குறளின் கதிர்களாய்… (14)

செண்பக ஜெகதீசன்

 

பயன்மர முள்ளுர்ப் பழுத்தற்றாற் செல்வம்

நயனுடை யான்கட் படின்.

-திருக்குறள்- 216 (ஒப்புரவறிதல்)

 

புதுக் கவிதையில்…

 

பயனாகும் எல்லார்க்கும்,

நல்ல மரம்

பழத்துடன் நின்றிருந்தால்

ஊர்நடுவே..

 

பிறர்க்குதவும்

ஈர நெஞ்சுடையோரிடம்

இருக்கும் செல்வத்திற்கும்

இதுதான் கதை-

இதுவும் உதவும் எல்லோருக்கும்…!

 

குறும்பாவில்…

 

நடுவூர் நல்மரத்துப் பழங்கள்போல்

பலருக்குதவும்,

நல்லமனமுள்ளவன் கைச் செல்வமும்…!

 

மரபுக் கவிதையில்…

 

நல்ல மரமது ஊர்நடுவே

நிறைய பழுத்து நின்றிருந்தால்,

எல்லா மக்களும் பயன்பெறுவர்

எடுத்து மகிழ்வுடன் சுவைத்திடுவர்,

செல்வ மிதனின் கதையிதுதான்

சேர்ந்தவர்க் குதவும் குணமுடைய

நல்லவர் கையில் நிறைந்திருந்தால்

நாடும் எவர்க்கும் குறைவிலையே…!

 

லிமரைக்கூ…

 

நல்லபழத்துடன் நடுவூர்நிற்கும் மரம்,

எல்லார்க்கும் உதவிடும்

செல்வம்நிறை நல்லவரின் கரம்…!

 

கிராமியப் பாணியில்…

 

நல்லமரம் நல்லமரம்

நடுவூருல நல்லமரம்,

பாக்க ஒசந்தமரம்

பலருக்கும் ஒதவொம்மரம்,

பலரொம் அறிஞ்சமரம்

பழமெல்லாம் நெறஞ்சமரம்,

எட்டிப் பறிச்சிடலாம்

எல்லாரும் தின்னுடலாம்..

 

இதப்போல

நல்ல மனுசங்கிட்ட

நெறஞ்கிருக்கொஞ் செலுவமெல்லாம்

எல்லாருக்கொம் ஒதவிடுமே

நல்லதெல்லாம் நடந்துருமே

நாமொம்

நல்லவார்த்த சொல்லுவமே…!

 

    

Share

Comments

2 responses to “குறளின் கதிர்களாய்… (14)”

  1. சச்சிதானந்தம்

    அனைத்துக் கவிதைகளும் அருமை எனினும் மரபுக் கவிதை என் மனத்தைக் கவர்ந்தது. வாழ்த்துக்கள்.

  2. -செண்பக ஜெகதீசன்…

    திரு.சச்சிதானந்தம் அவர்களின்
    கருத்துரை மற்றும் வாழ்த்துரைக்கு நன்றி…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *