கடவுள் என்பவர் யார்?
கோ. ஆலாசியம்
கடவுள் தத்துவம் பற்றிய விவேகானந்தரின் சிந்தனைகளை, நான் புரிந்துக் கொண்டவைகளை, இங்கே உங்களிடம் பகிர்ந்துக் கொள்கிறேன்.
கடவுள் தத்துவம்
கடவுள் என்பவர் யார்?
‘ஜன்மாத்யஸ்ய யத: யாரிடம் பிரபஞ்சத்தின் தோற்றம், நிலைபெறல், ஒடுக்கம் இவை நடைபெறுகின்றனவோ’1
அவரே கடவுள். அவர் என்றும் உள்ளவர், எப்போதும் தூயவர், என்றும் சுதந்திரர், எல்லாம் வல்லவர், எல்லாம் அறிந்தவர், கருணை வடிவானவர், குருவிற்கெல்லாம் குருவானவர்
எல்லாவற்றிற்கும் மேலாக
‘ஸ ஈச்வர: அநிர்வசனீய ப்ரேம ஸ்வரூப:
அந்த இறைவன் சொல்லுக்குள் அடங்காத அன்பு வடிவினன்.’2
இந்த விளக்கங்கள் நிச்சயமாக சகுணக் கடவுளுக்கானவை.
(அனைவரும் வணங்கும் அவரவர் விருப்பத்திற்கு ஏற்றார் போல் உருவத்தை செய்துக் கொண்டு வணங்கும், அந்த உருவக் கடவுள்)
அப்படி என்றால் இரண்டுக் கடவுள்கள் இருக்கிறார்களா?
தத்துவ ஞானியின் ‘இதுவல்ல, இதுவல்ல’ என்ற சச்சிதானந்தக் கடவுள், பக்தனின் அன்பே வடிவான கடவுள் என்று இரண்டு கடவுளரா?
இல்லை, இல்லை, இல்லை.
சச்சிதானந்தப் பொருள் எதுவோ அதுவே அன்புமூர்த்தியும்.
நிர்குணமும், சகுணமும் ஒருவரே. அப்படியானால் பக்தன் வழிபடுகின்ற சகுணக் கடவுள், பிரமத்திலிருந்து வேறானவரா?
அதுவும் இல்லை.
இந்த பிரபஞ்சம் (நாம் பூதக் கண்களால் காணும் இந்த உலகம், வெளி, கோள்கள், நட்சத்திரங்கள் என்று யாவும்) பிரமத்தில் இருந்து தோன்றியது, தோன்றியது என்றால் மறையவும் செய்யும். எங்கே மறையும். என்றக் கேள்வி வரும்.
எங்கிருந்து தோன்றியதோ அதனுள்ளேச் சென்று மறையும். பிறகு அது மீண்டும் தோன்றும். இது படைப்பின் சுழற்சி. இதை இங்கே தற்காலிகமாக நிறுத்தி விசயத்திற்கு செல்வோம்.
சகுணக் கடவுள் என்பவர் மாயையின் வழியாக காணப் படும் பரம் பொருளே அதாவது பரம்பொருள் என்பது தான்; நிர்குணக் கடவுள் / சச்சினானந்தம் / பிரபஞ்சத்தின் ஆதி மூலம்.
(இங்கே மாயை என்பது என்ன என்று விளக்க / புரிய / ஞாபகப் படுத்த வேண்டும். பிரபஞ்சப் பொருள்கள் யாவும் ஜடப் பொருள்கள் என்றுக் கொள்வோம், அப்படி இருக்கும் போது அதனுள் ஒரு இயக்கம் வேண்டும் அல்லவா? அந்த இயக்கம் பெறுவதற்கு, இந்த சக்தி / இயற்கை /அதாவது மாயை தான் காரணம். இதை பிராணன் என்றும் கூறுவோம். )
ஆக,
அந்த பரம் பொருள், அந்த ஒரேக் கடவுள், இயற்கையின் ஆதிக்கத்தில் தன்னை வைத்துக் கொள்ளும் போது “ஜீவன்” எனப்படுகிறார்.
இயற்கையை தான் ஆளும் போது “ஈசுவரன்” அல்லது சகுணக் கடவுள் எனப்படுகிறார்.
நிர்குணமும், சகுணமும் ஒருவரே. பக்தன் வழிபடுகின்ற சகுணக் கடவுள், பிரமத்தில் இருந்து வேரானதோ, வேறுபாடு உள்ளதோ இல்லை.
எல்லாமே இரண்டற்ற ஒன்றே தான். ஒன்றேயானப் பிரம்மம் தான்.
மனத்தால் உணர முடியாதபடி மிகமிக நுண்ணியதாக இருப்பதால் நம்மால் அன்பு செலுத்தவோ, வழிபடவோ இயலாதபடி விளங்குகிறது. எனவே பக்தன் பிரமத்தை, குணங்களோடு கூடிய நிலையில், அதாவது உலகங்கள் அனைத்தையும் ஆள்பவராகிய நிலையில்; அதாவது இயற்கையை ஆளும் ஈசுவரனாக, இறைவனைக் கொண்டு வழிபடுகிறான்.
சிறு உதாரணம் கொண்டு விளக்கலாம்.
ஒருப் பொருள் கொண்டு பல பொம்மைகள் செய்கிறோம் என்றுக் கொள்வோம். அது களிமண்ணாகவோ, மரமாகவோ, கல்லாகவோ, கண்ணாடியாகவோ இருக்கலாம். அப்படி செய்யும் போது, அந்த செய்யப்பட்டப் பொருள் உருவத்தில் மாறுபாடு கொண்டு அதற்கு எலி என்றும் புலி என்றும் பெயர் வைக்கிறோம் என்றுக் கொள்வோம்.
இப்போது எலியைப் புலியாகவோ, புலியை எலியாகவோ மாற்ற முடியாது. ஆனால் அந்த இரண்டும் உருவான மூலப் பொருள் ஒன்றே.
அந்த மூலப் பொருள் இந்த பொம்மைகளை செய்வதற்கு முன்பே இருந்தது, இப்போதும் இருக்கிறது. ஆனால் அது உருவமும், நாமகரணமும் (பெயரும்) கொண்டு இருக்கிறது.
இவை இரண்டும் வேறு வேறானவை என்றுக் கொள்கிறோம். எதிலிருந்து எதுவரை என்றால், அந்த மூலப் பொருளில் இருந்து இவைகள் உருவம் பெற்றதிலிருந்தும், அந்த உருவம் அழியும் வரை.
உருவம் பெறாத மூலப் பொருளாக இருந்தவரையில் அவை இரண்டும் ஒன்றே.
அதுபோன்றே, அறுதி உண்மையான பிரமத்தின் மிக உயர்ந்த வெளிப்பாடே இறைவன். இன்னும் தெளிவாகக் கூறவேண்டுமென்றால், பிரமத்தைப் பற்றி மனித மனத்தால் உணரமுடிந்த மிக உயர்ந்தக் கருத்து இறைவன்.
படைப்பு அநாதி காலந்தொட்டு (நிர்ணயிக்க முடியாதக் காலம் தொட்டு) இருந்து வருகிறது. ஆக இறைவனும் அப்படியே.
***
தமிழின் அருமருந்தாம் திருமூலம்!
அதனின் காணும் கடவுள் வாழ்த்தை அடிகோடிட்டு சிந்தனைக்கு விருந்தாக்கி முடிக்கிறேன்.
கடவுள் வாழ்த்து
ஒன்றவன் றானே இரண்டவன் இன்னருள்
நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந் தான்ஐந்து
வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச்
சென்றனன் தான்இருந் தான்உணர்ந் தெட்டே.
பொழிப்புரை:
ஒருபொருளாய் உள்ளவன் முதற்கடவுளே; வேறில்லை. அவனது அருள், `அறக்கருணை, மறக்கருணை` என இரண்டாய் இருக்கும். அவ் அருள்காரணமாக அவன், `இலயம், போகம், அதிகாரம்` என்னும் மூன்று நிலைகளில் நிற்பான். நின்று, `அறம், பொருள், இன்பம், வீடு` என்னும் உறுதிப் பொருள் நான் கனையும் தானே உணர்ந்து உலகிற்கு உணர்த்தினான்.
செவிமுதலிய ஐம்பொறிகளின் வழி நுகரப்படும் ஓசை முதலிய ஐம்புலன்களின் மேல் எழுகின்ற ஐந்து அவாவினையும் வென்றான். `மந்திரம், பதம், வன்னம், புவனம், தத்துவம், கலை` என்னும் ஆறு அத்துவாக்களாக விரிந்தான். `பிரம லோகம், விட்டு ணுலோகம், உருத்திர லோகம், மகேசுர லோகம், சதாசிவ லோகம், சத்தி லோகம், சிவ லோகம்` என்னும் ஏழுலகங்களுக்கும் மேற்சென்று தானேயாய் இருந்தான். அவனை, நெஞ்சே, நீ அறிந்து அடை.
(இதில் மறக்கருணை என்பது, அவதாரங்களாக வந்து தீமையின் மொத்த உருவமாக இருக்கும் ‘அகங்கார மமகாரத்தை’ அழித்து நற்கதியுரச் செய்வது)
——————————————————————————
1. பிரம்ம சூத்திரம்,
2. சாண்டில்யப் பக்தி சூத்திரங்கள்
நன்றி:
ஞான தீபம் சுடர் 4.