’ஆடிப்பாவை போல’  நாவலில் திணையின் செம்மாந்த நிலை

-சு.இராமர்

உலகமயச் சூழல் மனித நெருக்கடிக்கு வித்திட்டிருக்கிறது. சுயசார்பான உண்மை வெளிகள் மூர்க்கமடைந்திருக்கின்றன. நுகர்வுக் கலாசாரப் பின்புலம் மனிதர்களை அவசர கதியில் இயங்க வைத்துக் கொண்டிருக்கிறது. தீவிர மனப்பான்மை கொண்ட தேசிய அடையாள உருவாக்கம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இன்றைய சூழல் இதுவரை எதிர்கொள்ளாத வகையில் இடர்பாட்டுக்குரியதாகி இருக்கிறது. மனித உணர்வுகள் மேலெழும்பி, ததும்பி வழியும் நிலைகள் இன்று இயல்பானதாகி இருக்கிறது. அக உணர்வுகள் எதிர்கொள்ளத் தகாதனவாக மாறியிருக்கின்றன. ஆண், பெண் உறவுகள் பற்றிய புரிதலைக் காலங்கடந்து இன்றும் பேசு பொருளாக்கி வருகின்றமையைக் காணமுடிகின்றது. பன்மைச் சூழலைப் பற்றிய சிந்தனை இந்திய அளவில் இருந்ததை ஒன்றாக்கிவிடத் துடிக்கும் அபாயகரமான சூழலில் தமிழ்ச் சிந்தனை அதற்கு வழிகாட்டியாக இருப்பதைச் சுட்டும் வகையில் அமைந்திருப்பதைக் காணலாம்.

தொல்காப்பியம் பாயிரத்தில் வடவேங்கம் தென்குமரி என்று குறிப்பிட்டு தமிழ் நிலத்தைப் பொதுவான நிலமாகக் கூறவில்லை. மொழியால் ஒன்றிணைந்ததே அன்றி அதன் உட்பிரிவுகள் பலவாக இருப்பதைத் திணைப் பகுப்பில் சுட்டுகிறது. நானிலங்கள் என்று கூறப்பட்டாலும் ஐந்திணைகளே மரபாகக் கொள்ளப்படுகின்றன. திணைகளைக் கண்டுணர்தல் என்பது இன்று சுற்றுலாத் தலங்களைக் கண்டுணர்வதாக மாறிப் போயிருக்கிறது. வயல்வெளிகள் அடைந்திருக்கும் மாற்றம் அச்சம் கொள்ளும் வகையில் நம் வாழ்வை மாற்றி வைத்திருக்கிறது. மருத நிலத்தினை அடியொற்றியதாகப் பிற திணைகள் அனைத்தும் கட்டுப்பட்டிருக்கின்றன. நீர் நிலைகள் காணாமல்போன சூழலை எதிர்கொள்வதற்கு ஒவ்வொரு வருடமும் மழைக்காலத்தில் அச்சத்தை இடுப்பில் சுமந்து கொண்டிருப்பது போலான சூழல் நிலவுகிறது. பின்காலனிய மனநிலையானது திணைவாழ்வை மீட்டெடுப்பதாக இருக்கிறது. இயற்கை வேளாண்மைக்கு அழைக்கும் போக்கை அவ்வாறுதான் புரிந்து கொள்ள முடியும். காலனியப்படுத்தப்பட்ட பகுதிகள் அனைத்தும் பண்பாட்டு தாக்கத்திற்கு ஆளாவது இயல்பாகும். ஆனால் தமிழ் மரபின் தொடர்ச்சி ஒவ்வொருவருக்குள்ளும் புதைந்து கிடந்து மேலெழும்பி வருவதை இலக்கியங்கள் வழி அறிந்து கொள்ள முடியும். திணைசார்ந்த உணர்வென்பது இயல்பூக்கமாக வெளிப்படும். பசி, தூக்கம், காதல் என்பது போல இயல்பூக்க நடவடிக்கையாகத்தான் திணை சார்ந்த உணர்வுகள் வெளிப்படும்.

திணை என்ற சொல் புதிய தொழில்நுட்பச் சமூகத்தில் அனைத்து உயிர்ம சூழலும் மாறியிருக்கும் நிலையில் பெரிதும் அர்த்தப்பாடுடையதாக மாறியிருக்கிறது. பண்டைய தமிழ்ச் சமூகத்தின் மனம் தன் தொடர்ச்சியை எச்சூழலிலும் மறைத்துக் கொள்வதில்லை. அது பண்டைய படைப்புகளிலும் சூழல் சார்ந்து வெளிப்படுவதாக இருந்தது. தொழில்நுட்பச் சமூகத்திலும் துலக்கமாக வெளிப்படுகிறது. தொழில்நுட்பச் சமூகமென்பது முற்றிலும் நகர்மயமான சூழலாகும். திணையுணர்வின் வெளிப்பாட்டினை அகத்திணை சார்ந்தோ, புறத்திணை சார்ந்தோ படைப்புமனம் வெளிப்படுத்தத்தான் செய்கிறது. திணை ஒரு செம்மாந்த செம்பொருளாகத் தமிழில் காணப்படுகிறது. இன்றைய சூழலும் அகத்திணை, புறத்திணைக் கூறுகளைக் கொண்ட வாழ்வியலை உடையவர்களாகத் தமிழர்கள் காணப்படுகிறார்கள். நிலைபேறுடைய ஒன்றாக திணை வாழ்வு காணப்படுகிறது. அதற்குச் சான்றாகவே ஆடிப்பாவை நாவலின் காட்சியமைப்புகள் அமைகின்றன.

திணை என்ற சொல்லுக்கு, குடி, ஒழுக்கம், குடும்பம் போன்ற பொருள்கள் தரப்படுகின்றன. ஒழுகலாறுகள் என்பதாகவே பெரிதும் அர்த்தப்படுகின்றது. சூழலையும், வெளிகளையும் கூடத் திணை என்ற சொல் குறித்து நிற்கிறது. “திணை என்ற சொல்லின் மூலப் பொருளான குடும்பம், குடியிருப்பு ஆகியவை முக்கியத்துவம் பெறுகின்றன. பல நிலப்பகுதிகளின் நடத்தை முறைகளை விளக்கும் சொல்லாகப் பரிணமித்த வரலாற்றை அவை குறிப்பிடுகின்றன”1 என்று சிவத்தம்பி நிலப்பகுதிகளின் நடத்தைமுறைகளை திணை என்ற சொல் குறிப்பதாகக் கூறுகிறார். திணைசார்ந்த வாழ்வியலைத் தமிழர்கள் காலந்தோறும் பெறுவதானது. உள்ளத்தளவில் மாறுபாடடையாத வாழ்வியலைக் கொண்டிருப்பதைக் காட்டுகிறது. ஆயினும் இன்றைய சூழல் பண்டைய தமிழ்ச் சூழலுக்கு முற்றிலும் பொருத்தமில்லாத் தன்மையுடன் விளங்குகிறது.

நகர்த்திணைப் பெருக்கமும், தொழில்நுட்பச் சமூகமும் மனிதர்களின் இயந்தர வாழ்க்கையும், அகப் புற மன உணர்வுகளில் ஏற்படும் சிற்சில மாற்றங்களுமெனக் காணப்படுகிறது. புறவெளிகள் கலைந்து போயிருக்கின்றன. ஆயினும் திணை சார்ந்த பார்வை காலகட்டம் சார்ந்ததாக அமையாது. சங்கக் கவிதை மட்டுமே திணைக் கவிதை கிடையாது. அனைத்து காலப் படைப்புகளிலும் திணையோர்மை வெளிப்படவே செய்யும். நவீன இலக்கியங்களும் அதற்கு விதிவிலக்கல்ல. “திணைக் கண்ணோட்டமென்பது, நிலம், காலம் மற்றும் சமூகச் சூழல்கள் மனித வாழ்வை எவ்வாறு மாற்றுகிறது அல்லது அச்சூழலுக்குள் மனிதன் தன் வாழ்விருப்பை எவ்வாறு கண்டடைகிறான் என்று கொண்டால் தமிழ் இலக்கியப் பரப்பு நெடுகிலும் இதனைக் காண இயலும்”2 என்று இன்றைய சூழலுக்கும் திணைக்கோட்பாடு பொருத்தப்பாடுடையதை வெளிப்படுத்துகிறார் க.ஜவகர். நவீனச் சூழலுக்குப் பொருத்திப் பார்க்க வேண்டிய தேவையை ஐயப்பப் பணிக்கர் போன்ற ஆய்வாளர்கள் முன்னெடுத்தனர். தனிநாயகம் அடிகள் போன்றோர் தமிழின் கவிதை மரபை நிலம் சார்ந்தவொன்றாகப் பரிணமிக்க வைத்தனர். “ஒவ்வொரு திணையும் இடம், கால நிலைகளின் இணைவே.

தொல்காப்பியர் தம் காலத் தென்னக நிலவியற்கையின் அடிப்படையில் ஏழு அகத்திணைகளையும் ஏழு புறத்திணைகளையும் வகை செய்துள்ளார்”3 என்று குறிப்பிடும் ஐயப்பப் பணிக்கரின் கூற்றானது. அதற்கும் மேலாகவும் திணைகள் பெருகலாம். இடத்திற்கும் சூழலுக்கும் இயைந்தவாறு அமையலாம் என்று கூறுகிறார். இன்றைய சூழல் மருத நிலப் பெருக்கமே காணப்படும் சூழலில் ஐந்திணைகளின் உரிப்பொருள்களும் பெரிதும் மருத நிலத்துப் பண்புகளாக வெளிப்படுவதை நாவல்களில் காணலாம். அந்த அடிப்படையிலேயே நகர்களில் காதல் வாழ்வும், ஊடலும், கூடலும், பிரிதலும், இரங்கலும், காத்திருத்தலும், திருமண உறவில் இணைதலுமாக அகம் என்னும் பகுதியின் நாவல் பகுதிகள் ஆடிப்பாவை நாவலில் காணப்படுகின்றன.

திணையவியல் என்பது இன்றைக்கும் பொருந்துவதாகவே உள்ளது என்பதையே தமிழவனின் ’ஆடிப்பாவை போல’ நாவல் உணர்த்துகின்றது. நாவல் இரண்டு விதமாய்ப் பகுக்கப்பட்டிருக்கிறது. ஒன்று அகம் பிறிதொன்று புறம். இவ்வாறு பிரித்து எழுதுவதற்கானத் தேவை அவருள் ஒளிந்து கொண்டிருக்கும் தமிழ் மரபினை மேலெழுந்து வரச் செய்த திணையோர்மைதான் என்றால் அது மிகையில்லை. காதலைப் பேசாத கலைகளே இல்லை என்று கூறலாம். காதல் பற்றிய விளக்கங்கள், விமர்சனங்கள் இன்று பல்கிப் பெருகியுள்ளன. காதல் பற்றிய உணர்வை இளைய வயதில் எதிர்கொள்ளும் யாருக்கும் சாதிய, மத இடர்பாடுகள் வந்து மோதி அதைக் கடந்து செல்வது பற்றிய உணர்வு இருப்பதில்லை. காதல் என்பது திருமணத்தை நோக்கி நகர நகர இன அடிப்படை பற்றிய அச்சங்கள் தோன்ற ஆரம்பிக்கின்றன. தம் சாதிப் பெருமைக்கு இழுக்கு நேரும்போது மட்டுமே சாதியை எதிர்க்கும் வல்லடித்தனம் வெளிப்படுகிறது.

கிருபாநிதி, ஹெலன் காதல் பற்றிய சித்திரிப்புகளில் கிருபாநிதியின் அண்ணியோ, அம்மாவோ, அப்பாவோ அவன் காதலிக்கும் பெண் நல்லவள் என்று அனைவராலும் கூறப்பட்ட பின்னணியிலும் சாதியை அறிந்து கொள்ளத் துடிக்கும் மனப்பாங்கை அது சாதிய இழிவை இன்றும் சுமந்து கொண்டிருக்கும் மனிதர்களை வெளிக்காட்டுவதாக அமைகிறது. ஹெலன் கிறித்தவள் என்பது ஒரு பொருட்டில்லை. அவளது சாதி என்ன என்பதை அறிவதுதான் பிரச்சினைக்குரியதாக இருக்கிறது. தொல்காப்பியம் கூறும் இரண்டு பேர் விதிவசத்தால் ஒன்றிணைவது தெய்வத்தின் செயல் என்பது சாதிய அடிப்படையில் ஒத்த இருவர் என்பதாக மறுவாசிப்புச் செய்யப்பட வேண்டும். கிருபாநிதியும் ஹெலனும் இறுதியில் ஒரே சாதியினர் என்பதில் அமைதி கொண்டு வரப்படுகிறது.

வழக்கமான சினிமா பாணியிலான முடிவாக இருந்தாலும் சாதிய இழிவைச் சுமந்து கொண்டு வாழ்ந்திருத்தல் என்பது அடிப்படையில் இயலாத ஒன்று. எனவேதான் சந்தோஷம் தீ வைத்துக் கொல்லப்படுகின்றான் என்று கூட கூறலாம். சாதிய அடிப்படையைத் திணை சார்ந்த வாழ்வியல் ஒப்புக் கொள்கிறதா என்று அறியமுடியவில்லை.

காதல், வீரம் அல்லது அரசியல் என்பதாக தமிழ்ச் சமூகம் கட்டமைந்துள்ளது. நவீனச் சமூக உருவாக்கமும் காலனிய இடர்ப்பாடுகளும் தமிழ் மனத்தின் மரபுத் தொடர்ச்சியை பாதித்து விடுவதில்லை. திணைகள் கலைந்து போயிருக்கக் காண்கிறோம்.  மொழியினால் ஒன்றிணைந்தவர்களே காதலர்கள். சாதிய, மத இடர்ப்பாடுகள் அவர்களுக்குள் இல்லை. அதனால்தான் சாதியைப் பற்றிக் கேட்கும்போது அவர்களுக்குள் தயக்கம் ஏற்படுகிறது. உதவித் தொகைக்கான மாணவர்களை எழுந்திருக்கச் சொல்லும் போது வகுப்பறையில் ஏற்படும் மனச் சங்கடங்கள் அளப்பரியன என்பதை நாவல் சுட்டுகிறது. நாடகத்தில் நடிக்கும்போது கூட உயர்வு, தாழ்வு கடைப்பிடிக்கும் மனிதர்கள் தீண்டாமை, இழிவு ஆகியவற்றைக் கடந்து செல்லுவதை விரும்பாத நிலையே சுட்டப்படுகிறது. நாடகமாயினும், அரசியலாயினும், சினிமாவாயினும் சாதிய அணுகல்கள் இருந்து கொண்டிருக்கின்றன. இந்தப் பின்னணியில்தான் நாவலில் தொல்காப்பிய அகத்திணைக் கூறுகள் ஆங்காங்கு இருக்கக் காண்கிறோம்.

காதலர் இருவர் தற்செயலாகச் சந்தித்துக் கொள்வதைத்தான் தொல்காப்பியம்,

ஒன்றே வேறே என்றிரு பால்வயின்
ஒன்றி உயர்ந்த பால தாணையின்
ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப
மிக்கோ னாயினும் கடிவரை இன்றே”
(தொல்.களவு.2)

என்ற நூற்பா சுட்டுகிறது. ஒத்த கிழவனும் கிழவியும் ஒன்றிணைதல் என்பது விதி வசமானது என்பதைப் போல நாவலில் வின்சென்ட் ராஜாவும், காந்திமதியும் சந்தித்துக் கொள்வது தற்செயலான நிகழ்வாகக் காட்டப்படுகிறது. அவர்கள் ரயிலில் சந்தித்துக் கொள்கிறார்கள். கல்லூரியில் பயின்று கொண்டிருக்கும் இருவரும் கலை சார்ந்த நிகழ்வில் பங்கேற்றுப் பரிசில் பெற்று விட்டுத் திரும்புகிறவர்களாக இருக்கிறார்கள். இருவரையும் இணைத்தது நல்லூழின் ஆணை என்று குறிப்பிடுகிறது. அவர்கள்தான் இணையப் போகிறார்கள் என்பதைச் சுட்டும் விதம்தான் நாவல் தொடங்கும் போதே இருவரது அளவளாவல். ஆணின் தவிப்பும் பெண்ணின் பரிதவிப்பும் எனக் காட்சியை வடிவமைத்திருக்கிறார். இருவருக்குள்ளும் ஏற்படும் இனம்புரியாத ஈர்ப்பு, அடுத்தடுத்த அக இயல்களில் வளர்த்தெடுக்கப்படுகின்றன. தமிழ் மரபில் பாங்கனும், பாங்கியும் இல்லாது காதல் நடைபெறாது என்பதைச் சுட்டுவதற்காகவே இரு பாத்திரங்கள் வின்சென்ட் ராஜாவையும், காந்திமதியையும் சுற்றிக் கொள்கின்றன. கிருபாநிதி, ஹெலன் என இருவரும் பாங்கியர் கூட்டம் நடைபெறக் காரணமாக சுட்டப்படுகின்றனர். காந்திமதி – வின்சென்ட் இடையே உள்ள மத வேறுபாடு போலவே கிருபாநிதி – ஹெலன் இடையேயும் காணப்படுகிறது. அது ஒரு பிரச்சினையாகச் சுட்டப்படவில்லை.

காதலர்கள் சந்தித்துக் கொள்ளும் இடங்கள் சங்க காலத்தில் குறியிடங்கள் எனப்பட்டன. குறிஞ்சி என்றால் தினைப்புனம், முல்லை, நெய்தல் நிலங்களில் நிலம் சார்ந்த சோலைகள், மணற்பாங்கான இடங்களில் சந்திப்பு நிகழ்கிறது. நாவலில் திணை சுட்டும் குறியிடங்கள் துலக்கமாகக் காணப்படவில்லை. ஆனாலும் காலத்திற்கேற்றாற் போல குறியிடங்களும் மாறுவது இயல்பென்ற வகையில் பாலர் விடுதியைச் சுற்றி நிகழ்தல், திரையரங்குகளில் நிகழும் சந்திப்புகள் ஆகியன குறியிடங்கள் என்பனவாகக் கொள்ளலாம். வின்சென்ட்டுக்கு கிருபாநிதியும், காந்திமதிக்கு ஹெலனும் உதவி செய்பவர்களாக வந்து அவர்களும் காதலர்களாக மாறுகிறார்கள்.

தலைவன், தலைவி என்ற அகத்திணை சுட்டும் அடையாளமற்றத் தன்மையை நகர் சார்ந்த பகுதிகள் அடையாளமற்றுப் போகச் செய்கின்றன. அதாவது கிராமத்திற்குள்தான் பெயர்கள் குறித்த அடையாள ஓர்மை குறித்த அச்சம் காணப்படும். நகர்களில் பலவிடங்களிலிருந்தும் மனிதர்கள் வந்து சேர்வர். அங்கு அடையாளம் காண்பதரிது. எனவே நகர்களில் பெயர் இருந்தாலும் பெயர் சுட்டா மரபே கதையாடலில் இயங்குகிறது எனலாம்.

பகற்குறியிடங்கள் மட்டுமே நாவலில் சுட்டப்படுகின்றன. அதிலும் தியேட்டர் போன்ற காலனியச் சூழலில் உருவான பொதுவெளிகளில் சந்தித்துக் கொள்வதைக் காணமுடிகின்றது. ஒருவரையொருவர் அறிமுகப்படுத்திக் கொள்ள முடியாத இடமாக திரையரங்குகள் காணப்படுகின்றன. சில நேரங்களில் விடுதிக்கு வெளியில் சந்தித்துக் கொள்வதும். திரையரங்கிற்குச் சென்று விட்டு விடுதி மூடுவதற்குள் சென்று விடுவதுமென பாதுகாப்பான காதல் வெளிப்பாடுகளே காணப்படுகின்றன.

வின்சென்ட், காந்திமதி காதலை விடவும் கிருபாநிதி, ஹெலன் காதல் வேகமெடுப்பதை நாவலில் காணலாம். கிருபாநிதியின் அதிகப்பிரசங்கித்தனத்தை கண்டிக்கக் கூடியவர்களாக காந்திமதியும், வின்சென்ட்டும் இருக்கிறார்கள். காந்திமதி வின்சென்ட்டிற்குக் கடிதம் எழுதுகிறாள். அதில் கிருபாநிதியின் செயல்பாடுகள் குறித்த அசூயையை வெளிப்படுத்துகிறாள். வின்சென்ட் இது குறித்துக் கிருபாநிதியிடம் கூறுகிறான். இவ்வாறான காதல் சார்ந்த பிரச்சினைகளும் நண்பர்களால் தீர்க்கப்படுகின்றன. தோழியின் துயரை தலைவி தீர்ப்பதற்கும், தலைவனின் துயரைப் பாங்கன் தீர்ப்பதற்குமான இடங்களாக இவை காணப்படுகின்றன.

குறியிடங்களில் அல்ல குறிப்படுதல் என்பது திணைசார்ந்த வாழ்வில் காணப்படும் ஒன்றாகும். அல்ல குறிப்படுதல் என்பதைக் குறித்து தொல்காப்பிய பொருளதிகாரம் குறிப்பிடுகின்றது. இயற்கையான நிகழ்ச்சிகளால் தலைவன் வந்துவிட்டான் என்று கருதி வந்து பார்த்து ஏமாற்றமடைந்து சென்று விடும் தலைவி பின்பு தலைவன் வந்து திரும்பி விடுதலை அறியாதாளாக அடுத்த நாள் தலைவன் செய்த குறிகண்டு கலங்குவதைக் கூறுகின்றன. இவ்வாறான அல்ல குறிப்படுதல் என்பதை நாவலில் காணமுடிகிறது. காந்திமதி வின்சென்ட்டிற்காகக் காத்திருந்து அவன் வராமல் ஏமாற்றமடைந்து செல்வதை அல்ல குறிப்படுதலாகக் கொள்ளலாம். அல்ல குறிப்படும்பொழுது தலைவன் கொள்ளும் மன அவசங்களைத் தலைவனாக வின்சென்ட்டும் அடைகின்றான் என்பதைக் காணமுடிகின்றது.

காதல் குறித்த அச்சம் பெற்றோருக்கு நிச்சயமாக இருக்க வேண்டும் என்பதை இரண்டாயிரம் ஆண்டுத் தமிழ் மனிதன் அறிந்திருந்தாலும் காதலிப்பதைத் தவிர்த்ததில்லை. ஆண், பெண் ஒன்றிணைதல் என்பது பசி, தூக்கம் போல ஓர் இயல்பூக்கமான செயல்பாடானாலும். பண்பாடானது பாலியலை அற நடத்தையாக்கி விடுகிறது. பாலியலைக் கட்டுப்படுத்துதல் என்பது உயர்வான மதிப்பினையும் பாலியல் ஒடுக்கமின்மைத் தாழ்வான நடத்தையாகவும் சுட்டப்பட்டு வளர்க்கப்படுகின்ற ஆண்,  பெண் மனத்தில் பாலியல் கட்டுப்பாடுகள் காணப்படுகின்றன. எனினும் இயல்பூக்கமே வென்று விடுகிறது. அதன் வெளிப்பாடாகத்தான் விசாலாட்சியின் காதல் உடன்போக்கில் முடிகிறது. தாய், தந்தையின் எதிர்ப்பினை பொருட்படுத்தாத நிலையிலும் தந்தை மேல் கொண்ட அன்பின் மிகையைப் பதிலி செய்ய முடியாத நிலையில் இறந்து போய் விடுகிறாள். விசாலாட்சியின் இறப்பு காந்திமதியின் வாழ்வின் திசையிலும் மாற்றங்களை ஏற்படுத்துகிறது. அவள் தன் காதலை வெளிப்படையாக வின்சென்ட்டிடம் வெளிப்படுத்தாத நிலையிலும் இக்கட்டான சூழலில் அவனோடு பயணிக்கும்போது அவன் நெஞ்சில் சாய்ந்து கொள்வதன் மூலம் தன் காதலை வெளிப்படுத்த விழைகிறாள். இது போன்ற சூழல்களே காதலை புனிதப்படுத்தும் வகையில் நாவலில் காணப்படுகின்றன.

கிருபாநிதியின் அண்ணி, வின்சென்ட்டிடம் ஹெலனைப் பற்றிய விசாரணையில் இறங்குகிறாள். அவளது குணநலன்கள் எத்துணை சிறப்பானவை என்றாலும் அவளது சாதியை அறிந்து கொள்வதில் உள்ள ஆர்வம் கற்பு வாழ்விற்கான வெளிகள் அதாவது தாய் தந்தை  செய்து வைக்கின்ற திருமணத்தில் இது போன்ற சாதியப் பிரச்சினைகள் எழாத காரணம். அவர்களால் ஒரு போதும் அகமணமுறையைத் தவிர்த்துச் சிந்திக்க முடியாது. கட்டுத்திட்டான குடும்பப் பாங்கான, தலைவியின் இயல்புகள் காதலித்தலைத் தவிர்த்தல் என்பதாகவே தமிழ்ச் சமூகம் கற்பித்து வந்திருக்கிறது. நிலவுடைமைப் பண்புகள் இன்றைய மனத்திலும் வியாபித்து இருக்கின்றன. அதன் வெளிப்பாடாகவே சாதியை அறிந்துகொள்ளும் வேட்கையாக வெளிப்படுகிறது. அவளது சாதியை அறிந்து கொள்ளும் பிரயத்தனத்தில் இருந்து விடுபட முடியாத நிலையில்தான் வின்சென்ட்டும் இருக்கின்றான். அவளிடம் நேரடியாகக் கேட்டு விடும் வலிமையும் இருப்பதில்லை. சாதியைப் பற்றிய அறிதல்கள் அகமணமுறையின்பாற்பட்ட இன அடையாளத்தைத் தன்னகத்தே கொண்டுள்ளன. இன அச்சமே அகமண முறைக்குக் காரணம். அதுவே இன்றுவரை கௌரவக் கொலைகளை சாத்தியப்படுத்தி இருக்கிறது.

நாவலிலும் சந்தோஷம் தன் பால்ய காலத்தில் நிகழ்ந்த சம்பவத்தை நினைவு கூர்வதைக் காணமுடிகிறது. தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்தவன் எக்காரணம் கொண்டு உயர்ந்த சாதி என்று கருதக் கூடிய பெண் பிள்ளையின் கையைத் தொடக் கூடாது என்று  விதிக்கப்படுவதை அகமணமுறை அழுத்தமாக இருப்பதைச் சுட்டும் காட்சியாகக் கொள்ளலாம். சாதியப் படிநிலையில் கீழிருக்கும் மக்கள் உயர்சாதியினரால் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவதன் நீட்சியாகவே சந்தோஷம் எரித்துக் கொல்லப்படுதல் நிகழ்கிறது. அகத்தில் ஓர் எரித்தல் போலவே புறத்திலும் ஓர் எரித்தல் நிகழ்கிறது. அது மொழியின்பாற்பட்ட வெறியினால் நிகழ்கிறது. ஆண்கள், பெண்கள் இருவரும் சந்தித்துக் கொள்வதற்கான இடங்களாக நாவலில் பள்ளிகள், கல்லூரிகள் காணப்படுகின்றன. கல்லூரிக் காலத்தில் பெரும்பாலும் நகர்சார்ந்த வாழ்வை மேற்கொள்ளும் ஆண், பெண் மனத்தில் சாதிய, அகமணமுறை பற்றிய சிந்தனைகள் இருப்பதில்லை. வாழ்தலின் அவசம் மட்டுமே வெளிப்படுகிறது. ஆனால் பள்ளிகளில் படிக்கும் போது பிள்ளைகள் சாதியப் பிரிவினையைத் துலக்கமாகக் காணும்படிக்கு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. விசாலாட்சியின் மரணம் அன்பின் மிகை என்றே நாவலாசிரியர் குறிப்பிடுகிறார். அன்பென்றாலும் ஓர் அளவிற்குத்தான் வைக்க வேண்டும் என்பதாகக் கொள்ளலாம்.

ஊடல் என்பது மருதத் திணையின் உரிப்பொருள் ஒவ்வொரு குடும்பத்திலும் ஊடல் நிகழாத சூழல் இருப்பதில்லை. ஊடல் குடும்பம் நடத்தத் தேவையான வஸ்து போல நாவலாசிரியர் குறிப்பிடுகின்றார். விசாலாட்சியின் தந்தை இராணுவத்தில் பணிசெய்த போது அங்கு ஒரு பெண்ணோடு தொடர்பாய் இருந்தார் என அவரது மனைவி சந்தேகங் கொள்வதும் அதற்காக அவளை கடிந்து கொள்வதுமாக மருதத் திணையின் உரிப்பொருள் வெளிப்படுகிறது. தலைவனுக்கு இருக்கும் பரத்தைத் தொடர்பு பற்றிய தலைவியின் கவலையாக இது வெளிப்படுகிறது. சந்தேகங்கொண்டாலும் அதைப்  பெரிதுபடுத்தி சண்டையிட்டுக் கொள்வதில்லை. பரிகாசம் செய்வதோடு நின்று விடுகிறாள்.

பிரிவும் உரிப்பொருளாக பாலைத்திணையில் காணப்படுகின்றது. நாவலிலும் பிரிவு கடுமையானதாகக் காணப்படுகின்றது. காதலித்தவர்கள் ஆயினும் அதைத் துலக்கமாக வெளிப்படுத்தாக வின்சென்ட்டும், காந்திமதியும் மீண்டும் ஊழ்த் தெய்வத்தின் வினையால் சந்திக்கின்றனர். இம்முறை விமான நிலையத்தில் சந்திக்கின்றார்கள். இருவருக்குள் நடைபெறும் சம்பாஷணை கடந்த காலத்தை மறுபடியும் நினைவு கூர்வதாக அமைகிறது. முன்னர் நடந்தவை பற்றிய நிகழ்ச்சிகளை நிகழும்போது இருக்கும் சுவாரசியம் மறந்து அவை ஓர் செய்தியாக எஞ்சியிருப்பது போல அளவளாவிக் கொள்கிறார்கள். இருவரும் இணைந்து கொள்வதற்கான சூழல்கள் ஏற்பட்டு விட்டன என்பதை இருவரது சம்பாஷணையிலும் அறிந்து கொள்ள முடிகிறது. நாவலாசிரியர் கிருபாநிதி மற்றும் ஹெலனின் காதலை மேலும் சங்கடப்படுத்த விரும்பாத நிலையில் ஹெலனையும் கிருபாநிதியின் சாதியாகவே குறித்து விடுகிறார் எனலாம்.

புறத்திணை என்று கொள்வதற்கு சங்க இலக்கியத்தின் கடல் கடந்த போர் நிகழ்ச்சிகளை மனத்திற் கொண்டு இந்தி மொழிக்கு எதிரான கொந்தளிப்பான சூழல்கள் வழித் தமிழர்கள் அரசியல் ரீதியாக பலவீனமானவர்கள் அல்ல என்பதை வெளிப்படுத்தும் காட்சிகள் அமைகின்றன. அதே வேளையில் பிழைப்புவாதிகள் அரசியலில் நிறைந்து விடும் ஆபத்தும் இருப்பதைப் புறத்திணையில் ஆசிரியர் சுட்டுகின்றார். மொழியைக் காக்க உயிர் துறக்கும் அளவிற்குச் செல்லும் மாணவர்களின் போராட்டத்தைத் தங்கள் அரசியல் ஆதாயங்களுக்குப்பயன்படுத்திக் கொண்ட வல்லடித்தனத்தை வெளிப்படுத்துகிறார் ஆசிரியர். சொத்து சேர்த்தல் போன்றவற்றில் பொன்வண்ணன் பழனி என்ற தன் பெயரை மாற்றி வைத்துக் கொண்டு அரசியல் பிரவேசம் செய்வதிலிருந்து அவரது செயல்களும் நடப்பு அரசியலை சுட்டுவதாகக் காணமுடியும். மொழிக்காக பொதுச்சொத்தைத் தீக்கிரையாக்கும் செயலை சங்க காலத்தின் எதிரிப் படையினரை கொன்றொழித்து அவர்தம் உடைமையினை அழித்து நிர்மூலமாக்குவதைப் பதிலி செய்யும் வகையில் இருக்கின்றன எனலாம்.

இந்தி எதிர்ப்பு பற்றிய விவரணைகள் மிகச் சொற்பமாகவே நாவலில் காணப்படுகின்றன. அரசியல்வாதிகள் தங்கள் நலனையே பெரிதும் விரும்புவர்களாக இருப்பதைப் பாத்திரங்கள் மூலம் வெளிப்படுத்துகின்றார். ஆசிரியர் அதில் வான்மிகநாதன், காமாட்சி ஆகியோரைப்பற்றிய சித்திரிப்புகள் அடிப்படையில் பொருள் சார்ந்த வாழ்விற்கான எவ்வகையான சமரசத்தையும் செய்து கொள்வதைக் காணமுடிகிறது. திராவிடக் கட்சியில் பிராமணர் என்ற வகையில் அவர் புறந்தள்ளப்படுவதாகவும் ஆனால் வாணி என்ற நடிகை திராவிடக் கட்சியில் ஊடுருவப் போவதாகவும் அவளுக்கே எதிர்காலம் என்று ஆசிரியர் முன்தீர்மானமான கருத்தைக் கதையில் வெளிப்படுத்துகின்றார்.

இவ்வாறு அகத்திணையும் புறத்திணையும் கலந்து தமிழரின் இரண்டாயிரமாண்டு வாழ்வியலில் மாறாதவற்றை இயல்பூக்கமாகப் பகிர்ந்து கொள்வதாகத் தமிழவனின் நாவல் அமைந்திருக்கிறது.

*****

அடிக்குறிப்புகள்

 1. கார்த்திக்கேசு, சிவத்தம்பி, பண்டைத் தமிழ்ச் சமூகம், ப.24
 2. க.ஜவகர், திணைக்கோட்பாடும் தமிழ்க் கவிதையியலும், ப.275
 3. ஐயப்பப் பணிக்கர், இந்திய இலக்கியக் கோட்பாடுகள், ப.111

*****

கட்டுரையாளர் – முதுமுனைவர்பட்ட ஆய்வாளர்
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை – 21

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “’ஆடிப்பாவை போல’  நாவலில் திணையின் செம்மாந்த நிலை

 1. தமிழவனின் ஆடிப்பாவைபோல நாவலை ஆய்வாளர் சு. இராமர அவர்கள் திணையியல் அணுகுமுறையில் பகுத்தாய்ந்திருக்கும் விதங்கள் நுட்பமானவை. அகப்புற வடிவவியல் நாவலை கட்டமைத்திருப்பதை கதாமாந்த்தா்களின் உறவுச்சிக்கல்களின் வழியாகவும் எடுத்துரைத்துரைத்துள்ளார். காலனியம் திணை மரபு என்ற ஊடாட்டத்தின் மையமாக விமர்சனத்தை நகர்த்தியிருப்பது வரவேற்கத்தக்கது. ஆய்வாளருக்கு பாராட்டுகள்
  .
  ந. இரத்தினக்குமார்
  உதவிப்பேராசரியா்
  மதுரைக் கல்லுாரி
  மதுரை

Leave a Reply

Your email address will not be published.