Year: 2023

  • வால் காக்கையின் குரல்

    வால் காக்கையின் குரல்

    வால்காக்கையின் குரலைக் கேட்டிருக்கிறீர்களா? கோகீ கோகீ எனக் குரல் எழுப்பும் என்பர். ஆனால், வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு குரல் எழுப்பும். துணைப் பறவையை அழைக்கும் இதன் இனிய குரலைக் கேளுங்கள். இதன் குரலுக்கு இடையிடையே இதன் துணைப் பறவை எதிர்க்குரல் கொடுக்கிறது. அது குரல் கொடுக்கிறதா என அவ்வப்போது பார்த்துக்கொள்கிறது. ஆனால், பதில் வந்தாலும் வராவிட்டாலும் இடைவிடாமல் குரல் கொடுத்துக்கொண்டே இருக்கிறது. மன்றாடி, மன்னிப்புக் கேட்பது போல் இது இருக்கிறதா? கேட்டுச் சொல்லுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஈழம் தந்த பிள்ளைத்தமிழ் நூல்கள் – 6

    ஈழம் தந்த பிள்ளைத்தமிழ் நூல்கள் – 6

    மீனாட்சி பாலகணேஷ்

    இனி கையில் கிடைத்துள்ள அம்பிகை மீதான எஞ்சிய இரு பிள்ளைத்தமிழ் நூல்களைப் பற்றிப் பார்க்கலாம்.

    6. சுதுமலை புவனேசுவரி பிள்ளைத்தமிழ்

    சுதுமலை இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு ஊர். புவனேசுவரி அன்னைக்கான ஆலயம் இங்கு அமைந்துள்ளது. இந்த அன்னையின்மீது ஒரு அழகிய பிள்ளைத்தமிழ் நூல் பண்டிதர் மு. கந்தையா அவர்களால் இயற்றப்பெற்று1987-ல் வெளியானது.

    பிள்ளைத்தமிழின் கூறுகள் அனைத்தையும் கொண்டு பத்துப்பருவங்களில் பத்துப்பத்துப் பாடல்களுடன் பெருமைபெற விளங்குகிறது. இதன் நயங்கள் சிலவற்றைக் காண்போம்.

    சப்பாணிப்பருவத்தின் முதற்பாடல், மிக அருமையாக உள்ள ஒரு பாடல்:

    தாமரைமலரில் வைத்த பவளச் செப்பொன்று சிறிது திறந்தபடியுள்ளது. அதனுள்ளே உள்ள முத்துக்களில் சில தெரிகின்றன. இது எதற்கு உவமை? தாமரை போன்ற முகத்தில் பவளவாய் திறந்து சிரிக்கும் அம்மையின் பற்கள் முத்துப்போன்று காண்கின்றன. தாமரை மலரின் உள்ளிதழ்கள் ஒரு அரிய சிவப்பாகக் காணப்படும்; அப்படிப்பட்ட பாதங்களை மடித்து பத்மாசன நிலையில் அமர்ந்துள்ள குழந்தை. அனிச்ச மலரையொத்த மென்மையான சிவப்பு மெத்தையில் அழகாக அமர்ந்துகொண்டு சப்பாணி கொட்டுகிறாள் குழந்தை.

    பங்கயத்தில் வைத்த பவளநற் செப்பினிற்
    பாதிமுத் தொளிர்வ தேய்ப்பப்
    பல்லினொளி சிறிதே பளிச்சிட மொழிச்சிதர்ப்
    பால்வாய் குதட்டி யாணர்ச்
    செங்கமல வகவிதழ் சிவணுமிரு பதமடித்
    தொன்றுபத் மாசனத்திற்
    சீர்திக ழனிச்சசெஞ் செந்தூவி யணையினிற்
    செவ்வே நிமிர்ந்தமர்ந்து
    ………………………………………………………..
    சங்களை யிருக்கைகொண் டெங்களை யுருக்குமனை
    சப்பாணி கொட்டியருளே. (1)

    புலவரின் கற்பனை தேனினுமினிதன்றோ?

                                  ***

    அடுத்து நீராடற் பருவத்துப் பாடல்களுள் ஒன்றினைக் காண்போம்.

    இளம்பெண்கள், சிறுமியர், நீராடும்போது நிகழும் சில நிகழ்வுகளை வருணிக்கும் இனிய பாடலிது. சொல்லின் தெய்வமான கலைமகள், திருவின் தெய்வமான திருமகள் இருவரும் இருபக்கமும் இருக்க, சுழித்தோடும் நதி நீரில் துழாவியளைந்து மிதந்து ஆடுகின்றனள் அன்னை. செவிபொத்தி, கண்களை மூடி விளையாடும்போதில் கைகளும் கால்களும் நீரில் அளைவதனால் ‘முகேர்’ எனும் ஒலி எழுகின்றதாம். தாமரை மலரின் இனிய நறுமணத்தையும் நுகர்ந்து மகிழ்கின்றனர். ஒளிவீசும் பற்கள் தெரியுமாறு நகைத்தபடி தோழியரோடு மழலைச்சொல் பேசி  கமலமலரின் அழகினைப் பழிக்கும் முகத்தின் எழில் பொங்குமாறு புதுநீராடுக என வேண்டுகின்றார் புலவர்.

    சொற்படு கலைமகள் திருமகளெனுமிரு
    தோழியர் பாங்காகச்
    சுரிபுன லாழ்ந்து துழந்து மிதந்தும்
    துணைவிழி செவிபொத்தி
    முற்படு நீரில் முகேரெனு மொலியெழ
    மூழ்கி யெழுந்துமயல்
    முளரிப்புண மளவிக் கனிகொள
    மூசி முகந்தார்த்தும்
    எற்படு முத்தி னிளம்பத மூரல்
    இலங்க நகைத்துநகைத்
    தெதிருறு மகளிரோ டிதமுறு மழலை
    இசைத்து நசைக்கமலப்
    பொற்படு முகவெழில் பொங்கவே மங்கலை
    புதுநீ ராடுகவே
     …………………………………………………..

    இவ்வாறெல்லாம் அழகான பாடல்களைக் கொண்டது இந்நூல்.

                                                      0000000

    7. இணுவை சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ்

    இந்நூல் எவ்வாறு எழுந்தது?

    ஈழத்து அரசன் திருக்கோவலூர்ப் பேராயிரவன் காலத்தில் சிவகாமியம்மையின் ஒரு திருவுருவம் சிதம்பரத்தினின்றும் கொண்டுவரப்பட்டு இணுவையூரில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இவ்விடம் சிதம்பர வளவு எனவும் அறியப்பட்டது. ஆலயமும் உடன் எழுந்தது. இங்கு குடிகொண்டுள்ள அம்பிகை மீது அடியாரான சின்னத்தம்பிப் புலவர் பாடியதே ‘சிவகாமியம்மை தமிழ்’ என்னும் நூல்.

    இலங்கையைச் சிவபூமி என்பார் திருமூலர். பல சிவன், சக்தி, முருகன், விநாயகர் திருக்கோவில்களைக் கொண்டது. இணுவில் எனும் ஊர் இலங்கையின் யாழ்ப்பாணத்தில் யாழ் நகரிலிருந்து காங்கேசன் துறைக்குச் செல்லும் பெருவீதியில் நான்காவது கல் தொலைவில் உள்ளது. யாழ்ப்பாணத்துப் பரராசசேகர மன்னன் இவ்வூரிலிருந்து அரசு செய்தான் என்று சில பாடல்களால் அறிகிறோம். பரராசசேகர விநாயகர் கோவிலை அமைத்த அரசனும் இவனே எனப்படுகிறது.

    சின்னத்தம்பிப்புலவர் சிவகாமியம்மை மீது சிறை நீக்கிய பதிகம், பிள்ளைத்தமிழ், சிவகாமியம்மை துதி, சிவகாமியம்மை திருவூஞ்சல் ஆகிய நூல்களைப் பாடியுள்ளார்.

    சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ் எனும் நூல் பிள்ளைத்தமிழ் இலக்கணத்தின் பாற்பட்டதன்று. புலவர் சிவகாமி அம்மையைத் தாயாகவும் தம்மைச் சேயாகவும் வைத்து இந்நூலை ஆக்கியுள்ளார். பிள்ளையாகத் தம்மையே வைத்துப் பாடிய பாடல்கள் இருப்பதனால் பிள்ளைத்தமிழ் எனப் பெயர்பெற்றது. இதில் மொத்தமே பத்துப்பாடல்கள் தாம் உள்ளன.

    அன்னை சிவகாமியின் அருட்சிறப்பும், அருள் தத்துவங்களும்,  திருப்பெயர்களும் அமைந்தும், புலவர் தம்மைப் பிள்ளையாக்கிக் கொண்டு அன்னை அவளிடம் முறையிடுவதும் இந்நூலில் சிறப்பாக அமைந்துள்ளன. இப்பிள்ளைத்தமிழில் வடமொழிச் சொற்களும் சொற்பிரயோகங்களும் மிகுந்து காணப்படுகின்றன.

    இந்நூலின் பத்துப் பாடல்களும் பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தமாக இசைக்கப் பட்டுள்ளன.

    முதற்பாடலில் அன்னையின் ஸ்ரீ சக்ர வடிவைப் போற்றி, அவள் அடியார்களுக்கு அருளும் தகைமையைப்போற்றியும், இணுவை நகரின் வளத்தை ஏற்றியும் பாடியுள்ளார்.

    சீரணி முக்கோ ணத்து ளிருக்குந் தேவிசட் கோணத்துட்
    சேருங் கன்னி அட்ட தளத்துட் சீரார் கௌமாரி
    நாரணி யென்றுன் செய்ய பதங்கள் நாளுந் துதிசெய்யும்
    நம்பின பேருக் கம்புவி மீதே நல்லருள் புரிவாயே
    காரணி சோலையும் மணிமண் டபமுங் கஞ்ச மலர்த்தடமும்
    காவிச் செடியுங் கழுநீர்த் தொகையுங் கதிர்நித் திலங்களுந்
    தேரணி வீதிகளு மெங்கும் நெருங்குஞ் செல்வந் தழைக்கின்ற
    திருவள ரிணுவைப் பதிதனி லுறையுஞ் சிவகாமித் தாயே. (1)

    எட்டாம் பாடலில் அன்னையிடம் உரிமை கொண்ட பிள்ளை தனக்கவள் அருள்புரியத் தாமதிப்பதனால் அவளிடம் கோபித்துக் கொள்வதனைக் காண்கிறோம்.

    எள்ளுக்குள் எண்ணெயாக உள்ளவள் நீ; என்னிடம் ஏன் நீ இல்லை? உனக்கு எல்லாம் தெரியும்; எனது வறுமையும் பிணியும் நீ அறிந்திலையோ? உலகத்தே முப்பத்திரண்டு அறங்களை வளர்த்தாய் நீ; என்னிடம் மட்டும் ஏன் இரக்கமில்லை? நீ பிள்ளையே பெறாத மலடியோ? உலகெலாம் நீ பெற்றெடுத்தாய் என்பதும் பொய்தானோ? தான் பெற்ற பிள்ளை பேய்ப்பிள்ளை ஆனாலும் தாயென்பவள் அதனை இகழ்வாளோ? என்றெல்லாம் உரிமையோடு ஏசுகிறார்.

    எள்ளுக் குணெய்போ லெங்கும் நிறைந்தா யென்னிடத் தில்லையோ
    எல்லா மைந்தநீ யென்றனில் லாமையும் பிணியுந் தெரிந்திடாயோ
    உள்ளந் திகழ்பா வியேனென் பாசம் உனையடுத் தாலுமுண்டோ
    உலகத் துமுப்பத் திரண்டறம் வளர்த்தா யிரக்க மில்லையோ
    பிள்ளை பெறாமுழு மலடியோ யுலகெலாம் பெற்றதும் பொய்தானோ
    பேய்ப்பிளை யாகிலும் பெற்றதா யிகழ்வளோ பிழைபொறுத் துன்கருணை
    அள்ளித் தாராதெனைத் தள்ளிவிடல் நீதியோ ……. …………

                                                               (8)

    அன்னையின் அன்பினில் ஆழ்ந்து விட்டால் தான் பிள்ளையெனும் உரிமையுடன் அவளிடம் வேண்டலாமன்றோ?

    இத்துடன் அம்பிகை மீதான பிள்ளைத்தமிழ் நூல்கள் பற்றிய சிந்தனைகள் முடிவுறுகின்றன. இனி அவளுடைய திருமகனான முருகப்பெருமான் மீதான ஈழத்துப் பிள்ளைத்தமிழ் நூல்களைப் பற்றிக் காண்போம்.

    (வளரும்)

    Share
  • சிறிய கொக்கின் தந்திரம்

    சிறிய கொக்கின் தந்திரம்

    இரையைப் பிடிக்க இந்தச் சிறிய கொக்கு செய்யும் தந்திரத்தைப் பாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • நெற்றியில் நாமத்துடன் தாழைக் கோழி

    நெற்றியில் நாமத்துடன் தாழைக் கோழி

    நெற்றியில் நாமத்துடன் அழகிய தாழைக் கோழி.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • குறளின் கதிர்களாய்…(439)

    குறளின் கதிர்களாய்…(439)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(439)

    மிகினுங் குறையினு நோய்செய்யும் நூலோர்
    வளிமுதலா வெண்ணிய மூன்று.

    -திருக்குறள் -941(மருந்து)

    புதுக் கவிதையில்…

    மருத்துவ நூலறிஞர்கள்
    சொல்லும்
    வாதம் பித்தம் சிலேட்டுமம்
    என மூன்றாம்,
    உடல்நிலைக்கு ஒவ்வாமல்
    ஒருவனின்
    உணவும் செயலும்
    மிகுதியாயினும்
    மிகக் குறையினும்,
    மேனியில்
    நோய்கள் வரும்…!

    குறும்பாவில்…

    மருத்துவநூலோர் சொன்ன வாதமுதல்
    மூன்றாம் உடலுக்கொவ்வா உணவும் செயலும்
    மிகுந்தாலும் குறையினும் நோய்வரும்…!

    மரபுக் கவிதையில்…

    வருத்தியே உடலதைச் சாய்த்திடவே
    வந்திடும் நோய்களைக் குணப்படுத்தும்
    மருத்துவ நூலவர் கண்டறிந்த
    மகத்துவக் காரணம் வாதமுதல்
    இருந்திடும் மூன்றென உள்ளதான
    இவைகளாம் உடலதற் கொவ்வாத
    அருந்திடும் உணவதும் செயலதுவும்
    அதிகமோ குறையினும் நோய்வருமே…!

    லிமரைக்கூ…

    மருத்துவ நூலோர் கண்டவை,
    உடலுக்கொவ்வாத உணவுடன்செயல் கூடினும் குறையினுமவை
    நோய்தரும் குணத்தைக் கொண்டவை…!

    கிராமிய பாணியில்…

    நோய்வருமே நோய்வருமே
    ஒடலுக்கு நோய்வருமே,
    ஏதுவுமே
    அளவுக்குமிஞ்சினா நோய்வருமே..

    மருத்துவ நூலெல்லாம் படிச்சவுங்க
    கண்டறிஞ்சி சொன்னபடி
    ஒடலுக்கு ஒத்துக்காத
    ஒணவும் செயலுமே
    அளவுக்கு மிஞ்சியே
    கூடிப் போச்சிண்ணாலும்
    கொறஞ்சாலும்
    கொண்டுவருமே நோயத்தான்..

    தெரிஞ்சிக்கோ,
    நோய்வருமே நோய்வருமே
    ஒடலுக்கு நோய்வருமே,
    ஏதுவுமே
    அளவுக்குமிஞ்சினா நோய்வருமே…!

    Share
  • ஏழ்மைக் காப்பணிச் சேவகி (மூவங்க நாடகம்) I இரண்டாம் அங்கம் I பாகம் – 5

    ஏழ்மைக் காப்பணிச் சேவகி (மூவங்க நாடகம்) I இரண்டாம் அங்கம் I பாகம் – 5

    ஆங்கில மூலம்: ஜார்ஜ் பெர்னாட் ஷா
    தமிழாக்கத் தழுவல்: சி. ஜெயபாரதன், கனடா


    Share
  • மகா சிவராத்திரி: சீவனை அன்பெனக் கோளும் நாள்

    மகா சிவராத்திரி: சீவனை அன்பெனக் கோளும் நாள்

    பேரா. முனைவர். அழ. நா. அருணாசலம், அழகப்பா பல்கலைக்கழகம், தமிழ்நாடு

    உலகில் பிறந்த ஒவ்வொருவரும் நாம் நம்மை முதலில் நேசித்து, அதன் மூலம் நாம் நம் சக மனிதர்களை அன்பு செய்யும் பிரபஞ்ச நோக்கத்தை அடைய, நாம் நம் வினைப்பயனை கடக்க வேண்டும். ஒருவர் தன்னுடைய முற்பிறவி கர்ம வினைகள் அனைத்தையும் இறை வழிபாடு என்கிற மந்திர ஜெபம், யாகங்கள், அபிஷேக ஆராதனைகள், உழவாரப் பணி, அன்னதானம், முன்னோர்கள் தர்ப்பணம், ஆன்மிக பணி போன்றவைகள் மூலமாக வழிபாடு செய்து, நம் வினைப் பயனை கடந்து ஆன்ம விமோசனம் பெறவே இந்தப் பிறவி எடுத்து இருக்கிறோம். நாம் வாழும் பூமியை கர்ம பூமி என்று கூறுகிறார்கள். நம்முடைய ஒவ்வொரு செயலும் பாவக் கணக்கில் அல்லது புண்ணியக் கணக்கில் சேரும். பாவபுண்ணியம் பற்றிய சித்தர்களின் கர்ம விளக்கத்தையும் அதை கடக்கும் வழிமுறைகளையும் நம்முடைய தமிழ் மொழியில் ஏராளமான நூல்களில் காணலாம்.

    சித்தர்களின் கோட்பாடுகள் மதங்களைக் கடந்தவை, வாழ்க்கை என்னும் மாயப் பிடியில் சிக்காமல் இந்த பிரபஞ்ச இரகசியங்களையும், தன்னை உருவாக்கிய ஆதித் தலைவனையும் உணர்ந்து, நம் வாழ்வில் சகல நலன்களைப் பெறுவதே மகா சிவராத்திரியின் தத்துவம் ஆகும். அனுத் துகள்கள் மற்றும் பிரஞ்சத்தின் அனைத்து இரகசியங்களையும் சித்த மகான்கள் சொல்லியபடி நாம் சிவராத்திரி அன்று வழிபடுவது அறிவியல் சார் மெய் ஞானம் ஆகிறது.

    பிரபஞ்சத்தில் ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு கிரகங்கள் மற்றும் கோடான கோடி அண்ட நட்சத்திரங்களின் கதிர்வீச்சுக்கள் நம்மை கடந்து சென்றுக் கொண்டிருகின்றன. இத்தகைய கதிர்வீச்சுக்களை அறிவியல் பூர்வமாக சித்தர்கள் தம் யோக தியான வலிமையினால் இந்த ரகசியங்களை அறிந்து அதை நமக்கு தியான வழிபாடு என்று வெளிப்படுத்தினார்கள். அந்த வலிமையான தினம் மகா சிவராத்திரி என்பதை நமக்கு அறிவித்து சென்று உள்ளார்கள்.

    மனிதர்கள் உடலின் கட்டுப்பாட்டில் இருந்தால் வெளி முகமாகவும், ஆன்மாவின் கட்டுப்பாட்டில் இருந்தால் உள் முகமாகவும் செயல்படுகிறார்கள். மனிதன் தனது உடல் செயல் மூலம் வெளிமுகமாக திரும்ப முயற்சி செய்தால் அவனது உடலும், மனமும் சமநிலை தவறுகிறது, மேலும் தடுமாறுகிறது. மனிதன் சமநிலை தவறாத வண்ணம் அவனை உள்முகமாகவே வைத்திருக்க, மகா சிவராத்திரி வழிபாட்டில் தியானம் என்கிற ஒரு முக நிலை நம்மை என்றும் வாழ்வில் உள்முகமாக வைக்க நிலை செய்கிறது.

    மகா சிவராத்திரியன்று வழிபாடு செய்து ஆதி சிவனையும், நம் குல தெய்வத்தையும் வணங்கினால் நாம் செய்த அத்தனை பாவங்களும் நம்மை விட்டு காணாமல் போய்விடும். அடுத்த வரும் மூன்று ஆண்டுகளில் நாம் எதிர்பார்க்கும் அளவிற்கு மகத்தான வளம் மற்றும் வலிமை நம்மை வந்து சேரும் என்பது சித்த ரகசியம் ஆகும். மகா சிவராத்திரி என்பது பல கல்பகோடி இரவுகள் சேர்ந்து வந்த ராத்திரி. பல இரவுகளிலும் செய்கின்ற வழிபாட்டின் பலனை மகாசிவராத்திரி வழிபாடு ஒன்றே கொடுத்துவிடும் என்கின்றனர் சித்தர்கள். தொடர்ந்து பனிரெண்டு சிவராத்திரி இரவுகளில் அண்ணாமலையை கிரிவலம் வந்தால், கர்ம வினைகள் அனைத்தும் போய்விடும் என்பது சித்தர்களின் வாக்கு. நித்திய, யோக மற்றும் மகா சிவராத்திரிகள் நம் வினைப்பயன் போக்கும் ஆற்றல் கொண்டது. மகா சிவராத்திரி வழிபாடு மரணம் என்கிற எம பயத்தை போக்கி, அன்று வழிபாடு செய்யும் மக்களை எமதூதர்கள் நெருங்க அஞ்சுவார்கள் என சிவ புராணதில் மாணிக்கவாசகர் கூறுகின்றார். சிவராத்திரியின் நான்காம் காலத்தில் மிருத்யுஞ்சய மந்திரத்தை ஓதுவதின் மூலம் நம் பிணிகள் அனைத்தும் விலகும்.

    சித்தர்களின் தலைவராக இருப்பவரும், தமிழ் மொழியை ஈசனிடம் இருந்து பெற்று பூமிக்குக் கொண்டு வந்தவரும், ஜோதிடத்தின் தந்தையும், சித்த மருத்துவத்தின் தந்தையும், மந்திரங்களின் தந்தையுமாகிய அகத்திய மகரிஷி பல இரவுகளிலும் செய்கின்ற பூஜையின் பலனை சிவராத்திரி பூஜை ஒன்றே கொடுத்துவிடும் என்கிறார்.

    சிவராத்திரி அன்று தான தருமங்கள் செய்வதால் பெரும் புண்ணியம் கிடைக்கும். சிவலிங்கம், ருத்திராட்சம், ரத்தினங்கள், நிவேதனப் பொருட்கள், அன்னதானம் வழங்கினால் நன்மை உண்டாகும் என்று சித்தர்கள் கூறுகின்றனர். எனவே சிவராத்திரி அன்று வெறும் வழிபாடு மட்டும் வேண்டும் என்கிற கருத்து ஏற்புடையது அல்ல. எனவேதான் பல நூறு ஆண்டுகள் முதல் தொடங்கி இன்று வரை பல குல தெய்வக் கோயில்களில் ஊர்கூடி அன்னதானம் செய்து மகிழ்கின்றனர். தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் மகா சிவராத்திரி வழிபாட்டை உரிய முறையில் செய்தால் அனைத்து பாவங்களும் நம்மை விட்டு நீங்கும். மகா சிவராத்திரி வழிபாட்டை அனைவரும் சேர்ந்து சிவ ஆலயத்திலும், நம் குல தெய்வக் கோயிலிலும் வணங்கி அதன் பின் அன்னதானம் செய்தால் நம் பிறந்த பலனை பரிபூர்ணமாக தெய்வ அருள் கொண்டு பெறலாம் என்பது வாழ்வியல் உண்மை.

    உண்மையில் மகா சிவராத்திரியின் நான்கு காலத்திலும் விழித்திருந்து உயர்வான தியான நிலையில் மனம் ஒன்றி சிவத்தை உணர்ந்து சிவம் அருகே செல்ல முயலும் நிலையே மகா சிவராத்திரியின் அடிப்படை ஆகும். மனம் அமைதி கொண்டு தூய நிர்மலமான சிந்தனைகளோடு சிவத்தில் ஒன்றுவது என்பதே மகா சிவராத்திரியின் தாத்பர்யம் ஆகும். மகா சிவராத்திரி அன்று உருவமும் இல்லாது அருவமும் இல்லாத இறையை தியானித்து, நம் மனதை உள்முககமாக பயணிக்கச் செய்வதே முதல் நிலலை. அதன் பின் நாம் நம்மை உணர்ந்து, நாம் நம் தன்மையைக் கடந்து உள் சென்று உய்ய வழி பெறுவதே இறுதி நிலை, இதுவே மகா சிவராத்திரி வழிபாட்டின் மூலக்கரு ஆகும்.

    மகா சிவராத்திரி அன்று குறிப்பிட்ட கிரகங்களின் மற்றும் பேரண்டங்களின் கதிர்வீச்சுக்கள் இந்த பூமி முழுவதும் வியாபித்துக் காணப்படும், அதே சமயம் ஒரு குறிப்பிட்ட பகுதியில் பூமிக்கடியில் இருந்து நீரூற்று பிறப்பெடுத்து ஓடும். இந்த நீரூற்றுதான் சித்தர்கள் கூறும் மூப்பு, அண்டக்கல் என்றழைக்கப்படும் என்று சித்தர்கள் கூறுகின்றனர்.
    மகா சிவராத்திரி நாளில் நாம் செய்யும் தியானமானது, மூன்று மாதங்கள் இடைவிடாது தொடர்ந்து தியானம் செய்தால் கிடைக்கும் பலனைக் கொடுக்கும். இது சித்தர்களின் சாதனை முறை. இதையே நாம் அன்றைய தினம் கண்விழித்து இறைவனை துதி பாடி தியானித்து வருடம் தோறும் கொண்டாடினாலும், சித்தர்கள் சொல்லிய அகக்கண் விழிப்பு நிலையுடன் கூடிய தியான நிலையை பெரிதும் நாம் விட்டு விட்டு, புறக் கண் விழிப்பை மட்டுமே இன்றளவும் செய்து வருகிறோம்.

    சீவனும் சிவனும் இரண்டு அல்ல, அன்பும் சிவனும் இரண்டு அல்ல, இரண்டும் ஒன்றே என்றும் உணரும் ஆன்ம பேரொளியை நம் ஆன்மாவில் தோற்றுவிக்கும் வழிபாடே மகா சிவராத்திரி. எனவே நாமும் இப்புனித தினத்தில் எல்லாம் வல்ல பிரபஞ்சப் பேரியக்க ஆற்றலைக் கிரகித்து “அன்பு சிவம் இரண்டென்பார் அறிவிலார், அன்பே சிவமென்று ஆரும் அறிகிலார், அன்பே சிவமென்று ஆரும் அறிந்த பின் அன்பே சிவமென்று அமர்ந்திருந்தாரே என்று அன்பு செய்து புறக்கண் திறக்கும் வண்ணம் மகா சிவராத்திரியை தியான வழிபாட்டின் மூலம் மேற்கொண்டு அன்பு என்கிற சிவத்தை உணர முயற்சித்து மகிழ்வுடன் வாழ்வோமாக.

    Share
  • பக்தியாய் பாடிப் பரவிடுவோம் வாருங்கள்!

    பக்தியாய் பாடிப் பரவிடுவோம் வாருங்கள்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண் ….. ஆஸ்திரேலியா

    வேதத்தின்   முதல்வன் விடமுண்டன் கண்டன்
    ஆதியந்தம் இல்லான் அருளொளியாய் நிறைவான்
    சோதியென எழுந்தான் துடுக்கொழிய வைத்தான்
    மாலயனின் மயக்கம் போக்கியவன் நின்றான்

    மாலயனின் மயக்கம் போக்கிய நாளுலகில்
    மகாசிவ ராத்திரியாய் மலர்ந்ததென  வுரைப்பார்
    சீலமுடன் சிவனை சிரத்தையுடன் எண்ணி
    விரதமதை விரும்பி நோற்றிடுவார் அடியார்

    பசித்திருக்க வேண்டும் தனித்திருக்க வேண்டும்
    விழித்திருக்க வேண்டும் மெய்யுணர்தல் வேண்டும்
    ஆலமதை உண்ட அருட்கடலாம் சிவனை
    அகமிருத்தி விரதம் அனுட்டிக்க வேண்டும்

    அப்பனுக்கு ஒன்று அம்மைக்கு ஒன்பது
    இப்புவியில் விரதமதை ஏற்கின்றார் அடியார்
    எல்லாமே இராத்திரியாய் இருப்பதுதான் சிறப்பு
    இறையுணர்வை ஊட்டுவதே இதன் நோக்கமாகும்

    விரதமெனும் வார்த்தை வெறும் வார்த்தையல்ல
    பவவினைகள் போக்கும் பாங்கான வார்த்தை
    உடலுளத்தைத் தூய்மை ஆக்கிவிடும் வார்த்தை
    உணர்வுடனே செய்தால் உயர்நிலையே வாய்க்கும்

    ஆன்மீகக் கருத்துக்களை அலட்சியமாய் நோக்கும்
    அவலமது அலையலையாய் எழுகிறது நாளும்
    அறிவியலை நிறைத்தபடி ஆன்மீகம் அமைந்திருக்கு
    அதை உணர்ந்தால் அலட்சியமும் அகன்றோடிப்போகும்

    பிறக்கின்ற நாளெல்லாம் பெம்மானை நினைக்க
    இருக்கின்ற வகையினிலே இணைத்தார்கள் முன்னோர்
    வையத்து வாழ்வார்கள் வாழ்வாங்கு வாழ
    மனஞ்சிறக்க விரதமெலாம் வண்ணமுற வைத்தார்

    புராணக் கதையெல்லாம் பொருந்துமா என்பார்
    பூதலத்தில் கருத்துரைக்க தேர்ந்த வழியன்றோ
    கதையுரைத்து கதையுரைத்து கடவுளுணர் வூட்டும்
    காரியத்தை புராணமாய் கண்டார்கள் முன்னோர்

    மூடத் தனமென்று முழஞ்சுழிக்க வேண்டாம்
    முன்னோர்கள் சிந்தனையில் முகிழ்த்ததுதான் புராணம்
    முன்னைப் பழம்பொருளாய் முதலுக்கும் முதலாக
    விண்ணிற்கும் பரம்பொருளை விளக்கியதும் புராணமன்றோ

    திருமுறைகள் போற்றுகின்ற செம்பொருளாம் சிவனை
    சிவராத்திரி தினத்தில் சிந்திப்போம் வாருங்கள்
    சித்தர்க்குச் சித்தராம் திருச்சிற்றம் பலத்தானை
    பக்தியாய் பாடிப் பரவிடுவோம் வாருங்கள்

    Share
  • கடவுளின் வடிவம் யாது?

    கடவுளின் வடிவம் யாது?

    சி. ஜெயபாரதன், கனடா

    மனிதனுக்கு
    செவிகள் இரண்டு,
    கடவுளுக்கு
    காதுகள் ஏது மில்லை.
    மனிதனுக்கு
    கண்கள் இரண்டு,
    கடவுளுக்கு
    கண்கள் ஏது மில்லை.
    மனிதனுக்கு
    சுவாசிக்க மூக்கும்
    வாயும் உள்ளன.
    கடவுளுக்கு
    மூக்கு மில்லை,
    பேச நாக்கு மில்லை.
    மனிதனுக்கு
    காலிரண்டு, கையிரண்டு.
    எங்கும் நிறைந்த
    கடவுளுக்கு
    கை, கால்கள் எதற்கு ?
    மனிதனுக்கு
    உடல் உண்டு, உணவுண்டு.
    கடவுளுக்கு
    கால வெளியே உடம்பு.
    மனிதனுக்கு
    இருப்பது சிறுமூளை.
    கடவுளுக்கு
    உள்ளது பெருமூளை.
    மனிதருக்கு
    பல்வேறு முகமுண்டு ,
    அடையாளம்  காண்ப  தற்கு.
    கடவுள்
    முகம் அற்றது.
    பிறப்பும், இறப்பும்
    சுழற்சியாய்
    பெற்றது மனிதன்.
    கடவுள்
    பிறப்பு இறப்பு
    அற்றது.
    வயிற்றுக்குள் வளரும்
    யானைக் குட்டி
    தாயைக் காண முடியாது.
    கடவுள்
    உருவைக் காண்ப தற்கு
    பிரபஞ்ச  விளிம்யை
    கடக்க வேண்டும்,
    நர மனிதன் !

    Share
  • இசைக்கவியின் இதயம் (பிப்ரவரி 16, 2023)

    இசைக்கவியின் இதயம் (பிப்ரவரி 16, 2023)

    வணக்கம்.

    இசைக்கவியின் இதயம் இரண்டாவது நிகழ்ச்சி. என் நலம் விரும்பிகள், என் இனிய நண்பர்கள் வியாசர்பாடி திரு குருமூர்த்தி ஐயாவும், மதுரத்வனி திரு ராமகிருஷ்ணன் அவர்களும் இணைந்து வழங்குகிறார்கள்.

    கவிதையும் கானமும் என் உயிரின் இயல்புகள். கவிஞன் என்னும் இந்த அடையாளம் எனக்குத் தமிழ் தந்தது. என் பராசக்தி அந்தத் தமிழைத் தந்தாள்.

    என் கவிதைகளும், கானங்களும் மணமற்ற மலர்களாக இருந்தாலும், அவை அவளுடைய தோட்டத்து மலர்கள் என்பதில் எனக்கு மகிழ்ச்சி.

    பிப்ரவரி 16, வியாழன், மாலை 6.30க்கு, சென்னை மயிலாப்பூர் லஸ் முனைக்கு அருகிலுள்ள ஆர்கே கன்வென்ஷன் சென்டரில், என் கவிதைப் பொழிவு நடைபெறும்.

    சென்றமுறை வ.வே.சு.வின் வாழ்த்துரை. இந்த முறை இளம் கவிப்புயல் விவேக் பாரதி!

    வாருங்களேன்!

    வரவியலாதவர்கள், நேரலையில் பாருங்களேன்: https://youtube.com/live/ZgtKvOxh9HY

    அன்புடன்,
    ரமணன்

    Share
  • தேன்சிட்டின் மெல்லிய நாக்கு

    தேன்சிட்டின் மெல்லிய நாக்கு

    தேன்சிட்டின் இரு அலகுகளை மட்டுமே பார்த்திருந்தேன். தேன்சிட்டிற்கு ஒரு மெல்லிய நாக்கு இருக்கிறது. அது அலகை விட நீளமாக இருக்கும் என்பதை இப்போதுதான் கவனித்தேன். இந்தப் பதிவில் தேன்சிட்டின் சுறுசுறு அசைவுகளுக்கு நடுவே அந்த நாக்கை நீங்கள் காணலாம்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • வெண்கொக்கின் வித்தியாசமான வேட்டை

    வெண்கொக்கின் வித்தியாசமான வேட்டை

    சில திரைப்படங்களில் வில்லன் வித்தியாசமாக ஏதேனும் செய்துகொண்டே ஆளைப் போட்டுத் தள்ளுவார், பார்த்திருக்கிறீர்களா? அதே போன்ற ஒரு சம்பவம்.

    தாம்பரத்தில் வீட்டின் மொட்டை மாடியில் நின்றிருந்தேன். ஏதாவது நல்ல காட்சி சிக்குமா எனச் சுற்றிலும் பார்த்துக்கொண்டிருந்தேன். மதிலில் தனியே நின்றிருந்த ஒரு பெரிய வெண்கொக்கைப் படம் பிடிக்கத் தொடங்கினேன். முதலில் அது நடந்தது. பிறகு வித்தியாசமான நடனம் ஆடிக்கொண்டே சென்று இரையை லபக் எனப் பிடித்தது. இந்த அரிய காட்சியைத் தற்செயலாகப் படம் பிடித்தேன். அடுத்து என்ன நடக்கப் போகிறது எனத் தெரியாமலே இதைப் பதிவு செய்தேன். செம்மையான அந்தக் காட்சி இதோ.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • காதல்!

    காதல்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர் 
    மெல்பேண் … ஆஸ்திரேலியா

    காதல் இல்லா வாழ்க்கை
    களை இழந்த வாழ்க்கை
    காதல் இல்லா வாழ்க்கை
    கருத் திழந்த வாழ்க்கை 
    காதல் என்னும் நினைப்பு
    களிப்பு தரும் நாளும்
    காதல் என்னும் உணர்வு
    களிப் பளிக்கும் மருந்து   !

    மனித மனம் இணைய
    மருந் தாகும் காதல்
    மனித குணம் சிறக்க
    வழி வகுக்கும் காதல்
    மனித குலம் செழிக்க
    வழி சொல்லும் காதல்
    வைய வாழ்வு மலர
    வழித் துணையே காதல்  !

    இளமை வரும் காதல்
    முதுமை வரை வளரும்
    இல்ல மெலாம் ஒளிர
    ஏற்ற துணை காதல்
    அன்பு அறன் கருணை
    அளிப்ப தென்றும் காதல்
    அகில வாழ்வில் என்றும்
    அருங் கொடையே காதல்   !

    காதல் என்று சொன்னால்
    களிப்பு அங்கே பெருகும்
    காதல் என்று நினைத்தால்
    கல கலப்பு குவியும் 
    காதல் இல்லா வாழ்க்கை
    பாலை வனம் ஆகும்
    காதல் அது நிறைந்தால்
    வசந்தம் அங்கு வீசும்  ! 

    Share
  • (Peer Reviewed) உள்ளடக்கம் : யாத்வஷேம், ஆயிரம் சூரியப் பேரொளி

    (Peer Reviewed) உள்ளடக்கம் : யாத்வஷேம், ஆயிரம் சூரியப் பேரொளி

    முனைவர் செ.ர. கார்த்திக் குமரன்

    தொடக்கமாக

    சமகால நவீனத் தமிழ் இலக்கியப் படைப்புகளில், மொழிபெயர்ப்புப் பிரதிகளானது, தொடர்ந்து சில பதிப்பகங்களால் வெளிவந்து கொண்டிருப்பதால்தான் தேசியம் மற்றும் உலகளாவிய நாடுகளில் நிகழ்ந்த/நிகழ்கின்ற சமூகப் பொருளாதார அரசியல் நிலைகளை அறிந்துகொள்ளவும் முடிகின்றன. இதன்வழி, வாசிப்புத் தளத்தின் பரப்பானது விரிவடைவதுடன், பல்வேறு விதமான மாற்றங்களுக்கும் சிந்தனைகளுக்கும் நம்மை இட்டுச்செல்கின்றன. இதனால் பல புதிய எழுத்தாளர்கள் வாசகர்களுக்கு அறிமுகமாவதோடு, அவர்களின் நிலம் சார்ந்த பிற படைப்பாளர்களின் படைப்புகளையும் வாசிக்க வேண்டிய தேவையையும் தூண்டுதலையும் ஏற்படுத்தி விடுகின்றன. தமிழில் எழுதப்படுகிற ஆழ்ந்த, மிகநுட்பமான கருத்தாக்கங்களை உள்ளடக்கங்களாகக் கொண்ட தரமிகு படைப்புகளை வாசிக்க நேரிடும்போது, அதன் உருவம், சூழல், இடம், காலம் போன்ற இலக்கண வரையறைகளை(புனைகதை) மீறியும் பாதிப்பினை உண்டாக்கியும் தனக்கான தனித்த இடத்தினை அப்பிரதி பெற்றுவிடுகிறது. இதேபோல மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய பிற மொழிகளிலுள்ள இலக்கியத் தரமான படைப்புகளைத் தேடி வாசிக்கவும் வழிவகுக்கிறது. மேலும், அந்தியமொழி சார்ந்த படைப்புகளும் தமிழில் வெளிவருவதன் பொருட்டு, அப்பிரதிகளையும் வாசிக்க வேண்டும் என்ற எண்ணமும் இயல்பாகவே தோன்றிவிடுகின்றன.

    தமிழ்ப் புனைகதைப் படைப்புத் தளத்தில் பெரும்பங்காற்றிய படைப்பாளர்கள் பலர் இருப்பினும் அவர்களில் குறிப்பிட்டத்தக்கவர்களே தங்களின் படைப்புகளினூடாக மாற்று கருத்தாக்கத்தினை புதியதொரு நடையில் எழுத்துருவாக்கியுள்ளனர். இத்தன்மையானது பிராந்திய மற்றும் அந்திய மொழிகளிலுமே தங்களின் படைப்புகளின் ஊடாகக் காணமுடிகின்றன. இப்படிப்பட்ட பிரதிகள் காலந்தோறும் ஒரு சில படைப்பாளர்களால் படைக்கப்பட்டு, அது உலகம் தழுவிய அளவில் கவனமும் அதற்கான அங்கீகாரமும் விருதுகளும் கிடைக்கப்பெறுகின்றன. இந்தியாவில் ஞானபீடம், சாகித்தி்ய அகாதெமியும் உலகயளவில் நோபல், புக்கர் போன்ற பரிசுகளும் படைப்புத் தடத்தில் இயங்கும் எழுத்தாளர்களுக்கு கிடைக்கும் ஒரு கௌரவமாகவும் பொருளாதார ரீதியில் அவர்களின் எழுத்துலக வாழ்க்கைக்கு சிறந்ததொரு பயனையும் தரவல்லதாக இருக்கின்றது. இத்துடன், இலக்கியம் குறித்த கவனத்தை, பொதுமக்களிடையேயும் கல்விசார் மக்களிடையேயும் ஏற்படச் செய்து, மற்ற படைப்பாளர்களை ஊக்குவிக்கவும் செய்கின்றது. இதனால், இப்படைப்புகள் மட்டுமே சிறந்தது என்று எண்ணுதலால் பயன்தராது. இப்பிரதிகளைப்போலவே அல்லது இதற்கும் மேம்பட்ட படைப்புகளைத் தேடியடைந்து வாசிக்கும் போதுதான் இலக்கியத் தரம் பற்றிய புரிதலை அறியமுடியும்.

    காலமாற்றித்திற்கேற்ற வகையில் இப்புனைகதை வடிவங்களும் மாற்றம்பெற்றே வந்துள்ளன என்பதை வாசிப்பினூடே உணர்ந்துகொள்ள முடியும். எனினும் கடந்தகாலத்தில் நிகழ்ந்த வரலாறுகளை, தற்காலச் சூழலோடு பொருத்திப் பார்க்கும் விதமாகவும் நிகழ்கால அரசியலின் தன்மைகளையும் அதன் தீவிரத்தினையும் எடுத்துரைக்கும் நடையிலும் படைப்புகள் படைக்கப்படுகின்றன. அந்தவகையில், கன்னட மொழிப் படைப்பான நேமிச்சந்த்ராவின் ‘யாத்வஷேம்’(yaad vashem) என்ற பிரதியும் ஆப்கான் எழுத்தாளரான காலித் ஹூசைனியின் ‘ஆயிரம் சூரியப் பேரொளி’(A Thousand Splendid Sons) ஆகிய இரு மொழிபெயர்ப்புப் படைப்புகளின் தனித்தன்மையை ஆராயும் நோக்கில் இக்கட்டுரை அமையப்பெற்றுள்ளன. தங்களின் அரசியல் ஆளுகைக்கு கீழ் நிகழ்த்தப்படுகின்ற வன்முறைகளையும் அதனால் அந்நிலப்பகுதிசார் மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை உள்ளடக்கங்களாகக் கொண்ட இவ்விரு படைப்புகளின் வழி காணலாகிறது. மேலும், இது சமகால பன்னாட்டு அரசியல் சார்ந்த செயல்பாடுகளின் நோக்கங்களையும் இதனால் இந்திய அரசியல் சூழலில் ஏற்படுகின்ற மாற்றங்களை அறிவதற்கும் இப்புனைவுகளை ஆராய்வது அவசியமாகின்றன.

    யாத்வஷேம் : நேமிச்சந்த்ரா

    கர்நாடக சாகித்ய அகாதமி விருதுபெற்ற ‘யாத்வஷேம்’ நேமிச்சந்த்ரா என்ற பெண் எழுத்தாளரால் படைக்கப்பட்டுள்ளது. இவருடைய ‘ஒளிக்கொரு கிரணம் மேரிக்யூரி’, ‘பெருவின் புனித பள்ளதாக்கில்’ ஆகிய நூல்களும் இந்த விருதினைப் பெற்றுள்ளது. பொறியியலாளரான இவர், இந்துஸ்தான் ஏரோனாடிகல் லிமிடெட், பெங்களூரில் டிசைன் எஞ்சினீயராகவும், ஜெனரல் மேனஜராகவும் பணியாற்றியவர். இலக்கியம், அறிவியல், பெண்களைப் பற்றிய ஆய்வு, பயணம் ஆகியவற்றில் முக்கிய விருப்பங்கள் கொண்ட இவர், முப்பது நூல்களை கன்னடத்தில் எழுதியுள்ளார். ‘தான சிந்தாமணி அத்திமப்பே’ விருது, ‘சிவராமகாரந்த’ விருது, ‘மாஸ்தி வெங்கடேச ஐய்யங்கார்’ விருது, ‘கிருஷ்ணானந்த காமத்’ விருது என இலக்கியத்திற்காக பல விருதுகளைப் பெற்றவர். இத்துடன், ‘சொசைட்டி ஆஃப் இண்டியன் ஏரோஸ்பேஸ் டெக்னாலஜி அண்ட் இண்டஸ்ட்ரீஸ்’ அளித்த ‘விமன் அச்சிவர் இன் ஏரோஸ்பேஸ்’ விருதும் கிடைத்துள்ளது.

    கே. நல்லதம்பி என்பவரால் இந்நாவலானது, தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு அக்டோபர் 2020இல் எதிர் வெளியீடாக வந்துள்ளதோடு, 2022ஆம் ஆண்டின் சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதெமி விருதும் கிடைக்கப்பெற்றுள்ளது. உலகம் முழுமைக்கும் தன் ஆளுகைக்குள் கொண்டு வர நினைத்த ஜெர்மனியின் அதிபரான ஹிட்லர் பற்றிய வரலாற்றினை இப்பிரதி எடுத்துரைக்கிறது. ஜெர்மனியின் தலைநகரான பெர்லினில் வசித்துவரும் ஒரு யூத குடும்பம் ஹிட்லரின் ஆட்சியினால் அம்மண்ணிலிருந்து புலம்பெயர்ந்து காந்தியின் மண்ணிற்கு(பம்பாய்) வந்த குட்டி யூதச் சிறுமியின்(ஹ்யானா-அனிதா) கதைதான் யாத்வஷேம். யூதர்களின் உலகை திறந்துகாட்டும் விதமாக பன்னிரண்டு ஆண்டுகால உழைப்பின் உருவானது. ஜெர்மனி, நியூயார்க், இஸ்ரேல் ஆகிய நாடுகளில், ஹிட்லரால் வதைமுகாம்களில் கொல்லப்பட்ட யூதர்களின் பெயர்ப்பட்டியலோடு கூடிய அருங்காட்சியங்கள் பற்றிய தகவல்களையும் இன்னபிறவற்றையும் அகற்றமுடியாத வலியோடு இப்பிரதி புலப்படுத்தியுள்ளன.

    ஹிட்லர் தனது ஆட்சி அதிகாரத்தினூடாக அறிவியலாளர்கள், விஞ்ஞானிகள், பொறியியல் வல்லுனர்கள், மருத்துவர்கள் ஆகியவர்களின் துணைகொண்டு, ஆஷ்விட்ச் மற்றும் ஆர்ம்ஸ்டர்டாம் என்ற இரு வதைமுகாம்களை உருவாக்கினார். இதன் வழி யூதர்களை (ஆறு மில்லியன்) பேரழிவிற்குள்ளாக்கி, உலகிலுள்ள ஒட்டுமொத்த மனிதசமூகத்திற்கும் அச்சத்தை விளைவித்ததோடு, உலகையே தன்வசப்படுத்த நினைத்தார்.  அதனால் அன்று பற்றி எரிந்தது ஜெர்மனி; நின்று பார்த்தது உலகம். ஐரோப்பிய நாடுகளில் உருவாக்கப்பட்ட (மக்களின்) தேசிய அடையாள அட்டையின் தரவுகளால்தான் யூதர் என்ற இனமே தம்சொந்த மண்ணில் வாழமுடியாமல், பல்வேறு நாடுகளுக்குச் சென்று வாழநேர்ந்தது. இப்பிரதியும் ஒரு குடும்பத்தின் சீர்குலைவையும் அதில் உயிரோடிருக்கும் பெண்ணின் நினைவுத்தடமும் தேடலுமே இதன் உருவம்.

    பல சாதி, சமய, இனங்களையும் பன்முகப்பட்ட கலாச்சாரங்களையும் கொண்ட இந்தியாவில் பம்பாய்க்கு வரும் ஹ்யானா என்ற அனிதாவும் அவளுடைய தந்தையாரும் இங்கு காணநேரும் ஓர்மையுள்ள வாழ்வியலையும் தன்னுடைய நாட்டிற்குமான நிலையையும் ஒப்பிட்டுப் பார்க்கின்றனர். இத்துடன், அவர்கள் நம்பவேமுடியாத அளவிற்கு, ஆயிரம் சாதிகளுக்கு நடுவிலும் வாழக்கூடிய இந்தியாவின் ரகசியத்தை இம்மண்ணிலுள்ள குடும்பங்களின் வழி  கண்டுணர்கின்றனர். தன்னுடைய தந்தை, தாய், அக்கா(ரெபேக்கா), குட்டிதம்பி(ஐசாக்) ஆகியோருடன் ஹ்யானா இன்பமான வாழ்வியலை மேற்கொண்டார். 1933இல் ஹிட்லர் ஆட்சிக்கு வந்த பிற்பாடு, தன் குடும்பமே சிதைவுறுகிறது. தந்தையும் ஹ்யானாவும் தப்பித்து, நாட்டை விட்டு வெளியேற, மற்ற மூவரும் நாஜி காவலர்களால் கைது செய்யப்படுகிறார்கள். அவர்களின் நிலையை அறியவேண்டும் என்ற எண்ணம் ஹ்யானாவிற்குள் சதாகாலமும் எழுகிறது. அவள் விவேக்கை திருமணம் செய்து கொள்கிறாள். விசு என்ற ஆண் குழந்தையை பெற்றெடுக்கிறாள்.

    தன் சொந்த மண்ணை விட்டு வந்து, ஏறத்தாழ 55வருடங்களை கடந்த பின்னும் தன் குடும்ப நபர்களைத் தேடி ஆர்ம்ஸ்டர்டாம், டகாவ், நியூயார்க், வாஷிங்டன் டி.சி., டெல் அவிவ், ஜெரூசலம் ஆகிய நகரங்களுக்குச் செல்கிறாள். இதன்வழி அவள் அடைந்த உணர்வுகளையும் அத்தேடலினூடாக ரெபேக்காவை கண்டைந்ததையும் இப்பிரதி விவரிக்கிறது. இத்துடன், நாஜி ஹிட்லர் வதைமுகாம்களிலும் ஜெர்மனியில் உள்ள மக்களின் மீதும் செய்த கொடூரத்தினை, அவலங்களை ரெபேக்காவின் வழி உலகிற்கு எடுத்துரைத்துள்ளார் நேமிச்சந்த்ரா.

    “மனது எங்கோ ஓடியது. யார் மீதமிருக்கலாம், என் வம்சத்தில், அப்பாவின் இரண்டு அண்ணன்கள், ஒரு தங்கை, அம்மாவின் மூன்று தம்பிகள், அம்மா, அக்கா, சின்னத் தம்பி – என் இரத்தத்தைப் பகிர்ந்துகொண்ட யார் மீதமிருக்கலாம்? உயிருடன் இருப்பார்களா? தேடலாமா? என் வாழ்க்கையில் என்றாவது ஐரோப்பாவிற்குப் போவேனா. ஒவ்வொரு  கதவாகத் தட்டி இமா இருக்கியா? ரெபேக்கா எங்கே இருக்கே? ஐசாக், என் குட்டிக் கண்ணா எங்கே இருக்க? தேடமுடியுமா. என்றாவது தெரியவருமா, என்னவர்கள் என்ன ஆனார்கள் என்று, என் வம்சத்திக் கதை? என் பிள்ளைகளுக்கு, பேரக்குழந்தைகளுக்கு என் அத்தையைப் போலவே நானும் என் வம்சத்தின் கதைகளைச் சொல்லமுடியுமா?

    என்னவென்று சொல்வேன், பெர்லின் பால்யத்தின் இனிமையான நினைவுகளை இரத்தம் பொதிந்த இரவுகள் துரத்திக்கொண்டு வருகின்றன.”1 என்ற பதற்றமான, மனதிலிருந்து ஆறாத வலியுடன்கூடிய வாழ்வையே யூதர்கள் பெற்றுள்ளதை இது வெளிப்படுத்தியுள்ளது. சர்வதிகாரியின் ஆட்சியில் ஆயிரம் ஆயிரம் யூதர்கள், தங்களின் பூர்விகத்தை விட்டு, அவரச, அவசியமாக வெளியேறி, உயிரைத் தற்காத்துக்கொள்ள வேண்டியிருந்தது. இதற்கெதிராக யாரும் செயல்பட முடியாத சூழலையும் நாஜிகள் ஏற்படுத்தியிருந்தனர்.

    “அறுபது லட்சம் யூதர்களையும், கணக்கில்லாத கம்யூனிஸ்ட்களையும், உடல் ஊனமுற்றோரையும் கொடூரமாகக் கொன்று குவித்த போதிலும், நாஜி ஜெர்மனியில் ஹிட்லருக்கு எதிரான குரல் கேட்கவில்லை விவேக். மக்கள் வீதியில் இறங்கி மற்றொரு கூட்டத்து மக்களின் மீது நடக்கும் மனிதத்தன்மையற்ற சுரண்டலை எதிர்க்கவில்லை. வரலாற்றின் இரத்தம் தோய்ந்த பக்கங்கள் அன்றே முடிந்துவிட்டன என்று எனக்குத் தோன்றவில்லை விவேக். இது ஒரு ஹிட்லரின் மதி இழந்த நீதியால் நடந்த வரலாற்றுச் சோகச் சம்பவம் அல்ல. நன்கு யோசித்துத் திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலைகள் அவை…”2 என்கின்ற தன்மையில் ஹிட்லர், தான் ஆட்சி அதிகாரத்துக்கு வந்தவுடன் செய்த கொடூரங்களானவை, முன்கூட்டியே தீர்மானித்துவிட்டு, அதை நடைமுறைப்படுத்தியதே. 1935இல் ஹிட்லரின் நியூரெம்பர்க் சட்டமானது,  முக்கியமாக யூதர்களுக்கு எதிராக உருவாக்கப்பட்டது. யூதர்களின் நாகரிகம், சமுதாய, உத்தியோக உரிமைகளை முடக்குவதற்காகக் கொண்டுவரப்பட்ட சட்டம் அது. ஆரியர்கள் அல்லாத இனத்தவருக்கு அது அச்சுறுத்தலாக இருந்தது. அச்சட்டம் பலருக்கு வரும் துன்பவெள்ளத்திற்கான  முன் அறிவிப்பை தந்தது. இதனால், யூதர்கள் ஜெர்மனியை விட்டு வெளியேறும் வழிகளைத் தேடிக்கொண்டிருந்தார்கள். பல தலைமுறைகளாக வேர்விட்டு வளர்ந்த யூதர்களின் நிலத்தை திருடி, அவர்களை வேரோடு பெயர்த்துவிடும் பயங்கரத் திட்டமாக இருந்தது. இதன் விளைவே பின்னாட்களில் வதைமுகாம்களை உருவாக்கி, பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்தார் என்பதை வேதனையுடன் அறியமுடிகிறது.

    தான் விரும்பியது எதையும் சாதிக்கமுடியாத சிறுவன் ஆடோல்ஃப். பள்ளியில் தேறாத, திருமணம் ஆகாதவர்களுக்குப் பிறந்தவன். தோல்வியின் யதார்த்தில் துவண்ட அவன் மனது, சகிப்பின்மை, கோபம், வெறுப்புக்களை மட்டுமே கொண்டு வளர்ந்துள்ளான். இதனால்தான் மரணமுகாம்களை எழுப்பி, தமக்குள் இருக்கும் இருள் நிறைந்த இரகசிய பாகத்தின் வழி, மற்றொருவரின் சாவை இத்தனை அமைதியாகச் செய்தான் போலும். எனினும் ஹிட்லர் மனித வரலாற்றில் தன்னந்தனியாக தோன்றியவன் இல்லை. மனித வாழ்க்கையில், பன்முகப்பட்ட எதிர்பாராக் கொடூரங்களைச் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என்பதற்கு ஒரு உதாரணம்தான் ஆடோல்ஃப் ஹிட்லர். இக்குணம் சமகாலத்தில் வாழும் மக்களின் உள்ளுணர்வுகளிலும் அதிகாரம் செய்வோரிடத்தும் மறைமுகமான தன்மையில் இருந்துகொண்டேதான் உள்ளன என்பதனையும் நேமிச்சந்த்ரா இப்படைப்பினூடாக எடுத்தியம்புகிறார்.

    ஆயிரம் சூரியப் பேரொளி : காலித் ஹூசைனி

    ஆப்கானிஸ்தான் எழுத்தாளரான காலித் ஹூசைனி எழுதிய நாவல்தான் ஆயிரம் சூரியப் பேரொளி(A Thousand Splendid Sons). தமிழில் ஷஜிதா என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டு, ஜனவரி 2020இல் (எதிர் வெளியீடு) இந்நாவல் வெளிவந்தது. 1965இல் காபூலில் பிறந்த காலித் ஹூசைனி, 1978இல் அங்கு உருவான மக்கட் புரட்சியைத் தொடர்ந்து நிகழ்ந்த ரஷ்யர்களின் ஊடுருவலுக்குப் பிறகு 1980இல் அவருடைய குடும்பத்தினர் அங்கிருந்து புலம்பெயர்ந்து அமெரிக்காவில் தஞ்சமடைந்தனர். 32 வருடங்களாக உலக அளவில் அதிகமான அகதிகளை உண்டாக்கும் நாடாக, ஆப்கானிஸ்தான் அறியப்பட்டிருக்கிறது. 2006இல், அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் முகமைக்கு அமெரிக்காவின் நல்லிணக்கத் தூதுவராக அவர் நியமிக்கப்பட்டார்.  தன்னுடைய தாய்நாட்டிற்காகத் தொடர்ந்து குரல் எழுப்பவும் எழுத்துப்பணியில் தீவிரமாக ஈடுபடவும் தாயகம் திரும்பும் மக்களுக்கு அடிப்படை வசதிகளைச் செய்து தரவும் தன் மருத்துவப்பணியையே கைவிட்டிருக்கிறார்.

    ஆப்கானில் தொடர்ச்சியான அந்தியப் படையெடுப்புகள், ஆட்சிக் கவிழ்ப்புகள் ஆகியவற்றால் அலைவுகளுக்குட்பட்ட நாட்டில் பல நூற்றாண்டுகளாக இரண்டாம்தரக் குடிமக்களாகவே நடத்தப்பட்டு வந்திருந்த அந்நாட்டின் பெண்களுக்கு, முஜாஹிதீன்கள் மற்றும் தாலிபன்கள் மதத்தின் பெயரால் நிகழ்த்திய வன்முறைகளைப் பதிவுசெய்யும் விதமாகவே இந்நாவல் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதற்கு முன் வெளிவந்த ‘பட்ட விரட்டி’ (The Kite Runner) என்ற நாவலும் ஆப்கானில் நிகழ்ந்த கொடூரங்களையும், இனவெறி, மதவெறி மற்றும் ஆதிக்கவுணர்வினால் ஏற்படும் சிக்கல்களையும் அமீர், ஹசன் என்ற இரு கதாபாத்திரங்களின் ஊடாக எழுத்துருவாக்கியுள்ளார். இத்துடன், ஆப்கானிஸ்தானின் முடியரசின் வீழ்ச்சி, சோவியத் படையெடுப்பு, பாகிஸ்தானுக்கும் அமெரிக்காவுக்குமான மக்கள் வெளியேற்றம் மற்றும் தாலிபன் ஆட்சியின் காலகட்டங்களை புலப்படுத்தும் விதமாக இக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. இவருடைய நாவல்கள் உலகெங்கிலும் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, கோடிக்களுக்கு மேல் விற்பனையாகியும் சிறந்த கதைசொல்லியாகவும் திகழ்கிறார். உலகில் உள்ள சிறந்த பத்திரிக்கைகள் இவருடைய கதை சொல்லும் திறனையும் நடை மற்றும் பாணியையும் நாவலுக்கான எல்லா நுணுக்களையும் தன் எழுத்தில் கொண்டிருப்பதாக கருத்துரைக்கின்றனர்.

    மரியம் மற்றும் லைலா என்ற இரு பெண் கதாபாத்திரங்களின் வழி தாலிபன்களின் கொடுங்கோலாட்சியில் பெண்கள் அனுபவித்த அல்லல்களை, நீக்கவொண்ணா துயரங்களை உலகிற்கு தன் ஆற்றல்மிக்க எழுத்தினால் வெளிப்படுத்தியுள்ளார். ஹெராத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள குல்-தமானில் மரியம் ஹராமில்(முறைகேடாகப் பிறந்தவர்) பிறந்தவள். ஹெராத்தில் செல்வசெழிப்புடன் வசிக்கும் ஜலீல் தான் அவளுடைய தந்தை. மரியத்தை நாணா பிரசவித்த 1959இல் வசந்தத்தின் ஈரப்பதமான மழைநாளில், ராஜா ஜாஹிர் ஷாவின் மகாமோசமான 40 ஆண்டுகால ஆட்சியின் 26 ஆவது வருடத்தில் நிகழ்ந்தது. வலிப்புநோயின் காரணமாக நாணா இறந்துவிட மரியத்தை தன் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார் ஜலீல். இதனைப் பொறுத்துகொள்ள முடியாத கதீஜா(ஜலீலின் முதல் மனைவி) மற்றும் அவருடைய குடும்பத்தினர் 15 வயதான மரியாவுக்கு, 45 வயதிலிருக்கும் ரஷீதை திருமணம் செய்வித்து, காபூலுக்கு அனுப்பப்படுகிறாள்.

    லைலா தன் பெற்றோர்களான ஹக்கீம், ஃபர்பீனுடனும் சகோதரர்களான அஹமத், நூருடன் காபூலில் வாழ்ந்து வருகிறாள். இராணுவத்தில் சேர்ந்த அவளுடைய சகோதரர்கள் போரில் இறந்துவிட, அதன் காரணமாக பெஷாவருக்கு செல்ல நினைக்கின்றனர். பயணத்திற்கு தயாராகும் நிலையில்,

    “லைலா புத்தகங்களைத் தன் பாதங்களின் கீழே போட்டாள். கண்களின் மீது ஒரு கையால் அரண் அமைத்தாள். மேலே நிமிர்ந்து வானத்தைப் பார்த்தாள்.

    பிறகு, ஒரு ராட்சத உறுமல் கேட்டது.

    அவளுக்குப் பின்னால், வெண்ணொளிச் சிதறல் ஒன்று எழுந்தது.

    அவளுடைய பாதங்களுக்குக் கீழே பூமி நழுவியது.

    சூடான, சக்திமிக்க எதுவோ ஒன்று, பின்னாலிருந்து பாய்ந்து அவளுக்குள் மோதியது. அவளுடைய செருப்புக்களை, அவளுடைய பாதங்களில் இருந்து அது உதறச்செய்தது. அவளை உயரே தூக்கியது. இதோ அவள் பறக்கிறாள், விண்ணில் சுற்றிச் சுழல்கிறாள், வானத்தைப் பார்க்கிறாள், பிறகு பூமியை, வானத்தை, பிறகு பூமியை. எரிந்துகொண்டிருந்த மரத்துண்டு ஒன்று அவளை உராய்ந்துகொண்டு பறந்தது. ஆயிரக்கணக்கான கண்ணாடிச்சில்லுகளும் அப்படியே பறந்ததில் அவளைச் சுற்றிப்பறந்த ஒவ்வொரு தனிச் சில்லையும் லைலா பார்த்தாள். மெல்லச் சுழன்று பறந்த அவற்றின் மீது சூரிய ஒளி பாய்ந்தது. சிறிய அழகான வானவில்கள் ஒளிர்ந்தன.

    பிறகு, லைலா சுவரில் மோதினாள், நொறுங்கித்தரையில் வீழ்ந்தாள், அவளுடைய முகத்திலும், கைகளிலும், மண்ணும், கண்ணாடிச்சில்லும், கற்களும் குவித்தன. கடைசியாக அவள் உணர்ந்தது அவளுக்கு அருகில், மண்ணில், சப்தத்துடன் ஏதோ விழுந்ததை. ரத்தக்களரியான ஏதோ ஒன்று. அதன் மீது, சிவப்பு பாலத்தின் முனை, கனத்த பனிக்குள்ளிருந்து எட்டிப்பார்த்தது தெரிந்தது.

    அவளைச்சுற்றி உருவங்கள் நகர்ந்தன. மேற்கூரையிலிருந்து மஞ்சள் விளக்கொன்று எரிகிறது. ஒரு பெண்ணின் முகம் தோன்றுகிறது. அவளிடம் குனிகிறது.

    லைலா மீண்டும் இருளுக்குள் கரைந்தாள்.”3  திடீரென நிகழ்ந்த ஏவுகணை தாக்குதலினால், தன் பெற்றோர்கள் இறக்க, மரணத்தின் விளிம்பிலிருந்து தப்பித்து, மரியத்திடம் உதவியைப் பெறுகிறாள். ரஷீத் அவளிடம் உறவுகொண்டு, அஸீஸைப் பெற்றெடுக்கிறாள். பிறகு, அவனின் நடவடிக்கைகள் பிடிக்காமல், இருவரும் பெஷாவருக்கு செல்ல திட்டமிடுகிறார்கள். அதனால் அவர்களுக்கு நிகழும் பிரச்சினைகளையும் தாலிபன்களால் ஆப்கானில் பெண்களுக்கு ஏற்படும் சிக்கல்களையும் சொல்வதாக கதை நகர்கிறது.

    ஆப்கானிஸ்தான் நிலத்தில் துப்பாக்கி குண்டுகள், ஏவுகணைத் தாக்குதல்கள், ரஷ்ய இராணுவம், தாலிபன்கள், அமெரிக்கா துருப்புகள் மற்றும் CIA, அரசு நடவடிக்கைகள், அரசியல் பூசல்கள், அல்கொய்தா போன்றவற்றால் மக்களின் இயல்பு வாழ்க்கையே(நொடிக்குநொடி) பெரும் இன்னல்களுக்கும் நெருக்கடிகளுக்கும் சிக்கல்களுக்கும் ஆளாவதை இப்பிரதி முழுமைக்கும் காலித் பதிவுசெய்துள்ளார். 1959ஆம் ஆண்டிலிருந்து 2011 வரை ஏறத்தாழ 52 வருடங்களில் ஆப்கானிய மண்ணில் நிகழ்ந்த அரசியல் வரலாற்றினை உலகிற்கு எடுத்துரைத்துள்ளார். இத்துடன், இந்நிலத்தை தங்களுக்கு ஏதுவான முறையில் பயன்படுத்திக்கொண்ட வல்லரசு நாடுகளின் சூழ்ச்சியினையும் இதனால் தங்கள் நாட்டிற்குள் நிகழ்ந்த வன்முறைகளை, இழப்புகளை (World Trade Center, New York, The Pentagon – Sep 11, 2011)  இந்நாவலினூடாக அறியநேர்கிறது.

    “ஏப்ரல் 27 அன்று மரியத்தின் கேள்விக்கு, பலத்த வெடிச்சதப்தமும், திடீரென்றெழுந்த கடுமையான முழங்கோசைகளும் பதிலாக வந்தன. வெறுங்கால்களோடு வரவேற்பறைக்கு ஓடியவள், ஏற்கனவே அங்கே கலைந்த தலையும், பனியனுமாக, சன்னல் கண்ணாடியில் உள்ளங்கைகளைப் பதித்துக்கொண்டு ரஷீத் நின்றிருப்பதைக் கண்டாள். அவனுக்கு அடுத்திருந்த சன்னலுக்கு அவள் ஓடினாள். வானத்தில் ராணுவ விமானங்கள் வடக்கு நோக்கியும் கிழக்குப்புறமாகவும் சீறிக்கொண்டு பறப்பதைப் பார்த்தாள். செவிடாக்கக்கூடிய அவற்றின் அலறல் அவளுடைய காதுகளை நோகச் செய்தது. தொலைதூரத்தில் பலத்த வெடியோசைகள் எதிரொலிக்க, திடீர் புகை மண்டலங்கள் கிளம்பி விண்ணுக்கு உயர்ந்தன.

    “என்ன நடக்கிறது ரஷீத்? என்ன இது?” அவள் கேட்டாள்.

    “இறைவனுக்குத்தான் தெரியும்.” அவன் முணுமுணுத்தான்.”4 யாரும் எதிர்பாராத சமயத்தில் நிகழும் ஏவுகணை தாக்குதல்களாலும் குண்டுவெடிப்புகளாலும் உயிர்கள் பலியாவதும் உடல் பாகங்கள் சேதமடைந்து ஊனமாவதும் தொடர்ந்து ஏற்படுகின்றன. தங்களுடைய வாழ்வே எவ்வித பிடிமானம் அற்று, எந்நேரமும் பதைபதைப்புடன்கூடிய சூழ்நிலை இருப்பதால்தான், அம்மக்கள் பெஷாவர், ஈரான், கனடா, அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளுக்கு புலம்பெயர்கின்றனர். பாகிஸ்தானில் மட்டும் ஏறத்தாழ 2 மில்லியன் ஆப்கானிய மக்கள் அகதிகளான வந்துள்ளதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர். மனிதனுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் கூடக் கிடைக்கப்பெறாமல், ஒரு பகுதி மக்கள் நாடோடிகளாக இருக்கும் நிலையில், உலகத்திலுள்ள பிறர் சகலவிதமான வசதி வாய்ப்புகளைப் பெறுகின்றனர். இதனை உலகம் தழுவிய பிரச்சினையாக அல்லாமல் தங்கள் தங்கள் நாடுகளுக்குரிய அரசியல் சார்ந்த பிரச்சினையாகவே பார்க்கப்படுகிறது. இதன் விளைவே தீவிரவாதம் உருவாவதற்கு ஒரு முக்கியக் காரணியாக அமைந்துவிடுகிறது.

    “சோவியத் யூனியன், திகைப்பூட்டும் விதத்தில் படுவேகமாக நொறுங்கியது. சில வாரங்களுக்கொருமுறை, முறையே, லித்துவேனியா, எஸ்டோனியா, உக்ரைன் போன்ற குடியரசுகளுக்குச் சுதந்திரம் வழங்கப்பட்ட, பாபி வீடு திரும்பும் போதெல்லாம் இப்படியான செய்திகளோட வருவதாக லைலா நினைத்தாள். க்ரெம்ளினின் மீது சோவியத்தின் கொடி தாழப்பறந்தது. ரஷ்யக் குடியரசு பிறந்தது. … 1978 இலிருந்து 1992 வரை பெண்கள் அனுபவித்துவந்த சுதந்திரமும் வாய்ப்புகளும் இப்போது மறந்துபோன விஷயங்களாகிவிட்டன. ஆஃப்கானிஸ்தானின் பெண்களுக்கு  இது ஒரு நல்ல காலம் லைலா என்று பாபி சொன்னது அவளுக்கு நினைவு வந்தது. 1992 ஏப்ரலில், முஜாஹிதீன்களின் கைகளுக்கு ஆட்சி மாறியது முதல், ஆஃப்கானிஸ்தான், ஆஃப்கானிஸ்தான் இஸ்லாமியக் குடியரசு என்று வழங்கப்பட்டது. … அவர்கள் கம்யூனிஸ்ட் ஆட்சிக்காலத்தின் விதிமுறைகளையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு, பெண்களை, முழுவதுமாக மூடிக்கொள்ளச் சொல்லும், உறவினரான ஒரு ஆணின் துணையில்லாமல் அவர்கள் பயணம் செய்வதைத் தடுக்கும், முறையற்ற தொடர்புகளுக்கு கல்லால் அடித்துக்கொலை செய்யும் தண்டனையை அளிக்கும், ஷரியத் மற்றும் கண்டிப்பான இஸ்லாமியச் சட்டங்களை இயற்றத்துவங்கினார்கள்.”5 உலக வல்லரசுகள் செய்த சூழ்ச்சியால், சோவியத் யூனியன் 1992இல் நொறுங்கியது. அதனைச் சார்ந்த பிற நாடுகள் சோவியத்துடனான தொடர்பை இழந்தன. இவ்வல்லரசுகளை எதிர்க்கும் விதமாகவும் தன்னுடான நாட்டை இணைக்க முயற்சிக்கும் போக்கிலேயே இன்றைய உக்ரைனூடான போரை ரஷ்யா தொடுத்துள்ளது எனலாம்.

    ஆஃப்கானில் பெண்களுக்கு முழுசுதந்திரம் கிடைக்கப்பெற்றுள்ளது. உயர்கல்வி வரையிலும் அவர்களுக்கு இலவச கல்வி வழங்கப்பட்டிருக்கிறது. பெண்கள் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்களாகவும் மருத்துவர்களாகவும் பணிபுரிந்தார்கள். இதனைத்தான் காலித் ஹூசைனி தன் எழுத்துகளில் பதிவுசெய்கிறார். ஆனால், தற்போது(30.12.2022-பிபிசி) பெண்கள் கல்விகற்கும் உயர்கல்வி நிறுவனங்களில், தாலிபன்கள் உட்புகுந்து, கல்விகற்பதற்குத் தடையை ஏற்படுத்தியுள்ளனர். இவ்வாறு, உலகெங்கிலும் படைக்கப்படும் புனைகதை எழுத்துகளூடாக கடந்தகால மற்றும் சமகால பிரச்சினைகளை அறிந்துகொள்ள முடிகின்றன.

    இப்போது தொலைக்காட்சி பிபிசி அலைவரிசைக்கு மாற்றப்பட்டுள்ளது. திரையில் ஒரு கட்டிடம், ஒரு கோபுரம் தெரிகிறது, அதன் உச்சி மாடிகளிலிருந்து புகை அலைபோல் எழுகிறது. தாரிக் சயீதிடம் ஏதோ சொல்ல, சயீத் பதில் சொல்லிக்கொண்டிருக்கும் போதே திரையின் மூலையிலிருந்து ஒரு விமானம் தோன்றுகிறது. அடுத்திருக்கும் கோபுரத்தில் அது மோதி, லைலா அதுவரை பார்த்திருந்த அத்தனை நெருப்புப்பந்துகளையும் ஒன்றுமில்லாமல் செய்யும் நெருப்புக்குழம்பாக அது வெடிக்கிறது. …

    இரண்டு மணி நேரங்களுக்குள்ளாக இரண்டு கோபுரங்களுமே சிதிலமாயின.

    சிறிது நேரத்திலேயே எல்லாத் தொலைக்காட்சி நிலையங்களும் ஆஃப்கானிஸ்தானைப் பற்றியும், தாலிபானைப் பற்றியும், ஓசாமா பின் லேடனைப் பற்றியும் பேசலாயின.

    “பின் லேடனைப் பற்றி தாலிபன் சொன்னதைக் கேட்டாயா?” தாரிக் கேட்கிறான். …

    “கேட்டேன்” என்கிறாள்.

    பின் லேடன் ஆஃப்கானிஸ்தானில் அடைக்கலமாகியிருக்கும் ஒரு மெஹ்மான், விருந்தினன் என்றும் பாஷ்டூன்களின் சம்பிரதாயப்படி விருந்தினர்களைக் கைவிடக்கூடாதென்றும் தாலிபான் அநிவித்திருக்கிறார்கள்.”6 கடந்த 2011ஆம் ஆண்டில் அமெரிக்காவில் நிகழ்ந்த தீவிரவாதத் தாக்குதல் குறித்த பதிவும் அதற்கு சார்பாகச் செயல்பட்ட தாலிபன்களின் நிலையையும் இங்கு எடுத்தாளப்பட்டுள்ளது. உலகநாடுகளில் நிகழ்த்தப்படுகிற கொடூரமானத் தீவிரவாதத் தாக்குதல்கள் அனைத்தும் அரசியல் காரண, காரியங்களால் ஏற்படுகின்றது. இதன்வழி, அந்நாடு சில சாதக, பாதகங்களைச் சந்திக்க நேர்வதோடு, உலக அரசியலில் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்கான வழிவகைகளையும் ஆராய்கிறது.

    21ஆம் நூற்றாண்டில் அறிவியல் தொழில்நுட்பத்தின் அதிவேக வளர்ச்சியினூடாக, இதுபோன்ற எழுத்துருவாக்கப் படைப்புகளை வாசிப்பதன் மூலமாக உலகளாவிய நாடுகளின் இயங்கியல் தன்மையைப் புரிந்துகொள்ள முடிகின்றது. கடந்தகாலத்தில் ஜெர்மனியில் நடந்த ஹிட்லரின் சர்வதிகார ஆட்சிக்கும் தற்போது தத்தம் நாடுகளில் நடந்துகொண்டிருக்கும் அரசியல் ஆட்சிக்கும் இடையேயான இரட்டை எதிர்மறையை நேமிச்சந்த்ரா மற்றும் காலித் ஹூசைனியின் சாரமான எழுத்துகள் சிந்திக்கச் வைக்கின்றன. “அரசியலற்ற இலக்கியத்தைப் படைப்பவர்கள் கடமை தவறியவர்களாக, துரோகிகளாகக் கருதப்படுவதோடு, அவர்கள் ஆக்கிய கவிதையும் நாவலும் நாடகமும் புறக்கணிப்பு அபாயத்துக்கு ஆளாகின்றன. ஒரு கலைஞனாக, வெறும் கலைஞனாக மட்டுமே இருப்பது எங்கள் நாடுகளில் ஒரு அநியாயமான குற்றமாக, அரசியல் பாவமாகக் கருதப்படுவதுண்டு”7 என லத்தீன் அமெரிக்க எழுத்தாளரான ‘மரியோ வர்காஸ் யோசா’ கூறியிருப்பது, இக்காலகட்டத்தில் படைக்கப்படும் சில படைப்புகளுக்கு முற்றிலும் பொருந்தக்கூடியது. இதனை அடியொற்றியே ‘யாத்வஷேம்’, ‘ஆயிரம் சூரியப் பேரொளி’ என்ற இரு படைப்புகளும் தன்னளவிலும் உலகம்சார் அளவிலும் தனக்கான இடத்தைப் பெறுகின்றன.

    மேற்கோள் விளக்கக் குறிப்புகள்

    1. நேமிச்சந்த்ரா, ‘யாத்வஷேம்’, ப.109.
    2. மேலது., ப.127.
    3. காலித் ஹூசைனி, ஆயிரம் சூரியப் பேரொளி, பக். 232-233.
    4. மேலது., பக். 123-124.
    5. மேலது., பக். 191, 311.
    6. மேலது., பக். 459-460.
    7. மேலது., ப. 7.

     விளக்கப் படங்கள்

    Holocaust Museum  – New York

    Auschwitz Crematorium – Germany

    Holocaust Museum  – Israel

    Inside of Holocaust Museum   – Israel

    Their memorial is modeled after Berlin’s iconic Memorial to the Murdered Jews of Europe, which consists of 2,711 concrete slabs.

    Kabul – Afganistan

    Taliban fire in air to scatter hundreds of protesters in Kabul


    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    முனைவர் செ.ர. கார்த்திக்குமரன் ஆய்வு ரீதியாக இந்தக் கட்டுரையை அளித்துள்ளார். ஆய்வுக் கட்டுரைகள் கொஞ்சம் உலர் தன்மையுடன் இருக்கும். ஆனால், இவரின் இந்தக் கட்டுரை உயிர்ப்புடன் உள்ளது. இரு படைப்புகள், அதிலும் மொழிபெயர்ப்பு, தமிழாக்கப் படைப்புகள், அவற்றைத் தனித்தனியான கட்டுரையாகவே அளிக்கலாம். அதைச் செய்யாமல், இரண்டையும் ஒப்பிட்டு மிக அழகாக அளித்துள்ளார். அந்த இடங்களின் அரசியல், சமூக, உளவியல், வரலாறு, வன்முறை எனப் பல்வேறு பிரச்சினைகளைக் குறித்துப் பேசும் படைப்புகளைத் தேர்ந்தெடுத்து ஒப்பிட்டும் எழுதியமையால் இது முக்கியத்துவம் வாய்ந்த கட்டுரையாக உள்ளது. மேலும், இரு படைப்புகளிலிருந்தும் சில பகுதிகளை, உரையாடல்களைப் பொருத்தமாக மேற்கோள் அளித்துக் கொடுத்திருக்கிறார். ஷஹிதா பெயர்  ஷஜிதா என்று கொடுக்கப்பட்டுள்ளது. மற்றபடி இந்த இரு புத்தகங்களை இதுவரையில் வாசிக்காத வாசகருக்கும், இந்தக் கட்டுரையின் மூலமாக, வாசிக்கும் ஆர்வத்தை அளிக்கிறது. மகிழ்ச்சி. வாழ்த்துகள்.


     

    Share