-மேகலா இராமமூர்த்தி

புகார்நகரக் கழனியில் முற்றிய நெற்கதிர்களை வயிறுபுடைக்க உண்ட எருமையார் ஒருவர் நெற்கூட்டின் நிழலில் நிம்மதியாய்க் கண்ணுறங்குவதைப் பட்டினப்பாலை சுட்டிக்காட்டியது. சேற்றுவயலாடிய இன்னொரு எருமையாரின் செயலைக் காண்போம் இனி!

பயிரிட ஏற்றதாய் உழுதுவைக்கப்பட்டிருந்த வளமான வயலது. விரைந்து அதனுள் புகுந்த இந்த எருமையார், Rinca Island - Water Buffalo mudஅச்சேற்றில் ஆசைதீர விழுந்து புரண்டார். விளைவு? உடலெங்கும் அவருக்குத் தினவெடுக்க (அரிப்பு) தொடங்கியது. அதனைப் பொறுக்கமாட்டாமல், ஓடினார்…ஓடினார் களத்துமேட்டை நோக்கி விரைந்து ஓடினார்! அங்கே நெடிதுயர்ந்துநின்ற நெற்கூட்டைக் கண்டதும் சற்றே நிம்மதிப் பெருமூச்சு விட்டவர், வைக்கோல்பிரிகளால் சுற்றப்பட்டுப் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த அந்த நெற்கூட்டில் பரபரவென்று தன் முதுகை உராய்ந்தார். அதனால், வைக்கோல்பிரி சற்றே நெகிழ, உள்ளிருந்த நெல்மணிகள் சிதறிச் சிரித்தன எருமையாரின் வேடிக்கையான செயல்கண்டு!

…உழாஅ  நுண்தொளி உள்புக்கு அழுந்திய
கழாஅமயிர் யாக்கைச் செங்கண் காரான்
சொரிபுறம் உரிஞ்சப் புரிஞெகிழ்பு உற்ற
குமரிக் கூட்டில் கொழும்பல் உணவு
கவரிச் செந்நெல் காய்த்தலைச் சொரிய…
(சிலப்: நாடுகாண்: 120-124)

இப் பாடல்வரிகள் சிலப்பதிகாரத்தின் நாடுகாண் காதையில் நமக்குக் காணக் கிடைக்கின்றன.

புகார் நகரத்தில், காவிரியின் புதுநீர் மதகுகளில் மோதும் ஒலியேயன்றி, (நீர்ப்பற்றாக்குறை உள்ள காலங்களில் பயன்படுத்தப்படும்) நீரிறைக்கும் கருவிகளான ஆம்பி, கிழார், மிடா, ஏத்தம் (இந்தப் பெயர்களெல்லாம்…ஏன் இந்தக் கருவிகளெல்லாமே இப்போது புழக்கத்தில் உள்ளனவா என்பது சந்தேகமே!) ஆகியவற்றின் ஒலிகளெல்லாம் கேட்பதேயில்லை என்று அதன் வற்றாத நீர்வளத்தைப் பற்றிப் பெருமையோடு நம்மிடம் பகர்கின்றார் இளங்கோவடிகள்.

…..கயவாய் நெரிக்கும்
காவிரிப் புதுநீர்க் கடுவரல் வாய்த்தலை
ஓஇறந்து ஒலிக்கும் ஒலியே அல்லது
ஆம்பியும் கிழாரும் வீங்குஇசை ஏத்தமும்
ஓங்குநீர்ப் பிழாவும் ஒலித்தல்
செல்லா… (சிலப்: நாடுகாண்: 107-111)

அடுத்ததாக, வான்பொய்ப்பினும் தான்பொய்யாக் காவிரி குறித்துச் சங்க அகப்பாடல்களில் நெடியதும் (13 அடி முதல் 31 அடி வரை), அதனால் ’நெடுந்தொகை’ என்று சிறப்பிக்கப்படுவதுமான அகநானூறு கூறும் செய்திகளைக் காண்போம். இந்நூலில் காவிரி பற்றிய செய்திகள் 18 பாடல்களில் பதிவுசெய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மாரிபோல் அனைவர்க்கும் வாரிவாரி வழங்கும் தித்தன் என்னும் சோழஅரசனின் நெற்குவியல்கள் நிறைந்த உறந்தையில்(உறையூர்), ஓடம்விடுவோரின் ஓடக்கோல் நீரில் நிலைக்காதவண்ணம் அதனை அடித்துச்சென்றுவிடுமாம் அங்கே சுழித்தோடும் காவிரியின் கடும்புனல். அப்புனலில் தலைவன் ஒருவன் பரத்தை ஒருத்தியோடு முதல்நாள் பெருவிருப்போடு நீராடி மகிழ்ந்தான். மறுநாளோ தலைவியை – அதாவது தன் மனைவியைத்தேடி நல்ல பிள்ளையாக(!) வீட்டிற்கு வந்தவன், தலைவிக்குத் தன் திருவிளையாடல்கள் எதுவும் தெரியாது என்றெண்ணிக்கொண்டு, அவளின் அன்பைப் பெறவேண்டி, ”மாசற்ற கற்புடைய பெண்ணே! என் கண்ணே! என் புதல்வனுக்குத் தாயே!” என்றெல்லாம் பசப்புவார்த்தைகள் பகர ஆரம்பித்தான். அதுகேட்ட தலைவிக்கு வந்ததே கோபம். “ஆகா! என்மீதுதான் உமக்கு எத்தனை அன்பு! உம் உள்ளங்கவர் பரத்தையொடு நேற்று நீர் காவிரியில் புனலாடியதை அறியாதவள் அல்லள் நான்; இனியும் உம் மாயப் பொய்ம்மொழிகளுக்கு நான் மயங்குவேன் என்று நினைத்தீரோ? அதுபோதாதென்று, ’என் புதல்வன்தாய்’ என்றுகூறி என் முதுமையைவேறு எள்ளுகின்றீர்” என்று சீறவே, தன் குட்டுவெளிப்பட்டதை உணர்ந்த தலைவன் வெட்கித் தலைகுனிந்தான்.

மழைவளம்  தரூஉம்  மாவண்  தித்தன்
பிண்ட நெல்லின் உறந்தை ஆங்கண்
கழைநிலை பெறாஅக் காவிரி நீத்தம்,
குழைமாண்  ஒள்ளிழை நீவெய் யோளொடு,
வேழ வெண்புணை  தழீஇப் பூழியர்
கயநா டியானையின் முகனமர்ந் தாங்கு,
ஏந்தெழில் ஆகத்து  பூந்தார் குழைய
நெருநல் ஆடினை புனலே இன்றுவந்து
ஆக வனமுலை அரும்பிய சுணங்கின்
மாசில் கற்பின் புதல்வன்தாய் என
மாயப் பொய்ம்மொழி சாயினை பயிற்றியெம்
முதுமை எள்ளல் அஃதமைகுந் தில்ல…
(அகம் 6: பரணர்)

ஆறுகளில் நீராடும் இன்பமே அலாதியானதுதான்! கிராமப்புறங்களில் வாழ்ந்த நம் முந்தைய தலைமுறையினர்பலர் அப்பேரின்பத்தை அனுபவித்தவர்கள். ஆனால், நீரின்றி வறண்ட ஆறுகளை மட்டுமே நேரில்காணும் வாய்ப்பைப் பெற்றிருக்கும் இன்றைய இளையோருக்கு அவ்வின்பத்தைக் கதைகளிலும் கட்டுரைகளிலும் மட்டுமே படித்தறியவேண்டிய பரிதாபநிலை! எல்லாம் காலத்தின் கோலம்!

அடுத்துவருவது, தன் காதற்தலைவியை நினைந்துருகும் ஒரு தலைவனின் தனிமைப் புலம்பல்!

கொல்லிப்பாவை போன்று மயக்கும் பேரழகுகொண்ட பெண்ணவள். அவளைக் கண்டு காதல்கொண்டான் குறிஞ்சிநிலத் தலைவன் ஒருவன். தலைவிக்கும் அவன்மீது விருப்பந்தான்! நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய்க் காதல் வளர்த்துவந்த அவ்விருவரும், நள்ளிருள் யாமத்தில் பேயும் அறியாது(!) கூடி மகிழ்ந்தனர். ஆனால், அவ்வின்பம் நெடுநாள் நிலைக்கவில்லை. எப்படியோ ஒருநாள் அக்காதல் ஊராருக்குத் தெரிந்துபோயிற்று; அலர்தூற்ற ஆரம்பித்தது ஊர். (அலர் = பொதுமன்றத்தில் தலைவன் தலைவியின் காதல்குறித்து ஊரார் பழித்துப்பேசுவது.) அதனால் தலைவியின் தாய் அவளை வெளியில் செல்லவிடாமல் வீட்டிலேயே அடைத்துவைத்தாள். (இதனை ’இற்செறித்தல்’ என்று குறிப்பிடும் இலக்கியம்.)

அன்பை நீராய்ப்பெய்து வளர்த்த காதற்பயிர் வாடத்தொடங்கியதுகண்டு காதலர் உள்ளமும் வாடியது. கட்டுக்காவல்கள் மிகுந்த அந்தச் சூழ்நிலையிலும்கூட, அவற்றையும் மீறிச் சாதுரியமாய் அவ்வப்போது தலைவனைச் சந்தித்தே வந்தாள் அந்தத் தலைவி! அதுபோல் நேற்று தன்னைக் காணவந்தவள், காவிரிப் பேரியாற்றுக் கடும்புனல் வெள்ளத்தில் ஆசையோடு நீந்திக் குளிப்பவள்போல் காதலோடு தன் மார்பைத் தழுவிக் களித்ததை நினைவுகூர்ந்து ஏக்கப் பெருமூச்செறிகிறான் இந்தத் தலைவன்.

மாஇதழ் மழைக்கண்  மாஅ  யோளொடு
பேயும் அறியா  மறைஅமை  புணர்ச்சி
பூசல்துடியிற்  புணர்வுபிரிந்து  இசைப்பக்
கரந்த கரப்பொடு  நாஞ்செலற்கு அருமையின்
கடும்புனல்  மலிந்த  காவிரிப்  பேரியாற்று
நெடுஞ்சுழி  நீத்தம்  மண்ணுநள் போல
நடுங்கு அஞர்தீர  முயங்கி நெருநல்
ஆகம் அடைதந்  தோளே  வென்வேற்
களிறுகெழு தானைப் பொறையன் கொல்லி
ஒளிறுநீர் அடுக்கத்து வியல்அகம் பொற்பக்
கடவுள் எழுதிய பாவையின்

மடவது  மாண்ட  மாஅ யோளே!  (அகம்-62: பரணர்)

காதலில் களிப்பதைக்கூடக் காவிரியில் குளிப்பதோடு ஒப்பிட்டுப்பார்க்கும் அன்றைய சோழநாட்டுத் தமிழரின் உளவியல் இப்பாடலில் பிரதிபலிப்பதாய் உணர்கின்றேன். காதலியை நினைக்கும்போதும் காவிரியை மறப்பதில்லை அவர்கள்!

அடுத்து, ஒய்யார நடைபோட்டபடி காவிரிவெள்ளத்தில் பிடித்தமீனை விற்கப் புறப்பட்டுவிட்ட பாணர்குலப் பைங்கிளி ஒருத்தி நம் பார்வையில் படுகின்றாள்! மீனைவிற்று அதற்குப் பண்டமாற்றாக வேறோர் உயரிய பொருளைப் பெறுகின்றாள் அவள். அது என்னவென்று அறியவேண்டுமா?

அடுத்த பகுதிவரைக் காத்திருங்கள்!

(தொடரும்)

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.