— ஞா.  கலையரசி.

 

“காலத்தை வென்றவன் நீ
காவியமானவன் நீ
வேதனை தீர்த்தவன்
விழிகளில் நிறைந்தவன்
வெற்றித் திருமகன் நீ!”
என்று எம்.ஜி.ஆருக்காகவே எழுதப்பட்ட இப்பாடல் வரிகளுக்கு உயிர் கொடுத்து காலத்தை வென்று இன்றைக்கும் மக்கள் நெஞ்சங்களில் காவிய நாயகனாக உலா வருபவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்!

“இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர் போல் யாரென்று ஊர் சொல்ல வேண்டும்”
என்ற பாடலுக்கேற்ப, மக்கள் மனதில் அணையா தீபமாக ஒளிவீசிக் கொண்டிருப்பவர் எம்.ஜி.ஆர்!

“வாழ்ந்தவர் கோடி
மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்?”
என்று கேட்டால் தமிழகத்தைப் பொறுத்தவரை எம்.ஜி.ஆர் என்பது தான் ஒரே பதிலாக இருக்கும்! இவர் அளவுக்கு மக்கள் நெஞ்சங்களில் குடி கொண்டவர் ஒருவர் இனிமேல் தான் பிறந்து வர வேண்டும். குறிப்பாக அடித்தட்டு மக்களிடம், இவருக்கிருந்த செல்வாக்கு அளப்பரியது. “இதுவரை பூமியை வெட்டித்தான் தங்கத்தை எடுத்தோம்; ஆனால் இன்று பூமியை வெட்டி தங்கத்தை அல்லவா புதைக்கிறோம்!” என்று புலம்பினார்கள், இவருடைய இரங்கற் கூட்டத்தில்.

இவர் இறந்து இத்தனை ஆண்டுகள் கழித்தும், ஒவ்வோராண்டும் இவர் நினைவு நாளில் பொது மக்கள், தங்கள் வீடுகளுக்கு முன்பாக எம்.ஜி.ஆர் படத்துக்குப் பூவும் பொட்டும் வைத்து விளக்கேற்றி வழிபடுகிறார்கள் என்பதிலிருந்து தலைமுறைகள் தாண்டியும் இவர் மக்கள் மனதில் மகத்தான சக்தியாகத் திகழ்கிறார் என்பது விளங்கும். மக்கள் நெஞ்சமெனும் கோவில்களில் தெய்வமாகக் குடிகொண்டிருக்கும் ‘தனிப்பிறவி,’ எம்.ஜி.ஆரை, மக்கள் அதிசய பிறவி என்றும், ‘ஆயிரத்தில் ஒருவன்,’ என்றும் இன்றளவும் போற்றுகிறார்கள்.

தமிழ்த் திரையுலகில் தமக்கென ஒரு பாணி வகுத்துக்கொண்டு சினிமாவைக் கண்ணுங்கருத்துமாக நேசித்து, சாதாரண மக்களுக்கான படம் கொடுத்து, அதன் பின் அரசியலிலும் வெற்றிகொடி நாட்டியவர். தமக்காக மட்டும் வாழாமல் அடுத்தவருக்காகவும் வாழ்ந்ததால் தான் பொன்மனச்செம்மல், ஏழைப்பங்காளன், மக்கள் திலகம், புரட்சித் தலைவர் என்று போற்றப்படுகிறார்.

பொதுவாழ்வில் இவரடைந்த வெற்றிகள், அதிர்ஷ்டத்தால் ஓரிரவில் பெற்றதல்ல. கடும் உழைப்பு, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, எந்த வேலையிலும் மனமொன்றி முழுதாக ஈடுபடல் போன்ற இவரின் சிறப்புக்குணங்களால், தமிழ்த்திரைப்பட வரலாற்றிலும் சரி, அரசியலிலும் சரி, யாரும் வெல்லவியலாத வரலாற்று நாயகனாகத் திகழ்ந்தார். ஏழைக்குடும்பத்தில் பிறந்து சொந்த முயற்சியால் வாழ்வில் முன்னேறி விண்ணைத் தொட்டுச் சாதனை படைத்தவர். சிறுவயதில், குடும்பச் சூழ்நிலை காரணமாக படிப்பைத் தொடர முடியாமல் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார்.

பின்னர் திரையுலகில் சிறு பாத்திரங்களில் நடிக்கத் துவங்கி கதாநாயகனாக உயர்ந்து, தமக்கென ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர். துவக்கத்தில் ராஜகுமாரி, மந்திரிகுமாரி படப்பிடிப்பு காலங்களில் கலைஞர் கருணாநிதியுடன் ஏற்பட்ட நட்பு காரணமாக திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்து முக்கிய உறுப்பினராக இருந்தவர், பின்னர் பொருளாளராக உயர்ந்தார். தொடர்ந்து ஏற்றமும் இறக்கமுமாக இவர் திரைவாழ்வு அமைந்திருந்த நேரத்தில், பல சோதனைகளுக்கு இடையே “நாடோடி மன்னன்” படத்தைச் சொந்தமாகத் தயாரித்து திரையிட்ட போது எம்.ஜி.ஆர் சொன்னாராம்.

“படம் வெற்றியடைந்தால் நான் மன்னன்; தோல்வி அடைந்தால் நாடோடி” என்று.

படம் மாபெரும் வெற்றி பெற்று, வசூலைக் குவித்தது இவர் வாழ்வில் ஒரு திருப்பு முனை!

இப்பட வெற்றி விழாவில், பேரரறிஞர் அண்ணா, “நடிக மணிகளிலே எம்.ஜி.ஆர். ஒரு வீரர். விவேகம் நிரம்பிய தோழர். இல்லாதோரிடம் கருணை சுரக்கும் இயல்புடையவர். இந்தக்கனி தங்கள் மடியில் விழாதா என்று பலர் எதிர்பார்த்தார்கள். அது என் மடியில் வந்து விழுந்தது. அதை என் இதயத்தில் எடுத்து வைத்துக் கொண்டேன்” என்று புகழாரம் சூட்டினார். அன்று முதல் அண்ணாவின் இதயக்கனியானார்.

துவக்கத்தில் மக்கள் திலகம் நடித்தவை வரலாற்றுப் பின்னணி கொண்ட படங்கள் என்றாலும், இவர் ஏற்ற கதாபாத்திரங்கள் பெரும்பாலும், ஏழை எளிய மக்களின் ஜனநாயகக் குரலை ஆட்சியாளர்களிடம் பிரதிபலிப்பதாகவும், அம்மக்களின் நல்வாழ்வுக்காக அநீதியை எதிர்த்துப் போராடி எதிரிகளை வீழ்த்தி நீதி கிடைக்கச் செய்வதுமாக அமைந்திருந்தன.  நாளாக நாளாக நிஜ வாழ்விலும் தங்களுக்காகப் போராடும் நாயகன் கிடைத்து விட்டான் என மக்கள் நம்பத் தலைப்பட்டனர்.

செருப்புத் தைக்கும் சமூகத்தால் வளர்க்கப்படும் பாத்திரத்தில் நடித்த ‘மதுரை வீரன்’ படம் இவர் திரையுலக வரலாற்றில் ஒரு மைல்கல். இது திரையிடப்பட்ட அரங்குகள் பலவற்றிலும் 100 நாட்களைத் தாண்டி ஓடி சாதனை படைத்தது. மக்களின் நாயகனாக எம்.ஜி.ஆர் முழுப் பரிமாணம் பெற்றது இதில்தான். மக்களுக்குக் கேடு விளைவிக்கும் என்பதால், மது அருந்துவது, புகை பிடிப்பது போன்ற காட்சிகளில் இவர் நடித்ததேயில்லை. பெண்களுக்கு ஆபத்து என்றால் எங்கிருந்தாலும் ஓடி வந்து வில்லனுக்கு நடுவே குதித்து பெண்கள் மானம் காப்பார். எப்போதுமே ஏழைப்பங்காளன்! எதிரிகள் பத்து பேர் என்றாலும் இவர் ஒருவர் மட்டும் தனியாக நின்று சுழன்று சுழன்று பந்தாடி துவம்சம் செய்வார். அநீதிக்கு அடிபணியாமல் தீரத்துடன் தீயசக்திகளை எதிர்த்து முறியடிப்பார். இப்படிப் படங்களில் ஏழைகளுக்காகவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் இவர் பேசிய வசனங்களும், வாயசைத்த பாடல்களும், இவருடைய அரசியல் செல்வாக்கிற்கு அடிப்படையாக அமைந்தன. என்பது மறுக்க முடியாத உண்மை.

எம்.ஆர்.ராதாவால் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிர் மீண்ட பிறகு இவர் குரல் வெகுவாகப் பாதிக்கப்பட்டது. இவர் வசன உச்சரிப்பு தெளிவாக இல்லாதபோதும், ரசிகர்கள் அதனை ஏற்றுக்கொண்டனர். வாள் சுழற்றுதல், சிலம்பம், சுருள்கத்தி சுழற்றுதல், போன்ற பலவகை சண்டைக் காட்சிகளில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார். “படகோட்டி” படம் மீனவ சமுதாயத்திடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. தொழிலாளி, விவசாயி, எங்க வீட்டுப் பிள்ளை போன்ற படங்கள் மக்களிடையே உண்டாக்கிய பிம்பம், இவருடைய அரசியல் செல்வாக்கை அதிகப்படுத்தி வாக்கு வங்கியாக நிலைபெற்றது. மக்கள் இவரைத் தங்கள் வீட்டுப் பிள்ளையாக எண்ணத் தலைப்பட்டனர். திரைப்படங்களைத் தம் பிரச்சார ஊடகமாக, அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தி வெற்றி கண்டவர் எம்.ஜி.ஆர் என்று சொல்வது மிகச்சரி. இவர் படப்பாடல்கள், இன்றளவும் மக்களிடம் செல்வாக்கு பெற்றிருப்பதுடன், கட்சிக்கு வாக்கு சேகரிக்கும் பிரச்சாரப் பாடல்களாகவும் திகழ்கின்றன …

“ஒரு தவறு செய்தால்
அதைத் தெரிந்து செய்தால்
அவன் தேவன் என்றாலும்
விடமாட்டேன்”
என்றும்;

“தனியானாலும், தலைபோனாலும்
தீமைகள் நடப்பதைத் தடுத்து நிற்பேன்”
என்றும் சரியான சொற்களைத் தேர்ந்தெடுத்துக் கோர்த்து அவருக்காகவே பாடல்கள் எழுதினர் கவிஞர்கள்.

“நதியைப் போலே நாமும் நடந்து பயன் தர வேண்டும்… 
கடலைப் போலே விரிந்த இதயம் இருந்திட வேண்டும்… 
வானம் போல பிறருக்காக அழுதிட வேண்டும்… 
வாழும் வாழ்க்கை உலகில் என்றும் விளங்கிடவேண்டும்…”
என்ற வைர வரிகள் இவருக்காகவே எழுதப்பட்டவை.

“மூன்று எழுத்தில் என் மூச்சிருக்கும்; அது முடிந்த பின்னாலும் பேச்சு இருக்கும்,” என்பதை மெய்ப்பித்து தம் பாடல்களில் தனித்துவத்துவத்தை ஏற்படுத்தியவர். இம்மூன்றெழுத்தைக் கடமை என்றும் சொல்லலாம்; எம்.ஜி.ஆர் எனவும் கொள்ளலாம்; சமுதாய விழிப்புணர்ச்சி, தாய்நாடு, தாய்மொழி பற்று ஆகியவை இவர் படப்பாடல்களில் எப்போதுமே கலந்திருக்கும். பாடல்கள் மட்டுமன்றி வசனத்திலும் இவர் அதிக கவனம் செலுத்தினார். “நான் வெற்றி ஒன்றையே பரிசாகப் பெற்று வருபவன்!” என்று சொல்லும் வில்லன் வீரப்பாவுக்கு, “நான் எதிரிகளுக்குத் தோல்வி ஒன்றையே பரிசாகக் கொடுத்துப் பழக்கப்பட்டவன்!” என்று பதிலடி கொடுத்து ரசிகர்களின் கரகோஷத்தைப் பெறுவார். நிஜ வாழ்விலும் இதை இவர் நிரூபிக்கத் தவறவில்லை!

தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்த சூழலில் எம்.ஜி.ஆரின் பங்களிப்பு பாமர மக்களிடம் கட்சிக்கான செல்வாக்கை அதிகரிக்கச் செய்தது. 1967 ல் அவர் தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் பரங்கிமலை தொகுதியில் வென்று எம்.எல்.ஏவானார். தி.மு.கவிலிருந்து அவர் நீக்கப்பட்டு, 1972ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் நாள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியைத் துவங்கிய காலக்கட்டத்தில், வெளியான‘ரிக்‌ஷாக்காரன்’ படத்தை வெளியிட முடியாமல் ஏற்பட்ட நெருக்கடியைச் சமாளித்துப் பல ஊர்களிலும் அதனைத் திரையிடச் செய்தவர்கள் ரிக்ஷாக்காரர்களே. அது போலப் பெரும்பொருட்செலவில் வெளிநாடுகளில் உருவாக்கப்பட்ட ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தின் வெளியீட்டின்போது, தி.மு.க ஆட்சி கொடுத்த நெருக்கடியால் சென்னையில் சுவரொட்டி ஒட்டமுடியாத நிலை ஏற்பட்ட போது அவருடைய ரசிகர் மன்றத்தினர், அவருக்கு முழு ஒத்துழைப்புக் கொடுத்து படத்தை வெற்றி பெறச் செய்தனர்.

1977ல் நடைபெற்ற தேர்தலில் பெரும் வெற்றி பெற்று தமிழக முதல்வ ராகப் பொறுப்பேற்றார். பின்னர் 1980ஆம் ஆண்டுத் தேர்தலிலும் வெற்றி பெற்று மீண்டும் இரண்டாம் முறையாக முதல்வரானார். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் எந்த நடிகருக்கும் கிடைக்காத அங்கீகாரமும், செல்வாக்கும் எம்.ஜி.ஆருக்குக் கிடைத்ததென்றால், மக்கள் மனதில் இவர் நீக்கமற நிறைந்திருந்ததும், மக்களைக் கவர்ந்திழுத்த இவரின் காந்த சக்தியும், நம் நன்மைக்காக உழைக்கக்கூடியவர் என்று இவர் மீது மக்களுக்கிருந்த அசைக்க முடியாத நம்பிக்கையும் தாம் காரணங்கள்.

முதல்வராக இருந்த காலத்தில் இவர் தீட்டிய சில திட்டங்கள், மக்களிடையே இவர் செல்வாக்கை அதிகரித்தன. குறிப்பாக காமராஜரின் பள்ளிக்குழந்தைகளின் மதிய உணவுத் திட்டத்தை முட்டை முதலியன சேர்த்துச் சத்துணவுத் திட்டமாக விரிவுபடுத்தியது, உடை, புத்தகம்,காலணி வழங்கியது, உழவர் கடன் தள்ளுபடித் திட்டம்,   ஆதரவு அற்ற மகளிர்க்கான நல்வாழ்வுத் திட்டம் போன்றவற்றைச் சொல்லலாம். ஏழை எளிய மக்களின் துயர் துடைக்கும் எண்ணத்துடன் இவர் கொண்டு வந்த இத்தகைய நல்வாழ்வுத் திட்டங்கள், ‘பொன்மனச்செம்மல்,’ என்ற பட்டப்பெயரை இவருக்குப் பெற்றுத் தந்தது. ‘ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்,’ என்று பேரறிஞர் அண்ணா சொன்னபடி எம்.ஜி.ஆர் உண்மையிலேயே ஏழை, எளிய மக்களை நேசித்தார். அவர்களுக்காக உள்ளம் உருகினார். அவர்களது மேம்பாட்டிற்காக உழைத்தார்.

1984ல் இவர் சிறுநீரகக் கோளாறு காரணமாக கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டதால், சிகிச்சைக்காக அமெரிக்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்த போதே, தமிழகத்தில் நடைபெற்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றார். பத்தாண்டுகள் தொடர்ச்சியாக முதலமைச்சர் பதவியை வகித்து பதவியிலிருந்த போதே 1987 ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் நாள் இயற்கை எய்தினார். அவரது மறைவிற்குப் பின் பாரத ரத்னா விருது கொடுத்துப் புகழாரம் சூட்டினர்.

தாம் நினைத்ததை நடத்தி முடித்தவர் மக்கள் திலகம். நடிகனாகவும் அரசியல்வாதியாகவும் புகழ் பெற விரும்புவோர்க்கு எம்.ஜி.ஆர் வாழ்க்கை ஒரு பாடம்.

 அவர் மரணப்படுக்கையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த காலத்தில் பட்டி தொட்டியெங்கும் இப்பாடல் ஒலிபரப்பானது …

“உள்ளமதில் உள்ளவரை
அள்ளித்தரும் நல்லவரை
விண்ணுலகம் வாஎன்றால்
மண்ணுலகம் என்னாகும்?”
என்றும் …

“உன்னுடனே வருகின்றேன்
என்னுயிரைத் தருகின்றேன்
மன்னன் உயிர் போகாமல்
இறைவா நீ ஆணையிடு!”
என்றும் …

மக்கள் தம் உயிரை ஈந்து எம்.ஜி.ஆரை உயிர்ப்பிக்க வைக்க வேண்டும் என்று இறைவனிடம் கண்ணீர் மல்க வேண்டுதல் நடத்தினர். இதிலிருந்து எம்.ஜி.ஆர் மீது மக்கள் கொண்டிருந்த அளவற்ற அன்பும், பாசமும் விளங்குகின்றதல்லவா?
அதனால் தான் கவிஞர் வைரமுத்து சொன்னார்:
“ஒரே ஒரு சந்திரன் தான் ;
ஒரே ஒரு சூரியன் தான் ;
ஒரே ஒரு எம்.ஜி.ஆர் தான்;”
தொலைக்காட்சி, இணையதளம் என நவீனத் தொழில்நுட்பங்கள் வளர்ந்த இக்காலத்திலும் எம்.ஜி.ஆரின் புகழ் குன்றாமல் ஒளிவீசக் காரணம், மக்கள் தங்கள் நெஞ்சங்களில் அவர் உருவத்தை அழியாத கோலமாகத் தீட்டி வைத்திருப்பது தான். என்றென்றும் அது கலையாது; மறையவும் மறையாது!

“நெஞ்சிலிட்ட கோலமெல்லாம் அழிவதில்லை
என்றும் அது கலைவதில்லை
எண்ணங்களும் மறைவதில்லை”

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *