Month: April 2016

  • ஸ்ரீ ராமநவமி ….

    rkuaf_273514
    ——————————————
    தீதண்டும் நேரத்தில் கோதண்டம் கொள்வோனை
    வா!தெண்ட னிட்டின்று வாழ்த்துவோம் -தூதன்தன்
    தோளிருந்து ராவணணை துண்டித்த ராகவனின்
    தாளிரெண்டைக் கொள்வோம் துணை….(1)

    கவிமழை கம்பன் உவமையில் கண்ட
    நவமிக்கு நாயகன் நாளை -அவனிக்கு
    வந்த தினத்தில் வணங்கித் துதித்திட
    முந்தை வினைக்கு முழுக்கு….(2)

    சொல்லொன்று, இல்லொன்று, வில்லம்பு ஒன்றென்று,
    செல்லென்றும் பெற்றோர்கள் சொன்னபடி -முள்ளென்றும்
    கல்லென்றும் பாராமல் கானில் நடந்தவனை
    உள்ளொன்றிப் பின்தொடர்ந்து உய்….(3)….

    Share
  • இலக்கியச்சித்திரம்- இனிய பிள்ளைத்தமிழ்- 16

    மீனாட்சி பாலகணேஷ்

    சதுரானனனைச் சிறையிட்ட சதுரன்

    மாலை மயங்கி இரவு வந்துற்றது. கதிரவன் மேற்குத்திசையில் மலையின்பின் மறைந்தும்விட்டான். ஆகாயவீதியில் சின்னஞ்சிறு முல்லையரும்புகள் கொடிகளில் மலர்வதனைப்போல் விண்மீன்கள் மின்னிமின்னி முகிழ்த்தன. முழுநிலவு கதிரவனிடத்திலிருந்து தான் இரந்துபெற்ற ஒளியால் மஞ்சள்நிற மதியமலராகத் தானும் பூத்து நிற்கின்றது. சூரியனிடமிருந்து காந்தி பெற்ற சூரியகாந்திப் பூப்போல காணப்படுகிறது எனலாமா? இவற்றினாலெல்லாம் உவகைகொண்ட இயற்கையன்னை தன் இளம் குழந்தையான தென்றலை மலர்களின் நறுமணத்தை ஏந்தி, எங்கணும் ‘குறுகுறு’ நடையிட்டு உலவிவரச் செய்கின்றாள்!

    இதனால் முன்னிரவு தொடங்கியமை அனைவராலும் உணரப்படுகின்றது! உலகமே ஒடுங்கி அமைதியாகத் துயில் கொள்ளும் பொழுது இதுவாம். இன்னும் முதிர்ச்சியடையாத பறவைக்குஞ்சுகள், பகற்பொழுதெல்லாம் ஓடியாடித் தாய்ப்பறவைகள் கொண்டுவந்த உணவினை ஆவலாக வாய்திறந்து திறந்து உண்ணுகின்றன. தாய்ப்பறவைகள் இரவு துயில்கொள்வதற்காக முடங்கும் கூடுகளில் இவ்விளம் பார்ப்புகளும் தாய்ப்பறவைகளுடைய சிறகுகளினடியில் பாதுகாப்பாகச் சேர்ந்து ஒடுங்குகின்றனவாம். பகல்பொழுது தோறும் இன்னிசை முழங்கும் வரிகளையுடைய வண்டுகளும் துயிலச்சென்றன- எங்கு தெரியுமா? தாமரைமலர்களின் கதவுகளை அடைத்துக்கொண்டு அவை உறங்கச்சென்றனவாம்- (முளரிக் கதவமடைத்து வரிவண்டும் துயின்றன)! உலகமே இரவுப்பாடகனின் தாலாட்டிற்குச் செவிசாய்த்து மயங்கி உறங்கலாயிற்று.

    மாலை வந்துற்றதென்று ‘எதிராசர்களெ’ன அறியப்படும் முனிபுங்கவர்கள் அந்திநேரத்திற்கான மந்திரங்களையோதி தாம் செய்யவேண்டிய அந்திக்கடன்களையும் வழிபாடுகளையும் இயற்றினர். பகலும் இரவும் சந்திக்கும் மாலைப்பொழுது ‘சந்தி’ என ஆன்றோர்களால் கூறப்பட்டது; அந்த (சந்தி)அந்திப்பொழுதினில் வேதமந்திரங்களை ஓதி முனிவர்கள் இறையை வழிபட்டனர். இதனை சந்திக்கும்நேரத்து வழிபாடு- ‘சந்தியாவந்தனம்1’ எனப் பெரிதும் போற்றுவர். அதுமட்டுமல்லாது, அம்முனிவோர், இறைவனையே தமது இதயக்கமலமாம் உள்ளத்திலும் இருத்திச் சிந்தித்தவாறே கண்ணிமைகளை மூடி உடலால் செய்யத்தக்க நடவடிக்கைகளை ஒடுக்கி, துயிலத்துவங்கினர்.

    இந்த முருகன். ஆற்றல்மிக்கவன் எனக் கருதப்பட்ட பிரமனையே பிரணவ மந்திரத்தின் பொருளை அவன் அறிந்திராமையால், சிறையிலிட்டான். ஆகவே அவன் சதுரானனுக்கும் சதுரனாகின்றான். இந்த எட்டிக்குடிவாழ் முருகன் உறங்காமல் விழித்தபடிக்குத் தொட்டிலில் கிடக்கிறான். அவளை உறங்குமாறு வேண்டித் தாலாட்டுக்கூறுகின்றாள் அன்னை என்கிறார் புலவர்.

    யாரிந்தப் புலவர் பெருமகனார்? இவர் தாம் கோவைக் கவியரசு நடேச கவுண்டர். அவர் இயற்றியது சொல்நயமும் பொருள்நயமும் அணிநலமும் மிகுந்த எட்டிக்குடி முருகன் பிள்ளைத்தமிழாகும். அதிலமைந்த ஒரு தாலப்பருவத்துப் பாடலிதுவாம்.

    ராகம்- நீலாம்பரி:

    கதிரோன் குடபால் மலைமறைந்தான்
    ககனத் தடத்திலுடு வரும்பின
    கதிர்மா மதிய மலர்பூத்துக்
    கமழ்பூந் தென்றலுல விடுமால்
    முதிரா விளம்பார் பினந்தாயர்
    முடங்குஞ் சிறையி லொடுங்கினபூ
    முளரிக் கதவ மடைத்து
    வரிமுழங்கும் வண்டுந்துயின்ற னவால்
    எதிரா சர்களந்தியின் மறைக
    ளியம்பிக் கடன்க ளியற்றியபின்
    இதயக் கமலத் துணையிருந்தி
    இமைகள் பொருந்தி யொடுங்கினர்காண்
    சதுரா னனனைச் சிறையிட்ட
    சதுரா தாலோ தாலேலோ
    தமிழா கரவெட் டிக்குடிவாழ்
    தலைவா தாலோ தாலேலோ
    (எட்டிக்குடி முருகன் பிள்ளைத்தமிழ்- தாலப்பருவம்- கவியரசு நடேச கவுண்டர்)

    அழகான சித்திரம்போன்ற இயற்கை வருணனைகள். தாமரை கூம்புவதையும் வண்டின் இயக்கம் நிற்பதையும் அவை உறக்கத்திலாழ்வதெனக்கூறி அழகுறப் புனையப்பெற்ற பாடல்வரிகள் உள்ளத்தில் களிப்பை மிகுவிக்கின்றன. பறவைப்பார்ப்புகள் தாயின் சிறகிலொடுங்கி உறங்குவதை நாம் மனக்கண்ணில் கண்டே இன்புறலாம்! ‘முளரிக் கதவமடைத்து வண்டுகளும் உறங்குகின்றன’ என்பதும் மிக நயமான மிகைப்படுத்தப்படாத சொற்பிரயோகம். இவ்வாறு பிள்ளைத்தமிழ் பாடும் இக்கவிஞர்களை வித்தாரகவி என அழைப்பது முற்றிலும் பொருத்தமானதே!

    ‘மலர்ந்து மலராத பாதிமலர்போல வளரும் விழிவண்ணமே’ எனப்பாடிய கவிஞரும் இவர்களில் சேர்த்திதானல்லவா?

    c47b71c7-9b48-4902-8b13-1a8b7b7983fe
    (1இந்துக்களில் ஒரு சாரார் ஒருநாளில் மூன்றுமுறை சந்தியாவந்தனம் செய்வார்கள்; மந்திர உச்சாடனம், பிராணாயாமம், மனதை ஒருமைப்படுத்தும் தியானம் ஆகிய மூன்று முக்கியமான செய்கைகளைக்கொண்டது சந்தியாவந்தனம். மந்திர உச்சாடனமாக காயத்திரி மந்திரம் உச்சரித்தல் புத்திக்கூர்மையை வளர்க்கும்; பிராணாயாமம் மன அழுத்தத்தினைக் குறைக்கும்; காலையில் மித்திரனையும், பகலில் சூரியனையும், மாலையில் வருணனையும் குறித்துச் சந்தியாவந்தனம் செய்யப்படும்).

    *****

    தொட்டிலில் கண்வளர்த்தப்பட்ட குழந்தை உறங்காமல், உறங்கப் பிடிக்காமல் சிணுங்குகின்றது; அழுகின்றது. தாய், தாலாட்டு எனும் விதத்தில் அக்குழந்தை வளர்ந்து பெரியவனாகிச் செய்யப்போகும் அரும் பெருஞ்செயல்களையும், அவனுடைய தற்போதைய குறும்புகளையும் இன்னும் பல நிகழ்வுகளையும் பற்றிப்பாடுகிறாள்.

    இவ்வுலகை முறையாக, அழகாக, திருத்தமாக ஈன்றவள் அன்னை பராசக்தி; அவள் தன்னுடைய குழந்தையான முருகனுக்கு முலைப்பால் அருத்துவிக்கிறாள்; பாலுண்ட குழந்தையின் வயிறு நிரம்பியுள்ளது; அதனால் அவன் உள்ளத்தில் மகிழ்ச்சி நிரம்பியுள்ளது; அவனை அலைகள் நிறைந்த கடலில் சேரும் சரவணப்பொய்கையில் உள்ள அழகான ஒரு பூந்தொட்டிலில் கண்வளரக் கிடத்தினாள் அன்னை!

    6f2ecd0a-5704-4cba-a806-f633a1f299a1
    ஆனால் என்னாவாயிற்று? குழந்தை உதடுகள் நெளிய, சிறியதாகத் துவங்கி, பெருங்குரலெடுத்து அழவாரம்பித்து விட்டான்! ஏனெனில், ஆறுமுகப்பெருமானான அவன் ஆறுதாமரை மலர்களில் ஆறுகுழந்தைகளாக வளர்ந்தவன்; ஆறு கார்த்திகைப்பெண்டிர் அவனுக்குப் பாலூட்டி வளர்த்தனர். அவர்கள் ஊட்டிய பால் மருந்தினைவிட இனியதாம். அன்னை பாலூட்டியது போதாதென இக்குழந்தை இப்போது அந்த அறுவரின் முலைப்பாலிற்காக ஏங்கி அழுகின்றானாம்;

    இக்குழந்தை சாமானியக் குழந்தையல்லவே?

    அவன் அழுதால் வானவர்கள் எனும் தேவர்களின் பகைவனான சூரபதுமன் முதலான அரக்கர்களும் உடன் அழுகின்றார்களாம்!! இது என்ன புதுக்கதை? அதாவது முருகன் இவர்களை வதைத்த காரணத்தால் அச்சங்கொண்டு சூரர்கள் அழுகின்றனர் எனக் கொள்ளவேண்டும். மாயங்கள் நிறைந்த ஒரு பெரிய மலையும் அழுகின்றதாம்; அதுவென்ன? கிரவுஞ்சமலையை வேலெறிந்து சிதைத்தவன் அன்றோ நமது குமரப்பெருமான்? ஆகவே குமரனின் குரல்கேட்ட போதிலேயே அம்மலையான அரக்கன் அச்சங்கொண்டு ஓலமிட்டுக் கதறுகின்றான் எனப்புலவர் கற்பனை செய்துள்ளார். அழகாக இல்லை?

    இவர்கள் அனைவரையும், மலை, அரக்கர்கள் அனைவரையும் விருப்பம்கொண்டு இவ்வுலகில் படைத்த மாயையும் அவர்களுக்கு முருகனின் கையால் நேர்ந்த கதியினைக் கண்டு வருந்தி அழுகின்றாளாம்.

    இந்தச் செயல்களெல்லாம் செய்த குமரனான பச்சிளம்மகவோ விம்மி விம்மி அழுகின்றதாம். இது அவன் செய்யும் மாயை!! அன்னையின் அணைப்புக்காக ஏங்கி அழும் மானுடக்குழந்தைகள் போலவே முருகப்பிரானான இக்குழந்தையும் ஏங்கியழுகின்றானாம்! அறுவர் முலைப்பாலுக்கு ஏங்கியழும் குழந்தையாகக் கற்பனை செய்து ‘அழாதே குழந்தாய்’ எனக் கூறுகிறார் புலவர்.

    மேலும் இக்குழந்தை ‘வேதன்’ எனும் வேதங்களை ஓதும் பிரமனையும் சினந்து அவனது அறியாமைக்காகத் தலையில் குட்டி தளைபூட்டிச் சிறையிலிட்டு மிகுந்த காவலில் வைத்து அழவைத்தவனல்லவோ? ‘ இவனை இவ்வுலகுக்குத் தந்த தந்தையாகிய சிவபிரானுக்கும் குருவாகி பிரணவத்தின் பொருள் கூறி உபதேசித்த சுவாமிநாதன் அல்லவா இவன்? தாலேலோ; இவன் குமரன்- தமிழ்த்தெய்வமான, தமிழனான முருகன்- அழகன்- எட்டிக்குடிவாழ் தலைவன்; தாலேலோ,’ எனப் போற்றுகிறார் கவியரசு நடேச கவுண்டர் அவர்கள்.

    திருந்தப் புவனங்கள் ஈன்றவள்தன்
    திருமா முலையுண்டு அகங் குளிர்ந்து
    திரைவாரி திசேர் சரவணத்தில்
    செவ்விப் பூந்தொட்டிலில் அமர்ந்து
    மருந்திலினிய அறுவர்முலை
    மாந்த விரும்பி வாரியழ
    வானோர் பகையாம் சூரரழ
    மாயம் பெருத்த குன்றமழ
    விரும்பிப் படைத்த மாயையழ
    விம்மிவிம்மி யழுங் குழந்தாய்
    வேதனழ வன்றளை பூட்டி
    மிகுங்கா வலிடை விட்டவனே
    தருந்தந் தைக்குக் குருமொழிசொல்
    சாமி தாலோ தாலேலோ
    தமிழா கரவெட் டிக்குடிவாழ்
    தலைவா தாலோ தாலேலோ
    (எட்டிக்குடி முருகன் பிள்ளைத்தமிழ்- தாலப்பருவம்- கவியரசு நடேச கவுண்டர்)

    இதே கருத்தினைக் கொண்ட ஒரு பாடல் அருணகிரிநாதரின் திருப்புகழிலும் காணப்படுகிறது. இவ்வழகிய கருத்துக்களை உள்வாங்கித் தமது பாடல்களிலும் வெளிப்படுத்தியுள்ளார் கவியரசு அவர்கள்.

    திருந்தப் புவனங்கள் ஈன்றபொற் பாவை திருமுலைப்பால்
    அருந்திச் சரவணப் பூந்தொட்டில் ஏறி அறுவர்கொங்கை
    விரும்பிக் கடலழக் குன்றழச் சூரரழ விம்மியழும்
    குருந்தைக் குறிஞ்சிக் கிழவனென்று ஓதும் குவலயமே
    (அருணகிரிநாதர்- கந்தரலங்காரம்- 5ம் பாடல்)

    பெரும் புலவோர்கள், காலத்தால் வேறுபட்டாலும், ஒரேவிதமான கருத்துக்களைத் தமது பாடல்களில் வெளிப்படுத்துவர்; இது அவர்களின் கல்வி, கருத்து, சிந்தையின் மேன்மையைப் புலப்படுத்துகின்றது. பிற்காலத்தில் தமிழை விரும்பிப் பயிலும் நமக்கெல்லாம் கருத்திற்கினிய விருந்தாகி எண்ணங்களையும் ஏற்றப்படுத்துகின்றது. உயர்ந்த இலக்கியத்தின் தன்மை இதுதான் என அறுதியிட்டுக் கூறலாம்.

    இன்னும் தொடர்ந்து இதுபோலும் பாடல்களைப் படித்து மகிழலாம்.

    மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)
    {முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
    கற்பகம் பல்கலைக் கழகம், கோவை,
    நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,
    தமிழ்த்துறைத் தலைவர்.}

    *****

    Share
  • ஸ்ரீராம காதை

    -மீ.விசுவநாதன்

    (இன்று ஸ்ரீராமநவமி தினம் (15.04.2016))

    மானுடனாய்ப் பிறந்த மாலின்
       –வாழ்வதனைக் காதை சொல்லும்!
    தானுடைய எண்ண வீம்பும்
       –தம்பியரின் நல்ல பண்பும்              rama
    வானுயர ஓங்கி நிற்கும்
       –வானரத்தின் ஞான வாக்கும்
    தேனுயிராம் காதல் கொண்ட
       –தெய்வமகள் தேர்வு முண்டு! 

    வான்பறக்கும் கழுகும், கங்கை
       –மாலுமியாம் குகனும், காட்டில்
    தானிருக்கும் கரடி யென்ற
       –சாம்பவனும், பொன்போல் மாய
    மானிருக்கும் பர்ண சாலை
       –மாமுனிகள் வாச முண்டு!
    கூனிருக்கும் கொள்கை கொண்ட
       –கூனிகளும் இருப்ப துண்டு! 

    காமனுக்கே உள்ளம் தந்து
       –காலனிடம் சென்றோ ருண்டு!
    மோகமதைக் கொன்று விட்ட
        –மூத்தவர்கள் நிறைய வுண்டு!
    சேமமதைப் பெறுவ தற்குச்
      –சீதையவள் கருணை யுண்டு!
    ராமனது கதையில் தானே
       –ரத்தினமாய் தர்ம முண்டு!

     

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்….. (192)

    சக்தி சக்திதாசன்.

    அன்பினியவர்களே !
    அன்பான வணக்கங்கள். புத்தம் புதிதாய் ஒரு புதுவருடம் சித்திரை பெண்ணவள் மடிமேல் பிறந்து தவழ்ந்திடும் வேளையில் உங்கள் முன்னே அடுத்த மடலுடன். தமிழர் திருநாள் பொதுவாய் எதைக் கொண்டு வரும் என ஆவலுடன் காத்திருப்போர் முன்னே தவழ்ந்திடும் இப்புதுவருடம் புலர்ந்திடப் போகும் புது நிகழ்வுகள் தான் என்ன ?

    இன்றைய உலகின் வாழ்க்கைமுறை ஒரு கயிற்றின் மீது நடப்பது போன்ற ஒரு சிரமமான செயலாகும். பேராசை, அதிகாரம், ஆணவம் என்பது அரசாங்கங்கள் முதல் அடிமட்ட மனிதர் வரை ஊடுருவி விட்ட ஒரு காலமாக இருக்கிறது. மனிதநேயம், மனிதாபிமானம் என்பவனற்றின் பெறுமதி இன்றைய வாழ்வில் மிகவும் எடை குறைந்ததாகவே காணப்படுகிறது.

    இத்தகைய வாழ்க்கைமுறை மாறி மனிதர்கள் அன்பு, கருணை, சமாதானம், அமைதி என்பனவற்றை முக்கியமான நோக்கங்களாகக் கொண்டு வாழ தமது வாழ்க்கை முறைகளை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டியது இன்றைய உலகத்தில் அத்தியாவசியமாகிறது.

    இன்றைய இந்தப் புதுவருடத்தின் வரவு அனைத்து அன்பு உள்ளங்கள் அனைவரையும் நோய் நொடியுமில்லாமல், அமைதியாக, திருப்திகரமான வாழ்விற்குத் தேவையான செல்வமும் பெற்று வாழ்ந்திட அனைவர்க்கும் பொதுவான, அனைத்துக்கும் அப்பாற்பட்ட இறை எனும் சக்தியை வேண்டுவோமாக.

    தாமரைநித்தம் நடந்திடும் நிகழ்வுகள்
    நெஞ்சில் நிறைந்திடும் சுவடுகள்
    புத்தம் புதிதாய் மலர்ந்திடும்
    புத்தாண்டு புலருகிறது ஆனந்தமாய்

    கடந்தது எல்லாம் கடந்ததுவே
    நடந்தது எல்லாம் கழிந்ததுவே
    விரைந்திடும் காலச் சக்கரத்தில்
    வியந்திடும் வாழ்வுச் சாத்திரங்கள்

    சித்திரைப்பாவை மெல்லென
    நித்திரை மீண்டிங்கு தனது
    முத்திரை பதித்திட புதிதாய்
    இத்தரை மீது மலர்ந்திட்டாள்

    கனவுகள் எல்லாம் மெய்ப்படவே
    நினைவுகள் தன்னை வழிப்படுத்தி
    முனைவுகள் அனைத்தும் செயலாக்கி
    முடிவுகள் தன்னில் ஜெயித்திடவே

    இல்லை என்பவர் இல்லாத நிலையை
    இருப்பவர் நினைத்தால் மாற்றிடலாம்
    இதயத்தில் கொஞ்சம் ஈரத்தை ஏற்றி
    இரக்கத்தில் கசியும் ஈகையை எண்ணி

    பிறந்திடும் இத்துர்முகி வருடத்தில்
    பறக்கட்டும் துயரங்கள் அனைவருக்கும்
    சிறக்கட்டும் வாழ்க்கை இனிவரும்
    கனிந்திடும் காலத்தின் மடிதனிலே

    கரைந்திடும் கருமேகங்களைப் போல்
    களைந்திடும் துன்பங்கள் வாழ்வினிலே
    நிறைந்திடும் இன்பத்தின் நினைவுகளை
    சுமந்திடும் இதயங்கள் மகிழ்வுடனே

    நாளைய உலகம் அமைதியில் திளைத்திட
    நானிலம் எங்கும் சகோதரம் பொங்கிடப்
    பிறந்திடும் இந்தப் புதுவருடம் சுரந்திட
    நிறைந்திடும் இதயத்தின் வாழ்த்துக்கள்

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

    — கவிஞர் வைரமுத்து.

    இரண்டே ஆண்டுகள் பள்ளிப்படிப்பு. இருபத்தொன்பது ஆண்டுகளே வாழ்வு. ஆறு ஆண்டுகளே கலையுலக ஆட்சி. ஐம்பத்தேழு மட்டுமே படங்கள். எல்லாம் தொகுத்துப் பார்த்தாலும் இருநூற்று அறுபத்திரண்டே பாடல்கள். ஒரு பாட்டுக்கு சராசரியாய் ஐந்நூறு ரூபாய் என்று கொண்டாலும் இந்திய ரூபாயில் சற்றொப்ப ஒரு லட்சத்து முப்பதாயிரம்தான் அவன் ஈட்டிய ஊதியம்.

    pattukkottaiஆனால் திரைவெளியில் அவன் பிடித்த இடம் இன்னொருவரால் எட்டப்பட முடியாதது; பாட்டுப் பயணத்தில் அவன் பதித்த தடம் காலப்புழுதியால் அழிக்கப்படாதது.

    1930 இல் ஒரு வேளாளன் வீட்டில் விவசாய வெளிகளில் அவன் பெற்றெடுக்கப் படுகிறான். பட்டுக்கோட்டைக்குப் பக்கத்தில் அரசாங்க ஆவணங்களில் கூட எழுத்துப் பிழையில்லாமல் எழுதமுடியாத ‘செங்கப்படுத்தான்காடு’ அவன் பிறப்பூர் ஆகிறது. அவன் ‘குவா குவா’ சொல்லிவிழுந்த அடுத்த ஆண்டில்தான் தமிழ் சினிமா பேசவே தொடங்குகிறது.

    அவன் திரைப்பாட்டு எழுதவந்த 24 ஆண்டுகளுக்குள் புராணம் – இதிகாசம் – சரித்திரம் – சுதந்திரப் போராட்டம் என்ற கலையின் கச்சாப் பொருள்களையெல்லாம் செலவழித்துத் தீர்த்துவிட்டு சமூக எதார்த்தம் என்ற தளத்தில் வந்து நிலைகொள்கிறது திரைப்படத்தேர்.

    1954 இல் அந்தப் பாமரப் பாவலன் பாட்டெழுத வந்து விட்டான். அதுவரைக்கும் கேட்காத தொனியில் உழைக்கும் மக்களின் முரட்டு மொழியில் திடீரென்று வந்து மிரட்டுகிறது அவன் பாட்டு.

    அன்று ஆட்சி செலுத்திக் கொண்டிருந்த உடுமலை நாராயணகவியும் தஞ்சை ராமையாதாசும் தங்கள் உணவுமேஜையில் பட்டுக்கோட்டையைப் பரிமாறிக் கொள்ளும் அளவுக்குச் சில மாதங்களிலேயே அவன் பரபரவென்று பரவுகிறான்.

    கேட்ட சொற்கள்; கேளாத பொருள். சந்தம் பழையது; சக்தி புதியது. பல்லவி எழுதமட்டும் தாமதம் செய்கிறான். பிறகு கோடைமழையாய்க் கொட்டிவிடுகிறான். படிக்காத பயலுக்கு எப்படி வந்தது இந்தப் பாட்டு வெறி? திரையுலகம் திகைக்கிறது

    வேளாண்வெளிகள் தந்த பட்டறிவு – பாவேந்தர் தந்த மொழியறிவு – கம்யூனிசம் கற்பித்த கருத்தறிவு – இந்த மூன்றையும் உள்வாங்கி எரிந்த அவனது உயிர்ச்சுடர்.

    நானறிந்தவரை இந்த நான்கு பொருள்களே பட்டுக்கோட்டையின் முதலும் மூலமும்.

    பாட்டெழுத வருவதற்கு முன்பு அவன் பார்த்த தொழில்கள் பதினேழு என்கிறார் ஜீவா.

    விவசாயி – மாடுமேய்ப்பவன் – மாட்டுவியாபாரி – மாம்பழ வியாபாரி – இட்லி வியாபாரி – முறுக்கு வியாபாரி – தேங்காய் வியாபாரி – கீற்று வியாபாரி – மீன் நண்டு பிடிக்கும் தொழிலாளி – உப்பளத் தொழிலாளி – எந்திர ஓட்டுநர் – தண்ணி வண்டிக்காரன் – அரசியல்வாதி – பாடகன் – நடிகன் – நடனக்காரன் – கவிஞன்.

    வாழ்வியல் கூறுகளையும் வர்க்க அடுக்குகளையும் அவன் பார்த்த 17 தொழில்களும் பாடம் புகட்டியிருக்கக்கூடும்.

    பாவேந்தர் என்ற வேடந்தாங்கலில் இந்தப் பட்டுக்கோட்டை என்ற பாட்டுப் பறவையும் பாடிப்பாடிப் பழகியிருக்கக் கூடும்.

    “ஏ ஆம்பளப்பயல்களா! இங்க பாருங்க ஒரு பொண்ணு என்ன போடு போட்டுருக்கான்னு” பாவேந்தர் ஒரு கவிதைத் தாளெடுத்துத் தன் மாணவர்களுக்கு நீட்டுகிறார். படித்தவர்கள் வியக்கிறார்கள். இயற்றியவர் பெயர் ‘அகல்யா’ என்றிருக்கிறது. அங்கிருந்த கல்யாண சுந்தரம் தனக்குள் சிரித்துக் கொள்கிறான். அருணாசலம் பிள்ளை மகன் கல்யாணசுந்தரம்தான் தன் பெயரை ‘அகல்யா’ என்று பெண்படுத்தியிருக்கிறான். முளைவிடும் போதே பாவேந்தரால் பாராட்டப் பெற்றதில் விண்ணோக்கி வளரவேண்டும் என்ற வெறி விளைந்திருக்கக் கூடும்.

    அவன் வளர வளர தஞ்சை மாவட்டம் பொதுவுடைமைப் போர்க்களமாய் வளர்கிறது. நிலப்பிரபுத்துவத்தால் கெட்டிப்பட்ட சமூகம் கிளர்ச்சிகளால் உடைக்கப்படுகிறது. சீனிவாசராவ் தலைமையிலான விவசாயிகள் சங்கம் விஸ்வரூபமெடுக்கிறது. அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்ட கம்யூனிஸ்ட் தலைவர்கள் விதைகளைப்போல் தலைமறைவு வாழ்க்கை வாழ்கிறார்கள்.

    வடபாதிமங்கலங்களும் குன்னியூர்களும், மூலங்குடிகளும், ராவ் பகதூர்களும் மிரட்சியடையும் அளவுக்குப் புரட்சி வெடிக்கிறது.

    உழைக்கும் மக்களிடம் வேர்வையாகவும் ரத்தமாகவும் வடிந்த அந்தப் புரட்சி, ஒருவனிடம் மட்டும் தமிழாக ஒழுகுகிறது.

    பாரதிதாசன் சொல்லித்தந்த ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற குறளை-

    “யாருமேல கீறினாலும்
    ரத்தம் ஒண்ணுதானே
    ஆகமொத்தம் பிறந்ததெல்லம்
    பத்தாம் மாதம்தானே”

    – என்று எழுதிக் காட்டியவன்.

    கம்யூனிசம் சொல்லிக்கொடுத்த வர்க்கப் போராட்டத்தை

    “வசதி படைத்தவன்
    தரமாட்டான்
    வயிறு பசித்தவன்
    விடமாட்டான்”

    – என்று செந்தமிழ் செய்கிறான்.

    அவன் கலைபெற்றது தமிழால்; நிலைபெற்றது கம்யூனிசத்தால்.

    சேற்றிலே பிறந்தவனைச் செந்தாமரையாக்கிய கம்யூனிச சமூகமே உனக்கு என் சிவப்பு வணக்கம்.

    சுயமரியாதை மேடைகளில் பாடல்கள் பாடி “நல்லதைச் சொன்னால் நாத்திகனா?” என்று தன் முதல்வரியை எழுதிய சிறுவனை ஒரு சித்தாந்தக் கவிஞனாக்கியது பொதுவுடைமை இயக்கம் என்பதை வரலாற்றில் யாரும் மறைக்கமுடியாது.

    ஒரு விசித்திரமான சரித்திரம் இருக்கிறது பட்டுக்கோட்டையின் பேனா பொதுவுடைமை எழுதியது; ஆனால் திராவிடத்தையே அது வளர்த்தது.

    1950 களில் கலையுலகம் கட்டியெழுப்பிய பழைய பீடங்களை அசைத்ததிலும் சற்றே அகற்றியதிலும் அறிஞர் அண்ணா, கலைஞர் (மு.கருணாநிதி) என்ற இரண்டு ஆளுமைகளுக்குப் பெரும் பங்கு உண்டு என்ற கருத்தை மாற்றாரும் மறுக்க மாட்டார்கள்.

    பகுத்தறிவு – சுயமரியாதை என்ற உள்ளடக்கங்கள் தமிழ்த் திரையைத் திசைமாற்றிப் போட்டன. ‘வேலைக்காரியும்’, ‘பராசக்தியும்’ திராவிட இயக்கத்தின் செல்லுலாயிட் சின்னங்களாயின. கலை இலக்கியத்தின் வழியே மக்கள் ஊடகத்தில் பயணித்தால்தான் ஓர் இயக்கம் கடைசி மனிதனை விரைந்து தொடமுடியும் என்பதை திராவிட இயக்கம் மெய்ப்பித்தது.

    பொதுவுடைமை இயக்கம் கலையில் செய்துகாட்டத் தவறியதை மொழியில் செய்து காட்டியவன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.

    அதே காலகட்டத்தில் திராவிட இயக்கத்தின் பிம்பமாகத் தன்னைத் தகவமைத்துக் கொண்ட எம்.ஜி.ஆர், இந்தப் பொதுவுடைமைக் கவிஞனின் பாடல்களைப் பயன்படுத்திக் கொள்ளத் தயங்கவேயில்லை.

    ‘மக்கள் திலகம்’ என்ற முத்திரையைக் கட்டிக் காக்க மக்கள் கவிஞனின் வரிகள் அவருக்குத் தேவைப்பட்டன.

    பௌத்தமதத்தின் பெருங்கூறுகளையெல்லாம் தனக்குள் சுவீகரித்துக் கொண்டு விரைந்து கிளைபரப்பிய இந்து மதத்தைப்போல, பொதுவுடைமைக் கவிஞனின் வரிகளையும் வாங்கிச் செழித்து வளர்ந்தது திராவிடம்.

    “தூங்காதே தம்பி தூங்காதே – திருடாதே பாப்பா திருடாதே – சின்னப் பயலே சின்னப் பயலே சேதிகேளடா – குறுக்குவழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா – பொறக்கும்போது பொறந்த குணம் போகப் போகமாறுது” போன்ற பாடல்கள் எம்.ஜி.ஆரின் சல்லிவேர்கள் பரவுவதற்கான பாதையைப் பதப்படுத்தின.

    பட்டுக்கோட்டையின் உயிரெல்லாம் தமிழும், உள்ளமெல்லாம் கம்யூனிசமும் நிறைந்திருந்தன என்பதற்குச் சாகாத அவன் பாடல்களே சாட்சி.

    களத்துமேட்டுப் பாடல்களில் மட்டுமல்ல – காதல் பாடல்களிலும் கூட அவனது பொதுவுடைமை ஆசை பூக்காமற் போனதில்லை.

    தங்கப் பதுமையில் –
    “முகத்தில் முகம் பார்க்கலாம் – விரல்
    நகத்தில் பவளத்தின் நிறம் பார்க்கலாம்”
    – என்ற பாடலில் நுட்பத்திலும் நுட்பமான ஒரு கருப்பொருள் வைக்கிறான்.

    ஆணுக்கும் பெண்ணுக்குமான சுகம் என்பது சுயசுகத்தோடு முடிந்து போவதல்ல. தாம்பத்யம் என்பது பெண்ணுடல் கொண்டு தன்னுடல் நிரப்புவதல்ல. அதுபோல் ஆணுடல்கொண்டு பெண்ணுடல் நிரப்புவதுமல்ல. ஆண் தன்னை உருக்கிப் பெண்ணை நிரப்புவதும் – பெண் ஒரு ஆணை நிரப்பத் தன்னைப் பெருக்குவதும் தாம்பத்யத்தின் இருபாற் தத்துவம். கொடுத்துப் பெறுதல் அல்லது பெற்றுக் கொடுத்தல். இழந்து கொண்டே அடைதல்; அல்லது அடைந்துகொண்டே இழத்தல் என்பதே தாம்பத்யத்தின் தத்துவம். எதிர் உயிரைப் பெருமை செய்வதுதான் இணைவிழைச்சின் இன்பம்.

    பட்டுக்கோட்டை எழுதுகிறான்:

    “ இகத்தில் இருக்கும் சுகம் எத்தனை ஆனாலும்
    இருவர்க்கும் பொதுவாக்கலாம் – அன்பே அதன்
    எண்ணிக்கை விரிவாக்கலாம்”

    – நான் கேட்டுக் கேட்டுக் கிறுகிறுத்துப் போன வரிகளுள் இதுவும் ஒன்று.

    தங்கத்தின் மூலக்கூறு பிரித்தால் கடைசிவரைக்கும் தங்கம்தான். பட்டுக்கோட்டையின் பாட்டுக்கூறு பிரித்தால் அவன் காதல்வரைக்கும் கம்யூனிஸ்ட்தான்.

    பட்டுக்கோட்டை பாட்டெழுதிக் கொண்டிருந்த அதே கால அலைவரிசையில் இந்தியத் திரைப்பாட்டு வடக்கிலும் தெற்கிலும் எந்த மொழியில் இயங்கியது என்பது கருதத் தக்கது. அறுபதாண்டுகள் பின்னோக்கிப் பார்த்தால் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் தனித்தன்மை புலப்படும்.

    “உடைந்துபோன
    கனவுகள் சொல்கின்றன
    என் கண்கள் கண்டெடுத்ததை
    இதயம் தொலைத்ததென்று ”

    இது 1950 இல் கறுப்புவெள்ளை யுகத்தில் ‘மதுமதி’யில் ஷைலேந்தர் இந்தியில் எழுதியது.

    “எல்லோரும் சொல்கிறார்கள்
    உன் இதயம் கல் என்று

    நாடு சொல்கிறது
    உன் மனது காடென்று

    காட்டில் தேடிப் பார்த்தபோது தெரிந்தது
    நீலக்குயிலின் கூடொன்று”

    – இது 1952 இல் மலையாளத்தில் கவி பாஸ்கரன் நீலக் குயிலுக்கு எழுதியது.

    பிறமொழியின் சமகால சகாக்களெல்லாம் படைப்புமொழி தொட்டுப் பாட்டெழுதினார்கள். நம் உள்ளூர்க்கவிஞனோ –

    “ காவேரி ஓரத்திலே
    கால்பதுங்கும் ஈரத்திலே
    காலையில நான் நடப்பேன்
    கலப்பை கொண்டுக்கிட்டு
    கட்டழகி நீ வருவ
    வெதையக் கொண்டுக்கிட்டு”

    – என்று உழைப்பு மொழி தொட்டுப் பாட்டெழுதினான்.

    அதனால்தான் பட்டுக்கோட்டை பாடல்கள் என்ற சுவரொட்டி பார்த்துத் தமிழர்கள் கீற்றுக் கொட்டகையை மொய்த்திருக்கிறார்கள்.

    அவன் பாடல்களில் பெரிய அலங்காரமில்லை. மேக மந்தைகள் நட்சத்திரங்களை மேயும் கற்பனைகளில்லை. தமிழ்மரபுக்குரிய கட்டமைவு அமைந்தது; கருத்தமைதி இருந்தது.

    இருபெருங்கூறுகளில் பட்டுக்கோட்டை பெரிதும் கவனம் செலுத்தியதாய்க் கருதுகிறேன். ஒன்று – முறியாத மோனை. இரண்டு – காதுக்குள் இனிக்கும் கடைஇயைபு.

    “மனிதனாக வாழ்ந்திட வேணும்
    மனதில் வையடா

    வளர்ந்து வரும் உலகத்துக்கே நீ
    வலது கையடா

    தனியுடைமைக் கொடுமைகள் தீரத்
    தொண்டு செய்யடா

    தானாய் எல்லாம் மாறும் என்பது
    பழைய பொய்யடா”

    இதில் ‘மனிதனாக’ என்பதற்குத் தனியுடைமை என்று எதுகையுமிட்டு, முறியாத மோனைகளையும் அமைத்த பாவலன், “வையடா – கையடா – செய்யடா – பொய்யடா –” என்று கடைஇயைபுகளையும் கச்சிதப்படுத்தியிருப்பதுதான் கட்டமைதி. திரைப்பாட்டு எழுதுகிறவனுக்கு இது அவ்வளவு எளிதல்ல. ஒரு திரைப்பாடலாசிரியனுக்கு மூன்று எஜமானர்கள். இயக்குநர் – இசையமைப்பாளர் – தயாரிப்பாளர் என்று மூன்று சக்திகளைத் திருப்திப்படுத்தி, சில நேரங்களில் நான்காவது எஜமானராகிய நடிகரையும் தாண்டி வர வேண்டும். இந்தப் பாடலில் கூட “தனியுடைமைக் கொடுமைகள் தீரப் புரட்சி செய்யடா” என்றுதான் பட்டுக்கோட்டை எழுதியிருந்தாராம். ‘புரட்சி’ என்ற வார்த்தை பலருக்கு மிரட்சியைக் கொடுத்திருக்கிறது. அந்த ஒரு சொல்லை மட்டும் மாற்றுங்கள் என்று வற்புறுத்தப்பட்டிருக்கிறார். பிறகுதான் ‘புரட்சி’ என்ற அசைவச் சொல் அகற்றப்பட்டு ‘தொண்டு’ என்ற சைவச்சொல் பெய்யப்பட்டிருக்கிறது. நான்கு எஜமானர்களைக் கடந்தாக வேண்டிய பாடலாசிரியன் தணிக்கைக்குழு என்ற சர்வாதிகாரியையும் தாண்டி வரவேண்டியவனாயிருக்கிறான்.

    ‘சிவப்பு மல்லி’யில் “எரிமலை எப்படிப் பொறுக்கும்” என்ற பாட்டில் ‘ரத்தச் சாட்டை எடுத்தால் உனது யுத்தக் கனவு பலிக்கும்’ என்று எழுதியிருந்தேன். வன்முறை தெறிக்கிறது என்று தணிக்கைக் குழு தடுத்தது. “சிங்கக் கூட்டம் நிமிர்ந்தால் கையை நெரிக்கும் விலங்கு தெறிக்கும்” என்று மாற்றிக் கொடுத்தேன். வன்முறை குறைந்துவிட்டது என்று தணிக்கைக் குழு தணிந்தது. பழைய வரியைவிட வீரியம் கூடி விட்டது என்று தயாரிப்புத் தரப்பு மகிழ்ந்தது.

    மார்க்சியப் படைப்பாளிகளில் சிலர் மரபு வழி வந்த தமிழ் அழகியலைத் தவிர்க்கப் பார்க்கிறார்கள். காற்றில் கூட ஈரப்பதம் இருக்கிறது. சிலர் கவிதைகளில் இல்லாமல் போகிறது. ரத்த ஓட்டம் சுண்டிப் போன சொற்களால் அவர்கள் வாழ்க்கையை வரையப் பார்க்கிறார்கள். உண்மையான மார்க்சியம் என்பது வறண்ட வாழ்க்கையில் ஈரம் சேர்ப்பது. ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கான பேதமற்ற பேரின்பமே மார்க்சிய அழகியல். மரபுகளை உள் வாங்கிய தமிழ் அழகியல் பட்டுக்கோட்டையின் பாடல்களில் படிந்துகிடப்பது பாவேந்தர் தந்த பயிற்சியால் கூட இருக்கலாம்.

    “ என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே – நீ
    இளையவளா மூத்தவளா?”

    – என்று பட்டுக்கோட்டை கேட்கும் கேள்வியில் மதியைத் தனது மைத்துனியாக்கி விடும் சாமர்த்தியம் தொனிக்கிறது.

    விஞ்ஞானம் பிரகடனப்படுத்திவிட்டது நிலா ஒரு பாலைவனம் என்று. அங்கே பிராணவாயு இல்லையென்று கோள் ஈர்ப்பும் குறைவென்று. மற்றும் தண்ணீர் இருந்ததற்கான தடயமும் இல்லையென்று . விண்வெளிப் புழுதிகளின் குப்பைக்கூடை அதுவென்று. அதிலுள்ள மடுக்களும் மடிப்புகளுமே கறையாகத் தோற்றம் தரும் காட்சி என்று . ஆனால் இவற்றையெல்லாம் புறம் ஒதுக்கி பூமியில் ஒழுகும் நிலாப் பாலையே கவிபாடிக் களிக்கிறது கலை.

    விஞ்ஞானத்திற்கும் கலைக்கும் உள்ள வேறுபாடு அதுதான். ஒன்றை ஒன்றாகப் பார்ப்பது விஞ்ஞானம். ஒன்றை மற்றொன்றாகப் பார்ப்பது கலை. நிலாக்கோளில் கறைபோல் காட்சிப்படும் தோற்றத்தை –

    “கன்னத்தில் காயமென்ன
    வெண்ணிலாவே – உன்
    காதலன்தான் கிள்ளியதோ
    வெண்ணிலாவே”

    – என்று பாடும் பட்டுக்கோட்டை தற்குறிப்பேற்ற அணியால் ஈராயிரம் ஆண்டின் தமிழ் அழகியல் மரபைத் தொடரும் கவிஞனாகவே தோன்றுகிறான்.

    பாடலில் ஆங்கிலச் சொற்களைக் கலந்திருக்கிறார். பெண்களை ஒரு பாடலில் வஞ்சகிகள் என்று வர்ணித்திருக்கிறார். ‘திருடராய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டையும் ஒழிக்கமுடியாது’ என்று மார்க்சியத்திற்கு எதிர்வரிசையில் நின்று பேசியிருக்கிறார் என்றெல்லாம் விமர்சனக் கணைகள் பட்டுக்கோட்டை மீது வீசப்படுவது உண்டு. அந்தச் சில்லறை விமர்சனங்களை நாம் சிரச்சேதம் செய்துவிடலாம். உலகத்தின் எந்தப் படைப்பாளியின் படைப்புகளிலும் கொஞ்சம் கலைக்கழிவு உண்டு. அதைவைத்து அம்பு தொடுப்பது விமர்சனங்களின் பொய்விடைப்பு என்றே கருதப்படும்.

    “பாடுவது கவியா? இல்லை பாரிவள்ளல் மகனா?” என்று கண்ணதாசன் பாடியபோது பாரிவள்ளலுக்கு மகனில்லை என்பது கூடக் கண்ணதாசனுக்குத் தெரியவில்லையே என்று ஒரு கூட்டம் முணுமுணுத்தது. கவிதையை நுகரும் நாசி இவர்களுக்குக் கடுகளவும் இல்லையே என்றுதான் கலையறிந்த கூட்டம் கவலைப்பட்டது.

    ஒரு பாடல் அல்லது ஒரு படைப்பின் வீரியம் கவிஞன் இறந்த பிறகும் அது எத்தனை காலம் இறவாமல் இறக்கிறது என்பதுதான். பட்டுக்கோட்டையின் பல பாடல்களுக்கு மரணமில்லை. அவை நிகழ்காலத்தின் நீரோட்டத்தில் வாழ்கின்றன.

    “பொதுப்பணியில் செலவழிக்க
    நினைக்கும்போது பொருளில்லே
    பொருளும் புகழும் சேர்ந்தபின்னே
    பொதுப் பணியில் நினைவில்லே

    போதுமான பொருளும் வந்து
    பொதுப்பணியில் நினைவும் வந்தால்
    போட்ட திட்டம் நிறைவேறக்
    கூட்டாளிகள் சரியில்லே”

    1959 இல் எழுதப்பட்ட இந்தப்பாட்டு ஐம்பத்தேழு ஆண்டுகளுக்குப் பிறகும் நிகழ்காலங்களின் அரசியலுக்கு நெருக்கமாக இருப்பது தற்செயலானதல்ல.

    இருபத்தொன்பது வயதில் இறந்துபோனவனின் உடல் கிடத்தப்பட்டிருக்கிறது. அவன் எழுதிய கடைசிப் பாடலுக்குரிய பணத்தைக் கையோடு கொண்டுவருகிறார் நடிகை பண்டரிபாய். பணத்தை வைத்துவிட்டு அழுதவர் அவன் எழுதிய கடைசிப் பாடலைப் படித்துப் பார்க்கிறார்.

    “தானா எவனும் கெடமாட்டான்
    தடுக்கிவிடாம விழமாட்டான்
    போனா எவனும் வரமாட்டான் – இதப்
    புரிஞ்சுக்கிட்டவன் அழமாட்டான்”

    புரிந்த பிறகும் அழுகை வருகிறது.

    தான் வாழவிருந்த ஆயுளையும் தன் பாட்டுக்கு ஊட்டிவிட்டுப் போய்விட்டான் பட்டுக்கோட்டை. தமிழ்ச் சமூகம் அவனை நாளும் நன்றியோடு நினைக்க வேண்டும். ஒவ்வொரு தமிழனும் தன் பாரம்பரியத்தின் பிரதியானால்தான் கலை இலக்கியத்தின் தொடர்ச்சியைக் காப்பாற்ற முடியும்.

    2030 இல் அவனது நூற்றாண்டு வருகிறது. அந்த விழாவை நாடு தழுவியெடுப்பேன் நானிருந்தால். இல்லையேல் தமிழ்ச் சமூகத்தை முன்னிலைப்படுத்தி என் பிள்ளைகள் எடுப்பார்கள். இந்தக் கட்டுரையை அதற்கான உயில் என்றும் எழுதுகிறேன்.

    (பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் 87ஆம் பிறந்தநாளை ஒட்டி எழுதப்பட்டது)

    Share
  • நைல் நதி நாகரீகம், எகிப்தின் ஒப்பற்றக் கட்டடக் கலைச் சிற்பப் படைப்புகள் -7

    — சி. ஜெயபாரதன்.

    நைல் நதி நாகரீகம்

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா

     

    ‘கால தேவன் எல்லாவற்றையும் நகைப்புக் கிடமாக்குகிறான்! ஆனால் பிரமிட் கூம்பகங்கள் கால தேவனை நகைப்புக் குள்ளாக்குகின்றன.’

    அரபிய முதுமொழி

    ‘சூழ்ந்துள்ள மேக மந்தைகள் தொடுவானிலிருந்து எழுந்து, நமக்கு முன்பு பிரம்மாண்டமான பிரமிட் கூரிய கோணங்களுடன் நிற்பதைக் காண்கிறோம். அதற்குப் பிறகு மாயத்திரை ஒன்று நம் முன்பு விழுகிறது. பிரமிடின் வலப்புறமும், இடப்புறமும் சில சமயங்களில் எருமை மாடுகள் புல் மேய்ந்து கொண்டுள்ளன. சில சமயம் கொக்கு அல்லது பெலிகன் பறவைகள் பறந்து செல்கின்றன. பாதி உடை அணிந்த வேளாண்மைக் காரர் தமது அன்றாடப் பணியில் முனைந்துள்ளனர். ‘

    ஜியார்க் ஈபர்ஸ், தொல்பொருள் ஆய்வாளி [Georhe Ebers, Archaeologists]

    Art & Architecture -6

    ‘ஓவியக் கலையை ஒருவர் வெறுத்தால் அவர் வேதாந்தத்தையோ அல்லது இயற்கை வனப்பையோ நேசிக்க மாட்டார். கண்கள் காணும் இயற்கையின் எல்லா வேலைப்பாடுகளையும் ஓவியம் பிரதிபலிக்கிறது. அத்தகைய ஓவியக் கலையை நீ வெறுப்பாயானால் இயற்கையின் விளைவானக் கடல், நிலம், பயிரினம், புல்லினம், பூவினம், விலங்கினம் அனைத்தின் கண்டுபிடிப்பையும், மனிதரின் ஆர்வத்தையும் மெய்யாக ஒதுக்குவதாய் அர்த்தம். ‘

    ஓவியக்கலை மேதை: லியனார்டோ டவின்ஸி

    Art & Architecture -2

    முன்னுரை: தனித்துவ முறையில் நுணுக்கமாக ஓரிடத்தில் மனிதர் கட்டிய பிரம்மாண்டமான எகிப்தின் காஸா பிரமிட் ஒன்றுதான் உலகிலே மாபெரும் அற்புதக் கணிதச் சாதனையாக கருதப்படுகிறது! கிறித்துவ யுகக் கடிகார முள் சுற்றி நாட்களைக் கணக்கிடுவதற்கு 1500 ஆண்டுகளுக்கு முன்பே, நாகரீகச் சின்னமான பிரமிட்கள் தோன்றி விட்டன! கோடிக் கணக்கான எகிப்தியப் பொறியாளர், கட்டடப் பணியாளர், கல் சிற்பிகள், கல்தச்சர், மரத்தச்சர், ஊழியர், அடிமைகள், கடவுளாகக் கருதப்படும் அவரது மன்னருக்காகப் பிரமிட் ஆக்கப் பணிகளில் கலந்து கொண்டார் என்று அறியப் படுகின்றது. சியாப்ஸ் பிரமிட் [Pyramid of Cheops] கட்டுவதற்கு ஃபாரோ பரம்பரையின் கூஃபூ வேந்தன் [Pharaoh King Khufu] 7 மில்லியன் நபர்களை வேலை செய்ய வைத்துக் கொண்டதாயும், அதைக் கட்ட 30 ஆண்டுகள் ஆயின வென்றும் எகிப்தியத் தகவல் ஒன்று கூறுகிறது! வலிமையும், செல்வமும் படைத்த கூஃபூ மன்னன் அத்தனை பேருக்கும், பிரமிட் கட்டும் போது உணவு, உடை, வீடு, கூலி அனைத்தும் கொடுத்துப் பேணியதாக அறியப் படுகிறது!

     

    பிரமிக்கத் தக்க பிரமிட் கோபுரங்களையும், சிற்பக் கோயில்களையும், அரசர் புதைப்பு மாளிகைகளையும் கட்டி முடிக்க எகிப்தியர் நுணுக்கமான கணித ஞானமும், விஞ்ஞான அறிவும், பொறியியற் திறமையும் கொண்டிருந்ததாகத் தெரிகிறது. அத்தகைய முற்போக்குக் கட்டங்களைப் பண்டைக் கால எகிப்தியர் முதலில் எப்படித் திட்டமிட்டார், பிறகு எப்படிக் கட்டினார் என்று கூடத் தற்போது நம்மால் தெளிவாக ஊகிக்க முடிய வில்லை! நமக்குப் புரிவதும் சிரமமாக உள்ளது! கால வெள்ளத்தில் அடித்துப் போனவை சில! கள்ளர் கூட்டம் புகுந்து திருடிச் சென்ற ஓவியச் சிற்ப, ஆபரணக் களஞ்சியங்கள் கணக்கில் அடங்கா! பல்லாயிரம் ஆண்டுகள் ஃபாரோ மன்னரின் உடல்களை எவ்விதம் பாதுகாப்பாக எகிப்தியர் அடைத்து வைத்தார் என்பது ஒரு புதிர்! ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக ஓவியங்களில் அழிந்து போகாத, வண்ணத் திரவங்களை, எங்ஙனம் தயாரித்தார் என்பது அடுத்த புதிர்! எகிப்தியர் வரை கணிதம் (Geometry), இரசாயனம் (Chemistry), மருத்துவம் (Medicine), உடல்பகுப்பு (Anatomy), இசை (Music) ஆகியவற்றை நன்கு அறிந்து பயன்படுத்தி வந்திருந்தார்கள்.

    Art & Architecture -14

    எகிப்தியரின் நுணுக்கமான பொறியியல் திறமை

    4000 ஆண்டுகளுக்கும் முன்னே வட்டத்தின் நிலை எண்ணான ‘பை ‘ [Constant Pi=3.14 (22/7)] என்பதைப் பற்றி எகிப்தியர் விளக்கமாக அறிந்திருந்தார் என்று ஜெர்மென் மேதை கார்ல்-ஹெச் [Karl-H] [தகவல்:21] என்பவர் கூறுகிறார். பிரம்மாண்டமான பிரமிட்களை ஆராய்ந்த ‘வரலாற்றுப் பிதா ‘ எனப்படும் கிரேக்க மேதை ஹெரொடோடஸ் [Herodotus (கி.மு. 484-425)] எழுதிய சரித்திரப் பதிவுகளில், பிரமிட் சாய்வு தளம் ஒன்றின் பரப்பளவு, பிரமிட் உயரத்தின் இரட்டைப் பெருக்கம் [Surface Area of Each Face of the Pyramid = Square of its Height (Height x Height)]. இந்த வரைகணிதப் பரப்பளவை [Geometrical Area] எகிப்த் ஆலயக் குருமார் கிரேக்க ஞானி ஹெரொடோடஸிடம் அறிவித்ததாகத் தெரிகிறது! அந்த முறையில் கணித்தால், கற்கோபுரமான பிரமிட்களின் பிரமிக்கத்த அளவுகள் 99.9% துல்லிமத்தில்தான் அமைந்திருக்கும்! ஆனால் எகிப்தியக் கணிதப் பொறியாளர் 100% துல்லிமத்தைக் குறிக்கோளாகக் கொண்டு, திட்ட மிட்டதாக அறியப் படுகிறது!

    Art & Architecture -15

    பிரமிட்களின் பரிமாணம் அகத்திலும் சரி, புறத்திலும் சரி அந்த அளவுகள், கல்லறைகளின் நேரமைப்புகள் [Orientations of Stone Compartments], பல்வேறு கோணங்கள் [Various Angles] ஆகியவைத் துல்லியமாய் நிறுவப்பட்டுத் தொடர்ந்து ‘பூரணத்துவ நியதி ‘ [Perfection] கடைப்பிடிக்கப் பட்டது! கற்பாறைகள் 70 டன் உச்ச எடையில் உடைக்கப் பட்டுப் பத்திலொரு பங்கு மில்லி மீடர் துல்லிமத்துக்குத் [1/10 of a millimeter Accuracy] தேய்த்து உராயப் பட்டன! கிஸா பீடத்தில் [Giza Plateau] மாபெரும் பரிமாணத்தில் உள்ள பிரமிடின் தனிச் சிறப்பு: மன்னன் ‘புதைப்பரண் ‘ [Burial Chamber] மூன்றில் ஓரளவு உயரத்தில் பிரமிட் உள்ளே துல்லியமாக அமைக்கப் பட்டிருக்கிறது! மேலும் புதையரண்களை அடையும் ‘வாயுப்பாதைகள் ‘ [Airshafts] எனப்படும் குடைவு வழிகளும் மிகத் துல்லிய பரிமாணத்தில் நிறுவப் பட்டுள்ளன! தற்காலத்தில் லேஸர் ஒளிக்கருவி போன்று நமது பொறி நுணுக்க முறைகள் மிக மிகத் துல்லியதாயினும், கற்கட்டடக் கலையில் எகிப்தியர் கையாண்ட நிபுணத்தை, நம்மால் மீண்டும் செய்து காட்ட முடியாது!

    கட்டடச் சிற்பக் கலையின் முப்பெரும் பிரிவுகள்

    எகிப்தியர் பிரமிட் நிறுவவும், ஆலயங்கள் கட்டவும், சின்னங்கள் அமைக்கவும் பெரும் கற்பாறைகளைத் துல்லியமாகக் குன்றுகளில் வெட்டிப் புரட்டி இழுத்து வரத் திறமையான, வல்லமையான ‘யந்திரவியல் நியதி முறைகளைக் ‘ [Principles of Mechanics] கையாண்டதாக அறியப்படுகிறது! கற்கலைப் பொறியியல் [Stone Technology], கட்டமைப்புப் பொறியியல் [Structural Engineering] போன்ற துறைகளில் வல்லவராய் இருந்திருக்கிறார்கள். கண்ணாடிக் குவளைகள் ஆக்கவும், அவற்றில் நிரந்தர ஓவிய உருவங்கள் வரையவும் தெரிந்திருந்தனர். முப்பெரும் காலப் பிரிவுகளில் எகிப்தியர் முடித்தக் கட்டடப் படைப்பு வேலைகளைப் பகுக்கலாம். முதலாவது கட்டடத் துறைக்காலம்: பூர்வீகப் பேராட்சிப் படைப்புகள் (கி.மு: 5000-3000). இரண்டாவது கட்டடத் துறைக்காலம்: இடைக்காலப் பேராட்சிப் படைப்புகள் (கி.மு: 3000-1700). மூன்றாவது கட்டடத் துறைக்காலம்: புதிய பேராட்சிப் படைப்புகள் (கி.மு: 1700-350)

    Art & Architecture -17

    பூர்வீகப் பேராட்சிப் படைப்புகள்: இந்தக் காலத்தில்தான் ஃபாரோ மன்னர்களால் பிரமிடுகள் கட்டப்பட்டன. இடைக்காலப் பேராட்சிப் படைப்புகள்: இந்தக் காலங்களில்தான் குன்றுகளைக் குடைந்து புதைப்பரண்கள் உண்டாக்கப் பட்டன. புதிய பேராட்சிப் படைப்புகள்: அப்போதுதான் கார்னாக், லுக்ஸர், எட்ஃபெள [Karnak, Luxor, Edfou] போன்ற கற்கோயில்கள் கட்டப் பட்டன. பிரமிட்கள் சிறந்த வரலாற்றைக் கூறினாலும், மூன்றாவது பிரிவில் கட்டிய ஆலயங்களும், ஆலயச் சிற்பங்களும் எல்லாவற்றையும் விட உன்னத பொலிவுச் சின்னங்களாகக் கருதப் படுகின்றன.

    Art & Architecture -16

    கட்டடச் சிற்பக் கலைகளின் தனித்துவப் பண்புகள்

    எகிப்திய நாகரீகச் சின்னங்கள் ஐம்பெரும் பண்புகளில் காணப் பட்டன. முதலாவது தனித்துவப் பண்பு: சின்னங்களின் வடிவும், பளுவும். மனித உயரம், எடையை விடப் பல மடங்கு மிகையான வடிவம், நிறை கொண்டவை அவை! கற்பாறை சில சமயங்களில் 25 அடி நீளத்தையும் மிஞ்சிய பரிமாணம்! எடையில் கூடியது 70 டன் பளுவான ஒற்றைக் கற்பாறை. அவை குன்றுகளில் குடைந்து வெட்டப் பட்டுக் கடத்திக் கொண்டு வரப்பட வேண்டும். இரண்டாவது தனித்துவப் பண்பு: குறிப்பிட்ட முறையில் ஒயிலாகச் செதுக்கப் பட்ட தூண்கள், சிற்பக் கீறல் ஓவிய வேலைப்பாடுகள் கொண்டவை. மூன்றாவது தனித்துவப் பண்பு: அவரது சிற்ப ஓவிய வடிவங்கள் பல பன்னிறக் கலைத்துவ நளினம் பெற்றிருந்தன. பிரமிட், ஆலயங்களில் உள்ள கட்டடச் சுவர்கள், பெரும்பான்மையான தூண்கள் அனைத்திலும் ஒப்பனைகள், ஓவியங்கள், சின்னங்கள், வேலைப்பாடுகள் வரலாறுகளாய் பொறிக்கப் பட்டுள்ளன.

    அனைத்துச் சின்னங்களும், சிற்ப ஓவியங்களும் எகிப்தை ஆண்ட பூர்வீக வேந்தர்களின் வரலாறுகளாய் உள்ளன. அவற்றில் எகிப்தியர் பயன்படுத்திய வண்ணக் கலவைகள் ஆயிரக் கணக்கான் ஆண்டுகளாய் கால வெள்ளம் அழிக்காதபடி யிருப்பது ஓர் தனித்துவப் பண்பாகும். நான்காவது தனித்துவப் பண்பு: கோயில் மேற்தளம், புதைப்பரண்களின் மேற்தளம், வாசல், பலகணி ஆகியவை அமைக்கப் பளுதாங்க உதவும் பாறை மேற்தட்டு போன்றவை மட்டநிலை உத்தரங்களைப் பயன்படுத்தின. நிறுவப்படும் அனைத்துக் கட்டடமும், திட்டமிடும் ‘கட்டமைப்பு ‘ [Structure] முறைகள், நேரமைப்புகள், சீரமைப்புகள் [Orientations & Alignments] ஆகிய சீரியச் செவ்வமைப்பு முறைகளைச் சார்ந்துள்ளன. ஐந்தாவது தனித்துவப் பண்பு: பிரமிட் கூம்பகத்தின் பக்கங்கள் சாய்ந்தவை! எத்தனை பெரிய பூகம்பம் நேர்ந்தாலும், உட்புறமுள்ள புதைப்பரணுக்கு எவ்விதப் பாதிப்பும் விளையாது! ஆலயச் சுவர்கள் சரிந்த வடிவத்தில் உள்ளதால், அவற்றுக்கும் நிலைத்துவம் [Stability] மிகுதியாக இருக்கிறது!

    Art & Architecture -4

    பிரமிட்கள் இரண்டு விதத் தனித்து ஏழில் பண்புகளில் உலகச் சிறப்புற்றவை. ஒன்று: எளிமை வடிவம் [Simplicity]; மற்றொன்று: சீர்ச் செம்மை உடமை [Symmetry]. அதாவது எப்புறம் நோக்கினும் சீரான கோணம், சீரான சரிவு, சீரான பரப்பு, சீரான பக்கம், சீரான மட்டம், சீரான அமைப்பு ஆகியவற்றைப் பெற்றுள்ள ஓர் அற்புதக் காட்சி. பிறகு அவற்றுள் இருந்த ஒற்றுமை: பிரமிக்கத் தக்க தோற்றம்! ஈரடிப்பில்லாத வரட்சியான பாலைவனக் கால நிலையில் எகிப்த் நாடு இருப்பதால், பிரமிடுக்குள் புதைத்து வைத்த மன்னர்களின் சடலங்கள், உடைகள், நகைகள், மரச் சாதனங்கள் போன்றவை கறை படாமல், கசங்கிப் போகாமல் பல்லாயிரம் ஆண்டுகள் பாதுகாப்பாய் இருந்தன.

    Art & Architecture -7

    ஒரு நாட்டு மக்களின் தனித்துவ நுட்பக் கலைத்துவத் திறமைகள் அவரது ஓவியம், சிற்பம், கட்டடம், காவியம், கானம், நாட்டியம் ஆகியவற்றின் மூலமாக வெளிப்படுகின்றன. அவற்றின் ஆக்க முறைகளை நோக்கினால் அவை அனைத்தையும் ‘படைக்கும் நியதி ‘ [Law of Composition] ஒன்றே ஒன்றுதான். இசைக் கீதத்தைப் படைத்தால் என்ன ? திரைத் துகிலில் ஓவியத்தைத் தூரிகையால் தீட்டினால் என்ன ? காவிய நூலை ஒருவன் ஆக்கினால் என்ன ? கற்பாறையில் சிற்பம் ஒன்றைச் சிற்பி செதுக்கினால் என்ன ? பூமித் தளத்தைச் சீர்ப்படுத்தி ஓர் மாளிகையைக் கட்டடக் கலைஞன் கட்டினால் என்ன ? நர்த்தகி தாளத்திற்கு ஏற்றபடி நாட்டியம் ஆடினால் என்ன ? பிரமிடை எகிப்தியர் திட்டமிட்டு நிறுவினால் என்ன ? எல்லாப் படைப்புகளுமே ஒரே ஓர் ஒழுக்க நெறியைத்தான், அதாவது ஒரே ஒரு படைப்பு நியதியைத்தான் பின்பற்றுகிறது. ஓவியம் சிறியது, ஒருவர் படைப்பது! ஆனால் பிரமிட் பிரம்மாண்டமானது! பல்லாயிரம் பேர் கூடிப் பணிபுரிந்து படைப்பது!

    Art & Architecture -5

    (தொடரும்)

    தகவல்:

    1. Guide to Places of the World Egypt By: Reader ‘s Digest (1987)

    2. Atlas of the World History By: Harper Collins (1998)

    3. The Ancient World, Quest for the Past (1984)

    4. How in The World By: Reader ‘s Digest (1990)

    5. Age of the Pyramids, Egypt ‘s Old Kingdom By: National Geographic (January 1995)

    6. Finding A Pharaoh ‘s Funeral Bark & Riddle of the Pyramid Boats By: National Geographic (April 1988)

    7. The History of Art for Young People By: H.W. Janson.

    8. Ancient Egypt, Who Built the Pyramids, How old Are the Pyramids, PBS & WGBH Web Site (1997)

    9. The Sphinx of Egypt – The Great Sphinx [www.nmia.com/~sphinx/egyptian_sphinx.html] (May 23, 2002)

    10 Ramesses II Temple & Nafertari Temple at Abu Simbel Egypt [Several Web Sites]

    11 The New American Desk Encyclopedia, Abu Simbel (1989)

    12 Britannica Concise Encyclopedia, Abu Simbel Temples (2003)

    13 Egyptian Art & Paintings [Several Websites]

    14 Egypt: Art & Architecture [Several Websites]

    15 Egyptian Art [ http://www.artchive.com/artchive/E/egyptian.html%5D From ‘The Story of Art ‘ By: Ernest Hans Gombrich.

    16 History of Western Art, Nature in Egyptian Art By: Lynn Salerno University of North Carolina [http://home.sprynet.com/~bdsalern/egyptart.htm]

    17 Egyptian Dancers [From Websites].

    18 The Art of the Amarna Period By: Magaera Lorenz.

    19 Egyptian Architecture: Pyramids, Tombs, Temples, Statues & Monuments. [Articles: 1992, 1996]

    20 Egyptian Architecture, Pyramids & Temples [www.oldandsold.com/articles10/fameous_buildings-1.shtml]

    21 The Geometry & Mathematics of the Great Pyramid By: Karl-H [Homann ‘s Manuscript (1996)]

    22. http://news.psu.edu/story/141300/2008/03/24/research/probing-question-how-were-egyptian-pyramids-built

    23. https://en.wikipedia.org/wiki/Egyptian_pyramids [March 1, 2016]

    24. https://en.wikipedia.org/wiki/Egyptian_pyramid_construction_techniques [April 4, 2016]

    *****************************

    S. Jayabarathan [jayabarathans@gmail.com] (April 11, 2016) [R-1]

    Share
  • நாற்று

    — நிர்மலா ராகவன்.

    நான்கு குறைப் பிரசவங்கள். பின்னர், சோதனைக்குழாய்வழி வயிற்றில் வளர்ந்த கருவும் மூன்றே மாதங்களில் வெளிப்பட்டு விட்டது. `தத்து எடுக்கலாம்,’ என்று அவர் சொன்னதற்கும் அவள் செவி சாய்க்கவில்லை. குழந்தை அவள் உதிரத்தில்தான் உதிக்க வேண்டுமாம். ஒருவரையும் ஏறிட்டுப் பார்க்க விரும்பாது, சுவற்றுப்புறம் திரும்பி விசும்பிக் கொண்டிருந்த ஆசைமனைவியின் முகத்தில் சிரிப்பைக் காண வேண்டுமென்றால், தமிழ்நாட்டுக்கென்ன, உலகின் எந்தக் கோடிக்கானாலும் அழைத்துப் போகலாமே என்ற யோசனை வந்தது அந்தச் செல்வந்தருக்கு.

    `மனசைத் தளர விடாதேம்மா. இன்னும் ஒரு வழி இருக்கு. இதைப் படிச்சுப் பாரு!’ என்று ஒரு பத்திரிகையில் வந்திருந்த கட்டுரையைக் குறிப்பிட்டுக் காட்டிவிட்டு அப்பால் சென்றார்.
    பல பெண்களின் பேட்டியுடன் வந்திருந்ததை ஒரு கதையாக நினைத்துப் படித்தாள்.

    “தே! நீ என்னா சொல்றே? இப்ப தலையைத் தலையை ஆட்டிட்டு, யார் பிள்ளையோ என் வயத்திலே வளர்றதைப் பாக்கிறப்போ, ஒன்னால அதை ஏத்துக்க முடியுமா?”

    ஆட்டோ ஓட்டிப் போனபோது ஏற்பட்ட விபத்தில் இடுப்புக்குக்கீழ் சுவாதீனம் அற்றுப்போய், காலமெல்லாம் மனைவியின் கையை எதிர்பார்க்க வேண்டும் என்ற நிலை வந்தபோதுகூட ராசப்பா அவ்வளவு குழம்பவில்லை. எதுவும் சொல்லத் தெரியாது, அவளையே பார்த்தான். அவனைக் கணவனாக வரித்த கொடுமை, இப்போது குடும்ப பாரத்தைச் சுமக்க வேண்டிய நிர்ப்பந்தம் அவளுக்கு. எந்த இளம்பெண் எப்போது நிர்க்கதியாக நிற்பாள் என்று காத்திருந்தவர்போல, அவர்கள் வாழ்க்கையில் நுழைந்திருக்கிறாரே இந்த மனிதர்! இப்படியெல்லாம்கூடவா பணம் சம்பாதிப்பார்கள்!

    “ஒங்களுக்கென்ன! ஒங்க பேரைச் சொல்ல லட்டுமாதிரி பிள்ளை இருக்கு. எத்தனை பேருக்குக்கி டைக்கும் இந்தப்பாக்கியம்!” என்று நைச்சியமாக ஆரம்பித்த தரகர் பூபதி, “சில பேருக்கு, கல்யாணமாகி பத்து, பதினஞ்சு வருஷமானாலும் பிள்ளை பாக்கியமே இல்லை, பாவம்!” என்று பொய்யாகப் பரிதாபப்பட்டார். பின், அவர்களை ஒரு பார்வை பார்த்துவிட்டு, “எல்லாத்துக்கும் கொடுப்பினை வேணுமில்ல!” என்று கொக்கி போட்டார். அவர் மேலும் சொன்னதைக் கேட்டு, நாகம்மாதான் வெகுவாக அதிர்ந்து போனாள்.

    யாருடைய கர்ப்பப்பையிலோ வளரவேண்டிய கருவை அவளுடைய வயிற்றில் விதைப்பார்களாம். அதை முழுமையாக வளரவிட்டு, பெற்றெடுத்து, அதற்கு உயிர் கொடுத்தவர்களிடமே கொடுத்துவிட வேண்டுமாம்!

    “சும்மா இல்ல. மாசாமாசம் ஆயிரம் ரூபாய் குடுப்பாங்க. பிள்ளை பிறந்ததும், சுளையா இன்னொரு அம்பதாயிரம்!” நைச்சியமாகச் சொன்னார் பூபதி. பணத்தாசைக்கு மசியாதவர் யார் என்று எண்ணித்தான் அவர் அந்த இடத்துக்கு வந்திருந்தார்.

    ஆனால் நாகம்மா வேறு ஒன்றை யோசித்தாள்: `என் வயத்தை வாடகைக்குக் கேக்கறாங்க!’ உடலை விற்றுப் பிழைப்பதுபோல் ஆகிவிடாது?

    இவளை அதிகம் யோசிக்கவிட்டால் ஆபத்து என்று பூபதி மேலும் தூபம் போட்டார். “இதெல்லாம் முப்பது, நாப்பது வருஷமா அமெரிக்காவில இருக்கிற நடைமுறைதான். இல்லாதவங்களுக்கு இருக்கிறவங்க குடுக்கிற தானம்! அதோட.., நீங்க ஒண்ணும் சும்மா குடுக்கப்போறதில்ல!”

    தன்னை எதற்குக் குறிவைத்தார் இந்த மனிதர்? வெளிப்படையாகவே கேட்டாள் நாகம்மா.

    “அது வந்தும்மா..,” சற்று யோசனையில் ஆழ்ந்தார். “பிறக்கப்போற குழந்தைக்கு நீங்க அம்மா இல்லியா? கண்ட கழிசடை எல்லாம் அம்மா ஆகிட முடியுமா? அதான், ஒங்களைமாதிரி.. நல்ல விதமா குடும்பம் நடத்தி, ஒரு பிள்ளையாவது பெத்துக்கிட்டவங்களாப் பாக்கறோம். வயசு.. ஒரு இருபத்தஞ்சிலேருந்து முப்பதுக்குள்ளே இருந்தா, பிரசவத்திலும் குளறுபடி இருக்காது”.

    இன்னொரு உயிரா! வீட்டிலிருக்கிற மூன்று பேருக்கே அவள் கூலிவேலை செய்து கொண்டு வருகிற சொற்ப வருவாயில் அரை வயிறுகூட நிரம்புவதில்லை.

    அவளது மன ஒட்டத்தைப் புரிந்துகொண்டவராக, “பேசினதைத் தவிர, ஒங்களுக்கு ஆகிற சாப்பாட்டுச் செலவு, பால், பழம், உடை எல்லாத்துக்கும் தனியா குடுப்பாங்க. நீங்க வேலைக்குப் போக வேணாம்,” என்று மேலும் ஆசை காட்டினார்.

    நாகம்மாவுக்கு ஒரு முடிவுக்கும் வரமுடியவில்லை. அழுகைதான் வந்தது. அதைப் பார்க்கப் பொறாதவனாய், முதன்முறையாக ராசப்பா பேசினான்: “யோசிச்சுச் சொல்றோங்க ஐயா!”

    “ஒங்க இஷ்டம்!” என்றபடி எழுந்தார் பூபதி. வாசலுக்கு வந்தவர், தன்னையும் அறியாது மூக்கைப் பிடித்துக்கொண்டார். ஆறெனப் பெருகி ஓடும் சாக்கடை. அதையே நீச்சல் குளமாகப் பாவித்து, மனமகிழ்ந்து, எம்பி எம்பிக் குதித்துக்கொண்டிருந்த பன்றிகள்.

    `எப்படித்தான் இந்த நாத்தத்திலே சாப்பிட்டு, தூங்கி, குடும்பம் நடத்தறாங்களோ!’ அருவருப்புடன் உதட்டைச் சுழித்துக்கொண்டார். `இந்த லட்சணத்தில, சுலபமா சம்பாதிக்க வழி காட்டினா, அதுக்கு ஆயிரம் யோசனை!’ இயலாமையில் ஆத்திரம் பிறந்தது அவருக்கு.

    மீண்டும் ஏதோ நினைத்துக்கொண்டவராய், குடிசையினுள் நுழைந்து, சாணி போட்டு மெழுகியிருந்த தரையில் அமர்ந்தார். “முக்கியமான ஒண்ணைச் சொல்ல மறந்துட்டேனே! இதில தில்லுமுல்லு ஏதுமில்ல. ரெண்டு தரப்புக்கும் வக்கீல் வெச்சு ஒப்பந்தம் எழுதுவாங்க டாக்டரம்மா. ஒங்களுக்கும், பிள்ளையை வாங்கப்போறவங்களுக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. இருக்கக்கூடாது!” என்று அழுத்திச் சொன்னார். இந்த ஏற்பாட்டால் தனது பொருளாதாரம் கணிசமாக உயரப்போவதை கற்பனை செய்து மகிழ்ந்தார்.

    ராசப்பாவுக்கும் ஆசை பிறந்தது. கைநிறையப் பணம் கிடைத்தால், தான் இப்படி படுக்கையே கதி என்று இருக்க வேண்டாம். ஒன்றுக்குப் போக, குளிக்க என்று எந்த ஒன்றுக்கும் பிறர் கையை எதிர்பார்க்க வேண்டாம். எத்தனை நாட்கள்தான் முகம் சுளிக்காமல் செய்வாள் நாகம்மா!

    “இன்னும் என்ன யோசனை, நாகு! ஐயா சொல்றதுபோல, இது ஒரு வியாபாரம்னு நெனச்சுக்கயேன்,” என்றான்.

    அடைத்த குரலில் நாகம்மா பூபதியைக் கேட்டாள்: “அந்தப் பிள்ளை எப்படி..?”

    அவர் நெற்றியில் அடித்துக்கொண்டார். “முக்கியமானதைச் சொல்லாம விட்டுட்டேன், பாருங்க! என்று பெரிதும் நொந்துகொண்டவராக, “இது மத்த பிள்ளைங்களைப்போல இல்ல. அம்மா ஒடம்புக்கு வெளியே உருவாகுது. அப்பாவோட உயிரணு, அம்மாகிட்டேயிருந்து சினைமுட்டை ரெண்டையும் டாக்டரே ஒண்ணா சேர்த்து..,” என்று உற்சாகமாக ஆரம்பித்தவர், இந்தப் பாமரர்களுக்கு விஞ்ஞான ரீதியில் விளக்கம் எதற்கு என்று நிச்சயித்தவராக, “மண்ணிலே விதை போட்டா, செடி முளைக்கிற மாதிரிதான்னு வெச்சுக்குங்களேன். கரு உருவாகிடுச்சுன்னு உறுதி ஆனப்புறம், ஒங்க வயத்தில அதை விதைச்சுடுவாங்க. ஏன்னா, அந்த அம்மா வயத்தில கரு தங்கறதில்லே!”

    “நாத்து நடறமாதிரி!” என்றாள் நாகம்மா. அவளுடைய முகத்தில் தெளிவு. தான் அறியாத அந்தப் பணக்காரப் பெண்மணியின்மேல் இரக்கம் சுரந்தது. தான் அவளைவிட ஒரு விதத்தில் மேலானவள்!
    அச்சமயம் பார்த்து, சிறுவன் வேலு தூக்கத்திலிருந்து எழுந்தான். நேராக நடந்து வந்து, தாயின் மடியில் அமர்ந்துகொண்டு, “பசிக்குதும்மா,” என்று முனகினான். இன்னும் கொஞ்ச காலத்துக்காகவாவது அவள் குடும்பத்தினர் வயிறாரச் சாப்பிடுவது அவள் கையில்தான் இருக்கிறது. அதைப்போய் தடுப்பானேன்!

    பெருமூச்சுடன் அவனை அணைத்து, “ஒனக்குத் தம்பிப்பாப்பா பொறக்கப்போறாண்டா!” என்றாள்.

    மாதங்கள் உருண்டன.

    தாயின் பருத்திருந்த வயிற்றைத் தொட்டுப்பார்த்தான் வேலு. கரு உருண்டு, இன்னொரு கோடிக்குச் சென்றது. நாகம்மா கனிவுடன் வயிற்றைத் தடவினாள். சுகமான சுமை. யாருடைய உயிராக இருந்தால் என்ன! இப்போதெல்லாம் இந்தப் பிள்ளைக்காகவே அவள் சாப்பிடுகிறாள், தூங்குகிறாள்! இந்தக் குழந்தைக்கு செடிகளைப் பிடிக்கும், இசையில் ஆர்வம் என்று தன் மனதில் எழும் நெகிழ்ச்சியால் புரிந்து போகிறது அவளுக்கு. வீட்டின் பின்புறமுள்ள தோட்டத்திலேயே நாளின் பெரும்பகுதியைச் செலவழிக்கிறாள். குழந்தை அதிர்ந்துவிடப்போகிறதே என்ற கரிசனத்துடன், சினிமாப் பாடல்களைத் தவிர்க்கிறாள். மலேசிய வானொலியில் கேட்டிருந்த பழம்பாடல்களையும், பக்திப் பாடல்களையும் வாய் ஓயாது முணுமுணுக்கிறது. ஸ்ருதி, ஸ்வரம் போன்ற வார்த்தைகள் அவளது அகராதியில் கிடையாது. ஏதோ, தனக்குத் தெரிந்தவரை கள்ளக்குரலில் கீச்சுமூச்சென்று பாடுகிறாள். அவள் வயிற்றுக் கருவும் அதில் திளைத்து ஆனந்தப்படுவதாகத்தான் தோன்றுகிறது அவளுக்கு.

    வேலுவை உண்டாகி இருந்தபோது இப்படி ஆழ்ந்து யோசித்ததாக நினைவில்லை. எதுவுமே கைநழுவிப் போய்விடும் என்ற நிலை வரும்போதுதான் அதன் மீதுள்ள ஆசை அதிகரிக்குமோ என்று யோசிக்க, கலக்கம் பெருகியது. தன்னுடலின் ஒரு பாகமாக பத்து மாதங்கள் இருக்கப்போகும் பிள்ளை. அது ஆணா, பெண்ணா, கறுப்பா, சிவப்பா, தலைமயிர் சுருட்டையா, அடர்த்தியா என்றெல்லாம்கூட அவள் பார்க்கக்கூடாதாம் நாகம்மாவுக்கு அழுகை வந்தது. “அம்மா!” என்று விம்மினாள்.

    “அம்மான்னு இப்போ கத்தக்கூடாது. அப்புறம், குழந்தை ஒன்னை விட்டுவர மனசில்லாம தவிக்கும்!” பிரசவ வலி எடுத்திருந்தவளைத் தாதி மிரட்டுகிறாள்.

    “குழந்தைக்கும் தன்னை விட்டுத் தனியாகப் பிரிய மனம் வராதா?’ லேசான திருப்தி நாகம்மாவுக்குள். உடனே, தன் மனம் போன போக்கிற்காகத் தன்மேலேயே கோபம் எழுகிறது. `இது என்கூட இருக்கப்போவது இன்னும் சில நாட்களே!’ என்று தான் உருகியதோடு போகட்டும். அருமையாக வளர்த்த இக்கருவும் துயரப்பட வேண்டாம். வலி தாளாது, கண்களை இறுக மூடி, வாயை மட்டும் கோணுகிறாள்.
    திடீரென ஒரு நிம்மதி, உடல் லேசாகியதுபோல். தொடர்ந்து, பூனைக்குட்டி கத்துவதுபோல ஓர் ஒலி!

    குழந்தை பிறந்துவிட்டது என்று உணர்ந்தபோதே அச்சமும் அலைக்கழைத்தது. அவசரமாகக் கண்ணைத் திறந்தாள். சமநிலைக்கு வந்திருந்த வயிற்றைத் தன்னிச்சையாகத் தடவினாள். பக்கவாட்டில் கண் போயிற்று. வெறுமை — அவள் வயிற்றிலும், பக்கத்திலும். நாகம்மா விம்ம ஆரம்பித்தாள்.

    “இப்போ எதுக்கு அழுவறே? மொதல்லேயே எல்லாம் கேட்டுட்டுத்தானே ஒத்துக்கிட்டே? பேசாம தூங்குவியா!” பச்சைப்பிள்ளைக்காரி கண்கலங்கி, அவள் உடம்பு கெட்டுவைத்தால், தனக்கு வேலை அதிகமாகுமே என்ற எரிச்சல் தாதிக்கு. கண்ணை மூடிக்கொண்டாள் நாகம்மா. குழந்தையின் ஈனஸ்வரமான அழுகைக் குரல் இன்னிசையாக அவள் காதில் ஒலித்துக்கொண்டே இருக்க, அப்படியே உறக்கத்தில் ஆழ்ந்தாள்.

    “என்ன ராசப்பா? சக்கர நாற்காலி வாங்கிட்டாப்பல இருக்கு! சாப்பாட்டுக் கடை வெச்சிருக்கியா? நடக்கட்டும், நடக்கட்டும்,” ஆரவாரமாகப் பேசியபடி வந்தார் தரகர் பூபதி. “ஒன் பெண்டாட்டி எங்கே? கூப்பிடு!”

    வெந்த இட்லிகளைத் தட்டில் கொட்டிக்கொண்டிருந்த நாகம்மா அவர் குரலைக் கேட்டதும் பாய்ந்து வெளியே வந்தாள். “பிள்ளை எப்படிங்க ஐயா இருக்கு?”

    “அதுக்கென்ன! பெரிய இடத்துப் பிள்ளை! அதைப் பெத்தவங்க ஒங்களை தெய்வமாத்தான் நினைச்சுக்கிட்டு இருக்காங்க,” என்று அளந்தார். குரலைக் கனைத்துக்கொண்டு, “அதே மாதிரி இன்னொரு கேசில்ல! இதை நீங்க ஒத்துக்கிட்டா, பெரிய ஹோட்டலே வெச்சுடலாம்,” என்று ஆரம்பித்தார்.

    ராசப்பாவின் முகத்தில் லேசான ஆசை படர்ந்தது. விளங்காத பயலென்று தன்னை இப்போது பழிப்பவர்கள் தான் ஹோட்டல் முதலாளியானால் எப்படி மரியாதை செய்வார்கள் என்று கற்பனை பாய, உடல் நிமிர்ந்தது. சற்றே கெஞ்சலான பார்வையை மனைவியின்மேல் ஓடவிட்டான்.

    யாரும் சற்றும் எதிர்பாராவண்ணம், நாகம்மா தரகர்மேல் பாய்ந்தாள். “ஒங்களுக்கு ஒரு பெரிய கும்பிடு, சாமி. இந்த எடத்தைவிட்டுப் போயிடுங்க. என்னோட வயத்திலே சுமந்து, சுமந்து யாருக்கோ தூக்கிக் குடுக்க என்னால முடியாது. `தம்பிப் பாப்பா எங்கம்மா?’ன்னு எம்பிள்ளை கேக்கறப்போ எல்லாம் நான் துடிக்கிற துடிப்பு ஒங்களைமாதிரி ஆம்பளைங்களுக்கு எங்க புரியப்போகுது!” என்று நேரிடைத் தாக்குதலில் இறங்கினாள்.

    “நாகு!” தங்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியவரிடம் மரியாதைக் குறைவாகப் பேசுகிறாளே என்ற பதைப்புடன் அவளை அடக்க முயன்ற கணவனின் குரல் அவள் காதில் விழவில்லை. தன்பாட்டில் பேசிக்கொண்டே போனாள்.

    “அன்னிக்கு நாத்துன்னு சொன்னேன். ஆனா, நான் மண்ணில்லே. அது இப்பதான் புரியுது!” என்று விம்மியவள், “ஒரு செடியைப் பிடுங்கி நடறப்போகூட வேரோடக் கொஞ்சம் தாய்மண்ணையும் சேர்த்துத்தான் எடுப்போம். எனக்கு அந்த கொடுப்பினைகூட இல்லாம போச்சே! பிள்ளை முகத்தைக்கூட பாக்க முடியாத பாவி ஆயிட்டேனே!” என்று பெரிதாக அழ ஆரம்பித்தாள்.

    அவளுடைய ஆத்மாவின் ஓலத்தைப் புரிந்துகொள்ள முடியாது, “ஏதோ குழப்பத்திலே இருக்கீங்கபோல! நான் போயிட்டு, அப்புறமா வரேன்,” என்று எழுந்தார் தரகர்.

    “வராதீங்க. போங்க! பிள்ளை பெத்ததும், மாரிலே பால் கட்டிக்கிட்டு நான் துடிச்ச துடிப்பு ஒங்களுக்குப் புரியுமா?” வெறிபிடித்தவளாகக் கத்தினாள் நாகம்மா. “எங்களுக்கு இனிமே சோத்துக்குப் பஞ்சம் இல்லாம இருக்கலாம். ஆனா, நான் சாகிறவரைக்கும், `என் வயத்திலே சுமந்து பெத்த பிள்ளை எங்கே இருக்கோ, எப்படி இருக்கோ! அதைப் பாக்கக்கூட முடியலியே!’ன்னு என்னோட அடிமனசு குமுறிக்கிட்டே இருக்குமே! ஒங்க பணத்தால அதைச் சமாதானப்படுத்த முடியுமா? ஏன்யா? ஏழைங்கன்னா, பணந்தான் கிடையாது. உணர்ச்சிங்ககூட இருக்காதா?” வார்த்தை குழற முடித்துவிட்டுக் கதறினாள்.

    `படிச்சுட்டியா? சென்னைக்குப் போக ரெண்டு டிக்கெட் புக் பண்ணடடுமா, டியர்?’ மனைவியின் முகம் தெளிந்திருக்கிறதே என்ற உவகையுடன் கேட்டார் செல்வந்தர்.

    ‘நாடு விட்டு நாடு போய், வாடகைத் தாயெல்லாம் வேணாங்க. நம்ப மகிழ்ச்சிக்காக இன்னொரு பொண்ணை அழவிடறது நியாயமில்லே. இங்கேயே ஒரு குழந்தையை தத்து எடுக்கலாம்!’

    (மலேசிய சுதந்திர தின சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றது, 2005)

    Share
  • இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    jzcuwh

     

    ‘’தென்முக தெய்வ தினத்தில்(குருவாரம்) உதித்திடும்,
    துன்முகி ஆண்டில் திருமால்முக் -கண்ணனுடன்
    நான்முகன் சேர்ந்திருந்து நல்லாசி தந்தனர்:
    வான்முகம்பூ மாரி வரம்’’….கிரேசி மோகன்….

    தென்முக தெய்வம் -தக்‌ஷிணா மூர்த்தி….

    Share
  • சித்திரைப்பெண்ணே வருக!

    -சரஸ்வதி ராசேந்திரன்

    சித்திரைப்  பெண்ணே வருக
    சித்தம் மகிழ்ந்திட அருள்தருக
    துன்முகி  வருடமே  வருக                    newyear1
    துன்பங்கள்  தீர்த்திட  அருள்க
    உயிர்கள்  உயிர்த்திட  வருக
    பயிர்கள் செழித்திட மழைதருக
    வறுமையை  ஓட்டி  அருள்க
    குறுகிய  எண்ணம் தீர்க்க வருக
    பருவம் தவறாமல் மழை தந்து
    உருவாக்கி  ஏற்றம் தருக உலகுக்கு
    வசந்த  காலமே   வருக
    இசைந்து  இன்பம் தருக
    அளவாய் மழை வெயில் தந்து
    வளமாய்  நாட்டை ஆக்குக
    இளவேனில் காலமே வருக
    இளநீர்போல் சுவை தருக!

     

     

    Share
  • சித்திரையை வரவேற்போம் !

     எம் . ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்திரேலியா 
     
    unnamed
     
                    உள்ளமெலாம் உவகை  கொள jeya
                               ஊரெல்லாம் மகிழ்ச்சி பொங்க
                    வெள்ளமென மக்கள் எலாம் 
                                வீதியிலே நிறைந்து  நிற்க
                     உள்ளூரின் கோவில் தனில்
                               ஊர்வலமாய் தேர் அமர்ந்து
                      வண்ண மயில் வாகனார்
                                  வடிவாக வலம் வருவார் !
     
                       எண்ணம் எலாம் இனிப்பாக
                                   எல்லோரும் இணைந்து அங்கே
                       இழுத்து நிற்போம் தேரதனை
                                        எங்கள் ஊரே திரண்டுநிற்கும் 
                        புத்தாடை தனை உடுத்தி
                                       புதுத்தெம்பு மனத் திருத்தி
                       அத்தனை பேர் கைகளுமே
                                       அத்தேரின் வடம் பிடிக்கும் !
     
               எத்தனையே கனவுகளை எல்லோரும் மனத்திருத்தி
               ஏங்கிய முகத்தோடு இறைவனையே பார்த்துநிற்பர்
               எதிர்காலம் இன்பமாய் இருப்பதற்கு அருளிடென
               எம்பெருமான் முருகனது தேரிழுப்பார் எல்லோரும் !
     
               சித்திரையின் தேரோட்டம் சீக்கிரமாய் வரவெண்ணி
               அத்தனைபேர் உள்ளங்களும் ஆவலாய் காத்திருக்கும்
                முத்திக்கு வித்தான முழுமுதலின் தேரிழுத்தால்
                எத்திக்கும் எவர்வாழ்வும் எழிலோங்கி விளங்கிடுமே !
     
               ஊரெல்லாம் கூடிநின்று தேரிழுக்கும் சித்திரையை
               உவப்புடனே வரவேற்று உளம்மகிழ்ந்து நின்றிடுவோம்
               யாரோடும் பகைகொள்ளா நல்லமனம் தருகவென
               மால்மருகன்  முருகனிடம் மனமார வேண்டிநிற்போம் !
     
               வெளிநாட்டில் உள்ளவரும் விரும்பித்தேர் இழுக்கின்றார் 
               வேலவனே வினைதீர்த்து விரும்பியதைக் கொடுத்திடென
               சீலமுடன் நாம்வாழ சித்திரையை வரவேற்போம் 
               ஞாலமதில் நாம்சிறக்க நற்குமரா அருள்தருவாய் !
     
               எத்திக்கு இருந்தாலும் சித்திரையை வரவேற்போம்
               அத்தனைபேர் வாழ்வினிலும் ஆனந்தம் பெருகிடவே
               சொத்தாக இருக்குமெங்கள் சொந்தங்கள் சேர்ந்திடவே
               சித்திரையில் சிரித்தென்றும் சிறப்புடனே இருந்திடுவோம் !
     
               மூத்தோரை அரவணைத்து முத்தங்கள் கொடுத்திடுவோம்
               சாத்திரங்கள் பார்த்தாலும் சரியாகச் செயற்படுவோம் 
               ஏற்றிவைத்த பாரமெல்லாம் இறக்கிவைக்க முயன்றிடுவோம்
               எங்கள்வாழ்வில் சித்திரையால் இனிமைவர வேண்டிநிற்போம் !
     
              புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் புதுமைபல பார்த்தாலும்
              நலம்விளைக்கும் சித்திரையை நாம்மறத்தல் நன்றல்ல 
              நமதுகலை பண்பாடு நம்மனத்தில் இருந்துவிடின்
              நல்லதொரு சித்திரையை நாளெல்லாம் பார்த்திடலாம் ! 
     
               சித்திரையில் சிரித்திடுவோம் சிந்தனையை வளர்த்திடுவோம்
               அத்தனைபேர் மனங்களிலும் அன்புவரச் செய்திடுவோம் 
               சத்தியத்தைக் கடைப்பிடிப்போம் சன்மார்க்க வழிசெல்வோம்
               சித்திரையைச் சிறப்பாக்க சேர்ந்துநிற்போம் வாருங்கள் !
    Share
  • துர்முகியே.. அருள்வாயே !

    க. பாலசுப்பிரமணியன்

    nhetynr copy

    நீரோடு நிலமும் வானும் நல்காற்றும்

    கதிரும் மதியும் காலத்தில் மழையும்

    கனியும் காயும் கண்நிறை பசுமையும்

    களிப்புடன் தருவாய் துர்முகியே !

     

    ஊர்கூடி ஒன்றாய் உலகினில் வாழ்ந்திட

    தேன்கூடாய் உழைப்பின் பலன் சேர்ந்திட

    நாகூடும் சொல்லென்றும் நலமாய் வந்திட

    நாளெல்லாம் அருள்வாய் துர்முகியே !

     

    தாயோடு சேயும் தந்தையும் உறவும்

    தரணி போற்றும் கூட்டுக் குடும்பம்

    ஊனோடு சதையும் உதிரம் போல்

    ஒன்றாக உறவாட அருள்வாயே !

     

    நான்முகனும் அறுமுகனும் களி முகத்தொடு

    ஆனைமுகன் அப்பனுடன்  அன்னை  சக்தியோடு

    வேறுமுகம் காட்டாது துர்முகியே ! நல்மனத்தோடு

    நேர்முகமாய் காத்திடவே அருள்வாயே !

     

     

     

    Share
  • வாழ்க வளமுடன்!

    வாழ்த்து

    இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.

    இந்த துன்முகி புத்தாண்டு அனைவருக்கும் சகல வளங்களும், நலங்களும் அருள வாழ்த்துகள். இந்த புத்தாண்டு தினத்தில் அவரவர்களும் தங்கள் குடும்பப் பாரம்பரிய வழக்கப்படி வழிபாடு செய்வார்கள்.

    நம் முன்னோர்கள் தமிழ் மாதப் பிறப்பு என்பதை கதிரோனின் இயக்கத்தைக் கொண்டே கணித்துள்ளார்கள் அதாவது பனிரெண்டு ராசிகளில் முதல் ராசியான மேச ராசியில் சூரியன் தன் பயணத்தின் அடியெடுத்து வைக்கின்ற திருநாளே தமிழ்ப் புத்தாண்டின் முத்தான முதல் நாளாக அமைத்துள்ளனர். இந்நந்நாளில் காலை கண்மலரும் தருணம் ஒரு தூய்மையான தட்டில் பலவகையான பழங்கள், பணம், நகைகள் போன்றவற்றை அவரவர் விருப்பத்திற்கேற்ப வைத்து அதில் விழிப்பது வழமை. இப்படி செய்வதால் சகல செல்வங்களும் பெருகுவதாகவும் நம்பிக்கை பெரும்பாலான குடும்பங்களில் இருப்பதைக் காணமுடிகிறது. புத்தாண்டுக் காலையில் திருக்கோயில்களில் பஞ்சாங்கம் வாசிக்கிற பழக்கமும் கடைப் பிடிக்கப்படுகிறது.

    Share
  • அனுமன் அறுபது – (ஒரு கவிதை மாலை)      

     

           க. பாலசுப்பிரமணியன்

    anumar

                               

     

    விநாயகர் காப்பு

     

    அரசின் ஆலின் வேம்பின் அடியமர்ந்தோய் !

    ஆனந்த மூர்த்தி ஐங்கரனே அருளாளா !

    அருந்தமிழ் அவ்வை போற்றிய புண்ணியனே !

    அனுமனைப் போற்றிட வந்தேன் அருள்வாயே

                                       முதல் பத்து                                   

     

    அதிசய உருவே ஆனந்த வடிவே !

    அஞ்சனை மகனே , ஆதவன் அருளே !

    அபயம் தேடி அடிகளைப் பணிந்தேன்

    அருள் தர வருவாய் அனுதினம் நீயே!

     

    அஞ்சா நெஞ்சனே, அறிவின் அமுதே !

    அன்பின் வடிவே, அமர வாழ்வே !

    அவயங்கள்   அடக்கிய , ஐம்பொறி  ஓடிக்கிய

    ஆனந்த வாழ்வின் அழியாச் சிற்பியே !

     

    காலைக் கதிரின் கருணை ஒளியே !

    கவலைகள் தீர்க்கும் கலியுக மருந்தே !

    கடமைகள் விளக்கிடும் கலங்கரை விளக்கே !

    கற்பனை தாண்டிய வினயத்தின் வடிவே !

     

    வானையும் அளந்த வாயுவின் மகனே

    வருவினை தீர்த்திடும் வானரத் தேவே !

    வழக்குகள் தீர்த்திடுவாய் வாதங்கள் நீக்கி

    வேண்டியே நின்றேன் வார்த்தைகள் இன்றி !

     

    நெஞ்சினில் என்றும் இராமனின் வடிவம்

    நினைவில் ஒன்றிய நிரந்தரத் தெய்வம்

    நாவினில் இராமன் நாளும் பொழுதும்!

    நானும் சொல்லிட அருள்வாய் என்றும் !

     

    கண்களில் அமைந்தது காகுத்தன் உருவே !

    கைகள் குவிந்தது கனிவுடன் முன்னே !

    கோசலைத் தலைவன் திருவடி போற்றி

    கருணையால் வென்றாய் காலங்கள் அனைத்தும் !

     

    கடலினைக் கடந்தாய் கணையாழி கொடுக்க

    காட்டினை அழித்தாய் கர்வத்தை ஒடுக்க

    கற்புடைத் தலைவி கண்ணீர் துடைத்த

    காவியத் தலைவா ! காலடி சரணம்!

     

    தோள்களில் நின்றது தோதுடன் கதையே

    வாலில் நின்றது வளராது நெருப்பே !

    சொல்லில் நின்றது சூதில்லாப் பணிவே

    சுமைகள் அறியா சுந்தர வடிவே !

     

    கண்களால் பார்த்தால் வானர வடிவம்

    கருத்தினில் வைத்தால் மாதவன் சின்னம்

    கலைகள் ஆயிரம் ஒன்றிய உருவம்

    கருணைக் கடலே ! காத்திட வருவாய் !

     

    தானடங்கித் தன்னருமை தெரியாமல் நின்றவனே

    தானறிந்து தன்னுருவை தரணியிலே வளர்த்தவனே

    தாபங்கள் அனைத்தையும் தானாக வென்றவனே

    தாள்பணிந்தேன் தெய்வமே, தோள் கொடுப்பாய் !

     

     

     

     

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    ”துர்முகி புத்தாண்டு வாழ்த்துக்கள்’’….
    ————————————————————————–

    ’’ஒட்டகம்போல் உன்வாழ்வில் ஓங்கி உலகளக்க
    கெட்டியாகக் கண்ணன்கால் கட்டிக்கோ, -கொட்டி
    வரவர்ஷம் வானில் கறவைகள் காக்க
    கரவிரலில் குன்றெடுத்தோன் காப்பு’’….கிரேசி மோகன்….

    8921717f-47e4-4754-a9ec-80e7d4273524

    (OR)
    வரவர்ஷம் வானில், கறவைகள் காத்தோய்
    வரவருஷம் நற்முகியாய் வா’’….கிரேசி மோகன்….
    வரவர்ஷம் -மழைவர….

    Share
  • கியூபாவுக்குப் பயணம் – 3

    நாகேஸ்வரி அண்ணாமலை.

    கியூபாவில் பத்து வருடங்களுக்கு முன்னால் சுற்றுலாப் பயணிகளுக்குத் தங்குவதற்கு வாடகைக்கு விடும் அளவிற்குப் பெரிய வீடுகள் வைத்திருப்பவர்கள் பயணிகளுக்கு வாடகைக்கு விடலாம் என்ற சட்டத்தை கியூபா அரசு கொண்டுவந்தது. இம்மாதிரி வீடுகளை காஸா (Casa) என்று அழைக்கிறார்கள். ஸ்பானிஷ் மொழியில் காசா என்றால் வீடு என்று அர்த்தம். நாங்கள் இம்மாதிரி வீடுகளில் ஒன்றில் தங்க முடிவுசெய்தோம். மின்னஞ்சல் மூலம் அந்த வீட்டின் சொந்தக்காரர்களோடு தொடர்புகொண்டு அந்த காஸாவை முடிவுசெய்தோம். நாங்கள் அந்த வீட்டை அடையும்போது மாலை ஐந்து மணி ஆகிவிட்டது.

    அந்த வீடு வெளிநாட்டுப் பயணிகளைத் தங்கவைக்க ஏதுவான வீடு. பயணிகள் தங்குவதற்காக நான்கு அறைகளை ஒதுக்கிவைத்திருக்கிறார்கள். அதில் மூன்று அறைகளை நாங்கள் வாடகைக்கு எடுத்துக்கொண்டோம். எல்லா அறைகளுக்கும் தனித்தனி குளியல் அறைகள் இருந்தன. வீட்டுச் சொந்தக்காரர்கள் தங்கும் பகுதியும் சமையலறையும் வீட்டின் பின் பகுதியில் இருந்தன. இப்படி தங்களின் பகுதியை வாடகைக்கு விடுபவர்கள் அரசிடம் அனுமதி வாங்குவதோடு யார், எப்போது அங்கு வந்து தங்குகிறார்கள் என்ற விபரங்களையும் அரசுக்குத் தெரிவிக்க வேண்டுமாம். மேலும் தனிப்பட்டவர்கள் வாடகைக்கு விடும் திட்டத்தில் இவர்கள் சேர்ந்துவிட்டால் மாதாமாதம் அரசுக்கு ஒரு தொகையைக் கொடுத்துவிட வேண்டுமாம். அநேகமாகப் பயணிகள் வந்து தங்கிக்கொண்டே இருப்பதால் இவர்களுக்கு வருமானம் வந்துகொண்டிருக்கும்.

    நாங்கள் தங்கியிருந்த வீட்டில் கணவனும் மனைவியும் மட்டும்தான். கணவருக்கு 70 வயது, மனைவிக்கு 65. இவர்களுடைய மூன்று குழந்தைகளில் ஒரு மகன் அமெரிக்காவில் சிறு வியாபாரம் செய்கிறான். இன்னொரு மகன் ஸ்பெயினுக்குக் குடிபெயர்ந்திருக்கிறான். கியூபாவில் அங்கு வாழ்ந்துவந்த பழங்குடிகள், ஸ்பெயினிலிருந்து வந்து குடியேறியவர்கள், அடிமைகளாகக் கொண்டுவரப்பட்ட ஆப்பிரிக்கர்கள் ஆகிய எல்லா இனத்தவர்களிடையேயும் நிறையக் கலப்பு ஏற்பட்டிருக்கிறது. கியூபாவுக்கு ஸ்பெயின் நாட்டுத் தொடர்பு இருப்பதால் படித்தவர்கள் வேலை தேடிக்கொண்டு அங்கு குடியேறிவிடுகிறார்கள். வீட்டுச் சொந்தக்காரரின் மகள் கியூபாவிலேயே கணவரோடு வசித்துவருகிறாள். கியூபாவில் பெரிய ஓட்டல்கள் சில இருந்தாலும் ஐந்து ஸ்டார், மூன்று ஸ்டார் ஓட்டல்கள் என்று அவர்கள் முத்திரை எதுவும் குத்தியிருப்பதாகத் தெரியவில்லை. நாங்கள் தங்கியிருந்த வீடு மிகவும் சுத்தமாகவும் வசதியாகவும் இருந்தது. மேலும் உறவினர் ஒருவர் வீட்டில் தங்குவதுபோல் இருந்தது. தனியாகக் கட்டணம் பெற்றுக்கொண்டு காலை உணவும் இரவு உணவும் கொடுத்தார்கள். நாங்கள் அனைவரும் சைவமாதலால் அவர்கள் வீட்டிலேயே சைவ உணவைச் சமைத்துக் கொடுத்தது மிகவும் வசதியாக இருந்தது. அதுவும் நாங்கள் கேட்ட நேரத்திற்குத் தவறாமல் கொடுத்தது மிகவும் வசதியாக இருந்தது. நாங்கள் வெளியே சென்றுவிட்டுத் திரும்பியதும் எங்கள் அறைகளுக்குத்தான் செல்ல வேண்டுமென்ற கட்டாயமில்லை. முன்னால் இருக்கும் வீட்டின் வரவேற்பறையில் உட்கார்ந்து பொழுதைக் கழிக்கலாம். வீட்டுச் சொந்தக்காரர்களுக்கு வேலை இல்லாதபோது அவர்களும் எங்களுடன் அமர்ந்து உரையாடுவார்கள். இவர்களோடு தங்கியதில் எங்களுடைய ஒரே பிரச்சினை என்னவென்றால் அவர்கள் இருவருக்கும் ஆங்கிலம் தெரியவில்லை. அதிலும் கணவருக்கு ஸ்பானிய மொழியைத் தவிர வேறு எதுவும் தெரியவில்லை. மனைவிதான் கொஞ்சம் ஆங்கிலம் பேசினார். எங்களில் ஒருவரைத் தவிர யாருக்கும் ஸ்பானீஷ் தெரியாது. அவரும் பள்ளியில் ஓரிரு வருடங்கள் படித்ததோடு சரி. ஸ்பானீஷ் மொழியைக் கொஞ்சமாவது கற்றுக்கொண்டு வந்திருக்கலாமோ என்று தோன்றியது. இருந்தாலும் மிகவும் சிரமப்பட்டு அவர்களோடு உரையாடி எங்களுக்கு வேண்டியவற்றை அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டோம். ஒரு முறை எனக்கும் என் மகளுக்கும் தொண்டையில் சிறிது கரகரப்பு இருந்ததால் குடிக்க வெந்நீர் கேட்டோம். முதல் முறை கேட்ட பிறகு இரண்டாவது முறை அவராக ஃப்ளாக்ஸில் கொண்டுவந்துவிடுவார். இம்மாதிரி வசதிகளை ஓட்டல்களில் எதிர்பார்க்க முடியாது.

    வீட்டுக்காரர்களுக்கு வீட்டு வேலைகளில் உதவுவதற்கு ஒரு பெண் தினமும் வந்தார். அவர் காலை எட்டரைக்கெல்லாம் வந்துவிடுகிறார். அவருக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ள முடியாவிட்டாலும் அந்தப் பெண்ணை அவர்கள் நடத்திய விதம் நம் நாட்டில் வேலைக்காரப் பெண்களை நடத்துவதிலிருந்து வேறுபட்டிருந்தது. அவர் வந்ததும் வீட்டுக்காரப் பெண்ணும் அவரும் மேஜையில் உட்கார்ந்து சேர்ந்து காலை உணவை உண்டார்கள். இருந்தாலும் கியூபாவில் கூட – வர்க்க பேதத்தை ஒழிக்க புரட்சிக் காலத்திலிருந்து ஃபிடல் காஸ்ட்ரோ முயன்றுகொண்டிருந்தும் – ஒரு பெண் மற்றவர்கள் வீட்டிற்குப் போய் வேலைசெய்து பிழைக்க வேண்டுமா என்ற எண்ணம் என்னுள் எழாமல் இல்லை.

    வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டி இருந்தது. ஆனால் தினமும் சில மணி நேரங்கள்தான் நிகழ்ச்சிகள் இருந்தன. ஒபாமா கியூபா விமான நிலையத்தில் இறங்கியதைத் தொலைக்காட்சியில் காட்ட ஆரம்பித்ததும் அப்போது நாங்கள் வீட்டில் இருந்ததால் எங்களிடம் அந்தச் செய்தியை வீட்டுக்கார அம்மாள் கூறினார். மொழி தெரியாவிட்டாலும் ஒபாமா குடும்பம் விமானத்திலிருந்து இறங்கியதையும் அவர்கள் பழைய ஹவானவில் சில இடங்களுக்குச் சென்றதையும் புரிந்துகொள்ள முடிந்தது. ஒபாமாவும் கியூபா ஜனாதிபதி ராவுல் காஸ்ட்ரோவும் நிகழ்த்திய உரைகளைப் புரிந்துகொள்ள முடியவில்லை. ஒபாமா ஆற்றிய உரையை மௌனமாக்கி அதனுடைய ஸ்பானீஷ் மொழிபெயர்ப்பை மட்டும் கேட்கும்படி செய்தார்கள். காஸ்ட்ரோவின் பேச்சு ஸ்பானீஷ் மொழியிலேயே இருந்தது.

    ஆங்கிலச் செய்தித் தாள்கள் கிடைக்குமா என்று தேடினோம். ஒரு இடத்தில் வாரத்திற்கு ஒரு முறைதான் ஒரு ஆங்கில இதழ் வெளியிடுவதாகக் கூறினார்கள். ஒரு வகையில் உலகிலிருந்து தனிப்பட்டுப் போன மாதிரி இருந்தது. உலகின் எந்தச் செய்தியையும் தெரிந்துகொள்ள முடியவில்லை. வீட்டில் கணினி இருந்தது. அதில் மின்னஞ்சல் பார்க்க விரும்பியபோது கணினியைத் திறந்து யாஹு மெயில் பார்க்க உதவினார்கள். ஆனால் இன்டெர்னெட் இருந்தாலும் மிகவும் மெதுவாக இருந்தது. அதற்குக் கட்டணம் வேறு அதிகமாக இருந்ததால் வீட்டுக்காரர்களுக்கு அதிகம் செலவாகும் என்று எண்ணி மின்னஞ்சல் பார்ப்பதை நிறுத்திவிட்டோம். அமெரிக்கா திரும்பிய பிறகுதான் உலகில் என்ன நடக்கிறது என்பதை முழுமையாகத் தெரிந்துகொள்ள முடிந்தது. ஸ்பானிஷ் மொழி தெரிந்திருந்தால் அந்தப் பத்திரிக்கைகளைப் படித்துத் தெரிந்துகொண்டிருக்கலாம்.

    நாங்கள் கியூபாவில் இருந்த ஐந்து நாட்களில் மூன்று நாட்கள் ஒபாமா கியூபாவிற்கு விஜயம் செய்ததால் பல சாலைகள் அடைக்கப்பட்டுப் பல மியூசியங்கள் மூடப்பட்டு நாங்கள் எளிதாக அந்த இடங்களுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. பத்திரிக்கையாளர்கள், உதவியாளர்கள் என்று ஆயிரம் பேருக்கு மேல் ஒபாமாவுடன் வந்ததாகக் கூறினார்கள். அவர்கள் தங்குவதற்கென்று பல ஓட்டல்களை எடுத்துக்கொண்டார்கள். பல சுற்றுலாப் பேருந்துகளையும் ஒபாமா டீம் எடுத்துக்கொண்டது. பல பெரிய சாலைகளை மூடிவிட்டதால் நாங்கள் போக விரும்பிய இடங்களுக்குச் சுற்றி வளைத்துக்கொண்டு போக வேண்டியிருந்தது. சில இடங்களில் அதுவும் முடியவில்லை. ஒபாமா எப்போது கியூபாவுக்கு வருகிறார் என்பதை மிகவும் ரகசியமாக வைத்திருந்தார்கள். அமெரிக்க ஊடகங்களில் மார்ச் 21-ஆம் தேதிதான் ஒபாமா கியூபாவுக்குப் போவதாக அறிவித்திருந்தார்கள். ஆனால் அவர் கியூபாவிற்கு வந்தது 20-ஆம் தேதி மதியம் மூன்று மணிக்கு. 19-ஆம் தேதி மதியமே சாலைகளை அடைக்க ஆரம்பித்துவிட்டார்கள். அமெரிக்க ஃப்ளோரிடா டீமுக்கும் கியூபா டீமுக்கும் இடையே நடந்த பேஸ் பால் விளையாட்டைப் பார்த்துவிட்டு 22-ஆம் தேதி மதியம் ஒபாமா கியூபாவிலிருந்து அர்ஜென்டைனாவுக்குக் கிளம்பியவுடன் சாலைகளைத் திறந்தார்கள்.

    ஹவானா பதினெட்டாம் நூற்றாண்டில் பாஸ்டன், நியூயார்க் நகரம் தோன்றுவதற்கு முன்பே பெரிய நகரமாக விளங்கியிருக்கிறது. பல நாட்டுக் கப்பல்கள் வந்து தங்கும் இடமாகப் பெயர் பெற்று விளங்கியிருக்கிறது. இருபதாம் நூற்றாண்டில் புரட்சி ஏற்படும்வரை அமெரிக்கப் பணக்காரர்கள் பலர் ஹவானாவிற்கு வந்து பல வகையான கேளிக்கைகளில் ஈடுபட்டிருக்கின்றனர். அமெரிக்காவில் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து இருபதுகளில் மதுவிலக்கு அமலில் இருந்தபோது கியூபாவிலிருந்து ரம் அமெரிக்காவிற்குக் கடத்தப்படுமாம். பல பெரிய அமெரிக்கக் கார்கள் இப்போதும் ஹவானா தெருக்களில் ஓடிக்கொண்டிருக்கின்றன. பல டாக்சிகளாகவும் பயன்படுத்தப்படுகின்றன. எஞ்சின் தவிர மற்றப் பாகங்களை வைத்துக்கொண்டு எஞ்சினை மட்டும் மாற்றிக்கொண்டு அந்தக் கார்களைத் தொடர்ந்து உபயோகிக்கிறார்கள். கியூபா மக்களுக்கு கார் மிகவும் பிடிக்குமாம். பழைய அமெரிக்கக் கார்களோடு புதிய வகை கார்களும் ஹவானா வீதிகளை வலம் வருகின்றன. டூரிஸ்ட் பேருந்துகளும் நகரைச் சுற்றி ஓடும் பேருந்துகளும் சீனாவால் தயாரிக்கப்பட்டவை. டாக்சிகளோடு நம் ஊரில் இருக்கும் ஆட்டோவோடு ஒப்பிடக் கூடிய வாகனங்களும் நம் சைக்கிள் ரிக்‌ஷா போன்ற வாகனங்களும் இருக்கின்றன. எல்லாவற்றிற்கும் வெளிநாட்டுப் பயணிகள் குக்குகளில்தான் பணம் கொடுக்க வேண்டும்.

    US President Barack Obama (C) attends a wreath-laying ceremony at Jose Marti monument in the Revolution Palace of Havana next to the Vice-President of the Cuban Council Salvador Valdes Mesa (C-R) on March 21, 2016. US President Barack Obama and his Cuban counterpart Raul Castro met Monday in Havana's Palace of the Revolution for groundbreaking talks on ending the standoff between the two neighbors.  AFP PHOTO/ STR / AFP / STR        (Photo credit should read STR/AFP/Getty Images)
    US President Barack Obama (C) attends a wreath-laying ceremony at Jose Marti monument in the Revolution Palace of Havana next to the Vice-President of the Cuban Council Salvador Valdes Mesa (C-R) on March 21, 2016. US President Barack Obama and his Cuban counterpart Raul Castro met Monday in Havana’s Palace of the Revolution for groundbreaking talks on ending the standoff between the two neighbors. AFP PHOTO/ STR / AFP / STR (Photo credit should read STR/AFP/Getty Images)

    ஹவானாவின் நடுவில் புரட்சிச் சதுக்கம் இருக்கிறது. அர்ஜென்டைனாவில் பிறந்து காஸ்ட்ரோவோடு கியூபாவின் புரட்சியில் கலந்துகொண்ட சே குவேராவின், இரும்புக் கம்பிகளால் வரையப்பட்ட ஒரு ஓவியம் ஒரு உயர்ந்த பல மாடிக் கட்டடத்தை அலங்கரிக்கிறது. ஊரின் பல பகுதியிலிருந்து இந்த ஓவியத்தைக் காணலாம். புரட்சிக்கு முன் கடைசியாக கியூபாவில் பதவி வகித்த பதீட்ஸாவின் மாளிகையில் புரட்சி மியூசியம் அமைந்திருக்கிறது. இங்கு காஸ்ட்ரோவும் அவருடைய கூட்டாளிகளும் பதீட்ஸா அரசை எதிர்த்துச் செய்த புரட்சியின் வரலாறு சித்தரிக்கப்பட்டிருக்கிறது. இதில் மூன்று மாடிகள் இருக்கின்றன. இரண்டாவது மாடிக்கும் மூன்றாவது மாடிக்கும் செல்ல லிப்ட் இருக்கிறது. ஆனால் நாங்கள் சென்ற அன்று லிப்ட் வேலைசெய்யவில்லை. படிகளில் ஏற முடியாதவர்கள் இரண்டாவது மாடிக்கும் மூன்றாவது மாடிக்கும் போகவே முடியாது. இவ்வளவு முக்கியமான மியூசியத்தில் லிப்ட்டை ஒழுங்காக வேலைசெய்ய வைப்பதில் ஏன் அக்கறை காட்டவில்லை என்று தெரியவில்லை.

    ஹவானாவில் புரட்சிக்கு முன் கட்டப்பட்ட பல பிரமாண்ட கட்டடங்கள் இருக்கின்றன. அவற்றில் பல பழுதாகிப் புதுப்பிக்கப்படாமல் இருக்கின்றன. சில பழைய வீடுகளும் அழுக்குப் படிந்து பெயின்ட் மங்கிக் காட்சியளிக்கின்றன. இந்தக் கட்டடங்களைப் புதுப்பித்துக் கட்டப்போதுமான பணம் இல்லாததோடு தேவையான கட்டுமானப் பொருள்களும் கிடைப்பதில்லையாம். எல்லாம் அமெரிக்கத் தடைகளால் ஏற்பட்ட விளைவுகள். அமெரிக்க நண்பர் ஒருவரிடம் இதைக் கூறியபோது ‘இரண்டு ஹோம் டிப்போக்களை (அமெரிக்காவின் பெரிய டிபார்ட்மெண்ட் கடைகளில் Home Depot–வும் ஒன்று; கட்டடக் கட்டுமான சாமான்கள் விற்கும் கடை) அங்கு திறந்துவிட்டால் இந்தக் கட்டடங்களை எல்லாம் புதுப்பித்துவிடலாம்’ என்று ஜோக்கடித்தார்.

    ஹவானாவின் தெருக்களில் நடமாடும் பெண்கள் உடைச் சிக்கனத்தைக் கடைப்பிடிப்பதுபோல் தெரிகிறது. கியூபாவில் எப்போதும் மிதமான வெப்பநிலை நிலவுவதால் பெண்கள் குறைந்த உடைகளையே அணிகிறார்கள். திருமணமானவர்களுக்கு அரசு சில சலுகைகள் வழங்கினாலும் பலர் திருமணம்செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழ்வதையே விரும்புகிறார்களாம். கியூபாவில் பிறக்கும் 60 சதவிகிதம் குழந்தைகள் திருமணமாகாத பெற்றோர்களுக்குப் பிறந்தவர்களாம். இம்மாதிரி விஷயங்களில் கியூபா மேற்கத்திய நாடுகளின் பழக்க வழக்கங்களைப் பின்பற்றுவதுபோல் தெரிகிறது.

    ஹவானாவில் இருந்த சில சிறிய மார்க்கெட்டுகளுக்குச் சென்றோம். மார்க்கெட்டுகள் என்று அழைக்கப்பட்டாலும் அங்கு ஓரிரண்டு கடைகள்தான் இருந்தன. இவை நம் நாட்டு ரேஷன் கடைகள் போன்றவை. அங்கு மிகக் குறைந்த அளவிலேயே காய்கறிகள், பழங்கள் இருந்தன. கியூபா மக்கள் எங்கிருந்து தங்களுக்கு வேண்டிய காய்கறி, பழங்களை வாங்குகிறார்கள் என்று தெரியவில்லை. நாங்கள் தங்கியிருந்த வீட்டுக்காரர் அதிகாலையில் கடைக்குச் சென்று சாமான்கள் வாங்கி வருவார் என்று அவருடைய மனைவி கூறினார். அவர் கடைக்குச் செல்லும்போது நான் அவருடன் வருவதாகக் கூறினேன். ஏதாவது சாக்குப்போக்குச் சொல்லி என்னை அழைத்துப் போகவே இல்லை. இம்மாதிரி சாமான்களுக்கு கருப்பு மார்க்கெட் இருப்பதாகக் கூறுகிறார்கள். அது சரியாக இருக்குமோ என்ற சந்தேகம் வருகிறது. ராவுல் காஸ்ட்ரோ கைக்கு ஆட்சி வந்ததும் கிராமப்புறத்தில் மக்களுக்குச் சிறிதளவு நிலம் கொடுத்து விவசாயம் செய்யலாம் என்றார். தனிப்பட்டவர்கள் விளைவிக்கும் பொருள்கள் இந்த மாதிரிக் கடைகளுக்கு வருகின்றனவோ என்று சந்தேகம். அங்குதான் போய் வாங்கி வந்தாரோ என்னவோ. எங்களுக்குக் காலை உணவிலும் இரவு உணவிலும் நிறையப் பழங்களும் காய்கறிகளும் பரிமாறினார்கள். அவர்களுடைய குளிர்சாதனப் பெட்டியில் இருந்த மாதிரி அழகாகப் பழுத்த தக்காளிப் பழங்களையும் வாழைப்பழங்களையும் அன்னாசிப் பழங்களையும் நாங்கள் எந்தக் கடைகளிலும் பார்க்கவில்லை.

    2014 டிசம்பரில் கியூபாவுடனான உறவைச் சீர்செய்து புதுப்பித்துக்கொள்ள ஒபாமா முயன்றதும் பல அமெரிக்கக் கம்பெனிகள் அங்கு போய் தங்கள் கடையை விரிக்க ஏற்கனவே பல முயற்சிகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளன. ஆனால் கியூபா அரசு எளிதில் இவர்களுடைய விருப்பம் நிறைவேற அனுமதிக்குமா என்று தெரியவில்லை. இதுவரை அமெரிக்க வணிக நிறுவனங்களின் அதிகாரிகள் 500 முறையும் அமெரிக்க அரசு அதிகாரிகள் 150 முறையும் கியூபாவிற்குச் சென்றிருந்தும் இதுவரைக் கைகூடியிருக்கும் வணிக ஒப்பந்தங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம் என்று நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் வெளிவந்த ஒரு கட்டுரை புலம்புகிறது. அமெரிக்க நிறுவனங்களில் பல உலகம் முழுவதும் தங்கள் கிளைகளைப் பரப்பியிருப்பதுபோல் கியூபாவிலும் செய்யலாம் என்று நினைக்கின்றன. நல்ல வேளையாக கியூபா அரசு அவ்வளவு எளிதாக அவர்களுக்கு வளைந்து கொடுக்கும் என்று தோன்றவில்லை. மேலே குறிப்பிட்டுள்ள பத்திரிக்கைக் கட்டுரையில், ‘நாம் கொடுப்பதற்குச் சமமானதைப் பெறலாம்’ என்ற விதியை கியூபா விஷயத்தில் பின்பற்ற முடியாது என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. கியூபா போடும் நிபந்தனைகளுக்கு நம்மால் ஈடு கொடுக்க முடியாது என்று முடித்திருக்கிறார்கள்.

    ராவுல் காஸ்ட்ரோ அளவிற்குக் கூட ஃபிடல் காஸ்ட்ரோவிற்கு அமெரிக்க – கியூபா உறவைப் புதுப்பித்துக்கொள்வதில் விருப்பம் இருப்பதுபோல் தெரியவில்லை. ‘நடந்த பழைய விஷயங்களை மறந்துவிட்டுப் புது உறவைத் தொடர்வோம்’ என்று ஒபாமா சொன்னதை ஃபிடல் காஸ்ட்ரோவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அமெரிக்கா கியூபாவிற்குக் கொடுத்த தொந்தரவுகளையும் வணிகத் தடைகளையும் அவரால் எளிதாக மறக்க முடியவில்லை. இவற்றையெல்லாம் குறிப்பிட்டு ‘அமெரிக்க ஏகாதிபத்தியத்திடமிருந்து நாங்கள் எதையும் எதிர்பார்க்கவில்லை. கியூபா கடின உழைப்பால் முன்னேறி கல்வி, கலை, விஞ்ஞானம் மூலம் அடைந்திருக்கும் ஆன்மீக வளத்தையும் கண்ணியத்தையும் பெருமையையும் இழந்துவிடும் என்று யாரும் நினைக்க வேண்டாம்’ என்று கியூபாவின் கம்யூனிஸ்ட் பத்திரிக்கையான Granma-விற்கு எழுதிய ஒரு கட்டுரையில் ஃபிடல் காஸ்ட்ரோ குறிப்பிட்டிருக்கிறார்.

    புரட்சியை வழிநடத்திய தலைவர் இப்படிக் கூறினாலும் கியூபா மக்களின் வாழ்க்கை வசதிகளை அதிகரித்துக்கொள்ள வேண்டும் என்ற கனவுகள் ஓரளவாவது நிறைவேற வேண்டும் என்பதுவும் அதே சமயம் அமெரிக்காவின் தலையீடு கியூபாவில் அதிகம் இருக்கக் கூடாது என்பதுவும் என்னுடைய விருப்பம். இது அமெரிக்கத் தேர்தலுக்குப் பிறகு வரும் அடுத்த ஜனாதிபதியையும் ராவுல் காஸ்ட்ரோவுக்குப் பிறகு ஏற்படும் தலைமையையும் பொறுத்திருக்கிறது. என்னுடைய நியாயமான விருப்பம் நிறைவேறும் என்று நம்புவோம்.

    Picture from – http://dailycaller.com/2016/03/21/obama-snaps-pics-in-front-of-che-guevara-mural-twitter-explodes-photos/

    Share