தேசிய கல்வி தினம் (National Education Day ) (11 நவம்பர்) 

க. பாலசுப்பிரமணியன்

இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் மௌலானா அப்துல் கலாம் ஆசாத் அவர்களின் நினைவாக நவம்பர் 11ஆம் நாள் தேசிய கல்வி தினமாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது . கல்வி எந்த ஒரு நாட்டுக்கும் முதுகெலும்பு.  ஒரு நாட்டின் தலைவிதி அந்த நாட்டின் கல்விக்கூடங்களில் நிர்ணயிக்கப்படுகிறது என்று கோத்தாரி கமிஷனின் முதல் வாக்கியமே உறுதிப்படுத்துகிறது. இந்த நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்தபின் கல்வியை நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள பாமர மக்களுக்கும் ஏழை எளியோருக்கு கிடைப்பதற்கான வழிகள் மேற்கொள்ளப்பட்டதில் கர்மவீரர் காமராஜர் போன்ற பல முன்னோடிகளை நாம் நினைத்துப் பார்க்கவேண்டும்.

கல்வி அறிவை வளர்ப்பதில் பெண்களுக்கு ஏற்பட்ட தடைகளும் சமுதாய நோக்குகளும் போர் நோக்கில் சந்திக்கப்பட்டு இன்று சமுதாயத்தின் எல்லாக் கல்வி மையங்களிலும் பெண்களுக்கு சரி நிகர் சமானமாகவும் முற்போக்கு நோக்கிலும் இடங்கள் ஒதுக்கப்பட்டு நாட்டின் தலைவிதி மாற்றப்பட்டு வருகின்றது. இருப்பினும், பெண்கல்விக்கு நாட்டில் பல பாகங்களில்  இன்னும் செய்ய வேண்டிய வேலைகளும் மாற்றங்களும் போதிய அளவைத் தொடவில்லை.

கல்வியை அடிப்படை உரிமையாக்கி மத்திய அரசு நாடு முழுவதிலும் 14 வயதுவரை உள்ள சிறார்களுக்கு கல்வி கிடைப்பதற்கான வழிமுறைகளை ஏற்படுத்தியும் அதற்கான முழுப்பலன் இன்னும் அவர்களுக்கும் சமுதாயத்திற்கும் கிடைக்கவில்லை. இது கவலைக்குரியது மட்டுமல்ல, சமுதாயத்தின் சிந்தனையில் ஏற்படவேண்டிய மாற்றத்திற்கு நாம் செய்ய வேண்டிய பணிகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாகவும் திகழ்கின்றது.

ஆனால் கல்வியின் நோக்கம்தான் என்ன? எண்ணும் எழுத்தும் கற்பிப்பதா? புத்தக அறிவை வளர்ப்பதா? தேர்வுகளில் அமர்த்தி சான்றிதழ்களை வழங்குதலா? இன்று கல்வி நிறுவனங்கள் வியாபார நோக்கில் வளர்க்கப்பட்டு மற்ற வியாபாரங்களை விட அதிக அளவில் பொருளீட்டுவதற்கு முன்மாதிரியாக விளங்க ஆரம்பித்துவிட்டன.

” அறம் செய்ய விரும்பு” என்றும் “ஆறுவது சினம்” என்றும்  “ஈவது விலக்கேல்” என்றும் தனிமனிதப் பண்பாடுகளையும் சமுதாய கோட்பாடுகளையும் வளர்த்த கல்வியின் நோக்கம் தடைபுரண்டு LKG  வகுப்புகளிலிருந்தே IIT க்கு தயார் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. “ஒரு தனி மனிதனின் உள்ளிருக்கும் பூரணத்துவத்தை வளர்ப்பதுதான் கல்வியின் நோக்கம்” என்ற சுவாமி விவேகானந்தரின் கூற்று மறக்கப்பட்டு கல்வியை சில புத்தகங்களின் உள்ளிருக்கும் எழுத்துக்களிலும் கருத்துக்களிலும் புதைத்து வருகின்றோம்..

வாழ்க்கையில் கல்லூரிகளில் படித்து பல சான்றிதழ்களையும் பட்டங்களையும் பெற்றவர்களிடம்கூட மனித நேயம் முற்றிலுமாக காணக்கிடைப்பதில்லை. சிந்திக்க வேண்டிய நேரம்.

கற்றல் ஒரு வாழ்க்கைப் பயணம். அது பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் முடங்குவதில்லை. இறுதிமூச்சு வரை வாழ்க்கையில் கற்றுக்கொள்ள வாய்ப்புக்களும் வழிமுறைகளும் உள்ளன. புத்தகக் கல்வியோடு வாழ்க்கைக் கல்வியை கற்றுக்கொள்ளுதல்  மிக அவசியம்.

உலகத்தோடு ஓட்ட ஒழுகல் பல கற்றும்

கல்லான் அறிவிலாதான்

என்ற வள்ளுவன் வாக்கு முற்றிலும் உண்மை…

மனிதநேயத்தை வளர்க்காத கல்வி .. சான்றிதழ்களை மட்டும் போற்றும் கல்வி .. எங்கே நம்மைக் கொண்டு சேர்க்கும் என்பது இன்று சிந்திக்க வேண்டிய கருத்து.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.