மூப்பு
ஆர்.எஸ். மணி
(வீடியோ கவிதை)
இந்தக் கவிதை வீடியோவிற்காக எழுதப்பட்டது. குளிர்காலம் முடிகிற நாட்கள். மரங்கள் மொட்டையாய். நின்று கொண்டிருந்தன. என் வீட்டருகிலும், எங்கள் தோட்டத்திலும் இருந்த சில மரங்களையும், செடிகளையும் வீடியோ எடுத்து, தொகுத்து, அதற்கேற்றவாறு இந்தக் கவிதையை எழுதிப் பதிவு செய்தேன்.கவிதை படிக்கும்போது “இளமை” என்னும் சொல்லை “இளைமை” என்று தவறாக உச்சரித்து விட்டேன். மறுபடி பதிவு செய்யும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. மன்னிக்கவும்.
அன்புடன்,
ஆர்.எஸ்.மணி
( கேம்ப்ரிட்ஜ், ஆன்டேரியோ, கனடா )
மூப்பு
இளமை என்னும் பருவம் ஏனோ
எப்போதும் நிலைப்பதில்லை
இளமையாய் இருந்தபோது – அதை
நாமும் ஏனோ நினைப்பதில்லை
மூப்பு வந்து முதுகை அழுத்த
மூச்சிரைத்து மார்பும் வலிக்க
முட்டாள் மனது ஏக்கத்தோடு
வானைப் பார்த்து கலங்குகிறது
மங்கி மறையும் மாலை ஒளியில்
நெஞ்சும் நடந்த காட்சியெல்லாம்
திரும்பத் திரும்பப் போட்டுப் பார்த்து
காலை வேளைக்குக் காத்து நிற்கிறது
இருள் சூழ இன்னும் எத்தனைக் கணங்களோ?
இமைகள் மூட இன்னும் எத்தனை நாட்களோ?
பசுமை நிறைந்த காலமும் போய் – இன்று
மொட்டை மரமாய் நான் நிற்கின்றேன்
எண்ணங்களுக்கோ குறைவேயில்லை – அவை
எல்லா திசைகளிலும் தாவுகின்றன
நேற்று, இன்று, நாளை என்று – மனம்
எல்லா காலத்தையும் நாடுகின்றது
எங்கெங்கோ சென்றுவிட்டு
கிடைத்ததையே மீண்டும் தேடுகின்றது
மலர்கள் பூத்துக் குலுங்கிய நாளும்
வண்டாய்ப் பறந்த நேரமும் எங்கே?
அன்புக்காக ஏங்கும் நெஞ்சில்
முட்களே வந்து குத்துகின்றன
சென்ற நாட்களும் திரும்புவதில்லை
உடைந்த இதயம் சேர்வதுமில்லை
உடலும் உலர்ந்து ஓய்ந்துவிட்டது – இன்று
உயிரும் பசையின்றி காய்ந்துவிட்டது
மீண்டும் பசுமை எட்டாக் கனவோ
என்றே உள்ளம் வாடும்போது
“உண்டு வாழ்க்கை” என்று யாரோ
காதில் சொல்வது கேட்கிறது – அது
மொட்டாய் முளைத்து வெளியே வந்து
மெல்ல சிரித்து என்னைப் பார்க்கிறது
இன்று போனால் போகட்டும் நெஞ்சே
நாளை என்பது வரத்தான் செய்யும்
இந்த உடல் இன்று மக்கி விழுந்தால்
நாளை இன்னொரு உடலுடன் பிறப்பேன்
மறுபடி உலகில் தவழ்ந்து ஒருநாள் – நான்
இளமையை மீண்டும் தீண்டி மகிழ்வேன்
—ஆர்.எஸ்.மணி
மனச் சிறையினில் மக்கிப் போன
குப்பைகள் அவைகள் கோபுரமாகி
தொக்கி நிற்கும் மீதி வாழ்க்கையில்
தொல்லை செய்தினிடினும் இத்துப்
போன முதுமை என்னும் வாழ்வின்
ஆணிவேரும் பட்டுப் போயிடினும் மீண்டும்
பிறந்து உன்னைப் பிடிப்பேன்
ஓ! இளமையே; என்னும்
நம்பிக்கை விழுகளை ஊன்றும்
இந்தக் கவிதை எந்தன் மனதின்
சோகத்திலும் புது சுரம் ஒன்று பிரிக்கிறது!
அழகியக் கவிதையும் காணொளியும் அதற்கு
மெருகூட்டிய அற்புதக் குரலும்.
அருமை! அருமை!! அருமை!!!
பகிர்விற்கு நன்றிகள்!
கவிதையை வாசித்தளித்த காணொளியே ஒரு கவிதையாய் இருக்கிறது.
பாராட்டுக்கள்.
அன்புடன்
….. தேமொழி
Dear Alasiam and Themozhi!
Thanks for your compliments!
anbudan,
R.S.Mani
காணொளியும், அதனோடு இழைந்துவந்த தங்கள் குரலொலியும் என் உள்ளத்தைக் கொள்ளைகொண்டு விட்டன. அருமையான கவிதை! பாராட்டுக்கள் ஐயா!
அருமை ஐயா! இரண்டு மூன்று முறை கேட்க வைத்த அழகான தெளிவான உச்சரிப்பு. வாழ்த்துக்கள்.
இளைமை என்பது மருவித்தான் இளமை ஆனது. ஆகவே வருத்தம் கொள்ளற்க. வேண்டுமாயின் வரி வடிவத்தில் மாற்றம் கொள்க!!
இளைமை iḷaimai
, n. < இளமை. Youth; See இளமை.
http://dsalsrv02.uchicago.edu/cgi-bin/philologic/getobject.pl?c.1:1:1714.tamillex.641428
Thanks to Mekala Ramamurthy and Sachidanandam for reading/listening to my poem.
I am grateful to PazhamaipEci for enlightening me on the word “இளைமை”. I shall correct my written version.
anbudan,
R.S.Mani