பண்பாட்டியல் நோக்கில் சங்க இலக்கியங்கள்

-முனைவர். க. தமிழ்அழகன் 

புகுமுன்

நன்மொழியும், நம்மொழியும், செம்மொழியுமாகிய தமிழ் மொழியின் தொல் பழமைக்கும் நல்வளமைக்கும் நற்சான்றுகளாய் மிளிர்ந்தும் ஒளிர்ந்து கிடப்பன சங்க இலக்கியங்களாகும். இதனை முறையாகவும் நிறைவாகவும் அறிதலும், அறிந்து அறிவித்தலும் தமிழறிந்தாரின் தலையாய கடனாகும்! நற்றமிழ் இலக்கயங்களின் நல்லதோர் இலக்கு இன்புறுத்தலும் அறிவுறுத்தலுமேயாகும்! இக்கோட்பாட்டிற்குத்தகப் “பண்பாட்டு நோக்கில் சங்க இலக்கியங்கள் இவ்வாய்வின் பொருண்மையாகும்.

பண்பாடு சொற்சிந்தனை

“பண்பெனப் படுவது பாடறிந்து ஒழுகுதல்”! எனவரும் பாப்பகுதி தமிழறிந்தார் அறிந்தபகுதி, “பண்பு எனப்படுவது உலக ஒழுக்கம் அறிந்து ஒழுகுதல்” என்பது இத்தொடர்க்குரிய பொருளாகும். “பாடறிந்து ஒழுகும் பண்பினாரே”2 எனவரும் புறநானூற்றுப் பாப்பகுதியும் இத்தன்மைத்தேயாகும்.

பண் என்னும் சொல்லிற்குத் “தகுதி” என்ற பொருளும் பாடு என்பதற்கு உலக ஒழுக்கம் என்ற பொருளும் கொண்டால் பண்பாடு என்பதற்குத் தகுதி மிக்க உலக ஒழுக்கம் எனப் பொருள் கொள்ளலாம். “பாடறியேன் படிப்பறியேன் பள்ளிக்கூடம் தானறியேன்”3 எனவரும் திரைப்பாட்டுத் தொடக்கம் உலக வழக்கறியேன் என்பதாகக்கொள்ளலாம்.

பண்படுத்துதல் (சீர்திருத்தல்) என்ற சொல்லடியாகப் பண்பாடு எனும் சொல் அமைந்தது எனக் கொண்டால் “திருத்தமிக்க சீரிய பண்புகள் கொண்ட ஒழுகலாறு” என விரித்துப் பொருள் உரைத்துப் பார்க்கலாம்.

‘பாடு’ எனும் சொல் “வருத்தம்” என்ற பொருளில் வரும். “ஏழை படும் பாடு” வருத்தம் நீங்கி வாழ்தற்குரிய நற்பண்புகள் மிக்கநிலை பண்பாட்டு நிலை எனக் கொள்ளலாம்.

நிலத்தில் வாழும் மக்கள் பண்பாட்டு நிலையைக் குறிக்கும் ஆங்கிலச் சொல் ‘CULTURE’ என்பதாகும். நிலத்தைப் பண்படுத்தி உழுதொழில் செய்யும் நிலையைக் குறிக்கும் ஆங்கிலச்சொல் ‘AGRICULTURE’ என்பதாகும். மக்கள் மனநிலையைப் பண்படுத்தி உயர்நிலைக்கு இட்டுச் செல்வது பண்பாடாகும்.

பண்பாடு குறித்து BRITANNICA ENCYCLOPEDIA வின் தமிழாக்கச் செய்திகள் இங்குக் குறிப்பிடுவதற்குரியனவாகும். “கற்றுக் கொள்வதற்கான ஆற்றலும், தான் கற்றதை அடுத்த சந்ததியினருக்கு எடுத்துச் செல்லும் ஆற்றலும் மனிதருக்கு இயல்பாக கைவரப் பெற்றவை. இந்த ஆற்றல்களின் விளைவாக அவனுக்கு ஏற்படக்கூடிய அறிவு, நம்பிக்கை, அவனுடைய நடவடிக்கை ஆகியவற்றின் கலவையே பண்பாடு (அல்லது கலாசாரம்) எனப்படுகிறது. பண்பாடு என்பது மனிதர்களுடைய மொழி, எண்ணங்கள், நம்பிக்கைகள், வழக்கங்கள், தடைகள், விதிமுறைகள், நிறுவன அமைப்புகள், கருவிகள், செயல்முறைகள், காலப்பொருட்கள், சடங்குகள், விழாக்கள், அடையாளச் சின்னங்கள் போன்ற எல்லா அம்சங்களும் கலந்திருக்கும் ஒரு கலவையையே மனிதனின் பரிணாம வளர்ச்சியில் இந்தக் கலாசாரம் ஒரு முக்கியப் பங்கை வகிக்கிறது”4

இத்தகைய பண்பட்ட நிலைகள் அடிப்படையில் எழுந்த பண்பாட்டு நிலைகள் பதினெண்மேற்கணக்கு நூல்களாம். சங்க இலக்கியங்களில் பொதிந்து கிடக்கும் பாங்குகளில் சிலவற்றைப் பறவைப்பார்வையாய்ச் சுட்டிக்காட்ட விழைந்ததன் விளைவு வரும் பகுதிகளாகும்.

சங்கப்பாட்டுக்கள் எவை எவை?

பதினெண்மேற்கணக்கு நூல்கள் எனக் குறிக்கப்பெறும் சங்க  இலக்கியங்கள் பாட்டும் தொகையும் என இருவகைப்படும். பாட்டு பத்துப்பாட்டு தொகை எட்டுத்தொகை. இவற்றின் பாடல் எண்ணிக்கை (பத்துப்பாட்டுள் பத்துப்பாக்களும், எட்டுத்தொகையுள் 2365 பாக்களும் ஆக) 2375 ஆகும்.5 இச் சங்க இலக்கியங்களின் பெயர்களைக் குறிப்பிடும் பழம் பாட்டு வருமாறு.

“முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை
பெருகு வளமதுரைக் காஞ்சி மருவினிய
கோல நெடுநல்வாடை கோல்குறிஞ்சிப் பட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து

“நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியொடு அகம்புறம் என்று
இத்திறத்த எட்டுத்தொகை

இவ்வெண்பாக்கள் சுட்டும் சங்க இலக்கியங்களின் பெயர்களின் முறைவைப்பும், இப்பாக்களில் காணலாகும் அடைமொழிகளும் பாடல் தந்தாரின் பண்பட்ட திறனாய்வுப்போக்கைக் காட்டி நிற்கிறது.

பத்துப்பாட்டு நூல்களுள் திருமுருகாற்றுப்படையை முதற்கண் வைத்து எண்ணப்பட்டது. இறைசிந்தனைக்கு முதலிடம் என்பதனைப் புலப்படுத்துகின்றது. அது மட்டுமல்ல, எட்டுத்தொகை நூல்களுக்குத் தனித்தனிக் கடவுள் வாழ்த்துப்பாக்கள் அமைந்திருப்பது போல் பத்துப்பாட்டு நூல்கள் முழுமைக்கும் திருமுருகாற்றுப்படை கடவுள் வாழ்த்தாக அமைந்திலங்குகிறது எனக் கொள்ளுதலும் ஏற்புடையதேயாகும்.

எட்டுத்தொகையின் முதல் நூல் நற்றிணை, நல் திணை நற்றிணை. திணையாவது ஒழுக்கம், நல்லொழுக்கம், காதல் நெறியில் நல்லொழுக்கப்போக்கைக் குறிப்பிடமைந்தது. நற்றிணை என்பதால் எட்டுத்தொகையுள் முதலில் வைத்து எண்ணப்பட்டுள்ளது. “ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்”6 என்பது வள்ளுவரின் குறளாகும்.

இவ்வெண்பாக்களும், “பெருகுவளம்” “மருவினிய கோலம்”, “கோல்” (அழகு) “நல்ல” “ஒத்த” “ஓங்கு”, “கற்றறிந்தார் ஏத்தும்” என்பவரும் அடைமொழிகளும் பண்பட்ட திறணாய்வுச்சிந்தனைகளின் பதிவுகளேயாகும்.

பாட்டும் தொகையுமாகிய இச்சங்க நூல்களுள் அமைந்துள்ள பண்பாட்டியியல் சிந்தனைகளை இனி, அகநிலையில் அமைந்தன மாறும் புறநிலையில் அமைந்தன எனப் பகுத்துக்காணுதல் நமக்கு நல்லின்பம் பயக்கும்.

அகநிலைப்பாங்கில் அமைந்திலங்கும் பண்பாட்டு நிலைகள்

நாடு தழுவியன புறநிலை என்றால் வீடு தழுவியன அகநிலை என்றாகும். வீடெல்லாம் நன்கு வாழ்ந்தால் நாடெல்லாம் நன்கு வாழும் எனும் கோட்பாட்டிற்குத்தக வீட்டு வாழ்வைச் செம்மைப்படுத்தும் நோக்கில் அமைந்த, அஃதாவது அகநிலையில் அமைந்திலங்கும் பண்பாட்டு நிலைகளைச் சங்க இலக்கியங்கள் வழி இனி வரும் பகுதி சுட்டிக்காட்ட முயலும்.

இல்லற வாழ்வின் நல்லறநிலைகள்

இல்லற வாழ்வு என்பது “இல்லாளொடு கூடி வாழ்தலின் சிறப்பு” என்று பரிமேலழகரும் இல்லின்கண் இருந்து வாழும் திறன் கூறுதல் இல்வாழ்க்கை என்று மணக்குடவராலும் விளக்கம் தரப்படுகிறது. “சமூக அமைப்பில் குடும்பம் என்பது அடிப்படை அலகாகும். (Basic Unit). இவ்வமைப்பு இல்லையேல் சமுதாயம் என்ற கட்டுக்கோப்பே நொறுங்கிப்போகும். மானுட வாழ்வில் அடித்தளம் குடும்பமே”7 எனவரும் முனைவர் க.ப.அறவாணனாரின் சிந்தனைக்குத்தக இனிய இல்லற வாழ்வு முறைகளில் பண்பட்ட நிலைகளைச் சங்க இலக்கியங்கள் வழி கற்றலும் கற்பித்தலும் இனிதான நிகழ்வுகளாகும்.

தலைவன் தலைவியிடத்தும், தலைவி தலைவனிடத்தும் பேரன்பு பூண்டிருந்ததால் அவர்கள் வாழ்வில் பெருமகிழ்வு சேர்ந்திருந்தது. தலைவன் தலைவி உறவுக்கு அடித்தளமான காதலன் – காதலி நிலையிலேயே நல்லன்பு பூண்டிருந்த பாங்கு மிகச் சிறப்புடையதாகும்.

”நிலத்தினும் பெரிதே, வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆர் அளவின்றே – சாரல்
கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே8

தலைவன் தலைவியர் இடையே உள்ள நட்பிற்குத் தேவகுலத்தார் காட்டிய மூன்று அளவீடுகளும் நயத்தற்குரியன.

“நிலம், வான், நீர் ஆகியவை வெவ்வேறாகப் பெருகி விளங்குவன. தலைமக்கள் நட்பு, ஒரே இடத்தில் பெருகி விளங்குவது.  இவை மூன்றும் இணைந்தவழியே பயன்பெறுதல் கூடும். இம்மூன்றின் சேர்க்கை போலத் தங்களுடைய நட்பும் இயைந்த நட்பு எனத் தலைவி கூறினாள். போஷகமாகிய உணவு நல்கும் நிலத்தினையும், தாரமாகிய நீர்நல்கும் வினையும், போக்கியமாகிய மணி முதலியன நல்கும் கடலினையும் எடுத்துக்காட்டி, அம்மூன்றனையும் இந் நட்பு ஒன்றே நல்க வல்லது எனச் சிறப்பித்தனள் என இப்பாடலுக்கு இரா.இராகவையங்கார் உரை வகுத்துள்ளார். நிலம், பயந்தராமையும், வானம் பெய்யாது போதலும், நீர் தன் நீர்மை குன்றுதலும் கூடும். ஆனால் இந் நட்பு எஞ்ஞான்றும் பயன்பட்டுப் பின்னரும் தொடர்ந்து வரும் சிறப்புடையதாகும்”9

இங்கிலாந்து நாட்டு இலண்டன் மாநகரத்தொடர் வண்டிகளில் இடம் பெற்றிருக்கும்.

 ”யாயும் ஞாயும் யார் ஆகியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே10

இதன் நுண்பொருள் விரிக்கிற் பெருகும்.

“அரிதாய அறன் எய்தி”11 எனவரும் பாலைக்கலிப் பாட்டுக் காட்டும் அன்புநெறி பண்பின் உயர் நெறியாகும்.

முழுமையான அன்பு எப்பொழுதும் குறைகாணாது. கார்காலத் தலை நாளில் ஊர் மீளவேண்டிய தலைவன் வாரா நிலையில், தலைவன் வரும் காலமே கார்காலம் எனக் கொள்ளும் போக்கும். அவர் “பொய்வழங்கலரே” என்னும் நம்பிக்கை மிகுந்த போக்கும் தலைவியின் பண்பட்ட உள்ளம் காட்டி நிற்கும்.

“வண்டு படத் ததைந்த கொடி இணர் இடை இடுபு
பொன்செய் புனை இழைகட்டிய மகளிர்
கதுப்பில் தோன்றும் புதுப் பூங்கொன்றைக்
கானம், கார் எனக் கூறினும்,
யானோ தேறேன் அவர் பொய்வழங்கலரே12

பிரிந்த தலைவன் மீள ஏனோ காலம் தாழ்ந்தது. தாழவே தலைவி உள்ளம் வாடி நொந்து வெந்து கிடக்காது எவ்வாறாவது மீள்வான். மீளாவிடில் தேடிக் காணுவேன் என்பது படத் தலைவி கூறும் நம்பிக்கைப் பண்பு வியப்பும் நயப்பும் நல்குகின்றது.

“நிலம் தொட்டுப் புகாஅர், வானம் ஏறார்,
விலங்கு இடு முந்நீர்காலின் செல்லார்,
நாட்டின் நாட்டின் ஊரின் ஊரின்
குடிமுறை குடிமுறை தேரின்
கெடுநரும் உளரோ நம் காதலரோ13

நம்பிக்கை மிகுந்த பண்பு யாவர்க்கும் வேண்டியதொரு பண்பாகும்.

      நம்பிக்கை எனும் நந்தா விளக்கு
உள்ள வரையில் உலகம் நமக்கு

இல்வாழ்வின் உயர் பண்பு விருந்தோம்பல் எனும் பண்பு 

“சாறு அயர்ந்தன்ன மிடாஅச் சொன்றி
      வருநர்க்கு வரையா, வளநகர் பொற்ப,
      மலரத் திறந்த வாயில் பலர் உண
      பைந்நிணம் ஒழுகிய நெய்ம்மலி அடிசில்
      வரை இல் வாந்திணைப்புரையோர் கடும்பொடு
      விருந்து உண்டு எஞ்சிய மிச்சில் பெருந்தகை
      நின்னொடு உண்டலும் புரைவது 14 எனக் குறிஞ்சிப்பாட்டுத்தலைவனும்,

 ”நள் என வந்த நாரில் மாலை,
பலர்புகு வாயில் அடைப்பக், கடவுநர்
வருவீர் உள்ளீரோ 15

எனக் குறுந்தொகைத் தலைவியும் விருந்தோம்பல் பண்பில் இருவரும் கொண்டுள்ள விருப்பமும் பண்பட்ட உள்ளப் போக்கும் தெள்ளிதின் விளங்கும்.

”மெல் இயல் அறிவை! நின் நல் அகம் புலம்ப
நின் துறந்து அமைகுவென் ஆயின் என்துறந்து
இரவலர் வாரா வைகல்
பல ஆகுக யான் செலவுறு தகவே 16

இல்லற நெறியில் நிற்போர்க்கு இரவலர் வாராத நாள் துன்பம் தருவது போல் துன்புறுக என்றான்.

      “உண்டால் அம்ம, இவ்வுலகம் இந்திரர்
      அமிழ்தம் இயைவது ஆயினும், இனிது எனத்
      தமியர் உண்டலும் இலரே” 17 எனவரும் தொடரும் இத்தன்மைத்தே.

பிறந்த மனையினும் புகுந்த மனையே மனைவிக்கு உயர்வு

வளமான குடியில் பிறந்தபெண் மணமுடித்தான். மணம் கொண்ட மணாளன் வீடு ஒரு பொழுது வறுமைக்குட்பட்டுவிட்டது. இவள் நிலை என்ன? நற்றிணை நவில்கிறது இவள் பண்பினை இப்படி.

      “அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள் கொல்?
கொண்ட கொழுநன் குடிவறன் உற்றென,
கொடுத்த தந்தை கொழுஞ்சோறு உள்ளாள்,
ஒழுகு நீர் நுணங்கு அறல் போல,
பொழுது மறுத்து உண்ணும் சிறு மதுகையளே!” 18

தந்தை சோற்றைக் கருதாது பொழுதுமறுத்து உண்ணும் வன்மையுடைய தலைவிக்கு,

      “தேன் மயங்கு பாலினும் இனிய அவர்நாட்டு
      உவலைக் கூவற்கீழ்
      மான் உண்டு எஞ்சிய கலுழி நீரே” 19

விரும்பப்படுவது எனக் கூறியமை மணமானதும் மணாளனுக்குப் பெருமை சேர்க்கும் உயர்பண்பை விளக்குகின்றது.

வாக்கு நாகரிகம் மிக்க வாழ்க்கை நாகரிகம்

பரத்தமை நிலைக்கு ஆட்பட்டு மீண்ட தலைவனைத் திரும்பிவந்தவனா? திருந்திவந்தவனா? என உணர்தற்கும் மீண்டும் இப்பிழை நேரலாகாது என்பதற்கும் தலைவி கூறும் பண்பட்ட சொல்லோவியம் தலைவியின் பண்பாட்டு நிலைமைக் காட்டுவதாக அமைந்திலங்குகிறது.

“அணிற்பல்லன்ன கொங்குமுதிர் முண்டகத்து
மணிக்கேழ் அன்னமாநீர்ச் சேர்ப்ப!
இம்மை மாறி மறுமை ஆயினும்
நீ ஆகியர் எம் கணவனை,
யானாகியர் நின் நெஞ்சு நேர்பவளே 20

பரத்தமையிலிருந்து திரும்பிவந்தவனை திருந்தி வந்தவனாக ஆக்கிட வழி செய்யும் இப்பாங்கு தும்பிசேர்கீரனின் “தச்சன் செய்த சிறுமா வையம்”21 எனத் தொடங்கிப் பாடிய தலைவிக்கு உண்டு.

இவ்வாறே, சங்க இலக்கியங்களுள் காணலாகும் உள்ளுறை உவமப் பாக்கள் மற்றும் இறைச்சிநிலைப் பாக்களும் வாக்கு நாகரிகப் பண்பைப் பறைசாற்றும்.

மனக்காயம் ஒருபோதும் தரலாகாது என்ற தலைவனின் பண்பாடு இக்கால இல்லறத்தார் அறிய வேண்டிய அரிய பண்பாகும்.

“முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்
கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇ,
குவளை உண்கண் குய்ப்புகை கமழத்
தான் துழந்தட்ட தீம்புளிப்பாகர்
இனிது எனக்கணவன் உண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே22 தீம்புளிப்பாகர் உண்ட தலைவன் இழித்தும் பழித்தும் பேசாது முதல் முறை ஆக்கிய ஆர்வமும், அன்பும் கண்டு இனிது எனக்கூறிய தலைவன் உண்டலின் நுண்ணிதின் மகிழ்ந்தது தலைவியின் முகமே! இம்மகிழ்ச்சி தந்த தலைவனின் பண்பு மனக்காயம் செய்யாப்பண்பு உயரியதாகும். உணவின் சுவை உணவுக்குள்ளே இருப்பதைவிடவும் உணவை வழங்குவார் உள்ளத்தின் உள்ளே உள்ளது. எனவரும் கருத்துப்பட அமைந்த நாலடியார் பாடல் இங்கு இணைத்து நினைத்து மகிழத்தக்கது.

“கழுநீருள் கார் அடகேனும் ஒருவன்
விழுமிதாக கொள்ளின் அமிழ்தாம், விழுமிய
குயத்துவை ஆர் வெண்சோறே ஆயினும், மேலாதார்
கைத்துண்டல் காஞ்சிரங் காய்23

அகப்பாக்களின் துறை அமைப்பும், அறத்தொடு நிற்றல் முதலிய துறைகளின் அமைப்பும், பண்பாட்டு நிலையைக் காட்டி நிற்கும் ஆதிமந்தியார் குறித்துக் குறிப்பிடும் நச்சினார்க்கினியர், “பெயர் கூறின் புறமாம் என்றஞ்சி வாளாது கூறினார்”24 என்பார். “கூறினாள்” எனாது “கூறினார்” எனக் கூறியதும் நல்ல பண்பாட்டு உயர்வுப் போக்கேயாகும். இன்னும் புலமையை மதிக்கும் போக்கும் குறிப்பிடுதற்குரியது. இதனை அவனை அவர் பாடியது எனவரும் தொடரமைப்புக்கொண்டு உணரலாம்.

புறநிலைப்பாங்கில் அமைந்திலங்கும் பண்பாட்டு நிலைகள்

காதலும் வீரமும் இரு கண்கள் எனக் கொள்ளினும் வீரத்திற்கு முதலிடம் தந்து நின்றன நம் சங்க இலக்கியங்கள் காவிரிப்புனல் விழாவில் தலைவனை இழந்த தலைவி ஒருத்தி, ஆதிமந்தி, வேற்றூரில் தேடுகின்றாள். பரத்தையர் ஆடவரைத் தழுவி ஆடும் துணங்கைக்கூத்து நிகழும் இடத்தில் (காதல் நிலை) முதலில் சென்று தேடாமல், வில்விழா நிகழ்த்திப்பல வீரர்கள் குழுமியிருக்கும் இடத்திலேயே (வீரநிலை) முதலில் தேடினாள் அத்தலைவி.

“மள்ளர் குழீஇய விழவி னானும்
மகளீர் தழீஇய துணங்கை யானும்
யாண்டும் காணேன் மாண்டக் கோனை25

இவ்வாறே இறவாப் புகழ்பெற்ற புறநானூற்றின்,

      “சிற்றில் நற்றூண் பற்றி நின்மகன்
      யாண்டு உளனோ? என வினவுதி, என் மகன்
      யாண்டு உளன் ஆயினும் அறியேன், ஓரும்
      புலிசேர்ந்து போகிய கல்அளை போல,
      ஈன்ற வயிறோ இதுவே
      தோன்றுவன் மாதோ, போர்க்களத்தானே” 26

எனவரும் பாட்டு, தலைவனின் போரஞ்சா வீரமரபையே விழைவு நனி புலனாக்குகிறது. காதல் தன்னலம் பற்றியது என்றால், வீரம் பொதுநலம் சார்ந்தது. பொதுநலம் பேணும்போக்கு முதற்கண் வேண்டும் என்னும் பண்பட்ட நிலை சங்கப்பாட்டுக்கள் காட்டும் நிலை.

போரின் பகுதிகளாகிய ஆநிரை கவர்தல், ஆநிரை மீட்டல் எனவரும் துறைகளின் விளக்கத்தால் ஐயறிவினவாகிய பசுக்கூட்டங்களுக்கும் அருளும் போக்கை, துன்புறுத்தா நிலையைக் கொண்டு வீரர்தம் வீரப்பண்பும் ஈரப்பண்பும் (கருணைத்திறம்) தெற்றெண உணரப்பெறலாம்.

தடையிலாக் கொடையுணர்வு

வறுமையில் வாழும் மக்கள் பசிதீர மன்னனை அண்டியே ஆக வேண்டும். மன்னனும், மக்கள் பசிதீர்த்தலை மாண்பான செயல்களுள் தலையாயதாக எண்ணினான் சங்ககாலத்தில். இதனைப் புறநானூறு நன்கு புலப்படுத்தும். வழங்கி வாழ்ந்த வள்ளல் பாரியை மாரியை விட உயர்த்திக் கூறும் பாங்கைப் புறநானூறு காட்டும் “அறஞ்செய விரும்பு” என்னும் வாக்கிற்குத்தக்க, விரும்பித்தந்த பாங்கு பண்பட்ட பாங்கு.

“ஒரு நாள் செல்லலம் இருநாள் செல்லலம்
பலநாள் பயின்று, பலரோடு செல்லினும்
தலைநாள் போன்ற விரும்பினன் மாதோ 27

“இன்று செலினும் தருமே, சிறுவரை
நின்று செலினும் தருமே, பின்னும்
முன்னே தந்தனென், என்னாது, துன்னி
வைகலும் செலினும் பொய்யலன் ஆகி
யாம் வேண்டியாங்கு எம் வறுங்கலம் நிறைப்போன் 28

கொடைபெற்றே வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து விடலாம் என்னும் போக்கு அக்காலத்தில்லை.

      “ஈ என இரத்தல் இழிந்தன்று, அதன் எதிர்
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று,
கொள் எனக் கொடுத்தல் உயர்ந்தன்று, அதனெதிர்
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று”29

கொடைபெற்றுத் தானும் தன் குடும்பமும் மட்டுமே உண்ணாது தன் மனைவியிடம் ”எல்லோர்க்கும் கொடுமதி மனை கிழவோயே” என வரும் பாங்கும் கொடை வேண்டுவோரைக்கண்டு ஆற்றுப்படுத்தும் இயல்பும் நல்ல உள்ளத்தின் வெளிப்பாடு, உயர்ந்த பண்பாட்டின் வெளிப்பாடு. ஆற்றுப்படை என்னும் துறையும், ஆற்றுப்படை இலக்கியங்களும் இதற்கு நன்றான சான்றுகளாகும்.

மண்ணின் மைந்தன் என்னும் குணம் எண்ணில் இழிவே!

இக்காலத்துலவும் மண்ணின் மைந்தர் (SON OF SOIL) என்னும் இழிகுணம் துன்பம் மிக்கது. ஆனால் அக்காலத்துச் சங்க இலக்கியம்.

“யாதும் ஊரே யாவரும் கேளிர்”30 (ALL ARE MY NATIVES; ALL ARE MY RELATIVES) என இயம்பும் போக்கு மிகப் பண்பட்ட உள்ளத்தில் எழுந்த போக்காகும். இதனால்தான் இந்தியாவின் முன்னைப் பிரதமர் இந்திரா காந்தியார் ஐக்கியநாடுகள் சபையில் ஐக்கிய நாடுகள் தினத்தில் (UNO DAY) உரையாற்றும்போது எடுப்புரையாக “TWO THOUSAND YEARS AGO A POET SAYS YATHUM OORAY YAVARUM KELIR” எனத் தொடங்கித் தொடர்ந்து உரையாற்றியது யாவரையும் வியக்கச் செய்தது அந்நாளில், தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவியது அந்நாளில்.

அறவுரையாய் அமைந்த அறிவுரை உரைக்கும் பண்பாட்டு முத்துக்கள்

அறிவுறுத்தும் அறிவுரைகளுள் பண்பாட்டுக்கூறுகள் இயைந்து கிடக்கும் பகுதிகளுள் சிலவற்றைப் பொதுநிலைப்பட்டன. தனி மனித நிலைப்பட்டன என இரு வகை நிலைகளில் காணல், அறிவுக்கு நலம் நல்கும்.

      “உண்டால் அம்ம இவ்வுலகம்……
தமக்கென முயலா நோன்தாள்
பிறர்க்கென முயலுநர் உண்மையானே 31

எனவும்

      “நல்லது செய்தல் ஆற்றீர் எனினும்
அல்லது செய்தல் ஓம்புமின் அதுதான்
எல்லாரும் உவப்பது அன்றியும்
நல் ஆற்றுப்படூஉம் நெறியுமார் அதுவே 32

எனவும்

      “ஆன்முலை அறுத்த அறனிலோர்க்கும்
மாண் இழை மகளிர் கருச்சிதைத்தோர்க்கும்
பார்ப்பார் தப்பிய கொடுமையோருக்கும்,
வழுவாய் மருங்கில் கழுவாயும் உளஎன
நிலம்புடை பெயர்வதாயினும் ஒருவன்
செய்திகொன்றோர்க்கு உய்தி இல்என
அறம் பாடிற்றே – ஆயிழை கணவ!” 33

எனவும் வரும் சங்கப்பாக்களின் பகுதி தான் அறிந்த நல்லற நெறிகளை மக்களுக்கு உரைத்து மக்களை நன்றான வாழ்வு வாழச் செய்திடும் பண்புணர்வு மெச்சத்தகுந்ததாகும்.

தனிமனித நிலைப்பட்டன எனும் பாங்கில் கோவூர்கிழாரும் பிசிராந்தையாரும் பாடிய பாக்கள் புலவர்களின் பெருமையையும் புலவர்களுக்கு இருந்த உரிமையையும் காட்டுவனவாக அமைந்துள்ளன. யானையின் உணவிற்கு நெற்பயிரைச் சிறிது சிறிதாகக்கொள்ளுவது போல நாட்டு மக்களிடம் வரியைச் சிறிது சிறிதாகக் கொள்ளுதல் வேண்டும்34 என்று பாண்டியன் அறிவுடை நம்பியிடம் உரைப்பதும், “சோழர் குடியினர் தம்முள் பகைத்தால் சோழன் ஒருவன் தோற்றான் என்ற பழிச்சொல் சோழர் குடிக்கு நேரும் எனவே போரைத் தவிர்ப்பாயாக”38 என்று சோழன் நலங்கிள்ளிடமும் சோழன் நெடுங்கிள்ளிடமும் உரைத்தமையும் புலவர்கள் பண்புகளைப் பறைசாற்றுகின்றன. இவைபோலும் பொருளில் அமைந்த பாட்டுக்கள் பலவாகும்.

பழிக்கு அஞ்சும் விழுமிய பண்பு

“உண்டாலம்ம இவ்வுலகம்….
      … பிறர் அஞ்சுவதி அஞ்சி,
      புகழ் எனின் உயிரும் கொடுக்குவர் பழி எனின்
      உலகுவுடன் பெறினும் கொள்ளலர்” 36

எனவும்,

“தாம் இரந்துண்ணும் அளவை ஈன்மரோ
இவ்வுலகத்தானே”
37   எனவும்

“குடிபழிதூற்றும் கோலோன் ஆகுக; புலவர் பாடாது வரைக; இன்மைநிலை யான் அடைக”38 எனவும் வரும் பகுதிகள் உள்ளிட்ட இன்னபிறவும் பழிச்செயல்களின் இழிதன்மைகளை உணர்த்தி உயர்பண்பு நிலைகளை உயர்த்தி நிற்கும் பகுதிகளாகும்.

வறுமை நிலையிலும் பெருமை நிலைச்செயல்கள்

புலவர்கள் புரவலர்களை நாடிப்பொருள் பெற்றுவாழ்தல் இயல்பு. புலவர்-புரவலர் என்னும் இவர்களுக்கிடையில் பொருள் மட்டும் பிணித்திடும் தகைமையதன்று.  புரவலனாகிய அரசன் தடம்மாறித் தடுமாறும் நிலைகளில், மனைவியைப்பிரிந்து பரத்தையரிடம் இருந்த நிலைகளில், அரசனுக்கு வாழும் நெறி உரைத்திட்ட பாங்கும் (தன் மனைவி கண்ணகியைப் பிரிந்து பரத்தை ஒருத்தி மனையில் இருந்த பேகனைக் கண்டு கபிலர் எடுத்துரைத்து இடித்துரைத்தமைப் பாங்கில் பாடப்பட்ட பாடல் பாங்கும்) 39 பாரி மகளிரை அழைத்துக்கொண்டு கபிலர் அவர்களுக்கு வாழ்வமைத்துத்தர மிக முயன்ற பாங்கில் அமைந்த பாடல்களும் 40 புலவர்களின் பெருமை மிகு பண்புகளின் நிலைமை பேசும் தன்மையனவாகும்.

இவ்வாறே கோவூர்கிழார் எனும் புலவர் மலையமான் மக்களாகிய இளஞ்சிறார்களைக் கிள்ளிவளவன் யானைக்கு இடுவுழி உய்யக்கொண்ட பாடலும்,41 நெடுங்கிள்ளியிடமிருந்து இளந்தத்தன் என்னும் புலவன் “ஒற்று வந்தான்” எனக்கொல்லப்புக்குழி, கோவூர்கிழார் உய்யக்கொண்ட பாடலும்42

இப்போக்குடைய இன்னபிறப் பாக்களும், வறுமை நிலைப்பட்ட புலவர்களின் பெருமைநிலைப்பட்ட செயல் செய்யும் போக்கிற்குச் சான்றுகளாய் நின்று, பண்பாட்டில் உயர்ந்துநின்று, வாழ்ந்தமையை வெளிப்படுத்துகின்றன.

நிறைவாக….

சங்கத் தமிழறிவார்
தண்தமிழின்சீரறிவார்

சங்க இலக்கியங்கள் இயம்பிச்செல்லும் பண்பாட்டுக் கூறுகளும் சிலவற்றை, இதுகாறும், அகவாழ்வுநிலை மற்றும் புறவாழ்வுநிலை என்னும் இரு கூறுகள் கொண்டு ஒருசிறிது தொகுத்துத் தொட்டுக்காட்டப்பெற்றன.

      சொல்லநினைத்தது ஆயிரம் – ஆனால்
      சொன்னதோ பாயிரம்

என்பதுபோல் கால அளவு கருதுவதுடன் என் சிந்தனை அளவு கருதியும் இதுகாறும் சொல்லப்பெற்ற சில செய்திகளைத் தமிழ் அறிந்தார் நன்கு உள்ளத்தில் அமைத்துக்கொள்ளுதல் வேண்டும்.

சங்க இலக்கியம் காட்டும் பெருகிய பிறவேறு பண்பாட்டுக் கூறுகளையும் அறிவதும், அறிந்து இன்புறுதலும், இன்புற்று அறிவுறுத்தலும் அறிவுறுத்துதலுடன் பின்பற்றி வாழ்தலும், வாழ்ந்து சிறத்தலும் வேண்டும் என்ற எளியேனின் இவ்வுணர்வுடன் நிறைவெய்துகிறது. “பண்பாட்டியல் நோக்கில் சங்க இலக்கியங்கள்” என்னும் பொருண்மையினால் ஆக்கப்பெற்ற இக்குறுங்கட்டுரை.

***** 

சான்றெண் விளக்கம்

 1. நல்லந்துவனார். கலித்தொகை. நெய்தற்கலி, பாவெண் 133
 2. கோனாட்டு எறச்சலூர் மாடலன் மதுரைக்குமரனார், புறநானூறு, பாவெண்.197
 3. இரா.வைரமுத்து, சிந்துபைரவி திரைப்பாட்டு
 4. பிரிட்டாணிக்கா தகவல் களஞ்சியம், தொகுதி.2 ப.805
 5. சங்க இலக்கியங்கள், நூற்பெயரும் கிடைக்கும் பாக்கள் எண்ணிக்கையும், நற்றிணை 401-குறுந்தொகை, 402-ஐங்குறுநூறு, 501-பதிற்றுப்பத்து, 80-பரிபாடல், 22-கலித்தொகை, 150-அகநானூறு, 401-புறநானூறு, 398-ஆக எட்டுத்தொகையின் பாக்கள் எண்ணிக்கை 2365 ஆகும். இவைகளுடன் திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெருபாணாற்றுப்படை, முல்லைபாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம், பத்துப்பாட்டுகள் சேர (2365+10) 2375 ஆகும். பத்துப்பாட்டின் பாட்டில் 3552 ஆகும்.
 6. திருவள்ளுவர், திருக்குறள்.13, ஒழுக்கமுடைமை, குறளெண்.131
 7. முனைவர்.க.ப.அறவாணன், சமூகவியல் பார்வையில் அற இலக்கியக்களஞ்சியம், குடும்பவியல்.ப.579
 8. தேவகுலத்தார், குறுந்தொகை பா.வெண்.3
 9. முனைவர்.வி.நாகராஜன் (உரையாசிரியர்) குறுந்தொகை பா.3ன் உரைப்பகுதி
 10. செம்புலப்பெயனீரார். குறுந்தொகை பாவெண்.3
 11. பாலைபாடிய பெருங்கடுங்கோ, கலித்தொகை, பாலைக்கலி, பாவெண்11
 12. ஓதலாந்தையார், குறுந்தொகை, பாவெண்.21
 13. வெள்ளிவீதியார், குறுந்தொகை, பாவெண்.130
 14. கபிலர்.குறிஞ்சிப்பாட்டு, பாவடி 201-207
 15. நன்னாகையார், குறுந்தொகை, பாவெண்.118
 16. பாலைபாடிய பெருங்கடுங்கோ, குறுந்தொகை.பாவெண்.137
 17. படலுள் மாய்ந்த இளம்பெருவழுதி, புறநானூறு பாவெண்.203
 18. போதனார். நர்றிணை. பாவெண்.110
 19. கபிலர்.ஐங்குறுநூறூ. அன்னாய்வாழிப்பத்து, பாவெண்.203
 20. அம்மூவனார், குறுந்தொகை, பாவெண் 49
 21. தும்பிசேர்கீரன், குறுந்தொகை, பாவெண் 61
 22. கூடலூர்கிழார், குறுந்தொகை பாவெண் 167
 23. நாலடியார், 22 நட்பாராய்தல், பாவெண் 7
 24. நச்சினார்கினியர், தொல்காப்பியப் பொருளதிகாரத்து அகத்திணையியல் நூற்பா 54ன் உரைப்பகுதி.

*****

கட்டுரையாசிரியர் – உதவிப்பேராசிரியர்
தமிழாய்வுத்துறை
ஏ.வி.சி. கல்லூரி, (தன்னாட்சி)
மன்னன்பந்தல், மயிலாடுதுறை – 609 305

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *