Month: November 2016

  • சிந்தையில் நிற்கும் சிட்னி திருவிழா! 

    -எம். ஜெயராமசர்மா, மெல்பேண், அவுஸ்திரேலியா 
                        
    sarmaஆங்கில நாட்டினிலே அழகுதமிழ் சபையேறி அனைவரையும் அணைத்துநின்ற அதிசயத்தைச் சொல்லுகிறேன். வெள்ளையர்கள் தாமும் விருப்புடனே சேலையுடன் துள்ளுதமிழ் விழாக்காண துடிப்புடனே வந்துநின்றார். நல்லதமிழ் பேசிநின்ற நம்முடைய பிள்ளைகளை நாலுபேர் அறிவதற்கு நற்சபையாய் அமைந்ததுவே!

    கவிகம்பன் விழாவினையே கருத்துடனே நடத்திநின்ற காளையரைக்கன்னியரைக் கனம்பண்ணல் முறையன்றோ. ஜெயராமின் துணிவாலும் பணிவான குணத்தாலும் ஜெயமான விழாவாக அமைந்தமையை அறிந்திடுவோம். யாழ்மண்ணில் நடக்கின்ற விழாவாக நான்கண்டேன். ராஜ கதிரைகளும் ராஜசபை அலங்காரமும் ஜோராக இருந்ததை யாவருமே ரசித்தார்கள். ஜெயராஜின் கற்பனைகள் சிந்தாமல்,சிதறாமல் அவரின் மனத்தைப் பிரதிபலிப்பதாக மண்டப ஒழுங்கமைப்பு, அலங்காரம், வரவேற்று உபசரித்தல், அத்தனையும் அமைந்தமையைக் கட்டாயம் குறிப்பிடவே வேண்டும்.

    அக்கால மன்னர்கள் தமிழுக்கு உழைத்தோர்களைக் கெளரவித்து அவர்களுக்குக் குடை, கொடி, ஆலவட்டம் சகிதம் சபைக்கழைத்து பரிசில்கள் வழங்கினார்கள் என்று இலக்கியங்கள் வாயிலாகப் படித்திருக்கின்றோம்.

    இக்காலத்தில் மன்னர்களுக்குப் பதிலாக அரசாட்சியாளர்கள் தங்கள் மனம் போனபடிப் பாராட்டிப் பரிசளிப்பதையும் காண்கின்றோம். ஆனால் கம்பன்கழகம் போன்ற ஒரு அமைப்பு செய்வதைப்போல வேறு எந்தத் தமிழ் அமைப்புகளும் இப்படி ஒரு கெளரவிப்பு விழாவினைச் செய்யவில்லை என்றே கூறலாம்.

    பொருத்தமானவர்களைத் தேர்வுசெய்து அவர்களுக்கு உரிய கெளரவம் கொடுத்து மனத்திலே இருத்திவைக்கும்படியான பெறுமதி மிக்க பரிசினையும் வழங்கும் நயத்தகு நாகரிகத்தினால் ஏனைய அமைப்புக்களைவிடக்கம்பன்கழகம் உயர்ந்தோங்கியே நிற்கிறது என்பதை எவருமே மறுக்க மாட்டார்கள்.   

    சிட்னி மாநகரில் அண்மையில் நடந்தேறிய கம்பன் விழாவில் நடந்த கெளரவிப்பைச் சோழ அரசபையில் நடந்த கெளரவிப்பாகக் கற்பனை செய்து நான் பார்க்கிறேன். அத்தனை நேர்த்தியும், சிறப்புமாக அந்த வைபவம் அமைந்திருந்தது. இதனைத் தனது மனத்தில் திட்டமிட்டுத் தனது சீடர்களுடன் இணைந்து அரங்கேற்றிய அன்புத்தம்பி ஜெயராம் அவர்களை அகமார வாழ்த்துகின்றேன்.

    21 அக்டோபர் ஆரம்பமான இத்திருவிழா, அறிஞர்பலர் சிறப்பிக்க 23அக்டோபர் வரை ஆனந்தமாக நடைபெற்றது.   21, 22 அக்டோபர் திகதிகளில் நடைபெற்ற விழாவில் பங்குகொள்ளும் பாக்கியத்தை இறைவன் எனக்குக் கொடுத்திருந்தார்.இரண்டு தினங்களும் “தன்னை மறந்தாள் தன்நாமம் கொட்டாள் தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே” என்னும் நிலையில்தான் நானிருந்தேன் என்று சொல்லுவதில் பெருமகிழ்வு அடைகின்றேன்.

    உண்ணும் சோறும், பருகும் நீரும், கம்பனும் கன்னித்தமிழுமே என்றிருக்கும் தம்பி ஜெயராமையும் அவரது மாணாக்கர் பரம்பரையும் பார்க்கும்பொழுது தமிழ் இனி ஒருபோது வீழாது. அதற்கு என்றுமே உயர்ச்சிதான் 
    என்னும் எண்ணமே எனக்குத் தோன்றியது.

    சிட்னியில் நடந்த கம்பன் திருவிழாவில் வயது வேறுபாடின்றி மிகச் சிறியவரும் இடைத்தரமானவரும், நடுத்தரமானவரும், முதிர்வானவர்களும் நிகழ்ச்சிகளை அலங்கரித்தமை மிகவும் அற்புதமாக இருந்தது.

    அதிகமான விழாக்களில் சற்று முதிர்ந்தவர்களே முன்னிலை வகிப்பார்கள். ஆனால் பத்தாவது ஆண்டு கம்பனது திருவிழா வயதினைத்தூக்கி ஒருமூலையில் வைத்துவிட்டு வளரிளம் குருத்துக்களுக்கு வாய்ப்பளித்து ஊக்கப்படுத்தியமை மிகவும் முக்கிய விடயமாக அமைந்ததைக் கட்டாயம் சொல்லியே ஆகவேண்டும்.

    முதல் நாள் கவியரங்கம் கலாநிதி ஶ்ரீ பிரசாந்தன் நடுவராயிருக்க நடந்தது. இதில் கலந்தவர்கள் இளைஞரும் அல்லர் முதியவர்களும் அல்லர். ” எண்ணங்களும் வண்ணங்களும்” என்பதே கவியரங்கத் தலைப்பு. இதில் பங்கு கொண்டவர்கள் வெளிப்படுத்திய விதங்களைப் பார்த்து உண்மையில் வியந்தேவிட்டேன். சாதாரண வண்ணங்களுக்குள் இவ்வளவு விஷயங்களா என்று எண்ணத்தோன்றியது. இதில் பங்கு கொண்டவர்களில் தமிழ்முரசு ஆசிரியர் திரு. பாஸ்கரன் அவர்களை மட்டுமே எனக்குத் தெரியும். ஏனையவர்களை அன்றுதான் மேடையில் கண்டேன். பாஸ்கரன் அவர்கள் ‘முடிவுறா முகாரி’ என்னும் கவிதைநூலினை வெளியிட்டிருந்தார். நானும் அதனை வாசித்து விமர்சனமும் எழுதுயிருக்கிறேன். பாஸ்கரன் புதுக்கவிதை தானே பாடுவார். அவர் எப்படி இதற்குள் வந்தார் என்று நான் யோசித்துக்கொண்டிருக்கும்போதே கறுப்பு வண்ணம் பற்றிக் கவிபாட வந்துவிட்டார்.    கொம்யூனிசமாகக் கொட்டப்போகிறாரே என்று எண்ணிய எனக்கு ஏமாற்றமே காத்திருந்தது. பாஸ்கரனின் மரபுக்கவிதை பக்தியுடன் பின்னிப்பிணைந்து எதுகை மோனையுடன் சந்தத்தமிழாய் கொட்டியது கண்டதும் உண்மையிலே பிரமித்தே விட்டேன். கறுப்பென்றால் வெறுக்கவேண்டாம் என்னும் கருவை மிகவும் நயமாக பாஸ்கரன் தந்தது எனக்குள் உறைந்துவிட்டது என்பதை மகிழ்வுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.

    வண்ணங்களைப் பற்றி உலகு பார்க்கும் பார்வை, உலக மக்கள் பார்க்கும் பார்வை, சாதாரணமாக மக்கள் பார்க்கும் பார்வை, இலக்கியங்கள் பார்க்கும் பார்வை எனப் பல பார்வைகளை பலவண்ணமாய் இக்கவியரங்கம் விருந்தாக அளித்தது. கவியரங்க நடுவரின் புன்சிரிப்பும், சுவையான, கலகலப்பான தமிழ்க் கவிதையும் கவியரங்கின் அழகுக்கு அழகூட்டியது என்பது எனது அவிப்பிராயமாகும்.

    இரண்டாம் நாள் திருவிழா இளைஞரையும் சிறுவர்களையும்முன்னிறுத்தி ஆரம்பமாகியது. தமிழ்நாட்டிலிருந்து வருகை தந்திருந்த தமிழ்ப்பேராசிரியர் வி. அசோக்குமார் அவர்களது தலைமையில்,  “திட்டம் போட்டு எழுதினானே” என்னும் மகுடத்தில் காதல், தியாகம், வீரம், தாய்மை, நட்பு, வஞ்சகம் என்னும் பார்வையில் இளையர் பட்டாளம் இனிய தமிழைப் பொழிந்துநின்றார்கள்.

    அவுஸ்த்திரேலிய மண்ணில் உள்ள இளைஞர்கள் இங்கிலீசு மட்டும்தான் பேசுவார்கள். தமிழென்றால் எட்டவே நிற்பார்கள் என்னும் எண்ணத்தைத் தவிடு பொடியாக்கும் விதத்தில் இந்த நிகழ்ச்சி அமைந்திருந்தது. அவர்கள் அனைவரையும் அகமாரப் பாராட்டி வாழ்த்துகிறேன். இவர்களால் இனிய தமிழ்இன்ப உலா வரும் என்பதில் எள்ளளவும் சந்தேகமே இல்லை.

    இளைஞரைத் தொடர்ந்து வயதிலே மூத்தோர்கள் பலர் பங்கு கொள்ள, கம்பனது கண்பார்வையில் இருக்கும் கம்பவாரிதி ஜெயராஜின் தலைமையில் சிந்தனை அரங்கம் இடம்பெற்றது. இப்படியும் சிந்திக்க முடியுமா என்று சபையினரையே அதிரவைத்தது  இவ்வரங்கம்.    கம்பவாரிதியின் சொல்லாற்றலால் வாதிட்டவர்கள் மயங்கியே விட்டார்கள். சபையைக் கேட்கவா வேண்டும்? ஆடாமல் அசையாமல் யாவருமே கம்பவாரிதியையே கண்கொட்டாமல் பார்த்தபடி அவர் பேசுவதைக் கேட்டபடி இருந்தார்கள். யாவரையும் இனிய தமிழ் இறுக அணைத்தபடியால் நிகழ்ச்சி முடிந்துவிட்டதா என்பதே தெரியாமல் யாவரும் இருந்தார்கள் என்பதே உண்மை. அதற்கு நானும் விலக்கல்ல!

    சிறுவர்களைக் கொண்டு கம்பனது தெரிந்தெடுத்த பாத்திரங்களைக்கண்முன்னே நிறுத்திய நிகழ்ச்சியாக இது இருந்தது. பாத்திரப் பொருத்தமாகச் சிறுவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு உரிய ஆடை ஆபரணங்களுடன் மேடையில் உலாவர விட்டமையை யாவருமே மனதார சித்தார்கள். அந்தக்குழந்தைகளையும் அன்புடன் நேசித்தார்கள். மனத்தில் பதியும் நிகழ்ச்சி என்று சொல்லவே வேண்டும். அவர்களை ஒழுங்கு படுத்தியவர்கள் பாராட்டுக்கு உரியவர்களே.

     கம்பன் கழகத்தால் சிறுவர்களுக்கும் இளைஞர்களுக்கும் அவர்களின் திறலுக்காகப் பலநிலைகளில் பரிசுகள் வழங்கப்பட்டன. அதைத்தொடர்ந்து சான்றோர் விருதும் மாருதி விருதும் வழங்கும் நிகழ்சி இடம்பெற்றது.

    ஆங்கில மந்திரிகள் அரங்கினில் அமர்ந்து இருக்கச் சான்றோர் விருதுகள் வழங்கப்பட்டன. அதைத்தொடர்ந்து மாருதி விருது விழா மிகவும் கோலாகலமாகத் தொடங்கியது. நிறைவில் கம்பவாரிதியின் தலைமையில் மிகச் சிறப்பான பட்டிமண்டபம் இடம்பெற்றது. மீண்டும் தமிழ் மாரிப் பொழிந்தது, சபையிலே ஆனந்தம் பெருகியது.

    அக்டோபர் மாதத்தில் ஆனந்தம், அகநிறைவு அத்தனையும் தந்தவிழாவாக சிட்னி மாநகரில் நடைபெற்ற கம்பனது திருவிழாவைக் காணுகிறேன். இதுதமிழ்த் திருவிழா. தமிழைத் தழைக்கச் செய்யும் பெருவிழா. எங்குச் சென்றாலும் தமிழ் தமிழ்தான் என எடுத்தியம்பும் விழா என்பதே எனது மனத்தில் எழுந்த எண்ணமாகும். இப்படி விழாக்கள் நடந்தால் எல்லோரும் மகிழ்வடைவார். எங்கள் தமிழ் பெருமையுறும்.

     “கம்பனைப் படிப்போம்; கன்னித்தமிழ் காப்போம்!”

     

     

    Share
  • வாலாஜா ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் நவம்பர் 13 ம் தேதி ஸம்வத்ஸர அபிஷேக விசேஷம் ஹோம சப்தாஹம் இனிதே ஆரம்பமானது.

    aro2

    வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில், 28ம் தேதி (13.11.2016) முதல் கார்த்திகை மாதம் 4ம் தேதி (19.11.2016) வரையிலும் ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி ஸமேத தன்வந்திரி பெருமாள் மற்றும் இங்கு பிரதிஷ்டை செய்துள்ள இதர 73 விதமான பரிவார தேவதைகளுக்கும் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி “ஸம்வத்ஸராபிஷேகம்” சப்தாஹமாக நடைபெற உள்ளது.

    aroaro1

    இதில் முதல் நாளான இன்று 13.11.2016 கோ பூஜை, வேத பாராயணம், விக்னேஸ்வர பூஜை போன்ற பூர்வாங்க பூஜைகளுடன் தொடங்கப்பட்டு யாகங்கள் சிறப்பாக நடைபெற்றது.

    மேலும் இந்நிகழ்ச்சியின் போது ‘Danvantri Arogya Peedam – A National Temple’ எனும் ஆங்கில நூலானது வெளியிடப்பட்டது. மாண்புமிகு சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி மகாதேவன் அவர்கள் வெளியிட உயர்திரு. K.மணிவண்ணன், மாவட்ட வருவாய் அலுவலர், வேலூர். டாக்டர். சதீஷ், சென்னை, திரு.K.ராதாகிருஷ்ணன், காவல் துறை தலைமை இயக்குநர், சிவில் சப்ளையிஸ், சென்னை. திரு.முருகையா IAS, மாநில ஆணையாளர், மாற்றுத்திறனாளிகள் நலம், சென்னை. டாக்டர். கோதண்டராமன், பஞ்சவடி, திரு.P.V.V.மூர்த்தி, ஹிந்து நிருபர், வேலூர், டாக்டர். கோபால்-கனகலட்சுமி, பெங்களூர், டாக்டர் விஸ்வஜா, சென்னை ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

    aro3இவ்வைபவங்களில் சுற்றுப்புற நகர பொதுமக்கள், அருளாளர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் தன்வந்திரி பக்தர்கள் பங்கேற்று குருவருளுடன் திருவருள் பெற அழைக்கின்றோம். மேற்கண்ட ஏழு நாட்களும் சிறப்பு அன்னதானத்துடன், கலை நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள், ஆன்மிக சொற்பொழிவுகள் நடைபெறும். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    Share
  • 2016 நவம்பர் 14 ஆம் நாள் தெரியும் நிலா, 70 ஆண்டுக்கு ஒருமுறை வரும் பேருருவப் பெருநிலவு !

    aj

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    http://www.bing.com/videos/search?q=extreme+super+moon&qpvt=Extreme+Super+Moon&FORM=VDRE

    +++++++++++++++

    moons-orbit-around-earth

    supermoon-size

    +++++++++++++++

    பூமியின் உடற் சதையி லிருந்து
    பூத்தது  வெண்ணிலவு !
    நீள் ஆரத்தில் தெரியும் சிறு நிலவு !
    குறு ஆரத்தில் பெருநிலவு ! 
    பூமித் தாயிக்குப் பரிவுடன்
    ஒருமுகம் காட்டி 
    மறுமுகம் மறைப்பது நிலவு !
    அண்டையில் சுற்றிய
    முரண்கோள் தியா” 
    பண்டைப் புவியுடன் மோதி
    உருண்டை யாய்த் 
    திரண்டது நிலவு !
    பூமியும் நிலவும் ஒரே ஒரு
    பிண்டத்திலே
    உண்டான
    உண்டைக் கட்டிகள் !
    தாய்ப் புவியும் சேய் நிலவும்
    கைகோர்த் தாடும்
    அம்மானைப் பந்துகள் !
    பூமியின் நீர் ஊற்று போல்
    நிலவுக் குள்ளும்
    நீர்த் தடாகம் இருக்கலாம் !
    குளிர் நீரில் நெளிந்து வாழும்
    உயிர் இம்மிகளும்
    உலவலாம் !
     
    ++++++++++++++++++++

    apsidal-precession-of-moon

    நிலவின் சுற்றுவீதி சுழற்சி

    ++++++++++++++++

    பொங்கிவரும் பேரளவுப் பெருநிலவு

    2016 நவம்பர் 14 ஆம் நாள் புவிக்கு மிக நெருங்கி நிலவு நகர்ந்து, பேரளவுப் பொன்னிலவாய் வானில் தோன்றிக் கண்ணைக் கவரப் போகிறது ! வடிவம் பெரிதாய்த் தெரிவதுடன் சற்று பொன்னொளியும் மிகையாய்க் காணப் போகிறது.  இதைத்தான் பாரதியார் “பொங்கிவரும் பெருநிலவு” எனப் பாடிச் சென்றார் என்று நாம் சொல்லிக் கொள்ளலாம் !  புவிக்கு இம்மாதிரி நிலவின் நெருக்கம் 69 ஆண்டுக்கு ஒருமுறை நேர்ந்து, நிலவுக்குப் பெருவடிவமும், பேரொளியும்  தெரியும் என்று உலக வானியல் நிபுணர் கணித்துள்ளார்.  அப்போது புவி மையத் தூரம், நிலவு மையத்திலிருந்து 221,524 மைல் [356,509 கி.மீ.] இருக்கும்.  அதாவது புவித்தளம், நிலவுத் தளத்திலிருந்து 216,486 மைல் [348,401 கி.மீ.] தூரத்தில் இருக்கும்.  இந்தப் பெருநிலவின் முழு வடிவம் நவம்பர் 13 இல் வட அமெரிக்கக் கண்டத்தில் தெரியும்.

    1948 ஜனவரி 26 இல் நிலவு பேரளவு தெரிந்த பிறகு இப்போது மீண்டும் பெரிதாய்க் காணப் போகிறது.  அடுத்து இப்படிப் பெரிதாய்த் தெரியப் போவது 2034 நவம்பர் 25 ஆம் நாளில்தான்.

    புவியை நிலவு சுற்றிவரும் சுற்றுவீதி முழுவட்டமில்லை.  சற்று நீள் வட்டமானது.  சராசரி சுற்றுவீதி தூரம் : 238,900 மைல் [384,400 கி.மீ.]. நிலவின் குறு ஆரமும் [Perigee] நீள் ஆரமும் [Apogee] பற்பல காரணங்களால் முக்கியமாக நிலவின் நீள் ஆரம் பரிதியை நோக்குவதால், மாதா மாதம் மாறுகின்றன.  நிலவின் சுற்றுவீதி நீட்சி நவம்பர்-பிப்ரவரி நாட்களில் உச்சமாகப் பரிதிக்கு நெருங்கி உள்ளது. பூமியின் சுற்றுவீதியும் சற்று [2%] நீள்வட்டமாய் உள்ளது.  அதனால் பரிதியின் ஈர்ப்பியல் பாதிப்பு நவம்பர், டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் உச்சமாக உள்ளது.

    2016 நவம்பர் 14 இல் தெரியும் பெருநிலவு ] குறு ஆர முழுநிலவு [Perigean Full Moon]  என்று பெயரிடப் பட்டுள்ளது.  அந்த நிகழ்ச்சிப் பெருநிலவுகள் தற்போது “பேருருவ நிலவு”  [Supermoons] என்று அழைக்கப் படுகின்றன. இப்பெயரை 1979 இல் இட்ட ஜோதிடர் : ரிச்சர்டு நோல் [Astrologer Richard Nolle].  நிலவின் விட்டம் 7% பெரிதாகவும், பரப்பளவு 15% மிகையாகவும் தெரியும்.  அப்போது பரிதி ஒளி நிலவில் படும்போது 16% ஒளிமயம் அதிகமாகத் தோன்றும்.  அப்போது பூமியில் கடல் அலைகள் உயரம் சற்று உயரும்.  அலையடிப்பு கடல்கரைப் பரப்பை 30 அடி தூரம் உள் நோக்கி நகர்த்தும்.

    +++++++++++++++++++

    super-moon-5

    “நாசாவின் ஸ்டியரியோ இரட்டை விண்ணுளவிகள் பூமிக்கு அருகில் பரிதியைச் சுற்றிய பூர்வீக அண்டக் கோள் ஒன்றின் எச்சத் துணுக்குகளைத் (Remnants of an Ancient Planet) தேடி புதிரான ஓர் அரங்கை நோக்கிச் செல்கின்றன !  அந்த உளவிகள் ஏதாவது அதன் துணுக்குகளைக் கண்டால் நிலவு தோன்றிய ஒரு பெரும் புதிர் தீர்க்கப்படும் !  அந்த அண்டக் கோளின் பெயர்தான் தியா (Theia) என்பது.  அது ஒரு கற்பனைக் கோள்.  அதனை யாரும் இதுவரை மெய்யாகப் பார்த்ததில்லை.  ஆனால் ஆராய்ச்சியாளர் அக்கோள் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததாகவும் அது பூமியுடன் மோதி நிலவு உருவானது என்பதாகவும் நம்புகிறார்கள்.”

    மைக்கேல் கெய்ஸர் (NASA STEREO Project Scientist) (ஏப்ரல் 14, 2009)

    moons-orbit-around-earth-1

    “பூமியிலிருந்தும் நிலவிலிருந்தும் எடுத்த திரட்டு ஸிலிகேட் (Bulk Silicate) இரண்டும் ஒரே மாதிரி ஏகமூலக் கூட்டுக் கலவை (Isotopic Composition) கொண்டவை.  அண்டக் கோளின் அசுரத் தாக்குதலின் போது பேரளவில் “ஏகமூலச் சமப்பாடு” (Isotopic Equilibration) அவற்றில் நேர்ந்திருக்கிறது என்பது சமீபத்தில் வெளியான அறிக்கைக்கு உடன்பாடு தெரிவிக்கிறது.

    இயற்கை விஞ்ஞான வெளியீடு (Nature Science Journal)

    super-moon-8

    அண்டக் கோள் தியாவின் அசுர மோதல் நியதி

    4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னே பூமிக்கருகில் பரிதியைச் சுற்றி வந்த பூர்வீகக் கோள் ஒன்று பூமியோடு மோதிச் சிதைவுத் துணுக்குகளே நிலவு துணைக் கோளாகியது என்னும் ஓர் “அசுர மோதல் கோட்பாடு” (The Giant Impact Hypothesis) புதியதாக நிலவி வருகிறது !  அந்தக் கோள் செவ்வாய்க் கோள் அளவான “தியா” (Theia) என்று கூறப்படுகிறது.  இந்தக் கோட்பாடுக்குச் சான்றளிப்பவை : நாசாவின் அபொல்லோ விண்வெளித் தீரர் நிலவிலிருந்து கொண்டு வந்த மாதிரிப் பாறைகள், மண் திரட்டுகள்.  அந்த மாதிரிகள் காட்டுவதென்ன ?  நிலவின் தரைப் பரப்பு ஒருகாலத்தில் உருகி அமைந்தது என்பது.  நிலவின் உட்கரு மிகச் சிறு இரும்பு உண்டை (Relatively Small Iron Core) என்பது.

    super-moon-2

    அடுத்த சான்று.  மற்ற விண்மீன் மண்டலங்களின் கோள்களில் அத்தகைய மோதல்கள் காணப்படுவது.  இப்போது தீர்வு காணப்படாத வினாக்கள் :  ஏன் நிலவின் மாதிரிகள் இரும்பு ஆக்ஸைடு அல்லது தீண்டா மூலகங்கள் போன்றவற்றின் (Iron Oxide or Siderophilic Elements) (Siderophile Elements : Any element that has a weak affinity for oxygen and sulfur and that is readily soluble in molten iron. Siderophile elements include iron itself, nickel, cobalt, platinum, gold, tin, and tantalum.) ஆவியாகும் மூலகங்களின் வீதங்களைக் (Ratio of Volatile Elemets) காட்டவில்லை ? இந்தக் கோட்பாடு வலியுறுத்தும் பூமியின் எரிமலைக் குழம்பு ஏறி வழிந்த தரைப்பகுதி (Magma Ocean) எப்படி பூமியில் தோன்றி யிருக்கக் கூடும் என்னும் ஐயப்பாடு !

    Fig 1A Planet Theia's Collision

    மோதல் கோட்பாடு தோன்றிய வரலாறு

    1898 ஆம் ஆண்டில்தான் ஜார்ஜ் ஹோவேர்டு டார்வின் (George Howard Darwin) (பரிணாமக் கோட்பாடு எழுதிய சார்லஸ் டார்வின் அல்லர்) பூமியும் நிலவும் பூர்வீக காலத்தில் ஒரே உடம்பாக இருந்தவை என்று கூறியவர். ஜார்ஜ் டார்வினின் கோட்பாடு என்ன வென்றல் பூர்வ பிள்ளைப் பூமியின் சுழல்வீச்சு விசையால் (Centrifugal Force) பூமியிலிருந்து உருகித் திரண்ட ஒரு கோள் வெளிப்பட்டு நிலவென்னும் துணைக்கோள் ஆனது.  அவர் நியூட்டனின் யந்திரவியல் கணக்கைப் பயன்படுத்தி நிலவு முதலில் பூமிக்கு வெகு அருலில் சுற்றத் துவங்கிப் பிறகு மெதுவாக விலகிச் சென்றது என்று விளக்கினார்.  அந்த விலக்கு நகர்ச்சியைப் பிறகு நாசாவும், சோவியத் ரஷ்யாவும் லேஸர் ஒளிக்கதிர்களை நிலவுக்கு அனுப்பி உறுதிப்படுத்தின.

    Fig 1 The Theia Planet Theory

    ஆனால் டார்வினின் கணித முறைப்படி மீட்சி முறையில் பின்னே சென்று நிலவைத் திருப்பி பூமியோடு இணைத்துக் கணக்கிட முடியவில்லை ! 1946 இல் ஹார்வேர்டு பலகலைக் கழகத்தைச் சேர்ந்த ரெகினால்டு ஆல்ட்வொர்த் டாலி (Reginald Aldworth Daly) ஜார்ஜ் டார்வினின் கோட்பாடை எதிர்த்து, நிலவு சுழல்வீச்சு விசையால் உண்டாக வில்லை என்றும் வேறோர் கோள் மோதித் தோன்றிய தென்றும் சவால் விடுத்தார்.  பிறகு டாலியின் கருத்து பல்லாண்டுகள் கழித்து 1975 இல் மீண்டும் டாக்டர் வில்லியம் ஹார்ட்மன், டாக்டர் டொனால்டு டேவிஸ் இருவரால் வெளியாக்கப் பட்டது.  புதுப்பிக்கப் பட்ட அந்தக் கொள்கையே அசுர மோதல் கோட்பாடாய் இப்போது மெருகிடப் படுகிறது.

    Fig 1B The Birth of the Moon

    மோதிய பூர்வீகக் கோள் தியாவைப் பற்றி

    இதுவரை யாரும் தியா என்னும் கோளைப் பார்த்தில்லை.  தியா என்பது ஒரு கற்பனைக் கோள்.  தியா என்பது ஒரு கிரேக்க தேவதையின் பெயர்.  4.5 பில்லியன் ஆண்டுகட்கு முன்பு பரிதி மண்டல் கோள்கள் உண்டான போது தியாவும் தோன்றியதாகத் தெரிகிறது.  மோதுவதற்கு முன்பு தியா பூமியைப் போல், பூமிக்கு அருகிலே பரிதியைச் சுற்றி வந்தது.  தியாவின் கோள் அளவு செவ்வாய்க் கோளை ஒத்தது.  பூர்வீகக் கோள் தியா தோன்றைய போது அது பூமியின் (Lagrangian Points L4 or L5 Relative to Earth) சமகோணப் புள்ளிகளில் ஒன்றில் இருந்திருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.  அதாவது பூமி சுற்றி வரும் பாதையில் பூமிக்கு 60 டிகிரி முன்னோ அல்லது 60 டிகிரி பின்னோ தியாவும் சுற்றி வந்திருக்க வேண்டும்.  ஏதோ ஒரு காரணத்தால் தியாவின் நிறை மீறிப் போனதால் சுற்று வீதி நிலைப்பாடு தவறிப் பாதிப்பானது !  அப்போது பூர்வீகப் பூமியின் மிகையான ஈர்ப்புச் சக்தியால் தியா இழுக்கப்பட்டு பூமியோடு மோதும் நிலை ஏற்பட்டது !

    Fig 1C Earth & Moon Axes Tilts

    வானியல் வாசகத்தில் அந்த தியா–பூமி மோதல் மிதமான வேகமாயினும், விளைவு அசுரத் தனமானது.  தியா பூமியை ஒரு கோண மூலையில் தாக்கி, அதன் இரும்பு உட்கரு பூமியின் வயிற்றுக்குள் பாய்ந்தது !  தியாவின் மேல்தட்டும் (Mantle) பூமியின் குறிப்பிடத் தக்கப் பகுதி மேல்தட்டும் சிதைந்து வெளியேறிப் பூமியைச் சுற்றத் துவங்கியது !  அந்தச் சிதைவுப் பிண்டமே ஒரு நூற்றாண்டுக்குள் உருண்டு திரண்டு நிலவானது என்று கருதப் படுகிறது.  கணினிப் போலிமாடல் (Computer Simulations) அமைப்பில் கண்டபடி 2% சிதைவுப் பிண்டம் தெறித்துப் போய்ச் சமகோணப் புள்ளியில் ஒரு வளையத்தில் குப்பையாய்ச் சுற்றிக் கொண்டிருக்கும் என்று அறியப் படுகிறது.  சிதைக்கப்பட்ட பாதி நிறைதான் நிலவாக உருவாகும் என்றும் போலிமாடலில் அறியப் படுகிறது.

    Fig 6 Earth Seen from the Moon

    அப்போது பூமிக்குப் பேரளவு “கோண முடுக்கமும்” (Angular Momentum) நிறையும் (Mass) அளவு கூடுகின்றன என்பது தெரிய வருகிறது.  பூமி எந்த வேகத்தில் சுழன்றாலும், எந்த சாய்வில் சரிந்திருந்தாலும் மோதலுக்குப் பிறகு அதனுடைய நாள் நீட்சி 5 மணி நேரம் மிகையாகும் !  அத்துடன் பூமியின் மத்தியரேகை நிலவின் சுற்றுவீதி மட்டத்தை நோக்கி நெருங்கும் !  அந்த மோதலின் போது குறிப்பிடத் தக்க துண்டுகள் உண்டாகவும், அவை யாவும் சமகோணப் புள்ளிகளில் தங்கிக் கொள்ளும் வாய்ப்புக்கள் நேருகின்றன.  அத்தகைய மோதல் சிதைவுத் துணுக்குகள், மற்ற கோள்களால் சமநிலை தடுமாறிப் பாதிப்பு ஏற்பட வில்லை யென்றால் 100 மில்லியன் ஆண்டுகள் கூட அப்புள்ளிகளில் தங்கிக் கிடக்கும் என்று ஊகிக்கப் படுகிறது !

    Fig 1E NASA's STEREO Probes

    அப்பொல்லோ பயணத்தில் கிடைத்த ஒப்பில்லா மாதிரிகள்

    1969-1970 ஆண்டுகளில் நிலவுக்குப் பயணம் செய்த பல்வேறு அப்பொல்லோ குறிப்பணிகளில் (Apollo Moon Missions) வானியல் விமானிகள் கொண்டுவந்த இரசாயன மாதிரிகள் நமது துணைக்கோள் நிலவைப் பற்றி மகத்தானப் புதுமைகளை வெளியிட்டன.  நிலாப் பாறைகளின் மாதிரிகளில் பூமியில் கிடைக்கும் “ஆக்ஸிஜென் ஏகமூலப் பொருட்கள்” (Oxygen Isotope Materials) போல் காணப் பட்டன.  அதாவது பூமியும், நிலவும் பரிதி மண்டலத்தின் ஒரே அரங்கப் பகுதியில் (Same Region of the Solar System) தோன்றையவை என்று நிரூபித்தன !  அத்துடன் நிலவிலும் பூமியைப் போல் உச்ச உஷ்ணத்தில் உருகும் ஆவியியல் மூலகங்கள் (Volatile Elemets that melt at high Temperatures) எதுவும் கிடையாது !  அவை இரண்டும் ஆதி காலத்தில் அதி உச்சநிலை உஷ்ணத்தில் வடிவானவை என்பது தெரிய வருகின்றன.

    Fig 4 STEREO Twin Probes Looking at the Sun

    வானியல் விஞ்ஞானிகள் நிலவின் இரசாயன மாதிரிகள் பூகோளத்தின் மேற்தளத் தட்டைப் போல் (Earth’s Mantle) ஒத்திருப்பதைக் கண்டறிந்தார்கள்.  ஆனால் தோன்றிய போது பூமியின் மேற்தளத் தட்டு மிகத் திண்மையான உலோகத்திலிருந்து உண்டானது.  தனித்துத் தோன்றிய நிலாவிலே எப்படி பூமியை ஒத்த உலோகவியல் தட்டுப் பொருட்களைக் கொண்டிருக்க முடியும் என்னும் கேள்வி எழுகிறது !  அப்பொல்லோ-11 வானியல் விமானிகள் கொண்டுவந்த வெள்ளைக் கூழாங்கற்களில் நூதனப் பாறை “அநார்த்தோசைட்” (Anorthosite) இருந்தது.  அப்பாறையில் பூமியில் தென்படும் சோடியம், கால்சியம் அலுமினியம் சிலிகேட் (Sodium & Calcium Aluminiuam Silicates) தாதுக்கள் இருந்தன.

    Fig 3 STEREO Probe's Tools

    நாசாவின் விண்வெளிக் காலநிலை விண்ணுளவி

    நாசாவின் விண்வெளிக் காலநிலை விண்ணுளவி (NASA’s Space Weather Monitoring Spacecraft STEREO) இரட்டை உளவிகளைக் கொண்டு பரிதியின் பாண்பாடுகளை ஆராய 2006 அக்டோபர் மாதம் 25 ஆம் தேதி பூமியைச் சுற்றி வர அனுப்பப் பட்டது.  அது நாசாவின் மூன்றாவது திட்டமான பரிதி மண்டல உளவி (NASA’s Solar Terrestrial Probes) ஆராய்ச்சிகள்.  ஸ்டியரியோ திட்டம் எனக் கூறப்படும் அந்த ஆராய்ச்சியில் முப்பக்கப் பதிவு நோக்கி (3D Probing) சூரியனின் சூறாவளிப் புயல்களை (Anatomy of Solar Storms) உட்புற ஆய்வுகள் செய்யும்.  பரிதியின் தீக்கறைகளை (Sun Spots) ஆராயும் ! அத்துடன் அதன் ஆய்வுப் பணிகள் நிற்கவில்லை.  நாசா ஸ்டியரியோ இரட்டை உளவிகளைத் திசை திருப்பி சமகோணப் புள்ளிகளின் அரங்குகளை (Lagrangian Point Zones L4 & L5) உளவி மோதிச் சிதைந்து போன பூர்வீகக் கோள் தியாவின் சிந்திய 2% துணுக்குகளைத் தேடிச் செல்லும் !  தியாவின் அந்தத் துணுக்குகளை விண்ணுளவி கண்டு பிடித்தால் நிலவு எப்படித் தோன்றியது என்னும் பெரும் புதிர் விடுவிக்கப்படும் !

    Fig 2 The Giant Impact Theory

    நாசா சமகோணப் புள்ளித் தளங்களை சிதறிய முரண்கோள்களின் (Asteroids) ஈர்ப்புத் துணுக்குகள் இளைப்பாறும் களங்கள் (Gravitaional Parking Lots) என்று குறிப்பிடுகிறது.  முரண்கோள்களில் இருக்கும் பாறைத் துணுக்குகள் பூமி நிலவைப் போல் ஒரே மாதிரி மண்ணைக் கொண்டிருந்தால் தியா மோதல் கோட்பாடை நிரூபிப்பதாக நாங்கள் அறிவிப்போம் என்று கெய்ஸர் கூறுகிறார்.  மேலும் நாசாவின் அபொல்லோ விண்வெளித் தீரர்கள் எடுத்து வந்த பாறைகள் பூமியில் உள்ள பாறைகளைப் போன்ற ஆக்ஸிஜன் ஏகமூலக் கூட்டுக் கலவையை (Oxygen Isotope Compositions) ஒத்திருந்தன என்றும் அறியப்பட்டுள்ளது.

    super-moon-9

    [தொடரும்]
    +++++++++++++++++++

    https://youtu.be/QKdvexOZ-MQ

    தகவல்:

    Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines. Wikipedia & Earth Science & the Environmental Book.

    1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
    2. 50 Greatest Mysteries of the Universe – How Did the Moon form ? (Aug 21, 2007)
    3. Astronomy Facts File Dictionary (1986)
    4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
    5. National Geographic – Invaders from Space – Meteorites (Sep 1986)
    6. Cosmos By Carl Sagan (1980)
    7. Dictionary of Science – Webster’s New world (1998)
    8. Physics for Poets By :  Robert March (1983)
    9. Atlas of the Skies (2005)
    10 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
    11 On the Moon By : Patrick Moore (January 2001)
    12 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40802271&format=html(நிலவு எப்படித் தோன்றியது ?)
    13 Wikipedia – Inner Structure of the Moon [January 31, 2008]
    14 Astronomical Society of the Pacific – Whait if the Moon Did not Exist ? By : Neil F. Comins, University of Maine (1996)
    15 AstronomyCafe.net What Would Have Happened if the Earth Did not Have the Moon ?
    16 Home Page. Natural World . Com – Formation of the Earth & The Moon, Tides & Gravity
    17 Earth-Moon Dynamics Page – Would We have Had Evolution Without the Moon ? By : Dan Green B.Sc. (Hons).
    18 Tides on Earth – The Recession of the Moon By : Tim Thompson (Matt Rosenberghttp://geography.about.com/)
    19 Scientific American – Without the Moon, Would There Be Life on Earth ? By : Bruce Dorminey (April 21, 2009)
    20 Daily Galaxy -The Theia Hypothesis – New Evidence Emerges that Earth & the Moon Were Once the Same [July 5, 2008]
    21 NASA Hunts for Remnants of an Ancient Planet (Theia) Near Earth (April 11, 2009)
    22 Science Illustrated : The Lukiest Collision -New Findings The Moon’s Explosive Origins (Nov-Dec 2008]
    23 NASA Probes Seeks Remnants of Lost Theia Planet By : Lewis Page (Apr 14, 2009)
    24 NASA Report -NASA’s STEREO Spacecraft Reveals Anatomy of Solar Storms By : Laura Layton Heliophysics News Team (April 14, 2009)
    25. Giant Impacy Hypothesis From Wikipedia (April 29, 2009)

    26. http://www.accuweather.com/en/outdoor-articles/astronomy/extreme-super-full-moon-to-cause-chaos/46417  [March 1, 2011]

    27. http://earthsky.org/tonight/in-2015-the-first-of-six-supermoons-occurs-on-january-20

    28. http://www.bing.com/videos/search?q=extreme+super+moon&qpvt=Extreme+Super+Moon&FORM=VDRE

    29. http://www.timeanddate.com/astronomy/moon/super-full-moon.html

    30.  https://en.wikipedia.org/wiki/Apsidal_precession  [October 29, 2016]

    31.  https://en.wikipedia.org/wiki/Supermoon  [November 10, 2016]

    32.  https://en.wikipedia.org/wiki/Orbit_of_the_Moon  [November 11, 2016]

    ****************

    S. Jayabarathan [jayabarathans@gmail.com]  November 12, 2016]  [R-1]

     

    Attachments area
    Preview YouTube video Tonight’s Hunters Super Moon using the new Nikon P-900

    Tonight’s Hunters Super Moon using the new Nikon P-900
    Share
  • தொடர்வலைகள்!

    பவள சங்கரி

    தலையங்கம்

    8 ஆம் தேதி இரவு 8 மணிக்கு பாரதப் பிரதமரின் அதிரடி அறிவிப்பிற்குப் பிறகு ஏற்பட்ட நிகழ்வுகள் பல திருப்பங்களை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றன. ‘விழித்துக்கொண்டோர் எல்லாம் பிழைத்துக்கொண்டார்’ என்ற பாடலைப்போல தங்களிடமிருந்த 500, 1000 உரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கும், செல்லத்தக்கதாக ஆக்குவதற்கும் மக்கள் நகைக்கடைகளை முற்றுகையிட்டிருந்ததும், நகைக்கடைகள் விடிய விடிய சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்ததும், தங்கத்தின் விலை 40,000ற்கு மேலும் விற்றதும், இடைத்தரகர்கள் தரகுக்கு நோட்டுக்களை மாற்றியதும் பல இடங்களில் நடந்தேறியிருக்கிறது. அதாவது அரசு கொடுத்த 50 நாட்கள் வாய்ப்பை தவறாகப் பயன்படுத்தக்கூடிய காட்சிகள் பலவிதமாக நடந்தேறிக்கொண்டிருக்கின்றன. தங்களுடைய மேதாவிலாசங்கள் மூலமாக இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தி ஏழை எளிய மக்களை வதைக்கக்கூடிய காட்சிகள் வேதனை அளிப்பதாக இருக்கின்றன.

    வங்கித் துறையினரின் சரியான செயல்பாடுகளும், தணிக்கைத் துறையினரின் தேவையான வழிகாட்டுதலும் இச்சூழலுக்கு வளம் சேர்த்துள்ளன. ஆயினும் எரிகிற வீட்டில் பிடுங்கும்வரை இலாபம் என்ற நோக்கில் செயல்படுபவர்களுக்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். அப்போது மட்டுமே ஏழை மக்களின் கண்ணீர் துடைக்கப்படும். பொது மக்களின் நல்ல எண்ணங்களும், நாட்டுப்பற்றும் பிரதமரின் கரத்தை வலிமையாக்கும்பட்சத்தில் இந்த அதிரடி நடவடிக்கைக்கான பலன் முழுமையாகக் கிடைக்கலாம். வ.உ.சி , சுப்பிரமணிய சிவா போன்றவர்கள் நாட்டிற்காக பட்ட வேதனையைவிடவா இந்த சில மணித்துளிகளின் வேதனை பெரிதாகி விடப்போகிறது. வங்கிகளின் பணி நேரங்களை அதிகரித்தும் பணப்பரிமாற்றங்களுக்கு அதிக அலுவலர்களை நியமித்தும் இனி வரக்கூடிய 4 நாட்களுக்கு இரவு எட்டு மணி வரை வங்கிகள் செயல்படும் போன்ற அறிவிப்புகளும் ஆறுதல் அளிக்கக்கூடியதாக உள்ளன. திருப்பதி திருமலை நிர்வாகத்தினர் தங்கள் அலுவலகம் மூலமாக பக்தர்களுக்கு நோட்டுகளை மாற்றிக்கொடுத்ததும், தன்னார்வத்தொண்டுள்ளம் கொண்ட தனி மனிதர்கள் தாங்களாக முன்வந்து மற்றவர்களுக்கு உதவி செய்தது போன்ற மனிதாபிமானமிக்க செயல்களையும் காணமுடிந்தது. தொடரும் நிகழ்வுகளை பொறுத்திருந்து பார்ப்போம்.

    Share
  • அந்திமக்கால ஞானம் !

    பா.ராஜசேகர்

     

    பாலும் தண்ணீரும்
    கலந்தே சுரந்துகொண்டிருக்கிறது
    என்கிணறு

    இனிப்பிரித்து
    தேவையானதை அருந்தவேண்டும்
    என்பறவை

    கொடியமிருகங்கள்
    என்வனத்தில் அதிகமாய்
    உலவிக்கொண்டிருக்கின்றன

    என் பார்வை
    இப்போது சாதுக்களை
    நோக்கியே செல்கிறது

    கடந்தகாலங்களைவிட
    இப்போது நிறைய
    முரண்பட்டிருக்கிறேன்

    என் குடம் இப்போது
    அமைதியை நோக்கியே
    தழும்பிக்கொண்டிருக்கிறது!

    நம்பமுடியவில்லையா?
    என்மயானம்
    எதிரே இருக்கிறது!

     

     

     

    Share
  • “ இயற்கை ”

     

    தமிழ்த்தேனீ

     

    ஒன்பது வழிகள் வைத்தான் உடல்விட்டு உயிர் போக‌

    ஒரு வழியும் வைக்கவில்லை உயிர் வந்து உடல் சேர‌

    இறைவனிடம் நான் கேட்டேன், இது என்ன ஓர வஞ்சனை ?

    ஒரு கேள்வியினால்  கொக்கிபோட்டேன்

    அவனளித்தான் பல பதில்கள், அது எதுவும் புரியவில்லை

    ஆனாலும் ஒரு பதில் ஓரளவு புரிந்ததெனக்கு,

    ரகசியமாய் முணுமுணுத்தான் என் காதில் மட்டுமதை

    உங்களிடம் சொல்லுகிறேன் காத்திடுவீர் ரகசியமே

     

    இயற்கையின் சாகசமே அதிலிடங்கும் அதிசயமே

    இயற்கையை வெற்றி கொள்ள என்னாலும் முடியவில்லை

    இயற்கைதான்  கடவுள்  ,நான் கூட அதன் பிடியில்

    தவிக்கிறேன் மீளாமல், சொன்னால் நம்ப மாட்டாய்

    ஒரே ஒருமுறை தான் விதைத்தேன் ப்ரபஞ்ஜம் வளர்ந்தது

    பல முறை அழித்துப் பார்த்தேன் ஒன்றும் பலனில்லை,

    இனி இப் ப்ரபஞ்ஜம் நானே நினைத்தாலும் அழிக்க முடியாது

    ,இயற்கையை வெல்ல  என்னாலும் முடியாது..

     

    நீ கேட்ட கேள்விக்கு விடை தெரியுமா உனக்கு?

    கேள்விகள்கேட்பது சுலபம், உயிர் வந்து உடல்

    சேர ,இயற்கையை வெற்றி கொள்ள‌ வழி எதேனும்

    இருக்கிறதா ? ரகசியமாய் என்னிடமே இறைவன்

    கேட்டான் என்ன ப‌தில் நான் சொல்ல‌

    உங்க‌ளுக்கு தெரிந்தால் ரகசியமாய் என்னிட‌ம்

    சொல்லுங்க‌ள் …அவனிடம்  சொல்லுகிறேன்  நான் !!

     

     

     

    Share
  • காவிரி புரக்கும் நாடு – 4

    -மேகலா இராமமூர்த்தி

    மலைமிசைத் தொடுத்த மலிந்துசெலல் நீத்தம்
    தலைநாள் மாமலர் தண்துறைத் தயங்கக்
    கடற்கரை மெலிக்குங் காவிரிப் பேரியாற்று
    அறல்வார் நெடுங்கயத்து அருநிலை கலங்க
    மாலிருள் நடுநாட் போகித் தன்னையர்
    காலைத் தந்த கணைக்கோட்டு வாளைக்கு
    அவ்வாங்கு உந்தி அஞ்சொல் பாண்மகள்
    நெடுங்கொடி நுடங்கு நறவுமலி மறுகில்
    பழஞ்செந் நெல்லின் முகவை கொள்ளாள்
    கழங்குறழ் முத்தமொடு நன்கலம் பெறூஉம்
    பயங்கெழு வைப்பிற் பல்வேல் எவ்வி…
    (அகம்-126: நக்கீரர்)

    குடமலையிலிருந்து தொடர்ந்துவிழுகின்ற காவிரியின் பெருவெள்ளமானது, முதல்நாள் தான் கொண்டுவந்து சேர்த்த மணமிகு மலர்கள் துறைகள்தோறும் பொலிந்துவிளங்க, கடற்கரையையே கரைத்துவிடும் அளவிற்குப் பாய்ந்தோடி வருகின்றது. கருமணல் ஒழுகுகின்ற அவ்வாற்றின் மடுவிலுள்ள நிலைகொள்ளாத நீர் கலங்குமாறு, நள்ளிருளில் ஆற்றைக் கடந்துசென்ற தன் தமையன்மார்கள் விடியற்காலையில் பிடித்துக்கொண்டுவந்து தன்னிடம் தந்த, திரண்ட கோடுகளையுடைய வாளைமீனைக் கையில் வாங்கினாள் கனிமொழிபேசும் பாணர்குலப் பைங்கிளி ஒருத்தி.

    மகிழ்ச்சியில் மனம்துள்ள, நெடுங்கொடிகள் அசைவதும், கள் மிகுதியாக விற்கப்படுவதுமான ஒருதெருவின் வழியே நடந்துசென்றாள் அம்மீனை விற்க. (அப்போதே தமிழ்க்குடி கள்குடியில் திளைத்து மகிழ்ந்திருக்கின்றது என்பதை இதன்வாயிலாக அறிகிறோம்!).

    தன் வாளைமீனை அத்தெருவில் விற்றவள், அதற்குப் பண்டமாற்றாகக் கடைக்காரர் தந்த செந்நெல்லை வாங்கமறுத்தாள். அவ்வனிதையின் உள்ளக்கிடக்கையை அறியாத அந்த வணிகர், ”நெல் வேண்டாமா? அப்படியானால் வேறென்ன வேண்டுமம்மா உனக்கு?” என்று அன்போடு அவளை வினவ, முத்துக்களாலான ஓர் அணிகலனைத் தொட்டுக்காட்டினாள் அவள்.

    கடல்வளங்கொழிக்கும் வேளிர்குல அரசனான ’எவ்வி’யின் ஆட்சி செவ்வையாய் நடக்கும் ஊர் அது! அங்கே அம்மங்கை கேட்டது கிடைக்காமலா போய்விடும்? ”முத்துமாலைதானே வேண்டும்? இந்தா…பெற்றுக்கொள்!” என்று அந்த வணிகரும் கழங்குகளையொத்த பெரிய முத்துக்களால் கோக்கப்பட்ட ஒளிவீசும் மாலையை அவள்கையில் உடனே அளித்துவிட, முத்தைப்பழிக்கும் தன் வெண்பற்களைக் காட்டி முறுவலித்தாள் அந்தப் பாண்மகள்!

    சங்கப் பெரும்புலவர் நக்கீரரின் அருந்தமிழ்ப் பாடலிது. இதில் பேசப்படும், கடற்கரையை மெலிக்கும் காவிரிப் பேராற்றை வியப்பதா அல்லது மீனைக் கொடுத்து முத்தாரம் வாங்கிய அந்த வித்தகியை வியப்பதா?  பட்டிமன்றம் வைத்துத்தான் விடைகாண வேண்டும்!

    ஆறுகளில் புதுவெள்ளம் பொங்கிவருவதைப் பெருவிழாவாகக் கொண்டாடும் வழக்கம் பண்டைத் தமிழரிடத்து இருந்திருக்கின்றது. அதன் அன்றைய பெயர் ’புதுப்புனல் விழா’ என்பதாகும். அவ்விழாவே இந்நாளில் ’ஆடிப்பெருக்கு’ என்று பெயர்மாற்றம் பெற்றுள்ளது எனலாம். இப்போதெல்லாம் ஆடிமாதத்தில் ஆற்றிலே வெள்ளப்பெருக்கை அவ்வளவாகக் காணமுடிவதில்லை; எனினும், வீட்டிலே சித்திரான்னங்களைத் தயார்செய்து எடுத்துக்கொண்டு, ஆற்றங்கரைகளில் சுற்றஞ்சூழ அமர்ந்துண்ணும் வழக்கம் இன்னமும் சில (கிராம) மக்களிடம் இருந்துவருவது நம் மரபின் எச்சம் இன்னமும் மிச்சமிருக்கின்றது எனும் நம்பிக்கையை நம்முள் விதைக்கின்றது!

    சரி, புகார் நகருக்கு அருகிலுள்ள கழார் எனும் காவிரித்துறைக்குச் சென்று அங்கு நடைபெறும் புதுப்புனல் விழாவைக் கண்டுவருவோம்!

    சோழ நன்னாட்டின் காவிரிக்கரையில் அமைந்திருந்த வளமான ஊர் கழார். அதனை ஆண்ட குறுநில மன்னன் மத்தி என்பான். அவன்  குறித்துச் சில செய்திகள்… 

    சோழரின் ஆட்சியின்கீழ் இருந்த கழார்த் துறையை ஆண்ட பரதவர்கோமானான மத்தி, பெருவீரன். சோழமன்னனின் ஆணைக்கிணங்க, எழினி என்னும் மற்றொரு குறுநில மன்னனோடு போர்புரிந்த மத்தி, அவன் பல்லைப் பிடுங்கிக்கொண்டுவந்து தன் கோட்டைக் கதவின் வாயிலில் பதித்தானாம். கேட்கவே அச்சமாக இருக்கிறதல்லவா? 

    அஞ்சத்தக்க பெருவீரனான அந்த மத்தியின் ஊரான கழாரில் புதுப்புனல் விழா ஆண்டுதோறும் வெகுவிமரிசையாய்க் கொண்டாடப்படுவது வழக்கம். அவ்வாறு புதுப்புனல் விழா நடைபெறவிருந்த நன்னாள் அது! மன்னன் கரிகால்வளவனும் அவனுடைய கலிகொள் சுற்றத்தாரும் கழார்த் துறையில் வந்து கூடிவிட்டனர் விழாக்காண!

    கரிகாலனின் அருகே அமர்ந்திருந்தாள் அவன் ஆசைமகள் ஆதிமந்தி. அவள் முகத்திலேதான் எத்தகைய மந்தகாசப் புன்னகை! இருக்காதா பின்னே…? இன்னும் சற்றுநேரத்தில் அவள் காதற்கணவனும், ஆட்டத்தில் தேர்ந்தவனுமான ’அத்தி’ காவிரிப்புனலில் நீச்சல்நடனம் நிகழ்த்தி அனைவரையும் மகிழ்விக்கக் காத்திருந்தான். அந்த பூரிப்புதான் ஆதிமந்தியின் முகத்தில் புன்னகையாய்ப் பூத்திருந்தது! (ஆட்டத்தில் தேர்ந்தவன் என்பதாலேயே அவன் ’ஆட்டனத்தி’ என்றழைக்கப்பட்டான்; அவன் சேரமன்னன் என்று குறிக்கப்படுகின்றான்.)

    ஒளிமிகுபொறிகள் அவன் சேவடிகளில் திகழும் வீரக்கழல்களில் மின்ன, கஞ்சத்தாளம் ஒலிக்க, இணையில்லா ஆணழகனான அத்தி தன் ஆட்டத்தைத் தொடங்கினான். அனைவரும் இமைக்க மறந்து அவன் நடனத்தையே பார்த்திருக்க, திடீரென்று பாய்ந்துவந்த காவிரியின் பெருவெள்ளமானது அத்தியை அடித்துச்சென்றுவிட்டது. இதனைச் சற்றும் எதிர்பாராத அனைவரும் செய்வதறியாது திகைத்து நின்றனர்.

    உண்மையில் நிகழ்ந்ததாக இலக்கியங்களில் பதிவுசெய்யப்பட்டுள்ள இச்சம்பவத்தைத் தன் அகப்பாடல் ஒன்றில் அழகாய்ப் பயன்படுத்தியுள்ளார் சங்கப் புலவர் பரணர்.

    சேரிப்பரத்தையைத் தேடிச்சென்ற ஒரு மருதநிலத் தலைவன், அவளிடமிருந்து மீண்டு, தன் பழைய காதலியான இற்பரத்தையை நாடி வருகின்றான் (காதல்மன்னன் போலிருக்கிறது!). அவனைக் கண்ட இற்பரத்தை தன்முகத்தில் இகழ்ச்சிக்குறிப்புத் தோன்ற, ”என்னருமைத் தலைவனே! அத்தியின் அழகைக்கண்டு நயந்த காவிரிப்பெண்ணாள், அவனைக் கவர்ந்துசென்று கடலில் ஒளித்ததுபோல், சேரிப்பரத்தை உன்னை என்னோடு சேரவிடாது கவர்ந்துசென்று ஒளித்தாலும் நான் உன்னிடம் ஊடல் கொள்ளமாட்டேன்; உன்னை வெறுக்கவும் மாட்டேன்” என்று பகடிசெய்வதாக இப்பாடல் அமைந்துள்ளது.

    மலிபுனல்  பொருத  மருதொங்கு படப்பை
    ஒலிகதிர்க்  கழனிக்  கழாஅர்  முன்துறை
    கலிகொள்  சுற்றமொடு  கரிகால்  காணத்
    தண்பதம்  கொண்டு  தவிர்த்த  இன்னிசை
    ஒண்பொறிப்  புனைகழல்  சேவடி  புரளக்
    கருங்கச்சு  யாத்த  காண்பின்  அவ்வயிற்று
    இரும்பொலப்  பாண்டில்  மணியொடு  தெளிர்ப்பப்
    புனல்நயந்து ஆடும் அத்தி அணிநயந்து
    காவிரி கொண்டு ஒளித் தாங்கு  மன்னோ!
    நும்வயிற்  புலத்தல் செல்லேம்…
    (அகம்: 376 – பரணர்)

    நீச்சல்நடனம் ஆடிய அத்தியைக் கவர்ந்துசென்ற காவிரிப்பெண்ணாள், அவனைக் கடலில் ஒளித்தாள் என்கிறார் பரணர். அந்த ஆடலரசன் உயிரோடு மீண்டானா? அல்லது…கடலிலேயே மாண்டானா? என்ற பதைபதைப்பு நமக்கும் ஏற்படவே செய்கின்றது.

    இதற்கான விடை விரைவில்!

    (தொடரும்)

     

     

     

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 76

    76. எரிமலை ஆய்வுக்கூடம்-அருங்காட்சியகம், லா பல்மா தீவு, கனெரி தீவுக்கூட்டம்

    முனைவர்.சுபாஷிணி

    இந்த பூமி பல அதிசயங்களைத் தன்னுள்ளே கொண்டுள்ளது. இயற்கை நம் கண் முன்னே காட்டும் பல கோடி அதிசயங்களைப் பார்க்கும் மனமிருப்போரால் அவற்றைப் பார்த்து இயற்கை அழகில் இலயிக்க முடிகின்றது. ஏனையோருக்கு அவை பொருளற்றதாகப் போய்விடுகின்றது. இந்த பூமிப்பந்தின் பூகோள இயற்கையில் ஒரு முக்கிய அங்கமாக இருப்பவை எரிமலைகள். உயிருள்ள, அதாவது இன்னமும் பூமிக்கு வெகு அடியில் கனன்று கொண்டு தீப்பிழம்புகளுடன் உள்ள எரிமலைகள் இன்னமும் இருக்கின்றன. அவற்றைப் பற்றிய செய்திகளை அவ்வப்போது தொலைக்காட்சி ஊடகங்களில் நாம் பார்த்திருக்கலாம். மிகப்பல எரிமலைகளோ உயிரில்லாதவை. அதாவது, இத்தகைய எரிமலைகளிலிருந்து வெடிப்புக்கள் நிகழாது என்பதால் இவை அபாயகரமற்றவை என அறியப்படுபவை. இத்தகைய உயிரற்ற எரிமலைகள் பல தீவுகளாக நம் கண் முன்னே காட்சியளிக்கின்றன. அத்தகைய தீவுகளில் ஒன்று தான் லா பல்மா தீவு.

    asu
    லா பல்மா தீவு என்பது ஐரோப்பா கண்டத்தில் உள்ள ஒரு தீவு. கனெரி தீவுகள் கூட்டத்தில் அங்கம் வகிக்கும் ஒரு தீவு இது. மொரொக்கோ நாட்டுக்குக் கீழே, அதாவது பிரான்சு, ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்குக் கீழும் ஆப்பிரிக்க கண்டத்தின் வடபகுதியிலும் அமைந்திருப்பது இந்தக் கனெரி தீவுக்கூட்டம். இந்தத் தீவுக்கூட்டத்தில் எட்டு பெரிய தீவுகளும், மேலும் பலப்பல சிறு தீவுகளும் நிறைந்திருக்கின்றன. இந்தக் கனெரித்தீவுக்கூட்டம் தற்சமயம் ஸ்பெயின் நாட்டிற்குச் சொந்தமானதாக உள்ளது.

    லா பல்மா தீவைப்பற்றிச் சொல்வதென்றால், இது கனெரித்தீவுக்கூட்டத்தில் ஐந்தாவது பெரிய தீவு. ஆயினும் ஒரு நாள் வாகனத்தில் தீவு முழுவதையும் சுற்றி வந்து விடலாம். இந்தத் தீவின் தலைநகரம் சந்தாகுரூஸ் டி லா பல்மா நகரம். இது ஒரு சிறு நகரம்.

    சுற்றுலா பயணிகள் விரும்பிச்செல்லும் சுவர்க்கபுரிகளில் ஒன்று இந்த லா பல்மா தீவு. வருடம் முழுவதும் சுற்றுப்பயணிகளின் கூட்டம் அலைமோதும் ஒரு தீவு. இந்தத்தீவு பூகோளவியலாளர்களின் ஆய்வுகளின் படி மூன்று அல்லது நான்கு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வெடித்த எரிமலையிலிருந்து உருபெற்ற ஒரு தீவு ஆகும். அரை மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் தபுரியண்ட எரிமலை வெடித்துச் சரிந்து பெரும் பள்ளத்தினை ஏற்படுத்தியது. இப்பகுதியை கல்டேரா டி தபுரியண்ட என அழைக்கின்றனர். ஸ்பேனிஷ் நாட்டின் ஆளுமைக்குள் லா பல்மா வந்த பின்னர் ஏழு எரிமலை வெடிப்புக்கள் நடந்துள்ளன. அவையாவன:
    1470-1492 மொந்தானா குவேமேடா ( Montaña Quemada)
    1585 தாயுவா – எல்பாசோ (Tajuya near El Paso)
    1646 சான் மார்ட்டின் எரிமலை (Volcán San Martin)
    1677 சான் அந்தோனியோ எரிமலை ( Volcán San Antonio)
    1712 எல் சார்க்கோ எரிமலை ( El Charco)
    1949 நம்ப்ரோக் எரிமலை, ஹோயோ நெக்ரோ எரிமலை (Volcán Nambroque at the Duraznero, Hoyo Negro and Llano del Banco vents)
    1971 தெனகூயா எரிமலை (Volcán Teneguía)

    as1

    இதில் ஆக இறுதியாக வெடித்து பின்னர் மடிந்த தெனகூயா மற்றும் 1677இல் வெடித்து பின் மடிந்த சான் ஆந்தோனியோ எரிமலையின் ஃபுவான்கலியாந்தாவில் உள்ள ஆய்வுக்கூடமும் அருங்காட்சியகமும் உள்ள பகுதிக்கு நான் 2012ஆம் ஆண்டில் சென்றிருந்தேன்.

    ஒரு நீண்ட நிலப்பரப்பு அது. சீதோஷ்ணம் ஏறக்குறைய 10டிகிரி செல்சியஸ் மலையின் உச்சிப்பகுதியில் . கீழே இறங்க இறங்க 15 டிகிரி செல்சியஸ் வரை சீதோஷ்ணம் கூடியவாறு இருந்தது. எரிமலைக்கு மேலே நிற்கும் போது மேகமூட்டம் நம்மைக் கடந்து செல்லும். அதற்குள்ளே ஊடுருவி நடந்து செல்வது புது அனுபவமாக நிச்சயமாக இருக்கும்.

    as2

    எரிமலைகள் வெடித்துச் சிதறும் போது பூமியின் அடியிலிருந்து வெடித்துக் கிளம்பும் தீப்பிழம்புகள் பல நூறு வகையான தாதுப்பொருட்களை உள்ளடக்கியவை. மனிதர்கள் அதிகம் வாழாத தீவுகளில் எரிமலைகள் கக்கிய தீப்பிழம்புகள் இறுகி பாறைக்கற்களாக புதிய தோற்றம் பெற்று அதன் மேற்பரப்பில் இந்த சீதோஷ்ணத்திற்கு ஏற்ற தாவார வகைகள் முளைத்துக் கிளம்பியிருக்கின்றன.

    இந்த எரிமலைப்பிரதேசத்தில் நடக்க நடக்கக் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மக்கள் நடமாட்டம் குறைந்த, எந்தவித சத்தமோ, இடையூறோ இல்லாத தனிமையை உணரலாம். பூமியைக்கடந்து ஏதோ வேற்றுக் கிரகத்தில் உலாவிக் கொண்டு இருக்கின்றோமே என்ற எண்ணத்தை வரவழைக்கும் வித்தியாசமானதொரு அனுபவம் இது. எரிமலைப்பகுதியின் கீழ்ப்பகுதியில் நடந்து பின்னர் தெனகூயா எரிமலை வெடிப்பு பள்ளத்தாக்குப்பகுதிக்கு அதன் உச்சிப் பகுதியான ஃபுவான்கலியாந்தா வந்து சேர்ந்தால் அங்கே எரிமலை ஆய்வுக்கூடமும் அருங்காட்சியகமும் இருப்பதைக் காணலாம்.

    as3

    லா பல்மா மட்டுமன்றி கனெரி தீவுகளின் எரிமலைகள் பற்றிய விளக்கம், எரிமலைகள் எவ்வாறு உருவாகின்றன என்ற தகவல்கள், உலகின் முக்கிய எரிமலை வெடிப்புச் சம்பவங்கள் பற்றிய விபரங்கள் என விரிவான நில அமைப்புப்பற்றிய ஆய்வுகள் இங்கே வழங்கப்பட்டுள்ளன.

    லா பல்மா தீவில் சுற்றுலாப் பயணிகள் எரிமலைகளில் நடந்து அதன் அனுபவத்தைப் பெறும் வகையில் தரமானத் தகவல்களை வழங்குகின்றனர். வழிகாட்டி கையேடுகளை வைத்துக்கொண்டே இந்த எரிமலையில் நடந்து திரிந்து நில அமைப்பு, தாவர வகைகள், எரிமலை தீப்பிழம்பு கற்பாறைகள் ஆகியனவற்றைக் கண்டறியலாம். பூகோள நில ஆய்வுகளில் ஈடுபாடு கொண்டோருக்கு இவ்வகை அனுபவங்கள் மிகப்பயனுள்ளதாக அமையும்.

    as4

    சரி. நமது அடுத்த அருங்காட்சியகத் தேடலில் மற்றுமொரு அருங்காட்சியகம் அழைத்துச் செல்கின்றேன். என்னைத் தொடரலாமே!.

    Share
  • தேசிய கல்வி தினம் (National Education Day ) (11 நவம்பர்) 

    க. பாலசுப்பிரமணியன்

    இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் மௌலானா அப்துல் கலாம் ஆசாத் அவர்களின் நினைவாக நவம்பர் 11ஆம் நாள் தேசிய கல்வி தினமாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது . கல்வி எந்த ஒரு நாட்டுக்கும் முதுகெலும்பு.  ஒரு நாட்டின் தலைவிதி அந்த நாட்டின் கல்விக்கூடங்களில் நிர்ணயிக்கப்படுகிறது என்று கோத்தாரி கமிஷனின் முதல் வாக்கியமே உறுதிப்படுத்துகிறது. இந்த நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்தபின் கல்வியை நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள பாமர மக்களுக்கும் ஏழை எளியோருக்கு கிடைப்பதற்கான வழிகள் மேற்கொள்ளப்பட்டதில் கர்மவீரர் காமராஜர் போன்ற பல முன்னோடிகளை நாம் நினைத்துப் பார்க்கவேண்டும்.

    கல்வி அறிவை வளர்ப்பதில் பெண்களுக்கு ஏற்பட்ட தடைகளும் சமுதாய நோக்குகளும் போர் நோக்கில் சந்திக்கப்பட்டு இன்று சமுதாயத்தின் எல்லாக் கல்வி மையங்களிலும் பெண்களுக்கு சரி நிகர் சமானமாகவும் முற்போக்கு நோக்கிலும் இடங்கள் ஒதுக்கப்பட்டு நாட்டின் தலைவிதி மாற்றப்பட்டு வருகின்றது. இருப்பினும், பெண்கல்விக்கு நாட்டில் பல பாகங்களில்  இன்னும் செய்ய வேண்டிய வேலைகளும் மாற்றங்களும் போதிய அளவைத் தொடவில்லை.

    கல்வியை அடிப்படை உரிமையாக்கி மத்திய அரசு நாடு முழுவதிலும் 14 வயதுவரை உள்ள சிறார்களுக்கு கல்வி கிடைப்பதற்கான வழிமுறைகளை ஏற்படுத்தியும் அதற்கான முழுப்பலன் இன்னும் அவர்களுக்கும் சமுதாயத்திற்கும் கிடைக்கவில்லை. இது கவலைக்குரியது மட்டுமல்ல, சமுதாயத்தின் சிந்தனையில் ஏற்படவேண்டிய மாற்றத்திற்கு நாம் செய்ய வேண்டிய பணிகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாகவும் திகழ்கின்றது.

    ஆனால் கல்வியின் நோக்கம்தான் என்ன? எண்ணும் எழுத்தும் கற்பிப்பதா? புத்தக அறிவை வளர்ப்பதா? தேர்வுகளில் அமர்த்தி சான்றிதழ்களை வழங்குதலா? இன்று கல்வி நிறுவனங்கள் வியாபார நோக்கில் வளர்க்கப்பட்டு மற்ற வியாபாரங்களை விட அதிக அளவில் பொருளீட்டுவதற்கு முன்மாதிரியாக விளங்க ஆரம்பித்துவிட்டன.

    ” அறம் செய்ய விரும்பு” என்றும் “ஆறுவது சினம்” என்றும்  “ஈவது விலக்கேல்” என்றும் தனிமனிதப் பண்பாடுகளையும் சமுதாய கோட்பாடுகளையும் வளர்த்த கல்வியின் நோக்கம் தடைபுரண்டு LKG  வகுப்புகளிலிருந்தே IIT க்கு தயார் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. “ஒரு தனி மனிதனின் உள்ளிருக்கும் பூரணத்துவத்தை வளர்ப்பதுதான் கல்வியின் நோக்கம்” என்ற சுவாமி விவேகானந்தரின் கூற்று மறக்கப்பட்டு கல்வியை சில புத்தகங்களின் உள்ளிருக்கும் எழுத்துக்களிலும் கருத்துக்களிலும் புதைத்து வருகின்றோம்..

    வாழ்க்கையில் கல்லூரிகளில் படித்து பல சான்றிதழ்களையும் பட்டங்களையும் பெற்றவர்களிடம்கூட மனித நேயம் முற்றிலுமாக காணக்கிடைப்பதில்லை. சிந்திக்க வேண்டிய நேரம்.

    கற்றல் ஒரு வாழ்க்கைப் பயணம். அது பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் முடங்குவதில்லை. இறுதிமூச்சு வரை வாழ்க்கையில் கற்றுக்கொள்ள வாய்ப்புக்களும் வழிமுறைகளும் உள்ளன. புத்தகக் கல்வியோடு வாழ்க்கைக் கல்வியை கற்றுக்கொள்ளுதல்  மிக அவசியம்.

    உலகத்தோடு ஓட்ட ஒழுகல் பல கற்றும்

    கல்லான் அறிவிலாதான்

    என்ற வள்ளுவன் வாக்கு முற்றிலும் உண்மை…

    மனிதநேயத்தை வளர்க்காத கல்வி .. சான்றிதழ்களை மட்டும் போற்றும் கல்வி .. எங்கே நம்மைக் கொண்டு சேர்க்கும் என்பது இன்று சிந்திக்க வேண்டிய கருத்து.

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . (217)

    அன்பினியவர்களே!

    அன்பான வணக்கங்களுடன் உங்களுடன் உரையாடுவதில் மிகவும் மகிழ்கிறேன். வாழ்வின் அதிமுக்கியத் திருப்பத்தை எமது வாழ்நாளில் சந்தித்து விட்டோம் என்று பெருமூச்செறிந்து விட்டுச் சற்றுஅயர்ந்து உட்கார்ந்தால் அது என்ன பெரிய திருப்பம் இதை விடவா ? எனும் வகையில் காலம் எனும் சக்கரம் எம்முன்னே அடுத்தொரு பெரிய திருப்பத்தைத் தூக்கிப் போட்டுவிடுகிறது. ஆம், சரித்திரப் புத்தகத்தில் 2016ஆம் ஆண்டு மேற்குலக அரசியல் வரலாற்றின் திருப்புமுனை எனும் வகையில் தன்னுள் இதுவரை எண்ணியிராத பல திருப்பங்களை எம்முன்னே நிகழ்த்திக் காட்டிவிட்டு நகர்ந்து கொண்டிருக்கிறது. நடந்து முடிந்த நிகழ்வுகள் எமக்குப் பிடித்தவகையில் அமைந்தனவோ இல்லை எம்மால் ஏற்றுக்கொள்ளாதவைகளாக இருந்தனவோ அவைகளை ஏற்றுக்கொண்டு வாழ்க்கைக்கு முகம் கொடுப்பதைத் தவிர வேறு எதுவும் செய்வதற்கில்லை.

    மேற்குலக ஜனநாயகம் எனும் அரசியல் கோட்பாட்டினுள் சிக்கிச் சுழலும் துகள்களில் எம்மைப்போன்ற புலம்பெயர் தமிழர்களும் அடங்குகிறோம். எங்கோ பிறந்து, எங்கோ வளர்ந்து இன்று நாம் பிறந்தமண்ணை விட்டு எத்தனையோ ஆயிரம் மைல்களுக்கப்பால் எமது வாழ்வை அமைத்து நாம் வாழும் நாட்டின் பிரஜைகளாக எமை மாற்றிக் கொண்டு வாழும் எமக்குப் பல நிகழ்வுகள் நாடகமேடைக் காட்சிகள் போன்றவையே. ஆனால் யதார்த்த வாழ்வில் அந்நிகழ்வுகளின் தாக்கங்களுக்கு நாமும் உள்ளாகப் போகிறோம் என்பது தவிர்க்க முடியாத உண்மையாகிறது.

    trump1கடந்த ஜூன் மாதம் 23ஆம் திகதி இங்கிலாந்து நாட்டின் பெரும்பான்மை மக்களின் தீர்ப்பான ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஜக்கிய இராச்சியம் வெளியேற வேண்டும் எனும் முடிவு ஆட்சியிலிருந்த ராசாங்கம், எதிர்க்கட்சி வழமையான அரசியற்கட்சிகள் என்பனவற்றின் எதிர்பார்ப்புகளுக்கும் பல கருத்துக் கணிப்பு அமைப்புகளின் கணிப்புகளுக்கும் முற்றிலும் முரணான ஒரு முடிவைத் தூக்கிப் போட்டது. அதேபோல உலகின் முன்னணிப் பொருளாதார நாடாகவும், உலகில் பல நாடுகளின் முன்னோடி நாடாகவும் விளங்கிய ஜக்கிய அமெரிக்காவின் அதிபர் தேர்தல் இன்று காலை கொடுத்த இந்த அதிரடியான, எதிர்பார்ப்புகளுக்கு முரணான முடிவு அகில உலகம் முழுவதுமே அதிர்வலைகளை உண்டாக்கியிருக்கிறது. இவ்வதிர்வலைகள் நேர்மறையானவையா அன்றி எதிர்மறையானவையா என்பது நாட்டிற்கு நாடு வேறுபட்டிருக்கிறது.

    வெளிநாடுகளில் இன்று புலம்பெயர் மக்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் எம் போன்றவர்களின் முன்னால் இம்முடிவுகளின் பின்னணி பலவகையான கேள்விகளைத் தூக்கிப் போட்டிருக்கின்றன. இவ்வதிரடியான அரசியல் திருப்பங்களின் அடியில் ஒருவகையான தேசிய உணர்வு புதைந்திருப்பதை யாரும் மறுக்கமுடியாது. இத்தேசிய உணர்வின் மீது இனத்துவேஷம் எனும் சாயம் பூசப்பட்டிருக்கிறதா என்பதுவே மிகவும் ஆழமாகச் சிந்திக்கப்பட வேண்டிய விடயமாகிறது. அப்படியே தேசிய உணர்வுகளின் மீது இனத்துவேஷம் அடிப்படையாக அமைந்திருக்குமானல் அதன் காரணம்தான் என்ன? 

    வெளிநாட்டிலிருந்து குடியேறுவாசிகளாகவோ அன்றி அகதிகளாகவோ வந்த அனைவரையும் இருகரம் நீட்டி வரவேற்றுச் சகிப்புத்தன்மைக்கும், புரிந்துணர்வுக்கும் முன்னோடிகளாகத் திகழ்ந்த நாடுகளில் இத்தகைய காழ்ப்புணர்ச்சிகள் ஊடுருவக் காரணம்தான் என்ன? இவற்றிற்கு புலம்பெயர் மக்களாகிய எம் போன்றவர்களின் செயற்பாடுகள் எந்த அளவுக்குக் காரணமாக இருந்திருக்கின்றன? இவற்றுக்கெல்லாம் உளச்சுத்தியோடு, நேர்மையாக விடைகளை அலசவேண்டியது எம் அனைவருடைய கடமையாகிறது.

    உதரணத்திற்கு நான் வாழும் இங்கிலாந்தினை எடுத்துக் கொள்வோம். அடிப்படையில் இங்கிலாந்து கிறிஸ்துவ மதத்தினரைப் பெரும்பான்மையாகக் கொண்ட நாடு. இந்நாட்டிற்கு வெளிநாடுகளில் குறிப்பாக ஆசியநாடுகளில் இருந்து குடியேறுவாசிகளாக வந்த நாம் இந்நாட்டின் மதத்தினை எந்த அளவுக்குக் கௌரவித்து வாழ்கிறோம்? அவர்களது கலாசார விழுமியங்களின் தாத்பரியங்களைச் சரியாக உள்வாங்கி இருக்கிறோமா? எமது கலாசாரத்தையும், எமது மதக்கோட்பாடுகளையும் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் எனும் ஆதங்கத்தில் இந்நாட்டு மக்கள் எமக்கு அளித்த சலுகைகளை அவைகளின் எல்லை மட்டும் கொண்டுசென்று இவர்களது சகிப்புத்தன்மையை சோதிக்கும் சூழ்நிலைக்கு வந்து விட்டோமா ? நாம் வாழும் நகரங்கள்தோறும் கோவில்களை அமைப்பதன்மூலம் எமது சமயத்தையும், எமது கலாசாரத்தையும் காப்பாற்றுகிறோம் எனும் பெயரில் அவர்களது கலாசார விழுமியங்களின் அடையாளங்களை அவர்கள் இழப்பது போன்ற ஒரு தோற்றத்தை அவர்களுக்கு ஏற்படுத்தி விட்டோமா? இவையெல்லாம் எம்முள்ளே எழவேண்டிய கேள்விகள். எமக்கு இந்நாடுகள் வாடகை வீடாக இருப்பது போன்ற உணர்வு இருக்கலாம்; ஆனால் எமது சந்ததியினருக்கு இது அவர்களது சொந்த வீடு அல்லவா ?அவர்களது சொந்த வீட்டிலேயே அவர்கள் நிம்மதியாக வாழமுடியாத வகையில் ஒரு நிலைமையை ஏற்படுத்தி விட்டோமா ?

    “ப்ரெக்ஸிட்” எனும் இங்கிலாந்தின் முடிவும், அமெரிக்க ஜனாதிபதியாக “ட்ரம்ப்” அவர்கள் தெரிவுசெய்யப்பட்டதும் முக்கியமான திருப்பங்கள்; ஆனால் இவற்றின் அடிக்கோடாக இனத்துவேஷ உணர்வுகள் இருப்பதகாக் கூறிக் கொள்ளும் அதேநேரம் இந்த “ப்ரெக்ஸிட்” முடிவையும், “ட்ரம்ப்” அவர்கள் ஜனாதிபதியாக வருவதையும் ஆதரித்த எம்மவர் பலரை நான் சந்தித்திருக்கிறேன் என்பதுவே உண்மை. அப்படியாயின் இம்முடிவுகள் எப்படி “இனத்துவேஷம்” கொண்டவையாக இருக்க முடியும்? இதன் காரணங்கள்… ஒன்று இவற்றின் பின்னால் இருக்கும் நாட்டின் பொருளாதார நன்மைகளை உள்வாங்கியதால் எம்மவர் அதரித்திருக்கலாம்; இரண்டாவதாக தம்மை இந்நாடுகளின் பிரஜைகளாகவும், தமக்கும் இந்நாட்டின் பெரும்பான்மையினராகிய வெள்ளை இனத்தவருக்கும் எதுவித வேறுபாடுமில்லை என்பதனால் எம்மவர் ஆதரித்திருக்கலாம்.

    எது எப்படி இருப்பினும் இந்நிகழ்வுகள் நடந்து முடிந்துவிட்டன என்பதுவே உண்மை. இவை இரண்டின் முடிவுகளுக்கும் எதிரான கருத்துக்களை ஆதரித்தவன் நான்; இருப்பினும் மேற்குலக ஜனநாயகத்தின் அடிப்படையில் இம்மக்களின் இப்பெரும்பான்மை முடிவுகளை ஏற்றுக்கொண்டு அதனுடன் எம்மை இணைத்துக் கொண்டு வாழ்வது ஒன்றே இயல்பான நிலையாகிறது. “ப்ரெக்ஸிட்” எனும் நிகழ்வின் எதிரொலியாக ஏற்படும் நிலைகளை எமக்குச் சாதகமாக்கி அதன்மூலம் அனுகூலமான வாழ்வினை ஏற்படுத்திக் கொள்வதே புலம்பெயர்ந்தவர்களாகிய எமது கடமையாகிறது. அதேபோல “ட்ரம்ப்” அவர்களின் பிரசாரக் கோஷங்களைக் கேட்டு அவரைப் பற்றி நானெடுத்த கணிப்பு வெற்றியடைந்த பின்னால் அவர் கொடுத்த உரையைக் கேட்டதும் கொஞ்சம் ஆட்டம் கண்டிருக்கிறது. ஆம், அமெரிக்க மக்கள் ஏதோ ஒரு நம்பிக்கையில் அரசியல் பின்னணி எதுவுமற்ற ஒரு வெற்று வியாபார முதலாளியைத் தமது ஜனாதிபதியாக்கியுள்ளார்கள். அவர்க்குச் சந்தர்ப்பம் அளித்து அவரது செயற்பாடுகளை அவதானிப்பது ஒன்றே இன்றைய எமது தேவையாகிறது. பிரசார மேடைகளில் கர்ஜித்த “ட்ரம்ப்” என்பவருக்கும் ஜனாதிபதியாகப் பதவியேற்கப்போகும் “ட்ரம்ப்” என்பவருக்கும் இடையில் வேறுபடு இருப்பது போலவும் அவ்வேறுபாடு அனுகூலமிக்கது போலவும் தென்படுகிறது.

    “கண்ணாலே காண்பதும் பொய், காதாலே கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய் ” எனும் முன்னோர்கள் கூற்றுக்கேற்ப ஜானாதிபதி “ட்ரம்ப்” அவர்களுக்குச் சந்தர்ப்பம் அளித்துப் பார்க்க வேண்டியது ஜனநாயகத்தை நம்பும் அனைவரது கடமையாகிறது.

    மீண்டும் அடுத்த மடலில்…

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

     

    Share
  • சுட்டும் விழிச்சுடர்! – கொடிது .. கொடிது…

    பவள சங்கரி

    dsc_0340-collage
    நேற்று காலை செய்தித்தாள் வாசித்துக்கொண்டிருந்தபோது பக்கத்தில் ஏதோ படபடவென மெல்லிய சிறகசைக்கும் ஓசை கேட்டது. சற்றே திரும்பிப்பார்த்தபோது, அழகிய அந்த அடர்நீல வண்ண பட்டாம்பூச்சி என்னருகில் சன்னல் விளிம்பில் தம் சிறகை மெல்ல ஆட்டியபடி அழகு காட்டிக்கொண்டிருந்தது. புதிய 2000 உரூபாய் நோட்டின் சுவையான செய்தியைக்கூடத் தொடரத் தோன்றாமல் அதன் அழகிலேயே இலயித்திருந்த அந்த சுகமான தருணத்தில்தான் திடீரென ஒரு இராட்சசன் பல்லி உருவத்தில் வந்து கப்பென அதன் மென்சிறகைக் கவ்வியே விட்டது. என்ன செய்வது என்று அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் அது அந்த சிற்றுயிரை மேலும் தன் வயமாக்கிக்கொள்ள யத்தனித்தது. சட்டென்று சுயநினைவு வந்தவளாக அந்த இராட்சசனை விரட்டிவிட்டாலும் அடுத்த சில மணித்துளிகள் அது துடிதுடித்ததைக் காணச்சகிக்கவில்லை. எப்படியும் பிழைத்துக்கொள்ளும் என்ற நம்பிக்கையில், செய்வதேதும் அறியாமலே உயிர் நீர் ஊற்றுவதாக எண்ணிக்கொண்டு என் விருப்ப தெய்வங்கள் அத்தனையையும் வேண்டிக்கொண்டு துளித்துளியாக நீர் தெளித்தும் பார்த்தும் ஒன்றும் பலனில்லை. இன்னும் மறக்க முடியாமல் மனபாரம் ஏற்படுத்தும் காட்சியது.. மனிதர்களின் வாழ்க்கைகூட இப்படித்தானே. எந்த நேரத்தில் வாழ்க்கை எப்படி மாறும் என்று தெரியாமலேதானே நம் விருப்பம்போல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்..

    நிலைமாறும் உலகில் நிலையில்லா வாழ்க்கையிது என்று தெரிந்தும் நம்மை நம்மால் நம் இயல்புகளிலிருந்து பல நேரங்களில் அது மோசமானது என்று அறிந்தும் மாற்றிக்கொள்ள முடியாமலே போய்விடுகிறது. அதற்கு நொண்டிச்சாக்கு சொல்லவும் தயாராகவே இருக்கிறோம். சமீபத்தில் என் தோழி ஒருவர் என்னிடம் மிகவும் வருந்தி சொன்ன சம்பவம் இது.

    ஒரே மகனைப் பெற்று அத்தனை அன்பையும், பாசத்தையும் கொட்டி வளர்த்த மகன் தன் குடும்பம், மனைவி, குழந்தைகள், பேரக்குழந்தைகள் என்று தன் இரத்த உறவுகளுடன் கூடிக்களித்திருக்க ஆரம்பித்தவுடன் தாய் பாரமாகி விட்டாள். தாயை முதியோர் இல்லத்தில் சேர்க்கவேண்டும் என்று ஒற்றைக்காலில் நிற்கிறான். அதற்கு, தங்கள் சந்தோசத்திற்கு தடையாக இருப்பதாகவும், எப்போதும் அவருடனேயே பேசிக்கொண்டிருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதாகவும், தனியாக விட்டுவிட்டு எங்கும் செல்லக்கூடாது என்று அழிச்சாட்டியம் செய்வதாகவும் பல காரணங்கள் சொல்கிறாராம். இவையனைத்திற்கும் மேலாக “எங்க அம்மா அவங்க மாமியாரை அதான் எங்க ஆத்தாவை இப்படித்தானே முதியோர் இல்லத்தில் சேர்த்தாங்க. எங்க ஆத்தாவுக்கு அவங்க பணம் கூட ஒழுங்கா கொடுக்காம, மாத்திரை மருந்துகூட சரியாக்கிடைக்காம, வேதனைப்பட்டு அனாதை மாதிரி செத்துப்போச்சு எங்க ஆத்தா. அத்தனை அதிகாரத்தோட, சொத்தோட இருந்த எங்க ஆத்தாவுக்கே கடைசீல அந்த நிலைமைதான். ஆனா நான் அப்படியா அனாதையா விடப்போறேன். நல்ல ஹோம்ல, ரூ.25,000 டெபாசிட் கட்டி சேர்க்கறேன்னுதான் சொல்றேன். அவிங்களுக்கும் அவிங்க வயசுக்குத் தகுந்த தோழிகள் (?) கிடைப்பாங்கல்ல.. நேரத்துக்கு சாப்பாடு போடுவாய்ங்க. பெரிசா வேலையெல்லாம் ஏதும் செய்ய வேணாம். அப்புறம் வேற என்ன பிரச்சனை. நேர நேரத்துக்கு டி.வி சீரியலும் அங்க போடுவாய்ங்களாம். அது போதாதா? நாங்களும் நிம்மதியா இருக்கிறோம், அவிங்களும் சந்தோசமா இருக்க வேண்டியதுதானே. அதுக்கும் போகமாட்டேன்னு அடம் பிடிச்சாக்க என்ன செய்யிறது. இங்கேயே இருந்து உயிரை வாங்குது” என்று பஞ்சாயத்து வைத்திருக்கிறான்.

    சுவற்றில் அடித்த பந்து திரும்பி வந்ததுபோல, ‘முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்’ என்பதற்கிணங்க, வயசு காலத்தில், தனக்கு இப்படியொரு நிலை வரவே வாய்ப்பில்லை என்ற கற்பனையில் தன் மாமியாருக்குச் செய்த அதே கொடுமை இன்று தனக்கே திரும்பி வந்ததை ஏற்கவே முடியவில்லை அத்தாயினால். இப்படியொரு நிலை வரும் என்று அன்றே தெரிந்திருந்தால் ஒருவேளை அந்தத் தவறை செய்யாமல் இருந்திருப்பாரோ என்னவோ. சரி அப்படியே இருந்தாலும் இன்று தன் குடும்பத்தாரின் பேச்சைக் கேட்டுக்கொண்டு தாயை முதியோர் இல்லம் அனுப்பினால் மீண்டும் இதே நிலை தனக்கோ, தன் மனைவிக்கோ வராது என்பதற்கு என்ன உத்திரவாதம். தன் அம்மாவிற்கு செய்யும் இந்த துரோகத்தை சரியென்றுதானே தன் மகனும் நம்புவான் என்பதை இவர்கள் ஏன் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். வழிவழியாக முதியோர் எல்லோரும் முதியோர் இல்லத்திலேயே வாழும் வழக்கத்தை இக்குடும்பத்தினர் ஏற்படுத்திக்கொள்வார்களா? அதுதானே நிதர்சனமாகப்போகிறது.

    முதுமை எவ்வளவு கொடிது என்று நாம் அறியாததல்ல. எத்தனை சுற்றம் அருகிலிருந்தாலும், எவ்வளவு பெரிய மருத்துவ வசதி ஏற்படுத்திக் கொடுத்தாலும் முதுமையின் இரணங்களை சுற்றி இருக்கும் எவரும் பகிர்ந்து கொள்வது சாத்தியமே இல்லை. ஆறுதலான, அன்பான வார்த்தைகள் மட்டுமே ஓரளவிற்கு அமைதியை ஏற்படுத்தலாம். அப்படிப்பட்ட நேரத்தில் அந்த அன்பும், பேரக்குழந்தைகளின் பாசமும் கூட கிடைக்காமல் தனியாக ஒரு இல்லத்தில் துரத்தி விடுவது என்பது கொடுமையிலும் கொடுமை இல்லையா?

    முதுமை நிலையில் தனிமை என்பது மிகவும் கொடிய செயல். அதுவும் வெளி உலகமே அறியாமல், குடும்பமே கோவில், குழந்தைகளே வாழ்க்கை என்று இருக்கும் சூழலில் வாழும் பெண்களுக்கு இப்படி ஒரு நிலை என்றால் அவர்களால் எப்படி சகித்துக்கொள்ள இயலும். உணவும், உடையும், உறையுளும் போதாதா என்ற கேள்வியே சித்திரவதையானது அல்லவா. அந்தத்தாய் தன்னுடைய தேவை என்ன என்பதை என்ன சொல்லி புரிய வைப்பாள். மீதமிருக்கும் சொற்ப காலங்களை, உழைத்து, உழைத்து ஓடாய் தேய்ந்துபோன உடலை சுமக்க முடியாமல் சுமப்பதோடல்லாமல், மலையாக நம்பியிருந்த தம் சொந்த இரத்தமே தன்னைப் புரிந்து கொள்ளாத வேதனையை, மன பாரத்தையும் சேர்த்து சுமப்பதென்றால் அந்த உயிர் என்ன பாடுபடும்? இப்படியொரு மகன் இருப்பதற்கு அவள், தான் குழந்தையே பெறாத மலடியாகக்கூட இருந்திருக்கலாம் என்று சொல்வதில் எவ்வளவு ஆதங்கம் அடங்கியிருக்க வேண்டும். ஆனாலும் எந்தத் தாயும் அப்படி எண்ணிக்கூட பார்க்கமாட்டாள். தாம் பெற்ற குழந்தைகள் தம் கண் முன்னால் எந்த ஒரு சிறு துன்பத்தையும் அனுபவிப்பதை தாங்கிக்கொள்ள மாட்டாள்.

    ஒரு தாய் தம் குழந்தைகளை பாசத்தைக்கொட்டி வளர்ப்பது பிற்காலத்தில் தம்மைக் காப்பாற்றுவார்கள் என்ற சுயநலம் கருதி அல்ல. தாய்மை என்பதன் அர்த்தம் அதுவல்ல. ஆனாலும் இறுதிக் காலங்களில் குழந்தைகளின் அன்பையும், அரவணைப்பையும் தவிர அந்த முதுமை வேறு எதை எதிர்பார்க்கப்போகிறது? அந்த மகன் இதை உணர்ந்து அந்த அன்பையும், பாசத்தையும் காட்டினால் தம் குழந்தைகளும் நல்ல முறையில் வாழ்க்கையை எதிர்கொள்வார்கள், பிற்காலத்தில் தங்களுக்கும் இப்படியொரு நிலை வராது என்று புரிந்துகொண்டால் எவ்வளவு நன்றாக இருக்கும் …

    இந்தியாவில் 60 அகவையைக் கடந்தவர்கள் 9.5 கோடி பேர் உள்ளார்கள். 2025 இல் 8.5 கோடி பேர் மேலும் இதில் இணைவார்கள். 80 அகவையைக் கடந்தவர்கள் 80 இலட்சம் பேர் இருக்கிறார்கள். மாறிவரும் குடும்ப அமைப்பு முறைகள், பொருளாதார நிர்ப்பந்தம் போன்ற சில காரணங்களால் முதியவர்களின் நிலை குடும்பத்தை விட்டு விலகியிருக்க வேண்டிய வேதனையில் தள்ளிவிடுகிறது. மன அழுத்தம், தனிமை, ஆரோக்கியக்கேடு போன்ற பலவிதமான துன்பங்களுக்கு ஆளாகிறார்கள். உலகெங்கும் முதியவர்களின் பராமரிப்பு என்பது பெரும் பொருளாதார சுமையாகவே பார்க்கப்படுகிறது. சப்பான் போன்ற நாடுகளில் அதிகரித்து வரும் முதியவர்களை ஆக்கப்பூர்வமான வழிகளின் பயன்படுத்துவதன் மூலம் அவர்களால் ஏற்படக்கூடிய பொருளாதார சுமையைக் குறைக்க முடியும் என்பதையும் சில நிறுவனங்களும், சமூகங்களும் செயலில் செய்து காட்டிவருகின்றன. நம் நாட்டிலும் இது போன்று ஏதேனும் ஆக்கப்பூர்வமான திட்டங்கள் செயல்படுத்துவதன் மூலம் இது போன்ற பிரச்சனைகளை கட்டுக்குள் கொண்டுவர முடியும். முதியோர்களின் அனுபவ அறிவு இளம் தலைமுறையினருக்கு உதவும் வகையில் வழிமுறைப்படுத்துவது நலம் பயக்கும்.

    வயது காலத்தில் தனக்கென்று, தன்னுடைய முதுமைக் காலத்தில் பயன்படும் என்று சேமித்து வைத்துக் கொள்ளாமல், வயதான காலத்தில் பிள்ளைகள் தம்மைப் பார்த்துக் கொள்வார்கள் என்ற எண்ணத்தில் இருந்துவிடுவது அறிவீனம் என்பதையும் உணரவேண்டும்.

    முதுமையை பாதிக்கக்கூடியவைகள், உடற்காரணிகள், உளக்காரணிகள் ஆகிய இருவகை. மூளையின் செயற்பாட்டின் நிலை குறைவடைதல், மூட்டுக்களில் தசைகளில் பலவீனம் ஏற்பட்டு மூட்டுக்களில் தேய்வு ஏற்படுதல், நரம்புகளில் தளர்ச்சி ஏற்படுதல், தசைகள் மெலிவடைதல், தோல்கள் சுருங்குதல், மயிர்கள் உதிர்தல், நரை ஏற்படுதல், புலனுறுப்புகளில் குறைபாடுகள் ஏற்படுதல், நோய் எதிர்ப்புச் சக்திகள் குறைவதால் தொற்று நோய்கள் ஏற்படுதல் போன்றவை உடற்காரணிகள்.

    உளக்காரணிகளைப் பொறுத்தவரையில், உடற்காரணிகளை விடவும் மீப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவைகளாகவே இருக்கும். பொதுவாக மனதளவில் பாதிப்படையக் கூடியவர்கள் அதிலிருந்து விடுபடுவது மிகவும் கடினமாக இருப்பதை பார்க்க முடிகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருப்பினும், முக்கியமாக இடம்பெயர்வு ஏற்படுகின்ற போது முதியவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர். பிறந்து, வளர்ந்த பூமியை விட்டும் , ஆடி விளையாடிய மண்ணை விட்டும், பழகிய உறவுகளை விட்டும், அறிமுகமற்ற இடத்திற்குச் செல்லும்போது பெருந்துன்பத்திற்கு ஆளாகிறார்கள்.
    பெற்றோர் முதுமையில் எத்தகைய பிரச்சினைகளை சந்திக்கிறார்கள் என்பதை உணர்ந்து அவர்களது பிரச்சினைகளையும் மனோ நிலைகளையும் அறிந்து அவர்களை அன்புடன் நடத்த வேண்டிய கடமை தங்களுக்கு உள்ளது என்பதை இளமையிலேயே அவர்களுக்கு ஊட்டி வளர்க்க வேண்டியதும் அவசியமாகிறது .

    Share
  • ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸம்வத்ஸர அபிஷேக விசேஷ ஹோம சப்தாஹம் துவக்கம்

    நவம்பர் 13 முதல் 19 வரை
    ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸம்வத்ஸர அபிஷேக விசேஷ ஹோம சப்தாஹம் துவக்கம்

    arokya

    வேலூர் மாவட்டம், வாலாஜா வட்டம், அனந்தலை கிராமம், கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் மேற்கண்ட தினங்களில் ஸம்வத்ஸர அபிஷேக விசேஷ ஹோம சப்தாஹம் நடைபெற உள்ளது.

    aro

    கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி, திருமதி. நிர்மலா முரளிதரன் அவர்களின் பரிபூரண ஒத்துழைப்புடன் ஆச்சார்ய பெருமக்களின் ஆலோசனையின்படி ஸ்ரீ ஆரோக்ய லட்சுமி ஸமேத தன்வந்திரி பெருமாளுக்கும், ஸ்ரீ மரகதாம்பிகை ஸமேத மரகதேஸ்வரருக்கும் இதர 73 விதமான பரிவார தெய்வங்களுக்கும், 468 சித்தர்களுக்கும் சென்ற ஆண்டு 29.11.2015 அன்று மஹா ஸம்ப்ரோக்‌ஷணம் நடைபெற்றது. இதன் ஸம்ப்ரோக்‌ஷணம் நிறைவு விழா ஐப்பசி 28ம் தேதி (13.11.2016) முதல் கார்த்திகை 4ம் தேதி (19.11.2016) வரை காணாபத்யம், கெளமாரம், செளரம், ஸ்ரீ சாக்தம் மற்றும் வைணவம் அகிய ஆறு மதங்களில் உள்ள தெய்வங்களுக்கும், மஹான்களுக்கும் ஸம்வத்ஸராபிஷேகம் சிறப்பாக நடைபெற உள்ளது. இவ்வைபவத்தில் அனைவரும் பங்கேற்று குருவருளுடன் திருவருள்பெற அன்புடன் அழைக்கின்றோம். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

    நிகழ்ச்சி நிரல்:

    13.11.2016 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல் பகல் 12.00 மணி வரை மங்கள இசை, கோ பூஜை, வேத பாராயணம், விக்னேஸ்வர பூஜை, புண்யாஹவாசனம், தேவதா அனுக்ஞை, கிராம தேவதா பூஜை, முனீஸ்வர பூஜை, நவகன்னி பூஜை, வாஸ்து ஹோமம், மஹா பூர்ணாஹுதி, கலச புறப்பாடு, ஸ்ரீ வாஸ்து பகவானுக்கு மஹா அபிஷேகம், மஹா தீபாராதனை, தீர்த்த பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்குதல்.

    14.11.2016 திங்கட்கிழமை காணபத்யம் சார்ந்த ஹோமங்கள்
    15.11.2016 செவ்வாய் கிழமை கெளமரம் சார்ந்த ஹோமங்கள்
    16.11.2016 புதன் கிழமை செளரம் சார்ந்த ஹோமங்கள்
    17.11.2016 வியாழக்கிழமை சைவம் சார்ந்த ஹோமங்கள்
    18.11.2016 வெள்ளிக் கிழமை ஸ்ரீ சாக்தம் சார்ந்த ஹோமங்கள்
    19.11.2016 சனிக் கிழமை வைணவம் சார்ந்த ஹோமங்கள்

    தொடர்புக்கு:
    ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடம்
    கீழ் புதுப்பேட்டை, அனந்தலை மதுரா
    வாலாஜாபேட்டை – 632513
    Ph : 04172-230033/9488209877/9488213701
    e-mail: info@danvantritemple.org
    homam@danvantritemple.org
    danvantripeedam@gmail.com

    Share
  • இந்தியப்பிரதமரின் அதிரடி நடவடிக்கை!

    பவள சங்கரி

    தலையங்கம்

    மிகச்சரியான நேரத்தில் அதிரடியாக பொருளாதாரத்தில் ‘surgical strike’ என்று அனைவராலும் விமர்சிக்கப்படுகிற ஒரு அறுவை சிகிச்சை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முன்பு இந்திய எல்லையில் பாகிஸ்தானுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கையைப்போன்று நேற்று இரவு பொருளாதாரத்தில் பாரதப் பிரதமர் மேதகு மோதி அவர்களால் எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை பாராட்டுக்குரியது. பதவியேற்ற இவ்வளவு நாட்களாக கறுப்புப் பணத்திற்கு எதிராக மோதி அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று விமர்சித்தவர்களின் எண்ணங்களை தவிடுபொடியாக்கியுள்ளார். சரியாகச் சொல்லவேண்டுமென்றால் மூன்று மாதத்திற்கு முன்பே இதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கவேண்டும். பரிவர்த்தனையிலுள்ள வங்கியாளர்களுக்கோ நிதியமைச்சகத்தைச் சார்ந்த உயரதிகாரிகளைத் தவிர்த்து மற்றவர்களுக்குத் தெரியாத வகையில் இரகசியமாகவே இந்தப் பொருளாதார அறுவைச் சிகிச்சை நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு இருந்த 10,000, 5000, 1000 உரூபாய் நோட்டுகள் வெகு காலம் முன்பு ஒழிக்கப்பட்டு 500 உரூபாய் நோட்டு மட்டும் புழக்கத்தில் கொண்டுவரப்பட்டது. அளவில் பெரியதான 100 உரூபாய் நோட்டும் ஒழிக்கப்பட்டது. ஆனால் அவைகள் அனைத்தையும்விட இம்முறை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை இரகசியமாக எதிர்பாராத நேரத்தில் அறிவிக்கப்பட்ட சரியான அறிவிப்பாக அமைந்துள்ளது. நாட்டு நலனில் அக்கறையுள்ள அனைத்துத் தரப்பு மக்களாலும் பாராட்டும் பெற்றுள்ளது. இக்கட்டுரை எழுதும் நேரத்தில் இச்செய்தி நம் இந்தியாவில் சராசரியாக 2 முதல் 3 சதவிகிதம் மக்களுக்கு மட்டுமே தெரிந்திருக்கக்கூடும். மலைவாழ் மக்கள், தொழிலாளர்கள், கிராமப்புற மக்கள், கல்வியறிவற்றவர்கள் அனைவருக்கும் பெரும் குழப்பத்தையும், பாதிப்பையும் ஏற்படுத்தக்கூடும். இன்று உரூபாயின் மதிப்பு குறைந்துள்ளதால் அனைவரின் கையிலும் 500, 1000 உரூபாய் நோட்டுகளே அதிகமாக புழக்கத்தில் உள்ளன. வங்கிகளே 100 உரூபாய் நோட்டு கட்டுகளை வாங்க மறுக்கின்றன. இதிலிருந்து மக்கள் மீண்டு யதார்த்த நிலைக்கு வருவதற்கு 60 நாட்களாவது ஆகலாம். ஆனாலும் புறையோடிய நம்முடைய பொருளாதாரத்தை சீர்செய்வதற்கு இந்த அறுவைச் சிகிச்சை தேவையாகத்தான் உள்ளது.

    ரிசர்வ் வங்கி இது தொடர்பாக மும்பை, தில்லி ஆகிய நகரங்களில் இதற்கான தனிப்பட்ட அலுவலகங்களை அமைத்திருப்பதாகவும் அறியமுடிகிறது. இதுபோன்று நகர்ப்புறங்கள் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள வங்கிகள் பணப்பரிமாற்றத்திற்கு காசாளர்களை அதிக நேரங்களுக்கு பணிபுரிய வைப்பதும் நலம் பயக்கும்.

    இதனுடைய பாதிப்பாக தங்கம், வெள்ளியின் சந்தை நிலவரங்கள் பாதிப்படையும். பங்குச் சந்தைகள் மிகப்பெரிய சரிவினைச் சந்திக்கும் வாய்ப்புகளும் ஏற்படலாம். உரூபாயின் மதிப்பு அதிகரிக்க வேண்டும். பெட்ரோலியப் பொருட்களுக்கான விலை சரியக்கூடும். சமீப காலங்களில் குறைந்துள்ள பணப்புழக்கம் இந்த நிலையில் மேலும் அதிகரிக்கலாம். அனைத்துத் துறைகளிலும் இதனுடைய பாதிப்பு வெளிப்படையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. அரசு இந்நிலையில் மக்களை அனுசரித்து செயல்பட்டால் இந்த அறுவை சிகிச்சையின் பலன் பூரணமாகக் கிடைத்து, ஆரோக்கியமாகவும் அமையும் என்பது உறுதி!

    Share
  • காவிரி புரக்கும் நாடு – 3

    -மேகலா இராமமூர்த்தி

    புகார்நகரக் கழனியில் முற்றிய நெற்கதிர்களை வயிறுபுடைக்க உண்ட எருமையார் ஒருவர் நெற்கூட்டின் நிழலில் நிம்மதியாய்க் கண்ணுறங்குவதைப் பட்டினப்பாலை சுட்டிக்காட்டியது. சேற்றுவயலாடிய இன்னொரு எருமையாரின் செயலைக் காண்போம் இனி!

    பயிரிட ஏற்றதாய் உழுதுவைக்கப்பட்டிருந்த வளமான வயலது. விரைந்து அதனுள் புகுந்த இந்த எருமையார், Rinca Island - Water Buffalo mudஅச்சேற்றில் ஆசைதீர விழுந்து புரண்டார். விளைவு? உடலெங்கும் அவருக்குத் தினவெடுக்க (அரிப்பு) தொடங்கியது. அதனைப் பொறுக்கமாட்டாமல், ஓடினார்…ஓடினார் களத்துமேட்டை நோக்கி விரைந்து ஓடினார்! அங்கே நெடிதுயர்ந்துநின்ற நெற்கூட்டைக் கண்டதும் சற்றே நிம்மதிப் பெருமூச்சு விட்டவர், வைக்கோல்பிரிகளால் சுற்றப்பட்டுப் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த அந்த நெற்கூட்டில் பரபரவென்று தன் முதுகை உராய்ந்தார். அதனால், வைக்கோல்பிரி சற்றே நெகிழ, உள்ளிருந்த நெல்மணிகள் சிதறிச் சிரித்தன எருமையாரின் வேடிக்கையான செயல்கண்டு!

    …உழாஅ  நுண்தொளி உள்புக்கு அழுந்திய
    கழாஅமயிர் யாக்கைச் செங்கண் காரான்
    சொரிபுறம் உரிஞ்சப் புரிஞெகிழ்பு உற்ற
    குமரிக் கூட்டில் கொழும்பல் உணவு
    கவரிச் செந்நெல் காய்த்தலைச் சொரிய…
    (சிலப்: நாடுகாண்: 120-124)

    இப் பாடல்வரிகள் சிலப்பதிகாரத்தின் நாடுகாண் காதையில் நமக்குக் காணக் கிடைக்கின்றன.

    புகார் நகரத்தில், காவிரியின் புதுநீர் மதகுகளில் மோதும் ஒலியேயன்றி, (நீர்ப்பற்றாக்குறை உள்ள காலங்களில் பயன்படுத்தப்படும்) நீரிறைக்கும் கருவிகளான ஆம்பி, கிழார், மிடா, ஏத்தம் (இந்தப் பெயர்களெல்லாம்…ஏன் இந்தக் கருவிகளெல்லாமே இப்போது புழக்கத்தில் உள்ளனவா என்பது சந்தேகமே!) ஆகியவற்றின் ஒலிகளெல்லாம் கேட்பதேயில்லை என்று அதன் வற்றாத நீர்வளத்தைப் பற்றிப் பெருமையோடு நம்மிடம் பகர்கின்றார் இளங்கோவடிகள்.

    …..கயவாய் நெரிக்கும்
    காவிரிப் புதுநீர்க் கடுவரல் வாய்த்தலை
    ஓஇறந்து ஒலிக்கும் ஒலியே அல்லது
    ஆம்பியும் கிழாரும் வீங்குஇசை ஏத்தமும்
    ஓங்குநீர்ப் பிழாவும் ஒலித்தல்
    செல்லா… (சிலப்: நாடுகாண்: 107-111)

    அடுத்ததாக, வான்பொய்ப்பினும் தான்பொய்யாக் காவிரி குறித்துச் சங்க அகப்பாடல்களில் நெடியதும் (13 அடி முதல் 31 அடி வரை), அதனால் ’நெடுந்தொகை’ என்று சிறப்பிக்கப்படுவதுமான அகநானூறு கூறும் செய்திகளைக் காண்போம். இந்நூலில் காவிரி பற்றிய செய்திகள் 18 பாடல்களில் பதிவுசெய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    மாரிபோல் அனைவர்க்கும் வாரிவாரி வழங்கும் தித்தன் என்னும் சோழஅரசனின் நெற்குவியல்கள் நிறைந்த உறந்தையில்(உறையூர்), ஓடம்விடுவோரின் ஓடக்கோல் நீரில் நிலைக்காதவண்ணம் அதனை அடித்துச்சென்றுவிடுமாம் அங்கே சுழித்தோடும் காவிரியின் கடும்புனல். அப்புனலில் தலைவன் ஒருவன் பரத்தை ஒருத்தியோடு முதல்நாள் பெருவிருப்போடு நீராடி மகிழ்ந்தான். மறுநாளோ தலைவியை – அதாவது தன் மனைவியைத்தேடி நல்ல பிள்ளையாக(!) வீட்டிற்கு வந்தவன், தலைவிக்குத் தன் திருவிளையாடல்கள் எதுவும் தெரியாது என்றெண்ணிக்கொண்டு, அவளின் அன்பைப் பெறவேண்டி, ”மாசற்ற கற்புடைய பெண்ணே! என் கண்ணே! என் புதல்வனுக்குத் தாயே!” என்றெல்லாம் பசப்புவார்த்தைகள் பகர ஆரம்பித்தான். அதுகேட்ட தலைவிக்கு வந்ததே கோபம். “ஆகா! என்மீதுதான் உமக்கு எத்தனை அன்பு! உம் உள்ளங்கவர் பரத்தையொடு நேற்று நீர் காவிரியில் புனலாடியதை அறியாதவள் அல்லள் நான்; இனியும் உம் மாயப் பொய்ம்மொழிகளுக்கு நான் மயங்குவேன் என்று நினைத்தீரோ? அதுபோதாதென்று, ’என் புதல்வன்தாய்’ என்றுகூறி என் முதுமையைவேறு எள்ளுகின்றீர்” என்று சீறவே, தன் குட்டுவெளிப்பட்டதை உணர்ந்த தலைவன் வெட்கித் தலைகுனிந்தான்.

    மழைவளம்  தரூஉம்  மாவண்  தித்தன்
    பிண்ட நெல்லின் உறந்தை ஆங்கண்
    கழைநிலை பெறாஅக் காவிரி நீத்தம்,
    குழைமாண்  ஒள்ளிழை நீவெய் யோளொடு,
    வேழ வெண்புணை  தழீஇப் பூழியர்
    கயநா டியானையின் முகனமர்ந் தாங்கு,
    ஏந்தெழில் ஆகத்து  பூந்தார் குழைய
    நெருநல் ஆடினை புனலே இன்றுவந்து
    ஆக வனமுலை அரும்பிய சுணங்கின்
    மாசில் கற்பின் புதல்வன்தாய் என
    மாயப் பொய்ம்மொழி சாயினை பயிற்றியெம்
    முதுமை எள்ளல் அஃதமைகுந் தில்ல…
    (அகம் 6: பரணர்)

    ஆறுகளில் நீராடும் இன்பமே அலாதியானதுதான்! கிராமப்புறங்களில் வாழ்ந்த நம் முந்தைய தலைமுறையினர்பலர் அப்பேரின்பத்தை அனுபவித்தவர்கள். ஆனால், நீரின்றி வறண்ட ஆறுகளை மட்டுமே நேரில்காணும் வாய்ப்பைப் பெற்றிருக்கும் இன்றைய இளையோருக்கு அவ்வின்பத்தைக் கதைகளிலும் கட்டுரைகளிலும் மட்டுமே படித்தறியவேண்டிய பரிதாபநிலை! எல்லாம் காலத்தின் கோலம்!

    அடுத்துவருவது, தன் காதற்தலைவியை நினைந்துருகும் ஒரு தலைவனின் தனிமைப் புலம்பல்!

    கொல்லிப்பாவை போன்று மயக்கும் பேரழகுகொண்ட பெண்ணவள். அவளைக் கண்டு காதல்கொண்டான் குறிஞ்சிநிலத் தலைவன் ஒருவன். தலைவிக்கும் அவன்மீது விருப்பந்தான்! நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய்க் காதல் வளர்த்துவந்த அவ்விருவரும், நள்ளிருள் யாமத்தில் பேயும் அறியாது(!) கூடி மகிழ்ந்தனர். ஆனால், அவ்வின்பம் நெடுநாள் நிலைக்கவில்லை. எப்படியோ ஒருநாள் அக்காதல் ஊராருக்குத் தெரிந்துபோயிற்று; அலர்தூற்ற ஆரம்பித்தது ஊர். (அலர் = பொதுமன்றத்தில் தலைவன் தலைவியின் காதல்குறித்து ஊரார் பழித்துப்பேசுவது.) அதனால் தலைவியின் தாய் அவளை வெளியில் செல்லவிடாமல் வீட்டிலேயே அடைத்துவைத்தாள். (இதனை ’இற்செறித்தல்’ என்று குறிப்பிடும் இலக்கியம்.)

    அன்பை நீராய்ப்பெய்து வளர்த்த காதற்பயிர் வாடத்தொடங்கியதுகண்டு காதலர் உள்ளமும் வாடியது. கட்டுக்காவல்கள் மிகுந்த அந்தச் சூழ்நிலையிலும்கூட, அவற்றையும் மீறிச் சாதுரியமாய் அவ்வப்போது தலைவனைச் சந்தித்தே வந்தாள் அந்தத் தலைவி! அதுபோல் நேற்று தன்னைக் காணவந்தவள், காவிரிப் பேரியாற்றுக் கடும்புனல் வெள்ளத்தில் ஆசையோடு நீந்திக் குளிப்பவள்போல் காதலோடு தன் மார்பைத் தழுவிக் களித்ததை நினைவுகூர்ந்து ஏக்கப் பெருமூச்செறிகிறான் இந்தத் தலைவன்.

    மாஇதழ் மழைக்கண்  மாஅ  யோளொடு
    பேயும் அறியா  மறைஅமை  புணர்ச்சி
    பூசல்துடியிற்  புணர்வுபிரிந்து  இசைப்பக்
    கரந்த கரப்பொடு  நாஞ்செலற்கு அருமையின்
    கடும்புனல்  மலிந்த  காவிரிப்  பேரியாற்று
    நெடுஞ்சுழி  நீத்தம்  மண்ணுநள் போல
    நடுங்கு அஞர்தீர  முயங்கி நெருநல்
    ஆகம் அடைதந்  தோளே  வென்வேற்
    களிறுகெழு தானைப் பொறையன் கொல்லி
    ஒளிறுநீர் அடுக்கத்து வியல்அகம் பொற்பக்
    கடவுள் எழுதிய பாவையின்

    மடவது  மாண்ட  மாஅ யோளே!  (அகம்-62: பரணர்)

    காதலில் களிப்பதைக்கூடக் காவிரியில் குளிப்பதோடு ஒப்பிட்டுப்பார்க்கும் அன்றைய சோழநாட்டுத் தமிழரின் உளவியல் இப்பாடலில் பிரதிபலிப்பதாய் உணர்கின்றேன். காதலியை நினைக்கும்போதும் காவிரியை மறப்பதில்லை அவர்கள்!

    அடுத்து, ஒய்யார நடைபோட்டபடி காவிரிவெள்ளத்தில் பிடித்தமீனை விற்கப் புறப்பட்டுவிட்ட பாணர்குலப் பைங்கிளி ஒருத்தி நம் பார்வையில் படுகின்றாள்! மீனைவிற்று அதற்குப் பண்டமாற்றாக வேறோர் உயரிய பொருளைப் பெறுகின்றாள் அவள். அது என்னவென்று அறியவேண்டுமா?

    அடுத்த பகுதிவரைக் காத்திருங்கள்!

    (தொடரும்)

     

    Share
  • நலமுடன் வாழ்க

     

    நீலமேகம் ராமலிங்கம் சஹஸ்ரநாமன்

     

     

    குளிர் பானம் குடிப்பதைத் தவிர்த்திடு
    கூழோ கஞ்சியோ குடித்துவிடு
    சிற்றின்பத்தைத் தவிர்த்திடு
    பேரின்பத்தை அடைந்துவிடு
    மாபெரும் சபையில் அரிமா போல் நடந்துவிடு
    ஆன்மீகப் பாதையில் நடந்து விடுதலை பெற்றுவிடு
    அளவாக உணவருந்திவிடு
    வளமாக வாழ்ந்திடு
    அதிக நேரம் தூங்குவதை விட்டுவிடு
    அதிக நேரம் உழைத்து வெற்றி என்ற இலக்கை அடைந்துவிடு

     

    Share