பவள சங்கரி

அன்பிற்கினிய நண்பர்களே!

வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

11096973_812600832127451_1724852484_n

71663438@N08_rஆர்.லக்ஷ்மி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (04.04.2015) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர், தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர்  திருமதி மேகலா தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.

mekala2-300x168

புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்த மேகலா இராமமூர்த்தி கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்றவர். அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009 ம் ஆண்டுகளில் (ஆர்லாண்டோ & அட்லாண்டா) கவியரங்கம், இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். புறநானூறு, குறுந்தொகைப் பாடல்களில் அதிக நாட்டமும், இலக்கியக் கூட்டங்களில் சுவைபட பேசுவதிலும் வல்லமை பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

பதிவாசிரியரைப் பற்றி

25 thoughts on “படக்கவிதைப் போட்டி (6)

 1. தமிழகம் !  ஒருமுகம்

  ஒற்றைப் பாதை !
  ஒற்றை மாது ! 
  ஒற்றை மாடு ! 
  உலர்ந்த காடு ! 
  காய்ந்த எதிர்காலம் !
  ஓய்ந்த உழைப்பு ! 
  கிழிந்த புடவை !
  இழந்த வாழ்வு !
  தனிமை தெரியுது !
  தாழ்ச்சி தெரியுது !
  ஒரு துளி மழை விழுமா ?
  கருமேகம் 
  எட்டிப் பார்க்குதே !

  சி. ஜெயபாரதன்

 2. ஒத்தையடிப்  பாதையில்  கொம்புடன் செல்கின்றேன் 
  என் பசு மாட்டை மேய்ப்பதற்கு கூடச் செல்கின்றேன் 
  என் பிழைப்பே  இந்த பசுமாட்டின்   வளர்ச்சி 
  என் வாழ்வில் என்றும் எனக்கில்லை தளர்ச்சி !

  காய்ந்த மண்ணும், மேடும் தாண்டி 
  காட்டிற்கு  ஓட்டிச்  செல்கின்றேன் என் பசுவை 
  கன்றை விட்டு பசுவை  மேய்கின்றேன் 
  என் மகனை விட்டு  தனிமையில் ஏங்குகின்றேன் 

  பசு மேய்ந்தாலும்  தன் கன்றை மறப்பதில்லை 
  மகன் தாயை விட்டுப் பிரிந்தாலும், தாய் மறப்பதில்லை 
  பசுவையும், கன்றையும்  என் வீட்டில் வளர்கின்றேன் 
  இரண்டையும் என் மகன்போல் வளர்க்கின்றேன் !

  வளர்க்கும்போது  எந்த உறவும் சிறிது காலமே நிலைக்கும்,
  பறவையும், பறக்க தெரிந்ததும், கூட்டை விட்டு விலகும் 
  முதுமையிலும்  சிலருக்கு  தனித்து நிற்பது பிடிக்கும்,
  வாழ்வின் அனுபவத்தை  அசைபோட பிடிக்கும் !

  ரா.பார்த்தசாரதி 

 3. கருக்கலின் முன்னர் வீடு சென்றடைய வேண்டி
  சுருக்கென நடக்குமென்னை

  கொடுவெயில் எரித்து என் பாதம் கருக்கியே
  கடுக்கின்ற கால்கள் இரண்டும் – வெந்தாலும்
  பாடுபட்டு உழைக்கும் பாமரப் பெண் நான்
  விடுபடாதென் நெஞ்சுரம் என்றும்!

  பாளங்களாக வெடித்துப் புண்ணாய் நோகும்
  தாளிணை இரண்டும் சுடு மணல் – போந்திருந்தும்
  மீளாது பயணம் செய்யும், கரடு முரடான சாலை
  நீளம் , சேரிடம் சேருமட்டும் !

  பாலைவனமான பசுந்தரையின் புற்கள் உண்டே
  பாலைச் சுரந்தளிக்கும் பசுவின் கருணை – கண்டே
  காலைச் சூரியனும் கார்முகிலுள் ஒளிந்து விட
  சாலை எங்கும் ஓர் தண்மை பரவிற்றே!

  கருக்கலின் முன்னர் வீடு சென்றடைய வேண்டி
  சுருக்கென நடக்குமென்னை – இழுத்ததோ
  விரும்பும் மழலைகள் தாம் விம்மியழுது
  அரும்பும் அழைப்பினோசை அம்மா என்று !

  புனிதா கணேசன் (இங்கிலாந்து)
  30.03.2014

 4. தமிழே நீ தான் சாட்சி!

  காடும் மேடும்                        
  கழனி வயலும்
  செழுமை போற்றி
  வாழ்ந்த காலமெங்கே?

  வானம் பார்த்த 
  வையம் இதுதான்
  வளமை இல்லா
  வாழும் காலமிங்கே!

  களிறைக் கட்டி
  கலநெல் அடித்து
  களிப்பாய்க் கூடி
  வாழ்ந்த காலமெங்கே?

  கையால் அடித்து
  வரும்நெல் சேர்த்து
  வயிறு வளர்க்க
  வாழும் காலமிங்கே!

  இறங்கி நடந்தால்
  இதயம் நிறைந்த
  பசுமை போற்ற
  வாழ்ந்த காலமெங்கே?

  இதயம் நொறுங்க
  இறுகும் மண்ணும்
  கருகும் செடியாய்
  வாழும் காலமிங்கே!

  வளமை நிறைந்து
  புலமை  போற்றி
  ஈதல் பண்பாய்
  வாழ்ந்த காலமெங்கே?

  வறுமைப் பிடியில்
  மாவும் மக்களும்
  தன்னைக் காக்க
  வாழும் காலமிங்கே!!

  ஆறும் நீரும்
  தோப்பும்; மரமும்
  குளமும் கண்டு
  வாழ்ந்த காலமெங்கே?

  கானல் நீரும்
  கட்டிட செங்கலும்
  ஆழ் குழாய் நீருமாய்
  வாழும் காலமிங்கே!!

  கழனிகள் பெருகி
  கட்டிடம் சுருங்கி
  கண்மாய் தேங்கி
  கண்கவர் வனப்பும்
  காண்பவர் அணைப்பும்
  காணும் நாள் மீண்டும்
  வருமா?

  தமிழே நீ தான் சாட்சி!

 5. நம்புவோம் மண்ணை!

  பொட்டல் காடும் 
  வெட்ட வெளியும்
  புழுதி மண்ணும்
  போற பாதையும்
  குத்தும் முள்ளும்
  காயும் சூடும்

  எனக்கு மட்டுமா
  சொன்னா கேளு
  உனக்கும் தானடா!!
  ஊரைவிட்டுத் தள்ளி
  ஊரணிப் பக்கம்
  உண்ணப் போவோம் வா!

  கழனி பார்த்து 
  காலுமாறி மேய
  நல்ல புல்லும்
  இல்லையே!
  பக்கத்துல
  புல்லும் இல்லையே!

  காடும் மேடும் 
  காலும் நோக
  நடந்து போனாலும்
  நாலு வாய்
  தண்ணி இல்லே…
  தாயே என்செய்ய?

  நீரிருந்த ஊரணி இப்போ
  பேராப் போனதே
  நிலத்து மண்ணை
  பொளந்தெடுத்து
  பட்டணம் சேர்த்துட்டான்
  பட்டாவும் போட்டுட்டான்!

  என்ன செய்ய
  எஞ்சியிருக்கும்
  கொஞ்சம் புல்ல
  மேய  நீயுந்தான்
  இந்த தூரம் போகனும்
  வந்தேன் உன்னோட நானும்!

  நம்ம வாழ்க்கை
  நொந்த வாழ்க்கைப்
  பழகிப் போனாலும்
  பாரு நல்ல
  பசுமைக் காலம்
  திரும்ப வந்திடும்!

  நானும் நீயும்
  நம்புவொம் கண்ணு!
  நம்புவோம் மண்ணை!!

  அன்புடன் 

  சுரேஜமீ

 6. ‘‘வானம் பொய்ப்பினும், தான் பொய்யா
  மலைத்தலைய கடற்காவிரி,’
  கானல் நீரெனப் பொய்ப்ப,
  பச்சைப்பசேல் கழனியெங்கும்
  கருவைக்காடு பல்கிப் பெருக,
  கடுங்கோடை வெக்கை சூழ்ந்த
  ஒற்றையடிப் பாதையொன்றில்,
  காய்ந்து கருகிய சருகுகளினூடே
  பசுந்துளிர் தேடும் நீள்பயணம்,
  மங்கைக்கும் மாட்டுக்கும்
  விடியலில் முடியட்டும்!

 7. கொடிது ! கொடிது !

  கொடிது கொடிது
  பெண்ணாய்ப் பிறத்தல் கொடிது !
  பிறந்த பின் உழலும்
  வறுமை கொடிது !
  அதனினும் கொடிது
  முதுமையில் வறுமை !
  அதனினும் கொடிது 
  தனிமை வாழ்வு !
  அதனினும் கொடிது
  ஊழியம் இன்மை !
  அதனினும் கொடுமை
  உண்ண உணவின்மை !
  அதனினும் கொடிது
  குடிநீர் இன்மை !
  அதனினும் கொடிது
  பெண்ணாய்ச்
  செத்தும் சாவா திருப்பது !

  சி. ஜெயபாரதன்

 8. பிற்சேர்க்கையுடன்

  கொடிது ! கொடிது !

  கொடிது கொடிது 
  கருவில் பெண்ணாய்
  உருவாதல் கொடிது !
  பெண்ணாய்ப் 
  பிறந்த பின் உழலும்
  வறுமை கொடிது !
  அதனினும் கொடிது
  வாலிபத்தில் மூர்க்கர் பலவந்தம் !
  அதனினும் கொடிது
  முதுமையில் வறுமை !
  அதனினும் கொடிது 
  தனிமை வாழ்வு !
  அதனினும் கொடிது
  ஊழியம், ஊதியம் இன்மை !
  அதனினும் கொடுமை
  உண்ண உணவின்மை !
  அதனினும் கொடிது
  குடிநீர் இன்மை !
  அதனினும் கொடிது
  பெண்ணாய்ச்
  செத்தும் சாவா திருப்பது !

  ++++++
  சி. ஜெயபாரதன்

 9. கருவேல முள்ளுந்தான்

  காடெல்லாம் மண்டிக் கிடக்கு

  காத்தும் கூட இதனால

  கடும் விஷமாத்தான் ஆகிப் போச்சு !

  பொன்னா விளையுற மண்ணும்

  புண்ணாகித் தான் போச்சு !

  நிலத்தடி நீரும் மாயமாக

  நிலமும் பாளமா வெடிச்சு போச்சு !

  வஞ்சமிலாம குடுத்த பூமியும்

  நஞ்சுபோய் தான் கிடக்குது

  நஞ்சை புஞ்சையாய் விளைஞ்ச பூமி

  பஞ்சத்துக்கு தான் பலியா போச்சு !

  மாடு கண்ணு காடு கழனியில

  புல்லு தின்ன காலம் மாறி

  நெகிழி பையை தின்னுற

  நிலைமை தான் ஆச்சுது !

  கட்டவுத்து விட்டுட்டு

  காடெல்லாம் மேஞ்சிட்டு

  கருத்தா வீடு வந்துடுன்னு

  தட்டிக் குடுத்தனுப்ப ஆசைதான் !

  தனியாவே நீயும் போய்

  தின்னக் கூடாததை எல்லாம்

  தீனியாகக் கொள்ளாமல் காக்க

  தடியெடுத்து துணையாக வருகிறேன் நானுமே !

 10. கருணை காட்டு பெண்ணே

  அத்துவானக் காட்டுக் குள்ளே
  யாருமில்லா நேரத்திலே
  மாடுஒன்னைக் கூட்டிக் கிட்டு
  ஒத்தையடிப் பாதையிலே
  ஒத்தையா போறபெண்ணே
  அங்கேயே கொஞ்சம் நில்லு
  எங்கபோற நீயும் சொல்லு

  தாகமான மாட்டுக்கு
  தண்ணிதேடி போறியா- இல்லை 
  பசியெடுத்த மாட்டுக்குப் 
  புல்லுதேடிப் போறியா- இல்லை 
  மாமனுக்கு சீதனமாய்
  மாட்டைத்தரப் போறியா – இல்லை 
  வாங்கியாந்த கடனுக்கு 
  வட்டிகட்டப் போறியா – இல்லை 
  மீதிப்ப ணத்துக்கு
  மாட்டைத்தரப் போறியா

  இல்லையது காரணம்தான் 
  இப்போது புரிகிறது 
  மாட்டைமசக் கையாக்க
  மச்சகாளை தேடுகிறாய் – ஆமாம்
  அப்போதுதான் கன்றுவரும்
  ஆவுக்குபா லும்ஊறும் – ஆமாம் 
  பாலைவிற் றால்உனக்கும்
  பிழைப்பு நடக்கும் –ஆமாம்
  ஒன்றின் உழைப்பில் 
  மற்றொன்று பிழைக்கும்
  என்றதத்துவம் சரிதான்
  மக்கள்முதல் மாக்கள்வரை
  மண்ணில் நடப்பது இதுதான்

  ஒன்றை மட்டும் உறுதியாக 
  யோசித்துப் பார்பெண்ணே
  உதவும் உயிரினத்தை
  வதைக்கலாமா கையில்
  கம்பெடுத்து அடிக்கலாமா

 11. மேய்ச்சல்…

  மாடேமாடே நில்லுமாடே
  மாத்துத்துணியும் இல்லமாடே,
  ஓடவேண்டாம் மொள்ளமாப்போ
  ஒத்தத்துணியும் பொத்தலாவும்..

  வானம்பாத்த பூமியிலும்
  மானங்காக்க வேண்டாமா,
  கம்புலதுணிய கட்டுனாலும்
  கழுவுபோலப் பாக்காவ..

  வம்புநமக்கு வேண்டாம்பா
  வயித்துப்பாட்ட பாப்போமே,
  அக்கரபோனா புல்லுவுண்டு
  அறுத்துவந்தா நெல்லுவுண்டு..

  வேலக்கிப்போனவிய வந்தாத்தான்
  வெளக்குவைக்கச் சாப்பாடு,
  அதுக்குள்ளநீயும் மேஞ்சாத்தான்
  அடுத்தவேலய நாம்பாப்பேன்..

  மாடேமாடே நில்லுமாடே
  மாத்துத்துணியும் இல்லமாடே,
  ஓடவேண்டாம் மொள்ளமாப்போ
  ஒத்தத்துணியும் பொத்தலாவும்…!

  -செண்பக ஜெகதீசன்…

 12.                             சொத்துப்பத்தும் ஏதுமில்லே
              சொந்தபந்தம்   யாருமில்லே
               வானம்       பொய்த்ததால்
               வயல் வேலை  கிடைக்கலே
               வீட்டு வேலை   முடிஞ்சதும்
               கட்டியிருக்கும்   மாட்டை
               ஓட்டிப்போ மேய்ச்சலுக்குன்னு
               முதலாளி  ஆணையிட 
                தொழிலாளி யான நானு
               ஒத்தையடி      பாதையிலே
               ஒத்தை மாட்டை  ஓட்டிகிட்டு
               ஊருகடைசியிலே புல்லுத்தேடி
                பாருக்குட்டி    நான் நடந்தேன்
                யாருமில்லா   ஏழைஎனக்கு
                 சாரமில்லா   வாழ்வதிலும்
                  சோறுபோடும் முதலாளியும்
                  இந்த பசுவும்தான்  தெய்வம்

  சரஸ்வதி ராசேந்திரன்
                 

 13.       படக்கவிதைப்போட்டி … எம். ஜெயராமசர்மா … மெல்பேண்

            நீண்டநாள் ஆகும் !
        —————————–
      வரண்ட பற்றைகள் வானத்தைப் பார்க்க
      வானமோ முறைத்து அவற்றினை நோக்க
      எலும்பெலாம் தெரியும் எருதினை ஓட்டி
      ஏக்கமும் தாக்கமும் இதயத்தில் தேக்கி
      பெண்ணவள் செல்கின்ற காட்சியைப் பார்க்க
      மண்ணிலே உள்ளவர் மனம் இரங்காரா ! 
   

 14.    படக்கவிதைப்போட்டி .. எம். ஜெயராமசர்மா .. மெல்பேண்

         நம்பியவள் நடக்கின்றாள்
    ————————————-
   நீரற்ற நெடுந்தரை நெஞ்சமெலாம் பெருங்கனவு
   காரற்ற நெடுவானம் கற்றரையில் நடைப்பயணம்
  வேரற்ற வாழ்வினிலே விடிவுதனை எதிர்பார்த்து
  நார்போன்ற பெண்ணவளூம் நரம்புதெரி எருதோட்டி
  நம்பிக்கை மனமேற்றி நம்பியவள் நடக்கின்றாள் !

 15. எலும்பில் சதைதூக்கும் திராணி இழந்து 
  அலுத்து நடக்கின்ற மாட்டை – உலுக்கும் 
  முதுமை உயிர்கள் அனைத்துக்கும் வாழ்வில் 
  பொதுவென்னு முண்மை யுணர்ந்த மாது  
  அறுப்புக்குப் போடாமல் அன்போடு மேய்க்கும் 
  பொறுப்பில் இருக்கும் கருணை வடிவமே  
  ஆண்டவன் வாழும் அமைப்பு.

  மெய்யன் நடராஜ் 

 16. நடப்பது’ நடக்கட்டும்….! 

  கிராமத்துப்  பசுமையெல்லாம் 
  நகரத்துப் பெட்டிகளில் 
  மறைந்து கொள்ள 
  இங்கே 
  வயலையும் காணோம் 
  வரப்பையும் காணோம்
  பணத்தை விதைத்து 
  பணத்தை அறுவடை 
  செய்யும் 
  மனிதனின் 
  புதுமை ஆசை  
  விவசாயத்தைப் பிடுங்கி 
  வீடுகளை  நாற்றாக 
  நட்டுவிட்டார்..!

  நாகரீக நகரத்தில் 
  பாதையோர குப்பைமேட்டில் 
  குவிந்திருக்கும் பிளாஸ்ட்டிக் 
  பைகளாவது  பசுக்களுக்குப் 
  பகலுணவு..! 
  இங்குனக்கு அதுவுமில்லை 
  உன்னோடு இணைந்து வர 
  காளையுமில்லே 
  கன்றுமில்லே 
  வறண்ட பாதையில் 
  குளம்புகள் தேய 
  கண்கள் தேட நீ 
  அலைமோதும் போது 
  பசிக்கும் என் வயிறும் 
  அந்தச் சூரியன் போலே  
  கனன்று எரியுதடி..!

  மண்ணை விற்றும் 
  பெண்ணை விற்க 
  முடியாமல்  கள்ளுப் 
  பானைக்குள் 
  தன்னையே விற்றப் 
  பெற்றவன் எனக்கு 
  எழுதிய தலையெழுத்தால் 
  எனக்கும் வேலியுமில்லை 
  அன்பில்  உறவாடத் 
  தாலியுமில்லை..!

  பட்டமரம் பூக்காது 
  என அறிந்தோ 
  ‘அவன்’ இட்ட வரம் நீ 
  என் முன்னே நடக்கிறாய் 
  உனக்காக சீதனமாய் 
  கொம்பும் குளம்பும் 
  கூட வர 
  எனக்கான சீதனமாய்
  உனைத்தானே 
  என்னோடு  
  அனுப்பி வைத்தான்..!

  அந்திசந்தி சாயும்வரை
  இந்தக் கள்ளிக் காட்டில் 
  உனக்குப் புல்லும்
  கிடைக்கலே 
  எனக்குச் சுள்ளியும் 
  கிடைக்கலே 
  வாயசைத்து நடந்து 
  செல்லும் நீயும்..
  மனமசைத்து 
  பின்தொடரும்  நானும்…
  தேடுவது கிடைக்கும் 
  வரையில் விரக்தியில் 
  ‘நடப்பது’ நடக்கட்டும்…!

  ஜெயஸ்ரீ ஷங்கர் 

 17. வறட்சி !

  வறுமை செழித்த வையத்திலே
  பொறுமைப் புரட்சி தூங்குது !
  வறட்சி மண்டும் மண்ணிலே
  பிறவிகள் மாளத் துடிக்குது !
  இல்லாமை வெள்ளாமை
  ஆகும் போது 
  வேளாண்மைத் தொழில்
  பொல்லாமை ஆகுது !
  மழை பெய்யா நீலவானம்
  மலட்டு மேக மாகுது !
  வறுமை நீக்கா உரிமை நாடு
  வாழ்வை அரிக்கும்
  நரகக் காடு !

  சி. ஜெயபாரதன்

 18. கதை கேளு
  வெள்ளையம்மா…!  
  கருத்தம்மாவின்  
  கதை கேளு 
  பாதையும்  நீளுது 
  வயிறும் சுருங்குது 
  உச்சி வெய்யில் 
  உச்சந்தலையில் 
  பட்டுப் பதம் 
  பார்க்குது..
  கையில விரட்டும் 
  பெரம்போட இதோ 
  இந்தக் கருத்தம்மா 
  சொல்லப் போகும் 
  கதையைக் 
  கொஞ்சம் கேளு…!

  முன்னே செல்லும் 
  வெள்ளையம்மா 
  உண்டதை 
  அசைபோடுது 
  அப்படியே 
  தலையை ஆட்டுது..!
  கருத்தம்மாவின் 
  கருத்து வண்டி 
  காலத்தைப் 
  பின்னோக்கி 
  அசை போடுது…!

  காலம் போலக் 
  கோலம் தான் 
  உடையில் மட்டும்  
  புதுமை தான்..!  
  படிக்கும் காலத்தை 
  வீணாக்கி 
  சினிமாப் பாடல் 
  கேட்டே 
  வீணாகிப் போனேனே..!

  கோழிமுட்டை 
  மதிப்பெண்ணால் 
  கோபம் கொண்ட 
  கோமளா டீச்சர் 
  படிப்பே  ஏறாத 
  மண்டையென
  ஓங்கியொரு  குட்டு 
  குட்டி முட்டை 
  வாங்கிய 
  கைகளுக்குப் 
  பிரம்படி 
  இந்தாப்  பிடி 
  என்றடித்தாளே ..!

  மதிய உணவு 
  உண்ணத் தான் 
  படிக்க வரும்   
  வெறும் சோற்று 
  மூட்டை….தானிந்தக் 
  கருத்தம்மா 
  படிப்பு ஏறாத 
  நீயெல்லாம் 
  மாடு மேய்க்கச் 
  செல்வதே சரி..
  கொல்லெனச்  
  சிரித்த 
  டீச்சரம்மா  
  கேலியுடன் 
  சாபமிட்டாள்..! 

  சோறும் வேண்டாம் 
  நீயும் வேண்டாம்  
  கண் கலங்கிய 
  கருத்தம்மா 
  துடுக்காய்  
  பள்ளியை 
  உதறிவிட்டாள் ..
  புத்தகத்தைக் 
  கழுதைக்கு 
  உணவாய்  
  போட்டாள்..!

  பொய்க்கவில்லை 
  அவள்   வாக்கு 
  அத்தனையும் 
  கோமளாவின்  
  அருள்வாக்கு…!
  அன்று சொன்னது 
  இன்று நடக்குது 
  மேய்க்கும் 
  போதெல்லாம் 
  நெஞ்சு தவிக்குது 
  ‘இளமையில் கல்’ 
  எனப் படித்தும் 
  கேட்காமல் 
  விட்டுவிட்டேன் 
  இந்தக்  கருத்தம்மா..!

  பெண்ணின் 
  எந்தக்  கனவும் 
  நனவா வதில்லை 
  என்ஜோட்டு 
  பொண்ணுங்கள்ளாம் 
  கல்யாணம் கட்டிக்கிட்டு 
  ஓடிப் போக 
  நான் மட்டும் 
  உன் வாலைப் 
  பிடிச்சிக்கிட்டு  
  ஊரு  மேயறேன்..

  படிப்பு மட்டுந்தேன் 
  பொண்ணுக்கு 
  பொறந்த வீட்டுச் 
  சீதனம்….
  தெரிஞ்சிகிட்டேன் 
  வெள்ளையம்மா..
  பேருக்குப் பின்னாலே 
  டிகிரி இருந்தா 
  எகிறி எங்கியோ 
  இருந்திருப்பேன்…
  இல்லாததால் 
  அல்லாடுறேன்..
  போகட்டும்…!
  என் கதை 
  இத்தோடே  
  கோமளா டீச்சர் 
  வீட்டுத் தோட்டம் 
  வந்துடுச்சி ..
  உள்ளார நீ 
  நுழைஞ்சிரு 
  உன் பசியாச்சும் 
  தீரட்டும்….1

 19. ஒற்றையடிப்  பிரபஞ்சங்களில் – சரவணா 

  வெளிச்ச மினுக்குகள் 
  எதிர்பார்த்து நின்றிருக்கவில்லை…
  அதற்கான அவகாசங்களும்  
  இல்லாது போயிருக்கலாம் …..

  அன்றைய நாளின் முடிவில் 
  அவர்களின் தேடல் திரட்சியாய் 
  எதிர் நீண்டிருப்பது 
  ஒருகொத்துப் புல்லும்…
  ஒரு மங்குப் பாலுமாகியிருக்கலாம்….

  அவளின் கன்றுக்குட்டியைப் 
  போலவே 
  காத்துக் கொண்டிருக்கக்கூடும் 
  அப்பசுவின் தொட்டில் குழந்தையும்…

  செயற்கையாய் வலியச் சிரித்த 
  பின்னணிகளில் 
  நயாகரா அழுது கொண்டிருக்கலாம் ..
  இரட்டைக் கோபுரம் தனக்குள் 
  மீண்டுமொருமுறை 
  இடிந்து கொண்டிருக்கலாம்…

  வரலாறு பதிந்து கொண்டிருக்கா 
  இந்த ஒற்றையடிப் 
  பிரபஞ்சங்கள்… அழுகவுமில்லை..
  இடிந்துவிட்டிருக்கவும் இல்லை…

  இன்னும் நம்பிக்கையிருக்கிறது..
  உயிர்த் தேவைகளுக்காய் 
  தேடிக்கொண்டே 
  முடிந்துபோய்விடும் இவ்வாழ்க்கை….

  யாப்புகளில் அடைத்துவிட முடியாக் 
  கவிதை….!!

 20. உதித்த சூரியன்
  உறங்கப் போகும் நேரம்..

  நாமும் தான்
  நடந்துக் கிட்டிருக்கோம்

  அனல் காத்துக்கும்
  அசதியில்லை

  வானத்துக்கும்
  கருணையில்லை

  பட்டினி வயிறுகள்
  பஞ்சப் பாட்டு பாடுது

  கண்கள் நான்கும்
  வழித்தடம் மாறப் பார்க்குது

  கொஞ்சம் நிழலிருந்தா
  நல்லாருக்கும்…

  கொஞ்சம் நீரிருந்தா
  நல்லாருக்கும்

  கொஞ்சம் பசும்புல்லிருந்தா
  நல்லாருக்கும்

  எதுவுமில்லாத வெத்துக்
  காடிது…பொட்டக் காடிது

  இல்லாததை நினைத்தே
  ஏங்கித் தவிக்கும் மனது..

  கிடைக்கும் என்ற நம்பிக்கையை
  நம்பி நம்பி நடந்து

  நடந்து தேய்வது வைத்த நம்பிக்கை
  மட்டுமில்லே..

  காய்ந்து விறகாகிப்
  போன நம் கால்களும் தான்.

 21. விதியின் வழியில்..

  பொட்டல் காடு தனில்
  பொட்டபுள்ள நானும் 
  ஒத்தையில போறேன்..
  கால் நடையா போற எனக்கு
  இந்த கால்நடையை தவிர
  வழித்துணையா யாரும் இல்லை..
  வாழ்க்கை துணையும் எனக்கு இல்ல..
  ஒத்தமாட்டு வண்டிகட்டி போகவோ..
  ஒத்துக்கிட்டு துணையா கூட வரவோ
  நாதியத்து நானு நடக்கிறேன்..
  விதி எங்க கூட்டிகிட்டு 
  போகுதுன்னு தெரியாம

 22.         படக்கவிதைப்போட்டி … எம். ஜெயராமசர்மா

       இருண்டவாழ்வு
   ————————–

    வரண்ட நிலத்தில் இருண்ட வாழ்வு
    சுருண்டு போகும் காளை மாடு
    நிமிர்ந்து செல்லும் நெடிய பெண்ணிடம்
    அமர்ந்து இருக்கும் ஆசைக் கனவுகள் !

 23.         படக்கவிதைப்போட்டி .. எம். ஜெயராமசர்மா … மெல்பேண்

              கனவுதோன்ற !
           ————————
     பற்றைகள் சூழ்ந்து நிற்க
     பகலிலே கனவு தோன்ற
      செத்தலாம் மாட்டை ஓட்டி
      செல்கிறாள் இந்தப் பெண்ணும் !

 24. காய்ந்த பூமியில் 
  சாய்ந்த பொழுது வரை 
  மேய்ந்த மாடுடன்
  ஓய்ந்திடாத மங்கையிவள்.

  வாழ்க்கை வீதியில் 
  வேடிக்கை வெளிச்சம் 
  தூரிகை கயிற்றில் 
  தும்பிக்கையாய் உதயம்.

  பொட்டை தமிழச்சி 
  நெட்டை கருவாச்சி 
  ஒற்றை பாதையிலே 
  ஒழுக்கமான தேவதையே .

  உனக்கும் எனக்கும் 
  ஒரே உறவு தான்.
  உலகுக்கும் அதுதான் 
  ஒரே வரவு தான் .
       நான் கிராமத்தான்.
  -மு.யாகூப் அலி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *