நற்றமிழின் காவலன் இற்றைத் திங்களின் நாயகன் – அ.கி. பரந்தாமனார்

முனைவர் நா. சியாமளா
உதவிப் பேராசிரியர் , தமிழ்த்துறை
குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி
சரவணம்பட்டி, கோயம்புத்தூர்-35.
அன்றாட நடைமுறையில் பயன்படும் மொழியை அடிப்படையாகக் கொண்டு தமிழ் இலக்கணத்தைப் புதிய தமிழுக்கு இலக்கணமாக்கிக் காட்டியவர். மாணவர்கள் செய்யும் இலக்கணப் பிழைகளைத் தன் எழுதுகோல் கொண்டு வேரோடு களைந்தவர். நாளிதழ்கள் மாத இதழ்களைக் களங்களாகக் கொண்டு அதில் இடம்பெறும் தவறுகளையும் அதன் திருத்தங்களையும் சுட்டிக்காட்டி திருத்தி தமிழின் நிலையை உயர்த்திப் பிடித்தவர். நல்ல தமிழ் எழுத வேண்டுமா? என்று யாரேனும் நம்மைப் பார்த்துக் கேட்டாலே தமிழ்ப் பெருமகனார் அ.கி. பரந்தாமனாரின் நினைவு வராத மனிதர்கள் யாரும் இருக்க முடியாது . பள்ளி கல்லூரி நாள்களிலேயே தனி இதழ்களில் கவிதை எழுதி வெளியிட்டவர். பள்ளி கல்லூரிகளில் சரித்திரத்தை விரும்பிப் பாடமாகப் படித்தவர். திராவிட இந்தியா என்னும் புகழ்பெற்ற நூலின் ஆசிரியர் டி. ஆர் .சேஷய்யங்காரும் ஸ்ரீனிவாச்சாரியாரும்அ.கி.ப விற்குப் பேராசிரியர்களாக இருந்தவர்கள். அவர்கள் அன்று ஊட்டிய தமிழ்ப்பற்று தான் மதுரை நாயக்கர் வரலாற்றையும் தலைசிறந்த பாண்டிய மன்னர்களின் வரலாற்றையும் எழுதுவதற்குத் தூண்டுதலாக அமைந்தது என்று அ.கி.ப கூறுவார். மதுரைத் திருவள்ளுவர் கழகத்தில் வாரம் தோறும் மதுரை நாயக்கர் வரலாறு பற்றித் தொடர் சொற்பொழிவாற்றுவார் .ஆங்கிலப் பெரும் புலவர் கிப்பன் எழுதிய ரோமன் நாட்டு வரலாற்றை ஒட்டியே மதுரை நாயக்கர் வரலாற்று நூலை அவர் உருவாக்கியுள்ளார். தான் இயற்றிய நூல்களுள் இந்நூலையே சிறப்பானதாகக் கருதினார். தமிழ்நாடு ஞாயிறு மலரில் வாழ்க்கைக் கலை, பேச்சுக்கலை, தலைசிறந்த பாண்டிய மன்னர்களின் வரலாறு பற்றியும் சிறுவர் பாடல்களைக் கீரன் என்னும் புனைபெயரிலும் எழுதியவர்.
இவரது மணி விழாவை மதுரை திருவள்ளுவர் கழகம் சிறப்பாகக் கொண்டாடியது .அவ் விழாவின்பொழுது எழுத்தாளர் மன்றத்தினர் இவருக்குப் பைந்தமிழ்ப் பாவலர் என்ற பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தனர். பாடநூல்களிலும் மற்ற இதழ்களிலும் மாணவர்களுக்காக இவர் எழுதிய சிறுவர் பாடல்கள் அனைத்தும் தொகுக்கப்பட்டு எங்கள் தோட்டம் என்ற நூலாக வெளிவந்தது. இந்த நூல் நடுவண் அரசின் சிறுவர் இலக்கியப் பரிசினை வென்றது. இந்தச் செய்தியை வானொலி வாயிலாக மதுரை தியாகராசர் கல்லூரியின் அந்நாள் முதல்வர் சிதம்பரநாதன் அவர்கள் கேட்டவுடன் அன்று மாலையே கல்லூரி வளாகத்தில் அ. கி. பரந்தாமன் அவர்களுக்குப் பாராட்டு விழாவை நடத்தினார். இருள் சூழ்ந்து ஊர் அடங்கி அமைதியாக இருக்கும் பொழுது தான் இவரது எழுதுகோலும் எண்ண அலைகளும் எழுந்து நின்று ஆர்ப்பரிக்குமாம். தான் எழுதும் கட்டுரைகளில் முழு திருப்தி ஏற்பட்டால்தான் அதை அவர் நூலாகக் கொண்டு வருவாராம். புரட்சிக் கவிஞர்கள் என்ற தலைப்பில் அவர் எழுதிய கட்டுரைத் தொகுப்பினை அவர் வெளியிடவில்லை. ஏனெனில் அவர் மனம் நிறைவடையும் வகையில் அதனை விரித்து எழுத வேண்டும் என்று அவர் நினைத்திருந்ததாகவும் அதைச் செய்வதற்கான சூழல் அமையாததாலும் வெளியிட இயலவில்லை. தான் எழுதிய கவிதை நூலை மகாவித்வான் வேணுகோபாலப் பிள்ளை அவர்களிடம் மேற்பார்வைக்காகக் கொடுப்பார் .தான் எழுதிய நூல்கள் பிழையில்லாமல் வெளிவர வேண்டும் என்பதில் மிகுந்த கவனம் செலுத்துவார். நல்ல தமிழ் எழுத வேண்டுமா? என்கின்ற தனது நூலுக்கு கூடுதலாக இரு தமிழறிஞர்களை மேற்பார்வையிடச் செய்து பிழையின்றி வெளிவர ஏற்பாடு செய்தார். தான் எழுதும் நூல்களுக்கு தாமே முதலீடு செய்து அதை அச்சில் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டார் .அவ்வமயம் மலர் நிலையம் பதிப்பகத்தார் தாங்களாகவே முன்வந்து அவர் நூல்களை விற்றுத் தர உரிமை கோரினர். அ.கி. பரந்தாமனாரும் அதற்கு உடன்பட்டு ஒப்புதல் அளித்தார். இவ்வாறு அவரது பல நூல்கள் வெளியாகிக் கொண்டிருந்த சமயத்தில் சில ஆண்டுகளுக்குப் பிறகு மலர் நிலையத்தார் விற்பனை செய்த நூல்களுக்கு உரிய தொகையைக் கொடுக்காததால் அதிக பொருள் இழப்பிற்கு ஆளானார் அ.கி.ப. உடனே சற்றும் யோசிக்காமல் அந்தப் பதிப்பகத்தார் மீது வழக்கு தொடர்ந்து வெற்றியும் பெற்றார். ஆயினும் ஓரளவு தான் பணம் கிடைத்தது. அந்தப் பணமும் வழக்கு நடத்தும் செலவுகளுக்குத் தான் பயன்பட்டது. ஓர் எழுத்தாளன் அதுவும் ஒரு தமிழ்ப் பேராசான் பதிப்பகத்தார் மீது வழக்கு தொடுத்து வெற்றி பெற்றது எழுத்துலகில் அன்று வியப்பான செய்தியாக அமைந்தது. மதுரைத் தியாகராசர் கல்லூரியில் இவர் பணியாற்றியபோது விடுதிக் காவலராகவும் இருந்தார். மாணவர்களுடைய அன்பைப் பெற்றிருந்ததால் அவர் பல ஆண்டுகள் விடுதிக் காவலராகப் பணியாற்ற முடிந்தது. எந்த ஒரு செருக்கும் இல்லாமல் இயல்பாக எப்பணியையும் மனமுவந்து செய்து முடிக்கக்கூடிய வல்லமைக் குணம் அவரிடம் இயல்பாகவே குடியிருந்தது. அ.கி. பரந்தாமன் ஓய்வு பெற்ற போது அவரது மாணவர்கள் மதுரை விளக்குத் தூணில் இருந்து தியாகராசர் கல்லூரி வரை மேளதாளத்துடன் அவரை ஊர்வலமாக அழைத்து வந்தார்கள். கல்லூரியில் விடைபெறும் விழாவைச் சிறப்பாக நடத்தி பணமுடிப்பும் கொடுத்தார்கள். இவையெல்லாம் மாணவர்கள் அவர் மீது அன்பு மழை பொழிந்ததற்கான அடையாளங்கள். தமிழக அரசு தஞ்சாவூரில் தமிழ்ப் பல்கலைக்கழகம் நிறுவிய போது அவருக்குத் திரு. வி. க விருதும் பொற்கிழியும் வழங்கிக் கௌரவித்தது.அ.கி.ப சிறந்த இலக்கிய இலக்கண நூலாசிரியர்; எழுத்தாளர்; பேச்சாளர்; கவிஞர்; சிறுவர் பாடல் ஆசிரியர் ; அதையும் தாண்டி மனித நேயம் மிக்க பண்பாளர். எங்கெல்லாம் நல்ல தமிழ் ஒலிக்கிறதோ அங்கெல்லாம் அ.கி. பரந்தாமனாரின் உள்ளம் வாழ்த்து மழை பொழிந்து கொண்டே இருக்கும். தமிழுக்காய் வாழ்ந்த தலைமகனை அவர் பிறந்த சூலைத் திங்களிதழ் தன் மடியில் வைத்துத் தாலாட்டி மகிழ்வதில் பெருமை கொள்கிறது.
இலக்கியம் போற்றும் இனிய மனிதர் விரும்பிய
இலக்கினை நோக்கிப் பயணப்படுவோம்!