பவள சங்கரி

அன்பினிய நண்பர்களே!

வணக்கம். நாம் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த, ‘மனத்தில் நிறைந்த மக்கள் திலகம்’ போட்டியின் முடிவுகளை திருமதி கமலம் சங்கர் வெளியிட்டிருக்கிறார்கள். முதல் மூன்று பரிசுகள் என்ற வகையில் மட்டும் தம் முடிவை அறிவிக்காமல், தாம் பரிசுக்குரியதாக தேர்ந்தெடுத்ததன் காரணங்களோடு, போட்டியில் பங்கு பெற்ற அனைவரின் கட்டுரைகளையும், ஆழ்ந்து வாசித்து, அதற்கான தம் கருத்துகளையும் அழகாக வெளியிட்டிருப்பது பாராட்டுதலுக்குரியது. ஒரு படைப்பாளியின் மன நிலையை உணர்ந்து அவர்தம் முடிவுகளை பாரபட்சமின்றி வழங்கியிருக்கிறார். அவருக்கும், போட்டியை நல்ல முறையில் நடத்துவதற்கு தங்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்கியுள்ள கவிஞர் திரு காவிரி மைந்தன் மற்றும் திரு சசிகுமார் அவர்களுக்கும் வல்லமை குழுவினரின் மனமார்ந்த வாழ்த்துகளும், நன்றியும். போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டுகள். நன்றி நண்பர்களே. இணைந்திருங்கள்! தொடர்ந்து பல வெற்றிகளைக் காண்போம்!

போட்டிக்கான படைப்புகள் அனைத்தையும் இங்கு காணலாம்.

mgr-comp

முனைவர் கமலம் சங்கர்

வல்லமை மின்னிதழ் நடத்திய ‘‘மனத்தில் நிறைந்த மக்கள் திலகம்” தலைப்பிலான கட்டுரைப் போட்டி முடிவுகள் வருமாறு:

முதற் பரிசுகள் :
1. சுடர்மதி மலர்வேந்தன்
2. ஞா.கலையரசி
3. ஜியாவுத்தீன்

இரண்டாம் பரிசுகள்:
1. வில்லவன் கோதை
2. எஸ்.சசிகலா
மூன்றாம் பரிசுகள்:
1. ஜெயஸ்ரீ சங்கர்
2. அதிரை இளைய சாகுல்
3. ஷேக் சிந்தா மதார்

சிறப்புக் குறிப்பு:
முதலாம் பரிசுகள் வரிசையில்..

1. சுடர்மதி மலர்வேந்தன் :
‘தன் வாழ்க்கையையே சரித்திரமாக்கிவிட்ட ஒரு அசாதாரண மனிதரைப்பற்றியதோர் கட்டுரை! கையின் கட்டை விரலாய்ச் சிறப்புப் பெற்றார்!

கல்லுக்குள் உளி செலுத்திச் சிற்பத்தைப் பெறவேண்டும். ஆனால் இங்கோ சிற்பம் தானாகவே தன்னைச் செதுக்கிக் கொண்டிருந்தது என்பன போன்ற சித்திர வரிகள் மக்கள் திலகம் பற்றிய செய்திகளாகக் கோர்க்கப்பட்ட நேர்த்தி சிறப்பானது.

விடிவெள்ளியின் உதயம், வெற்றி நாயகன், தடைகள் துகள்களாக, இப்படியும் இருப்பாரா, வெற்றி முழக்கம், சமுத்திரத்திலிருந்து சாதனைத் துளிகள்.. இப்படி முதல்தரமான தலைப்புகள் பொருத்தம் நிறைந்த கருத்துச் செறிவுகளுடன் கட்டுரையை முதலிடத்தில் வைத்துள்ளார்.

2. ஞா.கலையரசி

காலத்தை வென்று இன்றைக்கும் மக்கள் நெஞ்சங்களில் காவிய நாயகனாக உலா வருபவர் – துவக்கம் இப்படி!

சிறப்புக் குணங்கள், மக்கள் மனத்தில் விதைத்த நம்பகத்தன்மை, 1967, 1972, 1977,1984கள் முக்கிய அரசியல் நிகழ்வுகள், திரைப்படங்கள் மூலம் மக்களிடையே உண்டாக்கிய பிம்பம் ‘வாக்கு வங்கிகளாக’ நிலைப்பெற்றது போன்ற ரசமான வெளிப்பாட்டுடன் தொடர்கிறது கட்டுரை!

மிகுதியான கருத்துக்கள், பொருத்தமான ஆதாரங்கள் வரிசைக்கிரமமாக, எளிய தமிழில் உயிரோட்டத்துடன கூடிய படைப்பு.. முதலிடத்தில் ஒன்றாக!!

3. ஜியாவுத்தீன்..

திரையுலகைத் தாண்டி அரசியலிலும் மக்கள் மனங்களிலும் ஏழைகளின் இதயங்களிலும் இன்னும் இந்த வசீகரப்புயல் நிலைகொண்டுள்ளது என வசீகரமான தொடங்கும் கட்டுரை,

ஏழைப் பங்காளன் எனும் ஆதர்ச கதாபாத்திரத்தை மக்கள் மனங்களில் பதியவைத்துக் கொண்டார்கள். தாய்க்குலம் என்று ஒரு புதிய சொல்லாடலைத் தோற்றுவித்து, அரசியலாகட்டும், திரைப்படங்களாகட்டும் தன் ஆளுமையை என்றுமே அவர் இழந்ததில்லை! தாய்மைப் பண்புக்கு உதாரணம் என ஆணித்தரமான, நயமான வரிகளுடன் தொடர்கிறது!

எம்.ஜி.ஆரின் புகழ் ஒவ்வொரு குடிசையிலும் அரியாசனமிட்டுக் கோலோச்சிக் கொண்டிருக்கிறது. ஒரு யுகபுருஷனாக வாழ்ந்து இன்றும் அவர்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் மனத்தில் நிறைந்த மக்கள் திலகம் என முடிகின்ற கட்டுரை தொடரோட்டத்தில் முதலாம் இடத்தில்!!

இரண்டாம் பரிசுகள் வரிசையில்:

1. வில்லவன் கோதை :

எட்டு வயதில் மலைக்கள்ன பார்த்த அனுபவத்துடன் – ‘அன்று என் மனத்தைக் கவர்ந்துபோன அந்தக் கள்ளன் கடைசிவரையில் திருப்பித்தந்ததாக எனக்கு நினைவில்லை என.. அழகான வெளிப்பாடு!

தமிழகத்தின் வறண்ட பூமிகளிலும் நலிந்த மக்களிடையேயும் அவர் ஏற்படுத்திய ஒப்பனைப் பிம்பம் ஆழப் பதிகிறது. வாடிய முகத்தைக் கண்டபோதெல்லாம் வாடியதோடல்லாமல் வாட்டத்தைப் போக்குகின்றவராகவும் எம்.ஜி.யார் வாழ்ந்தார்! என்பன போல் பல சத்தான வரிகள் சுமந்தபடி, தலைமுறைகளைத் தாண்டி இன்றும் அவர் பேசப்படுவதான முத்துப் போன்ற முடிவுடன் அமையும் கட்டுரை, எளிய ஆழமான நடைத்தெளிவுடன் மக்கள் திலகத்தை ஓவியமாக்கி இரண்டாம் இடத்தில்!

2. எஸ்.சசிகலா:

“இறந்த பின்னும் வாழும் வாழ்க்கையைத்தான் சிறந்தது என்றாரு பொன்மொழியுண்டு. அதை மெய்ப்பிக்கும் விதமாக இன்றளவும் மனத்தில் நிறைந்திருக்கிறார் மக்கள் திலகம்”! இனிய தொடக்கம்!

ஈகை அவரது மிகப் பெரிய பலம் என்பதும் தன்னைச் சுட்டவரையும் மன்னித்த பெரும் பண்பினால் பரமபிதா, மெய்ப்பொருள் நாயனார் செயலோடு ஒப்பிடும் சிறப்பு, காவிரிநீர் தமிழகம் வரச் செய்த சாகஸம், பெற்றால்தான்பிள்ளையா என வாரியணைத்த கனிவு என்று பலப்பல!

‘நாடகக் காட்சி’ போன்ற விளக்கத்துடனும் தெளிவடனும் உள்ள கட்டுரை, இரண்டாம் இடத்தில்!

மூன்றாம் பரிசுகள்:

1. ஜெயஸ்ரீ சங்கர் :

மதுரையில் மக்கள் திலகத்தைக் கண்ட அனுபவம் பரவசத்துடன், ஆரம்பமாகிறது கட்டுரை.

தன்னம்பிக்கையின் அஸ்திவாரம், அரசியல் சூழ்ச்சி வலையிலிருந்து வெளிவர அவருக்குள் வெகுண்டு வெளிவந்த தைரியமும், தீர்க்கமான அறிவும், பகட்டே அறியாத தூய அன்பும், நல்ல மனமும் மட்டுமே துணையாக இருந்தன. தமிழ் நாட்டு மக்கள் அனைவருமே பாதுகாப்பு வளையமாக வலம் வந்தார்கள் என்பன போல் உண்மைகளின் வெளிப்பாடு, அழகு ததும்ப!

அந்தக் கீர்த்தியை ‘சத்திய உலகின் பிரதிநிதி’ என்றே சொல்ல வேண்டும் என உறுதி கூறும் கட்டுரை மூன்றாம் இடத்தில்!

2. அதிரை இளைய சாகுல்:

நடமாடும் ஒரு மனிதாபிமானம். வறுமைக்கோட்டை அழிக்க இயற்கை எறிந்த அழிரப்பர்! கருணைக் கல்வெட்டு! இரக்க இதிகாசம்! தவறுகளைச் சரியாக்க இறைவன் எய்நத பிரம்மாஸ்திரம். சுவையே அறியாத நாவுகளை நனைத்த கற்கண்டு! அட்டசய பாத்திரம்!

தென்னகத்து ராஜதந்திரி! மனிதநேய மாமன்றம்.. இப்படியான தொடக்கத்தில் அநேகமாக கட்டுரையாக்கிய சாரம்சம் அத்தனையும்!

தனித்தன்மைகள் பல – தனிப்பட்டவர் அனுபவம் பல கோர்த்து, தமிழ் அழகு, முந்தி நிற்கும் கட்டுரை மூன்றாம் இடத்தில்!

3. ஷேக் சிந்தா மதார்:

சென்ற தலைமுறையும் இந்தத் தலைமுறையும் மட்டுமின்றி இனி வரும் தலைமுறைகளும் அவர் புகழைப் பேசும். தாய்க்குலத்தின் மனங்களைக் கொள்ளை கொள்ளும் கதாபாத்திரங்கள் என்பன போல பல உண்மை வாசகங்கள்!

திரைப்படங்களின் பெயர்கள் பக்கத்தலைப்புக்களாக அமைய, மிகப் பொருந்தும் வகையில் கருத்துக்கள் என இருப்பது ரசிக்கத்தக்க வெளிப்பாட்டு முறையிலான கட்டுரை மூன்றாம் இடத்தில்!!

கமலம் சங்கர்
சென்னை
12.04.2015

பரிசு ஒன்று மட்டும் தகுதியைத் தீர்மானிப்பதல்ல.. பாராட்டி ரசிப்பதற்குரிய பல அம்சங்கள் எல்லாக் கட்டுரைகளிலும்! சுவைக்கலாமே!!

1. சுரேஜுமீ – தமிழின் வார்த்தைகளை வாழ்க்கையாக்கிய வள்ளல்தான் புரட்சித்தலைவர் – அழகான வெளிப்பாடு.. சுய அனுபவமே உயிர்நாடியாக மனிதாபிமானமுள்ள மனிதனாக வைத்திருக்கின்ற உண்மை பகர்கின்ற படைப்புக்குப் பாராட்டுக்கள்!

2. ஆகிரா – அவர் பெயரைக் கேட்டால் மயங்காத மனம் யாவும் மயங்கும். பொழுதுபோக்கு அம்சத்துடன் அறிவுரை கூறிய திரைப்படங்கள்! மக்கள் மனதில் நீங்கா இடம்பிடிக்க அடிப்படை ரகசியம் எனக்கூறுவதெல்லாம் சிறப்பு! பட்டியல்களைத் தவிர்த்திருக்கலாம்! முயற்சிக்குப் பாராட்டு!

3. சி.எஸ்.குமார் – மக்கள் தந்த விருது மக்கள் திலகம்! எம்.ஜி.ஆர் – ஒரு சகாப்தம்! சாதனையின் சிகரம்! திரை உலகின் சரித்திரம் என்பன போல் வலிமை பொருந்திய வார்த்தைகள் இருந்தாலும் 168 வார்த்தைகள் மட்டுமே.. போதாமல் போன கட்டுரை! முயற்சி தொடர்க!

4. சக்தி சக்திதாசன் – 9, 16 வயது அனுபவங்கள் பேச – பாடல்களை வரிசைப்படுத்திய கவிதையுடன் – மாட்டுக்கார வேலனாம் மக்கள் மனங்களை உழுதாயே! என்பது போல – நம் நாடு என் இதயவீணை பாடிய உள்ளமே உன் மக்கள் எப்போதும் குடியிருந்த கோயில் என எத்தனை அழகுகள்! 587 வார்த்தைகளாகக் குறைந்திருக்க வேண்டாடம்! தொடரட்டும் முயற்சி!

5. சித்தார் கோட்டை நூர் மணாளன் : ஏழை மக்களை அரவணைக்கலானார். அதன் பயனாய் சாந்த வாழ்வு பந்த வாழ்வாக மலர்ந்தது. மாநிலத்தில் மானிடராய்ப் பிறந்திட என்ன தவம் செய்தால் நலம் என்றால் .. மறைந்த பின்னும் மக்கள் மனத்தைவிட்டு நீங்காது இடம்பிடிக்கும் அளவுக்கு நன்மை செய்தலாகும் என்று வாழ்ந்து காட்டியவர் என்பன போன்ற வரிகள் பாராட்டுக்கு உரியவை! 566 வார்த்தைகள் மட்டும் ஏனோ?

6. ஆர்.எஸ்.கலா – கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை உடையாக உடுத்திய கொடை வள்ளல்! இறந்தும் இறவா வரம் பெற்றவர்! நடிப்பை நடிப்பாகப் பார்த்த பலர் முன் அதில்வரும் பலகாட்சிகளுக்கு நிஜத்தில் உயிர்கொடுத்துவிட்டார் பலர் வியக்கும் வண்ணம்! என்பன போல் பல வலிமையான வரிகள். 181 வார்த்தைகள் போதவில்லையே! முயற்சிக்குப் பாராட்டு!

7. வெ.சந்திரமணி – மக்கள் திலகத்தின் குடும்ப வரலாறும் அரசியல் வரலாறும் காட்டும் சுருக்கமான கட்டுரை, 355 வார்த்தைகளில்.. முயற்சி தொடர்ந்திருக்கலாம்.

8. நர்கீஸ் ஜியா: எவரெவர் எப்படியெல்லாம் இருக்க வேண்டுமென வள்ளுவர் பெருமான் வரையறுத்துள்ளாரோ அப்படியெல்லாம் தன்னை நெறிப்படுத்தி நிஜத்தில் வாழ்ந்துகாட்டிய நேர்த்தி! படிப்பதைவிடப் பார்ப்பது மக்கள் மனதில் பதிந்துவிடும் என்ற மனோதத்துவத்தை அறிந்து.. அதிலும்படிப்பறிவில்லாத பாமர மக்களையும் மனதில் கொண்டு.. என்பன போல்பல உறுதியான வரிகள் கட்டுரையில்.. பாராட்டுக்கள்!

9. திருக்குவளை மீ.லதா: பூமிதனில் ஒளிரும் தீபங்களாய் இருப்பவர். ஆங்கிலப் பத்திரிக்கைக் குறிப்பு இந்தியாவில் மக்களின் பேரன்பைப் பெற்ற பெருமான்களாக இருவரைச் சுட்டிக்காட்டியது. ஒருவர் ஜவஹர்லால் நேரு. மற்றொருவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். என்பன போல உண்மை வரிகள் இடம்பெற்றுள்ள கட்டுரை. 480 வார்த்தைகள் எனச் சுருக்கியிருக்க வேண்டாமே. முயற்சி தொடர வாழ்த்துக்கள்!

10. எஸ்.பழனிச்சாமி – பொதுமக்களின் பார்வையிலிருந்து சினிமாவை அணுகினார். பாடல் சொல்லும் அர்த்தத்திற்கு ஏற்ப வாழ்ந்தும் காட்டினார். கதாபாத்திரங்கள் தத்தம் குடும்பத்திலும் சமூகத்திலும் ஒருவர் என்று மக்கள் கருதும்படி செய்தது! இப்படிப் பல ஆணிவேர் வரிகள். கட்டுரையின் அளவு 877 வார்த்தைகளுக்குள் 367 மக்கள் திலகத்தின் பேட்டியாகவே அமைந்துவிட்டதே! முயற்சிக்குப் பாராட்டு!

11. சுமதி ரவிச்சந்திரன்: மக்களின் மனதில் நிலைத்து நிற்கும் புரட்சித்தலைவர், தமிழ், ஈழம், கடமை, அன்பு, பாசம், புகழ், நன்றி, காதல், நட்பு, உதவி, கல்வி, பரிசு, தானம், கருணை, மனம் என மூன்றெழுத்தில் ஆரம்பமாகும் கட்டுரை. 22 பட்டங்கள்.. யார் யார் வழங்கியது என்னும் செய்திகளோடு சிறப்புப் பெறுகிறது! அரசியல் பாதையும் உண்டு! பாராட்டுக்கள்!

12. கலைவாணன் – தாயன்பு, வில்லனையும் திருந்தவைக்கும் பண்பு.. குடித்தலும் புகைத்தலும் தவறு என அழுத்தந்திருத்தமாய் போதித்து, நிஜவாழ்விலும் முன்னுதாரணம்.. ரிக்ஷாக்காரர்களுக்கு மழைக்கோட்டு வழங்கியது எனச் சொல்லும்போது மனங்களில் பதிந்து போனதற்கு இதைவிடச் சிறந்த காரணம் ஏதேனும் உண்டா எனக் கேட்டுக்கேட்டு வெளிப்பாட்டுநிலையில் கட்டுரை அழகு ததும்ப படைக்கப்பட்டுள்ளது. அரசியல் வாழ்க்கையையும் நன்கு விளக்கியிருக்கலாம்! முயற்சி தொடர வாழ்த்துக்கள்!

13. மீனாட்சி நாகப்பன்: திரையிசைப்பாடல்களும் அதற்குப் பொருந்திய மக்கள்திலகத்தின் நிலைவிளக்கமும் மட்டுமே காட்டப்பட்டுள்ளன. சொல்லப்பட வேண்டியவை சொல்லப்படாமலேயே 487 சொற்களில் சுருக்கப்பட்ட கட்டுரை.. முயற்சிக்குப் பாராட்டுக்கள்!

14. ஜெயராம சர்மா: “இரக்கம் அவருள் வியாபித்து நின்றதால் என்றுமே மக்கள் மனத்தில் நீங்கா இடம் கெண்டார்” என்று காரணங்கள் தொடர்கின்றன! அவர்கள் படங்களில் சமூகத் தளைகளை மீறித் தனிமனித மேல் நிலைப்பாட்டைப் பெறமுடியும் என்ற கருத்து மிகச் செப்பமாகவே பதிய வைக்கப் பெற்றது! என்பன போல் உறுதியான கருத்துக்கள் பல! பாராட்டுக்கள்!

15. தஞ்சை வெ.கோபாலன் – பள்ளி மாணவனாக இருந்தபோது எம்.ஜி.ஆரின் தோளைத்தொட்டுப் பேசியதும் – வளர்ந்தபின் எளிமை என்னும் அவரது உண்மை முகம் உணர்ந்ததும் எனச் சுய அனுபவங்கள் சுவையாக எளிய தமிழில்! பாராட்டுக்கள்!

16. சரஸ்வதி ராஜேந்திரன் – பகைவனுக்குக் கூட அவர் கருணை காட்டியவர். உடலல் நிலை குறித்து .. கோடான கோடி மக்கள் அவருக்காக வேண்டி தவம் இருந்த ஒரு உதாரணம் போதும்! ‘மூன்றெழுத்து முடிந்தபோதிலும் பேச்சிருக்கிறதே’ அதுதான் அவர்தம் வெற்றி! வெகு பொருத்தமான முத்தாய்ப்பு! 405 வார்த்தைகள் மட்டுமே எழுதாமல் இன்னும் விரித்திருக்கலாம்! நல்ல முயற்சி!

17. முனைவர் இதயகீதம் இராமானுஜம் – மக்களின் வயிற்றுப் பசியைப் போக்கி அதில் இறைவனைக் கண்டவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். தன் தொழிலான திரைப்படங்கள் மூலம் மனிதநேயத்தையும் மங்கலப் பண்புகளையும் மக்கள் மனதில் விதைத்தார். பொருந்திய கருத்துக்கள் உணர்ச்சியோட்டத்துடன் சேர்ந்திருந்தால் சிறப்பு மிகுந்திருக்கும்! பாராட்டுக்கள் முயற்சிக்கு!

18. புவனா – மும்பை: எம்.ஜி.ஆர் என்ற பெருமழை தந்த ஈரத்தால் இன்னும் வாடாமல் தழைத்தோங்கும் உயிர்கள் ஏராளம். சிந்தனையே சொல்லானது. சொல்லே செயலானது. அந்தச்செயலும் புனிதமானது. அந்த வகையில் அவர் புத்தனாகவும் யேசுவாகவும் கண்ணில் தென்பட்டார். இப்படிப் பல வரிகள் உள்ளம் பதிக்கத் தக்கவை. பாராட்டுக்கள்!

19. செள.செல்வகுமார் – மருத்துவத்துக்கும் இல்லாத இந்த சக்தி (இனம் புரியாத ஒரு இன்பமும், எழுச்சியும்) அவரது படங்களைக் காண்பதிலும் பாடல்களைக் கேட்பதிலும் உள்ளது. வலிய ஓடோடிச் சென்று உதவிகள் புரிந்தது.. அந்த முப்பிறவி கண்ட மூன்றெழுத்து மந்திரத்தில் தனிப்பாணி எனப் பல அனுபவ வரிகள்! பலரின் அனுபவ வரிகளாகின்றன! பாராட்டுக்கள்!

20. கொ.அரங்கநாதன் : வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்வார் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்ற குறளின் பொருளாக வாழ்ந்து மறைந்தவர் மக்கள் திலகம்! எண்ணற்ற உதவிகள்..அத்தனையுமே எவ்வித எதிர்பார்ப்புமின்றிச் செய்யப்பட்டதே எம்.ஜி.ஆர் என்ற மாமனிதனின் இரக்க வரலாறு! பாராட்டத்தக்க தொடர்கள் பலப்பல!

21. மணிமுத்து – பிராசாரத்திற்கே வராமல் முதல்வர் ஆன மாமனிதர்.. “மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும், முடிந்த பின்னும் என் பேச்சிருக்கும்” என்று உலகிற்கு வாழும்போதே சொல்லிவிட்டுப் போய்விட்டார் என்ற உறுதியான வரிகள் கட்டுரைக்குப் பொலிவு! ஈனதர’ 353 வார்த்தைகள் மட்டும் போதவில்லையே! முயற்சிக்குப் பாராட்டு!

கமலம் சங்கர்
சென்னை
12.04.2015

கவிஞர் காவிரி மைந்தன்

amgதனியொரு மனிதன் பிறப்பது முதல் இறப்பதுவரை நம் கையில் இல்லை என்னும்பட்சத்தில்.. வாழுகின்ற வாழ்க்கையிலே மறைந்த பிறகும் மக்கள் மனதில் வாழுகின்ற மனிதர்கள் ஒரு சிலரே!

இலங்கையிலே பிறந்து.. தமிழகத்தில் குடிபுகுந்து.. தாயின் அன்பால்.. அரவணைப்பால்.. முழுமையாக வார்க்கப்பட்ட எம்.ஜி.ஆர்.. கல்விகற்றிட வறுமை தடையிட்டதால், சிறுவயதிலேயே வேலைதேடிட வேண்டிய நிலையில் நாடகத்துறையில் கால்பதிக்க.. கலைத்துறையில் அங்குலம் அங்குலமாக அவரின் முன்னேற்றம்.. தனக்கென ஒரு இடத்தைப் பிடித்த பின் அவர் ஏற்ற பாத்திரங்கள், கொண்ட கொள்கைகள்.. மக்களுக்கு ஏதேனும் நல்ல கருத்தைச் சொல்லியாக வேண்டும் என்கிற வேட்கை.. பல ஆயிரம், லட்சம் பணத்தை முதலீடு செய்து உருவாக்கப்படும் திரைப்படம் என்ன சொல்ல வேண்டும்.. என்பதில் அக்கறை செலுத்திய நடிகராக எம்.ஜி.ஆர் திகழ்ந்ததால்தான் அவர் ஏனைய நடிகர்களிலிருந்து மாறுபட்டு.. மக்கள் மனதில் நிறைந்தார் என்றால் அது மிகையில்லை!

வாழ்ந்தவர் கோடி.. மறைந்தவர் கோடி..மக்களின் மனதில் நிற்பவர் யார் என்று மன்னாதி மன்னன் படத்திற்காக கவியரசு கண்ணதாசன் தீட்டிய வரிகளுக்கு வாயசைப்பு மட்டும் செய்தவராக இல்லாமல் வாழ்ந்துகாட்டிய சரித்திரமாக காட்சிதருகிறார்!

எண்ணங்களால் தூய்மை கொண்டு.. எங்கும் எதிலும் நேர்மை என்று.. தீமை கண்டு பொங்கி எழுகின்ற பாத்திரங்களையே பெரிதும் ஏற்று நல்ல நல்ல கருத்துக்களை தான் நடித்த திரைப்பாடல் வரிகளிலே .. இடம்பெறச்செய்து.. அன்றும் இன்றும் என்றும் வாழும் புகழுக்குப் புகழ்சேர்த்த புரட்சித்தலைவரை.. ஏழை மக்களின் இதயத்தில் நிரந்தரமாய் வாழும் எம்.ஜி.ஆரை.. தமிழகத்தின் முதலமைச்சராய் 11 ஆண்டுகள் முடிசூடிய எங்கள் வீட்டுப் பிள்ளையை.. அவரின் சாதனையை.. மக்களுக்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்த பண்பை, தமிழ்..தமிழினம்..வாழ தன் மூச்சு உள்ளவரை உழைத்தவரை.. பல லட்சம் ரசிகர்களை நல்வழிப்படுத்திய புரட்சிநடிகரை.. தாய் என்கிற உறவிற்கு தரணியில் தலையாய முக்கியத்துவம் தந்த தலைவரை.. ஏழைகளின் வாழ்வில் ஏதேனும் ஒரு வகையில் இன்பம் மலர காரணமாய் இருந்தால்போதும் என்று நெடிதுழைத்த உத்தமரை.. கிராமத்து மக்களெல்லாம் ஆசையாய் அழைத்து மகிழ்ந்த எம்.சி.ஆரை.. மானிடர் துயர்பெற்ற திசைகளெல்லாம் ஓடிச்சென்று உதவிய கரத்தை.. எல்லாவற்றையும் பின்னிப்பிணைந்த மாபெரும் மனிதரைப் பற்றி ..அன்பு உள்ளங்களே.. உங்கள் பதிவுகளை கட்டுரை வடிவில் வரவேற்றோம்.

எமது வேண்டுகோளை இனிதே ஏற்று வழக்கம்போல் வல்லமை மின்னிதழ் நேர்த்தியாக கட்டுரைப் போட்டி நடத்திட ஒத்துழைப்பு நல்கிய ஆசிரியர் குழுவினர்க்கு நன்றிகளும், ஆர்வமுடன் பங்கேற்று தங்கள் கட்டுரைகளை அனுப்பி வைத்த உள்ளங்கள் அனைவருக்கும் நன்றியும் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன்.

நன்றிகளுடன்
காவிரிமைந்தன்

இக்கட்டுரைப் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் எனது நன்றி மற்றும் வாழ்த்துக்கள்!

தங்களின் எழுதுகோல்களை சாய்த்து தங்களின் எழுத்துக்களையும், மக்கள் திலகத்தின் பெரும் புகழையும் மேலும் தலை நிமிர்த்தி, போட்டியில் வெற்றி கண்ட அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

நடுவர்களுக்கும், இப்போட்டியை சிறப்பாக நடத்தித் தந்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி.

இந்த போட்டியை நடத்துதற்கான அத்தனை முயற்சிகளையும், வெகு நேர்த்தியாக செய்து, சிறப்புற நிகழ்த்திய சகோதரர், திரு. காவிரிமைந்தன் அவர்களுக்கு, என் கைப்பற்றி மற்றுமொரு முறை MGR எனும் பேராளுமையை தரிசிக்க அழைத்து சென்றதற்கு எனது பிரத்தியேக நன்றி…

என்றும் அன்புடன்
உங்கள்
ச.சசிகுமார்
துபாய்

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “’மனத்தில் நிறைந்த மக்கள் திலகம்’ போட்டி முடிவுகள்

  1. பரிசு படத்தின் நாயகன்! – எம்ஜிஆர்
    பரிசு பாடத்தின் நாயகர்கள்! – எம் வெற்றியாளர்கள்

    முதலாமவர் பற்றி நடுவர்களின்
    மனம் கவர்ந்த முத்திரை எழுத்துக்களுக்குத்
    தலைவணங்கி; 

    முதல் மூன்றிடம் வென்ற
    முனைப்பாளர்களை
    வாழ்த்துகிறேன்!

    அன்புடன்
    சுரேஜமீ

  2.   வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டுக்கள் வெற்றியாளர்களை தேர்ந்தெடுத்த கமலம் சங்கர் அவர்களுக்கும், போட்டினடக்க ஒத்துழைத்த திரு காவிரிமைந்தன் திரு சசிகுமார்,போட்டியை வெற்றிகரமாக நடத்திய வல்லமை குழுவினருக்கும் எந்து மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்—–சரஸ்வதிராசேந்திரன் 

  3. என் கட்டுரையையும் பரிசுக்குரியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதறிந்து மிகவும் மகிழ்ச்சி.  நடுவர் திருமதி கமலம் சங்கர் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.  வல்லமை ஆசிரியர் சொல்லியிருப்பது போல நடுவர் முடிவுகளை மட்டும் அறிவிக்காமல் பங்குப்பெற்ற அத்தனை கட்டுரைகளின் சிறப்புக்களைப் பற்றியும் சொல்லி முடிவை அறிவித்திருப்பது மிகவும் வரவேற்கக்கூடிய விஷயம்.  
    போட்டியில் பரிசு பெற்ற அனைவருக்கும் பாராட்டுக்கள்; பங்குப்பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
    இப்போட்டியை முன் மொழிந்த கவிஞர் திரு காவிரிமைந்தன் அவர்களுக்கும், திரு சசிகுமார் அவர்களுக்கும் அகமார்ந்த நன்றி.
    போட்டியைத் திறம்பட நடத்தி, எழுதுவதற்கு ஊக்கமும் உற்சாகமும் அளித்த வல்லமையின் ஆசிரியர் அவர்களுக்கும், ஆசிரியக்குழுவினர்க்கும் என் நன்றி.  

  4. நடுவர் திருமதி கமலம் சங்கர் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் போட்டியில் கலந்து கொண்டு கட்டுரை எழுதி, தமிழக சரித்திரத்தில் நீங்காத புகழ் கொண்ட எம்.ஜி.ஆர் அவர்களைப் பற்றி மேலும் அறியத்தந்த அனைவருக்கும் எனது நன்றிகள்.பரிசு பெற்ற ஒவ்வொருவருக்கும் எனது பாராட்டுக்கள். கவிஞர் திரு காவிரிமைந்தன் அவர்களுக்கும், திரு சசிகுமார் அவர்களுக்கும் உளமார்ந்த நன்றிகள் உரித்தாகுக.
    உறங்கிக் கிடக்கும் எண்ணங்களுக்கு ஒளி தந்த ‘வல்லமை’ இதழின் ஆசிரியர் அவர்களுக்கு எனது நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *