இந்த வார வல்லமையாளர்!
ஜூன் 9, 2014
சென்ற திங்கள் முதல் ஞாயிறு வரையிலான காலகட்டத்தில் தம் ஆற்றலைச் சிறப்புற வெளிப்படுத்தி வல்லமை இதழின் அன்பர்கள் குழுவின் கவனத்தைக் கவர்ந்ததன் காரணமாகத் தேர்வு செய்யப்பட்டவர் …
இவ்வார வல்லமையாளர்
வல்லமைமிகு திருமிகு. கீதா மதிவாணன் அவர்கள்
சென்ற வாரம் வல்லமை வாசகர்களுக்காக இவர் வழங்கிய “உன்னைப் போலவே…” என்ற கவிதைக்காக இவர் வல்லமையாளராகப் பாராட்டப் படுகிறார்.
ஆஸ்திரேலியா வாழ் இந்தியத் தமிழரான கீதா மதிவாணன் தமிழிலக்கியங்களைப் படிப்பதிலும் படைப்பதிலும் ஆர்வம் மிக்கவர். மதுரைக் கணக்காயர் மகன் நக்கீரனார் பாடிய பழந்தமிழ் இலக்கியப் படைப்பான பத்துப்பாட்டில் ஒன்றான “நெடுநல்வாடை“யின் இலக்கிய நயத்தில் தன்மனதினைப் பறிகொடுத்தவர். அதன் விளக்கத்தை எளிமையான வரிகளால் புதுக்கவிதை போன்ற பாணியில் இக்காலத் தமிழர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் எழுதியுள்ளார்; அதனை அவர் தளத்தில் படித்து மகிழலாம் (http://geethamanjari.blogspot.com/2013/05/blog-post.html). பல சிறுகதைகளும், கவிதைகளும், விமர்சனங்களும் எழுதியுள்ள கீதா “அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்?” என்ற 30 அத்தியாயங்களுக்கும் மேற்பட்ட நெடுங்கதையையும் (http://geethamanjari.blogspot.com/2011/06/1.html) எழுதியுள்ளார்.
வல்லமை இதழிலும் சற்றேறக் குறைய மூன்று ஆண்டுகளாக கீதா தனது படைப்புகளை வழங்கி வல்லமை வாசகர்களை மகிழ்வித்து வருகிறார். கவிதை, சிறுகதை, தொடர்கதை, கட்டுரை, இலக்கியம், விமர்சனம் என இவரது எழுத்தாற்றல் பல வகைகளிலும் பரந்து விரிந்திருப்பது மட்டுமல்லாமல் அவற்றிற்காக பரிசுகளும் விருதுகளும் பெற்றுள்ளார். வல்லமையின் கடித இலக்கியப் போட்டி முதற்கொண்டு, பிற இதழ்கள் நடத்திய தைப்பொங்கல் கட்டுரைப் போட்டிக்கான பரிசு, சிறுகதை விமர்சனப் போட்டிக்கான பரிசு, சிறந்த வலைதள எழுத்தாளருக்கான பரிசுகள் என்று பல பரிசுகள் வென்றுள்ளார். இவர் கவிதைகள் பெரும்பாலும் மனித நேயத்தை அடிப்படைக் கருத்தாகக் கொண்டு அமைந்துள்ளன. பெண்களின் நிலை, தன்னம்பிக்கை, மாற்றுத் திறனாளிகளின்பால் காட்டும் நேயம், ஒற்றுமை போன்ற கருத்துகளை உள்ளடக்கியவை இவரது கவிதைகள். இவ்வார வல்லமையில் இவர் எழுதிய கவிதை தனக்கெனப் போராட வழியற்ற, தனக்காக வாழும் உரிமை கேட்கத் திறனற்ற, கருவிலேயே அழிக்கப்படும் உயிர்களுக்காகக் குரல் கொடுக்கிறது….
அந்தக் கவிதை வரிகள் இங்கே…
(http://www.vallamai.com/?p=46228)
ஆகாயம் பிளந்துதித்த அண்டரண்டப் பட்சியுமில்லை
ஆவென்று வாய்பிளந்து ஆராதித்துத் தொழுவதற்கு!
பூமி கிளர்ந்து வெளிப்பட்ட புழு பூச்சியுமில்லை
’ப்பூ’வென்று புறந்தள்ளிப் புழுதியிற் புரட்டுவதற்கு!
உன்னைப் போலவே ஒற்றைத் துளியில் உருவாகி
உயிர்க்குடத்தில் கருவானது!
உன்னைப் போலவே உண்ணவும் கழிக்கவும்
உடுத்தவும் உரிமையுடையது!
உன்னைப் போலவே சிரிக்கவும் அழவும்
சிந்திக்கவும் கூடியது!
உன்னைப் போலவே ஆக்கவும் அழிக்கவும்
அணைக்கவும் தலைப்பட்டது!
உன்னைப் போலவே உணரவும் புணரவும்
மரணிக்கவும் வாய்த்த சக மானுடம் அது!
சாமான்யமாய் எண்ணிவிடாதே…
சாபத்துக்கு ஆளாகிவிடும்
சாத்தியத்துக்கு ஆளாகிவிடக்கூடும்!
மனிதநேயத்திற்காக, கருச்சிதைவினை எதிர்த்து பிறக்காத குழந்தைகளும் உயிர் வாழவேண்டிய நியாயத்திற்காகக் கவிதை வடித்த கீதா மதிவாணன் அவர்களுக்கு இந்த வாரத்தின் வல்லமையாளர் விருது வழங்குவதில் வல்லமை இதழ் அன்பர்கள் பெருமை கொள்கிறோம்.
**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!
**************************************************************************************
[ இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]


Leave a Reply