Featuredஇலக்கியம்கட்டுரைகள்

பட்டினத்தடிகளின் பாடல்கள் – 17ம் பகுதி

தஞ்​சை​ வெ​. கோபாலன்

திருக்கைலாயம்.

கான்சாயும் வெள்ளி மலைக்கரசே நின் கழல் நம்பினேன்
ஊன் சாயும் சென்மம் ஒழித்திடுவாய் கரவூரனுக்கா
மான் சாயச் செங்கை மழுவலம் சாய வளைந்த கொன்றைத்
தேன் சாய நல்ல திருமேனி சாய்ந்த சிவக் கொழுந்தே. 1.

மணம் பரப்பும் (கான் = மணம்) பனிமலையாம் கயிலையங்கிரிக்கு அதிபதியே! (கரவூரன் = கரவூர் என வழங்கும் விரிஞ்சீபுரத்து அன்பன். அங்கு சிவனுக்குப் பூசை புரியும் அந்தணச் சிறுவனுக்கு அபிஷேகம் செய்ய எட்டவில்லை என்பதால் சிவன் தலை குனிந்து கொடுத்ததாகத் தல புராணம் கூறுகிறது) கரவூர் அன்பனான சிவசருமனுக்காக உன் திருக்கரங்கரங்களில் தாங்கியுள்ள மான் சாய்ந்திடவும், மற்றோர் கையிலுள்ள மழு வலப்புறமாகச் சாய்ந்திடவும், உன் கழுத்தில் அணிந்திருக்கும் கொன்றைமாலையிலிருந்து தேன் ஒழுக, இவை அனைத்தோடும் உன் திருமேனியும் சாய அமர்ந்திருக்கும் சிவக் கொழுந்தே உன் பாதங்களைப் பணிந்தேன், மாமிசப் பிண்டமான இப்பிறவியை ஒழித்து எனக்கு மோட்சமளிப்பாய்.

குறிப்பு:- விரிஞ்சிபுரம் பற்றியும் அங்கு சிவனுக்கு பூசை செய்த அந்தணச் சிறுவன் சிவசருமன் பற்றியும் இங்கு தெரிந்து கொள்வது பொருத்தமாக இருக்கும். விரிஞ்சிபுரத்து ஈசன் மார்க்கபந்தீச்வரர், அம்பாள் மரகதாம்பிகை. 1300 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்தத் திருத்தலம் வேலூருக்கு அருகில் இருக்கிறது. இவ்வூரின் தலபுராணத்தின் படி படைப்புக் கடவுளான பிரம்மா இங்கு சிவபூஜை செய்யும் சிவாச்சாரியார் குடும்பத்தில் சிவசர்மனாகப் பிறந்தார். சிவசர்மன் உபநயனம் செய்யப்படாத குழந்தையாக இருந்த போதே அவனுடைய தந்தையார் இறந்து போனார். விரிஞ்சிபுர ஆலயத்திலுள்ள சிவனுக்கு பூஜை செய்யும் கடமை இந்த சிறுவனுக்கு வந்தது. ஆனால் உபநயனம் (பூணூல் அணிதல்) நடந்தால்தான் பூஜை செய்ய முடியும். இறந்து போன சிவாச்சாரியாரின் உறவினர்களுக்கு அவர் விட்டுச் சென்றிருக்கிற நிலம் மற்றும் பூஜை செய்யும் உரிமை அனைத்தையும் பிடுங்கிக் கொள்ள வேண்டுமென்கிற எண்ணம். அதனால் சிறுவன் சிவசர்மனிடம் உன் முறை வரும்போது நீ போய் பூஜை செய்யவில்லையானால் அந்த உரிமை எங்களுக்கு வந்துவிடும். நிலத்தையும் நாங்கள் பிடுங்கிக் கொள்வோம் என்றனர். சிவசர்மாவின் தாய் இறைவன் மார்க்கபந்தீச்வரரிடம் வேண்டிக் கொண்டார் வழிகாட்டு என்று. கார்த்திகை மாதத்தில் கடைசி சனிக்கிழமை இறைவன் அந்த அன்னையின் கனவில் தோன்றி சிறுவனை பூஜை செய்ய அனுப்பும்படி சொல்லி ஆசி வழங்கினார். மறு நாள் சிவசர்மன் பிரம்ம தீர்த்தத்தில் ஸ்நானம் செய்து கொண்டிருந்த போது சிவபெருமான் ஒரு கிழவர் வேடத்தில் வந்து அவனுக்கு பூணூல் அணிவித்து உபநயனம் செய்வித்து பிரம்மோபதேசம் எனும் காயத்ரி மந்திர உபதேசம் செய்து வைத்தார். அதோடு சிவனுக்கு பூஜை செய்யும் உரிமையுள்ள சிவதீட்சையையும் வழங்கினார். பின்னர் கிழவர் மறைந்து சென்றார். சிறுவன் பிரம்ம தீர்த்தத்திலிருந்து புனித நீரை குடத்தில் எடுத்துக் கொண்டு ஒரு யானை மீதேறி கோயிலுக்கு வர அங்கு கூடியிருந்தோர் அதிசயித்துப் போக, கோயில் கதவு தானாகத் திறந்து கொண்டது. ஏதோ காலம் காலமாக பூஜை செய்து வந்த அனுபவசாலியைப் போல அந்தச் சிறுவன் முதலில் சுவர்ண கணபதிக்கு அபிஷேக ஆராதனைகளைச் செய்தான். அடுத்து பூஜை செய்ய சிவனிடம் சென்றால் அவனால் சிவனுடைய தலையை எட்ட முடியவில்லை. இறைவா! உன் தலையில் புனிதநீர் ஊற்றி அபிஷேகம் செய்ய எனக்கு உயரம் எட்டவில்லையே என்ன செய்வேன் என்று வேண்ட, சிவன் தன் தலைமுடியைத் தாழ்த்தி குனிந்து கொடுத்து அவன் பூஜை செய்ய வசதியாக நின்றார். இன்றும் அங்கு சிவன் சற்று குனிந்த நிலையில் இருப்பார். இங்கு பட்டினத்தார் இதைக் குறிப்பிட்டு அன்று அந்தச் சிறுவனுக்காக உன் உடல், கை மழு, மான், கழுத்து மாலை அனைத்தும் தாழக் குனிந்தாயே என்கிறார்.

இல்லம் துறந்து பசி வந்தபோது அங்கு இரந்து தின்று
பல்லும் கறையற்று வெள்வாயுமாய் ஒன்றில் பற்றுமின்றிச்
சொல்லும் பொருளும் இழந்து சுகானந்தத் தூக்கத்திலே
அல்லும் பகலும் இருப்பதென்றோ கயிலாயத்தனே. 2.

வீடு, வாசல், மனைவி மக்கள் அனைத்தையும் நீங்கி வெளியேறி, பசி எடுத்தால் பிச்சை எடுத்து உண்டு, இல்லறத்தில் உணவு அருந்தியபின் தாம்பூலம் போட்டு பற்கள் கறையாகி விடுமே, அதுபோல அல்லாமல் கறையற்ற பல்லோடு வெளுத்த வாயோடும், எதிலும் பற்று இல்லாமலும், சொற்களை நீக்கி மவுன நிலை அடைந்து, எனக்கென பொருள் எதுவை இல்லாமல் சுகானந்த அனுபவத்தில் இரவு என்ன, பகல் என்ன என்று எப்போதும் யோக நித்திரையில் இருக்கும் நாள் என்றோ கயிலையில் அமர்ந்த கோவே.

சினந்தனை அற்றுப் பிரியமும் தானற்றுச் செய்கை அற்று
நினைந்தது அற்று நினையாமையும் அற்று நிர்ச்சிந்தனாய்த்
தனந்தனியே இருந்து ஆனந்த நித்திரை தங்குகின்ற
வனந்தனில் என்று இருப்பேன் அத்தனே கயிலாயத்தனே. 3.

இயல்பிலே உள்ளத்தில் அமைந்த கோபத்தை அறவே நீக்கி; ஆசையை அகற்றி; செய்கைகள் அனைத்தையும் துறந்து; இதுவரை மனதில் சேர்த்து வைத்திருந்த நினைவுகளையெல்லாம் நீக்கிவிட்டு; மறந்து விடுதல் என்பதையும் மறந்துவிட்டு; வெறுமையான மனத்தினனாய்த் தன்னந்தனியானாய் அமர்ந்து சிவசிந்தனையோடு எப்போதும் இருப்பது எப்போது ஐயனே கயிலாயத்தமர்ந்த கோவே.

கையார வேற்று நின்று அங்ஙனந் தின்று கரித்துணியைத்
தையாது உடுத்து நின் சந்நிதிக்கே வந்து சந்ததமும்
மெய்யார நிற்பணிந்து உள்ளே உரோமம் விதிர்விதிர்ப்ப
ஐயாவென்று ஓலமிடுவதென்றோ கயிலாயத்தனே. 4.

கை நிறைய பிச்சை ஏற்று, வாங்கிய இடத்திலேயே அதை உட்கொண்டு, கரிபடிந்த துணியைத் தைக்காமல் உடுத்துக் கொண்டு உன்னுடைய சந்நிதிக்கு வந்து சதாகாலமும் மனதில் உன்னை எண்ணிப் பணிந்து, உடலில் மயிர்க்கால்கள் அனைத்தும் குத்திட்டு நிற்க ‘ஐயா’ என்று உரத்தக் குரலெடுத்து உன்னைப் பார்த்து ஓலமிடுவது என்னாளோ, கயிலையில் அமர்ந்த பெம்மானே.

நீறார்ந்த மேனி உரோமஞ் சிலிர்த்து உளம் நெக்குநெக்கு
சேறாய்க் கசிந்து கசிந்தே உருகி நின் சீரடிக்கே
மாறாத் தியானம் முற்றானந்த மேற்கொண்டு மார்பில் கண்ணீர்
ஆறாய்ப் பெருகக் கிடப்பதென்றோ கயிலாயத்தனே. 5.

உடலெங்கும் திருநீறணிந்து, உன்னை எண்ணி மயிர்க்கால்கள் குத்திட்டு, உள்ளமோ உன்னை நினைந்து நெக்குருகி சேறு போல கனிந்து, உன் சேவடித் தாமரைகளை மனதில் எண்ணி எப்போதும் தியானம் செய்து, கண்களில் பெருகி வரும் கண்ணீரால் மார்பு நனையக் கிடப்பது என்னாளோ, கயிலைமலை வாழ் சிவபெருமானே.

செல்வரைப் பின் சென்று சங்கடம் பேசித் தினந்தினமும்
பல்லினைக் காட்டிப் பரிதவியாமற் பரானந்தத்தின்
எல்லையில் புக்கிட ஏகாந்தமாயெனக் காமிடத்தே
அல்லல் அற்று என்று இருப்பேன் அத்தனே கயிலாயத்தனே. 6.

செல்வம் படைத்த சீமான்களைத் தேடிப்போய் என் துயரங்களையெல்லாம் சொல்லி, பற்களைக் காட்டிக் கெஞ்சி பரிதவித்து நிற்காமல், பரானந்தமாம் சிவானந்தத்தின் எல்லைக்குக் கொண்டு சென்று, ஏகாந்தமாகத் துன்பங்கள் எதையும் அண்டவிடாமல் இருக்க அருள் செய்திடுவாய் அத்தனே, கயிலாயம் அமர்ந்த பெருமானே.

மந்திக் குருளை யொத்தேனில்லை நாயேன் வழக்கறிந்தும்
சிந்திக்கும் சிந்தையை யான் என்செய்வேன் எனைத்தீது அகற்றி
புந்திப் பரிவிற் குருளையை ஏந்திய பூசையைப் போல்
எந்தைக்கு உரியவன் காணத்தனே கயிலாயத்தனே. 7.

குட்டிபோட்ட குரங்கு தன் குட்டியை எடுப்பதில்லை, அந்த குட்டியே தாயின் வயிற்றைக் கவ்விக் கொள்ளும் (மர்க்கட நியாயம்) போல நான் உன்னைக் கவ்விக் கொள்ளவில்லை, நாயினும் கேவலமான நான் நிலைமைகளை அறிந்திருந்தும் உன்னைச் சிந்திக்காமல் இருக்கும் என்னுடைய சிந்தையை என்னவென்று சொல்வேன்; என் உள்ளம் புகுந்த கள்ளத்தை நீக்கி பூனை எப்படித் தன் குட்டியைக் கவ்விக் கொண்டு போகுமோ அதுபோல (மார்ச்சால நியாயப்படி) நீ என்னை கவ்விக் காத்திட வேண்டும் தந்தையே, கயிலை நாயகனே.

வருந்தேன் பிறந்தும் இறந்தும் மயக்கும் புலன்வழி போய்ப்
பொருந்தேன் நரகிற் புகுகின்றிலேன் புகழ்வாரிடத்தில்
இருந்தேன் இனியவர் கூட்டம் விடேன் இயல் அஞ்செழுத்தாம்
அருந்தேன் அருந்துவன் நின்னருளால் கயிலாயத்தனே. 8.

திருக்கயிலாயம் அமர்ந்த சிவபெருமானே! இனி நான் பிறந்தும் பின் இறந்தும் இப்படி துன்பப்படமாட்டேன், ஐம்புலன்களின் மயக்கத்தால் அவை காட்டும் திசை நோக்கிப் போய் எச்செயலிலும் ஈடுபட்டுத் துன்புறமாட்டேன்; பாபக் குழியெனும் நரகத்தில் விழமாட்டேன், காரணம் நான் நின் அடியவர் கூட்டத்தில் சேர்ந்திருக்கிறேன், அந்த அடியார் திருக்கூட்டத்தை எந்த காரணத்தினாலும் விட்டு விலகமாட்டேன், இனிய தேனின் சுவையுடைய உன் ஐந்தெழுத்தாம் ‘சிவாயநம’ எனும் மந்திரத்தை அருந்திக் கிடப்பேன்.

மதுரை:
விடப்படுமோ இப்பிரபஞ்ச வாழ்க்கையை விட்டு மனம்
திடப்படுமோ நின்னருள் இன்றியே தினமே அலையக்
கடப்படுமோ அற்பர் வாயிலிற் சென்று கண்ணீர் ததும்பிப்
படப்படுமோ சொக்கநாதா! சவுந்தரபாண்டியனே. 9.

மதுரை வாழ் சோமசுந்தரா! சவுந்தரபாண்டியனே! இப்பூவுலக வாழ்க்கையில் காணுகின்ற அனைத்து இன்பங்களையும் விட்டு நீங்கிவிடமுடியுமா; அப்படி விட்டு விலகிவிட மனம்தான் துணிந்து திடப்படுமோ; அப்படியின்றி தினம்தினம் அதனைச் சாராமல் இருக்கத்தான் முடியுமா; மனம் சலனப்பட்டு அங்குமிங்குமா அலைக்கப்படுமோ; அற்பர்கள் வீட்டு வாயிலில் சென்று கண்களில் நீர் சோர நின்று மனவருத்தம் பட இயலுமோ, நின் அருள் கிடைக்காதவரை அவை இயலாது.

(இன்னும் வரும்)

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க