கட்டுரைகள்

சர்வோதய இலக்கியப் பண்ணை – புத்தகங்களின் போதிமரம்

முனைவர் ம. இராமச்சந்திரன்
உதவிப் பேராசிரியர்,
ஸ்ரீவித்யாமந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி), 
ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி மாவட்டம்.
ramachandran.ta@gmail.com

ஒருகோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது “ஒரு நூலகம் கட்டுவேன்” என்று கூறினார் மகாத்மா காந்தி. இதனைக் கூறிய இளங்கலைப் பேராசிரியர், எனது வாழ்க்கையின் போக்கையே மாற்றப் போகிறோம் என்றெல்லாம் எண்ணியதாகத் தெரியவில்லை. ஆனால் அதற்குப் பின் நூலகங்களைத் தேடி அலையத் தொடங்கினேன். மதுரை தியாகராசர் கல்லூரி நூலகம், முதலில் எனது அறிவுத் தேடலுக்குத் தீனி போடத் தொடங்கியது. நூலகரின் அன்பும் நூல் குறித்த அவரின் அறிவும் அனுபவமும் என்னை வியப்பில் ஆழ்த்தியது.

கல்லூரி நாட்கள் தவிர விடுமுறை நாட்களில் அமைதியாக இருக்க முடியவில்லை. எனது (செல்லூர்)பகுதி வட்டார நூலகத்திற்குச் சென்று வரும் சூழலில் மதுரை மாவட்ட நூலக அறிமுகம் கிடைத்தது. இவ்வாறு நூல்களின் வாழ்விடங்கள், எனது இருப்பிடங்களாக மாறின. புதிய நண்பர்கள் அறிமுகம் ஆனார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கொள்கைகளை அறிமுகம் செய்தார்கள். இவ்வாறு தான் காந்தியச் சிந்தனையும் சர்வோதய இலக்கியப் பண்ணையும் என்னை வந்தடைந்தன.

மகாத்மா காந்தியின் ஆடை அரசியல் உருவான இடம், மதுரை. இந்திய விடுதலைப் போராட்டம், மதுரையில் மிகத் தீவிரமாகப் பரவி, பரவலாக மக்கள் மனத்தைப் பாதித்தது. இதன் காரணமாக மதுரையில் 1970ஆம் ஆண்டு காந்தியத் தொண்டர்கள் க.மு.நடராஜன், பாண்டியன், க.மாரியப்பன் போன்றவர்களால் தொடங்கப்பட்ட பதிப்பகம் சர்வோதய இலக்கியப் பண்ணை. இது காந்தியச் சிந்தனை நூல்களை வெளியிட்டு வந்தது. மேலும் காந்தியின் சுயசரிதையைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டது. இந்நூல் ஒவ்வோர் ஆண்டும் 20 ஆயிரம் பிரதிகள் விற்பனை செய்யப்படுகிறது. இங்குதான் எனக்கும் சத்திய சோதனை அறிமுகம் ஆனது, வெறும் 20 ரூபாய்க்கு.

மகாத்மா காந்தி, மதுரையில் காந்தியடிகள், கோபால கிருஷ்ண கோகலேயும் காந்தியடிகளும், மகாகவியும் மகாத்மாவும், அதிசய சோதனை, வினோபாஜியும் காந்தியும் போன்ற பல நூல்களை வெளியிட்டுள்ளது. மிலி கிரகாம் போலாக் எழுதிய அற்புதமான நூல் ‘காந்தி எனும் மனிதர்’. க. கார்த்திகேயன் தமிழாக்கம் செய்துள்ள இந்நூலை இலக்கியப் பண்ணை வெளியிட்டது. மேலும் சத்திய சோதனை புத்தகத்தை எழுத்தாளர் தர்மராஜ் ‘கவி வானில் காந்தியடிகள்’ என்று கவிதையாகப் படைத்துள்ளார். இதனையும் இலக்கியப் பண்ணை வெளியிட்டது. இந்நூல், வாசகர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இவ்வாறு பதிப்புப் பணியில் மட்டுமல்லாமல் புத்தக விற்பனையிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டது. மதுரை இரயில்வே நிலையம் அருகில் மேலவெளி வீதியில் தனது சர்வோதய இலக்கியப் பண்ணை விற்பனை நிலையத்தை நடத்தி வருகிறது.

இக்காலத்தில் நல்ல புத்தகங்களை அடையாளம் கண்டுகொள்வதில் மிகவும் கடின உழைப்பைச் செலுத்த வேண்டிய நிலையில் இருந்தேன். எனது கைகளில் இருந்த மூன்றாம் தரமான நூல்களைக் கண்டுகொண்ட என் பேராசிரியர் சிவராமன் (அறிவு வளரும் போது அன்பும் கருணையும் பெருக வேண்டும் என்பதற்குச் சான்றாக வாழ்ந்தவர்) சேக்ஸ்பியரின் ‘மேக்பத்’ நாடகத்தைப் பற்றிப் பேசிக்கொண்டு இருக்கும்போது நல்ல நூல்களைத் தேர்வு செய்து படிக்க வேண்டுமென்று கூறினார். ஒரு நூல் எந்தப் பதிப்பகத்தில் வெளியிடப்பட்டுள்ளது என்பதைக் கவனிக்க வேண்டும், நூலின் பொருளடக்கத்தை ஆழ்ந்து சிந்திக்க வேண்டும், நூலின் முன்னுரைக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும், நூல் பற்றிய பிற அறிஞர்களின்  கருத்துகள் போன்றவற்றின் மூலம் நல்ல நூல்களை அடையாளம் காண முடியும் என்று கூறினார். அன்று முதல் நல்ல நூல்களின் தேடல் தொடங்கியது. பதிப்பகம் பற்றிய சிந்தனையில் பெரும் மாற்றம் ஏற்பட்டது.

இந்தச் சூழ்நிலையில் அறிமுகம் ஆனது, சர்வோதய இலக்கியப் பண்ணை. நூலகங்களில் மட்டுமே நூல்களைக் கண்டு வியந்த எனக்கு இலக்கியப் பண்ணை மிகப் பெரிய வியப்பையும் குதூகலத்தையும் ஏற்படுத்தியது. புது  நூல்களின் காகித வாசனை உள்ளத்தைக் கிளர்த்தெழ செய்தது.   எழுத்தாளர் பலரின் அனைத்து நூல்களையும் ஒன்றாகக் காண முடிந்தது. குறிப்பிட்ட எழுத்தாளர்களின் ஒட்டுமொத்த நூல்களையும் வாசகர்கள் வாங்கிச் செல்வதைக் கண்டு பிரமித்து நின்றேன். அன்று முதல். எனது புத்தகம் வாங்கும் பழக்கம் தொடங்கியது. ஒரு நல்ல நூலைத் தேர்ந்தெடுக்க, ஐம்பது நூல்களைப் புரட்ட வேண்டி உள்ளது.

ஜெயகாந்தனின் முன்னுரைகளைப் படித்துவிட்டு மயங்கித் திரிந்த நாட்கள் பல. தி.ஜா., சாண்டில்யன், கல்கி, தீபம் நா.பா, அசோகமித்திரன், கண்ணதாசன், மு.வ, ராஜம் கிருஷ்ணன், பிரபஞ்சன், மு.மேத்தா, அப்துல் ரகுமான், சிற்பி பாலசுப்பிரமணியம், சி.சு.செல்லப்பா, க.நா.சு, கோவி.மணிசேகரன், சுந்தர ராமசாமி, புதுமைப்பித்தன் சிறுகதைகள் என்று தமிழ் இலக்கியத்தின் முன்னோடிகள் என் மீது முட்டி மோதிக்கொண்டு படிக்கத் தூண்டினார்கள்.

எவ்வளவு நேரம் எடுத்துக் கொண்டாலும் இது வரை முகம் சுளித்ததில்லை, இலக்கியப் பண்ணை ஊழியர்கள். விருது பெற்ற எழுத்தாளர்கள், கவிஞர்கள் ஆகியோரின் நூல் அனைத்தும் இங்கு தான் அறிமுகமானது. “உலக வரைபடத்திலுள்ள மூலை முடுக்குகளுக்கெல்லாம் போக  விரும்புகிறாயா, ஒரு நூலகத்திற்குச் செல்” என்பார் டெஸ்கார்ட்ஸ். அத்தகைய ஒரு நூலகமாக விளங்குகிறது, சர்வோதய இலக்கியப் பண்ணை.

சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரையில் இலக்கியப் பணியைச் செவ்வனே செய்து வருகின்றது, இது. அரை நூற்றாண்டுப் பாரம்பரியம் கொண்ட சர்வோதய இலக்கியப் பண்ணை, படிக்கும் பழக்கத்தை ஊக்கப்படுத்த 35 ஆண்டுகளாய்ப் புத்தகத் திருவிழா நடத்தி வருகிறது. “புத்தகங்கள் அறத்தையும் தியாகத்தையும் இளந்தலைமுறையினருக்கு எடுத்துக் கூறும் நல்லாசிரியர்களாகவே விளங்குகின்றன” என்று இளசை சுந்தரம் கூறியுள்ளது சிந்திக்கத் தக்கது.

அறிவை அள்ளித் தரும் அட்சய பாத்திரம், புத்தகம். புத்தகத்தை நண்பனாக்கியோருக்குத் தாழ்வில்லை. மனிதனைப் பக்குவப்படுத்துவதிலும் இருள் படர்ந்த வாழ்க்கைப் பாதையில் வெளிச்சம் காட்டுவதிலும் புத்தகங்களுக்கு இணையான இன்னொன்றைக் காண்பது அரிது என்றெல்லாம் புத்தகத்தின் சிறப்புகளை எடுத்துரைக்கும்போதெல்லாம் சர்வோதய இலக்கியப் பண்ணையின் செயல்பாடுகள், நினைவுக்கு வராமல் இருப்பதில்லை.

சில புத்தகங்களைச் சுவைப்போம்…

சிலவற்றை அப்படியே விழுங்குவோம்…

சில புத்தகங்களை மென்று ஜீரணிப்போம்…  என்று பிரான்சிஸ் பேக்கன் கூறியபடி, சுவைப்பது, விழுங்குவது, ஜீரணிப்பது ஆகிய அனைத்தும் நடைபெறும் சூழலைக் கொண்ட இடமாக, புத்தகங்களின் போதிமரமாகச் சர்வோதய இலக்கியப் பண்ணை விளங்குகிறது.

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க