— கொ.வை. அரங்கநாதன்.

 

வையத்துள் வாழ்வாங்கு வாழ்வார் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்ற குறளின் பொருளாக வாழ்ந்து மறைந்தவர் மக்கள் திலகம். இன்னலுற்ற இளமையில் அன்னையின் அரவணைப்பே அவரது ஒரே ஆறுதல். காட்டாற்று வெள்ளத்தில் எதிர் நீச்சல் இடும் வாழ்க்கை. அத்தனையயும் கடந்து நாடக மேடை, திரைப் படம், அரசியல் என்ற அவரது விஸ்வரூபம் கடுமையான உழைப்பின் கருவில் மலர்ந்தது. ஏளனப் பேச்சு, எதிர்ப்பு, அத்தனையையும் உரமாக்கி சிகரத்தைத் தொட்ட செம்மல்… எம் ஜி ஆர் என்ற அந்த மூன்றெழுத்து இன்று வரை தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் ஒலித்து கொண்டிருப்பது காலத்தை கடந்த அந்த காவிய மகனின் புகழுக்குக் கட்டியம் கூறுகிறது.

இந்த மனிதரின் வாழ்வு பள்ளிகளில் பாடமாகப் பயிற்றுவிக்கத் தகுந்தது. பாரியையும் ஓரியயையும் பாடங்களில் படித்தவர்களுக்கு எட்டாவது வள்ளலாக எம் ஜி ஆரை அறிமுகப்படுத்தலாம். மனித நேயத்தின் மாண்பினை அவர் சரிதம் மூலம் அடுத்தத் தலை முறைக்கு எடுத்துச் சொல்லலாம். மாலை நேரத் திரையரங்குகளை நீதி போதிக்கும் மன்றங்களாக மாற்றிய மாமனிதர். பள்ளிகளில் பயிற்றுவிக்கப்படாததை தன் பாடல்களால் பயிற்றுவித்தப் பண்பாளர்.

“நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே” … “நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி” என்று இன்னும் எத்தனையோப் பாடல்களில் வளரும் குழந்தைகளை வழி நடத்தியவர்.

“நல்லப் பொழுதையெல்லாம் தூங்கிக் கெடுத்தவர்கள் நாட்டை கெடுத்ததுடன் தானும் கெட்டார்” … “நாடென்ன செய்தது நமக்கு என கேள்விகள் கேட்பது எதற்கு? நீ என்ன செய்தாய் அதற்கு என நினைத்தால் நன்மை உனக்கு” போன்ற எத்தனையோ பாடல்கள் மூலம் இளைஞர்களைத் தட்டி எழுப்பியவர்.

“என் தமிழே நீ பகை வென்று முடிசூடி வா” எனத் தமிழுக்குத் தாலட்டுப் பாடியவர் … “அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா” என இனப் பெருமையை உரக்க சொன்னவர்.

“என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்” என விவசாயிகளுக்கு உரம் மூட்டியவர் …”உழைக்கும் மக்களே ஒன்று கூடுங்கள் உலகம் நமது என்று சிந்து பாடுங்கள்” என உழைக்கும் மக்களின் உரிமைக் குரலாய் ஒலித்தவர்.

“ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை” என தனது எதிரிகளுக்கு எச்சரிக்கை செய்தவர்.

இன்னும் எத்தனை எத்தனைப் பாடல்கள்… அத்தனையும் விடியற்காலச் சேவலின் உறக்கம் கலைக்கும் ஒலியல்லவா? இந்தப் பாடல் வரிகளுக்கெல்லாம் அந்தக் கவிஞர்கள்தானே சொந்தக்காரர்கள்? இதில் மக்கள் திலகத்தின் பெருமை என்ன இருக்கிறது என்று என்னிடம் கேட்டவர்கள் உண்டு. கவிஞர்கள் யாராக இருப்பினும் மக்கள் திலகத்தின் பாடல் என்றால் அவர்கள் அறியாமலேயே எழுச்சியுட்டும் சொற்கள் எங்கிருந்தோ வந்தமைந்தது..

பாடியது தாம் தானா அல்லது மக்கள் திலகமா என்ற ஐயம் அந்தக் கவிஞர்களுக்கே வந்ததுண்டு. இதனை கவியரசு கண்ணதாசன் கூட ஒரு காதற் பாடலில் “பாடுவது கவியா இல்லை பாரி வள்ளல் மகனா, சேரனுக்கு உறவா செந்தமிழன் நிலவா” என அழகாகக் குறிப்பிடுகிறார்.

பாடுவது கவியா – பாடியது நான்தானா அல்லது பாரி வள்ளல் மகன் போன்ற மக்கள் திலகமா?
சேரனுக்கு உறவா- மக்கள் திலகம் மலையாளப் பூர்வீகம் கொண்டவர் என்பதைத் தான் இவ்வளவு அழகாகக் குறிப்பிடுகிறார்.
செந்தமிழன் நிலவா- தமிழகத்து மக்களுக்கு நிலவு போன்றவரா- ராமச்(சந்திரன்) எவ்வளவு அழகான வர்ணனை பாருங்கள்!

மக்கள் திலகத்தின் பாடல் வரிகள் அவரது வாழ்க்கை நிகழ்வின் முன்னறிவிப்பாய் பல சமயங்களில் அமைந்தது வியப்பிற்குறியது.

“நானே போடப் போகிறேன் சட்டம் பொதுவில் நன்மை பயக்கும் திட்டம்” என 50 களிலவர் பாடியதும் … “நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்” என அவர் 60 களில் பாடியதும் … 70 களில் நடை முறையானது.

“தர்மம் தலை காக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும்” என்பது அவர் சுடப்பட்டும் உயிர் பிழைத்ததன் முன்னறிவிப்பு அல்லவா?

“இறைவா உன்னிடன் கையேந்தினேன்” என்றப் பாடல் அவரது ஓர் உயிருக்காகத் தமிழர்கள் நடத்திய தவத்தின் முன்னறிவிப்பு அல்லவா?

“மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் அது முடிந்தப் பின்னாலும் என் பேச்சிருக்கும்” என்று அவர் மறைந்து 26 ஆண்டுகளுக்குப் பின்பும் அவரது பெயர் ஒலிக்காத நாளே இல்லை என்ற அளவில் அவரது புகழ் வியாபிதிருப்பதின் முன்னறிவிப்பு அல்லவா?

“சொல்வது எல்லோருக்கும் சுலபமாகும் சொன்னபடி நடப்பவர்கள் மிகவும் சொற்பம்” என்றார் நாமக்கல் கவிஞர். மக்கள் திலகம் ஒரு மாற்றுக் குறையாத மன்னன் அல்லவா? திரையில் சொன்னவற்றை வாழ்விலும் அப்படியே கடை பிடித்தவர்… மதுவின் தீமையை திரையில் அவரைப் போல் அழுத்தமாகச் சொன்னவர்கள் எவருமில்லை. திரையில் மட்டுமில்லை தனது வாழ்விலும் மதுவை மட்டுமல்ல தேனீரைக் கூட அருந்தியதில்லை.

இரக்கமும், மனிதாபிமானமும் அவருக்கு இயல்பாகவே அமைந்திருந்தது. கை ரிக்க்ஷாத் தொழிலாளி ஒருவர் மழையில் நனைவது பொறுக்காமல் சென்னையில் இருந்த அத்தனை கை ரிக்க்ஷாத் தொழிலாளருக்கும் மழை ஆடை (ரெயின் கோட்) வழங்கிய மாண்பினை என்னவென்று உரைப்பது? அப்பொழுது அவருக்கு அரசியல் ஆசைகள் எதுவும் இல்லை என்பதையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

வறுமையில் வாடிய என். எஸ்.கிருஷ்ணன் குடும்பத்தாருக்கு அவர் செய்த உதவிகளை அவரது குடும்பத்தாரே சொல்லும்போது இப்படிப்பட்ட மகத்தான மனிதர் மறுபடியும் பிறப்பாரா என ஏங்க வைக்கிறது. நகைச்சுவை நடிப்பில் கொடி கட்டிப் பிறந்த நாகேஷ் வாழ்வில் தடுமாறியபோது கைகொடுத்த தெய்வம் அல்லவா எம்ஜிஆர்? பிரபல இயக்குனர் பி ஆர் பந்துலு கடனுற்று காலமான போது அவரது படத்தை தானே இயக்கி அக்குடும்பத்தை கரையேற்றிய கர்ணன் அல்லவா மக்கள் திலகம்? பிரபல எழுத்தாளரும் பத்திரிக்கையாளரும் எம்ஜியாரை கடுமையாக விமர்சித்து வந்தவருமான சோ ராமசாமி ஒரு முறை குறிப்பிட்டார் “அடுப்பில் உலையை வைத்து விட்டு அரிசிக்காக எம்ஜியாரிடம் செல்லலாம். உலை கொதிப்பதற்குமுன் உதவி கிடைத்துவிடும்”

சுடப்பட்டு மருத்துவமனையில் இருந்த போதும் கூட தன் தலையணை அடியில் பணக் கட்டுகளை வைத்து கொண்டு தன்னிடம் உதவி நாடி வந்தவர்களுக்கு அடுத்தவர் அறியாமல் உதவி வந்த உத்தமர். காரில் சென்று கொண்டிருக்கும் போது காலணி இல்லாமல் சென்று கொண்டிருந்த ஒரு மூதாட்டிக்காக தனது துணைவியார் ஜானகி அம்மையார் காலில் இருந்த காலணிகளைக் கழற்றி கொடுக்கச் சொன்னக் கருணையாளர். சீன படையெடுப்பின் போது தங்க வாளினை பிரதமரிடம் நாட்டை காப்பதற்குத் தன் பங்காக அளித்தவர்.

எத்தனையோ ஏழை மாணவர்களுக்கு கல்வித் தொகையாக மாதந்தோறும் அவரது அலுவலகத்திலிருந்து பணம் அனுப்பப்பட்டு வந்தது எத்தனை பேருக்குத் தெரியும்? கொள்கை மாறுபட்டிருந்த போதும் வாரியார் சுவாமிகள் கோரினார் என்பதற்காக பெருந்தொகையை கோவில் கும்பாபிஷேகத்திற்கு அளித்து அவரால் பொன் மனச்செம்மல் என வாழ்த்தப்பட்டவர். இது போன்று எண்ணற்ற உதவிகள்… இவை அத்தனையுமே எவ்வித எதிர்பார்ப்பின்றி செய்யப்பட்டதே எம் ஜி ஆர் என்ற மாமனிதனின் இரக்க வரலாறு!

இதே மனிதம்தான் அவரது ஆட்சி காலத்திலும் அவரை உயரத்தில் ஏற்றி அவர் உயிர் துறக்கும் வரை அங்கேயே வைத்திருந்தது. முதியோருக்கு சேலை வேஷ்டிகள், பள்ளி சிறுவர்களுக்கு சத்துணவு, பாடப் புத்தகங்கள் , காலணிகள், சீருடை , இயற்கை இடர்பாடுகளினால் பாதிக்கப்படும் அத்தனை பேருக்கும் கட்சி பாகுபாடின்றி நிவாரணம் …இன்னும் எத்தனை எத்தனையோ சமூக நலத் திட்டங்கள். அத்தனையும் மனித நேயத்தின் வெளிப்பாடுகள்… அவருடைய பதினொரு ஆண்டு கால ஆட்சியில் அரிசி விலை ஒரு ரூபாய் கூட ஏற்றப் படாதது அவர் ஏழை மக்கள் மீது கொண்டிருந்த அதீத அன்பின் வெளிப்பாடு. இன்னும் சொல்லி கொண்டே போகலாம் .. ஏடும் நேரமும் இடம் கொடா.

பாய்ஸ் கம்பெனி நடிகராய் தொடங்கி, நாடக நடிகராய் மலர்ந்து, திரைப்படக் கதாநாயகனாய் உயர்ந்து, அரசியல் தொண்டராய் மாறி முதலமைச்சராய் முடிசூடி மக்களின் மனங்களில் இன்று வரை அகற்ற முடியாத பிம்பமாய் ஒளிரும் எம் ஜி ஆர் என்ற மாமனிதன் மக்கள் திலகமாய், புரட்சி நடிகராய், புரட்சித் தலைவராய், முதலமைச்சராய் என் மனதிலும் என்றும் நிலைத்திருப்பார்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *