அனுமன் அறுபது – (ஒரு கவிதை மாலை)
க. பாலசுப்பிரமணியன்
விநாயகர் காப்பு
அரசின் ஆலின் வேம்பின் அடியமர்ந்தோய் !
ஆனந்த மூர்த்தி ஐங்கரனே அருளாளா !
அருந்தமிழ் அவ்வை போற்றிய புண்ணியனே !
அனுமனைப் போற்றிட வந்தேன் அருள்வாயே
முதல் பத்து
அதிசய உருவே ஆனந்த வடிவே !
அஞ்சனை மகனே , ஆதவன் அருளே !
அபயம் தேடி அடிகளைப் பணிந்தேன்
அருள் தர வருவாய் அனுதினம் நீயே!
அஞ்சா நெஞ்சனே, அறிவின் அமுதே !
அன்பின் வடிவே, அமர வாழ்வே !
அவயங்கள் அடக்கிய , ஐம்பொறி ஓடிக்கிய
ஆனந்த வாழ்வின் அழியாச் சிற்பியே !
காலைக் கதிரின் கருணை ஒளியே !
கவலைகள் தீர்க்கும் கலியுக மருந்தே !
கடமைகள் விளக்கிடும் கலங்கரை விளக்கே !
கற்பனை தாண்டிய வினயத்தின் வடிவே !
வானையும் அளந்த வாயுவின் மகனே
வருவினை தீர்த்திடும் வானரத் தேவே !
வழக்குகள் தீர்த்திடுவாய் வாதங்கள் நீக்கி
வேண்டியே நின்றேன் வார்த்தைகள் இன்றி !
நெஞ்சினில் என்றும் இராமனின் வடிவம்
நினைவில் ஒன்றிய நிரந்தரத் தெய்வம்
நாவினில் இராமன் நாளும் பொழுதும்!
நானும் சொல்லிட அருள்வாய் என்றும் !
கண்களில் அமைந்தது காகுத்தன் உருவே !
கைகள் குவிந்தது கனிவுடன் முன்னே !
கோசலைத் தலைவன் திருவடி போற்றி
கருணையால் வென்றாய் காலங்கள் அனைத்தும் !
கடலினைக் கடந்தாய் கணையாழி கொடுக்க
காட்டினை அழித்தாய் கர்வத்தை ஒடுக்க
கற்புடைத் தலைவி கண்ணீர் துடைத்த
காவியத் தலைவா ! காலடி சரணம்!
தோள்களில் நின்றது தோதுடன் கதையே
வாலில் நின்றது வளராது நெருப்பே !
சொல்லில் நின்றது சூதில்லாப் பணிவே
சுமைகள் அறியா சுந்தர வடிவே !
கண்களால் பார்த்தால் வானர வடிவம்
கருத்தினில் வைத்தால் மாதவன் சின்னம்
கலைகள் ஆயிரம் ஒன்றிய உருவம்
கருணைக் கடலே ! காத்திட வருவாய் !
தானடங்கித் தன்னருமை தெரியாமல் நின்றவனே
தானறிந்து தன்னுருவை தரணியிலே வளர்த்தவனே
தாபங்கள் அனைத்தையும் தானாக வென்றவனே
தாள்பணிந்தேன் தெய்வமே, தோள் கொடுப்பாய் !

