படக்கவிதைப் போட்டி (14)
பவள சங்கரி
அன்பிற்கினிய நண்பர்களே!
வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?
திருமிகு வனிலா பாலாஜி எடுத்த இந்தப் படத்திற்கு [பட்டுக்கூடுகளிலிருந்து நூல் பிரித்தெடுக்கப்படுகிறது] ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (30.05.2015) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர், தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர் திருமதி மேகலா தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.
புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்த மேகலா இராமமூர்த்தி கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்றவர். அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009 ம் ஆண்டுகளில் (ஆர்லாண்டோ & அட்லாண்டா) கவியரங்கம், இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். புறநானூறு, குறுந்தொகைப் பாடல்களில் அதிக நாட்டமும், இலக்கியக் கூட்டங்களில் சுவைபட பேசுவதிலும் வல்லமை பெற்றவர். இவருடையவலைப்பூ – மணிமிடைபவளம்
கூடைக்குள் உறங்கும் உயிர்கள் ..!
வாடி ராசாத்தி….!
ஆயிரம் பெண்கள்
அடுத்திருக்க உந்தன்
நேசப் பார்வை
என்மேல் விழுந்ததும்
பஞ்சாரக் கோழியாக
மனமும் என்னுள்
எகிறிக் குதித்தது ..!
மெத்தை வீட்டு பொண்ணிது
மெத்தப் படிப்பு படிக்கவோ..
பிராஜெக்ட்டு செய்வோ
கூடையோடப் பட்டுக்கூடு
வாரிக்கிட்டு போகுமென்றே
ஆசைப்பட்டு சிரித்து
வைத்தேன்..!
நீயோ….
மகிழுந்தில் இறங்கிய
வெண்ணிலவாய்
காணாததைக் கண்டதுபோல்
நிமிஷத்தில் நிழல்படம்
எடுத்துக் கொண்டு
திரும்பி விட்டாய்..!
ரெண்டு மாசகாலமா
காவலிருந்து கண்ணுல
வெச்சு வளர்த்த
வெண்பட்டுக் கூடிது.!
அங்காடி லாபத்துக்கே
எங்கூட்டுக் கணக்குல
ஆறு வயிறு ஏங்குது ..!
கருவுக்குள் உறங்கும் உயிரை
நானறிய மாட்டேனா?
சிறகுகள் முளைக்குமுன்னே
சூரியனைக் காணுமுன்னே
கூண்டோடு கைலாசம்..
அனுப்ப எனக்கும்
நெஞ்சம் ஒப்பவில்லை..!
மனித வயிறு இல்லையென்றால்
கூடைக்குள் கூறு கட்டி
வெந்நீரில் வேகப் போடும்
வேதனை ஏதுமின்றி
கூட்டுப் புழுக்களிதும்
சுதந்திரமாய்ப் பறந்திருக்கும்..!
அவன் கொடுத்த பாதுகாப்பும்
இவனிடம் வந்தால்
செல்லாதோ?
பாவங்கள் எண்ணாத
மலட்டு மனங்கள்..!
வருமானங்கள் எண்ணியே
பழகிக் கொல்லும்..!
பாவிதான் நானுமிதில்
மீளாது மாட்டிக்கிட்டேன்
கூட்டுப்புழுக்களாய்
கூடைக்குள் நெளியும்
உயிர்கள் பலியாக..!
காய்ந்த வயிறும்
காலித் தட்டுமே
இந்நிலைக்கு
என்னைத் தள்ள
உள்ளுக்குள் வேதனையும்
உதட்டளவில் புன்னகையும்
சுமந்து நெளியும்
நானும்கூடக் கூட்டுப்புழு..!
ஜெயஸ்ரீ ஷங்கர்
அழகெல்லாம் அழிவதற்கே!
பச்சை இலைகள் தின்று
வெண் பட்டுக் கூட்டுகள்
நிம்மதியாய் உறங்கும்
பட்டுப் புழுக்களே…
இன்றோ நாளையோ
உங்கள் கூடுகள்
பறிக்கப்பட்டுப்
பிரிக்கப் படலாம்…!
தேனீக்கு தேனால்
வினை….!
உங்களுக்கோ
பின்னிய நூலால்
வினை..!
காய்த்த மரங்களுக்கும்
கல்லடி தான் பரிசு…!
நானும் மல்லுக்கட்டி
மல்லுக்கட்டிப் போராடியே
மல்பெரி கூட்டில்
நூல் பிரிக்கிறேன்..!
இருந்தும் சொல்லடி
தான் பரிசு..!
ஜெயஸ்ரீ ஷங்கர்
ஹைதராபாத்.
நானும் காஞ்சிப்
பட்டுடுத்திப்
பார்க்கத் தானே
ஆசைப்பட்டேன்?
பருத்தி கூட முழுசா
கிடைக்காத இடத்த்தில்
தானே வாக்கப் பட்டேன்!.
நெஞ்சுக் கூட்டு
ஆசையெல்லாம்
வெம்பி அறுந்த
நூலாகிப் போச்சு…!
வெள்ளைக் கூட்டைப்
பிரித்து வெண்பட்டு
நூலெடுத்து
கோர்க்கும் நேரம்
நெளிந்த புழுக்கள்
நினைவில் நெளிய
பட்டுடுத்தும் ஆசை
மொத்தம் ஆவியானதே..!
ஜெயஸ்ரீ ஷங்கர்,
இருட்டு
ஒரு போதும்
என்னை பயப்படுத்துவதில்லை
பகலைப் போல…
வாய் திறந்து
கிடக்கும்
மலைப்பாம்பாய்
பகல்கள் எனைச் சுற்றியும்…
மெழுகுவர்த்தி அற்ற
இரவுகள் கூட
நிலவுக்கு அழைத்துச்
செல்லும்
யதார்த்தங்களில் ஒன்று…
கீற்றொளியென
ஜன்னல் கீறும் பகலை நான்
மன்னிப்பதில்லை
அது ஓர் அத்துமீறல்…
மிகப் பெரிய
முரண்பாடுகளின்
முன்னறிவிப்பு இந்தப்
பகல்கள்…
இரவுகளின் கைகளில்
சிறு குழந்தையென
பசி மறக்கும் இறுமாப்புடன்
நீண்டு கிடக்கிறது
எனது நீட்சிகள்…
அங்கே பல்லாங்குழியோ
கோலி குண்டோ
விளையாடும்
இரவின் நிழலுக்குள்
நான் காலம் கடந்து
பின்னோக்கி செல்கிறேன்…
அப்போது
தலை தடவிச்
சிரிக்க எப்போதும்
பகலை விரட்டிய
ஒரு பின்னிரவு
காத்திருக்கிறது…
எனக்காக…
கவிஜி
பூச்சி தந்த நூலெடுத்துப்
பெரும்பாடு பட்டு வித்து
வாயக் கட்டி வாழ்ந்து பழகி
வயத்துப் பாட்டப் பாத்தாச்சு
மனசு போலப் படிச்சிடத் தான்
மவ அவளும் ஆசப்பட்டா
வாழ்க்கைக்கே வழி இல்ல
வக்கணையாப் படிப்பெதுக்குன்னு
கேள்வியேதும் கேக்காம
கெழவி நானும் தலையசைச்சேன்
ஆளுகளத் தேடியலஞ்சு
நாளும் பொழுதும் நூலு வித்து
முட்டி முட்டி மோதியலைஞ்சு
தட்டி கொட்டிப் படிக்க வெச்சேன்
தங்கம் போலப் பொண்ணு மவ
டாக்டராவே ஆகிப்புட்டா
சங்கடமெல்லாம் ஓடிப் போச்சு
சந்தோசம் இனி நிரந்தரமாச்சு
மூஞ்சியில பொங்குது சிரிப்பு
இனி கவுரதையாச்சு எங்க இருப்பு.
பட்டெனப் பூச்சிகள் இறக்க நூல் தந்தன
சட்டென இரக்க யார் தருவார் பட்டுச் சேலை?
கொன்றதன் பாவம் தின்றால் போச்சு..
நூலெடுக்கப் பூச்சிக்களை அழித்த பாவம்
பட்டுடுத்தினால் போகுமா?
உடுக்கப் பருத்திக்கு வழியில்லை
படுக்கப் பாய்க்கு இடமில்லை
உலையிடப் பானையில் அரிசியில்லை
பகட்டுக்குப் பட்டுச்சேலை கிடைக்குமா?
பாவ நிவிர்த்தியாவது மிஞ்சுமா?
உயிரெடுத்து ஒர் உயிர் வளர்த்தேன்
அவன் பல உயிர் காப்பான் என்று நம்பி
நெஞ்சில் குவிந்து கிடக்கு வேதனை
ஆனாலும் முகத்தில் புன்முறுவல் பூசினேன்
‘ஆத்தா நீ பாஸாயிட்டே’ என்று
என் மகனும் வருவான்
மெடிக்கல் காலேஜ் அட்மிஷன் செய்தியோடு…
கூடானா வாழ்வு…..
——————————-
இழை இழையாய்
கட்டப் பட்டக் கூட்டுக்குள்
எப்போது நான்
சிறைப்பட்டேன் என எப்படி
யோசித்தும் தெரியவில்லை எனக்கு …….
கேட்பதற்கு ஆயிரம்
கேள்விகள் இருந்தும்
கேட்கவே கூடாது என
எந்த இழையால்
கட்டப் பட்டது என் நாவு …..
முளைத்த சிறகுகள் விரித்து
பறக்க இயலாமல்
அடைத்து வைத்து என்னை
அடையாளம் இழக்கச்செய்வது தான்
அன்பென்று சொன்னால் …..
அறுத்துக் கிழிக்கவா
அத்துமீறவா—-இல்லை
அகப்பட்டுக் கொண்டது தான்
சாஸ்வதம் என
ஆசுவாசப்படுத்திக் கொண்டு
முழுவளர்ச்சி அடைந்த பின்னும்
முட்டைக்குள் வாழும்
பறவை ஆகிப்போவது தான்
பாசமான வாழ்க்கையென
நேசமான பிறப்பெடுத்ததால்
நேரம் வந்தால் செத்துப் போவதா?
வெண்பட் டுடுத்திமர கதவீணை
தனைக்கை யேந்தியன்ன மதைவாகன
மாக்கியமர்ந் தவளேநீ லவேணி – நீயறியா
நிலைக்குச்ச மர்ப்பணமிந்தப் பட்டுக்கூடு..!
படைப்பாளி!
மனதுக்கு பிடித்த கலரில்
மயில்கழுத்து வண்ண பார்டரில்
பட்டுப்புடவை வாங்கத்தான் ஆசை
மகிழ்ச்சிக் கனவில் திளைக்கும்
அந்த மங்கைக்குத் தெரியுமா
புடவை நெய்ய நூல் தந்தது
மல்பெரியைத் தின்று இங்கே
தான்வாழவே நூலில் வீடுகட்டிய
புழுவும் ஒரு படைப்பாளி என்று
படைப்பாளிக்கு என்றும் மதிப்பில்லை
பட்டுப்புழுவும் அதற்கு விலக்கில்லை
மல்பெரியைத் தின்று பட்டுநூல்
பிறப்பிக்கும் பட்டுப்புழுவைப் போன்றே
படைக்கும் மனிதர்களும் பாரினிலுண்டு
படைப்புதனை வாங்கி விற்கும்
கெட்டிக்கார வியாபாரி மட்டும்
பணம்தனை ஏராளமாய் குவிப்பதுண்டு
பட்டுப்புழு கடவுள் அருளால்
யோசிக்கும் சக்தி பெற்றால்
மறுகணமே அது மல்பெரியைத்
தின்னக்கூட காசு கேட்கும்
தான் படைக்கும் நூலுக்கு
விலை சொல்லியே விற்கும்
பெரும் பணம் சேர்த்த
பிஸினஸ்மேனாய் அது இருக்கும்
படைப்பாளியே நீயும் யோசி!
பட்டுப்பூச்சி நியாயங்கள்
உனக்குத் தெரியுமா?
உன் தோள் சாய்ந்திடும் பட்டு
உன் அடக்குமுறைகளின் வெளிப்பாடு
உயிரைப் பிழிந்து நூலெடுத்து
கனவுக் கோட்டையை வேய்ந்தது
கல்லெறிந்துக் கலைக்கவா?
இங்கே கொட்டி வைத்துள்ளது
பஞ்சுப் பொதிகள் அல்ல
வெந்து கருகியப் பிஞ்சுக் கனவுகள்
மாய்ந்து மாய்ந்து கட்டிய
கருவறையே
அன்பின் சமாதி ஆனால்?
வெற்றுத் தட்டில் வேதனையும்
பஞ்சுப் பெட்டகத்தில்
பட்டுப் பூச்சிகளின் வெந்த ஆன்மாக்களும்
மட்டுமே மிஞ்சும்!
பாவத்தில் பங்கில்லை
நீண்ட நெடிதுயர்ந்த மரங்களை
நெடுஞ்சான் கிடையாய் வீழ்த்தி
நெடுஞ்சாலைகள் அமைத்தோம்
நேரத்தை மிச்சப்படுத்த
உயர்ந்த குன்றுகளை
உடைத்து கல்துகள்களாக்கி
கட்டிடங்கள் அமைத்தோம்
காலத்தின் தேவைக்காக
நீர் தேக்கும் மையங்களாம்
ஆறு குளம் ஏரியென
அத்தனையும் தூர்த்து
அடுக்குமாடிகள் கட்டினோம்
இனப் பெருக்கத்தை எதிர் கொள்ள
ஆடு மாடு கோழி மீனென
அத்தனை உயிரழித்தோம்
உயிர்வாழத் தேவை
உணவு என்பதால்
அத்தனை அழித்தல்களும்
சமூக குறிக்கோளொன்றைச்
சார்ந்திருந்தது
ஆனால்
பட்டுப் புழுக்களே
உங்களை பலியிடுவது
பணத்தின் பலம் காட்டும்
பகட்டிற்காக மட்டுமே
ஆனாலும்
அந்தப் பாவத்தில்
எனக்கேதும் பங்கில்லை
ஏனென்றால்
பட்டாடை அணிய
பணவசதி எனக்கில்லை
என் புன்முறுவலதை
உங்களுக்கு புரியவைத்திருக்கும்!
வென்றவள்…
பட்டுப் பூச்சி கூடுகட்டிப்
பாது காத்தது பட்டுநூலை,
பட்டு நூலைச் சேர்த்தவள்தான்
பருத்தி நூலின் ஆடையிலே,
கெட்டிட வில்லை, வாழவைத்தாள்
கடின உழைப்பில் பிள்ளைகளை,
மட்டிலா மகிழ்வை முகங்காட்டும்
மங்கை வாழ்வை வென்றவளே…!
-செண்பக ஜெகதீசன்…
தன்மானத்தோடு வாழ்வு!
*****************************
வாழ்விலே பிறர் கை நீட்டாது
உழைத்து மண்ணில் வாழ்ந்திட
கிடைத்த அருமைத் தொழில்,
பருத்திப் பஞ்சு கடைதலே…!
பார்த்து பதமாய் கடைந்து
கோர்த்தெடுத்த நூலிலே
நெய்தெடுத்த ஆடைகள்
வியர்வை சொல்லும் சாட்சிகள்…!
ஆனபோதும் மனதிலே
தயக்கமில்லை கேளுங்க…..
காரணம் தன்மானமாய்
உழைத்து வாழ்கிறோம் பாருங்கள்…!
பட்டுடுத்தி செல்வாக்காய்
இருந்ததில்லை நாமிங்கே
பருத்தி நூலில் செய்யுமாடை
நிகரில்லை பட்டுக்கே…!
பத்துதரம் துவைத்த போதும்
பதம் குறையா நூலிதே…
பாட்டன் பூட்டன் காலந்தொட்டு
நமக்கு கைவந்த கலையிதே…!
சிட்டுபோல சேர்த்தெடுத்து
கொண்டுவந்த பருத்திப் பஞ்சிதே
செல்வாக்காய் நம்நாட்டை
உயர்த்தும் ஒரு தொழிலிதே….!
ஆனபோதும் இலகுவாக
நினைத்திடாதிங்க நீங்கயிதை
நவீன இயந்திரங்கள் ஈடில்லை
நம் பழைமை முறைமைக்கே…!!!
துஷ்யந்தி.
சோலியென்று மெனக்கெட்டு புழுவெடுத்து
==சூசகமாய் கூட்டிலிட்டு காவல்காத்து
ஆலிப்பின்றி பூச்சாய்வர பாடுபட்டு
==அதுஉமிழும் திரவத்தில் ஈர்க்கப்பட்டு
வாலிபத்துக் காலந்தொட்டு பட்டுப்பூச்சி
==வளர்த்தெடுக்க ஆசைப்பட்டு பழக்கப்பட்டு
தாலிகட்டி வந்தபின்னும் தொடரப்பட்டு
==தனிமரமாய் ஆனபின்னும் துணையாய்பட்டு
விட்டுப்போன கணவனாலே வெறுக்கப்பட்டு
==வீதியிலே அனாதைபோல விடவேபட்டு
பட்டுப்போன வாழ்க்கைதனை மீட்கப்பட்டு
==பக்குவமாய் முன்னேற்றம் கொடுக்கப்பட்டு
கட்டுப்பாடாய் வாழக் கை கொடுக்கப்பட்டு
==கண்ணியமே நெஞ்சினிலே உணர்த்தப்பட்டு
நட்டுவைத்த நம்பிக்கை உறுதிப்பட்டு
==நட்சத்திரம் போலமின்னும் முதுமைபட்டு.
*மெய்யன் நடராஜ்
கூட்டுப் புழுவின் பட்டு
கூட்டுப் புழுவாய் குடங்கும்
பூட்டிய கதவுள் புழுங்கும்
மெட்டி அணங்கின் வாழ்வு!
எட்டிப் போன கனவாய்
பட்டுப் போன பட்டாய் …..
விட்டுப் போன உறவை
மீட்டும் கண்கள் கூறும்
சொட்டும் நெஞ்சின் துயரம்
திட்டுத் திட்டாய் காயம்
கட்டுக்கடங்கா மாயம்
கேட்டும் பெறாத அன்பு!
கூட்டுப் புழுவின் பட்டு
கூட்டைப் பிரித்து உயிர்க்
கூட்டை வதைக்கும் கோரம்
பட்டுப் புழுவின் வாழ்வு ..
வெட்டிப் புதைத்துத் தேடும்
தீட்டுப் (பட்ட) பட்டை நாடும்
வீட்டுப் பெண்டிர் கேண்மீர்
கூட்டுப் புழுவை வதைத்து
பட்டுச் சீலை சூட நாட்டமேன்?
விட்டு விடும் உயிர் பிழைக்க
கூட்டுப் புழுக்கள் பூச்சியாக
இட்டமாய் வான் வெளிச் சிறகு ,,,
முட்ட, சுதந்திர மூச்சை நிரப்பி
எட்ட விட்டிடும் எல்லை வரை…
சுட்டும் சுடர்களாய் விண்ணில்
கட்டியம் கூறி கூட்டுப் புழுக்கள்
இட்டம் போல் இறகுகள் பரப்பி
வட்டம் இட்டே மகிழ்ந்திருக்க …
பட்டுக்குள் நுழையும் பாவையும்
விட்டுக் கொடுக்கட்டும் பட்டை…..
கட்டிக் கொள்ளட்டும் பஞ்சின்
கெட்டி நூலின் பருத்தி மட்டும்!
பட்டின் மென்மை நாடும்
பட்டுப் பெண்ணே கேளாய்
கூட்டுப் புழுவின் வதையில்
கூட்டும் பட்டு வேண்டாம் …
நட்டு வளர்க்கும் பருத்தி
கொட்டிப் பூக்கும் பஞ்சில்
கட்டுத் தறியில் நெய்யும்
கட்டம் போட்ட நெசவு சேலை ..
இட்டமாக கட்டு உடன் பட்டு !!
கெட்டியாக என்னருமைப் பட்டே …..
சொட்டும் அழகி நீயே …
புனிதா கணேசன்
29/05/2015
பட்டாம் பூச்சியாய் சிறகடித்து
உலகின் வண்ண மலரெலாம்
வட்டமடித்து சுற்றித் திரிய
ஆசை கொண்டேன் ! – பொற்காலம்
எண்ணி தவம் கிடந்தேன் !
பருவமும் வந்தது – கனவு நினைவாக
சிறகடிக்க ஆயத்தமானேன் !
புழுவாய் ஊர்ந்த நானும் எந்தன்
உமிழிக் கூட்டுள் அடைக்கலமானேன் !
எந்தன் உலகம் சுருங்கிய போதும்
ஆசைக் கனவு சுருங்கவில்லை !
ஆனால்…..
ஏனோ இறைவா ! ஏனிந்த வேதனை !
எதிர்பாரா நொடியில்
வெந்நீரில் வெந்து மாண்டேன் !
என் உமிழ்நீரே எனக்கு
எமனாகிப் போனதே !
மானிடரின் சுயநலத்திற்காய்
எம் இனம் மாள்வது
என்ன நியாயமோ ?
இறைவா ! உம் பார்வையில்
எம் துயர் படவில்லையோ ?
உந்தன் கருணை பார்வை
எம் மீது படும் காலம் வருமோ ?
கண்களில் வறுமையையும்
காட்சியில் மல்லிகையும்
இதயத்தில் ஏக்கத்தையும்
இறைவனின் தாக்கத்தையும்
வந்தமர் நேரத்தையும்
வாழ்க்கையின் நோக்கத்தையும்
வளாக ஓரத்தையும்
வருபவர் மகிழ்ச்சியையும்;
தினமும் தாங்கிநிற்க
திசைகள் பார்த்துநிற்க
தீராத் துயரத்தையும்
தீயில் கருக்கிடவே
தீஞ்சுவை உலகத்திலே
தீர்க்கமாய் வாழ்ந்திடவே
திண்ணமாய் எண்ணித்தான்
திட்டமாய் இருக்கின்றேன்!
ஏழையென்பது ஒருநிலை
ஏக்கம் என்பததன்
ஏற்றக் கிளைதானே!
ஏறுவேன் நிச்சயம்
போற்றத் தகுவாழ்வு;
போதும் எனும்நிறைவு
போகும் வழியெங்கும்
புன்னகை மலரேந்தி!
மானுடம் வாழ்வல்ல
மனிதம் வாழ்ந்திடுங்கள்
மண்ணில் நிலைபெறவே
மாற்றவர் வணங்கிடவே
மாதவம் செய்திட்ட
மலர்கள் சொல்லுமிதை
மங்கை யான்பெற்ற
மண்ணின் தவமிதுவே!
மலர்கள் மட்டுமல்ல
மனதும் வெண்மைதான்
மதியொளி ஒத்தவொரு
மழலையின் சுகமிதுதான்
மாண்பாய் வாழ்வதில்தான்
மண்ணும் பயனுறுமே
மகிழ்ச்சிக் கடலினிலே
மல்லிகை மணமுடனே!
வருபவர் செல்வமது
வண்ண மலர்களறியா
வாசனை எவர்க்கும்
வழங்கும் ஒன்றாய்த்தான்
வரட்டும் எண்ணத்தில்
வாழ்பவர் சமமென்று
வருங்காலம் வசமாகும்
வண்ணம் பரந்திருக்கும்!
இதயம் உணரட்டும்
இல்லார் துயரத்தை;
இருப்பவர் கொடுக்கட்டும்
இன்முகம் பார்க்கட்டும்
இல்லை வருமையென
இனிமை மலரட்டும்
இயன்றவரை செய்வோம்
இனியொரு விதிசெய்வோம்!!
அன்புடன்
சுரேஜமீ
சிந்தனைக்குரிய…..
ஒரு பட்டுச் சேலை நெசவிற்கு
ஒரு 4000 – 5000 பட்டுக் கூடு
ஒரு புறம் கொலை, அழிவு, கொடுமை!
மறுபுறம் அழகிய ஆடை புதுமை!
பலர் சீவனம், வருவாய் பிழைப்பு!
எவர் பட்டை வேண்டாம் என்பார்!
சிலர் பட்டு அணிவதே இல்லை!
சிந்தனைக்குரிய சிறு கைத்தொழிலே!
பா ஆக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
30-5-2015.
பாட்டினை நீ அறிவாய்
===================
பட்டுப் புழுவே,பட்டுப் புழுவே
என் பாட்டினை நீ அறிவாய்
கொட்டும் மழையிலும்
வெட்ட வெளியிலும்
என் ஏக்கத்தை நீ உணர்வாய்
பட்டுப் போகாது தினம்
வாழ்வை துளிர்ப்பிக்க
பட்டு நூல் செய்கின்றேன்-பிறர்
கெட்டுப் போகாமல்
தேகம் மறைத்திட
ஆடை நான் நெய்கின்றேன்
கொட்டன் உடுதுணி தேடி அலைபவர்
குறைகளை களைகின்றேன்
கூழுக்கு மாரினை அடித்த படி நான்
நாளும் அலைகின்றேன்.
ரோஷான் ஏ.ஜிப்ரி.
அவ்ன் போட்ட கணக்கு
கொடுத்து கொடுத்தே
சிவந்தன கர்ணனின் கரங்கள்
நீயும் கூட நூலிழை கொடுத்தே
சிவப்பு நிறம் கொண்டாயோ
மல்பரி இலைகளில் வளர்ந்து
மற்றவர்களுக்காக உயிர் விடுகிறாய்
இது யார் குற்றம்?
படைத்தவனின் குற்றமா இல்லை
பட்டுப்புடவைக்கு ஆசைப்ப்ட்ட
மகளிரின் குற்றமா?இல்லை இல்லை
இறைவன் போட்ட கணக்கு பாதி வழியில்
இறப்பு,ஒருவரின் துன்பம்
மற்றவரின் லாபம்
இது இறைவன்வகுத்த நியதி
இதில் வருத்தம் ஏன் அமைதி
சரஸ்வதிராசேந்திரன்
கூடழித்துக் கொன்றிழைகள் கொண்டமைந்த சேலைதனை
நாடுகின்ற மானுடரே நாணிலையோ – கேடின்றி,
கட்டப் பொருளிலையோ! காதகரே! ஏனுமக்குப்
பட்டுப் புடவைப் பசி