-மேகலா இராமமூர்த்தி

திருமிகு நித்தி ஆனந்தின் கைத்திறனில் எடுக்கப்பட்டிருக்கும் இந்த ஒளிப்படத்தை வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து தெரிவுசெய்து தந்திருப்பவர் திருமிகு. ராமலக்ஷ்மி. படமெடுத்தவர், தேர்வுசெய்தவர் இருவரும் என் நன்றிக்குரியவர்கள்.

உப்பு, தமிழர் வாழ்வில் முக்கியமானதொரு பண்பாட்டுக் குறியீடாய்த் திகழ்ந்துவருவது. நீரை அமுதம் என்று தமிழர்கள் கருதியது போலவே, உணவுக்குச் சுவையூட்டும் உப்பையும் அமுதமெனக் கருதினர் என்பதற்குச் சங்கப் புலவரான நல்லந்துவனார் ‘கடல்விளை அமுதம்’ என்று நற்றிணையிலும் (88), சேந்தன் பூதனார் எனும் புலவர்  ‘வெண்கல் அமிழ்தம்’ என்று அகநானூற்றிலும் (207) உப்பைக் குறிப்பிடுவது சான்றுகளாகின்றன.

வண்டிகளில் உப்பு மூட்டைகளை ஏற்றிச்சென்று விற்கும் வணிகர்களுக்கு அந்நாளில் உமணர்கள் என்று பெயர்.

மாட்டுவண்டிகளில் உப்பைக் கொண்டுசென்று விற்ற காலம்போய் மிதிவண்டிகளில் வணிகர்கள் உப்புவிற்கும் காலமும் வந்தது. இதோ இந்தப் பெரியவரோ தம் தலைமீதுள்ள கூடையில் அந்தக் கடல்விளை அமுதத்தைச் சுமந்து செல்கின்றார். 

இக்காட்சி நம் கவிஞர்களிடம் எத்தகைய சிந்தனையோட்டத்தை ஏற்படுத்தியிருக்கின்றது என்று கண்டுவருவோம்!

*****

”தலைக்கனமில்லா உழைப்புடன் தலையில் கனம் வைத்திருக்கும் காளையே! இன்றைய உன் சுமைகள் நாளைய சுகங்களாகும்” என்று இம்மனிதருக்கு நம்பிக்கையூட்டுகின்றார் திரு. கோ. சிவகுமார்.

சுமை

உச்சி வெயில்
உச்சம் தொடும் வேளை
உச்சந்தலையில் கூடைச்சுமை
வச்சு நடக்கும் காளையே!
தலைச்சுமைகளைத்
தாங்கித் தாங்கித்தான்
தலையாயக்
குடும்பச் சுமையைக் குறைக்கின்றாயோ!
தலைச்சுமைகள்
தாங்கும் உழைப்பே
தலைவிதியென்று
தளர்ந்து விடாதே!
தலைச் சுமை தாங்கும்
உடல் பலம் உள்ளதேயென்று
உவகை கொள்.
தலைக்கனமில்லா
உழைப்புடன்
தலைமேல் கனம்.
அது
தன்னம்பிக்கையின்‌ அடையாளம்!‌.
இன்றைய‌
சுமைகளே
நாளைய
சுகங்கள்!

*****

ஆறாப் பெருவிரல் காயங்களுடன் ஒற்றைக்கூடையில் யார் யார் வீட்டு உப்புக்கற்களையோ சுமந்தபடி நடந்துசெல்லும் இந்த எளிய மனிதருக்காக இரங்குகின்றார் திருமிகு. ரா. விஜயகுமாரி.

நெய்தல் நிலம்

சுட்டெரிக்கும் சூரியக்கோடை
இவன் பிரத்யேகம்.
உவக்கும் சொட்டுகளை
வெள்ளை பூக்களாக்கும்
மந்திரத் தொழில் இவனது.

ரெண்டு நாளாய்
நல்ல மழை.
காகிதம் போல்
காய்ந்த குடிசை
போனது கடல் நோக்கி.
வேறெங்கு போக?
கதியே கடல்.

வேலைக்குத் திரும்பினான்.
பாத்தி பாத்தியாகப்
பங்கிடப்பட்டு கிடந்தது
இவன் வாழ்வு!

நடக்கிறான்…உழைக்கிறான்…
ஆற வாய்ப்பில்லா
தன் பெருவிரல்
கீறல் காயங்களுடன்
ஒற்றைக்கூடையில்
ஒட்டுமொத்தமாய்
யார் யார் வீட்டு
உப்புக்கற்களையோ சுமந்தபடி.

*****

”உச்சிவெயிலில் உப்புச்சுமை தூக்கி உழைப்பதெல்லாம் பச்சிளம் பிள்ளையின் பசிபோக்கவே” என்று வருந்தியுரைக்கின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

துணிவும் அச்சமும்…

உச்சி வெயிலில் வேர்த்தொழுக
உப்புச் சுமையை ஏற்றியேதான்
துச்சமாய்த் துன்பம் துடைத்திடவே
துணிந்தே பணியைச் செய்வதெலாம்,
பச்சிளம் பிள்ளையும் பசியாறப்
பொருட்கள் வாங்கிச் சென்றிடத்தான்,
அச்சமும் உண்டு மழைவந்தால்
அந்தப் பிழைப்பும் போய்விடுமே…!

*****

”தேக்குமரக் கைகள் தாங்கிப் பிடிக்கும் கூடையோடு வானத்தையே நீ விற்கிறாயோ? அழுக்கேறிய உன் தலைப்பாகையும் உனக்கோர் அழகுதான்!” என்று இம்மனிதரை இரசனையோடு வருணிக்கின்றார் திருமிகு. சுதா மாதவன்.

தேக்குமரக்கைகள் தாங்கிப் பிடிக்கும் கூடை
தேகம் பலமென்று தெரிவித்ததே
வானத்தை நீ விற்கிறாயோ?
வாரி வாரிக் கூடை வழியத்
தெருத்தெருவாய்ச் சுற்றி விற்பவரோ
தெரிந்தவர்க்கு மட்டும் கொண்டு சேர்ப்பவரோ
அழுக்கேறிய உன் தலைப்பாகை
அதுவும் உனக்கோர் அழகுதான்
வியர்வையிலே துவைத்தெடுத்து
விண்ணில் பறக்க விடுவாயோ
பதிலைச் சொல்லு முதியவரே
வழி நெடுக நடப்பவரே
பெருத்த வியாபாரம் செய்வீர்
வசதியாய் வளர்ந்து வாழ்வீர்!!!

*****

”இந்தத் தலைச்சுமை உழைப்பாளி, நியாயமான ஊதியம் காணாத ஏமாளி! வெள்ளைக்கூட்டம் போனபின்னும் வாழும் கொள்ளைக்கூட்டத்தால் இவன் உழைப்பு உறிஞ்சப்படுகிறதே” என்ற தன் வேதனையைக் கவிதையில் பதிவுசெய்திருக்கின்றார் திரு. காந்திமதிநாதன்.

மாறாத விதி

தலைச்சுமை உழைப்பாளி
வியர்வையின் முதலாளி
நியாயமான ஊதியம்
காணாத ஏமாளி
யார் அறிவார் அவன் வலி?

மூன்றில் ஒரு பங்கு ஊதியமே
தருவதில் இல்லை நியாயமே
மீதமுள்ள இரண்டு பங்கு
செல்லுமிடம் வேறு எங்கு?

நேற்று இன்றா இந்தச் சுரண்டல்?
தொன்றுதொட்டு வரும் பிறாண்டல்!
உப்பு மீது வரி
தப்பு என்று
கண்டித்துத் தானே
தண்டி யாத்திரை
ஐம்பதாய் ஆரம்பத்தில் ஆசிரம சீடர்கள்
லட்சம் தாண்டி லட்சியத்தில் இறுதியில்!

உப்பு மூலம் உருவான சுதந்திரப் போராட்டம்
தப்புக்குத் தடை போடும் சுதந்திரம் வரட்டும் விரட்டும்
எதிர்பார்த்த கூட்டம் ஏமாற்றத்தின் உச்சகட்டம்
அந்தக் கூட்டத்தின் ஒருவன் இவன் தலையில் அதே உப்பு
அந்த வெள்ளைக்கூட்டத்தை மிஞ்சுகிறதே கொள்ளைக்கூட்டம்

சுதந்திரக் காற்று சுவாசித்த போதும்
உழைப்பை உறிஞ்சிம் நச்சுக் காற்று
அனல்காற்றாய் வீசும்நிலை இந்த நிலை

உலகிலேயே முதல் அயோக்கியத்தனம்
வியர்வை சிந்தும் உழைப்பு
உரிய ஊதியம் அரிதாகப் போவதே!

அயோக்கியத்தனத்தில் முதலிடமா
அன்னை பாரதமே

உழைப்பவன் வியர்வை
கேட்கிற பார்வை
தீர்வைக் கண்டால்
நியாத்தின் சத்தியத்தின்
போர்வையில் பயணிக்கிறாய்…..

*****

”உப்பளத்தின் வெப்பத்தில் கொப்புளம் கண்ட கால்களோடு அலையும் இவருக்கு உழைப்பு ஒன்றே சொந்தம்; கூடைகூடையாய்த் திட்டம்போட்டும் ஏமாற்றமே மிச்சம்” என்று உண்மை விளம்புகின்றார் திரு. வெங்கட ஸ்ரீநிவாசன்.

ஏமாற்றம்

உப்பளத்தின் வெப்பத்திலே
கொப்புளம் கொண்ட கால்கள்!
அப்பளமாய்க் காய்ந்துவிட்டப்
பொத்தலான தேகம்…

சொத்துபத்து ஏதுமில்லை
உழைப்பு ஒன்றே சொந்தம்
ஓயாமல் உழைத்த போதும்
மழையில் கரைந்த உப்பாய்
ஊதியமும் கரைந்து போகும்
விலைவாசியெனும் முகிலால்

கூடைகூடையாகத் திட்டம்
கூவிக்கூவிச் சொன்னார்
ஏழைக் கூடை ஏறவில்லை
ஏமாற்றம் மட்டும் மிச்சம்…

*****

உழைப்பு ஒன்றையே மூலதனமாகக் கொண்டு உப்பு விற்கும் இந்த எளிய மனிதரை அவரவர் கோணத்தில் எதார்த்தமாகப் படம்பிடித்துக் காட்டியிருக்கின்றார்கள் நம் கவிஞர் பெருமக்கள். அவர்களுக்கு என் பாராட்டுக்கள்!

அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவாகியிருப்பது…

கல்லுப்புக் காயங்கள்…!

கல்வியைவிடக் கல்லுப்பு
கடிதென அறியவில்லை!

காலமோடினாலும் கட்டைவிரல்
காயங்கள் ஆறுவதேயில்லை!

உப்பளங்களில் தொலைந்த
வைரக்கல் மின்னுவதேயில்லை!

எட்டாக வளைந்தாலும்
ஏழையை எழவிடுவதில்லை!

சட்டையில்லா உடம்பில்
கல்லுப்பை மட்டுமில்லை

கடலையே சுமந்தாலும்
வறுமையே வாழ்வினெல்லை…!

”கல்வியைவிடக் கல்லுப்பு கடிதென அறியவில்லை; சட்டையில்லா உடம்பில் கல்லுப்பை மட்டுமில்லை…கடலையே சுமந்தாலும் வறுமையே வாழ்வின் எல்லை” என்று இந்தப் பாட்டாளியின் வருத்தத்தை நம் நெஞ்சைத் தொடும் வகையில் கவிதையில் வெளிப்படுத்தியிருக்கும் திருமிகு. புவிதா அய்யாதுரையை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.  

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.