மகா சிவராத்திரி: சீவனை அன்பெனக் கோளும் நாள்

0

பேரா. முனைவர். அழ. நா. அருணாசலம், அழகப்பா பல்கலைக்கழகம், தமிழ்நாடு

உலகில் பிறந்த ஒவ்வொருவரும் நாம் நம்மை முதலில் நேசித்து, அதன் மூலம் நாம் நம் சக மனிதர்களை அன்பு செய்யும் பிரபஞ்ச நோக்கத்தை அடைய, நாம் நம் வினைப்பயனை கடக்க வேண்டும். ஒருவர் தன்னுடைய முற்பிறவி கர்ம வினைகள் அனைத்தையும் இறை வழிபாடு என்கிற மந்திர ஜெபம், யாகங்கள், அபிஷேக ஆராதனைகள், உழவாரப் பணி, அன்னதானம், முன்னோர்கள் தர்ப்பணம், ஆன்மிக பணி போன்றவைகள் மூலமாக வழிபாடு செய்து, நம் வினைப் பயனை கடந்து ஆன்ம விமோசனம் பெறவே இந்தப் பிறவி எடுத்து இருக்கிறோம். நாம் வாழும் பூமியை கர்ம பூமி என்று கூறுகிறார்கள். நம்முடைய ஒவ்வொரு செயலும் பாவக் கணக்கில் அல்லது புண்ணியக் கணக்கில் சேரும். பாவபுண்ணியம் பற்றிய சித்தர்களின் கர்ம விளக்கத்தையும் அதை கடக்கும் வழிமுறைகளையும் நம்முடைய தமிழ் மொழியில் ஏராளமான நூல்களில் காணலாம்.

சித்தர்களின் கோட்பாடுகள் மதங்களைக் கடந்தவை, வாழ்க்கை என்னும் மாயப் பிடியில் சிக்காமல் இந்த பிரபஞ்ச இரகசியங்களையும், தன்னை உருவாக்கிய ஆதித் தலைவனையும் உணர்ந்து, நம் வாழ்வில் சகல நலன்களைப் பெறுவதே மகா சிவராத்திரியின் தத்துவம் ஆகும். அனுத் துகள்கள் மற்றும் பிரஞ்சத்தின் அனைத்து இரகசியங்களையும் சித்த மகான்கள் சொல்லியபடி நாம் சிவராத்திரி அன்று வழிபடுவது அறிவியல் சார் மெய் ஞானம் ஆகிறது.

பிரபஞ்சத்தில் ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு கிரகங்கள் மற்றும் கோடான கோடி அண்ட நட்சத்திரங்களின் கதிர்வீச்சுக்கள் நம்மை கடந்து சென்றுக் கொண்டிருகின்றன. இத்தகைய கதிர்வீச்சுக்களை அறிவியல் பூர்வமாக சித்தர்கள் தம் யோக தியான வலிமையினால் இந்த ரகசியங்களை அறிந்து அதை நமக்கு தியான வழிபாடு என்று வெளிப்படுத்தினார்கள். அந்த வலிமையான தினம் மகா சிவராத்திரி என்பதை நமக்கு அறிவித்து சென்று உள்ளார்கள்.

மனிதர்கள் உடலின் கட்டுப்பாட்டில் இருந்தால் வெளி முகமாகவும், ஆன்மாவின் கட்டுப்பாட்டில் இருந்தால் உள் முகமாகவும் செயல்படுகிறார்கள். மனிதன் தனது உடல் செயல் மூலம் வெளிமுகமாக திரும்ப முயற்சி செய்தால் அவனது உடலும், மனமும் சமநிலை தவறுகிறது, மேலும் தடுமாறுகிறது. மனிதன் சமநிலை தவறாத வண்ணம் அவனை உள்முகமாகவே வைத்திருக்க, மகா சிவராத்திரி வழிபாட்டில் தியானம் என்கிற ஒரு முக நிலை நம்மை என்றும் வாழ்வில் உள்முகமாக வைக்க நிலை செய்கிறது.

மகா சிவராத்திரியன்று வழிபாடு செய்து ஆதி சிவனையும், நம் குல தெய்வத்தையும் வணங்கினால் நாம் செய்த அத்தனை பாவங்களும் நம்மை விட்டு காணாமல் போய்விடும். அடுத்த வரும் மூன்று ஆண்டுகளில் நாம் எதிர்பார்க்கும் அளவிற்கு மகத்தான வளம் மற்றும் வலிமை நம்மை வந்து சேரும் என்பது சித்த ரகசியம் ஆகும். மகா சிவராத்திரி என்பது பல கல்பகோடி இரவுகள் சேர்ந்து வந்த ராத்திரி. பல இரவுகளிலும் செய்கின்ற வழிபாட்டின் பலனை மகாசிவராத்திரி வழிபாடு ஒன்றே கொடுத்துவிடும் என்கின்றனர் சித்தர்கள். தொடர்ந்து பனிரெண்டு சிவராத்திரி இரவுகளில் அண்ணாமலையை கிரிவலம் வந்தால், கர்ம வினைகள் அனைத்தும் போய்விடும் என்பது சித்தர்களின் வாக்கு. நித்திய, யோக மற்றும் மகா சிவராத்திரிகள் நம் வினைப்பயன் போக்கும் ஆற்றல் கொண்டது. மகா சிவராத்திரி வழிபாடு மரணம் என்கிற எம பயத்தை போக்கி, அன்று வழிபாடு செய்யும் மக்களை எமதூதர்கள் நெருங்க அஞ்சுவார்கள் என சிவ புராணதில் மாணிக்கவாசகர் கூறுகின்றார். சிவராத்திரியின் நான்காம் காலத்தில் மிருத்யுஞ்சய மந்திரத்தை ஓதுவதின் மூலம் நம் பிணிகள் அனைத்தும் விலகும்.

சித்தர்களின் தலைவராக இருப்பவரும், தமிழ் மொழியை ஈசனிடம் இருந்து பெற்று பூமிக்குக் கொண்டு வந்தவரும், ஜோதிடத்தின் தந்தையும், சித்த மருத்துவத்தின் தந்தையும், மந்திரங்களின் தந்தையுமாகிய அகத்திய மகரிஷி பல இரவுகளிலும் செய்கின்ற பூஜையின் பலனை சிவராத்திரி பூஜை ஒன்றே கொடுத்துவிடும் என்கிறார்.

சிவராத்திரி அன்று தான தருமங்கள் செய்வதால் பெரும் புண்ணியம் கிடைக்கும். சிவலிங்கம், ருத்திராட்சம், ரத்தினங்கள், நிவேதனப் பொருட்கள், அன்னதானம் வழங்கினால் நன்மை உண்டாகும் என்று சித்தர்கள் கூறுகின்றனர். எனவே சிவராத்திரி அன்று வெறும் வழிபாடு மட்டும் வேண்டும் என்கிற கருத்து ஏற்புடையது அல்ல. எனவேதான் பல நூறு ஆண்டுகள் முதல் தொடங்கி இன்று வரை பல குல தெய்வக் கோயில்களில் ஊர்கூடி அன்னதானம் செய்து மகிழ்கின்றனர். தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் மகா சிவராத்திரி வழிபாட்டை உரிய முறையில் செய்தால் அனைத்து பாவங்களும் நம்மை விட்டு நீங்கும். மகா சிவராத்திரி வழிபாட்டை அனைவரும் சேர்ந்து சிவ ஆலயத்திலும், நம் குல தெய்வக் கோயிலிலும் வணங்கி அதன் பின் அன்னதானம் செய்தால் நம் பிறந்த பலனை பரிபூர்ணமாக தெய்வ அருள் கொண்டு பெறலாம் என்பது வாழ்வியல் உண்மை.

உண்மையில் மகா சிவராத்திரியின் நான்கு காலத்திலும் விழித்திருந்து உயர்வான தியான நிலையில் மனம் ஒன்றி சிவத்தை உணர்ந்து சிவம் அருகே செல்ல முயலும் நிலையே மகா சிவராத்திரியின் அடிப்படை ஆகும். மனம் அமைதி கொண்டு தூய நிர்மலமான சிந்தனைகளோடு சிவத்தில் ஒன்றுவது என்பதே மகா சிவராத்திரியின் தாத்பர்யம் ஆகும். மகா சிவராத்திரி அன்று உருவமும் இல்லாது அருவமும் இல்லாத இறையை தியானித்து, நம் மனதை உள்முககமாக பயணிக்கச் செய்வதே முதல் நிலலை. அதன் பின் நாம் நம்மை உணர்ந்து, நாம் நம் தன்மையைக் கடந்து உள் சென்று உய்ய வழி பெறுவதே இறுதி நிலை, இதுவே மகா சிவராத்திரி வழிபாட்டின் மூலக்கரு ஆகும்.

மகா சிவராத்திரி அன்று குறிப்பிட்ட கிரகங்களின் மற்றும் பேரண்டங்களின் கதிர்வீச்சுக்கள் இந்த பூமி முழுவதும் வியாபித்துக் காணப்படும், அதே சமயம் ஒரு குறிப்பிட்ட பகுதியில் பூமிக்கடியில் இருந்து நீரூற்று பிறப்பெடுத்து ஓடும். இந்த நீரூற்றுதான் சித்தர்கள் கூறும் மூப்பு, அண்டக்கல் என்றழைக்கப்படும் என்று சித்தர்கள் கூறுகின்றனர்.
மகா சிவராத்திரி நாளில் நாம் செய்யும் தியானமானது, மூன்று மாதங்கள் இடைவிடாது தொடர்ந்து தியானம் செய்தால் கிடைக்கும் பலனைக் கொடுக்கும். இது சித்தர்களின் சாதனை முறை. இதையே நாம் அன்றைய தினம் கண்விழித்து இறைவனை துதி பாடி தியானித்து வருடம் தோறும் கொண்டாடினாலும், சித்தர்கள் சொல்லிய அகக்கண் விழிப்பு நிலையுடன் கூடிய தியான நிலையை பெரிதும் நாம் விட்டு விட்டு, புறக் கண் விழிப்பை மட்டுமே இன்றளவும் செய்து வருகிறோம்.

சீவனும் சிவனும் இரண்டு அல்ல, அன்பும் சிவனும் இரண்டு அல்ல, இரண்டும் ஒன்றே என்றும் உணரும் ஆன்ம பேரொளியை நம் ஆன்மாவில் தோற்றுவிக்கும் வழிபாடே மகா சிவராத்திரி. எனவே நாமும் இப்புனித தினத்தில் எல்லாம் வல்ல பிரபஞ்சப் பேரியக்க ஆற்றலைக் கிரகித்து “அன்பு சிவம் இரண்டென்பார் அறிவிலார், அன்பே சிவமென்று ஆரும் அறிகிலார், அன்பே சிவமென்று ஆரும் அறிந்த பின் அன்பே சிவமென்று அமர்ந்திருந்தாரே என்று அன்பு செய்து புறக்கண் திறக்கும் வண்ணம் மகா சிவராத்திரியை தியான வழிபாட்டின் மூலம் மேற்கொண்டு அன்பு என்கிற சிவத்தை உணர முயற்சித்து மகிழ்வுடன் வாழ்வோமாக.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *