Category: போட்டிகளின் வெற்றியாளர்கள்

போட்டிகளின் வெற்றியாளர்கள்

  • படக்கவிதைப் போட்டி (14)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    10609031_716498245161097_1832540875_n

    71516183@N03_rதிருமிகு வனிலா பாலாஜி எடுத்த இந்தப் படத்திற்கு  [பட்டுக்கூடுகளிலிருந்து நூல் பிரித்தெடுக்கப்படுகிறது] ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (30.05.2015) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர், தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர் திருமதி மேகலா தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.

    புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்த மேகலா இராமமூர்த்தி கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்றவர். அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009 ம் ஆண்டுகளில் (ஆர்லாண்டோ & அட்லாண்டா) கவியரங்கம், இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். புறநானூறு, குறுந்தொகைப் பாடல்களில் அதிக நாட்டமும், இலக்கியக் கூட்டங்களில் சுவைபட பேசுவதிலும் வல்லமை பெற்றவர். இவருடையவலைப்பூ – மணிமிடைபவளம்

    Share
  • படக்கவிதைப் போட்டி 12-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்கான ஒளிப்படத்தைத் தந்திருக்கும் திரு. பிரேம்குமார் சச்சிதானந்தம், இப்படத்தைத் தேர்வுசெய்திருக்கும் திருமிகு. சாந்தி மாரியப்பன் இருவருக்கும் வல்லமையின் நன்றி.

     man

    பச்சைப்பசேல் என்ற வயல்வெளி, அருகே மாற்றுத் திறனுடைய பெரியவர் ஒருவர், அவரின் இருபுறமும் இளைய பாரதத்தினர் இருவர், இம்மக்களின் உள்ளம்போல் உயரப் பறக்கும் பலூன்கள் என்று பலவகை வண்ணக்கலவையோடு கூடிய இப்புகைப்படம் நம் உள்ளத்தில் பல்வேறு சிந்தனைகளை எழுப்பவே செய்கின்றது.

    அதோ… அந்தப் பெரியவரின் முகத்தைப் பாருங்கள்! அதில் ஏதோவோர் உறுதி பளிச்சிடுவதைக் காணமுடிகின்றது. அவர் முகத்தின் உறுதி அகத்திலும் இல்லாமலா போய்விடும்?

    ஐயா!

    உடலின் ஊனம் தனைக்கண்டு
    உள்ளம் தளரா மனங்கொண்டு
    திடமாய் உழைத்தால் உயர்வுண்டு
    தடைகள் கடக்க வழியுண்டு
    மாற்றுத் திறனை உடையவரே
    முயன்றால் ஒருநாள் இவ்வுலகை
    மாற்றும் திறனும் நீர்பெறுவீர்
    மாநிலம் போற்றும் நிலைபெறுவீர்

    என்று அவருள் நம்பிக்கை விதைகளை நாமும் தூவுவோம்!

     இனி, படக்கவிதைப் போட்டிக்கு வந்திருக்கும் கவிதைகளில் கருத்தாழமுள்ளவற்றை முதலில் காண்போம்!

    ***

    பலூனே உயரப் பறக்கும்போது அதனினும் பலமுள்ள மனிதன் துவளலாமா? எனப் பொருத்தமாய்க் கேள்வி எழுப்பும் திரு. கனவு திறவோனின் வரிகள்…

    காற்றடைத்த பலூனே
    உயரப் பறக்கும் போது
    உயிரடைத்த
    உடம்பு
    விழுந்தா விடும்
    மண்ணில்?
    எழுந்து நிற்க
    கால்கள் வேண்டாம்
    தூக்கி நிறுத்த
    துணைகள் வேண்டாம்
    இதயம் போதும்!
    மிரள வேண்டாம் நண்பா
    என் கவிதைக்குள் உன்னைக்
    காட்சியாக்கி
    ஊருக்குள் உன் உரத்தை
    உரக்கச் சொல்வேன்…
    துணிந்து வா நண்பா!

    ***

    ’காலம் எங்கே போய்விடும்; அது என்னையும் வாழ வைத்திடும்’ என்ற மாற்றுத் திறனாளியின் மனோதிடத்தைக் காட்டும் திரு. ரா. பார்த்தசாரதியின் வரிகள்…

    என்னைப் போன்ற மாற்று திறனாளிக்கு  மனதில் பலமுண்டு 
    வாழ்க்கையில்  முன்னேற  எனக்கு என்றும் திறனுண்டு 
    வாழ்க்கையில் ஏமாற்ற பலரும், சிலரே உதவி செய்வதுண்டு 
    எங்கே சென்றிடும் காலம்! அது  என்னையும்  வாழவைக்கும் !

    ***

    ”ஊனம் உடலிலிருந்தால் என்ன? உண்மையாக உழைத்து உயர்பவர்கள் நாங்கள்!” என்று வீரமுழக்கமிடும் பெரியவரின் பெற்றியைப் போற்றும் திருமிகு. ஸ்ரேயாரேவதியின் வரிகள்…

    பச்சை பசுமைகளில் பேரப்பிள்ளைகள் !
    ஊனமாக இருந்தாலும் உண்மையாக உழைத்திடுவோம் !
    இன்பமாக வாழ்ந்திடவே விற்றிடுவோம் வண்ண பலூன்கள் !
    ஒற்றுமையாய் இருந்தால்தான் கோடிநன்மை அடைந்திடலாம்!
    அறிந்திடுங்கள் மானிடரே! நான் சொல்வதை கொஞ்சம் கேளுங்களே!

    ***

    ’நெஞ்சில் உரமும் நேர்மைத் திறமுமிருக்க, ஊனமொரு தடையில்லை’ என்று கம்பீரமாய் முறுவலிக்கும் மாமனிதனைக் கவிதையில் காட்டியிருக்கும் திரு. ரோஷான் ஏ. ஜிப்ரியின் வரிகள்…

    வானவெளி பெருத்த ஒன்று
    உணர்ச்சிக்கு தோணவில்லை
    ஊனமிது வருத்தமென்று
    பலூன் விற்றோ,வடை விற்றோ
    வாழ விழியிருக்கு
    கங்கில் தெறித்த களம்மீண்ட எந்தனது
    நெஞ்சில் உரமிருக்கு நீ எதற்கு கலங்குகிறாய்…
    […]

    மூங்கில் பிடிக்குள்
    முறுவலிப்பாய் இருக்கின்றேன்
    தேங்கி அடங்கிடாமல்
    தேடலுக்காய் நடக்கின்றேன்

    ***

    மாலையிலே தான்கொண்ட போதைமயக்கம் தன்வாழ்க்கைப் பாதையையே மாற்றிப் பரிதவிக்கவிட்டதை வேதனையோடு நினைவுகூரும் பெரியவரைப் பாட்டில் காட்டியிருக்கும் திரு. கட்டாரியின் வரிகள்…

    மசண்டப் பொழுது சாய – போதயில
    மல்லாக்க நானுஞ் சாய…
    என்னப்போல ஏத்திவந்த – ஒரு
    எளந்தாரி லாரிக்காரன்..
    காங்கிரீட்டு பாலத்தோட
    கழட்டிப் போனாங் எங்கால…..
    ஊனக்கால மூணுகாலா
    உத்தவுக பழிச்சிப் பாட..
    காரச்செவரு..சாணித்திண்ண
    கழனி தோட்டம் எல்லாம் போக..
    கப்பிரோடுக் கால்நடையா
    கருவேலஞ் செடி தெளிநெழலு….
    நாந்திணிச்ச நாறக்காத்து– எந்
    நாஞ்சிவிட்ட மூச்சுக்காத்து
    ரப்பரு மூட்டைக்குள்ள ரம்மியமா
    சிரிச்சியாட….
    நாம்பெத்த புள்ள ரெண்டும்
    நடுவீதி வந்திருச்சே…..

    ***

    ’நிலையில்லா வாழ்க்கையிலே மனிதருக்குள் பேதமும் வெறுப்பும் எதற்கு? ஆருயிர்க்கெலாம் அன்புசெயலன்றி மனித வாழ்வின் பயனேது?’ என்ற உயர்தத்துவங்களை உதிர்க்கும் காயம்பட்ட மனமொன்றைக் கண்முன்னே நிறுத்தும் திருமிகு. துஷ்யந்தியின் வரிகள்…

    குழந்தைக்கு இருக்கும்
    கள்ளமில்லா அன்பு உள்ளம்
    படித்தவர்க்கு பாரிலே
    இல்லாது போனதேன்..???

    உதறிவிட்ட உறவுகளால் நான்
    தெருவோரம் நின்றாலும்
    அன்பு காட்ட மறுக்கவில்லை
    மாசில்லா மழலைகள்…!

    வாழுகின்ற காலத்தில்
    பிறர் வாழ்விற்கு வாசனை
    சேர்க்க முடியாவிடினும்,
    பிறர் வாழ்வின் வாசனையை
    போக்காது காப்போமே…!

    “மண்ணிலே பிறந்ததெல்லாம்
    மண்ணுக்கே சொந்தமாம்”
    இதையுணர்ந்து ,
    வாழும் சில நொடிகளை
    மகிழ்வுடன் வாழ்வோமே.!!!

    ***

    கற்சிலைக் கடவுளரின் இரும்பு உண்டியலை நிரப்பும் மக்கள், பேசும் நற்சிலைகளாய் வீதியில் நிற்கும் ஏழைமாந்தர்க்கு உண்டி கொடுத்து அவர்தம் வயிற்றை நிரப்புவதில்லை! கடவுளரும் இக்கொடுமையைக் கண்ணெடுத்துப் பார்ப்பதில்லை! எனும் கசப்பான உண்மையைக் கவினுற விளம்பும் திருமிகு. ஜெயஸ்ரீ ஷங்கரின் வரிகள்…

    திருவிழாக் கோயிலில்
    காற்றுப்பலூன் விற்க
    வந்தோம் வயிற்றுப்பசி
    மட்டுமே ஜெயிக்க
    நிற்கிறோம் கால்கடுக்க..!
    உச்சி வெய்யிலிலே
    வாடிப்போகுது பிஞ்சுமனம்
    நெஞ்சில் ஈரம்
    இருப்பவர் வாங்குங்க
    அண்ணாச்சி ஒண்ணாச்சும் …!

    கோயிலுக்குள் கூட்டம்
    பக்திக்குக் குறைவில்லை
    இரும்பு உண்டியல்
    நிறைந்தாலும் நிறையும்
    ஏழைகள் வயிறு
    ஒருநாளும் நிறையாதே
    பக்தர்கள் கண்களில்
    சிலைக்கு மட்டுமே இடம்
    சிலையாக நிற்கும்
    எங்கள் பக்கமும்
    திரும்பட்டுமே மனம்..!
    முடிந்தால் கல்லுச்சாமி
    நீ எங்கிருக்கே
    எங்களுக்கும் காமி…!

    ***

    ’ஊன்றுகோல் இல்லை ஐயா…இது எனது மூன்றாம் கால்! விரிந்த மனத்தின் வெளிச்சத்தைக் காட்டவே இப்புகைப்படம்; என் ஊனத்தைப் பறைசாற்ற அன்று!” என்று மிடுக்காய்ப் பேசும்  மானுடனைப் போற்றும் திரு. மெய்யன் நடராஜின் வரிகள்…

    ஊன்றுகோல் என்றே உவமானம் சொல்லாதீர்
    மூன்றுகால் என்றே முடிவெடுங்கள் –தோன்றும்
    நிலைபார்க்கும் நீங்கள் நினைக்கும் வகைஎன்
    அலையில்லை வாழ்க்கை அமிழ்து 

    பேரக் குழந்தைகள் பேருதவி யால்நெஞ்சு
    ஈர வயலாய் எழில்பூத்து – சாரல்
    மழைபோல் மனம்நனைக்கும் மட்டில்லா அன்பால்
    தழைத்திருக்கும் வாழ்க்கை வயல்.
    […]
    வகையற்று வாடும் வரலாற்று சோக 
    புகைப்பட மல்ல இதுவே –முகைபோல் 
    விரிந்த மனசின் வெளிச்சத்தைக் காட்ட 
    தெரிந்த உணர்வின் திறம்.

    ***

    ’மன ஊனம் கொளலே தீது! உடல் ஊனம் முன்னேற்றத்திற்கென்றும் தடையாயிருந்திடாது!’ எனும் உற்சாகச் செய்தியை வரலாற்றுச் சாதனையாளர்கள் வாயிலாய் அறியத்தரும் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரனின் வரிகள்…

    மன ஊனத்தைவிட
    உடல் ஊனம்பெரிதல்ல
    […]
    பீதோவன்செவிடாகிருந்த
    நிலையில்தான் 
    சாகாவரம் பெற்ற ராகங்களை
    உருவாக்கினார்
    கவிஞர் மில்டன்
    பார்வையற்ற நிலையில்தான்
    சொர்க்கம் இழக்கப்படல் 
    என்கின்றகாவியம் எழுதினார்
    ஜூலியஸ்சீசர்
    காக்கா வலிப்பு  நோய்
    இருந்தபோதும் மாவீரனாய்
    திகழ்ந்தார்
    இவர்கள்யாரும் யாரிடமும்
    அனுதாபத்தை
    எதிர்பார்க்கவில்லை
    […]
    இதோஇந்த மனிதனும் அப்படியே
    தன் மகன்களின்
    சந்தோஷத்தில் மகிழ்ச்சி கொள்ளும்
    மன உறுதி கொள்கின்றார்

    ***

    உழைப்பின் உயர்வைக் கண்டுமகிழ்ந்து காற்றாடியாய்க் காற்றில் பறக்கும் நெஞ்சத்தை நேயமுடன் விவரிக்கும் திருமிகு. புனிதா கணேசனின் வரிகள்…

    போரின் வக்கிரங்கள் கொண்டு போயின
    வீரியமிக்க காளையின் காலையும் தான்!
    ஊன்று கோல்கள் ஆகிய மூங்கில்
    ஈன்றது அவன் தைரியத்தை மீண்டும்!
    […]
    உழைத்த கரங்கள் மண்ணில் மீண்டும்
    விதைத்த முளைகள் பயிர் கொண்டு பசுமை!
    பசுமை வயலில் மட்டுமா விளைந்தது
    தேசுடன் அவன் மனதிலும் தான்!
    பாசமாய் அவன் பெற்ற செல்வங்கள்
    மாசிலா அன்புடன் ஊன்றுகோல்களாய் அவனைச் சூழ்ந்திட
    லேசாகிக் கரைந்து மறைந்தன அவன் மனதின் ஊனங்கள்!
    […]
    நீலவானில் நீந்தும் காற்றாடி ஆன அவன் இதயம்!
    சீலமாய் உரைத்தது பகிரங்கமாக …ஒரு பழமொழி
    “
    முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்” என்றே
    பச்சை
    வயல்களும் நீலவானமும் சாட்சியமாக…

    ***

    அருமையான கவிதைகளைப் படைத்தளித்திருக்கும் கவிஞர்கள் அனைவரையும் பாராட்டி மகிழ்கின்றேன்!

    அடுத்து, இவ்வாரத்தின் சிறந்த கவிஞரைச் சந்தித்துவருவோம் வாருங்கள்!

    காலில்லை என்று சோர்ந்துபோகாமல், கோலின் துணையோடு, தாளை(உழைப்பு) நம்பிப் புறப்படும் பெரியவரின் மனத்தில் ஊடாடும் ஆசைகளை இயல்பாய்க் கொணர்ந்திருக்கும் கவிதையொன்றைக் கண்ணுற்றேன்.

    அக்கவிதை…

    ஒற்றைக்கால் இல்லையென
    ஒருநாளும் சோர்ந்ததில்லை
    அற்றைக்கிரை தேடுதற்கு
    அதிகாலைக் கிளம்பிவிட்டேன் !

    பெற்றமகன் துணையிருக்க
    பெருமகிழ்வு கூடிடுதே
    விற்றிடுவேன் பலூனூதி
    விரட்டிடுவேன் வறுமைதனை !

    உற்றதுணை யாயெனக்கு
    உதவுமிரு ஊன்றுகோலே
    பற்றற்ற வாழ்க்கையிதே
    பழக்கமாக ஆயிற்றே !

    கற்காத காரணத்தால்
    கவலையென்னை வாட்டுவதால்
    கற்பிப்பேன் பிள்ளைக்கு
    கடமையது எந்தனுக்கு !

    குற்றுயிராய்க் கிடந்தாலும்
    குனிவுவர விடமாட்டேன்
    நற்பேரும் நானெடுப்பேன்
    நன்மைகளும் செய்திடுவேன் !

    சுற்றியுள்ள பசும்வயலும்
    சுவர்க்கம்தான் எங்களுக்கு
    வற்றாத வரமாக
    வசமாகும் வானமுமே ….!!

    இக்கவிதையின் ஆசிரியர் திருமிகு. சியாமளா ராஜசேகரை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்க் குறிப்பிட விரும்புகின்றேன்.

    ***

    ’சிறிய சுருக்கத்து வேண்டும் உயர்வு’ என்பார் வள்ளுவப் பேராசான். ஆம்! வாழ்வில் துயரமும், துன்பமும் வரிசைகட்டி நிற்கும்போதுதான் அயராத நெஞ்சுரம் வேண்டும்; அதுவே துன்பத்தைத் தூர்த்தெறியும் கோடரி. அவ்வகையில், பிறரின் அனுதாபம் வேண்டாத, வீரவுணர்ச்சிமிக்க மாற்றுத் திறனாளியைத் தன் கவிதையெனும் உளிகொண்டு சிறப்பாய்ச் செதுக்கியிருக்கும் திரு. ருத்ரா. இ. பரமசிவனை இவ்வாரத்தின் பாராட்டுக்குரிய கவிஞராய் அறிவிக்கின்றேன்.

    மூங்கில் எலும்புகள்
    முட்டு கொடுத்தது
    இந்த உலகத்தின் 
    மொத்த கனத்தையும்
    துணிக்கட்டு

    துணிச்சலில் நெய்த துணியில்.
    இன்னும்
    கனவு பாக்கியிருக்கிறது
    […]
    சொர்க்கத்தையும்
    கடவுள்களையும்
    அதோ பார்க்கிறேன்
    வண்ண வண்ணப் பலூன்களாய்.
    எங்களைக்கொல்ல‌
    உங்களுக்கு துப்பாக்கி குண்டுகள்
    தேவையில்லை.
    “
    த்சோ த்சோ”…போதும்
    அந்த காலின் மிச்சத்தையா தேடுகிறீர்கள்.
    அதை நான் 
    அவன் சற்று வலியில் ஓய்ந்தால் 
    எடுத்துக்கொள்ளட்டுமே
    என்று இரவல் கொடுத்திருக்கிறேன்
    ஒலிம்பிக் வீரன்
    “
    பீலே”வுக்கு.

    ***

    ஊக்கத்தோடு ஆக்கங்களைத் தொடர்ந்து படைத்தளித்துவரும் அனைத்துக் கவிஞர்களுக்கும் என் நன்றி!

     

    Share
  • படக்கவிதைப் போட்டி (12)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    11215903_831189076935293_1668258411_n

     


    15574_10153246722319882_8836679936821475370_nதிரு. பிரேம்குமார் சச்சிதானந்தம்
    எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (16.05.2015) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர், தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர் திருமதி மேகலா தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.

    புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்த மேகலா இராமமூர்த்தி கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்றவர். அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009 ம் ஆண்டுகளில் (ஆர்லாண்டோ & அட்லாண்டா) கவியரங்கம், இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். புறநானூறு, குறுந்தொகைப் பாடல்களில் அதிக நாட்டமும், இலக்கியக் கூட்டங்களில் சுவைபட பேசுவதிலும் வல்லமை பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

    Share
  • படக்கவிதைப் போட்டி 11-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    இந்த அழகிய புகைப்படத்தை எடுத்துத்தந்துள்ள திரு. கோகுல்நாத், இதனைப் போட்டிக்கான படமாகத் தெரிவுசெய்துதந்த வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமிகு. சாந்தி மாரியப்பன் இருவருக்கும் வல்லமை மின்னிதழின் நன்றி.

    11212317_828493147204886_734930307_n

    அலையாடும் கடற்கரையில் அலைபேசியோடு உரையாடிக்கொண்டிருக்கும் இந்த ஆடவனுக்காக அருகிருக்கும் ஆரணங்கு ஆசையாய்க் கட்டியிருக்கும் இந்த மணற்கோட்டையைப் பார்க்கும்போது இவள் மனக்கோட்டையின் சாமி இவன் தான்போலும் என்ற எண்ணம் நம்முள்ளும் எழுகின்றது.

    நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
    நீரினும்
    ஆரள வின்றே சாரற்
    கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
    பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே.
    (குறுந்: 3)

    என்று தலைவனோடு தான்கொண்ட நட்பின் அகலத்தை, ஆழத்தை, உயரத்தை உரைத்தாள் அன்றைய குறுந்தொகைக் காதலி. இன்றைய குறுஞ்செய்தி(கால)க் காதலியோ தன் எண்ணங்களைக் கடலோரத்தில் அழகுற மணற்கவிதையாய்ப் படைத்திருக்கின்றாள்.

    எந்தப் படத்தைத் தந்தாலும் துள்ளிக்கொண்டு கவிதை எழுதும் வல்லமை பெற்ற நம் கவிஞர்குழாம் ஓர் அருமையான காதற்களத்தை விட்டுவிடுவரா என்ன? புகுந்துவிளையாடியிருக்கிறார்கள் இம்முறையும்!

    என்னைக் கவர்ந்த கவிதைவரிகள் முதலில்…

    இருவேறு சிற்பங்களாய் மாறிய பெற்றோரின் கதையுரைக்கும் திரு. கவிஜியின் வரிகள்…

    …குழந்தையின் 
    கனவில் வந்து கொண்டிருப்பது
    நேற்று மாலை -அது 
    தெரியாமல் 
    அழித்து விட்ட 
    மண் சிற்பத்தின் அழுகையாகக் கூட 
    இருக்கலாம்…
    எதுவும் பிடிபடாத 
    யோசனையில் 
    நாங்கள் சிற்பமாகவும்
    முடியாமல்… 
    சிணுங்கிடவும் முடியாமல் 
    இரண்டு பக்கமும்
    அமர்ந்து கிடக்கிறோம்
    ஒரே  மாதிரியான 
    இரு வேறு
    சிற்பமாக…

    *****

    கண்மணியின் கவலை போக்க இணையத்தில் வழிதேடும் காதலனைக் கவினுறக்காட்டும் திருமிகு. கீதா மதிவாணனின் வரிகள்…

    அலையாடிய அழகுப்பாதங்கள்
    அலுத்தோய்ந்து கிடக்க…
    மணலளைந்த மலர்க்கரங்கள்
    கன்றிச் சிவந்திருக்க… 
    கனவு இல்லமொன்றை கடற்கரையில் 
    கட்டுகிறாள் என் காதல் கண்மணி!
    […]
    கவலை வேண்டாமடி கண்மணி!
    உன் கனவை நனவாக்கும் வழிகளைத்தான்
    இணையத்தில் தேடிக்கொண்டிருக்கிறேன் இப்போது!

    *****

    ”கலைமகளிவள் கட்டிய மணற்கோட்டை இவள் மனக்கோட்டைதானோ? என்ற காதலனின் வினாவைக் கவிதையாக்கியிருக்கும் திரு. ரா. பார்த்தசாரதியின் வரிகள்…

    கல்லிலே கலைவண்ணம் கண்டவனின் மகள்
    மணலிலே கோட்டை கட்டி பெருமிதம் அடைந்தாள் 
    அவள் காதலனோ வாழ்வில் கோட்டை கட்ட நினைக்கின்றான் 
    […]
    முனைப்போடு நீ கட்டிய மணற்கோட்டை 
    என்னை நினைத்து கட்டிய மனகோட்டையா ! மணற்கோட்டையா !

     *****

    கதிரொளி தெளிக்க, மெல்லிய தென்றல் தீண்டக் காதலியிவள் தன்னன்புக் காதலனுக்காய்க் கட்டிய மண்மாளிகையை நமக்கும் காட்டுகின்ற திருமிகு. ரேவதிஸ்ரேயாவின் வரிகள்…

    ஒரு பெண் தன் காதலனுக்காக கட்டிய ஓவியம் !
    கார்மேகம் சூழ !சூரியஒளி தெளிக்க !மெல்லிய தென்றல் தீண்ட !அலை கடல் ஓசை இசைக்க !உனக்கென ஆசையோடு இந்த மண்மாளிகை உனக்கு பரிசாக தர கட்டியுள்ளேன் கொஞ்சம் திரும்பிப் பாரடா !

    *****

    சின்னச் சின்னக் கோட்டைகட்டிச் சிங்காரமாய் வாழ வழிசொல்லும் பெண்ணைக் கண்முன் நிறுத்தும் திருமிகு. லட்சுமியின் வரிகள்…

    சின்னச் சின்ன கோட்டை கட்டி
    சிங்காரமாய் வாழ்ந்திடுவோம்!
    சிறிய செல்லிடப்பேசியிலே
    சின்னதாகப் படம் பிடிப்பாய்!
    சின்னப் பெட்டி அல்ல உன் உறவு!
    […]
    வண்ண வண்ண வானவில்லாய்
    வானம் எட்டும் ஆசைகளால்
    இல்லறம் கசந்திட வழிவகுக்கும்
    ஈந்து மகிழ்ந்து சிறப்புடனே
    இருப்பதைக் கொண்டு வாழ்ந்திட்டால்
    ஈசனும் நமக்குத் துணையாவான்

    *****

    ”கணினித் தொழில்நுட்பத்தில் தன்னைத் தொலைத்த காதலன், காதல் தொழில்நுட்பத்தை முற்றும் மறந்தானோ…?” என்று குமுறும் கோதையின் வேதனையை வெளிப்படுத்தும் திருமிகு. ஜெயஸ்ரீஷங்கரின் வரிகள்…

    …இன்றோ பௌர்ணமி…இருந்தும் ஏனோ
    அமாவாசையாய் நீ முகம் கவிழ்த்து
    ‘அன்ராயிட்’டுக்குள் உன்னை அடமானம்
    வைத்துக் கொண்டாய்…!
    உன்னோடு வாய் ஓயாமல் பேசுபவள்
    உனது ‘ஸ்மார்ட்’ கைபேசி..!
    உன்னையே நேசித்து தோற்றுப் போனேனா
    இந்த வாய்பேசி..?
    உனதழகு ‘வொய்ஃபை’ ஓரந்தள்ளி
    அழ வைப்பவள் அந்த ‘ஆப்பிள்’ அழகி…
    அவளே எனக்கு ‘வைஃபை’ அரக்கி..!
    நீ ‘வாட்ஸ் அப்’பில் உறைந்து கிடக்கும்
    வேளையில் நானும் ‘வாட்ஸ் நெக்ஸ்ட்’
    என்று கேட்காமல் உறங்கிக் கிடப்பேன்…!

    *****

    நிஜவுலகின் நிலைதன்னை யதார்த்தமாய் எடுத்தியம்பும் திரு. ஜெயபாரதனின் வரிகள்…

    ஒருபுறம்
    ஆக்கவினை புரிந்து
    கலைத்துவ
    ஆலயம் கட்டுவாள்
    கன்னி ஒருத்தி !
    எதிர்ப்புறம் 
    எதற்கு அதுவென வெறுத்து
    எதிர்ப்பான்
    காளை ஒருவன் !
    இருவர்
    போராட்டத்திற்கும்
    இடையே
    அழிக்கப் பயமுறுத்தும்
    அடுத்தடுத்து
    ஆழிப்
    பேரலைகள் ! 

    *****

    குறும்பாக்களில், மனிதர்களின் உள்ளக் குறிப்புகளைக் குறும்பாக உலகுக்குணர்த்தும் திரு. ருத்ரா. இ. பரமசிவனின் வரிகள்…

    கனவுகளை பிசைந்தனர்.
    கையில் வந்ததோ
    கடலின் சதை.
    …
    அகங்களில் அணைத்திருக்க‌
    முகங்களில் பட்டிமன்றம்.
    மண முறிவா? மண மகிழ்வா?
    …
    பிரம்மன் தோற்றான்.
    மனிதன் வென்றான்.
    உளி இங்கே உள்ளம் அல்லவா.

    *****

    ”தன்னுடைய பிறந்தநாள், ஊடலின் பிறந்தநாளாய் மாறிப்போனதில் மங்கைக்கு வருத்தம்தான்! காதலன் ஊடல்தீர்க்கக் கோட்டை கட்டுகிறாள் மணலில்!” என அழகிய கதைசொல்லும் திரு. பழனிச்சாமியின் வரிகள்…

    அலைகடலின் ஓரத்தில்
    அந்திசாயும் நேரத்தில் 
    சந்திக்க வந்தவனோ
    சற்றேதான் தூரத்தில்
    மற்றொரு நாளென்றால்

    மன்னிப்புத் தந்திடுவாள்
    இன்றைக்குப் பிறந்தநாள்
    இயற்கையின் பேரழகில்
    மயங்கியே  ரசித்திடஓர்

    மந்திரம் சொன்னவளை
    சந்தித்த வேளையிலா
    சச்சரவு எழவேண்டும் 
    […]
    தவிக்கின்ற பெண்ணைவிட்டு
    தனியேதான் இருக்கின்றான்
    இனிமையான பொழுதுதான்
    இம்சையைத் தருகிறது

    *****

    ”மழைவருமுன்னே இம்மண்சிற்பத்தைப் படமெடுத்துவிடு மன்னவா! அசலழிந்தாலும் நகலிருக்கும் அலைபேசியில் என்றும்!” எனும் காதலியின் கோரிக்கையைக் கூறும் திருமிகு. சியாமளா ராஜசேகரின் வரிகள்…

    அடிவானம் கருத்திருச்சு
    அடைமழைக்கும் வாய்ப்பிருக்கு 
    அலைகளெல்லாம் ஆர்ப்பரித்து 
    அருகினிலே வருகிறது
    அச்சமென்னுள்  தோன்றிடுது 
    அழிந்திடுமோ சிற்பமென ….!
    அதற்குள்நீ சீக்கிரமாய்  

    அலைபேசிக் காமராவில் 
    அடுக்கடுக்காய்ப் படம்பிடிப்பாய்  
    அசலழிந்து போனாலும் 
    அற்புதமாய்ப்  பதிந்தநகல் 
    அழியாது ஆயுளுக்கும் …!!

    *****

    காதல் தலைவனின் புறக்கணிப்பைத் தாளமாட்டாத தலைவியின் மனப்போராட்டத்தை விளக்கியிருக்கும் திரு. செல்வக்குமார் சங்கரநாராயணனின் வரிகள்…

    விளையாட்டாய் நினைத்து நீ 
    வேடிக்கை பார்ப்பதற்குமோ 
    தகுதியை இழந்திருக்கிறது 
    உனக்கான என் கனவு மாளிகை
    அலையது கூட இதைக் காக்க

    முன்னேற்றவில்லை அன்பே! 
    […]
    எவ்வளவு விசித்திரம் அன்பே இந்தக் காதல் 
    எனக்கான நீ உனக்கான யாரையோ 
    தேடுவதை 
    என் கண் முன்னே காட்டிக் கரைய வைக்கிறதே!

    *****

    அற்ப ஆசைகளை விடுத்து அன்பினில் ஒன்றாய் இணைய ஆசைக்காதலனை அழைக்கும் ஆயிழையை அறியத்தரும் திரு. செண்பக ஜெகதீசனின் வரிகள்…

    சிற்பம் அழகாய் மணலினிலே
         செய்தவள் உள்ளம் பாராமல்,
    கற்பனை உலகில் சஞ்சரிக்கும்
         கணவன் மனமும் மாறாதோ…
    அற்பமாம் ஆசைகள் புறந்தள்ளி
         அன்பிலே ஒன்றாய் இணைந்தாலே,
    கற்பனை மிஞ்சிய நல்வாழ்வு
         கனிந்திடும் இனிய இல்லறத்திலே…!

    *****

    அலைபேசியில் மூழ்கி, ஆசையாய் மனைவி வடித்த கலைவண்ணத்தைக் காணமறந்த கணவனின் நிலைக்காகக் கவலும் திருமிகு. தமிழ்முகிலின் வரிகள்…

    நீண்ட நெடிய தொலைபேசி உரையாடல் முடிந்து
    மெல்ல தலை திருப்பி பார்க்கும் கணவனுக்கு
    மனைவியின் கைவண்ணத்தில் மண் கோட்டை
    காதல் கோட்டையாய் காட்சி தருமா ? – அல்லது
    கவனக் குறைவாய் கைபட்டு – எழிலாய் எழுந்திருக்கும்
    ஆசைக் கோட்டையும் சரிந்து விட – அதை
    அறியக்கூட முடியாத அளவுக்கு
    பணிகளும் சுமைகளும் அவனையே
    ஆக்கிரமித்து விடுமா ?

     *****

    ”கணவனின் துணையோடு தான் வாழவிருக்கும் இல்லத்திற்கான மாதிரி வடிவமே இது!” எனும் முன்னுரையோடு மங்கையொருத்தி தன் ஆசைகளைப் பட்டியலிடுவதைப் பகரும் திரு. அமீரின் வரிகள்…

    மணல்கொண்டு
    மனக்கோட்டை கட்டவில்லை சுந்தரா
    உன் துணைகொண்டுவாழ
    மாதிரி கோட்டை கட்டுகிறேன் நமக்காக!
    […]
    வடக்கு பார்த்த வாசல்
    மேற்கில்  பரந்த தோட்டம்!
    வடக்கு பக்கம் நீர்நிலை
    தெற்கு பக்கம் பெட்டக அறை!
    […]
    ஐந்தடியில் தலைவாசல்
    பூவேலை கதவினில்!
    பொன்வண்ண வெளிப்பூச்சு
    இளவண்ண உட்பூச்சு!
    திரைசீலை தொங்கவிட்டு
    அழகாய் அதை மடித்துகட்டி!
    என்னிரண்டு அறைகளோடு
    மிளிரவேண்டும் நவீனகலை!

    *****

    ”வாரநாட்கள் முழுவதும் அலுவலகத்திலேயே உழலும் இவர்களுக்கான ஒரே பொழுதுபோக்கு இந்தக்கடற்கரையும், மணல் விளையாட்டும்தான்! இவர்களைத் தொந்தரவு செய்யாதீர்கள்!” என்று அன்புக் கட்டளையிடும் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரனின் வரிகள்…

    சின்ன வயசு சந்தோஷத்தை
    சிறைபடுத்தி மண்ணிலே
    கலையுணர்வு  காண
    […]
    தங்களை தாங்களே
    புதுப்பித்துக்கொண்டிருந்தார்கள்
    அடுத்த  நாள்  விடியலுக்காக
    பாவம் அவர்கள்
    வேலைப்பளுவில்
    இந்த சின்ன சந்தோஷத்திற்காக
    கடற்கரை  மணலில்  ஹாயாக!
    யாரும் டிஸ்டர்ப் செய்யாதீர்கள்

    *****

    ”புவியிலே நான் மணல்மாளிகை கட்டுகிறேன், நீ அப்புறம் திரும்பி (அலைபேசியில்) ஓர் கவிமாளிகை கட்டேன்!” என்று காதலனுக்கு யோசனை சொல்லும் காதலியைக் காண்பிக்கும் திருமிகு. வேதா. இலங்காதிலகத்தின் வரிகள்…

    வார்த்து முடியும் வரை
    பார்க்காது இந்தப் புறம்
    சேர்த்திடு காதல் வரிகள்.
    காதல் பித்தம் ஏறியும்
    கலைப் பித்து முற்றிட
    காவற்காரனாய் நீ மாற
    ஆவல் தீர்க்கிறேன் நான்.

    *****

    தன் காதல் பொய்யாய்ப் பழங்கதையாய்ப் போய்விடுமோ? என்று அஞ்சிக் கண்ணீர்சிந்தும் காரிகையின் அவலத்தை, எண்ணத் தூரிகைகொண்டு தீட்டியிருக்கும் திரு. கொ. வை. அரங்கநாதனின் வரிகள்…

    அன்று
    கடலோரம் நீ
    காதலால் கட்டிய கோட்டை
    மணல் கோட்டையாகுமென
    மனதாலும் நினைக்கவில்லை
    உச்சி சிலை

    உயிர் காக்கும்
    சாமி என்றாய்
    மீசை இரண்டும்

    நம் ஆசை காக்க
    ஆண்டவன் இட்ட
    வேலி என்றாய்
    […]
    உன் சிரித்த முகத்தையும்
    சிந்திய சொற்களையும்
    கைபேசியில் அடைத்து வைத்து
    கண்ணீரில் வார்த்தெடுத்து
    தினமும்
    கனவுகளில் கரைகிறேன்

    *****

    ”கடற்கரைக் காதற்படகிற்கு எவரோ துடுப்பு?” என்று வினாத்தொடுக்கும் திரு. மெய்யன் நடராஜின் வரிகள்…

    வெளிச்சத்தில் நின்று இருளுக்குள் செல்ல 
    உளியற்ற எண்ணம் செதுக்கும் –களிப்பற்ற 
    பாதை கடக்கும்  பயணமன்றோ காதலெனும்  
    போதை சரிக்கும் புயல்.

    அணிந்த சிவப்பு அறிவிப்பை ஏற்றுத் 
    துணிந்து துடியாய் துடிக்க – கணித்த 
    கடவுளின் நீதி கடற்கரை காதல் 
    படகிற் கெவரோ  துடுப்பு?

    *****

    வாழ்வின் சூட்சுமத்தை, வாழ்வியல் நெறிதன்னை வகையாய் உரைத்திடும் திரு. சுரேஜமீயின் வரிகள்…

    வாழ்வில் இருபக்கம்
    வசந்தம் ஒருபக்கம்
    வாடும் மறுபக்கம்
    வளைத்துப் பழகிக்கொள்!
    வாழ்வே சுகமாகும்

    வளர்தமிழ் தினம்படித்து
    வள்ளுவம் ஏகிடுவாய்
    வாழ்வின் நெறிவிளங்கும்!
    […]

    மணலினின் தேடாதே
    மானுடம் தேடிஎடு
    காற்றினில் கலந்துவந்து
    கடவுளாய் வாழ்த்திடுவேன்!!

    வீடுகட்ட வேண்டும் எனும் தன் ஆசைக்கனவின் வெளிப்பாடாய் மணல்வீடுகட்டி மகிழ்ந்திருக்கும் மங்கையின் மனநிலையை விவரிக்கும் திருமிகு. ராதா மரியரத்தினத்தின் வரிகள்…

    நேற்றுக் கடற்கரைக்குச் 
    சென்று மண் அளைகையிலே
    வீட்டுக் கனவு வந்து 
    கையது தன்னாலே
    கட்டியது மணல் வீடு
    கனவினில் கண்டது
    நிஜத்தினில் வந்து நிற்க​
    பனித்தது எந்தன் கண்கள்
    என் கனவு வீட்டைப் பாரீர்

    *****

    மேட்டு நிலத்தினிலே மணற்கோட்டை கட்டும் குமரியின் குதூகலத்தைக் காட்டும் திரு. சிவராமனின் வரிகள்…

    ஆட்டமும் பாட்டமும் அன்போ டியைந்திட்டு
    வாட்டமாய் நாம்வாழ வாசல் பலவைத்து
    மேட்டு நிலத்தினில் மாளிகை போன்றதோர்
    கோட்டையைக் கட்டு கிறேன்

    *****

    அழகிய சொற்களால் கவிதைக்கோட்டைகள் எழுப்பிய உங்களனைவருக்கும் பாராட்டுக்கள் கவிஞர்களே!

    அடுத்த கேள்வி…இவ்வாரத்தின் சிறந்த கவிஞர் யார் என்பதே!

    ஆடவனின் முரட்டுப் பிடிவாதத்தையும் அவனிடம் யாசிப்பதே பெண்மையின் இலக்கணம் என்றாகிப் போகும் உள்ளம் சுடும் நிதர்சனத்தையும்  உருக்கமாய் வடித்திருக்கும் ”மணல் வீடு…’எனும் கவிதை என் மனவீட்டைக் கொள்ளைகொண்டது.

    அக்கவிதை…

    ஒவ்வொரு முறையும் 
    காத்துக் கிடக்கின்றேன்
    முகம் காட்ட மறுக்கும் 
    முரட்டுப் பிடிவாதத்துக்குப்
    பின்னான முரண்படுதல்களில் எல்லாம் 
    யாசிப்பவளாக மட்டுமே…

    பூங்கொத்துக்கள் பரிசளிக்கவே
    விரும்புகின்றவள் 
    என்றான போதும்…கீறிடும்
    முட்களைப் பற்றிய 
    முன்னெச்சரிக்கையில்
    மெல்லக் கூம்பி இதழ் 
    உதிர்க்கிறது என் தனிமை…

    கடந்து போன ஒன்றுக்குள் இருந்து
    என்னைத் தொலைப்பவனும்
    தொலைந்து போகும் ஒன்றுக்குள் இருந்து
    என்னை மீட்டெடுத்துக் காப்பவனும்
    என்றாகிப் போன உனக்கு….
    இம்முறையும் பரிசளிக்கிறேன்
    மணலால் செய்த மாளிகை ஒன்றை
    உனக்கான காயங்கள் ஏதுமின்றி 
    வழமை போல கலைத்து விட்டுப் போ….
    எனக்கான நேசத்தில் 
    குறைவற்றுப் போகும் வரை
    உனக்கான முகத் திருப்பலுக்காய்
    முயற்சிக்க வைத்தலில்
    குறை ஒன்றும் இல்லை…

    இக்கவிதையின் ஆசிரியர் திரு. சாயாசுந்தரத்தை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தேர்ந்தெடுக்கின்றேன்.

    அடுத்து, கண்ணீரோடு மங்கையெழுப்பும் மணற்கோட்டையில் கொட்டிக்கிடக்கும் அவளன்பை அழகான சொற்களால் கவிதையாய்த் தொடுத்திருக்கும் திருமிகு. புனிதா கணேசனின் வரிகளும் மனத்தை நிறைத்தன. அவரைப் பாராட்டுக்குரியவராய்க் குறிப்பிட விரும்புகின்றேன்.

    அக்கவிதை…

    கண்ணீர் துகள்களின் சேர்க்கையாய்
    மணல்துகள்கள் அவள் கைகளுள்!
    கைகள் பிசைந்ததில் பிரசவித்துக்
    கொண்டிருந்தன மணல் கோட்டைகள்
    மனக் கோட்டைகளின் பிரதிபலிப்பாய் !
    கண்ணீரின் உப்பும் மணல் துகளில்
    கடல் நீரின் உப்புடன் சேர்ந்தே இருந்தது !
    தொலைத்து விட்ட பிள்ளைப் பிராயத்தைத்
    தேடிக் கொண்டிருந்தன அவள் கைகள்
    சிலையாகும் ஒரு மணல் மாளிகையில்!
    கரை தழுவும் கடல் அலைகள் -அதைக்
    கரைத்தும் செல்லும் யதார்த்தங்கள்
    அவள் ஆழ் மனதின் ஏக்கங்கள் போல
    அழிந்து பொசுங்கித் துகள்கள் ஆக்கலாம்…
    சில பொழுதாவது சிதைந்து போகாத
    அழகியல் நிலையை ரசித்துக் கொண்டே
    நிர்மாணித்துக் கொண்டிருந்தாள் – தன்
    உள்ளக் கிடக்கையைப் பகிரங்கமாக!
    மணல் மாளிகை நிறைத்த அறைகள் யாவும்
    தன் அன்பை நிறைத்திருந்தாள்…அவனோ
    புறமுதுகிட்டே புறக்கணிப்பு நிகழ்த்துகிறான்…!

    கவிஞர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!

    Share
  • தமிழ்க் களஞ்சியம் இணையதளம்: ஒரு பகுப்பாய்வு

    கி. கண்ணன்

    முன்னுரை:

    இணையம், இன்று உலகைத் தன் கைக்குள் கொண்டுவந்துள்ள ஓர் ஊடகமாகும். நூல்களாகக் கொண்டுவர முடியாத பல தகவல்களை இணையதளம் உடனுக்குடன் அளிக்கும் ஓர் ஒப்பற்ற பிணைப்பாக விளங்குகிறது. இலக்கியம், ஆன்மீகம், அரசியல், பொழுதுபோக்கு என்று இதனுள் இல்லாதததே இல்லை எனலாம். சமூக வலையகம், வலைப்பதிவு, வலைத்தளம் என்று பலவகைகளில் இணையமானது இன்று வளர்ச்சி பெற்றள்ளது. அவ்வகையில் இணையதளங்களின் பங்களிப்பானது குறிப்பிடத்தக்க இடத்தைப் பெறுகின்றன. இதில் தமிழ்க்களஞ்சியம்.காம் என்ற இணையதளம் எவ்வாறு தமிழ்மொழி, தமிழிலக்கியம் தொடர்பான செய்திகளை வெளிக்கொணர்கிறது என்பதை விளக்குவதாக இக்கட்டுரை அமைகிறது.

    களஞ்சியம்:

    களஞ்சியம் என்ற சொல் பொதுவாக ஒரு பொருளை சேமித்து வைக்கும் இடத்தைக் குறிக்கும். குறிப்பாக தமிழில் களஞ்சியம் நெல் போன்ற தானியங்களை சேமித்து வைக்கும் இடத்தைக் குறிக்கும் என்று களஞ்சியத்திற்கு விளக்கமளிக்கின்றது விக்கிபீடியா. அறிவியல் களஞ்சியம், கலைக் களஞ்சியம், வாழ்வியற் களஞ்சியம் என களஞ்சியம் பலவகைப்படும். இணையத்தில் விக்கிபீடியா என்ற கட்டற்ற இணையம் மட்டுமே உலகளாவிய தகவல்களைத் தருகின்றது. தமிழ் இணையத்தில் தமிழ்க்களஞ்சியம் என்பது தமிழ் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒன்றிணைக்கின்றது.

    தமிழ்க்களஞ்சியம் (www.tamilkalanjiyam.com):

    thamizhkkalanjiyam

    தமிழகத்தைச் சேர்ந்த சக்திவேல், கணேசன், பெருமாள் ஆகியோரின் கூட்டு முயற்சியால் கிடைக்கப்பெற்ற ஓர் அற்புத பொக்கிஷம் தமிழ்க் களஞ்சியம் என்னும் தமிழ் சேமிப்பான் ஆகும். இது எண்ணற்ற இலக்கியங்களையும் ஆவணங்களையும் பதிவு செய்து தற்கால மக்களின் அறிவிற்கும் வருங்கால தலைமுறையின் பயன்பாட்டிற்கும் வழிவகுத்துள்ளது. தமிழர்களாகிய நமது கலாச்சாரம், வரலாறு, பாரம்பரியம் நம்மைவிட மேலை நாட்டவர்களுக்கே அதிகம் தெரிந்திருக்கிறது. நம்மைப் பற்றி நாம் அறிந்து கொண்டால்தான் நம்மிடையே இன மற்றும் மொழி உணர்வு வளரும். இதைக் கருத்தில் கொண்டு தொடங்கப்பட்டதுதான் இந்த தமிழ்க்களஞ்சியம்.காம் இணையதளம், என்று இதற்கு முன்னுரை அளிக்கிறார் ஆசிரியர் சக்திவேல்.

    பகுப்பு:

    இந்தத் தமிழ் களஞ்சியம் இணையதளத்தில்,
    இலக்கியம்,
    தமிழ் உலகம்,
    அறிவியல்
    பொதுஅறிவு
    ஆன்மீகம்
    ஜோதிடம்
    மருத்துவம்
    பெண்கள் பற்றி
    நகைச்சுவை
    கலையலகம்

    என்ற பத்து பகுப்புக்களின் கீழ் பலவகையான தகவல்கள் திரட்டித் தரப்பட்டுள்ளன. களஞ்சியம் என்பதன் பொருளுக்கிணங்க பலதரப்பட்ட செய்திகளையும் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக தமிழ் தொடர்பான செய்திகளைத் தருவதாக அமைந்துள்ளது.

    இலக்கியம்:

    தமிழ் இலக்கியம் தொடர்பான அனைத்து நூல்களையும் ஒரே இடத்தில் காணக் கிடைக்கின்றது. சங்க இலக்கியம், இலக்கணங்கள், காப்பிய இலக்கியங்கள், புராணங்கள், தல புராணங்கள், சைவ இலக்கியங்கள், வைணவ இலக்கியங்கள், கிறித்துவ இலக்கியங்கள், இசுலாமிய இலக்கியங்கள், சமண இலக்கியங்கள், சித்தர் இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், திரட்டு நூல்கள், அவ்வையார் நூல்கள், கம்பர் நூல்கள், ஒட்டக்கூத்தர் நூல்கள் என பல பிரிவுகளும் மேலும், இதில் கவிதைகள், புதுக்கவிதைகள், கதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், நாடகங்கள், நாட்டுப்புறப் பாடல்கள், சிறுவர் பாடல்கள் ஆகியன இடம்பெற்றுள்ளன.

    தமிழ் உலகம்:

    இத்தலைப்பின் கீழ், தமிழ் இலக்கிய நூல்கள், தமிழக மன்னர்கள், தமிழ்ப் புலவர்கள், தமிழ்க அறிஞர்கள், தமிழக தலைவர்கள், கலைஞர்கள், அறிவியலாளர்கள், எழுத்தாளர்கள், மாவட்டங்கள், ஊர்கள், சுற்றுலா தலங்கள், திருத்தலங்கள், அரசியல் கட்சிகள், ஆறுகள், ஏரிகள், மலைகள், கோட்டைகள், தமிழ்ப்பெயர்கள், தமிழ்ப் பணியார்கள் என்று தமிழ் மொழி, தமிழ்நாடு சார்ந்த தகவல்கள் இதில் ஒன்று திரட்டப்பட்டுள்ளன. தேவையான இடங்களில் சுட்டிப் படங்களுடனும் விளக்கப்பட்டுள்ளன.

    மேலும் இப்பிரிவில், தமிழ் தேடுபொறி, அகரமுதலி, தமிழ் ஆங்கில அகராதிகள், கலைச்சொற்கள், மின்னஞ்சல், உரையாடல், கட்டுரைகள் போன்ற இணைப்புகளும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

    அறிவியல்:

    அறிவியல் என்னும் பகுப்பின் கீழ் அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த ஆய்வுகள் தொடர்பான பல கட்டுரைகள் இதில் இடம்பெற்றுள்ளன. இதில், கணிதவியல், மின்னியல், மின்னணுவியல், கனிமவேதியியல், கரிமவேதியியல், வானவியல், இரசவாதம், கணிப்பொறியியல், ஒளியியல், ஒலியியல், உளவியல், அணுஇயற்பியல், தாவர வகைப்பாட்டியல், உடல் அமைப்பியல், உடற்செயலியல், மரபியல் போன்றனவும் இது தொடர்பான கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.

    மேலும் இப்பகுதியில், அடிப்படை கணிதவியல், அடிப்படை இயற்பியல், அடிப்படை வேதியியல், அடிப்படை உயிரியல், அறிவியல் கண்டுபிடிப்புகள், அறிவியல் விதிகள் போன்றன இடம்பெற்று விளக்கப்பட்டுள்ளன.

    பொது அறிவு:

    இப்பகுப்பின் கீழ், உலக வரலாறு, இந்திய வரலாறு, இந்து, கிருத்துவ, இசுலாமிய குழந்தைப் பெயர்கள் இன்னும் பல பொது அறிவு சார்ந்த தகவல்கள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. பொது அறிவுத் தகவல்கள், பொது அறிவுக் கட்டுரைகள், கேள்வி பதில்கள், சாதனைகள் ஆகியனவும் இதில் இடம்பெற்றள்ளன.

    ஆன்மீகம்:

    மத வேறுபாடு இல்லாமல் அனைத்து மதத்தினையும் பற்றிய குறிப்புகள் இதில் காணப்படுகின்றது. சைவம், வைணவம், கிறித்துவம், இஸ்லாமியம், சமணம் ஆகிய மதங்கள் தொடர்பான தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. திருமால். சிவன், முருகன், விநாயகர், அம்மன் ஆலயம், நாயன்மார்கள், ஆழ்வார்கள், நவக்கிரகங்கள், நட்சத்திரக்கோயில்கள், கட்டுரைகள், மந்திரம், யந்திரம், சித்தர்கள் போன்றன பற்றி இதில் விவரிக்கப்பட்டுள்ளது. யோகக்கலைகள், யாகங்கள் பற்றியும் இத்துடன் விளக்கப்பட்டுள்ளது. மேலும்,

    ஜோதிடம்:

    தமிழ்க் களஞ்சியத்தில், அதிக பிரிவுகளைக் கொண்டு காணப்படுகிறது ஜோதிடம் பகுப்பாகும். பொது ஜோதிடம், வேத ஜோதிடம், நாடிஜோதிடம், எண் ஜோதிடம், ஆரூடங்கள், கைரேகை, பரிகாரங்கள், ஜாதகக் களஞ்சியம் என்று தலைப்பும் அதனைத் தொடர்ந்து உங்கள் ஜாதகம், பொருத்தம், பஞ்சாங்கம், சனி, குரு, ராகு-கேது ராசி பலன்கள், நவக்கிரக மந்திரங்கள், ஆரூடச் சக்கரங்கள் யோகங்கள் ஆகியன அதன் கீழ் தொகுக்கப்பட்டுள்ளன. மேலும் ஜோதிடக் கட்டுரைகள், குறிப்புகள், கேள்வி-பதில்கள் ஆகியனவும் இடம்பெற்றுள்ளன.

    மருத்துவம்:

    அனைத்து தரப்பு மனிதர்களுக்கும் தேவையான பகுதியாக இரு இருக்கிறது. சித்த மருத்துவம், இயற்கை மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம். ஹோமியோபதி பற்றிய விவரங்களுடன் மருத்துவம் தொடர்பான கட்டுரைகளும் இதில் இடம்பெற்றுள்ளன.

    பெண்கள் பகுதி:

    அழகுக்குறிப்புகள், சமையல் குறிப்பு, சமையல் செய்முறை, குழந்தை வளர்ப்பு, மகளிர் மன்றம், கோலம். மருதாணி என்ற தலைப்புகளின் கீழ் பெண்கள் தொடர்பான குறிப்புகளும் கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.

    மேலும் இக்களஞ்சியத்தில், நகைச்சுவையும், கலையுகம் என்ற பகுப்புகளின் கீழ் நடிகர், நடிகையர், இசையமைப்பாளர்கள், கருவிகள், சினிமா செய்திகள் போன்றனவும் இ்டம் பெற்றுள்ளன.

    முடிவுரை:

    இணையம், கட்டற்ற கலைக்களஞ்சியமாக இருக்கின்றது என்பதற்கு தமிழ்க்களஞ்சியம் ஓர் சிறந்த உதாரணமாக விளங்குகிறது. இதில், இலக்கியம், குழந்தைகள், சினிமா, பொழுதுபோக்கு, பெண்கள், ஆன்மீகம் என்று அனைத்து விதமான மக்களும் பயன்படுத்தும்படி இலக்கியத் தரத்துடன் இத்தளம் அமைக்கப்பட்டுள்ளது. வகைகள் பிரிக்கப்பட்டுள்ள முறை அனைவராலும் ஏற்றுக்கொள்ளும்படியும் எளிதில் புரிந்து கொள்ளும்படியும் அமைக்கப்பட்டுள்ளது.

     

    கி. கண்ணன்,
    முனைவர் பட்ட ஆய்வாளர், (ப/நே.)
    அறிவியல் தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை,
    தமிழ்ப் பல்கலைக்கழகம்,
    தஞ்சாவூர்.

     

    Share
  • ’மனத்தில் நிறைந்த மக்கள் திலகம்’ போட்டி முடிவுகள்

    பவள சங்கரி

    அன்பினிய நண்பர்களே!

    வணக்கம். நாம் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த, ‘மனத்தில் நிறைந்த மக்கள் திலகம்’ போட்டியின் முடிவுகளை திருமதி கமலம் சங்கர் வெளியிட்டிருக்கிறார்கள். முதல் மூன்று பரிசுகள் என்ற வகையில் மட்டும் தம் முடிவை அறிவிக்காமல், தாம் பரிசுக்குரியதாக தேர்ந்தெடுத்ததன் காரணங்களோடு, போட்டியில் பங்கு பெற்ற அனைவரின் கட்டுரைகளையும், ஆழ்ந்து வாசித்து, அதற்கான தம் கருத்துகளையும் அழகாக வெளியிட்டிருப்பது பாராட்டுதலுக்குரியது. ஒரு படைப்பாளியின் மன நிலையை உணர்ந்து அவர்தம் முடிவுகளை பாரபட்சமின்றி வழங்கியிருக்கிறார். அவருக்கும், போட்டியை நல்ல முறையில் நடத்துவதற்கு தங்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்கியுள்ள கவிஞர் திரு காவிரி மைந்தன் மற்றும் திரு சசிகுமார் அவர்களுக்கும் வல்லமை குழுவினரின் மனமார்ந்த வாழ்த்துகளும், நன்றியும். போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டுகள். நன்றி நண்பர்களே. இணைந்திருங்கள்! தொடர்ந்து பல வெற்றிகளைக் காண்போம்!

    போட்டிக்கான படைப்புகள் அனைத்தையும் இங்கு காணலாம்.

    mgr-comp

    முனைவர் கமலம் சங்கர்

    வல்லமை மின்னிதழ் நடத்திய ‘‘மனத்தில் நிறைந்த மக்கள் திலகம்” தலைப்பிலான கட்டுரைப் போட்டி முடிவுகள் வருமாறு:

    முதற் பரிசுகள் :
    1. சுடர்மதி மலர்வேந்தன்
    2. ஞா.கலையரசி
    3. ஜியாவுத்தீன்

    இரண்டாம் பரிசுகள்:
    1. வில்லவன் கோதை
    2. எஸ்.சசிகலா
    மூன்றாம் பரிசுகள்:
    1. ஜெயஸ்ரீ சங்கர்
    2. அதிரை இளைய சாகுல்
    3. ஷேக் சிந்தா மதார்

    சிறப்புக் குறிப்பு:
    முதலாம் பரிசுகள் வரிசையில்..

    1. சுடர்மதி மலர்வேந்தன் :
    ‘தன் வாழ்க்கையையே சரித்திரமாக்கிவிட்ட ஒரு அசாதாரண மனிதரைப்பற்றியதோர் கட்டுரை! கையின் கட்டை விரலாய்ச் சிறப்புப் பெற்றார்!

    கல்லுக்குள் உளி செலுத்திச் சிற்பத்தைப் பெறவேண்டும். ஆனால் இங்கோ சிற்பம் தானாகவே தன்னைச் செதுக்கிக் கொண்டிருந்தது என்பன போன்ற சித்திர வரிகள் மக்கள் திலகம் பற்றிய செய்திகளாகக் கோர்க்கப்பட்ட நேர்த்தி சிறப்பானது.

    விடிவெள்ளியின் உதயம், வெற்றி நாயகன், தடைகள் துகள்களாக, இப்படியும் இருப்பாரா, வெற்றி முழக்கம், சமுத்திரத்திலிருந்து சாதனைத் துளிகள்.. இப்படி முதல்தரமான தலைப்புகள் பொருத்தம் நிறைந்த கருத்துச் செறிவுகளுடன் கட்டுரையை முதலிடத்தில் வைத்துள்ளார்.

    2. ஞா.கலையரசி

    காலத்தை வென்று இன்றைக்கும் மக்கள் நெஞ்சங்களில் காவிய நாயகனாக உலா வருபவர் – துவக்கம் இப்படி!

    சிறப்புக் குணங்கள், மக்கள் மனத்தில் விதைத்த நம்பகத்தன்மை, 1967, 1972, 1977,1984கள் முக்கிய அரசியல் நிகழ்வுகள், திரைப்படங்கள் மூலம் மக்களிடையே உண்டாக்கிய பிம்பம் ‘வாக்கு வங்கிகளாக’ நிலைப்பெற்றது போன்ற ரசமான வெளிப்பாட்டுடன் தொடர்கிறது கட்டுரை!

    மிகுதியான கருத்துக்கள், பொருத்தமான ஆதாரங்கள் வரிசைக்கிரமமாக, எளிய தமிழில் உயிரோட்டத்துடன கூடிய படைப்பு.. முதலிடத்தில் ஒன்றாக!!

    3. ஜியாவுத்தீன்..

    திரையுலகைத் தாண்டி அரசியலிலும் மக்கள் மனங்களிலும் ஏழைகளின் இதயங்களிலும் இன்னும் இந்த வசீகரப்புயல் நிலைகொண்டுள்ளது என வசீகரமான தொடங்கும் கட்டுரை,

    ஏழைப் பங்காளன் எனும் ஆதர்ச கதாபாத்திரத்தை மக்கள் மனங்களில் பதியவைத்துக் கொண்டார்கள். தாய்க்குலம் என்று ஒரு புதிய சொல்லாடலைத் தோற்றுவித்து, அரசியலாகட்டும், திரைப்படங்களாகட்டும் தன் ஆளுமையை என்றுமே அவர் இழந்ததில்லை! தாய்மைப் பண்புக்கு உதாரணம் என ஆணித்தரமான, நயமான வரிகளுடன் தொடர்கிறது!

    எம்.ஜி.ஆரின் புகழ் ஒவ்வொரு குடிசையிலும் அரியாசனமிட்டுக் கோலோச்சிக் கொண்டிருக்கிறது. ஒரு யுகபுருஷனாக வாழ்ந்து இன்றும் அவர்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் மனத்தில் நிறைந்த மக்கள் திலகம் என முடிகின்ற கட்டுரை தொடரோட்டத்தில் முதலாம் இடத்தில்!!

    இரண்டாம் பரிசுகள் வரிசையில்:

    1. வில்லவன் கோதை :

    எட்டு வயதில் மலைக்கள்ன பார்த்த அனுபவத்துடன் – ‘அன்று என் மனத்தைக் கவர்ந்துபோன அந்தக் கள்ளன் கடைசிவரையில் திருப்பித்தந்ததாக எனக்கு நினைவில்லை என.. அழகான வெளிப்பாடு!

    தமிழகத்தின் வறண்ட பூமிகளிலும் நலிந்த மக்களிடையேயும் அவர் ஏற்படுத்திய ஒப்பனைப் பிம்பம் ஆழப் பதிகிறது. வாடிய முகத்தைக் கண்டபோதெல்லாம் வாடியதோடல்லாமல் வாட்டத்தைப் போக்குகின்றவராகவும் எம்.ஜி.யார் வாழ்ந்தார்! என்பன போல் பல சத்தான வரிகள் சுமந்தபடி, தலைமுறைகளைத் தாண்டி இன்றும் அவர் பேசப்படுவதான முத்துப் போன்ற முடிவுடன் அமையும் கட்டுரை, எளிய ஆழமான நடைத்தெளிவுடன் மக்கள் திலகத்தை ஓவியமாக்கி இரண்டாம் இடத்தில்!

    2. எஸ்.சசிகலா:

    “இறந்த பின்னும் வாழும் வாழ்க்கையைத்தான் சிறந்தது என்றாரு பொன்மொழியுண்டு. அதை மெய்ப்பிக்கும் விதமாக இன்றளவும் மனத்தில் நிறைந்திருக்கிறார் மக்கள் திலகம்”! இனிய தொடக்கம்!

    ஈகை அவரது மிகப் பெரிய பலம் என்பதும் தன்னைச் சுட்டவரையும் மன்னித்த பெரும் பண்பினால் பரமபிதா, மெய்ப்பொருள் நாயனார் செயலோடு ஒப்பிடும் சிறப்பு, காவிரிநீர் தமிழகம் வரச் செய்த சாகஸம், பெற்றால்தான்பிள்ளையா என வாரியணைத்த கனிவு என்று பலப்பல!

    ‘நாடகக் காட்சி’ போன்ற விளக்கத்துடனும் தெளிவடனும் உள்ள கட்டுரை, இரண்டாம் இடத்தில்!

    மூன்றாம் பரிசுகள்:

    1. ஜெயஸ்ரீ சங்கர் :

    மதுரையில் மக்கள் திலகத்தைக் கண்ட அனுபவம் பரவசத்துடன், ஆரம்பமாகிறது கட்டுரை.

    தன்னம்பிக்கையின் அஸ்திவாரம், அரசியல் சூழ்ச்சி வலையிலிருந்து வெளிவர அவருக்குள் வெகுண்டு வெளிவந்த தைரியமும், தீர்க்கமான அறிவும், பகட்டே அறியாத தூய அன்பும், நல்ல மனமும் மட்டுமே துணையாக இருந்தன. தமிழ் நாட்டு மக்கள் அனைவருமே பாதுகாப்பு வளையமாக வலம் வந்தார்கள் என்பன போல் உண்மைகளின் வெளிப்பாடு, அழகு ததும்ப!

    அந்தக் கீர்த்தியை ‘சத்திய உலகின் பிரதிநிதி’ என்றே சொல்ல வேண்டும் என உறுதி கூறும் கட்டுரை மூன்றாம் இடத்தில்!

    2. அதிரை இளைய சாகுல்:

    நடமாடும் ஒரு மனிதாபிமானம். வறுமைக்கோட்டை அழிக்க இயற்கை எறிந்த அழிரப்பர்! கருணைக் கல்வெட்டு! இரக்க இதிகாசம்! தவறுகளைச் சரியாக்க இறைவன் எய்நத பிரம்மாஸ்திரம். சுவையே அறியாத நாவுகளை நனைத்த கற்கண்டு! அட்டசய பாத்திரம்!

    தென்னகத்து ராஜதந்திரி! மனிதநேய மாமன்றம்.. இப்படியான தொடக்கத்தில் அநேகமாக கட்டுரையாக்கிய சாரம்சம் அத்தனையும்!

    தனித்தன்மைகள் பல – தனிப்பட்டவர் அனுபவம் பல கோர்த்து, தமிழ் அழகு, முந்தி நிற்கும் கட்டுரை மூன்றாம் இடத்தில்!

    3. ஷேக் சிந்தா மதார்:

    சென்ற தலைமுறையும் இந்தத் தலைமுறையும் மட்டுமின்றி இனி வரும் தலைமுறைகளும் அவர் புகழைப் பேசும். தாய்க்குலத்தின் மனங்களைக் கொள்ளை கொள்ளும் கதாபாத்திரங்கள் என்பன போல பல உண்மை வாசகங்கள்!

    திரைப்படங்களின் பெயர்கள் பக்கத்தலைப்புக்களாக அமைய, மிகப் பொருந்தும் வகையில் கருத்துக்கள் என இருப்பது ரசிக்கத்தக்க வெளிப்பாட்டு முறையிலான கட்டுரை மூன்றாம் இடத்தில்!!

    கமலம் சங்கர்
    சென்னை
    12.04.2015

    பரிசு ஒன்று மட்டும் தகுதியைத் தீர்மானிப்பதல்ல.. பாராட்டி ரசிப்பதற்குரிய பல அம்சங்கள் எல்லாக் கட்டுரைகளிலும்! சுவைக்கலாமே!!

    1. சுரேஜுமீ – தமிழின் வார்த்தைகளை வாழ்க்கையாக்கிய வள்ளல்தான் புரட்சித்தலைவர் – அழகான வெளிப்பாடு.. சுய அனுபவமே உயிர்நாடியாக மனிதாபிமானமுள்ள மனிதனாக வைத்திருக்கின்ற உண்மை பகர்கின்ற படைப்புக்குப் பாராட்டுக்கள்!

    2. ஆகிரா – அவர் பெயரைக் கேட்டால் மயங்காத மனம் யாவும் மயங்கும். பொழுதுபோக்கு அம்சத்துடன் அறிவுரை கூறிய திரைப்படங்கள்! மக்கள் மனதில் நீங்கா இடம்பிடிக்க அடிப்படை ரகசியம் எனக்கூறுவதெல்லாம் சிறப்பு! பட்டியல்களைத் தவிர்த்திருக்கலாம்! முயற்சிக்குப் பாராட்டு!

    3. சி.எஸ்.குமார் – மக்கள் தந்த விருது மக்கள் திலகம்! எம்.ஜி.ஆர் – ஒரு சகாப்தம்! சாதனையின் சிகரம்! திரை உலகின் சரித்திரம் என்பன போல் வலிமை பொருந்திய வார்த்தைகள் இருந்தாலும் 168 வார்த்தைகள் மட்டுமே.. போதாமல் போன கட்டுரை! முயற்சி தொடர்க!

    4. சக்தி சக்திதாசன் – 9, 16 வயது அனுபவங்கள் பேச – பாடல்களை வரிசைப்படுத்திய கவிதையுடன் – மாட்டுக்கார வேலனாம் மக்கள் மனங்களை உழுதாயே! என்பது போல – நம் நாடு என் இதயவீணை பாடிய உள்ளமே உன் மக்கள் எப்போதும் குடியிருந்த கோயில் என எத்தனை அழகுகள்! 587 வார்த்தைகளாகக் குறைந்திருக்க வேண்டாடம்! தொடரட்டும் முயற்சி!

    5. சித்தார் கோட்டை நூர் மணாளன் : ஏழை மக்களை அரவணைக்கலானார். அதன் பயனாய் சாந்த வாழ்வு பந்த வாழ்வாக மலர்ந்தது. மாநிலத்தில் மானிடராய்ப் பிறந்திட என்ன தவம் செய்தால் நலம் என்றால் .. மறைந்த பின்னும் மக்கள் மனத்தைவிட்டு நீங்காது இடம்பிடிக்கும் அளவுக்கு நன்மை செய்தலாகும் என்று வாழ்ந்து காட்டியவர் என்பன போன்ற வரிகள் பாராட்டுக்கு உரியவை! 566 வார்த்தைகள் மட்டும் ஏனோ?

    6. ஆர்.எஸ்.கலா – கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை உடையாக உடுத்திய கொடை வள்ளல்! இறந்தும் இறவா வரம் பெற்றவர்! நடிப்பை நடிப்பாகப் பார்த்த பலர் முன் அதில்வரும் பலகாட்சிகளுக்கு நிஜத்தில் உயிர்கொடுத்துவிட்டார் பலர் வியக்கும் வண்ணம்! என்பன போல் பல வலிமையான வரிகள். 181 வார்த்தைகள் போதவில்லையே! முயற்சிக்குப் பாராட்டு!

    7. வெ.சந்திரமணி – மக்கள் திலகத்தின் குடும்ப வரலாறும் அரசியல் வரலாறும் காட்டும் சுருக்கமான கட்டுரை, 355 வார்த்தைகளில்.. முயற்சி தொடர்ந்திருக்கலாம்.

    8. நர்கீஸ் ஜியா: எவரெவர் எப்படியெல்லாம் இருக்க வேண்டுமென வள்ளுவர் பெருமான் வரையறுத்துள்ளாரோ அப்படியெல்லாம் தன்னை நெறிப்படுத்தி நிஜத்தில் வாழ்ந்துகாட்டிய நேர்த்தி! படிப்பதைவிடப் பார்ப்பது மக்கள் மனதில் பதிந்துவிடும் என்ற மனோதத்துவத்தை அறிந்து.. அதிலும்படிப்பறிவில்லாத பாமர மக்களையும் மனதில் கொண்டு.. என்பன போல்பல உறுதியான வரிகள் கட்டுரையில்.. பாராட்டுக்கள்!

    9. திருக்குவளை மீ.லதா: பூமிதனில் ஒளிரும் தீபங்களாய் இருப்பவர். ஆங்கிலப் பத்திரிக்கைக் குறிப்பு இந்தியாவில் மக்களின் பேரன்பைப் பெற்ற பெருமான்களாக இருவரைச் சுட்டிக்காட்டியது. ஒருவர் ஜவஹர்லால் நேரு. மற்றொருவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். என்பன போல உண்மை வரிகள் இடம்பெற்றுள்ள கட்டுரை. 480 வார்த்தைகள் எனச் சுருக்கியிருக்க வேண்டாமே. முயற்சி தொடர வாழ்த்துக்கள்!

    10. எஸ்.பழனிச்சாமி – பொதுமக்களின் பார்வையிலிருந்து சினிமாவை அணுகினார். பாடல் சொல்லும் அர்த்தத்திற்கு ஏற்ப வாழ்ந்தும் காட்டினார். கதாபாத்திரங்கள் தத்தம் குடும்பத்திலும் சமூகத்திலும் ஒருவர் என்று மக்கள் கருதும்படி செய்தது! இப்படிப் பல ஆணிவேர் வரிகள். கட்டுரையின் அளவு 877 வார்த்தைகளுக்குள் 367 மக்கள் திலகத்தின் பேட்டியாகவே அமைந்துவிட்டதே! முயற்சிக்குப் பாராட்டு!

    11. சுமதி ரவிச்சந்திரன்: மக்களின் மனதில் நிலைத்து நிற்கும் புரட்சித்தலைவர், தமிழ், ஈழம், கடமை, அன்பு, பாசம், புகழ், நன்றி, காதல், நட்பு, உதவி, கல்வி, பரிசு, தானம், கருணை, மனம் என மூன்றெழுத்தில் ஆரம்பமாகும் கட்டுரை. 22 பட்டங்கள்.. யார் யார் வழங்கியது என்னும் செய்திகளோடு சிறப்புப் பெறுகிறது! அரசியல் பாதையும் உண்டு! பாராட்டுக்கள்!

    12. கலைவாணன் – தாயன்பு, வில்லனையும் திருந்தவைக்கும் பண்பு.. குடித்தலும் புகைத்தலும் தவறு என அழுத்தந்திருத்தமாய் போதித்து, நிஜவாழ்விலும் முன்னுதாரணம்.. ரிக்ஷாக்காரர்களுக்கு மழைக்கோட்டு வழங்கியது எனச் சொல்லும்போது மனங்களில் பதிந்து போனதற்கு இதைவிடச் சிறந்த காரணம் ஏதேனும் உண்டா எனக் கேட்டுக்கேட்டு வெளிப்பாட்டுநிலையில் கட்டுரை அழகு ததும்ப படைக்கப்பட்டுள்ளது. அரசியல் வாழ்க்கையையும் நன்கு விளக்கியிருக்கலாம்! முயற்சி தொடர வாழ்த்துக்கள்!

    13. மீனாட்சி நாகப்பன்: திரையிசைப்பாடல்களும் அதற்குப் பொருந்திய மக்கள்திலகத்தின் நிலைவிளக்கமும் மட்டுமே காட்டப்பட்டுள்ளன. சொல்லப்பட வேண்டியவை சொல்லப்படாமலேயே 487 சொற்களில் சுருக்கப்பட்ட கட்டுரை.. முயற்சிக்குப் பாராட்டுக்கள்!

    14. ஜெயராம சர்மா: “இரக்கம் அவருள் வியாபித்து நின்றதால் என்றுமே மக்கள் மனத்தில் நீங்கா இடம் கெண்டார்” என்று காரணங்கள் தொடர்கின்றன! அவர்கள் படங்களில் சமூகத் தளைகளை மீறித் தனிமனித மேல் நிலைப்பாட்டைப் பெறமுடியும் என்ற கருத்து மிகச் செப்பமாகவே பதிய வைக்கப் பெற்றது! என்பன போல் உறுதியான கருத்துக்கள் பல! பாராட்டுக்கள்!

    15. தஞ்சை வெ.கோபாலன் – பள்ளி மாணவனாக இருந்தபோது எம்.ஜி.ஆரின் தோளைத்தொட்டுப் பேசியதும் – வளர்ந்தபின் எளிமை என்னும் அவரது உண்மை முகம் உணர்ந்ததும் எனச் சுய அனுபவங்கள் சுவையாக எளிய தமிழில்! பாராட்டுக்கள்!

    16. சரஸ்வதி ராஜேந்திரன் – பகைவனுக்குக் கூட அவர் கருணை காட்டியவர். உடலல் நிலை குறித்து .. கோடான கோடி மக்கள் அவருக்காக வேண்டி தவம் இருந்த ஒரு உதாரணம் போதும்! ‘மூன்றெழுத்து முடிந்தபோதிலும் பேச்சிருக்கிறதே’ அதுதான் அவர்தம் வெற்றி! வெகு பொருத்தமான முத்தாய்ப்பு! 405 வார்த்தைகள் மட்டுமே எழுதாமல் இன்னும் விரித்திருக்கலாம்! நல்ல முயற்சி!

    17. முனைவர் இதயகீதம் இராமானுஜம் – மக்களின் வயிற்றுப் பசியைப் போக்கி அதில் இறைவனைக் கண்டவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். தன் தொழிலான திரைப்படங்கள் மூலம் மனிதநேயத்தையும் மங்கலப் பண்புகளையும் மக்கள் மனதில் விதைத்தார். பொருந்திய கருத்துக்கள் உணர்ச்சியோட்டத்துடன் சேர்ந்திருந்தால் சிறப்பு மிகுந்திருக்கும்! பாராட்டுக்கள் முயற்சிக்கு!

    18. புவனா – மும்பை: எம்.ஜி.ஆர் என்ற பெருமழை தந்த ஈரத்தால் இன்னும் வாடாமல் தழைத்தோங்கும் உயிர்கள் ஏராளம். சிந்தனையே சொல்லானது. சொல்லே செயலானது. அந்தச்செயலும் புனிதமானது. அந்த வகையில் அவர் புத்தனாகவும் யேசுவாகவும் கண்ணில் தென்பட்டார். இப்படிப் பல வரிகள் உள்ளம் பதிக்கத் தக்கவை. பாராட்டுக்கள்!

    19. செள.செல்வகுமார் – மருத்துவத்துக்கும் இல்லாத இந்த சக்தி (இனம் புரியாத ஒரு இன்பமும், எழுச்சியும்) அவரது படங்களைக் காண்பதிலும் பாடல்களைக் கேட்பதிலும் உள்ளது. வலிய ஓடோடிச் சென்று உதவிகள் புரிந்தது.. அந்த முப்பிறவி கண்ட மூன்றெழுத்து மந்திரத்தில் தனிப்பாணி எனப் பல அனுபவ வரிகள்! பலரின் அனுபவ வரிகளாகின்றன! பாராட்டுக்கள்!

    20. கொ.அரங்கநாதன் : வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்வார் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்ற குறளின் பொருளாக வாழ்ந்து மறைந்தவர் மக்கள் திலகம்! எண்ணற்ற உதவிகள்..அத்தனையுமே எவ்வித எதிர்பார்ப்புமின்றிச் செய்யப்பட்டதே எம்.ஜி.ஆர் என்ற மாமனிதனின் இரக்க வரலாறு! பாராட்டத்தக்க தொடர்கள் பலப்பல!

    21. மணிமுத்து – பிராசாரத்திற்கே வராமல் முதல்வர் ஆன மாமனிதர்.. “மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும், முடிந்த பின்னும் என் பேச்சிருக்கும்” என்று உலகிற்கு வாழும்போதே சொல்லிவிட்டுப் போய்விட்டார் என்ற உறுதியான வரிகள் கட்டுரைக்குப் பொலிவு! ஈனதர’ 353 வார்த்தைகள் மட்டும் போதவில்லையே! முயற்சிக்குப் பாராட்டு!

    கமலம் சங்கர்
    சென்னை
    12.04.2015

    கவிஞர் காவிரி மைந்தன்

    amgதனியொரு மனிதன் பிறப்பது முதல் இறப்பதுவரை நம் கையில் இல்லை என்னும்பட்சத்தில்.. வாழுகின்ற வாழ்க்கையிலே மறைந்த பிறகும் மக்கள் மனதில் வாழுகின்ற மனிதர்கள் ஒரு சிலரே!

    இலங்கையிலே பிறந்து.. தமிழகத்தில் குடிபுகுந்து.. தாயின் அன்பால்.. அரவணைப்பால்.. முழுமையாக வார்க்கப்பட்ட எம்.ஜி.ஆர்.. கல்விகற்றிட வறுமை தடையிட்டதால், சிறுவயதிலேயே வேலைதேடிட வேண்டிய நிலையில் நாடகத்துறையில் கால்பதிக்க.. கலைத்துறையில் அங்குலம் அங்குலமாக அவரின் முன்னேற்றம்.. தனக்கென ஒரு இடத்தைப் பிடித்த பின் அவர் ஏற்ற பாத்திரங்கள், கொண்ட கொள்கைகள்.. மக்களுக்கு ஏதேனும் நல்ல கருத்தைச் சொல்லியாக வேண்டும் என்கிற வேட்கை.. பல ஆயிரம், லட்சம் பணத்தை முதலீடு செய்து உருவாக்கப்படும் திரைப்படம் என்ன சொல்ல வேண்டும்.. என்பதில் அக்கறை செலுத்திய நடிகராக எம்.ஜி.ஆர் திகழ்ந்ததால்தான் அவர் ஏனைய நடிகர்களிலிருந்து மாறுபட்டு.. மக்கள் மனதில் நிறைந்தார் என்றால் அது மிகையில்லை!

    வாழ்ந்தவர் கோடி.. மறைந்தவர் கோடி..மக்களின் மனதில் நிற்பவர் யார் என்று மன்னாதி மன்னன் படத்திற்காக கவியரசு கண்ணதாசன் தீட்டிய வரிகளுக்கு வாயசைப்பு மட்டும் செய்தவராக இல்லாமல் வாழ்ந்துகாட்டிய சரித்திரமாக காட்சிதருகிறார்!

    எண்ணங்களால் தூய்மை கொண்டு.. எங்கும் எதிலும் நேர்மை என்று.. தீமை கண்டு பொங்கி எழுகின்ற பாத்திரங்களையே பெரிதும் ஏற்று நல்ல நல்ல கருத்துக்களை தான் நடித்த திரைப்பாடல் வரிகளிலே .. இடம்பெறச்செய்து.. அன்றும் இன்றும் என்றும் வாழும் புகழுக்குப் புகழ்சேர்த்த புரட்சித்தலைவரை.. ஏழை மக்களின் இதயத்தில் நிரந்தரமாய் வாழும் எம்.ஜி.ஆரை.. தமிழகத்தின் முதலமைச்சராய் 11 ஆண்டுகள் முடிசூடிய எங்கள் வீட்டுப் பிள்ளையை.. அவரின் சாதனையை.. மக்களுக்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்த பண்பை, தமிழ்..தமிழினம்..வாழ தன் மூச்சு உள்ளவரை உழைத்தவரை.. பல லட்சம் ரசிகர்களை நல்வழிப்படுத்திய புரட்சிநடிகரை.. தாய் என்கிற உறவிற்கு தரணியில் தலையாய முக்கியத்துவம் தந்த தலைவரை.. ஏழைகளின் வாழ்வில் ஏதேனும் ஒரு வகையில் இன்பம் மலர காரணமாய் இருந்தால்போதும் என்று நெடிதுழைத்த உத்தமரை.. கிராமத்து மக்களெல்லாம் ஆசையாய் அழைத்து மகிழ்ந்த எம்.சி.ஆரை.. மானிடர் துயர்பெற்ற திசைகளெல்லாம் ஓடிச்சென்று உதவிய கரத்தை.. எல்லாவற்றையும் பின்னிப்பிணைந்த மாபெரும் மனிதரைப் பற்றி ..அன்பு உள்ளங்களே.. உங்கள் பதிவுகளை கட்டுரை வடிவில் வரவேற்றோம்.

    எமது வேண்டுகோளை இனிதே ஏற்று வழக்கம்போல் வல்லமை மின்னிதழ் நேர்த்தியாக கட்டுரைப் போட்டி நடத்திட ஒத்துழைப்பு நல்கிய ஆசிரியர் குழுவினர்க்கு நன்றிகளும், ஆர்வமுடன் பங்கேற்று தங்கள் கட்டுரைகளை அனுப்பி வைத்த உள்ளங்கள் அனைவருக்கும் நன்றியும் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன்.

    நன்றிகளுடன்
    காவிரிமைந்தன்

    இக்கட்டுரைப் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் எனது நன்றி மற்றும் வாழ்த்துக்கள்!

    தங்களின் எழுதுகோல்களை சாய்த்து தங்களின் எழுத்துக்களையும், மக்கள் திலகத்தின் பெரும் புகழையும் மேலும் தலை நிமிர்த்தி, போட்டியில் வெற்றி கண்ட அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

    நடுவர்களுக்கும், இப்போட்டியை சிறப்பாக நடத்தித் தந்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி.

    இந்த போட்டியை நடத்துதற்கான அத்தனை முயற்சிகளையும், வெகு நேர்த்தியாக செய்து, சிறப்புற நிகழ்த்திய சகோதரர், திரு. காவிரிமைந்தன் அவர்களுக்கு, என் கைப்பற்றி மற்றுமொரு முறை MGR எனும் பேராளுமையை தரிசிக்க அழைத்து சென்றதற்கு எனது பிரத்தியேக நன்றி…

    என்றும் அன்புடன்
    உங்கள்
    ச.சசிகுமார்
    துபாய்

    Share
  • பயன்மிகு இணையவழிச் சேவைகள் – தகவல் தொடர்பு முறைகள்

    – சுரேஜமீ.

    முகங்கள் பார்த்து கதைகள் பேசிக் களித்த காலங்கள் கடந்து, நாம் வெகுதூரம் வந்ததற்கான சாட்சியே, நாம் இன்றைக்கு இணையத்தை, உற்ற தோழனாகவும்; தொடர்பாகவும் கொண்டுள்ள காட்சி எனலாம்!   காலம் தன் வேகத்தைக் கூட்டவுமில்லை; குறைக்கவுமில்லை! ஏனோ நாம் மட்டும் இன்னமும், காலம் ஓடுகிறது என்ற சொல்லை; நம் இயல்புக்குத் தகுந்தவாறு பயன்படுத்தத் தவறுவதில்லை.  மனிதத் தொடர்புகள்  தூரமாகும்போது, அதனை நம் அருகே கொணரத் துணை புரியும் இணையத் தொடர்பு சாதனங்களையும், அதைக் கையாளும் முறைகளையும், சற்று உங்கள் மனதில் பதிய வைப்பதுதான், இந்தக் கட்டுரையின் நோக்கம்!

     

    இந்தக் கட்டுரையில் மூன்று முக்கியத் தகவல் தொடர்பு முறைகளைப் பற்றியும்; அதனைக் கையாளும் வழிகள் பற்றியும் குறிப்பிட முனைகிறேன்;

    1. முகநூல் (Facebook)
    2. ஏகிநிற்பது என்ன? (Whatsapp – இதற்குத் தமிழாக்கம் என் சொந்த முயற்சி; இணையான வார்த்தைகள் வரவேற்கப் படுகின்றன; அதே சமயம் இச்சொல்லே பழக்கத்திற்கு வந்தால் அதன் பெருமை என் தமிழ்த்தாய் தந்த எண்ணத்திற்கு)
    3. குறியீட்டுச் செய்தி (Twitter) – இத் தமிழாக்கமும் என் சொத்த முயற்சியே! குறியீடுகள் அதிகம் பயன்படுத்தப்படுவதால், ‘குறியீட்டுச் செய்தி’ எனப் பெயரிட்டுள்ளேன்.

     

    முகநூல் (Facebook):

    ஹார்வர்டு பல்கலைக்கழக மாணவர்களுள் ஒருவரான மார்க் சுக்கெர்பெர்க் என்பவரால், தன் சக மாணவர்களோடு ஒரு தொடர்பினை ஏற்படுத்த செய்யப்பட்ட ஒரு முயற்சி, இன்று உலகத்தையே தன் தொடர்பில் வைத்திருப்பதோடு, உலக அளவில் ஒரு ஒப்பற்ற தகவல் தொடர்பு ஊடகமாகவும், மொத்த இந்தியாவின் மக்கள் தொகையை விஞ்சும் அளவிற்கு, சற்றேறக் குறைய 130 கோடிக்கும் மேலான பயனாளிகளைக் கொண்டதாகவும், சுமார் 21 ஆயிரம் கோடிக்கும் அதிகமான வருவாய் ஈட்டுவதாகவும் வளர்ந்திருக்கிறதென்று சொன்னால், அதன் வளர்ச்சியை உங்களின் மனக்கண் முன் கொண்டு வருவதில் மட்டற்ற மகிழ்ச்சி எனக்கு!

    முகநூலின் பயன்

    இற்றைக் காலங்களில், உலகம் ஒரு சின்ன உள்ளங்கைக்குள் அடங்குவது போன்று சுருங்கிவிட்டது.  சிறுவனாக இருந்த பொழுது, முகவையிலிருந்து சென்னை பெருந்தூரமாகத் தெரிந்தது என் போன்றோர்க்கு; ஆனால், இன்று படித்த குடும்பங்களில், வீட்டுக்கு ஒரு பிள்ளை வெளிநாட்டில் பணி செய்யும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறது என்று சொன்னால், ஆச்சரியம் ஏதுமில்லை.  இத்தகைய சூழலில், தொலைவில் இருப்பவர்களோடு, அடிக்கடித் தொடர்பில் இருப்பதற்கு, நாம் தொலைபேசியையோ, அலை பேசியையோ உபயோகப் படுத்தினால், மிகவும் அதிகமான செலவு பிடிக்கும்.  அதே வேளையில், நமக்கு ஒரு முகநூல் கணக்கு இருந்தால், நம்மால், சுலபமாக நம் உறவுகளை அவர்களின் முகநூல் கணக்கோடு இணைத்து, தினமும் செய்திகளப் பகிர்ந்துகொள்ள ஏதுவாக இருக்கும்!  சரிதானே?

     எப்படித் துவங்குவது?

    படித்தவர்களே சில நேரங்களில், முதன் முதலாக ஒரு செயலைச் செய்யும்போது, ஒரு தயக்கம்; ஒரு சிறிய அச்சம் அல்லது ஏன்? எதற்கு என்னும் கேள்வியால், அச் செயலைக் காலம் தாழ்த்துவதோ அல்லது தவிர்ப்பதோ உண்டு! அவர்களுக்கான ஐயப்பாடுகளை நீக்குவதும், என்ன செய்யவேண்டும் எனப் பகர்வதும்தான், இணைத்துள்ள நிழற்படமும் அதற்கான விளக்கமும்!

    சுரேஜமீ

    இணைத்துள்ள படத்தில் எண் வரிசைப் படி, நாம் கொடுக்கவேண்டிய தகவல்களைப் பார்க்கலாம்;

    1. தாங்கள் பெயர்.  இங்கே உங்களின் பயன்பாட்டுக்கேற்றவாறு, நீங்கள் தகவல்களைப் பகிரலாம்.  பயன்பாடு என்று சொல்லும்போது, கீழ்க்காணும் ஏதேனும் ஒன்றுக்கு ஏற்ப, உங்களின் சுய தகவல் பரிமாற்றம் இருக்க வேண்டும்;
    • குடும்ப உறவுகள் மற்றும் துறை சார்ந்த நண்பர்கள் மட்டும்
    • நட்பு வளைய மேம்பாடு மற்றும் பொழுது போக்கு
    • திறன் வெளிப்படுத்தல்
    • இன்ன பிற

    இங்கு நீங்கள் கவனிக்க வேண்டிய முக்கியக் காரணியே, உண்மைத் தகவல் பகிர்வதா? அல்லது புனைப் பெயர் மற்றும் வெற்றுத் தகவல் பகிர்வதா என்பதே!

    1. இது தங்களின்  முதல் தகவலைத் தழுவியது.
    2. உங்களின் உண்மையான மின்னஞ்சல் கணக்கு ஒன்றைப் பகிர்தல் அவசியம். முகநூல் கணக்கு துவங்கிய பின், துவங்கிய நபரைச் சரி பார்க்கும் அஞ்சல், இந்த முகவரிக்கு அனுப்பப்படும் என்பதை நினைவில் கொள்க!

    இதே தகவலை, இதற்கு அடுத்த தகவல் நிலையிலும் திரும்பப் பதிவிடுங்கள்

    1. உள் நுழை பாதுகாப்பு சொல்.
      1. தாங்கள் எளிதில் நினைவில் வைக்கத் தக்க ஒரு சொல்லைப் பயன்படுத்துதலும்;
      2. அச்சொல்லில்
        1. ஒரு தலைச் சொல்லும்(Capital Letter);
        2. ஒரு எண்ணும் (Number);
    • ஒரு அனுமதிக்கப்பட்ட சிறப்புக் குறியீட்டுச் சொல்லும் (Special Character) இருந்தால் நல்லது!
    1. இது தங்களின் முதல் தகவலைத் தழுவியது.  ஆனால், கண்டிப்பாக ஒரு தகவலைப் பதிதல் அவசியம்!
    2. இதுவும் தங்களின் முதல் தகவலைத் தழுவியது.  ஆனால், கண்டிப்பாக ஒரு தகவலைப் பதிதல் அவசியம்!

    மேற்கூறிய தகவல்கள் நிலையிட்ட பின், “Sign Up” அழுத்த, உங்களின் முகநூல் கணக்கு துவங்கப்பட்டு, கணக்கு உங்களுடையதுதானா எனச் சரி பார்க்கும் மின்னஞ்சல் உங்களுக்கு அனுப்பப்படும்.  மின்னஞ்லில் குறிப்பிட்டுள்ள தொடர்பானைச் சொடுக்க, உங்கள் முகநூல் பக்கத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள்!

    என்ன முகநூல் கணக்குத் துவங்கலாமா?  இந்தியாவில் இதுவரை 10 கோடிக்கும், அதிகமானவர்கள், முகநூல் கணக்கு வைத்திருப்பதாக ஒரு செய்தி சொல்கிறது  கணக்குத் துவங்குவது சம்பந்தமாக, மேலதிகத் தகவலுக்கு, கீழே கொடுக்கப்பட்டுள்ள, இணைப்பானைச் சொடுக்கவும்!

    http://www.wikihow.com/Set-up-a-Facebook-Account

    குறைந்த பட்ச பாதுகாப்பு

    முகநூல் கணக்கு வைத்திருப்பதன் நோக்கமே, நாம் நினைக்கும் செய்திகளைத் தன் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வதுதான்.  அத்தகைய சூழலில், நாம் பகிரும் தகவல்களில், பெரும்பாலும், நம்முடைய அல்லது குடும்பத்தாருடைய நிழற்படங்கள்; காணொளிக் காட்சிகள், பிற ஆவணங்கள் என நிரம்பி இருக்கலாம்!  ஆனால், மேற்கூறிய அனைத்தும், ஏதோ ஒரு வகையில், இன்றைக்கு இருக்கக் கூடிய விஞ்ஞான வளர்ச்சியில், திரித்துப் பகிரக் கூடிய வாய்ப்பு இருப்பதை நாம் அறிந்திருத்தல் அவசியம்!

    அதற்கான சில பாதுகாப்பு குறித்த தகவலைப் பார்ப்போமா?

    1. உங்கள் சுய குறிப்புகளின் பாதுகாப்பு குறித்து, நீங்கள் முடிவு எடுக்க ஏதுவாக, எது மற்றவர்களுக்குத் தெரியவேண்டும்? எது தெரிய வேண்டுவது இல்லை என்பதைத் தீர்மானித்து, அதற்கேற்றார் போல, உங்கள் சுயதகவல் பரிமாற்றம் செய்யலாம். இதோ அதற்கான புரிதல் படம்;

    சுரேஜமீ1

    1. நிழற்படங்களை யாருடன் நாம் பகிரவேண்டும் என்பதையும்; அதன் பாதுகாப்பை எப்படி உறுதிப்படுத்துவது என்பதையும் விளங்கிக் கொள்ள, கீழுள்ள படத்தைப் பார்க்க;

    சுரேஜமீ2

    பெரும்பாலும், நிழற்படத்தின் வலதுமுனையில், பூமிப் பந்து போன்ற உருண்டைச் சின்னத்தில், சொடுக்க, அது மேற்காணும் தகவல்களைப் பகிரும்!  அதற்கேற்றவாறு, உங்களின் நிழற்படம், யார் பார்க்க வேண்டும் என்பதை நீங்கள் தீர்மானிக்கலாம்.  குறிப்பாக, சில படங்களை நாம் சேமிப்பில் வைக்கவும் முகநூலை உபயோகிக்கலாம்.  அத்தகைய சூழலில், நிழற்படங்களை நாம் மட்டுமே பார்க்கக் கூடிய வகையில், பூட்டு சின்னம் (Only Me) அமைப்பில் சொடுக்க, அப்படம் மிகுந்த பாதுகாப்போடு, நாம் மட்டும் பார்க்க ஏதுவாக அமையும்.

    என்ன உபயோகமான தகவல்தானே?

    1. அடுத்து, நம்மை யார் தொடுப்புச் செய்வது; நம் நிலைத்தகவலில் அடுத்தவரை தகவல் பதிய அனுமதிப்பதா? வேண்டாமா?

    சுரேஜமீ3

    1. நமக்கு யார் நட்பு விண்ணப்பம் அனுப்புவது என, ஒவ்வொன்றையும், நேர்த்தியாக, நாமே தீர்மானிக்க முடியும்; அதற்கான விளக்கப் படம் கீழே கொடுக்கப் பட்டுள்ளது!

     

    சுரேஜமீ4

     

    1. சிலவேளைகளில், நாம் நல்லவர் என நட்பு விண்ணப்பங்கள் வரவேற்கும்போது, போகப் போக, அவர் பகிரும் தகவல்கள், நமக்கு சில சங்கடங்களையோ, அல்லது கருத்து ஒவ்வாமையையோ ஏற்படுத்தலாம். அத்தகைய வேளையில், நீங்கள் அவருடனான தொடர்பைத் துண்டிக்க நினைக்கலாம்.  அதை எவ்வாறு செய்வது என்பதை விளக்கும் சுட்டி, இதோ உங்களின் பார்வைக்கு;

    சுரேஜமீ5

    மேற்கூறிய இந்த ஐந்து தகவல்களும், உங்கள் முகநூல் கணக்கை நிச்சயம் ஒரு பாதுகாப்பாக வைத்திருக்கத் தேவையான மிக முக்கியக் கூறுகளாக இருக்கும் என நம்புகிறேன்!  மேலும் அதிகத் தகவல்களுக்கு, முகநூல் பக்கத்தில் உள்ள பாதுகாப்பு குறித்த விளக்கங்களைப் பார்க்கவும்!

     

    ஏகிநிற்பது என்ன? (Whatsapp):

    அடுத்து நாம் காண இருப்பது ஏகிநிற்பது என்ன? (Whatsapp) என்ற தகவல் தொடர்பு முறை

    இன்றைய அலைபேசி உலகில், அவரவர் கைகளை அலங்கரிப்பதில், நவீன கைப்பேசிகளின் பங்கை யாராலும் மறுக்க முடியாது.  அவற்றுள் இரு முக்கிய மென்பொருள்கள் உலகளாவி இருக்கின்றன.  அவை முறையே ஆன்ராய்டு மற்றும் ஆப்பிள் இயக்கிகள்!  இவற்றுள் ஆன்ராய்டு இயக்கி மிக எளிமையாக, அனைத்து பயன்பாட்டுக்கும் சாதகமாக இருப்பதாக எண்ணுகிறேன்.  சமீப காலமாக, “ஏகிநிற்பது என்ன” எனும் பயன்பாட்டில், ஆன்ராய்டு இயக்கி மூலமாக, ஒருவருக்கொருவர் பேசவும் முடிவதாக அறிகிறேன்.

    மிகக் குறுகிய காலத்தில், மிகப் பரவலாக்கப் பட்ட மகத்தான ஒரு தகவல் தொடர்பு முறை ஏகிநிற்பது என்ன? (Whatsapp) என்று சொன்னால் மிகையாகாது.  இது முதன் முதலில் புழக்கத்திற்கு வந்தது 2009ம் ஆண்டு.  கடந்த ஐந்து ஆண்டுகளில், இதன் அபரிமித வளர்ச்சி கண்டு, முகநூல் நிறுவனத்தார், இந்த தொடர்பு முறையை, அதன் உரிமையாளர்களிடமிருந்து, சற்றேறக்குறைய ரூபாய் இரண்டாயிரம் கோடிக்கு வாங்கியிருக்கிறார்கள், என்றால், இதன் வளர்ச்சி, எத்தகையது என்பதை வாசகர்களாகிய நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள்!

    கடந்த ஜனவரி 2015 வரை, சுமார் 70 கோடி உபயோகிப்பாளர்கள் இருப்பதாக ஒரு தகவல் கூறுகிறது! அதில், சுமார் 7 கோடி உபயோகிப்பாளர்கள் இருப்பதாகவும் சொல்கின்றனர். (http://en.wikipedia.org/wiki/WhatsApp)

    இன்று ஒவ்வொரு அமைப்பு சார்ந்த குழுமங்களும் பெரும்பாலும், தன் அங்கத்தினர்களுடனானத் தொடர்புக்கு, ஏகிநிற்பது என்ன? (Whatsapp) என்ற முறையைத் தான் பயன்படுத்துகின்றன.

    அவை பற்றிச் சில குறிப்புகள்!

    1. இதில் கணக்குத் துவங்குவதற்கு அடிப்படைத் தேவை ஒரு நவீன கைப்பேசி.
    2. ஏகிநிற்பது என்ன? (Whatsapp) என்ற பயன்பாட்டுத் தளத்தின் மூலம், நாம் செய்திகள், நிழற்படங்கள் மற்றும் காணொளிக் காட்சிகளை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள முடியும்.

    குறைந்த பட்ச பாதுகாப்பு முறைகள்

    1. பல நேரங்களில், நம்முடைய கவனக் குறைவின் காரணங்களால், மிகுந்த கன அளவுடைய காணொளிக் காட்சிகள் மற்றும் நிழற்படங்கள், தானியங்கிப் பதிவிறக்கம் (Auto download) செய்யப்படுகின்றன. அதனால் நமக்கு ஏற்படும் பொருட்செலவு மிகுதியாகும். இதைத் தடுப்பதற்கு, கீழ்காணும் சுட்டியைக் கவனிக்கவும்.

    சுரேஜமீ6

    2. நம்முடைய பயனீட்டு அளவுகளை அவ்வப்போது கண்காணிப்பது எப்படி என்பதை விளக்கும் சுட்டி

    சுரேஜமீ7

    3. சில வேளைகளில், விரும்பத்தகாத செய்திகளும், காணொளிப் படங்களும் வரும்போது, அத்தகைய செய்தி அனுப்பும் நபர்களைத் தடை செய்வது எப்படி என்பதை விளக்கும் படம்.

    சுரேஜமீ8

     

    4. பலருடைய அனுபவமே, நாம் விரும்பும்பொழுது, நம்முடைய கைப்பேசியில், தேவையான நிழற்படமோ, காணொளியோ எடுக்கப் போதுமான இடவசதி இல்லாமல் இருக்கும்.  இதற்குக் காரணம், நாம் அவ்வப்பொழுது அழிக்காமல் வைத்திருக்கும் சேமிப்புச் செய்திகளும்; படங்களுமே!  அதனை எவ்வாறு சுத்தப்படுத்தி கைப்பேசிக்கான சேமிப்புப் பகுதியை தகுதிப்படுத்துவது என்பதை விளக்கும் படம்.

    சுரேஜமீ9

    பெரும்பாலும் நாம் அறிந்த செய்திகளாகவே இருந்தாலும், சில வேளைகளில் அனைத்தும் ஒருங்கிணைத்து ஒரு தொகுப்பாகப் பார்க்கும்போது அது நம் மனதில் எளிதில் தங்கிவிட ஏதுவாக இருப்பதால், நிச்சயம் உங்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.

     

    குறியீட்டுச் செய்தி  (Twitter):

    தகவல் பரப்பும் களமாக ஒரு குறுகிய காலத்தில் அசுர வேகத்தில் வளர்ந்ததுதான் இந்தக் குறியீட்டுச் செய்தி(Twitter) என்று சொன்னால் மிகையாகாது.  2006ம் ஆண்டில் நான்கு நபர்கள் ஒன்று சேர்ந்து உருவாக்கிய இந்தத் தகவல் பரிமாற்ற முறை, இன்று உலகில் ஏறக்குறைய 28 கோடி பயனீட்டாளர்களைக் கொண்டதாக உள்ளதாக ஒரு இணையச் செய்தி கூறுகிறது. (http://en.wikipedia.org/wiki/Twitter)

    அவை பற்றிச் சில குறிப்புகள்!

    • இது பெரும்பாலும் செய்தியைத் துரிதமாக அனுப்புவதற்கு உதவுகிறது.
    • மிக அதிக பட்சமாக 140 எழுத்துக்கள் மட்டுமே உபயோகிக்க முடியும்.
    • மிக அதிகபட்ச வாசகர்களைச் சென்றடையும் வல்லமை பெற்றது.
    • வணிக உபயோகத்திற்கு ஏற்ற உன்னதமான தகவல் பரிமாற்ற முறை!

     

    முடிவுரை

    இதுவரை நாம் பார்த்த இந்த மூன்று விதமான தகவல் பரிமாற்றக் களங்களையும், அதற்கேற்ற செயல் வடிவத்தில் பயன்படுத்த கீழ்க்காணும் விதத்தில் பிரிக்க முற்படுகிறேன்.

    1. உறவுகளோடு ஒட்டி இருக்க ‘முகநூல்’ (Facebook)
    2. குறுஞ்செய்திகள் மற்றும் காணொளிப் பரிமாற்றத்திற்கு ‘ஏகி நிற்பது என்ன? (Whatsapp)
    3. வணிக மற்றும் வாடிக்கையாளர் சேவைக்கு ‘குறியீட்டுச் செய்திகள்’ (Twitter)

    ஆக, நம் வாழ்வில் அன்றாடம் பயன்பாட்டில் உள்ள மிக முக்கிய மூன்று தகவல் பரிமாற்று வழிமுறைகளைப் பற்றி எனக்குத் தெரிந்த வகையில், உங்களின் சிந்தனைக்குப் பகிர்ந்த இந்த விடயங்கள், உங்களுக்கு உபயோகமாக இருந்திருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

    Share
  • பயன்மிகு இணையவழிச் சேவைகள் – இணைய நூலகங்கள்

    —பி. தமிழ் முகில்.

     

    பயன்மிகு இணையவழிச் சேவைகள்

    இணைய நூலகங்கள்

     நூலகங்கள் நம் எண்ணங்கள், கனவுகள்,திறன்கள் என அனைத்தையும் தன்னுள் காத்து வைத்திருக்கும் பொக்கிஷ கிடங்கு. ஒவ்வொரு தனி மனிதரின் ஆர்வத்திற்கும், தேடல்களுக்கும் வடிகாலாக விளங்குபவை நூலகங்கள்.

    இணையத்தின் வாயிலாக பல நூலகங்கள்  நூல்களை தரவிறக்கம் செய்யும் வசதியுடனுன், இலாப நோக்கின்றி புத்தகங்களை தரவேற்றும் தனிநபர்கள் பலரின் வலைப்பூக்களும்   நமக்கு இலவசமாக கிடைக்கின்றன.அத்தகைய நூலகங்கள் மற்றும் வலைப்பூக்கள் குறித்து இக்கட்டுரையில் காணலாம்.

     

    இணைய ஆவணகம்( Internet Archive : Digital Library )

    Internet Archive எனப்படும் இணைய ஆவணகம், இணையத்தில் செயல்படும் இலாப நோக்கற்ற எண்ணிம நூலகம் ( Digital Library ) ஆகும். இந்நூலகத்தில் பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட நூல்கள், திரைப்படங்கள், மென்பொருட்கள், பத்திரிகைகள், பாடல்கள்,லிப்ரி வாக்ஸ் ( LibriVox)  ஒலி நூல்களின் தொகுப்பு, நுண் படங்கள் ( Micro film)என அனைத்தும் கிடைக்கின்றன.

     இந்நூலகத்தில் உலகில் உள்ள பல இணைய நூலகங்களின் தொகுப்பும் கிடைக்கின்றன. எடுத்துக்காட்டாக, அமெரிக்க நூலகங்கள், கனேடிய நூலகங்கள், ஐரோப்பிய நூலகங்கள்,நாசா புகைப்படங்கள், மருத்துவ பாரம்பரிய நூலகத்தின் ( The Medical Heritage Library ) நூற்தொகுப்பு, இறையியல் நூற்தொகுப்பு , சீன நூல்கள், இஸ்லாமிய புத்தகங்களின் தொகுப்பு என பல வகையான நூல்களின் தொகுப்பு இந்த இணைய ஆவணகத்தில் கிடைக்கின்றது.

    இந்நூலகத்தை கீழ்காணும் சுட்டியில்  பயன்படுத்தலாம்.

    https://archive.org/

     இந்நூலகத்தில் இருக்கும் நூல்களை பல வடிவங்களில் ( format ) பெறலாம். Pdf, zip file, torrent, epub  என பல வடிவங்களில் தரவிறக்கம் செய்யும் வசதியும் கிடைக்கிறது.

     

    திறந்த நூலகம் ( Open Library )

    Open Library  என்றழைக்கப்படும் திறந்த நூலகம் பல பொது தளங்கள் மற்றும் இப்போது அச்சில் இல்லாத பல பழைய நூல்களையும் இணையத்தில் படிக்க வாய்ப்பினை ஏற்படுத்தித் தருகின்றது.

    திறந்த நூலகம் அனைவருக்கும் பொதுவானது, இலவசமானது.  யார் வேண்டுமானாலும் இந்நூலகத்திலுள்ள நூல்களின் விபரங்களை மாற்றி அமைக்கலாம். இந்நூலாகத் திட்டத்தின் முக்கிய நோக்கமே, இதுவரை வெளியாகியுள்ள அனைத்து நூல்களுக்கும், ஒரு நூலுக்கு ஒரு வலைப்பக்கம் வீதம் உருவாக்குவதே ஆகும்.

    இந்நூலகத்தில் உள்ள நூல்களில் ஏதேனும் தட்டச்சுப் பிழைகள் இருப்பின், அவற்றை திருத்தலாம், புதிதாக புத்தகங்களை பதிவேற்றலாம், தவறாக குறிப்புகள் இருப்பின் அவற்றை திருத்தலாம்.புதிய தகவல்களுடன் கூடிய நிரல்பலகை ( widget ) சேர்க்கலாம்.

    திறந்த நூலகம் 23 மில்லியனுக்கும் மேலான நூல்களின் விபரங்களை தருகிறது. இந்நூலகத்தில் இருக்கும் நூல்கள் பயனர்களின் தேவைக்கேற்ப பல கோப்பு வடிவங்களில் ( file formats ) கிடைக்கிறது.

    PDF, Plain text, ePub, DjVu, Kindle, DAISY ஆகிய கோப்பு வடிவங்களில் நூல்கள் கிடைக்கின்றன. இதில் DAISY என்பது Digital Accessible Information SYstem என்பதைக் குறிக்கின்றது. எண்ணிம ஒலி  நூல்கள், வார மற்றும் மாத பத்திரிகைகள் இவற்றை வாசிக்க இம் மென்பொருள் பயன்படுகிறது. DAISY அச்சுப் பிரதிகளுக்கு மாற்றாக கிடைக்கும் ஒலிக் கோப்புகள் ஆகும். இது பார்வையற்றோர், பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் என அனைவரும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் கிடைக்கிறது.

    இந்நூலகத்தினை கீழ்க்காணும் இணைய முகவரியில் பயன்படுத்தலாம்.

    http://www.openlibrary.org/

     

    சென்னை  நூலகம்  

    திரு.கோ.சந்திரசேகரன் என்பவரின் தனிப்பட்ட முயற்சியால் உருவான நூலகம் ஆகும். இந்நூலகம் வணிக நோக்கில் இயங்கும் நூலகம் ஆகும். இந்நூலகம் கெளதம் இணைய சேவைகள் ( Gowtham Web Services ) நிறுவனத்தினரால் நடத்தப்படும் இணையதளம் ஆகும். இந்நூலகத்தில் பழந்தமிழ் இலக்கியங்கள் முதல் தற்கால இலக்கியங்கள் வரை கிடைக்கின்றன. உறுப்பினர்களாக இணைவோருக்கு இந்நூலகத்தில் தரவேற்றம் செய்யப்பட்டுள்ள நூல்களை pdf கோப்புகளாக தரவிறக்கம் செய்து கொள்ளும் வசதியையும், கெளதம் பதிப்பகத்தாரால் வெளியிடப்படும் நூல்களை  20 % சலுகை விலையில் பெறும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது.

    இந்நூலகத்தில் இலவசமாக கிடைக்கும் மின்னூல்களை கீழ்காணும் வலைப்பக்கத்தில் பார்த்துக் கொள்ளலாம்.

     http://www.chennailibrary.com/ebooks/ebooks.html

    இந்நூலகத்தின் இணையதள முகவரி

     http://www.chennailibrary.com

     

    நூலகம் திட்டம்  (noolaham.org) :

    நூலகம் திட்டம் ஈழத்து தமிழ் நூல்களையும் எழுத்து ஆவணங்களையும் மின்வடிவில் இணையத்தில் பேணி பாதுகாத்து வைப்பதற்கான இலாப நோக்கில்லா தன்னார்வ கூட்டுழைப்பாகும்.

    இத்திட்டத்தில் பங்களிக்க விரும்புவோர் எவர் வேன்டுமானாலும், எந்த நூலை வேண்டுமானாலும் மின்னூலாக்கம் செய்யலாம். குறிப்பாக,  மின்னூலாக்கம் செய்யப்படும் நூல் ஈழத்து எழுத்தாளரால் எழுதப் பட்டதாக இருக்க வேண்டும்.

    இந்நூலகத்தில் கிட்டத்தட்ட ஐயாயிரம் ஈழத்து நூல்கள், ஆறாயிரத்துக்கும் மேலான இதழ்கள், இரண்டாயிரத்துக்கும் மேலான பத்திரிகைகள் கிடைக்கின்றன.

    இந்நூலகத்தினை கீழ்காணும் இணையதளத்தில் பயன்படுத்தலாம்.

    http://www.noolaham.org

     

    மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்பு  திட்டம் ( Project Madurai ):

    உலகளாவிய தமிழர்கள் இணையத்தின் வாயிலாக ஒன்று கூடி தமிழ் இலக்கியங்களின் மின்பதிப்புகளை உருவாக்கி, உலகில் உள்ள எவர் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ள இலவசமாக வழங்கும் சேவை முயற்சியே மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்பு திட்டம் ஆகும்.

    இத்திட்டத்தில் எவர் வேண்டுமானாலும் தங்களது பங்களிப்பை வழங்கலாம். தமிழ் நூல்களை மின்னூலாக்கம் செய்து தரவேற்றலாம். புதிதாக தரவேற்றப்பட்டுள்ள நூல்களை ஒப்பச்சு ( Proof Read ) செய்தும் நம் பங்களிப்பை இந்நூலகத்துக்கு வழங்கலாம்.

     இத்திட்டத்தின் வாயிலாக பல இலக்கண இலக்கிய நூல்களையும் நாம் தரவிறக்கி பயன்படுத்திக் கொள்ளலாம்.

    இத்திட்டத்தினை  கீழ்காணும் இணையதளத்தில் பெறலாம்.

    http://www.projectmadurai.org/index.en.html

    இத்திட்டத்தின் கீழ் கிடைக்கும் புத்தகங்களின் பட்டியலை இங்கு காணலாம்.

    http://www.projectmadurai.org/pmworks.html

    புத்தகங்களை  pdf   கோப்புகளாகவும், Unicode, TSCII  எழுத்துருக்களிலும் பெற்றுக் கொள்ளும் வசதியும் கிடைக்கிறது.

     

    தமிழ் இணைய கல்விக்கழகம் ( Tamil Virtual University) :

    தமிழ் இணைய கல்விக் கழகத்தின் மின் நூலகம் தமிழ் இலக்கண, இலக்கிய நூல்கள், சங்க இலக்கிய நூல்கள், காப்பியங்கள், சமய இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள்,நெறி நூல்கள், நாட்டுப்புற இலக்கியங்கள், பாரதியார், பாரதிதாசன் கவிதைகள், கவிமணி தேசிக விநாயகம் கவிதைகள், கவிஞர் கண்ணதாசன் படைப்புகள் என்று பலவகையான நூல்களும் கிடைக்கின்றன.

     சங்க இலக்கிய நூல்களுக்கான உரைகளும் இந்நூலகத்தில் கிடைக்கின்றன. ஒரு நூலினுள் நமக்குத் தேவையானவற்றை குறிச்சொற்களின் உதவியுடன் தேடும் வசதியும் கிடைக்கிறது.

    இந்நூலகத்தில் பால்ஸ் அகராதி (Pal’s dictionary ), ஆங்கிலம் தமிழ் அகராதி,சென்னை பல்கலைக்கழக ஆங்கில தமிழ் அகராதி, தமிழ் தமிழ் அகரமுதலி, தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் உச்சரிப்புடன் கூடிய மின் அகராதி, சங்க இலக்கிய அகராதி என்று பல அகராதிகள் கிடைக்கின்றன.

    நூல்கள், அகராதிகள், நிகண்டுகள், கலைச்சொற்கள், சுவடிக் காட்சியகம், பண்பாட்டுக் காட்சியகம் என்று பல சேவைகள் இந்நூலகத்தில் கிடைக்கின்றன.

    இணைய கல்விக் கழகத்தின் நூலகத்தினை கீழ்க்காணும் இணைய பக்கத்தில் பெறலாம்.

    http://tamilvu.org

    செய்யுட் பாடல்கள், பாடல்களுக்கான உரைகள் என அனைத்தும் தெளிவாக, பயனாளர்கள் எளிதாக பெற்றுக் கொள்ளும் வகையில் கிடைக்கிறது.

     

    திறந்த வாசிப்பகம் ( Open Reading Room):

      தமிழ் இலக்கியங்களின் தொகுப்பாக இணையத்தில் செயல்படும் நூலகம் திறந்த வாசிப்பகம் ஆகும். இங்குள்ள நூல்கள் அனைத்தும் பயனாளர்களுக்கு இலவசமாக கிடைக்கிறது. நாளும் புதிதாக நூல்கள் பலவும் தரவேற்றம் செய்யப் படுகிறது.

    இத்திட்டம் சிங்கப்பூரை சேர்ந்த பத்திரிகையாளர் மற்றும் தமிழ் மொழி ஆர்வலர் திரு. இரமேஷ் சக்ரபாணி அவர்களின் முயற்சியால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

      திறந்த வாசிப்பகத்தினை கீழ்காணும் இணைய பக்கத்தில் காணலாம்.

      http://www.openreadingroom.com/

     

    பிரித்தானிய தமிழ் நூற்சேகரம், தமிழ் மரபு அறக்கட்டளை:

     பிரித்தானிய தமிழ் நூற்சேகரம் என்கிற இத்திட்டம் பிரித்தானிய நூலகங்களும், தமிழ் மரபு அறக்கட்டளை (Tamil Heritage Foundation)

    அமைப்பும் இணைந்து மேற்கொள்ளும் திட்டம் ஆகும். இத்திட்டத்தில் தற்சமயம் பத்து நூல்கள் மட்டுமே கிடைக்கின்றன.இத்திட்டம் இந்திய மின் நூலகம் (Digital Library of India), மதுரை திட்டம் (Project Madurai), Million books project,TADILNET ஆகியோரின் கூட்டு முயற்சியுடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

      http://www.tamilheritage.org/uk/bl_thf/bl_thf.html

     தமிழ் மரபு அறக்கட்டளையின் வலைப்பூவில்  பல தமிழ் ஆவணங்கள், அரிய பழைய தமிழ் நூல்களும் தரவிறக்கம் செய்யும் வசதியையும் நமக்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர்.

    தமிழ் மரபு அறக்கட்டளையின் வலைப்பூவினை கீழ்க்காணும் இணைய முகவரியில்  பார்த்து பயன் பெறலாம்.

    http://tamilheritagefoundation.blogspot.ca/

    தமிழ் மரபு நூலகத்தின் வலைப்பூவினை கீழ்காணும் இணைப்பில் காணலாம்.

    http://thfreferencelibrary.blogspot.ca/

     

    தமிழகம் வலை வழங்கும் தமிழ் மின் நூலகம் :

       தமிழகம் வலை வழங்கும் தமிழ் மின் நூலகத்தில் தமிழகம் வலையின் மின் வெளியீடுகளாக டாக்டர். பி.ஆர். அம்பேத்கரின் நூல்கள், பெரியாரின் நூல்கள், மார்க்ஸிச நூல்கள், பல எழுத்தாளர்களின் நாட்டுடைமையாக்கப்பட்ட  நூல்களும் கிடைக்கின்றன.

    இணையத்தில் இயங்கும் இன்ன பிற தமிழ் எண்ணிம நூலகங்களுக்கான இணைப்புகளும், நூல் விற்பனைத் தளங்கள் மற்றும் நூல் தரவு தளங்களுக்கான இணைப்புகளும் கிடைக்கிறது.

     

    தமிழகம் வலை வழங்கும் நூலகத்திற்கான இணைப்பு இதோ

    http://thamizhagam.net/tamillibrary/tamillibrary.html

     

    இலவச தமிழ் மின்னூல்கள் :

     மின் புத்தகங்களை படிக்க இன்று பல வகையான கருவிகள் கிடைக்கின்றன. அமேசான் (Amazon), பார்ன்ஸ் & நோபிள் (Barnes & Noble), புக்கீன் (Bookeen), எக்டாகோ (Ectaco), கோபோ (Kobo), பாக்கெட் புக் (Pocket Book) போன்ற நிறுவனங்கள் வழங்கும் இக்கருவிகளில் பயன்படுத்த ஏதுவாக மின் புத்தகங்களை வடிவமைத்து வழங்கும் தளம் தான் FTE ( Free Tamil Ebooks).

      பழந்தமிழ் நூல்களை மின்னூலாக்கம் செய்து சேமிக்க பல திட்டங்கள் செயல்படுகின்றன. புதிதாக தற்காலத்தில் எழுதும் எழுத்தாளர்களின் நூல்களை  மின்னூலாக்கம் செய்து அந்நூல்களை Creative Commons உரிமத்துடன் வெளியிடப்படும் போது, அந்த புத்தகத்தை எழுதிய ஆசிரியருக்கான உரிமைகள் பாதுகாக்கப் படுகின்றது. அதே வேளையில், அப்புத்தகங்களை எவர் வேண்டுமானாலும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம், மற்றவருடன் பகிர்ந்து கொள்ளலாம்.

     இதன் மூலம் புதிதாக வெளியாகும் தமிழ் புத்தகங்களை நாம் எளிதாக பெறலாம்.

     இலவச தமிழ் மின்னூல்களை கீழ்காணும் இணையதளத்தில் பெறலாம்.

     http://freetamilebooks.com/

     

    கூகுள் புத்தகங்கள் : 

    கூகுள் நிறுவனம் வழங்கும் சேவை கூகுள் புக்ஸ் ஆகும். இத்தளத்தில் தமிழ் புத்தகங்களும் கிடைக்கின்றன.  இச்சேவையை கீழ்காணும் தளத்தில் பெறலாம்.

    http://books.google.com/

      கூகுள் புத்தகங்களை தரவிறக்கம் செய்ய விரும்பினால், கீழ்காணும் கூகுள் ப்ளே பக்கத்தில் சென்று தரவிறக்கி, நமது மின்னஞ்சல் சேமிப்பில் சேர்த்து வைத்துக் கொள்ளலாம்.

    https://play.google.com/books

     

    குறிப்பு :

    இக்கட்டுரையில் பயன்படுத்தியுள்ள படங்கள் அனைத்தும் இங்கு குறிப்பிட்டுள்ள இணையதளங்களில் இருந்து எடுக்கப்பட்டவை.

    Share
  • பயன்மிகு இணையவழிச் சேவைகள் கட்டுரைப் போட்டி முடிவு

    அன்பினிய நண்பர்களுக்கு,

    Google_Appliance

    வணக்கம். சென்ற மாதம் (மார்ச் 1, 2015)  ‘பயன்மிகு இணையவழிச் சேவைகள்’ என்ற போட்டியை அறிவித்திருந்தோம். சிறந்த கட்டுரை படைப்பவர்களில் மாதம் ஒருவருக்கு பரிசு வழங்குவதாக அறிவித்திருந்தோம். இந்த முறை திருமிகு பி. தமிழ்முகில் நீலமேகம் எழுதிய ஒரு கட்டுரை மட்டுமே வந்துள்ளது. இப்போட்டியின் நடுவர் திரு ஐயப்பன் அவர்களுக்கு பரிசீலனைக்காக அனுப்பியதில் அவர் இக்கட்டுரை குறித்த தம் கருத்துகளை அளித்திருக்கிறார். திருமிகு தமிழ்முகில் நீலமேகம் அவர்களை இந்த மாத வெற்றியாளராக அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். வருகிற மாதங்களில் இன்னும் பல பயனுள்ள கட்டுரைகள் வரும் என்று நம்புகிறோம்.

    திரு ஐயப்பன் அவர்களின் போட்டி முடிவு

    வணக்கம்

    கட்டுரையாளருக்கு வாழ்த்துகள்.

    இணையத்தில் இன்று பெரும்பாலும் உபயோகத்தில் இருக்கும் பல பயன்பாடுகளில் ஒன்றாக கட்டுரையாளர் வரைபடச் சேவையை தேர்ந்தெடுத்து முத்தான தகவல்களை தந்திருக்கிறார். கூகிள் தொடர்ந்து இந்திய இரயில் தடப் பயணம் குறித்து வரும் செய்திகள் முதற்கொண்டு பல விவரங்களை மிக நேர்த்தியாக, புரியும் வண்ணம் தந்திருப்பது அருமை.

    இணைய பயண்பாடுகளின் ஒரு பகுதியை மட்டும் குறித்து இவர் எழுதி இருப்பது நன்றாக இருந்தாலும் இன்னும் எத்தனையோ விவரங்கள் தமிழில் பதியப் படாமல் இருக்கின்றன. இன்றைய பெரும்பாலான மக்கள் உபயோகிக்கும் தொலைபேசிகள் ஆரம்பித்து வீட்டில் பார்க்கும் தொலை காட்சி வரை இணையத்தின் ஆக்டபஸ் கரங்கள் நீண்டிருக்கின்றன. அவற்றில் நன்மையும் உண்டு தீமையும் உண்டு. அவற்றை நெறிபடுத்தி தேவையான பல விவரங்களை கட்டுரையாளர் தொகுத்து சிறு மின்னூலாக வழங்கினால் பலருக்கும் நல்லதொரு பயனுள்ள ஒன்றாக இருக்கும்.

    இந்தக் கட்டுரையாளரை நான் வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கிறேன். மீண்டும் வாழ்த்துகள்.

    அன்புடன்
    ஐயப்பன்

    இந்தப் போட்டி, மார்ச்சு 2015 முதல் பிப்ரவரி 2016 வரை மாதந்தோறும் நடைபெறும். ஒவ்வொரு மாதமும் போட்டிக்கு வரும் கட்டுரைகளில் சிறந்த ஒரு கட்டுரைக்கு ரூ.100 (நூறு ரூபாய்) பரிசாக வழங்கப்படும். ஓராண்டு முடிவில் தேர்வு பெற்ற 12 கட்டுரைகளிலிருந்து ஒரு கட்டுரைக்கு ரூ.1000 (ஆயிரம் ரூபாய்) பரிசு வழங்கப்படும். தேர்வு பெறும் கட்டுரைகள் தொகுக்கப்பெற்று, தாரிணி பதிப்பகத்தின் வாயிலாகப் புத்தகமாக வெளியாகும். அதன் அச்சுப் பிரதி, கட்டுரையாளருக்கு அனுப்பி வைக்கப்படும் என்பதையும் மீண்டும் நினைவூட்டுகிறோம். பயனுள்ள நல்ல கட்டுரைகளை வரவேற்கிறோம் நண்பர்களே. அனுப்ப வேண்டிய முகவரி – vallamaieditor@gmail.com

    Share
  • மனதில் நிறைந்த மக்கள் திலகம்

    –புவனா.

    எம்.ஜி.ஆர். எனும் மூன்றெழுத்து

    எம்.ஜி.ஆர். எனும் மூன்றெழுத்து…

    தமிழ் என்பது மூன்றெழுத்து.. சினிமா என்பது மூன்றெழுத்து.. அந்த தமிழ் சினிமா உலகில் தனக்கென தனி இடம் பிடித்த மூன்றெழுத்து..எம்.ஜி.ஆர். என்னும் சிகரம். அந்தச் சிகரத்திற்கு அறிமுகம் தேவையில்லை.

    இளம் சூரியன் உந்தன் வடிவானதோ..
    செவ்வானமே உந்தன் நிறமானதோ ..
    பொன் மாளிகை உந்தன் மனமானதோ ..
    என்ற பாடலுக்கேற்ப மாளிகை போன்ற மனதை உடையவர் எம்.ஜி.ஆர்.

    எம்.ஜி.ஆர். என்ற பெருமழை தந்த ஈரத்தால் இன்னும் வாடாமல் தழைத்தோங்கும் பயிர்கள் (உயிர்கள்) ஏராளம்.

    அவர் பிறந்தது இலங்கையாக இருந்தாலும் .. தஞ்சம் புகுந்தது தமிழ்நாட்டில். அதனால்தானோ என்னவோ “வந்தாரை வாழவைக்கும் தமிழகத்தின் பண்பு – அவரைத் தேடி வந்தவரை எல்லாம் வாழவைத்துக் கொண்டிருந்தார்.

    நடிகரில் மனிதர்: மனிதர்கள் நடிகராக வருவது இயல்பு. ஆனால், “நடிகருள் மனிதராக மக்கள் திலகம் வாழ்ந்தவர்”. இன்னும் சொல்லப் போனால் மனிதருள் கடவுளாகவே பலருக்குத் தென்பட்டவர்.

    அவரது தோற்றம் போலவே எண்ணமும் அழகு..அதனால்தான் புகழின் உச்சத்தையே அவர் அடைந்தார். திரை உலகில் அவர் தான் ஏந்தி வரும் ஒவ்வொரு வேடத்தையும் அதற்கான முயற்சிகளையும் தானே மேற்பார்வை காட்டினார்; உதாரணம் – அவர் எங்க வீட்டு பிள்ளையில் பாடி நடித்ததை பார்த்து மக்கள் அவரை தங்கள் வீட்டுப் பிள்ளையாகவே பார்த்தனர். எல்லா படங்களிலும் சண்டைக் காட்சிகள் அமைப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டினார். ஏன்? தன்னை ஒரு பயில்வானாக காட்டிக்கொள்ளவா? இல்லை. ஸ்டன்ட் நடிகரின் பிழைப்பிற்காகவே தனது எல்லா படங்களிலும் சண்டைக் காட்சி வைத்த ஒரே நடிகர் நம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தான். மனிதாபிமானத்தின் காவலராக இறுதி வரை இருந்தார்.

    திரையில் அவர் நடித்த படங்களில் இடம்பெற்ற பாடல்களில் கருத்தாழம் நிறைந்தது. ஏதாவது ஒரு நல்ல விஷயத்தை மக்களுக்கு பாடல் மூலம் பறை சாற்றிக் கொண்டிருந்தார். அது 2 வயது குழந்தை முதல் 100 வயது வரையிலான வயோதிகர் வரை சென்று சேர்ந்தது.

    விழி போல எண்ணி நம் மொழி காக்க வேண்டும்..
    தவறான பேர்க்கு நேர் வழி காட்ட வேண்டும்..

    என்ற வரிகளுக்கேற்ப தமிழினத்திற்காக பாடுபட்ட ‘மன்னாதி மன்னன்’ .. அவர்.

    அவரது பாடல்களைக் கேட்டாலே புத்துணர்வு பிறக்கும். அது காதல் பாடல்களாக இருந்தாலும் சரி.. நல் அறிவுரை கூறும் பாடல்களாக இருந்தாலும் சரி.. எதிர்மறை எண்ணங்களே இல்லாது பார்த்துக் கொண்டிருந்தார். பாடல்கள் மட்டுமல்லாமல் அவருடைய படத்தின் பெயரும் எதிர்மறை எண்ணத்தைத் தவிர்த்து .. உதாரணம் – தாய் சொல்லை தட்டாதே.. மன்னாதி மன்னன், நல்லவன் வாழ்வான், தர்மம் தலைகாக்கும், காவல்காரன், ஒளி விளக்கு, இன்னும் பல..

    இந்தப் பெயர்களால் ஒரு விதமான நம்பிக்கை மனதில் தோன்றுகிறதல்லவா.. தானும் உயர்ந்து தன்னை சார்ந்தவரையும் உயர்த்துபவன் தான் தலைவன். அந்த வகையில் எம்.ஜி.ஆர். ஒரு உண்மையான தலைவன்.

    எதோ நடித்தோம், பணம் சம்பாதித்தோம், மறைந்தோம் என வாழும் நடிகர்களுக்கு மத்தியில் அவரின் சிந்தனையே சொல்லானது.. சொல்லே செயலானது.. அந்த செயலும் புனிதமானது. அந்த வகையில் அவர் புத்தனாகவும் யேசுவாகவும் கண்ணில் தென்பட்டார்.

    அவர் பற்றி எழுதும் இந்தக் கட்டுரையில் எனக்கு தெரிந்த இருவரின் அனுபவங்களை இங்கே குறிப்பிடுகிறேன்.

    1. பட்டப்படிப்பு வரை படித்த இளைஞன் ஒருவர் – அரசாங்க உத்தியோகத்திற்கு முயற்சி செய்த காலத்தில், பல முறை தேர்வு எழுதியும் பலனில்லை. தேர்ச்சி பெறவில்லை. குடும்ப சூழலின் காரணமாக வேலைக்காக மிகவும் பாடுபட்ட காலமது. மனம் வெறுத்து இதுதான் கடைசிமுறை என நினைந்து தேர்வு எழுத சென்றார். அதில் ” உனக்குப் பிடித்த தலைவர் பற்றி” ஒரு கட்டுரை வரையும்படி கேள்வி இருந்தது. அவர் உடனே.. எம்.ஜி.ஆர். எனும் தலைவர் என்னும் தலைப்பில் எழுதினார். தன் மனதில் ஆழப் பதிந்திருந்த .. எண்ணி நெகிழ்ந்திருந்த விஷயங்களை எழுதினார். அந்த முறை தேர்ச்சி பெற்றார். அவரைப் பொறுத்தவரை எம்.ஜி.ஆர்.தான் தன்னை இன்னும் வாழ வைத்துக் கொண்டிருக்கிறார்.

    2. ஒரு முதியவர் .. ஒரு நாள் .. எம்.ஜி.ஆர் அவர்களிடம் வந்து உன்னை நம்பி என் பையனை படிக்க வைத்தேன். நீதான் வாழ வழி காட்ட வேண்டும் என்றார். உடனே எம்.ஜி.ஆர். முதலில் நீங்கள் சாப்பிடுங்கள்.. பின்னர் பேசுவோம் என்றார். அனால் முதியவர் விடவில்லை. தன் குறையை அழுது புலம்பிக் கொண்டிருந்தார். எம்.ஜி.ஆர். நீங்கள் சாப்பிடுங்கள்.. உங்கள் மகன் அடுத்த மாதம் அரசாங்க சம்பளம் உங்களுக்கு கொண்டு வருவான் என்றார். அதுபோலவே, அடுத்த மாதம் அந்தப் பெரியவர் தன் மகனின் சம்பளக் கவரோடு முதல்வரை (மக்கள் திலகத்தை) காண வந்தார்.

    எந்த முதல்வரையாவது இப்படி எளிதில் எளிய மக்கள் காண முடியுமா? ஆனால் மக்கள் திலகம் அவர்களை காண முடிந்தது. கர்ணன் மறுபிறப்பு எடுத்து இவராக இம் மண்ணில் தோன்றினாரோ என்று தோன்றுகிறது.

    இன்று பலர் அவரைப்போலவே நடித்து, ஆடிப்பாடிப் பிழைக்கிறார்கள். ஒரு சிலருக்கு அவருடைய வேடம் ஒத்துப்போகுமாயின், அதைக் காணும் பொது மக்களும், தாய் மார்களும், “வாங்கையா வாத்தியாரைய்யா’ என பெருமை கொள்வது அவரின் மீது உள்ள பற்றும் ஈடுபாடும் தான் காரணம். அவரை ஓர் அவதார புருஷனாகவே எண்ணியிருக்கிறார்கள்.

    தமிழ் நாட்டையும் தாண்டி மேல் நாடுகளில் அவரைப் பற்றித் தெரியும். இது ஒரு நடிகனாக இருந்ததால் மட்டுமலா.. அவர் செய்த ஒவ்வொரு நல்ல செயலும் அங்கும் எதிரொலித்தது. நடிப்பதைத் தொழிலாகவும், கொடுப்பதைக் கொள்கையாகவும் கொண்டவர் எம்.ஜி.ஆர். எல்லோருக்கும் எலும்பிலும் தசையிலும் உடல் இருக்கும். ஆனால். இவருக்கோ தங்கத்தால் வார்த்த உடம்பு….அதனால்தான் எமனையும் ஒரு முறை வென்றார்.

    புரட்சித் தலைவர் பள்ளியில் படிக்காவிட்டாலும் பல்கலைக் கழகமாக தன்னை மாற்றிக் கொண்டவர். அதனால்தான் அவர் தியாகரஜ சட்டக் கல்லூரியில் சேர்மேனாக அமர முடிந்தது.

    மனிதன் உயிர் வாழத் தேவையானது உணவு. மனிதனாக வாழ வைப்பது கல்வி. இந்த இரண்டையும் தான் பிறருக்காக அள்ளி வழங்கிய வள்ளல். அவரது சத்துணவு திட்டம், அவர் காலத்தில் திறக்கப்பட்ட அரசு பள்ளிகளும் சாட்சி.

    முடியாது.. இல்லை.. என்ற இரண்டு வார்த்தைகளையும் தமிழில் உள்ள அனாவசிய வார்த்தைகள் என அப்புறப்படுத்தியவர் பொன் மனச் செம்மல்.

    எம்.ஜி.ஆர்.

    அரிதாரம் இட்டு அடையாளமாகி ..
    அகம் நுழைந்து ஜகம் ஆண்டவன்..
    மக்கள் மனதில் குடியிருந்த கோவில்
    என்றென்றும் ஊருக்கு உழைப்பவன்
    அள்ளிக் கொடுப்பதில் அவர் மன்னாதி மன்னன்
    மொத்தத்தில் என்றென்றும் அவர் எங்க வீட்டுப் பிள்ளை..

    காலத்தை வென்றவர் அவர்..
    காவியமானவர் அவர்..

    — புவனா, மும்பை

    Share
  • மனதில் நிறைந்த மக்கள் திலகம்

    — மணிமுத்து.

     

     

    நான் அறிந்த எம்.ஜி.ஆர்!

    குடும்ப உறவுகளுக்கிடையே பிரியம் காட்ட முடியாத உலகத்தில், ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் பிரியம் செலுத்திய மனிதர்(மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன்) ம.கோ.ராமசந்திரன். நடிப்பில் மட்டுமல்லாமல் அதே போல் வாழ்ந்து நடப்பிலும் மக்களின் மனதில் இடம் பிடித்தவர்.

    வாழ்ந்தவர் கோடி,
    மறைந்தவர் கோடி,
    மக்களின் மனதில் நிற்பவர் யார்!
    என்ற பாடல் வரிகள் கூட அவருக்கே பொருந்துவதாய்!

    வாழ்க்கையில் பல மனிதர்கள் சரித்தில் தான் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் வாழ்ந்த நாட்களை விடவும், இறந்த பின்னே அவர்களுக்கு உலகம் புகழாரம் சூட்டவும், பாராட்டவும் செய்தது. வாழ்ந்த நாட்களில் சரித்திரம் படைத்தவர்கள் ஒரு சிலரே அவர்களில் ஒருவர் தான் ம.கோ.ராமசந்திரன். ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் தொழில் எனும் பொழுது ஒரு மாதிரியாகவும், அதுவே நிஜ வாழ்க்கை எனும் பொழுது வேறாக இருக்கும். ஆனால் ம.கோ.ராமசந்திரன் அவர்களோ தொழில், வாழ்க்கை என்றெல்லாம் வேறு படுத்திப்பார்க்கத்  தெரியாதவர்.

    எல்லோரிடமும் திறமைகள் உண்டு, ஆனால் அந்த திறமைகள் தன்னிடம் இருப்பதை அறிந்து செயல் படுத்துபவர் ஒரு சிலரே, அப்படி தன்னிடம் இருந்த எல்லா திறமைகளையும் தெரிந்துக் கொண்டு இயக்குனர், தயரிப்பாளர் மற்றும் நடிகர் என அனைத்து பணிகளையும் செவ்வனே செய்து திரை உலகில் மிகப்பெரிதாக சாதித்துக் காட்டியவர். ஒரு மனிதன் அவனுடைய வாழ்நாளில் சேமிக்க வேண்டிய ஒரே பெரிய சொத்து நண்பர்களும், உறவினர்களும் தான், அப்படி ஒரு மாநிலத்திலிருக்கும் அனைவரையும் உறவினராய் சம்பாதித்தவர்.

    அப்படி அனைவரின் அன்பை சம்பாதிக்க என்ன செய்யலாம். நல்லவனாக நடிக்கலாம், அதற்கு சிறந்த நடிகர் என பெயரும் வாங்கலாம்.ஆனால் சிறந்த நடிகர் என்று பெயர் வாங்குவதால் ஒருவரை ஒரு மாநில மக்களே விரும்புவர்களா என்ன? விரும்பினார்கள் அதற்குக் காரணம் அவர் நிஜ வாழ்க்கையில் நடிக்கத்  தெரியாதவர். நன்றாக சாப்பிட்ட ஒருவனிடம் “பசிக்கிறதா என்பதை விட, பசிக்கிற ஒரு மனிதனுக்கு அன்னமிடுவதே” சாலச் சிறந்தது.

    அதைத்தான் அவர் “பசிக்கிற ஒருவனுக்கு மட்டுமல்லாமல் பசி என்கிற ஒவ்வொருவனுக்கும் உணவினை வாரி வழங்கினார்” அட்சய பாத்திரம் போல. அரசு கொடுக்கும் பொருட்களை சுரண்டல் இல்லாமல் அதை மக்களிடம் சேர்த்தார். அவர் அறிமுக படுத்திய திட்டங்கள் தான் எத்தனை? சத்துணவுத் திட்டம், விதவை ஆதரவற்ற பெண்களுக்குத் திருமண உதவி, தாலிக்கு தங்கம் வழங்குதல், மகளிருக்கு சேவை நிலையங்கள் இன்னும் எத்தனையோ அடுக்கிக் கொண்டே போகலாம்.

    அவர் கொடுத்த இலவச ஓட்டைக் கொண்டு வீட்டை அமைத்து, அதில் வாழ்கிற எத்தனையோ பெயரில் நானும் ஒருத்தியாய். சிலருடைய பெருமைகள் சொல்லி மாளாது எனினும் இவருடைய பெருமைகள் சொல்ல சொல்ல மாளாதவைகளாய்! நாம் தியாகிகள் என்று சொல்லிக்கொண்டிருக்கும் எத்தனையோ பேர் உலகிற்கு மட்டுமே தியாகிகளாய், ஆனால் எப்போது தன் மனைவி குழந்தை பிறக்க இயலாமல், பிரசவத்தில் இறந்தாளோ  அப்போதே தன்னால் இரண்டு உயிர் போனதே என்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர். இப்படி ஒரு தியாக உள்ளத்தை மீண்டும் எங்கே காண்பது?

    சிறு எறும்புக்கும் தீங்கு இழைக்காதவர், செல்ல பிராணிகளிடம் கூட உயிரையே வைத்திருந்தார். அவர் வளர்த்து வந்த செல்ல பிராணிகளான இரண்டு சிங்கங்களில், ஒன்று இறந்து விட அதனுடைய தனிமை துயரை காண சகியாதவராய் கொண்டு சென்று வண்டலூர் உயிரியல் பூங்காவில் விட்டுவிட்டார். எம்.ஜி.ஆருடைய பல படத்தின் பாடல் வரிகளுமே அவரையும், அவருடைய செய்கையையும் பிரதிபலிப்பனவாக, அதற்கோர் உதாரண பாடல் இங்கே.

    நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக் கெடுத்தவர்கள்,
    நாட்டை கெடுத்ததுடன் தானும் கெட்டார்
    சிலர் அல்லும், பகலும்
    வெறும் கல்லாய் இருந்து விட்டு
    அதிர்ஷ்டம் இல்லை என்று அலட்டிக் கொண்டார்

    தொண்டையில் துப்பாக்கி சூடுப்பட்டு, குரல் உடைந்த பிறகும் கூட நடித்து வெளிவந்த படமான காவல்காரன், பெரிய வெற்றியை தேடித்தந்தது. இதைத்தான் சாதிப்பதற்கு வயதோ, உடல் குறையோ தடை கிடையாது என்பதோ. இந்த காலத்தில் வீடுவீடாக சென்று லஞ்சம் கொடுத்தாலும் கூட வாங்க முடியாத வாக்குகளை, உடல்நிலை முடியாமல், பிரசாரத்திற்கே வரமால் பெற்று முதல்வர் ஆன மாமனிதர்.

    அந்த மாமனிதருக்கு
    கிடைத்தது தான்
    என்ன
    எல்லோரையும் போல
    சிறுவயதில் வறுமைதான்.
    கல்வியும் கூட காசு இருப்பவனுக்கே!
    வறுமையில் வாழ்க்கையை
    எப்படி வாழ வேண்டும்
    என்று மட்டுமல்ல,
    எப்படி மாற்ற வேண்டும்
    என்றும் கற்றுக் கொண்டாயா!
    அதனால் தான் வறுமையில்
    வாழ்ந்தவர்களுக்காக
    வாழ்நாள் முழுவதும் போரடினாயா!
    அத்தனை இலவச திட்டங்களையும் அறிமுகப்படுத்தினாயா!
    உனக்கு பாரத ரத்னா விருது கூட சிறிதே!

    அன்பை சம்பாதிப்பவனே ஆண்டவனை சம்பாதித்தவன், அனைத்தையும் சம்பாதித்தவன். அனைத்தையும் சம்பாதித்த அந்த மாமனிதனுக்காகவே இன்றுவரை அவர் வளர்த்த கட்சிக்கு வாக்களிக்கும் மக்கள் தான் எத்தனை!

    மாமனிதரே இன்னொரு முறை தமிழ்நாட்டில் பிறப்பீராக… நாட்டின் தலையெழுத்தை மாற்ற!
    மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும், அது 
    முடிந்த பின்னாலும் என் பேச்சிருக்கும்!
    என்று உலகிற்கு வாழும் போதே சொல்லிவிட்டு போய்விட்டார்.
    வாழ்க்கையில் வறுமை மனிதனுக்கு இருபாதையைக் காட்டி விடுகிறது.
    ஒன்று நல்வழி, மற்றொன்று தவறான பாதை!

    நாமும் வறுமையை ஒழிப்போம் நல்வழியில் நடந்து எம்.ஜி.ஆர் போல.

    Share
  • மனதில் நிறைந்த மக்கள் திலகம்

    — கொ.வை. அரங்கநாதன்.

     

    வையத்துள் வாழ்வாங்கு வாழ்வார் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்ற குறளின் பொருளாக வாழ்ந்து மறைந்தவர் மக்கள் திலகம். இன்னலுற்ற இளமையில் அன்னையின் அரவணைப்பே அவரது ஒரே ஆறுதல். காட்டாற்று வெள்ளத்தில் எதிர் நீச்சல் இடும் வாழ்க்கை. அத்தனையயும் கடந்து நாடக மேடை, திரைப் படம், அரசியல் என்ற அவரது விஸ்வரூபம் கடுமையான உழைப்பின் கருவில் மலர்ந்தது. ஏளனப் பேச்சு, எதிர்ப்பு, அத்தனையையும் உரமாக்கி சிகரத்தைத் தொட்ட செம்மல்… எம் ஜி ஆர் என்ற அந்த மூன்றெழுத்து இன்று வரை தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் ஒலித்து கொண்டிருப்பது காலத்தை கடந்த அந்த காவிய மகனின் புகழுக்குக் கட்டியம் கூறுகிறது.

    இந்த மனிதரின் வாழ்வு பள்ளிகளில் பாடமாகப் பயிற்றுவிக்கத் தகுந்தது. பாரியையும் ஓரியயையும் பாடங்களில் படித்தவர்களுக்கு எட்டாவது வள்ளலாக எம் ஜி ஆரை அறிமுகப்படுத்தலாம். மனித நேயத்தின் மாண்பினை அவர் சரிதம் மூலம் அடுத்தத் தலை முறைக்கு எடுத்துச் சொல்லலாம். மாலை நேரத் திரையரங்குகளை நீதி போதிக்கும் மன்றங்களாக மாற்றிய மாமனிதர். பள்ளிகளில் பயிற்றுவிக்கப்படாததை தன் பாடல்களால் பயிற்றுவித்தப் பண்பாளர்.

    “நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே” … “நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி” என்று இன்னும் எத்தனையோப் பாடல்களில் வளரும் குழந்தைகளை வழி நடத்தியவர்.

    “நல்லப் பொழுதையெல்லாம் தூங்கிக் கெடுத்தவர்கள் நாட்டை கெடுத்ததுடன் தானும் கெட்டார்” … “நாடென்ன செய்தது நமக்கு என கேள்விகள் கேட்பது எதற்கு? நீ என்ன செய்தாய் அதற்கு என நினைத்தால் நன்மை உனக்கு” போன்ற எத்தனையோ பாடல்கள் மூலம் இளைஞர்களைத் தட்டி எழுப்பியவர்.

    “என் தமிழே நீ பகை வென்று முடிசூடி வா” எனத் தமிழுக்குத் தாலட்டுப் பாடியவர் … “அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா” என இனப் பெருமையை உரக்க சொன்னவர்.

    “என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்” என விவசாயிகளுக்கு உரம் மூட்டியவர் …”உழைக்கும் மக்களே ஒன்று கூடுங்கள் உலகம் நமது என்று சிந்து பாடுங்கள்” என உழைக்கும் மக்களின் உரிமைக் குரலாய் ஒலித்தவர்.

    “ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை” என தனது எதிரிகளுக்கு எச்சரிக்கை செய்தவர்.

    இன்னும் எத்தனை எத்தனைப் பாடல்கள்… அத்தனையும் விடியற்காலச் சேவலின் உறக்கம் கலைக்கும் ஒலியல்லவா? இந்தப் பாடல் வரிகளுக்கெல்லாம் அந்தக் கவிஞர்கள்தானே சொந்தக்காரர்கள்? இதில் மக்கள் திலகத்தின் பெருமை என்ன இருக்கிறது என்று என்னிடம் கேட்டவர்கள் உண்டு. கவிஞர்கள் யாராக இருப்பினும் மக்கள் திலகத்தின் பாடல் என்றால் அவர்கள் அறியாமலேயே எழுச்சியுட்டும் சொற்கள் எங்கிருந்தோ வந்தமைந்தது..

    பாடியது தாம் தானா அல்லது மக்கள் திலகமா என்ற ஐயம் அந்தக் கவிஞர்களுக்கே வந்ததுண்டு. இதனை கவியரசு கண்ணதாசன் கூட ஒரு காதற் பாடலில் “பாடுவது கவியா இல்லை பாரி வள்ளல் மகனா, சேரனுக்கு உறவா செந்தமிழன் நிலவா” என அழகாகக் குறிப்பிடுகிறார்.

    பாடுவது கவியா – பாடியது நான்தானா அல்லது பாரி வள்ளல் மகன் போன்ற மக்கள் திலகமா?
    சேரனுக்கு உறவா- மக்கள் திலகம் மலையாளப் பூர்வீகம் கொண்டவர் என்பதைத் தான் இவ்வளவு அழகாகக் குறிப்பிடுகிறார்.
    செந்தமிழன் நிலவா- தமிழகத்து மக்களுக்கு நிலவு போன்றவரா- ராமச்(சந்திரன்) எவ்வளவு அழகான வர்ணனை பாருங்கள்!

    மக்கள் திலகத்தின் பாடல் வரிகள் அவரது வாழ்க்கை நிகழ்வின் முன்னறிவிப்பாய் பல சமயங்களில் அமைந்தது வியப்பிற்குறியது.

    “நானே போடப் போகிறேன் சட்டம் பொதுவில் நன்மை பயக்கும் திட்டம்” என 50 களிலவர் பாடியதும் … “நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்” என அவர் 60 களில் பாடியதும் … 70 களில் நடை முறையானது.

    “தர்மம் தலை காக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும்” என்பது அவர் சுடப்பட்டும் உயிர் பிழைத்ததன் முன்னறிவிப்பு அல்லவா?

    “இறைவா உன்னிடன் கையேந்தினேன்” என்றப் பாடல் அவரது ஓர் உயிருக்காகத் தமிழர்கள் நடத்திய தவத்தின் முன்னறிவிப்பு அல்லவா?

    “மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் அது முடிந்தப் பின்னாலும் என் பேச்சிருக்கும்” என்று அவர் மறைந்து 26 ஆண்டுகளுக்குப் பின்பும் அவரது பெயர் ஒலிக்காத நாளே இல்லை என்ற அளவில் அவரது புகழ் வியாபிதிருப்பதின் முன்னறிவிப்பு அல்லவா?

    “சொல்வது எல்லோருக்கும் சுலபமாகும் சொன்னபடி நடப்பவர்கள் மிகவும் சொற்பம்” என்றார் நாமக்கல் கவிஞர். மக்கள் திலகம் ஒரு மாற்றுக் குறையாத மன்னன் அல்லவா? திரையில் சொன்னவற்றை வாழ்விலும் அப்படியே கடை பிடித்தவர்… மதுவின் தீமையை திரையில் அவரைப் போல் அழுத்தமாகச் சொன்னவர்கள் எவருமில்லை. திரையில் மட்டுமில்லை தனது வாழ்விலும் மதுவை மட்டுமல்ல தேனீரைக் கூட அருந்தியதில்லை.

    இரக்கமும், மனிதாபிமானமும் அவருக்கு இயல்பாகவே அமைந்திருந்தது. கை ரிக்க்ஷாத் தொழிலாளி ஒருவர் மழையில் நனைவது பொறுக்காமல் சென்னையில் இருந்த அத்தனை கை ரிக்க்ஷாத் தொழிலாளருக்கும் மழை ஆடை (ரெயின் கோட்) வழங்கிய மாண்பினை என்னவென்று உரைப்பது? அப்பொழுது அவருக்கு அரசியல் ஆசைகள் எதுவும் இல்லை என்பதையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

    வறுமையில் வாடிய என். எஸ்.கிருஷ்ணன் குடும்பத்தாருக்கு அவர் செய்த உதவிகளை அவரது குடும்பத்தாரே சொல்லும்போது இப்படிப்பட்ட மகத்தான மனிதர் மறுபடியும் பிறப்பாரா என ஏங்க வைக்கிறது. நகைச்சுவை நடிப்பில் கொடி கட்டிப் பிறந்த நாகேஷ் வாழ்வில் தடுமாறியபோது கைகொடுத்த தெய்வம் அல்லவா எம்ஜிஆர்? பிரபல இயக்குனர் பி ஆர் பந்துலு கடனுற்று காலமான போது அவரது படத்தை தானே இயக்கி அக்குடும்பத்தை கரையேற்றிய கர்ணன் அல்லவா மக்கள் திலகம்? பிரபல எழுத்தாளரும் பத்திரிக்கையாளரும் எம்ஜியாரை கடுமையாக விமர்சித்து வந்தவருமான சோ ராமசாமி ஒரு முறை குறிப்பிட்டார் “அடுப்பில் உலையை வைத்து விட்டு அரிசிக்காக எம்ஜியாரிடம் செல்லலாம். உலை கொதிப்பதற்குமுன் உதவி கிடைத்துவிடும்”

    சுடப்பட்டு மருத்துவமனையில் இருந்த போதும் கூட தன் தலையணை அடியில் பணக் கட்டுகளை வைத்து கொண்டு தன்னிடம் உதவி நாடி வந்தவர்களுக்கு அடுத்தவர் அறியாமல் உதவி வந்த உத்தமர். காரில் சென்று கொண்டிருக்கும் போது காலணி இல்லாமல் சென்று கொண்டிருந்த ஒரு மூதாட்டிக்காக தனது துணைவியார் ஜானகி அம்மையார் காலில் இருந்த காலணிகளைக் கழற்றி கொடுக்கச் சொன்னக் கருணையாளர். சீன படையெடுப்பின் போது தங்க வாளினை பிரதமரிடம் நாட்டை காப்பதற்குத் தன் பங்காக அளித்தவர்.

    எத்தனையோ ஏழை மாணவர்களுக்கு கல்வித் தொகையாக மாதந்தோறும் அவரது அலுவலகத்திலிருந்து பணம் அனுப்பப்பட்டு வந்தது எத்தனை பேருக்குத் தெரியும்? கொள்கை மாறுபட்டிருந்த போதும் வாரியார் சுவாமிகள் கோரினார் என்பதற்காக பெருந்தொகையை கோவில் கும்பாபிஷேகத்திற்கு அளித்து அவரால் பொன் மனச்செம்மல் என வாழ்த்தப்பட்டவர். இது போன்று எண்ணற்ற உதவிகள்… இவை அத்தனையுமே எவ்வித எதிர்பார்ப்பின்றி செய்யப்பட்டதே எம் ஜி ஆர் என்ற மாமனிதனின் இரக்க வரலாறு!

    இதே மனிதம்தான் அவரது ஆட்சி காலத்திலும் அவரை உயரத்தில் ஏற்றி அவர் உயிர் துறக்கும் வரை அங்கேயே வைத்திருந்தது. முதியோருக்கு சேலை வேஷ்டிகள், பள்ளி சிறுவர்களுக்கு சத்துணவு, பாடப் புத்தகங்கள் , காலணிகள், சீருடை , இயற்கை இடர்பாடுகளினால் பாதிக்கப்படும் அத்தனை பேருக்கும் கட்சி பாகுபாடின்றி நிவாரணம் …இன்னும் எத்தனை எத்தனையோ சமூக நலத் திட்டங்கள். அத்தனையும் மனித நேயத்தின் வெளிப்பாடுகள்… அவருடைய பதினொரு ஆண்டு கால ஆட்சியில் அரிசி விலை ஒரு ரூபாய் கூட ஏற்றப் படாதது அவர் ஏழை மக்கள் மீது கொண்டிருந்த அதீத அன்பின் வெளிப்பாடு. இன்னும் சொல்லி கொண்டே போகலாம் .. ஏடும் நேரமும் இடம் கொடா.

    பாய்ஸ் கம்பெனி நடிகராய் தொடங்கி, நாடக நடிகராய் மலர்ந்து, திரைப்படக் கதாநாயகனாய் உயர்ந்து, அரசியல் தொண்டராய் மாறி முதலமைச்சராய் முடிசூடி மக்களின் மனங்களில் இன்று வரை அகற்ற முடியாத பிம்பமாய் ஒளிரும் எம் ஜி ஆர் என்ற மாமனிதன் மக்கள் திலகமாய், புரட்சி நடிகராய், புரட்சித் தலைவராய், முதலமைச்சராய் என் மனதிலும் என்றும் நிலைத்திருப்பார்.

    Share
  • மனதில் நிறைந்த மக்கள்திலகம்

    –சௌ. செல்வகுமார்.

     

    படிக்காத பாமரர்களுக்கு எம். ஜி. ஆர். ஓர் பல்கலைக்கழகம்

     

    புராணக்கதைகளில், ஆண்டவனைப் பற்றி கூறக் கேட்டிருக்கிறோம். ஆனால், நாம் ஆண்டவனை நேரில் பார்த்ததில்லை. கருணையின் வடிவமாக, நம் தமிழகத்தை ஆண்டவர். கலியுக கடவுளாக புரட்சித்தலைவர் எம். ஜி. ஆர். அவர்களைத்தான் நான் பார்த்து பரவசமடைந்துள்ளேன்.

    பாசமிகு நேசத்தலைவராம், பொன்மனச்செம்மல் அவர்கள். “குடியிருந்த கோயில்” காவியத்தில் அன்னையின் அன்பிற்குக் கட்டுப்பட்டு, மனம் திருந்திய மைந்தனாக, பாசத்தை வெளிப்படுத்தும் சகோதரனாக, அவர் வெகு இயல்பாக நடித்த காட்சிகளும், கதையமைப்பும், இனிய பாடல்களும், என்னுடைய அந்த 12 வயதில் அவருடைய தீவிர ரசிகனாக மாற்றியது. பலரது எதிர்காலம் இந்த 12 வயது விடலைப்பருவத்தில் தான் நிர்ணயிக்கப்படுகிறது. மனம் ஒரு நிலையில் இல்லாமல் அலை பாயும் பருவம் அது. எதிர்மறையான அணுகுமுறைகளால் வாழ்க்கையே திசை மாறும்.

    இப்படிப்பட்ட சூழ்நிலையில், தொடர்ந்து, மக்கள் திலகத்தின் பழைய, புதிய காவியங்களைப் பார்த்து, ஒரு குறிக்கோளாக, இப்படித்தான் வாழவேண்டும் என்ற இலட்சிய வேட்கை கொண்டு வாழ்ந்து வருகிறேன்.

    எழில் வேந்தன் எம். ஜி. ஆர். நடித்த காவியங்களில், மூடநம்பிக்கை காட்சிகள் கிடையாது. அதே சமயம், மூட நம்பிக்கைகளை ஒழிக்கிறேன் என்று கூறி மற்றவர்களின் நம்பிக்கையை அவர் கொச்சைப்படுத்தவில்லை. அவரது எல்லா காவியங்களிலும், எவருடைய மனதையும், புண்படுத்தாமல் , காயப்படுத்தாமல், காட்சிகள் அமைந்திருக்கும்.

    குணக்குன்று எம். ஜி. ஆர். சில காவியங்களில், காட்சியமைப்பின் படி, எதிர்மறையான கதா பாத்திரத்தில் நடித்திருந்தாலும் அதிலும் ஒரு அறிவுரை வழங்கும் நற் செய்தியினை வெளிப்படுத்தி இருப்பார். உதாரணமாக, “எங்க வீட்டு பிள்ளை” காவியத்தில், கதைப்படி நாயகன் சிற்றுண்டி விடுதிக்குச் சென்று அங்கு சிற்றுண்டி சுவைத்து விட்டு, அதற்குரிய பணத்தைச் செலுத்தாமல் நழுவி விடுவார். காட்சியமைப்பை அத்துடன் விட்டிருக்கலாம். ஆனால், தனது படத்தைப் பார்க்கும் ரசிகன் இந்த தவறைச் செய்து விடக்கூடாது என்ற எண்ணத்தில், சிற்றுண்டி விடுதியை விட்டு வெளியேறிய பிறகு, ” ச்சே, எவ்வளவு பெரிய தவறு செய்து விட்டேன், சிற்றுண்டிக்கான பணத்தை கொடுக்காமல் வந்து விட்டோமே” என்று வருத்தப்படும் வசனத்தை பேசுவார். அதே போன்று, “ஒளி விளக்கு” காவியத்தில், நாயகன் கதைப்படி, மதுப் பழக்கம் கொண்டவனாக இருந்தாலும், தனது ரசிகன் “குடிப்பழக்கத்துக்கு ஆளாகி விடக்கூடாது” என்ற எண்ணத்தில், நாயகனின் மனசாட்சி பாடுவதாக “தைரியமாகச் சொல் நீ மனிதன் தானா” என்ற பாடல் எதிரொலிக்கும். காதல் பாடலில் கூட, விவசாயத்தின் முறைகளை எடுத்துரைத்து, ஒரு தமிழக பெண் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் வலியுறத்தி “இப்படித்தான் இருக்க வேண்டும் பொம்பளே” என்ற பாடலை பாடுவார். இப்படி பல உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

    நடிகப்பேரரசர் எம்.ஜி.ஆர். அவர்களின் ஒவ்வொரு ப(பா)டமும், முழுக்க முழுக்க ஜன ரஞ்சகமான பொழுது போக்கு அம்சங்களுடன், நற்போதனைகளையும், நற்கருத்துக்களையும் அடிப்படையாகக் கொண்ட கதைக்களமாகவே இருக்கும். அதே நேரத்தில், கதையின் மெருகு குலையாமல், எக்காலத்துக்கும் ஏற்ப சமுதாய முன்னேற்றத்துக்கான புத்துணர்ச்சியுடன், பாடல்களும், வசனக்காட்சிகளும் அமைந்து இருக்கும். சோர்ந்து போய் சோகமாக இருக்கும் தருணங்களில், கலைச்சுடரின் காவியப்பாடல்களை கேட்கும் பொழுது, இனம் புரியாத ஒரு இன்பமும், எழுச்சியும் காணப்படும். இதை, பல முறை நான் அனுபவித்துள்ளேன். மருத்துவத்துக்கும் இல்லாத இந்த சக்தி அவரது படங்களை காண்பதிலும், பாடல்களை கேட்பதிலும் உள்ளது என்றால், அவர் உண்மையிலேயே ஒரு அற்புத, அபூர்வ சக்தி என்றே கூறலாம். மனிதப் புனிதராம் எங்கள் தங்கம் எம். ஜி. ஆர். ஒரு எட்டாவது அதிசயம் தான், தனிப்பிறவி என்றே தான் சொல்ல வேண்டும்.

    சமுதாய விழிப்புணர்ச்சி, தாய் நாடு மற்றும் தாய் மொழிப்பற்று கொண்டதாக விளங்கும் கலைவேந்தன் எம். ஜி. ஆரின் காவியங்கள், என் போன்ற ரசிகர்களை கவர்ந்ததில் ஆச்சர்யம் ஏதுமில்லை. ஏன், இன்றைய இளம் தலைமுறையினரும், அவரது காவியங்களைத்தான் ரசிக்கிறார்கள். சமீபத்திய எடுத்துக்காட்டு … பல முறை திரையிடப்பட்டும், தமிழகத்தின் நிரந்தர வசூல் சக்கரவர்த்தி எம். ஜி. ஆர். அவர்களின் “ஆயிரத்தில் ஒருவன்” காவியம் வெள்ளி விழா கண்டு மொத்தம் 190 நாட்கள் ஓடி, உலக சினிமா வரலாற்றில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தி சாதனை கண்டது. வரலாறு படைத்த நம் வள்ளல் எம். ஜி. ஆர். அவர்கள் கதாநாயகனாக நடித்த 115 காவியங்களில் சுமார் 85 சதவிகிதம் இன்றும், தமிழகத் திரையரங்குகளை ஆக்கிரமித்து கொண்டு தான் வருகிறது. உலகெங்கிலும், ரசிகர்களை கொண்ட ஒரு மாபெரும் தமிழ் நடிகரும் எம். ஜி. ஆர். அவர்களே ! தமிழகத்தில் இணையதளம், முகநூல் மற்றும் வாட்ஸ் ஆப் போன்றவற்றில் அதிகம் பதிவிடப்படுவதும் சொக்கத்தங்கம் எம். ஜி. ஆர். அவர்களைப்பற்றிய செய்திகளும், புகைப்படங்களும் தான். அவ்வளவு ஏன், மறைந்து கால் நூற்றாண்டுகள் கடந்தும், இன்றும் அவரை பற்றி போட்டிக்கட்டுரை வெளியிடுவதும் “வல்லமை” போன்ற பிரசித்தி பெற்ற இணைய தளங்களே ! உலகெங்கிலும், மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு இவர்களுக்கு அடுத்தபடியாக பேசப்படும் ஒரே தமிழக நபர் எழிலான முகராசி கொண்ட எங்கள் தங்கம் எம். ஜி. ஆர். என்பதில், ஒவ்வொரு தமிழனும் பெருமைப்படக்கூடியதாகும்.

    நடிகராக இருந்தபொழுதே, தான் சம்பாதித்தை, நாட்டு மக்களின் நலனுக்காக, அள்ளி அள்ளி கொடுத்து, “கொடுத்து சிவந்த கரங்களுக்கு சொந்தக்காரர்” என்றழைக்கப்பட்டார். கடையெழு வள்ளல்களும், அரசுகருவூலத்திலிருந்து தான் வாரி வழங்கினார்கள். ஆனால் நம் எட்டாவது வள்ளலோ, இதிலும், ஒரு புதிய சரித்திரத்தையே உருவாக்கினார். இளம் வயதில் பசியின் கொடுமையை அனுபவித்த காரணத்தால், மக்களின் உண்மைத் தலைவராகி, ஆட்சிகட்டிலில் அமர்ந்தவுடன், குழந்தைகளின் பசியினைப் போக்கிட, சத்துணவு திட்டத்தை கொணர்ந்த சமதர்ம சமுதாய காவலன் அல்லவா நம் கொள்கைத்தங்கம்.

    எத்தனை சம்பவங்கள், எத்தனை எத்தனை அனுபவங்கள்? அதில் எவ்வளவு படிப்பினைகள்? படித்தவர்களுக்கு பாடசாலை, படிக்காத பாமர மக்களுக்கு அவர் ஓர் பல்கலைக்கழகம். அதனால்தான் அவர் “வாத்தியார்” என்றும் போற்றப்படுகிறார். நாட்டு மக்களின் வாட்டம் போக்கிட நலத்திட்டங்கள் பல தீட்டி தமிழக முதல்வர்களில் ஓர் ஒளிவிளக்காகத் திகழ்ந்தார் என்றால் அது மிகையல்ல! “ஓடி ஓடி உழைக்கணும்” என்ற உழைப்பின் உயரிய தத்துவத்தை மக்கள் மனதிலே நன்கு பதிய வைத்தது மட்டுமல்லாமல், வலிய ஓடோடி சென்று உதவிகள் புரிந்தது, அந்த முப்பிறவி கண்ட மூன்றெழுத்து மந்திரத்தின் தனிப்பாணி.

    வளர்ந்து வரும் தலைமுறைக்கு ஆசைமுகமாய் காணப்படும் பண்பின் இருப்பிடம், அன்பின் பிறப்பிடம், பாசத்தின் உறைவிடம், பேரறிஞர் அண்ணா அவர்களின் இதயக்கனியாம் நம் எம். ஜி. ஆர். அவர்களின் சீரிய அறிவுரைகளும், போதனைகளும். எதிர்கால இந்தியாவை வளமான வல்லரசாக மாற்றக்கூடிய இக்கால இளைஞர்களுக்கு அவசியம் தேவை. திரைவானில் மட்டுமல்ல, அரசியில் வானிலும், கொடி கட்டிப் பறந்து கோடிக்கணக்கான மக்களின் இதயங்களை கொள்ளை கொண்ட நாயகன். பாரத ரத்னா டாக்டர் எம். ஜி. ஆர். அவர்கள் வாழ்ந்த காலத்தில் பிறந்தவன், வாழ்ந்தவன், அவருடன் சிற்சில சமயங்களில் பழகிய வாய்ப்பும் கிட்டியவன் என்று எண்ணும்போது, நான் பிறவிப்பயனை அடைந்து விட்டேன் என்றே கூற வேண்டும்.

    “எத்தனை காலம் மனிதன் வாழ்ந்தான் என்பது கேள்வியில்லை !
    அவன் எப்படி வாழ்ந்தான் என்பதை உணர்ந்தால் வாழ்க்கையில் தோல்வியில்லை !”

    படித்து, பல பட்டங்கள் பெற்று இன்று உயர்ந்த நிலையில் இருந்தாலும், பொற்கால ஆட்சி தந்த பொன்மனச்செம்மல் எம். ஜி. ஆர். அவர்களின் பக்தன் என்று அழைக்கப்படுவதில்தான் எனக்குப் பெருமை. எனது வாழ்வில் நான் பெற்ற பாக்கியம் எம். ஜி. ஆர். ரசிகன் என்ற உயரிய பதவி !

     

    Share
  • மனதில் நிறைந்த மக்கள் திலகம்

    — ஞா.  கலையரசி.

     

    “காலத்தை வென்றவன் நீ
    காவியமானவன் நீ
    வேதனை தீர்த்தவன்
    விழிகளில் நிறைந்தவன்
    வெற்றித் திருமகன் நீ!”
    என்று எம்.ஜி.ஆருக்காகவே எழுதப்பட்ட இப்பாடல் வரிகளுக்கு உயிர் கொடுத்து காலத்தை வென்று இன்றைக்கும் மக்கள் நெஞ்சங்களில் காவிய நாயகனாக உலா வருபவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்!

    “இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
    இவர் போல் யாரென்று ஊர் சொல்ல வேண்டும்”
    என்ற பாடலுக்கேற்ப, மக்கள் மனதில் அணையா தீபமாக ஒளிவீசிக் கொண்டிருப்பவர் எம்.ஜி.ஆர்!

    “வாழ்ந்தவர் கோடி
    மறைந்தவர் கோடி
    மக்களின் மனதில் நிற்பவர் யார்?”
    என்று கேட்டால் தமிழகத்தைப் பொறுத்தவரை எம்.ஜி.ஆர் என்பது தான் ஒரே பதிலாக இருக்கும்! இவர் அளவுக்கு மக்கள் நெஞ்சங்களில் குடி கொண்டவர் ஒருவர் இனிமேல் தான் பிறந்து வர வேண்டும். குறிப்பாக அடித்தட்டு மக்களிடம், இவருக்கிருந்த செல்வாக்கு அளப்பரியது. “இதுவரை பூமியை வெட்டித்தான் தங்கத்தை எடுத்தோம்; ஆனால் இன்று பூமியை வெட்டி தங்கத்தை அல்லவா புதைக்கிறோம்!” என்று புலம்பினார்கள், இவருடைய இரங்கற் கூட்டத்தில்.

    இவர் இறந்து இத்தனை ஆண்டுகள் கழித்தும், ஒவ்வோராண்டும் இவர் நினைவு நாளில் பொது மக்கள், தங்கள் வீடுகளுக்கு முன்பாக எம்.ஜி.ஆர் படத்துக்குப் பூவும் பொட்டும் வைத்து விளக்கேற்றி வழிபடுகிறார்கள் என்பதிலிருந்து தலைமுறைகள் தாண்டியும் இவர் மக்கள் மனதில் மகத்தான சக்தியாகத் திகழ்கிறார் என்பது விளங்கும். மக்கள் நெஞ்சமெனும் கோவில்களில் தெய்வமாகக் குடிகொண்டிருக்கும் ‘தனிப்பிறவி,’ எம்.ஜி.ஆரை, மக்கள் அதிசய பிறவி என்றும், ‘ஆயிரத்தில் ஒருவன்,’ என்றும் இன்றளவும் போற்றுகிறார்கள்.

    தமிழ்த் திரையுலகில் தமக்கென ஒரு பாணி வகுத்துக்கொண்டு சினிமாவைக் கண்ணுங்கருத்துமாக நேசித்து, சாதாரண மக்களுக்கான படம் கொடுத்து, அதன் பின் அரசியலிலும் வெற்றிகொடி நாட்டியவர். தமக்காக மட்டும் வாழாமல் அடுத்தவருக்காகவும் வாழ்ந்ததால் தான் பொன்மனச்செம்மல், ஏழைப்பங்காளன், மக்கள் திலகம், புரட்சித் தலைவர் என்று போற்றப்படுகிறார்.

    பொதுவாழ்வில் இவரடைந்த வெற்றிகள், அதிர்ஷ்டத்தால் ஓரிரவில் பெற்றதல்ல. கடும் உழைப்பு, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, எந்த வேலையிலும் மனமொன்றி முழுதாக ஈடுபடல் போன்ற இவரின் சிறப்புக்குணங்களால், தமிழ்த்திரைப்பட வரலாற்றிலும் சரி, அரசியலிலும் சரி, யாரும் வெல்லவியலாத வரலாற்று நாயகனாகத் திகழ்ந்தார். ஏழைக்குடும்பத்தில் பிறந்து சொந்த முயற்சியால் வாழ்வில் முன்னேறி விண்ணைத் தொட்டுச் சாதனை படைத்தவர். சிறுவயதில், குடும்பச் சூழ்நிலை காரணமாக படிப்பைத் தொடர முடியாமல் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார்.

    பின்னர் திரையுலகில் சிறு பாத்திரங்களில் நடிக்கத் துவங்கி கதாநாயகனாக உயர்ந்து, தமக்கென ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர். துவக்கத்தில் ராஜகுமாரி, மந்திரிகுமாரி படப்பிடிப்பு காலங்களில் கலைஞர் கருணாநிதியுடன் ஏற்பட்ட நட்பு காரணமாக திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்து முக்கிய உறுப்பினராக இருந்தவர், பின்னர் பொருளாளராக உயர்ந்தார். தொடர்ந்து ஏற்றமும் இறக்கமுமாக இவர் திரைவாழ்வு அமைந்திருந்த நேரத்தில், பல சோதனைகளுக்கு இடையே “நாடோடி மன்னன்” படத்தைச் சொந்தமாகத் தயாரித்து திரையிட்ட போது எம்.ஜி.ஆர் சொன்னாராம்.

    “படம் வெற்றியடைந்தால் நான் மன்னன்; தோல்வி அடைந்தால் நாடோடி” என்று.

    படம் மாபெரும் வெற்றி பெற்று, வசூலைக் குவித்தது இவர் வாழ்வில் ஒரு திருப்பு முனை!

    இப்பட வெற்றி விழாவில், பேரரறிஞர் அண்ணா, “நடிக மணிகளிலே எம்.ஜி.ஆர். ஒரு வீரர். விவேகம் நிரம்பிய தோழர். இல்லாதோரிடம் கருணை சுரக்கும் இயல்புடையவர். இந்தக்கனி தங்கள் மடியில் விழாதா என்று பலர் எதிர்பார்த்தார்கள். அது என் மடியில் வந்து விழுந்தது. அதை என் இதயத்தில் எடுத்து வைத்துக் கொண்டேன்” என்று புகழாரம் சூட்டினார். அன்று முதல் அண்ணாவின் இதயக்கனியானார்.

    துவக்கத்தில் மக்கள் திலகம் நடித்தவை வரலாற்றுப் பின்னணி கொண்ட படங்கள் என்றாலும், இவர் ஏற்ற கதாபாத்திரங்கள் பெரும்பாலும், ஏழை எளிய மக்களின் ஜனநாயகக் குரலை ஆட்சியாளர்களிடம் பிரதிபலிப்பதாகவும், அம்மக்களின் நல்வாழ்வுக்காக அநீதியை எதிர்த்துப் போராடி எதிரிகளை வீழ்த்தி நீதி கிடைக்கச் செய்வதுமாக அமைந்திருந்தன.  நாளாக நாளாக நிஜ வாழ்விலும் தங்களுக்காகப் போராடும் நாயகன் கிடைத்து விட்டான் என மக்கள் நம்பத் தலைப்பட்டனர்.

    செருப்புத் தைக்கும் சமூகத்தால் வளர்க்கப்படும் பாத்திரத்தில் நடித்த ‘மதுரை வீரன்’ படம் இவர் திரையுலக வரலாற்றில் ஒரு மைல்கல். இது திரையிடப்பட்ட அரங்குகள் பலவற்றிலும் 100 நாட்களைத் தாண்டி ஓடி சாதனை படைத்தது. மக்களின் நாயகனாக எம்.ஜி.ஆர் முழுப் பரிமாணம் பெற்றது இதில்தான். மக்களுக்குக் கேடு விளைவிக்கும் என்பதால், மது அருந்துவது, புகை பிடிப்பது போன்ற காட்சிகளில் இவர் நடித்ததேயில்லை. பெண்களுக்கு ஆபத்து என்றால் எங்கிருந்தாலும் ஓடி வந்து வில்லனுக்கு நடுவே குதித்து பெண்கள் மானம் காப்பார். எப்போதுமே ஏழைப்பங்காளன்! எதிரிகள் பத்து பேர் என்றாலும் இவர் ஒருவர் மட்டும் தனியாக நின்று சுழன்று சுழன்று பந்தாடி துவம்சம் செய்வார். அநீதிக்கு அடிபணியாமல் தீரத்துடன் தீயசக்திகளை எதிர்த்து முறியடிப்பார். இப்படிப் படங்களில் ஏழைகளுக்காகவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் இவர் பேசிய வசனங்களும், வாயசைத்த பாடல்களும், இவருடைய அரசியல் செல்வாக்கிற்கு அடிப்படையாக அமைந்தன. என்பது மறுக்க முடியாத உண்மை.

    எம்.ஆர்.ராதாவால் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிர் மீண்ட பிறகு இவர் குரல் வெகுவாகப் பாதிக்கப்பட்டது. இவர் வசன உச்சரிப்பு தெளிவாக இல்லாதபோதும், ரசிகர்கள் அதனை ஏற்றுக்கொண்டனர். வாள் சுழற்றுதல், சிலம்பம், சுருள்கத்தி சுழற்றுதல், போன்ற பலவகை சண்டைக் காட்சிகளில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார். “படகோட்டி” படம் மீனவ சமுதாயத்திடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. தொழிலாளி, விவசாயி, எங்க வீட்டுப் பிள்ளை போன்ற படங்கள் மக்களிடையே உண்டாக்கிய பிம்பம், இவருடைய அரசியல் செல்வாக்கை அதிகப்படுத்தி வாக்கு வங்கியாக நிலைபெற்றது. மக்கள் இவரைத் தங்கள் வீட்டுப் பிள்ளையாக எண்ணத் தலைப்பட்டனர். திரைப்படங்களைத் தம் பிரச்சார ஊடகமாக, அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தி வெற்றி கண்டவர் எம்.ஜி.ஆர் என்று சொல்வது மிகச்சரி. இவர் படப்பாடல்கள், இன்றளவும் மக்களிடம் செல்வாக்கு பெற்றிருப்பதுடன், கட்சிக்கு வாக்கு சேகரிக்கும் பிரச்சாரப் பாடல்களாகவும் திகழ்கின்றன …

    “ஒரு தவறு செய்தால்
    அதைத் தெரிந்து செய்தால்
    அவன் தேவன் என்றாலும்
    விடமாட்டேன்”
    என்றும்;

    “தனியானாலும், தலைபோனாலும்
    தீமைகள் நடப்பதைத் தடுத்து நிற்பேன்”
    என்றும் சரியான சொற்களைத் தேர்ந்தெடுத்துக் கோர்த்து அவருக்காகவே பாடல்கள் எழுதினர் கவிஞர்கள்.

    “நதியைப் போலே நாமும் நடந்து பயன் தர வேண்டும்… 
    கடலைப் போலே விரிந்த இதயம் இருந்திட வேண்டும்… 
    வானம் போல பிறருக்காக அழுதிட வேண்டும்… 
    வாழும் வாழ்க்கை உலகில் என்றும் விளங்கிடவேண்டும்…”
    என்ற வைர வரிகள் இவருக்காகவே எழுதப்பட்டவை.

    “மூன்று எழுத்தில் என் மூச்சிருக்கும்; அது முடிந்த பின்னாலும் பேச்சு இருக்கும்,” என்பதை மெய்ப்பித்து தம் பாடல்களில் தனித்துவத்துவத்தை ஏற்படுத்தியவர். இம்மூன்றெழுத்தைக் கடமை என்றும் சொல்லலாம்; எம்.ஜி.ஆர் எனவும் கொள்ளலாம்; சமுதாய விழிப்புணர்ச்சி, தாய்நாடு, தாய்மொழி பற்று ஆகியவை இவர் படப்பாடல்களில் எப்போதுமே கலந்திருக்கும். பாடல்கள் மட்டுமன்றி வசனத்திலும் இவர் அதிக கவனம் செலுத்தினார். “நான் வெற்றி ஒன்றையே பரிசாகப் பெற்று வருபவன்!” என்று சொல்லும் வில்லன் வீரப்பாவுக்கு, “நான் எதிரிகளுக்குத் தோல்வி ஒன்றையே பரிசாகக் கொடுத்துப் பழக்கப்பட்டவன்!” என்று பதிலடி கொடுத்து ரசிகர்களின் கரகோஷத்தைப் பெறுவார். நிஜ வாழ்விலும் இதை இவர் நிரூபிக்கத் தவறவில்லை!

    தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்த சூழலில் எம்.ஜி.ஆரின் பங்களிப்பு பாமர மக்களிடம் கட்சிக்கான செல்வாக்கை அதிகரிக்கச் செய்தது. 1967 ல் அவர் தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் பரங்கிமலை தொகுதியில் வென்று எம்.எல்.ஏவானார். தி.மு.கவிலிருந்து அவர் நீக்கப்பட்டு, 1972ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் நாள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியைத் துவங்கிய காலக்கட்டத்தில், வெளியான‘ரிக்‌ஷாக்காரன்’ படத்தை வெளியிட முடியாமல் ஏற்பட்ட நெருக்கடியைச் சமாளித்துப் பல ஊர்களிலும் அதனைத் திரையிடச் செய்தவர்கள் ரிக்ஷாக்காரர்களே. அது போலப் பெரும்பொருட்செலவில் வெளிநாடுகளில் உருவாக்கப்பட்ட ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தின் வெளியீட்டின்போது, தி.மு.க ஆட்சி கொடுத்த நெருக்கடியால் சென்னையில் சுவரொட்டி ஒட்டமுடியாத நிலை ஏற்பட்ட போது அவருடைய ரசிகர் மன்றத்தினர், அவருக்கு முழு ஒத்துழைப்புக் கொடுத்து படத்தை வெற்றி பெறச் செய்தனர்.

    1977ல் நடைபெற்ற தேர்தலில் பெரும் வெற்றி பெற்று தமிழக முதல்வ ராகப் பொறுப்பேற்றார். பின்னர் 1980ஆம் ஆண்டுத் தேர்தலிலும் வெற்றி பெற்று மீண்டும் இரண்டாம் முறையாக முதல்வரானார். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் எந்த நடிகருக்கும் கிடைக்காத அங்கீகாரமும், செல்வாக்கும் எம்.ஜி.ஆருக்குக் கிடைத்ததென்றால், மக்கள் மனதில் இவர் நீக்கமற நிறைந்திருந்ததும், மக்களைக் கவர்ந்திழுத்த இவரின் காந்த சக்தியும், நம் நன்மைக்காக உழைக்கக்கூடியவர் என்று இவர் மீது மக்களுக்கிருந்த அசைக்க முடியாத நம்பிக்கையும் தாம் காரணங்கள்.

    முதல்வராக இருந்த காலத்தில் இவர் தீட்டிய சில திட்டங்கள், மக்களிடையே இவர் செல்வாக்கை அதிகரித்தன. குறிப்பாக காமராஜரின் பள்ளிக்குழந்தைகளின் மதிய உணவுத் திட்டத்தை முட்டை முதலியன சேர்த்துச் சத்துணவுத் திட்டமாக விரிவுபடுத்தியது, உடை, புத்தகம்,காலணி வழங்கியது, உழவர் கடன் தள்ளுபடித் திட்டம்,   ஆதரவு அற்ற மகளிர்க்கான நல்வாழ்வுத் திட்டம் போன்றவற்றைச் சொல்லலாம். ஏழை எளிய மக்களின் துயர் துடைக்கும் எண்ணத்துடன் இவர் கொண்டு வந்த இத்தகைய நல்வாழ்வுத் திட்டங்கள், ‘பொன்மனச்செம்மல்,’ என்ற பட்டப்பெயரை இவருக்குப் பெற்றுத் தந்தது. ‘ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்,’ என்று பேரறிஞர் அண்ணா சொன்னபடி எம்.ஜி.ஆர் உண்மையிலேயே ஏழை, எளிய மக்களை நேசித்தார். அவர்களுக்காக உள்ளம் உருகினார். அவர்களது மேம்பாட்டிற்காக உழைத்தார்.

    1984ல் இவர் சிறுநீரகக் கோளாறு காரணமாக கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டதால், சிகிச்சைக்காக அமெரிக்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்த போதே, தமிழகத்தில் நடைபெற்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றார். பத்தாண்டுகள் தொடர்ச்சியாக முதலமைச்சர் பதவியை வகித்து பதவியிலிருந்த போதே 1987 ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் நாள் இயற்கை எய்தினார். அவரது மறைவிற்குப் பின் பாரத ரத்னா விருது கொடுத்துப் புகழாரம் சூட்டினர்.

    தாம் நினைத்ததை நடத்தி முடித்தவர் மக்கள் திலகம். நடிகனாகவும் அரசியல்வாதியாகவும் புகழ் பெற விரும்புவோர்க்கு எம்.ஜி.ஆர் வாழ்க்கை ஒரு பாடம்.

     அவர் மரணப்படுக்கையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த காலத்தில் பட்டி தொட்டியெங்கும் இப்பாடல் ஒலிபரப்பானது …

    “உள்ளமதில் உள்ளவரை
    அள்ளித்தரும் நல்லவரை
    விண்ணுலகம் வாஎன்றால்
    மண்ணுலகம் என்னாகும்?”
    என்றும் …

    “உன்னுடனே வருகின்றேன்
    என்னுயிரைத் தருகின்றேன்
    மன்னன் உயிர் போகாமல்
    இறைவா நீ ஆணையிடு!”
    என்றும் …

    மக்கள் தம் உயிரை ஈந்து எம்.ஜி.ஆரை உயிர்ப்பிக்க வைக்க வேண்டும் என்று இறைவனிடம் கண்ணீர் மல்க வேண்டுதல் நடத்தினர். இதிலிருந்து எம்.ஜி.ஆர் மீது மக்கள் கொண்டிருந்த அளவற்ற அன்பும், பாசமும் விளங்குகின்றதல்லவா?
    அதனால் தான் கவிஞர் வைரமுத்து சொன்னார்:
    “ஒரே ஒரு சந்திரன் தான் ;
    ஒரே ஒரு சூரியன் தான் ;
    ஒரே ஒரு எம்.ஜி.ஆர் தான்;”
    தொலைக்காட்சி, இணையதளம் என நவீனத் தொழில்நுட்பங்கள் வளர்ந்த இக்காலத்திலும் எம்.ஜி.ஆரின் புகழ் குன்றாமல் ஒளிவீசக் காரணம், மக்கள் தங்கள் நெஞ்சங்களில் அவர் உருவத்தை அழியாத கோலமாகத் தீட்டி வைத்திருப்பது தான். என்றென்றும் அது கலையாது; மறையவும் மறையாது!

    “நெஞ்சிலிட்ட கோலமெல்லாம் அழிவதில்லை
    என்றும் அது கலைவதில்லை
    எண்ணங்களும் மறைவதில்லை”

    Share
  • மனதில் நிறைந்த மக்கள் திலகம்

    — முனைவர் இதயகீதம் இராமனுஜம்.

    பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர்.

    முன்னுரை:
    வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வள்ளலார் வாடினார். ஏன் தெரியுமா? பயிர் விளைந்தால்தான் உணவு கிடைக்கும். உணவு கிடைத்தால்தான் மக்கள் வாழ்க்கை செழிக்கும். அந்த வாழ்க்கைக்கு அடிப்படையாக இருப்பது இயற்கை. இதுவே வள்ளலாரின் சிந்தனையாக இருந்தது. அதே போல மக்கள் குறிப்பாக ஏழைக் குழந்தைகள் வாடியதால் சத்துணவு திட்டத்தைக் கொண்டு வந்தவர் எம்.ஜி.ஆர். பெருந்தலைவர் காமராசர் கொண்டுவந்த மதிய உணவு திட்டத்தை சத்தான முத்தான திட்டமாகக் கொண்டு வந்து நடைமுறைப் படுத்தியவர் பொன்மனச் செம்மல், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். பேரறிஞர் அண்ணாவின் ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்பதைப் போல மக்களின் வயிற்றுப் பசியைப் போக்கி அதில் இறைவனைக் கண்டவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். இன்றும் கிராமத்து மக்கள் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் மறையவில்லை… எங்களோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

    பிறப்பு:
    எம்.ஜி.ஆர். என்று மூன்று எழுத்தால் பாரெங்கும் புகழ் பெற்ற பொன்மனச்செம்மல் மருதூர் கோபால மேனன் இராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்.) மருதூர் கோபால மேனனுக்கும் சத்திய பாமாவுக்கும் 1917ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 17ஆம் நாள் இலங்கையில் உள்ள கண்டியில் பிறந்தார்.

    இளமையின் கனவும் லட்சிய உணர்வும்:
    இளமை பலருக்கு இனிமையாக இருக்கும். சிலருக்கு இன்னலாக இருக்கும். புரட்சித்தலைவரின் இளமை வாழ்க்கை பல சோகங்களும் இன்னல்களும் கலந்து இருந்தது. இளம் தந்தையை இழந்தார் எம்.ஜி.ஆர். அதனால் அவரது தாயார் சத்யபாமா வேதனையில் அவதிப்பட்டார். உழைத்து பிள்ளைகளைக் காக்க முடிவு செய்து மருதூரிலிருந்து தமிழகம் வந்தார். கும்பகோணத்தில் குடியேறினார். தனியாக குழந்தைகளுடன் வாடகை வீட்டில் குடியிருந்த சத்யபாமா அம்மையார் வேலை செய்து குழந்தைகளை வளர்த்தார்.

    தங்கள் குழந்தைகள் மனித நேயத்துடன் இருக்க வேண்டும். உலகிலே சிறந்த பக்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதுதான். இதை நீங்கள் செய்ய வேண்டும். ஏழைகளின் துயரத்தைத் துடைத்தாலே கடவுளைத் தொழுத பலன் கிட்டும் என்று தனது தாயார் சொல்லிக்கொடுத்த பாடத்தைத்தான் தனது வாழ்நாளில் இலட்சியமாக இருந்து செயல்படுத்தினார் பொன்மனச் செம்மல்.

    மக்கள் சேவை:
    நாடும் சமூகமும் நலமாக இருக்க நல்ல பழக்க வழக்கங்கள் அவசியம். அதைத்தான் திரைப்படங்கள் மூலம் எம்.ஜி.ஆர். பரப்பினார். ராமானுஜர், ஆதிசங்கரர், காஞ்சி மகா சுவாமிகள் போல எம்.ஜி.ஆர். ஒரு அவதார புருஷர். ஏனென்றால் நாட்டு நலனுக்காக ஆன்மீக வழியில் அவர்கள் சேவை செய்தனர். ஆனால் எம்.ஜி.ஆர். தன் தொழிலான திரைப்படங்கள் மூலம் மனித நேயத்தையும் மக்கள் பண்புகளையும் மக்கள் மனதில் விதித்தார். எம்.ஜி.ஆர். தனது தாய் சத்யபாமா அம்மையாரின் அறிவுரைகள், தனது வாழ்க்கையில் சந்தித்த பல கஷ்டங்கள், நஷ்டங்கள், வேதனைகள், துயரங்கள் மூலமும் மிகவும் பக்குவமடைந்தார். அதனால் சமூகமும் நாடும் இப்படி இருந்தால் மகிழ்ச்சியாக இருக்கும் என்று உணர்ந்தார். அதனால்தான் ஆட்சிக் கட்டிலில் எம்.ஜி.ஆர். அமர்ந்தபோது பல மக்கள் நலத் திட்டங்களில் தன்னை ஈடுபடுத்தி மக்கள் சேவையே மகேசன் சேவை என்னும் தாரக மந்திரத்தைச் சொல்லி நலம் பயக்கும் திட்டங்களை நிறைவேற்றினார்.

    தேடி வந்த விருதுகள்:
    1960ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டும், விருதில் ஹிந்தி வார்த்தைகள் இருந்ததால் அதை ஏற்க மறுத்தார் பொன்மனச்செம்மல்.
    1972ஆம் ஆண்டு ரிக்ஷாக்காரன் திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதினைப் பெற்றார்.
    1987ஆம் ஆண்டு எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
    புரட்சித் தலைவருக்கு டாக்டர் பட்டம் சென்னை பல்கலைப் கழகமும் அரிசோனா உலகப் பல்கலைக் கழகமும் இணைந்து வழங்கிப் பெருமைப்படுத்தியது.

    அரசியல்:
    திரைப்படங்கள் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற எம்.ஜி.ஆர். அவர்கள் தி.மு.கவில் ஏற்பட்ட கருத்து வேற்றுமையினால் தி.மு.கவில் இருந்து விலகி அ.தி.மு.க. என்னும் கட்சியைத் துவங்கினார். கட்சியைத் துவக்கிய நிலையில் திண்டுக்கல் எம்.பி. தொகுதி இடைத்தேர்தல் வந்தது. அதுதான் எம்.ஜி.ஆர்.-ன் அ.தி.மு.கசந்தித்த முதல் தேர்தல் களம். ஸ்தாபன காங்கிரஸ், இந்திரா காங்கிரஸ், தி.மு.க. போன்ற கட்சிகள் போட்டியிட்ட நிலையில் தன் கட்சி வேட்பாளரான மாயத்தேவரை வெற்றி பெறச் செய்தார் எம்.ஜி.ஆர். தன்னுடைய சினிமா மாயைக் காட்டி ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுவிட்டார். பொதுத் தேர்தல் வரட்டும்… அப்போது தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து எம்.ஜி.ஆர். வெற்றி பெறுவாரா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது எம்.ஜி.ஆரால் இவ்வளவு விரிவாகப் பிரச்சாரம் செய்ய முடியாது. சினிமா மாயை கலைந்துவிடும் என்று தன் கட்சியினருக்குத் தைரியம் சொன்னார் கலைஞர் கருணாநிதி.

    எம்.ஜி.ஆர். மீது பல வழக்குகள் போடப்பட்டன. அந்த வழக்குகளை எல்லாம் முறைப்படி அறப்போராட்டம் மூலம் சந்தித்தார். அரசைக் கண்டித்து உண்ணாவிரதம் இருந்தார். எம்.ஜி.ஆருடன் ஜானகி அம்மாளும் உண்ணா விரதத்தில் கலந்து கொண்டார். காலை எட்டு மணியிலிருந்து மாலை ஆறு மணி வரை உண்ணாவிரதம் இருந்து தன் எதிர்ப்பைக் காட்டுவார். அராஜகத்தில் ஈடுபடமாட்டார்.

    எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த வரையில் மக்கள் நலனே தன் நலன் என்ற வகையில், ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படாமல் ஆட்சி செய்தார். மின் கட்டணம், பால் விலை கூட்டாமல் இருந்தார். விவசாயிகளுக்கு மின் கட்டணம் கட்டும் முறையில் எளிமையும் சலுகையும் காட்டினார். விவசாய மின் கட்டணம் வெகுவாகக் குறைக்கப்பட்டது. அரசு ஊழியர்கள் மற்றும் சாதாரண மக்களும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக ரேஷன் கடைகளில் அரிசி, சர்க்கரை, பாமாயில், மண்ணெண்ணெய் தடையில்லாமல் கிடைக்குமாறு செய்தார். திறமையான அதிகாரிகளின் ஆலோசனையைக் கேட்டு முடிவு எடுத்தார்.

    பொருளாதாரமும் எம்.ஜி.ஆரும்:
    1977ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தில் மாற்றுக் கட்சித் தலைவர்கள்… “எம்.ஜி.ஆருக்குப் பொருளாதாரம் தெரியுமா?” பொருளாதாரம் தெரியாமல் ஆட்சி நடத்த முடியுமா? என்று கேட்டார்கள். இதற்குப் பதிலளித்த எம்.ஜி.ஆர். “அடுத்த வேலை பசியைப் போக்கத் தெரியும். உழைப்பும் எளிமையும் சேமிப்பும் நேர்மையும் இருந்தால் போதும், யாரும் பிரகாசமான வாழ்வு பெறலாம். இதுதான் எனக்குத் தெரிந்த பொருளாதாரம்” என்று பதிலளித்தார். பசியோடு இருந்தவன் நான். பசியை வென்றேன். திரைத்துறையில் ஈடுபட்டு திருப்தியாக வளர்ந்தேன். அதேபோல் என் ஆட்சியிலும் மக்கள் திருப்தியை அடையச் செய்வேன் என்றார்.

    திரைப்படப் பாடல்களில் திசையைக் காட்டியவர்:
    மீனவ சமுதாயத்திற்காக எழுதிய இப் பாடல் உலக அரங்கம் முழுவதும் இன்றும் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.

    தரைமேல் பிறக்க வைத்தான்…
    எங்களை கண்ணீரில் மிதக்க வைத்தான் …
    – என்ற பாடல் வரிகளில் அசைந்தாடுகின்றபோது, சமூகத்தின்மீது இவருக்கு உள்ள அக்கறை புலனாகிறது!

    ஒரு தாய் மக்கள் நாமென்போம்..
    ஒன்றே எங்கள் குலமென்போம்…
    – என்ற பாடல் மூலம் நாமெல்லாம் இந்தியத் தாயின் பிள்ளைகள் என்றும் நாம் அனைவரும் மனிதர்கள் என்னும் குலத்தைச் சார்ந்தவர் என்றும் விளக்கினார்.

    இதய தெய்வம் நமது அண்ணா தோன்றினார்.. அவர்
    என்றும் வாழும் கொள்கை தீபம் ஏற்றினார்..
    – என்ற பாடலின் மூலம் அண்ணாவின் பெருமையை உலகம் முழுவதும் பரவச் செய்தார்.

    திருடாதே பாப்பா திருடாதே..
    வறுமை நினைத்து பயந்துவிடாதே
    திறமை இருக்கு மறந்துவிடாதே..
    -என்ற பாடலில் குழந்தைகளுக்கு திருடக் கூடாது என்ற தத்துவத்தை போதித்து வறுமையை நினைத்து பயந்து போகக் கூடாது. நமக்கு திறமை இருக்கு என்பதை நினைவூட்டி மக்கள் மனதில் திறமையை போதித்தவர் பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர்.

    இவரது பாடல்களை பாமரர் முதல் படித்தவர் வரை கேட்டு மகிழ்கிறார்கள். சோதனையும் வேதனையும் வரும்போது அவரது தத்துவப் பாடல்கள் சோகத்தை விரட்டும் சக்தியாக விளங்குகிறது என்றால் அது மிகையில்லை.

    சமூகப் பார்வை:
    கடமையைச் செய். பலன் தானாக வரும் என்பது கீதையின் வாசகம். சமார்த்தியத்தைவிட சத்தியம் உயர்ந்தது என்பார் எம்.ஜி.ஆர். புகைக்கக் கூடாது … மது அருந்தக் கூடாது… திருடக் கூடாது… அராஜகம் செய்யக் கூடாது… பணிவு வேண்டும்… விசுவாசம் வேண்டும்… பெற்றோரைத் துதிக்க வேண்டும்… தோல்வி கண்டு துவளக் கூடாது… எத்தனை கஷ்டங்கள் இருந்தாலும் வேதனை வந்தாலும் பொறுமையும் உழைப்பும் நல்ல வாழ்வைத் தரும் என்பார்.

    பழி வாங்கக் கூடாது… அடுத்தவர் பொருளை அபகரிக்கக்கூடது… வரதட்சணை வாங்கக் கூடாது… ஊதாரித்தனம் கூடாது… அடுத்தவர்களுக்கு உதவ வேண்டும்… மனித நேயம் பேண வேண்டும்… குழந்தைகளை மதிக்க வேண்டும்… அவர்கள்தான் சமூகத்தில் நாட்டின் எதிர்காலத் தூண்கள் என்பார்… பெற்றோர்கள் நேரில் வந்த தெய்வங்கள் என்பார்.

    நம்மை யாரும் பார்க்கவில்லை என்கிற தைரியத்தில் தவறு செய்யாதீர்கள். எங்கும் வியாபித்து இருக்கும் தெய்வம் (சத்தியத்தின் கண்கள்) உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. சாட்சியிடம் தப்பிக்கலாம். சட்டத்தின் முன் தப்பிக்கலாம். ஆனால் சத்தியத்திடமிருந்து தப்ப முடியாது – சத்தியம் தெய்வம் அத்தனை வலிமை வாய்ந்தது. இந்தத் தத்துவத்தைத்தான் சிரித்து வாழ வேண்டும் திரைப்படத்தில் வரும் மேரே நாம் அப்துல் ரஹ்மான் என்ற பாடலின் வரிகள் வாயிலாக விளக்கியுள்ளார் எம்.ஜி.ஆர்.

    முடிவுரை:
    தமிழக சட்ட மன்ற வரலாற்றில் முதல்வர்களாக பணி புரிந்ததில் பல சாதனைகள் புரிந்திருந்தாலும், ஒன்பது ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சி செய்த காமராசருக்கு அடுத்தபடியாக தொடர்ந்து பத்தரை ஆண்டுகள் முதல்வராகப் பணி செய்த சாதனை புரிந்தவர் எம்.ஜி.ஆர். அவரது ஆட்சியில் மக்கள் கஷ்டம் இல்லாமல் திருப்திகரமான மகிழ்ச்சிகரமான வாழ்க்கை வாழ்ந்தனர்.

    மனித நேயம், உழைப்பு, உண்மை, பாசம், அர்ப்பணிப்பு, நேர்மை, சேவை எண்ணம் கொண்டு மகத்தான சாதனை புரிந்தவர். காஞ்சி மகா சுவாமிகளின் ஆசியும் பெற்ற எம்.ஜி.ஆர். இந்தப் பூவுலகை விட்டு 1987ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24ஆம் நாள் பொன்னுலகம் சென்றார்.

    பொன்மனசெம்மலின் வழியில் நாமும் மனித நேயத்தை வளர்த்து வாழ்க்கையில் முடிந்தவரை அனைவருக்கும் உதவி செய்து வாழ்வில் வளம் பெறுவோம்.

     

    Share