அக இலக்கியச் சிறுபாத்திரங்கள்- 8 (கிளை)

0

ச. கண்மணி கணேசன்
முதல்வர் & தமிழ்த்துறைத் தலைவர் (ப.நி.),
ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரி, சிவகாசி

முன்னுரை

அஃறிணைப் பொருட்களுள்; அணிகலனில் கோத்த மணிகள், மேகலையின் வடங்கள், மழை தரும் மேகங்கள், வரகுக்காட்டின் களை, பல்கிப்பெருகிய நாணல் கிழங்கு, கரும்பு, மூங்கில், பூத்துக்காய்த்துப் பசுந்துளிர் போர்த்துக் கவர்த்த மரங்கள்; ஆகியவற்றின் ஒவ்வொரு தொகுதியும் கிளை என்று தொகை இலக்கியத்தில் பேசப்படுகிறது.

யானை, பன்றி, கரடி, மான், குரங்கு  முதலிய விலங்குகள்; கிளி, குருவி, குருகு, பருந்து, காகம், மனைக்கோழி, கம்புட்கோழி, காட்டுக் கோழி முதலிய பிற பறவைக் கூட்டங்கள்; கரையான், பாம்பு, பல்லி முதலிய ஊர்வன; தும்பி, தேனீ, வண்டு, குளவி முதலிய பூச்சிகள்; சங்கு, இறால், நண்டு, வாளைமீன், பிற மீன்கள், தவளை முதலிய நீந்துவன அனைத்தும் கிளை என்னும் சுற்றத்தோடு கூடி வாழ்வதையும்; வளர்வதையும்; தேடுவதையும்; பகிர்வதையும்  தொகை நூல்கள் கிட்டத்தட்ட அறுபதுக்கும் மேற்பட்ட பாடல்களில் குறிப்பிடுகின்றன.

மக்கள் கூடி வாழ்வதைப் புனையும் அகஇலக்கியத்தில் ‘கிளை’ எனும் சொல்லுக்குச் ‘சுற்றம்’ என்னும் பொருள் எல்லா இடங்களிலும் துல்லியமாகப் பொருந்துகிறதா  என்பது கேள்விக்குரியது. ஏனெனில் சொத்துப் பங்கீடும், பெண்களுக்கே உரிய புகுந்தவீடும் உயர்திணையாகிய மக்களுக்கு மட்டுமே உள்ளன.

புற இலக்கியத்தில் கிளை

‘கிளை’ எனும் சொல் பொதுவாக  சுற்றம் என்று பொருள்படினும்; அது  பங்காளிகளை மட்டும் குறிக்குமிடங்களும் உள.

புறப்பாடல்களில் இடம்பெறும் ‘கிளை’ பெரிதும் கூத்தர், பாணர், பொருநர் ஆகிய இரவலரின் பெருஞ்சுற்றத்தைச் சுட்டுகின்றன (மதுரைக்.- அடி- 751; பதிற்.- 32, 42, 49; புறம்.- 136, 144, 163, 173, 253, 254, 378, 388). பேகனின் மனைவியிடம் பரணர்;

“கிளையை மன் எம் கேள் வெய்யோற்கு” (புறம்.- 144)

என்று கேட்கும் போதும்,

“யாமவன் கிளைஞரேம் அல்லேம்” (மேற்.)

 என்று அவள் பதிலிறுக்கும் போதும் ‘கிளை’ சுற்றம் என்றே பொருள்படுகிறது.

போர்க்களத்தில் தம் கணவர்  இறந்துபட அவனுடலைத் தூக்கி மடியில் வைத்து அரற்றும் மனைவியரின் ஒப்பாரியில்; (புறம்.- 253& 254) ‘கிளை’ பங்காளிகளைக் குறிக்கிறது.

மலையமான் திருமுடிக்காரியை;

“கிளையொடும் பொலிக” (புறம்.- 126)

என்று புலவர் வாழ்த்தும்போது ‘கிளை’ அவனது  பங்காளிகளையே குறிக்கிறது.

நெருக்கமான குடும்ப உறவு பற்றிய குறிப்பில் ‘கிளை’க்கு உரிய பொருள் நுட்பம் புலனாகிறது.

“இருங்கிளை இனனொக்கல்” (பட்டி.- 61)

எனும் பாடலடி கிளை பற்றிய வரையறையை உரைக்கிறது. அதாவது கிளை ஒரே இனத்தவரை மட்டும் உள்ளடக்கியதாகும். இதைப் பண்டைத்  தமிழகத்தில் ஜாதி இருந்தமைக்கு ஆதாரமாகும் அரிய குறிப்பாகக் கொள்ளலாம்.

ஆண்முதன்மைச் சமுதாயத்தில் ஒரு குடியின் கிளை அக்குடும்பத்து ஆண்மக்கள் வாயிலாகவே பல்கிப் பெருகும் என்ற கொள்கை நிலவியது; நிலவுகிறது. இன்றளவும் பெண்கள் தாய் வீட்டிலிருந்து புகுந்த வீடு சென்று வாழ்வதே நடைமுறையாக உள்ளது. கோயில் வழிபாடுகள் தொடர்பான உரிமை, தகுதி ஆகிய நடைமுறையிலும், வாழ்வியல் சடங்கு சம்பிரதாயங்களிலும்,  ஈமச்சடங்கிலும் இக்கொள்கை பேரிடம் வகிப்பதைக் காண்கிறோம்.

மோர் விற்ற பொருளை வைத்து ஆய்மகள் தன் கிளையோடு உணவு அருந்தினாள் என்பது பெரும்பாணாற்றுப்படைச் செய்தி (அடி.- 163). இங்கு பங்காளிகளே கிளையாவர் என்னும் நுட்பம் பொதிந்துள்ளது. ஆதலால் தான் அவளுடன் சேர்ந்து உண்கின்றனர்.

மகாபாரதக் கதையை விரிவாகப் பேசும்;

“வயக்குறு மண்டிலம் வடமொழிப் பெயர் பெற்ற
முகத்தவன் மக்களுள் முதியவன் புணர்ப்பினால்
ஐவர் என்று உலகேத்தும் அரசர்கள் அகத்தரா
கைபுனை அரக்கு இல்லைக் கதழெரி சூழ்ந்தாங்கு
களிதிகழ் கடாஅத்த  கடுங்களிறு அகத்தவா
முளிகழை உயர்மலை முற்றிய முழங்கழல்
ஒளிஉரு அரக்கு இல்லை வளிமகன் உடைத்துத்தன்
உள்ளத்துக் கிளைகளோடு உயப் போகுவான் போல” (கலித்.- 25)

என்ற பாடலில் திருதராஷ்டிரனின் மூத்த மகனாகிய துரியோதனன் சூழ்ச்சியில்  இருந்து பீமன் தன் உடன்பிறப்புக்களாகிய பாண்டவர்களைக் காப்பாற்றிய புராணச் செய்தி உள்ளது. தன் மனதிற்கினிய சகோதரர்களைக்; காட்டுத்தீயில் இருந்து காப்பாற்றும் யானை போல அவன் அரக்கு் மாளிகையிலிருந்து காப்பாற்றிய செய்கை விளக்கம் பெறுகிறது. பங்காளிகளாகிய பாண்டவர் கிளை என்று குறிப்பிடப்படுவது நம் கொள்கையை வலியுறுத்தும் இன்னொரு சான்றாக அமைகிறது.

இன்றும் சில சமூகங்களில் ‘கிளை’ என்னும் சொல்லால் பங்காளிகளைக் குறிக்கின்றனர். (எ.டு.) கொண்டையங்கோட்டை மறவர்.

இக்கூட்டத்தில் இளையவரோடு முதியவரும் அடங்குவர் (பெரும்.- 258).

தமிழர் வாழ்வியலில் கிளை பெறுமிடம் கிளையோடு வாழ்வதே போற்றுதற்கு உரியதென்ற கொள்கை நிலவியது.

“அன்பெனப்படுவது தன் கிளை செறாமை” (கலித்.- 133)

என அன்பிற்குச் சொல்லப்படும் வரையறை கிளை போற்றுவதன் மேன்மையை வலியுறுத்தும். இக்கொள்கைக்கு மாறுபட வாழ்வதை;

“கிளை அழிய வாழ்பவன் ஆக்கம் போல் புல்லென்று” (கலித்.- 34)

என இழிவாகப் பேசுகிறது செவ்விலக்கியம். உறவினர் கேட்டை நீக்கித் தாங்குவதும், பங்காளிகளை ஊட்டுவதும் இல்வாழ்வான் கடமை என்பதை;

“கேள் கேடு ஊன்றவும் கிளைஞர் ஆரவும்” (அகம்.- 93)

வாழும் வாழ்க்கையே பெருமையுடையது எனப் போற்றுகிறது பண்டை இலக்கியம்.

பின்புலத்தில் கிளையின் பயன்பாடு 

அகப்பாடல்களில் கிளை பேசுவதும் இல்லை; பேசியதாகக் கூறப்படுவதும் இல்லை. பாடலின் பின்புல விளக்கத்தில் ஆங்காங்கு கிளை இடம்பெறுகிறது.

தொழிலில் ஈடுபடும் போதும், உண்டு களிக்கும் போதும், வழிபாட்டின் போதும் கிளையுடன் சேர்ந்து வினையாற்றுவது ஈராயிரம் ஆண்டுப் பழமை வாய்ந்த தமிழர் நாகரிகமாகக் காணப்படுகிறது. பரதவர், குறவர், வேட்டுவர், உழவர் எனப் பல பிரிவினரும் கிளையுடன் சேர்ந்து தொழிலில் ஈடுபடக் காண்கிறோம்.

பரதவர் மீன்வேட்டைக்குக் கிளையுடன் அவரவர் திமிலில் செல்வர் (நற்.- 331; அகம்.- 30) அது மட்டுமின்றி கோட்சுறாவால் கிழிந்த வலையைச் சீராக்கவும் கிளையுடன் கூடி முயன்றனர் (நற்.- 207).

குறச்சிறார் கிளையுடன் தினைக்கொல்லையில் விளையாடிப் பறவை ஓட்டுகின்றனர் (நற்.- 44)

ஆறலைக்கள்வர் கிளையுடன் கொள்ளையில் ஈடுபடுகின்றனர் (அகம்.- 193)

உழவர் கருவுற்ற வாளைமீன் கூட்டம் போல விலாப்புடைக்கத் தம் கிளையோடு சேர்ந்து உண்டனர் (பரி.- 7)

கிளையுடன் சேர்ந்து மது அருந்துவது பரக்கக் காணப்படுகிறது. குன்றக் குறவன் கிளையுடன் சேர்ந்து மது அருந்துவது பல பாடல்களில் பதிவாகி உள்ளது (நற்.- 341; திருமுரு.- அடி- 196; அகம்.- 172, 348 ) பரதவனும் கிளையோடு தேறல் மாந்துகிறான் (நற். – 388) வேட்டுவன் தான் எய்த அம்பிலிருந்து ஆமான் உயிர்தப்பி விட்டதால் அணங்குற்றது எனக் கிளையோடு சேர்ந்து மலை மேலுள்ள கடவுளுக்கு மழை வேண்டி வழிபாடு நிகழ்த்தினான் (நற்.- 165)

அகஒழுக்கச் சித்தரிப்பில் கிளை

கிளை  நான்கு பாடல்களில் மட்டுமே சிறுபாத்திரத் தகுதியைப் பெறுகிறது.

மூங்கில் புதர் போலப் பல பங்காளிகளை உடையவன் தந்தை. அனைவரும் போற்றும் படியாக அவனது வாழ்க்கை முறையும் அமைந்து இருந்தது. ஆனால் தலைவி தற்போது தலைவனுடன் போய்த் தீரவேண்டிய கட்டாயமான சூழல்.  தன் களவொழுக்கம் பற்றித் தோழியிடம் வருந்தும் தலைவி;

“முளை அணி மூங்கிலின் கிளையொடு பொலிந்த”  (அகம்.- 268)

தந்தைக்கு அவப்பெயர் வரும்படியாகத் தலைவனோடு தான் கொண்ட நட்பின் விளைவு துன்புறுத்தி விட்டதே எனப் புலம்புகிறாள். இங்கு இயல்பாக ஒரு தந்தைக்கும் மகளுக்கும் இடையில் ஏற்படும் பாசப்பிணைப்பு வெளிப்படுகிறது. பங்காளிகளின் முன்னர் தன் தந்தை தலைகுனிய நேரிடுவதை எண்ணி அவள் மனம் வெதும்புவது நம் மனதையும் நோகச் செய்கிறது.

பங்காளிகளுள் ஒருவர்க்கு ஏற்படும் அவமானம் அனைவர்க்கும் பொது என்ற நிலை அன்றைய தமிழ்ச் சமுதாயத்தில் இருந்தது. களவு முற்றிய நிலையில் தலைவனை வரைவிற்குத் தூண்டும் தோழி; தலைவியின் தந்தை மட்டுமின்றிக் கிளைக்கும் அவலநிலை ஏற்படாதபடித் தலைவன் ஒத்துக் கொண்டமை பற்றி எடுத்துரைத்து மனம் ஆறுகிறாள்.

“கிளை உடை மாந்தர்க்குப் புணையுமாம் இவ்வென” (குறுந்.- 247)

பெண்கேட்டு வரத் தலைவன் சம்மதித்ததால் விளையும் நன்மையை எடுத்து உரைக்கிறாள். தலைவன் ஒத்துக் கொள்ளாது விலகிவிட்டால் அது தலைவியின் தந்தைக்கு மட்டுமின்றி; அத்தனை பங்காளிகளுக்கும் அவப்பெயராகி விடும். எனவே அந்த இளிவரலினின்று மீள உறுதுணையாகும் தெப்பம் போலத் தலைவன் சம்மதம் கிடைத்து விட்டது எனத் தோழியும் தலைவியும் அமைதியுறுகின்றனர்.

திருமணத்திற்கு முன்னர் தந்தையின் கிளையே பெண்ணுக்கும் சுற்றமாகும். மோர் விற்று வரும் ஆயர் குலப் பெண்ணின் இளமையும் அழகும்; அவள் மேல் ஆர்வம் மீதூரும் தலைவனையும் மருட்டுகிறது; அவளிடம் மோர் வாங்கும் பிற  பெண்களையும் மருட்டுகிறது. அவரவர் கணவர் கண்ணில் இவள் பட்டுவிட்டால் ஏற்படும் ஏதத்தை எண்ணி;

“எழுநின் கிளையொடும் போகென்று” (கலித்.- 109)

விரைந்து அனுப்பிவிட்டனர். வாசலை அடைத்துத் தம் கணவர் அவள் பின்னே போகாமல் பாதுகாத்தனர். ஆய்ச்சி தன் கிளையோடு சேர்ந்து சென்றால் தமது கணவர் அவளைப் பின்தொடர மாட்டார் என்பது குறிப்புப்பொருள் ஆகும்.

கணவனின் கிளையே  மனைவிக்கும் கிளையாக அமைவது  ஆண்முதன்மைச் சமுதாய நெறி ஆகும்.

“கிளையொடும் காக்க தன் கொழுநன் மார்பே” (குறுந்.- 80)

என்ற ஔவையாரின் பாடலடியில் மனைவி பங்காளிகள் துணையுடன் தன் கணவனைப் பாதுகாத்துக் கொள்ளட்டும் என்கின்ற பொருளே கிடைக்கிறது.

தொகுத்தோர் இப்பாடலுக்கு எழுதிய அடிக்குறிப்பில் இது பரத்தை கூற்று என்கின்றனர். ஆயினும் தன்னுணர்ச்சிப் பாடல்களைப் பாடிய ஔவையை இது இழிவுபடுத்துவதாக அமைகிறது என்பது என் கருத்தாகும். அதியனால் புரக்கப்பட்ட ஔவைக்கு அந்த  அரண்மனையில் நிலவிய அசூயையான சூழலை இப்பாட்டு காட்டுகிறது. புனல்விளையாட்டிற்குத் தன் கலைக்குழுவினரோடு கிளம்பும் ஔவை; ‘தலைவி (அதியனின் மனைவி) தன் கணவனைப் (அதியனை) பங்காளிகளோடு சேர்ந்து காத்துக் கொள்ளட்டும்; நாம் புனலாடச் செல்வோம்’ என்று சொல்வதாகப் பொருள் கொள்வதில் இடர்பாடு எதுவும் ஏற்படவில்லை.

முடிவுரை

உயிரற்ற பொருட்களின் கிளை தொகுதி எனும் பொருள்பட்டது. அஃறிணை உயிர்களின் கிளை கூட்டம் எனும் பொருள்பட்டது. மக்களின் கிளை சுற்றம் என்னும் பொதுப்பொருளையும், இடம் நோக்கிப் பங்காளிகள் என்னும் சிறப்புப் பொருளையும் பெற்றது. மக்களின் கிளையில் இளையவரும் முதியவரும் அடங்குவர். கிளையோடு வாழ்வதே போற்றுதற்கு உரியதென்ற கொள்கை நிலவியது. அகப்பாடல்களில் கிளை பேசுவதும் இல்லை; பேசியதாகக் கூறப்படுவதும் இல்லை. தொழிலில் ஈடுபடும் போதும், உண்டு களிக்கும் போதும், வழிபாட்டின் போதும் கிளையுடன் சேர்ந்து வினையாற்றுவது ஈராயிரம் ஆண்டுப் பழமை வாய்ந்த தமிழர் நாகரிகமாகும். பங்காளிகளுள் ஒருவர்க்கு ஏற்படும் அவமானம் அனைவர்க்கும் பொது என்ற நிலை அன்றைய தமிழ்ச் சமுதாயத்தில் இருந்தது. திருமணத்திற்கு முன்னர் தந்தையின் கிளையே பெண்ணுக்கும் சுற்றமாகும். கணவனின் கிளையே  மனைவிக்கும் கிளையாக அமைவது  ஆண்முதன்மைச் சமுதாய நெறி ஆகும். கிளை என்னும் சிறுபாத்திரம் அன்றைய சமுதாயக் கொள்கையைத் தெளிவுறுத்துகிறது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.