க பெட்டி படுக்கைகளை மூட்டை கட்டுவது, கீழே என் காதில் விழுந்தது. நீங்க பயப்படாமல் நிம்மதியாக மாடியில் தங்கலாம்…… முதலில் உட்கார்ந்து இந்த காபியைக் குடியுங்க, இட்லி தயாராகிறது” என்று குழைந்தாள், புனிதா. அப்போது உள்ளே நுழைந்தாள் சித்ரா.

    “அம்மா! வீட்டை விட்டு இவரை நான் போகச் சொல்லும் போது, நீங்க காபி கொடுத்து உபசரிப்பதா?”

    “சித்ரா! வாயை மூடு! சிவா மாடியைக் காலி செய்ய வேண்டியதில்லை. அவர் இந்த வீட்டில்தான் நிரந்தரமாகத் தங்கப் போகிறார்”

    “சிவா சொன்ன தெல்லாம் உண்மைதானா? அம்மா வாலிபக் குமரி நான் வீட்டில் இருக்கும் போது, இந்த வயசிலே இன்னொரு விவாகம் நீங்க செய்யப் போறீங்களா?”

    “ஆம் சித்ரா. நாற்பது வயதில் நான் மூப்பு அடையவில்லை. நான் இரண்டாம் விவாகம் செய்யப் போறது உண்மை”

    “அம்மா! அவரை நான் திருமணம் செய்ய விரும்புறேன். நீங்க எனக்குப் போட்டியாக வருவது சரியா! கல்லூரியில் அவரை முதலில் சந்தித்த போதே நான் செய்த முடிவு அது”

    “சித்ரா! நீ ஒரு மராட்டிய வாலிபனை மணம் புரிவதையே நான் விரும்புறேன். நீ சின்னஞ் சிறியவள். உன் வயதை விட சிவாவின் வயசு இரண்டு மடங்கு! வயதுப் பொருத்தம் இல்லாததால் மனப் பொருத்தம் ஏற்படாது. உன் வயசுக்குத் தகுந்த வாலிபனை நீ மணம் புரிவதுதான் ஏற்றது”.

    “வீட்டில் நான் இருக்கும் போது, நீங்க இவருடன் வாழ விரும்புவது சரியா? இவரை மணம் புரியக் கனவு கண்ட பின் அப்பா இடத்தில் அமர்த்திப் பார்க்க என்னால் முடிய வில்லை!”

    “சித்ரா! உன் மனப் போராட்டம் எனக்குப் புரியுது. உனக்குத் திருமணம் ஆகும் நேரம் இன்னும் வரவில்லை. அதுவரை வாழாமல் நான் தனிமையில் சாக வேண்டுமா? வாழ விரும்புறேன் நான். உனது திருமணத்தை நல்ல முறையில் நடத்தி வைக்க வேண்டியது எங்கள் பொறுப்பு. நீ சிவாவை மறந்து விடு”

    “உங்க லாஜிக் எனக்குப் புரியவில்லை. உங்க இரண்டு பேரையும் சேர்த்துப் பார்க்க என்னால் முடியாது” என்று கூறி அழுகையுடன் வெளியே போய் விட்டாள், சித்ரா.

    முக்கோணத்தில் ஒன்றுதான் நேர்கோணமாய் இருக்க முடியும்!

    சற்று மௌனமாக இருந்த பிறகு புனிதா சிவாவிடம் பேச ஆரம்பித்தாள்.

    “சித்ராவை உடன்படச் செய்வது சிரமான காரியம்தான். அதைக் கையாளுவது என் பொறுப்பு. உங்க அப்பா, அம்மாவை எப்படிக் கையாளப் போறீங்க” என்று புனிதா கேட்டாள். சிவா பையிலிருந்து தன் தந்தை கடிதத்தையும், தான் அதற்கு எழுதிய பதில் கடிதத்தின் நகலையும் படிக்க அவளிடம் கொடுத்தான்.

    சிரஞ்சீவிச் செல்வன் சிவகுருநாதனுக்கு,

    தங்கையின் திருமணத்துக்குப் பிறகு இப்படி ஒரு புரட்சி செய்வாய் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அந்த மராட்டியம்மா பண முடிப்பை நமக்குத் தந்ததே ஒரு பெரு வெகுமதியைத் தனக்கு நாடித்தான் என்பது எங்களுக்குத் தெரியாமல் போனது. நாற்பது வயதுவரைப் பொறுத்து, நாங்கள் கொண்டு வந்த நல்ல பெண்களை எல்லாம் உதறித் தள்ளி, போயும் போயும் வாலிப பெண்ணிருக்கும் ஒரு விதவைத் தாயை, நீ விவாகம் செய்ய விரும்புவது கேலிக் கூத்தாக தெரிகிறது. மேலும் அது எங்களுக்கு அவமானமாகவும் இருக்கிறது.

    இந்தத் திருமணம் நடந்தால் நானும் உன் அம்மாவும் அதில் பங்கு கொள்ள மாட்டோம். எங்களுக்கு கல்யாண அழைப்பிதழ் அனுப்ப வேண்டாம். ஆசீர்வாதத்தை வேண்டி நீங்கள் இந்த வீட்டு வாசலில் கால் எடுத்து வைப்பதையும் நாங்கள் விரும்பவில்லை. அது போல் நாங்களும் அங்கு வந்து உங்கள் இருவரது முகத்தில் விழிக்கப் போவதில்லை.

    தங்கை திருமணம் முடியப் பணம் கொடுத்து உதவிய மராட்டியம்மாவுக்கு எங்கள் உளங்கனிந்த நன்றி.

    அன்பு மறவாத அப்பா,
    வேலுச்சாமி

    கடிதத்தைப் படித்த புனிதாவின் கண்களில் நீர் முட்டிக் கொண்டு வந்தது.

    “உங்க அப்பா நல்ல மனதுடையவர். ஊருக்கும், உற்றாருக்கும் அவர் பயப்படுவது எனக்குப் புரிகிறது. நான் செய்த பண உதவிக்கு அவர் நன்றி தெரிவிப்பது, என் உள்ளத்தைத் தொடுகிறது. அடுத்து அவன் எழுதிய பதிலைப் படிக்கத் தொடங்கினாள்.

    அன்புள்ள அப்பாவுக்கு,

    வணக்கமுடன் சிவா எழுதியது. மிஸ். புனிதாவின் கனிவான அன்பும், மேலான பண்பும் முதல் சந்திப்பிலே என்னைக் கவர்ந்து விட்டது உண்மைதான்! பண முடிப்பு தருவதற்கு முன்பே நாளுக்கு நாள் புனிதாவின் மேல் பற்றும் நாட்டமும் எனக்கு மிகுந்தது. எப்படி என் விருப்பத்தை மிஸ். புனிதாவிடம் தெரிவிப்பது என்று தெரியாமல் திண்டாடி இருக்கிறேன்! அதற்கு ஒரு நல்ல வழி பிறந்தது. இப்படிப் பட்ட மாதர் குல மாணிக்கம் எனக்கு இனி கிடைக்குமா என்பது சந்தேகமே!

    எங்கள் இருவரது விவாகத்தை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்பதே எங்கள் மனமார்ந்த ஆசை. உங்கள் இருவரது அன்பான ஆசிகள் எங்கள் இல்வாழ்வுக்கு ஆணிவேர் போன்றது.

    உங்கள் நலம் நாடும்,
    சிவகுரு நாதன்.

    “உங்க பதிலை படித்த பிறகு எனக்கு அச்சம் குறைந்து ஊக்கம் அதிகமாகுது”

    “இந்த வரவேற்பை நான் எதிர்பார்த்ததுதான்! வருத்தமாகத்தான் இருக்கிறது! யாரும் பின்பற்றாத புதுப் பாதையில் போகும் போது, முள்ளும், கல்லும் குத்தும். தாங்கிக் கொள்ள வேண்டியதுதான். இந்த எதிர்ப்புக்குப் பரிகாரம் நாம் திருமணம் செய்து கொள்வதே! அவர்கள் வாழப் போவது இன்னும் கொஞ்ச காலம்! அதற்காக நமது நீண்ட பயணத்தை நிறுத்த வேண்டாம்! அலைகளுக்குப் பயந்தால் வாழ்க்கையில் எதையும் சாதிக்க முடியாது! அஞ்சிக் கொண்டு கரையிலே வாழ்நாள் முழுவதும் நின்று கொண்டிருக்கலாம்! நமது தனிமையின் கொடுமை நீங்கட்டும்! இந்த நல்ல காரியத்தைச் செய்ய என் மனம் துடிக்குது!”

    “துணிச்சலான ஆண்பிள்ளை நீங்க! நோய்வாய்ப் பட்ட பெற்றோர்களை எப்படி கண்காணிக்கப் போறீங்க?”

    “தங்கை இருக்கிறாள். நான் பணத்தை அனுப்பி அவள் மூலமாகக் கவனித்துக் கொள்வேன்”.

    “சித்ராவின் பிரச்சனையை எப்படிச் சமாளிப்பது என்று தெரியவில்லை எனக்கு”

    “எளிய முறையில் நாம் பதிவுத் திருமணம் செய்து கொள்ளுவோமா”

    “அதைத்தான் நானும் விரும்புகிறேன்” என்றாள் புனிதா.

    “நாம் தேதியைக் குறித்ததும், அப்பாவுக்கு அடுத்த கடிதம் போடுறேன்” என்று கூறி எழுந்து சென்றான் சிவா.

    பூணும் அணி நீ எனக்கு! புது வயிரம் நான் உனக்கு!

    அடுத்த பத்து தினங்களில் கோயமுத்தூர் பதிவுத் திருமண செயலகத்தில் புனிதா குல்கர்னி, சிவகுருநாதன் இருவரும் தம்பதிகள் ஆனார்கள். பதிவுப் புத்தகத்தில் எழுதும் போது புனிதா குல்கர்னி சிவகுருநாதன் என்று கையெழுத்திட்டாள் புனிதா. அங்கே வருகை தந்தவரை எண்ணி விடலாம். சிவாவின் தங்கை, தங்கையின் கணவர் இருவர் மட்டும் சிவா வழியில் வந்தனர். புனிதா வழியில் வருவதாக இருந்த சித்ரா வரவில்லை. புனிதாவின் பெற்றோர் ஆசிகள் மட்டும் தந்தியில் வந்தது. புனிதாவின் தங்கை வர வில்லை. நிர்மலாக் கல்லூரியின் பிரின்சிபால் உஷா நாயர், மற்றும் சில ஆசிரியைகள் வந்திருந்தனர். மகளை எதிர்பார்த்து வழிமேல் விழி வைத்திருந்த புனிதா அவள் வராமல் போகவே, மிக்க ஏமாற்றமும், வருத்தமும் அடைந்தாள்.

    தம்பதிகளாய் கதவைத் திறந்து வீட்டுக்குள் இருவரும் நுழைந்ததும் சிவாவின் கண்களில் பட்டது, முன் அறையில் பளிச்செனத் தொங்கிய காப்டன் ஆனந்த் குல்கர்னியின் படம் நீக்கப் பட்டு, அந்த இடத்தில் ரவிவர்மாவின் கலைமகள், திருமகள் ஓவியங்கள் அலங்கரித்தன! புனிதாவின் கண்ணில் பட்டவை, தரையில் கிடந்த இரண்டு கடிதங்கள்! ஒரு கடிதம் புனிதாவுக்கு. அடுத்து ஒரு கடிதம் சிவாவுக்கு. இருவரும் உடனே வேகமாக உறையைக் கிழித்துப் படித்தார்கள்.

    அன்புள்ள அம்மா,

    நான் முட்டாள்தனமாக கண் காணாத ஓர் இடத்துக்கு ஓடிப் போக வில்லை. பூனேயில் இருக்கும் சித்தி வீட்டுக்குப் போகிறேன். சில வருசங்கள் தங்கி அங்கிருந்து என் படிப்பைத் தொடர்வேன்.

    உங்கள் இரண்டாம் கல்யாணத்தில் முன்னின்று பங்கு கொள்ள என் மனம் இடம் தரவில்லை. அப்பா இருந்த இடத்தை, நான் விரும்பிய ஒருவர் எடுத்துக் கொள்வதை என் மனம் ஒப்ப வில்லை. நீங்கள் இருவரும் உண்டாக்கிய இந்த ஆறாப் புண் எப்போது ஆறுமோ எனக்குத் தெரியாது. என்றாவது ஒரு நாள் புண் ஆறினால், அன்று உங்களைக் காண வருவேன். சில வருசங்களுக்கு உங்கள் இருவரது முகத்திலும், நான் விழிக்கப் போவதில்லை.

    பிரளயம் ஏற்பட்ட பிறகு அந்த வீட்டில் யாராவது இருவர்தான் வாழலாம்! நாம் மூவரும் இனிமேல் அங்கு நிம்மதியாக வசிக்க முடியாது!

    அன்பு மகள்,
    சித்ரா

    அன்புணராத குருவே,

    உங்களைப் பற்றி அம்மாவிடம் அசிங்கமாகப் பேசி அவமானப் படுத்தியதுக்கு மன்னிக்கவும். அப்படி எல்லாம் அவதூறாய்ப் பேசி அம்மாவிடமிருந்து உங்களைப் பிரித்து விடலாம் என்று நான் முயன்றது பலிக்காமல் போனது. நீங்களும் நானும் இணைந்து வாழும் பாக்கியத்தை என் தாய் பறித்துக் கொண்டாள் என்பதை என்னால் தாங்க முடிய வில்லை. ஆண்களில் உயர்ந்த ரகம் நீங்கள். உண்மையாக என் அம்மா ஓர் அதிர்ஷ்டசாலி.

    அபாக்கியவதி,
    சித்ரா

    பாயும் ஒளி நீ எனக்கு! பார்க்கும் விழி நான் உனக்கு!

    கடிதத்தைப் படித்ததும் புனிதாவின் கண்களில் கண்ணீர் பெருகிக் கொண்டு வந்தது. அவளது உள்ளத்தில் பல ஆண்டுகளுக்குப் பிறகு முழு நிறைவு உதய மானது. புனிதா சிவாவின் அருகில் நெருங்கி வந்தாள்.

    “கண்ணே! உன் வாழ்வில் ஒரு கதவு மூடி, இன்னொரு கதவு திறந்திருக்கிறது! ஒரு உறவு கிடைத்து, இன்னொரு உறவு பிரிந்து போகிறது! கடவுள் நமக்கு ஒன்றைக் கொடுக்கும் போது, இன்னொன்றை ஏனோ எடுத்துக் கொள்கிறார்! ஆகவே ஒன்றை நாம் அடைந்தால், இன்னொன்றை இழக்க நாம் தயாராக இருக்க வேண்டும்! புனிதா! நமது புதிய உறவைப் பிரிக்கப் பிரச்சனைகள் கிளம்புகின்றன! நாமிருவரும் இப்போதான் இணைந்து போராட வேணும்” என்று சொல்லிக் கொண்டே புனிதாவின் கண்ணீரைத் துடைத்து அவளைத் தன் மார்போடு இறுக அணைத்துக் கொண்டான் சிவா.

    ++++++++++++++++

    S. Jayabarathan (jayabarat@tnt21.com) [Dec 3, 2008]
    Share