அன்பிற்கினிய நண்பர்களே!

கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

முகம்மது ரஃபி எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து ராமலக்ஷ்மி தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (09.08.2020) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

பதிவாசிரியரைப் பற்றி

5 thoughts on “படக்கவிதைப் போட்டி – 270

 1. அன்பு மனதின் ஆர்வம் மிகுந்தால்…

  வெட்ட வெளியில் சட்டியில் சோறாக்க
  சுட்ட செங்கலால் அடுப்புக் கூட்டி
  சுள்ளி பொறுக்கப் பெற்றவன் சென்றாலும்
  உள்ளம் மகிழ அண்ணன் பிள்ளைகளை
  அள்ளித் தழுவும் தம்பியின் பாசம்…

  அழகான பந்தம் ஆயுசுக்கும் இன்பம்
  இரண்டு பக்கம் சுமந்து செல்வதில்
  தொல்லை ஏதும் இல்லா தாகும்
  இரண்டு கைகளை ஆண்டவன் படைத்ததே
  இதற்குத் தான் என்பது போல…

  பின்னால் இருந்து படம் எடுப்பவரைக்
  கண்ணால் பார்க்கும் மருட்சிக்கு மத்தியில்
  சித்தப்பன் சட்டையை இழுத்துப் பிடிக்கும்
  சத்தான நம்பிக்கை இரண்டு வாண்டுக்கும்
  இடுப்பில் உடையின்றிப் போனால் என்ன…

  முத்தான முதல்பிள்ளை திரும்பிய பார்வை
  மொத்த பூமியும் சொந்தம் ஆக்கும்
  கெத்தான குடும்பத்தை இழுத்துக் கட்டி;
  கூட்டாகச் சேர்த்து; வாழ்க்கை நடத்தும்
  பாட்டாளி மகளே! பண்பாட்டு நாயகியே!

  நீகுனிந்து வளைந்து செய்யும் வேலை
  நித்தம் எழுதும் நிறைவு எதுவென்று
  அன்பு மனதின் ஆர்வம் மிகுந்தால்…

  ச.கண்மணி கணேசன்

 2. நல்லதொரு குடும்பம்…

  காட்டில் வேலை
  கணவன் மனைவி சமையலில்,
  கல்லையடுக்கி அடுப்பு போட்டுக்
  காய்ந்த சுள்ளி பொறுக்கி
  விறகாக்கி
  உலைவைத்தனர் வெயிலிலே..

  சின்னப் பிள்ளைகளைப்
  பார்த்திடச்
  சேர்ந்தான் வந்து அண்ணனுமே..

  பார்த்தனர் பிள்ளைகள்
  பாசத்துடன்
  அண்ணனில் ஆயிரம்
  அன்னை தந்தையை..

  தங்கைகளைத் தூக்கித்
  தமையன்
  தான் காட்டும் பாசத்தில்
  தந்தையை மிஞ்சிவிட்டான்..

  ஏழ்மையில் இருந்தாலும்
  இந்தக் குடும்மொரு
  பல்கலைக் கழகமே…!

  செண்பக ஜெகதீசன்…

 3. மலைக் கிராம நிலை

  மலைச் சரிவின்
  மண் குடிசைகளில் வாழும் மண்ணின் மைந்தர்களின் மலைக் கிராமம் இதுவோ!
  அந்தி சாயும் முன்
  அடிவாரம் போய் விடுங்கள்;.
  மழைவெள்ளம் பெருகி
  மண் சரிவால்
  மரணங்கள் நிகழுமென்னும்
  கனமழை எச்சரிக்கையால்
  கலங்கிய உள்ளமொன்று
  வைத்தது வைத்தபடி இருக்க
  போட்டது போட்டபடி கிடக்க
  கைத்தலங்களில்
  மழலைகளைச் சுமந்து
  மலையடிவாரம் செல்ல ஆயத்தமாகின்றதோ?
  நிலைமையறியாத‌
  சிறார்களிரண்டும்
  பின் தொடர
  ‘பிகு’ செய்கின்றனரோ?
  காணப் பதைபதைக்கும் காட்சியின்று
  மலைக் கிராம நிலையானதோ!
  !

  கோ சிவகுமார்
  மண்ணிவாக்கம்
  சென்னை.

 4. படக்கவிதைப் போட்டி எண் 270

  உன் இரு கைகளால் தாங்கிய குழந்தைகள்
  நீ வருகிறாயா எனப் பின்னோக்கும் ஒரு குழந்தை
  எங்கு போகிறாய்?
  தாயை எதிர்நோக்கும் குழந்தையின் கண்களோ
  பசியால் வாடிய முகத்தினிலே

  விலைவாசி ஏற்றத்தில்
  வகைவகையாய் உணவு உண்டா?
  ருசிருசியாய் கனிதான் உண்டா?
  உழைப்பின் மார்க்கங்கள் தாளிட்டு நிற்க
  பணம் காசு கையில் இல்லை
  பளிச்சென்ற ஒளியோடு எதிர்காலம் உனை அழைக்க
  பட்டென ஒழியும் பரிதவித்த காலம்
  அப்போ குழந்தைகளை அள்ளு
  கொஞ்சும் முத்தம் உனக்கு கள்ளு

  சுதா மாதவன்

 5. மேன்மக்கள்

  தங்க வீடு கட்ட வசதியில்லை – உலை
  பொங்க அடுப்பைக் கட்டி வைத்திருப்பார்
  உடுத்திடும் கந்தை ஆடையிலே
  உறைபனி வெக்கைத் தாங்கிடுவார்….

  புழுதிப் புயலாய்ப் போர்த்தினாலும்
  அழுது புலம்பி வாடிடாமல்
  இருக்கும் இடத்த்தைச் சீர்செய்து
  வசிக்கும் கலைகள் தானறிவார்…

  கொட்டும் இடிமழை பெய்தாலும்
  கட்டிவெல்லமெனக் கரைந்திடாமல்
  கூடி அனைவரும் சேர்ந்து நின்று – தம்
  வாட்டம் தாமேத் தீர்த்துக்கொள்வார்….

  கொடுமையில் பெரிது வறுமையென
  வெறுமையில் வீணாய்ப் போக்கிடாமல்
  இயற்கையோடிழந்து வாழ்ந்திருந்து
  இன்பம் துய்த்து மகிழ்ந்திடுவார்

  ஏழ்மை ஏறி மிதித்தாலும்
  கீழே கிடந்தது உழலாமல்
  மீண்டு எழுந்து வாழ்வதனால்
  இவரே இந்நாட்டின் மேன்மக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.