இப்படியும் சில மனிதர்கள்! – 2
தஞ்சை வெ.கோபாலன்
என்னுடைய நெருங்கிய நண்பன் சாமிநாதனுடைய மகளுக்குத் திருமண நிச்சயதார்த்தம். ஞாயிற்றுக் கிழமை பகல் 3 மணிக்கு நாமெல்லாம் மாப்பிள்ளை வீட்டுக்குப் போகிறோம்; அங்கே நிச்சயதார்த்தம் நடக்கிறது, நீயும் எங்களோடு வந்துவிடு என்றான் சாமிநாதன். என்னால் தட்டமுடியவில்லை. எனக்குப் பல வழிகளிலும் உதவிகள் செய்திருக்கிறான். அவன் மகள் கல்யாணத்தை நான் முனைந்து செய்ய வேண்டாமா? சரியென்று ஒப்புக் கொண்டேன். ஞாயிறு பகல் உணவுக்கே அவன் வீட்டுக்குப் போய்விட்டேன். உணவுக்குப் பிறகு சிறிது ஓய்வு எடுத்துக் கொண்டபின் எல்லோரும் நிச்சயதார்த்தத்துக்கு மாப்பிள்ளை வீட்டுக்குப் புறப்பட்டோம். உறவினர்கள் எல்லோரும் ஒரு வேனிலும், நாங்கள் சிலபேர் சாமிநாதன், அவன் மனைவி ஆகியோர் ஒரு காரிலும் புறப்பட்டு நிச்சயதார்த்தம் நடக்கும் வீட்டுக்குச் சென்றோம்.
அந்த வீடு மாம்பலத்தில் ஒரு குறுகிய தெருவில் இருந்தது. காரிலிருந்து இறங்கி உள்ளே சென்றோம். வாயிற்படியில் மாப்பிள்ளை வீட்டார் நின்றிருந்தனர். அவர்களில் பையனின் அம்மா யார் என்று கேட்டேன். அதோ கருப்பா தலையை ஆட்டி ஆட்டிப் பேசிக்கொண்டிருக்காளே ஒரு மாமி அவள்தான் அம்மா. பக்கத்தில் இருக்காரே அவர்தான் அப்பா என்றாள். பார்த்தால், அட! இவர்கள் நம்ம தில் திவானா ஆயிற்றே என்று எனக்கு ஆச்சரியம்.
என்னை அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார் சாமிநாதன். மாமி வழக்கப்படி தலையை ஆட்டி ஆட்டி ‘வாங்கோ, வாங்கோ’ என்றாள். அனைவரும் உள்ளே போய் விரித்திருந்த ஜமக்காளத்தில் உட்கார்ந்தோம். நடுவில் தட்டுக்கள் நிறைய பழங்கள், சர்க்கரை, கல்கண்டு, ஒரு தாம்பாளத்தில் பருப்புத்தேங்காய், மற்றொன்றில், புதிய ஜரிகை வேட்டி, காஞ்சிபுரம் பட்டுப்புடவை, ஒரு கண்டு மல்லிகைப் பூ இவையெல்லாம் வைக்கப்பட்டிருந்தன. அருகில் சந்தனப் பேலா, குங்குமச் சிமிழ் இவைகளும் இருந்தன.
எல்லோரும் வந்து அமர்ந்தாகிவிட்டது. சாமிநாதனே பேச்சை ஆரம்பித்தார். தனது வருங்கால சம்பந்தியைக் காண்பித்து “இவர் ஆர்.அண்டு எஸ். கம்பெனியில் மேனேஜிங் டைரக்டர் கிட்டே பி.ஏ.வா இருக்கார். இவர் பையனும் அங்கே அக்கவுண்ட்ஸ் ஆபீசர். பி.காம், சி.ஏ. படிச்சிருக்கார். ரொம்ப நல்ல பையன். யார் கிட்டேயும் அதிர்ந்துகூட பேச மாட்டார். மாமா ரொம்ப பிரபலம். இவாத்துல ஒரு விசேஷம்னா இவா சொந்தக்காரா அத்தனை பேரும் வந்து சேர்ந்துடுவா” என்று சொல்லிக்கொண்டே போனார்.
சம்பந்தி உடனே குறுக்கிட்டு, அருகில் இருந்த இரட்டை மண்டை கிழவனார் ஒருவரைக் காட்டி, இவர் என்னோட அண்ணா. இவர்தான் எங்க குடும்பத்துக்கு எல்லாம். இவர் என்ன சொல்றாறோ அதுக்கு எங்ககிட்டே மறுபேச்சே கிடையாது என்றார்.
அந்த இரட்டை மண்டையும் தலையை இருமுறை ஆட்டிவிட்டு நின்றது. எனக்கு விசித்திரமாக இருந்தது; அவரது தலை. அவர் கொஞ்சம் மிதப்பாக, கர்வத்தோடு இருப்பதாகத் தெரிந்தது.
‘எங்க அண்ணா இருக்காரே, அவருக்கு மூணு பிள்ளைகள், ஒரு பொண்ணு. பொண்ணும் மாப்பிள்ளையும் ஆத்தோடதான் இருக்கா. புள்ளைகள் ஆளுக்கு ஒரு இடம். பெரியவன் சுந்தரம் பெரிய கண்ட்ராக்டர். அடையாறிலே பெரிய பங்களா, அவன் பிள்ளை அமெரிக்காவுல இருக்கான். நல்ல சம்பளம். ரெண்டாவது புள்ளை ஆவடிலே பீரங்கியெல்லாம் பண்றாளே அதுல ஆபீசரா இருக்கான். அவனுக்கு ஒரு பெண். அவ கல்யாணம் ஆயி பம்பாயிலே இருக்கா. இவர் அக்கா ஒருத்தி, டெல்லில இருக்கா. அத்திம்பேர் பெரிய ஆபீசர்”,இ ப்படி அவர்கள் பெருமையை அவர் பறை சாற்றிக் கொண்டிருந்தார்.
“சரி நம்ம விஷயத்துக்கு வருவோம்” என்றார் ரெட்டை மண்டை. சாமிநாதன் என்னைப் பேசுமாறு கண்ஜாடை காண்பித்தான்.
” மாமா! உங்க சம்பந்தம் கிடைச்சது எங்களுக்கெல்லாம் ரொம்ப சந்தோஷம். நான் சாமினாதனோட நெருங்கிய சிநேகிதன். அவாத்துல எந்த விசேஷமும் என் பங்கு இல்லாம நடக்காது. பாருங்கோ! இந்த நிச்சயதார்த்தத்துக்கும் என்னை வந்து நடத்தும்படி கேட்டுண்டான். இவனும் சரி, இவாத்துல எல்லாரும் ரொம்ப நல்லவா சாது. பொண்ணைப் பத்திதான் உங்ககிட்டே எல்லாம் சொல்லியிருப்பா. தங்கமான பொண்ணு. அடக்கம், புத்திசாலி, நல்ல அழகு, குடும்பத்தை நன்னா அரவணைச்சுக் கொண்டு போவா” என்றேன்.
உடனே ரெட்டை மண்டை என்னைப் பார்த்து “அதெல்லாம் சரிதான் சுவாமி, பெண்ணுக்கு என்ன போடப்போறேள், எவ்வளவு நகை, என்னென்ன சாமான்கள் வாங்கித்தரப் போறேள், அதைச் சொல்லுங்கோ” என்றார்.
“அதெல்லாம் சாமிநாதன் உங்ககிட்டே பேசியிருப்பாரே” என்றேன்.
“அவர் பேசினார் சரிதான், சபையிலே நாலு பேர் முன்னாடி இன்ன இன்ன செய்யப்போறோம், கல்யாணம் இப்படியிப்படி செய்யப் போறோம்னு தெரிவிக்க வேண்டாமா. வெத்திலை பாக்கு மாத்திக்கறத்துக்கு முன்னாடி, இதையெல்லாம் நன்னா தெளிவா பேசிட வேண்டாமா? நீங்களே சொல்லுங்கோ. அவா செளகரியம் எப்படின்னு” என்றார்.
சாமிநாதன் என்னை சமிக்ஞை மூலம் சொல்லச் சொன்னதும் நான் சொன்னேன். “மாமா கேட்டபடிக்கு முப்பது பவுன் நகை போடறோம். ஐம்பதாயிரம் ரொக்கம், வெள்ளி, பித்தளை பாத்திரங்கள் முன்னாலயே ஒரு லிஸ்ட் கொடுத்தபடி செஞ்சுடறோம்” என நான் தொடங்கியவுடனே, ரெட்டை மண்டை மறுபடி குறுக்கிட்டு, “பொத்தாம் பொதுவா வெள்ளிப் பாத்திரம்னு சொன்னா எப்பிடி, தட்டு என்ன எடை, சொம்பு, கிண்ணம், பஞ்சபாத்திரம், பன்னீர் சொம்பு, சந்தனப் பேலா, இதெல்லாம் என்ன எடை அப்படின்னு சொல்ல வேண்டாமா? அதோட வரலக்ஷ்மி நோம்புக்கு சொம்பு, அம்பாள் முகம், வெள்ளில மாவிலை தேங்கா இதெல்லாம் பண்ணிடணும்னு சொன்னேனே, அவர் சொல்லலியா?” என்றார்.
“ஊம் ஊம், சொன்னார் சொன்னார். வரேன். ஒண்ணொண்ணாதானே சொல்லணும், மாமா ரொம்ப அவசரப்படறேளே” என்றேன்.
உடனே சம்பந்தித் தாத்தா குறுக்கிட்டு, “அண்ணாவைப் பாத்து அப்படியெல்லாம் பேசக்கூடாது. எங்காத்துல அவர் சொல்றதுதான் ஃபைனல். அவர் கேட்கற விவரங்களை இப்பவே டிஸ்கஸ் பண்ணிடறதுதான் நல்லது. சொல்லுங்கோ” என்றார்.
நான் சொன்னேன், “சார்! வெள்ளி தட்டு மட்டும் 900 கிராம் வாங்கிட்டோம். சொம்பும் 600 கிராம். மொத்தமா எல்லாம் அஞ்சு கிலோ. நகை முப்பது பவுனுக்கு என்னென்னன்னு லிஸ்ட் போட்டுத் தந்துடறோம். பித்தளைப் பாத்திரம், நம்ம சம்பிரதாயப்படி என்னென்ன வேணுமோ அதெல்லாம் வாங்கித்தந்துடறோம். பின்னால வரலக்ஷ்மி விரதம், பொங்கல், ஆடின்னு எல்லா சீரும் சரியா வந்துடும் சரியா?” என்றேன்.
உடனே ரெட்டை மண்டை, “வாட்டர் பியூரிவையர் ஒண்ணு வாங்கிடணும், இவாத்துல வெந்நீருக்கு கெய்ஸர் இல்லை. அது ஒண்ணு வேணும். மொதல்லேயே பேசினபடி ஹீரோ ஹோண்டா பைக் ஒண்ணு கல்யாணத்துக்கு முன்னாலயே வாங்கித் தந்துடணும்” என்றார்.
சாமிநாதன் ‘சரி சரி அதுதான் வாங்கிடறேன்னு முன்னமேயே சொல்லிட்டேனே” என்றான்.
‘உங்க பொண்ணு வேலைக்குப் போறதுல எங்களுக்கு ஒண்ணும் தடையில்லை. ஆனா குடும்பத்து வேலைகளை அனுசரிச்சு நடந்துக்கணும். , காலைல ஸ்நானம் பண்ணி, சந்தி, ஜபம் எல்லாம் முடிச்சு சாப்பிட வரத்துக்கு பத்து மணியாயிடும். நேவேத்தியம் ஆனபிறகுதான் யாரும் சாப்பிடமுடியும். அவளுக்கு வேலைக்குப் போறதுன்னா ஆத்துல சாப்பிட்டுட்டு போக முடியாது. வெளிலதான் சாப்பிட்டுக்கணும். நாங்கள்ளாம் ஓட்டல்ல சாப்பிடற வழக்கம் கிடையாது. அதனால சவுகரியம் எப்படின்னு பாத்துக்குங்கோங்கோ” என்றார் ரெட்டை மண்டை.
“சரி வேண்டாம்னா, அவ வேலைக்குப் போக வேணாம். அதெல்லாம் அவ அட்ஜஸ்ட் பண்ணிக்குவா. எங்க குடும்பம் பெரிசு. எல்லாரும் ஒருத்தொருக் கொருத்தர் விட்டுக்கொடுத்துப் போயிடுவா. அதிலேயும் எங்க பொண்ணு ரொம்ப அட்ஜஸ்டபிள். பார்த்துக்கலாம்” என்றார் சாமிநாதன்.
“கல்யாணத்தை இங்கேயே வச்சுக்கப் போறேளா, உங்க ஊர் கும்பகோணத்துலயா?” என்றார் ரெட்டை மண்டை.
“கும்பகோணம்தான் எங்களுக்குச் சவுகரியம். அங்கே எங்க மனுஷா எல்லாம் நிறைய இருக்கா. காய் கறி, இலை, வாழைப் பழம், தேங்காய் எல்லாம் எங்க நிலத்திலேயே விளையறது. இங்கே கோயம்பேட்டிலே வாங்கி கட்டுப்படியாகுமா?” என்றான் சாமிநாதன்.
“அப்படின்னா, ஒண்ணு செய்யுங்கோ. நாங்க ஒரு அறுபது, எழுபது பேர் வருவோம். எல்லாருக்கும் ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ்ல டிக்கட் புக் பண்ணிடுங்கோ, டூ அண்டு ஃப்ரோ” என்றது ரெட்டை மண்டை.
“அறுபது எழுபதா?” என்று சற்று யோசித்துவிட்டு சாமிநாதன், தயக்கத்தோடு “சரி, செஞ்சுடலாம்” என்றான்.
“அதுல பாருங்கோ, எங்களுக்கெல்லாம், காலைல கண் முழித்தா உடனே காப்பி குடிச்சாகணும். காப்பி ஆனவுடனே பசிக்கும். இட்லி பூரி சாப்பிடணும், அதனாலே, சிதம்பரம் இல்லைன்னா மாயவரம் ஸ்டேஷன்ல எங்களுக்கு டிபன் காப்பி சப்ளை பண்ண ஏற்பாடு பண்ணிடுங்கோ” என்றார் ரெட்டை மண்டை.
இது என்னடா இது, புது அதிர்வேட்டு. மாயவரத்துல டிபன் காபி அறுபது எழுபது பேருக்கு எப்பிடிக் கொடுக்கிறது. நான் ஜாடை காட்டி சாமிநாதனை வெளியில் அழைத்தேன். அவனும் வந்தான். “என்னடா இது, இவங்க போற போக்குல, ரயிலிலேயே கல்யாணத்தையும் முடிச்சுடும்மாங்க போல இருக்கே, விட்டா இவா ஊரையே தானமா கொடும்பா போல இருக்கே, நீயும் அவர் கேட்கறத்துக்கெல்லாம் தலையை ஆட்டிண்டு இருக்கே பிரம்மா மாடு போல. கொஞ்சம் கடிஞ்சு பேசுடா” என்றேன்.
சாமிநாதனுக்கு கண்களில் நீர் துளிர்த்தது. “என்னடா செய்யச் சொல்றே. பையன் தங்கமான பையன். ஒரு குறை சொல்ல முடியாது. இந்த ரெட்டை மண்டை உள்ளே புகுந்து ரொம்ப விளையாடறது. வா, சமாளிக்கலாம்” என்றான்.
மறுபடி உள்ளே போய் அவரது டிமாண்ட் எல்லாவற்றுக்கும் தலையை ஆட்டிவிட்டு தட்டை மாற்றிக்கொண்டு நிச்சயதார்த்தம் செய்து கொண்டோம். முகூர்த்தம் கும்பகோணத்தில் ஆவணி மாதத்தில் வைத்துக் கொள்வதாக ஏற்பாடு. அப்போது காவிரியில் தண்ணீரும் இருக்கும். மகாமகக் குளக் கரையில் மண்டபம். அங்கும் குளிக்கலாம். இதையெல்லாம் உத்தேசித்து திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
(தொடரும்)
மளிகைகடையில் நம் தேவைக்கு சாமான்கள் கேட்பது போல் ரெட்டைமண்டை லிஸ்ட் தருகிறார், இப்படியும் சில மனிதர்கள். தில் திவானா, பைத்தியங்கள்னா.