ஈழம் தந்த பிள்ளைத்தமிழ் நூல்கள் – 6
மீனாட்சி பாலகணேஷ்
இனி கையில் கிடைத்துள்ள அம்பிகை மீதான எஞ்சிய இரு பிள்ளைத்தமிழ் நூல்களைப் பற்றிப் பார்க்கலாம்.
6. சுதுமலை புவனேசுவரி பிள்ளைத்தமிழ்
சுதுமலை இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு ஊர். புவனேசுவரி அன்னைக்கான ஆலயம் இங்கு அமைந்துள்ளது. இந்த அன்னையின்மீது ஒரு அழகிய பிள்ளைத்தமிழ் நூல் பண்டிதர் மு. கந்தையா அவர்களால் இயற்றப்பெற்று1987-ல் வெளியானது.
பிள்ளைத்தமிழின் கூறுகள் அனைத்தையும் கொண்டு பத்துப்பருவங்களில் பத்துப்பத்துப் பாடல்களுடன் பெருமைபெற விளங்குகிறது. இதன் நயங்கள் சிலவற்றைக் காண்போம்.
சப்பாணிப்பருவத்தின் முதற்பாடல், மிக அருமையாக உள்ள ஒரு பாடல்:
தாமரைமலரில் வைத்த பவளச் செப்பொன்று சிறிது திறந்தபடியுள்ளது. அதனுள்ளே உள்ள முத்துக்களில் சில தெரிகின்றன. இது எதற்கு உவமை? தாமரை போன்ற முகத்தில் பவளவாய் திறந்து சிரிக்கும் அம்மையின் பற்கள் முத்துப்போன்று காண்கின்றன. தாமரை மலரின் உள்ளிதழ்கள் ஒரு அரிய சிவப்பாகக் காணப்படும்; அப்படிப்பட்ட பாதங்களை மடித்து பத்மாசன நிலையில் அமர்ந்துள்ள குழந்தை. அனிச்ச மலரையொத்த மென்மையான சிவப்பு மெத்தையில் அழகாக அமர்ந்துகொண்டு சப்பாணி கொட்டுகிறாள் குழந்தை.
பங்கயத்தில் வைத்த பவளநற் செப்பினிற்
பாதிமுத் தொளிர்வ தேய்ப்பப்
பல்லினொளி சிறிதே பளிச்சிட மொழிச்சிதர்ப்
பால்வாய் குதட்டி யாணர்ச்
செங்கமல வகவிதழ் சிவணுமிரு பதமடித்
தொன்றுபத் மாசனத்திற்
சீர்திக ழனிச்சசெஞ் செந்தூவி யணையினிற்
செவ்வே நிமிர்ந்தமர்ந்து
………………………………………………………..
சங்களை யிருக்கைகொண் டெங்களை யுருக்குமனை
சப்பாணி கொட்டியருளே. (1)
புலவரின் கற்பனை தேனினுமினிதன்றோ?
***
அடுத்து நீராடற் பருவத்துப் பாடல்களுள் ஒன்றினைக் காண்போம்.
இளம்பெண்கள், சிறுமியர், நீராடும்போது நிகழும் சில நிகழ்வுகளை வருணிக்கும் இனிய பாடலிது. சொல்லின் தெய்வமான கலைமகள், திருவின் தெய்வமான திருமகள் இருவரும் இருபக்கமும் இருக்க, சுழித்தோடும் நதி நீரில் துழாவியளைந்து மிதந்து ஆடுகின்றனள் அன்னை. செவிபொத்தி, கண்களை மூடி விளையாடும்போதில் கைகளும் கால்களும் நீரில் அளைவதனால் ‘முகேர்’ எனும் ஒலி எழுகின்றதாம். தாமரை மலரின் இனிய நறுமணத்தையும் நுகர்ந்து மகிழ்கின்றனர். ஒளிவீசும் பற்கள் தெரியுமாறு நகைத்தபடி தோழியரோடு மழலைச்சொல் பேசி கமலமலரின் அழகினைப் பழிக்கும் முகத்தின் எழில் பொங்குமாறு புதுநீராடுக என வேண்டுகின்றார் புலவர்.
சொற்படு கலைமகள் திருமகளெனுமிரு
தோழியர் பாங்காகச்
சுரிபுன லாழ்ந்து துழந்து மிதந்தும்
துணைவிழி செவிபொத்தி
முற்படு நீரில் முகேரெனு மொலியெழ
மூழ்கி யெழுந்துமயல்
முளரிப்புண மளவிக் கனிகொள
மூசி முகந்தார்த்தும்
எற்படு முத்தி னிளம்பத மூரல்
இலங்க நகைத்துநகைத்
தெதிருறு மகளிரோ டிதமுறு மழலை
இசைத்து நசைக்கமலப்
பொற்படு முகவெழில் பொங்கவே மங்கலை
புதுநீ ராடுகவே
…………………………………………………..
இவ்வாறெல்லாம் அழகான பாடல்களைக் கொண்டது இந்நூல்.
0000000
7. இணுவை சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ்
இந்நூல் எவ்வாறு எழுந்தது?
ஈழத்து அரசன் திருக்கோவலூர்ப் பேராயிரவன் காலத்தில் சிவகாமியம்மையின் ஒரு திருவுருவம் சிதம்பரத்தினின்றும் கொண்டுவரப்பட்டு இணுவையூரில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இவ்விடம் சிதம்பர வளவு எனவும் அறியப்பட்டது. ஆலயமும் உடன் எழுந்தது. இங்கு குடிகொண்டுள்ள அம்பிகை மீது அடியாரான சின்னத்தம்பிப் புலவர் பாடியதே ‘சிவகாமியம்மை தமிழ்’ என்னும் நூல்.
இலங்கையைச் சிவபூமி என்பார் திருமூலர். பல சிவன், சக்தி, முருகன், விநாயகர் திருக்கோவில்களைக் கொண்டது. இணுவில் எனும் ஊர் இலங்கையின் யாழ்ப்பாணத்தில் யாழ் நகரிலிருந்து காங்கேசன் துறைக்குச் செல்லும் பெருவீதியில் நான்காவது கல் தொலைவில் உள்ளது. யாழ்ப்பாணத்துப் பரராசசேகர மன்னன் இவ்வூரிலிருந்து அரசு செய்தான் என்று சில பாடல்களால் அறிகிறோம். பரராசசேகர விநாயகர் கோவிலை அமைத்த அரசனும் இவனே எனப்படுகிறது.
சின்னத்தம்பிப்புலவர் சிவகாமியம்மை மீது சிறை நீக்கிய பதிகம், பிள்ளைத்தமிழ், சிவகாமியம்மை துதி, சிவகாமியம்மை திருவூஞ்சல் ஆகிய நூல்களைப் பாடியுள்ளார்.
சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ் எனும் நூல் பிள்ளைத்தமிழ் இலக்கணத்தின் பாற்பட்டதன்று. புலவர் சிவகாமி அம்மையைத் தாயாகவும் தம்மைச் சேயாகவும் வைத்து இந்நூலை ஆக்கியுள்ளார். பிள்ளையாகத் தம்மையே வைத்துப் பாடிய பாடல்கள் இருப்பதனால் பிள்ளைத்தமிழ் எனப் பெயர்பெற்றது. இதில் மொத்தமே பத்துப்பாடல்கள் தாம் உள்ளன.
அன்னை சிவகாமியின் அருட்சிறப்பும், அருள் தத்துவங்களும், திருப்பெயர்களும் அமைந்தும், புலவர் தம்மைப் பிள்ளையாக்கிக் கொண்டு அன்னை அவளிடம் முறையிடுவதும் இந்நூலில் சிறப்பாக அமைந்துள்ளன. இப்பிள்ளைத்தமிழில் வடமொழிச் சொற்களும் சொற்பிரயோகங்களும் மிகுந்து காணப்படுகின்றன.
இந்நூலின் பத்துப் பாடல்களும் பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தமாக இசைக்கப் பட்டுள்ளன.
முதற்பாடலில் அன்னையின் ஸ்ரீ சக்ர வடிவைப் போற்றி, அவள் அடியார்களுக்கு அருளும் தகைமையைப்போற்றியும், இணுவை நகரின் வளத்தை ஏற்றியும் பாடியுள்ளார்.
சீரணி முக்கோ ணத்து ளிருக்குந் தேவிசட் கோணத்துட்
சேருங் கன்னி அட்ட தளத்துட் சீரார் கௌமாரி
நாரணி யென்றுன் செய்ய பதங்கள் நாளுந் துதிசெய்யும்
நம்பின பேருக் கம்புவி மீதே நல்லருள் புரிவாயே
காரணி சோலையும் மணிமண் டபமுங் கஞ்ச மலர்த்தடமும்
காவிச் செடியுங் கழுநீர்த் தொகையுங் கதிர்நித் திலங்களுந்
தேரணி வீதிகளு மெங்கும் நெருங்குஞ் செல்வந் தழைக்கின்ற
திருவள ரிணுவைப் பதிதனி லுறையுஞ் சிவகாமித் தாயே. (1)
எட்டாம் பாடலில் அன்னையிடம் உரிமை கொண்ட பிள்ளை தனக்கவள் அருள்புரியத் தாமதிப்பதனால் அவளிடம் கோபித்துக் கொள்வதனைக் காண்கிறோம்.
எள்ளுக்குள் எண்ணெயாக உள்ளவள் நீ; என்னிடம் ஏன் நீ இல்லை? உனக்கு எல்லாம் தெரியும்; எனது வறுமையும் பிணியும் நீ அறிந்திலையோ? உலகத்தே முப்பத்திரண்டு அறங்களை வளர்த்தாய் நீ; என்னிடம் மட்டும் ஏன் இரக்கமில்லை? நீ பிள்ளையே பெறாத மலடியோ? உலகெலாம் நீ பெற்றெடுத்தாய் என்பதும் பொய்தானோ? தான் பெற்ற பிள்ளை பேய்ப்பிள்ளை ஆனாலும் தாயென்பவள் அதனை இகழ்வாளோ? என்றெல்லாம் உரிமையோடு ஏசுகிறார்.
எள்ளுக் குணெய்போ லெங்கும் நிறைந்தா யென்னிடத் தில்லையோ
எல்லா மைந்தநீ யென்றனில் லாமையும் பிணியுந் தெரிந்திடாயோ
உள்ளந் திகழ்பா வியேனென் பாசம் உனையடுத் தாலுமுண்டோ
உலகத் துமுப்பத் திரண்டறம் வளர்த்தா யிரக்க மில்லையோ
பிள்ளை பெறாமுழு மலடியோ யுலகெலாம் பெற்றதும் பொய்தானோ
பேய்ப்பிளை யாகிலும் பெற்றதா யிகழ்வளோ பிழைபொறுத் துன்கருணை
அள்ளித் தாராதெனைத் தள்ளிவிடல் நீதியோ ……. …………
(8)
அன்னையின் அன்பினில் ஆழ்ந்து விட்டால் தான் பிள்ளையெனும் உரிமையுடன் அவளிடம் வேண்டலாமன்றோ?
இத்துடன் அம்பிகை மீதான பிள்ளைத்தமிழ் நூல்கள் பற்றிய சிந்தனைகள் முடிவுறுகின்றன. இனி அவளுடைய திருமகனான முருகப்பெருமான் மீதான ஈழத்துப் பிள்ளைத்தமிழ் நூல்களைப் பற்றிக் காண்போம்.
(வளரும்)