Featuredஇலக்கியம்பத்திகள்

அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 15 – ப்ரான்ஸ்

சுபாஷிணி ட்ரெம்மல்

மட்ரிட் நகரிலிருந்து புறப்பட்டு வெகு தூரமான ஒரு நாட்டிற்கு நாம் இப்போது செல்லப்போவதில்லை. ஸ்பெயினின் எல்லை நாடான ப்ரான்ஸுக்குத் தான் உங்களை அழைத்துச் செல்லப் போகின்றேன். 🙂

ப்ரான்ஸில் இருக்கும் அருங்காட்சியகங்கள் அனைத்தையும் பார்ப்பதென்றால் அதற்கு நமக்கு ஒரு வருடம் கூட ஆகலாம். அவ்வளவு அருங்காட்சியகங்கள் நிறைந்த ஒரு நாடு ப்ரான்ஸ். ப்ரான்ஸின் குறிப்பிடத்தக்க வகையில் அமைந்திருக்கும் நகரங்களான ஆவியோன், லியோன், நீட்ஸா, தூலூஸ், காண்ட், க்ராஸ், தலநகரமான பாரிஸ் என இந்த நகரங்களெல்லாம் வரலாற்று பழமை வாய்ந்த  நகரங்கள். ஐரோப்பாவின் முழுமைக்கும் ப்ரெஞ்சு  தாக்கம் என்பது மிக விரிவானது. ஐரோப்பாவுடன் நின்று விடாமல் ஆப்பிரிக்க, அமெரிக்க கண்டம் வரை தனது ஆளுமையை விரிவாக்கியது ப்ரான்ஸ்.

paris3

ப்ரான்ஸ் என்றதுமே பலருக்கும் அறிமுகமாக மனதில் தோன்றுவது பாரிஸ் நகரம் தான். பாரிஸின் பெயரைக் கேட்டதுமே ப்ரமாண்ட கட்டிடங்களும், புதுமை உலகமும், கேளிக்கைகள் நிரம்பிய சொர்க்கபுரி என்பதுமாக நமது மனம் கற்பனையில் சிறகடிக்கும். இந்த தோற்றத்தின் இடையே பாரிஸின் உண்மையான வரலாற்று முகம் மறைந்தும் கூட போகலாம். ஆனால் ஒரு வகையில் பாரிஸை விட்டு தூரம் சென்று ப்ரான்ஸின் ஏனைய பகுதிகளுக்குச் சென்றோமேயானால் ப்ரான்ஸின் விரிவான அறிமுகத்தை நாம் நன்கு பெற முடியும். பாரிஸின் தற்போதைய சூழலில் அதன் பண்டைய வரலாற்று சிறப்புக்களையும் விட இன்றைய பொருளாதார சூழல், அதனால் மக்கள் நிறைந்து வழியும் இந்த நகரத்தின் சீர்குலையும் நிலை தான் பெரும்பாலும் கண்களுக்குத் தென்படுவதாக இருக்கின்றது. பாரிஸை பார்த்து விட்டு இது தான் ப்ரான்ஸ் என நம்பிக் கொண்டிருந்தோமேயானால் உண்மையான ப்ரான்ஸின் முழு வடிவத்தை நாம் அறிந்து கொள்ளவே முடியாது என்பதை ப்ரான்ஸின் ஏனைய இடங்களுக்குச் சென்று பார்த்து வரும் வாய்ப்பு அமைந்தமையினால் நான் நேரடியாக அதனை உணரும் வாய்ப்பு பெற்று அறிந்து கொண்டேன். இதனால் ஓரளவிற்கு ப்ரான்ஸ் அதன் பண்டைய சிறப்புக்களும், பொருளாதார வளமும், மக்களின் வாழ்வியலும் என்ற ரீதியில் எனக்கு ஓரளவு அறிமுகமாக அமைந்தது எனச் சொல்லலாம்.

ஐரோப்பாவிற்கு நான் வந்த ஆரம்ப காலகட்டத்தில், அதாவது 1999ம் ஆண்டு வாக்கில் ஜெர்மனியில் தமிழ் இலக்கிய சந்திப்புக்களின் போது எனக்கு அறிமுகமான, பாரிஸில் இருந்த சில நண்பர்களின் அறிமுகம் ஏற்பட்டது. அந்த வகையில் திரு.அரவிந்தன்,  மறைந்த திரு.புஷ்பராஜா, மறைந்த திரு.கலைச்செல்வன் ஆகியோரையும் ஏனைய சில நண்பர்களையும் சந்திக்க என் நான் சில முறை பாரிஸ் சென்று வந்துள்ளேன். இலக்கிய சந்திப்புக்களில் கலந்து கொள்ளவும் ஒரு முறை தமிழ் பெண்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் உரையாற்றவும் சென்று வந்திருக்கின்றேன். பாரிஸின் சரவணபவனில் இந்திய உணவை சுவைத்ததும் மறு நாள் வரை எனது குளிர் ஜாக்கெட் எல்லாம் இந்திய உணவின் வாசனை நிறைந்து இருந்ததும் கூட இன்னமும் மனதில் பசுமையாக இருக்கின்றது.

paris5பாரிஸ் – லா செப்பல் வீதியில் (2010)

மற்றொரு முறை, 2002ம் ஆண்டு வாக்கில், எனது கார் விபத்துக்குள்ளாகிவிட ஜெர்மனியில் அதனை ஓப்பல் விற்பனையாளரிடம் கொடுத்து சரி செய்வதை விட பாரிஸில் பாதி குறைந்த விலையில் சீராக்கலாம் என நண்பர் புஷ்பராஜா சொல்ல 500கிமீ தூரம் பாரிஸுக்கு காரை ஓட்டிச் சென்று காரை சரி செய்து விட்டு தமிழ் நண்பர்களையும் சந்தித்து விட்டு வந்தேன். அப்படி செல்லும் போது அந்த நண்பர்களின் துணையுடன் எனக்கு பாரிஸ் கொஞ்சம் அறிமுகமானது. அப்போது பாரிஸில் தமிழர்கள் நிறைந்திருக்கும் வணிகப்பகுதியான லா செப்பல் பகுதியில் தமிழ்க்கடைகளையெல்லாம் பார்த்து வியந்து போயிருக்கின்றேன். தமிழ்க்கடைகளில் கிடைக்கும் கொத்து ரொட்டி, தோசை என சாப்பிட்டு மகிழ்ந்திருக்கின்றேன். அதன் பின்னர் பல முறை எனது தொழில் சார்ந்த பயணங்களாக பாரிஸுக்கும், க்ரனோபலுக்கும் செல்வது ஏற்பட்டது. அத்தகைய பயணங்களில் நான் பாரிஸில் சில அருங்காட்சியகங்களைக் காணும் வாய்ப்பு பெற்றேன்.

paris4

பாரிஸ் க்ரனோபல் என்ற இரண்டு நகரங்களைப் பார்த்த எனக்கு ப்ரான்ஸை ஓரளவு அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் ஏற்பட நானும் என் கணவருமாக 2009ம் ஆண்டில் 18 நாள் விடுமுறை எடுத்துக் கொண்டு வாகனத்திலே பயணம் செய்தோம். இந்த பயணத்தின் போது ஜெர்மனியின் ஸ்டுட்கார்ட்டிலிருந்து புறப்பட்டு ஃப்ரைபுர்க் வந்து அங்கிருந்து பெசன்சோன் வந்து அங்கு இரண்டு நாட்கள் தங்கிச் சுற்றிப் பார்த்து பின்னர் அங்கிருந்து புறப்பட்டு லியோன் வந்து அங்கு சில நாட்கள் இருந்து பின்னர் மார்செல் வந்து அங்கே செய்ண்ட் ராஃபெல்லில் தங்கியிருந்து பின்னர் அங்கிருந்து புறப்பட்டு நைஸ் நகரம் வந்து  பின்னர் மோனாக்கோ சென்று பின்னர் மீண்டும் திரும்பி கான்ஸ் வந்து அங்கு சில நாட்கள் இருந்து பின்னர் ஆவியோனில் சில நாட்கள் என இருந்து திரும்பினோம். ஏறக்குறைய 2300கிமீ தூரம் வாகனப் பயணம் நானும் என கணவருமாக வாகனத்தை ஓட்டிக் கொண்டு இந்தப் பயணத்தை மேற்கொண்டோம். ப்ரான்ஸின் ஒரு சில நகரங்களை மட்டுமே இந்த பயணத்தின் போது பார்க்க முடிந்தது. ஒரு சில முக்கிய இடங்களுக்கு மட்டுமே சென்று அருங்காட்சியகங்கள் சென்று புதிய விஷயங்களை அறிந்து வர முடிந்தது.  மீண்டும் ஒரு முறை இதே போல ஆனால் இதுவரை செல்லாத ஏனைய நகரங்களையும் சென்று பார்த்து வர வேண்டும் என்ற என்ணமும் மனதில் ஓடிக் கொண்டுதானிருக்கின்றது. இந்த பயணத்தின் போது நான் அறிந்து கொண்ட புதிய விஷயங்கள் ஏராளம் ஏராளம். அவையெல்லாம் வாய்ப்பு கிட்டும் போது தகுந்த பதிவுகளின் வழி பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற என்ணம் மனதில் இருக்கவே செய்கின்றது. ப்ரான்ஸின் ஒவ்வொரு நகரமும் தனிச்சிறப்புடனும் பிரமாண்டத்துடனும் தனித்துவத்துடன் விளங்குவது உண்மை.

 paris2

ஸ்பெயினில் உள்ள அருங்காட்சியகங்களின் என்ணிக்கையை விட ப்ரான்ஸில் மிக அதிகம் என்று நிச்சயம் கூறுவேன். பாரிஸ் நகரில் மட்டுமே உள்ள அருங்காட்சியகங்களின் பட்டியல் ஒன்று இங்கே 150 அருங்காட்சியகங்கள் இருப்பதாக பட்டிபலிட்டிருக்கின்றது (http://en.wikipedia.org/wiki/List_of_museums_in_Paris ).  இவை ஒவ்வொன்றையும் சென்று காண என் வாழ்க்கை நிலை இடம் அளிக்காது என்றாலும் சில பாரிஸிலுள்ள குறிப்பிடத்தக்க அருங்காட்சியகங்கள் சிலவற்றிற்குச் சென்று வந்திருக்கின்றேன். அவற்றில் சிலவற்றை இத்தொடரில் அறிமுகப்படுத்துவதும் வாசகர்களாகிய உங்களுக்கு சுவாரஸியமாக இருக்கலாம் என்ற எண்ணத்தில் பாரிஸில் உள்ள ஒரு அருங்காட்சியகத்திற்கு அடுத்து உங்களை அழைத்துச் செல்லலாம் என நினைக்கின்றேன்.

எந்த அருங்காட்சியகம் செல்லப்போகின்றோம் என்பது அடுத்த வாரம் வரை சஸ்பென்ஸ் 🙂

Print Friendly, PDF & Email
Download PDF
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க