குறளின் கதிர்களாய்…(439)

செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்…(439)
மிகினுங் குறையினு நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா வெண்ணிய மூன்று.
-திருக்குறள் -941(மருந்து)
புதுக் கவிதையில்…
மருத்துவ நூலறிஞர்கள்
சொல்லும்
வாதம் பித்தம் சிலேட்டுமம்
என மூன்றாம்,
உடல்நிலைக்கு ஒவ்வாமல்
ஒருவனின்
உணவும் செயலும்
மிகுதியாயினும்
மிகக் குறையினும்,
மேனியில்
நோய்கள் வரும்…!
குறும்பாவில்…
மருத்துவநூலோர் சொன்ன வாதமுதல்
மூன்றாம் உடலுக்கொவ்வா உணவும் செயலும்
மிகுந்தாலும் குறையினும் நோய்வரும்…!
மரபுக் கவிதையில்…
வருத்தியே உடலதைச் சாய்த்திடவே
வந்திடும் நோய்களைக் குணப்படுத்தும்
மருத்துவ நூலவர் கண்டறிந்த
மகத்துவக் காரணம் வாதமுதல்
இருந்திடும் மூன்றென உள்ளதான
இவைகளாம் உடலதற் கொவ்வாத
அருந்திடும் உணவதும் செயலதுவும்
அதிகமோ குறையினும் நோய்வருமே…!
லிமரைக்கூ…
மருத்துவ நூலோர் கண்டவை,
உடலுக்கொவ்வாத உணவுடன்செயல் கூடினும் குறையினுமவை
நோய்தரும் குணத்தைக் கொண்டவை…!
கிராமிய பாணியில்…
நோய்வருமே நோய்வருமே
ஒடலுக்கு நோய்வருமே,
ஏதுவுமே
அளவுக்குமிஞ்சினா நோய்வருமே..
மருத்துவ நூலெல்லாம் படிச்சவுங்க
கண்டறிஞ்சி சொன்னபடி
ஒடலுக்கு ஒத்துக்காத
ஒணவும் செயலுமே
அளவுக்கு மிஞ்சியே
கூடிப் போச்சிண்ணாலும்
கொறஞ்சாலும்
கொண்டுவருமே நோயத்தான்..
தெரிஞ்சிக்கோ,
நோய்வருமே நோய்வருமே
ஒடலுக்கு நோய்வருமே,
ஏதுவுமே
அளவுக்குமிஞ்சினா நோய்வருமே…!