கியூபாவுக்குப் பயணம் – 3
—நாகேஸ்வரி அண்ணாமலை.
கியூபாவில் பத்து வருடங்களுக்கு முன்னால் சுற்றுலாப் பயணிகளுக்குத் தங்குவதற்கு வாடகைக்கு விடும் அளவிற்குப் பெரிய வீடுகள் வைத்திருப்பவர்கள் பயணிகளுக்கு வாடகைக்கு விடலாம் என்ற சட்டத்தை கியூபா அரசு கொண்டுவந்தது. இம்மாதிரி வீடுகளை காஸா (Casa) என்று அழைக்கிறார்கள். ஸ்பானிஷ் மொழியில் காசா என்றால் வீடு என்று அர்த்தம். நாங்கள் இம்மாதிரி வீடுகளில் ஒன்றில் தங்க முடிவுசெய்தோம். மின்னஞ்சல் மூலம் அந்த வீட்டின் சொந்தக்காரர்களோடு தொடர்புகொண்டு அந்த காஸாவை முடிவுசெய்தோம். நாங்கள் அந்த வீட்டை அடையும்போது மாலை ஐந்து மணி ஆகிவிட்டது.
அந்த வீடு வெளிநாட்டுப் பயணிகளைத் தங்கவைக்க ஏதுவான வீடு. பயணிகள் தங்குவதற்காக நான்கு அறைகளை ஒதுக்கிவைத்திருக்கிறார்கள். அதில் மூன்று அறைகளை நாங்கள் வாடகைக்கு எடுத்துக்கொண்டோம். எல்லா அறைகளுக்கும் தனித்தனி குளியல் அறைகள் இருந்தன. வீட்டுச் சொந்தக்காரர்கள் தங்கும் பகுதியும் சமையலறையும் வீட்டின் பின் பகுதியில் இருந்தன. இப்படி தங்களின் பகுதியை வாடகைக்கு விடுபவர்கள் அரசிடம் அனுமதி வாங்குவதோடு யார், எப்போது அங்கு வந்து தங்குகிறார்கள் என்ற விபரங்களையும் அரசுக்குத் தெரிவிக்க வேண்டுமாம். மேலும் தனிப்பட்டவர்கள் வாடகைக்கு விடும் திட்டத்தில் இவர்கள் சேர்ந்துவிட்டால் மாதாமாதம் அரசுக்கு ஒரு தொகையைக் கொடுத்துவிட வேண்டுமாம். அநேகமாகப் பயணிகள் வந்து தங்கிக்கொண்டே இருப்பதால் இவர்களுக்கு வருமானம் வந்துகொண்டிருக்கும்.
நாங்கள் தங்கியிருந்த வீட்டில் கணவனும் மனைவியும் மட்டும்தான். கணவருக்கு 70 வயது, மனைவிக்கு 65. இவர்களுடைய மூன்று குழந்தைகளில் ஒரு மகன் அமெரிக்காவில் சிறு வியாபாரம் செய்கிறான். இன்னொரு மகன் ஸ்பெயினுக்குக் குடிபெயர்ந்திருக்கிறான். கியூபாவில் அங்கு வாழ்ந்துவந்த பழங்குடிகள், ஸ்பெயினிலிருந்து வந்து குடியேறியவர்கள், அடிமைகளாகக் கொண்டுவரப்பட்ட ஆப்பிரிக்கர்கள் ஆகிய எல்லா இனத்தவர்களிடையேயும் நிறையக் கலப்பு ஏற்பட்டிருக்கிறது. கியூபாவுக்கு ஸ்பெயின் நாட்டுத் தொடர்பு இருப்பதால் படித்தவர்கள் வேலை தேடிக்கொண்டு அங்கு குடியேறிவிடுகிறார்கள். வீட்டுச் சொந்தக்காரரின் மகள் கியூபாவிலேயே கணவரோடு வசித்துவருகிறாள். கியூபாவில் பெரிய ஓட்டல்கள் சில இருந்தாலும் ஐந்து ஸ்டார், மூன்று ஸ்டார் ஓட்டல்கள் என்று அவர்கள் முத்திரை எதுவும் குத்தியிருப்பதாகத் தெரியவில்லை. நாங்கள் தங்கியிருந்த வீடு மிகவும் சுத்தமாகவும் வசதியாகவும் இருந்தது. மேலும் உறவினர் ஒருவர் வீட்டில் தங்குவதுபோல் இருந்தது. தனியாகக் கட்டணம் பெற்றுக்கொண்டு காலை உணவும் இரவு உணவும் கொடுத்தார்கள். நாங்கள் அனைவரும் சைவமாதலால் அவர்கள் வீட்டிலேயே சைவ உணவைச் சமைத்துக் கொடுத்தது மிகவும் வசதியாக இருந்தது. அதுவும் நாங்கள் கேட்ட நேரத்திற்குத் தவறாமல் கொடுத்தது மிகவும் வசதியாக இருந்தது. நாங்கள் வெளியே சென்றுவிட்டுத் திரும்பியதும் எங்கள் அறைகளுக்குத்தான் செல்ல வேண்டுமென்ற கட்டாயமில்லை. முன்னால் இருக்கும் வீட்டின் வரவேற்பறையில் உட்கார்ந்து பொழுதைக் கழிக்கலாம். வீட்டுச் சொந்தக்காரர்களுக்கு வேலை இல்லாதபோது அவர்களும் எங்களுடன் அமர்ந்து உரையாடுவார்கள். இவர்களோடு தங்கியதில் எங்களுடைய ஒரே பிரச்சினை என்னவென்றால் அவர்கள் இருவருக்கும் ஆங்கிலம் தெரியவில்லை. அதிலும் கணவருக்கு ஸ்பானிய மொழியைத் தவிர வேறு எதுவும் தெரியவில்லை. மனைவிதான் கொஞ்சம் ஆங்கிலம் பேசினார். எங்களில் ஒருவரைத் தவிர யாருக்கும் ஸ்பானீஷ் தெரியாது. அவரும் பள்ளியில் ஓரிரு வருடங்கள் படித்ததோடு சரி. ஸ்பானீஷ் மொழியைக் கொஞ்சமாவது கற்றுக்கொண்டு வந்திருக்கலாமோ என்று தோன்றியது. இருந்தாலும் மிகவும் சிரமப்பட்டு அவர்களோடு உரையாடி எங்களுக்கு வேண்டியவற்றை அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டோம். ஒரு முறை எனக்கும் என் மகளுக்கும் தொண்டையில் சிறிது கரகரப்பு இருந்ததால் குடிக்க வெந்நீர் கேட்டோம். முதல் முறை கேட்ட பிறகு இரண்டாவது முறை அவராக ஃப்ளாக்ஸில் கொண்டுவந்துவிடுவார். இம்மாதிரி வசதிகளை ஓட்டல்களில் எதிர்பார்க்க முடியாது.
வீட்டுக்காரர்களுக்கு வீட்டு வேலைகளில் உதவுவதற்கு ஒரு பெண் தினமும் வந்தார். அவர் காலை எட்டரைக்கெல்லாம் வந்துவிடுகிறார். அவருக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ள முடியாவிட்டாலும் அந்தப் பெண்ணை அவர்கள் நடத்திய விதம் நம் நாட்டில் வேலைக்காரப் பெண்களை நடத்துவதிலிருந்து வேறுபட்டிருந்தது. அவர் வந்ததும் வீட்டுக்காரப் பெண்ணும் அவரும் மேஜையில் உட்கார்ந்து சேர்ந்து காலை உணவை உண்டார்கள். இருந்தாலும் கியூபாவில் கூட – வர்க்க பேதத்தை ஒழிக்க புரட்சிக் காலத்திலிருந்து ஃபிடல் காஸ்ட்ரோ முயன்றுகொண்டிருந்தும் – ஒரு பெண் மற்றவர்கள் வீட்டிற்குப் போய் வேலைசெய்து பிழைக்க வேண்டுமா என்ற எண்ணம் என்னுள் எழாமல் இல்லை.
வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டி இருந்தது. ஆனால் தினமும் சில மணி நேரங்கள்தான் நிகழ்ச்சிகள் இருந்தன. ஒபாமா கியூபா விமான நிலையத்தில் இறங்கியதைத் தொலைக்காட்சியில் காட்ட ஆரம்பித்ததும் அப்போது நாங்கள் வீட்டில் இருந்ததால் எங்களிடம் அந்தச் செய்தியை வீட்டுக்கார அம்மாள் கூறினார். மொழி தெரியாவிட்டாலும் ஒபாமா குடும்பம் விமானத்திலிருந்து இறங்கியதையும் அவர்கள் பழைய ஹவானவில் சில இடங்களுக்குச் சென்றதையும் புரிந்துகொள்ள முடிந்தது. ஒபாமாவும் கியூபா ஜனாதிபதி ராவுல் காஸ்ட்ரோவும் நிகழ்த்திய உரைகளைப் புரிந்துகொள்ள முடியவில்லை. ஒபாமா ஆற்றிய உரையை மௌனமாக்கி அதனுடைய ஸ்பானீஷ் மொழிபெயர்ப்பை மட்டும் கேட்கும்படி செய்தார்கள். காஸ்ட்ரோவின் பேச்சு ஸ்பானீஷ் மொழியிலேயே இருந்தது.
ஆங்கிலச் செய்தித் தாள்கள் கிடைக்குமா என்று தேடினோம். ஒரு இடத்தில் வாரத்திற்கு ஒரு முறைதான் ஒரு ஆங்கில இதழ் வெளியிடுவதாகக் கூறினார்கள். ஒரு வகையில் உலகிலிருந்து தனிப்பட்டுப் போன மாதிரி இருந்தது. உலகின் எந்தச் செய்தியையும் தெரிந்துகொள்ள முடியவில்லை. வீட்டில் கணினி இருந்தது. அதில் மின்னஞ்சல் பார்க்க விரும்பியபோது கணினியைத் திறந்து யாஹு மெயில் பார்க்க உதவினார்கள். ஆனால் இன்டெர்னெட் இருந்தாலும் மிகவும் மெதுவாக இருந்தது. அதற்குக் கட்டணம் வேறு அதிகமாக இருந்ததால் வீட்டுக்காரர்களுக்கு அதிகம் செலவாகும் என்று எண்ணி மின்னஞ்சல் பார்ப்பதை நிறுத்திவிட்டோம். அமெரிக்கா திரும்பிய பிறகுதான் உலகில் என்ன நடக்கிறது என்பதை முழுமையாகத் தெரிந்துகொள்ள முடிந்தது. ஸ்பானிஷ் மொழி தெரிந்திருந்தால் அந்தப் பத்திரிக்கைகளைப் படித்துத் தெரிந்துகொண்டிருக்கலாம்.
நாங்கள் கியூபாவில் இருந்த ஐந்து நாட்களில் மூன்று நாட்கள் ஒபாமா கியூபாவிற்கு விஜயம் செய்ததால் பல சாலைகள் அடைக்கப்பட்டுப் பல மியூசியங்கள் மூடப்பட்டு நாங்கள் எளிதாக அந்த இடங்களுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. பத்திரிக்கையாளர்கள், உதவியாளர்கள் என்று ஆயிரம் பேருக்கு மேல் ஒபாமாவுடன் வந்ததாகக் கூறினார்கள். அவர்கள் தங்குவதற்கென்று பல ஓட்டல்களை எடுத்துக்கொண்டார்கள். பல சுற்றுலாப் பேருந்துகளையும் ஒபாமா டீம் எடுத்துக்கொண்டது. பல பெரிய சாலைகளை மூடிவிட்டதால் நாங்கள் போக விரும்பிய இடங்களுக்குச் சுற்றி வளைத்துக்கொண்டு போக வேண்டியிருந்தது. சில இடங்களில் அதுவும் முடியவில்லை. ஒபாமா எப்போது கியூபாவுக்கு வருகிறார் என்பதை மிகவும் ரகசியமாக வைத்திருந்தார்கள். அமெரிக்க ஊடகங்களில் மார்ச் 21-ஆம் தேதிதான் ஒபாமா கியூபாவுக்குப் போவதாக அறிவித்திருந்தார்கள். ஆனால் அவர் கியூபாவிற்கு வந்தது 20-ஆம் தேதி மதியம் மூன்று மணிக்கு. 19-ஆம் தேதி மதியமே சாலைகளை அடைக்க ஆரம்பித்துவிட்டார்கள். அமெரிக்க ஃப்ளோரிடா டீமுக்கும் கியூபா டீமுக்கும் இடையே நடந்த பேஸ் பால் விளையாட்டைப் பார்த்துவிட்டு 22-ஆம் தேதி மதியம் ஒபாமா கியூபாவிலிருந்து அர்ஜென்டைனாவுக்குக் கிளம்பியவுடன் சாலைகளைத் திறந்தார்கள்.
ஹவானா பதினெட்டாம் நூற்றாண்டில் பாஸ்டன், நியூயார்க் நகரம் தோன்றுவதற்கு முன்பே பெரிய நகரமாக விளங்கியிருக்கிறது. பல நாட்டுக் கப்பல்கள் வந்து தங்கும் இடமாகப் பெயர் பெற்று விளங்கியிருக்கிறது. இருபதாம் நூற்றாண்டில் புரட்சி ஏற்படும்வரை அமெரிக்கப் பணக்காரர்கள் பலர் ஹவானாவிற்கு வந்து பல வகையான கேளிக்கைகளில் ஈடுபட்டிருக்கின்றனர். அமெரிக்காவில் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து இருபதுகளில் மதுவிலக்கு அமலில் இருந்தபோது கியூபாவிலிருந்து ரம் அமெரிக்காவிற்குக் கடத்தப்படுமாம். பல பெரிய அமெரிக்கக் கார்கள் இப்போதும் ஹவானா தெருக்களில் ஓடிக்கொண்டிருக்கின்றன. பல டாக்சிகளாகவும் பயன்படுத்தப்படுகின்றன. எஞ்சின் தவிர மற்றப் பாகங்களை வைத்துக்கொண்டு எஞ்சினை மட்டும் மாற்றிக்கொண்டு அந்தக் கார்களைத் தொடர்ந்து உபயோகிக்கிறார்கள். கியூபா மக்களுக்கு கார் மிகவும் பிடிக்குமாம். பழைய அமெரிக்கக் கார்களோடு புதிய வகை கார்களும் ஹவானா வீதிகளை வலம் வருகின்றன. டூரிஸ்ட் பேருந்துகளும் நகரைச் சுற்றி ஓடும் பேருந்துகளும் சீனாவால் தயாரிக்கப்பட்டவை. டாக்சிகளோடு நம் ஊரில் இருக்கும் ஆட்டோவோடு ஒப்பிடக் கூடிய வாகனங்களும் நம் சைக்கிள் ரிக்ஷா போன்ற வாகனங்களும் இருக்கின்றன. எல்லாவற்றிற்கும் வெளிநாட்டுப் பயணிகள் குக்குகளில்தான் பணம் கொடுக்க வேண்டும்.

ஹவானாவின் நடுவில் புரட்சிச் சதுக்கம் இருக்கிறது. அர்ஜென்டைனாவில் பிறந்து காஸ்ட்ரோவோடு கியூபாவின் புரட்சியில் கலந்துகொண்ட சே குவேராவின், இரும்புக் கம்பிகளால் வரையப்பட்ட ஒரு ஓவியம் ஒரு உயர்ந்த பல மாடிக் கட்டடத்தை அலங்கரிக்கிறது. ஊரின் பல பகுதியிலிருந்து இந்த ஓவியத்தைக் காணலாம். புரட்சிக்கு முன் கடைசியாக கியூபாவில் பதவி வகித்த பதீட்ஸாவின் மாளிகையில் புரட்சி மியூசியம் அமைந்திருக்கிறது. இங்கு காஸ்ட்ரோவும் அவருடைய கூட்டாளிகளும் பதீட்ஸா அரசை எதிர்த்துச் செய்த புரட்சியின் வரலாறு சித்தரிக்கப்பட்டிருக்கிறது. இதில் மூன்று மாடிகள் இருக்கின்றன. இரண்டாவது மாடிக்கும் மூன்றாவது மாடிக்கும் செல்ல லிப்ட் இருக்கிறது. ஆனால் நாங்கள் சென்ற அன்று லிப்ட் வேலைசெய்யவில்லை. படிகளில் ஏற முடியாதவர்கள் இரண்டாவது மாடிக்கும் மூன்றாவது மாடிக்கும் போகவே முடியாது. இவ்வளவு முக்கியமான மியூசியத்தில் லிப்ட்டை ஒழுங்காக வேலைசெய்ய வைப்பதில் ஏன் அக்கறை காட்டவில்லை என்று தெரியவில்லை.
ஹவானாவில் புரட்சிக்கு முன் கட்டப்பட்ட பல பிரமாண்ட கட்டடங்கள் இருக்கின்றன. அவற்றில் பல பழுதாகிப் புதுப்பிக்கப்படாமல் இருக்கின்றன. சில பழைய வீடுகளும் அழுக்குப் படிந்து பெயின்ட் மங்கிக் காட்சியளிக்கின்றன. இந்தக் கட்டடங்களைப் புதுப்பித்துக் கட்டப்போதுமான பணம் இல்லாததோடு தேவையான கட்டுமானப் பொருள்களும் கிடைப்பதில்லையாம். எல்லாம் அமெரிக்கத் தடைகளால் ஏற்பட்ட விளைவுகள். அமெரிக்க நண்பர் ஒருவரிடம் இதைக் கூறியபோது ‘இரண்டு ஹோம் டிப்போக்களை (அமெரிக்காவின் பெரிய டிபார்ட்மெண்ட் கடைகளில் Home Depot–வும் ஒன்று; கட்டடக் கட்டுமான சாமான்கள் விற்கும் கடை) அங்கு திறந்துவிட்டால் இந்தக் கட்டடங்களை எல்லாம் புதுப்பித்துவிடலாம்’ என்று ஜோக்கடித்தார்.
ஹவானாவின் தெருக்களில் நடமாடும் பெண்கள் உடைச் சிக்கனத்தைக் கடைப்பிடிப்பதுபோல் தெரிகிறது. கியூபாவில் எப்போதும் மிதமான வெப்பநிலை நிலவுவதால் பெண்கள் குறைந்த உடைகளையே அணிகிறார்கள். திருமணமானவர்களுக்கு அரசு சில சலுகைகள் வழங்கினாலும் பலர் திருமணம்செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழ்வதையே விரும்புகிறார்களாம். கியூபாவில் பிறக்கும் 60 சதவிகிதம் குழந்தைகள் திருமணமாகாத பெற்றோர்களுக்குப் பிறந்தவர்களாம். இம்மாதிரி விஷயங்களில் கியூபா மேற்கத்திய நாடுகளின் பழக்க வழக்கங்களைப் பின்பற்றுவதுபோல் தெரிகிறது.
ஹவானாவில் இருந்த சில சிறிய மார்க்கெட்டுகளுக்குச் சென்றோம். மார்க்கெட்டுகள் என்று அழைக்கப்பட்டாலும் அங்கு ஓரிரண்டு கடைகள்தான் இருந்தன. இவை நம் நாட்டு ரேஷன் கடைகள் போன்றவை. அங்கு மிகக் குறைந்த அளவிலேயே காய்கறிகள், பழங்கள் இருந்தன. கியூபா மக்கள் எங்கிருந்து தங்களுக்கு வேண்டிய காய்கறி, பழங்களை வாங்குகிறார்கள் என்று தெரியவில்லை. நாங்கள் தங்கியிருந்த வீட்டுக்காரர் அதிகாலையில் கடைக்குச் சென்று சாமான்கள் வாங்கி வருவார் என்று அவருடைய மனைவி கூறினார். அவர் கடைக்குச் செல்லும்போது நான் அவருடன் வருவதாகக் கூறினேன். ஏதாவது சாக்குப்போக்குச் சொல்லி என்னை அழைத்துப் போகவே இல்லை. இம்மாதிரி சாமான்களுக்கு கருப்பு மார்க்கெட் இருப்பதாகக் கூறுகிறார்கள். அது சரியாக இருக்குமோ என்ற சந்தேகம் வருகிறது. ராவுல் காஸ்ட்ரோ கைக்கு ஆட்சி வந்ததும் கிராமப்புறத்தில் மக்களுக்குச் சிறிதளவு நிலம் கொடுத்து விவசாயம் செய்யலாம் என்றார். தனிப்பட்டவர்கள் விளைவிக்கும் பொருள்கள் இந்த மாதிரிக் கடைகளுக்கு வருகின்றனவோ என்று சந்தேகம். அங்குதான் போய் வாங்கி வந்தாரோ என்னவோ. எங்களுக்குக் காலை உணவிலும் இரவு உணவிலும் நிறையப் பழங்களும் காய்கறிகளும் பரிமாறினார்கள். அவர்களுடைய குளிர்சாதனப் பெட்டியில் இருந்த மாதிரி அழகாகப் பழுத்த தக்காளிப் பழங்களையும் வாழைப்பழங்களையும் அன்னாசிப் பழங்களையும் நாங்கள் எந்தக் கடைகளிலும் பார்க்கவில்லை.
2014 டிசம்பரில் கியூபாவுடனான உறவைச் சீர்செய்து புதுப்பித்துக்கொள்ள ஒபாமா முயன்றதும் பல அமெரிக்கக் கம்பெனிகள் அங்கு போய் தங்கள் கடையை விரிக்க ஏற்கனவே பல முயற்சிகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளன. ஆனால் கியூபா அரசு எளிதில் இவர்களுடைய விருப்பம் நிறைவேற அனுமதிக்குமா என்று தெரியவில்லை. இதுவரை அமெரிக்க வணிக நிறுவனங்களின் அதிகாரிகள் 500 முறையும் அமெரிக்க அரசு அதிகாரிகள் 150 முறையும் கியூபாவிற்குச் சென்றிருந்தும் இதுவரைக் கைகூடியிருக்கும் வணிக ஒப்பந்தங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம் என்று நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் வெளிவந்த ஒரு கட்டுரை புலம்புகிறது. அமெரிக்க நிறுவனங்களில் பல உலகம் முழுவதும் தங்கள் கிளைகளைப் பரப்பியிருப்பதுபோல் கியூபாவிலும் செய்யலாம் என்று நினைக்கின்றன. நல்ல வேளையாக கியூபா அரசு அவ்வளவு எளிதாக அவர்களுக்கு வளைந்து கொடுக்கும் என்று தோன்றவில்லை. மேலே குறிப்பிட்டுள்ள பத்திரிக்கைக் கட்டுரையில், ‘நாம் கொடுப்பதற்குச் சமமானதைப் பெறலாம்’ என்ற விதியை கியூபா விஷயத்தில் பின்பற்ற முடியாது என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. கியூபா போடும் நிபந்தனைகளுக்கு நம்மால் ஈடு கொடுக்க முடியாது என்று முடித்திருக்கிறார்கள்.
ராவுல் காஸ்ட்ரோ அளவிற்குக் கூட ஃபிடல் காஸ்ட்ரோவிற்கு அமெரிக்க – கியூபா உறவைப் புதுப்பித்துக்கொள்வதில் விருப்பம் இருப்பதுபோல் தெரியவில்லை. ‘நடந்த பழைய விஷயங்களை மறந்துவிட்டுப் புது உறவைத் தொடர்வோம்’ என்று ஒபாமா சொன்னதை ஃபிடல் காஸ்ட்ரோவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அமெரிக்கா கியூபாவிற்குக் கொடுத்த தொந்தரவுகளையும் வணிகத் தடைகளையும் அவரால் எளிதாக மறக்க முடியவில்லை. இவற்றையெல்லாம் குறிப்பிட்டு ‘அமெரிக்க ஏகாதிபத்தியத்திடமிருந்து நாங்கள் எதையும் எதிர்பார்க்கவில்லை. கியூபா கடின உழைப்பால் முன்னேறி கல்வி, கலை, விஞ்ஞானம் மூலம் அடைந்திருக்கும் ஆன்மீக வளத்தையும் கண்ணியத்தையும் பெருமையையும் இழந்துவிடும் என்று யாரும் நினைக்க வேண்டாம்’ என்று கியூபாவின் கம்யூனிஸ்ட் பத்திரிக்கையான Granma-விற்கு எழுதிய ஒரு கட்டுரையில் ஃபிடல் காஸ்ட்ரோ குறிப்பிட்டிருக்கிறார்.
புரட்சியை வழிநடத்திய தலைவர் இப்படிக் கூறினாலும் கியூபா மக்களின் வாழ்க்கை வசதிகளை அதிகரித்துக்கொள்ள வேண்டும் என்ற கனவுகள் ஓரளவாவது நிறைவேற வேண்டும் என்பதுவும் அதே சமயம் அமெரிக்காவின் தலையீடு கியூபாவில் அதிகம் இருக்கக் கூடாது என்பதுவும் என்னுடைய விருப்பம். இது அமெரிக்கத் தேர்தலுக்குப் பிறகு வரும் அடுத்த ஜனாதிபதியையும் ராவுல் காஸ்ட்ரோவுக்குப் பிறகு ஏற்படும் தலைமையையும் பொறுத்திருக்கிறது. என்னுடைய நியாயமான விருப்பம் நிறைவேறும் என்று நம்புவோம்.
Picture from – http://dailycaller.com/2016/03/21/obama-snaps-pics-in-front-of-che-guevara-mural-twitter-explodes-photos/