Year: 2020

  • வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-36

    வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-36

    தி. இரா. மீனா

    சித்தராமன் தொடர்ச்சி

    1. “நீரிலுள்ள மீன் தன் நாசியிடம்
    நீரைச் சேரவிடாத விதத்தைப் பாரய்யா
    சரணன்  உலகத்தினூடே இருப்பினும்
    உலகத்தைத் தன்னருகே விடமாட்டான் பாரய்யா.
    மீனுக்கு அந்த அறிவையும்
    சரணனுக்கு இந்த அறிவையும் கொடுத்தனையே
    கபிலசித்த மல்லிகார்ஜூனனே“

    2. “எனக்குத் தெரியும் எனக்குத் தெரியுமெனச்
    சொன்ன பலரும் அகந்தையில் சென்றனர்.
    எனக்குத் தெரியவில்லை,தெரியவில்லையெனச்
    சொன்ன பலரும் மறதியில் சென்றனர்.
    தெரிந்தோம் என்பதும் தெரியவில்லையென்பதும்
    ஞானத்தின் முட்டுக்கட்டை.
    தெரிந்தால் அறிவு, மறந்தால் அறிவீனம்
    தெரிந்தும் தெரியாதவன் தெளிந்த
    நீரின் கமல கபிலசித்த மல்லிகாஜூனன் தானே”

    3. “அத்வைதம் பேசமுடியும் கோடி தடவைகள்.
    தூயபக்தி நன்னடத்தையில் உறுதியோடு
    ஒரு தடவை ஒழுகமுடியுமா?
    சொற்படி நடந்து , நடப்பது போல் சொல்கின்ற
    தூயபக்தி நன்னடத்தையில் உயர்ந்தோர்தம்
    பதம் வணங்கி வாழ வைப்பாய் ஐயனே,
    கபிலசித்தி மல்லிகார்ஜூனனே“

    4. “எண்ணம் விரிய இலிங்கமென்றானது
    எண்ணம் பிரிய கல்லென்றானது
    எண்ணம் ஒன்றாதபோது யாதொன்றும் ஆகாது
    கபிலசித்த மல்லிகார்ஜூனனே“

    5.  “களிமண் ஒன்று சட்டிகள் பன்னூறு
    மனம் ஒன்று செயல்கள் பன்னூறு
    தந்தை ஒருவன் சந்ததிகள் பன்னூறு
    கபிலசித்த மல்லிகார்ஜூனனுள் உலகங்கள் பன்னூறு”

    6.  “தாங்கள் வேதப்பிரியனல்லன் ஐயனே;
    தாங்கள் சாத்திரப் பிரியனல்லன் ஐயனே ;
    தாங்கள் நாதப் பிரியனல்லன் ஐயனே ;
    தாங்கள் புகழ்ச்சிப் பிரியனல்லன் ஐயனே;
    தாங்கள் உத்திப் பிரியனல்லன் ஐயனே;
    பக்திப் பிரியனென நம்பினேன்
    காத்திடுவாய் கபிலசித்தி மல்லிகார்ஜூனனே“

    7. “பெண் அழிந்தபின் மண்ணின் விருப்பமேன்?
    மண் அழிந்தபின் பொன்னின் விருப்பமேன்?
    முக்கண்ணன் ஆனபின் மூன்றின் விருப்பமேன்?
    கபிலசித்த மல்லிகார்ஜூனனே“

    சித்தாந்தி வீரசங்கய்யா

    பெயருக்கேற்றாற் போல சித்தாந்தக் கருத்துக்களை வெளிப்படுத்தியவர். ’கோளாகார விஸ்வ விரகிதலிங்க ’இவரது முத்திரையாகும்.

    “நீராலான முத்தை அமைதியான நீரில் போட
    அந்நாளின் நீர் அதுவென முத்து கெட்டியாகுமா?
    அல்லது மீண்டும் அது நீராகுமா?
    இவ்விரண்டின் பேதமறிந்தால்,
    துவைதம், அத்துவைதம் அறிந்தவரென்பேன்.
    இதுவன்றி வெற்றி தோல்விக்குச் சமர் புரியும்
    கல் மனத்தவருக்கு எங்குள்ளதோ
    கோளாகார விஸ்வவிரகித இலிங்கமும் அதன் சாத்தியமும்”

    சுங்கத பங்கண்ணா

    சுங்கம் வசூலிப்பது இவரது காயகம். ’பங்கேஸ்வரலிங்கா’ இவரது முத்திரையாகும்.

    1. “உணவு மீது முனைப்பு
    உறக்கம் மீது முனைப்பு
    பெண்மீது முனைப்பிருப்பது போல
    இலிங்கம் மீதுமிருக்க வேண்டும்
    சிவலிங்கத்தில் கவர்ச்சி கொண்டால்
    தன்னையே கொடுப்பான் சென்ன பங்கநாத தேவன்”

    2.  “உடல் போர்க்களமானது
    புலன்களின் கூட்டம் சிதைந்தது
    உடலரசன் தடுமாறினான்
    சுயமெனும் ஆற்றலின் பேரரசன் வென்றான்
    பங்கேவரனின் அன்பினால்“

    சூளே சங்கவ்வா

    ’நிர்வச்சேஸ்வரன்’ இவரது முத்திரையாகும்.

    “ஒருவனுக்கு நேரமொதுக்கி
    வேறொருவனோடு கூடினால்
    நிர்வாணமாக்கி அடிப்பாரையா
    விரதக்கேடுடையவனோடு சேர்ந்தால்
    காய்ச்சிய கம்பியால் கை செவி மூக்கறுப்பாரையா
    இதையறிந்து விரும்பேன், விரும்பேன்
    உம்மீதாணை நிர்வச்சேஸ்வரனே.”

    [தொடரும்]

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 92 (வழிவரும்)

    சேக்கிழார் பாடல் நயம் – 92 (வழிவரும்)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    வழிவரும்  இளைப்பி  னோடும்  வருத்திய  பசியி  னாலே
    அழிவுறும்  ஐயன்  என்னும்  அன்பினிற்  பொலிந்து  சென்று
    குழிநிரம்  பாத  புன்செய்க்  குறும்பயிர்  தடவிப்  பாசப்
    பழிமுதல்  பறிப்பார் போலப்  பறித்து அவை கறிக்கு  நல்க

    இளையான்குடி மாறனார், வந்தஅடியாரின் ஈரமேனியைத்துடைத்து வேறு ஆடையளித்து ‘அடியார்மிகவும்பசியோடு இருக்கிறார்’ என்றபோது, ‘நம் வறுமை நீங்க  இன்று பகலில்   விதைத்த முளைநெல்லை வயலிலிருந்து வாரிக்கொண்டு வந்தால் என்னால் ஆனதைச் செய்வேன்’ என்றார். வயலில் இருந்து வந்த ஈரநெல்லை வறுத்து, இடித்து அரிசியாக்கி உணவு  சமைக்க அடுப்பில் எரிதுரும்பு இல்லைஎன்றார் உடனே நாயனார்   தம்வீட்டின் உட்கூரை மூங்கில் வரிச்சுக்களைப் பிடுங்கிப் போட்டார். அடுப்பு மூட்டிநெல்லை வறுத்து  அரிசியாக்கிச்   சோறாக்கினார். அடுத்து ‘கறிக்கு இனிஎன்னசெய்வது?’ என்றுகேட்டார். அப்போது நாயனார் பின்பக்கம் புன்செய்ப் பயிராக முளைத்திருந்த  கீரையைப்  பறித்து  நல்கினார்

    இப்பாடலின் பொருள்: “வழி வந்ததாலுளதாகும் இளைப்பினுடனே அதன் முன்னரே வருத்திய பசியினாலே எமது ஐயன் வருந்தும்“ என்கின்ற அன்பினாற் கிளர்ந்து சென்று தமது கொல்லையிலே, முளைக்கவைத்த குழிகளினின்றும் மேலே கிளம்பும் பருவம் உறாத சிறிய இலைக்கறிப் பயிர்களைக் கையினாற்றடவிப் பாசப் பழிமுதலை அறவே பறிப்பவர்போல அவற்றை வேரோடும் பிடுங்கி வந்து கறிக்காக (நாயனார்) மனைவியார் கையிற் கொடுக்க, இப்பாடலில்  வழிவரும் இளைப்பினோடும் வருத்திய பசி என்பது – வழி வருதலாலுள தாகிய இளைப்பு – அயர்ச்சி. வழிவருதலென்னும் புறத்து நிகழ்ச்சியாகிய அயர்ச்சியுடன் உள்ளிருந்து வருத்திய பசியும் என்க. எனவே உள்ளும் புறமுமாக இருவழியானும் அடியவர் வருந்தினார் என்று அவர்பாற் சென்ற அன்பு காரணமாக நாயனார் தம்  கவலைகொண்ட உள்ளத்தைக்  குறித்தது.

    அடுத்து அன்பினிற் பொலிந்து சென்று  என்ற தொடர்,  அன்பு நிறைதலால் மிகக் கிளர்ச்சியுடன் விரைந்துபோய். இது நாயனார் பயிர்களைப் பறிப்பதற்குச் சென்ற விரைவினையும், அது போழ்து அவரது மன நிலையையும் குறித்தது. ஒவ்வோர் கணமும் அடியவர் பசி அதிகரித்தலைப் பொறுத்துக் கொள்ளாமல்  இவ்விருவரும் செய்த செயல்களின் தன்மை குறித்தபடியாம்.

    மேலும்,  குழி நிரம்பாத புன்செய்க் குறும்பயிர் – புன்செய்ப் பயிர் – கீரை முதலிய இலைக்கறிப் பயிர். இவை புன்செய் நிலத்தில் பயிரிடப்பெறுவன. குழிநிரம்பாத – பயிர்கள் இடப்பெற்ற குழிகளின் அளவுக்கு மேற்பட்ட உயரம் மேலே வளர்ந்து வராத. புன்செய் – வீட்டுக் கொல்லையாக நாயனார் பயன்படுத்திய புன்செய் நிலம் நாயனார் முளை வாரிவந்தது நெல் விளையும் நன்செய் நிலமென்றும்,கறிக்காகும் குறும்பயிர் பறித்து வந்தது அவரது மனையை அடுத்துக் கொல்லைப் பயிர் செய்துவந்த புன்செய் நிலமென்றும் அறியலாம். இப்போது பரமக் குடியை அடுத்த இளையான் குடி என்னும் இவ்வூரில் வீட்டு மனைகளின் அடுத்து இங்குக் குறித்த புன்செய் மேடு என்று வழங்கும் ஒரு புன்செய் இடமும், அதனை அடுத்து இது குறித்த முளைவாரி அமுதளித்த ‘’முளைவாரிக்குட்டை’’ எனவழங்கும் நன்செய் நிலமும் இன்னுங் காணப்பெறுகின்றன.

    இவ்விரண்டு நிலங்களினும் நாயனார் நென்முளையும், பயிரும் மேல் விளையாமல் வாரியும் பறித்ததும் விட்டபடியால் இன்றைக்கும் ஒன்றும் விளையாமலிருந்து வருகின்றன என்பது அவ்வூரார் சொல்லக்  கேட்ட செய்தியாம். இவற்றை வேலியிட்டுப் பாதுகாத்து உலகிற்கு அறிவிக்குமாறு கல்வெட்டு முதலிய, நினைவின் அடையாளங்கள் பொறித்துக் காவல்செய்து போற்றுதல் சைவர்களின் முதற்கடமைகளில் ஒன்றாம்.

    அடுத்து தடவி   என்ற  சொல் , குழி நிரம்பாத குற்றளவுடைமையானும், நள்ளிருட் காலமாதலானும் அக்குறும் பயிர்களைத் தடவிப் பறிக்க வேண்டியதாயிற்று என்க. பாசப் பழிமுதல் பறிப்பார்போல நாயனார் பறித்தவை குறும்பயிர் அன்று; அவை அவரது பாசத்தின் பழிமுதல் பறித்தலே போல நின்றன என்றார். பாசப் பழிமுதல் – ஆணவமாகிய சகல மலத்திற்கும் வேராகி நிற்கும் மூலமலம் என்பர். “யாக்கை தன்பரிசும் வினையிரண்டும் சாருமல மூன்றும் அற ‘’ என்பது கண்ணப்ப நாயனார் புராணம்.  பிற்காலத்துச் செல்லல் நீங்குதற்காக வித்தியிருந்த நெல் முளை வாரியதனானே வித்துமேல் விளையாமல் செய்த செயல் ஆகாமிய கர்மங்களைக் கிழித்தலும், குறும்பயிர் வேருடன் பறித்ததனானே பிராரத்த வினைகளை அழித்தலும், மனையின் அலக்குக்களை அறுத்து மேலும் புவன போகங்களை இல்லாமல் வீட்டியதனாலே சஞ்சித கர்மங்களை அழித்தலும் குறிக்கப்பெற்றன என்று இங்கு விசேடப்பொருள் காண்பாருமுண்டு. இவை ஆணவம் முதலான  மும்மலங்களின் அழிவு குறித்தன என்பாருமுண்டு. இவையெல்லாம்  சிவாநுபவப்  பொருள்;

    முதல் – மூலவேர்.  பறிப்பார்போல – இங்கு போல என்ற உவமவுருபு பயன்பற்றித் தோன்றிச் சிறப்பு நிலைக்களமாயின உவமம் என்பர். உவமிக்கப்பட்ட பொருளும் உவமையும் பண்பினால் ஒன்றேயாயின ஒற்றுமை நிலைகுறித்து நின்ற அழகும் காண்க.  குறும்பயிர்கள் வேரோடு பறிக்கப் பெற்றபடியால் பாசப் பழிமுதல் என்றார்

    நயம் : இப்பாடலில்  சைவ நன்மக்கள் தம்  முன்வினை, கடந்த பிறப்பின்  வினை, இப்பிறவி வினை  என்ற  சஞ்சிதம், பிராரத்தம், ஆகாமியம் ஆகிய  வினைகளை  அறுத்த பின்னரே இறையருள் பெறலாம் . இவற்றை கூரை வரிச்சு , குறும்பயிர் ஆகிய  அடையாளங்களால்  உணர்த்திய  சேக்கிழார் பெருமானின்  பாடல் நயம்  எண்ணியெண்ணி  இன்புறத்தக்கது!

    Share
  • கதை வடிவில் பழமொழி நானூறு – 13

    கதை வடிவில் பழமொழி நானூறு – 13

    நாங்குநேரி வாசஸ்ரீ

    பாடல் 27

    உறுகண் பலவும் உணராமை கந்தாத்
    தறுகண்மை ஆகாதாம் பேதை, – ‘தறுகண்
    பொறிப்பட்ட வாறல்லால், பூணாதுஎன் றெண்ணி,
    அறிவச்சம் ஆற்றப் பெரிது‘.

    பழமொழி –  பேதை எதையும் செய்யமாட்டான்

    வியாபாரம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. அதற்குள் திடீரென அவனுக்கு என்ன வந்துவிட்டது. இந்த ஐந்து வருடத்தில் அவன் எப்படியெல்லாம் விருத்திசெய்திருப்பான் என கோட்டை கட்டிக்கொண்டு வந்ததுதான் மிச்சம். ஏன் இப்படி. என்னவாக இருக்கும்.

    தீபாவளி பலகாரங்கள் எதுவும் இனிக்கவில்லை. மனம் ஒரு குரங்குதானே. அதனால்தானோ என்னவோ முன்னால் தட்டு நிறைய வீட்டில்செய்த இனிப்புகள் இருந்தும் எதையும் கையில் எடுக்க மனம் வரவில்லை.

    நண்பனின் தந்தை அவனைத் திட்டும்போதெல்லாம் எப்படி வக்காலத்து வாங்கி இருக்கிறேன். மனம் யோசனையில் ஆழ்ந்தது.

    நீ எதுக்கும் லாயிக்கில்லாதவன்டா. உக்காந்து தின்னே காலத்தக் கழிச்சிரு. உன் சோம்பேறித்தனத்த வளக்கறதுக்கு எட்டு காரணத்தச் சொல்லு. வெளியில இறங்கி உலகத்தப்பாத்ததானே பிழைக்கிற வழி தெரியும். நாலு சுவத்துக்குள்ள உக்காந்து நீயும் உங்கம்மாவும் கோட்ட கட்டிக்கிட்டே இருங்க. ஏண்டாப்பா நீ கூடவா இவனுக்கு புத்தி சொல்லக்கூடாது. ஏதோ சென்னைக்குப் போகப்போறதா கேள்விப்பட்டேனே. உண்மையா.

    ஆமா அங்கிள். நான் எங்க சித்தப்பா வீட்ல போய் இருந்துக்கிட்டு வேல தேடப்போறேன்.

    எனக்கு ஒரு நல்ல வேலை கிடைச்சவொடனே இவனையும் கூப்பிட்டுக்கறேன். ஒப்புக்குச் சொன்ன வார்த்தை அன்று.

    பள்ளிப்படிப்பில் தொடங்கி கும்பகோணம் கல்லூரி வரை நானும் என் நண்பன் நாகுவும் ஒண்ணாத்தான் படிச்சோம். அவன் கொஞ்சம் பயந்த சுபாவம். எதிலயும் ரிஸ்க் எடுக்க மாட்டான். அவங்க அம்மாவும் அந்தக் கொணத்த திசை திருப்பி பலமான கடவுள் நம்பிக்கைய விதைச்சாங்க. நாளாவட்டத்துல அது கடவுள் நம்பிக்கையா இல்லாம கடவுள் பயமா மாறிப்போச்சு. டேய் பரீட்சைக்கு முன்ன பிள்ளையாருக்குத் தோப்புக்கரணம் போட்டுட்டு வரேன். கோபிச்சுக்கப் போறாருங்கற அளவில்.

    இதை அவன் அம்மாவின் பார்வைக்கு கொண்டு சென்றபோது நல்லது தம்பி நான் அவனுக்கு புத்தி சொல்றேன் என்றாள். அவள் புத்தி சொல்லி வளர்த்தவிதத்தைத் தான் நான் இப்ப பாக்கறேனே. போனவாரம் தீபாவளி அன்று அவன் அப்பாவின் தொலைபேசி அழைப்பு வந்தது.

    கால ஓட்டத்தில் ஒருவரையொருவர் மறந்து வேலை, திருமணம் என்று வேறு வேறு திசைகளை நோக்கி பயணித்து விட்ட பின் அவரின் குரல் என் கடந்த காலத்தை மீண்டும் வரவழைத்ததுபோல்….

    தம்பி நான் உங்க நண்பர் நாகுவோட அப்பா பேசறேன். ஊர மறந்துட்டீங்க போல. இந்தப்பக்கமே வரதில்ல. முடிஞ்சப்போ குடும்பத்தோடவந்து எங்க வீட்ல தங்கிட்டுப்போங்க. உங்க நண்பரும் சந்தோஷப்படுவாரு. உங்கபையனும் என் பேரனும் சேந்து விளையாடலாம்.

    கேட்க நன்றாக இருந்தது. இதோ வந்தேவிட்டோம். என்ன ஆச்சர்யம். நாகு மட்டும் மாறவேயில்லை. ஏதோ கடை வைத்து நடத்துகிறானாம். அதைப்பெரிசாக்க வேண்டும் என்ற எண்ணம் கூட இல்லை. அதே ஓட்டுவீட்டில்தான் வசிக்கிறார்கள்.

    எனக்கு என்னடா குறைச்சல். சாப்பாட்டுக்கு கடை வருமானம் இருக்கு. போய்வர சைக்கிள் வாகனம் இருக்கு. ஒத்த பையன். நாம படிச்ச பள்ளிக்கூடத்திலயே அவனையும் சேத்திருக்கேன். நல்லாப் படிக்கிறான். மனைவி நச்சரிப்புதான் தாங்கமுடியல. வருமானம் பத்தாதாம். எங்கப்பாவும் அவகூட ஜால்ரா போடறார். வங்கியில கடன் வாங்கி கடையை விரிவுபடுத்துனு.

    நீயே சொல்லு. கடவுள் யாருக்கு எது கொடுக்கணும்னு விதிச்சிருக்காரோ அதுதானே கிடைக்கும்.  அதுக்குமேல ஆசப்பட்டா அவருக்குக் கோபம் வராதா. இந்த விஷயத்துல எங்கம்மா தான் சரி.  என்னய தினமும் கனகதாரா ஸ்தோத்திரம் சொல்லச் சொல்லியிருக்காங்க. கடவுளா மனமிரங்கி கொடுத்தா கொடுக்கட்டும். இல்லன்னா விதிவிட்ட வழினு இருப்பேன். அவன் பேசப்பேச எனக்கு ஆச்சரியம்

    ‘அறிவச்சம் ஆற்றப் பெரிது’ என்னும் பழமொழி ஞாபகத்துக்கு வந்தது. தனக்கு வந்து சேர்ந்த துன்பம் பலவற்றுக்கும் காரணம் அறியாமலேயே அது விதிப்பயன் என்றெண்ணி தீர்க்க முயற்சிக்காமலிருப்பவன் பேதையாவான். ஆம் நாகுவும் ஒரு பேதையே.

    பாடல் – 28

    சுட்டிச் சொலப்படும் பேரறிவி னார்கண்ணும்,
    பட்ட இழுக்கம் பலவானால் – பட்ட
    பொறியின் வகைய கருமம்; அதனால்,
    ‘அறிவினை ஊழே அடும்’.

    பழமொழி – ‘அறிவினை ஊழே அடும்’

    நம்ம ராஜேந்தர் சாரோட வழக்கப் பத்தி கேள்விப்பட்டயா. மனசுக்கு ரொம்ப சங்கடமா இருக்குடா. எவ்வளவு பொறுப்பான வாத்தியார். ஒழுக்கத்த நம்மளுக்கு கத்துக் கொடுத்தவரே அவர் தான். என்னால அவர் அப்படிச் செஞ்சிருப்பாருன்னு நம்ப முடியல. நீங்க கண்டிப்பா ஒருநாள் ரொம்ப பேமஸ் ஆவிங்க சார்னு நான்பலமுறை சொல்லியிருக்கேன். அதுக்காக இப்படியா. சென்னையிலிருந்து வந்திருக்கும் நான் என் பால்ய நண்பனுடன் பேசிக்கொண்டிருக்கிறேன்.

    பத்தாண்டுகளுக்கு முன்பு உள்ளூர் அரசுப்பள்ளியில் படித்த எங்களுக்கு இராஜேந்தர் சார் பன்னிரண்டாம் வகுப்பு கணித ஆசிரியர். அவராலேயே நல்ல மதிப்பெண் பெற்று சென்னை பொறியியற்கல்லூரியில் இடம் கிடைத்தது. அவர்மட்டும் இல்லையெனில் எங்களில் பாதிபேரின் வாழ்க்கை ப்ளம்பர் மற்றும் பிட்டர் எனதான் கழிந்திருக்கும். பொறியியல் படிப்பை நினைத்துக்கூட பார்த்திருக்க முடியாது.

    கடந்த ஒருவாரமாக ஊடகங்களில் அவரைப்பற்றி வரும் செய்திகளை மற்றவர்கள் போல் கடந்துபோக என்னால் முடியவில்லை. இப்போது நல்லபணியில் இருக்கும்நான் ஏதாவது ஒருவகையில் அவருக்கு உதவ வேண்டும். அதனால் தான் என் உற்ற நண்பனிடம் விசாரித்துக்கொண்டிருக்கிறேன். அவன் தற்போது நாங்கள் படித்த மேல்நிலைப்பள்ளியிலேயே ஆசிரியராகப் பணிபுரிகிறான்.

    ஆமாண்டா. நான் அந்தப் பள்ளியில ஆசிரியர்னாலும் சார எதிரில பார்க்க நேர்ந்தா இப்பவும் எழுந்து நிப்பேன். அவருக்குச் சரிசமமா உட்காற மனசு வராது. திடீர்னு அவரப் பத்தி புகார் வந்தவொடனே பள்ளிக்கூடமே ஆடிப்போயிடுச்சு.

    அவருடைய கடைசி தம்பி தன் மகன டாக்டர் ஆக்கணும்னு விருப்பப்பட்டிருக்கார்போல. அதுக்காக சார்கிட்ட உதவி கேட்டிருக்காரு. தம்பி ஊர்ப்பக்கம் விவசாயம் பாத்துக்கிட்டிருக்கறதால சார் அவர் மகனத் தன் வீட்லயே வச்சி படிக்க வச்சிருக்கார். அப்பறம் கோச்சிங் சென்டர்ல சேக்கணும்னு நெனச்சப்போதான் வினையே தொடங்கிச்சு. நம்ம பள்ளியில புதுசா ஒரு கெமிஸ்டரி சார் சேந்திருக்கார். அவர் குடும்பமே கோச்சிங்சென்டர் வச்சு நடத்தறவங்க போல. அவர நம்பி நீட் கோச்சிங்காக தன் தம்பி மகன அவரோட சென்டர்லயே சேத்து விட்டுருக்காரு. சேரும்போது பத்துபக்கத்துக்கு ஒரு விண்ணப்பம் நிரப்பச்சொல்லியிருப்பாங்க போல. அதில கீழ எழுதியிருந்தத எல்லாம் சரியாவாசிக்காம கூட வேலை பாக்கறவர்தானேனு நினைச்சு சார் கையெழுத்து போட்டிருக்கார்.

    இவருடைய தம்பி மகனுக்கு நீட் தேர்வுல சரியா மதிப்பெண் கிடைக்கல. ஆனா அவங்க உங்க தம்பிமகன் பெயரில வேற ஒருபையனும் எழுதி இருக்கான் அது க்ளியர் ஆயிருக்கு. நீங்க இருபதாயிரம் கட்டணம் எங்களுக்குக் குடுத்தீங்கன்னா உங்களுக்கு சீட் நிச்சயம்னு சொன்னாங்களாம். அப்ப அவருக்குக் கோபம் வந்திருச்சு. முறையாப் படிச்சு வாங்கினவங்க பாதிக்கப்படுவாங்கனு கூக்குரல் போட்டு போலீசுக்குத் தகவல் குடுத்துட்டாரு போல.

    அப்பதொடங்கினது தலவலி. அந்த கோச்சிங் சென்டர் காரருக்கு அரசியல்ல பெரியபுள்ளிகளத் தெரியும்போல. பணம் குடுத்து சரிகட்டிட்டாரு. பழி முழுக்க சார்மேல வந்திருச்சு. பேராசப்பட்டு அவர் சென்டர நிர்ப்பந்தப் படுத்தினதாவும் அதுக்காக அவர் எழுத்துல எழுதிக்கொடுத்ததாவும் வழக்கு பதிவு பண்ணிட்டாங்க.

    முன்ன அவர் படிக்காம கையெழுத்து போட்டது வினையாப் போச்சு. அதில தாங்கள் எந்த வழியிலாவது (ஆள் மாறாட்டம் செய்தோ/பிற வழியிலோ) நீட் தேர்வில் என்மகனைத் தேர்ச்சி பெறச்செய்ய வேண்டும். அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு இந்த நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது. அதற்கான முழு பொறுப்பையும் நான் ஏற்கிறேன்னு எழுதியிருந்தத கவனிக்காம அவர் கையெழுத்துபோட்டிருக்கார் போல.

    இப்போ என்னடான்னா….  என்னய்யா நீயே கையெழுத்து போட்டுட்டு கெடைக்கலன்ன வொடனே இவுங்கள மாட்டி விடப் பாக்கறனு போலீசு திட்டறதப் பாக்க சகிக்கல. இதத்தான் ‘அறிவினை ஊழே அடும்’ னு பழமொழியாச்சொல்லுவாங்க போல. அறிவாளி கூட தன்னோட தலையெழுத்தால சிலநேரம் அவத்தைப்படுவாங்கறது தான் அதோட அர்த்தம். .

    Share
  • ‘எங்கே புத்தாக்கம்?’: அண்ணாகண்ணன் உரை

    ‘எங்கே புத்தாக்கம்?’: அண்ணாகண்ணன் உரை

    தமிழ் இணையக் கழகத்தின் இணையத் தமிழ்ச் சொற்பொழிவுத் தொடரில் ‘எங்கே புத்தாக்கம்?’ என்ற தலைப்பில், வல்லமை ஆசிரியர், முனைவர் அண்ணாகண்ணன் ஆற்றிய உரை இங்கே.

     

    09.08.2020 அன்று இந்திய நேரப்படி மாலை 7 மணிக்கு Teamlink செயலி ஊடாக இந்த அமர்வு நடைபெற்றது.

    நன்றி: முனைவர் துரை.மணிகண்டன், தமிழ் இணையக் கழகம்

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • காங்கேயன்துறையிலிருந்து காரைக்காலுக்குச் சைவ வழிபாட்டுப் பயணிகள் கப்பல்

    காங்கேயன்துறையிலிருந்து காரைக்காலுக்குச் சைவ வழிபாட்டுப் பயணிகள் கப்பல்

    மறவன்புலவு க. சச்சிதானந்தன்
    சிவ சேனை, இலங்கை

    இந்திய நடுவண் அரசின் கப்பல் துறை அமைச்சரின் வழிகாட்டலுக்கு அமைய, காரைக்காலில் இருந்து காங்கேயன்துறைக்குச் சைவ வழிபாட்டு பயணிகளுக்காகக் கப்பல் விடுவதாகப் புதுச்சேரி முதலமைச்சர், வரும் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை வழி புதுச்சேரிச் சட்டசபையில் அறிவித்தார்.

    புதுச்சேரி முதலமைச்சரின் நிதி நிலை அறிக்கையின் 145ஆவது பந்தி

    இன்று நண்பகல் இலங்கைச் சைவர்களின் சார்பில் புதுச்சேரி முதலமைச்சர் மாண்புமிகு நாராயணசாமி அவர்களுக்குத் தொலைப்பேசியில் வாழ்த்துச் செய்தியைக் கூறினேன், நன்றியைக் கூறினேன்.

    கடந்த மூன்று ஆண்டுகளாக இலங்கையிலும் இந்தியாவிலும் இக் கப்பல் சேவையைத் தொடங்குமாறு ஈர் அரசுகளையும் வலியுறுத்திக் கடிதங்கள் கொடுத்து வருகிறேன்

    இலங்கை அரசு, வடமாகாண மேதகு ஆளுநர் றெசினால்டு கூரே காலத்திலேயே இக் கப்பல் சேவைக்கு ஒப்புதல் வழங்கி இருந்தது.

    இலங்கைக் கடற்படைத் தளபதி பல முறை என்னை அழைத்தார். கப்பல் சேவை எப்பொழுது தொடங்குகிறது நாங்கள் உதவுகிறோம் என ஒவ்வொரு முறையும் கூறியுள்ளார்.

    அவ்வாறு அக்காலத்தில் குடியரசுத் தலைவரின் முதன்மைச் செயலாளராக இருந்த திரு. ஒஸ்டின் பெர்ணாந்து, இலங்கைக் கப்பல் கூட்டுத்தாபனத்துடனும் இந்தியத் தூதருடனும் நேராகப் பேசி, இக் கப்பல் சேவையை விரைவாகத் தொடங்குங்கள் என ஆணையிட்டிருந்தார்.

    இதையடுத்து நான் சென்னைக்கும் தில்லிக்கும் பல முறைகள் சென்றேன்.

    சென்னையில் என் வேண்டுகோளை ஏற்ற தமிழக அரசின் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அவர்கள், தமிழக அரசின் ஒப்புதலைத் தில்லிக்கு வழங்கியிருந்தார்.

    அக்காலத்தில் மாநிலங்களவையில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் திரு. இல கணேசன் அவர்கள், என்னை வெளிநாட்டு அமைச்சுக்கும் கப்பல் சேவை அமைச்சுக்கும் அழைத்துச் சென்று அவர்கள் ஒப்புதல் வழங்கக் காரணமாயிருந்தார்.

    அவ்வாறு இந்தியப் பிரதமர் அலுவலகத்தின் ஆலோசகராக இருந்த திரு. எஸ் குருமூர்த்தி அவர்கள், பிரதமர் அலுவலகத்தில் ஒப்புதல்களைப் பெற உதவினார்.

    சென்னையிலும் தில்லியிலும் உள்ள இந்து சமய அமைப்புகள், சார்பாளர்கள் யாவரும் இக்கருத்தை இந்திய அரசுக்கு எடுத்துக்கூறி வலியுறுத்தினார்கள்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்திய அரசின் கப்பல் போக்குவரத்து இணை அமைச்சர், புதுச்சேரிக்கு வந்தார். காரைக்கால் துறைமுகத்தைப் பார்வையிட்டார். கப்பல் சேவை தொடங்குவதற்கான வழிகாட்டல்களைக் கொடுத்திருந்தார்.

    இந்த வாரம் புதுச்சேரி சட்டசபையில் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்த மாண்புமிகு முதலமைச்சர் நாராயணசாமி, மத்திய அரசின் வழிகாட்டுதலுக்கு அமைய காரைக்காலிலிருந்து காங்கேயன்துறைக்குக் கப்பல் சேவையைத் தொடங்குவதற்கான உயர்மட்டக் குழுவை அமைத்து இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.

    Share
  • சர்வோதய இலக்கியப் பண்ணை – புத்தகங்களின் போதிமரம்

    சர்வோதய இலக்கியப் பண்ணை – புத்தகங்களின் போதிமரம்

    முனைவர் ம. இராமச்சந்திரன்
    உதவிப் பேராசிரியர்,
    ஸ்ரீவித்யாமந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி), 
    ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி மாவட்டம்.
    ramachandran.ta@gmail.com

    ஒருகோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது “ஒரு நூலகம் கட்டுவேன்” என்று கூறினார் மகாத்மா காந்தி. இதனைக் கூறிய இளங்கலைப் பேராசிரியர், எனது வாழ்க்கையின் போக்கையே மாற்றப் போகிறோம் என்றெல்லாம் எண்ணியதாகத் தெரியவில்லை. ஆனால் அதற்குப் பின் நூலகங்களைத் தேடி அலையத் தொடங்கினேன். மதுரை தியாகராசர் கல்லூரி நூலகம், முதலில் எனது அறிவுத் தேடலுக்குத் தீனி போடத் தொடங்கியது. நூலகரின் அன்பும் நூல் குறித்த அவரின் அறிவும் அனுபவமும் என்னை வியப்பில் ஆழ்த்தியது.

    கல்லூரி நாட்கள் தவிர விடுமுறை நாட்களில் அமைதியாக இருக்க முடியவில்லை. எனது (செல்லூர்)பகுதி வட்டார நூலகத்திற்குச் சென்று வரும் சூழலில் மதுரை மாவட்ட நூலக அறிமுகம் கிடைத்தது. இவ்வாறு நூல்களின் வாழ்விடங்கள், எனது இருப்பிடங்களாக மாறின. புதிய நண்பர்கள் அறிமுகம் ஆனார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கொள்கைகளை அறிமுகம் செய்தார்கள். இவ்வாறு தான் காந்தியச் சிந்தனையும் சர்வோதய இலக்கியப் பண்ணையும் என்னை வந்தடைந்தன.

    மகாத்மா காந்தியின் ஆடை அரசியல் உருவான இடம், மதுரை. இந்திய விடுதலைப் போராட்டம், மதுரையில் மிகத் தீவிரமாகப் பரவி, பரவலாக மக்கள் மனத்தைப் பாதித்தது. இதன் காரணமாக மதுரையில் 1970ஆம் ஆண்டு காந்தியத் தொண்டர்கள் க.மு.நடராஜன், பாண்டியன், க.மாரியப்பன் போன்றவர்களால் தொடங்கப்பட்ட பதிப்பகம் சர்வோதய இலக்கியப் பண்ணை. இது காந்தியச் சிந்தனை நூல்களை வெளியிட்டு வந்தது. மேலும் காந்தியின் சுயசரிதையைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டது. இந்நூல் ஒவ்வோர் ஆண்டும் 20 ஆயிரம் பிரதிகள் விற்பனை செய்யப்படுகிறது. இங்குதான் எனக்கும் சத்திய சோதனை அறிமுகம் ஆனது, வெறும் 20 ரூபாய்க்கு.

    மகாத்மா காந்தி, மதுரையில் காந்தியடிகள், கோபால கிருஷ்ண கோகலேயும் காந்தியடிகளும், மகாகவியும் மகாத்மாவும், அதிசய சோதனை, வினோபாஜியும் காந்தியும் போன்ற பல நூல்களை வெளியிட்டுள்ளது. மிலி கிரகாம் போலாக் எழுதிய அற்புதமான நூல் ‘காந்தி எனும் மனிதர்’. க. கார்த்திகேயன் தமிழாக்கம் செய்துள்ள இந்நூலை இலக்கியப் பண்ணை வெளியிட்டது. மேலும் சத்திய சோதனை புத்தகத்தை எழுத்தாளர் தர்மராஜ் ‘கவி வானில் காந்தியடிகள்’ என்று கவிதையாகப் படைத்துள்ளார். இதனையும் இலக்கியப் பண்ணை வெளியிட்டது. இந்நூல், வாசகர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

    இவ்வாறு பதிப்புப் பணியில் மட்டுமல்லாமல் புத்தக விற்பனையிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டது. மதுரை இரயில்வே நிலையம் அருகில் மேலவெளி வீதியில் தனது சர்வோதய இலக்கியப் பண்ணை விற்பனை நிலையத்தை நடத்தி வருகிறது.

    இக்காலத்தில் நல்ல புத்தகங்களை அடையாளம் கண்டுகொள்வதில் மிகவும் கடின உழைப்பைச் செலுத்த வேண்டிய நிலையில் இருந்தேன். எனது கைகளில் இருந்த மூன்றாம் தரமான நூல்களைக் கண்டுகொண்ட என் பேராசிரியர் சிவராமன் (அறிவு வளரும் போது அன்பும் கருணையும் பெருக வேண்டும் என்பதற்குச் சான்றாக வாழ்ந்தவர்) சேக்ஸ்பியரின் ‘மேக்பத்’ நாடகத்தைப் பற்றிப் பேசிக்கொண்டு இருக்கும்போது நல்ல நூல்களைத் தேர்வு செய்து படிக்க வேண்டுமென்று கூறினார். ஒரு நூல் எந்தப் பதிப்பகத்தில் வெளியிடப்பட்டுள்ளது என்பதைக் கவனிக்க வேண்டும், நூலின் பொருளடக்கத்தை ஆழ்ந்து சிந்திக்க வேண்டும், நூலின் முன்னுரைக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும், நூல் பற்றிய பிற அறிஞர்களின்  கருத்துகள் போன்றவற்றின் மூலம் நல்ல நூல்களை அடையாளம் காண முடியும் என்று கூறினார். அன்று முதல் நல்ல நூல்களின் தேடல் தொடங்கியது. பதிப்பகம் பற்றிய சிந்தனையில் பெரும் மாற்றம் ஏற்பட்டது.

    இந்தச் சூழ்நிலையில் அறிமுகம் ஆனது, சர்வோதய இலக்கியப் பண்ணை. நூலகங்களில் மட்டுமே நூல்களைக் கண்டு வியந்த எனக்கு இலக்கியப் பண்ணை மிகப் பெரிய வியப்பையும் குதூகலத்தையும் ஏற்படுத்தியது. புது  நூல்களின் காகித வாசனை உள்ளத்தைக் கிளர்த்தெழ செய்தது.   எழுத்தாளர் பலரின் அனைத்து நூல்களையும் ஒன்றாகக் காண முடிந்தது. குறிப்பிட்ட எழுத்தாளர்களின் ஒட்டுமொத்த நூல்களையும் வாசகர்கள் வாங்கிச் செல்வதைக் கண்டு பிரமித்து நின்றேன். அன்று முதல். எனது புத்தகம் வாங்கும் பழக்கம் தொடங்கியது. ஒரு நல்ல நூலைத் தேர்ந்தெடுக்க, ஐம்பது நூல்களைப் புரட்ட வேண்டி உள்ளது.

    ஜெயகாந்தனின் முன்னுரைகளைப் படித்துவிட்டு மயங்கித் திரிந்த நாட்கள் பல. தி.ஜா., சாண்டில்யன், கல்கி, தீபம் நா.பா, அசோகமித்திரன், கண்ணதாசன், மு.வ, ராஜம் கிருஷ்ணன், பிரபஞ்சன், மு.மேத்தா, அப்துல் ரகுமான், சிற்பி பாலசுப்பிரமணியம், சி.சு.செல்லப்பா, க.நா.சு, கோவி.மணிசேகரன், சுந்தர ராமசாமி, புதுமைப்பித்தன் சிறுகதைகள் என்று தமிழ் இலக்கியத்தின் முன்னோடிகள் என் மீது முட்டி மோதிக்கொண்டு படிக்கத் தூண்டினார்கள்.

    எவ்வளவு நேரம் எடுத்துக் கொண்டாலும் இது வரை முகம் சுளித்ததில்லை, இலக்கியப் பண்ணை ஊழியர்கள். விருது பெற்ற எழுத்தாளர்கள், கவிஞர்கள் ஆகியோரின் நூல் அனைத்தும் இங்கு தான் அறிமுகமானது. “உலக வரைபடத்திலுள்ள மூலை முடுக்குகளுக்கெல்லாம் போக  விரும்புகிறாயா, ஒரு நூலகத்திற்குச் செல்” என்பார் டெஸ்கார்ட்ஸ். அத்தகைய ஒரு நூலகமாக விளங்குகிறது, சர்வோதய இலக்கியப் பண்ணை.

    சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரையில் இலக்கியப் பணியைச் செவ்வனே செய்து வருகின்றது, இது. அரை நூற்றாண்டுப் பாரம்பரியம் கொண்ட சர்வோதய இலக்கியப் பண்ணை, படிக்கும் பழக்கத்தை ஊக்கப்படுத்த 35 ஆண்டுகளாய்ப் புத்தகத் திருவிழா நடத்தி வருகிறது. “புத்தகங்கள் அறத்தையும் தியாகத்தையும் இளந்தலைமுறையினருக்கு எடுத்துக் கூறும் நல்லாசிரியர்களாகவே விளங்குகின்றன” என்று இளசை சுந்தரம் கூறியுள்ளது சிந்திக்கத் தக்கது.

    அறிவை அள்ளித் தரும் அட்சய பாத்திரம், புத்தகம். புத்தகத்தை நண்பனாக்கியோருக்குத் தாழ்வில்லை. மனிதனைப் பக்குவப்படுத்துவதிலும் இருள் படர்ந்த வாழ்க்கைப் பாதையில் வெளிச்சம் காட்டுவதிலும் புத்தகங்களுக்கு இணையான இன்னொன்றைக் காண்பது அரிது என்றெல்லாம் புத்தகத்தின் சிறப்புகளை எடுத்துரைக்கும்போதெல்லாம் சர்வோதய இலக்கியப் பண்ணையின் செயல்பாடுகள், நினைவுக்கு வராமல் இருப்பதில்லை.

    சில புத்தகங்களைச் சுவைப்போம்…

    சிலவற்றை அப்படியே விழுங்குவோம்…

    சில புத்தகங்களை மென்று ஜீரணிப்போம்…  என்று பிரான்சிஸ் பேக்கன் கூறியபடி, சுவைப்பது, விழுங்குவது, ஜீரணிப்பது ஆகிய அனைத்தும் நடைபெறும் சூழலைக் கொண்ட இடமாக, புத்தகங்களின் போதிமரமாகச் சர்வோதய இலக்கியப் பண்ணை விளங்குகிறது.

    Share
  • பரிமேலழகர் உரைத் திறன் – 4

    பரிமேலழகர் உரைத் திறன் – 4

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    தஞ்சை மாவட்டம் – 613006.                
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    ‘அழுக்காறு’ – பாவமா? பாவியா?

    முன்னுரை

    சமய அடிப்படையில் உரைகாண்பது, மெய்யியல் அடிப்படையில் உரையெழுதுவது, அரசியல் கொள்கைகளுக்கு இயைய உரை காண்பது, இலக்கண அடிப்படையில் உரை காண்பது, காரண காரிய அடிப்படையில் உரை காண்பது, சொற் பயன்பாட்டுக்கான (பதப்பிரயோகத்திற்கான) காரணம் கண்டறிந்து உரையெழுதுவது, அதிகாரத் தலைப்பு, இயல், பால் இவற்றின் பிரிவினைக்கேற்ப உரைகாண்பது எனப் பரிமேலழகர் உரையறி திறன் பலவாம். எல்லா நெறிகளிலும் செந்நெறி சென்று குறள் நெறி காண முயலும் கொள்கையுடையார் அவர்.  ‘நோக்கு’ என்னும் பழந்தமிழ் திறனாய்வு நெறியைப் பயன்படுத்தி அவர் எழுதிய உரையே திருக்குறள் உரையாகும். குறட்பாவை ஓரலகாகக் கொண்டால், அதனுள் அடங்கிய, அடிகள், சீர்கள், அசைகள் எனத் தனித்தனியாக நோக்கியுணர்ந்த பிறகே அவர் உரையெழுதுகிறார். ஓர் உருவகப் பொருத்தத்திற்கு அவர் கூறும் விளக்கம் இக்கட்டுரையில் சுருக்கமாக ஆராயப்படுகிறது.

    திறனறியும் குறட்பாவும் உரையும்

    ‘அழுக்காறாமை’ என்னும் அதிகாரத்தில் எட்டாவது குறளாக அமைந்திருப்பது,

    “அழுக்காறு என ஒரு பாவி திருச்செற்றுத்
    தீயுழி உய்த்து விடும்” (168)

    இந்தக் குறட்பாவிற்கு,

    • “அழுக்காறு என ஒரு பாவி” ‘அழுக்காறு’ எனச் சொல்லப்பட்ட ஒப்பில்லாத பாவி
    • “திருச்செற்றுத், தீயுழி உய்த்துவிடும்” தன்னை உடையானை இம்மைக்கண் செல்வத்தைக் கெடுத்து மறுமைக்கண் நரகத்தில் செலுத்திவிடும்.

     எனப் பொழிப்புரை எழுதிய பரிமேலழகர் விளக்கவுரையையும் தந்திருக்கிறார்.

    பொழிப்புரை நுட்பம்

    • ‘ஒரு’ என்பதற்கு உலகவழக்கினையொட்டி ஓர் எண்ணாகக் கொள்ளாது ‘ஒப்பில்லாத’ என உரை காண்கிறார்.
    • ‘திரு’ என்பது செல்வத்தைக் குறிப்பதால் அது ‘இம்மைப் பயன்’ எனவும் ‘தீயுழி’ என்பது நரகத்திற்கோர் பெயராதலின் ‘மறுமை’ எனவும் கண்டறிகிறார்.
    • ‘யாரை அழிக்கும்?’ என்பதற்கான செயப்படுபொருள் குறட்பாவில் இல்லாததால் ‘தன்னை உடையானை’ என வருவித்துக் கொள்கிறார்.

     பரிமேலழகர் கண்ட விளக்கவுரை

    “பண்புக்குப் பண்பி இல்லையேனும் தன்னை ஆக்கினானை (அழுக்காறு என்னும் பண்பை உடையவனை) இருமையும் கெடுத்தற் கொடுமை பற்றி (பண்பாகிய) அழுக்காற்றைப் (பண்பியாகிய) பாவி என்றார்.” கொடியானைப் பாவி என்னும் வழக்குண்மையின்.”

    விளக்கவுரையில் கண்ட உரையருமை

    • ‘யாரை அழிக்கும்?’ என்பதற்கான செயப்படுபொருள் குறட்பாவில் இல்லாததால் ‘தன்னைஉடையானை’ என வருவித்துக் கொள்கிறார். கொண்டு ‘உடையானை’ என்னும் பொழிப்புரையை விளக்கவுரையில் ‘தன்னை ஆக்கினானை’ என மாற்றிக் கொள்கிறார். அதாவது ‘அழுக்காறு’ என்னும் பண்பைத் தானே உருவாக்கி அதனை உடைமையாகக் கொண்டானாம்.
    • ‘அழுக்காறு’ என்னும் சொல்லுக்குப் பரிமேலழகர் ‘பிறர் ஆக்கம் பொறாமை’ (35) என்று பொருள் வரையறை செய்கிறார். ‘பிறர் ஆக்கம் கண்டவழி மகிழ்ச்சியடைய வேண்டிய ஒருவன் பொறாமைப் படுகிறான்’ என்றால் அந்தப் பண்பு அவனால் உருவாக்கிக் கொள்ளப்பட்டது என்பது பெறப்படும்
    • படவே அழுக்காறு என்பது செம்பில் களிம்பு போலல்லாது மனிதன் தானே தேடிக்கொண்ட பண்பு என்பதை அறிய முடியும். அறியவே அவன் தேடிய செல்வம் அவனைக் காக்க வேண்டியதிருக்க, அவன் அழிவுக்குக் காரணமாகிறது என்பது நுண்ணியம்.
    • பண்பைப் பண்பியாகத் திருவள்ளுவர் உருவகித்ததற்கான காரணத்தைத் தனக்கே உரிய புலமையாற்றலால் விளக்கிக் காட்டுகிறார்.
    • எதிர்மறைப் பண்புகள் காரணமாகக் கொடுஞ்செயலைச் செய்தாரைப் ‘பாவி’ என அழைப்பது உலக வழக்கு. அவ்வழக்கின் அடிப்படையிலேயே திருவள்ளுவர் அழுக்காறுடையானைப் பாவி என்றாராம். அதாவது அழுக்காற்றை உடையவனைத் தீயவன், கேடன், கயவன் என்றெல்லாம் அழைக்காது அவனைப் ‘பாவி’ என ஏன் அழைத்தார் என்பதற்கான காரணத்தை வள்ளுவர் உலக வழக்கினால் அறிந்தார் என்பதாம்.

     பரிமேலழகர் கண்ட உரையருமை

    ஓர் உருவகத்தின் காரணத்தை ஆராய்ந்து எழுதியிருக்கும் அழகருடைய உரை மாண்பு இப்படி அமைகிறது. ‘அன்பு’ என்பது பண்பு. அதற்குச் செயல் கிடையாது. அதாவது அன்பு தானாக செயல்படாது. அந்தப் பண்பைத் தனக்கு இயல்பாகக் கொண்டவன்தான் அதன் பெருமையைத் தன் செயல் வழி உணர்த்த முடியும். சான்றாக ‘இரக்கம்’ என்ற உயரிய பண்பு வள்ளற்பெருமான் வழியாகச் செயல்பட்டுப் பெருமையுற்றது. ‘நன்மை’ செயல்படாது. நல்லவன்தான் செயல்படுவான். ‘தீமை செயல்படாது’ தீயவன்தான் செயல்படுவான். எனவே பண்புக்குப் பண்பி இல்லை. ‘அழுக்காறு உடையான்கண்ணேயே’ (135) ஆக்கம் சேராதேயன்றி அழுக்காற்றிடம் சேராது என வள்ளுவர் கூறவில்லை என்பதையும் நோக்குதல் வேண்டும்.

    ஆனால் திருவள்ளுவர் ‘பண்பு செயல்படும்’ என்று கூறுகிறார். அதாவது பண்பே பண்பியாகச் செயல்படும் என்று கூறுகிறார். பண்பு தானாகச் செயல்படுமா? இதுதான் வினா? ‘படாது’ என்பது உண்மை. சில நேர்வுகளில் பண்பு பண்பியாகச் செயல்படும் என்பது திருவள்ளுவர் கருத்து. இந்தக் கருத்தினைத் திருவள்ளுவர் முன்னெடுக்கிறபோது அதற்கான விளக்கத்தை அவர் கூறினாரிலர்.

    ‘பண்பி இதனைச் செய்வான்’ எனக் கூறாது ‘பண்பே இதனைச் செய்யும் (விடும்) எனக் கூறியமைகிறார் திருவள்ளுவர். இப்போது உரையாசிரியருக்குப் பொறுப்பு கூடுதலாகிறது. நூலாசிரியரின் சொற் பயன்பாட்டுக்கு விளக்கம் சொல்ல வேண்டியதுதான் உரையாசிரியர் பணியே தவிர நூலாசிரியர் பதிவில் குறைகாண்பது நெறியாகாது. ‘அழுக்காறு’ என்பது ஒரு பண்பு. அது பண்பி அல்ல. பாவம் என்பது பண்பு. ‘பாவி’ என்பவன் பண்பி. பாவத்தைச் செய்பவன்தான் பாவி. ஆனால் திருவள்ளுவர் அழுக்காற்றையே ஒரு பாவி என்கிறார். இலக்கணப்படி இது உருவகம். ஆனால் பொருளுணர் நெறிப்படி இது சரியன்று. ஆனால் கூறுகிறவர் தெய்வப்புலவர். ஒரு நுட்பமின்றி இவ்வாறு கூறியிருக்கமாட்டார். அந்த நுட்பம் என்ன? பண்புக்குப் பண்பி இல்லை என்பது உண்மைதான். ஆனால் திருவள்ளுவர் மானுடத்தின் எதிர்மறைப் பண்புகளில் பொறாமையை அதாவது பிறர் ஆக்கம் கண்டவழி வயிற்றெரிச்சல் படுகின்ற அந்த அழுக்காற்றைச் சாதாரண எதிர்மறைப் பண்புகளில் ஒன்றாகக் கொள்ளவில்லை. அதனைத் தனியாகப் பிரித்து அதன் கொடுமையைச் சுட்டுகிறார். மற்ற எதிர்மறைப் பண்புகள் பிறருக்கு எதிராகவே செயல்படும்.  ஆனால் அழுக்காறாகிய இப்பண்பு கொண்டவனுக்கே எதிரியாகும். மற்ற பண்புகள் செயல்பட ‘பண்பி’ தேவை. இதனைச் செயல்படுத்த தனியாக ஒரு ஆள் தேவையில்லை. அந்தப் பண்பே அந்த அழிவுச் செயலை மேற்கொள்ளும். யார்மீது? எவன் பொறாமை கொண்டானோ அவன்மீதே அது தன் தாக்குதலைத் தொடுக்கும்.  கம்பியில்லாமலேயே பாய்கின்ற மின்சாரம் அழுக்காறு!

    ‘ஒரு’ என்ற சொல்லுக்கு ஒப்பற்ற என அழகர் உரையெழுதினார், ‘ஏனைய பாவங்களின் செயல்படு எல்லை இம்மை மட்டுமே. அழுக்காறு மறுமையையும் அழிக்கும் பேராற்றல் உடையது என்னும் அதன் ஒப்பின்மையாகிய வலிமை நோக்கி. திருவள்ளுவர் பண்பியில்லாத பண்பைப் பண்பியாக்கினார். அதாவது பாவத்தைப் பாவியாக்கினார். அழகர் அதற்கான காரணத்தைக் கண்டறிந்து எழுதினார்.

    திருவள்ளுவர் காட்டிய உடைமைகளும் அல்லாதனவும்

    மானுடம் சிறக்க மாந்தர்களுக்கு இருக்க வேண்டிய பண்புகளைத் திருவள்ளுவர் ‘உடைமை’ என்னும் சொல்லால் நேர்முகமாகச் சுட்டுவார். ‘அன்புடைமை’, ‘அடக்கமுடைமை’ முதலிய பத்து உடைமைகளை அவர் கூறுவார். இருக்கக் கூடாத, அல்நெறி செல்லக் காரணமாகும் இயல்புகளை எதிர்மறையில் சுட்டுவது அவர்தம் வெளிப்பாட்டு நெறி, ‘பயனில சொல்லாமை’, ‘பிறனில் விழையாமை’, ‘புறங்கூறாமை’ முதலியன இவ்வாறு அமைந்தவை.

    பண்புகள் இடம் மாறினால்

    எதிர்மறைப் பண்பாகிய அழுக்காற்றினை உடைமையாக்கி, இருக்க வேண்டிய உடன்பாட்டுப் பண்பாகிய ஒழுக்கத்தை எதிர்மறையாக்கியும் வள்ளுவர் சிந்தித்திருக்கிறார். அதாவது ஒருவனுக்கு இருக்க வேண்டிய பண்பு இல்லாமல் போனால் என்ன ஆகும்? என்று சிந்தித்த வள்ளுவர், ‘இருக்கக் கூடாத பண்பு உடைமையானால் என்ன ஆகும்? என இருவகையாகவும் சிந்தித்திருக்கிறார் என்பதாம்.

    “அழுக்காறு உடையான்கண் ஆக்கம் போன்று இல்லை
    ஒழுக்க மிலான்கண் உயர்வு’ (135)

    உடன்பாட்டுப் பண்புகளை வள்ளுவர் உடைமைகளாகச் சொல்லுவார் என்பது மேலே குறிக்கப்பட்டது. ஆனால் இந்தக் குறட்பாவில் ‘அழுக்காறுடையான்’ என எதிர்மறைப் பண்பு உடைமையாகக் குறிக்கப்பட்டது. மேலும் உடைமையாக இருக்க வேண்டிய ஒழுக்கம் ‘ஒழுக்கமிலான்’ என எதிர்மறையால் குறிக்கப்பட்டது காண்க. அதனால் இருவழியும் ஒருவனுக்குக் கேடு என்பதை மிக நுட்பமாக வள்ளுவர் குறித்திருக்கிறார். இவற்றையெல்லாம் உள்வாங்கியே பரிமேலழகர் உரை அமைந்திருக்கிறது என்பதை உணரலாம்.

    பரிமேலழகரின் நினைவாற்றல்

    ‘பண்பு’ ஒரு செயலூக்கி என்பதைப் ‘பாவி’ என்னும் சொல்லால் குறித்த வள்ளுவத்தைத் தம் உரையாற்றலால் உணர வைத்த பரிமேலழகர் இதனையொத்த இன்னொரு சொல்லுக்கும் இவ்வாறே உரையெழுதுகிறார். “இன்மை என ஒரு பாவி’ (1042) என்பதற்கு மேல் ‘அழுக்காறென ஒரு பாவி’ (168) என்புழி உரைத்தாங்கு உரைக்க” என்று நினைவூட்டுகிறார். இந்த இரண்டு பாடல்களுக்கும் இடையே தொள்ளாயிரம் பாடல்களுக்கு மேல் இருக்கின்றன என்பதையும் அக்காலக் கல்விமுறை, சுவடிவழிக்கல்வியே என்பதையும் உட்கொண்டால் பரிமேலேழகர் உட்பட உரையாசிரியர்கள் அனைவர்தம் நினைவாற்றலையும் அறிந்து கொள்ள முடியும்.

    நிறைவுரை

    பண்பிதான் செயல்படும் என்பது உண்மையேயாயினும் சில நேர்வுகளில் பண்பே பண்பியாகச் செயல்படும். அது நேர்முகமானால் நன்மை. எதிர்முகமானால் பேரழிவு. ‘அழுக்காறு’ என்னும் பண்பைப் பண்பியாகத்   திருவள்ளுவர் உருவகம் செய்தது ஏன் என்பதற்குப் பரிமேலழகர் கண்ட உரைநுட்பம் இதுதான். பரிமேலழகர் உரையால் பண்புக்கும் செயலாற்றல் உண்டு என்று அறிந்து கொண்ட நாம் எண்ணங்களைத் தூய்மையாக வைத்துக் கொள்வதுதான் வள்ளுவரால் அடைய வேண்டிய பயன். ‘மனம்போல் வாழ்வு என்பதும் ‘உன் மனசார சொல்லு’ என்பனவும் அவை! எண்ணங்கள் செயலுக்கு மூலம் மட்டுமன்று. பல நேர்வுகளில் அவையே செயலூக்கியுமாகும்.!

    (தொடரும்)

    Share
  • கதை வடிவில் பழமொழி நானூறு – 12

    கதை வடிவில் பழமொழி நானூறு – 12

    நாங்குநேரி வாசஸ்ரீ

    பாடல் 25

    முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும்
    தொல்லை அளித்தாரைக் கேட்டறிந்தும்; – சொல்லின்
    நெறிமடற் பூந்தாழை நீடுநீர்ச் சேர்ப்ப!
    ‘அறிமடமும் சான்றோர்க்(கு) அணி’.

    பழமொழி -‘அறிமடமும் சான்றோர்க்கு அணி’

    நல்லதாப் போச்சு. இந்த தடவ எல்லாரும் வந்துருக்கீங்க. ஆலமரப் படையல பெரிசா செஞ்சிடலாம். அதுக்குத் தேவையான சாமான்களெல்லாம் சொக்கி பாட்டிகிட்ட கேட்டுச் சொல்றேன். போய் வாங்கிட்டு வந்துடுங்க. அம்மா சந்தோஷமாகச் சொல்லிக்கொண்டே போனாள்.

    நான் சண்டிகரில் வசிப்பதால் வருடத்திற்கு ஒருமுறையாவது வந்து போவதுண்டு. ஆஸ்திரேலியாவில் வசிக்கும் அக்காவும் நியுசிலாந்தில் வசிக்கும் தம்பியும் இப்போதுதானே வருகிறார்கள். மூன்று குடும்பமும்ஒண்ணு சேர்வது கஷ்டம்தான். அதுவும் கிராமத்தில். நல்லவேளை. சித்தப்பா பையன் கல்யாணத்தை சாக்குவைத்து எல்லாரும் கூடிஇருக்கிறோம். சித்திதான் வரிசையாக நிறைய சடங்குகள் சொன்னாள். பந்தக்கால் நடுவதிலிருந்து தொடங்கி…. இப்போ அம்மா வேற இந்தப் படையல்… எங்கயும் சுத்திப்பாக்கப் போகமுடியாது போல. யோசனையுடன் அமர்ந்திருந்தேன்.

    அப்பா அதுஎன்ன ஆலமரத்துக்குப் படயல்சாப்பாடு. அது என்ன சாப்பிடவா போகுது. நெறைய மெனு வேற சொல்றாங்க. அதுக்கு ஒவ்வொரு பேமிலியும் நியூ டிரஸ் குடுக்கணுமாமே. கேட்கிறான் என் மகன்.

    கண்ணை மூடிக்கொண்டு மனக்கண்ணில் பட்டுப்புடவை கட்டிக்கொண்டுஆலமரம் இலை விரித்து சாப்பிடுவதாக யோசித்தேன். கற்பனை நல்லாதான்இருக்கு.  ஆமா எதுக்கு இது. இந்தக் கேள்விய சின்னவயசில நான் கேட்டதே இல்ல. விசேசம்னு சொன்னா நல்லா சாப்பிடணும்.விளையாடணும். ஆனா இந்த காலத்துப் பசங்க ரொம்ப தெளிவு. காரணம்கேட்டே கழுத்தறுக்கறாங்க.

    பாட்டிகிட்டயே கேளுடா. எனக்கு இதப்பத்தி எதுவும் தெரியாது. சமாளித்தேன்.

    போப்பா நீங்க சுத்த வேஸ்ட். ஓடிவிட்டான் என் பத்துவயது மகன்.

    அம்மாவின் லிஸ்ட் வந்துவிட்டது. மதியம் டவுண் போத்தீஸ் போய் ஆளுக்கு ஒரு பட்டுப்புடவை எடுத்துட்டு அதுக்கு மேல வைக்க கம்மல், செயின், வளையல் எல்லாம் கவரிங் கடையில் வாங்கிட்டு வந்துடுங்க. அப்புறமா மளிகை சாமான் இங்க வாங்கிக்கலாம்.

    இந்த சாக்குல டவுணச் சுத்தலாம். நாளைக்கு சாவகாசமா லோக்கல் ப்ரெண்ட் லட்சு கிட்ட இந்தப் படையல் நம்பிக்கை எதுக்குன்னு கேட்டுத்தெரிஞ்சுக்கணும்.

    மறுநாள் பலசரக்கு சாமான்கள் வாங்கிக்கொண்டு வீடு திரும்பும்போது எதேச்சையாக லட்சு கண்ணில் பட்டான். அவனாகவே டேய் என்ன ஆலமரப் படையல் சாமானா. அசத்து. பெரிய இடம். பட்டுப்புடவையெல்லாம் வைக்கப்போறயாமா. கேள்விப்பட்டேன்.

    அவன் பேச ஆரம்பித்ததும் எனக்கு ஆச்சர்யம்.

    ஏ….அதெப்படி .. உனக்குத் தெரியும். ..நானே உங்கிட்ட டவுட் கேக்கலாம்னு இருந்தேன். காரணமே தெரியாம இந்தப் படையல்ல எனக்கு நம்பிக்கையே இல்ல. அம்மாக்காக பண்றேன். அவ்வளவுதான்..

    ரொம்ப குழம்பாத. முன்னயெல்லாம் சுடுகாடு ஆலமரத்தடியில இறந்தவங்கள நெனச்சு விதவிதமா சாப்பாடு மட்டும் பண்ணி வைப்பாங்க. உண்மையில அந்தச் சாப்பாடு சுடுகாட்டுல வேல செய்யிறவுங்களுக்குத்தான். நாளாவட்டத்துல நம்ம தமிழய்யா முயற்சியில பொதுநல சங்கம் உருவாக்கினோம். இந்த மாதிரி படையல் வைக்கணும்னா அந்தச் சங்கத்துல முதலிலேயே பதிவு பண்ணணும். சங்க உறுப்பினர் அந்த விசேசத்துல கலந்துப்பாரு. மூடிபோட்ட சம்படங்கள்லதான் சாப்பாடு கொண்டுவைக்கணும். இலையைப் பரப்பிஒவ்வொரு கரண்டி வேணாப் போடலாம். அதைக் காக்காய்க்காக விட்டுவச்சிறுவாங்க. சம்படத்தோடசாப்பாட்ட எடுத்துட்டுப்போயி ஒவ்வொரு ஏழைகளுக்கும் வரிசைப்படி குடுத்துட்டு வந்தாங்க. இப்பயெல்லாம் துணிமணிகளும் கொடுக்கணும்னு சங்கம் உத்தரவு போட்டிருக்கு அதனாலதான் உங்கள பட்டுப்புடவை வாங்கச்சொன்னோம். படையலுக்கு வச்ச பாத்திரங்கள் துணிமணிகள் எல்லாத்தையும் தீபாவளிக்கு முன்ன மிகக் குறைந்த விலைக்கு சங்கம் ஏழைகளுக்குக் கொடுக்கும்.

    பாரிவள்ளல் முல்லைக்கு தேர் கொடுத்தான் அப்டிங்கறதுல மேலோட்டமாப் பாத்தா அவன் தெரிஞ்சுக்கிட்டே செஞ்ச அறியாமைச் செயல்கூட அவனுக்கு மங்காப் புகழப் பெற்றுக்குடுத்துடுச்சேனு நெனைப்போம். அதனால தேர்செய்யறவங்களுக்கு மேலமேல வேலைவாய்ப்பு கிடைக்க உதவினான்னும் எடுத்துக்கலாம். அதுபோலத்தான் இதுவும். யார் இந்த ஆலமரப் படையலத் தொடங்கினாங்கனு தெரியல. நம்பிக்கைகளைச் சிதைக்காம அது வெறும் நம்பிக்கைதான்னு தெரிஞ்சுக்கிட்டே அத வாழறவங்களுக்கு உதவியா மாத்த நினைச்சுதான் எங்க சங்கம் உழைச்சிட்டிருக்கு. ‘அறிமடமும் சான்றோர்க்கு அணி’ ங்கற பழமொழிப்படிதான் எங்க சங்கம்இயங்குது. அறிந்தே செய்யும் மடமைச் செயலும் சான்றோர்க்குச் சிறப்பையே தரும்னு சொல்லுவாங்க இல்லயா. அதுபோல இந்த ஊருக்குள்ள எங்களுக்குப் பெருமதான்.

    நண்பன் பேசப் பேச நான் ஆச்சரியத்தில் மூழ்கினேன்.

    பாடல் 26

    பொற்பவும் பொல்லா தனவும் புணர்ந்திருந்தார்
    சொற்பெய்து உணர்த்துதல் வேண்டுமோ? – விற்கீழ்
    அரிபாய் பரந்தகன்ற கண்ணாய்! – ‘அறியும்
    பெரிதாள் பவனே பெரிது’..

    பழமொழி – ‘அறியும் பெரிதாள் பவனே பெரிது’..

    இன்று என் மின்னஞ்சலைத் திறந்தவுடன் ஒரு ஆச்சரிய அதிர்வு. இதை நான் எதிர்பார்க்கவில்லை. ஏனோ எழுந்துசென்று கண்ணாடியில் என் முகத்தைப் பார்க்கவேண்டுமெனத் தோன்றியது. விக்னேஷ் அனுப்பிய அழைப்பிதழ் அது. கண்ணாடியில் ஆங்காங்கே தெரிந்த நரைமுடிகள் என்வயதை உணர்த்தின. எத்தனை வருடத்திற்கு முந்தைய நிகழ்வுஅது. இன்னும் பசுமையாக என்மனதில்.

    ஆமாம்….. நான் தோற்றுவிட்டேன். எனது தோல்வியை ஒப்புக்கொள்ள புஷ்பா என் அருகில் இல்லையே. ஒருவேளை அவன் அவளையும் அழைத்திருப்பானோ. பொறுத்துதான் பார்க்க வேண்டும். எப்படியும் நாளை போகப்போகிறேனே. விழாவிற்குச் செல்வதற்காக உடுத்த வேண்டிய சேலை முதல் அனைத்தையும் எடுத்துவைத்தேன். பத்தாண்டுகளுக்குப் பிறகு சந்திக்கப்போகும் நிகழ்வல்லவா. விக்னேஷின் வாழ்க்கையில் என்னவெல்லாம் மாற்றங்கள் ஏற்பட்டிருக்குமோ. டில்லியை விட்டு மாற்றலாகி வந்தபிறகு மீண்டும் தொடர்புகொள்ள முயற்சி செய்ததேயில்லை. இந்த விழாவுக்கு கண்டிப்பாக அனைத்து ஆசிரியைகளையும் அழைத்திருப்பான். நேஹா மேடத்தைப் பார்க்கமுடியும். பழசையெல்லாம் அவர்கள் மறந்திருப்பார்கள். இந்தமுறை சந்தித்தால் நன்றாகப் பேசவேண்டும்.

    அடுத்தநாள் விமானம் ஏறியவுடன் மனம் பின்னோக்கிச் சென்றது.

    அது பத்தாண்டுகளுக்கு முந்தைய நிகழ்வு. நானும் புஷ்பாவும் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு ஆசிரியைகள். ஆசிரியர் தினத்தைக் கொண்டாட அனைவரும் அரங்கில் காத்திருக்கிறோம். எங்கள் தலைமை ஆசிரியை கேட்டுக்கொண்டதிற்கிணங்க பள்ளி சம்பந்தமான தங்களின் அனுபவங்களைப் பகிர ஒவ்வொருவராக மேடை ஏறுகிறார்கள்.

    பெருமையடித்தே பொழுதைக் கழிக்கும் கதைசொல்லிகள் தங்கள் கற்பனைப் புராணத்தைத் தட்டிவிட ஆரம்பித்தனர். அனைவரைப் பற்றியும் சரியாக எடைபோட்டு வைத்திருக்கும் தலைமை ஆசிரியை ஒப்புக்கு கைதட்டி ஒவ்வொருவரையும் உற்சாகப்படுத்தினார்.

    ஒவ்வொருவர் பேசிமுடித்ததும் இவளைப் பற்றித் தெரியாதா. எனக் கிண்டலடித்துக் கொண்டே இருந்த புஷ்பா. நேஹா மேடம் மேடையேறியவுடன் அதிர்ச்சியானாள்.

    என்னஆச்சு இவங்களுக்கு. இவங்களுமா…….

    நேஹா மேடத்தின் உரை ஆரம்பித்தது. நான் சொல்லப்போகும் இந்த அனுபவம் வேறு ஒருவருடையது. அவர் மேடை ஏற விருப்பம் தெரிவிக்காததால் அவருக்குப் பதில் நான் கூறுகிறேன். பன்னிரெண்டாம் வகுப்பு பி பிரிவு மாணவன் விக்னேஷ். உங்கள் அனைவருக்கும் அவனைப்பற்றி நன்றாகத் தெரியும். யாரையும் மதிக்கமாட்டான். பள்ளிக்கு சரியாக வந்ததே கிடையாது. அவனுக்கு நண்பர்களே கிடையாது. இந்நிலையில் நம் பள்ளியிலிருந்து ஒருவர் அவன்வீட்டிற்குத் திடீர்விஜயம் செய்து அவனைப்பற்றி தெரிந்துகொள்ள விரும்பினார். தன் வீட்டிற்குத் திடிரென அவர் வந்தவுடன் அதிர்ச்சியுற்றானாம். அவரை வாசலிலேயே நிற்கச் செய்து வீட்டைத் துப்புரவு செய்து பத்து நிமிடம் கழித்து உள்ளே அனுமதித்திருக்கிறான். அதன்பிறகுதான் தெரிந்தது அவன் தனியாக அந்த வீட்டில் வசிக்கிறான் என்று. அம்மாவும் அப்பாவும் மருத்துவர்கள். தங்களுக்குள் சண்டையிட்டு மணவிலக்கு பெற்றுவிட்டனர். இருவருடனும் வசிக்க விருப்பமில்லாது தனியாக வாழ்கிறான். அன்புசெலுத்த ஆளில்லாமல்தான் அவன் அப்படியிருக்கிறான் என உணர்ந்த அவர் அடிக்கடி அவன் வீட்டிற்குச் சென்று அவனைத் தன் குடும்பத்தில் ஒருநபர் போல் பாவித்திருக்கிறார். விளைவு கடந்த ஒரு மாதமாக தவறாது பள்ளிக்கு வருகிறான். நன்றாகவும் படிக்கிறான். இதன்மூலம் உங்களனைவ்ருக்கும் தெரிவிக்க விரும்புவது மாணவர்களைக் குறைசொல்லாது அவர்களுக்கு பாடத்தில் விருப்பமில்லாது போவதற்கான காரணத்தை அறிந்து அதைத் தீர்க்க முயற்சியுங்கள். வகுப்பறை உங்கள் வசப்படும்.

    அவர் உரையை முடித்தவுடன் அந்த நபர் யாராக இருக்கக்கூடும் என அனைவரிடமும் சலசலப்பு. அனைவரும் மனதுள் பெருமூச்சு விட்டனர்.  இவனால்தான் நூறு சதவிகித தேர்ச்சி பாதிக்கப்படும் எனப் பயந்தோம். நல்லவேளை… என்றனர்.

    எவ்வளவு நல்லமனம் படைத்தவர்களுடன் நாம் வேலைபார்க்கிறோம் பார்த்தாயா என புஷ்பா கூறியபோது நீ வேண்டுமானாலும் பார். நம் பள்ளி கவுன்சிலர்தான் அவன் வீட்டிற்குப்போயிருப்பாள். பள்ளியே நூறுசதவிகிதத் தேர்ச்சிக்குப்பயந்து இந்தவேலையைச் செய்திருக்கும் எனச் சவால்விட்டேன்.

    சிறிது நாட்களில் நான்வேலையை விட்டுவிட்டு பெங்களூருக்கு வந்துவிட்டேன். அவ்வப்போது புஷ்பாவுடன் மட்டும் உரையாடல் தொடர்ந்தது. வெகுநாட்களுக்குப்பிறகு  பள்ளி அலுவலகத்தில் வேலைபார்க்கும் தனஞ்சைதான் அவன் வீட்டிற்குச்சென்றநபர் என புஷ்பா கூறியபோது என்னால் நம்பவேமுடியவில்லை.

    புத்திசாலிங்களுக்கு மத்தவங்க சொல்லிதான் தெரியணும்னு இல்ல. ‘அறியும், பெரிதாள்பவனே பெரிது னு பழமொழியே இருக்கே. அவங்க தானே நல்லது செய்வாங்க. அப்படித்தான் என் வாழ்க்கையிலயும் ஒரு பெரிய மாற்றத்தை உண்டாக்கினார் தனஞ்சை சார். அவர் மகளையே திருமணம் செய்துக்கிட்டு உங்க எல்லாருடைய ஆசிர்வாதத்தைப் பெறுவதில எனக்கு ரொம்ப சந்தோஷம். உரையாற்றிக்கொண்டிருக்கிறான் என் முன்னாள் மாணவன் விக்னேஷ் சி. எ.

    Share
  • வொர்க் ப்ரம் ஹோம்

    வொர்க் ப்ரம் ஹோம்

    பாஸ்கர் சேஷாத்ரி

    “மே ஐ கம் இன்?”

    “வாங்க சம்பத், உட்காருங்க”

    “இட்ஸ் ஒகே. நான் நிக்கறேன் சார்:

    “பீல் அட் ஹோம்.”

    “நீங்க சொல்லும்போது, என் காதுல பீ அட் ஹோம்னு கேக்குது சார்”

    “புரியறது சம்பத்.”

    “சார், பதினெட்டு வருஷ செர்வீஸ் சார்”

    “பாக்காத செக்போஸ்ட் இல்லை. எவ்வளவு கேஸ்.”

    “…”

    “எவ்வளவு வக்காலத்து, எவ்வளவு பஞ்சாயத்து.”

    “…”

    “எதுக்கும் இப்ப அர்த்தம் இல்லை. யு ஹாவ் சென்ட் மீ அவுட்.”

    “என் கையில எதுவும் இல்லை சம்பத். அது நிர்வாகம் சம்பந்தப்பட்ட முடிவு. உங்களுக்குத் தெரியாதா? மூணு கிளைகளை மூடியாச்சு. ஒய்வு வயதைக் குறைச்சாச்சு. இருபது சதவீதம் சம்பளம் கட். எல் டி ஏ நிறுத்தியாச்சு. சிக்ஸ் டேஸ் எ வீக் இப்ப.”

    “சார். அத மாதிரி எனக்கும் குறைச்சு இருக்கலாமே சார்”

    “…”

    “ஒய் திஸ் பிங்க் ஸ்லிப்?”

    “அது என்னோட முடிவு இல்லப்பா?”

    “எதைக் கேட்டாலும் நீங்க பொறுப்பை ஏத்துக்க மாட்டீங்க சார். எனக்கு நீங்க தான் சார் பாஸ். பாக்கி நேரத்துல நீங்க ஹையரார்க்கினு சொல்வீங்க. இப்ப நீங்க தான் பதில் சொல்லணும்.”

    “சாரி சம்பத். என்கிட்ட பதில் இல்லை”

    “சார் யு ஆர் எஸ்கேப்பிங்?”

    “நோ நெவெர் . என்கிட்டே பதில் இல்லை.”

    “…”

    “எனி வே ஆல் தி பெஸ்ட்.”

    ஜி எம் கை கொடுத்த போது. அதில் சம்பத்துக்கு வலுவில்லை. பொத்தென கையை உருவிக்கொண்டார்.

    “நான் வரேன் சார்.” சர்ரெனக் கிளம்பிய சம்பத்தைக் கூப்பிட்ட ஜி எம், “என்னை நீ விஷ் பண்ணலயே?”

    “சார் வாட் டூ யு மீன்?”

    “நாளைக்கு என்னை ரிலீவ் பண்றாங்க.”

    Share
  • குறளின் கதிர்களாய்…(313)

    குறளின் கதிர்களாய்…(313)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்...(313)

    மடிமை குடிமைக்கண் தங்கிற்றன் னொன்னார்க்
    கடிமை புகுத்தி விடும்.

    – திருக்குறள் – 608 (மடியின்மை)

    புதுக் கவிதையில்...

    குடிப்பிறப்பில் உயர்ந்த அரசனிடம்
    மடியெனும் சோம்பல் விலகாமல்
    குடியிருந்தால்,
    அது அவனைக்
    கொடிய பகைவர்க்கு
    அடிமையாகும் நிலைக்கே
    ஆளாக்கிவிடும்…!

    குறும்பாவில்...

    உயர்குடிப் பிறந்த அரசனிடமும்
    சோம்பல் நிலைபெற்றால் அது அவனைப்
    பகைவர்க்கு அடிமையாக்கிவிடும்…!

    மரபுக் கவிதையில்...

    உயர்குடி தன்னில் பிறந்தேதான்
    உயர்நிலை யுடைய மன்னனிடம்
    அயர்வாம் சோம்பல் மிகவாகி
    அதுவே அவனிடம் நிலைபெற்றால்,
    உயர்வு வாழ்வில் வாராதே
    உறுதி யாகிடும் பகையதனால்
    வயவருக் கடிமை யாகும்நிலை
    வந்து சேரு மவனுக்கே…!

    லிமரைக்கூ..

    பிறந்தாலுமவன் உயர்ந்த குடி,
    போவான் மன்னன் பகைவனுக் கடிமையாய்
    நிலைபெற்றால் அவனிடம் மடி…!

    கிராமிய பாணியில்...

    வேண்டாம் வேண்டாம்
    சோம்பலு வேண்டாம்,
    வாழ்வக் கெடுக்கிற
    சோம்பலே வேண்டாம்..

    ஒசந்த குடியில பொறந்தாலும்
    ஊருல பெரிய ராசாவும்
    ஒதவாத சோம்பலுல உழுந்திட்டா,
    அவன்
    உருப்பட வழியேயில்ல
    எதிராளிக்கிட்ட அடிமயாகிற
    நெலமதான் வந்திடுமே..

    அதால
    வேண்டாம் வேண்டாம்
    சோம்பலு வேண்டாம்,
    வாழ்வக் கெடுக்கிற
    சோம்பலே வேண்டாம்…!

    Share
  • தமிழ் இணையக் கழகத்தில் அண்ணாகண்ணன் உரை

    தமிழ் இணையக் கழகத்தில் அண்ணாகண்ணன் உரை

    தமிழ் இணையக் கழகத்தின் இணையத் தமிழ்ச் சொற்பொழிவுத் தொடரில் ‘எங்கே புத்தாக்கம்?’ என்ற தலைப்பில், வல்லமை ஆசிரியர் முனைவர் அண்ணாகண்ணன் உரையாற்றுகிறார். 09.08.2020 அன்று இந்திய நேரப்படி மாலை 7 மணிக்கு Teamlink செயலி ஊடாக இந்த அமர்வு நடைபெறுகிறது. Teamlink ID 5526828256. வாய்ப்புள்ள அன்பர்கள் பங்கேற்குமாறு அழைக்கிறோம்.

     

     

    Share
  • நித்திலாவின் யோசனைகள் – 2: லேசர் கொசுவலை

    நித்திலாவின் யோசனைகள் – 2: லேசர் கொசுவலை

    அண்ணாகண்ணன்

    என் மகள் நித்திலாவின் புதிய யோசனை: லேசர் கொசுவலை. இதைப் பார்த்துவிட்டு, உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்.

    Nithila Annakannan Ideas – 2: Laser Mosquito net

     

    நித்திலாவின் முந்தைய யோசனை:

    Nithila Annakannan Ideas 1

     

    இந்த யூடியூப் அலைவரிசைக்கு இது வரை உறுப்பினர் ஆகாதவர்கள், இப்போதே இணையுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • எட்டுக் கோணல் பண்டிதன் – 2

    எட்டுக் கோணல் பண்டிதன் – 2

    தி. இரா. மீனா

    ஷ்டவக்கிரன் ஜனக மன்னர் சந்திப்பும், நெருக்கமும்

    அஷ்டவக்கிரனும், அவர் தந்தையின் குருவான உத்தாலக ஆருணியின் மகன் சுவேதகேதுவும் மிக நெருங்கிய நண்பர்கள். ஜனகமன்னரைக் காண அஷ்டவக்கிரனும், சுவேதகேதுவும் மிதிலையை நோக்கி வந்துகொண்டிருக் கும்போது வழியில் ஜனகரையும் அவரது பரிவாரங்களையும் சந்திக் கின்றனர். எதிர்ப்படும் காவலர் அங்கு கூடியுள்ள மக்களைப் பார்த்து “வழி விடுங்கள்! மன்னன் வருகிறார்… அவருக்கு வழிவிடுங்கள்…’ என்கிறார். அதைக் கேட்ட அஷ்டவக்கிரன் காவலரைக் கோபமாகப் பார்க்க, அவர் அவனைத் தள்ளிவிட முயல்கிறார். அஷ்டவக்கிரனின் தோற்றம் வித்தியாசமாகத் தெரிவதால் அவர் தன் செயலிலிருந்து பின்வாங்கி அவனைத் தள்ளி விடாமல் ’சொல்வது காதில் கேட்கவில்லையா? வழிவிடு, மன்னர் வருகிறார் என உரத்த குரலில் கூறுகிறார். அதற்கு “பார்வையற்றோர், ஊனமுடையவர்கள், பெண்கள், பாரம் சுமப்போர், வேதமறிந்தோர்.. என்ற வகைமக்களைக் கண்டால் எதிர்ப்படுபவர்கள்தான் அவர்களுக்கு வழிவிடவேண்டும் என்று உங்கள் மன்னனுக்குத் தெரிந்திருக்க வேண்டும்” என்று சத்தமாகச் சொல்கிறான். இந்தப் பேச்சைக் கேட்டு காவலர் அதிர்ந்து நிற்கிறார். ஜனகருக்கு அஷ்ட வக்கிரனின் இந்தச் சொற்கள் காதில்விழ அனைவரையும் நிற்கச் சொல்லி விட்டு உடல் குறைபாடுள்ள அவனைப் பார்க்கிறார். அவனுடைய தோற்றத்தை விட அவன் சொற்களே அவரைப் பாதிக்கின்றன ’அந்த இளைஞன் சொல்வது சரியே! அவனுக்கு நாம் வழிவிட வேண்டும்…’ அவர் கூறியதைக் கேட்டு அரச பரிவாரங்கள் அவர்களுக்கு வழிவிடுகின்றன.

    இதையடுத்து அஷ்டவக்கிரனும், சுவேதகேதுவும் ஜனகரின் அரண்மனையை அடைந்த போது, அங்குள்ள வாயில் காவலன் அவர்களைத் தடுத்து நிறுத்தி, “இது விளையாட்டு மைதானமில்லை, ஜனகரின் சபை உங்களுக்கு இங்கே என்ன வேலை? உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த அறிஞர்களும், முனி வர்களும் கூடுமிடமிது. இங்கிருந்து போய்விடுங்கள். உங்கள் வயதுச் சிறுவர் கள் என்ன செய்வார்களோ அதைச் செய்யுங்கள்” என்கிறான்.

    சுவேதகேது கோபமாக ஏதோ சொல்ல முயல அஷ்டவக்கிரன் அவனைத் தடுத்து “அப்படியென்றால் நரைத்த முடியும், நடுங்கும் முதுமையும் இருந்தால்தான் உள்ளே அனுமதிப்பேன் என்று சொல்கிறீர்களா?” என்று கேட்கி றான். காவலர் சிறிது தடுமாறிவிட்டு ’நான் சொல்லவருவது என்னவென்றால், வயதான பிறகுதான் உங்களால் வேதங்கள்பற்றி உணர முடியும், இளமையான இந்த நேரத்தில் அல்ல..’ தன் விளக்கத்தை அஷ்டவக்கிரன் புரிந்து கொள்வான் என்று காவலர் நினைக்கிறார்.

    ’நான் வேதம் கற்றவன், அதனால் உள்ளேபோக நீங்கள் அனுமதித்தாக வேண்டும்.’ என்று கட்டளையிடுவது போலப் பேசுகிறான். காவலர் மறுப்புத் தெரிவிக்க முயலும் பொழுதில் ஜனகர் அரண்மனை முற்றத்திற்கு வருகிறார். அஷ்டவக்கிரனைப் பார்த்ததும் அவருக்கு வியப்பேற்படுகிறது. அவன் சாதாரணமானவனில்லை என்றும், அவர்களின் சந்திப்பு இயல்பாக நிகழவில்லை என்றும் ஜனகர் உணர்கிறார். அவனை உள்ளே அனுமதிக்கக் கட்டளையிடுகிறார்.

    ஜனகருடன் அவைக்குள் வந்த அஷ்டவக்கிரனை கூடியுள்ளவர்கள் வினோதமாகப் பார்க்கின்றனர். அம்மாதிரி்யான தோற்றமுடைய ஒருவனை அவர்கள் தங்கள் வாழ்வில் கண்டதேயில்லை. அவர்கள்  யாரையும் பொருட்படுத்தாமல் அஷ்டவக்கிரன் நேரடியாக மன்னனிடம் சென்று “இங்கு விவாதம் ஒன்று நடந்து கொண்டிருக்கிறது என்று கேள்விப்பட்டேன், அதில் பங்கு பெற நான் விரும்புகிறேன்…” அவன் கூறியதைக் கேட்டதும் சபை முழுவதும் சிரிக்கிறது… இவ்வளவு அருவெருப்பான தோற்றம் கொண்ட வயதில் சிறிய ஒருவன் சிறந்த முனிவராகிய பண்டியை எப்படி வெல்லமுடியுமென்றும் அது அறிவற்ற செயல் என்றும் அனைவரும் கூறுகின்றனர். அவனைப் பார்த்துச் சிரித்தவர்களைப் பற்றிய சிந்தனையில்லாதவனாக நிற்கிறான்.

    அவர்கள் அனைவரும் சிரிப்பை நிறுத்தியதும், அஷ்டவக்கிரன் அவர்களைப் பார்த்து கண்களில் நீர் வரும்வரை சிரிக்கிறான். அனைவரும்  வியப்போடு அவனைப் பார்க்கின்றனர். தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு , ”இந்த அறிஞர்கள்தான் என்னுடன் சண்டையிட்டு விவாதிக்கப் போகிறவர்களா? ஜனகரின் சபை பெரும் பண்டிதர்களால் நிரம்பியிருக்குமென்று நினைத்திருந்தேன், ஆனால் நான் இங்கு பார்ப்பது சக்கிலியர்களைத்தான். இது உங்கள் சபையில்லையா? அல்லது நான்தான் தவறான இடத்திற்கு வந்துவிட்டேனா?’ அஷ்ட வக்கிரன் அமைதியாகப் பேசுகிறான்.

    எப்படி இதை எதிர்கொள்வது என்று தெரியாமல் நின்ற ஜனகர் “நீ பேசுவதன் பொருளென்ன?சிறந்த பண்டிதர்களை நீ ஏன் அப்படிக் குறிப்பிடவேண்டும்?” எனக் கேட்கிறார். ”காலணி தைப்பவர்கள் தோலைப் பார்த்த அளவில் அது கொண்டு காலணியைத் தயாரிக்க முடியுமா இல்லையா என்று முடிவு செய்து விடுவார்கள்.. என்னால் என்ன செய்ய இயலுமென்பது உங்கள் மனிதர்களுக்குத் தெரியாது… என் தோற்றத்தைப் பார்த்துவிட்டு என்னால் விவாதத்தில் போட்டியிட முடியாது என்று முடிவு செய்து விட்டனர். அம்மாதிரி யானவர்களை உங்கள் ஆலோசகர்களாக வைத்திருக்கிறீர்கள்..’ அஷ்டவக்கிரன் சொல்ல அவையிலுள்ளவர்கள் தலை குனிகின்றனர்.

    “தன்னை எதிர்கொள்வதற்கு முன்பே பல முனிவர்களைக் கொன்றவன் பண்டி. அதனால் பண்டியோடு சவால் விட்டு விவாதத்திற்கு வருபவர்களின் புலமையை முதலில் நான் சோதித்தறிவேன். எனக்கு உடன்பாடு என்றால் மட்டுமே அவர்களை அவனிடம் அனுப்புவேன்“ என்று ஜனகர் கூறுகிறார். தன்னை அவர் சோதிக்கலாமென்கிறான் அஷ்டவக்கிரன். அதையடுத்து உட்பொருள் கொண்ட பலகேள்விகளை ஜனகர் அவனிடம் கேட்கிறார். அறி வார்ந்த கேள்விகளும், அதற்கு மிக எளிமையாகக் கிடைக்கும்  பதில்களும் அவையினரை வியப்படையச் செய்கின்றன. ஜனகரே வாயடைத்துப் போகிறார்.

    மறுநாள் அஷ்டவக்கிரன் — பண்டி இடையில் விவாதம் நடக்கிறது. அனை வரும் மெய்மறந்து கவனிக்கின்றனர். ஜனகரின் கேள்விகளுக்கு அஷ்ட வக்கிரன் அளித்த பதில்களை அவையினர் கேட்டிருந்ததால், இன்று பண்டியின் வெற்றி முகம் மாறலாம் என்று நினைக்கின்றனர். விவாதம் மிகுந்த அளவு புதிரான கருத்துக்களைக் கொண்டதாக இருக்க, அறிவு நிறைந்த அஷ்டவக்கிரனிடம் பண்டி தோற்றுப் போகிறான். ஜனகர் உட்பட அனைவரும் மகிழ்ச்சியின் எல்லையிலிருக்க அஷ்டவக்கிரன் எவ்வித உணர்வும் வெளிப்படுத்தாதவனாக இருக்கிறான்.

    ’பண்டியின் விதிப்படி, அவர் விவாதத்தில் தோற்றுப்போனால், போட்டியில் வெற்றி பெற்றவர் எதைக் கேட்டாலும் அவர் தரவேண்டும்…’ என மன்னன் சொல்ல, அஷ்டவக்கிரன் ’பண்டி என்ன விரும்பினாரோ அதுவே எனக்கும் வேண்டும். என் தந்தை உட்பட மற்ற முனிவர்கள் மூழ்கடிக்கப்பட்ட ஏரியில் பண்டி மூழ்கடிக்கப் படவேண்டும்.. இதுதான் என் விருப்பம்’ என்கிறான்.

    ஜனகர் எதுவும் சொல்லவில்ல, சொல்வதற்கு எதுவுமில்லை. அவையினர் அஷ்டவக்கிரனின் முடிவுகேட்டு மகிழ்கின்றனர். அப்போது பண்டி மன்னரிடம் ’அஷ்டவக்கிரனின் விருப்பம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பு நான் என்னைப் பற்றிச் சொல்ல விரும்புகிறேன்.!” என்கிறான்.

    “நான் எங்கிருந்து வந்தவன் அல்லது இந்த விவாதங்கள் ஏன் அரங்கேறின என்றெல்லாம் உங்களுக்குத் தெரியாது. நான் உண்மையைக் கூறப்போகிறேன். நான் கடற் கடவுள் வருணனின் மகன். என் தந்தை கடலினடியில் ஒரு வேள்வி நடத்த நினைத்து, அதற்கு வேதங்களை நன்கறிந்த பண்டிதர்கள் வர வேண்டுமென்று விரும்பினார். அவர் விருப்பத்தை நிறைவேற்றவே நான் இங்கு வந்தேன். விவாதத்தில் பங்கு கொண்டு என்னிடம் தோற்றவர்களை நான் நீரில் மூழ்கடித்து கடலிற்கடியில் தந்தையிடம் அனுப்பிவிடுவேன். அங்கு அவர்கள் கூடி வேள்வி நடத்துவார்கள் “.

    முனிவர்கள் வேள்வி நடத்துவதற்காக மட்டும் அழைத்துச் செல்லப்பட்டனர் என்று பண்டி கூறியது… அவ்வாறெனில்… அஷ்டவக்கிரனின் இதயம் படபடக்கிறது. ’மன்னனே! நீரில் மூழ்கடிக்கப்பட்ட முனிவர்கள், அறிஞர்கள் யாருமே இறக்கவில்லை. என் தந்தை நடத்திய வேள்வி நேற்றுத்தான் முடிவடைந்தது. நாம் பேசிக் கொண்டிருக்கிற இந்த நேரத்தில் அவர்கள் கடலிலிருந்து வெளியே வந்து கொண்டிருக்கின்றனர்..’ பண்டி பேசி முடிக்கிறான்.

    மன்னன், அஷ்டவக்கிரன், அவையினர் அனைவரும் பண்டியின் பேச்சைக் கேட்டு அதிர்ந்து போகின்றனர். அனைவரும் ஏரிப்பகுதிக்குச் விரைந்த போது நீரிலிருந்து முனிவர்களும், அறிஞர்களும் ஒவ்வொருவராக வெளியே வந்து கொண்டிருப்பதைக் காண்கின்றனர்.

    [தொடரும்]

    Share
  • பழகத் தெரிய வேணும் – 28

    பழகத் தெரிய வேணும் – 28

    நிர்மலா ராகவன்

    (எதற்காகப் படிப்பது?)

    பரீட்சைப் பயத்தை எதிர்கொள்ள வேண்டுமா?

    அதற்கான வழி இதோ!

    என் பதின்ம வயது மாணவிகளுக்குச் சொல்வேன், “பிராக்டிகல் பரீட்சைக்கு முதல்நாள் ஏதாவது காதல் புதினம் படியுங்கள். அம்மா திட்டினால், ‘டீச்சர்தான் சொன்னார்கள்,’ என்று விறைப்பாகச் சொல்லிவிடுங்கள்!”

    மாணவிகள் சிரிப்பார்கள், ‘ஏதடா, டீச்சரே அம்மாவை எதிர்க்கச் சொல்லிக்கொடுக்கிறார்களே!’ என்று.

    படிப்பது என்றால், பள்ளிக்கூடப் பாடப்புத்தகங்களை மட்டும் குறிப்பதல்ல. அது புரியாது, பாலர் பள்ளி படிக்கும் நாளிலிருந்தே குழந்தைகளை, ‘வீட்டுப்பாடம் இருக்கா?’ என்று   விரட்டிக்கொண்டே இருந்தால், அவர்களுக்குச் சலிப்பு ஏற்படாமல் போகுமா?

    அம்மா ஓயாமல், ‘படி, படி’ என்று தொணதொணக்கிறாள். இதில் மேல்படிப்பு வேறா! வேண்டாம்பா,’ என்று வேண்டுமென்றே, பரீட்சைகளில் தவறான பதில்களை அளித்த மாணவ, மாணவிகளை அறிவேன்.

    ஞாபகசக்தி பெருக

    படித்த கதையையே திரும்பத் திரும்பப் படிப்பது சிறு குழந்தைகளின் ஞாபகசக்தியை வளர்க்கும்.

    தானே படிக்கும் வயது வரும்வரை வீட்டிலுள்ளவர்கள்தாம் அவர்களுக்குப் படித்துக்காட்ட வேண்டும். இப்பழக்கத்தால் உறவிலும் நெருக்கம் ஏற்படுகிறது, மொழித்திறனும் மேம்படும்.

    மிகச் சிறு வயதிலேயே கதைப் புத்தகங்கள் படிக்கும் ஆசையைத் தூண்டிவிட்டால், புத்தகம் ஒன்றைக் கையில் எடுத்தாலே ஆனந்தம் பெருகும்.

    சிறுவர்கள் கதைகளில் ராட்சதன், பூதம் எல்லாரும் சர்வசாதாரணமாக நடமாடுவார்கள்.

    அக்கதைகளைப் படித்துச் சொல்லும்போது, அவர்கள் கண்கள் பயத்தில் விரிந்தாலும், இறுதியில், தீயவர்கள் அழிவார்கள் என்று அறியும்போது ஏற்படும் நிம்மதியால் மகிழ்ச்சி பெருகும். தைரியம் பெருகும்.

    செத்துப்போன சிங்கம்

    என் பேரனுக்கு மூன்று வயதானபோது, ‘எந்தக் கதை வேணும்?’ என்றால், ‘சிங்கம்!’ என்று கொக்கரிப்பான்.

    முயலானது குட்டியாக இருந்தாலும், அச்சத்தை ஊட்டிய சிங்கத்தை ஏமாற்றிய பஞ்சதந்திரக் கதைதான் அவனுக்குப் பிடித்தது. எத்தனை முறை கேட்டாலும் அலுக்கவில்லை.

    கதையின் முடிவில், “சிங்கம் தண்ணிக்குள்ளே இன்னொரு சிங்கம் இருக்கிறதைப் பாத்து, கோபமா உள்ளே குதிச்சுது. அப்புறம் என்ன ஆச்சு?” என்று கேட்பேன்.

    உடலை நிமிர்த்து, “சத் போச்!” என்பான், வீரமாக.

    படங்களே இல்லையே!

    பெரும்பாலான குழந்தைகளுக்குப் படங்கள் போட்டிருந்தால்தான் புத்தகங்களைப் படிக்கப் பிடிக்கும். ஏனெனில், அதுதான் எழுத்துக்களைவிட எளிதில் புரியும். அதனால், காமிக் புத்தகங்களை மட்டும்தான் விரும்பிப் படிப்பார்கள். ‘படித்தால் சரி!’ என்று விடவேண்டியதுதான்.

    ஆனால், எந்த வயதிலும் படங்கள் நிறைந்த புத்தகங்கள்தாம் வேண்டும் என்றால் நடக்கிற காரியமா?

    பதின்மூன்று வயதான என் மாணவிகள் ஆரம்பக்கல்வியைச் சீனப்பள்ளியில் படித்திருந்தார்கள். இடைநிலைப்பள்ளியிலோ, விஞ்ஞானப்பாடத்தை மலாய் மொழியில் படிக்கவேண்டும்.

    வருத்தத்துடன், “எங்கள் புத்தகத்தில் படங்களே இல்லையே!” என்று புகார் செய்தார்கள் என்னிடம்!

    கண்காணிப்பு

    குழந்தைகள் பெரியவர்களாகும்வரை எத்தகைய புத்தகங்களைப் படிக்கிறார்கள் என்பதைக் கண்காணிக்க வேண்டுவது அவசியம்.

    கதை

    பத்து வயதாகியும், இரவில் தான் கழிப்பறைக்குச் செல்லும்போது யாராவது உடன்வரவேண்டும் என்று கெஞ்சுவான் பிரபு.

    இத்தனைக்கும், வீட்டுக்குள்தான் இருக்கும் அந்த இடம். விளக்குகளும் உண்டு.

    பின் எதற்காகப் பயம்?

    “நான் சின்ன வயசிலே நிறைய பயங்கரமான கதை படிப்பேன். அதனால ராத்திரியானா பயம்!” என்றான், என் கேள்விக்குப் பதிலாக.

    சிறு வயதில் அந்தந்த பாத்திரங்களுடன் நாம் ஒன்றிவிடுவதால், அவர்கள் அனுபவிக்கும் உணர்வுகள் நம்மையும் தொற்றிவிடும்.

    கல்லூரி நாட்களில் நான் ஆங்கிலப் புத்தகங்களை விரும்பிப் படிக்கும்போது, அம்மா, ‘இப்போ படிச்சியே, அதோட கதை என்ன?’ என்று தவறாது கேட்பாள். எதற்காகக் கேட்டாள் என்பது அப்போது எனக்குப் புரியவில்லை. சுவாரசியமாக விவரிப்பேன்.

    அக்காலத்தில் ஒரு பெண் தடுக்கி விழும்போது அவளைப் பிடித்தாலோ, அல்லது அவள் நழுவவிட்ட புத்தகங்களை எடுத்துக் கொடுத்தாலோதான் காதல் வரும் என்பதுபோல் தமிழ்ப் புத்தகங்களிலும், திரைப்படங்களிலும் காணப்படும்.

    ‘நீ படிக்கிறதிலே ஒழுங்கா, கல்யாணம் பண்ணிக்கிறமாதிரி கதையே கிடையாதா!’ என்று அம்மா அங்கலாய்த்தபோது சிரிப்பாக இருந்தது.

    இளம்வயதினருக்கான ஆங்கிலப் புதினங்களிலோ, கள்ளக்காதல்தான் அதிகமாக இருந்தது.

    எதைப் படிப்பது?

    சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படிப்பது, ‘நானும் பிறர் மதிக்க வாழ்வேன்,’ என்ற ஊக்கத்தை அளிக்கவல்லது.

    சில சமயம், ‘எனக்குக்கூட அம்மாதிரியான திறமைகள் உண்டே!’ என்று தோன்றிப்போகும். இல்லாவிட்டால், அவைகளை வளர்த்துக்கொள்ளும் ஆர்வம் பிறக்கும்.

    படிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்குப் பிறரைப் புரிந்துகொள்வது எளிது. ‘அந்தப் புத்தகத்தில் ஒருவன் இப்படித்தானே இருந்தான்!’ என்று, தீயவர்களைக் கண்டு அச்சம் ஏற்படும். தன்னைத்தானே புரிந்துகொள்ளவும் சிலருக்கு முடிகிறது.

    ஓயாமல் காதல் நவீனங்களை மட்டும் படிக்கும் பழக்கம்கொண்ட பெண்கள் கதாநாயகியுடன் ஒன்றிவிடுவார்கள், ‘நம் வாழ்க்கை அப்படி அமையவில்லையே!’ என்ற ஏமாற்றம்தான் பிற்காலத்தில் எழும்.

    நமக்குப் பிடிக்கிறதோ, இல்லையோ, ‘பிறர் படிக்கிறார்களே!’ என்று அவர்கள் படிக்கும் புத்தகங்களையே படிக்க ஆரம்பித்தால், நமக்கும் அவர்களுக்கும் வித்தியாசம் இருக்காது. நாம் ஒவ்வொருவரும் தனிப்பிறவி என்றால், எதற்காகப் பிறரைப்போல் இருக்கவேண்டும்?

    நம்மை மாற்றும் சக்திகொண்டவை வார்த்தைகள்.

    பதினைந்து வயதிலிருந்தே நான் தேடிப் படித்தது உளவியலுக்கான கல்லூரி பாடப் புத்தகங்களை.

    ‘ஓயாமல் இந்த மாதிரி புத்தகங்களையெல்லாம் படிக்காதே. பைத்தியம் பிடித்துவிடும்,’ என்று அம்மா கவலையோடு கெஞ்சுவாள்.

    (தெரியாத்தனமாக விஞ்ஞானத்திலும் கணக்கிலும் அதிக மதிப்பெண்கள் பெற்றுவிட்டதால், அவைகளைக் கட்டாயமாகப் படிக்க நேரிட்டது).

    எழுத்தாளர்களுக்கு உளவியல் தெரிந்திருப்பது அவசியம்.

    கதாபாத்திரங்களின் உணர்வு புரிந்தால்தானே பாத்திரப்படைப்பில் நம்பகத்தன்மை இருக்கும்?

    முதியோர்களுக்கு

    படிக்கும் பழக்கம் முதியோர்களின் மூளைக்குப் பயிற்சி கொடுக்கவல்லது. தன்னையே மறக்கும் நிலை, அதாவது, அல்சீமர் நோய் அணுகாது.

    ஒரே இடத்தில் ஒரு புத்தகத்தோடு அமர்ந்தால், பலரோடு பல நாடுகளுக்கும், எக்காலத்திற்கும் பிரயாணம் செய்ய முடியும். கற்பனையில்தான்!

    அதிகம் அலைய முடியாத நிலையில், வாழ்வில் உற்சாகம் திரும்பும்.

    ‘இனி படித்து என்ன கிழிக்கப்போகிறேன்’ என்று அலுத்து விட்டுவிட்டால், வாழ்வில் சலிப்புத்தட்டாமல் என்ன ஆகும்?

    Share
  • அக இலக்கியச் சிறுபாத்திரங்கள்- 8 (கிளை)

    அக இலக்கியச் சிறுபாத்திரங்கள்- 8 (கிளை)

    ச. கண்மணி கணேசன்
    முதல்வர் & தமிழ்த்துறைத் தலைவர் (ப.நி.),
    ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரி, சிவகாசி

    முன்னுரை

    அஃறிணைப் பொருட்களுள்; அணிகலனில் கோத்த மணிகள், மேகலையின் வடங்கள், மழை தரும் மேகங்கள், வரகுக்காட்டின் களை, பல்கிப்பெருகிய நாணல் கிழங்கு, கரும்பு, மூங்கில், பூத்துக்காய்த்துப் பசுந்துளிர் போர்த்துக் கவர்த்த மரங்கள்; ஆகியவற்றின் ஒவ்வொரு தொகுதியும் கிளை என்று தொகை இலக்கியத்தில் பேசப்படுகிறது.

    யானை, பன்றி, கரடி, மான், குரங்கு  முதலிய விலங்குகள்; கிளி, குருவி, குருகு, பருந்து, காகம், மனைக்கோழி, கம்புட்கோழி, காட்டுக் கோழி முதலிய பிற பறவைக் கூட்டங்கள்; கரையான், பாம்பு, பல்லி முதலிய ஊர்வன; தும்பி, தேனீ, வண்டு, குளவி முதலிய பூச்சிகள்; சங்கு, இறால், நண்டு, வாளைமீன், பிற மீன்கள், தவளை முதலிய நீந்துவன அனைத்தும் கிளை என்னும் சுற்றத்தோடு கூடி வாழ்வதையும்; வளர்வதையும்; தேடுவதையும்; பகிர்வதையும்  தொகை நூல்கள் கிட்டத்தட்ட அறுபதுக்கும் மேற்பட்ட பாடல்களில் குறிப்பிடுகின்றன.

    மக்கள் கூடி வாழ்வதைப் புனையும் அகஇலக்கியத்தில் ‘கிளை’ எனும் சொல்லுக்குச் ‘சுற்றம்’ என்னும் பொருள் எல்லா இடங்களிலும் துல்லியமாகப் பொருந்துகிறதா  என்பது கேள்விக்குரியது. ஏனெனில் சொத்துப் பங்கீடும், பெண்களுக்கே உரிய புகுந்தவீடும் உயர்திணையாகிய மக்களுக்கு மட்டுமே உள்ளன.

    புற இலக்கியத்தில் கிளை

    ‘கிளை’ எனும் சொல் பொதுவாக  சுற்றம் என்று பொருள்படினும்; அது  பங்காளிகளை மட்டும் குறிக்குமிடங்களும் உள.

    புறப்பாடல்களில் இடம்பெறும் ‘கிளை’ பெரிதும் கூத்தர், பாணர், பொருநர் ஆகிய இரவலரின் பெருஞ்சுற்றத்தைச் சுட்டுகின்றன (மதுரைக்.- அடி- 751; பதிற்.- 32, 42, 49; புறம்.- 136, 144, 163, 173, 253, 254, 378, 388). பேகனின் மனைவியிடம் பரணர்;

    “கிளையை மன் எம் கேள் வெய்யோற்கு” (புறம்.- 144)

    என்று கேட்கும் போதும்,

    “யாமவன் கிளைஞரேம் அல்லேம்” (மேற்.)

     என்று அவள் பதிலிறுக்கும் போதும் ‘கிளை’ சுற்றம் என்றே பொருள்படுகிறது.

    போர்க்களத்தில் தம் கணவர்  இறந்துபட அவனுடலைத் தூக்கி மடியில் வைத்து அரற்றும் மனைவியரின் ஒப்பாரியில்; (புறம்.- 253& 254) ‘கிளை’ பங்காளிகளைக் குறிக்கிறது.

    மலையமான் திருமுடிக்காரியை;

    “கிளையொடும் பொலிக” (புறம்.- 126)

    என்று புலவர் வாழ்த்தும்போது ‘கிளை’ அவனது  பங்காளிகளையே குறிக்கிறது.

    நெருக்கமான குடும்ப உறவு பற்றிய குறிப்பில் ‘கிளை’க்கு உரிய பொருள் நுட்பம் புலனாகிறது.

    “இருங்கிளை இனனொக்கல்” (பட்டி.- 61)

    எனும் பாடலடி கிளை பற்றிய வரையறையை உரைக்கிறது. அதாவது கிளை ஒரே இனத்தவரை மட்டும் உள்ளடக்கியதாகும். இதைப் பண்டைத்  தமிழகத்தில் ஜாதி இருந்தமைக்கு ஆதாரமாகும் அரிய குறிப்பாகக் கொள்ளலாம்.

    ஆண்முதன்மைச் சமுதாயத்தில் ஒரு குடியின் கிளை அக்குடும்பத்து ஆண்மக்கள் வாயிலாகவே பல்கிப் பெருகும் என்ற கொள்கை நிலவியது; நிலவுகிறது. இன்றளவும் பெண்கள் தாய் வீட்டிலிருந்து புகுந்த வீடு சென்று வாழ்வதே நடைமுறையாக உள்ளது. கோயில் வழிபாடுகள் தொடர்பான உரிமை, தகுதி ஆகிய நடைமுறையிலும், வாழ்வியல் சடங்கு சம்பிரதாயங்களிலும்,  ஈமச்சடங்கிலும் இக்கொள்கை பேரிடம் வகிப்பதைக் காண்கிறோம்.

    மோர் விற்ற பொருளை வைத்து ஆய்மகள் தன் கிளையோடு உணவு அருந்தினாள் என்பது பெரும்பாணாற்றுப்படைச் செய்தி (அடி.- 163). இங்கு பங்காளிகளே கிளையாவர் என்னும் நுட்பம் பொதிந்துள்ளது. ஆதலால் தான் அவளுடன் சேர்ந்து உண்கின்றனர்.

    மகாபாரதக் கதையை விரிவாகப் பேசும்;

    “வயக்குறு மண்டிலம் வடமொழிப் பெயர் பெற்ற
    முகத்தவன் மக்களுள் முதியவன் புணர்ப்பினால்
    ஐவர் என்று உலகேத்தும் அரசர்கள் அகத்தரா
    கைபுனை அரக்கு இல்லைக் கதழெரி சூழ்ந்தாங்கு
    களிதிகழ் கடாஅத்த  கடுங்களிறு அகத்தவா
    முளிகழை உயர்மலை முற்றிய முழங்கழல்
    ஒளிஉரு அரக்கு இல்லை வளிமகன் உடைத்துத்தன்
    உள்ளத்துக் கிளைகளோடு உயப் போகுவான் போல” (கலித்.- 25)

    என்ற பாடலில் திருதராஷ்டிரனின் மூத்த மகனாகிய துரியோதனன் சூழ்ச்சியில்  இருந்து பீமன் தன் உடன்பிறப்புக்களாகிய பாண்டவர்களைக் காப்பாற்றிய புராணச் செய்தி உள்ளது. தன் மனதிற்கினிய சகோதரர்களைக்; காட்டுத்தீயில் இருந்து காப்பாற்றும் யானை போல அவன் அரக்கு் மாளிகையிலிருந்து காப்பாற்றிய செய்கை விளக்கம் பெறுகிறது. பங்காளிகளாகிய பாண்டவர் கிளை என்று குறிப்பிடப்படுவது நம் கொள்கையை வலியுறுத்தும் இன்னொரு சான்றாக அமைகிறது.

    இன்றும் சில சமூகங்களில் ‘கிளை’ என்னும் சொல்லால் பங்காளிகளைக் குறிக்கின்றனர். (எ.டு.) கொண்டையங்கோட்டை மறவர்.

    இக்கூட்டத்தில் இளையவரோடு முதியவரும் அடங்குவர் (பெரும்.- 258).

    தமிழர் வாழ்வியலில் கிளை பெறுமிடம் கிளையோடு வாழ்வதே போற்றுதற்கு உரியதென்ற கொள்கை நிலவியது.

    “அன்பெனப்படுவது தன் கிளை செறாமை” (கலித்.- 133)

    என அன்பிற்குச் சொல்லப்படும் வரையறை கிளை போற்றுவதன் மேன்மையை வலியுறுத்தும். இக்கொள்கைக்கு மாறுபட வாழ்வதை;

    “கிளை அழிய வாழ்பவன் ஆக்கம் போல் புல்லென்று” (கலித்.- 34)

    என இழிவாகப் பேசுகிறது செவ்விலக்கியம். உறவினர் கேட்டை நீக்கித் தாங்குவதும், பங்காளிகளை ஊட்டுவதும் இல்வாழ்வான் கடமை என்பதை;

    “கேள் கேடு ஊன்றவும் கிளைஞர் ஆரவும்” (அகம்.- 93)

    வாழும் வாழ்க்கையே பெருமையுடையது எனப் போற்றுகிறது பண்டை இலக்கியம்.

    பின்புலத்தில் கிளையின் பயன்பாடு 

    அகப்பாடல்களில் கிளை பேசுவதும் இல்லை; பேசியதாகக் கூறப்படுவதும் இல்லை. பாடலின் பின்புல விளக்கத்தில் ஆங்காங்கு கிளை இடம்பெறுகிறது.

    தொழிலில் ஈடுபடும் போதும், உண்டு களிக்கும் போதும், வழிபாட்டின் போதும் கிளையுடன் சேர்ந்து வினையாற்றுவது ஈராயிரம் ஆண்டுப் பழமை வாய்ந்த தமிழர் நாகரிகமாகக் காணப்படுகிறது. பரதவர், குறவர், வேட்டுவர், உழவர் எனப் பல பிரிவினரும் கிளையுடன் சேர்ந்து தொழிலில் ஈடுபடக் காண்கிறோம்.

    பரதவர் மீன்வேட்டைக்குக் கிளையுடன் அவரவர் திமிலில் செல்வர் (நற்.- 331; அகம்.- 30) அது மட்டுமின்றி கோட்சுறாவால் கிழிந்த வலையைச் சீராக்கவும் கிளையுடன் கூடி முயன்றனர் (நற்.- 207).

    குறச்சிறார் கிளையுடன் தினைக்கொல்லையில் விளையாடிப் பறவை ஓட்டுகின்றனர் (நற்.- 44)

    ஆறலைக்கள்வர் கிளையுடன் கொள்ளையில் ஈடுபடுகின்றனர் (அகம்.- 193)

    உழவர் கருவுற்ற வாளைமீன் கூட்டம் போல விலாப்புடைக்கத் தம் கிளையோடு சேர்ந்து உண்டனர் (பரி.- 7)

    கிளையுடன் சேர்ந்து மது அருந்துவது பரக்கக் காணப்படுகிறது. குன்றக் குறவன் கிளையுடன் சேர்ந்து மது அருந்துவது பல பாடல்களில் பதிவாகி உள்ளது (நற்.- 341; திருமுரு.- அடி- 196; அகம்.- 172, 348 ) பரதவனும் கிளையோடு தேறல் மாந்துகிறான் (நற். – 388) வேட்டுவன் தான் எய்த அம்பிலிருந்து ஆமான் உயிர்தப்பி விட்டதால் அணங்குற்றது எனக் கிளையோடு சேர்ந்து மலை மேலுள்ள கடவுளுக்கு மழை வேண்டி வழிபாடு நிகழ்த்தினான் (நற்.- 165)

    அகஒழுக்கச் சித்தரிப்பில் கிளை

    கிளை  நான்கு பாடல்களில் மட்டுமே சிறுபாத்திரத் தகுதியைப் பெறுகிறது.

    மூங்கில் புதர் போலப் பல பங்காளிகளை உடையவன் தந்தை. அனைவரும் போற்றும் படியாக அவனது வாழ்க்கை முறையும் அமைந்து இருந்தது. ஆனால் தலைவி தற்போது தலைவனுடன் போய்த் தீரவேண்டிய கட்டாயமான சூழல்.  தன் களவொழுக்கம் பற்றித் தோழியிடம் வருந்தும் தலைவி;

    “முளை அணி மூங்கிலின் கிளையொடு பொலிந்த”  (அகம்.- 268)

    தந்தைக்கு அவப்பெயர் வரும்படியாகத் தலைவனோடு தான் கொண்ட நட்பின் விளைவு துன்புறுத்தி விட்டதே எனப் புலம்புகிறாள். இங்கு இயல்பாக ஒரு தந்தைக்கும் மகளுக்கும் இடையில் ஏற்படும் பாசப்பிணைப்பு வெளிப்படுகிறது. பங்காளிகளின் முன்னர் தன் தந்தை தலைகுனிய நேரிடுவதை எண்ணி அவள் மனம் வெதும்புவது நம் மனதையும் நோகச் செய்கிறது.

    பங்காளிகளுள் ஒருவர்க்கு ஏற்படும் அவமானம் அனைவர்க்கும் பொது என்ற நிலை அன்றைய தமிழ்ச் சமுதாயத்தில் இருந்தது. களவு முற்றிய நிலையில் தலைவனை வரைவிற்குத் தூண்டும் தோழி; தலைவியின் தந்தை மட்டுமின்றிக் கிளைக்கும் அவலநிலை ஏற்படாதபடித் தலைவன் ஒத்துக் கொண்டமை பற்றி எடுத்துரைத்து மனம் ஆறுகிறாள்.

    “கிளை உடை மாந்தர்க்குப் புணையுமாம் இவ்வென” (குறுந்.- 247)

    பெண்கேட்டு வரத் தலைவன் சம்மதித்ததால் விளையும் நன்மையை எடுத்து உரைக்கிறாள். தலைவன் ஒத்துக் கொள்ளாது விலகிவிட்டால் அது தலைவியின் தந்தைக்கு மட்டுமின்றி; அத்தனை பங்காளிகளுக்கும் அவப்பெயராகி விடும். எனவே அந்த இளிவரலினின்று மீள உறுதுணையாகும் தெப்பம் போலத் தலைவன் சம்மதம் கிடைத்து விட்டது எனத் தோழியும் தலைவியும் அமைதியுறுகின்றனர்.

    திருமணத்திற்கு முன்னர் தந்தையின் கிளையே பெண்ணுக்கும் சுற்றமாகும். மோர் விற்று வரும் ஆயர் குலப் பெண்ணின் இளமையும் அழகும்; அவள் மேல் ஆர்வம் மீதூரும் தலைவனையும் மருட்டுகிறது; அவளிடம் மோர் வாங்கும் பிற  பெண்களையும் மருட்டுகிறது. அவரவர் கணவர் கண்ணில் இவள் பட்டுவிட்டால் ஏற்படும் ஏதத்தை எண்ணி;

    “எழுநின் கிளையொடும் போகென்று” (கலித்.- 109)

    விரைந்து அனுப்பிவிட்டனர். வாசலை அடைத்துத் தம் கணவர் அவள் பின்னே போகாமல் பாதுகாத்தனர். ஆய்ச்சி தன் கிளையோடு சேர்ந்து சென்றால் தமது கணவர் அவளைப் பின்தொடர மாட்டார் என்பது குறிப்புப்பொருள் ஆகும்.

    கணவனின் கிளையே  மனைவிக்கும் கிளையாக அமைவது  ஆண்முதன்மைச் சமுதாய நெறி ஆகும்.

    “கிளையொடும் காக்க தன் கொழுநன் மார்பே” (குறுந்.- 80)

    என்ற ஔவையாரின் பாடலடியில் மனைவி பங்காளிகள் துணையுடன் தன் கணவனைப் பாதுகாத்துக் கொள்ளட்டும் என்கின்ற பொருளே கிடைக்கிறது.

    தொகுத்தோர் இப்பாடலுக்கு எழுதிய அடிக்குறிப்பில் இது பரத்தை கூற்று என்கின்றனர். ஆயினும் தன்னுணர்ச்சிப் பாடல்களைப் பாடிய ஔவையை இது இழிவுபடுத்துவதாக அமைகிறது என்பது என் கருத்தாகும். அதியனால் புரக்கப்பட்ட ஔவைக்கு அந்த  அரண்மனையில் நிலவிய அசூயையான சூழலை இப்பாட்டு காட்டுகிறது. புனல்விளையாட்டிற்குத் தன் கலைக்குழுவினரோடு கிளம்பும் ஔவை; ‘தலைவி (அதியனின் மனைவி) தன் கணவனைப் (அதியனை) பங்காளிகளோடு சேர்ந்து காத்துக் கொள்ளட்டும்; நாம் புனலாடச் செல்வோம்’ என்று சொல்வதாகப் பொருள் கொள்வதில் இடர்பாடு எதுவும் ஏற்படவில்லை.

    முடிவுரை

    உயிரற்ற பொருட்களின் கிளை தொகுதி எனும் பொருள்பட்டது. அஃறிணை உயிர்களின் கிளை கூட்டம் எனும் பொருள்பட்டது. மக்களின் கிளை சுற்றம் என்னும் பொதுப்பொருளையும், இடம் நோக்கிப் பங்காளிகள் என்னும் சிறப்புப் பொருளையும் பெற்றது. மக்களின் கிளையில் இளையவரும் முதியவரும் அடங்குவர். கிளையோடு வாழ்வதே போற்றுதற்கு உரியதென்ற கொள்கை நிலவியது. அகப்பாடல்களில் கிளை பேசுவதும் இல்லை; பேசியதாகக் கூறப்படுவதும் இல்லை. தொழிலில் ஈடுபடும் போதும், உண்டு களிக்கும் போதும், வழிபாட்டின் போதும் கிளையுடன் சேர்ந்து வினையாற்றுவது ஈராயிரம் ஆண்டுப் பழமை வாய்ந்த தமிழர் நாகரிகமாகும். பங்காளிகளுள் ஒருவர்க்கு ஏற்படும் அவமானம் அனைவர்க்கும் பொது என்ற நிலை அன்றைய தமிழ்ச் சமுதாயத்தில் இருந்தது. திருமணத்திற்கு முன்னர் தந்தையின் கிளையே பெண்ணுக்கும் சுற்றமாகும். கணவனின் கிளையே  மனைவிக்கும் கிளையாக அமைவது  ஆண்முதன்மைச் சமுதாய நெறி ஆகும். கிளை என்னும் சிறுபாத்திரம் அன்றைய சமுதாயக் கொள்கையைத் தெளிவுறுத்துகிறது.

    Share