3 BHK – திரை விமர்சனம்

அண்ணாகண்ணன்
3 BHK திரைப்படத்தை இன்று பார்த்தேன். படத்தின் தொடக்கத்தில் காசா கிராண்டு நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார்கள். இது வழக்கமானது தானே என்று நினைத்தால், இந்த ஒட்டுமொத்தப் படமும் காசா கிராண்டுக்கும் அது போன்ற இதர ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கும் மிகப் பெரிய விளம்பரப் படமாக அமைந்துள்ளது.
வீடு வாங்க ஆசைப்படுபவர்களுக்கான எல்லாத் தூண்டில்களும் வலைகளும் சரியாக வீசப்பட்டுள்ளன. வாடகை வீட்டில் உள்ள சிக்கல்களை அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார்கள். அதில் உள்ள கட்டுப்பாடுகள், போதாமைகள், சிக்கல்கள் அனைத்தும் விரிவாகப் பேசப்பட்டுள்ளன. தண்ணீரை அளவாகப் பயன்படுத்த வேண்டும் என்பது தொடங்கி, மழைக் காலத்தில் வீட்டில் தண்ணீர் புகுந்துவிடுவது வரை. இதற்கு ஒரே தீர்வு, சொந்த வீடு வாங்க வேண்டும் (சொந்த வீட்டுக்குள்ளும் வெள்ளம் புகுந்துள்ளது என்பது தனிக்கதை).
சொந்த வீடு வாங்குவோருக்கான அடுத்த தூண்டில், இந்த இடம் பெரிய அளவில் வளரும். உங்கள் முதலீடு பல மடங்கு உயரும் என்பது. இதைப் படிப்படியாகப் படத்தில் காட்டுகிறார்கள். 2006க்கு முன்பு ஏழரை லட்ச வீடு, பிறகு பதினைந்து லட்சமாகி, அது பிறகு இருபத்தைந்து லட்சமாக உயருகிறது. இப்போது எவ்வளவு லட்சம் என்பதைச் சொல்லாமல் விட்டிருக்கிறார்கள். வாடிக்கையாளர்களை மனத்தளவில் இந்த விலைக்குத் தயார் செய்வதற்கு இந்த முந்தைய விலை விவரம் உதவுகிறது.
கடன் வாங்காமல் வீடு வாங்க முடியாது என்பது படத்தின் அடுத்த மையக் கருத்து. இது வசனமாகவே வருகிறது. எனவே கடன் வாங்கத் தயங்குபவர்களை அதிலிருந்து வெளிவந்து கடன் வாங்கத் தூண்டுகிறார்கள்.
வீட்டுக் கடனுக்கு ஒப்புதல் கிடைத்திருக்கிறது என்பதை ஏதோ பெரிய வெற்றி என்பதைப் போல், பல முறைகள், பல காட்சிகளில் காட்டுகிறார்கள். வீட்டுக் கடன் அளிப்பவர்கள், உரிய சான்றுகள் இருந்தால் மட்டுமே அளிப்பார்கள். இது முழுவதும் வணிகம். இதில் குடும்பக் கண்ணீருக்கு எல்லாம் இடமில்லை. வருவாய்ச் சான்று உள்பட வங்கி கேட்கும் சான்றுகள் உங்களிடம் இருந்தால் கடன் கிடைக்கும். இல்லை என்றால் இல்லை. இதற்கு எல்லாம் ரொம்ப உணர்ச்சிவசப்படக் கூடாது. இப்போது நிலையான வருவாய் இல்லாவிட்டாலும், அதிக வட்டிக்கு வீட்டுக் கடன் கொடுக்கப் பலர் இருக்கிறார்கள். அவர்களின் குறி, வட்டி வருவாய் தான். அப்படியே உங்களால் கடன் கொடுக்க முடியாவிட்டால், வீட்டை ஜப்தி செய்து ஏலம் விட்டுவிடுவார்கள். எனவே, வீட்டுக் கடனால் வங்கிகளுக்கோ நிதி நிறுவனங்களுக்கோ பெரிய இழப்பு எதுவும் கிடையாது; லாபமே அதிகம்.
சொந்த வீடு வாங்க நினைப்பவர்கள், புறநகரில், சற்று தூரத்தில், சிறு நகரங்களில், கிராமங்களில் மனையாக வாங்கி வீடு கட்டலாம்; தனி வீடும் வாங்கலாம். இந்த வாய்ப்புகளைப் பற்றி சிறிதும் யோசிக்காமல் அடுக்குமாடி வீட்டை மட்டுமே தேர்ந்தெடுக்குமாறு காட்சிகள் அமைந்துள்ளன. இது அடுக்குமாடி நிறுவனங்களுக்கே சாதகமானது.
படத்தின் நிறைவுக் காட்சியில், சித்தார்த் வாங்கும் சொந்த வீடும் காசா கிராண்டு வீடாக இருப்பது தற்செயலானது இல்லை.
அந்த வீட்டைப் பார்க்க வரும் வீட்டுத் தரகர் யோகி பாபு அதன் சுவரைத் தடவிப் பார்த்து, தரமாகத்தான் கட்டியிருக்கிறார்கள், உங்கள் அப்பாவைப் போல என்று சொல்வதும் தற்செயலானது இல்லை.
படம் பார்க்கும் ரசிகர்களை வாடிக்கையாளர்களாக மாற்றும் உள்நோக்கத்துடன் இந்தப் படத்தை இயக்கி, தயாரித்திருக்கிறார்கள். இதற்குள் கச்சிதமான குடும்பக் கதையை, அதன் உணர்ச்சிகரமான தருணங்களோடு, ஆசைகளோடு கனவுகளோடு காட்சிப்படுத்தி இருப்பது இயக்குநரின் சாமர்த்தியம்.
படத்தில் நடித்துள்ள சரத்குமார், தேவயானி, சித்தார்த் உள்பட அனைவரும் இது விளம்பரப் படம் இல்லை; உண்மையான கதை என்ற உணர்வை ஏற்படுத்தும் படியாகவே நடித்திருக்கிறார்கள்.
அடுக்குமாடி வீட்டின் சிக்கல்களை, வீட்டுக் கடன் வாங்குவதன் சிக்கல்களை இன்னொருவர் இன்னொரு படமாகத் தயாரிக்கலாம்.