இப்படியும் சில மனிதர்கள்! – 1

2

தஞ்சை வெ.கோபாலன்

நான் ஒரு கல்யாணத்துக்குப் போயிருந்தேன். அங்கே உட்கார்ந்திருந்த போது ஒரு ஜோடி மண்டபத்துக்குள் வந்து கொண்டிருந்தார்கள். வந்தவரில் ஆணுக்கு வயது எழுபது இருக்கலாம், பக்கத்தில் அவரது மனைவி அறுபது வயதைத் தாண்டியவர். கன்னங்கரேலென்ற நிறம். தேர் அசைவது போல ஒவ்வொரு அடியெடுத்து வைக்கும்போதும் பக்கவாட்டில் சாய்ந்து சாய்ந்து நடை. பெரியவருக்கு வயதானதாலோ அல்லது காலில் ஏதாவது ரிப்பேரோ தெரியவில்லை ஒரு கைத்தடியை ஊன்றிக் கொண்டு வந்தார். அவரை கைப்பிடியாகப் பிடித்துக் கொண்டு அந்த அம்மையார் குழந்தையை நடத்தி வருவது போல மெல்ல அழைத்து வந்து கொண்டிருந்தார்.

‘மெதுவா வாங்கோ. பார்த்து காலடியை எடுத்து வையுங்கோ. கீழேயெல்லாம் டைல்ஸ், வழவழன்னு இருக்கு. வழுக்கிவிட்டுடப் போறது. இதுல தண்ணியை ஊத்தி வைச்சாக்கூட கண்ணுக்குத் தெரியாது. வழுக்கிவிட்டுட்டா என்ன பண்றது. பாருங்கோ, அங்கே குழந்தைங்க ஓடிப்பிடிச்சு விளையாடறதை. ஓடிவந்து ஒங்க மேல விழுந்துட்டா என்ன பண்றது. மெதுவா, என்னைப் பிடிச்சுண்டு வாங்கோ’ என்று ராஜோபசாரம் செய்தபடி அந்தப் பெண்மணி உள்ளே நுழைந்தாள்.

‘வரேன், வரேன், நன்னா கையைப் பிடிச்சுக்கோ! நான் தான் சொன்னேனே, இந்த மாதிரி கல்யாண மண்டபத்துக்கெல்லாம் போறது அவ்வளவு பாதுகாப்பு இல்லைன்னு, நீ கேட்டியா, ஒன்னோடு அத்தங்கா பொண்ணு கல்யாணம்னு என்னையும் இழுத்துண்டு வந்து நிக்கறே’ என்றார்.

‘வரலைன்னா, அவா ​கோவிச்சுக்குவா, நாம வந்து பெரியவாளா லட்சணமா கல்யாணத்தைப் பண்ணி வச்சாதான் அவாளுக்குத் திருப்தி. வேற யாரு இருக்கா, பெரியவாளா அவாளுக்கு இதைச்செய் அதைச்செய்னு சொல்றதுக்கு. பேசாம வாங்கோ, வந்து ஒரு இடத்துலே ஒக்காந்துக்கோங்கோ’ என்று அவரைப் பிடித்துக் கொண்டு போய் அங்கிருந்த ஒரு நாற்காலியில் உட்கார வைத்தாள் அந்தப் பெண்மணி.

எனக்கும் பொழுது போகவேண்டாமா? இந்த முதிய காதல் ஜோடியின் ராசக்கிரீடையைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தேன்.

கல்யாண வீட்டுக்காரர்கள் இந்த ஜோடியைப் பார்த்துவிட்டுப் பரவசமாய் ஓடிவந்து, ‘வாங்கோ, வாங்கோ, என்னடாது, இதுவரை மாமா மாமியைக் காணலியேன்னு கவலையா பேசிண்டு இருந்தோம். நீங்க வந்துட்டேள். நீங்கதான் எங்களுக்கு நல்லது கெட்டது எல்லாம் சொல்லித் தரணும். எங்காத்துல இதுதான் மொத கல்யாணம் இல்லியா, எதையும் தவற விடாம நன்னா நடத்தணும். உள்ளே வாங்கோ, டேய்! அங்க யாரப்பா, அந்த பரிசாரகர்கிட்டே சொல்லி ரெண்டு டம்ளர் காப்பி கொண்டு வரச் சொல்லு” என்றார் அதில் ஒருவர்.

‘அதெல்லாம் வேண்டாம். அவருக்கு ஷுகர், காப்பியெல்லாம் சாப்பிட மாட்டார், மாத்திரை சாப்பிடணும் கொஞ்சம் வெந்நீர் இருந்தா போட்டுக் கொண்டு வரச் சொல்லுங்கோ, நான் வந்து டிபன் சாப்பிட்டுக்கறேன்’ என்றாள் அந்த அம்மாள்.

‘பரவாயில்லே, எனக்கும் ஒரு காப்பி கொண்டு வரச்சொல்லுங்கோ, ஆனா, அதுல சக்கரை போட வேணாம்’ என்றார் அந்தப் பெரியவர்.

‘பாத்தேளா! இப்படித்தான் வாயைக் கட்டாம எதையாவது சாப்பிட்டுடறது, பின்னாலே மயக்கம் வரது, தலையைச் சுத்தறது அப்படிம்பேள், சொன்னா கேக்கவா போறேள்’ என்று சொல்லிவிட்டு அந்த கல்யாண வீட்டு அம்மாளிடம், ‘சரி மாமி, அவருக்கும் சக்கரை இல்லாம ஒரு காப்பி கொடுத்துடச் சொல்லுங்கோ’ என்றாள்.

‘எங்கே ஒங்க புள்ளை மாட்டுப்பெண் எல்லாம் வரலியா?’ என்றாள் கல்யாண வீட்டு அம்மாள்.

‘அவனுக்கு எங்கே ஒழியறது, ஆபீஸ் ஆபீஸ்னு ஆபீசை கட்டிண்டு அழறான். காலைல போனா ராத்திரி பத்தோ பதினொண்ணோ எப்போ வரானோ அப்போதான். மாட்டுப்பெண்ணுக்கு இதுக்கெல்லாம் எங்கே நேரம் இருக்கு. அவளும் வேலைக்கு போறாளா, வந்து டயர்டா இருக்குன்னு படுத்துண்டுடறா, கல்யாணம் கார்த்தின்னு நாலு இடத்துக்குப் போனாதானே, நம்மாத்துக்கும் மத்தவா வருவான்னு அவாளுக்குப் புரியல. அது கெடக்கு விடுங்கோ, நானும் மாமாவும்தான் வந்துட்டோமே’ என்றாள் மாமி.

‘சரி உட்காருங்கோ, காப்பி கொண்டு வரச்சொல்றேன்’ என்று சொல்லிவிட்டு கல்யாண வீட்டு அம்மாள் உள்ளே சென்றாள். உடனே ஜோடிப் பெண்மணி கணவரிடம் “வந்த இடத்திலே ஏன் மானத்தை வாங்கறேள். அவா காபி வேணுமா, டிபன் சாப்பிடறேளான்னு கேட்கத்தான் கேட்பா. வேண்டாம்னு சொல்லிட்டு அப்புறமா சாப்பிட்டாதான் கவுரமா இருக்கும். அல்பம் மாதிரி சரி சரி கொண்டாங்கோம்பாளா, உங்களோட எனக்கு மானம் போறது’ என்றாள்.

அப்போது கல்யாணப் பெண்ணைக் கூப்பிட்டுக்கொண்டு கல்யாண வீட்டு அம்மாள் வந்து பெண்ணை அந்த வயதான தம்பதியருக்கு நமஸ்காரம் செய்யச் சொன்னாள். அந்தப் பெண்ணும் மிக நளினமாகத் தன் பட்டுப்புடவை கலையாமல் குனிந்து மண்டியிட்டு நமஸ்காரம் செய்து எழுந்தாள்.

உடனே பெரியவர் கையைத் தூக்கி ‘மகாராஜியா நன்னா இரும்மா’ என்று சொல்லிவிட்டு தன் மனைவியை நோக்கி ‘ஊம், நீயும் குழந்தையை ஆசீர்வாதம் பண்ணு’ என்றார். அந்த அம்மாளும் அந்த மணப்பெண்ணை ஆசீர்வாதம் செய்த பின் அந்தப் பெண்ணும், அவள் அம்மாவும் உள்ளே சென்று விட்டனர். இந்த தம்பதியர் மட்டும் தனித்து விடப்பட்டனர்.

அப்போது கல்யாண வீட்டுக்காரர் ஒருவர் அந்தப் பக்கம் வந்தார். அவரை இந்தத் தம்பதியருக்குத் தெரியாது என்றாலும் அந்த அம்மாள் அவரை அழைத்தாள். அவரும் ‘என்ன மாமி, என்ன வேணும்’ என்று அருகில் வந்தார்.

அந்த அம்மா சொன்னாள், ‘மாமாவுக்கு ஒடம்பு சரியில்லே. கொஞ்சம் ஓரமா ரெண்டு பெஞ்சை புடிச்சுப் போட்டுட்டேள்னா, படுத்துப்பார்’ என்றாள்.

அவரும் அதுக்கென்ன போட்டுடறேன் என்று சொல்லிவிட்டு இரண்டு பெஞ்சுகளைக் கொண்டு வந்து போட்டு அதில் ஜமக்காளம் விரித்து தலையணை வைத்துக் கொடுத்தார். மாமி மறுபடி அவரைக் கூப்பிட்டு, ‘ஒரு பெடஸ்டல் ஃபேன் இருந்தா கொண்டு வந்து வச்சுடுங்கோ, மாமாக்கு காத்து வேணும்’ என்றாள். அதையும் அவர் செய்து கொடுத்தார். இப்போது பெரியவர் மிகவும் செளக்கியமாக பெஞ்சில் படுத்துக் கொண்டு ஓய்வு எடுத்தார். மாமி மெல்ல உள்ளே சென்றாள்.

மணமகள் வீட்டார் இருக்கும் பகுதிக்குச் செல்லாமல் அந்த அம்மாள் சமையலறை நோக்கிச் சென்றாள். அங்கு சமையலுக்காக ஊழியர்கள் காய் நறுக்கிக் கொண்டும், மாவு அரைத்துக் கொண்டும் தேங்காய் துறுவிக்கொண்டும் இருந்தார்கள். அந்த அம்மாள் அங்கிருந்த ஒருவரை அழைத்து ‘யார் சமையல்?’ என்றாள்.

அங்கிருந்த ஒருவர், ‘கிடாரங்கொண்டான் கிச்சாதான் சமையல், அதோ சாம்பார் அண்டாண்டே நிக்கறார் பாருங்கோ’ என்றான்.

மாமி உடனே அவரிடம் சென்றாள். அவரும் இவரை வரவேற்று, ‘என்ன மாமி, என்ன வேணும், ஏதாவது சாப்பிடறேளா?’ என்றார், இந்த அம்மாளை யாரென்று தெரியாவிட்டாலும், மரியாதைக்காக அவர் அப்படிக் கேட்டார். இந்த அம்மாள் வந்த சந்தர்ப்பத்தை விடுவாளா?

‘நாங்க வெங்காயம் சேத்துக்க மாட்டோம். நானும் மாமாவும் காசிக்குப் போயிட்டு வந்துட்டோமா, அங்க பொடலங்கா சாப்பிடறதை விட்டுட்டோம், அதனால நீங்க சமையல்ல வெங்காயம் சேக்காதீங்கோ, பொடலங்காயை எதுலேயும் போட்டுடாதீங்கோ’ என்றாள்.

நளபாகம் கிடாரங்கொண்டான் கிச்சா திகைத்துப் போனார்.

‘ஏம்மா! வெங்காயம், புடலங்கா சேக்காம பின்ன நாங்க எதைத்தான் வச்சு சமைக்கறது. கல்யாண வீட்டுல ஆயிரக்கணக்குல சாப்பிடுவா. அவா ஒவ்வொருத்தரும் எனக்கு இது பிடிக்காது, நான் இதை காசில விட்டுட்டேன்னு சொல்லிண்டிருந்தா, எதைச் சமைக்கறதுன்னு கொஞ்சம் கல்யாண வீட்டுக்காராகிட்டே கேட்டுச் சொல்லிடுங்கோ. இன்னொண்ணு மாமி, வீட்டுக்காரா என்ன சொல்றாளோ அதைத்தான் நாங்க செய்யணும், நீங்க அவாளுக்கு என்ன உறவோ தெரியாது. எதுன்னாலும் அவா கிட்டே சொல்லி எங்ககிட்டே இதெல்லாம் பண்ணலாம், இதெல்லாம் பண்ணக் கூடாதுன்னு சொல்லச் சொல்லிடுங்கோ, அதுபடி செஞ்சுடறோம்’ என்றார் கிச்சா.

‘அப்போ நாங்க சாப்பிட வேணாமா, என்ன இப்படி பேசறேள். காசில பொடலங்கா விட்டுட்டோம்னு சொல்றேன், அதைத்தான் பண்ணுவேன்றேளே’ என்றாள் மாமி உரத்த குரலில்.

அப்போது அங்கே வந்த கல்யாண வீட்டுக்காரர் இவர்கள் பேசுவதைக் கவனித்து விட்டுச் சொன்னார், ‘மாமி, நீங்கா காசில பொடலங்காயைத்தான் விட்டேளோ, வாழைக்காயைத்தான் விட்டேளோ தெரியாது. பொது இடத்துல ஆயிரக்கணக்கான பேருக்குச் சமையல் செய்யற இடத்துல வந்து, எனக்கு அது பிடிக்காது, அதை விட்டுட்டேன் இதை விட்டுட்டேன் அப்பிடின்னெல்லாம் சொல்லக்கூடாது. உங்களுக்குப் பிடிக்கலையா, பேசாம அதை ஒதுக்கிட்டுப் பிடிச்சதை சாப்பிட்டுட்டு போகணும். நீங்க சமையல்காரங்க கிட்டே தனியா உத்தரவு போடறதெல்லாம் நன்னா இல்லை’ என்றார்.

அந்த மாமிக்கு கோபம், விறுவிறுவென்று ஹாலுக்கு வந்தாள். அனந்த சயனத்திலிருந்த தன் கணவர் பெருமானை எழுப்பினார். ‘வாங்கோன்னா, நாம ஆத்துக்குப் போகலாம். சாப்பாட்டுல வெங்காயம் புடலங்கா சேக்காதீங்கோன்னு சமையல்காரர் கிட்டே சொல்றேன். ஒருத்தர் வந்து உங்களுக்கு வேணும்னா சாப்பிட வேண்டாம். மத்தவாளுக்குப் போடப்படாதுன்னு சொல்றதுக்கு நீங்க யாருங்கறார். வாங்கோ, நாம ஆத்துக்குப் போகலாம்’ என்றாள்.

அவர் சாவகாசமாக எழுந்து உட்கார்ந்து கொண்டு ‘என்னடீ இப்படிச் சொன்னா ராத்திரி சாப்பாட்டுக்கு என்னடீ பண்றது. அங்கே ஆத்துல உன் அருமை மாட்டுப் பொண்ணு புருஷனைக் கூட்டிண்டு ஓட்டலுக்கு போயிடுவா, நாம போய் என்னத்தைச் சாப்பிடறது. ராத்திரிக்குத்தான் நாம கல்யாணத்துல சாப்பிடப்போறோம், இது மிச்சம் வைக்க வேணாம்னு காலைல பண்ணின வத்தக் குழம்பையும்தான் நீ மத்தியானமே சாப்பிட்டுட்டியே’ என்றார்.

‘சரி சரி, நீங்க பேசாம படுத்துக்கோங்க, பந்தி பரிமாறினவுடனே பார்த்துண்டு வந்து உங்களை அழைச்சுண்டு போறேன். முதல்ல சாப்பிட்டுட்டு நாம ஆத்துக்குப் போயிடலாம், என்ன?’ என்று கேட்டுவிட்டு சமையல் கட்டுக்குள் மறுபடியும் நுழைந்து விட்டாள்.

அவள் அந்த இடத்தை விட்டு அகன்றதும், கல்யாண வீட்டுக்காரர் ஒருவரை அழைத்து அந்த தம்பதி யார் என்று கேட்டேன். அவர் சொன்னார்: ‘அவங்க ஏதோ தூரத்துச் சொந்தம். தெரிஞ்சவங்க வீட்டுக் கல்யாணம்னா தவறாம ஆஜராயிடுவாங்க. இப்படித்தான் அங்கே போயி இவங்க இஷ்டத்துக்கு உத்தரவு போடுவாங்க. சில இடங்கள்ளே செல்லுபடியாகும், சிலபேர் துரத்திவிட்டுடுவாங்க. இவங்க அதுக்கெல்லாம் மான அவமானம் பாக்க மாட்டாங்க” என்றார்.

அது சரி அவங்க பேர் என்ன? என்று கேட்டேன்.

அதற்கு அவர் “அவங்களோட உண்மையான பேர் என்னன்னு தெரியலை. ஆனால் எல்லோரும் அவரை ‘தில்’ அப்படின்னும், அந்த அம்மாவை ‘திவானா’ ன்னும் கூப்பிடுவாங்க.

‘தில், திவானா’ நல்லா இருக்கே பெயர் என்று சிரித்துக் கொண்டேன்.

(​தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “இப்படியும் சில மனிதர்கள்! – 1

  1. தில் திவானாவை மீண்டும் மேடைக்குக் கொண்டு வருவதற்கு கோபாலன்ஜிக்கு இருக்கு ஏகப்பட்ட ‘தில்’  

  2. கலக்கல்னா தில் திவானா,

    நல்லதொரு நகைச்சுவை தொடர் கிடைக்கப்போகிறதென்று நினைக்கிறேன் தொடருங்கள் ஐயா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *