கட்டுரைகள்மறு பகிர்வு

வம்சம்

தேமொழி

அரசி ஆன் என்ற பெயரில் ஐரோப்பிய வரலாற்றில் பல அரசிகள் இருந்தனர்.  ஆனால் இங்கிலாந்தின் பேரரசி ஆன் என்பவர்தான் பொதுவாக பலருக்கும் நினைவிற்கு வருபவர்.  அதிலும் இங்கிலாந்தின் பேரரசி ஆன் (Anne, The Queen of Great Britain – 6 February 1665 – 1 August 1714) அம்மையாரின் பெயர் சொன்னால் பெரும்பாலானோருக்கு அவரைப் பற்றிய பலப் பலவிதமான செய்திகள் நினைவுக்கு வரும்.

– இங்கிலாந்தும் ஸ்காட்லாந்தும் இணைந்து முதன் முதலாக உருவாகிய கிரேட் பிரிட்டனின் முதல் பேரரசி

– இங்கிலாந்தில் இரு கட்சிகள் நடத்தும் அரசியலுக்கு வழி வகுத்தவர்

– இங்கிலாந்து பாராளுமன்றத்தின் சட்டத்தை தடை செய்த கடைசி அரசி.  இவருக்கு பிறகு அரச குடும்பத்தினர் பாராளுமன்றத்தின் முடிவை எதிர்க்கும் அதிகாரம் இழந்துவிட்டனர்

– இவர் காலத்தில்தான் லண்டனின் செயின்ட் பால் தேவாலயம் (St Paul’s Cathedral, London) கட்டி முடிக்கப் பட்டது

– அரசி இங்கிலாந்தின் வரலாற்றில் முக்கியமான காலகட்டத்தில் ஆட்சி செய்தார்; உள்நாட்டு அரசியலில் முகியத்துவம் வாய்ந்தது: இங்கிலாந்தும் ஸ்காட்லாந்தும் ஒரே பாராளுமன்றமாக இணைந்து இயங்க ஆரம்பித்தது; உலக வரலாற்றில்: ஸ்பெயினின் வாரிசுரிமைப் போரில் ஈடுபட்டு ஃப்ரான்ஸை வீழ்த்தி ஸ்பெயின் நாட்டின் வாரிசுரிமைப் போரை ( War of the Spanish Succession) முடிவுக்கு கொண்டு வந்ததன் மூலம் உலக அளவில் இங்கிலாந்தை ஒரு வல்லரசாக உருவகப் படுத்திக் காண்பித்தார், இவர் காலத்தில் திறமை வாய்ந்த தளபதியின் கீழ் பல போர்களில் இங்கிலாந்து தொடர்ந்து வெற்றி பெற்றது

– கட்டிடக் கலையில், கட்டிடத்தின் மேல் முகப்பில் முக்கோண முகப்பும், சுவர்களில் தொடர்ந்து வரிசையான ஜன்னல்களும் உள்ள கட்டிடங்களினால் “குயீன் ஆன் ஸ்டைல் ஆர்கிடெக்ட்சர் ” (Queen Anne style architecture) என்று அவர் கால கட்டிடக்கலை பெயர் பெற்றது

– வளைந்த கால்களையுடைய, மென்மையான திண்டுகள் வைத்து தைத்த, வசதியான, எடை குறைந்த, மெல்லிய, கலை அழகுள்ள வேலைப்பாடுகள் நிறைந்த இருக்கைகளும், படுக்கைகளும், பஞ்சனைகளும், ஆசனங்களும்  “குயீன் ஆன் ஸ்டைல் ஃபர்னிசச்சர் ” (Queen Anne style furniture) என்று பெயர் பெற்றன

– ஸ்பெயினின் வாரிசுரிமைப்போர் அமரிக்காவிலும் நடந்தது.  அங்கிருந்த இங்கிலாந்து வீரர்கள், செவ்விந்தியர்கள் உதவியுடன் அமெரிக்க மண்ணில் இருந்த ஃப்ரான்ஸ் படையுடன் போரிட்டு வெற்றி பெற்றனர்.  அப்போரை அமெரிக்க வரலாறு “குயீன் ஆன்னின் போர்” என்றுதான் குறிப்பிடுகிறது.  அரசியின் நினைவாக “மேரிலாண்ட்” மாநிலத்தில் “குயீன் ஆன் கவுண்டி” (Queen Anne County) என்ற ஒரு மாவட்டமும், மற்றும் அந்நாட்டில் ஆங்காங்கே அவர் பெயரில் சில ஊர்களும் வீதிகளும் கட்டிடங்களும் உள்ளன

– இவர் நட்பின் கதையும் மிகவும் பிரபலமானது.  சிறு வயது முதல் “ஸாரா”  என்னும் பெண் இவரது உற்ற தோழியாய் விளங்கினார்.  அரச பரம்பரையில் பிறக்காத தோழியின் குலப் பின்னணியை அவர் ஒரு பொருட்டாக ஒருநாளும் கருதியதேயில்லை.  அந்தத் தோழியிடம் கலந்தாலோசிக்காமல் எதையும் செய்ய மாட்டார் என்ற நிலையில் இருந்தார்.  அரசியான பின் தன் தோழியின் கணவரை ராணுவத் தளபதியாக்கினார்.  தளபதியும் மிகத் திறமையானவர். பலபோர்களில் வெற்றி பெற்று அரசியின் அரசாட்சியை உறுதியாக்கி அரசிக்குப் பெருமை பல சேர்த்தார்.  அரசியும் மனமகிழ்ந்து தோழிக்கும் அவர் கணவருக்கும் பரிசுகளாகக் குவித்தார்.  பட்டங்களாக அள்ளி வழங்கினார்.  தோழி ஸாராவின் உறவினர்களும் நண்பர்களும் கூட இந்த நட்பினால் பயனடைந்தார்கள்.  பல நல்ல பதவிகளைப் பெற்றுக் கொண்டார்கள்.  ஆனால் தோழி ஸாராவிற்கு வாய்த்துடுக்கு கொஞ்சம் அதிகம்.  அரசிக்கு கிடைத்த மற்றொரு தோழியிடம் அரசி அன்பு காட்டுவதினால் பொறாமை கொண்டார்.  பொது இடத்தில் அரசி என்றும் பாராமல் வாயாடினார்.  அரசியை அவமதித்துப் பேசினார்.  அரசிக்கு வந்தது கோபம்.  ஒரே நாளில் ஸாராவின் உறவினர்களையும் நண்பர்களையும் உதறித் தள்ளினார்.  சாராவின் கணவர் நாட்டிற்காகவும் தனக்காகவும் செய்த சேவைகள் அனைத்தையும் மதிக்காமல் அவரது பதவியைப் பறித்து அவரையும் வெளியேற்றினார்.  அதன் பிறகு கடைசிவரை தன் தோழியைப் பார்க்க மறுத்துவிட்டார் (இது எங்கேயோ படித்த மிகப் பரிச்சயமான கதை போல் தோன்றுகிறது)

– Cricket is not illegal, for it is a manly game – என்ற பொன்மொழியை உதிர்த்தவர்

– பிற்காலத்தில் கடல் கொள்ளைக்காரனாக மாறிய அரசியின் கடற்படை மாலுமி கருந்தாடி (Blackbeard) அரசியின் மீது கொண்ட அபிமானத்தினால் தன் கப்பலுக்கு “குயீன் ஆன்னின் சபதம்”  (Queen Anne’s Revenge) என்று பெயர் சூட்டினான்.

– ஏன் ஒரு பூவிற்கு (Queen Anne’s lace) கூட அரசியின் பெயர் உண்டு

எது எப்படியானாலும் எல்லாவற்றிக்கும் மேலாக அரசி ஆன் என்றால் அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது இவர் ஸ்டூவர்ட்” வம்சத்தின் கடைசி அரச வாரிசு என்பதே.  14 ஆம் நூற்றாண்டு முதல் ஸ்காட்லாண்ட் மற்றும் இங்கிலாந்து நாடுகளை ஆண்ட ஸ்டூவர்ட் வம்சத்தின் அரசாட்சி இவருடன் முடிந்தது என்பது தவிர்க்க முடியாமல் நினைவிற்கு வரும் அளவிற்கு முக்கியத்துவம் கொண்டது.

அரசி ஆன் தனது 37 ஆவது வயதில் (1702) இங்கிலாந்தின் அரசியானார், இவர் தன் 49 வயதில் நோயுற்று இறக்கும் வரை 12 ஆண்டுகள் அரசாட்சி செய்தார். ஆனால் இவருக்கு அரசபரம்பரை வாரிசுரிமைப்படி அரசியாகும் வாய்ப்பு இருந்ததோ மிக மிக சொற்பம்.  ஆனாலும் இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, அயர்லாந்து ஆகிய மூன்று நாடுகளையும் ஆளும் அரசியாகும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

அரசி ஆன், ஸ்டூவர்ட் “Stuarts” of England and “Stewarts” of Scotland பரம்பரையில் பிறந்த இளவரசர் ஜேம்ஸ்க்கும், அவர் மனைவி ஆன் ஹைடுக்கும் பிறந்தார்.  பிறந்தது முதலே கண்களில் நீர் தொடர்ந்து வழியும் ஒரு கண் நோயில் ஆரம்பித்து, அம்மை, கீல்வாதம், வாழ்நாள் முழுவதும் இரத்த சம்பந்தப் பட்ட நோய் (porphyria)  என தொடர்ந்து நோயினால் பாதிக்கப் பட்டவண்ணமே இருந்தார்.  பிறந்தவுடன் கண் நோயைக் குணப்படுத்த ஃப்ரான்ஸ்ஸில் உள்ள பாட்டி வீட்டிற்கு அனுப்பி வைக்கப் பட்டார்.  ஆனால் பாட்டி இறந்தவுடன் 6 வயதில் நாடு திரும்புவதற்குள் தாயும் இறந்து விட்டிருந்தார்.  இவர் பெற்றோர்களுக்குப் பிறந்த எட்டு குழந்தைகளில் ஆறு குழந்தைகள் ஆறு வயது தாண்டுவதற்குள் இறந்துவிட மிஞ்சியது ஆனும் அவர் தமக்கை மேரி மட்டுமே.

அரசுரிமை ஏற்கப் போகும் இளவரசர்களுக்கு வழங்கப்படும் படை, போர் பயிற்சி, சட்டக் கல்வி போன்ற கல்விகள் கற்று கொடுக்கப் படாமல் மற்ற பிரபுக்களின் பிள்ளைகள் போல் இசை, இலக்கியம், மதம் போன்ற கல்வி கற்று வளர்ந்தார்.  இவர் வளர்ந்த காலத்தில் இவர் பெரியப்பா இரண்டாம் சார்லஸ் அரசாட்சி செய்து கொண்டிருந்தார்.  நாடும் அரச குடும்பமும் புராட்டஸ்ட்டண்ட் கிறிஸ்துவ மதப் பிரிவை தீவிரமாக தழுவி வந்தனர். அத்துடன் கத்தோலிக்க கிறிஸ்துவப் பிரிவினரை வெறுத்து எதிர்த்து வந்தனர்.

அரச குல வழக்கப்படி நாட்டின் அரசியல், அயல் நாட்டின் நட்பு போன்ற காரணங்களை கருத்தில் கொண்டு இவர் அக்கா மேரி நெதர்லாண்ட் இளவரசர் வில்லியமிற்கும், இளவரசி ஆன் டென்மார்க் இளவரசர் ஜார்ஜிற்கும் திருமணம் செய்து கொடுக்கப் பட்டனர்.  ஜார்ஜும் ஆனும் இறுதிவரை மிக அன்புடன் குடும்பம் நடத்தினர்.  ஜார்ஜ் அறிவும் திறமையும் குறைந்தவர், பெரிய குடிகாரர் எனப் பெயர் வாங்கினாலும் அன்பான, அழகான, மனைவிக்கு துரோகம் நினைக்காத நம்பிக்கைக்குரிய கணவர் எனப் போற்றப் பட்டார்.   பிற்காலத்தில் கணவர் மறைந்தவுடன் ஆன் மிக மனமுடைந்து போனார்.

இதற்கிடையில் நாட்டிலும் பல மாறுதல்கள் நிகழ்ந்தன. அரசராக இருந்த ஆனின் பெரியப்பா இரண்டாம் சார்லஸ் இறந்தார்.  அவரது பட்டதரசிக்கு குழந்தையில்லை.  ஆனால் ஒரு குத்துமதிப்பாக அரசருக்கு இருந்த 14 ஆசை நாயகிகளும் (வரலாற்று அறிஞர்களின் கணக்குப்படி) அவர்கள் மூலம் முறைதவறிய வழியில் பிறந்த (illegitimate) 14 பிள்ளைகளும் அரசாளும் தகுதி இல்லாததால் ஆட்சியுரிமையை இழந்தார்கள். இதனால் ஆனின் அப்பா ஜேம்ஸ் அரசரானார்.  இவர் கத்தோலிக்க கிறிஸ்துவ மதத்திற்கு மாறியதுடன் நில்லாமல் கத்தோலிக்க கிறிஸ்துவ பெண்ணையும் மறுமணம் செய்திருந்தார்.

புதிதாக பதவியற்ற அரசருக்கு ஒரு மகனும் பிறந்தான்.  இங்கிலாந்து மக்களும், பாராளுமன்றமும் ஒரு கத்தோலிக்க அரச குடும்பத்திற்கு அரசுரிமை போனதை விரும்பவில்லை.

நெதர்லாண்ட் இளவரசர் வில்லியமை மணந்து சென்றுவிட்ட ஆனின் அக்கா மேரியை படையெடுத்து வரும்படி அழைத்தனர். பெரியமகளும் மருமகனும் படையுடன் வந்து இங்கிலாந்து மன்னரை நாட்டிலிருந்து துரத்தினர் (Glorious Revolution of 1688).  அரசி ஆன் தன் அக்காவிற்கு துணை போனதுடன் நிராதரவான தந்தைக்கும் உதவவில்லை.  மீண்டும் நாட்டில் புராட்டஸ்ட்டண்ட் மன்னராட்சியாக வில்லியமும் மேரியும் இணைந்து அரசாண்டனர்.  மேரிக்கு மூன்று கருச் சிதைவிற்குபின் குழந்தையே பிறக்காமல் போனது.  வாரிசற்ற அக்காவிற்குப் பிறகு தனக்கும் தன் சந்ததியினருக்கும் அரசுரிமை கிடைக்கக் கூடும் என்ற திட்டத்தினாலும் ஆன் தன் தந்தைக்கு உதவாமல் இருதிருக்கக் கூடும்.  எப்படியோ மகள்களின் துரோகத்தினால் அப்பா ஜேமேஸ் அதிர்ச்சியடைந்து மனமுடைந்து போனார்.   அம்மை நோய் தாக்கி தன் 32 ஆவது வயதில் அக்கா மேரி இறந்தார்.  அவர் கணவர் அரசர் வில்லியமிற்கு மறுமணத்தில் ஆர்வம் இல்லை.  எட்டு ஆண்டுகளுக்குப் பின் தன் மனைவியைத் தொடர்ந்து அவரும் மறைந்தார்.  அவருக்குப் பின் ஆன் இங்கிலாந்தின் அரசியானார்.

220px-Queen_Anne_and_William,_Duke_of_Gloucester_by_studio_of_Sir_Godfrey_Knellerஅரசி ஆன் ஒரு முறை இருமுறையல்ல பலமுறை கர்ப்பமுற்றார்.  சரியாகச் சொல்லவேண்டுமென்றால் 17 முறை கருத்தரித்தார். இவற்றில் 6 குழந்தைகள் இறந்தே பிறந்தன. அரசிக்கு 6 முறை கருச்சிதைவும் ஏற்பட்டது, அவற்றில் இரண்டு கருச்சிதைவுகள் இரட்டையர்களாகப் பிறக்க வேண்டிய கர்ப்பம். எனவே 8 குழந்தைகள் இவ்வாறு கருச்சிதைவு மூலம் உலகைப் பார்க்காமலே போய் சேர்ந்தனர். அரசியின் பிரசவங்களிலும் சில குறைப் பிரசவங்களாகப் போயின. அதனால் உயிருடன் உலகிற்கு வந்த குழந்தைகளில் 2 குழந்தைகள் பிறந்த இரண்டுமணி நேரத்திற்குள் இறந்து போயினர். மற்றும் 2 சிறுமிகள் அரசியின் கணவருக்கு அம்மை நோய் வந்தபொழுது, அந்நோய் அவர்களுக்கும் தொற்றி தங்களது இரண்டாவது பிறந்தநாளைப் பார்க்கமலே இறந்தனர்.

மிஞ்சிய ஒரே ஒரு மகன் வில்லியமும் நாளொரு மேனியும் பொழுதொரு நோயுமாக, நோஞ்சானாக தீவிர மருத்துவ கவனிப்பில் வளர்ந்து வந்தான். அவனுக்கு உடல் நலக்குறைவுள்ள தோற்றமும் இருந்தது.  1700 ஆம் ஆண்டு தனது பதினொன்றாம் வயது பிறந்தநாளை கோலாகலமாய் ஆடிப் பாடி கொண்டாடினான்.  உடனே நோய்ப்படுக்கையில் விழுந்த இளவரசன் சிலநாட்களில் உயிரை விட்டான்.  சவப்பரிசோதனையில் அவன் மூளையில் நீர்கோர்த்திருந்தது (hydrocephalus)  தெரிய வந்தது.

தன் 18 வயதில் திருமணம் செய்து கொண்ட அரசி ஆன் தன் 35 ஆவது வயதில் தனது வாரிசாக வந்திருக்க வேண்டிய 19 மக்கட் செல்வங்களையும் இழந்தார்.  முயற்சி திருவினையாக்கும் என்பது அரசியைப் பொறுத்தவரை குழந்தை பெறுவதில் பொய்த்துப் போனது.

ஆனால் வில்லியமும் அரசி ஆனும், பாராளுமன்றத்தின் உதவியுடன் புராட்டஸ்ட்டண்ட் குல மன்னராட்சி மட்டுமே இங்கிலாந்தில் தொடரும்படி சட்டம் (Act of Settlement 1701) இயற்றினார்கள்.  இதனால் வாரிசற்ற அரசி ஆனுக்குப்பின் அவரது மாற்றாந்தாயின் மகன், கத்தோலிக்க கிறிஸ்துவரான அவரது சகோதரனுக்கு ஆட்சியுரிமை கிடைக்கவில்லை.  அரசாட்சியை மீட்க அந்த சகோதரன் எடுத்த முயற்சிகள் எதுவும் பலனளிக்காமல் போனது.   அவர்களின் தந்தை வழிப் பாட்டியின் வழிவந்த மற்றுமொரு ஒன்றுவிட்ட “ஹேநோவர்”  வம்ச (Hanover) புராட்டஸ்ட்டண்ட் சகோதரன் ஜார்ஜிற்கு அரசாட்சி கிடைத்தது.  அத்துடன் ஸ்டூவர்ட் வம்ச ஆட்சியும் இங்கிலாந்தில் முடிந்தது.

முப்பத்துஏழாவது வயதில் பதவிக்கு வந்த பொழுதே அரசி ஆன் தன் குழந்தைகள் அனைவரையம் இழந்திருந்தார்.  பிறகு அடுத்த சில ஆண்டுகளில் கணவரும் நோயுற்று மறைந்தார்.  பன்னிரண்டு ஆண்டுகள் அரசாட்சி செய்தாலும் அரசி ஆன் பதவியேற்ற அன்றே சீரழிந்த உடல் நலத்தினால் நடக்க முடியாமல் பல்லகில் தூக்கி வரப் பட்டார்.  இறப்பதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன் நாளுக்கு நாள் அவர் உடல் நலம் மேலும் கெட்டு “கவுட்” (gout) நோய் முற்றி, அதனால் உடல் மிகவும் பெருத்துப் போய் நடக்கவே இயலாமல் போனார்.  சூடான இரும்பினால் சுடப்படுவது, உடலை ரத்தம் சிந்த செய்வது போன்ற சில குரூர மருத்துவத்திற்கும் ஆளானார்.  அவர் இறந்த பொழுது ஊதிப்போன உடலை அடக்கம் செய்ய சதுர வடிவ சவப்பெட்டி தேவைப் பட்டது.

இங்கிலாந்து அரசிகளான விக்டோரியா, மேரி, எலிசபெத் போன்றோர் போற்றப் படுவது போல ஏனோ இவரது அரசாட்சிக்காகப் இவர் போற்றப் படவில்லை என்று கருதுபவர் உண்டு.  ஆனால் இவர் உடல் நலக்குறை வினால் அமைச்சர்களின் தாக்கம் ஆட்சியில் அதிகம் இருந்ததும் பாராட்டு கிடைக்காமல் போனதற்கு  ஒரு காரணம்.  அனைவரையும் இழந்தபின், உடல் உபாதையில் வருந்திய அரசி ஆன் கடைசிக் காலத்தில் தீவிர ஆன்மீகவாதியாக மாறி கடவுளிடம் கவனத்தை மிகவும் திருப்பினார்.  தனது சந்ததிகள் அனைவரும் தனக்கு முன்னமே அழிந்து போனதற்கு காரணம் தான் தன் தந்தைக்கு செய்த துரோகமும், அதனால் தந்தை தனக்கிட்ட சாபத்தின் விளைவு என்றும் எண்ணினார்.

அறிவியலும் மருத்துவமும் சொல்லும் காரணங்கள்; அரசி ஆனின் ரத்தம் Rh நெகடிவ் (Rhesus factor negative) வகை, அவரது கணவருக்கு Rh பாசிடிவ் வகை (Rhesus factor positive) என இருந்திருக்கக் கூடும்.   இதனால் நோயினை எதிர்ப்பது போல் அரசியின் உடலின் எதிர்ப்பு சக்தி Rh positive கொண்ட கருக்களை அழித்துவிட்டது.  இதே காரணம் இவர் அக்காவின் கருச் சிதைவுகளுக்கும் காரணமாக இருந்திருக்க வாய்ப்புள்ளது.

ஆனால் இந்தக் காரணம் சரியல்ல என்பவரும் உண்டு.  இந்த எதிர்ப்பு சக்தி ஒவ்வொரு பிரசவத்திற்கு பிறகும் மோசமாகவே வாய்ப்புள்ளது.  ஆனால் அரசிக்கு ஏழாவதாக பிறந்த மகன் உயிருடன் இருத்திருக்கிறான்.  அதனால் இது சரியான காரணமாக இருக்கமுடியாது என்பது மறுப்பவர்களின் வாதம். மற்றொரு காரணமாகக் கூறப்படுவது, அரசிக்கு இருந்த தோலை சீரழிக்கும் “லூப்பஸ்” என்னும் தோல் சம்பந்தப் பட்ட நோயும் ( lupus erythematosus) அதன் விளைவாக தவறாக செயல் பட ஆரம்பித்த உடலின் நோய் எதிர்ப்பு சக்தியும் (auto-immune disease).  இதன் விளைவாக அரசியின் கருக்கள் உடலுக்கு அன்னியம்மாக, சம்பந்தமில்லாதவைகளாகக் கருதப்பட்டுத் தாக்கி அழிக்கப் பட்டிருக்கக் கூடும் என்றும் “பிரிட்டிஷ் மெடிக்கல் ஜெர்னல்” (British Medical Journal) ஆராய்சிக் கட்டுரை ஒன்று கருதுகிறது.

அரச குலத்திற்கு கிடைக்காத மருத்துவ வசதியா?  இருந்தும் எதுவும் அரசிக்கும் அவர் குழந்தைகளுக்கும் பயன் படவில்லை.  தான் தந்தைக்கு இழைத்த பாவத்திற்கு கடவுள் கொடுத்த தண்டனை என நம்பிய அரசியின் ஆன்மீக விளக்கமோ, அறிவியலின் ஆராய்ச்சி விளக்கமோ விதம் விதமாக பல காரணங்களைக் காட்டக் கூடும், ஆனால் வாரிசு இன்றி அவர் அல்லலுட்று மனம்  நொந்து உயிர் விட்டது மட்டும் உண்மை.

 

வேண்டும் என்று கேட்பவருக்கு இல்லை இல்லை என்பான்
வெறுப்பவர்க்கும் மறுப்பவர்க்கும் அள்ளி அள்ளி தருவான்
ஆண்டவனார் திருஉள்ளதை யார் அறிந்தார் கண்ணே
யார் வயிற்றில் யார் பிறப்பார் யார் அறிவார் கண்ணே
யார் அறிவார் கண்ணே …….
— கண்ணதாசன்

 

 

படம் உதவி:  விக்கிபீடியா

நன்றி: வகுப்பறை

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க