Month: May 2018

  • சைவ பக்தி இயக்கமும் வேளாளர் எழுச்சியும்

    -ர. சுரேஷ்

    பக்தி இயக்கம் வேளாளர் தலைமையிலான இயக்கம் என்பதை பல அறிஞர்கள் விளக்கியுள்ளனர். வைணவ ஆழ்வார்கள்களில் நம்மாழ்வார் எனும் வேளாள சமூகத்தைச் சார்ந்தவரே பெரிதும் கொண்டாடப்படுகிறார். அவரது பாடல்களே திராவிட வேதம் என்று வைணவர்கள் போற்றுகின்றனர். துரதிர்ஷ்டவசமாக சைவ சமயத்தில் திருநாவுக்கரசருக்கு அத்தகைய சிறப்பைச் சைவர்கள் அளிக்கத் தவறிவிட்டார்கள். வைணவத்தில் உள்ளதைப் போன்று தேவாரத் தமிழ்ப் பாடல்களை வேதங்களாக உரிமை கொண்டாடும் போக்கு சைவத்தில் இல்லை எனலாம்.

    தமிழ்ச் சைவ பக்தி இயக்கம் வேளாளர்களால் முன்னெடுக்கப்பட்டமைக்கு அக்காலச் சமூக வரலாற்றுக் காரணங்களே அடிப்படையாக அமைந்திருந்தன. சங்ககாலப் பிற்பகுதியில் இனக்குழுக்கள் அழிந்து பேரரசுகள் தோற்றம் பெற்றதையொட்டியே விவசாய விரிவாக்கமும் மருத நிலம் சார்ந்த பண்பாட்டு கட்டமைப்புகளும் உருவாகத் தொடங்கின. பேரரசுகள் பல்வேறு இனக்குழுக்களை வெற்றிகொண்டு அந்நிலங்களை விவசாய விரிவாக்கத்திற்காகப் பயன்படுத்திக் கொண்டதோடு அம்மக்களை மருதநில விவசாய உள்ளூர் ஆதிக்கச் சக்திகளின் கீழ் ஒரு பகுதியாக விளிம்புநிலைத் தொகுதிகளாக இணைத்துக் கொள்ளுகின்ற போக்கு காணப்பட்டது. அரச ஆதரவோடு விவசாய வர்க்கம் தோன்றி வேளாளத் தலைமையைப் பேணிக் கொண்டிருந்தது.

    ஆளும் வர்க்கத்தால் ஒடுக்கப்பட்ட, சுரண்டப்பட்ட மக்கள் தாங்களாகவே முன்வந்து அதிகாரத்தின்முன் பணிந்து அதனை ஏற்றுக்கொள்ளச் செய்யும் தத்துவக்களமாகவும் இனக்குழு நம்பிக்கைகள் பழக்கவழக்கங்கள் வழக்காறுகள் போன்றவற்றை இப்புதிய சமூக உருவாக்கத்தின்கீழ் இணைப்பதற்கும் வைதீக கலாசாரமும் இதன் தாத்பரியங்களும் பக்கபலங்களாக வந்து சேர்ந்தன. வர்ண ஒழுங்கிற்குட்பட்டுச் செயலாற்ற வேண்டிய கடப்பாட்டை வைதீகம் வலியுறுத்தியது.

    இப்புதிய சமயப் பண்பாட்டுருவாக்கம் ஆரியரல்லாத தொல்நிலை மக்களின் சமய வழிபாட்டு மூலப்படிவங்களின்வழி நிகழ்ந்தேறியது. தாந்த்ரீகம், தாய்த்தெய்வம், ஆகமம் போன்றவை வேளாண் பண்பாட்டை மையமிட்டதாகவும் அடித்தள மக்களுணர்வில் ஆழப்பதிந்து ஒரு மரபுத் தொடர்ச்சியினைப் பேணிவருவதாலும் வேளாள பக்தி இயக்கத்திற்கு இவற்றையெல்லாம் அரவணைத்துக் கொள்ளும் தேவையிருந்தது. கோயிலை அடியொற்றியெழுந்த பக்தி இயக்கப் பண்பாட்டில் இவையனைத்தும் தவிர்க்கவியலாக் கூறுகளாக இணைவாக்கம் பெற்றிருந்தன. ஆழ்வார்களும் நாயன்மார்களும் பின்பற்றிய காமிய பக்தி என்பதற்குள்ளாக தாந்திரீக மரபின் பல்வேறு கூறுகளைக் காணலாம். களவு ஒழுக்கப் பாடல்களுக்கு முன்மாதிரியாகச் சங்க அகமரபையும் (சில மீறல்களோடு) காமப்பாடல்களுக்கு முன்மாதிரியாக தாந்திரீக, சாக்த மரபையும் பின்பற்றியிருப்பதை அனுமானிக்க முடிகிறது.

    இக்காலகட்டத்திய சமூகச் சூழலையும் சமய நிலையையும்  அ.மார்க்ஸ்’ பின்வருமாறு கூறுகிறார்.

    “வேள்விகளும் யாகங்களும் தழைத்தோங்கிய ஒரு விவசாயப் பண்பாடும் உருக்கொள்கிறது. இது பின்னாளில் ஆலயம் சார்ந்த ஆகமவழிபாடுகளாகப் பரிணாமம் பெறுகிறது. விவசாயமயமாதல் என்பது இவ்வாறு வைதீகத்துடன் இணைந்தபோது இதனால் பாதிக்கப்பட்டு இரண்டாம் நிலைக்குடிமக்களாகவும் அடிநிலைச் சாதியினராகவும் உட்செரிக்கப்பட்ட மக்கள் குழுவினர் அவைதீக மரபுகளோடு இனம் காண்பது தவிர்க்க இயலாததாயிற்று. புத்தர், மகாவீரர் இருவருமே இமயமலைச் சரிவிலுள்ள சாக்கியம் என்னும் இனக்குழுவில் உதித்தவர்கள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

    தமிழகத்தைப் பொறுத்தமட்டில் சங்ககால வேந்துருவாக்கங்களையும் அவர்தம் விவசாய விரிவாக்க முயற்சிகளையும் வேள்வி முதலான சடங்குகளில் அவர்க்கிருந்த ஈடுபாட்டையும் பார்ப்பனர்களுக்கு வழங்கப்பட்ட தானங்களையும் இதன் விளைவாக விளிம்பிற்குள் தள்ளப்பட்டவர்களுக்கும் விவசாயச் சமூகத்திற்குமிடையே விளைந்த முரண்களையும் நாம் இந்தப் பின்னணியிலிருந்துதான் பார்க்க வேண்டும். ஸ்டெய்ன் குறிப்பிடுவது போல இந்த முரண்கள் மற்றும் தொடர்ந்த போராட்டங்களில் விவசாயம் சாராத அடிநிலை மக்கள் மேலாண்மை பெற முயற்சித்த காலமாகவே களப்பிரர் காலத்தைப் பார்ப்பது தகும். பார்ப்பனர்களுக்கு வழங்கப்பட்ட தானங்கள் இறக்கப்பட்டதென்பது இத்தகைய அடிநிலை மக்களது மேலாண்மையின் விளைவேயாகும்.”1

    இந்நிலையில் மக்கள் வேளாள-வைதீக அதிகாரத்தினை ஏற்றுக்கொண்டு ஒடுக்கப்பட்டும் சுரண்டப்பட்டும் வந்த நிலையில் சமண பௌத்த வருகை அவற்றின் சாதி ஏற்றத்தாழ்வுகளுக்கெதிரான குரல் வைதீக தர்மங்களுக்கு எதிரான குரல் இனக்குழு ஆதரவு போன்ற நிலையில் மாற்றுச் சிந்தனைகளை முன்வைத்து மாற்று அறிவுருவாக்க முயற்சியைத் தமிழகச் சூழலில் ஏற்படுத்த விழைந்தன. உடைமை வர்க்கங்களுக்கெதிராகவும் அடித்தள மக்களுக்கு ஆதரவாகவும் செயல்பட்ட சமண-பௌத்த மதங்கள்பால் மக்கள் வெகுவாக ஈர்க்கப்பட்டனர். இச்சூழலில் வேளாள வைதீக மதங்களின் மேலாதிக்கமும் செல்வாக்கும் குறைந்தன. வேளாளர்கள் தங்களின் வைதீகச் சாய்வும் அடித்தள மக்களை அரவணைத்துக் கொள்ளாதபோக்கும் தற்போதைய சமய கலாசார பின்னடைவிற்குக் காரணம் என்பதை உணர்ந்து கொண்டனர்.

    ஒருபுறம் சமண-பௌத்த நெறிகளுக்கு எதிராகவும் மற்றொருபுறம் வைதீக பிராமணிய மேலாண்மையைக் கீழிறக்கி சமயஅதிகாரத்தைக் கைப்பற்றவும் ஒரு புதிய மாற்றீடான மார்க்கத்தைக் கட்டமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இச்சூழலில் வேளர்களுக்குப் பக்திமார்க்கத்தில் தமிழ் சைவ அடையாளம் அன்றைய கலாசாரத் தேவையாக இருந்தது. இப்புதிய சமயப் பண்பாட்டுருவாக்கம் ஆரியரல்லாத தொல்நிலை மக்களின் சமயவழிபாட்டு மூலப்படிவங்களின்வழி நிகழ்ந்தேறியது. தாந்த்ரீகம் ,தாய்த்தெய்வம், ஆகமம் போன்றவை வேளாண் பண்பாட்டை மையமிட்டதாகவும் அடித்தள மக்களுணர்வில் ஆழப்பதிந்து ஒரு மரபுத் தொடர்ச்சியினைப் பேணிவருவதாலும் வேளாள பக்தி இயக்கத்திற்கு இவற்றையெல்லாம் அரவணைத்துக் கொள்ளும் தேவையிருந்தது.

    கோயிலை அடியொற்றியெழுந்த பக்தி இயக்கப் பண்பாட்டில் இவையனைத்தும் தவிர்க்கவியலாக் கூறுகளாக இணைவாக்கம் பெற்றிருந்தன. ஆழ்வார்களும் நாயன்மார்களும் பின்பற்றிய காமிய பக்தி என்பதற்குள்ளாக தாந்திரீக மரபின் பல்வேறு கூறுகளைக் காணலாம். களவு ஒழுக்கப்பாடல்களுக்கு முன்மாதிரியாக சங்க அகமரபை (சில மீறல்களோடு)யும், காமப் பாடல்களுக்கு முன்மாதிரியாகத் தாந்திரீக, சாக்த மரபையும் பின்பற்றியிருப்பதை அனுமானிக்க முடிகிறது.

    இவ்வாறு விவசாய விரிவாக்கத்திற்கும் வேளாள உள்ளூர்த் தலைமை மற்றும் பார்ப்பன மேலாண்மைக்கும் அவர்களின் சமய நிலைக்கும் எதிராகத் திணைக்குடி மக்களின் எதிர்ப்புணர்வைக் கீழ்வரும் சங்கப்பாடல் தெளிவாக உணர்த்துகின்றது.

    “அடலருந் துப்பின்….
    …துருந்தே முல்லையென்று
    இந்நான்கல்லது பூவுமில்லை
    கருங்கால் வரகே இருங்கதிர்த் திணையே
    சிறுகொடிக் கொள்ளே பொறிகிளர் வெரையொடு
    இந்நான் கல்லது உணவு மில்லை
    துடியன் பாணன் பறையன் கடம்பனென்று
    இந்நான்கல்லது குடியுமல்ல
    ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி
    ஒளிறேந்து மருப்பின் களிறெறிந்து வீழ்ந்தெனக்
    கல்லே பரவின் அல்லது
    நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இலவே”2

    என்பது அப்பாடல். எனவே இவ்வெதிர்ப்புணர்வைச் சமாளிக்க வேண்டி பக்தி இயக்கவாதிகள் புதிய வழிமுறைகளைக் கையாண்டனர்.

    சைவத்தைத் தமிழ்நிலத்தோடும் தமிழ்மொழியோடும் தமிழ் இனத்தோடும் இணைத்துத் தமிழ் சைவம் எனும் அடையாளத்தின்கீழ் கொண்டுவந்தனர். தமிழ்த்திணை மரபுகளுக்குள் அடங்காத சிவபரம்பொருளை ஐந்திணைக்கும் பொதுவாக்கி பக்தி நனி சொட்டச்சொட்ட பாடல்கள் வழி பிரவாகமெடுத்து ஓடவிட்டனர். சமண-பௌத்த மதங்களிலிருந்த சிறந்த கூறுகளைப் பெற்றுக்கொண்டு அவர்கள் வழங்கிய சலுகைகளைத் தாமும் வழங்குவதாகக் கூறி மக்களாதரவைத் திரட்டினர்.

    அடித்தள மக்களுக்கு சமயம்சார்ந்த வைதீகத் தடைகளை அகற்றிப் பிராமண மேலாண்மையை அதன் சமூக அதிகாரத்தைப் புறக்கணித்து வேளாளர்கள் சைவ சமயத்தின் மீதான தங்களுடைய அங்கீகாரத்தையும் தொன்று தொட்டு வந்த உயர்குடி மரியாதையையும் திரும்பப் பெறும் முயற்சிகளில் ஈடுபட்டனர். இத்தகு சீரிய முயற்சிக்கு உறுதுணையாகத் தமிழ்த் திணை மரபு சார்ந்த அகப்புற ஒழுகலாற்றுச் சிந்தனைகளையும் திணைக்குடி மக்களின் பல்வேறு வழிபாட்டு முறைமைகள் பழக்கவழக்கங்கள் பண்பாட்டு வழமைகள் போன்றவற்றைச் சைவம் என்னும் ஒற்றை மையத்தில் பிணைத்துக்கொண்டனர். இவ்வாறாக வேளாள நிலவுடைமைச் சமூகத்திற்கும் திணைக்குடிகளுக்குமான முரண்பாட்டைச் சமரசப்படுத்தும் வேலையை வேளாள பக்தி இயக்கம் திறமையாகச் செய்தது.

    வேளாள பக்தி இயக்கத்தின் இத்தகைய போக்குகள் குறித்து சி. அறிவுறுவோன் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.

    “தமிழ்ச் சைவம் திணைச்சமூகக் காலகட்டத்தில் உருவாகித் திணை சமூகத்துக்கும் நிலவுடைமைச் சமூகத்துக்கும் இடையிலான உடன்பாட்டின் காரணமாக வேதியச் சைவம் போல் வளராமல் சாதிக்கும் வர்ணத்துக்கும் அடிமைத்தனத்துக்கும் எதிரானதாக வளர வேண்டியிருந்தது. வடநாட்டில் வைதீக மதத்திற்கு எதிராகச் சமணமும் பௌத்தமும் செய்த வேலையைத் தமிழகத்தில் சைவமும் மேற்கொண்டது”3. என்று குறிப்பிடுகிறார்.

    இக்கூற்று வேளாள சைவம் வைதீகத்திற்கும் வர்ணாசிரம நெறிகளுக்கும் எதிராகச் செயல்பட்டது என்பதை விளக்குகிறது. அதே வேளையில் சமண-பௌத்த எதிர்ப்பென்பதும் அதன் முக்கியச் செயல்பாடாய் இருந்தது. மொத்தத்தில் வேளாளத் தமிழ் சைவ பக்தி இயக்கம் வர்ணஅரசனடிப்படையில் வேளாளர்-பிராமணர் முரண்பாடாகவும் வர்க்க அடிப்படையில் நிலவுடைமையாளர்-வணிகர் முரண்பாடாகவும் சமய அடிப்படையில் சைவம்-சமணபௌத்த முரண்பாடாகவும் முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டிய அவசியத்தை நன்குணர்ந்திருந்தது. அதேபோல சைவ- வைணவ முரண்பாடும் அதன் உட்தளத்தில் இழையோடிக் கொண்டிருப்பதையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.

    பக்தி இயக்கத்தில் வேளாள-பிராமண முரண்பாடுகள்

    சமண பௌத்தத்திற்கெதிராக வேளாளர் முன்னிறுத்திய தமிழ்ச் சைவ அடையாளத்துள் இயல்பாகவே வைதீக பிராமணியத்திற்கு இடமில்லாமல் போனது. புதிய சமூக அமைப்பில் வேளாளர்கள் சமூக அதிகாரத்தைப் பெறுவதற்குப் பிராமணிய மேலாண்மையைத் தகர்ப்பது அல்லது  வேளாளர்க்கு அடுத்த நிலையில் இடமளிப்பது. என்பது அவசியமாக இருந்தது. எனவே சைவ சமயத்தின் மீதான வேளாள அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வது என்பதில் வேளாள பக்தி இயக்கம் தீவிரமாகச் செயல்பட்டது. திருநாவுக்கரசரே வேளாள வர்க்கத்தின் பிரதிநிதியாகப் பக்தி இயக்கத்தை முன்னின்று நடத்தியவராகவும் இருந்திருக்கிறார்.

    திருநாவுக்கரசர் கையில் உள்ள உழவாரம் வேளாள வர்க்கத்தின் குறியீடாகும். ‘நாமார்க்கும் குடியல்லோம் நமனையஞ்சோம்’ என்று மன்னனையும் எதிர்த்துக் கலகக் குரல் எழுப்பும் திருநாவுக்கரசரின் பின்னால் வேளாள வர்க்கப் பின்னணியும் அவ்வர்க்கச் சார்பாளராக அவருக்கு இருந்த தலைமைத் தகுதியையும் எளிதில் புறந்தள்ள முடியாது. திருநாவுக்கரசரின் இவ்வேளாளப் பின்னணியே வைதீக பிராமணியத்தை எதிர்த்தும் கேள்வியெழுப்பச் செய்கிறது. இது திருநாவுக்கரசரின் எதிர்ப்பு என்பதைக் காட்டிலும் தமிழ்ப் பக்தியை மையமிட்ட வேளாள எழுச்சியின் விழைவு என்று தான் கொள்ள வேண்டும். திருநாவுக்கரசர்,

    “வேதமொதி லென் சாத்திரங் கேட்கிலென்?
    நீதிநூல் பல நித்தல் பயிற்றி லென்?
    ஓதியங்கம் ஓரானும் உணரில் என்?
    ஈசனை உள்குவார்க்கு அன்றியில்லையே”4

    என வேதம் ஓதுகிறவர்கள் ஆறங்கம் ஓதுபவர்களாகிய பிராமணரை நோக்கி கேள்வியெழுப்புகிறார். சிவபெருமானை வேதநாயகன் எனக் கூறும் திருநாவுக்கரசருக்கு வேதம் ஆறங்கம் ஓதுகிறவர்கள்மேல் ஏன் இத்தனை வெறுப்பு என்ற கேள்வி அதன் பின்னாலுள்ள பிராமண எதிர்ப்பு அரசியலை எளிதில் புரிந்து கொள்ள உதவும். மேலும்

    “கோயில் புல்லும் ஒரு கையில் கூர்ச்சமுந்
    தோலும் பூண்டு துயரமுற்றென் பயன்?
    நீலமா மயிலாடு துறையனேன் நூலும் வேண்டுமோ
    நுண்ணுணர்ந்தோர் கட்கே?”5

    கோலும் (தண்டமும்) புல்லும் கையில் கூர்ச்சமும் கொண்டிருப்பவர்கள் பிராமணர்கள். அந்தக் கோலத்தினால் என்ன பயன் என்று கேட்கிறார். அடுத்து “நூலும் (பூணூல்) வேண்டுமோ நுண்ணுனர்ந்தோர்கட்கு? என்று கேட்கிறார். இக்கேள்விகள் பிராமணர்க்கு எதிரான குரல்கள் என்பதில் ஐயமில்லை. இன்னும் ஒருபடி மேலே சென்று பிராமணரைக் கடுமையாகச் சாடும் மற்றொரு பாடல்

    “சாத்திரம் பல பேசும் சழக்கர்காள்
    கோத்திரமும் குலமுங் கொண்டென் செய்வீர்
    பாத்திரம் சிவனென்று பணிந்தீரேல்?”6

    பிராமணர்களைச் சழக்கர்கள் எனும் அளவிற்கு திருநாவுக்கரசருக்கு ஒரு வெறுப்பு இருந்திருக்கிறது. பிராமணரான திருஞானசம்பந்தரின் சமகாலத்தவராகச் சொல்லப்படுகிற திருநாவுக்கரசர் இத்தகைய வசைமொழிகளை உமிழ்ந்திருக்கிறார் என்றால் வேளாள-பிராமண எதிர்ப்புணர்வு எந்தளவு கூர்மையடைந்திருந்தது என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும். சாத்திரமும், கோத்திரமும், குலமும் பேசிக் கொண்டிருந்தவரும் திருநாவுக்கரசரின் காலத்தவரும் பக்தி இயக்கத்தில் தலைமைப்பீடத்தில் வைக்கப்பட்டுள்ள  கௌணிய கோத்திரத்து அந்தணரே திருஞானசம்பந்தர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கதாக இருக்கிறது. இதோடு மட்டுமல்லாமல் பிராமணர்கள் செய்யும் வேள்வியையும் எதிர்க்கிறார்.

    “எரிபெருக்குவர் அவ்வெரி ஈசனது
    உருவருக்கமாவது உணர்கிலார்”7
    என்றும்
    ஆலை வேள்வி அடைந்தது வேட்கிலென்
    ஏல ஈசன் என்பார்க்கன்றி இல்லையே”8

    பிராமணத் தகுதியாலும் அவர்கள் செய்யும் சடங்குகளாலும் அறியவொண்ணாதவன் ஈசன் என்றும் பக்தி நிலைப்பட்ட தூய அன்பினாலேயே சிவபரம்பொருளை அடையமுடியும் என்றும் நாவுக்கரசர் கூறும் கூற்று, பிராமண வைதீக எதிர்ப்பையும் வேளாள சைவ பக்தி இயக்கத்தின் தன்மையினையும் உயர்த்துவதாக அமைந்துள்ளது. அதோடு,

    “மண்பொருந்தி வாழ்பவர்க்கும் மாதீர்த்த வேதியர்க்கும்
    விண் பொருந்து தேவர்க்கும் வீடுபேறு ஆய் நின்றான்”9

    என்று பாடுகிறார். அந்தணர்களின் வர்ணாசிரம விதிப்படி வேளாளரான சூத்திரர்கள் நான்காம் வர்ணத்தைச் சார்ந்தவர்களாக உள்ள நிலையில் அப்பர் வேளாளர்களுக்கு முதலிடத்தை வழங்கியிருப்பது சிந்திக்கத் தக்கதாகும்.

    பிராமணீய வெறுப்பு, வேள்வி நிராகரிப்பு என்பவை வேளாளத் தமிழ் சைவத்தில் முக்கியக் கூறுகளாக இடம்பெற்றிருந்தாலும் வேதம் என்பதை அதன் பயன் மதிப்பு கருதி ஏற்றுக்கொண்டனர். வேதம் ஒரு புனிதக் குறியீடு என்ற நிலையில் மட்டுமே அதனை ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும். வேதத்திற்கு எழுதப்பட்ட பாஷ்யங்கள் கி.பி. 9 நூற்றாண்டு முதலாகவே வழங்கப்பட்டுவந்த நிலையில் வேதத்தின் உட்பொருளை அவர்கள் உணர்ந்திருக்கவில்லை. வேதம் வடமொழியில் இயற்றப்பட்டதனால் தமிழுக்கு நிகராக வடமொழியையும் புனிதமாகப் போற்றுகின்ற தன்மையை வேளாளத் தமிழ் சைவப் பாடல்களில் காணமுடிகிறது. இதேபோல பக்தி இயக்க காலத்தில் சுந்தரர் என்ற பிராமணரோடு தொடர்புடைய விறண்மிண்டர், ஏயர்கோன் கலிக்காமர் ஆகிய வேளாளர்கள் பற்றிய பெரியபுராண வரலாற்றுச் செய்தியையும் ஆராய்ந்து பார்த்தால் அக்காலத்தில் நிலவிய வேளாள-பிராமண முரண்பாடு எளிதில் விளங்கும். சுந்தரர் தில்லைவாழ் அந்தணர்கள் தம் அடியவர்க்கும் அடியேன் எனத் தொடங்கும் திருத்தொண்டத் தொகை பாட நேர்ந்த சந்தர்ப்பத்திற்குக் காரணமானவராக விறன்மிண்ட நாயனார் புராணம் புனையப்படுகிறது.

    ‘ஒரு சமயம் விறன்மிண்ட நாயனார் தலயாத்திரைப் புறப்பட்டு மலைநாட்டைக் கடந்து பல சிவத்தலங்களையும் வணங்கிப் பிறகு திருவாரூக்கு வந்து சேர்ந்தார். அந்த ஊரில் அவர் சிலகாலம் தங்கியிருந்து தியாகராசப் பெருமானை நாள்தோறும் வணங்கி வந்தார். ஒருநாள் நம்பியாரூரனான சுந்தரமூர்த்திநாயனார் அத்திருக்கோயிலில் தியாகேசரை வணங்குவதற்காக வந்தார். வந்த வன்தொண்டர் இறைவனை நோக்கிச் செல்லும்போது தேவாசிரிய மண்டபத்தில் வீற்றிருக்கும் சிவனடியார்களை முதலில் வணங்கிச் செல்லாமல் ஒருபுறமாக ஒதுங்கிச்செல்வதை விறன்மிண்ட நாயனார் கண்டார். உடனே விறண்மிண்டர் வாய்திறந்து “அடியார்களை வணங்காமல் செல்லும் வன்றொண்டர் இவ்வடியார்களின் திருக்கூட்டத்திற்குப் புறம்பு” அவனை வலிய வந்தாட் கொண்ட சிவபெருமானும் புறம்பு என்று கூறினார்.

    அதைக் கேட்ட சுந்தரர் திகைப்புற்று சிவனடியார்களிடம் விறன்மிண்டர் கொண்டிருக்கும் அன்புறுதியைக் கண்டு வியந்தார். உடனே அவர் தில்லைவாழ் அந்தணர்கள் அடியார்க்கும் அடியேன் என்று தொடங்கும் திருத்தொண்டத்தொகை எனும் திருப்பதிகத்தைப் பாடிச் சிவனடியார் திருக்கூட்டத்தைத் தொழுது வணங்கினார். அதனால் விறண்மிண்டர் மகிழ்ந்து “இனி ஆரேனும் ஆண்டவனும் அடியார் கூட்டத்தில் உள்ளவராவர் என்று கூறினார். சிவபெருமான் மகிழ்ந்து விறன்மிண்டருக்குக் கணநாதர் பதவியை வழங்கியருளினார். இவ்வாறே சுந்தரர் வரலாற்றோடு தொடர்புடைய மற்றொரு புராணம் ஏயர்கோன் கலிக்காமர் புராணமாகும். இக்கதையும் மேற்கூறிய கதை அம்சத்தோடு ஒருசில கூறுகளில் பொருந்தி வருவதை உணரமுடியும். சேக்கிழார் கூறும் கதைப்பகுதி,

    ‘பரவைநாச்சியாரிடம் சிவபெருமானை நம்பியாரூரர் தூதனுப்பிய செய்தி திருப்பெருமங்கலம் என்னும் ஊரிலுள்ள ஏயர்கோன் கலிக்காம நாயனார் எனும் வேளாளருக்கு எட்டியது.”கேவலம் பெண்ணொருத்தியை முன்னிட்டு ஆண்டவனையா அடியான் தூது அனுப்புவது, அவ்வாறு சிவபெருமானையே தூதாக ஏவிய நம்பியாரூரனும் ஒரு திருத்தொண்டனா? என கலிக்காம நாயனார் கோபம் கொண்டார். இதையறிந்ததும் நம்பியாரூரான சுந்தரர் தம்பிரானான சிவபெருமானிடமே சென்று முறையிட்டார். சிறந்த சிவனடியார்களான அவர்கள் இருவரையும் ஒருமைப்படுத்த சிவபெருமான் திருவுள்ளம் கொண்டு கலிக்காமருக்குக் கடும் சூலை நோயை உண்டாக்கி ‘உன்னை வாட்டும் இந்த நோய் நம்பியாரூரன் தீர்த்தாலன்றி வேறு எந்த வழியாலும் தீராது என்று கூறினார். ஏயர்கோன் கலிக்காமரோ மனங்குமுறி “அந்த வன்தொண்டன் வந்து என் நோயைத் தீர்ப்பதைக் காட்டிலும் என் உயிரை வாட்டி வதைக்கும் அந்நோயை என் வயிற்றோடு கிழித்தெறிந்து நான் சாவேன்! என்று கூறி அவ்வாறே தன் உடைவாளால் தம் வயிற்றைக் கிழித்துக் கொண்டு உயிர் நீத்தார்.

    “எம்பிரான் எந்தைதந்தை தந்தைஎங் கூட்டமெலாம்
    தம்பிரான் நீரே என்று வழிவழி சார்ந்துவாழும்
    இம்பரின் மிக்கவாழ்க்கை என்னைநின் றீருஞ் சூலை
    வம்பென ஆண்டு கொண்டான் ஒருவனே தீர்ப்பான்வந்து
    மற்றவன் தீர்க்கில் தீரா தொழிந்தெனை வருத்தல் நன்றால்.”10

    இவ்வாறு வேளாளரான ஏயர்கோன் கலிக்காமர் வரலாறு சிவபரம்பொருளை வழிவழி சார்ந்து ஒழுகும் தொன்றுதொட்டு வந்த மரபிலிருந்து வந்தவர் என்பதை உணர்த்தி பிராமண வெறுப்பை வெளிப்படுத்தும் பாங்கில் அமைந்துள்ளது. இவ்விரு கதைகளையும் ஒருசேர நோக்கும்பொழுது இவை வேளாள-பிராமணர்களுக்கிடையே நிலவிய ஆன்மீக அதிகாரப் போட்டியின் அடிப்படையில் ஏற்பட்ட முரண்பாடாகக் கருதமுடிகிறது. “பக்தி இயக்கம் என்பது வேளாளக் குடியானவர்கள் – பிராமணர்கள் ஆகியோர்க்கிடையே ஏற்பட்ட அதிகாரப் போராட்டமேயாகும்”11 என்ற பார்டன் ஸ்டெயினின் கூற்று இங்கு சிந்திக்கத்தக்கது. பார்ப்பன அதிகாரத்தோடு மோதியும்,முரணியும் செயலாற்றிய வேளாள சமூகத்தின் கலகக் குரலாகச் சேக்கிழார் கூறும் மேற்கண்ட வரலாற்றை வாசிக்க இயலும். திருஞானசம்பந்தர் காலத்தில் திருநாவுக்கரசரிடமிருந்து ஒரு மனத்தாங்கல் என்ற அளவில் வெளிப்பட்ட இம்முரண்பாடு சுந்தரர் காலத்தில் பெரும்கலகக் குரலாக வெடித்துள்ளது. இவ்வெதிர்ப்புணர்வின் வரலாற்றுத் தொடர்ச்சியாகவே பின்னாளில் சித்தர்களின் குரலாகப் பிராமண மேலாண்மைக்கு எதிரான பிராமணரல்லாதோர் கலக மரபாக உருக்கொண்டிருக்கக் கூடும்.

    நூற்பட்டியல்

    1.அ. மார்க்ஸ். களப்பிரர் ஆட்சியில் தமிழகம், பிற்சேர்க்கை-1,அறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி    அவர்களின் களப்பிரர் ஆட்சியில்  தமிழகம் ஒரு பார்வை. பக்.155-156

    1. புறநாநூறு பா.335
    2. சி. அறிவுறுவோன். முற்காலத்து சைவமும், தற்காலத்து தாண்டவபுரமும்.ப.34
    3. திருநாவுக்கரசர் தேவாரம், பாவநாசத் திருக்குறுந்தொகை.5:4
    4. திருமயிலாடுதுறை திருக்குறுந்தொகை..8
    5. திருமாற்பேறு-திருக்குறுந்தொகை..3
    6. திருநாவுக்கரசர் தேவாரம்,4:12:5
    7. திருக்குறுந்தொகை.100.8.
    8. பாவநாசத்திருக்குநற்தொகை.99.5.
    9. சேக்கிழார்,பெரியபுராணம்.பா.3546
    10. தி.சு.நடராசன்,மு.நூல்.ப.172.

    *****

    கட்டுரையாளர் – உதவிப்பேராசிரியர்
    கற்பகம் உயர்கல்விக் கலைக்கழகம்
    கோயம்புத்தூர்

     

    Share
  • தொல்தமிழர் ஈகையின் மகத்துவம்

    -முனைவர் ம. தமிழ்வாணன்

    தொல்தமிழர்கள் இயற்கையோடு இணைந்த வாழ்க்கையை வாழ்ந்தனர். அதனைத் தாங்கள் படைத்த இலக்கியங்களில் பதிவு செய்து வந்துள்ளனர். செவ்விலக்கியங்கள் அக்கால மக்களின் இயல்பான வாழ்க்கையை எடுத்துக் காட்டுகிறது. மனித சமுதாயத்தில் அன்றாட வாழ்வில் நடைமுறைக்கு ஏற்ற வகையில் நலம் விளையக்கூடிய செயல் எதைச் செய்தாலும் அது அறச்செயலாகும். அறம் என்றால் தொண்டு, தூய்மை என்பது பொருளாகும். இத்தொண்டை எக்காரணம் கொண்டும் சுயநலம் கருதாமல், பொதுநலம் கருதியே செய்ய வேண்டும். என்பதை வலியுறுத்தும் விதமாக, ‘அறம் செய விரும்பு’ என்று ஔவையாரும், ‘அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க’ என்று வள்ளுவரும் கூறியுள்ளனர். தொல்தமிழர் அறத்தில் சிறந்தது ஈகையே என்பர். செவ்விலக்கியத்தை ஆய்வு செய்கின்றபோது அவர்களது ஈகைத்தன்மையை ஆங்காங்கே காணலாம். இத்தகைய தொல்தமிழரின் ஈகையின் மகத்துவத்தைச் சுருக்கமாகக் கீழே காண்போம்.

    ஈகை விளக்கம்

    ஈகை என்றால் கொடுத்தல்; இல்லாதவர்க்குக் கொடுத்தல். இரப்போர்க்கு இல்லையென்னாது கொடுப்பது சிறந்த அறமாகும். ஈகை என்பது பொருள் உடையவர்கள், இல்லாதவர்களுக்கு வழங்குவது. இது எவ்வித எதிர்பார்ப்பும், திரும்பப் பெறும் தன்மையும் அற்றது. உலகத்தாற் போற்றும் அறங்களில் முதன்மை இடம் பெறுவது, அறங்களில் சிறந்தது, மனித நேயத்தின் அடிப்படையாகத் திகழ்வது ஈகைப் பண்பாகும்.

    செல்வத்துப் பயனே ஈதல்
    துய்ப்பேம் எனினே தப்புந பலவே
    (புறம்.189:7-8) என்கிறார் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்.

    பிறருக்குக் கொடுத்துத் தானும் உண்டு வாழ்வதே வாழ்க்கையாகும். ஈகை குணம் தனிமனிதச் சிந்தனையில் தோன்றிச் சமுதாயப் பயனுடையதாக அமைகின்றது. வறுமையில் வாடும் மக்களுக்குத் தம்மால் இயன்ற உதவிகளைச் செய்யும் போது அச்செயல் உயர்ந்ததாகக் கருதப்படுகிறது. ஆதலால் தான் உலக இன்பங்களில் ஈகை இன்பம் உயர்ந்ததாக உலகத்தார் போற்றி வருகின்றனர்.  வறுமையில் வாடும் புலவரான பெருஞ்சித்திரனார் தான் பெற்றுவந்த பொருளைத் தன் மனைவியிடம் கொடுத்து, அதனைத் தம் சுற்றத்தாருக்கும் பகிர்ந்தளிக்கச் சொல்கிறார். இது தான் ஈகையின் மாண்பாகும்.

    இன்னோர்க்கு என்னாது என்னோடும் சூழாது,
    வல்லாங்கு வாழ்தும் என்னாது நீயும்
    எல்லோர்க்கும் கொடுமதி மனைகிழ வோயே! (புறம்.163.5-7)என்ற பாடலின் வழி விளக்குகிறார் அவர்.

    சங்க காலத்திலும் சிறுகுடி பண்ணன் போன்ற வண்மையாளரை புலவர் பசிப்பிணி மருத்துவன் என்று கூறிப் புகழ்ந்தனர். அக்காலத்தில் பகிர்ந்துண்ணல், கொடை, பரிசில், உணவிடல் என்ற பலநிலைகளில் சமூக வழக்கிலிருந்த ஈகை, குறள் காலத்தில் வறியவனின் பசி தீர்த்தல் என்ற பொருளில் இறுக்கம் பெற்றது என்பர். விருந்தோம்பல் என்பதும் அன்று ஈகையைச் சார்ந்ததாகவே கருதப்பட்டது. ஈகை என்பது தனி உயிர்த் துன்பம் நீக்கும் சிறப்புக் கொடையாகக் கருதப்படுகிறது.

    ஈகை என்று வள்ளுவர் சிறப்பித்து உரைப்பது வறியவர்க்குப் பசிபோக்கும் ஈகைக்(வயிற்றீகை) குணமாகும். இத்தகைய பண்பு இயல்பான நிலையில் உண்டாவதாகும். தன்னிடம் இல்லை என்ற துயரை எடுத்துரைக்கும் முன்பே கொடுக்கப்படுவது. அது எதையும் எதிர்பார்த்துச் செய்வதில்லை. ‘இம்மைச் செய்தது மறுமைக்காம்’ என்று புதிதாய் அன்று கூறப்பட்ட வினைக் கொள்கையைப் புலவர் மரபு ஏற்றதில்லை. உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடலைக் காண்போம்.

    இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும்
    அற விலை வணிகன் ஆஅய் அல்லன்
    பிறரும் சான்றோர் சென்ற நெறி என
    ஆங்குப் பட்டன்று அவன் கைவண்மையே (புறம். 134)

    இப்பாடலில், ஆய் அறம் செய்யும் வணிகம் அல்லன். தன் பணத்தை இந்த உலகில் முதலீடு செய்து மறு உலகில் அதன் ஊதியத்தைப் பெறுவதில்லை. சான்றோர்களின் மரபார்ந்த வழியில் அவன் வாரி வழங்குகின்றான் என்கிறார் புலவர். அறம் அறத்திற்காகச் செய்யப்படவேண்டும். ஈகை ஈர உள்ளத்துடன் ஈகைக்காகச் செய்யப்படுவதாகும்.

    வறியவர்க்குக் கொடுப்பதில் ஒரு மகிழ்ச்சியான இன்பம் இருக்கின்றது; இதை ஏன் ஈயாதவன் உணர்வதில்லை என வியக்கிறார் வள்ளுவர். ஈயாமல் செல்வத்தைச் சேர்த்து வைப்பவர் இகழப்படுகிறார். நிரப்பிய உணவைத் தனித்து உண்பது, இரப்பதைவிட பார்வைக்கு அருவருப்பானது என்று கூறப்படுகிறது. சாதலை எவரும் விரும்புவதில்லை; ஆனால் கண்முன் பசித்தவன் இருக்க அவன் துயர் தீர்க்க முடியாத நிலையில் சாதலை ஒருவன் விரும்பலாம் எனவும் கூறப்படுகிறது.

    ஈகைக்குரிய இலக்கணம்

    கொடைப் பண்பிலிருந்து முற்றிலும் வேறுபட்ட பண்புடையது ஈகையாகும். திருவள்ளுவர் ஈகைக்கு இலக்கணம் வகுத்துள்ளமை சிறப்பாகப் பேசப்படுகிறது.

    வறியார்க்குஒன்று ஈவதே ஈகை மற்றுஎல்லாம்
    குறியெதிர்ப்பை நீரது உடைத்து. (குறள்.221)

    என்ற குறளின் பதிவில் திரும்ப உதவி செய்ய முடியாத ஏழைகளுக்குக் கொடுப்பதே ஈகையாகும்; பிற கொடைகள் யாவும் பயன்எதிர்பார்த்துக் கொடுக்கும் தன்மையை உடையது என்கிறார். இதிலிருந்து ஈகை என்பது வறியவர்களுக்குப் பதில் உதவி எதிர்பாராது கொடுக்கும் சிறு உதவியே ஈகை எனக் கொள்ளலாம். வறியோர் பசி தீர்த்தலே ஒருவன் தான் செல்வத்தைச் சேர்த்து வைக்கும் இடமென்று சங்ககால மக்கள் எண்ணி வாழ்ந்து வந்துள்ளனர்.

    ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
    ஊதியம் இல்லை உயிர்க்கு. (குறள்.231)

    வறியவர்க்கு ஈதல் வேண்டும். அதனால் புகழ் உண்டாக வாழவேண்டும். அப்புகழ் அல்லாமல் உயிர்க்கு ஊதியமானது வேறொன்றும் இல்லை என்று வள்ளுவர் எடுத்துரைக்கிறார்.

    ஈகைக் குணம் உடையவர், ஊரின் நடுவே பலரும் அணுகிப் பயன் பெற முடியும் மரம் போன்று பலருக்கும் பயன் தருபவர்; ஊர் நடுவே இருப்பதால் பெண்பனையைப் போன்றவர். ஈயாதவர் சுடுகாட்டில் உள்ள ஆண்பனையைப் போன்று பயன் தராதவர். மேலும் அணுக இயலாத இடம் என்று பனை மரங்களின் இயல்புகளை மக்களின் பண்புக்கு உவமையாக்கும் நயம் சிறப்பிற்குரியதாகும்.

    நடுவூருள் வேதிகை சுற்றுக் கோள் புக்க
    படுபனை யன்னர் பலர்நச்ச வாழ்வார்
    குடிகொழுத்தக் கண்ணுங் கொடுத்துண்ணா மாக்கள்
    இடுகாட்டுள் ஏற்றைப் பனை.            (நாலடி.96)

    முரசின் ஒலி ஒரு குறிப்பிட்ட தூர அளவுக்குக் கேட்க இயலும். இடியின் ஒலி இன்னும் அதிக தூரம் கேட்கும். சான்றோர் ஒருவர் யாசித்தவர்க்கு ஒன்றைக் கொடுத்தார் என்ற சொல் மூன்று உலகங்களிலும் கேட்கப்படும் சிறப்பை உடையது என்று ஈகையின் சிறப்பைச் சுவைபடச் சொல்கிறது நாலடியார்.

    கடிப்பிடு கண்முரசம் காதத்தோர் கேட்பர்
    இடித்து முழங்கியதோர் யோசனையோர் கேட்பர்
    அடுக்கிய மூவுலகுங் கேட்குமே சான்றோர்
    கொடுத்தார் எனப்படுஞ் சொல் (நாலடி.100)

    ஒரு சிறிய அரிசியின் அளவாவது – நாள்தோறும் உங்களால் இயன்ற அளவு பிறருக்குக் கொடுத்துப் பின் உண்ணுங்கள்! ஏனென்றால், ஆழமான கடல் சூழ்ந்த இவ்வுலகில் சமைத்தல் இல்லாத அடுப்பினையுடைய வறியவர்களை, முற்பிறப்பில் பிறருக்கு ஒன்றும் உதவாது இருந்தவர்கள் என்று சான்றோர் உரைப்பர் என்பதைக் கீழ்க்குறிப்பிட்ட நாலடியார் பாடல் விளக்குகிறது.

    இம்மி யரிசித் துணையானும் வைகலும்
    நும்மில் இயைவ கொடுத்துண்மின் – உம்மைக்
    கொடாஅ தவரென்பர் குண்டுநீர் வையத்து
    அடாஅ அடுப்பி னவர். (நாலடி.94)

    வறியவர்க்கு உணவளித்தல்

    பூவுலகில் தானத்திலே சிறந்த தானம் அன்னதானம்; அது மட்டும்தான் போதும் என்று சொல்லக் கூடியது மற்ற எது கொடுத்தாலும் போதும் என்று மனம் வராது அதனால்தான் அதை சிறந்த தானம் என்கிறோம். அன்னதானத்தை வள்ளுவரும் போற்றுகிறார். ஈகை என்ற  இருபத்தி மூன்றாம் அதிகாரம் பொதுவாக ஈகையைப் பற்றிச் சொன்னாலும் அதில் நான்கு குறட்பாக்கள் அன்னதானச்  சிறப்பையே எடுத்துரைக்கின்றன.

    ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
    மாற்றுவார் ஆற்றலின் பின் (குறள்.225)

    தவ வலிமை உடையவரின் வலிமை பசியைப் பொறுத்துக் கொள்ளலாகும். அதுவும் அப்பசியை உணவுக் கொடுத்து மாற்றுகின்றவரின் ஆற்றலுக்குப் பிற்பட்டதாகும்.

    அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதுஒருவன்
    பெற்றான் பொருள்வைப் புழி. (குறள்.226)

    வறியவரின் கடும்பசியைத் தீர்க்கவேண்டும்; அதுவே பொருள்பெற்ற ஒருவன் அப்பொருளைத் தனக்குப் பிற்காலத்தில் உதவுமாறு சேர்த்து வைக்கும் இடமாகும்.

    பாத்தூண் மரீஇ யவனைப் பசிஎன்னும்
    தீப்பிணி தீண்டல் அரிது. (குறள்.227)

    தான்பெற்ற உணவைப் பலரோடும் பகுத்து உண்ணும் பழக்கம் உடையவனைப் பசி என்று கூறப்படும் தீயநோய் அணுகுதல் இல்லை.

    இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
    தாமே தமியர் உணல். (குறள்.229)

    பொருளின் குறைபாட்டை நிரப்புவதற்காக உள்ளதைப் பிறர்க்கு ஈயாமல் தாமே தமியராய் உண்பது வறுமையால் இரப்பதைவிடத் துன்பமானது.

    தேடிய உணவைத் தாமே தனித்து உண்ணும் தன்மையானது, பிச்சையெடுத்தலை விடவும் தீயது. சங்க காலத்தில் ஒரு  சேரமன்னன், உதியன் சேரலாதன் என்பவன். மகாபாரதப் போரில் பங்குகொண்ட இருதரப்புப் படை வீரர்களுக்கும் உணவளித்ததாகச் சங்கச் செய்தி சொல்கிறது. (சங்க காலம், மகாபாரதப்  போர்க்காலத்தை ஒட்டிய  தொன்மை வாய்ந்தது என்று சில ஆராய்ச்சியாளர்கள் ஊகிக்கிறார்கள்.) அதனாலேயே அவன் ‘பெருஞ்சோற்று உதியன்  சேரலாதன்’ என வழங்கப்பட்டான் என்று நம்பப்படுகிறது.

    பெருஞ்சோறு படைத்த அவனது மாபெரும் அன்னதானம், இலக்கியப் புகழ் பெற்றுவிட்டது. வானவரம்பன் என்றும்  அவனுக்கு ஒரு பட்டம் உண்டு. வானவரம்பன் என்கிற வகையில் வானத்தையே எல்லையாகக் கொண்டு பேரரசாட்சி  கண்டவன் என்பது இந்தப் பட்டத்திற்கான பொருளாகும்.

    ஈதலின் தனிச்சிறப்பு

    ஈதலின் அவசியத்தை உணர்த்துகின்ற வகையில் ஐந்து குறள்கள் விளக்கம் தருகின்றன.

    நல்ஆறு எனினும் கொளல்தீது மேலுலகம்
    இல்எனினும் ஈதலே நன்று (குறள்.222)

    பிறரிடமிருந்து பொருள்பெற்றுக் கொள்ளுதல் நல்ல நெறி என்றாலும் கொள்ளல் தீமையானது. மேலுலகம் இல்லையென்றாலும் பிறர்க்குக் கொடுப்பதே நல்லது.

    இலன்என்னும் எவ்வம் உரையாமை ஈதல்
    குலன்உடையான் கண்ணே உள (குறள்.223)

    `யான் வறியவன்’ என்னும் துன்பச் சொல்லை ஒருவன் உரைப்பதற்கு முன் அவனுக்கு கொடுக்கும் தன்மை, நல்ல குடிப்பிறப்பு உடையவனிடம் உண்டு.

    இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
    இன்முகம் காணும் அளவு. (குறள்.224)

    பொருள் வேண்டும் என்று இரந்தவரின் மகிழ்ந்த முகத்தைக் காணும் வரைக்கும் (இரத்தலைப் போலவே) இரந்து கேட்கப்படுதலும் துன்பமானது.

    சாதலின் இன்னாது இல்லை இனிதுஅதூஉம்
    ஈதல் இயையாக் கடை. (குறள்.230)

    சாவதைவிடத் துன்பமானது வேறொன்றும் இல்லை. ஆனால் வறியவர்க்கு ஒரு பொருள் கொடுக்க முடியாத நிலை வந்தபோது அச் சாதலும் இனியதே ஆகும்.

    ஈத்துஉவக்கும் இன்பம் அறியார்கொல் தாம்உடைமை
    வைத்துஇழக்கும் வன்க ணவர்? (குறள்.228)

    தாம் சேர்த்துள்ள பொருளைப் பிறர்க்குக் கொடுக்காமல் வைத்திருந்து பின் இழந்துவிடும் வன்கண்மை உடையவர் பிறர்க்குக் கொடுத்து மகிழும் மகிழ்ச்சியை அறியாரோ? என்று ஈகையின் சிறப்பைக் குறள் மெய்ப்பிக்கின்றது.

    இல்லறவியலின் புகழ் அதிகாரத்திலும் ஈதல் அவசியத்தை உணர்த்திய வள்ளுவர் மூன்று குறள்களில் தனது மிகச் சிறப்பான பதிவினை இட்டுள்ளார். அத்தகைய குறளையும் விளக்கத்தையும் கீழே காணலாம்.

    உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்குஒன்று
    ஈவார்மேல் நிற்கும் புகழ். (குறள்.232.)

    புகழ்ந்து சொல்கின்றவர் சொல்பவை எல்லாம் வறுமையால் இரப்பவர்க்கு ஒரு பொருள் கொடுத்து உதவுகின்றவரின் மேல் நிற்கின்ற புகழேயாகும்.

    ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்
    பொன்றாது நிற்பதுஒன்று இல்.  (குறள்.233)

    உயர்ந்த புகழ் அல்லாமல் உலகத்தில் ஒப்பற்ற ஒரு பொருளாக அழியாமல் நிலைநிற்க வல்லது வேறொன்றும் இல்லை.

    நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்

    போற்றாது புத்தேள் உலகு. (குறள்.234.)

    நிலவுலகின் எல்லையில் நெடுங்காலம் நிற்கவல்ல புகழைச் செய்தால், வானுலகம் (அவ்வாறு புகழ்செய்தாரைப் போற்றுமே அல்லாமல்) தேவரைப் போற்றாது.

    ஈகைக்காகவே செல்வம் எனச் செல்வம் நியாயப்படுத்தப்படுகிறது. உபரி உணவும் சொத்தும் பொருளும் அறத்தோடு பிணைக்கப்பட்டு விட்டதால் குற்றமற்றதாகி விடுகின்றன.

    ஈதலும் துய்த்தலும் இல்லோர்க்கு இல் (குறுந்.63:1)

    என்றும் பொருளைத் தேடுவதே பிறருக்குக் கொடுக்கத்தான் என்னும் பொருளில்,

    பிறர்க்கு என முயலும் பேர் அருள் நெஞ்சமொடு
    காமர் பொருட் பிணி போகிய
    நாம் வெங் காதலர் சென்ற ஆறே. (நற்.186:8-10)

    என்றும் செவ்விலக்கியங்கள் அறத்தின் பேரால் ஈகையின் சிறப்பை விளக்குகின்றன.

    மனித குலத்தின் சிறப்புகளில் ஈகையும் ஒன்று. அது பிறர்படும் துன்பத்தைக் கண்டு இரங்கலும், அத்துன்பத்தைப் போக்க முயல்வதும் ஆகும். அந்த வகையில் எழுந்த செயலே ஈகையாக மலர்ந்துள்ளது. வாழ முடியாதவர்களையும், வாழத் தெரியாதவர்களையும், வாழ்வை இழந்தவர்களையும் ஏற்றுக் காப்பது சமுதாய நலத்தைக் காக்கும் நற்செயலாகும். எல்லோரும் ஈகையை மேற்கொள்ள வேண்டும். அவரவர் தங்கள் உழைப்பின் பலனில் ஒரு பகுதியை ஒதுக்கி வைத்து, மற்றவர்களுக்குக் கொடுத்து உதவ வேண்டும்.(தென்கச்சி கோ.சுவாமிநாதன், வானொலியில் இன்று ஒரு தகவல், பாகம் – 8, பக். 106-108) அவ்வாறு உதவும் போது மனமும் எளிதாகும், ஏற்பவரின் வாழ்வும் வளமாகும்.

    மேற்கண்ட செய்திகளால் ஈகை என்னும் வறியவர்க்கு உதவும் அரும்பெரும் பண்பு தொல்தமிழர்களிடையே அக்காலத்திலேயே இருந்தமை வியப்பிற்குரியதாக உள்ளது. இத்தகைய ஈகைப் பண்பால் அம்மக்களின் பழக்க வழக்கப் பண்பாட்டுச் சிறப்பு வெளிப்பட்டு நிற்பதை உணரமுடிகிறது. மேலும் இடைக்காலத்திலும் பிற்காலத்திலும் தமிழ்மன்னர்கள் வறியவர்க்கு உணவளிக்கும் அன்னசாலைகளை நிறுவி பசியாற்றிய செய்திகள் காணக்கிடைக்கின்றன. தற்காலத்திலும் கிராமங்களில் கோயில் திருவிழா, சல்லிக்கட்டு, விளையாட்டுப்போட்டி போன்ற பொதுநிகழ்ச்சிக்கு வருகின்ற யாவர்க்கும் உணவு அளித்து இன்புறுவதைக் காணமுடியும். எனவே நாமும் வறியவர்க்கு உதவி நற்பேறுகளைப் பெறுவோம்.

    கருவிநூற்கள்

    1. திருக்குறள், மணக்குடவர் உரை, கோ. வடிவேலுசெட்டியார் பதிப்பு 1925
    2. திருக்குறள், பரிமேலழகர் உரை, ஏ.ரங்கசாமிமுதலியார் & சன்ஸ் பதிப்பு, மதராஸ் 1931
    3. திருக்குறளுக்கு மிக எளிய உரை, சாமி சிதம்பரனார் உரை, திருவள்ளுவர் வரைகலையகம், சென்னை 2001
    4. திருக்குறள், வ.உ.சிதம்பரனார் உரை, இரா.குமரவேலன் பதிப்பு, பாரிநிலையம் சென்னை 2008
    5. தமிழ்ச் செவ்வியல் நூல்கள் மூலம் முழுவதும், சுப்பிரமணியன்.ச.வே.(ப.ஆ.), மணிவாசகர் பதிப்பகம், பாரிமுனை சென்னை. 2008

    *****
    கட்டுரையாளர் – முதுநிலை ஆய்வு வல்லுநர்
    செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்
    தரமணி, சென்னை – 113

     

    Share
  • ’ஆடிப்பாவை போல’  நாவலில் திணையின் செம்மாந்த நிலை

    -சு.இராமர்

    உலகமயச் சூழல் மனித நெருக்கடிக்கு வித்திட்டிருக்கிறது. சுயசார்பான உண்மை வெளிகள் மூர்க்கமடைந்திருக்கின்றன. நுகர்வுக் கலாசாரப் பின்புலம் மனிதர்களை அவசர கதியில் இயங்க வைத்துக் கொண்டிருக்கிறது. தீவிர மனப்பான்மை கொண்ட தேசிய அடையாள உருவாக்கம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இன்றைய சூழல் இதுவரை எதிர்கொள்ளாத வகையில் இடர்பாட்டுக்குரியதாகி இருக்கிறது. மனித உணர்வுகள் மேலெழும்பி, ததும்பி வழியும் நிலைகள் இன்று இயல்பானதாகி இருக்கிறது. அக உணர்வுகள் எதிர்கொள்ளத் தகாதனவாக மாறியிருக்கின்றன. ஆண், பெண் உறவுகள் பற்றிய புரிதலைக் காலங்கடந்து இன்றும் பேசு பொருளாக்கி வருகின்றமையைக் காணமுடிகின்றது. பன்மைச் சூழலைப் பற்றிய சிந்தனை இந்திய அளவில் இருந்ததை ஒன்றாக்கிவிடத் துடிக்கும் அபாயகரமான சூழலில் தமிழ்ச் சிந்தனை அதற்கு வழிகாட்டியாக இருப்பதைச் சுட்டும் வகையில் அமைந்திருப்பதைக் காணலாம்.

    தொல்காப்பியம் பாயிரத்தில் வடவேங்கம் தென்குமரி என்று குறிப்பிட்டு தமிழ் நிலத்தைப் பொதுவான நிலமாகக் கூறவில்லை. மொழியால் ஒன்றிணைந்ததே அன்றி அதன் உட்பிரிவுகள் பலவாக இருப்பதைத் திணைப் பகுப்பில் சுட்டுகிறது. நானிலங்கள் என்று கூறப்பட்டாலும் ஐந்திணைகளே மரபாகக் கொள்ளப்படுகின்றன. திணைகளைக் கண்டுணர்தல் என்பது இன்று சுற்றுலாத் தலங்களைக் கண்டுணர்வதாக மாறிப் போயிருக்கிறது. வயல்வெளிகள் அடைந்திருக்கும் மாற்றம் அச்சம் கொள்ளும் வகையில் நம் வாழ்வை மாற்றி வைத்திருக்கிறது. மருத நிலத்தினை அடியொற்றியதாகப் பிற திணைகள் அனைத்தும் கட்டுப்பட்டிருக்கின்றன. நீர் நிலைகள் காணாமல்போன சூழலை எதிர்கொள்வதற்கு ஒவ்வொரு வருடமும் மழைக்காலத்தில் அச்சத்தை இடுப்பில் சுமந்து கொண்டிருப்பது போலான சூழல் நிலவுகிறது. பின்காலனிய மனநிலையானது திணைவாழ்வை மீட்டெடுப்பதாக இருக்கிறது. இயற்கை வேளாண்மைக்கு அழைக்கும் போக்கை அவ்வாறுதான் புரிந்து கொள்ள முடியும். காலனியப்படுத்தப்பட்ட பகுதிகள் அனைத்தும் பண்பாட்டு தாக்கத்திற்கு ஆளாவது இயல்பாகும். ஆனால் தமிழ் மரபின் தொடர்ச்சி ஒவ்வொருவருக்குள்ளும் புதைந்து கிடந்து மேலெழும்பி வருவதை இலக்கியங்கள் வழி அறிந்து கொள்ள முடியும். திணைசார்ந்த உணர்வென்பது இயல்பூக்கமாக வெளிப்படும். பசி, தூக்கம், காதல் என்பது போல இயல்பூக்க நடவடிக்கையாகத்தான் திணை சார்ந்த உணர்வுகள் வெளிப்படும்.

    திணை என்ற சொல் புதிய தொழில்நுட்பச் சமூகத்தில் அனைத்து உயிர்ம சூழலும் மாறியிருக்கும் நிலையில் பெரிதும் அர்த்தப்பாடுடையதாக மாறியிருக்கிறது. பண்டைய தமிழ்ச் சமூகத்தின் மனம் தன் தொடர்ச்சியை எச்சூழலிலும் மறைத்துக் கொள்வதில்லை. அது பண்டைய படைப்புகளிலும் சூழல் சார்ந்து வெளிப்படுவதாக இருந்தது. தொழில்நுட்பச் சமூகத்திலும் துலக்கமாக வெளிப்படுகிறது. தொழில்நுட்பச் சமூகமென்பது முற்றிலும் நகர்மயமான சூழலாகும். திணையுணர்வின் வெளிப்பாட்டினை அகத்திணை சார்ந்தோ, புறத்திணை சார்ந்தோ படைப்புமனம் வெளிப்படுத்தத்தான் செய்கிறது. திணை ஒரு செம்மாந்த செம்பொருளாகத் தமிழில் காணப்படுகிறது. இன்றைய சூழலும் அகத்திணை, புறத்திணைக் கூறுகளைக் கொண்ட வாழ்வியலை உடையவர்களாகத் தமிழர்கள் காணப்படுகிறார்கள். நிலைபேறுடைய ஒன்றாக திணை வாழ்வு காணப்படுகிறது. அதற்குச் சான்றாகவே ஆடிப்பாவை நாவலின் காட்சியமைப்புகள் அமைகின்றன.

    திணை என்ற சொல்லுக்கு, குடி, ஒழுக்கம், குடும்பம் போன்ற பொருள்கள் தரப்படுகின்றன. ஒழுகலாறுகள் என்பதாகவே பெரிதும் அர்த்தப்படுகின்றது. சூழலையும், வெளிகளையும் கூடத் திணை என்ற சொல் குறித்து நிற்கிறது. “திணை என்ற சொல்லின் மூலப் பொருளான குடும்பம், குடியிருப்பு ஆகியவை முக்கியத்துவம் பெறுகின்றன. பல நிலப்பகுதிகளின் நடத்தை முறைகளை விளக்கும் சொல்லாகப் பரிணமித்த வரலாற்றை அவை குறிப்பிடுகின்றன”1 என்று சிவத்தம்பி நிலப்பகுதிகளின் நடத்தைமுறைகளை திணை என்ற சொல் குறிப்பதாகக் கூறுகிறார். திணைசார்ந்த வாழ்வியலைத் தமிழர்கள் காலந்தோறும் பெறுவதானது. உள்ளத்தளவில் மாறுபாடடையாத வாழ்வியலைக் கொண்டிருப்பதைக் காட்டுகிறது. ஆயினும் இன்றைய சூழல் பண்டைய தமிழ்ச் சூழலுக்கு முற்றிலும் பொருத்தமில்லாத் தன்மையுடன் விளங்குகிறது.

    நகர்த்திணைப் பெருக்கமும், தொழில்நுட்பச் சமூகமும் மனிதர்களின் இயந்தர வாழ்க்கையும், அகப் புற மன உணர்வுகளில் ஏற்படும் சிற்சில மாற்றங்களுமெனக் காணப்படுகிறது. புறவெளிகள் கலைந்து போயிருக்கின்றன. ஆயினும் திணை சார்ந்த பார்வை காலகட்டம் சார்ந்ததாக அமையாது. சங்கக் கவிதை மட்டுமே திணைக் கவிதை கிடையாது. அனைத்து காலப் படைப்புகளிலும் திணையோர்மை வெளிப்படவே செய்யும். நவீன இலக்கியங்களும் அதற்கு விதிவிலக்கல்ல. “திணைக் கண்ணோட்டமென்பது, நிலம், காலம் மற்றும் சமூகச் சூழல்கள் மனித வாழ்வை எவ்வாறு மாற்றுகிறது அல்லது அச்சூழலுக்குள் மனிதன் தன் வாழ்விருப்பை எவ்வாறு கண்டடைகிறான் என்று கொண்டால் தமிழ் இலக்கியப் பரப்பு நெடுகிலும் இதனைக் காண இயலும்”2 என்று இன்றைய சூழலுக்கும் திணைக்கோட்பாடு பொருத்தப்பாடுடையதை வெளிப்படுத்துகிறார் க.ஜவகர். நவீனச் சூழலுக்குப் பொருத்திப் பார்க்க வேண்டிய தேவையை ஐயப்பப் பணிக்கர் போன்ற ஆய்வாளர்கள் முன்னெடுத்தனர். தனிநாயகம் அடிகள் போன்றோர் தமிழின் கவிதை மரபை நிலம் சார்ந்தவொன்றாகப் பரிணமிக்க வைத்தனர். “ஒவ்வொரு திணையும் இடம், கால நிலைகளின் இணைவே.

    தொல்காப்பியர் தம் காலத் தென்னக நிலவியற்கையின் அடிப்படையில் ஏழு அகத்திணைகளையும் ஏழு புறத்திணைகளையும் வகை செய்துள்ளார்”3 என்று குறிப்பிடும் ஐயப்பப் பணிக்கரின் கூற்றானது. அதற்கும் மேலாகவும் திணைகள் பெருகலாம். இடத்திற்கும் சூழலுக்கும் இயைந்தவாறு அமையலாம் என்று கூறுகிறார். இன்றைய சூழல் மருத நிலப் பெருக்கமே காணப்படும் சூழலில் ஐந்திணைகளின் உரிப்பொருள்களும் பெரிதும் மருத நிலத்துப் பண்புகளாக வெளிப்படுவதை நாவல்களில் காணலாம். அந்த அடிப்படையிலேயே நகர்களில் காதல் வாழ்வும், ஊடலும், கூடலும், பிரிதலும், இரங்கலும், காத்திருத்தலும், திருமண உறவில் இணைதலுமாக அகம் என்னும் பகுதியின் நாவல் பகுதிகள் ஆடிப்பாவை நாவலில் காணப்படுகின்றன.

    திணையவியல் என்பது இன்றைக்கும் பொருந்துவதாகவே உள்ளது என்பதையே தமிழவனின் ’ஆடிப்பாவை போல’ நாவல் உணர்த்துகின்றது. நாவல் இரண்டு விதமாய்ப் பகுக்கப்பட்டிருக்கிறது. ஒன்று அகம் பிறிதொன்று புறம். இவ்வாறு பிரித்து எழுதுவதற்கானத் தேவை அவருள் ஒளிந்து கொண்டிருக்கும் தமிழ் மரபினை மேலெழுந்து வரச் செய்த திணையோர்மைதான் என்றால் அது மிகையில்லை. காதலைப் பேசாத கலைகளே இல்லை என்று கூறலாம். காதல் பற்றிய விளக்கங்கள், விமர்சனங்கள் இன்று பல்கிப் பெருகியுள்ளன. காதல் பற்றிய உணர்வை இளைய வயதில் எதிர்கொள்ளும் யாருக்கும் சாதிய, மத இடர்பாடுகள் வந்து மோதி அதைக் கடந்து செல்வது பற்றிய உணர்வு இருப்பதில்லை. காதல் என்பது திருமணத்தை நோக்கி நகர நகர இன அடிப்படை பற்றிய அச்சங்கள் தோன்ற ஆரம்பிக்கின்றன. தம் சாதிப் பெருமைக்கு இழுக்கு நேரும்போது மட்டுமே சாதியை எதிர்க்கும் வல்லடித்தனம் வெளிப்படுகிறது.

    கிருபாநிதி, ஹெலன் காதல் பற்றிய சித்திரிப்புகளில் கிருபாநிதியின் அண்ணியோ, அம்மாவோ, அப்பாவோ அவன் காதலிக்கும் பெண் நல்லவள் என்று அனைவராலும் கூறப்பட்ட பின்னணியிலும் சாதியை அறிந்து கொள்ளத் துடிக்கும் மனப்பாங்கை அது சாதிய இழிவை இன்றும் சுமந்து கொண்டிருக்கும் மனிதர்களை வெளிக்காட்டுவதாக அமைகிறது. ஹெலன் கிறித்தவள் என்பது ஒரு பொருட்டில்லை. அவளது சாதி என்ன என்பதை அறிவதுதான் பிரச்சினைக்குரியதாக இருக்கிறது. தொல்காப்பியம் கூறும் இரண்டு பேர் விதிவசத்தால் ஒன்றிணைவது தெய்வத்தின் செயல் என்பது சாதிய அடிப்படையில் ஒத்த இருவர் என்பதாக மறுவாசிப்புச் செய்யப்பட வேண்டும். கிருபாநிதியும் ஹெலனும் இறுதியில் ஒரே சாதியினர் என்பதில் அமைதி கொண்டு வரப்படுகிறது.

    வழக்கமான சினிமா பாணியிலான முடிவாக இருந்தாலும் சாதிய இழிவைச் சுமந்து கொண்டு வாழ்ந்திருத்தல் என்பது அடிப்படையில் இயலாத ஒன்று. எனவேதான் சந்தோஷம் தீ வைத்துக் கொல்லப்படுகின்றான் என்று கூட கூறலாம். சாதிய அடிப்படையைத் திணை சார்ந்த வாழ்வியல் ஒப்புக் கொள்கிறதா என்று அறியமுடியவில்லை.

    காதல், வீரம் அல்லது அரசியல் என்பதாக தமிழ்ச் சமூகம் கட்டமைந்துள்ளது. நவீனச் சமூக உருவாக்கமும் காலனிய இடர்ப்பாடுகளும் தமிழ் மனத்தின் மரபுத் தொடர்ச்சியை பாதித்து விடுவதில்லை. திணைகள் கலைந்து போயிருக்கக் காண்கிறோம்.  மொழியினால் ஒன்றிணைந்தவர்களே காதலர்கள். சாதிய, மத இடர்ப்பாடுகள் அவர்களுக்குள் இல்லை. அதனால்தான் சாதியைப் பற்றிக் கேட்கும்போது அவர்களுக்குள் தயக்கம் ஏற்படுகிறது. உதவித் தொகைக்கான மாணவர்களை எழுந்திருக்கச் சொல்லும் போது வகுப்பறையில் ஏற்படும் மனச் சங்கடங்கள் அளப்பரியன என்பதை நாவல் சுட்டுகிறது. நாடகத்தில் நடிக்கும்போது கூட உயர்வு, தாழ்வு கடைப்பிடிக்கும் மனிதர்கள் தீண்டாமை, இழிவு ஆகியவற்றைக் கடந்து செல்லுவதை விரும்பாத நிலையே சுட்டப்படுகிறது. நாடகமாயினும், அரசியலாயினும், சினிமாவாயினும் சாதிய அணுகல்கள் இருந்து கொண்டிருக்கின்றன. இந்தப் பின்னணியில்தான் நாவலில் தொல்காப்பிய அகத்திணைக் கூறுகள் ஆங்காங்கு இருக்கக் காண்கிறோம்.

    காதலர் இருவர் தற்செயலாகச் சந்தித்துக் கொள்வதைத்தான் தொல்காப்பியம்,

    ஒன்றே வேறே என்றிரு பால்வயின்
    ஒன்றி உயர்ந்த பால தாணையின்
    ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப
    மிக்கோ னாயினும் கடிவரை இன்றே”
    (தொல்.களவு.2)

    என்ற நூற்பா சுட்டுகிறது. ஒத்த கிழவனும் கிழவியும் ஒன்றிணைதல் என்பது விதி வசமானது என்பதைப் போல நாவலில் வின்சென்ட் ராஜாவும், காந்திமதியும் சந்தித்துக் கொள்வது தற்செயலான நிகழ்வாகக் காட்டப்படுகிறது. அவர்கள் ரயிலில் சந்தித்துக் கொள்கிறார்கள். கல்லூரியில் பயின்று கொண்டிருக்கும் இருவரும் கலை சார்ந்த நிகழ்வில் பங்கேற்றுப் பரிசில் பெற்று விட்டுத் திரும்புகிறவர்களாக இருக்கிறார்கள். இருவரையும் இணைத்தது நல்லூழின் ஆணை என்று குறிப்பிடுகிறது. அவர்கள்தான் இணையப் போகிறார்கள் என்பதைச் சுட்டும் விதம்தான் நாவல் தொடங்கும் போதே இருவரது அளவளாவல். ஆணின் தவிப்பும் பெண்ணின் பரிதவிப்பும் எனக் காட்சியை வடிவமைத்திருக்கிறார். இருவருக்குள்ளும் ஏற்படும் இனம்புரியாத ஈர்ப்பு, அடுத்தடுத்த அக இயல்களில் வளர்த்தெடுக்கப்படுகின்றன. தமிழ் மரபில் பாங்கனும், பாங்கியும் இல்லாது காதல் நடைபெறாது என்பதைச் சுட்டுவதற்காகவே இரு பாத்திரங்கள் வின்சென்ட் ராஜாவையும், காந்திமதியையும் சுற்றிக் கொள்கின்றன. கிருபாநிதி, ஹெலன் என இருவரும் பாங்கியர் கூட்டம் நடைபெறக் காரணமாக சுட்டப்படுகின்றனர். காந்திமதி – வின்சென்ட் இடையே உள்ள மத வேறுபாடு போலவே கிருபாநிதி – ஹெலன் இடையேயும் காணப்படுகிறது. அது ஒரு பிரச்சினையாகச் சுட்டப்படவில்லை.

    காதலர்கள் சந்தித்துக் கொள்ளும் இடங்கள் சங்க காலத்தில் குறியிடங்கள் எனப்பட்டன. குறிஞ்சி என்றால் தினைப்புனம், முல்லை, நெய்தல் நிலங்களில் நிலம் சார்ந்த சோலைகள், மணற்பாங்கான இடங்களில் சந்திப்பு நிகழ்கிறது. நாவலில் திணை சுட்டும் குறியிடங்கள் துலக்கமாகக் காணப்படவில்லை. ஆனாலும் காலத்திற்கேற்றாற் போல குறியிடங்களும் மாறுவது இயல்பென்ற வகையில் பாலர் விடுதியைச் சுற்றி நிகழ்தல், திரையரங்குகளில் நிகழும் சந்திப்புகள் ஆகியன குறியிடங்கள் என்பனவாகக் கொள்ளலாம். வின்சென்ட்டுக்கு கிருபாநிதியும், காந்திமதிக்கு ஹெலனும் உதவி செய்பவர்களாக வந்து அவர்களும் காதலர்களாக மாறுகிறார்கள்.

    தலைவன், தலைவி என்ற அகத்திணை சுட்டும் அடையாளமற்றத் தன்மையை நகர் சார்ந்த பகுதிகள் அடையாளமற்றுப் போகச் செய்கின்றன. அதாவது கிராமத்திற்குள்தான் பெயர்கள் குறித்த அடையாள ஓர்மை குறித்த அச்சம் காணப்படும். நகர்களில் பலவிடங்களிலிருந்தும் மனிதர்கள் வந்து சேர்வர். அங்கு அடையாளம் காண்பதரிது. எனவே நகர்களில் பெயர் இருந்தாலும் பெயர் சுட்டா மரபே கதையாடலில் இயங்குகிறது எனலாம்.

    பகற்குறியிடங்கள் மட்டுமே நாவலில் சுட்டப்படுகின்றன. அதிலும் தியேட்டர் போன்ற காலனியச் சூழலில் உருவான பொதுவெளிகளில் சந்தித்துக் கொள்வதைக் காணமுடிகின்றது. ஒருவரையொருவர் அறிமுகப்படுத்திக் கொள்ள முடியாத இடமாக திரையரங்குகள் காணப்படுகின்றன. சில நேரங்களில் விடுதிக்கு வெளியில் சந்தித்துக் கொள்வதும். திரையரங்கிற்குச் சென்று விட்டு விடுதி மூடுவதற்குள் சென்று விடுவதுமென பாதுகாப்பான காதல் வெளிப்பாடுகளே காணப்படுகின்றன.

    வின்சென்ட், காந்திமதி காதலை விடவும் கிருபாநிதி, ஹெலன் காதல் வேகமெடுப்பதை நாவலில் காணலாம். கிருபாநிதியின் அதிகப்பிரசங்கித்தனத்தை கண்டிக்கக் கூடியவர்களாக காந்திமதியும், வின்சென்ட்டும் இருக்கிறார்கள். காந்திமதி வின்சென்ட்டிற்குக் கடிதம் எழுதுகிறாள். அதில் கிருபாநிதியின் செயல்பாடுகள் குறித்த அசூயையை வெளிப்படுத்துகிறாள். வின்சென்ட் இது குறித்துக் கிருபாநிதியிடம் கூறுகிறான். இவ்வாறான காதல் சார்ந்த பிரச்சினைகளும் நண்பர்களால் தீர்க்கப்படுகின்றன. தோழியின் துயரை தலைவி தீர்ப்பதற்கும், தலைவனின் துயரைப் பாங்கன் தீர்ப்பதற்குமான இடங்களாக இவை காணப்படுகின்றன.

    குறியிடங்களில் அல்ல குறிப்படுதல் என்பது திணைசார்ந்த வாழ்வில் காணப்படும் ஒன்றாகும். அல்ல குறிப்படுதல் என்பதைக் குறித்து தொல்காப்பிய பொருளதிகாரம் குறிப்பிடுகின்றது. இயற்கையான நிகழ்ச்சிகளால் தலைவன் வந்துவிட்டான் என்று கருதி வந்து பார்த்து ஏமாற்றமடைந்து சென்று விடும் தலைவி பின்பு தலைவன் வந்து திரும்பி விடுதலை அறியாதாளாக அடுத்த நாள் தலைவன் செய்த குறிகண்டு கலங்குவதைக் கூறுகின்றன. இவ்வாறான அல்ல குறிப்படுதல் என்பதை நாவலில் காணமுடிகிறது. காந்திமதி வின்சென்ட்டிற்காகக் காத்திருந்து அவன் வராமல் ஏமாற்றமடைந்து செல்வதை அல்ல குறிப்படுதலாகக் கொள்ளலாம். அல்ல குறிப்படும்பொழுது தலைவன் கொள்ளும் மன அவசங்களைத் தலைவனாக வின்சென்ட்டும் அடைகின்றான் என்பதைக் காணமுடிகின்றது.

    காதல் குறித்த அச்சம் பெற்றோருக்கு நிச்சயமாக இருக்க வேண்டும் என்பதை இரண்டாயிரம் ஆண்டுத் தமிழ் மனிதன் அறிந்திருந்தாலும் காதலிப்பதைத் தவிர்த்ததில்லை. ஆண், பெண் ஒன்றிணைதல் என்பது பசி, தூக்கம் போல ஓர் இயல்பூக்கமான செயல்பாடானாலும். பண்பாடானது பாலியலை அற நடத்தையாக்கி விடுகிறது. பாலியலைக் கட்டுப்படுத்துதல் என்பது உயர்வான மதிப்பினையும் பாலியல் ஒடுக்கமின்மைத் தாழ்வான நடத்தையாகவும் சுட்டப்பட்டு வளர்க்கப்படுகின்ற ஆண்,  பெண் மனத்தில் பாலியல் கட்டுப்பாடுகள் காணப்படுகின்றன. எனினும் இயல்பூக்கமே வென்று விடுகிறது. அதன் வெளிப்பாடாகத்தான் விசாலாட்சியின் காதல் உடன்போக்கில் முடிகிறது. தாய், தந்தையின் எதிர்ப்பினை பொருட்படுத்தாத நிலையிலும் தந்தை மேல் கொண்ட அன்பின் மிகையைப் பதிலி செய்ய முடியாத நிலையில் இறந்து போய் விடுகிறாள். விசாலாட்சியின் இறப்பு காந்திமதியின் வாழ்வின் திசையிலும் மாற்றங்களை ஏற்படுத்துகிறது. அவள் தன் காதலை வெளிப்படையாக வின்சென்ட்டிடம் வெளிப்படுத்தாத நிலையிலும் இக்கட்டான சூழலில் அவனோடு பயணிக்கும்போது அவன் நெஞ்சில் சாய்ந்து கொள்வதன் மூலம் தன் காதலை வெளிப்படுத்த விழைகிறாள். இது போன்ற சூழல்களே காதலை புனிதப்படுத்தும் வகையில் நாவலில் காணப்படுகின்றன.

    கிருபாநிதியின் அண்ணி, வின்சென்ட்டிடம் ஹெலனைப் பற்றிய விசாரணையில் இறங்குகிறாள். அவளது குணநலன்கள் எத்துணை சிறப்பானவை என்றாலும் அவளது சாதியை அறிந்து கொள்வதில் உள்ள ஆர்வம் கற்பு வாழ்விற்கான வெளிகள் அதாவது தாய் தந்தை  செய்து வைக்கின்ற திருமணத்தில் இது போன்ற சாதியப் பிரச்சினைகள் எழாத காரணம். அவர்களால் ஒரு போதும் அகமணமுறையைத் தவிர்த்துச் சிந்திக்க முடியாது. கட்டுத்திட்டான குடும்பப் பாங்கான, தலைவியின் இயல்புகள் காதலித்தலைத் தவிர்த்தல் என்பதாகவே தமிழ்ச் சமூகம் கற்பித்து வந்திருக்கிறது. நிலவுடைமைப் பண்புகள் இன்றைய மனத்திலும் வியாபித்து இருக்கின்றன. அதன் வெளிப்பாடாகவே சாதியை அறிந்துகொள்ளும் வேட்கையாக வெளிப்படுகிறது. அவளது சாதியை அறிந்து கொள்ளும் பிரயத்தனத்தில் இருந்து விடுபட முடியாத நிலையில்தான் வின்சென்ட்டும் இருக்கின்றான். அவளிடம் நேரடியாகக் கேட்டு விடும் வலிமையும் இருப்பதில்லை. சாதியைப் பற்றிய அறிதல்கள் அகமணமுறையின்பாற்பட்ட இன அடையாளத்தைத் தன்னகத்தே கொண்டுள்ளன. இன அச்சமே அகமண முறைக்குக் காரணம். அதுவே இன்றுவரை கௌரவக் கொலைகளை சாத்தியப்படுத்தி இருக்கிறது.

    நாவலிலும் சந்தோஷம் தன் பால்ய காலத்தில் நிகழ்ந்த சம்பவத்தை நினைவு கூர்வதைக் காணமுடிகிறது. தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்தவன் எக்காரணம் கொண்டு உயர்ந்த சாதி என்று கருதக் கூடிய பெண் பிள்ளையின் கையைத் தொடக் கூடாது என்று  விதிக்கப்படுவதை அகமணமுறை அழுத்தமாக இருப்பதைச் சுட்டும் காட்சியாகக் கொள்ளலாம். சாதியப் படிநிலையில் கீழிருக்கும் மக்கள் உயர்சாதியினரால் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவதன் நீட்சியாகவே சந்தோஷம் எரித்துக் கொல்லப்படுதல் நிகழ்கிறது. அகத்தில் ஓர் எரித்தல் போலவே புறத்திலும் ஓர் எரித்தல் நிகழ்கிறது. அது மொழியின்பாற்பட்ட வெறியினால் நிகழ்கிறது. ஆண்கள், பெண்கள் இருவரும் சந்தித்துக் கொள்வதற்கான இடங்களாக நாவலில் பள்ளிகள், கல்லூரிகள் காணப்படுகின்றன. கல்லூரிக் காலத்தில் பெரும்பாலும் நகர்சார்ந்த வாழ்வை மேற்கொள்ளும் ஆண், பெண் மனத்தில் சாதிய, அகமணமுறை பற்றிய சிந்தனைகள் இருப்பதில்லை. வாழ்தலின் அவசம் மட்டுமே வெளிப்படுகிறது. ஆனால் பள்ளிகளில் படிக்கும் போது பிள்ளைகள் சாதியப் பிரிவினையைத் துலக்கமாகக் காணும்படிக்கு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. விசாலாட்சியின் மரணம் அன்பின் மிகை என்றே நாவலாசிரியர் குறிப்பிடுகிறார். அன்பென்றாலும் ஓர் அளவிற்குத்தான் வைக்க வேண்டும் என்பதாகக் கொள்ளலாம்.

    ஊடல் என்பது மருதத் திணையின் உரிப்பொருள் ஒவ்வொரு குடும்பத்திலும் ஊடல் நிகழாத சூழல் இருப்பதில்லை. ஊடல் குடும்பம் நடத்தத் தேவையான வஸ்து போல நாவலாசிரியர் குறிப்பிடுகின்றார். விசாலாட்சியின் தந்தை இராணுவத்தில் பணிசெய்த போது அங்கு ஒரு பெண்ணோடு தொடர்பாய் இருந்தார் என அவரது மனைவி சந்தேகங் கொள்வதும் அதற்காக அவளை கடிந்து கொள்வதுமாக மருதத் திணையின் உரிப்பொருள் வெளிப்படுகிறது. தலைவனுக்கு இருக்கும் பரத்தைத் தொடர்பு பற்றிய தலைவியின் கவலையாக இது வெளிப்படுகிறது. சந்தேகங்கொண்டாலும் அதைப்  பெரிதுபடுத்தி சண்டையிட்டுக் கொள்வதில்லை. பரிகாசம் செய்வதோடு நின்று விடுகிறாள்.

    பிரிவும் உரிப்பொருளாக பாலைத்திணையில் காணப்படுகின்றது. நாவலிலும் பிரிவு கடுமையானதாகக் காணப்படுகின்றது. காதலித்தவர்கள் ஆயினும் அதைத் துலக்கமாக வெளிப்படுத்தாக வின்சென்ட்டும், காந்திமதியும் மீண்டும் ஊழ்த் தெய்வத்தின் வினையால் சந்திக்கின்றனர். இம்முறை விமான நிலையத்தில் சந்திக்கின்றார்கள். இருவருக்குள் நடைபெறும் சம்பாஷணை கடந்த காலத்தை மறுபடியும் நினைவு கூர்வதாக அமைகிறது. முன்னர் நடந்தவை பற்றிய நிகழ்ச்சிகளை நிகழும்போது இருக்கும் சுவாரசியம் மறந்து அவை ஓர் செய்தியாக எஞ்சியிருப்பது போல அளவளாவிக் கொள்கிறார்கள். இருவரும் இணைந்து கொள்வதற்கான சூழல்கள் ஏற்பட்டு விட்டன என்பதை இருவரது சம்பாஷணையிலும் அறிந்து கொள்ள முடிகிறது. நாவலாசிரியர் கிருபாநிதி மற்றும் ஹெலனின் காதலை மேலும் சங்கடப்படுத்த விரும்பாத நிலையில் ஹெலனையும் கிருபாநிதியின் சாதியாகவே குறித்து விடுகிறார் எனலாம்.

    புறத்திணை என்று கொள்வதற்கு சங்க இலக்கியத்தின் கடல் கடந்த போர் நிகழ்ச்சிகளை மனத்திற் கொண்டு இந்தி மொழிக்கு எதிரான கொந்தளிப்பான சூழல்கள் வழித் தமிழர்கள் அரசியல் ரீதியாக பலவீனமானவர்கள் அல்ல என்பதை வெளிப்படுத்தும் காட்சிகள் அமைகின்றன. அதே வேளையில் பிழைப்புவாதிகள் அரசியலில் நிறைந்து விடும் ஆபத்தும் இருப்பதைப் புறத்திணையில் ஆசிரியர் சுட்டுகின்றார். மொழியைக் காக்க உயிர் துறக்கும் அளவிற்குச் செல்லும் மாணவர்களின் போராட்டத்தைத் தங்கள் அரசியல் ஆதாயங்களுக்குப்பயன்படுத்திக் கொண்ட வல்லடித்தனத்தை வெளிப்படுத்துகிறார் ஆசிரியர். சொத்து சேர்த்தல் போன்றவற்றில் பொன்வண்ணன் பழனி என்ற தன் பெயரை மாற்றி வைத்துக் கொண்டு அரசியல் பிரவேசம் செய்வதிலிருந்து அவரது செயல்களும் நடப்பு அரசியலை சுட்டுவதாகக் காணமுடியும். மொழிக்காக பொதுச்சொத்தைத் தீக்கிரையாக்கும் செயலை சங்க காலத்தின் எதிரிப் படையினரை கொன்றொழித்து அவர்தம் உடைமையினை அழித்து நிர்மூலமாக்குவதைப் பதிலி செய்யும் வகையில் இருக்கின்றன எனலாம்.

    இந்தி எதிர்ப்பு பற்றிய விவரணைகள் மிகச் சொற்பமாகவே நாவலில் காணப்படுகின்றன. அரசியல்வாதிகள் தங்கள் நலனையே பெரிதும் விரும்புவர்களாக இருப்பதைப் பாத்திரங்கள் மூலம் வெளிப்படுத்துகின்றார். ஆசிரியர் அதில் வான்மிகநாதன், காமாட்சி ஆகியோரைப்பற்றிய சித்திரிப்புகள் அடிப்படையில் பொருள் சார்ந்த வாழ்விற்கான எவ்வகையான சமரசத்தையும் செய்து கொள்வதைக் காணமுடிகிறது. திராவிடக் கட்சியில் பிராமணர் என்ற வகையில் அவர் புறந்தள்ளப்படுவதாகவும் ஆனால் வாணி என்ற நடிகை திராவிடக் கட்சியில் ஊடுருவப் போவதாகவும் அவளுக்கே எதிர்காலம் என்று ஆசிரியர் முன்தீர்மானமான கருத்தைக் கதையில் வெளிப்படுத்துகின்றார்.

    இவ்வாறு அகத்திணையும் புறத்திணையும் கலந்து தமிழரின் இரண்டாயிரமாண்டு வாழ்வியலில் மாறாதவற்றை இயல்பூக்கமாகப் பகிர்ந்து கொள்வதாகத் தமிழவனின் நாவல் அமைந்திருக்கிறது.

    *****

    அடிக்குறிப்புகள்

    1. கார்த்திக்கேசு, சிவத்தம்பி, பண்டைத் தமிழ்ச் சமூகம், ப.24
    2. க.ஜவகர், திணைக்கோட்பாடும் தமிழ்க் கவிதையியலும், ப.275
    3. ஐயப்பப் பணிக்கர், இந்திய இலக்கியக் கோட்பாடுகள், ப.111

    *****

    கட்டுரையாளர் – முதுமுனைவர்பட்ட ஆய்வாளர்
    தமிழியற்புலம்
    மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
    மதுரை – 21

     

    Share
  • புறநானூற்றில் இசைக்கருவிகள்

    -ர.ஜெகன்

    இசை என்பது யாவராலும் அறியத்தக்க மொழி ஆகும். ஐம்புலன்களில், காதுகளால் கேட்டு இன்புறத்தக்க ஓர் அரிய கலை இசைக்கலை ஆகும். இசை என்பது இசைவிப்பது; தன்வயப்படுத்துவது என்பது பொருள்படும். அன்பைப் பெருக்கி ஆருயிரையும் வளர்ப்பது இசையாகும். மரம், செடி, கொடி முதலிய ஓரறிவு உயிர்கள் முதலாக மக்கள் என்னும் ஆறறிவு உயிர்கள் வரையுமுள்ள எல்லா உயிர்களையும் இசையினால் வசப்படுத்த முடியும் என்பதை மெய்ப்பித்துள்ளனர்.

    தொல்காப்பியத்தில் ஐவகை நிலத்திற்கும் உரிய பண்களை வரையறை செய்வதில் இருந்து தமிழிசையின் தொன்மை புலப்படுகின்றது. பண்களைப்  பற்றியும் இசைக்கருவிகளைப் பற்றியும் பல செய்திகள் புறநானூற்றில் கூறப்பட்டுள்ளது.

    “தணிபிறை அறையும் அணிகொள் தோர்வழி”       (புறம் – 68 – 14)

    “ஏம முரசம் இழுமென முழங்க”    (புறம் – 3-3)

    “மண்முழா மறப்பப் பண்யாழ் மறப்ப”           (புறம் – 65-1)

    “நுண்கோற் றகைத்த தெண்கண் மாக்கிணை”      (புறம் – 70-2,3) என்ற பாடல் வரிகளில் முரசு, முழவு, யாழ், பறை, உடுக்கை, சங்கு, துடி, தண்ணுமை முதலிய இசைக் கருவிகளின் பெயர்களை அறிய முடிகின்றது. முரசு போன்ற தோற்கருவிகள் மிகப் பழமையான இசைக்கருவிகள் ஆகும். கொம்பு, மகுடி, சங்கு, போன்ற தொன்மைக் கருவிகள் இதன் பின்னரும், யாழ், போன்ற நரம்புக் கருவிகள் கடைசியாகவும் தோன்றியிருக்க வேண்டும்.

    இசைக்கருவிகளின் தோற்றம்

    சங்க இலக்கியச் சமுதாயத்தில் காதலைப் போலவே, வீரமும் உயிர்ப் பண்பாகக் கொண்டுள்ளது. போரின் ஈடுபடும் மறவரின் உணர்வை வளர்த்தல் போர் உத்திகளில் ஒன்றாகும். இத்தகைய உணர்வுக் களத்தில் இசைக்கருவியின் பங்கு பெரியதாகும். போருக்கு அழைப்புவிடுக்கும் தொடக்க நிகழ்ச்சியிலிருந்து போர்த்திறனைக் காட்டி நடுகல்லாய் சமைத்த மறவன் புகழ்பாடுதல் வரையிலான பல்வேறு நிகழ்ச்சிக் கூட்டங்களிலும் இசைக்கருவிகள் முழங்கப்பட்டுள்ளது. சங்க காலத்தில் மன்னர்கள் இசைக்கலையை வளர்க்க இசைக் கலைஞர்களை ஆதரித்துப் போற்றி வந்திருகின்றனர். புலவர்கள், புரவலர்களை நாடிச்சென்று பரிசில் பெற்றமை இலக்கியங்களில் வெளிப்பட்டுள்ளது. ‘பாணர், விறலியர், கோடியர், இணையர், வயிரியர்’ போன்றோரை இசைக்கலையில் நன்கு தேர்ச்சி பெற்றவர்களாகவே இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.

    பாணர் குடி அக்காலக் குடிகளில் சிறப்புடைய ஒன்றாகக் கருதப்பட்டிருக்கின்றது. இதனை,

    “துடியன் பாணன் பறையன் கடம்பன் என்று
    இந்நான்கு அல்லது குடியும் இல்லை”  (புறம் 335 – 7-8)

    என்ற பாடல் வரிகளின் மூலம் துடி கொட்டுபவன் குடி துடியன். யாழிசைக்கும் பாணர்குடி, பறையடிக்கும் பறையன்குடி, கடம்பனுடைய குடி ஆகிய நான்கு குடிகளைத் தவிர வேறு எந்த குடிகளும் இசைத்துறையில் இடம்பெறவில்லை என்பதை அறிய முடிகிறது.

    “பண்டைக் காலத்தில் இசைக் கலையில் வல்லவராயிருந்தவர் பாணர் என்னும் இனத்தவராவர். எனவே சங்க காலத்திலே பாணர்கள் அரசர், சிற்றரசர், செல்வர் முதலியவர் வீடுகளுக்குச் சென்று இசைப் பாடல்கள் பாடினர். பாணர்களின் திறமையை அறிந்து பொன்னையும், பொருளையும் வாரி வழங்கினார்கள்”. எனவே பண்டைய காலத்தில் பாணர்கள் உயர்வாக இருந்துள்ளனர் என்று தமிழ்வளர்த்த அழகுக் கலைகள் என்னும் நூலில் மயிலை சீனி. வேங்கடசாமி குறிப்பிட்டுள்ளார்.

    இசைக் கருவிகள் நான்கு வகைப்படும். அவை,

    1. தோல் கருவி
    2. துளைக் கருவி
    3. கஞ்சக் கருவி
    4. நரம்புக் கருவி

    என்பனவாகும். இசைக் கருவிகள் பெரும்பாலும் மரத்தாலும், தோலாலும், நரம்புகளாலும் ஆனவை. புறநானூற்றில் கூறப்படும் இசைக்கருவிகள் பெரும்பாலும் மன்னரைப் புகழ்ந்து பாடுவதாகவும், போர்க்கு செல்லும் முன்பும் போரில் வெற்றி பெற்ற பிறகும் இசைக்கருவிகள் இசைக்கப்படுகின்றது.

    நரம்புக் கருவிகள்

    இக்கருவிகள் மரத்தினால் செய்யப்பட்டு நரம்புகள் அல்லது கம்பிகளால் பூட்டப்பட்டவை ஆகும். யாழ், சீறியாழ், பேரியாழ் என்ற மூன்று இசைக்கருவிகளும் நரம்புக் கருவிகள் வகையைச் சேர்ந்ததாகும்.

    யாழ்

    எழுத்து நிலைமாற்றத்திலிருந்து அமைத்தது ‘யாழ்’ என்னும் தமிழ்ச் சொல்லாகும். யா- கட்டு, யாக்கை – தசை நரம்பு, எலும்பால் கட்டப்பட்ட உடல், யாப்பு – சொல்லால் கட்டப்படுவது. யாத்தல் – கட்டுதல் எனவே யாழ் என்பது நரம்புகளால் கட்டப்பட்டது என்று பொருள்படும். புறநானூற்றில் யாழ் எளிய இசைக்கருவியாகவே கூறப்பட்டுள்ளது. யாழ் என்னும் இசைக்கருவி பாணர்களால் பெரிதும் பயன்படுத்தப்பட்ட ஒன்றாகக் காணப்படுகிறது. “சங்க காலத்தில் யாழ் கொன்றை, கருங்காலி ஆகிய இரு மரங்களைக் கொண்டு செய்யப்பட்டது. புறநானூற்றில் கூறப்படும் யாழ் காளம்பழம் என்ற கரிய வளைந்த காம்பில் செய்யப்பட்டதாகும்” என்ற கருத்து லி.சி. சசிவல்லியின் பண்டைத் தமிழர் தொழில்கள்,என்னும் நூலினால் அறியமுடிகிறது.

    யாழ் வகைகள்

    யாழ் பொதுவாக நான்கு வகைப்படும். அவை. 1. பேரியாழ், 2. மகரயாழ், 3. சகோடயாழ், 4. செங்கோட்டுயாழ் என்பவையாகும். இவை நான்கும் மிகுதியாகப் பயன்படுத்தப்பட்டது.

    சீறியாழ்

    சீறியாழ் என்பது உருவத்தில் சிறியதாகும். இது கையடக்கமாகக் காணப்படும். இதுதான் முதலில் தோன்றியது. இதனிலும் பெரியதாகச் செய்யப்பட்டதே பேரியாழாகும். பாணர்கள் மன்னனை நாடிப் பரிசில் பெறச் செல்லும் போது விறலியை உடன் அழைத்துச் செல்லுதல் வழக்கம். அவ்வாறு காடும் மலையும் கடந்து செல்லும்போது பல்வேறு இன்னல்களுக்கிடையே பாணர் விறலியை தனது ஒரு கையில் பிடித்துக் கொண்டும், மற்றொரு கையில் யாழையும் பிடித்துக் கொண்டும் செல்வர். காடுகளில் பயம் தெரியாமல் இருக்க சீறியாழை வாசிப்பர் என்பதை,

    “வளைக்கை விறலி என் பின்னள் ஆக
    பொன் வார்த்தன்ன புரி அடங்கு நரம்பின்
    வரி நவில் பனுவல் புலம் பெயர்ந்து இசைப்ப
    படுமலை நின்ற பயம் கொழு சீரியாழ்”  
    (புறம் 135. 4-7)

    என்ற பாடல் வரிகளின் மூலம் பாணர் நரம்புகளால் ஆன சீறியாழ் என்ற இசைக் கருவியை பயன்படுத்தியதை அறியமுடிகிறது.

    பேரியாழ்

    பேரியாழ் என்பது அளவில் பெரியதாகவும், சிறியதாகவும் காணப்படும். அதில் ஒன்பது வார்கள் காணப்படும். வடித்து முறுக்கிக் கட்டின நரம்புகளால் இனிய ஓசையைத் தருகின்றது. நேர்மையான வரகின் கதிர்கள் இரண்டு வரிசையாக ஒழுங்குபட்டு அமைந்திருப்பதுபோலத் தனது நடுநிலத்தில் வரிசையாகவும், நெருக்கமாகவும் அமைந்த சிறிய துளைகளில் சுள்ளாணிகள் தைக்கப் பெற்றிருக்கும். யானைக் கொம்பினால் புதிதாகச் செய்யப்பட்ட அழகிய ஆப்பு, அந்த யாழின் குறுக்கே செருகப் பட்டிருக்கும். யாமினி கோடு நுண்ணிய தூரத்தினால் நுட்பமாக அமைக்கப்பட்டிருக்கும். அது வளைந்து நிமிர்ந்த காளம்பழத்தின் நிறத்தினை ஒத்துக் கருமையாகக் காணப்படும்.

    “இறைவன் ஆகலின் சொல்லுபு குறுகி
    மூவேழ் துறையும் முறையளிக் கழிப்பி
    ‘கோ’ எனப் பெயரிய காலை, ஆங்கு அது
    தன் பெயர் ஆகலின் நாணி மற்று ‘யாம்’.

    என்ற பாடலில் மூவேழ் துறையும் முறையளிக் கழிப்பி என்ற வரியிலிருந்து வலிவு, மெலிவு, சமம் என்னும் மூன்று தானத்திலும் ஒவ்வொன்றிலும் ஏழுதாளம் சேர்த்து இருபத்தொரு நரம்பாலான பேரியாழ் என்னும் இசைக்கருவியினைக் கொண்டு பாடப்பட்டவையாகும்.

    இசை மருந்து

    இசைக்கருவிகள் போரில் புண்பட்டோருக்கு வலிதோன்றா வண்ணம் உள்ளத்தை ஈர்க்கவும், சிகிச்சை தரவும் பயன்படுத்தப்பட்டன. யாழ், பல்லியம், இசைமணி முதலிய இசைக்கருவிகள் மருத்துவத்திற்குப் பெரிதும் பயன்பட்டதை

    வாங்கு மருப்பு யாழொடு பல் இயம் கறங்க”    (புறம் 281 – 2)

    என்ற பாடல் வரிகளில் உணர முடிகிறது.

    “இசை மணி ஏறிந்து, காஞ்சிபாடி
    நெடு நகர் வரைப்பில் கடிநறை புகைஇ”        (புறம் 281: 5-6)

    என்ற பாடல் வரிகளின் மூலம் பல இசைக் கருவிகள் முழங்கி காஞ்சிப் பண்பாடியும், மனையின் கண் நறுமணம் கமழும் அகில் புகையை எழுப்பியும் இசை மருத்துவம் செய்வர் என்பதை அறியமுடிகிறது.

    தோல் கருவிகள்

    தோல் கருவிகள் மரத்தினால் செய்யப்பட்டுத் தோலால் கட்டப்பட்டவை, அவை ‘முழவு, தண்ணுமை, பதலை, சல்லி, தடாரி, பறை ஆகியவை ஆகும். தோற்கருவிகளை‘ வன்மைக் கருவி, மென்மைக் கருவி, சமக்கருவி’ என வகைப்படுத்தலாம்.

    கிணைப்பறை

    பறை         – வன்மைக் கருவிகள்

    முழவு

    தடாரி      – மென்மைக் கருவிகள்

    மத்தளம்

    எல்லரி    – சமயக்கருவிகளாக

    பாகுபடுத்தப்பட்டுள்ளது.

    முழவு

    “முழவு என்னும் சொல் முழங்கும் இசைக் கருவிகட்குப் பொதுப் பெயராயும் அமைகின்றது. அகமுழவு, புறமுழவு, வீரமுழவு, நாண்முழவு, நாழிகை முழவு என்னும் தொடரால் முழவின் பயனும், பண்பும், பருமனும் அறியலாம். (த. கோவேந்தன், தமிழும் இசையும் ப. 69). குழலிசையும், யாழிசையும் இணையும்போது ஒன்றுக்கு மேற்பட்ட முழவுகள் கையாளப்படுகின்றன. முழவுத் திருவிழாக்களில் அதிகமாகப் பயன்படும் தாளவிசைக் கருவியாகும் என்பதை,

    “முழவு மிக மகலாங்கண்
    விழவு நின்ற வியன் மறு இற”     (கலி – 102)

    என்ற பாடல் வரிகளின் மூலம் அறிய முடிகின்றது.

    தண்ணுமை

    தண்ணுமைக்கு ‘மத்தளம்’ அல்லது ‘மிருதங்கம்’ என்பது பெயர் உண்டு. ‘மத்து’ என்பது ஓசைப்பெயர், ‘தளம்’ என்பது இசையிடனாகிய கருவிகளுக்கெல்லாம். தாளமாக இருக்கும். அதனால் ‘மத்தளம்’ என்று பெயர் பெற்றது. இது தோல் கருவியாகும். அஞ்சாது போர்புரியும் மறப்பண்பு மிக்க வீரர்களுக்கு அரசன் சிறப்புச் செய்தலையும் போர்புரியும் பாசறையில் இன்று போருக்குரிய பூவை மறவர்க்குத் தரும் நாள் என்று அறிவிக்கும் கருவியாக மத்தளம் பயன்படுத்தப்பட்டது என்பதை,

    “கோட்டியோ வழி – பாண! பாசறை
    பூக்கோன் இன்று என்னறு அறையும்
    மடிவாயத் தண்ணுமை இழிசின் இரலே”?
    (புறம் – 289. 8-9)

    என்ற பாடல் வரிகளில் அறியமுடிகின்றது.

    சங்கு

    சங்கு தொன்மையான கருவியாகும். இது இயற்கை செய்துதரும் இசைக்கருவி ‘ஆதிமனிதன் சங்கை ஊதி வழிபட்டான், குடும்பச் சடங்குகளுக்கும் சங்கைப் பயன்படுத்திதான், சங்கு முழங்குவது மங்களமாக கருதப்பட்டது. கோயில்களிலும், அரண்மனைகளிலும் சங்கு ஊதுவது வழக்கம். அரண்மனைகளில் காலை வேளையில் முரசு கொட்டியும் சங்கு முழங்கியும் அரசரைத் துயிலெழுப்பினார்கள் அரண்மனையில் வலம்புரிச் சங்கு காலையில் முழங்கியதை.

    தூக்கணங்குரீஇத் தூங்கு கூடு ஏய்ப்ப
    ஒரு சிறைக் கொளீஇய திரிவாய் வலம்புரி”
    “மறத்துறை விளங்கிய மன்னவன் கோயிலும்
    வால்வெண் சங்கொடு வகைபெற் றோங்கிய
    காலை முரசங் கனைகுரல் இயம்ப”
        (சிலம்பு – 14 : 12-14)

    என்ற பாடல் வரிகளில் கோயில்களிலும், அரண்மனைகளிலும் இந்தச் சங்கு முழங்கியது அறிய முடிகிறது.

    சல்லி

    சல்லென்னும் ஓசையையுடையதனால் சல்லிகை என்னும் பெயர் பெற்றது. சல்லி அல்லது எல்லா என்பது தாளவிசைக் கருவியேயாகும். இந்த இசைக் கருவி பறை போன்று ஓசையைக் கொடுக்கும் என்பதை,

    “எல்லரி தொடுமின் ஆருளி தொடுமின்”        (புறம் 152 – 16) என்ற பாடல் வரிகளின் மூலம் அறியமுடிகிறது.

    முரசு

    போரில் எழுச்சி தருவதற்கேற்பத் தோல் கருவிகளே முழக்கப்பட்டுள்ளன. போர் முரசு செய்தவற்குரிய தோலின் இசை நுணுக்கச் செய்தியைவிட, போர் முரசு செய்வதற்கேற்ற தோலின் மறப்பின் புலமே முதன்மைப்படுத்தப்பட்டுள்ளது. மண்ணைக் கீறிய மிகக் கூரிய கொம்பினையிடைய பெருமை பொருந்திய நல்ல ஆனேறு இரண்டினைத் தம்முட்போர் செய்யவிடுத்து வெற்றி பெற்ற ஏற்றினுடைய தோலை மயிர் சீவாது போர்த்துத் திண்ணியதாய்க் கட்டி முரசு செய்யப்பட்டது என்பதை,

    “மண் கொள வரித்த வைந்நுதி மருப்பின்
    அண்ணல் நல் ஏறு இரண்டு உடன் மருந்து
    வென்றதன் பச்சை சீவாது போர்த்த
    திண் பிணி முரசம் இடைப்புலத்து இரங்க”
    (புறம் 288: 1-4)

    என்ற பாடல் வரிகளின் மூலம் அறிய முடிகின்றது.

    பறை:-

    பறப்பற என்ற ஒலிப்பின் அடியாகப் ‘பறைகள்’ எனப்பெயர் பெற்றன. பறைகள் தோற் கருவிகட்குப் பொதுப்பெயராகும். முழக்கப்படுவனயாவும் முழவுகள் எனப் பொதுப் பெயர் பெற்றுள்ளன.

    “அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட
    மறைபிறர்க்கு உய்த்து உரைக்கலான்”      (குறள்-1076)

    என்ற குறளில் ஐவகை நிலத்திற்கும் பறை உரியதாகக் காட்டப்பட்டுள்ளது.

    போர் வீரர்கள் தம்முடைய வீரம் நிறைந்த தோளினைத் தட்டுவர். அவ்வீரர்களின் மனத்தில் இருக்கும் பழிவாங்கும் உணர்ச்சியும் மறைந்து மன அமைதி ஏற்படுமாறு பறையோசை கேட்கும் மனயோசை போரின் முடிவில் அடிக்கப்படும் ஒரு வகை இசையாகும் இதனை,

    “நீங்கா மறவார் வீங்கு தொன்புடைப்ப
    தனிபறை அறையும் அணிகொள் தேர்வழி” 
    (புறம் 68: 13-14)

    என்ற பாடல் வரிகளில் பறையோசைப்பற்றி அறிய முடிகின்றது.

    கருத்துரை:-

    • பழந்தமிழர் வாழ்வில் இசை முக்கிய இடத்தைப் பெற்றிருந்தது. வாழ்வின் தொடக்கம் முதல் இறுதிவரை இசையின் ஆதிக்கம் அமைந்திருந்தது.
    • இசைக் கருவிகள் கண்டுபிடிக்கும் முன்னர் வாயிலிருந்து வெளிப்படுத்தும் ஓசையால் இசையை அறிந்து கொண்டனர்.
    • முன்பு காணப்பட்ட நால்வகைக் கருவிகளும் இன்று ஒரே கருவியினுள் அமைந்து விளங்குகின்றன. நாட்டுப்புறங்களில் மட்டுமே இன்றும் பழைய கருவிகள் வழக்கிலுள்ளன.
    • இயற்கையில் கிடைத்த பொருட்களைத் தட்டுவதில், ஊதுவதில், மீட்டுவதில் இசைப்பதில் கிடைத்த ஓசை வேறுபாட்டை அறிந்து அதற்கேற்ப இசைக்கருவிகளைத் தெரிந்து கொண்டனர்.

    பயன்படுத்தப்பட்ட நூல்கள்:

    • புறநானூறு –     வர்த்தமானன் பதிப்பகம், சென்னை.
    • கலித்தொகை   –     வர்த்தமானன் பதிப்பகம், சென்னை.
    • மயிலை சீனி. வேங்கடசாமி –      தமிழ் வளர்த்த அழகுக் கலைகள்.
    • லி.சி. சசிவல்லி –      பண்டைத் தமிழர் தொழில்கள்.
    • திருக்குறள்         –      சாரதா பதிப்பகம்.
    • சிலப்பதிகாரம்    –      உ.வே.ச பதிப்பகம், சென்னை.

    *****

    கட்டுரையாளர் – முனைவர்பட்ட ஆய்வாளர்
    தமிழ்த்துறை
    பாரதியார் பல்கலைக்கழகம்
    கோவை. -46

     

    Share
  • அலமந்து அழுகின்றார்!

    -எம். ஜெயராமசர்மா – மெல்பேண், அவுஸ்திரேலியா

    வீசுகின்ற காற்றுக்கு விலைபேச முனைகின்றார்
    வெளிச்சந்தரும் வெயிலதனை விற்றுவிட எண்ணுகிறார்
    வான்பொழியும் மழையதனை மறைத்துவிட முயலுகிறார்
    மனிதர்செயும் இச்செயலால் மாநிலமே அழுகிறதே!

    ஆர்ப்பரிக்கும் கடலைக்கும் அவருரிமை கேட்கின்றார்
    அளவற்ற நீர்கொண்ட கடலினையும் பிடுங்குகிறார்
    ஆண்டவனின் கொடையான ஆறுகளைத் தடுக்கின்றார்
    அளவற்ற ஆணவத்துள் அமிழ்ந்துவிட்டார் அனைவருமே!

    ஓடிவரும் ஆறுகளை ஒடுக்கிவிட முயலுகிறார்
    தேடித்தேடி அணையெடுத்து திருப்புகிறார் தமக்கெனவே
    நாடுவளம் தனையெண்ணி ஓடிவரும் ஆறுகளைக்
    கேடுகெட்ட எண்ணமுடன் கெடுக்கின்றார் பலருமிங்கே!

    ஆறுகளை ஆண்டவனாய் எண்ணிப் பூஜைசெய்கின்றார்
    ஆறுகளைத் தொழுவதற்கு அநேகம்பேர் செல்லுகிறார்
    புனிதமாய் நினைத்துநிற்கும் புவியிலுள்ள ஆறுகளைத்
    தனியுடமை ஆக்குதற்குத் தான்பலபேர் முயலுகிறார்!

    ஆறுகளை அரசியலாய் ஆக்கிவிட்ட காரணத்தால்
    அறம்வளர்ந்த நாட்டினிலே மறமோங்கி நிற்கிறது
    ஆண்டாண்டாய் பூஜைசெய்து ஆறுகளைப் போற்றிநின்றார்
    ஆணவத்தின் எழுச்சிகண்டு அலமந்து அழுகின்றார்!

     

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    180508 Kaliyamardhana-watercolour-lr
    ‘Nagapatnis plead: Krodhopi tava anugraham eva..’

    ’’காளியன் குட்டையில் கற்புக் கரசிகூறி
    னாள்கண்ணன் கோபமது, நீர்தாண்டா(ஜலம் தாண்டா) -நீலமவள்(பத்தினி),
    ஆசியென்றே, காளியன் நாசி(பாம்புக்கு ஏது செவி)க்(கு)உரைக்க, துப்பறியும்
    தேசிகர்(கண்ணன்) கேட்டாரி தை’’….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    மீரா -K(கிருஷ்ணப்) -பிரபு

    180507 Meera ke Prabhu- Goverdhandhari -lr-29.5x42cm

    ’’மைவண்ணர் கையணைந்த மீராவின் கொஞ்சலை,
    மெய்யவர் என்றுணர்ந்த மாடது -அய்யாவை
    குன்றுவிரலால் காத்திடக் கன்றதன் கெஞ்சலையும்
    கொண்டுவந்த கேசவ் கவி’’…..கிரேசி மோகன்….!

    Share
  • படக்கவிதைப் போட்டி 159-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    கரத்தால் தன் முகத்தை மறைக்கும் இந்தப் பெரியவரைத் தன் புகைப்படப் பெட்டிக்குள் பதுக்கி வந்திருப்பவர் திரு. லோகேஷ். இதனைப் படக்கவிதைப் போட்டிக்குத் தெரிவுசெய்து தந்திருப்பவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவரும் என் நன்றிக்குரியோர்!

    ”ஐயன்மீர்! என் ஆடை கசங்கியிருக்கலாம்; அதில் கறைபடிந்திருக்கலாம். ஆனால் என் கரம் உழைத்து உரம்பெற்றது; கறையற்றது. அதனைக் காண்மின் காண்மின்!” என்று தன் கையகத்தை இவ்வையகத்துக்குக் காட்டுகின்றாரோ இப்பெரியவர்?

    சிந்தனைக்கு விருந்தளிக்கும் இப்படத்துக்குச் சீரிய கவியெழுத வருக என்று கவிஞர்களை அன்புபாராட்டி அழைக்கின்றேன்!

    *****

    கூடா ஒழுக்கம்கொண்ட சிலரால் உண்மைத் துறவும் கேலிக்கும் கேள்விக்கும் உள்ளாகின்றது என்று சுட்டும் திரு. ஆ. செந்தில்குமார், துறத்தலும் ஒருவித அறமே எனினும் வெறுத்தலைவிட்டுப் பொறுத்துவாழ்தலே அதனினும் சாலச் சிறந்தது என்கிறார் முத்தாய்ப்பாய்!

    வாழ்வில் வெறுமை எதற்காக?

    வையத்தில் படர்ந்த போலிகள் மிகுதியால்
    பொய்யோஇத் துறவியின் தோற்ற மென்று..
    ஐயம் தோன்றிடக் குழம்பும் மனத்தில்..
    மெய்ந்நிலை உணர்தலே அனைத்திலும் மேன்மை..!

    முன்புள வினைகளைப் போக்கிட நினைக்கின்..
    அன்புளம் கொண்டு அனைத்துயிர் ஓம்ப..
    தென்புலத் தெய்வத்தின் அருளது கிட்டும்..
    துன்புள தெனினும் தெரித்து விலகும்..!

    துறவறம் பூண உருத்திராட்சை எதற்கு?
    துறவறத்திற் கென்றோர் அடையாளம் எதற்கு?
    அறநிலை வழுவாது சுற்றத்தைப் பேணல்..
    துறவறம் என்னும் நிலையினும் மேலாம்..!

    இறத்தலும் பிறத்தலும் இயற்கை எனினும்..
    துறத்தலும் ஒருவித அறமே எனினும்..
    வெறுத்தலை விட்டுப் பொறுத்து வாழ்ந்தால்..
    சிறத்தல் என்பது மாந்தர்க்கு திண்ணம்…!

    *****

    ”கடவுளைத் தேடுபவனும், உடலிச்சை தாண்டியவனும் தன் முகத்தை விடுத்துத் திறமையையே முன்னிறுத்துவான்! படத்தில் தெரியும் இந்தக் கரம் தேய்ந்துபோனதன்று! ஆய்ந்துவாழ்வோனின் அரத்தமுள்ள கையசைப்பே இது! மனிதா! உன் தனித்திறமையை அறி! வெற்றிக்கனியைப் பறி” என்று மாந்தர்க்கு நல்வழி காட்டுகின்றார் திரு. ஏ.ஆர்.முருகன்மயிலம்பாடி.

    உயிரின் சலனம்

    கடவுளைத் தேடுபவன்
    உடலிச்சை தாண்டியவன்
    எதையும் காட்டிக்கொள்ளாமல்
    எதார்த்தமாய் வாழ்கிறவன்
    இப்படித்தான் முகத்தைவிட
    திறமையை முன் நிறுத்துவான்!!
    வாழ்ந்து முடித்தவனுடைய
    தேய்ந்துபோன கரம் அல்ல!!
    ஆய்ந்து வாழ்கிறவனின்
    அர்த்தமுள்ள கையசைப்பு…
    அதிலுண்டு ஆயிரம்அர்த்தங்கள்!
    ஒவ்வொருவருவருக்குள்ளும்
    ஒளிந்துள்ளது தனித்திறமை
    வெளிக்கொண்டு வந்தால்
    வெளியுலகம் கொண்டாடும்!!
    சலனப்பட்டுச் சாய்ந்துவிட்டால்
    சரித்திரத்தில் இல்லை இடம்!
    விசனமுதறி எழுகிற போது
    விண்ணின்தூரம் பக்கமாகும்!
    ஐம்புலன்களடக்கம் கற்றால்
    அமைதிவழி மனம் இயங்கும்!!
    அனைத்தின்பமும் வசமாகும்!!

    *****

    ”விதவிதமாய் முகங்காட்ட விரும்பும் மனிதர்க்கிடையே முகத்தை மறைத்துக்கொள்ளும் விதிவிலக்குகள் வியப்பைத் தருகின்றன. மனிதனே! நீ முகங்காட்டு நல்ல மனிதனாக!” என்று அர்த்தமுள்ள அறிவுரை தருகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    முகம் காட்டு…

    விதம்விதமாய் முகங்காட்ட
    விரும்புகிறவன் மனிதன்..

    புகைப்படம் தொடங்கி
    திரைப்படம் வரைக்கும்
    திரும்பிடும் பக்கமெல்லாம்
    மூழ்கிக் கிடக்கிறான் மனிதன்
    முகம்காட்டுதலிலேயே..

    விதிவிலக்குகள்
    வியப்பிலாழ்த்துகின்றன,
    நல்லது செய்பவன்
    விளம்பரம் பிடிக்காமல்
    முகம் மறைத்தால்,
    மேலும் உயர்த்திடும்
    மதிப்பை..

    சிலர்
    தப்பைச் செய்துவிட்டு
    தண்டனைக்குப் பயந்து
    தலைகுனிந்து
    முகங்காட்ட மறுப்பது,
    தள்ளிவிடுகிறது கீழே
    மதிப்பை..

    மனிதனே நீ
    முகத்தைக் காட்டு-
    (நல்ல) மனிதனாக…!

    *****

    சிற்றின்பப் பற்றறுத்துப் பேரின்பம் காணவிழையும் சித்தம் தெளிந்த சித்தனின் சத்தான மொழிகளைத் தன் கவிதையில் தந்திருக்கின்றார் பெருவை திரு. பார்த்தசாரதி.

    சித்தன் ஆனேன்..சித்தம் தெளிந்தேன்..!

    சற்றே யோசித்தேன் சகலத்தையு மறிந்தேன்
    ……சித்தரின் வாழ்வியல் கூறுகளைக் கற்றேன்..!
    பற்றின்மை பற்றி அறிந்தபிறகு இல்லறம்
    ……விலக்கிப் பற்றறுத்து வாழும்கலை அறிந்தேன்..!
    புற்றீசல் போல் வாழ்வில் தொடர்ந்து வரும்
    …..பிரச்சினை அண்டாத தொரு வழியறிந்தேன்..!
    தற்காலிக வாசமாக எங்கும் அலைவேன்
    ……தரையும் மணலும் தங்கும் இருப்பிடமாகும்..!

    பொற்காலம் ஒன்று உண்டென்றால் அது
    …..பொய்ம்மை நீக்கி மெய்யறியும் வாழ்வாம்..!
    முற்காலம் வாழ்ந்திருந்த முற்றும் துறந்த
    …..முனிவனும் இதைத் தானே மொழிந்தான்..!
    பற்பல வாழ்வியல் அனுபவமும் முடிவில்
    …..பற்றற்ற வாழ்வுக்கே வழி வகுக்குமன்றோ..!
    சிற்றின்பம் தானே நம்மையும் வதைக்கிறது
    …..சிறிது காலமதைத் துறக்கவும் நினைத்தேன்..!

    நடமாடும் நம்முடம்பைப் பேணிக் காக்க
    …..நல்லபல வழிகளை நவின்றார் ஆன்றோர்..!
    அடக்க ஐம்புலனைச் சித்தரிடம் கற்றேன்
    …..ஆறறிவின் பயனை அடைய வேண்டியே..!
    தடங்கலிலாது தம்பிறவி கடக்க வொரு
    …..தகும் வழியெனச் சித்தனொடு சித்தனானேன்..!
    படமெடுத்து என்னைப் பிரபல மாக்காதீர்
    …..பன்முகத்தை நான் மறைத்துக் கொள்வேன்..!

    *****

    ”வரம்பின்றிப் பேசித்திரியும் மனிதர்கள் மத்தியில், ’மோனம் என்பது ஞானவரம்பு’ என்பதை உணர்ந்த பெரியோர் வெற்றுச்சொல் பேசார். மானுடனே! நீ பகட்டும் படாடோபமும் விடுத்துத் தாய் சேய் நலம் போற்று! நாவினையும் நன்முறையில் போற்று!” என்று பொருள்செறிந்த பொன்மொழிகளைத் தன் கவிதையில் பொதிந்து தந்துள்ளார் திருமிகு. அவ்வைமகள்.

    கற்றைச்சடைமுடித்தான் பூசிட்ட வெண்ணீர்மை
    ஒற்றைக்கரமுயர அவன் காட்டுமக் குறி காணீர்
    எற்றைக்கும் பேசும் நீர் பேசார்கள் பெரியோரே
    பொற்றைக் கருங்கல் போலசையாதசைந்திடுதல்
    நீற்றைப் புனைந்த நேர்மைமேல் நேர்மையென
    அற்றை நீதிகள் தாம் கூறியதவன் காட்டுகிறான்!
    சொற்றை போதனைகள் சொலாத சொல்லதனை
    இற்றைக்கேனும் நீர் பணிந்தவோ? பணிந்தார்கள்
    சோற்றுத் துருத்தியாய் வாழ்ந்தவோ? வாழ்ந்தார்கள்
    பேற்றை நினைந்தொழுகி சிறியரெவர் பெரியரென
    பெற்றைப் படம்பிடித்தோ சென்றனர் சென்றார்கள்?
    பூற்றைப் பொடிநிகழ்வைப் பாம்பாய்ப் படமெடுத்து
    போற்றிப் பொய்யுரைத்து பகட்டு மினுமினுக்கி வீழாதே! வீழாதே!
    நேற்றைக் கதைவிடுத்து பொறை பொறாமை விட்டு
    பிற்றைக்கும் நிலைக்குமாறு நீர் செய்த ஒழுக்கென்ன?
    தேற்றையொளிக்கூர்மை மழுங்காபுத்தியென வலக்கை
    தோற்றிடினும் நீ திடங்கொள்வாய்! மடங்கொள்வாய்!
    இறைக்கை நிலைத்திருக்க உன்கர லீலைதனைப் பேராயம் செய்யாதே!
    உறைக்கைக் காதலுடன் உடல்குழைய நெக்குருகி விழிநீரால் நீ உரையாடு!
    நெற்றைப் பயிர் காத்து, மைவிடாதெழுநீல வான்போர்வை நீ போர்த்து!
    புற்றைப் புறந்தள்ளி, கர்த்தவ்யம் நீ காத்துத் தாய் போற்று! சேய் போற்று!
    சொற்றைக் குறைத்தொழுகி வாயாற் பிதற்றாது நா போற்று! தொனி போற்று!
    சோற்றைக் குறைத்தொழுகி உடலால் பிறளாது கற்பெனும் காவல் போற்று!
    கற்றை நீ கல்விதனை, எழுத்ததனை விழுமியமாய் குற்றமற வார்த்துப் போடு!

    *****

    ”பெருநோய் கொண்ட என்னைப் படமாக்கிப் பத்திரிகையில் போட்டு வருவாய் ஈட்ட முயலாதீர்!” என்று எச்சரிக்கும் மனிதரைத் தன் கவிதையில் காட்சிப்படுத்தியிருக்கின்றார் திரு. சி. ஜெயபாரதன்.

    தீண்டத் தகாதவன்

    கிழிந்த உடுப்பில் கிடக்கும்
    இழிந்த இனத்தைச்
    சேர்ந்தவன்!
    கழிப்பிடம் சுத்தம் செய்யும்
    கறுப்பி
    என் பெண்சாதி!
    மாடுகள் மேய்த்து
    காடுகளில் அலைவது
    என் மகன்!
    குப்பை வண்டி வாகனம்
    சப்பாணியின் தேர்!
    பெண்சாதிக்கு
    தினக்கூலி
    பிச்சைச் சோறு!
    குஷ்ட ரோகி நான்,
    தேமல் படந்திருக்கு
    முகத்தில்!
    படம் எடுக்க வேண்டாம்
    என்னை!
    பத்திரிகையில் முகத்தை
    வித்து உடனே,
    பணமாக்க வேண்டாம்
    சாமி!

    *****

    மனத்தைத் தொடும் மகத்தான சிந்தனைகளைத் தம் கவிதையில் பளீரிட வைத்த வித்தகக் கவிஞர்கள் அனைவருக்கும் என் மனங்கனிந்த பாராட்டும் நன்றியும்!

    இனி, இவ்வாரத்தின் சிறந்த கவிதையாய்த் தெரிவுபெற்றிருப்பது…

    பெயரிலி

    நிறத்தைப் பாரத்து முகம் சுளிக்காதே!
    எளிமையைக் கண்டு எள்ளி நகையாடாதே!
    அமைதியாக இருப்பதால் அறிவுரைகள் அடுக்காதே!
    அயலான் என்பதால் அத்துமீறிப் பேசாதே!

    நான் கேளாமலே
    எனக்கும் ஜாதிக்குறியிட்டு – உன்
    சிறுமதியின் சிறையில் சீரழிக்காதே!

    போதும் நிறுத்து!

    என்னைப் படச்சுருளில் புதைத்து விடாதே!
    நான் அடையாளம் தொலைத்தவன்

    என்னைக் கேள்விக்கு உட்படுத்தாதே!
    நான் சுதந்திரத்தை நேசிப்பவன்
    தொல்லையின்றித் திரிபவன்
    எல்லைகள் கடந்தவன்
    அவமானங்களுக்கு அப்பாற்பட்டவன்
    அசாதாரணமானவன்!

    நீயோ சராசரி பாதசாரி,
    ஆகையால்…
    எதையும் மதிப்பிடாமல்
    சலனமின்றிக் கடந்து போ!

    தம் முகத்தைக் காட்டிப் பிறர் அகத்தைக் கவர நினைக்கும் மாந்தர்களே இந்த அவனியில் அதிகமாய்ப் பவனி வருபவர்கள். அத்தகு சராசரிகள் நடுவில் படச்சுருளில் புதையவும், சாதிக்குறிக்குள் சிக்கிச் சிதையவும் விரும்பாத அசாதாரண மனிதர் இவர் என்று இந்தப் புகைப்பட மனிதருக்குத் தனித்ததோர் தகைமையைத் தந்திருக்கும் இந்தக் கவிதையின் ஆசிரியர் திருமிகு. சக்திப்ரபா இவ்வாரத்தின் சிறந்த கவிஞர் எனும் பெருமையைப் பெறுகின்றார். அவருக்கு என் பாராட்டு!

     

     

     

    Share
  • வாழ்ந்து பார்க்கலாமே 19

    க. பாலசுப்பிரமணியன்

     

    சிந்தனைகள் வாழ்வின் வளத்திற்கு அடிப்படை

    வாழ்க்கையின் வளம் என்பது எல்லோருக்கும் ஒன்றாக அமைவதில்லை. பிறக்கும் நாடு, ஊர், அங்குள்ள சமுதாய பழக்க வழக்கங்கள், இயற்கை வளங்கள் மற்றும் அதன் தாக்கங்கள், குடும்பச் சூழ்நிலைகள், போன்ற பல ஒருவருடைய வாழ்க்கைக்கு ஆதாரமாக அமைகின்றன. ஆனால் இவற்றையெல்லாம் கடந்து அறிவாலும், முயற்சியாலும், உழைப்பாலும் முன்னேறித் தன்னுடை வாழ்க்கை வளத்தை மாற்றிக்கொண்டவர்கள் பலர். இவர்களின் அறிவு, உழைப்பு, செல்வம் எல்லாவற்றிக்கும் அடிப்படையாக அமைந்தது அவர்கள் சிந்தனைத் திறனே. வெறும் அதிர்ஷ்டத்தால் முன்னேறியவர்கள் என்று எண்ணப்படுவார்கள் மிகக் குறைவு. அவர்களுக்கும் வாழ்வில் சிந்தனை பல நேரங்களில் உதவியாக இருந்துள்ளது.

    உலகின் மிகப் பெரிய சிந்தனையாளரான பிளாட்டோ என்பவர் கூறுகின்றார் “சிந்தனை என்பது நீங்கள் உங்கள் ஆன்மாவோடு நடத்தும் ஒரு உரையாடல்.” (Thinking: Talking of the soul with itself -Plato) எனவே இளம் வயது முதல் நாம் குழந்தைகளுக்குச் சிந்தனைத் திறனை வளர்ப்பது மிக அவசியம். பல சமுதாயங்களில் முந்திய நாட்களின் கருத்துக்கள் அடுத்த சமுதாயத்தின் மீது புகுத்தப்படுகின்றன. இதனால் அந்தச் சமுதாயத்தின் வளர்ச்சி குன்றிவிடுகின்றது. அந்தச் சமுதாயத்தின் மக்கள் பெரும்பாலும் அடிமைகளாக வாழ்கின்றார்கள். அவர்களின் தன்னம்பிக்கை முன்னேற்ற உணர்ச்சி ஆகியவை பெருவாக பாதிக்கப்படுகின்றன

    சரித்திரத்தை திரும்பிப் பார்க்கும் பொழுது எவ்வாறு பல நாடுகளில் மக்களின் சிந்தனைத் திறன் மீது ஆதிக்கம் செலுத்தி அவர்களைத் தங்கள் ஆட்சிக்கு அடிமைகளாக வைத்திருந்தனர் என்பதற்கான பல சான்றுகள் கிடைக்கின்றன. இதை மாற்றுவதற்கான ஒரே வழி சிந்தனையை வளர்க்கும் கல்வி முறையே. ஆனால் துரதிருஷ்டவசமாக நமது கல்வி முறை மாணவர்களின் சிந்திக்கும் திறனுக்குச் சவாலாக அமைந்துள்ளது. அவர்களை வெறும் ‘நினைவுப் பெட்டகங்களாக” மாற்றி ‘தொழில் சார் சமுதாயத்தில்’ இருந்தது போல் வெறும் இயந்திரங்களாக மாற்றிக்கொண்டு இருக்கின்றது. இந்த நிலை ஒரு வளரும் மறுமலர்ச்சி தேடும் சமுதாயத்திற்கு ஏற்றதல்ல. .

    “நான் சொன்னதைச் செய்’ என்பதும் “உனக்கு கேள்விகேட்கும் உரிமையோ தகுதியோ அல்ல” என்ற அணுகுமுறையைக் கொள்வதும் ஒரு ஆதிக்க மனப்பான்மையை வளர்க்கும். இதனால் கருத்துக்கள் பரிமாற்றம் குறைந்து மூட நம்பிக்கைகளும் அறிவியல் சிந்தனையில் தேக்கங்களுமே ஏற்படும். “உங்கள் சிந்தனையின் ஆளுமை எப்படி இருக்கின்றதோ அப்படியே உங்கள் வாழ்க்கை அமையும்:” என்று பல பேரறிஞர்கள் கூறியிருக்கின்றனர்.

    பல நாட்டுக்கு கல்வி முறைகளில் ஆரம்பக்  கல்வி முதலே குழந்தைகளுக்கு சிந்திக்கும் திறனையும், கேள்விகள் உருவாக்கும் திறனையும் வளர்ப்பதில் கவனம் செலுத்துகின்றனர். “ஒரு மனிதனை அவன் அளிக்கும் பதில்களால் அல்லமால் அவன் கேட்கும் கேள்விகளால் எடைபோடு” (Judge a man by his questions rather than by his  answers) என்று வோல்டைர்(Voltaire) என்ற தத்துவ மேதை கூறுகின்றார். கேள்விகள் ஒரு மனிதனின் அறிவின் ஆரோக்கியமான

    வளர்ச்சிக்கு அடிப்படை. கேள்விகள் வளமான சிந்தனைக்கு அடிப்படை. இதே நேரத்தில் நாம் பல காலங்களால் போற்றப்படும் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளவும் அவைகளைப் போற்றவும் அறிந்துகொள்ள வேண்டும்.

    நாம் சிந்திக்க விழைவதால் நம்முடைய முன்னோர்கள் கூறிய கருத்துக்களும் சிந்தனைகளும் தவறானது என்றோ ஆதிக்க உணர்வோடு உள்ளது என்ற கருத்தோ கொள்ளுதல் தவறாக இருக்க வாய்ப்புண்டு. காலத்திற்கு ஏற்ற முரண்பாடான சிந்தனைகளை மாற்றுதலும் பழமைக்கு எதிர்மறையல்ல.

    சில ஆண்டுகள் முன்னால் நான் ஒரு பள்ளியிலே பதினொன்றாவது வகுப்பில் படிக்கும் மாணவர்களிடம் உரையாடிக்கொண்டிருந்த பொழுது ஒரு மாணவன் கேட்ட கேள்வி என்னை அதிர்ச்சி செய்தது. “அய்யா. நீங்கள் உங்கள் வீட்டிற்கு பால் எங்கே வாங்குகின்றீர்கள்?”  நான் சிறிது நேரம் அந்தக் கேள்வியின் உள்நோக்கம் அறியாமல் திகைத்தேன். அமைதியாக “அருகில் உள்ள ஆவின் பாலகத்தில் சென்று” என்று பதிலளித்தேன். அதைத் தொடர்ந்து அவன் கேட்டான் “உங்கள் வீட்டிற்கு மளிகைப் பொருட்கள் எங்கிருந்து வாங்குகின்றீர்கள்?”  தயக்கத்துடன் பதிலளித்தேன் “அருகில் உள்ள மளிகைக் கடையிலிருந்து”  தன் கேள்விக்கணைகளை நிறுத்தாமல் அவன் கேட்டான் “உங்கள் மருந்துகளை எங்கிருந்து வாங்குகின்றீர்கள்?”

    உடன் பதிலளித்தேன் “அருகில் உள்ள மருந்தகத்திலிருந்து”

    அவன் சிரித்துக்கொண்டே கேட்டான் “நீங்கள் பால் வாங்க ஒரு இடத்திற்கும் மளிகைப் பொருட்கள் வாங்க ஒரு இடத்திற்கும் மற்றும் மருந்து வாங்க இன்னொரு இடத்திற்கும் செல்கின்றீர்கள். நான் மட்டும் இயற்பியல், வேதியல் மற்றும் கணக்கு போன்ற எல்லா பாடங்கையும் ஏன் ஒரே பள்ளியில் படிக்க வேண்டும். நான் வெவ்வேறு பள்ளிகளில்  வெவ்வேறு பாடங்களை படிப்பதில் என்ன தவறு? முடியுமா?”  எனக் கேட்டான். நான் திகைத்து நின்றேன். கேள்வி சரியா தவறா என்பதே கருத்தல்ல. அந்த மாணவனின் சிந்தனை என்னை மிகவும் கவர்ந்தது. ஒருக்கால் நாளைய பள்ளிகள் அப்படித்தான் அமையுமோ?”

    “ஒரு பிரச்சனையை அணுகுவதற்கு அதன் உள்வட்டத்தில் இருந்து சிந்தித்தால் அதற்கு விடை கிடைக்காது. அந்த வட்டத்திற்கு வெளியே சென்று சிந்திக்க வேண்டும்”  (You cannot solve the problems from the same leel of consciousness which created them) என்று மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் (Albert Einstein) கூறுகின்றார்.

    சிந்தனைகள் இல்லாத வாழ்வு சிறக்காது. சிந்தனைத் திறன்களை நாமும் வளர்த்து நமது குழந்தைகளையும் வளர்க்க உதவி செய்யலாமே !

    Share
  • பழந்தமிழர்கள் வாணிபத்தால் பெற்றவளம்

    முனைவர் கு.சரஸ்வதி, 

    உதவிப்பேராசிரியர், தமிழாய்வுத்துறை,

    சிதம்பரம்பிள்ளை மகளிர் கல்லூரி, திருச்சி.

     

    சங்ககாலத்தில் தமிழகம் கிழக்கு, மேற்கு, தெற்கு ஆகிய மூன்று பக்கங்களிலும் நீண்ட கடற்கரையைக் கொண்டிருந்தது. கிழக்கே குணகடலும்,  மேற்கே குடக்கடலும், தெற்கே கடற்கரை பக்கமாக இருந்த சேரநாடு மிகப்பிற்காலத்தில் 500 ஆண்டுகளுக்கு முன்பு மலையாளம் பேசப்படுகிற நாடாகப் பிரிந்து இப்போது கேரளம் என்று பெயர் பெற்றிருக்கிறது. கேரளம் தனியொரு மாநிலமாகப் பிரிக்கப் படுவதற்கு முன்பு நெடுங்காலமாகச் சேரநாடு என்று பெயர் பெற்று தமிழ்நாட்டின் ஒரு கூறாக இருந்தது.

     

    “வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்

     பிறவும் தம்போற் செயின்”(குறள்-120).

     

    என்கிறார் வள்ளுவர். பண்டைக்காலம் முதல் தமிழ்நாடு வாணிகத்தில் சிறந்து விளங்கியுள்ளது. தம்மிடம் உள்ள பொருளை அல்லது நாணயத்தைக் கொடுத்துத் தம்மிடம் இல்லாத பொருளைப் பெறுவது வாணிகம் எனப்படும். ஒவ்வொரு நிலத்திற்கும் ஏற்பத் தொழில்கள் வேறுபடும். தொழில் வேறுபாடுகளுக்கு ஏற்ப வாணிகமும் வேறுபடும். தம்நிலத்தில் கிடைத்த பொருளை வேற்று நிலத்திற்குக் கொண்டு சென்று விற்றுப் பொருள்களைப் பெற்றுள்ளனர். தமிழ்நாட்டு வாணிபத்தை இருபிரிவுகளாக பிரிக்கலாம். ஒன்று தரைவழி வாணிபம் மற்றொன்று கடல்வழி வாணிபம். அவற்றின் வழி பழந்தமிழர்கள் பெற்ற வளத்தினை இக்கட்டுரை ஆராய்கிறது.

     

    தரைவழி வாணிபம்

                    தரைவழி வாணிபக்குழுக்கு சாத்து என்று பெயர். அயல் நாடுகளுக்குத் தரை வழியாகச் சென்று வாணிகம் செய்த சாத்தர் கழுதைகள், எருதுகள்,வண்டிகள் ஆகியவற்றில் வாணிகப் பொருள்களை ஏற்றிக்கொண்டு கூட்டமாகச் செல்வர். அவர்கள் செல்கின்ற பாலை நில வழிகளில் வழிபறிக் கொள்ளையர்கள் கொள்ளையடித்ததால் அவர்களிடமிருந்து தங்களைக் காத்து கொள்வதற்காக வாணிகச் சாத்தர் தங்களோடு வில்வீரர்களையும் அழைத்துக்கொண்டு சென்றனர்.

     

                    வாணிகச்சாத்தை வேடர்கள் கொள்ளையடித்ததைச் சங்க நூல்கள் கூறுகின்றன. மருதன்இளநாகனார் பாலை நிலத்தின் வழியே சென்ற வாணிகச் சாத்தைக் கொள்ளையிட்ட வேடரைப் பற்றி,

     

    “மழைபெயல் மறந்த கழைதிரங்கு இயவில்

    செல்சாத்து எறியும் பண்பில் வாழ்க்கை

    வல்வில் இளையர்”(அகநானூறு-பா.245)

    என்று கூறுகிறார்.

    “……………………………………… சாத்தெறிந்து

    அதர்கூட்டுண்ணும் அணங்குடைப் பகழிக்

    கொடுவில் ஆடவர்” (அகநானூறு-பா.167).

     

                    என்று வாணிகச்சாத்துடன் பாலை நிலத்து மறவர் செய்த போரை அகநானூறு குறிப்பிடுகின்றது.

     

                    பலாப்பழம் அளவாகச் சிறு சிறு பொதிகளாகக் கட்டப்பட்ட மிளகு மூட்டைகளைக் கழுதைகளின் மேல் ஏற்றிக்கொண்டு வாணிகச் சாத்து தங்களுடைய வில் வீரர்களோடு சென்றதையும், ஆங்காங்கே வழியில் இருந்த சுங்கச் சாவடிகளில் அரசனுடைய அலுவலர்கள் அவர்களிடமிருந்து சுங்கம் வாங்கினார்கள் என்பதையும் பெரும்பாணாற்றுப்படை எடுத்துரைக்கின்றது.

     

    “தடவுநிலைப் பலவின் முழுமுதற் கொண்ட

    சிறுசுளைப் பெரும்பழம் கடுப்ப மிரியல்

    புணர்ப்பொறை தாங்கிய வடுவாழ் நோன்புறத்து

    அணர்ச் செவிக் கழுதைச் சாத்தொடு வழங்கும்

    உல்குடைப் பெருவழிக் கவலை காக்கும்

    வில்லுடை வைப்பின் வியன் காட்டி”                             (பாடல் 77)

     

    என்ற பாடல் அடிகள் சுங்கவரி பெறப்பட்டமையை குறிப்பிடுகின்றது.

     

    தரைவழிப் போக்குவரத்துச் சாதனங்கள்

                    வாணிகப் பொருட்களை ஓரிடத்திலிருந்து வேறோர் இடத்திற்குக் கொண்டு செல்ல எருது,கழுதை,வண்டி,படகு, பாய்மரக்கப்பல்களைப் பயன்படுத்தினர். சிந்து, பாரசீகம், அரபி நாடுகளிலிருந்து குதிரைகள் அக்காலத்தில் கொண்டு வரப்பட்டன. கோவேறு கழுதைகளுக்கு அத்திரி என்று பெயர் வழங்கப்பட்டது. நாகரிகமுள்ள செல்வ நம்பிகள் அக்காலத்தில் கோவேறு கழுதைகளை ஊர்தியாக பயன்படுத்தினார்கள். ஆனால் பொதி சுமக்கவும்,சரக்கு வண்டிகளை, இழுக்கவும் அவற்றைப் பயன்படுத்தவில்லை, ஊர்தியாக மட்டும் பயன்படுத்தினார்கள். அத்திரிக்கு இராசவாகனம் என்றும் பெயர் வழங்கப்பட்டது.

     

                    பாண்டிநாட்டுக் கொற்கைக் கடலுக்கு அருகில் பரதவர் ஊருக்கு ஒருவன் அத்திரி பூட்டின வண்டியில் சென்றான் என்பதை,

     

    “கொடுநுகம் நுழைந்த கணைக்கால் அத்திரி

    வடிமணி நெடுந்தேர் பூண”(அகநானூறு-பா.350).

     

    என்று அகநானூறு குறிப்பிடுகின்றது.

     

                    வாணிகப் பொருள்களைக் கொண்டு செல்வதற்கு எருதுகள் பயன்பட்டன. மாட்டுவண்டிகளில் வாணிகப் பண்டங்களை ஏற்றிக்கொண்டு சென்றனர். வணிகர்கள் தங்களோடு வில் வீரர்களையும் அழைத்துக்கொண்டு சென்றார்கள்.

    “ஆரை வேய்ந்த அறைவாய்ச் சகமம்”(பாடல் வரி 50).

    என்று வாணிகப் பொருள்களை மாட்டு வண்டிகளில் எடுத்துச் சென்றதை பெரும்பாணாற்றுப்படை சுட்டுகின்றது.

     

                    பாறைகளும், குன்றுகளும் உள்ள நாட்டிற்குள் செல்ல கழுதைகள் பயன்பட்டன. கழுதைகளின் முதுகின்மேல் பொதிகளை ஏற்றி வாணிகச் சாத்து ஒன்று சேர்ந்து சென்றதை,

     

     “நெடுஞ்செவிக் கழுதை குறுங்கால் ஏற்றைப்          

    புறம்நிறை பண்டத்து பொறை” (அகநானூறு- பா.343)

     

    என்ற அகநானூற்றுப் பாடல் கூறுகின்றது.

     

    பண்டமாற்று

                    சங்ககாலத்தில் வாழ்ந்த தமிழர் அன்றாடத் தேவையான அரிசி, பருப்பு, உப்பு, பால், தயிர், மீன், இறைச்சி முதலான பொருள்களைக் காசு கொடுத்து வாங்காமல் பண்டமாற்று செய்து கொண்டனர். பெரிய பட்டினங்களிலும் நகரங்களிலும், பணம்கொடுத்து பொருளை வாங்கும் முறை இருந்த போதிலும் ஊர்களிலும், கிராமங்களிலும் பொதுவாகப் பண்டமாற்று முறையே வழக்கத்தில் இருந்தது.

     

                    முல்லைத்திணை பாடலொன்றில் இடையன் பாலைக்கொடுத்து அதற்கு ஈடாக மருத நிலத்து மக்களிடமிருந்து அரிசி, கேழ்வரகு, தினை போன்ற தானியத்தை பெற்றுக்கொண்டதை பின்வரும் அடிகள் சுட்டுகின்றன.

     

     “பாலொடு வந்து கூழொடு பெயரும்

    ஆடுடைஇடைமகன்” (குறுந்தொகை-பா-221)

     

                    குறிஞ்சி நிலத்து வேடன் தான் வேட்டையாடிக் கொண்டுவந்த மான் இறைச்சியை உழவனிடத்தில் கொடுத்து அதற்கு ஈடாக நெல்லை மாற்றிக் கொண்டதை கோவூர் கிழார் புறநானூற்றின் வாயிலாக கூறுகிறார்.

     

     “கானுறை வாழ்க்கைக் கதநாய் வேட்டுவன்

    மான்தசை சொரிந்த வட்டியும் ஆய்மகள்”(புறநானூறு-பா.33).

     

    நெய்தல் நிலத்தில் வசித்த பரதவர் கடலிலே சென்று சுறா, இறால், முதலான மீன்களை பிடித்து வந்தார்கள். அவர்கள் கொண்டு வந்த மீனைப் பரதவ மகளிர் எளிதில் தானியத்துக்கு மாற்றினார்கள் என்பதை நற்றிணையில் அமைந்த

     

     “இனிதுபெறு பெருமீன் எளிதினின் மாறி” (நற்றிணை-பா.239)

     

    என்ற அடிகள் புலனாக்குகின்றது. இவ்வாறு உணவு பொருள்களை சங்காலத்தில் பண்டமாற்றமாகவும் கொண்டதை சங்க இலக்கிய பாக்கள் உணர்த்துகின்றன.

    நாணய மாற்று

                    பண்டமாற்று வழங்கிய காலத்திலும் காசு வழங்கப்பட்டது. செம்பு, வெள்ளி, பொன் முதலிய காசுகள் வழங்கி வந்தனர் என்பதையும், சங்க இலக்கிய அடிகள் பிரதிபலிக்கின்றன. காசுகள் நெல்லிக்காயின் வடிவம்போல உருண்டு சிறிது தட்டையாக இருந்தன என்றும் பாலை நிலத்து நெல்லிக்காய்கள் பொற்காசுகள் உதிர்ந்துகிடப்பன போலக் காணப்பட்டன என்பதையும்

     

                    ‘’புல்இலை நெல்லிப் புகரில் பசுங்காய்

    கல்லதர் மருங்கில் கடுவளி உதிர்ப்பப்

    பொலஞ்செய் காசின் பொற்பத்தாஅம் அத்தம்”

                                                                                                                                                    (அகநானூறு பா .363)

    என்று வெண்ணாகனார் கூறியுள்ளார்.

     

    நாளங்காடி அல்லங்காடி

                    சங்ககால உள்நாட்டு வாணிபத்தில் இருவகையான அங்காடிகள் இருந்தன.அவை 1) நாளங்காடி 2) அல்லங்காடி என்பனவாகும். நாளங்காடி  என்பது பகல் நேரத்தில் இருந்த அங்காடியாகும். அல்லங்காடி என்பது இரவு நேர விற்பனைக் கூடமாகும். மதுரையில் அங்காடிகளில் வியாபாரம் நடந்த விதத்தையும் அங்கு கூடியிருந்த மக்களது கூட்டத்தையும் பற்றி மதுரைக்காஞ்சி சிறப்பாக கூறுகின்றது. அல்லங்காடியில் இருந்து வாணிகர் எங்கு வியாபாரம் செய்யச் சென்றாலும் கூட்டம் கூட்டமாகச் சென்றனர். இதற்கு காரணம் பெரும்சாலைகளில் கள்வர்கள் அதிகமாக இருந்ததால் வாணிகர்கள் ‘’வாணிகச் சாத்து” என்ற குழுக்களை ஏற்படுத்திக் கொண்டனர்.

     

    கடல் வாணிபம்

                    தமிழ்நாட்டின் மூன்று பக்கங்களிலும் கடல்  சூழ்ந்திருந்தபடியால் தமிழர் இயற்கையாகவே கடற்பயணம் செய்வதிலும் கப்பல் வாணிகம் செய்வதிலும் தொன்றுதொட்டு ஈடுபட்டிருந்தார்கள். கிழக்கு கடற்கரை, மேற்கு கடற்கரை போன்ற இடங்களில் கடல் வாணிபம் சிறந்து விளங்கின என்பதை பத்துப்பாட்டு நவில்கின்றது.

     

                    தமிழரின் கடல் வாணிகத்தைக் கிழக்குக்கடல் வாணிகம் என்றும் மேற்குக்கடல் வாணிகம் என்றும் இரண்டு பிரிவாகப் பிரிக்கலாம். தெற்கே குமரிக்கடலுக்கு அப்பால் நிலம் இல்லாத படியால் தெற்கு கடலில் வாணிகம் நடக்கவில்லை. கிழக்குக் கடல் வாணிகம் என்பது குணக்குக் கடலாகிய  வங்காள விரிகுடாக்கடலில் உள்ள இலங்கை, ஆந்திரம், கலிங்கம், வங்காளம் காழகம்(பர்மா), சாவகம் முதலிய நாடுகளுடன் செய்யப்பட்ட வாணிகம் ஆகும். மேற்குக்கடல் வாணிகம் என்பது குடகுக்கடலாகிய அரபிக்கடலில் செய்யப்பட்ட வாணிகம். அங்கு கிரேக்க, ரோம, எகிப்து தேசத்து யவனர்களுடனும் அரபிநாட்டு அராபியருடனும் வாணிகம் நடந்தது.

     

    கிழக்குக் கடல் வாணிகம்

                    தமிழர்களின் வாணிகக் கப்பல்கள் மரப்பலகைகளில் இரும்பு ஆனி அடித்து இணைக்கப்படாமல் பனைநார், தென்னை நாரினால் இணைத்து கட்டப்பட்டிருந்தன. இந்தக்கப்பல்களின் பாய்மரங்களில் துணிப்பாய்கள் கட்டப்பட்டிருந்த படியால் காற்றினால் தள்ளப்பட்டு நினைத்த இடங்களுக்குச் சென்றன. இந்தப்பாய்மரக் கப்பல்களில் தமிழ் வாணிகர் சரக்குகளை ஏற்றிக்கொண்டு அயல்நாடுகளுக்குக் கொண்டு சென்றுவிற்று அங்குள்ள பொருள்களை ஏற்றிக்கொண்டு தமிழகத்திற்கு வந்தனர்.

     

                    அக்காலத்தில் உலகப்புகழ் பெற்ற காவிரிப்பூம்பட்டினத்து துறைமுகத்தில் வெவ்வேறு மொழிகள் பேசும்  வெவ்வேறு நாட்டு கப்பல் வாணிகர் வந்து தங்கினார்கள் என்று சங்கச் செய்யுள் பின்வருமாறு கூறுகின்றன.

     

                                                    மொழிபல பெருகிய பழிதீர் தேஎத்துப்

                                                    புலம்பெயர் மாக்கள் கலந்தினி துறையும்

                                                    முட்டாச் சிறப்பிற் பட்டினம்.       (பட்டினப்பாலை.பா.216-218)

     

                    சாவகத்தீவுகளுக்கு அருகில் வடக்கே உள்ள காழகம், கடாரம், மலயம் முதலிய நாடுகளுடன் தமிழர் வாணிகம் செய்தனர்.’’ காழகத்து ஆக்கம்’’ என்று பட்டினப்பாலை கூறியபடியால் காழகத்துப் பொருள்களும் தமிழகத்துக்கு கொண்டுவரப்பட்டன.

     

                    தமிழகத்துக்கு வடக்கேயுள்ள கிழக்குக்கடல் துறைமுகப் பட்டினங்களிலும் தமிழர்வாணிகம் செய்தார்கள். வடக்கே வங்காளத்தில் கங்கையாற்றுத் துறைமுகத்துடன் அவர்கள் வாணிகம் செய்ததை “வடமலைப்பிறந்த பொன்னும் மணியும்’’ ’’கங்கையும் வாரியும்’’ என்று பட்டினப்பாலை கூறுகிறது.    

     

    மேற்குக்கடல் வாணிகம்

                    அராபியரும், பாரசீகரும், எகிப்தியரும், யவனரும் மேற்குக் கரையில் தமிழர்களோடு வாணிகஞ் செய்தனர். அக்காலத்தில் சேர நாட்டில் முக்கியமான ஏற்றுமதிப் பெருளாக இருந்தது மிளகு. மேற்குக்கடற்கரைத் துறைமுகங்களில் ஆதி காலத்தில் வாணிகஞ் செய்யத் தொடங்கியவர்கள் அராபியர்.முசிறித் துறைமுகத்துக்கு அருகில் கொடுமனம், பந்தர் என்னும் ஊர்கள் இருந்தன. பந்தர் என்னும் இடத்தில் அராபிய வாணிகர் தங்கி வாணிகம் செய்தார்கள். அரபி மொழியில் பந்தர் என்ற சொல்லுக்கு அங்காடி அல்லது  வாணிகம் செய்யும் இடம் என்பது பொருள். பதிற்றுப்பத்தில் பந்தர் என்னும் இடம் குறிக்கப்படுகிறது.

     

                                                    கொடுமணம்பட்ட வினைமாண் அருங்கலம்

                                                    பந்தர்ப் பயந்த பலர்புகழ் முத்தம். (எட்டாம்பத்து பா 74 வரி 4.5)

     

                    பந்தரில் பொன்நகைகளும் முத்துக்களும் விற்கப்பட்டன என்பது அறியமுடிகிறது. யவனர்கள் வருவதற்கு முன்பே அராபியர் சேரநாட்டில் வந்து வாணிகம் செய்தனர். அவர்கள் முக்கியமாகத் தமிழ்நாட்டிலிருந்து மிளகை ஏற்றிக்கொண்டு சென்று எகிப்து நாட்டு அலக்ஸாந்திரியா துறைமுகப்பட்டினத்தில் விற்றனர்.

     

    வாணிகர் பண்பு

                    வணிகர்களின் பண்பினை பட்டினப்பாலை மிக நயம்பட கூறுகின்றது.

     

                    நெடுநுகத்துப் பகல்போல

                    நடுவுநின்ற நன்னெஞ்சினோர்

                    வடுவஞ்சி  வாய்மொழிந்து

                    தமவும் பிறவு மொப்பநாடிக்

                    கொள்வதுஉ மிகை கொளாது

                    கொடுப்பதூஉம் குறைகொடாது (பட்டினப்பாலை-பா வரி 206-210)

     

    என்று நடுநிலைமையோடு நடந்ததை எடுத்துரைக்கின்றது.

     

    தொகுப்புரை

                    சங்ககாலத் தமிழக பொருளாதார வளர்ச்சியில் வாணிபம் முக்கிய பங்கு வகிக்கின்றது.உள்நாட்டு வர்த்தகம் பெரும்பாலும் பண்ட மாற்று முறையிலேயே நடைபெற்றபோது அயல்நாட்டு வர்த்தகம் நாணய மாற்றுமுறையில் நடைபெற்றது.

     

                    வாணிபத்தொடர்பு  மட்டுமின்றி பண்பாட்டுத் தொடர்பு, நாட்டின் பொருளாதாரம் வாணிகர்களால் சிறப்புற்றது. பண்டைத் தமிழரின் வாணிகம் மிகச்சிறந்த முறையில் எக்காலத்தவரும், எந்நாட்டவரும் போற்றும் வகையில் அமைந்திருந்தது என்பதை சங்க இலக்கியங்கள் வழி அறியமுடிகின்றது.

    பார்வை நூல்கள்

    1. கதிர் முருகு, பத்துப்பாட்டு , சாரதா பதிப்பகம், இராயப்பேட்டை, சென்னை – 600 004 – முதற்பதிப்பு மே (2009)
    2. வெ.கிருஷ்ணசாமி, தமிழ் இலக்கியத்தில் பயணச் செய்திகள், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம் – முதற் பதிப்பு – டிசம்பர் (2003).
    3. சீனி. வேங்கடசாமி, பழங்காலத் தமிழர் வாணிகம், நீயூ செஞ்சுரிபுக் ஹவுஸ், சென்னை-600098 – முதற்பதிப்பு மார்ச் (1974)
    4. 4. அ.மாணிக்கனார்(உரை),  அகநானூறு,  வர்த்தமானன் பதிப்பகம்,   சென்னை-600017 – முதற்பதிப்பு-1999.

     

    Share
  • எங்கே இருக்கிறது ஜனநாயகம்?

    நாகேஸ்வரி அண்ணாமலை

     

    கர்நாடகத்தில் சட்டமன்றத் தேர்தல் வருகிறது.  எல்லாக் கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்திருக்கின்றன.  முதல் அமைச்சர் பதவிக்கு பா.ஜ.க. சார்பில் அறிவிக்கப்பட்டிருப்பவர் எடியூரப்பா.  இவர் ஊழலிலே திளைத்து ஊறிப்போனவர்; சிறைக்குச் சென்றவர்.  ஊழலற்ற இந்தியாவை உருவாக்கப் போகிறோம் என்று சொன்ன பா.ஜ.க.வின் வேட்பாளர். மோதி இவரை வெகுவாகப் புகழ்ந்து பேசி, மக்களுக்கு அறிமுகப்படுத்தும் படம் தினசரிகளில் வெளியானது.   ஜி.எஸ்.டி.., பணமதிப்பிழப்பு, நீட் தேர்வு என்று பல திட்டங்களை அறிவித்து நாட்டில் கள்ளப் பணத்தை ஒழித்து, ஊழலே இல்லாத நாடாக ஆக்கப் போவதாக அறிவித்த மோதியின் கையாலேயே தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் எடியூரப்பா.  இதை எப்படி ஜீரணித்துக்கொள்வது என்று தெரியவில்லை.  இவர் மட்டுமல்ல, கர்நாடகத்தில் பல வேட்பாளர்கள் இவரைப்போல் மெகா ஊழல் புரிந்தவர்கள்தான்.

     

    காஷ்மீரில் ஒரு எட்டு வயது முஸ்லீம் சிறுமிக்கு நடந்த கொடூரம் அமெரிக்காவரை வந்து நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் தலையங்கம் எழுதுபவர்களும் பத்தி எழுதுபவர்களும் இந்தியப் பிரதமர் அந்தச் சம்பவத்தைப் பற்றி  மௌனம் சாதித்ததைக் கண்டிக்கும் அளவுக்கு உலகத்தின் கவனத்தைக் கவர்ந்திருக்கிறது.  முஸ்லீம் மதத்தைச் சேர்ந்தவள் என்பதாலேயே அந்தச் சிறுமி இத்தகையக் கொடூரத்திற்கு ஆளாகியிருக்கிறாள் என்பதை அறியும்போது காந்திஜியும் நேருவும் கட்டிக் காத்த சமயச் சார்பற்ற இந்தியா எங்கே என்று அலற வேண்டும்போல் இருக்கிறது.

     

    தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால் இன்னும் பெரிய சோகக் கதை.  அம்மையார் இறந்த பிறகு நிலைமை சீர்ப்படும் என்று எண்ணியிருந்த என் போன்றவர்களுக்கு பெரிய அடி, தாங்கிக்கொள்ள முடியாத அடி.  அம்மையார் இறந்த பிறகு அந்தக் கட்சிகுள்ளேயே பலத்த அடி, தடி நடக்கும், அதில் அந்தக் கட்சியே சிதறிப் போகும் என்று நினைத்தால், அம்மையார் இருந்தபோது இருந்த மாதிரியே மோதியின் ஆதரவில் காலம் தள்ளும் அதிமுக ஆட்சியில் எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்ற நிலை தொடருகிறது.  மோதியின் தயவால் அதிகமாகியிருக்கிறது என்றுகூடச் சொல்லலாம்.  எடப்பாடி அரசு எடுபிடி அரசாக மாறித் தமிழ்நாட்டை மத்திய அரசுக்கு சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டது என்றே சொல்லலாம்.  ஆங்கிலத்தில் ‘win win situation’ என்பார்கள்.  இரு தரப்பாருக்கும் வெற்றி என்று அர்த்தம்.  எதிலுமே ஒருவர் ஜெயித்தால் இன்னொருவர் தோற்றே ஆக வேண்டும்.  தமிழ்நாட்டில் இப்போது நிலவுகின்ற சூழ்நிலையில் மட்டும் மேற்கூறிய ஆங்கிலத் தொடரின்படி இரண்டு பேருக்கும் வெற்றி கிடைத்துக்கொண்டிருகிறது.  மத்திய அரசைப் பொறுத்தவரை பா.ஜ.க. தமிழ்நாட்டில் காலூன்றவும் தன் கொள்கைகளைத் திணிக்கவும் ஒரு வாய்ப்புக் கிடைக்கிறது.  தமிழக அரசைப் பொறுத்தவரை அதிமுக தொடர்ந்து ஊழல் புரிய வாய்ப்புக் கிடைத்துக்கொண்டிருக்கிறது.  இது இருவருக்கும் வெற்றி என்பதைத்தானே குறிக்கிறது?

     

    இதற்கிடையில் கல்லூரிப் பேராசிரியர் நிர்மலா தேவி கதை நெஞ்சைக் குதறி எடுப்பதுபோல் இருக்கிறது.  அந்த விசாரனை, இந்த விசாரணை என்று பேசுகிறார்களே தவிர உண்மை வெளிப்படுமா என்று தெரியவில்லை.  இதில் ஆளுநருக்கும் பங்கு இருப்பதாகக் கூறுகிறார்களே.  என்ன அவலம்!  நல்ல வேளை, கல்லூரிக்குப் போகும் வயதில் குடும்பத்தில் பெண் இல்லை என்று நினைத்து ஆறுதலடைவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்?

     

    உலகில் இரண்டு பெரிய ஜனநாயக நாடுகள் என்று கருதப்படுபவை இந்தியாவும் அமெரிக்காவும்.   இந்தியாவில்தான் இப்படி நடக்கிறது என்றால் அமெரிக்காவிலும் அரசியலில் ஊழல் தலையெடுப்பதாகத் தெரிகிறது.  ஊழல் புரிந்து சிறைக்குச் சென்ற எடியூரப்பா இந்தியப் பிரதமராலேயே பெருமையாக முதல் மந்திரி பதவிக்கு அறிமுகப்படுத்தப்படுகிறார் என்றால் அமெரிக்காவில் 2018-இல் வரப் போகும் பாராளுமன்றத் தேர்தலில் தன்னுடைய நிலக்கரிச் சுரங்கம் வெடித்து 29 பேர் பலியானதால் ஒரு வருடம் சிறைத் தண்டனை பெற்ற டான் பிளேக்கென்ஷிப் என்பவர் போட்டியிடப் போகிறார். வெற்றி வாய்ப்பு இருக்கிறது.  சட்டப்படி சரியான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாததால்தான் விபத்து ஏற்பட்டது என்பதால் சிறைத் தண்டனை பெற்றார். இப்போது சட்டம் இயற்றும் செனட் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படலாம். இந்தியாவில் சட்டத்தை மீறிய குற்றங்களுக்குத் தண்டனை கிடைக்குமா என்று தெரியவில்லை.  எல்லாவற்றையும் பணம் கொடுத்து ‘சரிக்கட்டிவிடுவார்கள்.  அமெரிக்காவில் அது நடக்காது என்றாலும் சிறைத் தண்டனை பெற்றவர் தேர்தலில் போட்டியிடுவது அமெரிக்காவில் புதிது என்றே சொல்லலாம். கர்நாடகத்தில் சுரங்க கொள்ளையில் ஈடுபட்ட ரெட்டி சகோதரர்கள் பி.ஜே.பி. சார்பில் தேர்தலுக்கு நிற்கிறார்கள். ஜெயிக்கவும் செய்யலாம்

     

    அடிக்கடி என் கணவர் அமெரிக்க அரசியல்வாதிகளும் இந்திய அரசியல்வாதிகள் போல் ஆகிக்கொண்டிருக்கிறார்கள் என்பார்.  ‘தயவுசெய்து அமெரிக்காவை இந்தியாவோடு ஒப்பிடாதீர்கள்’ என்பேன் நான்.  இன்னும் அப்படித்தான் சொல்கிறேன். தினமும் பொய்களாகக் கூறிக்கொண்டிருக்கும் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தும் இந்தியா அளவுக்கு அமெரிக்கா தாழ்ந்து போகவில்லை என்றே சொல்வேன்.  சட்டங்களின் ஆட்சி என்பது இன்னும் உண்மை.. ஆனாலும் இந்த அமெரிக்காவிலும் இப்படி நடக்கிறதே என்றால் மனம் கலங்கத்தான் செய்கிறது.  ஜனநாயகத் தேர்தல் இப்படிப்பட்ட விளைவுகளைத் தடுக்க முடியவில்லையே என்பது வேதனையாக இருக்கிறது.  எத்தனை ‘இசங்களை’ மனிதன் உருவாக்கினாலும் மொத்தத்தில் பின்னோக்கித்தான் செல்கிறானா?  இதற்கு விடிவே இல்லையா? 

    Share
  • பண்பாட்டியல் நோக்கில் சங்க இலக்கியங்கள்

    -முனைவர். க. தமிழ்அழகன் 

    புகுமுன்

    நன்மொழியும், நம்மொழியும், செம்மொழியுமாகிய தமிழ் மொழியின் தொல் பழமைக்கும் நல்வளமைக்கும் நற்சான்றுகளாய் மிளிர்ந்தும் ஒளிர்ந்து கிடப்பன சங்க இலக்கியங்களாகும். இதனை முறையாகவும் நிறைவாகவும் அறிதலும், அறிந்து அறிவித்தலும் தமிழறிந்தாரின் தலையாய கடனாகும்! நற்றமிழ் இலக்கயங்களின் நல்லதோர் இலக்கு இன்புறுத்தலும் அறிவுறுத்தலுமேயாகும்! இக்கோட்பாட்டிற்குத்தகப் “பண்பாட்டு நோக்கில் சங்க இலக்கியங்கள் இவ்வாய்வின் பொருண்மையாகும்.

    பண்பாடு சொற்சிந்தனை

    “பண்பெனப் படுவது பாடறிந்து ஒழுகுதல்”! எனவரும் பாப்பகுதி தமிழறிந்தார் அறிந்தபகுதி, “பண்பு எனப்படுவது உலக ஒழுக்கம் அறிந்து ஒழுகுதல்” என்பது இத்தொடர்க்குரிய பொருளாகும். “பாடறிந்து ஒழுகும் பண்பினாரே”2 எனவரும் புறநானூற்றுப் பாப்பகுதியும் இத்தன்மைத்தேயாகும்.

    பண் என்னும் சொல்லிற்குத் “தகுதி” என்ற பொருளும் பாடு என்பதற்கு உலக ஒழுக்கம் என்ற பொருளும் கொண்டால் பண்பாடு என்பதற்குத் தகுதி மிக்க உலக ஒழுக்கம் எனப் பொருள் கொள்ளலாம். “பாடறியேன் படிப்பறியேன் பள்ளிக்கூடம் தானறியேன்”3 எனவரும் திரைப்பாட்டுத் தொடக்கம் உலக வழக்கறியேன் என்பதாகக்கொள்ளலாம்.

    பண்படுத்துதல் (சீர்திருத்தல்) என்ற சொல்லடியாகப் பண்பாடு எனும் சொல் அமைந்தது எனக் கொண்டால் “திருத்தமிக்க சீரிய பண்புகள் கொண்ட ஒழுகலாறு” என விரித்துப் பொருள் உரைத்துப் பார்க்கலாம்.

    ‘பாடு’ எனும் சொல் “வருத்தம்” என்ற பொருளில் வரும். “ஏழை படும் பாடு” வருத்தம் நீங்கி வாழ்தற்குரிய நற்பண்புகள் மிக்கநிலை பண்பாட்டு நிலை எனக் கொள்ளலாம்.

    நிலத்தில் வாழும் மக்கள் பண்பாட்டு நிலையைக் குறிக்கும் ஆங்கிலச் சொல் ‘CULTURE’ என்பதாகும். நிலத்தைப் பண்படுத்தி உழுதொழில் செய்யும் நிலையைக் குறிக்கும் ஆங்கிலச்சொல் ‘AGRICULTURE’ என்பதாகும். மக்கள் மனநிலையைப் பண்படுத்தி உயர்நிலைக்கு இட்டுச் செல்வது பண்பாடாகும்.

    பண்பாடு குறித்து BRITANNICA ENCYCLOPEDIA வின் தமிழாக்கச் செய்திகள் இங்குக் குறிப்பிடுவதற்குரியனவாகும். “கற்றுக் கொள்வதற்கான ஆற்றலும், தான் கற்றதை அடுத்த சந்ததியினருக்கு எடுத்துச் செல்லும் ஆற்றலும் மனிதருக்கு இயல்பாக கைவரப் பெற்றவை. இந்த ஆற்றல்களின் விளைவாக அவனுக்கு ஏற்படக்கூடிய அறிவு, நம்பிக்கை, அவனுடைய நடவடிக்கை ஆகியவற்றின் கலவையே பண்பாடு (அல்லது கலாசாரம்) எனப்படுகிறது. பண்பாடு என்பது மனிதர்களுடைய மொழி, எண்ணங்கள், நம்பிக்கைகள், வழக்கங்கள், தடைகள், விதிமுறைகள், நிறுவன அமைப்புகள், கருவிகள், செயல்முறைகள், காலப்பொருட்கள், சடங்குகள், விழாக்கள், அடையாளச் சின்னங்கள் போன்ற எல்லா அம்சங்களும் கலந்திருக்கும் ஒரு கலவையையே மனிதனின் பரிணாம வளர்ச்சியில் இந்தக் கலாசாரம் ஒரு முக்கியப் பங்கை வகிக்கிறது”4

    இத்தகைய பண்பட்ட நிலைகள் அடிப்படையில் எழுந்த பண்பாட்டு நிலைகள் பதினெண்மேற்கணக்கு நூல்களாம். சங்க இலக்கியங்களில் பொதிந்து கிடக்கும் பாங்குகளில் சிலவற்றைப் பறவைப்பார்வையாய்ச் சுட்டிக்காட்ட விழைந்ததன் விளைவு வரும் பகுதிகளாகும்.

    சங்கப்பாட்டுக்கள் எவை எவை?

    பதினெண்மேற்கணக்கு நூல்கள் எனக் குறிக்கப்பெறும் சங்க  இலக்கியங்கள் பாட்டும் தொகையும் என இருவகைப்படும். பாட்டு பத்துப்பாட்டு தொகை எட்டுத்தொகை. இவற்றின் பாடல் எண்ணிக்கை (பத்துப்பாட்டுள் பத்துப்பாக்களும், எட்டுத்தொகையுள் 2365 பாக்களும் ஆக) 2375 ஆகும்.5 இச் சங்க இலக்கியங்களின் பெயர்களைக் குறிப்பிடும் பழம் பாட்டு வருமாறு.

    “முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை
    பெருகு வளமதுரைக் காஞ்சி மருவினிய
    கோல நெடுநல்வாடை கோல்குறிஞ்சிப் பட்டினப்
    பாலை கடாத்தொடும் பத்து

    “நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
    ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
    கற்றறிந்தார் ஏத்தும் கலியொடு அகம்புறம் என்று
    இத்திறத்த எட்டுத்தொகை

    இவ்வெண்பாக்கள் சுட்டும் சங்க இலக்கியங்களின் பெயர்களின் முறைவைப்பும், இப்பாக்களில் காணலாகும் அடைமொழிகளும் பாடல் தந்தாரின் பண்பட்ட திறனாய்வுப்போக்கைக் காட்டி நிற்கிறது.

    பத்துப்பாட்டு நூல்களுள் திருமுருகாற்றுப்படையை முதற்கண் வைத்து எண்ணப்பட்டது. இறைசிந்தனைக்கு முதலிடம் என்பதனைப் புலப்படுத்துகின்றது. அது மட்டுமல்ல, எட்டுத்தொகை நூல்களுக்குத் தனித்தனிக் கடவுள் வாழ்த்துப்பாக்கள் அமைந்திருப்பது போல் பத்துப்பாட்டு நூல்கள் முழுமைக்கும் திருமுருகாற்றுப்படை கடவுள் வாழ்த்தாக அமைந்திலங்குகிறது எனக் கொள்ளுதலும் ஏற்புடையதேயாகும்.

    எட்டுத்தொகையின் முதல் நூல் நற்றிணை, நல் திணை நற்றிணை. திணையாவது ஒழுக்கம், நல்லொழுக்கம், காதல் நெறியில் நல்லொழுக்கப்போக்கைக் குறிப்பிடமைந்தது. நற்றிணை என்பதால் எட்டுத்தொகையுள் முதலில் வைத்து எண்ணப்பட்டுள்ளது. “ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்”6 என்பது வள்ளுவரின் குறளாகும்.

    இவ்வெண்பாக்களும், “பெருகுவளம்” “மருவினிய கோலம்”, “கோல்” (அழகு) “நல்ல” “ஒத்த” “ஓங்கு”, “கற்றறிந்தார் ஏத்தும்” என்பவரும் அடைமொழிகளும் பண்பட்ட திறணாய்வுச்சிந்தனைகளின் பதிவுகளேயாகும்.

    பாட்டும் தொகையுமாகிய இச்சங்க நூல்களுள் அமைந்துள்ள பண்பாட்டியியல் சிந்தனைகளை இனி, அகநிலையில் அமைந்தன மாறும் புறநிலையில் அமைந்தன எனப் பகுத்துக்காணுதல் நமக்கு நல்லின்பம் பயக்கும்.

    அகநிலைப்பாங்கில் அமைந்திலங்கும் பண்பாட்டு நிலைகள்

    நாடு தழுவியன புறநிலை என்றால் வீடு தழுவியன அகநிலை என்றாகும். வீடெல்லாம் நன்கு வாழ்ந்தால் நாடெல்லாம் நன்கு வாழும் எனும் கோட்பாட்டிற்குத்தக வீட்டு வாழ்வைச் செம்மைப்படுத்தும் நோக்கில் அமைந்த, அஃதாவது அகநிலையில் அமைந்திலங்கும் பண்பாட்டு நிலைகளைச் சங்க இலக்கியங்கள் வழி இனி வரும் பகுதி சுட்டிக்காட்ட முயலும்.

    இல்லற வாழ்வின் நல்லறநிலைகள்

    இல்லற வாழ்வு என்பது “இல்லாளொடு கூடி வாழ்தலின் சிறப்பு” என்று பரிமேலழகரும் இல்லின்கண் இருந்து வாழும் திறன் கூறுதல் இல்வாழ்க்கை என்று மணக்குடவராலும் விளக்கம் தரப்படுகிறது. “சமூக அமைப்பில் குடும்பம் என்பது அடிப்படை அலகாகும். (Basic Unit). இவ்வமைப்பு இல்லையேல் சமுதாயம் என்ற கட்டுக்கோப்பே நொறுங்கிப்போகும். மானுட வாழ்வில் அடித்தளம் குடும்பமே”7 எனவரும் முனைவர் க.ப.அறவாணனாரின் சிந்தனைக்குத்தக இனிய இல்லற வாழ்வு முறைகளில் பண்பட்ட நிலைகளைச் சங்க இலக்கியங்கள் வழி கற்றலும் கற்பித்தலும் இனிதான நிகழ்வுகளாகும்.

    தலைவன் தலைவியிடத்தும், தலைவி தலைவனிடத்தும் பேரன்பு பூண்டிருந்ததால் அவர்கள் வாழ்வில் பெருமகிழ்வு சேர்ந்திருந்தது. தலைவன் தலைவி உறவுக்கு அடித்தளமான காதலன் – காதலி நிலையிலேயே நல்லன்பு பூண்டிருந்த பாங்கு மிகச் சிறப்புடையதாகும்.

    ”நிலத்தினும் பெரிதே, வானினும் உயர்ந்தன்று
    நீரினும் ஆர் அளவின்றே – சாரல்
    கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
    பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே8

    தலைவன் தலைவியர் இடையே உள்ள நட்பிற்குத் தேவகுலத்தார் காட்டிய மூன்று அளவீடுகளும் நயத்தற்குரியன.

    “நிலம், வான், நீர் ஆகியவை வெவ்வேறாகப் பெருகி விளங்குவன. தலைமக்கள் நட்பு, ஒரே இடத்தில் பெருகி விளங்குவது.  இவை மூன்றும் இணைந்தவழியே பயன்பெறுதல் கூடும். இம்மூன்றின் சேர்க்கை போலத் தங்களுடைய நட்பும் இயைந்த நட்பு எனத் தலைவி கூறினாள். போஷகமாகிய உணவு நல்கும் நிலத்தினையும், தாரமாகிய நீர்நல்கும் வினையும், போக்கியமாகிய மணி முதலியன நல்கும் கடலினையும் எடுத்துக்காட்டி, அம்மூன்றனையும் இந் நட்பு ஒன்றே நல்க வல்லது எனச் சிறப்பித்தனள் என இப்பாடலுக்கு இரா.இராகவையங்கார் உரை வகுத்துள்ளார். நிலம், பயந்தராமையும், வானம் பெய்யாது போதலும், நீர் தன் நீர்மை குன்றுதலும் கூடும். ஆனால் இந் நட்பு எஞ்ஞான்றும் பயன்பட்டுப் பின்னரும் தொடர்ந்து வரும் சிறப்புடையதாகும்”9

    இங்கிலாந்து நாட்டு இலண்டன் மாநகரத்தொடர் வண்டிகளில் இடம் பெற்றிருக்கும்.

     ”யாயும் ஞாயும் யார் ஆகியரோ?
    எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
    யானும் நீயும் எவ்வழி அறிதும்
    செம்புலப் பெயல் நீர் போல
    அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே10

    இதன் நுண்பொருள் விரிக்கிற் பெருகும்.

    “அரிதாய அறன் எய்தி”11 எனவரும் பாலைக்கலிப் பாட்டுக் காட்டும் அன்புநெறி பண்பின் உயர் நெறியாகும்.

    முழுமையான அன்பு எப்பொழுதும் குறைகாணாது. கார்காலத் தலை நாளில் ஊர் மீளவேண்டிய தலைவன் வாரா நிலையில், தலைவன் வரும் காலமே கார்காலம் எனக் கொள்ளும் போக்கும். அவர் “பொய்வழங்கலரே” என்னும் நம்பிக்கை மிகுந்த போக்கும் தலைவியின் பண்பட்ட உள்ளம் காட்டி நிற்கும்.

    “வண்டு படத் ததைந்த கொடி இணர் இடை இடுபு
    பொன்செய் புனை இழைகட்டிய மகளிர்
    கதுப்பில் தோன்றும் புதுப் பூங்கொன்றைக்
    கானம், கார் எனக் கூறினும்,
    யானோ தேறேன் அவர் பொய்வழங்கலரே12

    பிரிந்த தலைவன் மீள ஏனோ காலம் தாழ்ந்தது. தாழவே தலைவி உள்ளம் வாடி நொந்து வெந்து கிடக்காது எவ்வாறாவது மீள்வான். மீளாவிடில் தேடிக் காணுவேன் என்பது படத் தலைவி கூறும் நம்பிக்கைப் பண்பு வியப்பும் நயப்பும் நல்குகின்றது.

    “நிலம் தொட்டுப் புகாஅர், வானம் ஏறார்,
    விலங்கு இடு முந்நீர்காலின் செல்லார்,
    நாட்டின் நாட்டின் ஊரின் ஊரின்
    குடிமுறை குடிமுறை தேரின்
    கெடுநரும் உளரோ நம் காதலரோ13

    நம்பிக்கை மிகுந்த பண்பு யாவர்க்கும் வேண்டியதொரு பண்பாகும்.

          நம்பிக்கை எனும் நந்தா விளக்கு
    உள்ள வரையில் உலகம் நமக்கு

    இல்வாழ்வின் உயர் பண்பு விருந்தோம்பல் எனும் பண்பு 

    “சாறு அயர்ந்தன்ன மிடாஅச் சொன்றி
          வருநர்க்கு வரையா, வளநகர் பொற்ப,
          மலரத் திறந்த வாயில் பலர் உண
          பைந்நிணம் ஒழுகிய நெய்ம்மலி அடிசில்
          வரை இல் வாந்திணைப்புரையோர் கடும்பொடு
          விருந்து உண்டு எஞ்சிய மிச்சில் பெருந்தகை
          நின்னொடு உண்டலும் புரைவது 14 எனக் குறிஞ்சிப்பாட்டுத்தலைவனும்,

     ”நள் என வந்த நாரில் மாலை,
    பலர்புகு வாயில் அடைப்பக், கடவுநர்
    வருவீர் உள்ளீரோ 15

    எனக் குறுந்தொகைத் தலைவியும் விருந்தோம்பல் பண்பில் இருவரும் கொண்டுள்ள விருப்பமும் பண்பட்ட உள்ளப் போக்கும் தெள்ளிதின் விளங்கும்.

    ”மெல் இயல் அறிவை! நின் நல் அகம் புலம்ப
    நின் துறந்து அமைகுவென் ஆயின் என்துறந்து
    இரவலர் வாரா வைகல்
    பல ஆகுக யான் செலவுறு தகவே 16

    இல்லற நெறியில் நிற்போர்க்கு இரவலர் வாராத நாள் துன்பம் தருவது போல் துன்புறுக என்றான்.

          “உண்டால் அம்ம, இவ்வுலகம் இந்திரர்
          அமிழ்தம் இயைவது ஆயினும், இனிது எனத்
          தமியர் உண்டலும் இலரே” 17 எனவரும் தொடரும் இத்தன்மைத்தே.

    பிறந்த மனையினும் புகுந்த மனையே மனைவிக்கு உயர்வு

    வளமான குடியில் பிறந்தபெண் மணமுடித்தான். மணம் கொண்ட மணாளன் வீடு ஒரு பொழுது வறுமைக்குட்பட்டுவிட்டது. இவள் நிலை என்ன? நற்றிணை நவில்கிறது இவள் பண்பினை இப்படி.

          “அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள் கொல்?
    கொண்ட கொழுநன் குடிவறன் உற்றென,
    கொடுத்த தந்தை கொழுஞ்சோறு உள்ளாள்,
    ஒழுகு நீர் நுணங்கு அறல் போல,
    பொழுது மறுத்து உண்ணும் சிறு மதுகையளே!” 18

    தந்தை சோற்றைக் கருதாது பொழுதுமறுத்து உண்ணும் வன்மையுடைய தலைவிக்கு,

          “தேன் மயங்கு பாலினும் இனிய அவர்நாட்டு
          உவலைக் கூவற்கீழ்
          மான் உண்டு எஞ்சிய கலுழி நீரே” 19

    விரும்பப்படுவது எனக் கூறியமை மணமானதும் மணாளனுக்குப் பெருமை சேர்க்கும் உயர்பண்பை விளக்குகின்றது.

    வாக்கு நாகரிகம் மிக்க வாழ்க்கை நாகரிகம்

    பரத்தமை நிலைக்கு ஆட்பட்டு மீண்ட தலைவனைத் திரும்பிவந்தவனா? திருந்திவந்தவனா? என உணர்தற்கும் மீண்டும் இப்பிழை நேரலாகாது என்பதற்கும் தலைவி கூறும் பண்பட்ட சொல்லோவியம் தலைவியின் பண்பாட்டு நிலைமைக் காட்டுவதாக அமைந்திலங்குகிறது.

    “அணிற்பல்லன்ன கொங்குமுதிர் முண்டகத்து
    மணிக்கேழ் அன்னமாநீர்ச் சேர்ப்ப!
    இம்மை மாறி மறுமை ஆயினும்
    நீ ஆகியர் எம் கணவனை,
    யானாகியர் நின் நெஞ்சு நேர்பவளே 20

    பரத்தமையிலிருந்து திரும்பிவந்தவனை திருந்தி வந்தவனாக ஆக்கிட வழி செய்யும் இப்பாங்கு தும்பிசேர்கீரனின் “தச்சன் செய்த சிறுமா வையம்”21 எனத் தொடங்கிப் பாடிய தலைவிக்கு உண்டு.

    இவ்வாறே, சங்க இலக்கியங்களுள் காணலாகும் உள்ளுறை உவமப் பாக்கள் மற்றும் இறைச்சிநிலைப் பாக்களும் வாக்கு நாகரிகப் பண்பைப் பறைசாற்றும்.

    மனக்காயம் ஒருபோதும் தரலாகாது என்ற தலைவனின் பண்பாடு இக்கால இல்லறத்தார் அறிய வேண்டிய அரிய பண்பாகும்.

    “முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்
    கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇ,
    குவளை உண்கண் குய்ப்புகை கமழத்
    தான் துழந்தட்ட தீம்புளிப்பாகர்
    இனிது எனக்கணவன் உண்டலின்
    நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே22 தீம்புளிப்பாகர் உண்ட தலைவன் இழித்தும் பழித்தும் பேசாது முதல் முறை ஆக்கிய ஆர்வமும், அன்பும் கண்டு இனிது எனக்கூறிய தலைவன் உண்டலின் நுண்ணிதின் மகிழ்ந்தது தலைவியின் முகமே! இம்மகிழ்ச்சி தந்த தலைவனின் பண்பு மனக்காயம் செய்யாப்பண்பு உயரியதாகும். உணவின் சுவை உணவுக்குள்ளே இருப்பதைவிடவும் உணவை வழங்குவார் உள்ளத்தின் உள்ளே உள்ளது. எனவரும் கருத்துப்பட அமைந்த நாலடியார் பாடல் இங்கு இணைத்து நினைத்து மகிழத்தக்கது.

    “கழுநீருள் கார் அடகேனும் ஒருவன்
    விழுமிதாக கொள்ளின் அமிழ்தாம், விழுமிய
    குயத்துவை ஆர் வெண்சோறே ஆயினும், மேலாதார்
    கைத்துண்டல் காஞ்சிரங் காய்23

    அகப்பாக்களின் துறை அமைப்பும், அறத்தொடு நிற்றல் முதலிய துறைகளின் அமைப்பும், பண்பாட்டு நிலையைக் காட்டி நிற்கும் ஆதிமந்தியார் குறித்துக் குறிப்பிடும் நச்சினார்க்கினியர், “பெயர் கூறின் புறமாம் என்றஞ்சி வாளாது கூறினார்”24 என்பார். “கூறினாள்” எனாது “கூறினார்” எனக் கூறியதும் நல்ல பண்பாட்டு உயர்வுப் போக்கேயாகும். இன்னும் புலமையை மதிக்கும் போக்கும் குறிப்பிடுதற்குரியது. இதனை அவனை அவர் பாடியது எனவரும் தொடரமைப்புக்கொண்டு உணரலாம்.

    புறநிலைப்பாங்கில் அமைந்திலங்கும் பண்பாட்டு நிலைகள்

    காதலும் வீரமும் இரு கண்கள் எனக் கொள்ளினும் வீரத்திற்கு முதலிடம் தந்து நின்றன நம் சங்க இலக்கியங்கள் காவிரிப்புனல் விழாவில் தலைவனை இழந்த தலைவி ஒருத்தி, ஆதிமந்தி, வேற்றூரில் தேடுகின்றாள். பரத்தையர் ஆடவரைத் தழுவி ஆடும் துணங்கைக்கூத்து நிகழும் இடத்தில் (காதல் நிலை) முதலில் சென்று தேடாமல், வில்விழா நிகழ்த்திப்பல வீரர்கள் குழுமியிருக்கும் இடத்திலேயே (வீரநிலை) முதலில் தேடினாள் அத்தலைவி.

    “மள்ளர் குழீஇய விழவி னானும்
    மகளீர் தழீஇய துணங்கை யானும்
    யாண்டும் காணேன் மாண்டக் கோனை25

    இவ்வாறே இறவாப் புகழ்பெற்ற புறநானூற்றின்,

          “சிற்றில் நற்றூண் பற்றி நின்மகன்
          யாண்டு உளனோ? என வினவுதி, என் மகன்
          யாண்டு உளன் ஆயினும் அறியேன், ஓரும்
          புலிசேர்ந்து போகிய கல்அளை போல,
          ஈன்ற வயிறோ இதுவே
          தோன்றுவன் மாதோ, போர்க்களத்தானே” 26

    எனவரும் பாட்டு, தலைவனின் போரஞ்சா வீரமரபையே விழைவு நனி புலனாக்குகிறது. காதல் தன்னலம் பற்றியது என்றால், வீரம் பொதுநலம் சார்ந்தது. பொதுநலம் பேணும்போக்கு முதற்கண் வேண்டும் என்னும் பண்பட்ட நிலை சங்கப்பாட்டுக்கள் காட்டும் நிலை.

    போரின் பகுதிகளாகிய ஆநிரை கவர்தல், ஆநிரை மீட்டல் எனவரும் துறைகளின் விளக்கத்தால் ஐயறிவினவாகிய பசுக்கூட்டங்களுக்கும் அருளும் போக்கை, துன்புறுத்தா நிலையைக் கொண்டு வீரர்தம் வீரப்பண்பும் ஈரப்பண்பும் (கருணைத்திறம்) தெற்றெண உணரப்பெறலாம்.

    தடையிலாக் கொடையுணர்வு

    வறுமையில் வாழும் மக்கள் பசிதீர மன்னனை அண்டியே ஆக வேண்டும். மன்னனும், மக்கள் பசிதீர்த்தலை மாண்பான செயல்களுள் தலையாயதாக எண்ணினான் சங்ககாலத்தில். இதனைப் புறநானூறு நன்கு புலப்படுத்தும். வழங்கி வாழ்ந்த வள்ளல் பாரியை மாரியை விட உயர்த்திக் கூறும் பாங்கைப் புறநானூறு காட்டும் “அறஞ்செய விரும்பு” என்னும் வாக்கிற்குத்தக்க, விரும்பித்தந்த பாங்கு பண்பட்ட பாங்கு.

    “ஒரு நாள் செல்லலம் இருநாள் செல்லலம்
    பலநாள் பயின்று, பலரோடு செல்லினும்
    தலைநாள் போன்ற விரும்பினன் மாதோ 27

    “இன்று செலினும் தருமே, சிறுவரை
    நின்று செலினும் தருமே, பின்னும்
    முன்னே தந்தனென், என்னாது, துன்னி
    வைகலும் செலினும் பொய்யலன் ஆகி
    யாம் வேண்டியாங்கு எம் வறுங்கலம் நிறைப்போன் 28

    கொடைபெற்றே வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து விடலாம் என்னும் போக்கு அக்காலத்தில்லை.

          “ஈ என இரத்தல் இழிந்தன்று, அதன் எதிர்
    ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று,
    கொள் எனக் கொடுத்தல் உயர்ந்தன்று, அதனெதிர்
    கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று”29

    கொடைபெற்றுத் தானும் தன் குடும்பமும் மட்டுமே உண்ணாது தன் மனைவியிடம் ”எல்லோர்க்கும் கொடுமதி மனை கிழவோயே” என வரும் பாங்கும் கொடை வேண்டுவோரைக்கண்டு ஆற்றுப்படுத்தும் இயல்பும் நல்ல உள்ளத்தின் வெளிப்பாடு, உயர்ந்த பண்பாட்டின் வெளிப்பாடு. ஆற்றுப்படை என்னும் துறையும், ஆற்றுப்படை இலக்கியங்களும் இதற்கு நன்றான சான்றுகளாகும்.

    மண்ணின் மைந்தன் என்னும் குணம் எண்ணில் இழிவே!

    இக்காலத்துலவும் மண்ணின் மைந்தர் (SON OF SOIL) என்னும் இழிகுணம் துன்பம் மிக்கது. ஆனால் அக்காலத்துச் சங்க இலக்கியம்.

    “யாதும் ஊரே யாவரும் கேளிர்”30 (ALL ARE MY NATIVES; ALL ARE MY RELATIVES) என இயம்பும் போக்கு மிகப் பண்பட்ட உள்ளத்தில் எழுந்த போக்காகும். இதனால்தான் இந்தியாவின் முன்னைப் பிரதமர் இந்திரா காந்தியார் ஐக்கியநாடுகள் சபையில் ஐக்கிய நாடுகள் தினத்தில் (UNO DAY) உரையாற்றும்போது எடுப்புரையாக “TWO THOUSAND YEARS AGO A POET SAYS YATHUM OORAY YAVARUM KELIR” எனத் தொடங்கித் தொடர்ந்து உரையாற்றியது யாவரையும் வியக்கச் செய்தது அந்நாளில், தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவியது அந்நாளில்.

    அறவுரையாய் அமைந்த அறிவுரை உரைக்கும் பண்பாட்டு முத்துக்கள்

    அறிவுறுத்தும் அறிவுரைகளுள் பண்பாட்டுக்கூறுகள் இயைந்து கிடக்கும் பகுதிகளுள் சிலவற்றைப் பொதுநிலைப்பட்டன. தனி மனித நிலைப்பட்டன என இரு வகை நிலைகளில் காணல், அறிவுக்கு நலம் நல்கும்.

          “உண்டால் அம்ம இவ்வுலகம்……
    தமக்கென முயலா நோன்தாள்
    பிறர்க்கென முயலுநர் உண்மையானே 31

    எனவும்

          “நல்லது செய்தல் ஆற்றீர் எனினும்
    அல்லது செய்தல் ஓம்புமின் அதுதான்
    எல்லாரும் உவப்பது அன்றியும்
    நல் ஆற்றுப்படூஉம் நெறியுமார் அதுவே 32

    எனவும்

          “ஆன்முலை அறுத்த அறனிலோர்க்கும்
    மாண் இழை மகளிர் கருச்சிதைத்தோர்க்கும்
    பார்ப்பார் தப்பிய கொடுமையோருக்கும்,
    வழுவாய் மருங்கில் கழுவாயும் உளஎன
    நிலம்புடை பெயர்வதாயினும் ஒருவன்
    செய்திகொன்றோர்க்கு உய்தி இல்என
    அறம் பாடிற்றே – ஆயிழை கணவ!” 33

    எனவும் வரும் சங்கப்பாக்களின் பகுதி தான் அறிந்த நல்லற நெறிகளை மக்களுக்கு உரைத்து மக்களை நன்றான வாழ்வு வாழச் செய்திடும் பண்புணர்வு மெச்சத்தகுந்ததாகும்.

    தனிமனித நிலைப்பட்டன எனும் பாங்கில் கோவூர்கிழாரும் பிசிராந்தையாரும் பாடிய பாக்கள் புலவர்களின் பெருமையையும் புலவர்களுக்கு இருந்த உரிமையையும் காட்டுவனவாக அமைந்துள்ளன. யானையின் உணவிற்கு நெற்பயிரைச் சிறிது சிறிதாகக்கொள்ளுவது போல நாட்டு மக்களிடம் வரியைச் சிறிது சிறிதாகக் கொள்ளுதல் வேண்டும்34 என்று பாண்டியன் அறிவுடை நம்பியிடம் உரைப்பதும், “சோழர் குடியினர் தம்முள் பகைத்தால் சோழன் ஒருவன் தோற்றான் என்ற பழிச்சொல் சோழர் குடிக்கு நேரும் எனவே போரைத் தவிர்ப்பாயாக”38 என்று சோழன் நலங்கிள்ளிடமும் சோழன் நெடுங்கிள்ளிடமும் உரைத்தமையும் புலவர்கள் பண்புகளைப் பறைசாற்றுகின்றன. இவைபோலும் பொருளில் அமைந்த பாட்டுக்கள் பலவாகும்.

    பழிக்கு அஞ்சும் விழுமிய பண்பு

    “உண்டாலம்ம இவ்வுலகம்….
          … பிறர் அஞ்சுவதி அஞ்சி,
          புகழ் எனின் உயிரும் கொடுக்குவர் பழி எனின்
          உலகுவுடன் பெறினும் கொள்ளலர்” 36

    எனவும்,

    “தாம் இரந்துண்ணும் அளவை ஈன்மரோ
    இவ்வுலகத்தானே”
    37   எனவும்

    “குடிபழிதூற்றும் கோலோன் ஆகுக; புலவர் பாடாது வரைக; இன்மைநிலை யான் அடைக”38 எனவும் வரும் பகுதிகள் உள்ளிட்ட இன்னபிறவும் பழிச்செயல்களின் இழிதன்மைகளை உணர்த்தி உயர்பண்பு நிலைகளை உயர்த்தி நிற்கும் பகுதிகளாகும்.

    வறுமை நிலையிலும் பெருமை நிலைச்செயல்கள்

    புலவர்கள் புரவலர்களை நாடிப்பொருள் பெற்றுவாழ்தல் இயல்பு. புலவர்-புரவலர் என்னும் இவர்களுக்கிடையில் பொருள் மட்டும் பிணித்திடும் தகைமையதன்று.  புரவலனாகிய அரசன் தடம்மாறித் தடுமாறும் நிலைகளில், மனைவியைப்பிரிந்து பரத்தையரிடம் இருந்த நிலைகளில், அரசனுக்கு வாழும் நெறி உரைத்திட்ட பாங்கும் (தன் மனைவி கண்ணகியைப் பிரிந்து பரத்தை ஒருத்தி மனையில் இருந்த பேகனைக் கண்டு கபிலர் எடுத்துரைத்து இடித்துரைத்தமைப் பாங்கில் பாடப்பட்ட பாடல் பாங்கும்) 39 பாரி மகளிரை அழைத்துக்கொண்டு கபிலர் அவர்களுக்கு வாழ்வமைத்துத்தர மிக முயன்ற பாங்கில் அமைந்த பாடல்களும் 40 புலவர்களின் பெருமை மிகு பண்புகளின் நிலைமை பேசும் தன்மையனவாகும்.

    இவ்வாறே கோவூர்கிழார் எனும் புலவர் மலையமான் மக்களாகிய இளஞ்சிறார்களைக் கிள்ளிவளவன் யானைக்கு இடுவுழி உய்யக்கொண்ட பாடலும்,41 நெடுங்கிள்ளியிடமிருந்து இளந்தத்தன் என்னும் புலவன் “ஒற்று வந்தான்” எனக்கொல்லப்புக்குழி, கோவூர்கிழார் உய்யக்கொண்ட பாடலும்42

    இப்போக்குடைய இன்னபிறப் பாக்களும், வறுமை நிலைப்பட்ட புலவர்களின் பெருமைநிலைப்பட்ட செயல் செய்யும் போக்கிற்குச் சான்றுகளாய் நின்று, பண்பாட்டில் உயர்ந்துநின்று, வாழ்ந்தமையை வெளிப்படுத்துகின்றன.

    நிறைவாக….

    சங்கத் தமிழறிவார்
    தண்தமிழின்சீரறிவார்

    சங்க இலக்கியங்கள் இயம்பிச்செல்லும் பண்பாட்டுக் கூறுகளும் சிலவற்றை, இதுகாறும், அகவாழ்வுநிலை மற்றும் புறவாழ்வுநிலை என்னும் இரு கூறுகள் கொண்டு ஒருசிறிது தொகுத்துத் தொட்டுக்காட்டப்பெற்றன.

          சொல்லநினைத்தது ஆயிரம் – ஆனால்
          சொன்னதோ பாயிரம்

    என்பதுபோல் கால அளவு கருதுவதுடன் என் சிந்தனை அளவு கருதியும் இதுகாறும் சொல்லப்பெற்ற சில செய்திகளைத் தமிழ் அறிந்தார் நன்கு உள்ளத்தில் அமைத்துக்கொள்ளுதல் வேண்டும்.

    சங்க இலக்கியம் காட்டும் பெருகிய பிறவேறு பண்பாட்டுக் கூறுகளையும் அறிவதும், அறிந்து இன்புறுதலும், இன்புற்று அறிவுறுத்தலும் அறிவுறுத்துதலுடன் பின்பற்றி வாழ்தலும், வாழ்ந்து சிறத்தலும் வேண்டும் என்ற எளியேனின் இவ்வுணர்வுடன் நிறைவெய்துகிறது. “பண்பாட்டியல் நோக்கில் சங்க இலக்கியங்கள்” என்னும் பொருண்மையினால் ஆக்கப்பெற்ற இக்குறுங்கட்டுரை.

    ***** 

    சான்றெண் விளக்கம்

    1. நல்லந்துவனார். கலித்தொகை. நெய்தற்கலி, பாவெண் 133
    2. கோனாட்டு எறச்சலூர் மாடலன் மதுரைக்குமரனார், புறநானூறு, பாவெண்.197
    3. இரா.வைரமுத்து, சிந்துபைரவி திரைப்பாட்டு
    4. பிரிட்டாணிக்கா தகவல் களஞ்சியம், தொகுதி.2 ப.805
    5. சங்க இலக்கியங்கள், நூற்பெயரும் கிடைக்கும் பாக்கள் எண்ணிக்கையும், நற்றிணை 401-குறுந்தொகை, 402-ஐங்குறுநூறு, 501-பதிற்றுப்பத்து, 80-பரிபாடல், 22-கலித்தொகை, 150-அகநானூறு, 401-புறநானூறு, 398-ஆக எட்டுத்தொகையின் பாக்கள் எண்ணிக்கை 2365 ஆகும். இவைகளுடன் திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெருபாணாற்றுப்படை, முல்லைபாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம், பத்துப்பாட்டுகள் சேர (2365+10) 2375 ஆகும். பத்துப்பாட்டின் பாட்டில் 3552 ஆகும்.
    6. திருவள்ளுவர், திருக்குறள்.13, ஒழுக்கமுடைமை, குறளெண்.131
    7. முனைவர்.க.ப.அறவாணன், சமூகவியல் பார்வையில் அற இலக்கியக்களஞ்சியம், குடும்பவியல்.ப.579
    8. தேவகுலத்தார், குறுந்தொகை பா.வெண்.3
    9. முனைவர்.வி.நாகராஜன் (உரையாசிரியர்) குறுந்தொகை பா.3ன் உரைப்பகுதி
    10. செம்புலப்பெயனீரார். குறுந்தொகை பாவெண்.3
    11. பாலைபாடிய பெருங்கடுங்கோ, கலித்தொகை, பாலைக்கலி, பாவெண்11
    12. ஓதலாந்தையார், குறுந்தொகை, பாவெண்.21
    13. வெள்ளிவீதியார், குறுந்தொகை, பாவெண்.130
    14. கபிலர்.குறிஞ்சிப்பாட்டு, பாவடி 201-207
    15. நன்னாகையார், குறுந்தொகை, பாவெண்.118
    16. பாலைபாடிய பெருங்கடுங்கோ, குறுந்தொகை.பாவெண்.137
    17. படலுள் மாய்ந்த இளம்பெருவழுதி, புறநானூறு பாவெண்.203
    18. போதனார். நர்றிணை. பாவெண்.110
    19. கபிலர்.ஐங்குறுநூறூ. அன்னாய்வாழிப்பத்து, பாவெண்.203
    20. அம்மூவனார், குறுந்தொகை, பாவெண் 49
    21. தும்பிசேர்கீரன், குறுந்தொகை, பாவெண் 61
    22. கூடலூர்கிழார், குறுந்தொகை பாவெண் 167
    23. நாலடியார், 22 நட்பாராய்தல், பாவெண் 7
    24. நச்சினார்கினியர், தொல்காப்பியப் பொருளதிகாரத்து அகத்திணையியல் நூற்பா 54ன் உரைப்பகுதி.

    *****

    கட்டுரையாசிரியர் – உதவிப்பேராசிரியர்
    தமிழாய்வுத்துறை
    ஏ.வி.சி. கல்லூரி, (தன்னாட்சி)
    மன்னன்பந்தல், மயிலாடுதுறை – 609 305

     

     

    Share
  • இலக்கியங்களில் வாழ்வியல்

    -இரா.சீனிவாசன் 

    முன்னுரை

    “அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது” என்ற ஔவைப் பிரட்டியாரின் வாக்கிற்கு இணங்க மானிடப் பிறவியைப்  பெற்ற மக்கள் நல்ல வாழ்வியல் முறைகளைப் பின்பற்றி வாழ்தல் அவசியமாகும். இயற்கையோடு இயைந்து இணைந்து இன்பமாக வாழ்ந்தவர்கள் நம் முன்னோர்கள். மனிதன் தன் வாழ்க்கைக்கு இயற்கையே துணை என்பதை உணர்ந்தான். ஆதலால் இயற்கையைத் தன் வாழ்வோடு இணைத்து, மனிதன் தன் தேவைகள் அனைத்தும் இயற்கைப் பொருட்களிடமிருந்துக் கிடைக்கின்றன என்பதைப் புரிந்துக் கொண்டான். அவ்வாறு அவர்கள் இயற்கையோடு இணைந்து நிலத்தையும், பொழுதையும் பயன்படுத்தியதைத் தமிழ் இலக்கண இலக்கிய நூல்களின் வழி அறியலாம். தமிழில் தோன்றிய இலக்கிய வகைகளுள் மிகவும் முக்கியமானது திணை இலக்கியமாகும். இவை நில அடிப்படையானது. நிலமும் பொழுதும் இயற்கைப் பின்னணியும் மனித வாழ்வும் இயைபடப் புனையப்படுவது திணை இலக்கியமாகும். திணை இலக்கியத்தை அகம், புறம் என்று இரண்டாகப் பிரிக்கிறார் தொல்காப்பியர்.

    முதல் எனப்படுவது நிலம் பொழுதிரண்டின்
    இயல்பென மொழிப இயல்புணர்ந் தோரே
       (தொல்.அகத்,4)

    மேலும் தமிழ்மொழியின் சிறப்பினைக் கூறுகையில்,

    வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகத்து
    எனத் தொல்காப்பியச் சிறப்புப் பாயிரத்தில் தமிழகத்தின் எல்லையைத் தொல்காப்பியர் குறிப்பிடுகிறார்.

    கல்தோன்றி மண்தோன்றிக் காலத்தே வாளொடு முன்தோன்றி மூத்தகுடி’ எனப் புறப்பொருள் வெண்பாமாலை தமிழர்களின் தொன்மையைக் குறிப்பிடுகின்றது. இலக்கண இலக்கிய வளங்களோடும் வாழ்வின் மேம்பட்ட நாகரிகத்தோடும் வாழ்ந்த இனம் தமிழினம். தமிழர் தாம் வாழுகின்ற நிலங்களுக்கேற்பத் தமது தொழில், வாழ்க்கை அமைப்பு முறையை வகைப்படுத்தி வாழ்ந்துள்ளனர் என்பதை,

    முதல் கரு உரிப்பொருள் என் மூன்றே      எனத் தொல்காப்பிய நூற்பா–  949உம்    மாயோன் மேய  எனத் தொல்காப்பிய நூற்பா– 951-உம் இயம்புவதை நாம் உணரவேண்டும். இதன் மூலம் தமிழர்களின் வாழ்வியல் விழுமியங்கள் வெளிப்பட உணர்கிறோம். தமிழர்கள் தாம் வாழும் நிலங்களுக்கு ஏற்றாற் போல வாழ்க்கைமுறையை அமைத்துக் கொண்டனர் எனலாம். அவற்றை முறையே,

    1) குறிஞ்சிநில வாழ்வியல்    2) முல்லைநில வாழ்வியல்
    3) மருதநில வாழ்வியல்      4) நெய்தல்நில வாழ்வியல்
    இங்கே நாம் முறையே குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் வாழ்வியலைக் குறித்து ஆய்வுக் கட்டுரையில் காண்போம்.

    குறிஞ்சி நில வாழ்வியல்:

    மலையும், மலைசார்ந்த இடமும் குறிஞ்சி எனலாயிற்று. இங்கு வாழும் மக்கள் குறிஞ்சிநில மக்கள் என அழைக்கப்பட்டனர். நிலம் பொழுது என்பதை முதற்பொருளாகவும், தம் வாழ்வியலோடு இயைந்த தெய்வம், உணவு, விலங்குகள், மரம், செடி, கொடிகள், தொழில் போன்றவற்றைக் கருப்பொருளாகவும், தலைமகனுக்கும், தலைமகளுக்கும் இடையே உள்ள உணர்வைக் கொண்டு உரிப்பொருள் எனவும் வகைப்படுத்தினர். குறிஞ்சிக்கான பெரும்பொழுது கூதிர், முன்பனி எனவும், சிறுபொழுது யாமம் எனவும் பிரித்ததனை

    “…………… குறிஞ்சி:  கூதிர், யாமம் என்மனார் புலவர்                              எனப் பாடுகிறது தொல். நூற்பா பாடல் எண் (952). இந்நில மக்களினுடைய தொழில் தேன் எடுத்தல், தினைப்புனம் காத்தல், இந்நில மக்களுடைய அகவொழுக்கமானது களவு, கற்பு என வரினும் அவை அறத்தொடு நிற்றலாய் விளங்குவதை அகப்பாடல்வழி நம்மால் உணர முடிகிறது. இந்நில மக்களின் காதற்சிறப்பு சங்கப் பாடல்களின் கற்பனைத் திறனையும், வாழ்வியல் விழுமியங்களையும், தலைவன் தலைவிக்கிடையே ஏற்படும் காதல் நிலைப்பாடுகளையும், தோழி, செவிலித்தாய், நற்றாய் முதலானோர்களின் அறவுரைகளையும், அறிவுரைகளையும் எல்லாவற்றிற்கும் மேலாகக் கதைப்பாங்கிலும் அமைந்துள்ளதை நம்மால் உய்த்துணர முடிகிறது. ஒரு குறமகள் வேங்கை மலர்களைப் பறிக்க எண்ணினாள். மிக உயர்ந்த மரக்கிளையில், பூத்த பூக்களாய் இருப்பதால் அதனைப் பறிக்க விரும்பிய தலைவி “வேங்கை! வேங்கை!” என்று கூச்சலிட்டாள். கானவர்கள் பசுவைக் கொல்லும் புலியென அஞ்சி வில்லோடு காவல் காக்கச் சென்றனர் தத்தம் குடியிருப்பை. அத்தகைய மலைச்சாரலை சொந்தமாய் உடைய தலைவனின் மார்பைத் தன் நெஞ்சு சொந்தமாகக் கொண்டது. “அவனால் அவனது காதலால் என்னுயிரே போவதாயினும் போகட்டும். உனது மகளின் விழிகளில் படர்ந்த பசலையானது காமநோயினால் வந்தது என்று மட்டும் கூறாதே தோழி” என்று தலைவியின் கூற்றைப் படம் பிடிக்கிறது.

    “……………. யாக்கை இன்உயிர் கழிவது ஆயினும்,
    நின்மகள்               (அகம் -52, 12-15)

    எனும் நொச்சி நியமங்கிழார் இயற்றிய குறிஞ்சிப்பாடல்.

    முல்லை நில வாழ்வியல்:

    காரும், மாலையும் முல்லை”      (தொல். நூற்பா  952)
    மாயோன் மேய காடுறை உலகமும்”   தொல். நூற்பா 951  என முல்லை நிலத்தின் நிலம் பொழுதினை வரையறுக்கின்றது.

    இந்நில மக்கள் காடும், காடு சார்ந்த இடங்களில் வாழ்கின்றனர். இயற்கை எழில் சூழ வாழ்ந்தனர். இந்நிலவாழ் காதல் தலைமகளானவள் இருத்தலும், இருத்தல் நிமித்தமும் கொண்டு தன் தலைவனை எண்ணி நினைந்து உருகுகிறாள். இந்நில மாந்தர் அன்பில் உயரியவர் எனில் அது மிகையாகாது. வாடுகின்ற தலைவிக்கு கார்காலம் வந்து விட்டது. பிச்சிப் பூக்கள் பூக்கத் தொடங்கி விட்டன. “பெண்ணே! உயிர்களை வருத்தாத உன் அன்பிற்குரிய தலைவன் உனைநினைத்து விரைந்து வருவான், கவலை கொள்ளாதே” எனத் தோழியானவள் ஆறுதல் வழங்கித் தலைவியின் ஆற்றாமையைப் போக்க முயலுகிறாள்.

    அதனை காட்சிப்படுத்தும் விதமாகக் குறுங்குடி மருதனார் இயற்றிய பாடல் விரிவதை

    தாதுண் பறவை பேதுறல் அஞ்சி
    மணிநா
    ஆர்த்த மாண்வினைத் தேரன் (அகம் – 4, 11-12) கூறுகிறது.

    “கொன்றை மரத்தின் மொட்டுக்கள் அரும்பி மலரும் நாளில் கொம்புகிளைத்த மான்கள் துள்ளிக் குதித்தன. வானகம் தூறலிட்டதில் கானகம் பசுமை பூத்தது. இந்நாளில் வருவதாய் சொன்ன உன் தலைவன் செங்காந்தள் மலர்களைக் காணும் நேரம் உன்னழகினை நினைந்து வருவான். நினைத்ததும் உனைத்தேடி குதிரைபூட்டிய தேரில் விரைந்து வருவான். அவ்வாறு வரும் வழியில் கோவை மலர்களில் தேன் எடுக்க மூழ்கியிருக்கும் வண்டுகள் தேனின் மணிச்சத்தம் கேட்டு பறந்து விடும் என்றஞ்சி மணியின் நாவைக் கட்டி ஓட்டி வருவான்” எனக் கூறும் தோழி, “வண்டினத்தைக் கூட வாடவிடக்கூடாது என்று நினைக்கும் உன் தலைவன் உனை வாட விட்டு விடுவானோ?” எனக் கேட்கிறாள். இயற்கையோடு இயைந்து வாழ்ந்த காரணத்தால் மட்டுமே வண்டிற்கும் கூட வலி ஏற்படாதிருக்க மனம் இரங்கினான் தமிழன் எனும் நிலையை முல்லைப் பாடல் வழி நம்மால் அறிய முடிகிறது.

    இயற்கையை இரசிப்பது மட்டுமன்று, போர்க்காலத்து நாளிலும் பகைவரை எல்லாம் சாடித் தன் காதல் தலைவியின் இளமை நலம்துய்க்கத் தேரினை விரைந்துசெலுத்திடத் தேர்ப்பாகனுக்கு ஆணையிடுகிறான் தலைவன் என்பதை

    முரண்செறிந் திருந்த தானை இரண்டும்”     (அகம் – 44, 3-6)

    எனும் பாடல் வழிக் குடவாயில் கீரத்தனார் கூறுவதை காணும் போது, தலைவனானவன் தலைவியை எக்காலத்தும் தனித்து தவிக்கவிடக்கூடாது எனும் உன்னத நோக்கோடு விளங்குகிறான் என்பதை அறிய முடிகிறது. தலைவன், தலைவியின் நினைவாக மூவிடப் பிரிதலும், தலைவி, தலைவன் நினைவாகக் காத்திருத்தலும் காதலின் இன்பத்தை பெருக்குவதாக விளங்குகின்றது. இதனையே வள்ளுவர் தமது அன்புடைமையில்

    அன்புற்று அமர்ந்த வழக்கென்ப…  (குறள் – 75) என்கிறார்.

    கொலை புரிதல் கொடிய பாவம் எனினும், கூடிய உயிரை வருத்துவது அதை விடப் பாவம் என்பதை முல்லை நில மக்களின் வாழ்வியலால் அறிய முடிகின்றது.

    மருத நில வாழ்வியல்:

    வைகறை விடியல் மருதம்” என்கிறது தொல்நூற்பா  954. வயலும், வயல்சார்ந்த நீர் நிலை நிரம்பியபகுதி இந்திரனுக்குரிய ஒன்றாகும். இந்நில மக்கள் விவசாயத்தைப் பெரிதும் போற்றி வளர்த்தனர்.

    கற்பு நெறியில் தலைவி சிறந்து விளங்குகிறாள். தலைவன் இளமை நலம்துய்க்கப் பரத்தையரிடம் செல்கின்றான். தலைவன் ஒழுக்கம் தவறுவதை மருதநில வாழ்வியல் நமக்குச் சுட்டிக்காட்டுகிறது எனினும், இன்பம்துய்த்துத் திரும்பிய தலைவனை, தலைவி ஊடல் நிலையில் வெறுக்கிறாள்.          

    வரைவிலா மாணிழையார்… (குறள் – 919)

    மிக இழிந்தவர் கிடக்கும் நரகம் எது? ஒரு வரம்பில்லாத பரத்தையரின் தோளாகும் என வள்ளுவப் பெருந்தகை கூறும் கூற்றைத் தலைவியானவள் தன்னை மறந்து தன் இளமை நலம் துய்க்காது பரத்தையரை நாடிச்சென்ற தலைவனைப் பார்த்துக் கூறுகிறாள். மருதத்திணைக்குரிய அகத்திணை ஒழுக்கமென்பது ஊடலும், ஊடல் நிமித்தமும் ஆகும். இங்கே தலைவியானவள் இளமை நலம் எனும் காதல் பெண்பருவத்தில் இருப்பதில்லை. பிள்ளைபெற்ற தாயாகத்தான் பெரும்பாலும் மருதத்திணையில் காட்டப்படுகிறாள். இக்கூற்றை மருதநிலப்பாடல்கள் நமக்கு அறிவிக்கின்றன.

    தலைவியோ தன் இளமைக் காலத்துத் தலைவன் தன்னை எவ்வாறு இன்பம் துய்த்தான்; அத்தகைய தலைவன் தான் பிள்ளைபெற்ற தாயானதும், தன்னைத் தலைவன் அணைக்க விரும்பாது ஒதுங்கிப் போகிறான். அவனை அன்போடு தானே அணைக்கச் சென்றாலும் மார்பில் கசியும் பால் தன்மீது படுமென்று ஒதுங்கி நிற்கின்றான் எனத் தோழியிடம் கூறுகிறாள் தலைவி.

    தலைவனின் செயலானது, தாமரை நிறைந்த தடாகத்தை எருமையானது கலக்கிச் சேறாக்கும்; பின்பு தாமரையை தின்று மகிழும். அத்தகைய குணம்கொண்ட நீ எனக்கு யாரோ? உன்னோடு நான் எதற்கு ஊடல் கொள்ள வேண்டும்? இவ்வூரே உன்னைப் பற்றித் தூற்றுகிறது. அதனை என்வாயால் நான் சொல்லமாட்டேன். நீ வாழ்க! களிறுகள் நிறைந்த போர்க்களத்தைச் செழியனது வெற்றிபொருந்திய போர்வாள் அழித்ததுபோல, எனது வளையல்கள் நெகிழ்ந்து வீழ்ந்தாலும் வீழ்க என்றாலும், நீ நினைத்த இடத்திற்கே சென்று நீ நினைத்தது போலவே இன்பம் துய்த்திடு. உன்னைத் தடுப்பவர் எவரிங்கே? என்பதை அள்ளூர் நன்முல்லையார் தம்பாடல் வாயிலாகப் படம் பிடித்துக் காட்டுகிறார். இங்கே தலைவன், தலைவியின் ஊடல் நிலை மட்டுமல்லாது போர்நிகழ்வும் குறித்தது குறிப்பிடத்தக்கது. ஆகவேதான் அகநானூறு தமிழர்களின் அகவாழ்வை மட்டுமின்றி அந்நாளைய போர் நிலைக்களன்களையும் குறிப்பிடுகிறது.

      “களிறுடை அருஞ்சமம் ததைய நூறும் (அகம் – 46, 12-14) எனும் பாடல் விளக்குகிறது. தமிழரின் பண்டைய திருமண நிகழ்ச்சியை கூறும் மருதநிலப்பாடல் ஒன்றைப் பார்ப்போம். சிலப்பதிகாரத்தில் மணவிழாவிலே “மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிய…” என்பது போன்ற நிகழ்ச்சி ஏதும் அன்றைய தமிழர் தம் வாழ்க்கையில் இல்லை என்பதை உரையாசிரியர் உரைக்கின்றார்.

    தமிழர் பண்பாட்டின் விழுமியங்களாக இலக்கியச் செப்பேடுகளாக அகநானூற்றைப் போற்றுவது இதன் காரணத்தால் எனின் அது மிகையாகாது. அந்நாளைய தமிழர்கள் நல்லநாள் பார்த்தல், புத்தாடை உடுத்தல், பெருஞ்சோறளித்தல், மங்கல மகளிர் வாழ்த்தல், தமர் அளித்தல் போன்றவைகளே நிகழ்ந்துள்ளன என்பதை நல்லாவூர் கிழார் இயற்றிய மருதநிலப்பாடல் உணர்த்துகிறது.

    கோள்கள் நீங்கிய கொடுவெண் திங்கள்  (அகம் – 86, 6-15) என்கின்ற பாடல்வழித் திருமண நாளில் நடைபெறும் நிகழ்வுகளை வரிசைக் கிரமமாகக் கூறி அதாவது, உளுத்தம் பருப்புப் பொங்கலைக் கூடியிருக்கும் சொந்தங்கள் இடைவிடாது உண்டுகொண்டிருந்தனர். முழுமதி வந்த தீங்கற்ற உரோகணி நன்னாள் அது! இருள்நீங்கிய புலர்காலை பூத்தது. உச்சியிலே நிறை நீர்க்குடம் சுமந்தும், இடையிலே மண்கலயங்கள் சுமந்த மங்கல மகளிர் கூடினர். அன்பளிப்பு வழங்கியபடி இருந்தனர். மங்கல மகளிரின் நீராட்டலில் நீரும், பூவும், நெல்லும் கூந்தலோடு உறவாடி நின்றன. அதன்பின் வதுவை மணமும் நிகழ்ந்தது. பின் “கற்பினின்று வழுவாது மணவாளனுக்குரிய இல்லக்கிழத்தி ஆவாய்” என சுற்றம்கூடி வாழ்த்தி எம்மைத் தனி அறை காட்டினர். புணர்ச்சி கொள்ளும் முதலிரவில் புத்தாடைக்குள் புதைந்து கிடந்த பூவையை மெல்ல அணைத்தேன். “உன் உள்ளம் விரும்புவதை ஒளியா சொல்” என்றேன். பொத்திய என் கரமெடுத்து தலைகவிழ்ந்த சித்திரமாய் மௌனமாய் நின்றாள். பூமுகம் என்றும் அவள் தன்பால் எப்போதும் அன்புகொண்டவள். தோழியே தடைபுரிகிறாள் எனத் தலைவியின் அன்புநலம் பாராட்டும் அற்புதப் படப்பிடிப்பாய் அமைந்த பாடலிது. இத்தகைய உயரிய பண்பாட்டு விழுமியங்களைக் கொண்ட இலக்கியங்களைக் கற்று இன்புறுவதே தமிழர்களாகிய நமக்குக் கிடைத்த பெரும்பேறு.

    முடிவுரை

    இக்கட்டுரையின் மூலம் மனிதன் தங்கள் வாழ்க்கையோடு நிலத்தையும் பொழுதையும் தொடர்புபடுத்தி வாழ்ந்தான். நிலத்தின் பெயரால் மக்கள் பெயர் அமைவதால் நிலத்தினை உயர்திணையாக்கிப் பேசுவதையும் காணலாம். நிலத்தையும் பொழுதையும் மக்களுக்கு நன்மை பயக்கும் கருவிகளாகக் கொண்டனர். மேலும் அவற்றைப் போற்றிப் பாதுகாத்து வந்தனர். எதிர்காலத்தில் நாமும் இயற்கை வளங்களைப் பாதுகாக்க வேண்டும். அவற்றின் இன்றியமையாமையை உணர வேண்டுமென்ற உயரிய நோக்கத்தை இக்கட்டுரை வெளிப்படுத்துகிறது.

    *****

    கட்டுரையாளர் – முனைவர்பட்ட ஆய்வாளர்,
    அரசு கலைக்கல்லூரி,
    கோவை.

     

     

    Share
  • இயற்கையும், மனிதனும்! 

    -ரா.பார்த்தசாரதி 

    விதை  செடியாகி, மரமாகி நிமிர்ந்து நின்றதே!
    பூவாகி, காயாகி  கனிகளை கொடுக்கின்றதே!
    கதிரவன் ஒளி எல்லோர்க்கும் இன்றியமையாததே!
    அதன் ஒளியால் பல உயிர்கள் வாழ்கின்றதே!
    மழை மண்ணை நனைத்து  குளிர வைக்கின்றதே!
    இதுவே பயிருக்குச் சிறந்த நன் நீராகிறதே!
    நிலவும் குளிர்ச்சி தந்து தண்ணொளி வீசுகின்றதே!
    நிலவும், தென்றலும், நல்லுறக்கம்  அளிக்குதே!
    மனிதனே  மரங்களை அழித்துக் கூறுபோடாதே!
    நிலங்களை அழித்து வீடு மனை  ஆக்காதே!
    இயற்கையோடு இணைந்து வாழக் கற்றுக்கொள்!
    மரக்கன்றுகளை நட்டுச் சுற்றுப்புற சூழலை காப்பாற்றுங்கள்!
    நாடும், வீடும் சுத்தமாக இருந்தால் நோய்கள் அகலுமே!
    சுற்றுப்புறம்  அசுத்தமாய் இருந்தால் நோய்கள் வந்தடையுமே!

     

    Share
  • சமூகக் குற்றம்!

    -பெருவை பார்த்தசாரதி

    சுத்தமாக எழுபது ஆண்டுகள் ஆனபின்னும்
    ===சுதந்திர தேசப்பிதாவின் கனவு நனவாகவிலை..!
    பத்திரிகைத் தாளின் பக்கங்களிலெலாம் பத்தி
    ===பத்தியாகப் பாலியல் வன்கொடுமைச் செய்தி..!
    சத்தமின்றியே எங்கோவோர் மூலையில் இது
    ===எப்போதும் அரங்கேறுகிற சமூகக் குற்றமாம்..!
    அத்துமீறி இக்குற்றம் புரிவோரை யடக்கவே
    ===அசுரபலம் கொண்ட புதியசட்டம் வேண்டும்..!

    எங்கும் நடந்தேறுகிற பாலியல் கொலைகளின்
    ===எண்ணிக்கையில் பச்சிளம் பிஞ்சுகளே அதிகம்..!
    எங்கேயொரு ஊடகத்தில் வெளிவந்த பின்னே
    ===எரியும் தீபோல பரவுகின்ற அவலநிலைதாம்..!
    எங்கும் சுதந்திரமாயுலவும் சமூகக் குற்றங்கள்
    ===இனி நிகழாதிருக்க ஏனின்னும் முடியவில்லை..?
    அங்கங்கே அரங்கேறும் அராஜகம் அக்கிரமம்
    ===அதை மன்றத்தில் கையாளும் திறமையெங்கே..?

    மண்டிக் கிடக்கும் சமுதாயச் சீர்கேட்டால்
    ===மங்கியநம் கலாசாரம் மெதுவாக மறைகிறது..!
    கண்ட பழக்கமும் கைவரப் பெற்றதாலின்று
    ===காதல் வலையில் சிக்குவாராம் சிறாரும்கூட..!
    எண்ணிப் பார்த்து எச்செயல் நல்லதுதீயது
    ===என வறியத்தான் பள்ளிக்கு அனுப்புகிறோம்..!
    பண்பறியா ஆசான்கள் இல்லாது போனதால்
    ===பாழாய்ப் போனவது பள்ளியுள்ளும் புகுந்தது..!

    மாற்றம் கொண்டுவரவே மனவுறுதி கொண்ட
    ===மகத்தான உத்தமர்கள் வாழ்ந்தநம் திருநாட்டில்..!
    ஆற்றலிருந்தும் அன்றே தவித் தார்களவர்
    ===அருமைச் சமுதாயம் அமைந்திட உழைத்தார்..!
    நாற்ற மெடுக்கின்ற சமுதாயத்தைக் காண
    ===நல்லவேளை இன்ற வர்கள் உயிருடனில்லை..!
    ஏற்றமின்றி இன்றுவரை தத்தளிக்கும் சமூகம்
    ===ஏற்றமுற எத்துணைநாள் காத்திருக்க வேணும்..!

    *****

    நன்றி தினமணி வெளியீடு:: 22-04-18
    நன்றி :: கூகிள் இமேஜ்

     

    Share